HOME      Khutba      தர்மம் | Tamil Bayan - 47   
 

தர்மம் | Tamil Bayan - 47

           

தர்மம் | Tamil Bayan - 47


தர்மம்

ஜுமுஆ குத்பா தலைப்பு : தர்மம்

வரிசை : 47

இடம் : மஸ்ஜிதுல் அஹ்லில் ஹதீஸ், மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியமிக்க அல்லாஹ்வின் நல்லடியார்களே!அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறி இந்த ஜும்ஆவின் உரையை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹு தஆலா நமக்கும் நம் முன் சென்ற மக்களுக்கும் இந்த இறையச்சத்தை உபதேசமாக ,வசியத்தாக, அறிவுரையாக கூறுகின்றான்.

அல்லாஹ் கூறுகிறான் :

وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ

திட்டவட்டமாக நாம் அறிவுரை கூறி விட்டோம். உபதேசித்து விட்டோம். உங்களுக்கு முன் சென்றவர்களுக்கும்  உங்களுக்கும் நீங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று. (அல்குர்ஆன் 4 : 131)

இறையச்சம் -அல்லாஹ்வை பயந்து கொள்ளுதல்,இதுதான் ஈமானுடைய அடிப்படை. இஸ்லாமுடைய உடைய அடிப்படை. நம்முடைய எல்லா நல்ல அமல்களுக்கும் அடிப்படையாக இருக்கிறது.

ஆகவே தான் அல்லாஹு தஆலா அவனுடைய இந்த புத்தகத்தை புகழ்ந்து சொல்லும் பொழுது,

الم (1) ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ

இதுதான் வேதநூல். இதில் சந்தேகமேயில்லை. இறையச்சம் உடையவர்களுக்கு (இது) நேரான வழியைக் காட்டும். (அல்குர்ஆன் 2 : 1-2)

வசனத்தின் கருத்து : இது தான் வேதம். இதற்கு முந்திய அனைத்து வேதங்களும் அல்லாஹுவால் மாற்றப்பட்டுவிட்டது. அந்த வேதங்களைக் கொண்டு அமல் செய்வது இப்போது கூடாது. இந்த வேதத்தில் நேர்வழி இருக்கிறது. அந்த நேர் வழியைக் கொண்டு பயன் பெறக்கூடியவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளக்கூடிய மக்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.

பிறகு இறையச்சம் என்பதற்கு என்ன அடையாளங்கள்? அல்லாஹ்வை அஞ்சி கொள்வதற்கான தன்மைகள் என்ன? என்று அல்லாஹ் கூறும்போது ஈமானை கொண்டு ஆரம்பிக்கிறான்.

ஆகவே, இந்த தக்வா என்பது நம்முடைய வாழ்க்கையில் பெற்றுக் கொள்ளப்படும் பொழுது நம்முடைய ஈமானில் உயிரோட்டத்தை பார்க்கலாம். நம்முடைய ஈமானில் ஒளியை பார்க்கலாம். நல்ல அமல்களில் நமக்கு ஆர்வம் ஏற்படும். பாவங்களை விட்டு நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோம். மறுமையின் சிந்தனை மிகைத்திருக்கும். சொர்க்கத்தின் ஆசை மிகைத்திருக்கும். நரகத்தைப் பற்றி உண்டான பயம் நம்முடைய உள்ளத்தில் இருக்கும்.

யாருடைய உள்ளத்தில் இந்த இறையச்சம் குறைந்துவிடுமோ,  அல்லாஹ்வுடைய பயம் குறைந்து விடுமோ அவர்களுடைய அமல் பலவீனமடைந்து விடும். அவர்களுடைய ஈமானுடைய ஒளி குறைந்து விடும். அவர்களுடைய அமல்களில் அவர்கள் சோம்பேறிகளாக இருப்பார்கள். பாவங்களை செய்வதில் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். நன்மைகளை செய்வதில் அலட்சியம் காட்டுவார்கள். முற்றிலுமாக மறுமையை மறந்து வாழ்வார்கள். கடைசில் அவர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை அடைவார்கள்.

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் நமக்கு இந்த மார்க்கத்தில் பல எண்ணற்ற நல்ல அமல்களைத் தந்திருக்கின்றான். நல்ல காரியங்களை நமக்கு வழிகாட்டி இருக்கின்றான். யார் எந்த அளவிற்கு முடியுமோ அந்த நல்ல காரியங்களில் முன்னேறும் பொழுது அல்லாஹ்வுடன் நெருக்கமாகிறார். அல்லாஹ்வுடைய அன்பை அடைந்து கொள்கிறார்.

அல்லாஹ்வுடைய நெருக்கத்தை, அன்பை அடைவதற்கு உண்டான வழிகளில் ஒன்று தான், தர்மம் செய்தல். நம்முடைய செல்வத்திலிருந்து அல்லாஹ்வுடைய பாதையில்  ஏழை எளியவர்களுக்கு, வசதியற்றவர்களுக்கு, அனாதைகளுக்கு, நம்முடைய உறவினர்களுக்கு இன்னும் ஏனைய நல்ல காரியங்களுக்கு செலவிடுதல்.

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா சில சமயங்களில் அவனுடைய பாதையில் செலவிடுவதை நம் மீது பர்லாக -கடமையாக ஆக்கி இருக்கிறான். அதைத்தான் நாம்  ஜகாத் என்று கூறுகிறோம்.

தர்மம் செய்வது, இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் விரும்பினால் செய்யலாம், விரும்பவில்லை என்றால் கொடுக்காமல் இருக்கலாம் என்ற அடிப்படையில் உள்ள அமல் கிடையாது.

மாறாக நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உனது செல்வத்தை நீ அல்லாஹ்வின் பாதையில் ஒரு குறிப்பிட்ட அளவு செலவழித்தே ஆக வேண்டும்.

யார் அப்படி செலவழிக்க மறுக்கிறார்களோ, அல்லாஹ்வுடைய பாதையில் அந்த குறிப்பிட்ட அளவு செல்வத்தை செலவழிக்க மறுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் 'காபிர்கள் 'என்று பிரித்துவிடுகிறான். அவர்களை அல்லாஹ் சபித்து விடுகிறான். நரகத்தில் அவர்களை அல்லாஹ் தங்க வைத்து விடுகிறான்.

சூரத்துல் முதஸ்ஸிர் உடைய கடைசி வசனங்களில் அல்லாஹு ரப்புல் ஆலமீன் நரகவாசிகளை பற்றி உண்டான ஒரு காட்சியை வர்ணித்து வருகிறான்.

சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கு சென்றதற்குப் பிறகு, நரக வாசிகள் நரகத்தில் தள்ளப்பட்டதற்கு பிறகு, சில சொர்க்கவாசிகள் பேசிக்கொள்வார்கள். நம்முடன் வாழ்ந்த பல மக்களை நாம் காணவில்லையே! அவர்கள் எல்லாம் எங்கே? என்பதாக.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே உண்டான திரையை எடுத்து விடுவான். சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் இருந்தபடி நரகத்தில் வெந்து எரிந்து கொண்டிருக்கக்கூடிய நரகவாசிகளை பார்ப்பார்கள். அல்லாஹு ரப்புல் ஆலமீன் இந்த இரு கூட்டத்தார்கள் இடையே பேச்சுவார்த்தை ஏற்படுத்துவான்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் மிகப்பெரிய ஆற்றல் உடையவன். அவன் நினைத்ததை செய்து முடிக்கக்கூடியவன். அவனுடைய ஆற்றலை நம்முடைய சிற்றறிவால் புரிந்து கொள்ள முடியாது. அல்லாஹு அக்பர்!

அந்த சொர்க்கவாசிகள் நரகவாசிகளை பார்த்து கேட்பார்கள் :

مَا سَلَكَكُمْ فِي سَقَرَ

ஸகர் என்ற இந்த நரகத்தில் உங்களை நுழைத்தது எது? (அல்குர்ஆன் 74 : 42)

இந்த சகர் என்ற நரகத்தை பற்றி அல்லாஹ் சூரத்துல் முத்தஸ்ஸிரின் ஆரம்ப வசனங்களில் கூறுகிறான் :

سَأُصْلِيهِ سَقَرَ (26) وَمَا أَدْرَاكَ مَا سَقَرُ (27) لَا تُبْقِي وَلَا تَذَرُ (28) لَوَّاحَةٌ لِلْبَشَرِ

(நபியே!) அந்த ‘சகர்' நரகம் என்னவென்று நீர் அறிவீரா? அது எவரையும் மிச்சம் வைக்காது; விடவுமாட்டாது. அது (எரித்து) மனிதனுடைய கோலத்தையே மாற்றிவிடும். (அல்குர்ஆன் 74 : 27-29)

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் :

நரகவாசியை நரகத்தில் போடும் போது இந்த சிறிய உருவத்தில் அல்லாஹ் போட மாட்டான். அவனுடைய உருவத்தை பெரிய கோரமாக அல்லாஹ் மாற்றி விடுவான். உதாரணத்திற்கு,அவனுடைய பற்கள் மலைகளைப் போன்று காட்சியளிக்கும். அவனுடைய தோலுடைய தடிப்பம் மூன்று நாட்கள் ஒருவர் தொடர்ந்து நடந்து சென்றால் எவ்வளவு தூரம் நடந்து செல்வோனோ அந்த அளவிற்கு தடிமனாக இருக்கும் நரகத்தில் போடப்படும் மனிதனுடைய தோல். இந்த தோலை அந்த நெருப்பு எரித்து பொசுக்கி கொண்டே இருக்கும். (1)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 5091, முஸ்னத் அஹ்மத் எண் : 7995

மேலும் அல்லாஹ் சொல்கிறான் :

كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ

ஒரு முறை தோல் பொசிங்கிவிட்டால் அத்துடன் வேதனை முடிவடைவது கிடையாது. தோல் பொசுங்கும் போதெல்லாம் புதிய தோல்களை அல்லாஹ் அணிவித்துக்  கொண்டே இருப்பான். வேதனையை அவர்கள் நிரந்தரமாக சுவைக்க வேண்டும் என்பதற்காக. (அல்குர்ஆன் 4 : 56)

அந்த நரகவாசிகளைப் பார்த்து சொர்க்கவாசிகள் கேட்பார்கள்:

مَا سَلَكَكُمْ فِي سَقَرَ (42) قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ (43) وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ

நீங்கள் இந்த 'சகர் 'என்ற நஉங்களை ‘சகர்' நரகத்தில் புகுத்தியது எது?'' என்று கேட்பார்கள். அதற்கவர்கள் கூறுவார்கள்: ‘‘நாங்கள் தொழவில்லை. நாங்கள் ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை. (அல்குர்ஆன் 74 : 42-44)

நரகத்தில் நுழைந்ததற்கான முதல் காரணம் தொழாமல் இருந்தது. இரண்டாவது காரணம் ஏழைகளுக்கு உணவளிக்காதவர்களாக இருந்தது.

செல்வத்தை செலவு செய்யாததைச் சொல்கிறார்கள். இது எப்படிப்பட்ட கொடிய பாவம் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் விரும்பினால் கொடுக்கலாம், விரும்பவில்லை என்றால் செல்வத்தைக் கொண்டு தானே அனுபவித்துக் கொள்ளலாம் என்பது கிடையாது.

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு நிசாபை எட்டினால் அதில் நீங்கள் உங்களுடைய செல்வத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்து தர்மம் செய்ய கொடுப்பது உங்கள் மீது கட்டாயக் கடமை.

அந்த குறிப்பிட்ட நிசாபை நீங்கள் எட்டவில்லை என்று சொன்னாலும் உங்களால் முடிந்த அளவு அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்வது உங்களுக்கு கட்டாய கடைமை ஆகும்.

இன்று எத்தனையோ மக்கள், எங்களிடத்தில் நிறைய செல்வம் இல்லை. எங்களுக்கு பெரிய வசதி வாய்ப்பு இல்லை. எங்கள் மீதும் தர்மம் கடமையா? என்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்

இதே கேள்வியை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஸஹாபாக்கள் கேட்டார்கள்.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் :

உங்களில் ஒவ்வொருவர் மீதும் தர்மத்தை அல்லாஹ் கடமையாக்கி இருக்கிறான். அப்பொழுது ஸஹாபாக்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எப்படி தர்மம் செய்வது? எங்களிடத்தில் வசதி இல்லையே. என்பதாக.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் : அல்லாஹ் உங்களுக்கு கொடுத்திருக்கக்கூடிய கை பலத்தைக் கொண்டு உங்கள் உடல் ஆற்றலை கொண்டு நீங்கள் கூலி வேலை செய்யுங்கள். அதில் கிடைத்த கூலியைக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்யுங்கள்.

மேலும், ஸஹாபாக்கள் கேட்கிறார்கள் : யா ரசூலல்லாஹ்! அதுவும் ஒருவரால் முடியவில்லை என்று சொன்னால், கை கால் ஊனமாக இருக்கிறது, நடக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது?

அதற்கு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: பிறருக்குத் தீங்கு தருவதை விட்டு அவர் தன்னைத் தடுத்துக் கொள்ளட்டும். அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகும். நன்மையை ஏவட்டும். அது ஒரு தர்மமாகும். தீமையை விட்டு தடுக்கட்டும். அதுவும் ஒரு தர்மமாகும். முஃமின்களுக்கு நல்ல காரியங்களுக்கு ஆலோசனை செய்யட்டும். அது அவருக்கு ஒரு தர்மமாகும்.(2)

அறிவிப்பாளர் : அபூ மூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி. எண் : 5563.

எத்தனை விஷயங்களை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தர்மத்தோடு இணைத்து சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள்.

தர்மம் கொடுக்காமல் ஒரு முஸ்லிம் இருக்கக்கூடாது. தன்னுடைய செல்வத்தில்,  தன்னுடைய ஆற்றலில், தன்னுடைய அறிவில், தன்னால் முடிந்த அளவு அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வது முஸ்லிம்களின் கடமை.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒரு செல்வந்தர் மீது கோபப்படுகிறான் என்று சொன்னால், அல்லாஹ் ஒரு செல்வந்தனை சபிக்கின்றான் என்று சொன்னால், அவர்கள் மீது தனது  சாபங்களை இறக்குகிறான் என்று சொன்னால், அந்த செல்வந்தன் எப்போது தனக்குக் கொடுக்கப்பட்ட செல்வத்தில் ஏழை எளியவர்களின் உரிமைகளை கடமைகளை  மறக்கின்றானோ அந்த நேரத்தில் தான்.

எத்தனையோ சில பாவங்களை அவன் செய்யலாம். அந்த நேரத்தில் எல்லாம் சகித்துக் கொள்ளக்கூடிய அல்லாஹ், ஏழைகளுடைய ஹக்கில் அவன் அநியாயம் செய்யும் பொழுது, அவர்களை மறக்கும் பொழுது, அவர்களை விரட்டும் பொழுது, அவர்களை ஏளனமாக பேசும் பொழுது அல்லாஹு ரப்புல் ஆலமீன் தான் பழிவாங்கக்கூடிய தன்மையை அங்கே வெளிப்படுத்துகின்றான். சபிக்கின்றான், அவர்கள் மீது கோபப்படுகின்றான், அவர்களை எச்சரிக்கின்றான்.

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ (1) فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ (2) وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ

 (நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை. (அல்குர்ஆன் 107:1-3)

இந்த வசனத்தில் ஏழைகளின் மீது இரக்கம் காட்டாததை நிராகரிப்பவர்களின் தன்மையாக அல்லாஹ் ஆக்குகின்றான்.

உணவளிக்காததை, எளியோர்களை கவனிக்காததை.இந்த மார்க்கத்தை நிராகரிப்பது என்று அல்லாஹ் சொல்கின்றான் என்றால் இது எப்படிப்பட்ட பாவம் என்று யோசித்துப் பாருங்கள்.

இன்று பல செல்வந்தர்கள் தன்னுடைய செல்வத்தை தன்னுடைய ஆடம்பர வாழ்க்கைக்காகவே பயன்படுத்துகின்றார்கள். தன்னுடைய பங்களா, தன்னுடைய கார், தன்னுடைய வியாபாரம், தன்னுடைய மனைவிமக்கள் இப்படியே அந்த செல்வங்களை கொட்டி அளிக்கிறார்கள். அவர்களது வீட்டில் யாசகம் கேட்டு நிற்கக்கூடிய எத்தனையோ ஏழைகள், ஒருவேளை உணவுக்காக அவர்கள் வரும் பொழுது அவர்களை விரட்டுகிறார்கள். 

அல்லாஹ் சொல்கின்றான் :

وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ

யாசகம் கேட்டு வருபவர்களை விரட்டி பேசாதீர்கள். (அல்குர்ஆன் 93:10)

மார்க்கத்தை பொய்ப்பிக்கக்கூடியவன் யார்? யதீம்களை -அநாதைகளை விரட்டுகிறான். இரக்கமின்றி நடந்து கொள்கிறான். மிஸ்கின், ஏழைகளுக்கு உணவளிப்பதில் அவன் ஆர்வப்படுவது கிடையாது. பிறரையும் ஆர்வமூட்டுவது கிடையாது.

மேலும் அல்லாஹ் சொல்கிறான் :

وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَمًّا (19) وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا

இன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள். இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.(அல்குர்ஆன் 89:19, 20)

யாரிடத்தில் செல்வம் இல்லையோ, யார் தேவை உள்ளவராக இருக்கிறாரோ, அல்லாஹ்வுடைய அருளை எதிர்பார்த்து இருக்கிறார்களோ அவர்களுக்கு முஸ்லிம்கள் தங்களுடைய செல்வத்தை கொடுத்து அவர்களை அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் படி ஆக்குவது முஸ்லிம்களுடைய இஸ்லாமியக் கடமை ஆகும்.

நமது செல்வத்திலிருந்து ஒரு பகுதியை அதற்காக நாம் ஒதுக்க வேண்டும். நம்முடைய செல்வத்தில் நம்முடைய தேவைகள் போக மிஞ்சிய செல்வங்களை அவர்களுக்காக நாம் கொடுக்க வேண்டும்.

இன்று இந்த மிஞ்சிய செல்வங்கள் என்று எடுத்துக் கொள்ளும்போது சிலர், தங்களது ஆடம்பர வாழ்க்கைக்கு உள்ள தேவைகளை எல்லாம் தனது அவசிய தேவை உடைய  ஸ்தானத்திற்கு கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.

குர்ஆனில் அல்லாஹ் சொல்கிறான் :

وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلِ الْعَفْوَ

நபியே உங்களிடத்தில் கேட்டு வருகிறார்கள். எதை செலவு செய்யவேண்டும்? என்பதை. நீங்கள் சொல்லுங்கள் "மிஞ்சியதை செலவு செய்யுங்கள் என்று. (அல்குர்ஆன் 2 : 219)

இன்று மிஞ்சியதை செலவு செய்யுங்கள் என்று நம்முடைய வாழ்க்கை தரத்திற்கு ஏற்ப நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் எதுவுமே மிஞ்சவில்லை என்று சொல்லிவிடுவோம்.

காரணம்,அந்த அளவிற்கு நமது வாழ்க்கை தரத்தில் நம்முடைய அனாவசியமான, ஆடம்பரமான தேவைகள் பெருக்கெடுத்து இருக்கின்றன.

ஒருவர் எத்தனை ஆடைகளை வைத்துக்கொள்கிறார்,ஒருவர் எத்தனை வாகனங்களை வைத்துக் கொள்கிறார்,தங்களுடைய வீட்டை அலங்கரிப்பதற்கு என்று ஒதுக்கக் கூடிய செல்வம்,தன்னுடைய வாகனத்திற்கு என்று ஒதுக்கக் கூடிய செல்வம்.

அதுபோக ஓய்வு நாள்களில் அவர் சுற்றுவதற்காக, இன்னும் தங்களுடைய குடும்பத்தார் மகிழ்ச்சிக்காக, தங்களுடைய குடும்பத்தார் உடைய தேவைகளுக்காக திருமணத்திற்காக இன்னும் பல இதர செயல்பாடுகளுக்காக அவர்கள் செலவழிக்கக் கூடிய செலவுகளை நாம் பார்த்தால், இன்று பலர் பேங்கில் கடன் வாங்கி வட்டி வாங்கி அந்த செலவுகளை செய்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

அல்லாஹ் மன்னிக்க வேண்டும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இந்த சமுதாயம் எந்த அளவிற்கு இந்த வட்டியை மிக மிக ஒரு அற்பமாக இலகுவாக சாதாரணமான குற்றமாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

சர்வசாதாரணமாக இன்று வட்டிக்கு கடன் வாங்கி தங்களுடைய நிகழ்ச்சிகளை  முஸ்லிம் சமுதாயங்கள் நடத்துவதை நாம் பார்க்கிறோம்.

இருந்த செல்வங்களையும் அனாவசியமான காரியங்களில் செலவு செய்து, அதற்கு மேல் தங்களுடைய செலவுகளை பெருக்கிக் கொண்டு, அந்த செலவுகளை ஈடுகட்டுவதற்காக வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள். இவர்களுடைய நிலைமை நாளை மறுமை நாளில் என்னவாகும் என்று யோசித்துப்பாருங்கள்!

மிச்சமீதி மிஞ்சுவது என்றால் என்ன? நம்முடைய அன்றாட உணவு, உடை,  இருப்பிடம் இது போன்ற அவசியமான தேவைகள் போக எது மிஞ்சுகிறதோ அந்த மிஞ்சியதை  அல்லாஹ்வுடைய பாதையில் நாம் கொடுக்க வேண்டும்.

நாளை மறுநாள் என்று சேர்த்து வைப்பதற்கு என்று ஒரு அளவு நம்முடைய  மார்க்கத்தில் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இன்று பலர், தங்களுடைய பேரன்களுக்காக சந்ததிகளுக்காக சேர்த்து வைத்திருக்கிறார்களே அது போன்று பேராசை கொள்வது இந்த மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று கிடையாது.

குறிப்பாக ஜகாத்தை கண்டிப்பாக நிறைவேற்றி ஆக வேண்டும். ஜகாத் போக  உபரியான தர்மங்களையும் ஒரு முஸ்லிம் தன்னுடைய சொத்திலிருந்து, தன்னுடைய செல்வத்திலிருந்து, அவ்வப்போது தேவை ஏற்படும்போது, தேவை உள்ளவர்கள் தங்களை அணுகும்போது கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் குர்ஆனில் சத்தியமிட்டு சொல்கின்றான் :

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ

உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் (தானமாக) செலவு செய்யாத வரை நிச்சயமாக நீங்கள் நன்மையை அடைய மாட்டீர்கள். நீங்கள் எதை தானம் செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான். (அல்குர்ஆன் 3 : 92)

 

 

அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஜகாத் என்று ஏன் பெயர் வைத்தான் என்பது தெரியுமா?  இந்த ஜகாத் நம்முடைய கல்பை சுத்தப்படுத்துகிறது. இந்த கல்பிலிருந்து பொருளுடைய ஆசையை வெளியேற்றுகிறது. ஒரு மனிதனுக்கு அவனுடைய உயிரின் மீது இருக்கக்கூடிய பிரியத்தை விட அவனுடைய பொருளின் மீது இருக்கக்கூடிய பிரியம் அதிகம்.

ஆகவே தான், பல இடங்களில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுங்கள் என்று சொல்லும் போது உங்களுடைய பொருளாலும் உங்களுடைய உயிராலும் என்று சொல்கிறான். உயிரை இரண்டாவதாக சொல்கிறான். பொருளை முதலாவதாக சொல்கிறான்.

பொருளின் மீது மனிதனுக்கு இயற்கையாகவே ஒரு ஆசை இருக்கிறது. இந்த ஆசை அவனுடைய உள்ளத்தில் மிகைத்து விட்டால், கஞ்சத்தனம் உள்ளத்தில் வேரூன்றி விட்டால், இது ஈமானை பாதித்துவிடும்.

பலர், அல்லாஹு ரப்புல் ஆலமீன் குர்ஆனில் எப்படி வர்ணித்தானோ அதுபோன்று வாழ்வதை நாம் பார்க்கிறோம்.

أَلْهَاكُمُ التَّكَاثُرُ (1) حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ

செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. (அல்குர்ஆன் 102:1, 2).

இன்று வாழ்க்கையில் பலரை பாருங்கள். இந்த வசனத்திற்க்கு அப்படியே பொருத்தமாக காட்சியளிப்பார்கள். அவர்கள் எந்த அளவிற்கு தங்களுடைய செல்வங்களை சேர்ப்பதில் பேராசை கொண்டிருக்கிறார்கள்! ஹலால் ஹராம் என்று எதையும் பார்க்க மாட்டார்கள்.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இதையும் எச்சரிக்கை செய்தார்கள். ஸஹீஹுல் புகாரியில் ஒரு அறிவிப்பில் வருகிறது,

لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يُبَالِي الْمَرْءُ بِمَا أَخَذَ الْمَالَ أَمِنْ حَلَالٍ أَمْ مِنْ حَرَامٍ

மக்களுக்கு ஒரு காலம் வரும், அந்த காலத்தில் மக்கள் செல்வத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியில் இருப்பார்கள். அவர் சம்பாதிக்கக்கூடிய செல்வம் ஹலாலில் இருந்து வருகிறதா? இல்லை ஹராமில் இருந்து வருகிறதா? என்பதைப் பற்றி எல்லாம் அவர் கவலைப்பட மாட்டார்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1941.

அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்குவதில் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். வியாபாரிகள் பொய் சொல்வதில் முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள். தொழிலாளிகள் தங்களுடைய நேரங்களை தங்களுடைய முதலாளிகளுக்கு மோசடி செய்வதில் முன்னேறிச் செல்கிறார்கள்.

இப்படி நாம் நம்முடைய சமுதாயத்தில் பார்க்க போனால் ஹராமில் எந்த அளவிற்கு ஒரு முஸ்லிமிற்கு பயம் இருக்க வேண்டுமோ அந்த பயம் இருப்பதில்லை.

ஹராமான ஒரு உணவு ஒரு கவளம் உடலில் செல்லும் போது, அல்லாஹ்வுடைய பயம் இருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய பயத்தில் அந்த கவளத்தை நாம் வாந்தி எடுத்து விட வேண்டும்.

அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள் :

ஹராமான உணவை உண்டு ஏற்பட்ட ஒரு சதைத்துண்டு அது நரக நெருப்பிற்கு தான் தகுதியானது.

அல்லாஹுஅக்பர்! சுவர்க்கம் சுத்தமானது. யார் தூய்மையான வருவாயைக் கொண்டு தமது வாழ்க்கையை வாழ்கிறார்களோ அவர்களுக்கு தான் அந்த சுவர்க்கம்.

لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آكِلَ الرِّبَا وَمُؤْكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வட்டி வாங்குபவர்களை சபித்தார்கள். வட்டி கொடுப்பவர்களை சபித்தார்கள். அதற்க்காக சாட்சியாக இருப்பவர்களை சபித்தார்கள். அதற்காக எழுதுவோரை சபித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2995.

لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاشِي وَالْمُرْتَشِي

லஞ்சம் வாங்குவோரை சபித்தார்கள். லஞ்சம் கொடுப்பவர்களை சபித்தார்கள். இப்படி ஹராமான வழியில் பொருளீட்டக் கூடிய எந்த வழியாக இருந்தாலும் அது இந்த மார்க்கத்தில் சபிக்கப்பட்ட ஒன்று.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 3109

முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகளில் ஒருபக்கம், இன்னொரு பக்கம் தனக்கு விருப்பமான செல்வத்திலிருந்து அல்லாஹ்வுடைய பாதையில் நாம் செலவு செய்ய வேண்டும்.

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இதை மேலும் தெளிவாக நமக்கு சொல்லுகின்றான் :

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِنْ طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُمْ مِنَ الْأَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ وَلَسْتُمْ بِآخِذِيهِ إِلَّا أَنْ تُغْمِضُوا فِيهِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ

நம்பிக்கையாளர்களே! (தர்மம் செய்யக் கருதினால்) நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், நாம் உங்களுக்குப் பூமியிலிருந்து வெளியாக்கிய (தானியம், கனிவர்க்கம் ஆகிய)வற்றிலிருந்தும் நல்லவற்றையே (தர்மமாக) செலவு செய்யுங்கள். அவற்றில் கெட்டவற்றைக் கொடுக்க விரும்பாதீர்கள். (ஏனென்றால், கெட்டுப்போன பொருள்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால்) அவற்றை நீங்கள் (வெறுப்புடன்) கண் மூடியவர்களாகவே தவிர வாங்கிக்கொள்ள மாட்டீர்களே! (ஆகவே, நீங்கள் விரும்பாத பொருள்களை பிறருக்கு தர்மமாகக் கொடுக்காதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் எத்தேவையுமற்றவன், மிக்க புகழுடையவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2 : 267)

இன்று பலர் தர்மம் செய்கிறார்கள். தங்களுடைய வீட்டில் தாங்கள் எதை சாப்பிட முடியாதோ அந்த உணவை தர்மம் செய்வதற்கு எடுத்து வருவார்கள். அல்லது தாங்கள் எந்த ஆடையை உடுத்த மாட்டார்களோ அதை தர்மம் செய்வதற்காக எடுத்து வருவார்கள்.

நீங்கள் எப்படித் தர்மம் செய்கிறீர்களோ அப்படித்தான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து பிரதிபலனும் கிடைக்கும். நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் ஏழை எளியவர்களுக்கு நல்லதை கொடுத்தால் அல்லாஹ் உங்களுக்கு கூலியை நல்லதாக கொடுப்பான்.

அல்லாஹு தஆலா இந்த அளவிற்கு நமக்கு வலியுறுத்துகின்ற இந்த வசனம், நம்முடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்!

நாமும் தான் இதை அன்றாடம் படிக்கிறோம். குர்ஆனில் ஜகாத்தை பற்றி, சதகாவைப்  பற்றி, அல்லாஹ்வுடைய பாதையில் செலவழிப்பதை பற்றி உண்டான வசனங்களை பேசுகிறோம், படிக்கிறோம்.

நம்முடைய வாழ்க்கையில் எந்த அளவிற்கு இந்த வசனங்கள் தாக்கத்தை மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது?

இதுதான் அந்த உத்தம ஸஹாபாக்களுக்கும் நமக்கும் மத்தியில் உள்ள இடைவெளி.

சஹாபாக்கள் உடைய வாழ்க்கை அப்படி அல்ல. சஹாபாக்கள் உடைய உள்ளங்கள் அப்படி கிடையாது. அவர்களுடைய உள்ளங்கள் தூய்மையாக இருந்தன. அல்லாஹ் உடைய கட்டளைக்காக, நபியுடைய கட்டளைக்காக,அல்லாஹ்வுடைய விருப்பத்திற்காக நபியுடைய விருப்பத்திற்காக எதை வேண்டுமானாலும் இழக்கத் தயார்.

சொர்க்கத்திற்காக எதை வேண்டுமானாலும் இழக்கத் தயார். சொத்தை சுகத்தை செல்வத்தை முழு வாழ்க்கையையும் அல்லாஹ்வுடைய பாதையில் அர்ப்பணிக்க தயார்.

இன்று நம்முடைய நிலைமை என்ன தெரியுமா? உலக வாழ்க்கையை பொறுத்தவரை நாம் திருப்தி அடைவது கிடையாது. எவ்வளவுதான் நம்மிடத்தில் இருந்தாலும் அதை எப்படி இரட்டிப்பாக்குவது? அதை எப்படி இன்னும் நான்கு மடங்காக ஆக்குவது என்று தான் பொதுவாக நம்மில் பலருடைய நிலைமை.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹீஹுல் புஹாரியில் கூறுவதைப் போன்று,

ஆதமுடைய மகனுக்கு தங்க வயல்கள் இரண்டு இருந்தால் மூன்று வேண்டும் என்று ஆசைப்படுவான்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் :

அந்த அளவிற்கு தான் நம்மில் பலருடைய நிலைமை இருந்து கொண்டிருக்கிறது.

ஆனால், சஹாபாக்களின் நிலைமை அப்படி கிடையாது. அல்லாஹ்வும் அல்லாஹ்வின் ரஸூலும் எதையெல்லாம் கொடுக்க சொன்னார்களோ அதைக் கொடுத்து விடுவார்கள். அதற்காக தாங்கள் முழுமையாக எதுவும் இல்லாமல் நிறைவாக எங்கள் இடத்தில் எதுவும் கிடையாது. இனி எங்களுக்கு மிஞ்சியது அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் தான் என்ற நிலைமை ஏற்பட்டாலும் சரி.

ஆகவே தான் அல்லாஹ் அந்த சஹாபாக்களை பற்றி சொல்கிறான் :

وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ

தங்களுக்கு இல்லை என்றாலும் தாங்கள் கடுமையான வறுமையில் பட்டினியில் இருந்தாலும் பிறருக்கு கொடுக்கத்தான் அவர்கள் முன் வருவார்கள். யார் உள்ளத்தின் நப்ஸ் உடைய கஞ்சதனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ  அவர்கள்தான் வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் 59 : 9)

சஹாபாக்களுக்கு இந்த வசனத்தை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஓதி காட்டுகின்றார்கள்.

அப்போது அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அன்சாரிகளில் அதிகமான செல்வம் படைத்தவர். அங்கே அமர்ந்து கொண்டு இருக்கிறார்.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலிருந்து இந்த  வசனத்தை செவிமடுத்த உடன் சொல்கின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என்னுடைய பைராஹா எனும் தோட்டம் தெரியும். எனக்கு மிக விருப்பமான செல்வம் அது. அந்தத் தோட்டத்தில் நல்ல தண்ணீர் உடைய கிணறு இருந்தது. அடர்த்தியான மரங்கள் உடைய தோட்டம் அது.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இளைப்பாற வேண்டுமென்றால், ஓய்வெடுக்க வேண்டும் என்றால், அந்த தோட்டத்திற்கு சென்று சிறிது நேரம் அமர்ந்து வருவது வழக்கம். அங்குள்ள மதுரமான நீரை குடிப்பது வழக்கம்.

அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள் :

அல்லாஹ்வின் தூதரே! இது அல்லாஹ்வின் பாதையில் தர்மமாகும்.

(இந்தக் காலத்தில் அந்த தோட்டத்தை எத்தனையோ கோடிகள் மதிப்பிற்குரியதாக இருக்கும் என்று சொல்கின்றார்கள்.)

அல்லாஹ்வின் தூதரே! நான் அந்த தோட்டத்தை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்து விடுகிறேன்.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1368, 2150, 2562.

(உள்ளத்தில் ஈமானுடைய ஆழத்தை நீங்கள் பார்க்கவேண்டும். அல்லாஹ்வுடைய வசனத்தின் தாக்கத்தை நீங்கள் பார்க்கவேண்டும்.

நமக்கும் தானே இந்த வசனங்கள் ஓதிக் காட்டப்படுகின்றன. நமக்கும் தானே இந்த சம்பவங்கள் சொல்லப்படுகின்றன.

நாம் நம்முடைய அண்டை வீட்டாருக்கு செய்யக்கூடிய உரிமையை கூட இன்னும் கொடுக்கவில்லை. நம்முடைய உறவினர்களுக்கு கொடுக்க வேண்டிய ஹக்கை கூட இன்னும் நாம் கொடுக்க வில்லை. கடமையான தர்மத்தை கூட இன்னும் நாங்கள் சரியாக கணக்கிட்டு கொடுக்கவில்லையே!

நம்முடைய நிலைமை என்ன? அவர்களுடைய நிலைமை என்ன?

அன்பிற்குரியவர்களே! அந்த சஹாபாக்கள் உடைய உள்ளத்தில் இருந்த மறுமையின் அச்சத்தை பாருங்கள். அல்லாஹ்விடத்தில் நன்மை பெற வேண்டும், பேருக்காக அல்ல.

இன்று பலரும் தர்மம் செய்கிறார்கள், ஆனால் அதில் தன் பெயரை எழுதி இருப்பார்கள். ஒரு அற்ப பொருளாக இருந்தாலும் அதிலும் தன் பெயர் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

இப்படி தங்களுடைய பேருக்காக புகழுக்காக தாங்கள் காட்டப்பட வேண்டும் என்பதற்காக செய்பவர்களும் பலர் இருக்கிறார்கள். ஆனால் சஹாபாக்கள் அப்படி அல்ல.)

அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அவர்களிடத்தில் சொன்னார்கள் :

وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ

 

யா ரசூலுல்லாஹ்! எனக்கு எந்த பலனும் இதற்கு தேவையில்லை. எனக்கு நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் இதனுடைய நன்மை கிடைக்க வேண்டும். இது எனக்கு அங்கே சேமிப்பாக இருக்க வேண்டும்.

(இந்த இடத்திலும் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். தர்மம் செய்துவிட்டேன் என்று அந்தத் தோட்டத்தை தன்னுடைய உரிமையில் வைத்துக்கொண்டு நான் அதிலிருந்து வரக்கூடிய வருவாயை தர்மம் செய்கிறேன் என்று சொல்லவில்லை.)

அல்லாஹ்வின் தூதரே! முழுமையாக உரிமையை உங்களிடத்தில் கொடுத்து விட்டேன். நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அல்லாஹ் உங்களுக்கு அறிவிப்பது போன்று அந்த வழியில் இதனுடைய வருமானத்தை நீங்கள் செலவு செய்து கொள்ளுங்கள். விற்று செய்து கொள்ளுங்கள் அல்லது வரக்கூடிய வருமானத்தை கொண்டு செலவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு நான் கொடுத்து விட்டேன்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொல்கின்றார்கள் : எவ்வளவு விலை உயர்ந்த பொருள் அது! எவ்வளவு லாபம் தரக்கூடிய பொருள் அது! இவ்வளவு பெரிய செல்வத்தை, இந்தத் தோட்டத்தை அல்லவா நீ தர்மம் செய்து விட்டாய்!

அபூதல்ஹா! நீ கூறியதை நான் கேட்டுக் கொண்டேன். நான் என்ன அபிப்பிராயம் படுகிறேன் என்று தெரியுமா?

(இந்த இடத்தில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தர்மம் கொடுக்கக்கூடிய கொடை கொடுக்கக்கூடிய வள்ளல்களுக்கு ஒரு வழியை காட்டுகின்றார்கள் கவனியுங்கள்.)

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அபூதல்ஹாவைப் பார்த்து சொல்கின்றார்கள் :

அபூதல்ஹாவே! இந்தத் தோட்டத்தை உன்னுடைய நெருக்கமான உறவினர்களுக்கு பங்கு வைத்து கொடுத்துவிடுங்கள். இது தான் நன்மை என்று நான் கருதுகிறேன்.

அபூதல்ஹா கூறினார்கள் : அல்லாஹ்வின் தூதரே! அப்படியே செய்கிறேன். அபூதல்ஹா அந்த தோட்டத்தை பல பங்குகளாக வைத்து தன்னுடைய நெருக்கமான  உறவினர்களுக்கு தன்னுடைய தந்தையின் சகோதரருடைய பிள்ளைகளுக்கு பங்கு வைத்து கொடுத்து விட்டார்கள். (4)

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1368, 2150, 2562.

இன்று பலர் ஏழை எளியோருக்கு தூரமாக தூரமாக சென்று தர்மம் கொடுப்பார்கள். ஆனால் எத்தனையோ பிள்ளைகள் வறுமையில் வாடிய தங்களுடைய தந்தைகளை, தங்களுடைய பெற்றோர்களை, தங்களுடைய தாய்களை மறந்திருப்பதை நாம் பார்க்கிறோம்.

தங்கள் தந்தை உடன் பிறந்த சகோதர சகோதரிகள் தேவை உடையவர்களாக இருப்பார்கள். தன்னுடைய தாய் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் அல்லது அவர்களுடைய வழி வந்த பிள்ளைகள் அவர்கள் தேவை உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களையெல்லாம் விட்டுவிட்டு தூரத்திலேயே சென்று தர்மம் கொடுப்பார்கள்.

இதற்கு என்ன காரணம் தெரியுமா? தங்களுடைய தர்மத்தை பெரிதாகப் பேசப்பட வேண்டும் என்பதற்காக.நெருக்கமான உறவினர்களுக்கு தர்மம் செய்யும் பொழுது அந்த தர்மங்கள் வெளியில் பேசப்பட மாட்டாது.

இப்படிப்பட்ட தர்மங்களுக்கு எல்லாம் இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி கிடையாது. இஸ்லாம் தர்மத்திற்கு என்று ஒரு வரைமுறையை வைத்திருக்கின்றது. அந்த அடிப்படையில் இந்த தர்மத்தை நாம் செய்ய வேண்டும்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் மிகத் தெளிவாக நமக்கு சொல்கின்றான் :

لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ

நன்மை என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கின் பக்கமோ  மேற்கின்  பக்கமோ திருப்புவது மட்டுமல்ல. மாறாக நன்மை என்றால் என்ன? 'பிர் ' என்ற அந்த உச்சகட்ட நன்மை என்ன? அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளவேண்டும். மறுமையை நம்பிக்கை கொள்ளவேண்டும். மலக்குகளை நம்பிக்கை கொள்ளவேண்டும். அல்லாஹ் இறக்கிய புத்தகத்தை நம்பிக்கை கொள்ள வேண்டும். நபிமார்களை நம்பிக்கை கொள்ள வேண்டும்.அதற்கு பிறகு அல்லாஹ் சொல்கிறான், விருப்பமான செல்வத்திலிருந்து  இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்.(அல்குர் ஆன் 2:177).

செல்வத்தின் மீது விருப்பம் பிரியம் இருந்தும், தான் சம்பாதித்த செல்வம், கஷ்டப்பட்டு, இரவு பகலாக, தன்னுடைய அறிவை செலவு செய்து, தன்னுடைய முயற்சியை செலவு செய்து, தன்னுடைய தூக்கத்தை செலவு செய்து சம்பாதித்த செல்வம் எவ்வளவு விருப்பமாக இருக்கும்! அந்த நிலைமையிலும் அந்த செல்வத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்து அவர் செலவு செய்ய வேண்டும்.

முதலில் யாருக்கு அல்லாஹ் பட்டியல் சொல்கின்றான்.

ذَوِي الْقُرْبَى-நெருக்கமான உறவினர்களுக்கு.

முதலில் யாருக்கு கொடுக்க வேண்டும்? நெருக்கமான உறவினர்களுக்கு. தந்தை என்று சொன்னால், தன்னுடைய மகன்,தன்னுடைய மனைவி, தன்னுடைய பிள்ளைகள், தன்னுடைய சகோதரர்கள், தன்னுடைய சகோதரிகள் இப்படி நெருக்கமான உறவினர்களில், யார் தேவையுள்ள ஒருவராக இருக்கிறார்களோ ஏழை எளியவர்கள் ஆக இருக்கிறார்களோ அவர்களுக்கு ஹலாலான என்ன தேவைகள்   இருக்கின்றனவோ அந்த தேவைகளுக்காக நீங்கள் அவர்களுக்குக் கொடுங்கள்.

இரண்டாவது தரம், وَالْيَتَامَى–எதீம்கள் (அனாதைகள்)

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا وَقَالَ بِإِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى

 

நானும் எதீம்களை ஆதரிப்பவர்களும் நாளை மறுமையில் ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து இருப்போம் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தனது ஆட்காட்டி விரலையும் தனது நடுவிரலையும் சேர்த்து சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : சஹ்ல் இப்னு சஃத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5546.

எதீம்களை ஆதரிப்பது. எதீம்களுக்காக வேண்டி உதவி செய்வது.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் :

السَّاعِي عَلَى الْأَرْمَلَةِ وَالْمِسْكِينِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ

எதீம்கள், கைம்பெண்கள் இவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிபவர்களுக்கு சமமானவர்கள். (5)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4934.

ஆகவே தான் அல்லாஹ் சுபஹானஹு தஆலா எதீம்களுடைய ஹக்குகளில் யார் மோசடி செய்கிறார்களோ அல்லது அவர்கள் மீது இரக்கம் இல்லாமல் யார் நடந்து கொள்கிறார்களோ அவர்களை அல்லாஹு தஆலா அவனுடைய புத்தகத்தில் சபிக்கின்றான். அவர்களை கண்டிக்கின்றான்.

إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا وَسَيَصْلَوْنَ سَعِيرًا

எவர்கள் அநாதைகளின் பொருள்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிற்றில் நிச்சயமாக நெருப்பையே கொட்டிக் கொள்கிறார்கள். பின்னர் (மறுமையில்) கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் புகுவார்கள். (அல்குர்ஆன் 4 : 10)

அடுத்து மூன்றாவதாக அல்லாஹ் சொல்கிறான் :

وَالْمَسَاكِينَ-மிஸ்கீன்(ஏழைகள்)

யாரிடத்தில் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத அளவிற்கு வசதி இல்லையோ அப்படிப்பட்ட ஏழைகளுக்கு நீங்கள் கொடுங்கள்.

அடுத்து, وَابْنَ السَّبِيلِ–வழிப்போக்கர்கள்.

அவர்கள் ஊர்களில் செல்வந்தர்களாரக இருந்தாலும் வந்த இடத்தில் ஒரு  நிர்பந்தத்தின் காரணமாக ஒரு ஆபத்தின் காரணமாக, தன்னுடைய செல்வத்தை இழந்து, அவர்கள் ஆதரவற்று நின்றால் அவர்களுக்கு நீங்கள் கொடுங்கள்.

அடுத்து, وَالسَّائِلِينَ-யார் யாசகம் கேட்டு வருகிறார்களோ அவர்களுக்கு நீங்கள் கொடுங்கள்.

அடுத்து, وَفِي الرِّقَابِ-அடிமைகளை உரிமையிடுவதற்காக நீங்கள் கொடுங்கள்.

அன்பிற்குரியவர்களே! இத்தனை வழிகளை அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நமக்குச் சொல்லிக் காட்டுகின்றான். அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்து, அந்த பிர்என்ற உச்ச நிலையை அடைவதற்கு.

அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்வதின் சிறப்புகள் :

இன்று நம்மில் பலருக்கு தெரிவது கிடையாது. அல்லாஹ்வுடைய பாதையில் நாம் செலவழிப்பதால் நமக்கு என்ன கிடைக்கும் என்பதாக.

அல்லாஹ்வுடைய பாதையில் நாம் செலவழிக்கும் போது நாம் எதைச் செலவழிக்கிறோமோ, அதை விட சிறப்பாக, அதைவிட உயர்வாக அல்லாஹ் நமக்கு கொடுக்கின்றான்.

அல்லாஹ் சொல்கின்றான் :

وَمَا آتَيْتُمْ مِنْ رِبًا لِيَرْبُوَ فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُو عِنْدَ اللَّهِ وَمَا آتَيْتُمْ مِنْ زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَئِكَ هُمُ الْمُضْعِفُونَ

 (மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள். (அல்குர்ஆன் 30 : 39)

தர்மங்களை அல்லாஹு ரப்புல் ஆலமீன் அழிப்பது கிடையாது. அல்லாஹ் வட்டியை அழிக்கின்றான். தர்மத்தை அல்லாஹ் வளர்கின்றான்.

தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் சொல்கின்ற  உதாரணத்தைப் பாருங்கள்:

مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِائَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

(நபியே!) அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களைச் செலவு செய்கிறவர்களுடைய (பொருள்களின்) உதாரணம், ஒரு வித்தின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. அ(ந்த வித்)து ஏழு கதிர்களைத் தந்தது. ஒவ்வொரு கதிரிலும் நூறு வித்துக்கள் (ஆக, எழுநூறு வித்துக்கள் அந்த ஒரு வித்திலிருந்து) உற்பத்தியாயின. அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு (இதை மேலும்,) இரட்டிப்பாக்குகிறான். ஏனெனில், அல்லாஹ் (வழங்குவதில்) மிக விசாலமானவன், நன்கறிந்தவன். (அல்குர் ஆன் 2 : 261)

நீங்கள் ஒரு ரூபாயை தர்மம் செய்தால் அல்லாஹ்விடத்தில் 700ரூபாய்க்கு உண்டான கூலியை அல்லாஹ் உங்களுக்கு கொடுக்கின்றான். அல்லாஹ் நாடினால் அந்த எழுநூறையும் இரட்டிப்பாக்கி கொடுத்து விடுவான்.

அல்லாஹ்வின் புறத்திலிருந்து எப்படிப்பட்ட வாக்குறுதி பாருங்கள்.

அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யும் பொழுது உங்களுக்கு எப்படிப்பட்ட உறுதி இருக்க வேண்டுமென்றால் அல்லாஹ்வுடைய அன்பு கிடைக்க வேண்டும்.

நீங்கள் ஒரு ரூபாயை தர்மம் செய்யுங்கள். ஒரு லட்சத்தைக் கொடுங்கள். நோக்கம் எதுவாக இருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய அன்பு, அல்லாஹ்வுடைய பொருத்தம் இருக்க வேண்டும்.

தங்களுடைய உள்ளங்களில் ஈமானுடைய உறுதிக்காக வேண்டி, யா அல்லாஹ் உள்ளத்தில் செல்வத்தினுடைய இச்சையை நான் பிடுங்கி எடுத்து, நான் உன்னுடைய அன்பை நான் என் உள்ளத்தில் உறுதி கொள்ள வைப்பதற்காக, இந்த பணத்தை உனது அன்பிற்காக நான் செலவு செய்கிறேன் என்று யார் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உதாரணம்.

அல்லாஹ் சொல்கிறான் :

وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَتَثْبِيتًا مِنْ أَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ أَصَابَهَا وَابِلٌ فَآتَتْ أُكُلَهَا ضِعْفَيْنِ فَإِنْ لَمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

எவர்கள் தங்கள் பொருள்களை அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை நாடியும் தங்கள் உள்ளங்களில் (இறைநம்பிக்கையை) உறுதிப்படுத்துவதற்காகவும் செலவு செய்கிறார்களோ அவர்களுடைய (தர்மத்திற்கு) உதாரணம், உயர்ந்த பூமி(யாகிய மலை) மீதுள்ள ஒரு தோட்டத்தை ஒத்திருக்கிறது. அதில் ஒரு பெரும் மழை பெய்தால் இரு மடங்கு பலனைத் தருகிறது. பெரும் மழை பெய்யாவிட்டாலும் சிறு தூறலே அதற்குப் போதுமானது. மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான். (அல்குர்ஆன் 2 : 265)

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொல்கிறார்கள் :

உங்களில் ஒருவர் அல்லாஹ்வுடைய பாதையில் அல்லாஹ்விற்காக தர்மம் கொடுக்கும் பொழுது அல்லாஹ் தனது வலது கையில் அந்த தர்மத்தை பெற்றுக் கொள்கின்றான். நீங்கள் எப்படி உங்களுடைய ஆட்டுக்குட்டியை அல்லது உங்களுடைய குதிரைக் குட்டியை நீங்கள் பிரியமாக அன்போடு வளர்ப்பிற்களோ  அதுபோன்று அந்த தர்மத்தை அல்லாஹ் வளர்க்கிறான் என்பதாக.(6)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 7314.

வசதி படைத்தவர்களே! செல்வம் படைத்தவர்களே! இன்று நம்முடைய சமுதாயத்தில்  எத்தனையோ ஏழை எளியவர்கள், தங்களுடைய மருத்துவ செலவிற்காக, தங்களுடைய கல்விக்காக, தங்களுடைய குடும்பத் தேவைக்காக, இன்னும் பல தேவைகளுக்காக அவர்கள் அல்லாஹ்விடத்தில் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அழுது கொண்டிருக்கிறார்கள். அவர்களை தேடிச் செல்லுங்கள்.

அவர்களுக்கு உதவி செய்வதில் அல்லாஹ்வுடைய அன்பை தேடுங்கள்.இன்று செல்வந்தவர்கள் தங்களுடைய இந்த ஹக்கை மறந்ததால் எத்தனை ஏழை எளியவர்கள் வங்கிகளில் வட்டிக்கு கடன்வாங்குகிறார்கள். தங்களுடைய சொத்துகளை விற்று,முற்றிலுமாக அவர்கள் எல்லாவற்றையும் இழந்து மிக மோசமான நிலைமைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.

நம்முடைய சமுதாயத்தில், ஏழை எளியவர்களுடைய கண்களைத் துடைப்பவர், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்பவர்குறைந்து விட்ட காரணத்தால் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள், நம்முடைய ஏழை எளியவர்களுக்கு செல்வங்களை கொடுத்து அவர்களுடைய ஈமானை பறிக்க பார்க்கிறார்கள். நம்முடைய ஏழை எளியவர்கள் உடைய அந்த வறுமையை பயன்படுத்தி அவர்களுடைய மார்க்கத்தை விலை பேசுகிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் குற்றவாளிகள் அவர்களுடைய பலவீனமான ஈமான் மட்டுமல்ல. நம்முடைய சமுதாயத்தில் யாருக்கு அல்லாஹ் செல்வத்தை வசதியைக் கொடுத்து அந்த செல்வத்தை வசதியை ஏழை எளியவர்களுக்கு தேடிச் சென்று செலவழிக்காமல் தங்களுக்கே முடக்கிக் கொள்கின்றார்களோ அவர்களும் அதில் சமமான குற்றவாளிகளாக ஆகுவார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! உள்ளத்திலிருந்து பொருளுடைய ஆசையை, இந்த துன்யாவுடைய மோகத்தை,  அல்லாஹு ரப்புல் ஆலமீன் வெளியேற்றுவானாக! அல்லாஹ் கொடுத்த செல்வத்தை அல்லாஹ்வுடைய பாதையில் அவனுடைய பொருத்தத்தை நாடி வாரி வழங்குவதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ وَأَحْمَدُ بْنُ عُمَرَ الْوَكِيعِيُّ قَالَ حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ يَرْفَعُهُ قَالَ مَا بَيْنَ مَنْكِبَيْ الْكَافِرِ فِي النَّارِ مَسِيرَةُ ثَلَاثَةِ أَيَّامٍ لِلرَّاكِبِ الْمُسْرِعِ وَلَمْ يَذْكُرْ الْوَكِيعِيُّ فِي النَّارِ (صحيح مسلم 5091)

حَدَّثَنَا رِبْعِيُّ بْنُ إِبْرَاهِيمَ قَالَ ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضِرْسُ الْكَافِرِ يَوْمَ الْقِيَامَةِ مِثْلُ أُحُدٍ وَعَرْضُ جِلْدِهِ سَبْعُونَ ذِرَاعًا وَفَخِذُهُ مِثْلُ وَرِقَانَ وَمَقْعَدُهُ مِنْ النَّارِ مِثْلُ مَا بَيْنِي وَبَيْنَ الرَّبَذَةِ (مسند أحمد- 7995)

குறிப்பு 2)

حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ فَيَعْمَلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ قَالُوا فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَوْ لَمْ يَفْعَلْ قَالَ فَيُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ قَالُوا فَإِنْ لَمْ يَفْعَلْ قَالَ فَيَأْمُرُ بِالْخَيْرِ أَوْ قَالَ بِالْمَعْرُوفِ قَالَ فَإِنْ لَمْ يَفْعَلْ قَالَ فَيُمْسِكُ عَنْ الشَّرِّ فَإِنَّهُ لَهُ صَدَقَةٌ (صحيح البخاري 5563 -)

குறிப்பு 3)

حَدَّثَنِي مُحَمَّدٌ أَخْبَرَنَا مَخْلَدٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ سَمِعْتُ عَطَاءً يَقُولُ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَوْ أَنَّ لِابْنِ آدَمَ مِثْلَ وَادٍ مَالًا لَأَحَبَّ أَنَّ لَهُ إِلَيْهِ مِثْلَهُ وَلَا يَمْلَأُ عَيْنَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ (صحيح البخاري 5957 -)

குறிப்பு 4)

صحيح البخاري 1368 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ الْأَنْصَارِ بِالْمَدِينَةِ مَالًا مِنْ نَخْلٍ وَكَانَ أَحَبُّ أَمْوَالِهِ إِلَيْهِ بَيْرُحَاءَ وَكَانَتْ مُسْتَقْبِلَةَ الْمَسْجِدِ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّبٍ قَالَ أَنَسٌ فَلَمَّا أُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ(لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ) قَامَ أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ(لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ) وَإِنَّ أَحَبَّ أَمْوَالِي إِلَيَّ بَيْرُحَاءَ وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ فَضَعْهَا يَا رَسُولَ اللَّهِ حَيْثُ أَرَاكَ اللَّهُ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَخٍ ذَلِكَ مَالٌ رَابِحٌ ذَلِكَ مَالٌ رَابِحٌ وَقَدْ سَمِعْتُ مَا قُلْتَ وَإِنِّي أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الْأَقْرَبِينَ فَقَالَ أَبُو طَلْحَةَ أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِ

குறிப்பு 5)

حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ حَدَّثَنَا مَالِكٌ عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ عَنْ أَبِي الْغَيْثِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّاعِي عَلَى الْأَرْمَلَةِ وَالْمِسْكِينِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ أَوْ الْقَائِمِ اللَّيْلَ الصَّائِمِ النَّهَارَ (صحيح البخاري 4934 -)

குறிப்பு 6)

حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ أَيُّوبَ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْعَبْدَ إِذَا تَصَدَّقَ مِنْ طَيِّبٍ تَقَبَّلَهَا اللَّهُ مِنْهُ وَأَخَذَهَا بِيَمِينِهِ وَرَبَّاهَا كَمَا يُرَبِّي أَحَدُكُمْ مُهْرَهُ أَوْ فَصِيلَهُ وَإِنَّ الرَّجُلَ لَيَتَصَدَّقُ بِاللُّقْمَةِ فَتَرْبُو فِي يَدِ اللَّهِ أَوْ قَالَ فِي كَفِّ اللَّهِ حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ فَتَصَدَّقُوا (مسند أحمد 7314 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/