HOME      Khutba      மது பாவங்களின் தாய் | Tamil Bayan - 48   
 

மது பாவங்களின் தாய் | Tamil Bayan - 48

           

மது பாவங்களின் தாய் | Tamil Bayan - 48


மது பாவங்களின் தாய்

ஜுமுஆ குத்பா தலைப்பு : மது பாவங்களின் தாய்

வரிசை : 48

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

இவ்வுலக வாழ்க்கை ஒரு குறுகிய கால வாழ்க்கை.நம்மில் ஒவ்வொருவரும் மரணத்தை எதிர்நோக்கி இருக்கின்றோம்.எந்த நேரத்தில் நமக்கு மரணம் வரும் என்று யாரும் சொல்லமுடியாது.

நம்மில் சிலர்,ஐந்து வயதில் இறந்து விடுகின்றார்கள்.சிலர், 25வயதில் இறந்து விடுகின்றார்கள்.சிலர், 50வயதில் இறந்து விடுகின்றார்கள்.சிலர்,நேற்று இறந்தார்கள்.சிலர், இன்று இறப்பார்கள். சிலர்,நாளை இறப்பார்கள். ஆனால்,மரணம் என்பது நிச்சயமாக நம்மை சந்திக்க கூடிய ஒன்று.

நம்முடைய இவ்வுலக வாழ்க்கையில் அல்லாஹ் தடுத்த காரியங்களை விட்டு பாவங்களை விட்டு நாம் நம்மை பாதுகாத்துக் கொண்டால் நாளை மறுமையில் இன்பமான வாழ்க்கையை அல்லாஹ் நமக்கு நிச்சயமாக கொடுப்பான்.

இந்த உலக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்.இதில் நாம் நமது இச்சைகளை எல்லாம் பூர்த்தி செய்யவேண்டுமென்று முயற்சி செய்தால் நாளை மறுமையில் அல்லாஹ்வுடைய அருளை அடைய முடியாது. நாளை மறுமையில் இன்பத்தை அடைய முடியாது.

அல்லாஹ் தடுத்த பாவமான காரியங்களை விட்டு விலகுவது நம்மில் ஒவ்வொருவரின் மீதும் கட்டாய கடமை. எப்படி தொழுகை கடமையோ நோன்பு கடமையோ ஹஜ் கடமையோ ஜகாத் கடமையோ அதுபோன்று பாவமான காரியத்தை விட்டு விலகுவது நம் மீது கடமை.

குறிப்பாக,எந்த பாவங்களை அல்லாஹ்,அவனுடைய அல்குர்ஆன் புத்தகத்தில் வன்மையாக நரக வேதனையைக் கொண்டு கண்டிக்கிறனோ அவனுடைய தூதர் அவர்கள் எந்த பாவங்களை கடுமையாக எச்சரிக்கை செய்து கண்டிக்கின்றார்களோ அவை அனைத்தும் பெரும் பாவங்கள் என்ற பட்டியலில் இடம் பெறுகின்றன.

ஒரு முஸ்லிம்,பெரும் பாவங்களை விட்டு தன்னை எப்போதும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.அவனது வாழ்க்கையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மன இச்சைக்கு அடிமையாகி ஷைத்தானின் ஊசலாட்டங்களுக்கு அடிமையாகி அவன் ஒரு பெரும் பாவம் செய்து விட்டாலும் உடனடியாக தவ்பா செய்து பாவமன்னிப்பின் பக்கம் ஓடி வர வேண்டும்.அல்லாஹ்விடத்தில் மன்றாட வேண்டும்.அழவேண்டும்.

யா அல்லாஹ்!என்னை மன்னித்துவிடு.என்னை அறியாமல் இச்சைக்கு அடிமையாகி ஷைத்தானின் ஊசலாட்டங்களுக்கு அடிமையாகி நான் தவறு செய்துவிட்டேன். நீ என்னை மன்னிக்க வில்லை என்றால் எனக்கு வேறு மன்னிப்பாளர் யார் இருக்கிறார்?!

என்னை மன்னித்துவிடு! என்று அல்லாஹ்விடத்தில் கண்ணீர் சிந்தும்போது, அல்லாஹ் மன்னிக்கின்றான். அவனுக்கு அன்பை தருகின்றான். அவனுக்கு அவனுடைய அருளை தருகின்றான். அவனை தன்னுடைய கருணைக்கு நெருக்கமாக்கி கொள்கின்றான்.

யார் தவ்பா செய்யாமல் பாவத்தில் நிரந்தரமாக இருந்து விடுகின்றார்களோ நாளை மறுமையில் இவர்களுடைய முடிவு அல்லாஹ்வுடைய கையில் இருக்கின்றது. அல்லாஹ் நாடினால் தண்டனை இல்லாமலும் மன்னிக்கலாம்.

ஆனால், அவனை தண்டனை செய்ய அல்லாஹ் நாடி விட்டால், அவனை தடுப்பவர் யாரும் இருக்க மாட்டார். அவனுக்கு உதவுபவர் யாரும் இருக்க மாட்டார். அவனுக்கு கருணை காட்டுபவர் யாரும் இருக்க மாட்டார். அவனுக்கு பரிந்து பேசுபவர் யாரும் இருக்கமாட்டார்கள்.

அத்தகைய பெரும்பாவங்களில் ஒன்று தான் சென்ற ஜும்ஆவில் நாம் பார்த்தோம். மது அருந்துவது,எவ்வளவு கொடிய குற்றம் அல்லாஹ் அதை எப்படி அவனுடைய புத்தகத்தில் தடை செய்திருக்கிறான்.

அதை தொடர்ந்து இது குறித்த பல விஷயங்களை நாம் பார்க்க இருக்கிறோம்.

இன்று, மதுவைப் பற்றி நமது முஸ்லிம் சமுதாயத்திற்கு மத்தியில் ஒரு சரியான விழிப்புணர்வு இருக்கின்றதா? இந்தப் பாவம் எத்தகைய கொடூரமான பாவம் என்பதை அறிந்து வைத்திருக்கின்றார்களா?

என்று சொன்னால், அல்லாஹ்வுடைய இந்த மஸ்ஜித்திற்க்கு வந்து தொழுகையை அழகிய முறையில் தொழக்கூடிய, நல்ல சூழ்நிலையில் வாழக்கூடிய சிலரை தவிர, பெரும்பாலானவர்கள் இந்த மதுவைப் பற்றி இது தடை செய்யப்பட்ட ஒரு பாவம். அது மட்டுமல்ல பாவங்களுக்கெல்லாம் இது ஒரு தாய் பாவம்.

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் எந்த பாவங்களையும் பாவத்தை செய்பவர்களையும் சபிக்கின்றார்களோ அத்தகைய பாவங்களில் உள்ளது இது என்பதை அறியாமல் தான் இருக்கின்றார்கள்.

ஆகவேதான், ஆங்காங்கே பத்திரிக்கைகளில் நாம் பார்க்கின்றோம்; இந்த முஸ்லிம் மது அருந்துகிறார். இந்த முஸ்லிம் மது கடை நடத்துகிறார் இந்த இடத்தில் இருக்கின்ற முஸ்லிம்கள் எல்லாம் சர்வசாதாரணமாக குடி பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

காரணம், இந்த மதுவைப் பற்றிய சரியான விழிப்புணர்வு, இது எவ்வளவு பெரிய குற்றம் என்பதைப் பற்றி அவர்களுக்கு உணர்த்தப் படாதது தான் அவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படாதது தான் காரணம்.

இன்று, நம்முடைய மார்க்கத்தில் நாம் எத்தகைய உணர்வு உடையவர்களாக ரோஷம் உடையவர்களாக இருக்கின்றோம் என்று யோசித்துப் பாருங்கள்

முஸ்லிம்களில் ஒரு கூட்டம் மது அருந்துகிறார்கள் என்று சொன்னால் யார் பொறுப்பாளி? இந்த முஸ்லிம் சமுதாயத்தில் மார்க்கத்தை தெரிந்தவர்கள் நமக்கு நம்முடைய உடைமையில் அத்து மீறும் போது ஏற்படக்கூடிய ரோஷ உணர்வு கோபம் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் எல்லை மீறும் போது நமக்கு ஏற்படுகின்றதா?

ஒரு முஸ்லீம் பாவத்தை செய்யும் பொழுது நமக்கு ரோசம் ஏற்படுகின்றதா?கோபம் ஏற்படுகின்றதா?அந்த முஸ்லிமை திருத்துவோம், தடுப்போம் என்ற உணர்வு நமக்கு ஏற்படுகின்றதா?

நம்மில் பலர், நமக்கென்ன வேலை, நாம் நமது வேலையை பார்த்துக் கொண்டு செல்வோம். அது அவரவர் பாடு என்பதாக சென்று கொண்டிருக்கின்றார்கள்.

அவர் மீது எப்படி குற்றமோ அதைப் போன்று அவரை அந்தப் பாவத்திலிருந்து தடுக்காத குற்றமும், அதைப் பார்த்து வாய் மூடி செல்பவர்களுக்கு நிச்சயமாக உண்டு.

நபி இந்த மதுவை ஹராம் என்று தடை செய்யும் பொழுது மிகவும் தெளிவாக தடை செய்தார்கள். அதிகமாக குடித்தாலும் சரி, குறைவாக சுவைத்துப் பார்த்தாலும் சரி, மது என்பது இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்று.

இதற்கு அரபியில் கமர்(خمر)என்று சொல்வார்கள். கமர்,(خامر)காமிர் என்று சொன்னால் புத்தியை மாற்றக்கூடிய ஒன்று புத்தியை பேதலிக்க வைக்கக்கூடிய ஒரு பொருள்.

இதிலிருந்து நமது தூதர் அவர்கள் அழகான சட்டத்தை சொல்லி இருக்கிறார்கள் :

كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ

எந்த ஒரு பானம் போதையை ஏற்படுத்துகின்றதோ,மயக்கத்தை ஏற்படுத்துகிறதோ,அது தடை செய்யப்பட்ட ஒரு பாவமாகும்,குற்றமாகும்.

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் :5586, நூல் : முஸ்லிம், எண் :2001.

அது மக்களுக்கு மத்தியில் எந்தப் பெயரைக் கொண்டு அறியப்பட்டாலும் சரியே, மக்கள் அதை எந்தப் பெயரைக் கொண்டு அழைத்தாலும் சரியே, அந்த பானத்தில் போதை இருக்குமேயானால் அந்த பானத்தால் ஒருவனுக்கு மயக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று சொன்னால் அது ஹராம். இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்று.

நபி அவர்களுடைய காலத்தில் நடந்த நிகழ்ச்சி,அபு மூசா அல் அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் :

بَعَثَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَمُعَاذَ بْنَ جَبَلٍ إِلَى الْيَمَنِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ شَرَابًا يُصْنَعُ بِأَرْضِنَا يُقَالُ لَهُ الْمِزْرُ مِنْ الشَّعِيرِ وَشَرَابٌ يُقَالُ لَهُ الْبِتْعُ مِنْ الْعَسَلِ فَقَالَ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ

அல்லாஹ்வின் தூதர் என்னையும் முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும் எமன் நாட்டுக்கு, அங்குள்ள மக்களை நிர்வகிப்பதற்காக, ஆளுநர்களாக அங்குள்ள ஜகாத்துக்களை வசூலிப்பதற்காக அங்குள்ள மக்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக அனுப்பினார்கள்.

அப்பொழுது அபூ மூசா அல் அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு நபி அவர்களிடத்தில் கேட்கின்றார்கள்; அல்லாஹ்வின் தூதரே! எங்களுடைய நாட்டில் பார்லியிருந்து குடிப்பதற்காக ஒரு பானம் தயார் செய்யப்படுகிறது.

அந்த பானத்திற்கு பெயர் “அல்மிஸ்ர்”ஆகும். அதுபோன்று தேனிலிருந்து ஒரு வகையான பானம் தயார் செய்யப்படுகிறது. அதற்கு பெயர் “அல்மித்ர்”. இதை நாங்கள் குடிக்கலாமா? என்று கேட்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் இந்த இடத்தில் ஒரு அழகிய சுருக்கமான பதிலை சொல்கின்றார்கள்

كُلُّ مُسْكِرٍ حَرَامٌ

எது போதையை ஏற்படுத்துமோ,எது மனிதனுக்கு மயக்கத்தை ஏற்படுத்துமோ,அவை அனைத்தும் தடைசெய்யப்பட்ட ஒன்று.

அறிவிப்பாளர் : அபூ மூசா அல் அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் :3729.

இதை வைத்து நீங்கள் புரிந்து கொள்ளலாம். உங்களுடைய பானங்கள் எதுவாக இருந்தாலும், அது உங்களுக்கு போதையை ஏற்படுத்தினால் அது தடை செய்யப்பட்ட மது என்ற சட்டத்திற்குள் அடங்கிவிடும்.

இதிலிருந்து நமக்கு தெளிவாக தெரியவருகிறது, காலம் மாறி மக்கள் மதுவிற்கு எத்தனை பெயர்களை மாற்றிக் கொண்டிருந்தாலும் சரி, அவர்கள் பெயர்களை மாற்றுவதால் அந்த பானம் அவர்களுக்கு ஹலால் ஆகிவிடாது.

அது போதையை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தால் நிச்சயமாக தடைசெய்யப்பட்ட ஒரு பெரும் பாவம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எந்த அளவிற்கு மது ஹராம்? முழுமையாக மதுவை குடித்து மயக்கம் வரும் வரை அதில் இருப்பது தான் ஹராமா? என்று சொன்னால் அதையும் நபி அவர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள்:

مَا أَسْكَرَ كَثِيرُهُ فَقَلِيلُهُ حَرَامٌ

ஒரு பானம் இருக்கின்றது. அதை அதிகம் குடித்தால் தான் போதை ஏற்படுகிறது என்று இருக்குமேயானால் அதில் குறைவான அளவை குடிப்பதும் ஹராம் தான்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் :6271.

சிலர் சொல்கிறார்கள்;எங்களுக்கு இதில் போதை வருவது கிடையாது என்று. சிலர், பான்பராக் சாப்பிடுகிறார்கள்.சிலர், புகையிலை சாப்பிடுகிறார்கள்.இன்னும் மயக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பாக்கு போன்ற வஸ்துக்களை எல்லாம் சாப்பிடுகின்றார்கள்.

இதை நாங்கள் ஓரளவிற்குத் தான் எடுக்கின்றோம். போதை ஏற்பட்டு நிலை தடுமாறும் அளவிற்கு இதை நாங்கள் உண்பது கிடையாது என்று சொல்கின்றார்கள்.

எதனுடைய அதிகம் மயக்கத்தை ஏற்படுத்துமோ அதனுடைய குறைவான அளவும் இந்த மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஹராம் ஆகும்.

மதுவிற்கு என்னென்ன தண்டனைகளையும் சாபங்களையும் என்னென்ன எச்சரிக்கைகளையும் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் அவர்களும் சொல்லியிருக்கின்றார்களோ அவை அனைத்தும் அந்த சிறிய அளவிற்கும் பொருந்தும்.

ஒருவர் மதுவையோ அல்லது மது போன்ற போதை ஏற்படுத்தக்கூடிய ஒன்றையோ உட்கொண்டால் அவர் எந்த அளவு உட்கொண்டாலும் சரி,அதனுடைய அளவை பற்றி இங்கு பிரச்சினை கிடையாது.

நபி அவர்கள் கூறியது என்ன? எதில் அதிகமாக பயன்படுத்தும் போது அதில் போதை ஏற்படுமோ அதை குறைவாக பயன்படுத்தினாலும் சரி, அது தடுக்கப்பட்ட பாவம் தான்.

இதிலிருந்து நம்முடைய முஸ்லிம்கள் செய்யக்கூடிய பல தவறுகளை நாம் தெரிந்து கொள்ளலாம். அவர்கள் பல பானங்களை குடிக்கின்றார்கள்.நாங்கள் ஓரளவிற்குத் தான் குடிக்கின்றோம்.எங்களுக்கு இதில் குடிப்பது மூலமாக போதை ஏற்படுவது கிடையாது .

இதை நாங்கள் ஒரு சாதாரணமாக உற்சாகத்திற்க்காக தான் குடிக்கின்றோம். இதற்கு அந்தப் பெயர் கிடையாது, இந்த பெயர் கிடையாது என்பதாக, அல்லாஹ்வை ஏமாற்ற நினைத்து, மார்க்கத்தை ஏமாற்ற நினைத்து அவர்கள் குடிக்கின்றார்கள்.

அவர்கள் தங்களைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் நஃப்ஸுக்கு சொல்லக்கூடிய ஆறுதல்கள் எல்லாம் இந்த மார்க்கத்தை தடைசெய்யப்பட்ட ஒன்று, அனுமதிக்கப்பட்டதாக ஆகிவிட முடியாது.

நபி அவர்களுடைய இந்த தெளிவான தீர்ப்பிற்கு பிறகு மறு ஒரு விளக்கம் தேவை கிடையாது.

போதை ஏற்படுத்தக்கூடிய மயக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டது என்பதாக சொல்லிவிட்டார்கள்.

அது எந்த பொருளாக இருந்தாலும் சரி, குடிக்கக்கூடிய பொருளாக இருந்தாலும் சரி, சாப்பிடக் கூடிய பொருளாக இருந்தாலும் சரி, எந்த வகையில் பயன்படுத்துவதன் மூலமாக நமக்கு மயக்கத்தை போதையை ஏற்படுத்துவதாக சொன்னால் அவை அனைத்தும் தடை செய்யப்பட்ட பாவமாகும்.

இந்த மதுவின் மூலமாக எத்தகைய ஒரு குற்றத்தை ஒரு முஸ்லிம் செய்கிறான் என்று சொன்னால் அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் சொல்கிறார்கள்.

أَنَّ رَجُلًا قَدِمَ مِنْ جَيْشَانَ وَجَيْشَانُ مِنْ الْيَمَنِ فَسَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَرَابٍ يَشْرَبُونَهُ بِأَرْضِهِمْ مِنْ الذُّرَةِ يُقَالُ لَهُ الْمِزْرُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَ مُسْكِرٌ هُوَ قَالَ نَعَمْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ إِنَّ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ عَهْدًا لِمَنْ يَشْرَبُ الْمُسْكِرَ أَنْ يَسْقِيَهُ مِنْ طِينَةِ الْخَبَالِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا طِينَةُ الْخَبَالِ قَالَ عَرَقُ أَهْلِ النَّارِ أَوْ عُصَارَةُ أَهْلِ النَّارِ

ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த ஹதீஸை அறிவிக்கின்றார்கள்,

எமன் நாட்டில் உள்ள ஜெய்ஷான் என்ற ஊரிலிருந்து ஒருவர் நபி அவர்களிடத்தில் வருகிறார். அவர்களுடைய நாட்டில் சோளத்திலிருந்து செய்யப்படும் ஒரு பானத்தை பற்றி விபரம் கேட்கிறார். அதை குடிக்கலாமா?என்று.

அப்பொழுது நபி அவர்கள் அது போதை தருமா?என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தத் தோழர்,ஆம். அல்லாஹ்வுடைய தூதரே! என்றார்.

நபி அவர்கள் சொன்னார்கள்: போதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் -தடுக்கப்பட்ட பெரும்பாவம் ஆகும்.

அடுத்து சொன்னார்கள்: அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்மீது வாக்குறுதியை கடமையாக்கிக் கொண்டான்.

யார் மதுவை குடிக்கிறார்களோ,யார் போதை தரக்கூடியதை சாப்பிடுகிறார்களோ,கண்ணியத்திற்கும் மதிப்பிற்குரிய அல்லாஹ் தன் மீது இந்த ஒப்பந்தத்தை கடமையாக்கிக் கொண்டான்.

போதை ஏற்படுத்தக் கூடியதை இந்த இடத்தில் நபி அவர்கள் மது என்று குறிப்பான வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.

மாறாக போதை ஏற்படுத்தக் கூடியது, மயக்கத்தை ஏற்படுத்தக்கூடியது, அறிவை பேதலிக்க வைக்கக் கூடியது என்ற பொதுவான வார்த்தையை சொல்கின்றார்கள்.

அதிலிருந்து நாம் விளங்கிக்கொள்ளலாம்;இந்த அர்த்தத்திற்குள் கட்டுப்படக்கூடிய உணவாகயிருந்தாலும் சரி, பானமாகயிருந்தாலும் சரி, இன்னும் வேறு பிற காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டாலும் சரி, மனிதனுக்கு மயக்கத்தை ஏற்படுத்தக்கூடியதை யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் நாளை மறுமையில்,

طِينَةِ الْخَبَالِ– தீனத்துல் கபால் என்ற பானத்தை குடிக்க வைப்பான்.

இந்த வார்த்தை மார்க்கத்தைப் பொறுத்தவரை புதுமையாக இருந்த காரணத்தால் சஹாபாக்கள் விளக்கம் கேட்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! நாளை மறுமையில் மது அருந்தியவர்களுக்கு தீனத்துல் கபால் என்ற பானத்தை அல்லாஹ் குடிக்கக் கொடுப்பான் என்று சொல்லுகிறீர்களே! அந்த பானம் என்ன? என்று கேட்கும் பொழுது நபி அவர்கள் சொல்கிறார்கள்:

நரகவாதிகள் நரக நெருப்பில் வேகும் பொழுது, அவர்கள் அந்த நெருப்பில் எரியும் பொழுது அவர்களுடைய உடலில் ஏற்படக்கூடிய காயத்தால், உடலில் ஏற்படக்கூடிய சரங்குகளால், உடலில் ஏற்படக்கூடிய அந்த தீப்புண்கள் வழிந்து ஓடக்கூடியசீல்சலங்கள், அந்த நரகவாதிகளுடைய உடம்பிலிருந்து ஓடக்கூடிய வேர்வைகள், இவை அனைத்தும் கொதிக்க வைக்கப்பட்டு அந்த மதுவை அருந்தியவருக்கு, போதையை அருந்தியவருக்குகொடுக்கப்படும் என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 3732.

எப்படிப்பட்ட வேதனை!சாதாரண வேதனையா? தாங்கிக் கொள்ள முடியுமா? ஒரு கசப்பான பானத்தை இந்த உலகத்தில் நம்மால் குடிக்க முடிகின்றதா? ஒரு சில மிடருகளை குடிக்க முடிகின்றதா?

சூடான ஒரு குடி பானத்தை,சூடான ஒரு சில உணவுகளை நம்மால் எடுத்து சாப்பிட முடிகின்றதா? நெஞ்சு எரிந்து விடுகின்றது. நாவு சுட்டு விடுகின்றது. அடுத்து சில மணி நேரத்திற்கு உணவு உட்கொள்ள முடியாமல் வாயெல்லாம் வெந்து புண்ணாகி விடுகின்றது.

இது எவ்வளவு பெரிய கொடுமையான வேதனையாக இருக்கும். நரகவாதிகள் நரக நெருப்பில் கொழுந்து விட்டு எரியக் கூடிய நெருப்பில் எரிந்து கொண்டிருப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள் :

كُلُّ مُسْكِرٍ خَمْرٌ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ وَمَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا فَمَاتَ وَهُوَ يُدْمِنُهَا لَمْ يَتُبْ لَمْ يَشْرَبْهَا فِي الْآخِرَةِ

போதை தரக்கூடிய அனைத்தும் மது தான். போதை தரக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்ட ஒரு பாவம்தான்.யார் மதுவை அருந்தி கொண்டே இருக்கிறார்களோ அதிலிருந்து தவ்பா செய்யாமல் அதை தொடர்ந்து குடித்துக் கொண்டே இருக்கிறார். அதே நிலையில் அவன் மரணித்தும் விடுகிறான். மறுமையின் மதுவை அவன் குடிக்க முடியாது.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 3733.

உங்களுக்கு தெரியும்;சொர்க்கத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நல்லோர்களுக்காக படைத்து வைத்திருக்கக் கூடிய சுவன இன்பங்களில் ஒன்று,மது ஆறு .

அந்த மதுவில் போதை இருக்காது.அந்த மதுவினில் மயக்கம் இருக்காது. அந்த மதுவை குடிப்பதின் மூலமாக தலைவலி வராது. வாந்தி வராது. எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கிறான் :

طُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ (17) بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِنْ مَعِينٍ (18) لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنْزِفُونَ

என்றென்றுமே குழந்தைகளாக இருக்கக்கூடிய சிறுவர்கள் (பணி செய்ய எந்நேரமும்) இவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்; இன்பமான குடிபானம் நிறைந்த குவளைகளையும், கெண்டிகளையும், கிண்ணங்களையும் தூக்கிக்கொண்டு (அவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்). (அக்குடிபானங்களால்) இவர்களுக்குத் தலைவலியும் ஏற்படாது; அவர்களுடைய புத்தியும் மாறாது. (அல்குர்ஆன்56:18,19)

உலகத்தினுடைய மதுவினில் அதை குடிப்பவர்களை பார்க்கின்றோம்; மயக்கமுற்று விழுகிறார்கள். அவர்களுக்கு நோய் நொடி ஏற்படுகின்றன. அதிகம் குடிக்கும் போது வாந்தி எடுக்கின்றார்கள். அசிங்கத்தினில் அவர்கள் உளறுகிறார்கள்.

ஆனால், நாளை மறுமையில் சொர்க்கத்திற்கு செல்லும் போது, யார், இந்த உலகத்தில் அதை குடிக்காமல் தனது நாவைப் பாதுகாத்துக் கொண்டார்களோ, தனது வாழ்க்கையை பாதுகாத்துக் கொண்டார்களோ அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் அச்சிறுவர்களின் மூலமாக மதுபானத்தை குடிக்கக் கொடுக்கும் பொழுது அவர்கள் குடித்துக் கொண்டே இருப்பார்கள்.

மயக்கமுற மாட்டார்கள். அவர்களுக்கு தலைவலி, வாந்தி வராது.

இந்த ஹதீஸ் ஸஹீஹுல் புகாரியின் இன்னொரு அறிவிப்பில் வருகிறது;

مَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا ثُمَّ لَمْ يَتُبْ مِنْهَا حُرِمَهَا فِي الْآخِرَةِ

யார், இந்த உலகத்தில் மதுவை குடித்து விட்டு தவ்பா செய்யாமல் இறந்து விடுகின்றானோ நாளை மறுமையில் அவனுக்கு அது கிடைக்காது. அது அவனுக்கு புகட்டப்படாது.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5147.

இந்த ஹதீஸுக்கு மார்க்க அறிஞர் இமாம் தஹபி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் விளக்கம் சொல்கின்றார்கள்.

நாளை மறுமையில் சொர்க்கவாசிகளுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மதுவை கொடுப்பான். யார் இந்த உலகத்தில் அதை குடித்து விட்டார்களோ அவர்கள் மறுமையில் குடிக்க மாட்டார்கள் என்பதற்கு பொருள், அவர்கள் சொர்க்கத்திற்குள் செல்லமாட்டார்கள்.

இந்த பாவத்திற்காக வேண்டி அவர்கள் கட்டாயமாக தண்டனையை அனுபவித்தாக வேண்டும் .

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சில பெரும் பாவங்களை மன்னித்து விடுகிறான். சில பெரும் பாவங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தண்டனைக்குப் பிறகு மன்னிக்கின்றான் .

காரணம் என்னவென்று சொன்னால்,நபி (ஸல்) அவர்கள் கூறிய முதலாவதாக ஹதீஸில் நாம் பார்த்தோம்; அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தம்மீது ஒப்பந்தம் செய்து கொண்டான் என்று.

அல்லாஹ்வுடைய வளமைகளில் ஒன்று தான், செய்த ஒப்பந்தத்திற்கு அவன் மாற்றம் செய்ய மாட்டான். தன் மீது கடமையாக்கிக் கொண்ட வாக்குறுதிக்கு அவன் மாறு செய்ய மாட்டான்.

அவன் செய்த எச்சரிக்கைகளில் எதை வேண்டுமானாலும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் விட்டுவிடலாம்.

இந்த ஹதீஸில் எத்தகைய வாசகம் பயன்படுத்தப்படுகிறது என சொன்னால், அல்லாஹ் தன் மீது வாக்குறுதியை கடமையாக்கிக் கொண்டான்.ஒப்பந்தத்தை கடமையாக்கிக் கொண்டான்

அல்லாஹ் கேட்கின்றான் :

قُلْ أَتَّخَذْتُمْ عِنْدَ اللَّهِ عَهْدًا فَلَنْ يُخْلِفَ اللَّهُ عَهْدَهُ أَمْ تَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ

(அதற்கு நபியே! அவர்களை) கேட்பீராக: அல்லாஹ்விடம் ஏதேனும் (அவ்வாறு) ஓர் உறுதிமொழியை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? அவ்வாறாயின் நிச்சயமாக அல்லாஹ் தன் வாக்கு மாறமாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) சொல்கிறீர்களா? (அல்குர்ஆன் 2 : 80)

அல்லாஹ் அவன் எச்சரிக்கைகளில் எதை வேண்டுமானாலும் அவன் விட்டுவிடுவான். மன்னித்து விடுவான்.

ஆனால், எதை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன் மீது ஒப்பந்தமாக்கி கொண்டானோ அதை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மாற்ற மாட்டான்.

நபி இந்த மதுவை குறித்து மேலும் பயங்கரமான எச்சரிக்கை செய்கிறார்கள்.

مَنْ شَرِبَ الْخَمْرَ وَسَكِرَ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ صَبَاحًا وَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ وَإِنْ عَادَ فَشَرِبَ فَسَكِرَ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ صَبَاحًا فَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ وَإِنْ عَادَ فَشَرِبَ فَسَكِرَ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ صَبَاحًا فَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ وَإِنْ عَادَ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يَسْقِيَهُ مِنْ رَدَغَةِ الْخَبَالِ يَوْمَ الْقِيَامَةِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا رَدَغَةُ الْخَبَالِ قَالَ عُصَارَةُ أَهْلِ النَّارِ

யார் ஒருவர் மதுவை அருந்தி, அதன்மூலம் மயக்கமடைந்து விடுகின்றார்களோ 40நாட்கள் அவர் தொழக்கூடிய தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது. அதே நிலையில் அவன் மரணித்து விட்டால் அவன் நரகத்தில் நுழைவான் அவன் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்டால் அல்லாஹ் அவனை மன்னித்து விடுவான்.

மீண்டும் அவன் மது அருந்திவிட்டால் அவனுக்கு போதை ஏறிவிட்டால் நாற்பது நாட்களுடைய தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது. அவன் மரணித்துவிட்டால் நரகம் நுழைவான். அவன் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்டால் அல்லாஹ் அவனை மன்னித்து விடுவான்.

(இரண்டு முறை நிகழ்ந்து விட்டது)

அடுத்து சொல்கிறார்கள் : மீண்டும் அவன் மது அருந்தி போதை ஏறி விட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை அங்கீகரிக்கப்படாது.

அவன் மரணித்துவிட்டால் நரகத்தில் நுழைவான். அவன் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்டால் அல்லாஹ் அவனை மன்னித்து விடுவான்.

(இப்படி 3அவகாசங்கள் கொடுக்கப்பட்டு விட்டன.)

மூன்று முறை தவ்பா கேட்ட பிறகும் அவன் மீண்டும் மது அருந்தி விட்டால் அந்தக் குற்றத்திற்கு அவன் திரும்பி விட்டால் நாளை மறுமையில் அல்லாஹ்வின் மீது கடமையாகி விட்டது, அல்லாஹ் அவனுக்கு நரகவாசிகளின் சீல் சலம் அவர்களின் உடம்பிலிருந்து ஓடக்கூடிய துர்நாற்றங்களை அவனுக்கு குடிக்க வைப்பது.

மூன்று முறை கேட்டு அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். அவன் அதிலிருந்து தன்னை முழுமையாக வாழ்க்கையில் கடைசிப்பகுதி வரை அவன் பாதுகாத்து கொள்ளாமல் மீண்டும் நான்காவது முறையாக அந்த பாவத்துக்கு திரும்பிவிட்டால் அல்லாஹ்வுடைய தண்டனை பயங்கரமானது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 3368.

ஐந்து கூட்டத்தார்களை நபி அவர்கள் ஒரு ஹதீஸில் சொல்கின்றார்கள்,

لَا يَدْخُلُ الْجَنَّةَ صَاحِبُ خَمْسٍ مُدْمِنُ خَمْرٍ وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ وَلَا قَاطِعُ رَحِمٍ وَلَا كَاهِنٌ وَلَا مَنَّانٌ

இந்த ஐந்து கூட்டத்தார்கள் சொர்க்கத்திற்குள் நுழைய மாட்டார்கள்.

முதலாவது, தொடர்ந்து மது அருந்தக் கூடியவன்,திருந்தாமல் தொடர்ந்து மது அருந்தும் பழக்கம் உடையவன்.

இரண்டாவது, சூனியம் செய்வதில் ஈடுபடுபவன்

மூன்றாவது, உறவுகளை,ரத்த பந்தங்களை துண்டித்து வாழ்பவன்.

நான்காவது, குறி சொல்பவன்

ஐந்தாவது, தான் செய்த உபகாரங்களை சொல்லிக் காட்டுபவன்.

அறிவிப்பாளர் : அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் :10684.

ஜோசியம் எந்த வகையில் இருந்தாலும் சரி,அது வாஸ்து என்ற பெயரில் இருந்தாலும் சரி,பால்கிதாபு என்ற பெயரில் இருந்தாலும் சரி,பஞ்சாங்கம் என்ற பெயரில் இருந்தாலும் சரி,நட்சத்திரம் ராசி பலன் என்ற பெயரில் இருந்தாலும் சரி,கை ரேகை என்ற பெயரில் இருந்தாலும் சரி,எந்த வகையில் குறிப்பார்த்தாலும் குறி கூறினாலும் அந்த அனைவரும் இந்த ஹதீஸில் அடங்குவார்கள்.

நபி அவர்கள் சொல்கின்றார்கள் :

لَا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَسْرِقُ السَّارِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ

ஒருவன் زناசெய்கிறான், அவன் زناசெய்யும் போது முஃமினாக இருப்பது கிடையாது. ஒருவன் திருடுகிறான், அவன் திருடும் போது முஃமினாக இருப்பது கிடையாது.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6284.

அந்த நேரத்தில் மரணம் வந்துவிட்டால் நிலைமை என்னவாகும்? ஈமான் இல்லாத நிலையில் மரணம் வந்துவிட்டால் நிரந்தர நரகத்திற்கு அவர் காரணமாகிவிடுவார்.

நபி அவர்கள், மது ஒரு பெரும் பாவம் மட்டுமல்ல, உள்ளத்தில் இருக்கக்கூடிய ஈமானின் ஓர் ஒளியை அனைத்து விடக்கூடிய ஒன்று என்று சொல்கிறார்கள்.

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்,நபி அவர்கள் கூற நான் கேட்டேன்,

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَتَانِي جِبْرِيلُ فَقَالَ يَا مُحَمَّدُ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ لَعَنَ الْخَمْرَ وَعَاصِرَهَا وَمُعْتَصِرَهَا وَشَارِبَهَا وَحَامِلَهَا وَالْمَحْمُولَةَ إِلَيْهِ وَبَائِعَهَا وَمُبْتَاعَهَا وَسَاقِيَهَا وَمُسْتَقِيَهَا

ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த செய்தியை நேரடியாக அல்லாஹ்விடமிருந்து எடுத்து வந்து நபி அவர்களிடம் சொல்கின்றார்கள்:

முஹம்மதே,அல்லாஹ் இவர்களை சபிக்கின்றான்.

1.             முதலாவதாக,மது.

அது முழுமையாக சபிக்கப்பட்ட ஒன்று. அதை எந்த வகையிலும் மாற்றி பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது.

எவன் ஒருவன் மது அருந்துகின்றனோ அவன் தன் வயிற்றில் அல்லாஹ்வின் சாபத்தை அருந்திக் கொண்டிருக்கிறான். அல்லாஹ்வுடைய கருணையிலிருந்து அவன் விலகிக் கொண்டிருக்கிறான்.

2.             அதை பிழியக்கூடியவன். மதுவை தயாரிப்பு செய்யக்கூடியவன். தனக்காக தயாரித்தாலும் சரி, பிறருக்காக தயாரிப்பு செய்தாலும் சரி,

ஒருவன் தனக்காக பிழிகிறான்,தனக்காகவும் பிறருக்காகவும் அல்லது பிறருக்காக மட்டும் பிழிந்து கொடுக்கிறான். அவன் சாப்பிடுவது கிடையாது. இப்படியும் சிலர் இருக்கின்றார்கள். இவர்களையும் சபிக்கின்றார்கள்.

3.             யார் ஒருவர் தனக்காக பிழிந்து கொள்கிறார்களோ அவர்களையும் சபிக்கின்றார்கள்.

4.             அதை குடிப்பவனையும் அல்லாஹ் சபிக்கின்றான்.

5.             அதை யார் எடுத்து செல்கின்றார்களோ அவர்களையும்.

6.             யாருக்காக அந்த மது கொண்டு செல்லப்படுகின்றதோ அவர்களையும் அல்லாஹ் சபிக்கின்றான்.

7,8.         அந்த மதுவை வாங்குகிறவனையும் விற்கின்றவனையும் அல்லாஹ் சபிக்கின்றான்.

9,10.       ஊற்றி யார் கொடுக்கின்றானோ அவனையும் யாருக்கு ஊற்றிக் கொடுக்கப்படுகிறதோ அவனையும் அல்லாஹ் சபிக்கின்றான்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் :2747.

இத்தனை கடுமையான எச்சரிக்கைகளை நாம் கேட்டதற்கு பிறகு, இந்தக் குற்றத்தின் மீது நமது உள்ளத்தில் பயங்கரமான வெறுப்பு வர வேண்டும்.

இன்று, நமது சமுதாயத்தில் நாம் நன்மையை ஏவுவது கிடையாது. தீமையிலிருந்து தடுப்பது கிடையாது.

உணர்வற்ற, இறந்த உள்ளமுடையவர்களாக தான் நமது சமுதாயத்தில் பலர் இருப்பதை பார்க்கிறோம்.

சஹாபாக்களின் வாழ்க்கையைப் பாருங்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களின் கட்டளைக்கு அடிபணிந்த சம்பவங்களை பாருங்கள்.

ஒரு மனிதன் மிஸ்ரியிருந்து வருகிறார். நபி அவர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பதற்காக.

அவருக்கு மது தடை செய்யப்பட்டுவிட்டது என்ற சட்டம் தெரியாது. மதுவால் நிரப்பப்பட்ட ஒரு தோல் துருத்தியை கொண்டு வருகிறார்.

நபி அவர்கள் கேட்கிறார்கள்; இதை அல்லாஹ் தடைசெய்து விட்டான் என்று உனக்கு தெரியாதா? தோழரே!

அவர் சொல்கிறார்; அல்லாஹ்வின் தூதரே எனக்கு தெரியாது .

அடுத்து, நபி அவர்கள் சில பேச்சுகளில் அங்கே ஈடுபடும் போது அவர் தனது அருகில் இருந்தவரிடத்தில் ஒர் விஷயத்தைச் சொல்கிறார்.

நபி திரும்பி கேட்கிறார்கள்; தோழரே! அவரிடத்தில் நீங்கள் என்ன பேசினீர்கள்?என்று.

அப்போது அந்தத் தோழர் கூறினார்; அல்லாஹ்வின் தூதரே! இதை நான் கடைத் தெருவில் விற்று வரக் கூறினேன்.

அப்போது நபி அவர்கள் கூறினார்கள்;

إِنَّ الَّذِي حَرَّمَ شُرْبَهَا حَرَّمَ بَيْعَهَا

தோழரே! யார் இந்த மதுவை குடிப்பதை தடுத்தானோ அவன், இதை விற்பதையும் வாங்குவதையும் தடை செய்து இருக்கிறான்.

இந்த வார்த்தையை கேட்டதும் அந்த தோழர்,அடுத்த நொடியில் அந்த தோல் துருத்தியின் வாயை தனது வாளால் வெட்டிவிடுகிறார். மது அங்கே கொட்டுகின்றது.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2957.

எந்த ஒரு ஈமானை நபித்தோழர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் ஏந்தி நின்றார்களோ, எந்த ஒரு மதிப்பை அல்லாஹ்வுடைய கட்டளைக்கும், நபி அவர்களுடைய கட்டளைக்கும் கொடுத்தார்களோ, அந்த மதிப்பை நீங்களும், நானும் கொடுக்காத வரை, அந்த மதிப்பை உணராத வரை, அல்லாஹ்வுடைய அன்பை அடைந்துகொள்ள முடியாது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எல்லோருடைய பாவங்களை மன்னிப்பானாக. அவனுடைய கட்டளைகளை மதித்து அவன் தடை செய்த சிறிய பெரிய பாவங்களிலிருந்து நமது வாழ்க்கையை பாதுகாத்து அருள்வானாக !

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/