HOME      Khutba      தவ்பா | Tamil bayan - 46   
 

தவ்பா | Tamil bayan - 46

           

தவ்பா | Tamil bayan - 46


தவ்பா

ஜுமுஆ குத்பா தலைப்பு : தவ்பா

வரிசை : 46

இடம் : மஸ்ஜித் அஹ்லே ஹதீஸ், மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வை பயந்து கொண்டவர்கள் வெற்றியடைந்தார்கள் அல்லாஹ்வை பயந்தவர்கள் நாளை மறுமையில் மாபெரும் அச்சத்தில் இருந்து பாதுகாப்புப் பெறுவார்கள்;நரக வேதனையிலிருந்து அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.

அல்லாஹ்வுடைய பொருத்தம் அவனுடைய மன்னிப்பு அவனுடைய மகிழ்ச்சியை கொண்டு அவர்கள் வெற்றி அடைவார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் :

وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

''மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்''. (அல்குர்ஆன் 24:31)

இந்த வசனம் நமக்கு மாபெரும் ஒரு படிப்பினையைகொடுக்கிறது. நம்மை படைத்த இறைவன் நம்மீது நம்மைவிட கருணைஅன்புபாசம் உள்ளவன்.

நம்மை அழைத்து சொல்கின்றான்; அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் முழுமையாக திரும்பி விடுங்கள்.அல்லாஹ்விடத்தில் உங்களுடைய பாவங்களுக்குரிய மன்னிப்பை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் வெற்றியடைவீர்கள்.

இங்கே அல்லாஹ் ஒரு தனிமனிதனை மட்டும் அழைக்கவில்லை. ஈமானுடைய மக்கள், இஸ்லாமை ஏற்றுக்கொண்ட சமுதாய மக்கள் அனைவரையும் அல்லாஹ் அழைத்து கூறுகின்றான்;முஃமின்களே என்று.

இந்த முஃமின்கள் எங்கு வசித்தாலும், எந்த நாட்டில் வசித்தாலும், அவர்கள் ஒரு பிரிக்க முடியாத சமுதாயம்;ஒற்றுமையை உடைய ஒரு சமுதாயம்.

ஒரு முஸ்லிம் தவறு செய்தால் அந்த தவறுடைய பாதிப்பை எல்லா முஸ்லிம்களும் அனுபவித்தாக வேண்டும். ஒரு முஸ்லிம்பெரும்பாவம் செய்கிறான், அநீதி இழைக்கிறான், குற்றம் புரிகிறான், வட்டி வாங்குகிறான், விபச்சாரம் செய்கிறான், தவறான செயல்களில் ஈடுபடுகிறான், சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறான் என்று சொன்னால், அவன் தனது செயல்களின் பலனை அனுபவிப்பான் என்று நாம் எண்ணிவிடக் கூடாது.

மறுமையில் அவனது பாவத்தின் சுமையை அவன் மட்டும்தான் சுமப்பான், அனுபவிப்பான் என்றாலும், இவ்வுலக வாழ்க்கையை பொறுத்தவரை அல்லாஹ்வுடைய விதி அப்படி கிடையாது.

அல்லாஹ் கூறுகிறான் :

وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

''நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை.நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்''.(அல்குர்ஆன் 8:25)

இந்த வசனம் நமக்கு எதனை உணர்த்துகிறது?ஒரு சமுதாயத்தில் ஒருவன் பாவம் செய்தால், அதனுடைய பிரதிபலனை, அதனுடைய தண்டனையை சமுதாய மக்கள் அனைவரும் அனுபவிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.

ஆகவேதான், ''முஃமின்களே!'' என்று இந்த முழு முஸ்லிம் சமுதாயத்தையும், முழு முஃமின் சமுதாயத்தையும் அல்லாஹ் அழைத்து கூறுகிறான்.

''நீங்கள் எல்லோருமே அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்'' என்று.

ஒரு சில முஸ்லிம்கள் செய்யும் தவறால், குற்றத்தால்ஒட்டுமொத்த சமுதாயமும் சோதனைக்குள்ளாக்கப் படுவார்கள் என்பதை பின்வரும் வரலாற்று சம்பவத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

உஹது போரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நிறைய மூத்த ஸஹாபாக்கள் மற்றும் அபூபக்ர் ஸித்தீக், உமர், உஸ்மான் ரழியல்லாஹுஅன்ஹும்இன்னும் அல்லாஹ்வுடைய அருளை, அவனது அன்பைமேலும் அவனது பொருத்தத்தை பெற்ற எத்தனையோ பெரும் சஹாபாக்கள் இருந்தார்கள்.

அந்த சமுதாயத்தில் ஒரு சிலர், அல்லாஹ்வுடைய தூதரின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கட்டளைக்கு மாற்றமாக நடந்த போது அல்லாஹு தஆலா இறக்கிய சோதனையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அகப்பட்டார்கள்.அவர்களுடன் இருந்த பெரும் பெரும் தோழர்களும் அந்த சோதனையை சந்திக்கும் நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள்.

உஹது போரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஓரிடத்தில் 50-க்கும் மேற்பட்ட நபித்தோழர்களை நிறுத்திவிட்டு அந்த தோழர்களிடம் கூறினார்கள்:

எங்களுடைய ஜனாஸாக்களை (பிரேதங்களை) மிருகங்கள் தின்பதை நீங்கள் பார்த்தாலும் கூட, நான் உங்களுக்கு கட்டளை பிறப்பிக்கும் வரை, அதாவது என்னுடைய கட்டளை உங்களுக்கு வரும்வரை, 'உங்களுடைய இடத்திலேயே தங்கி இருங்கள்'.

ஆனால்,அந்த நபித் தோழர்கள் கனீமத் பொருள்களை பார்த்துவிட்டு, போர் முடிந்துவிட்டது என்று கருதி (நல்ல எண்ணத்தில்தான், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைக்கு அவர்களாகவே ஒரு விளக்கத்தை சொல்லிவிட்டு) அந்த இடத்திலிருந்து இறங்குகிறார்கள். அங்கே அல்லாஹ்வுடைய தூதரின் கட்டளைக்கு  மாற்றம் நடந்தது.

அல்லாஹ் கூறுகின்றான் :

فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ

''ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்".(அல்குர்ஆன்24 : 63)

மேற்கூறப்பட்ட இந்த வசனத்தின் மூலம்,ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கட்டளைக்கு மாறு செய்தால் அல்லாஹ்வுடைய தண்டனை வரும் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

ஒரு சிலரது செயலின் வெளிரங்கத்தில் ஏற்பட்ட தவறால், குற்றத்தால் அல்லாஹ் இறக்கிய தண்டனை அவர்களை மட்டுமன்றி எல்லா முஸ்லிம்களையும் சூழ்ந்து கொண்டது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைகளில் ஒரு கட்டளைக்கு மாற்றம் செய்த காரணத்தால் அந்த சமுதாயம் பெரும் சோதனைக்கு உள்ளானதை இந்த உஹது வரலாற்றின் சம்பவத்திலிருந்து நாம் பெறக்கூடிய பாடம் ஆகும்.

அடுத்து குண ரீதியாக, கல்பு என்று சொல்லக்கூடிய மனதளவில் செய்யக்கூடிய பாவத்திற்கும் ஒரு பெரிய பாதிப்பை இந்த உலகத்திலேயே சந்தித்தாக வேண்டும்.

நம்மில் பலர் எண்ணுவது என்ன? செயல் வடிவ குற்றத்தை மட்டுமே குற்றமாக பார்க்கிறோம். ஆனால்,மனதளவில் செய்யக் கூடிய பாவங்களை நாம் பாவங்களாக பார்ப்பது கிடையாது.

தர்காவிற்கு செல்வது, கோயில்களுக்குச் செல்வது, தாயத்துக்கள் அணிவது, அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு நேர்ச்சை செய்வது, அறுத்து பலியிடுவது போன்ற இவைகளையெல்லாம் ஷிர்க்காக (இணைவைப்பாக) பார்க்கும் பலர்,

தவக்குல் வைப்பது அதாவது அல்லாஹ்வின் மீது பொறுப்பு சாட்டுவது, அல்லாஹ்வை பயப்படுவது, அவனை நேசிப்பது, அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பது போன்ற உளரீதியான வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

சில மக்கள், நீங்கள் இல்லை என்றால் நான் அழிந்து விடுவேன், உங்களால் தான் இந்த காரியத்தை எனக்கு செய்து தர முடியும், நான் உங்களைத்தான் முழுமையாக நம்பி இருக்கிறேன் என்று அல்லாஹ்விடம் சொல்ல வேண்டிய வார்த்தைகளை எல்லாம் மனிதர்களிடம் சொல்கிறார்கள். இதுவும் பெரிய ஷிர்க்குடைய வகைகள் தான்.

அல்லாஹ் கூறுகின்றான் :

وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

''நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்". (அல்குர்ஆன்5:23)

வியாபாரம் செய்யலாம், தொழில் செய்யலாம், மருத்துவரை அணுகலாம். ஆனால்,ஒரு முஸ்லிம் மனரீதியாக யாரை சார்ந்திருக்க வேண்டும் என்றால்,அது அல்லாஹ்வை மட்டும்தான்.

எவர் ஒருவர் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை மனதளவில் சார்ந்து இருக்கிறாரோ அவர்,அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராகி விடுகிறார்.

அதேபோன்று,தற்பெருமை கொள்வது, பொறாமைப்படுவது, ஒரு முஸ்லிமின் மீது தவறான எண்ணத்தை சுமந்திருப்பது,இவை எல்லாமே மனதளவில் ஏற்படக்கூடிய   பாவங்கள் தான்.

இந்த பாவங்களுக்காகவும் நமக்கு தண்டனை வரலாம். அதைத்தான் ஹுனைன் உடைய போர் நமக்கு கற்றுத்தருகிறது.

ஹுனைன் போரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸஹாபாக்களை அழைத்துக் கொண்டு செல்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கிருந்த தோழர்களில் சிலர், நாம் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறோம்.

இதுவரை நடந்த போர்களில் குறைவான எண்ணிக்கையில் வெற்றிகளை சந்தித்த நாம், இந்த போரிலோ இவ்வளவு அதிக எண்ணிக்கை இருப்பதால் நிச்சயமாக நாம் வெற்றிபெறுவோம் என்று மனதளவில் பெருமையாக நினைத்தார்கள். இது மனதளவில் செய்த குற்றம்.

அல்லாஹ் வானத்திலிருந்து தான் இறக்க வேண்டிய உதவியை நிறுத்திக்கொண்டான்.  இதைத்தான் அல்லாஹ் கீழ்காணும் வசனத்தில் சொல்லிக் காட்டுகின்றான் :

لَقَدْ نَصَرَكُمُ اللَّهُ فِي مَوَاطِنَ كَثِيرَةٍ وَيَوْمَ حُنَيْنٍ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْئًا وَضَاقَتْ عَلَيْكُمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُمْ مُدْبِرِينَ

பல போர்க்களங்களில் (உங்கள் எண்ணிக்கைக் குறைவாக இருந்தும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். எனினும், ஹுனைன் போர் அன்று உங்களை பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த உங்கள் அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அதுசமயம் அது) உங்களுக்கு மிக நெருக்கமாகி (குறுகி) விட்டது. நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள்.(அல்குர்ஆன்9 : 25)

தம்மிடம் இருப்பதைக் கொண்டு பெருமை கொள்வதை அரபியில் عجبஎன்று சொல்வார்கள். عجبஎன்பது மனதில் இருக்கக்கூடிய ஒரு தன்மை. இந்த தன்மைக்காக வேண்டி தான் அவர்களை அல்லாஹ் சோதித்தான்.

அல்லாஹ்வின் உதவியை அவன் தடுத்து கொண்ட போது,அங்கே முஸ்லிம்கள் சிதறி விட்டார்கள், பின்வாங்கினார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இந்த சம்பவத்தில், ஒரு சிலருடைய இந்த எண்ணத்தால் எல்லா முஸ்லிம்களுக்கும் அங்கே பாதிப்பு ஏற்பட்டுவிட்டது.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்களும் ஒரு சில தோழர்களும் மைதானத்தின் நடுவில் நின்றுகொண்டு மக்களே! வாருங்கள் வாருங்கள் என்று அழைத்து கொண்டிருந்தார்கள்.

இன்றைய நம்முடைய சமுதாய மக்களை நாம் பார்த்தோமென்றால் குர்ஆனிலிருந்து, ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையில் இருந்து வரலாற்றில் இருந்துபாடத்தை படிப்பினையை பெறாத காரணத்தால், மக்கள் மார்க்கக் கட்டளைகளை பேணுவதில், நன்மையை ஏவுவதில் தீமையைத் தடுப்பதில் அலட்சியமாக இருக்கிறார்கள்.

யார் என்ன செய்தால் நமக்குஎன்ன? அதனால் நமக்கு என்ன பாதிப்பு? என்று அலட்சியமாக இருக்கிறார்கள்.

அவ்வாறு இல்லை,நம்முடைய சமுதாயத்தில் ஒரு முஸ்லிம் தவறு செய்தால் அதனுடைய தண்டனையை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எல்லா சமுதாய மக்களுக்கும் இறக்கி விடுவான்.

இதைத்தான் அல்லாஹ் (24:31) வது வசனத்தில் நமக்குச் சொல்லிக் காட்டுகின்றான்;நீங்கள்  எல்லோரும் தவ்பா செய்யுங்கள் உங்களுடைய சமூகத்தை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று.

உங்களுடைய சமுதாயத்தை சுத்தமான சமுதாயமாக ஆக்கிக் கொள்ளுங்கள். பாவங்களை விட்டு திருத்துங்கள். நீங்கள் தவறு செய்துவிட்டு அல்லாஹ்விடம் தவ்பா செய்யவில்லை என்றால் நீங்கள் வெற்றி அடைய முடியாது.

முழு சமுதாயமாக சேர்ந்து தவ்பா செய்யுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். முழு சமுதாயமும் சேர்ந்து அல்லாஹ்வின் பக்கம் வாருங்கள் நீங்கள் வெற்றி அடைவீர்கள் என்று சொல்கிறான்.

இன்று, சமுதாயத்தை திருத்த வேண்டிய கடமை நம்மிடம் இருக்க, தவ்ஹீதை பற்றி சொல்ல வேண்டிய கடமை நம்மிடம் இருக்க, பெரும் பாவங்களை கண்டிக்க வேண்டிய கடமை நம்மிடம் இருக்க, இவற்றையெல்லாம் விட்டுவிட்டு இஸ்லாமை ஈமானை முழுமையாக சரிவர உறுதிப்படுத்தாமல், ஈமானுடைய இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு ஈமான் இஸ்லாம் உறுதிப் படுத்தப்படாமல், ஈமான் இஸ்லாம் தூய்மைப்படுத்தப்படாமல் பாவங்களை விட்டு இந்த சமுதாயம் பாதுகாக்கப்படாமல் இருக்கும் நிலையில் வெற்றிக்காக செய்யக்கூடிய எல்லா முயற்சிகளும் வீணானவையே. அவை  அல்லாஹ்விடத்தில் எந்த பலனையும் அளிக்காது.

ஏனென்றால், அல்லாஹ் சொல்கின்றான், நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் அல்லாஹ்விடத்தில் தவ்பா செய்யுங்கள். சுத்தமான சமுதாயமாக நீங்கள் வாழுங்கள்.

தவ்பா இருக்க வேண்டும். நம்முடைய முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாவங்கள் செய்பவர்கள் இருக்கக்கூடாது. அப்படி ஒருவர் செய்தாலும், அவர் உடனடியாக அல்லாஹ்விடம் தவ்பா கேட்டு வந்துவிட வேண்டும்.

அதாவது அல்லாஹ்வுடைய அச்சமும், தான் செய்வது பாவமாக இருந்தால் அந்தப் பாவத்தைப் பற்றிய பயமும், இந்த சமுதாய மக்கள் எல்லோரிடமும் நிரப்பமாக இருக்க வேண்டும்.

இந்த நம்பிக்கை, அச்சம், ஈமானிய உணர்வு நம்மில் எத்தனை பேரிடம் இருக்கிறது என்பதனை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தவ்பா என்றால் என்ன? அல்லாஹ்விடம் மீளுதல் என்றால் என்ன?

அல்லாஹ் கூறுகின்றான் :

تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا

கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள். (அல்குர்ஆன் 66 : 8)

ஒரு முஸ்லிம், தன்னுடைய உள்ளத்தால் தான் செய்த தவறைபாவத்தை எண்ணி வருந்தி, அல்லாஹ்வின் பக்கம் வந்து விடுவது. யா அல்லாஹ்! நான் செய்த பாவத்திற்காக உன்னிடத்தில் மன்னிப்பு கேட்கிறேன்.

என்னை மன்னிப்பவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை; நீதான் என்னுடைய பாவங்களை மன்னிக்கக் கூடியவன்.

ஒரு மனிதன் தவறு செய்வது என்பது இயற்கை. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹீஹ் முஸ்லிமுடைய ஒரு அறிவிப்பில் கூறுகிறார்கள் :

அல்லாஹ் கூறுகின்றான் :

يَا عِبَادِي إِنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ، وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ

"என் அடியார்களே! நீங்கள் பகலிலும் பாவம் செய்கிறீர்கள், இரவிலும் பாவம் செய்கிறீர்கள். நான்,பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பவன். என்னிடத்தில் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள், நான் உங்களை மன்னித்து விடுகிறேன்".

அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2577.

இதே ஹதீஸ் ஸுனன் இப்னுமாஜா வில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

يا عِبادي كلُّكم مُذنبٌ إلَّا مَن عافَيْتُ

"என் அடியார்களே! நீங்கள் எல்லோரும் பாவம் செய்பவர்கள் தான்,நான் யாரை பாதுகாத்தேனோ அவர்களை தவிர."

ஆகவேதான் புகாரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி தங்களுடைய ஸஹீஹ் நூலில் ஒரு பாடத்தை அமைக்கிறார்கள்;

بابالمعصوممنعصمالله

பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்,யாரை அல்லாஹ் பாதுகாத்தானோ  அவர்தான்.

அதாவது,அல்லாஹ்வுடைய பாதுகாப்பு இல்லாமல், அல்லாஹ்வுடைய அருள் இல்லாமல் நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது.

இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு திக்ராக சொல்லித் தருகிறார்கள். ‘‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் -அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச் செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ (மனிதனால்) முடியாது”

இறைத்தூதர்கள் இந்த வார்த்தையை சொன்னார்கள் ;

وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ

"மேலும் நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்." (அல்குர்ஆன் 11 : 88)

ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவர்களுடைய சமூதாய மக்கள் ஒன்று நீங்கள் குஃப்ர்க் (இறைமறுப்பிற்)கு திரும்ப வந்துவிடவேண்டும், ஷிர்க்குக்கு (இணைவைப்பிற்கு) திரும்ப வந்துவிட வேண்டும்.

இல்லையென்றால் உங்களை ஊரைவிட்டு வெளியேற்றி விடுவோம் என்று நிர்பந்தப்படுத்துகின்றார்கள், எச்சரிக்கின்றார்கள். அந்த நேரத்தில் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் சொன்னார்கள் :

قَدِ افْتَرَيْنَا عَلَى اللَّهِ كَذِبًا إِنْ عُدْنَا فِي مِلَّتِكُمْ بَعْدَ إِذْ نَجَّانَا اللَّهُ مِنْهَا وَمَا يَكُونُ لَنَا أَنْ نَعُودَ فِيهَا إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّنَا

"உங்கள் மார்க்கத்தை விட்டு; அல்லாஹ் எங்களைக் காப்பாற்றி விட்டபின், உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்தவர்களாகி விடுவோம்". (அல்குர்ஆன்7 : 89)

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சமுதாய மக்கள் இப்ராஹீமை பார்த்துக் கேட்கிறார்கள்: இந்த சிலைகளை நீங்கள் பயப்பட மாட்டீர்களா? என்று. அதற்கு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் சொல்கின்றார்கள் :

وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُمْ بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ عَلَيْكُمْ سُلْطَانًا فَأَيُّ الْفَرِيقَيْنِ أَحَقُّ بِالْأَمْنِ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ

"உங்களுக்கு அவன் எந்த அத்தாட்சியும் இறக்கி வைக்காமலிருக்கும்போது நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது பற்றி பயப்படவில்லை - அப்படியிருக்க நீங்கள் (அவனுக்கு) இணைவைப்பவற்றுக்கு நான் எப்படி பயப்படுவேன்? நம் இருபிரிவினரில் அச்சமின்றி இருக்கத்தகுதி உடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், (கூறுங்கள் எனவும் கேட்டார்)". (அல்குர்ஆன்6 : 81)

அல்லாஹ்வின் நாட்டமின்றி நான் எப்படி இந்த சிலைகளை பயப்படுவேன் என்று இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள்.

இங்கே அவர்கள் அல்லாஹ் நாடினாலே தவிர,இந்த சிலைகள் என்னை ஒன்றும் செய்யாது. அந்த சிலைகளை கொண்டு எனக்கு எதுவும் ஆகப் போவது கிடையாது. அந்த சிலைகளை விட்டு நான் விலகிக் கொண்டேன் என்று சொல்லும் போது, அல்லாஹ் நாடாமல் இது என்னால் முடியாது என்று சொல்கிறார்கள்.

இன்று நம்மில் பலர்,தன்னுடைய வணக்க வழிபாடுகளை கொண்டு, தன்னுடைய அமல்களை கொண்டு பெருமைப்படும் பொழுதுதான் அவர்கள் சோதிக்கப் படுகின்றார்கள்.

நன்மை செய்து கொண்டிருக்கக் கூடிய ஒரு மனிதர்,பாவத்தைக் கொண்டு எப்போது சோதிக்கப்படுகிறார் என்று சொன்னால், அவர் தன்னுடைய நன்மையைக் கொண்டு நான் எவ்வளவு அமல்கள் செய்கிறேன்? என்னுடைய வணக்க வழிபாடுகள் என்ன? என்று அவர் தன்னுடைய நன்மையை பார்த்து பெருமை கொள்ளும் போது, இதை அல்லாஹ்வின் பக்கம் சேர்க்காமல், அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டினான், அல்லாஹ் எனக்கு அருள் செய்தான், அதன் மூலமாக எனக்கு இது கிடைக்கப்பெற்றது என்று அல்லாஹ்வைப் புகழ வேண்டிய நேரத்தில் தன்னை பார்த்து பெருமை கொண்டால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய தவ்ஃபீக்கை -அருளை அங்கே எடுத்துக் கொள்கிறான். அங்கே அவர்கள் பாவத்தைக் கொண்டு சோதிக்கப்படுகிறார்கள்.

ஆகவேதான், அல்லாஹ் சொல்கின்றான்: ஏதேனும் ஒரு வகையில் நீங்கள் அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்கள் தான். நான் யாரை பாதுகாத்தேனோ அவர்களை தவிர. 

என்னிடத்தில் நீங்கள் மன்னிப்பு கேளுங்கள், நான் உங்களை மன்னித்து விடுகிறேன். உங்களில் யார் என்னிடத்தில் மன்னிப்பு கொடுப்பதற்கு எனக்கு ஆற்றல் இருக்கிறது என்பதை அறிந்து, என்னுடைய ஆற்றலை கொண்டு என்னிடம் மன்னிப்பு கேட்கிறாரோ நான் அவரை மன்னித்து விடுகிறேன்.

எனது இறைவன் என்னை மன்னிப்பான், என்னுடைய குற்றங்களைப் பொறுத்துக் கொள்வான், என்னை தன் பக்கம் நெருக்கி கொள்வான் என்று ஒரு அடியான் நினைக்கும் பொழுது, அல்லாஹ்விடம் உறுதி கொள்ளும் பொழுது, அல்லாஹ் அவனுடைய பாவங்களை மன்னித்து விடுகின்றான்.

அதுமட்டுமல்ல அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ் சொல்வதாக சொன்னார்கள்:

" قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: يَا ابْنَ آدَمَ إِنَّكَ مَا دَعَوْتَنِي وَرَجَوْتَنِي غَفَرْتُ لَكَ عَلَى مَا كَانَ فِيكَ وَلَا أُبَالِي، يَا ابْنَ آدَمَ لَوْ بَلَغَتْ ذُنُوبُكَ عَنَانَ السَّمَاءِ ثُمَّ اسْتَغْفَرْتَنِي غَفَرْتُ لَكَ، وَلَا أُبَالِي، يَا ابْنَ آدَمَ إِنَّكَ لَوْ أَتَيْتَنِي بِقُرَابِ الأَرْضِ خَطَايَا ثُمَّ لَقِيتَنِي لَا تُشْرِكُ بِي شَيْئًا لَأَتَيْتُكَ بِقُرَابِهَا مَغْفِرَةً "

"ஆதமுடைய மகனே நீ என்னை அழைத்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம், நீ என் மீது நம்பிக்கை வைத்து இருக்கும் காலமெல்லாம்நான் உன்னை மன்னித்து கொண்டே இருப்பேன். உன்னிடம் எந்த தவறு இருந்தாலும் சரியே".

எப்படிப்பட்ட ஆதரவுடைய வாசகங்களை அல்லாஹ் நமக்கு சொல்லுகின்றான் பாருங்கள். உன்னிடம் எந்த பாவம் இருந்தாலும் சரி, எந்த தவறு இருந்தாலும் சரி,நான் மன்னிப்பேன் என்ற ஆதரவுடனே எனது மன்னிப்பை தேடி என்னிடத்தில் நீ மன்னிப்பு கேட்டால் உன்னை நான் மன்னித்து விடுவேன். எதைப் பற்றியும் நான் பொருட்படுத்த மாட்டேன்.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :

ஆதமின் மகனே! உன்னுடைய பாவங்கள் பூமியிலிருந்து வானம் வரை வந்துவிட்டாலும், நீ செய்த பாவங்களின் எண்ணிக்கை பூமியிலிருந்து வானத்தின் முகட்டைத் தொட்டுவிட்டாலும் கூட, பிறகு என்னிடத்தில் நீ மன்னிப்பு கேட்டுவிட்டால், அல்லாஹ்வுடைய அருளை பாருங்கள்;யா அல்லாஹ்!நான் தவறு செய்துவிட்டேன்,எனக்கு நான் அநீதி இழைத்துக் கொண்டேன், உனக்கு மாறு செய்து உனக்கு நான் அநீதி இழைக்கவில்லை.

மாறாக,எனக்கே நான் அநீதி இழைத்துக் கொண்டேன். எனது நஃப்ஸுக்கு நான் அநீதி இழைத்துக் கொண்டேன் என்று அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கும் பொழுது, அல்லாஹ் சொல்லுகின்றான்.

நான் உன்னை மன்னித்து விடுவேன்,நான் எதைப்பற்றியும் பொருட்படுத்த மாட்டேன் என்று.

ஆதமுடைய மகனே! பூமி நிரம்ப பாவங்கள் செய்து நீ என்னிடத்தில் அந்த பாவங்களையெல்லாம் கொண்டு வருகிறாய். ஆனால்,உன்னிடம் ஷிர்க்  இல்லையென்றால்,நீ எனக்கு யாரையும் இணை வைக்காத நிலையில் நீ என்னிடம் வந்து விட்டால், நான் இந்த பூமி நிரம்ப உனக்கு மன்னிப்பை வழங்குவேன்.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் :3540.

பாவம் செய்யக்கூடிய அடியார்களை அல்லாஹ் மன்னிக்க தயாராக இருக்கிறான், எப்போது அவர்கள் தங்களுடைய பாவத்திலிருந்து மீளுகிறார்களோ அல்லாஹ்விடத்தில் தங்கள் பாவங்களுக்காக மன்னிப்பு கேட்கிறார்களோ அப்பொழுது.

ஷைத்தான் அல்லாஹ்விடத்தில் சவால் செய்து வந்துள்ளான்.

قَالَ فَبِعِزَّتِكَ لَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ (82) إِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ

அப்பொழுது "உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்" என்று (இப்லீஸ்) கூறினான்; (எனினும்) அவர்களில் அந்தரங்க சுத்தியான உன் அடியார்களைத் தவிர" (என்றான்).(அல்குர்ஆன்38:82,83)

குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ், ஷைத்தான் செய்து வந்த அந்த சவாலைப் பற்றி கூறுகிறான்:

ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ

"பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காணமாட்டாய்" (என்றும் கூறினான்). (அல்குர்ஆன்7 : 17)

நிச்சயமாக உன்னுடைய அடியார்களை நான் வழி கெடுப்பேன். அவர்களை ஷிர்க்கி( இணைவைப்பி)ல் தள்ள பார்ப்பேன், அவர்களை நான் உன்னுடைய நேரான மார்க்கத்திலிருந்து வழிகெடுக்க பார்ப்பேன். குஃப்ரின் (இறைமறுப்பின்) பக்கம் கொண்டு செல்ல பார்ப்பேன். அதில் அவர்கள் என்னிடம் இருந்து தப்பித்து விட்டால், அவர்களைப் பெரும் பாவங்களை கொண்டு வழிகெடுக்க முயற்சி செய்வேன்.

இந்த எல்லாப் பாவங்களிலிருந்தும் நமக்கு விடுதலை தான் தவ்பா, இஸ்திக்ஃபார்.அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு கேட்பது, அல்லாஹ்விடத்தில் திரும்புவது.

அபூ ஸயீத் குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :

عن أبی سعید الخدری رضی الله عنه قال : قال رسول الله صلی الله علیه و سلم: " إن الشیطان قال : و عزتک یا رب لا أبرح أغوی عبادک ما دامت أرواحهم فی أجسادهم

இப்லீஸ் அல்லாஹ்விடத்தில் சவால் விடுகிறான், அல்லாஹ்விடத்தில் சொல்கின்றான்:

உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக! உன்னுடைய அடியார்களை நான் வழி கெடுத்துக் கொண்டே இருப்பேன், அவர்களது உடல்களில் உயிர் இருக்கும் வரை, அவர்களது உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும் வரை, அவர்களின் கடைசி மூச்சு வரை அவர்களை வழிகெடுக்க நான் முயற்சி செய்து கொண்டே இருப்பேன்.

(அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும். அந்த ஷைத்தானுடைய சூழ்ச்சிகளை விட்டு  அல்லாஹ்விடத்தில் நாம் பாதுகாப்பு தேட வேண்டும்.)

அல்லாஹ்  அதற்கு பதில் கூறினான் :

فَقَالَ الرَّبُّ عَزَّ وَجَلَّ: «لَا أَزَالُ أَغْفِرُ لَهُمْ، مَا اسْتَغْفَرُونِي»

அல்லாஹ் கூறுகிறான்: எனது கண்ணியத்தின் மீது, மரியாதையின் மீது, எனது மதிப்பின் மீது, எனது உயர்வின் மீது சத்தியமாக அவர்கள் என்னிடத்தில் மன்னிப்பு கேட்கிற காலமெல்லாம் நான் அவர்களை மன்னித்து கொண்டே இருப்பேன். 

அறிவிப்பாளர் : அபூ ஸயீத் குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் :11729.

எத்தனை முறை அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்டாலும் சரி, அல்லாஹ் மன்னித்துக் கொண்டே இருப்பான். உள்ளத்தில் தூய்மையான எண்ணம் இருக்க வேண்டும். உள்ளத்தில் அல்லாஹ்வின் பக்கம் திரும்பவேண்டும், தான் செய்த தவற்றை கொண்டு அல்லாஹ் தன்னை தண்டித்து விடக்கூடாது என்று அல்லாஹ்வுடைய அச்சம் இருக்க வேண்டும்.

சிலர் தவ்பா இஸ்திக்ஃபார் செய்வார்கள், பயமில்லாமல் அச்சமில்லாமல், நாவு மட்டுமே அந்த வார்த்தையை சொல்லும்,உள்ளத்தில் துடிப்பு இருக்காது, உள்ளத்தில் கவலை இருக்காது, உள்ளத்தில் தான் செய்த தவற்றைப் பற்றி வருத்தம் இருக்காது, தவறு செய்தது பற்றி அவருக்கு அல்லாஹ்விடத்தில் வெட்கம் இருக்காது.

தன்னுடைய தவறை எண்ணி அவர் வருந்த வேண்டும். இந்த வருத்தம் இல்லாமல் வெறும் நாவு மட்டும் சொல்லக்கூடிய அந்த வார்த்தை,வெறும் நாவால் மட்டும் கூறும் அந்த மன்னிப்பை அல்லாஹ் பொருட்படுத்துவது கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்:

அலட்சிய நிலையில் இருக்கும் உள்ளத்திலிருந்து பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

தவ்பா என்பது துஆ உடைய ஒரு வகை. எனவே இந்த தவ்பா, இஸ்திக்ஃபார் செய்யும் போது நம்முடைய உள்ளத்தில் அதற்குண்டான துடிப்பு, அதற்குண்டான கவலை இருக்க வேண்டும்.

அல்லாஹ் பல இடங்களில் இதை நமக்கு சொல்லுகின்றான்:

وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ (135) أُولَئِكَ جَزَاؤُهُمْ مَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ وَجَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ

தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும். உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள். அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சுவனபதிகளும் ஆகும்;. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்;. அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்;. இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது. (அல்குர்ஆன்3:135,136)

மேலும், அல்லாஹ் சொல்கின்றான்:

إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِنَ الشَّيْطَانِ تَذَكَّرُوا فَإِذَا هُمْ مُبْصِرُونَ

நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் - அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள். (அல்குர்ஆன்7:201)

ஒரு அடியான் தனது உள்ளத்தால் அல்லாஹ்வின் பக்கம் மீளும்போது அல்லாஹு ரப்புல் ஆலமீன் மிகப் பெரிய மகிழ்ச்சி அடைகிறான்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் :

அல்லாஹு தஆலா தன்னுடைய அடியான் தன்னிடம் தவ்பா கேட்டு திரும்பும்பொழுது மிகப்பெரிய சந்தோஷம் அடைகின்றான். மிக மகிழ்ச்சி அடைகின்றான்.

எல்லா சமுதாய மக்களுக்கும் தூதர்கள் வந்த பொழுது, அந்த தூதர்கள் அல்லாஹ்வை வணங்குங்கள் என்றும் அல்லாஹ்விற்கு எதனையும்யாரையும் இணையாக்காதீர்கள்  என்றும் சொன்னார்கள்.

அந்த அழைப்புடனே, தவ்பா, இஸ்திக்ஃபார் செய்யுங்கள் என்ற அழைப்பையும் சேர்த்து சொன்னார்கள் என்பதை குர்ஆனில் நாம் பார்க்கிறோம்.

நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தம்முடைய சமுதாய மக்களுக்கு கூறினார்கள் :

فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا

மேலும், "நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்" என்றுங் கூறினேன். "(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். "அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான். (அல்குர்ஆன்71: 10-12)

அல்லாஹ் மிகப்பெரிய மன்னிபாளன். அவனுடைய மன்னிப்பின் அளவை நீங்கள் கணக்கிடவே முடியாது. அதை நீங்கள் மதிப்பிட முடியாது, அவ்வளவு பெரிய மன்னிப்பாளன். நீங்கள் தவ்பா கேட்டால் அதனுடைய பலனை மறுமையில் நீங்கள் அனுபவிப்பது ஒரு புறமிருக்க,(இன்று நம்மில் பலர், இந்த உலக வாழ்க்கையில் உடனடியாக அதனுடைய முடிவை கேட்கிறார்கள் அல்லவா)

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தனது தூதர்கள் மூலமாக நம்மிடம் சொல்லுகின்றான்: யார் மார்க்கத்தை முழுமையாக பின்பற்றி தவ்பா செய்து, பெரும் பாவங்களை விட்டுவிலகினால், இந்த உலகத்திலும் அல்லாஹ் நம்முடைய பெரிய தேவையாகிய ரிஸ்க்குடைய தேவையை இலேசாக்கி விடுவான்.

அல்லாஹ் சொல்கின்றான் :

وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَكِنْ كَذَّبُوا فَأَخَذْنَاهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ

நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் - பரகத்துகளை - பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம். (அல்குர்ஆன்7 : 96)

இன்று நாம் பார்க்கிறோம், பலர் வியாபாரங்கள் செய்கிறார்கள், தொழில் செய்கிறார்கள், அதில் பெரிய முயற்சி எடுக்கிறார்கள்.ஆனால்,அவர்களுடைய தொழில் துறைகளில் பரக்கத் இல்லாமல் இருப்பதை, அல்லாஹ்வுடைய கருணை இல்லாமல் இருப்பதை நாம் பார்க்கும்பொழுது அங்கே நாம் புரிந்துகொள்ளலாம்;

ஏதோ ஒருவிதமான கல்பு சார்ந்த அல்லது செயல் ரீதியான ஒரு பெரும் பாவத்தில் அவர்கள் பீடிக்கப் பட்டிருக்கிறார்கள். காரணம்,அல்லாஹ் கூறுகின்றான்;தவ்பா கேட்டால் அல்லாஹ் பரக்கத்துகளை கொடுப்பான் என்பதாக.

நூஹ் அலைஹிஸ்ஸலாம் சொல்கின்றார்கள் :

நீங்கள் தவ்பா கேட்கும்பொழுது, அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு கேட்கும் பொழுது உங்களுக்கு தேவையான மழையை அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைப்பான்.

இன்று நாம் பார்க்கும் பொழுது, மழை நமக்கு வேதனையாக அமைகிறது. மழை வராமல் இருக்கும் போதும் சரி அல்லது வந்தாலும் சரி. மழை வந்தால் அல்லாஹ் அதை அளவைவிட அதிகமாக இறக்கி மக்களை தண்டிப்பதை பார்க்கிறோம்.

இல்லை என்று சொன்னால் மழையை இறக்காமல், பஞ்சத்தை கொண்டு அல்லாஹ் தண்டிப்பதை நாம் பார்க்கிறோம்.

இதற்கு காரணம்,இன்றைய சமுதாய மக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய அளவில் மலிந்து கிடக்கிற வட்டி வாங்குதல், விபச்சாரம் செய்தல், தவறான பழக்க வழக்கங்கள், ஏழை எளியவர்களின் மீது அநியாயம் செய்தல், ஜகாத் கொடுக்காமல் இருத்தல், ஸதக்கா செய்யாமல் இருத்தல், உறவினர்களை அனுசரித்து அவர்களிடம்அன்புடன்பாசத்துடன் அவர்களுக்கு உதவி செய்து வாழாமல் இருத்தல்.

இது போன்ற பெரும் பாவங்கள் இன்று மக்களுக்கு அல்லாஹ்வுடைய தண்டனையை, வேதனையை வெகு இலகுவாக வாங்கித் தருகின்றன. 

அல்லாஹ்வுடைய இந்த அருளை பாருங்கள், தவ்பா கேட்கும் காரணத்தால் இந்த உலக வாழ்க்கையையும் அல்லாஹ் நமக்கு செழிப்பாக்குகின்றான். அது மட்டுமா? அல்லாஹு ரப்புல் ஆலமீன் தவ்பா செய்பவர்களை நேசிக்கின்றான். தன்னுடைய அளப்பரிய அன்பை அல்லாஹ் அவர்களுக்கு தருகின்றான்.

அல்லாஹ் கூறுகின்றான் :

إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ

"பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்;. இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்."(அல்குர்ஆன்2 : 222)

மேலும்,அல்லாஹ் சொல்கின்றான் :

وَهُوَ الَّذِي يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ

அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை -பாவ மன்னிப்புக் கோறுதலை ஏற்றுக் கொள்கிறான். (அல்குர்ஆன்42 : 25)

அல்லாஹ் தன்னுடைய அடியார்களிடம் இருந்து தவ்பாவை ஏற்றுக் கொள்கின்றான், அங்கீகரிக்கின்றான். உன்னை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்று யாருமே சொல்ல முடியாது.

அல்லாஹ் கேட்கின்றான்;என் மீது சத்தியம் செய்து சொன்னவன் யார்? நான் இன்னாரை   மன்னிக்கமாட்டேன் என்று, அவரை மன்னித்து விட்டேன். மன்னிக்க மாட்டேன் என்று கூறிய குற்றத்திற்காக உன்னை தண்டனை செய்வேன் என்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.

அல்லாஹ்,தனது ரஹ்மத் உடைய வாசல்களைத் திறந்து வைத்து, எல்லா பாவிகளையும், எல்லா குற்றவாளிகளையும் அவர்கள் எந்த வகையில் தவறு செய்திருந்தாலும் சரி, அவர்களை அல்லாஹ் அழைக்கின்றான்:

قُلْ يَاعِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

"என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்" (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.(அல்குர்ஆன்39 : 53)

அல்லாஹ்விடம்நீங்கள் பாவமன்னிப்பு கேட்கும் பொழுது, அவன் உங்களுடைய எல்லா பாவங்களையும் மன்னித்து விடுவான்.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் நடந்த மிகப் பெரும் சம்பவத்தை நாம் பார்க்கின்றோம்.

ஜுஹைனா குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வருகிறார்கள். ஜினாவின் மூலம் அவர்கள் கர்ப்பமாகிவிட்டார்கள். அவர்கள் சொன்னார்கள்;அல்லாஹ்வின் தூதரே! தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை நான் செய்து விட்டேன். அதனுடைய தண்டனையை நீங்கள் எனக்கு நிறைவேற்றுங்கள்.அதாவது நான் ஜினா செய்துவிட்டேன், அதற்குரிய தண்டனையை நீங்கள் என் மீது நிறைவேற்றுங்கள் என்று நபியவர்களிடம் கூறினார்கள்.

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த பெண்ணுடைய பொறுப்பாளரை வரவழைத்து சொல்லுகிறார்கள்;இந்த பெண்ணை அழகிய முறையில் பராமரித்து, இந்தப் பெண்குழந்தையை பெற்றெடுத்ததற்கு பிறகு அவளை என்னிடத்தில் நீ அழைத்துவா! என்று.

அவரும் அதே போன்று செய்தார். அந்த பெண்குழந்தையை பெற்றெடுத்ததற்குப் பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அழைத்து வருகிறார்கள். 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கட்டளை இடுகிறார்கள், அந்த பெண்ணின் மீது அவளது முழுமையான ஆடை அணிவிக்கப்படுகிறது. அவர்களை அழைத்து செல்கிறார்கள். குழி தோண்டப்படுகிறது. அங்கே அவளை இடுப்பளவு புதைக்கப்பட்டு, அவளை கல்லெறிந்து கொல்ல வேண்டிய தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

அந்த தண்டனையில் அந்த பெண்மணி இறந்தும் விடுகிறார். பிறகு அவர்களை எடுக்கப்பட்டு, அந்த பெண்ணை அடக்கம் செய்ய நபியவர்கள் கட்டளையிடுகின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த பெண்ணிற்கு தொழுகையை நடத்த செல்லும் பொழுது உமர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் கேட்கின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதரே! இந்தப் பெண்ணுக்கா நீங்கள் தொழுகை நடத்த செல்கின்றீர்கள்? அவள் ஜினா செய்து விட்டாளே! என்று கூறும்பொழுது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

உமரே! உமக்குத் தெரியுமா? அல்லாஹ்விடத்தில் அந்தப் பெண் கேட்ட பாவமன்னிப்பு, அல்லாஹ்விடத்தில் அந்தப் பெண்ணுடைய பாவமன்னிப்பின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? அந்த தவ்பாவை மதீனாவில் உள்ள 70பேருக்கு பங்கு வைத்து கொடுத்தாலும், அந்த எழுபது பேருடைய பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுவான்.

பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

தான் அழிவோம், தான் இப்படி கல்லெறிந்து கடுமையான வேதனையைக் கொண்டு தண்டிக்கப்படும் என்று தெரிந்திருந்தும் கூட,அல்லாஹ்விற்காக, மறுமையில் அல்லாஹ்வுடைய தண்டனையில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அல்லாஹ்வுடைய அன்பையும், முஹப்பத்தையும் அடைவதற்காக அதை அவள் ஏற்றுக் கொண்டாள் அல்லவா? இதைவிட ஒரு சிறந்த தவ்பா இருக்குமா? யாரும் அந்த பெண்ணை கண்காணிக்கவில்லை, எவரும் இழுத்து வரவில்லை.

அந்த காலத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்காணிப்பாளர்களை ஏற்படுத்தி, குற்றம் செய்பவர்களை பிடித்துக் கொண்டு வரச் சொல்லவில்லை. யாரெல்லாம் நபியிடம் வந்தார்களோ அவர்கள் எல்லோருமே  மறுமையின் அச்சத்தின் காரணமாக, அல்லாஹ்வுடைய பயத்தின் காரணமாக தாங்களாகவே வந்தார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் இப்னு ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் :1696.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

யார் அதிகமாக இஸ்திக்ஃபார் செய்வார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் இந்த உலகத்துடைய கவலையை விட்டும் பாதுகாப்பு தருவான். அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவான்.

நாளை மறுமையில் தங்களது அமல்களுடைய ஏடுகளில், இந்த உலகத்திலேயே யார் அதிகமாக இஸ்திக்ஃபார் செய்தார்களோ, அவர்கள் அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்கள்.

ஏன் தெரியுமா? ஒன்று,தாங்கள் செய்த நன்மையின் காரணமாக. இன்னொன்று,இவர்கள் செய்த இஸ்திக்ஃபார், தவ்பாவின் காரணமாக இவர்களது பாவங்களையும், குற்றங்களையும் கூட அல்லாஹ் நன்மைகளாக எழுதி இருப்பான்.

அதாவது, அவர்கள் செய்த பாவங்கள் மற்றும் குற்றங்களின் எண்ணிக்கை அளவிற்கு, அந்த நன்மைகளை பதிவு செய்து இருப்பான்.

அன்பிற்குரியவர்களே! இன்று,நம்முடைய சமுதாயம் பலவகைகளில் துன்புறுத்தப்படுகின்றது. சோதிக்கப்படுகின்றது, பலவகையான இன்னல்களுக்கு ஆளாகிறது என்று சொன்னால், இதனுடைய அடிப்படை காரணம்,நம்முடைய மார்க்கத்தில் இந்த சமுதாய மக்கள் காட்டக்கூடிய அலட்சியம்.

அல்லாஹ்வுடைய கட்டளைகளை பின்பற்றுவதில் இவர்கள் காட்டக்கூடிய அலட்சியம். பாவங்கள் செய்வதில் அவர்கள் காட்டக்கூடிய அந்த தீவிரம்.

குற்றங்களைப் பார்க்கும்பொழுது, மாற்றார்கள் எப்படி குற்றத்தில் செல்கின்றார்களோ, அதற்கு சமமான அளவு, அது விபச்சாரமாக இருக்கட்டும், வட்டியாக இருக்கட்டும்,  அனாச்சாரமான, அநாகரிகமான காரியங்களை மக்களுக்கு மத்தியில் பரப்புவதாக இருக்கட்டும், மோசடி செய்வதாக இருக்கட்டும், திருடுவதாக இருக்கட்டும் இந்த எல்லா செயல்களிலும் நம்முடைய சமுதாயத்தில் உள்ள சிலரும் சேர்ந்து ஈடுபடும் காரணத்தால், இந்த பாவங்களில் அல்லாஹ்வுடைய தண்டனையை ஏற்படுத்தக்கூடிய, அல்லாஹ்வுடைய கோபத்தை இந்த சமுதாயத்திற்கு இழுத்து வரக்கூடிய இந்தப் பாவங்களை செய்யக்கூடிய காரணத்தால், ஒட்டுமொத்த சமுதாய மக்களும் அதனுடைய தண்டனையை அனுபவிப்பதை நாம் பார்க்கிறோம்.

அல்லாஹ்விடத்தில் நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பை விரைந்து கேட்போமாக!

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

«إِنَّ اللَّهَ يَقْبَلُ تَوْبَةَ العَبْدِ مَا لَمْ يُغَرْغِرْ»

அல்லாஹ் உங்களுடைய பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்வான். எதுவரை தெரியுமா?  உங்களது உயிர் மூச்சு உங்களுடைய உடலிலிருந்து, அதாவது உங்களுடைய உயிர் வெளியேறுவதற்கு முன்பு வரை அல்லாஹ் உங்களுக்கு தவ்பாவின் வாசலை அல்லாஹ்  திறந்து வைத்திருக்கிறான்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் :3537.

உயிர் தொண்டைக்குழியை அடைகிற அந்த நிலைமை ஏற்பட்டு விட்டால், அந்த மறுமையினுடைய காட்சியை நீங்கள் பார்த்து விட்டால், அந்த தவ்பாவுடைய வாசலை அல்லாஹ் அடைத்து விடுகிறான்.

யாருக்கு எந்த நேரத்தில் மரணம் என்று யாரால் சொல்ல முடியும்? காலையில் இருப்பவர் மாலையில் இருப்பது கிடையாது. மாலையில் இருப்பவர் காலையை பார்ப்பது கிடையாது. இன்று நாம் பார்த்தவர்களை நாளை நாம் பார்க்கப்போவது கிடையாது. 

இப்படித்தான் அன்புக்குரியவர்களே! நாம் நம்முடைய மரணத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம். மறுமையை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய பாவங்களுக்கு உண்டான பரிகாரங்களை நாம் தேடிக் கொள்ள வேண்டும், ஸதகாவின் மூலமாக, நல்ல காரியங்களின் மூலமாக.

அல்லாஹ் சொல்லுகின்றான்:

إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ

நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும். (அல்குர்ஆன் 11:114)

நன்மைகளை அதிகமாக செய்யுங்கள், அவை உங்களது பாவங்களை அழித்துவிடும் என்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.

إِنْ تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُمْ مُدْخَلًا كَرِيمًا

நீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்த்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம். (அல்குர்ஆன்4:31)

பெரும் பாவங்களை விட்டு ஒரு முஸ்லிம் விலகிக் கொண்டால் அவன் செய்யக்கூடிய  சிறிய பாவங்களையெல்லாம் அல்லாஹ் தானாகவே மன்னித்து விடுகின்றான்.

அல்லாஹ் சொல்லுகின்றான்: 

الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ ۚإِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ ۚ

 (நன்மை செய்வோர் யார் எனின்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள், நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன். (அல்குர்ஆன்53:32)

அல்லாஹு ரப்புல் ஆலமீன் நம்முடைய பாவங்களை எல்லாம் மன்னிப்பானாக! நம்முடைய ஈமானை அல்லாஹ் சுத்தப்படுத்துவானாக! நம்முடைய குற்றங்களை அல்லாஹ் மன்னிப்பானாக!

நாளை மறுமையில் நரக தண்டனையிலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! சொர்க்கத்தில் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டு, அவனது பொருத்தத்தை கொண்டுவெற்றி அடைந்தவர்களில் அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنِي أَبُو غَسَّانَ مَالِكُ بْنُ عَبْدِ الْوَاحِدِ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا مُعَاذٌ يَعْنِي ابْنَ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي أَبُو قِلَابَةَ، أَنَّ أَبَا الْمُهَلَّبِ، حَدَّثَهُ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ أَتَتْ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ حُبْلَى مِنَ الزِّنَى، فَقَالَتْ: يَا نَبِيَّ اللهِ، أَصَبْتُ حَدًّا، فَأَقِمْهُ عَلَيَّ، فَدَعَا نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلِيَّهَا، فَقَالَ: «أَحْسِنْ إِلَيْهَا، فَإِذَا وَضَعَتْ فَأْتِنِي بِهَا»، فَفَعَلَ، فَأَمَرَ بِهَا نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَشُكَّتْ عَلَيْهَا ثِيَابُهَا، ثُمَّ أَمَرَ بِهَا فَرُجِمَتْ، ثُمَّ صَلَّى عَلَيْهَا، فَقَالَ لَهُ عُمَرُ: تُصَلِّي عَلَيْهَا يَا نَبِيَّ اللهِ وَقَدْ زَنَتْ؟ فَقَالَ: «لَقَدْ تَابَتْ تَوْبَةً لَوْ قُسِمَتْ بَيْنَ سَبْعِينَ مِنْ أَهْلِ الْمَدِينَةِ لَوَسِعَتْهُمْ، وَهَلْ وَجَدْتَ تَوْبَةً أَفْضَلَ مِنْ أَنْ جَادَتْ بِنَفْسِهَا لِلَّهِ تَعَالَى؟» (صحيح مسلم  - 1696)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/