HOME      Khutba      ஈஸா இப்னு மர்யம் (அலை) (பகுதி 2/2) | Tamil Bayan - 65   
 

ஈஸா இப்னு மர்யம் (அலை) (பகுதி 2/2) | Tamil Bayan - 65

           

ஈஸா இப்னு மர்யம் (அலை) (பகுதி 2/2) | Tamil Bayan - 65


ஈஸா இப்னு மர்யம்

ஜுமுஆ குத்பா தலைப்பு : ஈஸா இப்னு மர்யம் (பாகம் – 2-2)

வரிசை : 65

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 09-07-2021 | 29-11-1442

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ்வின் அச்சம் இறை நம்பிக்கையின் அடிப்படையாகும். அல்லாஹ்வின் அச்சம் நல்ல காரியங்களின் வேராகும். அல்லாஹ்வை அதிகம் பயந்து கொள்பவர்களை அல்லாஹ் நாளை மறுமையில் பயமற்றவர்களாக ஆக்குகிறான்.

அல்லாஹ்வை யார் பயந்து கொள்ளவில்லையோ நாளை மறுமையில் மிகப் பெரிய அச்சங்களுக்கு மத்தியில் அல்லாஹ் அவர்களை தடுமாறியவராக விட்டு விடுகிறான்.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் மேலும் அவர்களுடைய தாயார் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை குறித்து சில செய்திகளை குர்ஆனுடைய ஒளியில் சென்ற வாரத்தில் உங்களுக்கு நாம் கூறினோம்.

அதை தொடர்ந்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறியிருக்கக் கூடிய ஏனைய விஷயங்களை இன்ஷா அல்லாஹ் இந்த ஜும்ஆவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்தவரையில் எல்லா தூதர்களையும் மதிக்க வேண்டும். அவர்களை கண்ணியப்படுத்த வேண்டும், அவர்களுடைய தூதுத்துவத்தை நம்பிக்கை கொள்ள வேண்டும். இது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை.

ஒரு தூதரை ஏற்றுக் கொண்டு மற்றொரு தூதரை மறுப்பது, இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது அல்ல. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கண்ணியப்படுத்திய தூதர்களில் ஒருவர் தான் ஈஸா அலைஹிஸ்ஸலாம்.

இவர்களுடன் நமக்கு நெருக்கமான ஒரு உறவு இருக்கிறது. காரணம்,இவர்களுக்கு அடுத்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு தூதராக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அனுப்பினான்.

இருவருக்கும் இடையில் வேறு ஒரு தூதர் கிடையாது. ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அனுப்பப்பட்டதற்கு பிறகு அடுத்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தூதராக அனுப்பியது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தான்.

இந்த இருவருக்கும் இடையில் வேறு ஒரு தூதர் அனுப்பப்படவில்லை. அதுமட்டுமல்ல, ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், கடைசி ஒரு தூதர் வருவார், அவர் தூதர்களின் முத்திரையாக இருப்பார். அவருடைய பெயர் அஹமதாக இருக்கும்.

அவருடைய வர்ணிப்புகள் இன்னன்ன, அவருடைய குணங்கள் இன்னன்ன என்ற முழு விபரங்களையும் தங்களை பின்பற்றிய மக்களுக்கு சொல்லி சென்றார்கள்.

இந்த அடிப்படையிலும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் நமக்கு ஒரு நெருக்கமான உறவு இருக்கிறது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முறை கூறினார்கள், யார் அல்லாஹ்வை வணக்கத்திற்குரிய இறைவனாக ஏற்றுக் கொண்டு, என்னை அவனுடைய தூதராக ஏற்றுக் கொண்டு, ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ்வின் 'குன்' என்ற கலிமாவால் படைக்கப்பட்டவர், அல்லாஹ்வின் புறத்திலிருந்து விஷேசமான முறையில் ரூஹ் ஊதப்பட்டவர் என்று நம்பிக்கை கொள்கிறாரோ அவர் சொர்க்கம் செல்வார்.

இந்த ஹதீஸில் இறைத் தூதர்களில் விஷேஷமாக ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சேர்த்து சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கம், ஏனைய இறைத் தூதர்களுடைய உம்மத்துகளெல்லாம் சென்று விட்டார்கள். அவர்களுடைய உம்மத் இப்பொழுது பூமியில் வாழவில்லை. இரண்டு இறைத் தூதர்களுடைய உம்மத்தை தவிர.

1.             மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உம்மத்தாகிய யஹூதிகள்.

2.             ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உம்மத்தாகிய நஸராக்கள்.

இந்த இரண்டு உம்மத்தையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குர்ஆனுடைய பல இடங்களில் பல பெயர்களை கொண்டு குறிப்பிடுகிறான். 'அஹ்லுல் கிதாப்' -வேதமுடையவர்கள், வேதம் பெற்றவர்கள் என்றும் குறிப்பிடுகிறான்.

'பனூ இஸ்ராயீல்' -இஸ்ராயீலின் சந்ததிகள், குடும்பத்தார்கள், வமிசாவழிகள், பிச்சளங்கள் என்றும் கூறுகிறான். இஸ்ராயீல் என்றால் நபி யஅகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மற்றொரு பெயர் இஸ்ராயீல். அவர்களுடைய வமிசத்தில் தோன்றியவர்கள் தான் யஹூதிகள்.

ஆகவே, இந்த இருவரையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சோர்த்து பனூ இஸ்ராயீல் என்று கூறுகிறான்.

சில இடங்களில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த இரண்டு சாராரையும் பிரித்து 'அல் யஹூத்' -யஹூதிகள் என்று தனியாகவும், 'அன் நஸாரா' -நஸாராக்கள் என்று தனியாகவும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

நஸாரா என்றால் சிரியாவில் உள்ள நாஸிரத் என்ற ஊரை சேர்ந்தவர்கள். அதற்கு பிறகு ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பின்பற்றுபவர் எந்த ஊரை சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு இந்த நஸாரா என்ற பெயர் வந்தது.

இந்த இரண்டு சமூகத்தாரையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குர்ஆனில் பல இடங்களில் கூறுகிறான். இவர்களுடைய குணங்கள், இவர்களுக்கும் அந்த நபிமார்களுக்கும் நடந்த சம்பவங்களை எல்லாம் அல்லாஹு தஆலா விரிவாக கூறுகிறான்.

இதில், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஏற்றுக் கொண்ட கிறிஸ்தவர்கள், இவர்கள் எப்படி வழிகெட்டார்கள் என்பதை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குர்ஆனில் நமக்கு தெளிவாக கூறுகிறான்.

இஸ்லாமிற்கு வெளியில் இருக்கக் கூடிய இந்த இரண்டு சாராருமே யஹூதிகளாக இருக்கட்டும் அல்லது நஸரானிகளாக இருக்கட்டும், இவர்கள் சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காட்டிய 'மில்லத் இப்ராஹீம்' -தஹ்ஹீத் என்ற தூய கொள்கையிலிருந்து வெளியேறியவர்கள், வழி தவறியவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்ராஹீமுடைய கொள்கையை நீங்கள் பின்பற்றுங்கள். (அல்குர்ஆன் 3 : 95)

இப்ராஹீமுடைய கொள்கை என்ன? இப்ராஹீம் எத்தகையவர்? அவர் இணை வைப்பதை விட்டும் விலகியவர், அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டவர். (அல்குர்ஆன்3 : 67)

அல்லாஹு தஆலா நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் பேசினான்.

إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ

இப்றாஹீமை (நோக்கி) அவருடைய இறைவன் ‘‘நீ (எனக்கு) பணிந்து வழிப்படு!'' எனக் கூறிய சமயத்தில் அவர் (எவ்வித தயக்கமுமின்றி) ‘‘அகிலத்தாரின் இறைவனுக்கு (இதோ) நான் பணிந்து வழிப்பட்டேன்'' எனக் கூறினார். (அல்குர்ஆன் 2 : 131.

وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا

இப்றாஹீமை அவருடைய இறைவன் (பெரும் சோதனையான) பல கட்டளைகளையிட்டு சோதித்த சமயத்தில் அவர் அவற்றை நிறைவு செய்தார். (ஆதலால், இறைவன்) ‘‘நிச்சயமாக நான் உம்மை மனிதர்களுக்கு (நேர்வழி காட்டக்கூடிய) தலைவராக ஆக்கினான்'' எனக் கூறினான். (அல்குர்ஆன் 2 : 124)

وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلًا

அல்லாஹ் இப்ராஹீமை தன்னுடைய நண்பனாக ஆக்கிக் கொண்டான். (அல்குர்ஆன்4 : 125)

மிகப் பெரிய படிப்பினை இருக்கிறது. அந்த இப்ராஹீமுடைய மார்க்கம் இஸ்லாம்.

யூதர்கள் கூறினார்கள்,

وَقَالَتِ الْيَهُودُ لَيْسَتِ النَّصَارَى عَلَى شَيْءٍ وَقَالَتِ النَّصَارَى لَيْسَتِ الْيَهُودُ عَلَى شَيْءٍ وَهُمْ يَتْلُونَ الْكِتَابَ كَذَلِكَ قَالَ الَّذِينَ لَا يَعْلَمُونَ مِثْلَ قَوْلِهِمْ فَاللَّهُ يَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ

இன்னும், ‘‘கிறிஸ்தவர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை'' என யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வான்ற) ‘‘யூதர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை'' எனக் கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். ஆனால், இவ்விருவருமே (தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக பைபிளின் ‘பழைய ஏற்பாடாகிய' தவ்றாத் என்னும் ஒரே) வேதத்தை(த்தான்) ஓதுகிறார்கள். இவர்கள் கூறிக்கொள்வது போலவே (வேதத்தை) அறியாத (இணைவைத்து வணங்குப)வர்கள் (‘‘யூதர்களும் கிறிஸ்தவர்களும் எம்மார்க்கத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல'' எனக்) கூறுகிறார்கள். ஆனால், இவர்கள் செய்து கொண்டிருக்கும் இந்த தர்க்கத்தைப் பற்றி மறுமையில் அல்லாஹ் இவர்களுக்குத் தீர்ப்பளிப்பான்.(அல்குர்ஆன்2 : 113)

அல்லாஹ் கூறுகிறான், ஒட்டுமொத்தமாக நீங்கள் எல்லோரும் பொய்யர்கள் தான்.

மேலும், யூதர்கள் கூறினார்கள்,

وَقَالُوا لَنْ يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى تِلْكَ أَمَانِيُّهُمْ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ

 (நபியே!) கிறிஸ்தவராகவோ யூதராகவோ இருப்பவரைத் தவிர (மற்ற எவரும்) சொர்க்கம் நுழையவே மாட்டார்கள் என அவ(ரவ)ர்கள் கூறுகிறார்கள். இது அவர்களுடைய வீண் நம்பிக்கையே (தவிர உண்மை அல்ல. ஆதலால், அவர்களை நோக்கி நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் உங்கள் (இக்கூற்றுக்குரிய) ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்.''(அல்குர்ஆன் 2 : 111)

முஸ்லிம்கள் மட்டும் தான் செல்வார்கள். முஸ்லிம் யார்? இப்ராஹீமுடைய தவ்ஹீது ஏகத்துவக் கொள்கையை பின்பற்றுபவர்கள். யூதர்கள் மில்லத் இப்ராஹீமை பின்பற்றவில்லை, இப்ராஹீமுடைய கொள்கையை பின்பற்றவில்லை.

காரணம்,இப்ராஹீம் அல்லாஹ்விற்கு குழந்தை இருக்கிறது என்று கூறவில்லை.இப்ராஹீம் அல்லாஹ்விற்கு யாரையும் இணையாக்கவில்லை.

யூதர்கள்,அல்லாஹ்விற்கு இணை கற்பித்தார்கள். நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை இணை கற்பித்தார்கள். நபி உஸைர் அல்லாஹ்வுடைய குழந்தை என்று கூறினார்கள்.

அல்லாஹ் அவர்களை சபித்துவிட்டான். அல்லாஹ் அவர்களை நாசமாக்குவானாக!

அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான் :

قَاتَلَهُمُ اللَّهُ

அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! (அல்குர்ஆன்9 : 30)

لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ

‘‘நிச்சயமாக மர்யமுடைய மகன் மஸீஹ் அல்லாஹ்தான்'' என்று கூறியவர்களும் உண்மையாகவே நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள். (அல்குர்ஆன் 5 : 72)

لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلَاثَةٍ وَمَا مِنْ إِلَهٍ إِلَّا إِلَهٌ وَاحِدٌ وَإِنْ لَمْ يَنْتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ

‘‘நிச்சயமாக அல்லாஹ் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய இம்)மூவரில் ஒருவன்தான்'' என்று கூறியவர்களும் மெய்யாகவே நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள். ஏனென்றால், ஒரே ஓர் இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லவே இல்லை. (ஆகவே, இவ்வாறு) அவர்கள் கூறுவதிலிருந்து விலகிக் கொள்ளாவிட்டால் அவர்களில் (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களை துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக வந்தடையும். (அல்குர்ஆன் 5 : 73)

யூதர்களும் கிறிஸ்தவர்களும் இப்ராஹீமுடைய கொள்கையிலிருந்து வெளியேறியவர்கள்.

இப்ராஹீமிற்கு மிக நெருக்கமானவர்கள் யார்?

إِنَّ أَوْلَى النَّاسِ بِإِبْرَاهِيمَ لَلَّذِينَ اتَّبَعُوهُ وَهَذَا النَّبِيُّ وَالَّذِينَ آمَنُوا وَاللَّهُ وَلِيُّ الْمُؤْمِنِينَ

நிச்சயமாக இப்ராஹீமுக்கு மனிதர்களில் நெருங்கியவர் (எவர் என்றால்) அவரைப் பின்பற்றியவர்களும், இந்த நபியும், (இவரை) நம்பிக்கை கொண்டவர்களும்தான். அல்லாஹ் இந்த நம்பிக்கையாளர்களை (நேசித்து) பாதுகாப்பான். (அல்குர்ஆன் 3 : 68)

யூதர்கள் கூறினார்கள், இப்ராஹீம் யஹூதியாக இருந்தார். நஸரானிகள் கூறினார்கள், இப்ராஹீம் நஸரானியாக இருந்தார் என்று.

அல்லாஹ் கேட்கிறான்,

هَاأَنْتُمْ هَؤُلَاءِ حَاجَجْتُمْ فِيمَا لَكُمْ بِهِ عِلْمٌ فَلِمَ تُحَاجُّونَ فِيمَا لَيْسَ لَكُمْ بِهِ عِلْمٌ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ

நீங்கள் கொஞ்சம் அறிந்த விஷயத்தில் வீணாக இதுவரை தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் ஒரு சிறிதும் அறியாத விஷயத்திலும் ஏன் தர்க்கிக்க முன்வந்துவிட்டீர்கள். அல்லாஹ்தான் (இவை அனைத்தையும்) நன்கறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள். (அல்குர்ஆன் 3 : 66)

மடையர்களே, அறிவீனர்களே! தவ்ராத் இப்ராஹீமிற்கு பின்பு இறக்கப்பட்ட வேதம். இன்ஜீல் இப்ராஹீமிற்கு பின்பு இறக்கப்பட்ட வேதம். இந்த புத்தி கூட உங்களுக்கு இல்லையா? (அல்குர்ஆன்3 : 65)

எப்பொழுது மனிதன் தவறான கொள்கையில் செல்கிறானோ, அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு முரண்பாடான கொள்கையில் அடியெடுத்து வைக்கிறானோ அவனுடைய அறிவை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மயக்கி விடுவான்.

அவனுடைய அறிவைக் கொண்டு அவனுடைய தவறுகளை புரிந்து கொள்ளும் படி அவனுடைய நிலமை இருக்காது. அவனுடைய உளரல்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாக இருக்கும்.

சின்ன விஷயம்,இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் எல்லோருக்கும் முந்திய இறைத்தூதர். ஆனால், மூஸா அலைஹிஸ்ஸலாம், அவர்களுடைய வமிசத்தில் பிற்காலத்தில் தோன்றியவர்கள். ஈஸா அலைஹிஸ்ஸலாம் கடைசி காலத்தில் தோன்றியவர்கள்.

இப்படி இருந்தும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உம்மத் என்பதாக கூறுகிறார்களே, இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த இரண்டு சாராரையும் வழிகெட்டவர் என்பதாக குறிப்பிடுகிறான்.

முஸ்லிம்களாகிய நாம், இந்த குர்ஆனை படிக்கின்ற நாம், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த இரண்டு தூதர்களை குறித்து மூஸா அலைஹிஸ்ஸலாம்,ஈஸா அலைஹிஸ்ஸலாம் இந்த இரண்டு தூதர்களை குறித்தும், இவர்களுடைய சமுதாயத்தை குறித்தும் என்ன செய்திகளை நமக்கு கூறுகிறான் என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இந்த இரண்டு சமுதாய மக்களும் வெளியிலிருந்து நம்மை அழிக்க வேண்டும், இவர்களை சதி செய்து இவர்களுடைய நல்ல பெயரை கெடுக்க வேண்டும் என்பதாக செய்து கொண்டிருக்கக் கூடிய இந்த சதி திட்டங்களுக்கெல்லாம், நாம் ஈமானிய அடிப்படையில், இஸ்லாமிய அடிப்படையில் பதில் சொல்ல வேண்டுமென்றால், அவர்களை எதிர்க்க வேண்டுமென்றால் குர்ஆனுடைய இல்ம் நமக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.

இந்த குர்ஆனுடைய இல்ம், குர்ஆனுடைய ஈமான் நமக்கு இல்லையென்றால் நாம் தோற்று விடுவோம். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

அல்லாஹ் தஆலா மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை எப்படி தேர்ந்தெடுத்தான்? அவர்களை எப்படி வளர்த்தான் என்ற செய்திகளை நாம் கூறினோம்.

அல்லாஹ் தஆலா மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூலமாக ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைக்க நாடினான்.

இவர்களை ஒரு அற்புதமாக அல்லாஹ் ஆக்க நாடினோன். இவர்களுடைய பிறப்பையே ஒரு அற்புதமாக அல்லாஹ் ஆக்க நாடினான்.

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தாயின்றி தந்தையின்றி அல்லாஹ் படைத்து காட்டினான். ஹவ்வா அவர்களை பெண் இல்லாமல் அல்லாஹ் படைத்து காட்டினான்.

அடுத்து, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒரு மனிதனை படைக்க நாடினான். பெண் இருக்கிறாள், ஆண் இல்லை.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய அற்புதத்தை வெளிப்படுத்துவதற்காக, தன்னுடைய அடியார்களில் தான் யாரை புகழ்ந்தானோ, எந்த தூய வழிமுறைகளில் வந்தார்களோ அந்த மர்யமை அல்லாஹ் தேர்ந்தெடுக்கிறான்.

மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அந்தஸ்து சாதாரணமானதல்ல. அவர்களுடைய ஈமானிய நிலைமை சாதாரணமானதல்ல.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்தாகிய நமக்கு அவர்களை முன் உதாரணமாக கூறுகிறான்.

وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِنْدَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ (11) وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِنْ رُوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ

நம்பிக்கைகொண்ட பெண்களுக்கு(ம் இரு பெண்களை) அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். (முதலாவது:) ஃபிர்அவ்னுடைய மனைவி (ஆசியா). அவள் (தன் இறைவனிடம்) ‘‘என் இறைவனே! உன்னிடத்தில் உள்ள சொர்க்கத்தில் எனக்கு ஒரு வீட்டை அமைத்துத் தா, ஃபிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலை விட்டும் என்னை பாதுகாத்துக் கொள், அநியாயக்கார சமுதாயத்தை விட்டும் என்னை பாதுகாத்துக்கொள்'' என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தாள்.

(இரண்டாவது:) இம்ரானுடைய மகள் மர்யம். அவள் தன் கற்பை பாதுகாத்துக் கொண்டாள். ஆகவே, அவளுடைய கர்ப்பத்தில் நம் ரூஹிலிருந்து ஊதினோம். அவள் தன் இறைவனின் வசனங்களையும், வேதங்களையும் உண்மையாக்கி வைத்ததுடன் (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவளாகவும் இருந்தாள். (அல்குர்ஆன் 66 : 11,12)

எத்தனை தன்மைகளை அல்லாஹ் கூறுகிறான். மர்யமை அல்லாஹ் தன்னுடைய உயர்ந்த அடியார்களில் தேர்ந்தெடுத்து,ஈமான் உள்ளவர்களுக்கு உதாரணமாக ஆக்கியிருக்கிறான்.

அதற்கு காரணங்களையும், அதற்கு அடிப்படை தன்மைகளையும் அல்லாஹ் சேர்த்து கூறுகிறான்.

முதலாவதாக, அவர் தன்னுடைய ஒழுக்கத்தை பாதுகாத்துக் கொண்டார். எனவே, நாம் படைத்த ரூஹை அவர்களில் ஊதினோம்.

அடுத்து கூறுகிறான், அவர் என்னுடைய வார்த்தைகளை எல்லாம் உண்மை படுத்தினார். எல்லா நேரத்திலும், எல்லா காலங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் தடுமாற்றமில்லாத ஈமான்.

இன்றைக்கு நம்மிலும் பலர்,ஈமான் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய ஈமானின் நிலைமை என்ன?

நன்மையில் அல்லாஹ்வை புகழ்வார்கள். தீமை வந்துவிட்டால், கஷ்டம் வந்துவிட்டால் அல்லாஹ்வை ஏசுவார்கள்.

இவர்களை பற்றி அல்லாஹ் கூறுகிறான்:

فَأَمَّا الْإِنْسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ (15) وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ

ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகிறான். ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகிறான். (அல்குர்ஆன் 89 : 15,16)

அடுத்து,நான்கு காரணங்களை அல்லாஹ் கூறுகிறான்,

كَلَّا بَلْ لَا تُكْرِمُونَ الْيَتِيمَ (17) وَلَا تَحَاضُّونَ عَلَى طَعَامِ الْمِسْكِينِ (18) وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَمًّا (19) وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا

(விஷயம்) அவ்வாறல்ல. நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவதில்லை. ஏழைகளுக்கு உணவு(ம் வாழ்வாதாரமும் நீங்கள் அளிக்காததுடன் மற்ற எவரையும்) அளிக்கும்படி தூண்டுவதில்லை. பிறருடைய சொத்துக்களை உங்கள் சொத்துடன் சேர்த்து புசித்துவிடுகிறீர்கள். மிக்க அளவு கடந்து பொருளை நேசிக்கிறீர்கள். (அல்குர்ஆன் 89 : 17-20)

ஆனால், மர்யம் அலைஹிஸ்ஸலாம் அப்படியல்ல.எல்லா நேரத்திலும் அல்லாஹ்வை உண்மைப்படுத்திய, அல்லாஹ்வுடைய வாக்கை உண்மைபடுத்திய தூய அடியாராக அவர்கள் இருந்தார்கள்.

நமக்கு உதாரணமாக அல்லாஹ் அவர்களை ஆக்கியிருக்கிறான் என்றால் ஈமானிலும் இறைவழிபாட்டிலும் எந்த அளவிற்கு அல்லாஹ்விடத்தில், அல்லாஹ்வுடைய பொருத்தம் ஏற்படும் அளவிற்கு, அல்லாஹ்வுடைய பிரியம் தன் மீது ஏற்படும் அளவிற்கு அவர்களுடைய ஈமானின் தரம் உயர்ந்திருக்கும்.

எந்த நேரத்திலும் தொழுகை, வணக்க வழிபாடு, தியானம். அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்களுக்கு உணவளிக்கப்பட்டிருந்தது. அல்லாஹ் தன்னுடைய ரூஹை அவர்களிடத்தில் ஊதுவதற்காக அல்லாஹ் அவர்களை தேர்ந்தெடுத்தான். அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான்.

وَاذْكُرْ فِي الْكِتَابِ مَرْيَمَ إِذِ انْتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا (16) فَاتَّخَذَتْ مِنْ دُونِهِمْ حِجَابًا فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا (17) قَالَتْ إِنِّي أَعُوذُ بِالرَّحْمَنِ مِنْكَ إِنْ كُنْتَ تَقِيًّا (18) قَالَ إِنَّمَا أَنَا رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَامًا زَكِيًّا (19) قَالَتْ أَنَّى يَكُونُ لِي غُلَامٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ وَلَمْ أَكُ بَغِيًّا (20) قَالَ كَذَلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَيَّ هَيِّنٌ وَلِنَجْعَلَهُ آيَةً لِلنَّاسِ وَرَحْمَةً مِنَّا وَكَانَ أَمْرًا مَقْضِيًّا

(நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக; அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது, அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.(அப்படி அவரைக் கண்டதும்,) “நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)” என்றார்.

“நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார். அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்.“அவ்வாறேயாகும்; “இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்” என்று உம் இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார்.(அல்குர்ஆன் 19 : 16-21)

அன்பிற்குரியவர்களே! நம்முடைய ஒழுக்கத்தை, நம்முடைய கற்பை பாதுகாப்பது ஈமானுடைய அடிப்படை பண்புகளில் ஒன்று.

அல்லாஹ் முஸ்லிம்களை குர்ஆனில் எங்கெல்லாம் புகழ்கிறானோ அங்கே இந்த வார்த்தையையும் சேர்த்து கூறுகிறான்.

தங்களுடைய கற்பைபாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஆண்கள்,தங்களுடைய கற்பை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பெண்கள்.

இந்த இரண்டு சாராரையும் அல்லாஹ் சேர்த்துக் கூறுகிறான். ஈமானுடைய அடிப்படை தன்மைகளில் அல்லாஹ் கூறுகிறான்.

யார் ஹராமான வழிகளில் தங்களுடைய ஆசையை பூர்த்தி செய்துக்கொள்ள நாடுகிறார்களோ அவர் வரம்புமீறியவர், அவர் பழிக்கப்பட்டவர் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ், நாளை மறுமையில் அர்ஷுடைய நிழலில் ஏழு கூட்டத்தாரை தங்க வைக்கிறான்.

وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ

அதில் ஒருவர், ஒரு வாலிபர். அவரை அழகுடைய, நல்ல வமிசமுடைய, நல்ல குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் அழைக்கிறாள். அந்த மனிதர் கூறுகிறார், நான் அல்லாஹ்வை பயப்படுகிறேன் என்று. இவரை அல்லாஹ் அர்ஷீடைய நிழலில் தங்க வைப்பான். (1)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் :1423.

தன்னுடைய ஒழுக்கத்தை பாதுகாத்துக் கொள்வது பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஈமானிய அடிப்படை பண்புகளில் ஒன்று.

ஒரு முஸ்லிம் ஒழுக்கம் தவறியவனாக, தவறான வழியில் தன்னுடைய ஆசையை தீர்ப்பவனாக இருக்கமாட்டான். இந்த ஒரு படிப்பினையை நாம் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய இந்த வார்த்தைகளிலிருந்து கற்கிறோம்.

இது ஈமானிய பண்பு,அல்லாஹ்வுடைய தவ்ஃபீக்கை கொண்டு தான் முடியும். எனவே, மர்யம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேடினார்கள்.

நான் மிகவும் ஒழுக்கமானவள்,உன் தீமையிலிருந்து நான் என்னை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கூறவில்லை.

யாரும் அப்படி தன்னை தானே பெருமை கொள்ள முடியாது. அல்லாஹ் அவனுடைய தவ்ஃபீக்கை எடுத்துவிட்டால் நம்முடைய நிலைமை  என்னவாகும்?

ஆகவே, மர்யம் அலைஹிஸ்ஸலாம் நேரடியாக அல்லாஹ்விடத்தில் உதவி தேடினார்கள். நீ அல்லாஹ்வை பயப்படுபவனாக இருந்தால் என்று கூறி அல்லாஹ்வுடைய அச்சத்தை அவருக்கும் நினைவூட்டினார்கள். நான் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று அல்லாஹ்வை நினைவு படித்தினார்கள்.

வந்தவர் யார்? தவறான எண்ணம் கொண்ட மனிதரல்ல. வந்தவர் மனித உருவத்தில் இருந்த ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்.

அவர் என்ன கூறினார் தெரியுமா ? மர்யம் நான் உன் இறைவனுடைய தூதர். நான் இதுபோன்று தீமைகளை நாடக்கூடிய மனித படைப்பு அல்ல. அல்லாஹ் மலக்குகளை உண்பது, குடிப்பது, மலம்ஜலம் கழிப்பது இது போன்ற இச்சை தேவைகளிலிருந்து அவர்களை தூய்மைபடுத்தி வைத்திருக்கிறான். அல்லாஹ்விடத்தில் கண்ணியப்படுத்தப்பட்ட அடிமைகள் தான் மலக்குகள்.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் மலக்குமார்கள் வருகிறார்கள். காளைகன்றை அறுத்து அழகான முறையில் பொறித்து சாப்பிடுவதற்கு கொடுக்கிறார்கள். அவர்களுடைய கைகள் அந்த தட்டை நோக்கி செல்வது கிடையாது. அந்த உணவின் பக்கமே அவர்களுக்கு ஆசை ஏற்படவில்லை.

ஒரு நல்ல உணவை நமக்கு முன்னால் சமைத்து வைத்தால் நம்மை அறியாமல் அதன் பக்கம் நமது மனது ஈடுபாடு கொள்ளும்.அதை எடுத்து சாப்பிடுவோம்.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் பல முறை கூறுகிறார்கள் சாப்பிடுங்கள்,சாப்பிடுங்கள் என்று. அவர்களுக்கு அதன் பக்கம் பார்வைகளும் செல்வது கிடையாது, கையும் அருகில் செல்லவில்லை.

அப்பொழுது தான் அந்த மலக்குகள் கூறினார்கள், இப்ராஹீம் உன் இறைவனிடமிருந்து வந்திருக்கக் கூடிய தூதர்கள் நாங்கள்.

ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் கூறுகிறார்கள், மர்யமே! உன் இறைவனுடைய தூதன் நான். தூய்மையான ஒரு குழந்தையைஅல்லாஹ் தஆலா உங்களுக்கு கொடுக்க இருக்கிறான்.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பிறக்கும் பொழுது அவர்களை தூயவர் என்று கூறுகிறான். நாம் எந்தளவிற்கு உயர்வாக ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கண்ணியப்படுத்துகிறோம் பாருங்கள்.

நம்முடைய குர்ஆன் எந்தளவிற்கு கண்ணியப்படுத்துகிறது பாருங்கள். ஆகவே தான், இந்த உம்மத் நடுநிலையான உம்மத். எல்லா விஷயங்களிலும் இந்த உம்மத் நடுநிலையான சமுதாயம்.

நீங்கள் கொள்கைகளை எடுத்துப் பாருங்கள். யூதர்கள் ஒரு பக்கம் அத்துமீறி வழிகெட்டிருப்பார்கள். இன்னொரு கோனத்தில், நஸராக்கள் வழிகெட்டிருப்பார்கள்.

இந்த இரண்டு சாராருக்கும் இடையில் நடுநிலையான சரியான கொள்கையை கொண்டிருப்பவர் தான் முஸ்லிம்கள், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்துகள்.

யூதர்கள்,ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை விபச்சாரத்தில் பிறந்த குழந்தை கூறினார்கள்.அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ் அவர்களை சபிக்கிகிறான்.

யூதர்களை அல்லாஹ் பல காரணங்களால் சபித்தான். அதில் ஒன்று, மர்யமின் மீது, ஈஸாவின் மீது அவர்கள் கூறிய அபாண்டமான வார்த்தைக்காக, கொடிய பேச்சின் காரணமாக.அல்லாஹ் பாதுகாப்பானாக!

விபச்சாரத்தில் பிறந்த குழந்தை என்று கூறினார்கள். இந்த வகையில் இவர்கள் கொடுக்க வேண்டிய மரியாதையை குறைத்து அசிங்கப்படுத்தியவர்கள் .

நஸாரா-கிறிஸ்தவர்கள், கொடுக்க வேண்டிய மரியாதையில் அளவு கடந்தவர்கள்.

அல்லாஹ்வுடைய தூதர், அல்லாஹ்வால் கண்ணியப்படுத்தப்பட்டவர், கண்ணியத்திற்குரிய இறைத்தூதர் என்று நம்பிக்கை கொள்வதற்கு பதிலாக ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ்வே! என்று கூறிவிட்டார்கள். அல்லாஹ்வுடைய குழந்தை என்று கூறிவிட்டார்கள்.

அல்லது அல்லாஹ்களில் ஒருவர் என்பதாக கூறிவிட்டார்கள். ஆகவே, யஹூதிகளும் வழிகெட்டவர்கள், நஸரானிகளும் வழிகெட்டவர்கள்.

இதில் உண்மை நிலையை அடைந்தவர்கள் முஸ்லிம்கள் தான்.முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த தீனை, இஸ்லாமை, ஷரீஅத்தை பின்பற்றியவர்கள்.

நாம் என்ன கூறுகிறோம், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தூதர்களில் ஒருவர். அல்லாஹ் கண்ணியப்படுத்தியவர்.

பரிசுத்தமான மர்யமிற்கு அல்லாஹ்வால் விசேஷமான முறையில் ஊதப்பட்ட ரூஹ் ஆவார். அல்லாஹ் அவரை படைப்பதற்கு முன்பே, குழந்தையாக அவரை ரூஹ் ஊதுவதற்கு முன்பே அவரை தூய்மையான குழந்தை என்று பெயரிட்டிருக்கிறான். (அல்குர்ஆன் 19 : 19)

ஒரு தூய்மையான குழந்தையை உனக்கு தருவதற்காக நான் வந்திருக்கிறேன்.

அப்பொழுது மர்யம் கேட்கிறார்கள், தூதரே! நீங்கள் கூறுவது சரியென்றால் எனக்கு எப்படி குழந்தை பிறக்கும். எந்த ஒரு ஆணும் என்னை தீண்டவில்லையே, திருமணம் எனக்கு ஆகவில்லையே, நான் ஒரு விபச்சாரியல்ல,எனக்கு எப்படி குழந்தை பிறக்கும்?

பொதுவான வழக்கம்,அல்லாஹ்வுடைய நியதி இப்படி தான். குழந்தை பிறப்பதாக இருந்தால் அங்கே ஒரு ஆண்பெண் திருமண உறவு தேவை.

அல்லாஹ் அக்பர்!அல்லாஹ்வுடைய குத்ரத்தை அல்லாஹ் அங்கே காட்ட விரும்புகிறான். நம்முடைய கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது அல்லாஹ்வுடைய ஆற்றல்.

அல்லாஹ் மிகப் பெரியவன். நம்முடைய கற்பனைகளால் நம்முடைய அறிவால், நம்முடைய சிந்தனைகளால் அல்லாஹ்வுடைய ஆற்றலை நாம் புரிய முடியாது.

இறைத்தூதர்கள், அல்லாஹ்வை எப்படி மகிமைப் படுத்தினார்களோ, கண்ணியப் படுத்தினார்களோ, எப்படி விளங்கினார்களோ அதற்கெல்லாம் அப்பாற்பட்டவன் அந்த ரப்பு.

மலக்குகள் அல்லாஹ்விடத்தில் பேசுபவர்கள். அல்லாஹ்வுடைய சமூகத்தில் இருப்பவர்கள். அல்லாஹ்விடமிருந்து நேரடியாக கட்டளையை பெறக்கூடியவர்கள்.

அந்த மலக்குகளெல்லாம் அல்லாஹ்வை எப்படி மகிமைபடுத்தி, கண்ணியப்படுத்தி விளங்கியிருக்கிறார்களோ அதைவிட கண்ணியமிக்கவன் அல்லாஹ்.

இந்த உலகத்தில் எத்தனை இறைத்தூதர்களுக்கு அல்லாஹ்வைப் பற்றிய, அவனுடைய மகிமையைப் பற்றிய, அவனுடைய உயர்வு, கண்ணியத்தைப் பற்றிய அந்த இல்மை கொடுத்தானோ, எத்தனை நல்லோர்களுக்கு, இல்ம் உடையவர்களுக்கு அல்லாஹ் கொடுத்தானோ அவை அனைத்தும் அல்லாஹ்வை அறிந்து கொள்வதில் கடலில் ஒரு துளிதான்.

ஹிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூலமாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ஹிள்ரு அவர்களும் பிரிகிறார்கள். இனி நாம் சேர்ந்திருக்கக் கூடாது, நாம் பிரியக்கூடிய இடம் இது என்பதாக.

அந்த நேரத்தில் ஒரு சிட்டுக் குருவி கடலில் தன்னுடைய அலகைக் கொண்டு கொத்தி எடுக்கிறது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஹிள்ரு கூறினார்கள்.

மூஸா! இதோ இந்த குருவியை பார்த்தாயா? இந்த நதியில், இந்த கடலில்தன்னுடைய அலகை முக்கி எடுத்ததில் எவ்வளவு தண்ணீர் அந்த அலகில் ஒட்டியிருக்கும். அவ்வளவு தான் என்னுடைய இல்ம், உன்னுடைய இல்ம்

ஆனால், அல்லாஹ்வுடைய இல்ம்!

وَلَوْ أَنَّمَا فِي الْأَرْضِ مِنْ شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِنْ بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَا نَفِدَتْ كَلِمَاتُ اللَّهِ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

பூமியிலுள்ள மரங்கள் (செடிகள் என) அனைத்தையும் எழுது கோல்களாகவும், கடல் நீரை மையாகவும் வைத்து (அது தீர்ந்து) பின்னும் ஏழு கடல்களின் நீரையும் மையாக வைத்து எழுதிய போதிலும் அல்லாஹ்வுடைய வசனங்கள் (எழுதி) முடிவு பெறாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான். (அல்குர்ஆன் 31 : 27)

அல்லாஹ் அவ்வளவு பெரிய வல்லமை உடையவன். அந்த அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளும்படி நாம் அழைக்கிறோம். அந்த அல்லாஹ் தான் உண்மையான இறைவன் என்று அழைக்கிறோம். அவன் படைத்த இறைத்தூதர்கள் அல்லாஹ்வாக ஆக முடியாது. அல்லாஹ்வுடைய தன்மையை அவர்கள் பெற முடியாது.

அல்லாஹ் தன்னுடைய ஆட்சியில், அதிகாரத்தில், தான் வணங்கப்படும் விஷயத்தில் மற்றொருவரை கூட்டாக்கிக் கொள்ளமாட்டான்.

மலக்குகளை அல்லாஹ் குறித்து கூறுகிறான், மனிதர்களை குறித்து கூறுகிறான். யார் என்னை தவிர தானும் ஒரு கடவுள் என்று கூறுகிறாரோ அவரை நரக நெருப்பில் போட்டு பொசுக்குவோம் என்பதாக.

وَمَنْ يَقُلْ مِنْهُمْ إِنِّي إِلَهٌ مِنْ دُونِهِ فَذَلِكَ نَجْزِيهِ جَهَنَّمَ كَذَلِكَ نَجْزِي الظَّالِمِينَ

அவர்களில் எவரேனும் ‘‘அல்லாஹ்வையன்றி நிச்சயமாக நானும் வணக்கத்திற்குரிய ஓர் இறைவன்தான்'' என்று கூறினால், அவருக்கு நரகத்தையே நாம் கூலியாக்குவோம். அநியாயக்காரர்களுக்கு அவ்வாறே கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 21 : 29)

அல்லாஹ் தனது வல்லமையை காட்ட விரும்பினான். ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் கூறுகிறார்கள், இது ஒரு ஆச்சரியம் அல்ல, இது இப்படி தான் நடக்க போகிறது. உன்னுடைய இறைவன் கூறினான், இது அவனுக்கு இலகுவானது என்பதாக.

அவனை பொறுத்தவரை, அவன் ஆட்சியை பொறுத்தவரை, அவனுடைய வல்லமையை பொறுத்தவரை வானம், பூமி, சூரியன், சந்திரன் இந்த முழு பிரபஞ்சத்தின் ஆட்சி அதிகாரம் அவனுடைய கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.

அவன் எதையும் படைக்க நாடினால் 'குன்' என்று கூறுவான், அது ஆகிவிடும். அல்லாஹ்வுடைய ஈமானை, அவனுடைய குத்ரத்தை அங்கே புரிய வைக்கிறார்கள்.

இது விதிக்கப்பட்ட ஒரு விதியாகி விட்டது. நான் இதை முடிவெடுத்துவிட்டேன், இனி மாற்ற முடியாது. மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பயப்படுகிறார்கள். என்ன நடக்கும்? மக்கள் என்ன கூறுவார்கள்?என்று.

அதை குறித்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தொடர்ந்து அடுத்த வசனங்களில் கூறுகிறான்.

அன்பிற்குரியவர்களே! நபிமார்களை பற்றி அறிந்து கொள்வது ஈமானுடைய அடிப்படை. அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த தகுதிகளை புரிந்து கொள்வது ஈமானுடைய அடிப்படை. யாருக்கு அல்லாஹ் எந்த தகுதியை உயர்வை கொடுத்தானோ அந்த தகுதியை வைத்து நாம் ஈமான் கொள்வது ஈமானுடைய அடிப்படை.

இன்று நம்மில் பலர், இந்த இஸ்லாமிய மார்க்கத்தின் ஆழத்தை, இஸ்லாமிய மார்க்கத்தின் தூய்மையை புனிதத்தை புரிந்து கொள்ளாமல், எம்மதமும் சம்மதம் என்று கூறுகிறார்கள்.

நீங்களும் சரி, நாங்களும் சரி என்று கூறுகிறார்கள், எல்லாம் ஒன்று தான் என்று கூறுகிறார்கள்.

இல்லை, அன்பிற்குரியவர்களே! அசுத்தமும்சுத்தமும் சமமாக முடியாது.

அசத்தியமும் சத்தியமும் சமமாக முடியாது. உண்மையும் பொய்யும் சமமாக முடியாது. அல்லாஹ் ஒருவன் தான் வணங்கப்படுவதற்கு தகுதியானவன். அவனுடைய மார்க்கம் இஸ்லாம் மட்டும் தான் உண்மையானது.

அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதியான தூதர். இதற்கு முந்திய இறைத்தூதர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அப்படி ஏற்றுக் கொண்டவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏற்றுக் கொள்ள மறுத்தால் அவர் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவராக ஆக மாட்டார்.

அவர் எந்த இறைத்தூதரையும் ஏற்றுக் கொண்டவராக ஆகமாட்டார். நாளை மறுமையில் அவர் எவ்வளவு தான் நல்ல காரியங்கள் செய்தவராக அங்கே வந்திருந்தாலும் சொர்க்கம் நுழையமாட்டார்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் அன்பை, அருளை உறுதியான ஈமானை தந்தருள்வானாக!

ஈஸா இப்னு மர்யம் (பாகம் 3-3

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு உங்களுக்கும் எனக்கும் அறிவுரை கூறியவனாக இந்த ஜும்ஆ பிரச்சாரத்தை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் என்னுடைய பாவங்களையும் உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பானாக! சிறந்த நம்பிக்கையாளர்களில் அல்லாஹ் நம்மை சேர்த்து வைப்பானாக!

அல்லாஹ்வுடைய அன்பையும் அருளையும் நமக்கு தருவானாக! தீனை புரிந்து இந்த தீனின் படி வாழ்க்கை நடத்துகின்ற நல்லோர்களில் அல்லாஹ் என்னையும் உங்களையும் சேர்த்து வைப்பானாக!

அல்லாஹ்வின் அடியார்களே! தொடர்ந்து இறைத்தூதர்களின் வரிசையில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பற்றி நாம் பேசி வந்தோம்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை தன்னுடைய வல்லமைக்கு ஒரு அத்தாட்சியாக ஆக்க விரும்பினான். ஆகவே தான் அவர்களை தந்தையின்றியே படைத்துகாட்டினான்.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை குறித்து இன்று மக்களுக்கு மத்தியில் மிகப் பெரிய ஒரு சர்ச்சை நிலவி வருகிறது. அந்த சர்ச்சையை தீர்க்கும்படியாக அதற்கு ஒரு தீர்வாக தான் அல்லாஹ் தஆலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அனுப்பினான்.

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வருகையை பற்றி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் நற்செய்தி கூறிவிட்டு சென்றார்கள். இந்த குர்ஆன் கிறிஸ்தவர்களும் யூதர்களும் கருத்து வேற்றுமை கொள்கின்ற பல விஷயங்களை தெளிவுபடுத்தி,அதற்கு சரியான முடிவு என்ன? தீர்வு என்ன? என்பதை சொல்கிறது.

அந்த தொடரில் தான் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை குறித்தும் அல்லாஹ் தஆலா குர்ஆனுடைய பல வசனங்களில் கூறுகிறான்.

அல்லாஹ்வின் அடியார்களே! நாம் கூறினோம்;ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களுடைய தாய் வயிற்றில் இருந்த பொழுது,மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் என்னென்ன பிரார்த்தனைகளை செய்தார்கள்?

எப்படி ஒரு சிறந்த முஃமினாக வணக்க வழிபாடுகளை செய்யக் கூடிய பெண்ணாக மர்யம் அலைஹிஸ்ஸலாம் விளங்கினார்கள்?என்பதாக.

பிறக்கக் கூடிய காலம் வருகிறது. அந்த நேரத்தில் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிரசவத்தின் வலியை உணர்கிறார்கள். குழந்தை தனக்கு பிறக்கப் போகிறது என்பதை தெரிந்தவுடனே அல்லாஹ்விடத்தில் அவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். தன்னுடைய பலவீனத்தை அல்லாஹ்விடத்தில் முறையிடுகிறார்கள்.

நான் இந்த ஒரு நிலைமை ஏற்படுவதற்கு முன்பே மரணித்துவிட வேண்டும். மக்கள் என்னை மறந்துவிட வேண்டும். (அல்குர்ஆன் 19 : 23)

அன்பிற்குரியவர்களே! சிலருக்கு இந்த இடத்தில் ஒரு சந்தேகம் ஏற்படலாம். இவ்வளவு நெருக்கத்திற்குரிய அல்லாஹ்வுடைய அன்பிற்குரிய சிறந்த அடியார் என்று போற்றப்பட்ட மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், இந்த துன்ப நேரத்தில் இப்படி ஒரு பிரார்த்தனை செய்கிறார்களே, நான் இறந்திருக்க வேண்டுமே, மக்கள் என்னை மறந்துவிட வேண்டுமே!  என்னை பற்றிய நினைவு மக்களுக்கு மத்தியில் அழிந்துவிட வேண்டுமே என்று கூறுகிறார்கள்.

இதற்கு என்ன காரணம் என்றால்? நிறைய நுட்பங்கள் இருக்கலாம். அதில் நமக்கு தெரிந்த நம்முடை சிற்றறிவுக்கு புரிந்த சில விஷயங்களை கூறுகிறேன்.

ஒரு பெண்ணை பொருத்தவரை அவள் அதிகம் பயப்படுவது தன்னுடைய கற்பை பற்றி, தன்னுடைய பத்தினித்தனத்தை பற்றி.

யாராவது கை நீட்டிவிடுவது, சுட்டிக்காட்டி பேசிவிடுவது, தன்னை தன்னுடைய கற்பில் குறைத்து பேசி விடுவது.

இது உண்மையான பெண்களால், அந்த தன்மை உடைய பெண்களால், அல்லாஹ்வை அஞ்சக்கூடிய பெண்களால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு சிரமம்.

உங்களுக்கு நன்றாக தெரியும்; நம்முடைய அன்னையர் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விருப்பத்திற்குரிய மனைவி.

இந்த இஸ்லாமிய மார்க்க கல்வியை அல்லாஹ்வின் தூதரிடமிருந்து நமக்கு பெற்றுத் தந்த சிறந்த அறிஞர்களில் ஒருவர். பல நபித்தோழர்கள் பல கல்விகளை அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து பெற்றார்கள்.

அந்த சிறந்த அடியாராகிய, அந்த முஃமினாகிய, அல்லாஹ்வின் தூதரின் மனைவியாகிய ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது.

குர்ஆனில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த வரலாற்றை கூறுகிறான். எவ்வளவு வேதனைபட்டார்கள்!அழுது கொண்டே இருந்தார்கள். அவர்களுடைய அழுகை நிற்கவில்லை.

அல்லாஹ்வின் புறத்திலிருந்து,அவர்கள் பத்தினித்தன்மை உடையவர்கள், பாதுகாப்பானவர்கள், சுத்தமானவர்கள், இந்த இழிச் சொற்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.அவர்களை யார் குறை கூறினார்களோஅவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு. அவர்களை நான் கடுமையாக தண்டிப்பேன் என்று அல்லாஹ் அவனுடைய புத்தகம் அல்குர்ஆனில் சூரா அந்நூரில் வசனத்தை இறக்குகின்ற வரை அழுது கொண்டே இருந்தார்கள். (அல்குர்ஆன் 24 : 23)

நிச்சயமாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன், என்னுடைய பத்தினித்தன்மையை அறிந்தவன். நான் யாரையும் திருப்திபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. அல்லாஹ் எனக்கு அவனுடைய சாட்சியை இறக்கி வைப்பான்.

எப்படிப்பட்ட மன வேதனையை அவர்கள் அடைந்தார்கள்!

அன்பிற்குரியவர்களே! தன்னுடைய ஒழுக்கத்தை பற்றி மக்கள் என்ன கூறுவார்கள்? என்று ஒரு பயம்.

இன்று பார்க்கிறோம், யாராவது ஒருவர் தவறு செய்துவிட்டால் ஒட்டுமொத்த சமுதாயத்தையே பழிப்பது இன்று மக்களுக்கு மத்தியில் இருக்கின்ற ஒரு பழக்கம்.

இதை தான் பயந்தார்கள். நம்முடைய இந்த செயலை இறைவனுடைய அற்புதம் என்று மக்கள் புரிந்து கொள்ளாமல் என்னை பழித்துவிடுவார்களோ,என்னுடைய கற்பை குறைகூறி விடுவார்களோ என்று.

இரண்டாவது, மக்கள் இப்படி பழிக்க ஆரம்பித்தால் அது அவர்களுக்கு இறைவனின் பெரிய ஒரு சோதனையாக ஆகிவிடும்.

அல்லாஹ்விற்கு தெரியும் நான் உண்மையானவள் சுத்தமானவள் என்று. என்னை இவர்கள் பழிக்கும் காரணத்தால், என்னை இவர்கள் சபிக்கும் காரணத்தால் அல்லாஹ்வின் தண்டனை இந்த சமூகத்திற்கு இறங்கிவிடுமோ என்று மற்றொரு பயம்.

இது போன்ற காரணங்களால் தான் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடத்தில் இப்படி விரும்பினார்கள். நான் மரணித்து விட வேண்டும், என்னை பற்றிய நினைவு மக்களுக்கு மத்தியில் மறக்கடிக்கப்பட வேண்டும் என்று.

ஆனால், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முன்பு கூறியதை போன்று, அல்லாஹ்வுடைய கட்டளை நடந்தே தீரும்.

அவன் அறிவித்தவாறு அதை நடக்க விரும்பினான். அல்லாஹ்வுடைய உதவியை பாருங்கள்.

அன்பிற்குரியவர்களே! அல்லாஹ் தஆலா நல்லோரை சோதிப்பான், இறையச்சமுடையவர்களையும் அல்லாஹ் சோதிப்பான். ஆனால், அல்லாஹ் குர்ஆனில் கூறுவது போன்று.

أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ

அல்லாஹ்வுடைய உதவி வெகு அருகாமையில் இருக்கிறது. (அல்குர்ஆன் 2 : 214)

இறைத்தூதர்கள் சோதிக்கப்பட்டார்கள், அவர்களை பின்பற்றிய நல்லோர் சோதிக்கப்பட்டார்கள். ஆனால், அவர்களை அல்லாஹ் கைவிட்டு விட மாட்டான்.

அல்லாஹ்வுடைய உதவி மிக நெருக்கமானது.

அவர்களுடைய ஈமானுடைய துடிப்பை, அவர்களுடைய பிரார்த்தனையை, அல்லாஹ்விடத்தில் மன்றாடும் அந்த தூய வடிவத்தை அல்லாஹ் பார்க்க விரும்பிக் கொண்டிருக்கிறான். அதை பார்த்ததற்கு பிறகு அல்லாஹ் உதவி செய்து விடுவான். இது அல்லாஹ்வுடைய நடைமுறை.

நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொல்லாயிரத்து ஐம்பது ஆண்டுகள் இந்த அழைப்பு பணியை செய்தார்கள். அல்லாஹ்விடத்தில் மன்றாடினார்கள். மக்களின் மீது உழைப்பு செய்தார்கள். அந்த மன்றாடுதலின் எல்லையை அல்லாஹ் பார்க்க விரும்பினான்.

அல்லாஹ்விடத்தில் கடைசி வார்த்தையாக கூறினார்கள்.

فَدَعَا رَبَّهُ أَنِّي مَغْلُوبٌ فَانْتَصِرْ (10) فَفَتَحْنَا أَبْوَابَ السَّمَاءِ بِمَاءٍ مُنْهَمِرٍ (11) وَفَجَّرْنَا الْأَرْضَ عُيُونًا فَالْتَقَى الْمَاءُ عَلَى أَمْرٍ قَدْ قُدِرَ

ஆகவே, அவர் தன் இறைவனை நோக்கி ‘‘நிச்சயமாக நான் (இவர்களிடம்) தோற்றுவிட்டேன். நீ எனக்கு உதவி செய்!'' என்று பிரார்த்தனை செய்தார். ஆதலால், வானத்தின் வாயில்களைத் திறந்து விட்டு, தாரை தாரையாய் மழை கொட்டும்படி நாம் செய்தோம். மேலும், பூமியின் ஊற்றுக்கண்களையும் (பீறிட்டுப்) பாய்ந்தோடச் செய்தோம். ஆகவே, நிர்ணயிக்கப்பட்ட ஒரு காரியத்திற்காக தண்ணீர் ஒன்று சேர்ந்தது. (அல்குர்ஆன் 54 : 10-12)

சுப்ஹானல்லாஹ்! அதுபோன்று தான் மர்யம் அலைஹிஸ்ஸலாம்,அல்லாஹ்விடத்தில் அந்த பிரார்த்தனையின் உச்சத்தை அடைந்த பொழுது, பணிவின் உச்சத்தை அடைந்த பொழுது, அல்லாஹ்வுடைய உதவியை முழுமையாக நம்பி நின்ற பொழுது,அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஜிப்ரயீலை அனுப்பினான்.

எனக்கு நீங்கள் இந்த பிரசவ வேதனையிலிருந்து விடுதலை தாருங்கள்,எனக்கு பிரசவத்திற்கு உண்டான காரியங்களை செய்யுங்கள் என்று யாரிடத்தில் கூறுவது? சமுதாயத்தை விட்டு விலகிவிட்டார்கள். யார் ஆதரிப்பார்கள்?ஆதரிப்பதற்கு யார் முன் வருவார்கள்?

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வானத்திலிருந்து ஜிப்ரயீலை அனுப்புகிறான். எந்த ஜிப்ரயீலின் மூலமாக ரூஹ் ஊதப்பட்டதோ, அதே ஜிப்ரயீலை மீண்டும் அனுப்புகிறான். ஜிப்ரயீல் அவருக்கு கீழ் பக்கத்திலிருந்து அழைத்தார். மர்யம் நீ கவலைபடாதே!

فَنَادَاهَا مِنْ تَحْتِهَا أَلَّا تَحْزَنِي قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا (24) وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا (25) فَكُلِي وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا

(பேரீச்ச மரத்தின்) அடிப்புறமிருந்து (ஜிப்ரயீல்) சப்தமிட்டு ‘‘(மர்யமே!) கவலைப்படாதீர்! உமக்குச் சமீபமாக உமது இறைவன் ஓர் ஊற்றை (உதித்து) ஓடச் செய்திருக்கிறான். இப்பேரீச்ச மரத்தின் கிளையை, உமது பக்கம் பிடித்து (இழுத்து)க் குலுக்குவீராக. அது பழுத்த பழங்களை உம் மீது சொரியும்.ஆகவே, (அப்பழங்களை) நீர் புசித்து (இந்த ஊற்றின் நீரைக்) குடித்து (இக்குழந்தையைக் கண்டு) கண் குளிர்ந்திருப்பீராக! மனிதரில் எவரைக் கண்ட போதிலும் ‘‘நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பு நோற்க முடிவு செய்துள்ளேன்; ஆகவே, இன்றைய தினம் எம்மனிதருடனும் பேசமாட்டேன் என்று கூறிவிடுவீராக'' என்றும் கூறினார்.(அல்குர்ஆன் 19 : 24-26)

வசனத்தின் கருத்து : இந்த நேரத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எவ்வளவு பெரிய ஒரு மருத்துவத்தை அங்கே கற்றுத் தருகிறான் என்று பாருங்கள்.

அந்த சிரமம் போவதற்காக, சுக பிரசவம் ஏற்படுவதற்காக, அல்லாஹ்வுடைய ஏற்பாடு. அல்லாஹ் நாடியிருந்தால் இதற்கு முன்பு ஜிப்ரயீலின் மூலமாக பறிக்கப்பட்ட கனிகளை தட்டில் கொண்டு வந்து பரிமாறினான் அல்லவா, அது போன்று செய்திருக்கலாம். அப்படி செய்யவில்லை, உங்களுக்கு மேல் மரத்தின் கிளை இருக்கிறதல்லவா, இந்த கிளையை பிடித்து உலுக்குங்கள்.

அவர்களுக்கு ஒரு அசைவை ஏற்படுத்துகிறான். அவர்களுக்கு சுக பிரசவம் எளிமையாக ஏற்படுவதற்காக, அவர்களுக்கு அங்கே ஒரு வேலையை கொடுக்கிறான்.

தண்ணீரை நீங்களாக எடுத்து குடியுங்கள். அவர்களுக்கு அவர்களுடைய சிந்தனையை அல்லாஹ் மாற்றுகின்றான். இதைபற்றி நீங்கள் சிந்திக்காதீர்கள், இதைபற்றி நீங்கள் கவலைபடாதீர்கள்.

நன்றாக சாப்பிடுங்கள், நன்றாக குடியுங்கள். உங்களது உடலை நீங்கள் தேற்றுங்கள். சந்தோஷமாக இருங்கள் கவலைபட வேண்டிய நேரமல்ல இது.

இன்று மருத்துவர்கள், குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கின்ற பெண் கவலைபடக் கூடாது, டென்ஷனாக கூடாது, மன நெருக்கடிக்கு ஆளாக கூடாது என்று கூறுகிறார்கள்

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த தத்துவத்தை நமக்கு எப்போதோ குர்ஆனில் கூறுவிட்டான்.

அல்லாஹ் கொடுக்கக்கூடிய நிஃமத்தை நினைத்து நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள், உற்சாகமாக இருங்கள். ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருங்கள். நல்ல ஒரு திடகாத்திரமான, நல்ல ஒரு சுகாதாரமான உணவை நீங்கள் சாப்பிடுங்கள். (அல்குர்ஆன் 19 : 24-26)

அன்பிற்குரியவர்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய ஏற்பாடு இப்படி தான். ஒரு சோதனைக்கு பின்பு அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஒரு வெற்றியை கொடுப்பான்.

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا (5) إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. (அல்குர்ஆன் 94 : 5,6)

மர்யம் அலைஹிஸ்ஸலாம் நம்பிக்கை கொள்கிறார்கள். சிரமமான நேரத்தில் கஷ்டமான நேரத்தில் மனம் தளரத்தான் செய்யும். மனம் தளரும்பொழுது அல்லாஹ்வுடைய வாக்குறுதிகளை எண்ணி நமது நம்பிக்கையை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

நமது ஈமானை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுது அல்லாஹ்வுடைய உதவியை பார்க்கலாம். அந்த நம்பிக்கை பலவீனம் அடையும் பொழுது உண்மையில் நாமும் பலவீனம் அடைந்துவிட்டால், அல்லாஹ்வுடைய அருளிலிருந்து நிராசை அடைந்துவிட்டால் அங்கே ஷைத்தான் ஜெயித்துவிடுகிறான். நாம் அங்கே தோற்றுவிடுகிறோம்.(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

குழந்தை பெற்றுவிடுகிறார்கள். சுக பிரசவம் அடைந்து விடுகிறார்கள். அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். தனது சமுதாய மக்களிடத்தில் தூக்கிக் கொண்டு வருகிறார்கள்.

எந்த ஒரு பழிச்சொல்லை பயந்தார்களோ, உடனடியாக அந்த சமுதாயம் அவர்களை அந்த பழிச்சொல்லை கொண்டே எறிகிறது. இது இஸ்ரவேலர்களுடைய பழக்கம், யஹூதிகளுடைய பழக்கம்.

அவர்கள் இறைத்தூதர்களிடத்தில் சண்டை சச்சரவு செய்தவர்கள், இறைத்தூதர்களை கொன்றவர்கள். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மீது பழிச் சொல்லை சுமத்தியவர்கள், அந்த குடும்பத்தின் மீது பழிச்சொல்லை சுமத்தியவர்கள். இறைத்தூதர்களை கொன்றவர்கள்.

யூதர்களை பற்றி அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும் பொழுது யூதர்கள் நபிமார்களை அநியாயமாக கொன்றவர்கள், நல்லவர்களை அநியாயமாக கொன்றவர்கள் என்று கூறுகிறான்.

அன்பிற்குரியவர்களே! வரலாற்றில் பதிவு செய்கிறார்கள். ஒரே இரவில் நாற்பதுக்கும் மேற்பட்ட இறைத்தூதர்களை கொன்றிருக்கிறார்கள். இஸ்ரவேலர்கள் கொன்ற நபிமார்களின் எண்ணிக்கை மட்டும் எழுபதாயிரத்தை தாண்டும் என்று எழுதுகிறார்கள்.

ஒரே நாளில் ஒரே இரவில் நாற்பதுக்கு மேற்பட்ட இறைத்தூதர்களையும் நூற்றி எழுபதுக்கும் மேற்பட்ட இறைத்தூதருடைய மாணவர்களையும், அவர்களுடைய தோழர்களையும் படுகொலை செய்திருக்கிறார்கள்.

யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யூதர்களால் படுகொலை செய்யப்பட்டவர்கள். இப்படி யூதர்கள் கொன்ற இறைத்தூதர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில், என்ன நடந்தது? இந்த குழந்தை எப்படி வந்தது? இது யாருடைய குழந்தை? என்ற விபரங்களையெல்லாம் கேட்க மக்கள் தயாராக இல்லை. குழந்தையை கையில் பார்த்தவுடனேயே கூறினார்கள், மர்யமே! மிகப் பெரிய தவறான செயலை நீ செய்து விட்டாய் என்று.

ஹாரூனின் சகோதரியே! உன்னுடைய தந்தை கெட்ட நடத்தை உடையவன் அல்லவே! உன்னுடைய தாய் ஒரு விபச்சாரி இல்லையே! நீ எப்படி இந்த செயலை செய்தாய். (அல்குர்ஆன் 19 : 28)

அன்பிற்குரியவர்களே! இந்த இடத்தில் ஒரு உண்மையை நாம் விளங்க வேண்டும். யாருடைய உள்ளத்தில் இறையச்சம் இருக்குமோ, யாருடைய உள்ளத்தில் ஈமான் இருக்குமோ அவர்கள் தான் தங்களுடைய நாவை பாதுகாத்துக் கொள்வார்கள்.

எந்த மக்களிடத்தில் ஈமான் இல்லையோ, அல்லாஹ்வுடைய பயம் இல்லையோ, மறுமையின் அச்சம் இல்லையோ அவர்கள் நல்லோரின் விஷயத்தில் தங்களுடைய நாவை அவிழ்த்து விடுவதில் தயங்கமாட்டார்கள்.

இதற்கு முன்பு கூறிய சம்பவத்தில் நாம் பார்க்கிறோம். ஒரு நபியின் மனைவியை பற்றி ஒரு செய்தி வரும்பொழுது அங்கே என்ன செய்திருக்க வேண்டும்?

தீர்க்க ஆராய்ந்திருக்க வேண்டும், விசாரித்திருக்க வேண்டும், உண்மையை நம்பியிருக்க வேண்டும். ஆனால், அல்லாஹ் கூறுவதை போன்று யாருடைய உள்ளத்தில் நோய் இருந்ததோ, யாருடைய உள்ளத்தில் நபியின் குடும்பத்தின் மீது பகைமை இருந்ததோ, பொறாமை இருந்ததோ அவர்கள் இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு நபியையும், நபியின் குடும்பத்தாரையும் அங்கிருந்த ஒரு சிறந்த நபித்தோழரையும் அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தார்கள்.

ஆனால், கடைசியில் அவர்கள் தான் அவமானப்பட்டார்கள், பழிக்கப்பட்டார்கள், தண்டனைக்கு ஆளானார்கள்.

ஆகவே, நல்லோர் பயப்பட வேண்டாம், தூய்மையானவர்கள் பயப்பட வேண்டாம். யார் தூய்மையானவர்களாக இருக்கிறார்களோ, யார் நல்லோர்களாக இருக்கிறார்களோ, அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மக்களுடைய பழிச்சொல்லை பயப்பட வேண்டாம்.

அவர்களை நிரபராதியாக அல்லாஹ் ஆக்குவான். அவர்களை சுத்தமானவர்களாக அல்லாஹ் ஆக்குவான்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னால் சென்று தன்னுடைய மனைவி பற்றிய தூய்மையை விளக்கிக் கொண்டிருந்தார்களா? இல்லை. நிச்சயமாக அல்லாஹ்வுடைய தீர்ப்பு வந்தே தீரும்.

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக, ஈமானை பேணியவர்களாக, தனிமையிலும் அல்லாஹ்வுடைய அச்சமுள்ளவர்களாக இருந்தால் நமக்கு அல்லாஹ் பாதுகாவலன்.

உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹிமஹுல்லாஹ்,உமருக்கு அடுத்து இரண்டாவது உமர் என்று இஸ்லாமிய வரலாற்றில் போற்றப்பட்டவர்கள். கலீஃபாக்களுடைய பட்டியலில் ஐந்தாம் கலீஃபா என்று வர்ணிக்கப்படுபவர்.

உமர் இப்னு அப்துல் அஜீஸ் அவர்கள்,உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய பேரருடைய மகன். மரணிக்கும் பொழுது மற்ற ராஜாக்களை போன்று, மற்ற மன்னர்களை போன்று தங்களுடைய குடும்பத்தாருக்கு மிகப் பெரிய செல்வங்களையும், சொத்துக்களையும் சேகரித்து வைத்துவிட்டு மரணிக்கவில்லை.

அவர்களுக்கென்று எந்த உடமையும் இல்லாமல் மரணிக்கிறார்கள். மனைவிகள் பலர், பிள்ளைகள் பலர் இருந்தார்கள்.

அந்த நேரத்தில் சிலர் கேட்கிறார்கள். உங்களுடைய பிள்ளைகளுக்காக, உங்களுடைய மனைவிகளுக்காக நீங்கள் எந்த செல்வத்தையும் சேகரித்து வைக்கவில்லையே என்று.

அப்போது அவர்கள் குர்ஆனுடைய வசனத்தை ஓதிக்காட்டுகிறார்கள்.

إِنَّ وَلِيِّيَ اللَّهُ الَّذِي نَزَّلَ الْكِتَابَ وَهُوَ يَتَوَلَّى الصَّالِحِينَ

வசனத்தின் கருத்து : என்னுடைய நண்பன் அல்லாஹ், என்னுடைய பாதுகாவலன் அல்லாஹ், எனக்கு பொறுப்பாளி அல்லாஹ். அவன் நல்லோர்களை தனது பொறுப்பில் வைத்துக் கொள்கிறான். என்னுடைய மனைவிகளும் என்னுடைய பிள்ளைகளும் நல்லவர்களாக இருந்தால், என்னை விட சிறந்தவனான என்றும் மரணிக்காதவனான அந்த அல்லாஹ்வுடைய பொறுப்பில் அவர்கள் சென்றுவிடுவார்கள்.7 : 196

சுப்ஹானல்லாஹ்! எவ்வளவு அழகான வார்த்தை பாருங்கள்.

நம்முடைய பிரச்சனை என்னவென்றால், அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வுடைய வாக்குறுதியின் மீதும் நமக்கு நம்பிக்கை இருக்கிறதா? தவக்குல் -அல்லாஹ்வை சார்ந்திருத்தல்.

இறைவழிபாட்டில் அல்லாஹ்வுடைய உதவி இருக்கிறது, இறைவழிபாட்டில் ரிஜ்குடைய அபிவிருத்தி இருக்கிறது. அல்லாஹ்வுடைய ஹலாலை பேணுவதில், அல்லாஹ்வுடைய தீனை பேணுவதில் அல்லாஹ்வுடைய பாதுகாப்பு இருக்கிறது என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு இருக்கிறதா?

நம்முடைய நம்பிக்கையெல்லாம் காரணங்களை சார்ந்து, வெளிரங்கமான சாதகபாதகங்களை சார்ந்து இருக்கிறது. எனவே தான், அல்லாஹ்வுடைய உதவியை நாம் பார்ப்பது கிடையாது.

இப்னு அப்பாஸ் அந்த பத்து வயதுடைய சிறுவனை அழைத்து அல்லாஹ்வுடைய தூதர் கூறுகிறார்கள்,

احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ، احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ

அல்லாஹ்வை பாதுகாத்துக் கொள், அல்லாஹ் உன்னை பாதுகாப்பான். அல்லாஹ்வை பாதுகாத்துக் கொள், உனக்கு முன்னால் அவனை நீ பெற்றுக் கொள்வாய். (2)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2516.

அல்லாஹ்வுடைய சட்டங்களை, அல்லாஹ்வுடைய தீனை வாழ்க்கையில் முஸ்லிம்கள் பாதுகாக்கும் பொழுது அவர்களை அல்லாஹ் பாதுகாப்பான்.

அல்லாஹ்வுடைய சட்டங்களை முஸ்லிம்கள் அலட்சியம் செய்யும் பொழுது, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை முஸ்லிம்கள் புறந்தள்ளும் பொழுது அவர்களை அல்லாஹ் கைவிட்டுவிடுவான்.

மர்யம் அலைஹிஸ்ஸலாம் எத்தகைய நிலைமையில் இருக்கிறார்கள். அல்லாஹ்வுடைய உதவியை பாருங்கள். இந்த நல்லோர்களின் மீது நல்ல அபிப்ராயங்கள் வைக்காத இந்த பாவியான மக்களையும் பாருங்கள்.

என்ன செய்ய வேண்டும்? நிதானிக்க வேண்டும், அல்லாஹ்வை அஞ்ச வேண்டும், உண்மையை விசாரிக்க வேண்டும்.

இந்த இடத்தில் அல்லாஹ் மிகப் பெரிய ஒரு நுட்பத்தையும் கூறுகிறான். மக்களின் பெரும்பாலானவர்களிடத்தில் இந்த தன்மையை காண முடியாது, இந்த தன்மை இருக்காது.

அவர்கள் எதை வேண்டுமானாலும் நல்லோரைப் பற்றி பேசுவார்கள். இறைத்தூதர்களை பற்றி பேசினார்கள், நல்லோரை பற்றி பேசினார்கள்.

அது போன்று தான், இந்த இஸ்ரவேலர்கள். இதில் நமக்கு ஒரு பெரிய படிப்பினை இருக்கிறது. அதைபற்றியெல்லாம் நாம் கவலைப்படக் கூடாது. நம்முடைய பணி அல்லாஹ்வின் சட்டத்திற்கேற்ப, அல்லாஹ்வின் மார்க்கத்திற்கேற்ப இருக்கும் பொழுது அல்லாஹ்வை மட்டும் தான் பயப்பட வேண்டும், அல்லாஹ்வை மட்டும் தான் திருப்திபடுத்த நினைக்க வேண்டும்.

அதுபோன்றுதான், மர்யம் அலைஹிஸ்ஸலாம் பயப்படவில்லை, கலங்கவில்லை தைரியமாக இருந்தார்கள். அப்பொழுது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்களுக்கு உதிப்பு வந்தது.

என்ன செய்வது? உண்மை என்ன? என்று கேட்கிறார்கள். ஏன் இப்படிப்பட்ட ஒரு பாவத்தை செய்துவிட்டாய்? அசிங்கத்தை செய்துவிட்டாய்? ஜினா செய்தவர்களுடைய சட்டம் கல்லெறிந்து கொல்வது, அவர்களை அடிப்பது.

அந்த குடும்பத்தின் மீது பகைமை கொண்டிருந்த பாவிகள் எண்ணிக் கொண்டிருந்தார்கள்;எப்படியாவது மர்யமை கொன்று விடலாம் என்று.

அல்லாஹ் அற்புதத்தை வெளிப்படுத்துவான், அவனுடைய உதவியை வெளிப்படுத்துவான். என்னிடத்தில் பேசாதீர்கள்,இந்த குழந்தையிடத்தில் பேசுங்கள்.

அப்பொழுது மக்கள் கூறினார்கள்,

தொட்டில் இருக்கக் கூடிய குழந்தையிடத்தில் நாங்கள் எப்படி பேச முடியும்? இந்த குழந்தையிடம் நீங்கள் விசாரித்துக் கொள்ளுங்கள் என்று கூறிய மாத்திரத்தில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் தாயின் மடியிலிருந்து பேசுகிறார்கள். நான் அல்லாஹ்வுடைய அடிமை என்று. (அல்குர்ஆன் 19 : 29,30)

இந்த இடத்தில் கிறிஸ்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ்வுடைய குழந்தை என்று சொல்லக்கூடிய பாவிகள் புரிந்து கொள்ள வேண்டும்.அல்லது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் என்று சொல்லக்கூடிய அந்த அநியாயக்கார மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருகாலும் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் தன்னை அல்லாஹ் என்றோ, அல்லாஹ்வின் குழந்தை என்றோ அல்லது மூன்று அல்லாஹ்களில் நானும் ஒருவன் என்றோ கூறியது கிடையாது.

நான் அல்லாஹ்வின் அடிமை என்று தான் கூறினார்கள். அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான்.

قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا (30) وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنْتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا (31) وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا (32) وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدْتُ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا

(இதைச் செவியுற்ற அக்குழந்தை அவர்களை நோக்கிக்) கூறியதாவது: ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடிமை ஆவேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை நபியாகவும் ஆக்குவான். நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்குவான். நான் வாழும்வரை தொழுகையைக் கடைப்பிடித் தொழுகும்படியும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு உபதேசித்திருக்கிறான். என் தாய்க்கு நான் நன்றி செய்யும்படியாகவும் (எனக்கு உபதேசித்து) நான் முரடனாக வழி கெட்டவனாக ஆகாதபடியும் செய்வான். நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிருள்ளவராக எழுப்பப்படும் நாளிலும், என்மீது ஸலாம் உண்டாகுக!'' (என்றும் அக்குழந்தை கூறியது). (அல்குர்ஆன் 19 : 30-33)

ஒரு சிறந்த பிரார்த்தனையை செய்து முடிக்கிறார்கள்.தன்னுடைய சாட்சியத்தை முன் வைக்கிறார்கள். தனது தாயை பற்றி உண்டான தூய்மையான செய்தியை முன் வைக்கிறார்கள்.

இது தான் ஈஸாவை பற்றி -ஜீஸஸை பற்றிய உண்மையான செய்தி. ஆனால், மக்கள் சந்தேகம் கொள்கிறார்கள்.

அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் சாதாரணமானவர்கள் அல்ல.எப்பொழுதுமே சண்டை சச்சரவுகள்,குதர்கங்கள், தர்கங்கள் செய்யக்கூடியவர்கள்.

நபிமார்களை சாதாரணமாக அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஒவ்வொரு இறைத்தூதர்களுக்கும் அல்லாஹ் அற்புதங்களை கொடுத்திருக்கிறான். அந்த அற்புதங்களின் மூலமாக அவர்கள் தங்களுடைய நபித்துவத்தை நிலைநிறுத்தினார்கள். அல்லாஹ்வுடைய வாக்கை உண்மைபடுத்தி காட்டினார்கள்.

அதே காலம் தான் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அந்த காலமும். மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. வாலிபமாக வந்து இறைத்தூதின் செய்தியை சொன்ன பொழுது, தவ்ராத்தை ஓதிகாட்டிய பொழுது, இன்ஜிலை ஓதிகாட்டிய பொழுது அந்த மக்கள் ஏற்றுக் கொள்ள தயராகவில்லை.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு அற்புதத்தை கொடுத்தான்.அவர்களுக்கு பல சான்றுகளை அல்லாஹ் கொடுத்தான்.

அல்லாஹ் கூறுகிறான்,

إِذْ قَالَ اللَّهُ يَاعِيسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِي عَلَيْكَ وَعَلَى وَالِدَتِكَ إِذْ أَيَّدْتُكَ بِرُوحِ الْقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلًا وَإِذْ عَلَّمْتُكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ وَالْإِنْجِيلَ وَإِذْ تَخْلُقُ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ بِإِذْنِي فَتَنْفُخُ فِيهَا فَتَكُونُ طَيْرًا بِإِذْنِي وَتُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ بِإِذْنِي وَإِذْ تُخْرِجُ الْمَوْتَى بِإِذْنِي وَإِذْ كَفَفْتُ بَنِي إِسْرَائِيلَ عَنْكَ إِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنَاتِ فَقَالَ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ

பிறகு அல்லாஹ் (ஈஸாவை நோக்கிக்) கூறுவான்: ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! உம் மீதும், உமது தாய் மீது(ம் நான் புரிந்து)ள்ள என் அருளை நினைத்துப் பார்ப்பீராக. பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு உமக்கு உதவி புரிந்து (உமது தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றி) நீர் தொட்டில் குழந்தையாக இருந்த சமயத்திலும் (உமது தீர்க்க தரிசனத்தைப் பற்றி) வாலிபத்திலும் உம்மைப் பேசச் செய்ததையும், (நினைத்துப் பார்ப்பீராக.) வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் நான் உமக்குக் கற்பித்ததையும் (நினைத்துப் பார்ப்பீராக). மேலும், நீர் என் கட்டளைப்படி களிமண்ணால் பறவையின் உருவத்தைப் போல் செய்து அதில் நீர் ஊதிய சமயத்தில், அது என் கட்டளையைக் கொண்டு பறவையாக மாறியதையும், பிறவிக் குருடனையும், வெண் குஷ்டரோகியையும் என் உதவியினால் நீர் சுகமாக்கியதையும் (நினைத்துப் பார்ப்பீராக). நீர் என் அருளைக்கொண்டு மரணித்தவர்களை (கல்லறையிலிருந்து உயிர்கொடுத்து) புறப்படச் செய்ததையும் (நினைத்துப் பார்ப்பீராக). இஸ்ராயீலின் சந்ததிகளிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது அவர்களில் நிராகரித்தவர்கள் நிச்சயமாக இது சந்தேகமற்ற சூனியத்தைத் தவிர வேறல்ல என்று கூறிய(துடன் உமக்குத் தீங்கிழைக்க முயற்சித்த) சமயத்தில் அவர்(களுடைய தீங்கு)களிலிருந்து நான் உம்மை தடுத்துக் கொண்டதையும் நினைத்துப் பார்ப்பீராக. (அல்குர்ஆன் 5 : 110)

இத்தகைய அற்புதங்களை அல்லாஹு தஆலா ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கொடுத்தான். அவர்கள் அல்லாஹ்வுடைய நபி என்று அறிவிப்பதற்காக.

இந்த அற்புதங்களை கொண்டு, அல்லாஹ் கொடுத்த கல்வி ஞானத்தை கொண்டு, ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களுடைய நபித்துவ பணியை சிறப்பாக செய்கிறார்கள்.

இந்த நேரத்தில் தான் யூதர்களுடைய மிகப் பெரிய சதித் திட்டம் அங்கே தீட்டப்படுகிறது. ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கொல்ல வேண்டும், அவர்களுடைய பிரச்சாரப் பணியை முடக்க வேண்டும் என்பதாக திட்டம் தீட்டுகிறார்கள்.

அவர்களை கொல்வதற்காக வருகிறார்கள். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களை வானத்தில் தன்னளவில் உயர்த்திக் கொள்கிறான். அல்லாஹ், அங்கே இருந்தவர்களில் ஒருவரையே நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை போன்று உருவ மாற்றம் செய்து விடுகிறான்.

வரலாற்று ஆசிரியர்கள் இரண்டு விதமான கருத்தை எழுதுகிறார்கள். ஒன்று, ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சீடர்களில் ஒருவர் மீது அந்த உருவ மாற்றம் செய்யப்பட்டது என்பதாக.

இன்னும் சில வரலாற்று ஆசிரியர்கள், யார் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை தேடிவந்தார்களோ, அந்த தேடி வந்தவனின் மீதே நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உருவமாற்றம் போடப்பட்டது என்பதாக.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அங்கே கொல்லப்படவில்லை. அவர்களை அல்லாஹ் உயர்த்திக் கொள்கிறான்.

வந்தவர்கள் என்ன செய்தார்கள்? யாரின் மீது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உருவமாற்றம் இருந்ததோ அவர்களை சிலுவையில் அரைந்து விடுகிறார்கள், கொன்று விடுகிறார்கள். இது தான் நடந்த உண்மை.

இதை அல்லாஹ் குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான் :

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய இந்த உண்மை நிலையை பற்றி இரண்டு இடங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

சூரா அன்னிஸா நான்காவது அத்தியாயத்துடைய 157 லிருந்து159வரை. மூன்றாவது அத்தியாயம் சூரா ஆல இம்ரானுடைய 55வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான், இந்த மக்கள்,ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நாங்கள் கொன்றுவிட்டோம் என்பதாக கூறுகிறார்கள்.

அதனாலும் நாம் யூதர்களை பழித்தோம். யாரின் மீது உருவ மாற்றம் நடைபெற்றிருந்ததோ அவர்களை கொன்றுவிடுகிறார்கள்.

அதற்கு பிறகு இந்த மக்கள் கோபம் தணிந்த பொழுது நிதானத்திற்கு வருகிறார்கள். இரண்டு கருத்தின் படியும்,ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சீடர்களின் ஒருவரின் மீது உருவ மாற்றம் செய்யப்பட்டது என்ற கருத்தின் படியும் இப்பொழுது இவர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சீடர்களை தேடுகிறார்கள்.

அங்கே பணிரெண்டு பேரில் பதினொரு பேரு மட்டுமே இருக்கிறார்.ஒருவரை காணவில்லை. என்ன நடந்தது? சிலுவையில் ஒருவர் அறையப்பட்டிருக்கிறார்.ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை சேர்த்து பதிமூன்று பேர்.

இப்பொழுது எத்தனை பேர் இருக்க வேண்டும்? பனிரெண்டு பேர் தான் இருக்கிறார்கள்.எங்கே மற்றொருவர்?குழப்பமடைகிறார்கள்.பதில் அவர்களிடத்தில் கிடையாது.

அல்லது இன்னொருபக்க வரலாற்று ஆசிரியர் கருத்தின் படி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை சிலுவையில் அறைந்துவிட்டால் அவர்களை தேடி சென்ற நம்முடைய மனிதன் எங்கே? என்பதிலும் அவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

சம்பவம் இப்படி இருக்க சில நாட்களுக்கு பிறகு தூய்மையான ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மார்க்கத்தில் இருந்த,அவர்களை உண்மையாக நம்பி, அவர்களை அல்லாஹ்வுடைய தூதர் என்று நம்பி தவ்ராத்தையும், இன்ஜீலையும் புரிந்து வைத்திருந்த மக்கள் அல்லாஹ் அவர்களை உறுதிபடுத்தி விடுகிறான்.

யார் இந்த அற்புதங்களை பார்த்து அறைகுறை நம்பிக்கையுடனே ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய தீனில் சேர்ந்திருந்தார்களோ இந்த மக்கள் இப்பொழுது வழிதவற ஆரம்பிக்கிறார்கள்.

சிலர் கூறினர், இவர் அல்லாஹ்வுடைய தூதர் அல்ல. இவர் நம்மில் அல்லாஹ்வாகவே இருந்தார்.

இப்பொழுது நமக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்துவிட்டு நம்மை இறச்சித்து விட்டு மீண்டும் வானத்திற்கு சென்றுவிட்டார் என்பதாக ஒரு கூட்டம் கூறினார்கள்.

அதற்கு அவர்கள் எடுத்து வைத்த ஆதாரங்கள் என்ன? ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்து காட்டிய அற்புதங்கள். இந்த அற்புதங்களை பார்த்து அவர்கள் கூறினார்கள்;இது அல்லாஹ் தான் என்பதாக.

சிலர் கூறினர்;இல்லை, அல்லாஹ் தன்னுடைய குழந்தையை அனுப்பி வைத்தான்.பிறகு அவன் எடுத்துக் கொண்டான் என்பதாக.

அன்பிற்குரியவர்களே! அல்லாஹ் கூறுகிறான்,

وَقَالُوا اتَّخَذَ الرَّحْمَنُ وَلَدًا (88) لَقَدْ جِئْتُمْ شَيْئًا إِدًّا (89) تَكَادُ السَّمَاوَاتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنْشَقُّ الْأَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا (90) أَنْ دَعَوْا لِلرَّحْمَنِ وَلَدًا (91) وَمَا يَنْبَغِي لِلرَّحْمَنِ أَنْ يَتَّخِذَ وَلَدًا (92) إِنْ كُلُّ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِلَّا آتِي الرَّحْمَنِ عَبْدًا (93) لَقَدْ أَحْصَاهُمْ وَعَدَّهُمْ عَدًّا (94) وَكُلُّهُمْ آتِيهِ يَوْمَ الْقِيَامَةِ فَرْدًا

ரஹ்மான் சந்ததி எடுத்துக் கொண்டதாக அ(ந்த கிறிஸ்தவர்கள், இன்னும் இணைவைப்ப)வர்கள் கூறுகின்றனர். (நபியே! அவர்களை நோக்கி கூறுவீராக:) நிச்சயமாக நீங்கள் பெரியதோர் அபாண்டத்தைக் கூறுகிறீர்கள். வானங்கள் கிழிந்து போகவும், பூமி பிளந்து விடவும், மலைகள் இடிந்து சரிந்து விடவும் நெருங்கி விட்டன. ரஹ்மானுக்குச் சந்ததி உண்டென்று அவர்கள் கூறுவதன் காரணத்தால். சந்ததி எடுத்துக் கொள்வது ரஹ்மானுக்குத் தகுமானதல்ல. ஏனென்றால், நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் ரஹ்மானிடம் அடிமையாகவே வருகிறது. அவை அனைத்தையும் அவன் சூழ்ந்து அறிந்து கணக்கிட்டும் வைத்திருக்கிறான். அவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் (எவருடைய உதவியுமில்லாமல்) அவனிடம் தனித்தனியாகவே வரும். (அல்குர்ஆன் 19 : 88-95)

எவ்வளவு கேவலமான அசிங்கமான பேச்சை நீங்கள் கூறுகிறீர்கள். அல்லாஹ்வை

கிறிஸ்தவர்களை அல்லாஹ் இப்படி சபிக்கிறான். அவர்களுடைய அந்த பழிச்சொல்லை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மறுக்கிறான்.

யார் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் என்று கூறினார்களோ அவர்கள் அல்லாஹ்வையே மறுத்துவிட்ட காஃபிர்கள். யார் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வுடைய குழந்தை என்று கூறினார்களோ அவர்களும் காஃபிர்கள் என்று அல்லாஹ் மறுக்கிறான்.

அவர்கள் அல்லாஹ்வுடைய குழந்தை அல்ல, அவர்கள் அல்லாஹ்வும் அல்ல என்று அல்லாஹ் மறுக்கிறான். அடுத்து ஒரு பக்கம் நாங்கள் ஈஸாவை சிலுவையில் அறைந்து விட்டோம் என்று கூறுகிறார்கள் அல்லவா அவர்களை குறித்து அல்லாஹ் கூறுகிறான்,

وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا

அவரை அவர்கள் கொலை செய்யவும் இல்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவும் இல்லை. (அவர் இருந்த அறைக்குள் அவரைத் தேடிச் சென்றவன் அவரைப்போல் ஆக்கப்பட்டு விட்டான். தேடிச்சென்ற மற்றவர்கள் அவனையே சிலுவையில் அறைந்தனர். இதனால்) அவர்கள் சந்தேகத்திற்குள்ளாக்கப்பட்டு விட்டனர். ஆகவே, எவர்கள் இதற்கு மாறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் வீண் சந்தேகத்திலேயே ஆழ்ந்துவிட்டனர். வீண் சந்தேகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அதில் அவர்களுக்கு உண்மையான ஞான (ஆதார)ம் கிடையாது. நிச்சயமாக அவர்கள் அவரைக் கொலை செய்யவே இல்லை. (அல்குர்ஆன் 4 : 157)

நடந்தது என்ன? அல்லாஹ் ஈஸாவை தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவன் ஞானமுடையவன்.

சந்தேகம் கொள்கிறார்களே இப்படி ஒருவர் தந்தையில்லாமல் படைக்கப்பட்டிருக்கிறார். அது ஒரு பெரிய அற்புதம் தானே.

அது அல்லாஹ்வுடைய குழந்தையாக ஏன் இருக்க முடியாது? அல்லது அல்லாஹ்வாக ஏன் இருக்க முடியாது? என்று.அவர்கள் மடத்தனமான கேள்விகளை கேட்டால் அதற்கு அல்லாஹ் பதில் கூறுகிறான்.

ஈஸாவுடைய விஷயத்தில் குதர்க்கம் செய்யக்கூடிய மக்களே! ஈஸாவுடைய விஷயத்தில் என்னுடைய ஆற்றலின் மீது சந்தேகப்படக் கூடிய மக்களே! எனக்கு அது ஒரு பெரிய கஷ்டம் இல்லை.

இதற்கு முன்பு நான் ஆதமை படைத்திருக்கிறேன். தாய் தந்தை இல்லாமல் மண்ணால் ஆதமை படைத்தேன். பிறகு ஆகு என்று கூறினேன் அவர் ஆகிவிட்டார். அவரில் உயிரை ஊதினேன் அவர் உயிர் பெற்றுவிட்டார். தாயும் தந்தையும் இல்லாமல் படைக்க ஆற்றல் பெற்றிருக்கக் கூடிய நான் ஏன் தந்தை இல்லாமல் ஒரு உயிரை படைக்க முடியாது? (அல்குர்ஆன் கருத்து 3 : 59)

சிந்தித்துப் பாருங்கள் என்று அல்லாஹ் தனது அத்தாட்சியை பரிபூரணமாக்குகிறான். அல்லாஹ் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பற்றி நமக்கு ஒரு முன்னறிவிப்பு செய்கிறான்.

இந்த கிறிஸ்தவர்களும், ஈஸா அலைஹிஸ்ஸலாம் வருவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஜீஸஸ் மீண்டும் இந்த பூமியில் கடவுளாக வருவார் என்று எண்ணுகிறார்கள்.

இல்லை, ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்தாக வருவார். அவர்களுடைய சமுதாயத்தை சேர்ந்த ஒரு மனிதராக வருவார். அல்லாஹ் அவர்களை மீண்டும் பூமியில் இறக்குவான்.

அல்லாஹ் கூறுகிறான்,

وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا

வேதத்தையுடையவர்களில் ஒவ்வொருவரும் அவர் இறப்பதற்கு முன்னதாக அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதில்லை. எனினும், மறுமை நாளில் இவர்களுக்கு எதிராகவே அவர் சாட்சியம் கூறுவார். (அல்குர்ஆன்4 : 159)

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மரணத்திற்கு முன்பாக.அதாவது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானத்தில் உயர்த்தப்பட்டார்கள். அவர்கள் மரணிக்கவில்லை. மீண்டும் பூமியில் இறக்கப்படுவார்கள்.அதற்கு பின்பு அல்லாஹ் படைத்த இயற்கையின் படி அவர்கள் மரணிப்பார்கள்.

அந்த மரணத்திற்கு முன்பு அந்த மக்கள் யாரை இப்பொழுது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கடவுளாகவோ, கடவுளின் குழந்தையாகவோ கூறுகிறார்களோ அவர்கள் இல்லை, இவர் உண்மையான நபி. அல்லாஹ்வுடைய குழந்தை அல்ல. அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதர் என்பதாக நம்பிக்கை கொள்வார்கள்.

நாளை மறுமையில் அந்த மக்களுக்கு எதிராக யார் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையோ அல்லது அவருடைய தாயையோ வணங்கினார்களோ அவர்களுக்கு எதிராக சாட்சி கூறுவார்கள்.

நாளை மறுமையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய தீர்ப்பு நாளில் தன்னுடைய தீர்ப்பு கோர்ட்டை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அங்கே நிறுத்துவான்.

அப்பொழுது மர்யமை அல்லாஹ் அழைப்பான், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைப்பான்.

அழைத்து கேட்பான்,

وَإِذْ قَالَ اللَّهُ يَاعِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَهَيْنِ مِنْ دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ (116) مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَا أَمَرْتَنِي بِهِ أَنِ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ

அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவை நோக்கி), ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வுடன் என்னையும், என் தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களை நோக்கி நீர் கூறினீரா?'' என்று கேட்பான் என்பதையும் ஞாபகமூட்டுவீராக. அதற்கு அவர் கூறுவார்: ‘‘நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகாததை நான் ஒருபோதும் கூறமாட்டேன். அவ்வாறு நான் கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதை அறிந்திருப்பாயே! என் உள்ளத்திலுள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவை அனைத்தையும் நன்கறிபவன். நீ எனக்கு ஏவியபடியே நான் (அவர்களை நோக்கி), ‘‘நீங்கள் எனக்கும் உங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்'' என்றுதான் கூறினேன். தவிர, வேறொன்றையும் (ஒருபோதும்) நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்த வரை அவர்களின் செயலை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீதான் அவர்களைக் கவனித்தவனாக இருந்தாய். அனைத்திற்கும் நீயே சாட்சி. (அல்குர்ஆன்5 : 117)

அன்பிற்குரியவர்களே! இந்த செய்தியை நாம் பதிவு செய்ய வேண்டும். இந்த செய்தியை மக்களுக்கு உணர்த்த வேண்டும். அல்லாஹ் கூறுகிறான், அவனுக்கு குழந்தை இல்லை, அவன் ஒருவன் தான் என்பதாக.

இந்த மக்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மக்கள் அசத்தியத்தில் இருக்கிறார்கள். இன்று நம்மில் பலர் கூட ஜீஸஸ் யார்? ஈஸா அலைஹிஸ்ஸலாம் யார்? என்று கேட்டால் கிறிஸ்தவர்களுடைய கடவுள் என்று கூறுகிறார்கள்.அல்லாஹ் பாதுகாப்பானாக!

யாருடைய உள்ளத்தில் குர்ஆனுடைய கல்வி இல்லையோ, இந்த இஸ்லாமை புரிந்து கொள்ளவில்லையோ, அவர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கடவுள் என்பதாக நம்பி வைத்திருக்கிறார்கள், அல்லது அல்லாஹ்வுடைய குழந்தை என்பதாக நம்பி வைத்திருக்கிறார்கள்.

இல்லை, அன்பிற்குரியவர்களே! இஸ்லாம் மார்க்கம் ஒன்று மட்டும் தான் உண்மை. அல்லாஹ் ஒருவன் தான் உண்மையான இறைவன். அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் எந்த கடவுளும் இல்லை.

யூதர்களுக்கும் அவன் தான் அல்லாஹ், அவன் தான் இறைவன், கிறிஸ்தவர்களுக்கும் அவன் தான் இறைவன். இந்த உலகத்தில் யாரும் அவனை ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அனைவருக்கும் அல்லாஹ் ஒருவன் தான்.

வானங்கள், பூமியின் இறைவன், அந்த வானத்திற்கும் பூமிக்கும் மத்தியில் உள்ள அனைத்திற்கும் இறைவன் அவன் தான்.

சிலர் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள், சிலர் தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள். இந்த குர்ஆன் சரியான தீர்ப்பை கூறுகிறது. இந்த குர்ஆனை தவிர எதிலும் சரியான உண்மையை புரிந்து கொள்ள முடியாது.

அல்லாஹ் கூறுகிறான்,இந்த குர்ஆன் இஸ்ரவேலர்கள் கருத்து வேற்றுமை கொண்டுள்ள பல விஷயங்களுக்கு தெளிவான தீர்ப்பை கூறுகிறது என்பதாக.

எனவே, நாம் அழைக்கிறோம் இந்த உலகத்தில் யார் எங்கிருந்தாலும், எந்த தவறான கோட்பாடுகள், கொள்கையில் இருந்தாலும் இந்த குர்ஆன் மட்டும் தான் தெளிவை அவர்களுக்கு கூற முடியும். உண்மையான இறைவனின் வழியை அவர்களுக்கு காட்ட முடியும்.

உண்மையான இறைவனை அடைய வேண்டுமென்றால், மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கையில் சொர்க்கத்தை அடைய வேண்டுமென்றால், அல்லாஹ்வுடைய அன்பை அடைய வேண்டுமென்றால், அல்லாஹ்வுடைய மன்னிப்பை அடைய வேண்டுமென்றால் குர்ஆனை பின்பற்ற வேண்டும். இறுதி தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்ற வேண்டும்.

நேர்வழியின் படி நடப்பதற்கு அல்லாஹ் நமக்கு வாய்ப்பளிப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ تَعَالَى فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: إِمَامٌ عَدْلٌ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ، اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا، فَفَاضَتْ عَيْنَاهُ " (صحيح البخاري 1423)

குறிப்பு 2)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، وَابْنُ لَهِيعَةَ، عَنْ قَيْسِ بْنِ الحَجَّاجِ، ح وحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا أَبُو الوَلِيدِ قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ قَالَ: حَدَّثَنِي قَيْسُ بْنُ الحَجَّاجِ، المَعْنَى وَاحِدٌ، عَنْ حَنَشٍ الصَّنْعَانِيِّ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كُنْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، فَقَالَ: «يَا غُلَامُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ، احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ، احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ، إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ، وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ، وَاعْلَمْ أَنَّ الأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ، وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ، رُفِعَتِ الأَقْلَامُ وَجَفَّتْ الصُّحُفُ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ " (سنن الترمذي- 2516) [حكم الألباني] : صحيح

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/