ஜகாத்தின் சிறப்பு | Tamil Bayan - 60
ஜகாத்தின் சிறப்பு
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஜகாத்தின் சிறப்பு
வரிசை : 60
இடம் : மஸ்ஜித் அஹ்லே ஹதீஸ், மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ்வின் அடியார்களே!அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்ஆஉரையை ஆரம்பம் செய்கின்றேன்.
கண்ணியத்திற்குரிய சங்கைக்குரிய ஒரு மாதத்தை அல்லாஹ் நமக்கு வழங்கினான், அந்த மாதத்தின் பெரும் பகுதிகளை நாம் கழித்து விட்டோம், எஞ்சி இருக்கும் நாட்களோ மிக சொற்பமானவை, அல்லாஹ்வை அஞ்சி கொண்டு அதிகமதிகம் நல்ல காரியங்களை செய்து அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பையும்அல்லாஹ்வுடைய அன்பையும், அருளையும் நாம் அடையவேண்டும்.
அல்லாஹு தஆலாஇதுபோன்ற நல்ல காரியங்களை அதிகப்படுத்திக் கொள்வதற்குண்டான காலங்களை, சீசன்களை மேலும் மேலும் நமது வாழ்க்கையில் தொடர்ந்து நமக்கு வழங்க வேண்டும்.
நன்மையில் இருக்கும் போது நம்முடைய மரணம் நமக்கு வரவேண்டும். அல்லாஹ்வுடைய பாதையில் இருக்கும் போது மரணம் நமக்கு வரவேண்டும்.
அல்லாஹ்விற்க்குப் பணிந்தவர்களாக, அல்லாஹ்வை நினைத்தவர்களாக, அல்லாஹ்விற்கு வழிபட்டவர்களாக, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் ஒழுக்கங்களைஅவர்களின் சுன்னத்துகளை பேணியவர்களாக நாம் இருக்கும் நிலையில் நம்முடைய மரணம் நம்மை சந்திக்க வேண்டும்.
இந்த வாரத்தில் சதக்காவை பற்றியும், ஜகாத்தை பற்றியும் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கூறியிருக்ககூடிய சிறப்புகள், ஜகாத்திற்கு உண்டான சட்ட திட்டங்கள் பற்றிஇன்ஷா அல்லாஹ் நாம் பார்க்க இருக்கின்றோம்.
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் பல கடமைகளை கொடுத்து நம்மை சோதிக்கின்றான். ஒவ்வொருவருக்கும் ஒரு இபாதத்தில் ஈடுபாடு அதிகமாக இருக்கும், ஒன்றில் சற்று அலட்சியமாக இருப்பார்.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் விரும்புவது என்னவென்றால், இந்த மனிதன் அவனுக்கு விருப்பமோ அல்லது அவனுக்கு வெறுப்போ எல்லா நிலைகளிலும் எனக்கு கட்டுப்படக்கூடிய உணர்வு அவனிடத்தில் இருக்கின்றதா?
அவன் தன்னை ஒரு அடிமை என்பதாக உணர்கின்றானா?நான் அவனுடைய எஜமானன் அவனைப் படைத்த படைப்பாளன்என்பதை உணர்கின்றானா?இந்த சோதனை அல்லாஹ்வுடைய எல்லா கடமைகளிலும் நமக்கு இருக்கின்றது.
இந்த ஜகாத், பொருளில் ஒரு குறிப்பிட்ட அளவை நாம் வைத்திருக்கும் போது, அதற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கடமையாக்கிய, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த வழிகாட்டலை நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள். அதற்கு ஏற்ப அந்த ஜகாத்தை நாம் கொடுக்கிறோமா?
ஜகாத் என்றால் என்ன?
இதனுடைய அரபி பதத்திற்கு நேரிடை பொருள் -தூய்மைப்படுத்துதல்.
அல்லாஹு தஆலா, இந்த வார்த்தையை அவனுடைய புத்தகம் அல்குர்ஆனில் பயன்படுத்துகின்றான்.
இந்த ஜகாத் ஒருவனை தூய்மைப் படுத்துகின்றது. அவனுடைய உள்ளத்தை தூய்மைப் படுத்துகின்றது. அவனுடைய செல்வத்தை தூய்மைப் படுத்துகின்றது. அல்லாஹ்வுடைய நேசத்திற்குரியவனாக அவனை மாற்றுகின்றது. அல்லாஹ்வுடைய அன்பிற்குரியவனாக அவனை மாற்றுகின்றது.
கஞ்சத்தனம் என்ற மிகக் கொடிய நோயிலிருந்து அவனை பாதுகாக்கின்றது. எந்த குணமுள்ளவரை அல்லாஹ் வெறுக்கிறானோ, சபிக்கிறானோ அந்த கெட்ட குணமாகிய கஞ்சத்தனத்திலிருந்து இந்த ஜகாத் ஒருவரை சுத்தப்படுத்துகிறது. அல்லாஹ்வுடைய அன்பின் பக்கம் அவரை நெருக்கமாக்குகின்றது.
ஆகவேதான், கடமையான அளவு தர்மம் செய்வதற்கு அல்லாஹு தஆலா ஜகாத் என்று பெயரிட்டான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அப்படித்தான் அதற்கு பெயர் வைத்தார்கள்.
எப்படி ஏனைய வணக்க வழிபாடுகளுக்கு அல்லாஹ் குர்ஆனில் சிறப்புகளை சொல்லி இருக்கின்றானோ, தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய நபிமொழிகளில் சொல்லி இருக்கிறார்களோ அது போன்றுதான் இந்த ஜகாத்தும்.
இங்கே ஒரு மிக முக்கியமான செய்தி என்னவென்றால், அல்லாஹ் தொழுகையையும் ஜகாத்தையும் குர்ஆனில் எப்போதும் சேர்த்தே சொல்கின்றான்.
தொழுகை -உடல் உறுப்புகள் சார்ந்த வணக்க வழிபாடு, ஜகாத் -பொருள் சார்ந்த வணக்க வழிபாடு.
தொழுகையில் எப்படி அல்லாஹ்வை வணங்குகின்றோமோ, அதுபோன்றுதான் கடமையாக்கப்பட்ட அளவை செல்வத்திலிருந்து நாம் எடுத்துக் கொடுக்கும் பொழுது அல்லாஹ்வை வணங்குகின்றோம்.
நீங்கள் ஒரு ஏழைக்கு உங்களது சொத்தில் கடமையாக்கப்பட்டதை எடுத்துக் கொடுக்கும் பொழுது நீங்கள் அல்லாஹ்வை வணங்குகிறீர்கள், அல்லாஹ்வுடைய வழிபாட்டை செய்கின்றீர்கள், அல்லாஹ்வுடைய கட்டளையை நிறைவேற்றுகிறீர்கள்.
குர்ஆனில் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் அல்லாஹ் தொழுகையையும் ஜகாத்தையும் சேர்த்தே சொல்கின்றான். இரண்டையும் பிரிப்பதை அல்லாஹ் விரும்பவில்லை.
ஆகவேதான், இந்த உம்மத் உடைய முதல் கலீபா அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹுஅவர்களுடைய காலத்தில் ஒரு கூட்டம், நாங்கள் இனி ஜக்காத் உங்களுக்கு தர மாட்டோம், எங்களுடைய விருப்பம், கொடுத்தால் கொடுப்போம், இல்லையென்றால் கொடுக்கமாட்டோம் என்று மறுத்த பொழுது இந்த உம்மத் உடைய அந்த மூத்த கலிஃபா கூறினார்கள்,
وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلاَةِ وَالزَّكَاةِ
தொழுகை ஜகாத்இந்த இரண்டிற்கும் இடையில் யார் பாகுபாடுகாட்டுகிறார்களோ அவர்களிடத்தில் நான் போர் செய்வேன், அவர்களை கொல்லுவேன், அவர்களது உயிர் எனக்கு அனுமதிக்கப்பட்டது.(1)
நூல் : புகாரி, எண் : 6925.
எப்படி தொழுகை அற்ற ஒருவன் முஸ்லிமாக இருக்க முடியாதோ, தொழுகையை விடுபவன் இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்க முடியாதோ, தொழுகையை புறக்கணிப்பவனுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் பங்கு இல்லையோ, அதேபோன்றுதான் ஜகாத் கொடுக்காத செல்வந்தர்களுக்கு, ஸகாத்தை தங்களது செல்வத்திலிருந்து வெளியேற்றாத செல்வந்தர்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் பங்கு கிடையாது.
அவர்களை முஸ்லிம்களுடைய கப்ருஸ்தானில் அடக்கம் செய்யக் கூடாது, அவர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு ஜனாசா தொழுவிப்பதற்கு அனுமதி கிடையாது.
காரணம், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தொழுகை--ஜகாத்இந்த இரண்டையும் ஷஹாதாவிற்கு பிறகு உள்ள மிக முக்கியமான நிபந்தனையாக அடையாளமாக சொல்லுகின்றான்.
ஒருவரை முஸ்லிமாக அங்கீகரிப்பதற்கு, ஒருவர் முஸ்லிமாக மாற வேண்டும் என்றால், அவரை முஸ்லிம் சமுதாயம் முஸ்லிமாக அங்கீகரிக்க வேண்டுமென்றால் அவரிடத்தில் இந்த இரண்டு கடமைகளும் வெளிப்படையாக தெரிய வேண்டும்.
அல்லாஹ் சொல்கின்றான் :
فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَنُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
அவர்கள் (தங்கள் நிராகரிப்பிலிருந்து விலகி அல்லாஹ்விடம்) மன்னிப்புக்கோரி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் (அவர்கள்) உங்கள் மார்க்க சகோதரர்களே. அறிவுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை (இவ்வாறு) விவரிக்கிறோம்.(அல்குர்ஆன் 9 : 11)
மேலும், அல்லாஹ் சொல்கின்றான் :
فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
அவர்கள் (தங்கள் விஷமத்திலிருந்தும், நிராகரிப்பிலிருந்தும்) பாவத்திலிருந்து(ம்) விலகி (நம்பிக்கை கொண்டு) தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள். (அவர்கள் விஷயத்தில் குறுக்கிடாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான். (அல்குர்ஆன் 9 : 5)
ஒரே சூராவில் இந்த இரண்டு வசனங்களை அல்லாஹ் சொல்கின்றான், இது எப்போது இறக்கப்பட்ட வசனங்கள்?
அல்லாஹ் ரப்புல் ஆலமீன், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அனுமதி அளிக்கிறான்;மக்காவிற்கு நீங்கள் செல்லுங்கள்lமக்காவை வெற்றி கொள்ளுங்கள்lஅங்கிருந்து முஷ்ரிக்களை வெளியேற்றுங்கள் என்று. (அல்குர்ஆன்9 : 28)
إِنَّمَا الْمُشْرِكُونَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَرَامَ بَعْدَ عَامِهِمْ هَذَا
நிச்சயமாக இணைவைத்து வணங்குபவர்கள் அசுத்தமானவர்களே. ஆகவே, அவர்கள் இந்த ஆண்டுக்குப் பின்னர் இனி சிறப்புற்ற இந்த மஸ்ஜிதை நெருங்க வேண்டாம்.
وَأَذَانٌ مِنَ اللَّهِ وَرَسُولِهِ إِلَى النَّاسِ يَوْمَ الْحَجِّ الْأَكْبَرِ أَنَّ اللَّهَ بَرِيءٌ مِنَ الْمُشْرِكِينَ وَرَسُولُهُ
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் இணைவைத்து வணங்குபவர்களுடன் (செய்திருந்த உடன்படிக்கையில்) இருந்து நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்ற விஷயத்தை இம்மாபெரும் ஹஜ்ஜூடைய நாளில் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மக்களுக்குப் பகிரங்கமாக அறிவிக்கின்றனர். (அல்குர்ஆன் 9 : 3)
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அலி அவர்களையும், அபூபக்ர் அவர்களையும் அனுப்புகிறார்கள்; இந்த அறிவிப்பை செய்வதற்காக.
முஷ்ரிக்குகளே! உங்களுக்கு 4மாதம் அவகாசம் கொடுக்கப்படுகின்றது, மக்காவை விட்டு வெளியேறி விடுங்கள், உங்களில் ஒருவரை முஸ்லிமாக நாங்கள் அங்கீகரிக்க வேண்டுமென்றால் அதற்கு இந்த மூன்று நிபந்தனைகளை அல்லாஹ் சொல்கின்றான்.
ஒன்று, நீங்கள் ஷிர்க்கிலிருந்து தவ்பாச் செய்து வெளிவர வேண்டும்.இரண்டாவது, தொழுகையை நிலை நிறுத்த வேண்டும். மூன்றாவது, ஜகாத்தை கொடுக்கவேண்டும்.
இந்த மூன்று நிபந்தனைகள் இருந்தால் நீங்கள் முஸ்லிம்கள், உங்களை நாங்கள் எங்களுடைய சகோதரர்களாக அங்கீகரித்துக் கொள்வோம், உங்களுக்கு மக்காவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது.
அப்படி இல்லையென்றால்,நீங்கள் குறைஷியாக இருந்தாலும் சரி, ஹாஷிமியாக இருந்தாலும் சரி, நபியின் சொந்தக் காரர்களாக இருந்தாலும் சரி, அபூபக்ரின் சொந்தக்காரர்களாக இருந்தாலும் சரி நீங்கள் நஜீஸ்கள், நீங்கள் மக்காவை விட்டு வெளியேறி விடுங்கள். இந்த புண்ணிய பூமியில் இனி நீங்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது. வெளியேறி விடுங்கள்.
அன்பிற்குரியவர்களே!சிந்தித்துப் பார்க்க வேண்டும். அல்லாஹு ரப்புல் ஆலமீன், இந்த தொழுகையுடனேஜகாத்தை சேர்த்து சொல்கின்றான்.
இன்று, அதிகமான மக்களுக்கு இந்த ஜகாத்தினுடைய உயர்வைத் தெரியாத காரணத்தினால் இதில் அவர்களுடைய உள்ளம் ஈடுபடாமல் இருக்கின்றது, இதில் அவர்கள் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள்.
ஆகவேதான், முதலில் ஜகாத்தின் சிறப்புகளை பார்த்துவிட்டு, பிறகு ஸகாத் கொடுக்காதவர்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கக்கூடிய தண்டனைகளை இன்ஷா அல்லாஹ் பார்க்க இருக்கின்றோம். அதற்குப்பிறகு ஜகாத் உடைய சட்டங்களை பார்ப்போம்.
அல்லாஹ் சொல்கின்றான் :
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகையைக் கடைப் பிடித்து, மார்க்க வரியையும் (ஸகாத்து) கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.(அல்குர்ஆன் 2 : 277)
வசனத்தின் கருத்து : நல்ல காரியங்கள் என்றால், எதை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குர்ஆனில் கூறினானோ,எதை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலமாக நமக்கு வழி காட்டினானோ அதுதான் நல்ல அமல். நாம் கற்பனை செய்துகொள்வது, நாம் ஏற்படுத்திக்கொள்வது கிடையாது.
அடுத்து, நல்ல காரியங்கள் செய்கின்றார்களோ என்று கூறும் பொழுதே இதில் தொழுகை வந்துவிடுகின்றது, ஜகாத் வந்துவிடுகின்றது, நோன்பு மற்றும் ஹஜ் வந்துவிடுகின்றது.
ஆனால், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த நல்ல காரியங்களில் இருந்து தொழுகையையும் ஸகாத்தையும் தனியாக எடுத்து சொல்கின்றான்,
தொழுகையை யார் நிலைநிறுத்துகிறார்களோ, தொழுகையை நிலைநிறுத்துவது என்றால் அதனுடைய சட்டங்களை அறிந்து, அந்தத் தொழுகை எங்கே ஜமாஅத்தாக நிறைவேற்றப்படுகின்றதோ, அந்த இடத்தில், அதான் சொல்லப்படும் இடங்களில், மக்களுடன் சேர்ந்து ஜமாஅத்துடன் சேர்ந்து நிறைவேற்றுவது.
ஜகாத்தும் நல்ல காரியங்களில் வந்துவிடுகின்றது. இருப்பினும்,அல்லாஹ் ரப்புல் ஆலமீன்,இஸ்லாமிய மார்க்கத்தின் உடைய ஏனைய நல்ல காரியங்களில் இருந்து இந்த இரண்டை தனியாக பிரித்தெடுத்து சொல்கின்றான்.
காரணம் என்ன? இந்த இரண்டுடைய முக்கியத்துவம் அப்படி.தொழுகை ஒரு மனிதனுடைய உள்ளத்தை சுத்தப்படுத்துகிறது,ஒரு மனிதனுடைய வாழ்க்கையை சுத்தப்படுத்துகிறது, ஒரு மனிதனுக்கு கட்டுப்பாட்டை விதிக்கிறது.
ஜக்காத் ஒரு மனிதனுடைய உள்ளத்தைஅவன் வாழ்க்கையை சுத்தப்படுத்துகிறது. தான் சம்பாதித்த செல்வமாக இருந்தாலும், இந்த செல்வம் அல்லாஹ் எனக்குக் கொடுத்தது, அல்லாஹ் விரும்பாத வழியில் இந்த செல்வத்தை நான் செலவழிக்க முடியாது, அல்லாஹ்விற்கு வெறுப்பான வழியில் நான் இந்த செல்வத்தை செலவழிக்க முடியாது.
இன்று பார்க்கிறோம், இந்த ஈமானுடைய உணர்வு இல்லாத காரணத்தால் செல்வம் அதிகமாகும்போது, பாவம் அதிகமாவதை பார்க்கின்றோம்.
இன்று, எந்த அளவுக்கு ஒரு தீய கலாச்சாரம் பரவி விட்டது என்று சொன்னால், அதற்கு சில தரமற்ற மார்க்க அறிஞர்கள் உடைய ஃபத்வாவையும் அவர்கள் சேர்த்துக் கொள்கின்றார்கள்.
முஸ்லிம்கள் எல்லாத் துறையிலும் இருக்கவேண்டும், எல்லா துறையிலும் முன்னேற வேண்டும், ஆகவே சினிமா துறையிலும் முன்னேற வேண்டும், அதுவும் ஒரு அவசியமான துறைதான் என்பதாக பல முஸ்லிம் செல்வந்தர்கள் தங்களுடைய செல்வங்களை அல்லாஹ் சபித்த, அல்லாஹ்வுடைய தூதர் சபித்த, வானவர்கள் சபித்துக் கொண்டிருக்கக்கூடிய, இந்த ஆபாசங்களை பரப்பக்கூடிய, அனாச்சாரங்களை அழிவுகளை பரப்பக்கூடியசினிமா துறைகளில் அவர்கள் தங்களுடைய செல்வங்களை முதலீடு செய்கின்றார்கள்.
அதற்கு காரணம், இந்த ஈமானிய உணர்வு, இஸ்லாமிய உணர்வு, அல்லாஹ் கொடுத்த செல்வம் இதை எப்படி செலவு செய்ய வேண்டும்? என்ற பயம் இல்லாத காரணத்தால், அவர்களுடைய மன இச்சை அவர்களுக்கு அலங்கரித்து காட்டுகின்றது.
அவர்களுடைய இச்சை, அவர்களுடைய உள்ளத்தின் உடைய அந்தப் பொருளை அதிகப்படுத்த வேண்டும் என்ற ஆசை, இரட்டிப்பாக்க வேண்டும் என்ற ஆசை, அவர்களுடைய பாவங்களை அவர்களுக்கு அலங்கரித்து காட்டுகின்றது.
ஆகவேதான், அல்லாஹ் சோதிக்க விரும்புகின்றான், நல்ல காரியங்கள் எத்தனையோ நீங்கள் செய்து விடலாம். ஆனால், இந்த இரண்டு நல்ல காரியம் இல்லாமல் உங்களுடைய எந்த நல்ல காரியங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.
ஆகவேதான், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்,
தொழுகை இல்லாதவனை நாளை மறுமையில் ஃபிர்அவ்ன், காரூன், ஹாமானுடன் எழுப்பப்படும் என்று.
ஜகாத் கொடுக்காதவர்கள் அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவர்களுக்காக பழுக்கக் காய்ச்சப்பட்ட நரக நெருப்பை அங்கே வைத்திருக்கின்றான்.
யார் ஈமான் கொண்டு, நல்ல காரியங்களைச் செய்து, தொழுகையை நிலை நிறுத்தி ஜகாத்தை கொடுத்து வந்தார்களோ இத்தகையவர்களுக்கு இவர்களது இறைவனிடத்தில் இவர்களுக்குரிய கூலி நிர்ணயிக்கப்பட்டு விட்டது.
இவர்கள் மீது எந்த பயமும் கிடையாது. இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். இந்த உலகத்திலும் அவர்களுக்கு பயம் இல்லை, மறுமையிலும் அவர்களுக்கு கவலை இல்லை. (அல்குர்ஆன் 2 : 277)
காரணம், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் யார் தன்னை வணங்குகிறார்களோ, யார் தன்னுடைய வழிபாட்டிற்கு வந்து விடுகிறார்களோ, அவர்களை அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான்.
அல்லாஹ் சொல்கின்றான் :
إِنَّ وَلِيِّيَ اللَّهُ الَّذِي نَزَّلَ الْكِتَابَ وَهُوَ يَتَوَلَّى الصَّالِحِينَ
‘‘நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்தான்; அவனே இவ்வேதத்தை இறக்கினான். அவனே நல்லடியார்களை பாதுகாக்கிறான். (அல்குர்ஆன் 7 : 196)
இன்று மக்கள், முஸ்லிம்கள்அல்லாஹ்வுடைய பொறுப்பில் செல்வதற்கு பதிலாக, அல்லாஹ்வுடைய அரவணைப்பில் செல்வதற்கு பதிலாக எங்கெங்கோ செல்கின்றார்கள்.
யாருடைய அரவணைப்புக்கு உறுதி கிடையாதோ,யாருடைய வாக்குறுதிகள் பொய்யோ,யாருடைய நிலைபாடு நிரந்தரமற்றதோ, யார் இன்று இருப்பார்கள் நாளை இறந்துவிடுவார்களோ, என்றுமே இறக்காத அந்த ரப்பு சொல்கின்றான், நல்லவர்களாக சாலிஹீன்களாக நீங்கள் மாறுங்கள், நான் உங்களை பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்.
அல்லாஹ் சொல்கின்றான்,பயம் கிடையாது, கவலை கிடையாது, துக்கம் கிடையாது, இஸ்லாமிய மார்க்கத்தை ஒரு முஸ்லீம் பாதுகாக்கும் பொழுது அவனை பாதுகாக்கக்கூடிய பொறுப்பை அல்லாஹ் எடுத்துக் கொள்கிறான். அவர்களின் மீது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒருவிதமான பாதுகாப்பை இறக்குகிறான். எதிரிகள் அவர்களை பார்க்கும் பொழுது அவர்களுடைய உள்ளத்தில் அல்லாஹ் பயத்தை போடுகின்றான்,
ஒரு நல்ல முஸ்லிமை பார்க்கும்போது எதிரிகளின் உள்ளங்களில்அல்லாஹ் பயத்தை போடுகின்றான்.
குர்ஆனில் அல்லாஹ் பதுருடைய போரை சொல்லும்பொழுது, உஹதுடைய போரை ஹுனைன் போரை சொல்லும் பொழுது அல்லாஹ் சொல்கின்றான்.
وَالْمُقِيمِينَ الصَّلَاةَ وَالْمُؤْتُونَ الزَّكَاةَ وَالْمُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أُولَئِكَ سَنُؤْتِيهِمْ أَجْرًا عَظِيمًا
தொழுகையையும் கடைப்பிடித்துத் தொழுபவர்கள்; ஜகாத்தும் கொடுத்து வருபவர்கள்; அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள். ஆகிய இவர்களுக்கு (மறுமையில்) மகத்தான கூலியை நாம் கொடுப்போம். (அல்குர்ஆன்4 : 162)
என்ன கூலி? குர்ஆனுக்கு விரிவுரை செய்யும் மார்க்க அறிஞர்கள் சொல்கின்றார்கள், எந்த இடங்களில் அல்லாஹ் மகத்தான கூலி என்று சொல்கிறானோ, அது அல்லாஹ்வுடைய சுவர்க்கம்.
எந்த சுவர்க்கத்தை பற்றி, எனது மன்னிப்பை அடைய விரைந்து வாருங்கள், வானம் பூமி வியாபித்து இருக்கக்கூடிய சொர்க்கத்தை அடைவதற்கு என்று அல்லாஹ் சொல்கின்ற அந்த சுவர்க்கம்.
அதற்கு மகத்தான கூலி என்று ஏன் அல்லாஹ் பெயர் வைக்கின்றான்? அதை விலை போட முடியாது,அதை மதிப்பிட முடியாது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:
مَوْضِعُ قَدَمٍ مِنَ الجَنَّةِ، خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا
ஒரு பாதத்தின் அளவு உங்களுக்கு சுவர்க்கத்தில் இடம் கிடைப்பது, இந்த முழு துன்யாவை விடவும் அதில் இருக்கக்கூடிய செல்வங்களை விடவும் சிறந்தது.
அறிவிப்பாளர் : அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3250, 6568.
முழு துன்யா, இதில் உள்ள ஆட்சி அதிகாரங்கள், தங்கங்கள், வெள்ளிகள், மாணிக்கங்கள், மரகதம்கள் இப்படி என்ன செல்வங்களாக இருந்தாலும், இந்த எல்லா செல்வங்களையும் நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்தால் அல்லாஹ்விற்காக கொடுத்து விட்டாலும் அது சுவர்க்கத்தில் உங்களுக்கு அல்லாஹ் தரக்கூடிய ஒரு பாதத்தின் இடத்திற்கு சமமாகாது.
அல்லாஹ் நமக்கு எவ்வளவு பெரிய சுவர்க்கத்தை தருகின்றான் என்று சொன்னால், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
«لَنْ يُدْخِلَ أَحَدًا عَمَلُهُ الجَنَّةَ» قَالُوا: وَلاَ أَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: " لاَ، وَلاَ أَنَا، إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِفَضْلٍ وَرَحْمَةٍ
உங்களில் யாரும் தங்களுடைய அமலை காரணமாக கூறி சொர்க்கத்துக்கு போக முடியாது, உங்களுடைய அமலை காரணமாகச் சொல்லி, யா அல்லாஹ்! நான் இந்த அமலை செய்தேன், நீ எனக்கு கண்டிப்பாக சுவர்க்கத்தை கொடுக்கணும் என்று அல்லாஹ்விடத்தில் கேட்டு சென்று விடமுடியாது. அல்லாஹ்வுடைய கிருபையால் தான் செல்ல முடியும்.
ஸஹாபாக்கள் கேட்டார்கள்,அல்லாஹ்வின் தூதரே! எங்களில் அதிகமாக அல்லாஹ்வை அஞ்சியவர்களே! நீங்களுமா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்,
وَلاَ أَنَا، إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِفَضْلٍ وَرَحْمَةٍ
ஆம் நானும்தான், அல்லாஹ் அவனுடைய கருணையால் என்னை சூழ்ந்து கொள்ள வில்லை என்றால், நானும் என்னுடைய அமல்களை கூறி சுவர்க்கம் செல்ல முடியாது. (2)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் :5673.
அல்லாஹ் கொடுத்திருக்கக் கூடிய நிஃமத்களில் எந்த நிஃமத்திற்க்கு நாம் நம்முடைய வணக்க வழிபாடுகளை நன்றியாக உரித்தாக்க முடியும்,
அல்லாஹு ரப்புல் ஆலமீன், கொடுத்திருக்கக் கூடியகோடான கோடி நிஃமத்கள் எண்ணி முடிக்க முடியுமா? ஒரு நிஃமத்தை கொண்டு நாம் பயன்பெறக்கூடிய அந்தப் பலன்களை இந்த வாழ்க்கையில் முடிக்க முடியுமா? அந்த நிஃமதிற்கு நம்முடைய முழு வணக்க வழிபாடுகளும் நன்றியாக ஆகிவிட முடியாது.
அதுமட்டுமல்ல, அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கும் ஈமான் என்ற செல்வம், இஸ்லாம் என்ற செல்வம், எந்த செல்வத்தைக் கொண்டு நாளை அல்லாஹ்விடத்தில் சொர்க்கத்தை வாங்க முடியுமோ, அல்லாஹ் உடைய இந்த செல்வம் உடையவர்களுக்கு தான் சுவர்க்கம்.
உலகத்தின் கோடிகளையும், உலகத்தின் லட்சங்களையும் இன்னும் எத்தனை கணக்குகளையும், எத்தனை செல்வங்களையும் யார் தங்களுக்கு உடமையாக ஆக்கி இருக்கின்றார்களோ அவர்களுக்கெல்லாம் இந்த ஈமான் என்ற செல்வம் இல்லை என்றால் சுவர்க்கம் கிடையாது. அந்த நிஃமத்தை நாம் அடைகின்றோம்.
எந்த நிஃமத்தின் மூலமாக ஒரு மனிதன் எவ்வளவு பெரிய பாவங்கள் செய்திருந்தாலும் நிச்சயமாக ஒருநாள் அந்த நரக நெருப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு இந்த உலகத்தை விட பெரிய 10மடங்கு சுவர்க்கத்தை அல்லாஹ்விடத்தில் பெற போகின்றான் அல்லவா, நிரந்தரமான வாழ்க்கை சுவர்க்கத்தில் கழிக்க போகின்றான் அல்லவா, அந்த ஈமானுடைய நிஃமத்திர்க்கு நாம் காலமெல்லாம் சுஜூதில் இருந்தாலும் சரி, காலமெல்லாம் கைதூக்கி அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டே இருந்தாலும் சரி, ஈடாகாது.
அல்லாஹ் சொல்கின்றான்,நீங்கள் தொழுகையை நிலை நிறுத்தி, ஜகாத் கொடுத்து, அல்லாஹ்வை என்னையும் மறுமையையும் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் மகத்தான கூலியை நான் உங்களுக்கு தருகின்றேன். (அல்குர்ஆன்4 : 162)
மேலும், அல்லாஹ் சொல்கின்றான் :
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (2) وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ (3) وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ
நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டனர்.அவர்கள் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள்; அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகி இருப்பார்கள்; அவர்கள் ஜகாத்து கொடுத்து வருவார்கள். (அல்குர்ஆன் 23 : 1-4)
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள், தொழுகையில் ஸலாம் சொல்லியதற்குப் பிறகு, அஸ்தஃக்பிருல்லாஹ் அஸ்தஃக்பிருல்லாஹ் அஸ்தஃக்பிருல்லாஹ்என்று மூன்று முறை சொல்வார்கள்.
ஏன் தெரியுமா? இந்த தொழுகை எப்பேற்ப்பட்ட வணக்கம்! இந்த வணக்கத்தை எப்படி நிறைவேற்ற வேண்டும்? என்னிடத்திலிருந்து ஏதாவது குறை ஏற்பட்டிருந்தால் நான் அல்லாஹ்வை இந்தத் தொழுகையில் மறந்திருந்தால், அல்லது அல்லாஹ் விரும்பக்கூடிய முறையில் இதை நான் நிறைவேற்றாமல் இருந்திருந்தால், என்னுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட வில்லை என்றால் எனது நிலைமை என்னவாகும் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயந்த காரணத்தால், தொழுகைக்குப் பிறகும், தொழுகை மட்டுமல்ல, எந்த வழிபாடுகளை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தாலும் சரி, அதற்குப் பின்பு இஸ்திக்பார் செய்வார்கள். அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்பார்கள்.
வசனத்தின் கருத்து : அல்லாஹ் சொல்கின்றான்; வீணான காரியங்களை விட்டு அவர்கள் விலகியிருப்பார்கள். (அல்குர்ஆன் 23 : 1-4)
அவர்களுடைய வாழ்க்கையை வணக்க வழிபாடுகள் செய்வதற்கு, மறுமையில் சொர்க்கத்தில் சேமித்து வைப்பதற்கு,அல்லாஹ்வுடைய அன்பை அடைவதற்கு, சுவர்க்கத்தில் உயர்ந்த தரஜாத்க்களை அடைவதற்கு, வணக்க வழிபாடுகளை செய்வதற்கே, இந்த துன்யாவினுடைய நேரம் பத்தாமல் இருக்க, இந்த துன்யாவினுடைய நேரம் போதாமல் இருக்க, கேளிக்கைகளுக்கு வீன் விளையாட்டுகளுக்கு எங்கே அவர்களது வாழ்க்கையில் அவகாசம் இருக்கும்? எங்கே அவர்களுக்கு நேரம் இருக்கும்?
யார் மறுமையை மறந்தார்களோ, யார் அல்லாஹ்வை மறந்தார்களோ, யார் தான் சொர்க்கத்திற்கு உரியவன் என்பதை மறந்தானோ, யார் தனது மறுமையின் நிலைமை என்னவாகும்,என்னுடைய ஏடு வலது கரத்திலா இல்லை இடது கரத்திலா?சிராத் பாலத்தை நான் கடப்பேனா இல்லையா?ஹவுழுள் கவுஸர் உடைய தண்ணீரை குடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்குமா இல்லையா?என்று யார் பயப்பட வில்லையோ அவர்கள்தான் கேளிக்கையின் பக்கம் செல்வார்கள்; அவர்கள்தான் நேரங்களை வீணாக்குவார்கள்; அல்லாஹ்வை மறப்பார்கள்;மறுமையை மறப்பார்கள்.
யாருடைய உள்ளம் அல்லாஹ்வுடைய அன்பால் திளைத்திருக்கின்றதோ, மறுமையின் நினைவில் இருக்கிறதோ, நாளை மறுமையில் எனக்கு சுவர்க்கத்தில் உயர்ந்த தரங்கள் கிடைக்க வேண்டும், நான் நபிமார்கள் உடன் இருக்க வேண்டும், நான் சித்திக் உடனே இருக்க வேண்டும், அல்லாஹ்வுடைய முகத்தை நான் ஒவ்வொரு நாளும் பார்க்க வேண்டும் என்ற ஆசை யாருடைய உள்ளத்தில் இருக்குமோ அவர்கள் நேரத்தை வீணாக்க மாட்டார்கள்; அவர்கள் வீணான காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்.
அவர்கள் ஆசாபாசங்களில், சிற்றின்பங்களில் தங்களது வாழ்நாட்களை கழித்து வீணாக்க மாட்டார்கள்.
அல்லாஹ் சொல்கின்றான்:
وَرَحْمَتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ فَسَأَكْتُبُهَا لِلَّذِينَ يَتَّقُونَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَالَّذِينَ هُمْ بِآيَاتِنَا يُؤْمِنُونَ
என் அருட்கொடை அனைத்தையும்விட மிக விரிவானது. ஆகவே, எவர்கள் (எனக்குப்) பயந்து ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் நம் வசனங்களை நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுக்கும் (என் அருளை) நான் முடிவு செய்வேன்'' என்று கூறினான். (அல்குர்ஆன் 7 : 156)
வசனத்தின் கருத்து : நான் என்னுடைய ரஹ்மத்தை யார் என்னை பயப்படுகிறார்களோ அவர்களுக்கு முடிவு செய்வேன்.
ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய பயம் இருக்க வேண்டும். தவறு செய்யக்கூடாது, குற்றம் செய்யக்கூடாது.
இன்று, இஸ்லாமிய மார்க்கத்தின் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாத மக்கள், ஆட்சியை கொண்டு அதிகாரத்தை கொண்டு இந்த படைபலத்தை கொண்டு இன்னும் இந்த உலக செல்வங்களைக் கொண்டு முஸ்லிம்களை அச்சுறுத்தி பார்க்கின்றார்கள்; முஸ்லிம்களுடைய ஈமானுடன் விளையாடுகிறார்கள்
யாரொருவன்,ஒரு முஸ்லிமை,அல்லாஹ்வை விட்டுவிட்டு,வேறு ஒன்றை கொண்டு பயமுருத்துகிறானோ (குறிப்பாக காபிர்களை பற்றி) மக்கள் எல்லாம் உங்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார்கள், அவர்களை நீங்கள் பயந்து கொள்ளுங்கள் என்று யார் முஸ்லிம்களிடத்தில் சொல்கின்றானோ அவன் ஷைத்தானாக இருப்பான். அவனை சார்ந்தவர்களை அவன் பயமுறுத்துவான் என்று அல்லாஹ் சொல்கின்றான். (அல்குர்ஆன்3 : 175)
ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய பயம் இருக்க வேண்டும். என்ன செய்ய முடியும் இந்த உலக சக்திகளால்?
ஃபிர்அவ்ன் என்ன செய்து முடித்தான்? சூனியக்காரர்கள் எப்பொழுது ரப்பு ஒருவன் என்று தெரிந்தார்களோ, ஃபிர்அவ்ன் கூறினான்; உங்களது கைகளை வெட்டுவேன், உங்களது கால்களை வெட்டுவேன், உங்களை சிலுவையில் அறைவேன், உங்களை நான் கழுகு மரத்தில் ஏற்றுவேன் என்று கூறினான்.
அதற்கு அவர்கள் சொன்னார்கள்;
قَالُوا لَنْ نُؤْثِرَكَ عَلَى مَا جَاءَنَا مِنَ الْبَيِّنَاتِ وَالَّذِي فَطَرَنَا فَاقْضِ مَا أَنْتَ قَاضٍ إِنَّمَا تَقْضِي هَذِهِ الْحَيَاةَ الدُّنْيَا
அதற்கவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘எங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் எங்களைப் படைத்தவனைப் புறக்கணித்து விட்டு உன்னை நாங்கள் ஒரு காலத்திலும் விரும்பவே மாட்டோம். உன்னால் இயன்றதை நீ முடிவு செய்துகொள். நீ முடிவு செய்யக்கூடியதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில்தான். (அல்குர்ஆன்20 : 72)
மேலும், அவர்கள் சொன்னார்கள்;
قَالُوا إِنَّا إِلَى رَبِّنَا مُنْقَلِبُونَ (125) وَمَا تَنْقِمُ مِنَّا إِلَّا أَنْ آمَنَّا بِآيَاتِ رَبِّنَا لَمَّا جَاءَتْنَا رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
அதற்கவர்கள் ‘‘(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம்தான் திரும்பிச் செல்வோம். (அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை)'' என்று கூறினார்கள். ‘‘இன்னும், எங்களிடம் வந்த இறைவனின் அத்தாட்சிகளை நாங்கள் நம்பிக்கை கொண்டதைத் தவிர வேறு எதற்காகவும் நீ எங்களை பழிவாங்கவில்லை'' (என்று ஃபிர்அவ்னிடம் கூறிய பிறகு) ‘‘எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! (உனக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக (எங்களை ஆக்கி) எங்களை நீ கைப்பற்றிக் கொள்வாயாக!'' (என்று பிரார்த்தித்தார்கள்.)(அல்குர்ஆன்7 : 125,126)
பல்லாயிரக்கணக்கான சூனியக்காரர்களை ஒரே பகலில் ஃபிர்அவ்ன் மாறுகால் மாறுகை வெட்டி கழுமரத்தில் ஏற்றினான்.அதே நிலையிலே அவர்கள் இறந்தார்கள். ஆனால் ஈமானை விடவில்லை.
ஃபிர்அவ்னை விடவா ஒரு கொடுங்கோல் மன்னன் அடுத்து வந்துவிட போகின்றான்?! இந்த தண்டனையை விடவா ஒரு தண்டனை உலகத்தில் இருக்கப் போகின்றது?!
அல்லாஹ் சொல்கின்றான்,யார் அல்லாஹ்வை பயந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு இந்த ரஹ்மத்தை கொடுப்பேன், ஆட்சியாளர்களை,அதிகாரத்தை, வறுமையை பயப்படகூடியவர்களுக்கு அல்ல.
அல்லாஹ்வுடைய தீனுக்கு முரணாக கூடிய எதையும், அதன் மூலமாக எனக்கு கோடி வந்தாலும் சரி,ஆட்சி வந்தாலும் சரி,எனக்கு அது தேவையில்லை.
என்னுடைய மார்க்கத்திற்கு முரணாக இல்லையா?என் அல்லாஹ்விற்கு செய்யவேண்டிய இபாதத்களில் எனக்கு எந்தவிதமான இடையூறும் இல்லையா? அப்படிப்பட்ட துனியாவை பற்றி பரவாயில்லை.
ஈமானை விலைபேசிவிட்டு, தவ்ஹீதை விலை பேசி விட்டு, அல்லாஹ்வுடைய பயத்தை அல்லாஹ்வுடைய தீனை விலை பேசி விட்டு கிடைக்கக்கூடிய செல்வமாக இருந்தால் அந்த செல்வத்திற்கு நாசம் உண்டாகட்டும். அந்த செல்வத்தை தேடுபவர்கள் நாசமாகட்டும்.
பாருங்கள்! அல்லாஹ் தெளிவு படுத்திவிட்டான் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை இந்த பூமியில் நீங்கள் அடைய வேண்டும் என்று சொன்னால் தக்வா இறையச்சம் தேவை. நீங்கள் ஜகாத்தை சரியாக நிறைவேற்ற வேண்டும். அல்லாஹ்வுடைய ரஹ்மத் உங்களுக்கு வேண்டும் என்றால் உங்களுடைய ஈமானை தவ்ஹீதை நீங்கள் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும்
அல்லாஹ் சொல்கின்றான், இந்த ஜகாத் கொடுப்பதால், அல்லாஹ்வுடைய ரஹ்மத் மட்டுமல்ல, உங்களுடைய செல்வங்களை நான் இரட்டிப்பாக்கி தருவேன் என்று.
ஒரு நேரத்தில் முஸ்லிம்கள் செல்வந்தர்களாக, அதிபதிகளாக, உரிமையாளர்களாக இருந்தார்கள். ஆனால், அவர்கள் இன்று, அவர்களுடைய செல்வங்கள் எல்லாம் பறிபோகி சிரமத்தில், கஷ்டத்தில், துன்பத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.
ஒரு நேரத்தில், மொத்த வியாபாரம் என்று சொன்னால் அந்த வியாபாரங்கள் முஸ்லிம்களைத் தான் சார்ந்து இருந்தது. ஆனால், இன்று பார்க்கும் பொழுது முஸ்லிம்களுடைய நிலைமை மிக மோசமாக இருக்கின்றது.
இதற்கு மார்க்க அடிப்படையில் பல காரணங்கள் அமைந்துள்ளன.
ஒன்று, முஸ்லிம்கள் வட்டியில் ஈடுபடுவது. இரண்டாவது, முஸ்லிம்கள் ஜகாத் கொடுக்காதது. மூன்றாவது, முஸ்லிம்கள், ஏழை எளியோர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று, தங்களுடைய செல்வங்களை ஒரு பங்கு அவர்களுக்கு விட்டு தராதது.
ஒரு முஸ்லிம் முதலாளி உடைய மன நிலைமை என்னவென்றால், தன்னிடத்தில் வேலை செய்கிறவன் அவனும் தன் இடத்தில் வேலை செய்ய வேண்டும், அவனுக்கு பிறக்கக்கூடிய பிள்ளையும் தன்னிடத்தில் வேலை செய்ய வேண்டும், அவனுடைய பிள்ளையும் தன்னிடத்தில் வேலை செய்ய வேண்டும்.
காலம் காலமாக கைகட்டி தன் முன்னே நிற்க வேண்டுமென்ற மனப்பக்குவம் தான் அவர்களிடத்தில் இருக்கிறதே தவிர, இந்த முஸ்லிம் என்னிடத்தில் இவ்வளவு காலம் வேலை செய்தான், அவனுக்கு உதவி செய்யும் விதமாக அவனுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொடுத்து அவனை வாழ்க்கையில் முன்னேற்றுவோம் என்ற மனப்பக்குவம் இல்லை.
குறுகிய மனம் உடையவர்களாக, நெருக்கடியான உள்ளம் உடையவர்களாக இருக்கின்றார்கள். இது போன்ற காரணங்கள்தான் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்குரிய காரணம் என்று சொல்லலாம்.
அல்லாஹ் சொல்கின்றான்,ஜகாத் கொடுத்தால் உங்களுக்கு செல்வத்தில் உயர்வு, உங்களுடைய செல்வத்திற்கு பாதுகாப்பு.
وَمَا آتَيْتُمْ مِنْ زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَئِكَ هُمُ الْمُضْعِفُونَ
எனினும், அல்லாஹ்வின் முகத்தை நாடி ஜகாத்தாக ஏதும் நீங்கள் கொடுத்தாலோ, கொடுத்தவர்கள் அதை இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர். (அல்குர்ஆன்30 : 39)
அல்லாஹ்வுடைய முகத்தை நாடிஎன்ற ஒரு நிபந்தனையை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சேர்த்து விடுகிறான்.
ஜகாத் கொடுத்தால் வறுமை ஏற்பட்டுவிடும் என்று எச்சரிப்பவன் ஷைத்தானாகத்தான் இருப்பான்.
அல்லாஹ் சொல்கின்றான்:
الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَاءِ وَاللَّهُ يَعِدُكُمْ مَغْفِرَةً مِنْهُ وَفَضْلًا وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
(நீங்கள் தர்மம் செய்தால்) ஷைத்தான் உங்களுக்கு வறுமையைக் கொண்டு பயங்காட்டி மானக்கேடான (கஞ்சத்தனத்)தைச் செய்யும்படி உங்களைத் தூண்டுவான். ஆனால், அல்லாஹ்வோ (நீங்கள் தர்மம் செய்தால்) தன் மன்னிப்பையும், செல்வத்தையும் (உங்களுக்குத் தருவதாக) வாக்களிக்கிறான். மேலும், அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 2 : 268)
அல்லாஹ் சொல்கின்றான், நீ ஜகாத் கொடு,உனக்கு நான் அதிகப்படுத்தி தருகின்றேன் என்று.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள், ஸஹீஹ் முஸ்லிமுடைய அறிவிப்பு,
(இது ஜகாதிற்கும் பொருந்தும், ஏனைய தர்மங்களுக்கும் பொருந்தும்.)
"مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ العِبَادُ فِيهِ، إِلَّا مَلَكَانِ يَنْزِلاَنِ، فَيَقُولُ أَحَدُهُمَا: اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَيَقُولُ الآخَرُ: اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا"
ஒவ்வொரு நாளும் காலை விடியும் பொழுது இரண்டு மலக்குகளை அல்லாஹ் அனுப்புகிறான். ஒரு மலக்கு சொல்கின்றார்,
யா அல்லாஹ்!உன்னுடைய பாதையில் செலவு செய்பவர்களுக்கு நல்ல பகரத்தை, பிரதிபலனை ஏற்படுத்தி தா.
இன்னொரு மலக்கு துஆ செய்கின்றார்கள்,
யா அல்லாஹ்! யார் கொடுக்காமல் தடுத்து கொள்கிறானோ அவனுக்கு நாசத்தை ஏற்படுத்து.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் :1442.
இப்படி மலக்கு துவா செய்கின்றார்கள்,
அல்லாஹ் சொல்கின்றான்,
நீங்கள் ஜகாத் கொடுத்தால் உங்களுடைய செல்வத்தை துன்யாவிலும்ஆஹிரத்திலும் நீங்கள் இரட்டிப்பாக்கி கொள்கின்றீர்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ் உடைய பொருத்தம் கிடைக்கும்.
என்னுடைய பொருத்தத்திற்காக நீ செலவு செய்ததற்காக, இன்று நான் உன்னை பொருந்திக் கொண்டேன். உன்னை கொண்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன் என்று அல்லாஹ் சொல்லுவான். (அல்குர்ஆன்9 : 72)
அந்த நிஃமத்திற்க்கு ஈடாக எதுவும் ஆக முடியாது.
அபூ ஐயூப் அல்அன்சாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கின்றார்கள்,
அல்லாஹ்வுடைய தூதர் இடத்தில் ஒருவர் வருகின்றார், அல்லாஹ்வுடைய தூதரே! சுவர்க்கத்தில் என்னை நுழைக்கக்கூடிய ஒரு அமலைச் சொல்லித் தாருங்கள் என்று கேட்கிறார்.
ஹதீஸின் தொடர் பின்னால் வருகிறது.
(சஹாபாக்கள் உடைய கேள்விகள் எல்லாம் மறுமையை நோக்கி தான் இருக்கும். ஆனால், இன்றைக்கு நம்முடைய மக்கள் தாயத்தை எழுதிக் கொடுங்க ஹஜ்ரத், தகடை எழுதிக் கொடுங்க, ஒரு நல்ல துஆவை சொல்லி கொடுங்க, வியாபாரம் பரக்கத்தாக நடப்பதற்கு என்று கேட்கிறார்கள்.
காரணம், ஷிர்க்கான காரியங்களைக் கொண்டு, பித்அத்தான காரியங்களைக் கொண்டு அல்லாஹ்விடத்தில் பரக்கத்தை தேட பார்க்கின்றார்கள். குர்ஆனை மந்திரமாக மாற்ற நினைக்கின்றார்கள்.
அப்படி இல்லை, அன்பிற்குரியவர்களே,குர்ஆனைக் கொண்டு அமல் செய்யுங்கள், அல்லாஹ் உங்களுக்கு பரக்கத்தை கொடுப்பான்.
குர்ஆனை எடுத்துச்சொல்லுங்கள், அல்லாஹ் உங்களுக்கு பரக்கத்தை கொடுப்பான். குர்ஆனை ஓதி அல்லாஹ்விடம் கேளுங்கள் அல்லாஹ் உங்களுக்குக் பரக்கத்தை கொடுப்பான்.
ஸஹாபாக்கள் கேட்டார்கள்.எனவேதான் ஸஹாபாக்களை பற்றி குர்ஆனில் சொல்லும்பொழுது மறுமையை நாடிய மக்கள் என்று சொல்கிறான், எனது அன்பை நாடிய மக்கள் என்று சொல்கின்றான்.
அவர்களது வாழ்க்கையின் குறிக்கோளே அல்லாஹ்வுடைய பொருத்தம், அல்லாஹ்வுடைய சந்தோஷம், அல்லாஹ்வுடைய மன்னிப்பு என்று சொல்கிறான். (அல்குர்ஆன்48 : 29)
எனவேதான்,குர்ஆனில் சொல்லப்பட்ட கேள்விகளாக இருந்தாலும் சரி, ஹதீஸில் வந்திருக்கக்கூடிய கேள்விகளாக இருந்தாலும் சரி, சஹாபாக்கள் யா ரசூலுல்லாஹ்! நான் சுவர்க்கத்திற்கு போகணும், உங்களோடு நான் இருக்கணும், எனக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்க வேண்டும், அல்லாஹ்வுடைய அன்பு கிடைக்க வேண்டும், அதற்குரிய அமல்களை எனக்கு சொல்லுங்கள் என்று தான் கேட்டிருக்கிறார்கள்.
எங்கேயாவது ஒரு சஹாபி வந்து, யா ரசூலுல்லாஹ் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, எனக்கு ஒரு நல்ல வியாபாரம் சொல்லிக் கொடுங்கள், யா ரசூலுல்லாஹ் எனக்கு வியாபாரம் சரியா நடக்க மாட்டேங்குது, என் வியாபாரத்தில் காசா கொட்டனும், எனக்கு ஏதாவது ஒரு துஆ சொல்லிக் கொடுங்களேன், என்று கேட்டதாக நாம் பார்க்கிறோமா இல்லை. இது முடிவு செய்யப்பட்டது.
ஹலாலான முறையில், சுத்தமான முறையில், இஸ்லாமிய ஷரியத் சட்டங்களை பேணி நீங்கள் செய்யுங்கள், இதற்குண்டான பரக்கத்தை அல்லாஹ் உங்களுக்கு அள்ளி கொடுப்பான், உங்களிடத்தில் வைப்பதற்கு இடமிருக்காது.
ஆனால், இன்று நிறுவையில் மோசடி, அளவையில் மோசடி, பொய் சொல்லி வியாபாரம்,
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا
பொய் சொல்லி வியாபாரம் செய்தால் அந்த வியாபாரத்தின் பரக்கத் அழிக்கப்பட்டுவிடும். பொய் சொல்லி ஒருவன் வாங்குவான், பொய் சொல்லி ஒருவன் விற்கின்றான், இரண்டு பேரும் போய் பேசினார்கள் என்று சொன்னால் இவர்களுடைய பரக்கத் அழிக்கப்பட்டுவிடும், நாசமாக்கப்பட்டு விடும்.
அறிவிப்பாளர் : ஹகீம் இப்னு ஹிஸாம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் :2082.
அதுபோன்று, விருப்பமில்லாமல் நிர்பந்தித்து வாங்குவது, இதனாலும் பரக்கத் அழிந்துவிடும். மேலும், குறைத்துக் கொடுப்பது.
அல்லாஹ் சொல்கின்றான் :
وَيْلٌ لِلْمُطَفِّفِينَ (1) الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ (2) وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ
அளவில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்து கொள்கின்றனர். மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர். (அல்குர்ஆன் 83 : 1-3)
இப்படிப்பட்ட காரணங்களை வைத்துக் கொண்டு, இவர் பள்ளியில் வந்து தொழுது கொண்டு அல்லாஹ்விடத்தில் இவர் துஆ செய்வார்,
யா அல்லாஹ்! என்னுடைய வியாபாரத்தில் பரக்கத்தை கொடு, யா அல்லாஹ்! எனக்கு நோய்நொடி இல்லாத வாழ்க்கையை கொடு என்பதாக, எங்கிருந்து கிடைக்கும்? செய்யக் கூடிய காரியங்கள் எல்லாம் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு உரிய காரியங்கள்.
இன்னும் சில பேர், காஃபிர்களை ஏமாற்றினால் தப்பு கிடையாது, காஃபிர்களுக்கு கொடுக்கக்கூடிய வாக்குறுதிகளுக்கு மாறு செய்தால் தப்பு கிடையாது, பேங்கை ஏமாற்றினால் தப்பு கிடையாது என்று விளங்கி வைத்திருக்கிறார்கள்.
அன்பிற்குரியவர்களே,நாளை மறுமையில் ஒரு அராக் பல் துலக்கும் குச்சியின் அளவாவது நீங்கள் பிறருடைய சொத்தை மோசடி செய்து இருந்தால் அல்லாஹ் நிறுத்தி விடுவான்.
அதற்காக விசாரிக்கப்பட்டு, ஒன்று அந்த உரிமையுடையவர் உங்களை மன்னிக்க வேண்டும், இல்லை என்றால் உங்களுடைய நன்மை அங்கு எடுத்துக் கொடுக்கப்படும். உங்களிடத்தில் நன்மை இல்லை என்றால் அவருடைய பாவம் உங்களது தலையில் வைத்துக் கட்டப்படும். பிறகு முகம் குப்புற நரகில் தூக்கி எறியப்படும்.)
ஹதீஸின் தொடர் :
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்,
«تَعْبُدُ اللَّهَ لاَ تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلاَةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصِلُ الرَّحِمَ، ذَرْهَا»
அல்லாஹ்விற்கு மட்டும் இபாதத் செய், ஷிர்க் செய்துவிடாதே. தொழுகையை நிலை நிறுத்து, ஜகாத் கொடு, உறவினர்களை சேர்த்து வாழுங்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஐயூப் அல்அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் :5983.
أَنَّ أَعْرَابِيًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا عَمِلْتُهُ دَخَلْتُ الجَنَّةَ
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் இன்னொரு கிராமவாசி வந்து கேட்கிறார்கள்,
அல்லாஹ்வின் தூதரே! சுவர்க்கத்திற்கு செல்லக்கூடிய ஒரு அமலை எனக்கு சொல்லுங்கள்,
அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் அதே பதிலை சொல்கின்றார்கள்,
«تَعْبُدُ اللَّهَ لاَ تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلاَةَ المَكْتُوبَةَ، وَتُؤَدِّي الزَّكَاةَ المَفْرُوضَةَ، وَتَصُومُ رَمَضَانَ»
அல்லாஹ்விற்கு இபாதத்தை செய், இணை வைக்காதே, கடமையான தொழுகைகளை முறையாக நிறைவேற்று, கடமையாக்கப்பட்ட ஜகாத்தை கொடு, ரமலான் மாதத்தில் நோன்பு வைத்துக்கொள்.
அந்த சஹாபிசொன்னார்கள்;
وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ أَزِيدُ عَلَى هَذَا
என் உயிர் யார் கைவசம் இருக்கின்றதோ, அவன் மீது சத்தியமாக, நான் இதை விடவே மாட்டேன். இதை அதிகப்படுத்தவும் மாட்டேன். சரியாக இதை நான் செய்வேன் என்பதாகஅவர் சொல்லிட்டு திரும்ப செல்கிறார்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருக்குச் சொல்லக்கூடிய நற்செய்தியைப் பாருங்கள்,
«مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ الجَنَّةِ، فَلْيَنْظُرْ إِلَى هَذَا»
சொர்க்கத்தில் நுழையக்கூடிய ஒரு மனிதரை பார்க்க வேண்டுமா? இவரை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் :1397.
சஹாபாக்கள், இந்த பூமியில் நடமாடும் பொழுது சுவர்க்கம் வாக்களிக்கப்பட்ட மக்கள், சுவர்க்கத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட மக்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் இன்னொரு மனிதர் பனூ தமீம் கிளையைச் சேர்ந்தவர் வருகின்றார்,
யா ரசூலுல்லாஹ்! என்னிடத்தில் அதிகமாக செல்வம் இருக்கின்றது, எனக்கு குடும்பம் நிறைய இருக்கின்றது, எனக்கு அல்லாஹ் பெரிய வசதியை கொடுத்திருக்கின்றான்.
நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? நான் எப்படி செலவு செய்யவேண்டும் என்பதை எனக்குச் சொல்லித் தாருங்கள்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
«تُخْرِجُ الزَّكَاةَ مِنْ مَالِكَ، فَإِنَّهَا طُهْرَةٌ تُطَهِّرُكَ، وَتَصِلُ أَقْرِبَاءَكَ، وَتَعْرِفُ حَقَّ السَّائِلِ، وَالْجَارِ، وَالْمِسْكِينِ»
உனது செல்வத்திலிருந்து ஜகாத்தை நீ கொடுத்துவிடு. அது ஒரு சுத்தப்படுத்தக்கூடிய கருவி, அது உன்னை முழுமையாக சுத்தப்படுத்தி விடும்.உன்னுடைய உறவினர்களை நீ சேர்த்துக்கொள். ஏழை, அண்டை வீட்டுக்காரர், யாசித்து வருபவர்களின் உரிமைகளை அவர்களுக்குரிய கடமைகளை அறிந்து கொள்.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் :12394.
அல்லாஹ் நமக்கு செல்வம் கொடுத்திருக்கின்றான் என்று சொன்னால் அந்த செல்வம் நான் மட்டும் அனுபவிப்பதற்காக அல்ல, அந்த செல்வத்தை கொண்டு ஏழைகளை சந்தோஷப் படுத்துவதற்காக, எத்திம்களை ஆதரிப்பதற்காக, அனாதைகளை ஆதரிப்பதற்காக.
தங்களிடத்தில் செல்வங்களை வைத்துக்கொண்டு கஞ்சத்தனத்தை காட்டக்கூடிய மக்கள் சிந்தித்து பார்க்கவேண்டும், தங்களுடைய கைகளை இறுக்கிக் கொண்டு அல்லாஹ்வுடைய அடியார்களின் மீது செலவு செய்யாத மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவியர்களில் ஒருவர் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹா,
இவர்கள் யார் தெரியுமா? அல்லாஹ்வால் ரசூலுல்லாஹ்விற்கு மணமுடித்து வைக்கப்பட்ட சஹாபி பெண்மணி.
அர்ஷிலிருந்து அல்லாஹ் இந்த பெண்ணை ரசூலுல்லாஹ்விற்கு மணம் முடித்து வைத்தான்.அவ்வளவு பெரிய சிறப்பிற்குரிய பெண்மணி.
இவர்களுடைய பழக்கம் என்னவென்றால், அபூபக்ர், உமர் அவர்களிடமிருந்து செல்வங்கள் வந்து கொண்டே இருக்கும், தாம்பாலங்கள்தாம்பலங்களாக, சாக்கு மூட்டையாக அப்படியே அன்றைக்குள்ளே தங்களுடைய உறவினர்களுக்கு, மதினாவில் உள்ள முஜாஹித்களுடைய எத்திம்க்களுக்கு, முஹாஜிர்கள் உடைய எத்திம்க்களுக்கு, ஏழைகளுக்குஎன எல்லாருக்கும் பங்கு வைத்துக் கொடுத்து விடுவார்கள்.
கொடுத்தது போக ஒன்றும் வீட்டில் மிச்சம் இருக்காது. எதுவும் இருக்காது. அவங்க வீட்டுல அடுத்த நாள் என்ன செய்வாங்க என்றால் செல்வ நிலையில் உள்ள அன்சாரி பெண்களுடைய வீட்டுக்கு சென்று வீட்டு வேலை செய்வார்கள்.
ஒரு நபியுடைய மனைவிவீட்டு வேலை செய்வார்கள்.
ஏன்?அல்லாஹ்வுடைய பாதையில் ஏழை எளியவர்களை அனுசரிக்கும் பொழுது, அவர்களுக்கு வாரி வழங்கி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் பொழுது, அல்லாஹ் கொடுக்கக்கூடிய அந்த சன்மானத்தை விளங்கி வைத்திருந்ததால் தான்.
தன்னிடத்தில் செல்வம் இருக்கும் பொழுதும் அதையும் கொடுத்தார்கள். தன்னிடத்தில் செல்வமெல்லாம் கொடுக்கப்பட்டதற்குப்பிறகு தன்னுடைய கரத்தால் வேலை செய்து, அதையும் கொடுத்தார்கள்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கின்றார்கள்,
தர்மத்தில் சிறந்த தர்மம், உன்னுடைய கரத்தால் கஷ்டப்பட்டு சம்பாதித்தற்குப் பிறகு அதில் ஒரு பகுதியை தர்மம் செய்வது சிறந்த தர்மம்.
இப்படிப்பட்ட தரத்தை நாம் அடையவேண்டும்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு இந்த செல்வத்தை கொடுத்திருக்கின்றான் என்று சொன்னால் அந்த செல்வத்தைக் கொண்டு அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடக் கூடிய மக்களாக நாம் ஆகவேண்டும். அல்லாஹ் அதற்கு அருள் புரிவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
6925 - قَالَ أَبُو بَكْرٍ: وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلاَةِ وَالزَّكَاةِ، فَإِنَّ الزَّكَاةَ حَقُّ المَالِ، وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا قَالَ عُمَرُ: «فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُ أَنْ قَدْ شَرَحَ اللَّهُ صَدْرَ أَبِي بَكْرٍ لِلْقِتَالِ، فَعَرَفْتُ أَنَّهُ الحَقُّ»
குறிப்பு 2)
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي أَبُو عُبَيْدٍ، مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَنْ يُدْخِلَ أَحَدًا عَمَلُهُ الجَنَّةَ» قَالُوا: وَلاَ أَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: " لاَ، وَلاَ أَنَا، إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِفَضْلٍ وَرَحْمَةٍ، فَسَدِّدُوا وَقَارِبُوا، وَلاَ يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ المَوْتَ: إِمَّا مُحْسِنًا فَلَعَلَّهُ أَنْ يَزْدَادَ خَيْرًا، وَإِمَّا مُسِيئًا فَلَعَلَّهُ أَنْ يَسْتَعْتِبَ " (صحيح البخاري- 5673)
குறிப்பு 3)
حَدَّثَنَا بَدَلُ بْنُ المُحَبَّرِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا الخَلِيلِ، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الحَارِثِ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " البَيِّعَانِ بِالخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، - أَوْ قَالَ: حَتَّى يَتَفَرَّقَا - فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا " (صحيح البخاري- 2082)
குறிப்பு 4)
حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَالَ: أَتَى رَجُلٌ مِنْ بَنِي تَمِيمٍ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي ذُو مَالٍ كَثِيرٍ، وَذُو أَهْلٍ وَوَلَدٍ، وَحَاضِرَةٍ، فَأَخْبِرْنِي كَيْفَ أُنْفِقُ؟ وَكَيْفَ أَصْنَعُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تُخْرِجُ الزَّكَاةَ مِنْ مَالِكَ، فَإِنَّهَا طُهْرَةٌ تُطَهِّرُكَ، وَتَصِلُ أَقْرِبَاءَكَ، وَتَعْرِفُ حَقَّ السَّائِلِ، وَالْجَارِ، وَالْمِسْكِينِ» ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَقْلِلْ لِي، قَالَ: «فَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ، وَالْمِسْكِينَ، وَابْنَ السَّبِيلِ، وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا» فَقَالَ: حَسْبِي يَا رَسُولَ اللَّهِ، إِذَا أَدَّيْتُ الزَّكَاةَ إِلَى رَسُولِكَ، فَقَدْ بَرِئْتُ مِنْهَا إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ، إِذَا أَدَّيْتَهَا إِلَى رَسُولِي، فَقَدْ بَرِئْتَ مِنْهَا، فَلَكَ أَجْرُهَا، وَإِثْمُهَا عَلَى مَنْ بَدَّلَهَا» (مسند أحمد- 12394)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/