HOME      Khutba      ஈஸா இப்னு மர்யம் (அலை) (பகுதி 1/2) | Tamil Bayan - 65   
 

ஈஸா இப்னு மர்யம் (அலை) (பகுதி 1/2) | Tamil Bayan - 65

           

ஈஸா இப்னு மர்யம் (அலை) (பகுதி 1/2) | Tamil Bayan - 65


ஈஸா இப்னு மர்யம் அலைஹிஸ்ஸலாம்

ஜுமுஆ குத்பா தலைப்பு : ஈஸா இப்னு மர்யம் அலைஹிஸ்ஸலாம் பாகம் - 1

வரிசை : 65

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறுஎனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக, அல்லாஹ்வின் பயத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நமக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தருவானாக! அல்லாஹ்வுடைய அன்பிற்காக வாழ்ந்து அல்லாஹ்வுடைய மார்க்கத்தை முழுமையாக பின்பற்றுகின்ற நல்லோரில் நம்மையும் சேர்த்து வைப்பானாக!

அல்லாஹு தஆலா அவனுடைய புத்தகம் அல்குர்ஆனை நமக்கு ஒரு வழிகாட்டியாக, அவனுடைய வழிகாட்டுதல்கள் நிறைந்த ஒரு பொக்கிஷமாக தந்திருக்கிறான்.

இந்த குர்ஆன், மனிதர்கள் கருத்து வேற்றுமை கொண்ட பல விஷயங்களுக்கு தீர்ப்பளிக்கிறது. எது உண்மை? எது பொய்? என்பதை இந்த குர்ஆன் பிரித்தரிவிக்கிறது.

ஆகவே தான், இந்த குர்ஆனிற்கு பெயர், அல் ஃபுர்கான் ஆகும்.

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ

ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)து என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் திருகுர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன் 2 : 185)

இந்த குர்ஆன் இறைத்தூதர்களின் செய்திகளை நமக்கு சொல்கிறது. இறைத்தூதர்களுக்கு நடந்த நிகழ்ச்சிகளை நமக்கு கூறுகிறது. இறைத்தூதர்கள் செய்த பணியை நமக்கு விவரிக்கிறது. இறைத்தூதர்களுக்கு அல்லாஹ் இட்ட கட்டளைகளை நமக்கு சொல்கிறது.

இறைத்தூதர்கள் யார்? அல்லாஹ்வுடைய தூதுச் செய்தியை, லாயிலாஹ இல்லல்லாஹ் -வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் மட்டும் தான் என்ற மிக உயர்ந்த உண்மையான செய்தியைமக்களுக்கு எடுத்து சொல்வதற்காக, அந்த செய்தியின் பக்கம் மக்களை அழைப்பதற்காக அனுப்பப்பட்டவர்கள் இறைத்தூதர்கள்.

தங்களுடைய முழு வாழ்க்கையையும் இந்த ஒரே செய்திக்காக வேண்டி அற்பணிப்பு செய்தவர்கள் இறைத்தூதர்கள். அவர்களுடைய பணி, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மக்களுக்கு எடுத்து சொல்வது. லாயிலாஹ இல்லல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பது.

அல்லாஹ் கூறுகிறான் :

وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ

(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை. (அல்குர்ஆன் 21:25)

இந்த இறைச் செய்தியைஇந்த தவ்ஹீதை போதிப்பதற்கு அல்லாஹு தஆலா அவனுடைய படைப்பினங்களில் நபிமார்களை தேர்ந்தெடுத்தான், ரஸூல்மார்களை தேர்ந்தெடுத்தான்.

நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்,முதலாவதாக வஹீ கொடுக்கப்பட்டவர்கள். நுபுவத்துடைய வஹீ கொடுக்கப்பட்டவர்கள். அவர்களிலிருந்து முஹம்மது வரை வந்த எல்லா இறைதூதர்களுக்கும் இந்த இறைச் செய்தி சொல்லப்பட்டது.

அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது. வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் செய்யக்கூடாது. இந்த தூதுச் செய்தியை சுமந்து வந்தவர்களில் ஒருவர் தான் ஈஸா அலைஹிஸ்ஸலாம்.

அவர்களை இன்று மக்கள் ஜீஸஸ் என்பதாகவோ, ஏசு என்பதாகவோ அறிகிறார்கள். குர்ஆனில் அல்லாஹு தஆலா மிக கண்ணியமாக ஈஸா இப்னு மர்யம் -மர்யமின் மகன் ஈஸா.

அவர்கள் இறைத்தூதர்களில் ஒருவர், எனக்கு நெருக்கமானவர்களில் ஒருவர், கலிமத்துல்லாஹ் -அல்லாஹ்வுடைய கலிமா, அல்லாஹ்வின் புறத்திலிருந்து விஷேசமாக ஊதப்பட்ட உயிர் என்பதாக அல்லாஹ் அவர்களை புகழ்ந்து கூறுகிறான்.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பற்றி, அவர்களுடைய தூதுத்துவத்தை பற்றி, அவர்கள் போதித்த போதனையை பற்றி நாம் தெளிவாக அறிந்து கொள்வது நம்மீது இன்றைய காலத்தின் மிகக் கட்டாயக் கடமையாக இருக்கிறது.

காரணம், முஸ்லிம்களில் பலர், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் தூதராக அனுப்பப்பட்டவர்கள். இவர்களை ஏற்றுக் கொண்டவர்கள் கிறிஸ்தவர்கள் மட்டும் தான். அவர்களுடைய தூதுத்துவத்தை ஏற்று அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

இது தவறான புரிதல். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை உண்மையில் ஏற்றுக் கொண்டிருப்பவர்கள், உண்மையில் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் முஸ்லிம்களாகிய நாம் தான்.

யார் முஹம்மது அவர்களை நம்பிக்கை கொண்டார்களோ அவர்கள் தான் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை உண்மையில் நம்பிக்கை கொண்டவர்கள்.

யார் முஹம்மது அவர்களை மறுத்தார்களோ அவர்கள் ஈஸாவையும் மறுத்தவர்களாவர்.

இறைத்தூதர்களில் ஒருவரை மறுத்தாலும் எல்லா இறைத்தூதர்களையும் மறுத்ததை போன்று தான்.

இந்த ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த மக்கள் இவர்களிடம் எப்படி நடந்து கொண்டார்கள்?

இவர்களுக்கு பிறகு இவர்கள் போதித்த இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றியவர்கள் எப்படி வழிதவறினார்கள்? என்பதையெல்லாம் குர்ஆனுடைய ஒளியில் நாம் தெரிந்து வைத்துக் கொள்வது நம்முடைய கடமை.

அப்பொழுது தான் யார் சத்தியத்தில் இருக்கிறார்கள்? என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும், அந்த சத்தியத்தை பின்பற்ற முடியும்.

இன்று, தங்களை நஸாரா -கிறிஸ்வர்கள் என்று சொல்பவர்கள், எந்தெந்த விஷயங்களில் வழிகெட்டிருக்கிறார்கள்? ஏன் குர்ஆன் அவர்களை வழிகெட்டவர்கள் என்று இனம் காட்டுகிறது? என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அல்லாஹு தஆலா கூறுகிறான் :

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ (6) صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (அல்குர்ஆன் : 1:7)

என்ற பிரார்த்தனை சூரா ஃபாத்திஹாவில் நமக்கு சொல்லித் தரப்படுகிறது.இந்த வசனத்தை அல்லாஹ்வுடைய தூதர் ஓதினார்கள். இதற்கு விளக்கம் கூறினார்கள்.

அல்லாஹ்வுடைய கோபத்திற்குரியவர்கள் என்பவர்கள் யூதர்கள், யஹூதிகள், இஸ்ரவேலர்கள்.

வழிகெட்டவர்கள், நஸாராக்கள் –கிறிஸ்வர்கள். ஈசா நபியை ஏற்றுக் கொண்டோம் என்று கூறுகிறவர்கள்.

குர்ஆனில் இந்த வரலாற்றை நாம் ஆராய்கிறோம். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எப்படி நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர்களுடைய தாயார் மர்யமையும் அவர்களுடைய குடும்பத்தார்களையும் அல்லாஹ் கூறுகிறான் என்பதை.

எங்கிருந்து இந்த கிறிஸ்தவர்கள் வழிகெடுகிறார்கள்? அதன் உண்மை செய்தி என்ன? என்பதை நாம் பார்ப்போம்.

மூன்றாவது அத்தியாயத்தை எடுத்துப் படித்துப் பாருங்கள். இந்த அத்தியாயம் முழுக்க பெரும்பாலும் கிறிஸ்தவர்களை பற்றி அவர்களுடைய வழிகேடுகளை பற்றி விரிவாக விளக்குகிறது.

குறிப்பாக 33, 36வது வசனங்களில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சரித்திரத்தை அல்லாஹ் எடுத்து கூறுகிறான்.

அல்லாஹ் அந்த குடும்பத்தை ஏன் தேர்ந்தெடுத்தான் என்று யாருக்காவது கேள்வி வருமானால் இந்த வசனத்தை புரிந்து கொண்டால் போதும்.

إِنَّ اللَّهَ اصْطَفَى آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى الْعَالَمِينَ (33) ذُرِّيَّةً بَعْضُهَا مِنْ بَعْضٍ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ (34) إِذْ قَالَتِ امْرَأَتُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ

ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.(அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் - மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.இம்ரானின் மனைவி “என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்; எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்”. (அல்குர்ஆன் 3 : 33-35)

எப்படிபட்ட பிரார்த்தனை! அல்லாஹ்வின் மீது அவர்களுக்கு அன்பு இருந்தது. அதனால் குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே யா அல்லாஹ்! இந்த குழந்தை உனக்காக என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

இன்று, மக்கள் பிறப்பதற்கு முன்பே திட்டம் தீட்டுகிறார்கள், இந்த குழந்தையைக் கொண்டு பணம் சம்பாதிப்பதற்காக.

உலக படிப்பை மையமாக வைத்து இயங்குகின்ற இந்த வாழ்க்கையில் பொருளாதாரம், காசு பணம் தான் அனைத்தையும் முடிவு செய்கிறது.

மனிதனின் தகுதியை முடிவு செய்வது பணம், மனிதனுடைய கண்ணியத்தை முடிவு செய்வதும் பணம், காசை கொண்டு தான் மக்கள் மனிதனை மதிக்கிறார்கள். இதற்காகவே தங்களது பிள்ளைகளை நேர்ந்து விடுகிறார்கள்.

ஆனால், இந்த தாய் அல்லாஹ்விடத்தில் நேர்ச்சை செய்கிறாள், யா அல்லாஹ்! இந்த குழந்தையை உனக்காக நான் நேர்ச்சை செய்கிறேன் என்று. அல்லாஹ்வின் மீது அவர்களுக்கு இருந்த ஆசையை, பாசத்தை, நேசத்தை நினைத்துப் பாருங்கள்.

சகோதரர்களே! உங்களுடைய பொருளாதாரத்தை கொண்டு, உங்களுடைய பணத்தை கொண்டு மக்களிடத்தில் மதிப்பை வாங்கலாம். மக்களின் கண்ணியத்தை நீங்கள் வாங்கலாம், ஆனால் அல்லாஹ்விடத்தில் அல்ல.

அல்லாஹ்விடத்தில் நீங்கள் கண்ணியம் அடைய வேண்டுமென்றால், அல்லாஹ்விடத்தில் மதிப்புடையவர்களாக நீங்கள் ஆக வேண்டுமென்றால் அதற்கு தேவை காசு அல்ல, பணம் அல்ல, அழகு அல்ல, பதவி அல்ல. உங்களுடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் மீது எவ்வளவு அன்பு இருக்கிறது.

நீங்கள் ஏழையாக இருங்கள், அழகற்றவராக இருங்கள். அதையெல்லாம் அல்லாஹ் பார்க்கமாட்டான். நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் அல்லாஹ் உங்களுக்கு கண்ணியத்தை கொடுத்து விடுவான். உயர்வை கொடுப்பான், மேன்மையை கொடுப்பான், அவன் உங்களை நேசிப்பான்.

அதுமட்டுமல்ல, உங்களை பற்றி நேசிக்கின்ற உள்ளங்களையும் அல்லாஹ் ஏற்படுத்துவான். உங்களுக்காக பிரார்த்தனை செய்கின்ற மக்களை அல்லாஹ் ஏற்படுத்துவான்.

முந்திய இறைத்தூதர்களை இன்று நாம் கூறி அவர்களுக்காக துஆ செய்கிறோம் அலைஹிஸ்ஸலாம் என்று. அதற்கு பிந்தி வாழ்ந்த நல்லோர்களின் பெயர்களையும் நாம் கூறி அவர்களுக்காக துஆ செய்கிறோம்,ரலியல்லாஹு அன்ஹும், ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்பதாக.

அந்த காலத்தில் வாழ்ந்த அரசர்களையோ, செல்வந்தர்களையோ, பதவி படைத்தவர்களையோ இன்று மக்கள் நினைவு கூர்வதில்லை. அப்படி நினைவு கூரினாலும் அவர்களுடைய பெயர்களை மட்டும் தான் கூறுவார்களே தவிர அவர்களுக்காக பிரார்த்தனை செய்யமாட்டார்கள்.

அல்லாஹ்விடத்தில் நீங்கள் நல்லோர்களின் பிரார்த்தனையை அடைய வேண்டுமென்றால் அல்லாஹ்வுடைய அன்பு, அல்லாஹ்வுடைய தீன் தான் இருக்கிறது.

இம்ரானின் மனைவி அல்லாஹ்விடத்தில் துஆ செய்கிறார்கள்; யா அல்லாஹ்! எனது வயிற்றில் உள்ள குழந்தையை உனக்காக நான் நேர்ந்துவிட்டேன். முழுமையாக உனக்கே அற்பணிக்கப் பட்டுவிட்டது என்று.

அடுத்து அல்லாஹ் கூறுகிறான் :

فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنْثَى وَاللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنْثَى وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: “என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்” எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) “அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன். (அல்குர்ஆன் 3:36)

அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது கூறுகிறார்கள்:

பெண்களில் முழுமையடையவில்லை, இருவரை தவிர. ஒருவர் மர்யம், இரண்டாமவர் ஹதீஜா ரழியல்லாஹு அன்ஹா. (1)

அறிவிப்பாளர் : அபூமூஸா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3159.

அல்லாஹ் இந்த மர்யமைப் பற்றி குர்ஆனில் கூறுகிறான் :

وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ

(நபியே! மர்யமை நோக்கி) வானவர்கள் கூறிய சமயத்தில் ‘‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மை தேர்ந்தெடுத்திருக்கிறான். உம்மை பரிசுத்தமாகவும் ஆக்கியிருக்கிறான். உலகத்திலுள்ள பெண்கள் அனைவரையும்விட உம்மை மேன்மையாக்கியும் வைத்திருக்கிறான். (அல்குர்ஆன் 3 : 42)

அல்லாஹ்வுடைய அறிவிப்பை ஏற்றுக் கொள்கிறார்கள்.

وَإِنِّي سَمَّيْتُهَامَرْيَمَ وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

(மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) “அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன். (அல்குர்ஆன் 3:36)

வசனத்தின் கருத்து : யா அல்லாஹ்! இந்த குழந்தைக்கு நான் மர்யம் என்று பெயர் வைக்கிறேன். இதிலிருந்து நமக்கு தெரிய வருகிறது, இறைத் தூதர்களின் சுன்னா, அவர்களுடைய குடும்பத்தார்களின் சுன்னா என்பது குழந்தை பிறந்த அன்றே பெயர் வைத்து விடுவது. அகீகா ஏழாம் நாள் கொடுப்பது தனி சுன்னா. பெயர் பிறந்த அன்றே நாள் வைத்து விடலாம்.

ஒரு தாயுடைய ஈமான் முழுமையாக இருந்தால் தான்குழந்தையின் வளர்ப்பு சரியாக இருக்கும் என்பதை குர்ஆன் நிரூபிக்கிறது. அந்த தாய் அல்லாஹ்விடத்தில் துஆ செய்கிறார்கள்.

இன்று, பொதுவாக குழந்தை பிறந்தவுடன் தாய்மார்கள் நினைப்பது, தன்னுடைய கணவனுக்கு செய்தி சொல்ல வேண்டும், தன்னுடைய தந்தைக்கு சொல்ல வேண்டும், தன்னுடைய சகோதரர்களுக்கு சொல்ல வேண்டும் என்று.

எத்தனையோ தாய்மார்கள் கொடுத்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதையே மறந்து விடுவார்கள்.

அது அழகல்ல, முதலாவதாக அந்த குழந்தைக்காக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்ய வேண்டும். இம்ரானுடைய மனைவி அதை தான் செய்கிறார்கள்.

யா அல்லாஹ்! நான் ஏற்றுக் கொண்டேன். நம் காலத்து பெண்களைப் போன்று கிடையாது.

ஆண் குழந்தைகளை எதிர்பார்ப்பார்கள். பெண் குழந்தைகளுடைய நற்செய்தி அவர்களுக்கு சொல்லப்பட்டால் முகம் சுழித்து விடுகிறார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பிறந்து விட்டால் அவர்களுடைய உள்ளமெல்லாம் இருளாகி விடுகிறது, அவர்களுடைய முகமெல்லாம் சுறுங்கி விடுகிறது.

இன்னும் எப்படிப்பட்ட ஒரு மோசமான நிலைமை இன்றைய காலத்தில் பரவி வருகிறது என்றால் அந்நியர்களின் கலாச்சாரத்தின் தாக்கம், கிறிஸ்தவர்களின் தாக்கம், இன்றைய உலகத்தை தங்களுடைய பொருளாதாரத்தை கொண்டு விலை பேசக்கூடிய, மனிதர்களின் உருவில் இருக்கக் கூடிய மிருகங்களின் தாக்கமான Birth control, family planningஇன்று முஸ்லிம்களையும் பாதித்திருக்கிறது.

படிப்பை காரணம் கூறி, பொருளாதாரத்தை காரணம் கூறி, தங்களுடைய வாழ்க்கையின் நிலைமைகளை காரணம் கூறி இன்று முஸ்லிம்களும் இந்த அவல நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக! இது முஸ்லிம்களுடைய பண்பு கிடையாது.

இம்ரானின் மனைவி அல்லாஹ்விடத்தில் துஆ செய்கிறார்கள்:

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنْبَتَهَا نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِنْدَهَا رِزْقًا قَالَ يَا مَرْيَمُ أَنَّى لَكِ هَذَا قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ

அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்;  “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள். (அல்குர்ஆன் 3:37)

அல்லாஹ்வுடைய பொறுப்பில் உங்களையும் உங்களது பிள்ளைகளையும் உங்களது குடும்பத்தையும், உங்களுடைய வாழ்வாதாரத்தையும் விட்டு விடுங்கள். அல்லாஹ் எப்படி பாதுகாக்கிறான் என்று பாருங்கள்.

இன்று, மக்கள் தங்களுக்கு தங்களையே ரப்பாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இன்று மக்கள் தங்களுக்கு தங்களையே ரஜ்ஜாக்காக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

அல்லாஹ்வை ரஜ்ஜாக் என்று நம்பியவர்கள் மிகக் குறைவு. அல்லாஹ்வை ரப்பு என்று நம்பியவர்கள் மிகக் குறைவு.

நான் எனது மனைவிக்கு ரப்பு, நான் எனது மனைவிக்கு ராஜிக், நான் எனது பிள்ளைகளுக்கு ரப்பு, நான் எனது பிள்ளைகளுக்கு ரஜ்ஜாக். அல்லாஹ் விட்டு விட்டான், செய்து கொள் பார்க்கலாம், நெருக்கடியை ஏற்படுத்திவிட்டான்.

பொருளாதாரம் எண்ணிக்கையில் பெரியதாக இருந்தாலும் வாழ்க்கையில் உள்ள நிம்மதியை அல்லாஹ் அழித்துவிட்டான். செல்வத்தில் உள்ள பரக்கத்தை அல்லாஹ் எடுத்துவிட்டான்.

உள்ளங்களில் உள்ள மகிழ்ச்சியை அல்லாஹ் பறித்துவிட்டான். வறுமையில் இருந்த பொழுது உண்டான மகிழ்ச்சி இப்பொழுது செல்வத்தில் கிடையாது.

வறுமையில் இருந்த பொழுது கணவன், மனைவிக்கு இடையில் பெற்றோர், பிள்ளைகளுக்கு இடையில் இருந்த அந்த நெருக்கமான உறவு இப்பொழுது பொருளாதார நிலையில் கிடையாது.

ஒரு காலம் இருந்தது முஸ்லிமுடைய குடும்பம் என்றால் உறுதியாக கட்டப்பட்ட ஒரு கோட்டையை போன்று இருந்தது. ஆனால், இன்று கணவன் மனைவிக்கு இடையில் பிரிவினை, பெற்றோர் பிள்ளைக்கு இடையில் பிரிவினை.

காரணம், ஈமான் இல்லாத பொருளாதாரம், ஈமான் இல்லாத செல்வ நிலைமை. அன்பை பறித்துவிட்டது, நிம்மதியை குழைத்துவிட்டது, மகிழ்ச்சியை விலை பேசிவிட்டது. சிரிப்பில்லை, நிம்மதி இல்லை, வாழ்க்கையில் ஒரு சுவை இல்லை.

காரணம்,அல்லாஹ்வுடைய ஈமான் அங்கே எடுபட்டுவிட்டது.

வசனத்தின் கருத்து : அல்லாஹ்விடத்தில் துஆ செய்கிறார்கள், யா அல்லாஹ்! இந்த குழந்தையை நீ பாதுகாத்துக் கொள் என்று.

அல்லாஹ் பதில் கூறுகிறான், இம்ரானின் மனைவியே! நான் ஏற்றுக் கொண்டேன். அவளுடைய ரப்பு அவளை ஏற்றுக் கொண்டான், அழகிய முறையில் பொருந்திக் கொண்டான்.

மிக அழகிய முறையில் வளர்த்தான். அதுமட்டுமா? அவருக்கு ஒரு நபியை பொறுப்பாக ஆக்கினான்.

எப்படிப்பட்ட ஈமானிய உணர்வில் மர்யம் அலைஹிஸ்ஸலாம் வளர்ந்து வருகிறார்கள். அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு இறைத்தூதர் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வளர்ப்பில் வளர்ந்து வருகிறார்கள்.

சில சமயங்களில் ஈமான் மிகைத்துவிட்டால், ஈமானுடைய உணர்வு உள்ளத்தில் ஆழமாக பதிந்துவிட்டால் அல்லாஹ் இப்படியும் நிலைமையை மாற்றுவான், பெரியவர்கள் சிறியவர்களிடத்திலிருந்து படிக்கும்படியாக.

ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் சந்தேகத்திற்கு இடமின்றி மிகப் பெரிய இறைத்தூதர், அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டவர்கள், அல்லாஹ்விடத்தில் பேசுபவர்கள், வஹீ அவர்களுக்கு வருகிறது.

அவர்களுக்கு இத்தனை நாட்கள், இத்தனை ஆண்டுகள் கழிந்ததற்கு பிறகும் திருமணம் ஆகி தனக்கு ஒரு குழந்தை இல்லையே அதை குறித்து அல்லாஹ்விடத்தில் அழுத்தமாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வராமல் இருந்தது.

காரணம், நாம் முதுமை அடைந்து விட்டோம், வாலிய பிராயத்தில் பிறக்காத குழந்தை முதுமை பிராயத்தில் பிறக்குமா? என்று எண்ணி விட்டு விட்டார்கள்.

மர்யமை கவனிப்பதற்காக வருகிறார்கள். ஒவ்வொரு முறை பார்க்க வரும்பொழுதும் அங்கே மர்யமிடத்தில் பழங்கள், அதுவும் அந்த நகரத்தில் கிடைக்காத அந்த காலத்தில் கிடைக்காத பழங்கள் இருந்தன.

மர்யமிற்கு உணவு கொண்டு வருவதற்காக நபி வருகிறார்கள்.

(அல்லாஹ்விடத்தில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு அல்லாஹ் இப்படி தான் செய்வான். இந்த உலக படைப்புகளையெல்லாம் அவர்களுக்கு வேலை செய்வதற்காக அல்லாஹ் நியமித்துவிடுவான். நீங்கள் அல்லாஹ்விற்காக ஆகிவிடுங்கள் அல்லாஹ் இந்த உலகத்தை உங்களுக்காக ஆக்குவான்.)

மர்யமிடத்தில் கேட்கிறார்கள் :

மர்யமே! இந்த உணவுகள், பழங்கள் உனக்கு எப்படி கிடைத்தன. அந்த குழந்தையின் வார்த்தையிலிருந்து வருகின்ற பதில்,

அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருகிறது. அல்லாஹ் யாருக்கு நாடுகிறானோ அளவின்றி கொடுப்பான், கணக்கின்றி கொடுப்பான்.

நீங்கள் கனிக்க முடியாது, எங்கிருந்து வரும் என்பதா., நீங்கள் கணக்கிட முடியாது, எவ்வளவு கொடுப்பான் என்பதாக.நீங்கள் அளந்து விட முடியாது, எவ்வளவு கொடுப்பான் என்பதாக.

இந்த வார்த்தையை மர்யமிடத்திலிருந்து கேட்ட பொழுது ஜகாரிய்யா அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடத்தில் உடனே பிரார்த்தனை செய்தார்கள்.

எப்பொழுது உங்களுடைய உள்ளத்தில் ஈமானுடைய ஒரு துடிப்பு ஏற்படுகிறதோ, ஈமானுடைய ஒரு ஆழமான உணர்வை நீங்கள் உணர்கிறீர்களோ, அல்லாஹ்வின் வல்லமையின் ஆழத்தின் எல்லையை நீங்கள் புரிகின்றீர்களோ அப்போது உடனே அந்த இடத்தில் துஆ கேட்டு விட வேண்டும். துஆ கபூல் ஆகக் கூடிய நேரங்களில் அது ஒன்று.

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ قَالَ رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”(அல்குர்ஆன் 3:38)

குழந்தைகளுக்காக இப்படி துஆ கேட்க வேண்டும். யா அல்லாஹ்! எனக்கு குழந்தையை கொடு என்று மட்டுமல்ல. யா அல்லாஹ்! எனக்கு நல்ல குழந்தைகளை கொடு.

இன்று பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தை வேண்டும், குழந்தை வேண்டும் என்று துஆ கேட்கிறார்கள். எனவே தான் அவர்களுக்கு பிறக்கக் கூடிய குழந்தை இப்படியும் இருக்கிறது, அப்படியும் இருக்கிறது.

பிரார்த்தனை கேட்கும்பொழுதே யா அல்லாஹ்! நல்ல குழந்தையை எனக்கு கொடு என்று கேட்க வேண்டும்.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடத்தில் கேட்டார்கள் :

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

யா அல்லாஹ்! ஸாலிஹீன்களில் உள்ள குழந்தையை எனக்கு கொடு. எந்த குழந்தையை நல்லவர்களில் சேர்ப்பாயோ அந்த குழந்தையை நீ எனக்கு கொடு. (அல்குர்ஆன் 37 : 100)

அல்லாஹ் முஃமின்களுக்கு கேட்க சொல்கிறான்:

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

மேலும், எவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்கள் மனைவிகளையும், எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! இறையச்சமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!'' என்று பிரார்த்திப்பார்களோ அவர்களும்வரவேற்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 25 : 74)

திருமணம் முடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். கண் குளிர்ச்சியான மனைவி வேண்டும் என்று தேடுவது கிடையாது.

பணம், காசு, யாருக்கு பெரிய பங்கலா வீடு இருக்கிறது, யாருக்கு பின்னால் பெரிய பட்டங்கள், படிப்புகள் இருக்கின்றன, இன்னும் சொல்லப்போனால் பணப் பேய்களாக, காசுக்கு அடிமையாகிய மிருகங்களாக மக்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் கெட்ட துஆவிற்கு உடனே அல்லாஹ் பதிலளித்தான் :

فَنَادَتْهُ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ أَنَّ اللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَى مُصَدِّقًا بِكَلِمَةٍ مِنَ اللَّهِ وَسَيِّدًا وَحَصُورًا وَنَبِيًّا مِنَ الصَّالِحِينَ

அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: “நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்” எனக் கூறினர். (அல்குர்ஆன் 3:39)

இப்படி குர்ஆனில், அல்லாஹ் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம், மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சரித்திரங்களை கூறுகிறான்.

இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் தவ்ஃபீக் கொடுத்தால் அடுத்த வாரங்களில் இந்த தொடர்களை நாம் பார்க்கலாம்.

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا يَحْيَى بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ شُعْبَةَ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ مُرَّةَ الْهَمْدَانِيِّ عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَلَ مِنْ الرِّجَالِ كَثِيرٌ وَلَمْ يَكْمُلْ مِنْ النِّسَاءِ إِلَّا آسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ وَمَرْيَمُ بِنْتُ عِمْرَانَ وَإِنَّ فَضْلَ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ (صحيح البخاري 3159 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/