HOME      Khutba      அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக வாழ்வோம் | Tamil Bayan - 45   
 

அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக வாழ்வோம் | Tamil Bayan - 45

           

அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக வாழ்வோம் | Tamil Bayan - 45


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
 
அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக வாழ்வோம்
 
 
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக அல்லாஹ்வின் தூய்மையான உபதேசத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவுபடுத்தியவனாக இந்த உரையை ஆரம்பம்செய்கிறேன்.
 
நாம் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.அவனை  முழுமையாக நம்பிக்கை ஈமான் கொள்ள வேண்டும். நம்முடைய வணக்க வழிபாடுகளையும் நம்முடைய எண்ணங்களையும் அவனுக்கே தூய்மையானதாக கலப்பற்றதாக ஆக்கி வைக்க வேண்டும்.
 
 
 
யாருடைய உள்ளத்தில் ஈமான்,  தக்வா, இஹ்லாஸ் இருக்குமோ  அவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.அவர்களும் அல்லாஹ்வை நேசிப்பார்கள். அவர்களுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய மார்க்க கட்டளையின்படியும் தன்னுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறையின்படியும் செயல்படுவதை இலகுவாக்கி வைக்கின்றான்.யாருடைய உள்ளத்தில் ஈமான்,  தக்வா,  இக்லாஸ் இல்லையோ அவர்களுக்கு அல்லாஹ்வுடைய கட்டளையைப் பேணுவதில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய வாழ்க்கை முறையை அந்த ஒழுக்கங்களைப் பேணி நடப்பது முடியாது. அவருக்குச் சிரமமாக இருக்கும். இத்தகைய மக்கள் மறுமையை மறந்து விடுவார்கள்.
 
 
 
மறு உலக வாழ்க்கையை பற்றி உண்டான நினைவு  அவர்களுடைய உள்ளத்தில் இருக்காது. இவர்களுடைய உள்ளத்தில் உலகத்தைப் பற்றிய நினைவு தான் மிகைத்திருக்கும்.யாருடைய உள்ளத்தில் மறுமையின் நினைவு இல்லாமல் உலகத்தைப் பற்றி உண்டான கவலை,நினைவு, அதனுடைய முக்கியத்துவம் மட்டும் குடி கொண்டிருக்குமோ இவர்களுடைய முடிவு  நாள், நாளை மறுமை நாளில் மிக பயங்கரமானது. 
 
 
 
அல்லாஹு தஆலா குர்ஆனில் பல இடங்களில் இதை நமக்கு எச்சரிக்கை செய்து சொல்கின்றான்: மறுமையை யார் மறந்தார்களோ, மறுமைக்குண்டான நல்ல காரியங்களை இந்த உலகத்தில் யார் செய்து கொள்ள வில்லையோ! இத்தகையவர்கள் நாளை மறுமையில் தங்கக் கூடிய இடம்,  இவர்களுக்காக மறுமையிலே முடிவு செய்யப்பட்ட இடம்,  நரகத்தில் இருக்கிறது என்பதாக ! 
 
 
 
ஆகவே, அல்லாஹ்வின் அடியார்களே! நாம் அதிகமதிகம் அல்லாஹ்வை பயந்து கொள்வோமாக!நம்முடைய ஈமானை நம்முடைய இறைநம்பிக்கையை அதிகப்படுத்தக்கூடிய நல்ல காரியங்களை நாம் செய்வோமாக! நம்முடைய வணக்க வழிபாடுகளையும், நம்முடைய எண்ணங்களையும்,  அல்லாஹ்விற்கு மட்டுமே கலப்பற்ற முறையில் தூய்மையானதாக ஆக்கி நாம் அல்லாஹ்வை வணங்குவோமாக!
 
 
 
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த உலக வாழ்க்கையில் நமக்கு கொடுக்கப்பட்ட இந்த அர்ப்ப கால அவகாசத்தில், நம்மிலே பலர் பல விஷயங்களை குறிக்கோளாக நோக்கமாகக் கொண்டு வாழ்கிறார்கள். நாம் இப்போது  தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்  என்னவென்று சொன்னால் யார் இவர்களிலே வெற்றியாளர்கள்.
 
 
 
அல்லாஹுதஆலா சொல்கின்றான்;
 
إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ
 
உங்களுடைய முயற்சிகள்,  உங்களுடையசெயல்பாடுகள் பல  வகையாக இருக்கின்றன. (அல்குர்ஆன் 92 : 4)
 
 
 
ஒவ்வொருவரும் ஒன்றை  குறிக்கோளாக,  நோக்கமாக கொண்டு செயல்படுகின்றார்கள்.  இதிலே யார் வெற்றியாளர்? எந்த நோக்கத்தை தன்னுடைய  நோக்கமாகக் கொண்டவர் வெற்றியாளர்.
 
 
 
அல்லாஹ்விடத்தில் வெற்றியை அடைவதற்கு நாம் எதை நோக்கமாக ஆக்க வேண்டும்.இந்த உலக வாழ்க்கையிலே நாம் வெற்றி அடைந்தவர்களாக வாழ்வதற்கு,  இந்த உலக வாழ்க்கையை விட்டு பிரியும் போது, அல்லாஹ்வின் புறத்திலிருந்து இவர்கள் வெற்றியாளர்கள்.இவர்களை  நல்லோர் உடைய கூட்டத்தில் சேருங்கள்.இவர்களை என்னுடைய பட்டாளத்திலே,  என்னுடைய ராணுவத்திலே, என்னுடைய நண்பர்கள் உடைய கூட்டத்திலே  எனக்கு விருப்பமானவர்களுடைய கூட்டத்திலே சேருங்கள்! என்ற அறிவிப்பை நாம் பெறவேண்டும் என்று சொன்னால்,  அதற்கு நாம் வாழ்க்கையில் எதை குறிக்கோளாக ஆக்க வேண்டும்.
 
 
 
அன்பிற்குரியவர்களே! அதற்கு நமக்கு அல்குர்ஆன் வழிகாட்டுகின்றது. அல்லாஹ் நமக்கு வழிகாட்டுகின்றான். சூரா ஆலஇம்ரான் 162 வது வசனம் 163 வது வசனம் அல்லாஹ் கேட்கின்றான் கேள்வியாக? 
 
أَفَمَنِ اتَّبَعَ رِضْوَانَ اللَّهِ كَمَنْ بَاءَ بِسَخَطٍ مِنَ اللَّهِ وَمَأْوَاهُ جَهَنَّم ۚ وَبِئْسَ الْمَصِيرُ
 
هُمْ دَرَجَاتٌ عِنْدَ اللَّهِ ۗ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُون
 
அல்லாஹ்வுடைய பொருத்தத்தை, அல்லாஹ்வுடைய மகிழ்ச்சியை, அல்லாஹ்வுடைய திருப்தியை யார் தேடுகின்றார்களோ  தன்னுடைய வாழ்க்கையில்  ஒவ்வொரு செயலிலும்,  சொல்லிலும்,  ஒவ்வொரு அசைவிலும், அமைதியிலும் என்னை அல்லாஹ் பொருந்திக் கொள்ள வேண்டும்.எனக்கு அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்க வேண்டும். (அல்குர்ஆன் 3 : 162,163)
 
எனவே,  நான் அல்லாஹ்வின் பொருத்தத்திற்கு உரிய செயல்களை செய்ய வேண்டும். என்னிடத்திலிருந்து அல்லாஹ் விரும்பாத ஒரு செயல் நிகழ்ந்து விடக்கூடாது. அல்லாஹ் வெறுக்கக் கூடிய ஒரு செயல் நிகழ்ந்து விடக்கூடாது. எந்த செயல்களை அல்லாஹ் வெறுக்கிறானோ, கோபிக்கிறானோ, சபிக்கின்றானோ, அத்தகைய தீய காரியங்கள்,  அத்தகைய தீய பண்புகள்,  அத்தகைய கெட்ட பழக்கங்கள்,  அத்தகைய செயல்பாடுகள் என்னிடத்திலே  வந்து விடக் கூடாது. என்னை அல்லாஹ் பொருந்திக் கொள்ள வேண்டும்.
 
 
 
அல்லாஹ்வுடைய பொருத்தம் தான் என்னுடைய வாழ்க்கையின் நோக்கம். நான் அல்லாஹ்விற்காக வாழ்கின்றேன்.என்னுடைய வணக்க வழிபாடுகள், அறுத்துப் பலியிடக்கூடிய பலி பிராணிகள் குர்பானிகள்,  என்னுடைய ஏனைய வணக்க வழிபாடுகள், நான் வாழ்வது,  நான் மரணிப்பது,  இந்த உலகத்தில் நான் கழிக்கக் கூடிய ஒவ்வொரு நிமிடமும்,  என்னுடைய ஒவ்வொரு அசைவும்,  அமைதியும் அல்லாஹ்வுடைய  பொருத்தத்திற்க்காக! 
 
 
 
அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் எனக்கு வேண்டும். அல்லாஹ்வுடைய அன்பு எனக்கு வேண்டும். அல்லாஹ்  என்னைக்  கொண்டு திருப்தி அடைய வேண்டும்.அல்லாஹ்வுடைய மகிழ்ச்சி எனக்கு வேண்டும். என்பதை நோக்கமாகக் கொண்டு,  அல்லாஹ்வுடைய திருப்தியை தேடி அலைகிறார்களே !
 
 
 
எப்படிப்பட்ட வாசகத்தை அல்லாஹ் பயன்படுத்துகின்றான் பாருங்கள்! அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடுபவர்கள். அல்லாஹ்வுடைய பொருத்தத்தை பின்பற்றுபவர்கள்.அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்கு பின்னால் செல்பவர்கள் எங்கு சென்றாலும் அங்கு அல்லாஹ்வுடைய பொருத்தம் இருக்கிறதா? என்று பார்ப்பார்கள். 
 
 
 
அவர்கள் பேசினால்,  அவர்கள் கொடுக்கல், வாங்கல் செய்தால், அவர்கள் திருமண உறவுகள் மேற்கொண்டால்,  அவர்கள் தொழுதால்,  நோன்பு வைத்தால், ஜகாத் கொடுத்தால்,  ஹஜ் செய்தால், எந்த வணக்க வழிபாடுகளை செய்தாலும் சரி அல்லது அவர்களுடைய அன்றாட பழக்கவழக்கங்கள் ஆக இருக்கட்டும் எதுவாக இருக்கட்டும் அல்லாஹ்வுடைய பொருத்தம் அங்கே கணக்கில் எடுக்கப்படுகிறதா? அல்லாஹ்வுடைய பொருத்தம் அங்கே நாடப்படுகிறதா? 
 
 
 
அல்லாஹ் சொல்லுகின்றான்:
 
وَمَا لِأَحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَى (19) إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَى (20) وَلَسَوْفَ يَرْضَى
 
நீங்கள் எந்த நன்மையைக்  கொண்டு அல்லாஹ்விடத்திலே  அவனுடைய வெகுமதியை  எதிர்பார்க்கமுடியும். அல்லாஹ்வுடைய பொருத்தம் நாடி,  அல்லாஹ்வுடைய முகத்தை நாடி,  அல்லாஹ்வுடைய மகிழ்ச்சியை  நாடி, நீங்கள் எந்த நன்மையைச் செய்கிறீர்களோ!யார் இப்படி அல்லாஹ்வுடைய பொருத்தத்தை நாடி நன்மைகள் செய்கிறார்களோ !அவர்களைத் தான் அல்லாஹ் பொருந்திக் கொள்வான். அவர்களை கொண்டு தான் அல்லாஹ் மகிழ்ச்சி அடைவான். (அல்குர்ஆன் 92 : 19-21)
 
 
 
இவர்கள் யார்? யார் தனது தொழுகைகளை,  தன்னுடைய பலிகளை, தன்னுடைய குர்பானிகளை,  தன்னுடைய வணக்க வழிபாடுகளை,  தன்னுடைய வாழ்வை, மரணத்தை அல்லாஹ்விற்கு மட்டும் என்று ஆக்கிக் கொண்டார்களோ ! அல்லாஹ்வை மட்டுமே நோக்கமாக வைத்து வாழ்ந்தார்களோ! அல்லாஹ்வுடைய பொருத்தத்தை மட்டுமே  தனது வாழ்க்கையின் லட்சியமாக வைத்து வாழ்ந்தார்களோ. 
 
 
 
இவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்கின்றான்: 
 
قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ  6:162
 
நபியே!"நீங்கள் மக்களுக்கு சொல்லுங்கள். வெளிப்படுத்துங்கள். இதை  அறிவியுங்கள் மக்களுக்கு. எப்படி வாழ வேண்டும்? என்னுடையதொழுகை, என்னுடைய பலிப்பிராணிகள், என்னுடைய  வணக்க வழிபாடுகள், நான் வாழ்வது, மரணிப்பது அகிலங்களைப் படைத்து வளர்த்து காக்கக்கூடிய அல்லாஹ் ரப்புல் ஆலமீன்   அல்லாஹ்விற்கு மட்டும் தான். இவற்றில் நான் அல்லாஹ்விற்கு யாரையும் பங்காளியாக ஒரு கூட்டாளியாக நான் ஆக்க மாட்டேன். இதில் யாருமே அவனுக்கு கூட்டாளி கிடையாது இப்படித்தான் எனக்கு கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு கட்டுப்படக்கூடிய முஸ்லிம்களில்  நான் முதலாவது முஸ்லிமாக இருக்கின்றேன் என்று நபியே! நீங்கள் சொல்லுங்கள்". (அல்குர்ஆன் 6 : 162)
 
 
 
அன்புக்குரியவர்களே! அத்தகைய நல்ல  மக்களைத்தான் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். அல்லாஹ்வுடைய பொருத்தத்தை குறிக்கோளாக வைத்து, 
 
أَفَمَنِ اتَّبَعَ رِضْوَانَ اللَّهِ
 
இன்று நம்மிலே பலர் நம்முடைய சமுதாயத்திலேயே பலர் இந்த நோக்கத்தை மறந்தவர்களாக வாழ்வதை நாம் பார்க்கிறோம். அவர்களுடைய திருமண நிகழ்ச்சி என்று சொன்னால் அங்கே பெற்றோருடைய விருப்பம் தேடப்படும். அங்கே கட்டிக் கொள்ளப்படுகின்ற மனைவியின் விருப்பமோ அல்லது கணவனின் விருப்பமோ தேடப்படும். அங்கே ஊர்வாசிகள் உடைய விருப்பங்கள்  தேடப்படும். அங்கே ஜமாத்தார்கள் உடைய விருப்பங்கள் தேடப்படும். அங்கே எல்லோரையும் மகிழ்ச்சியாக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கும்.ஆனால் அங்கே மக்கள் மறக்கிறார்கள் என்று சொன்னால் அல்லாஹ்வை திருப்திப்படுத்துவதை.
 
 
 
முஸ்லிமுடைய இன்றைய காலகட்டத்தில் அவர்களுடைய கலாச்சாரத்தை பார்க்கிறோம்.
 
அவர்களுடைய வாழ்க்கை அழகை நாம் பார்க்கிறோம். அவர்களுடைய வாழ்க்கையிலே அவர்கள் எதை முன்வைத்து செல்கின்றார்கள்?  அல்லாஹ்வுடைய பொறுத்தத்தை முன்வைத்து செல்கின்றார்களா? அவர்களுடைய வியாபாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். 
 
 
 
வட்டியுடனே அவர்கள் செய்யக்கூடிய வியாபாரம் ஏமாற்றுதலுடனே அவர்கள் செய்யக்கூடிய வியாபாரம்,  பொய்யுடனே அவர்கள்  செய்யக்கூடிய வியாபாரம், வாக்குக்கு மோசடி செய்து அவர்கள் செய்யக்கூடிய வியாபாரம், நிறுவையில் குறைவு செய்து அவர்கள் செய்யக்கூடிய வியாபாரம், அவர்கள் கொடுக்கக்கூடிய அந்த ஒப்பந்தங்களை முறித்து அவர்கள் செய்யக்கூடிய வியாபாரங்கள். 
 
 
 
இன்னும் எத்தனை காரியங்களை நாம் பார்க்கிறோம். இங்கே யாருடைய பொருத்தம் நாடப்படுகிறது? தன்னுடைய உலக வாழ்க்கையின் அர்ப்ப ஆதாயங்களை,  அற்ப லாபங்களை, அற்ப காசுகளை இவர்கள் நாடுகின்றார்களா? அல்லாஹ்வுடைய பொருத்தத்தை நாடுகின்றார்களா?  சொல்லமுடியுமா? 
 
 
 
வியாபாரத்திலே பொய் பேசுபவர்,  கொடுத்த வாக்குகளுக்கு மாறு செய்பவர்,  மக்களிடத்தில் இருந்து பெறப்பட்ட அமானிதப் பொருட்களை பொறுப்புகளை  மோசடி செய்பவர்,  மக்களுடைய சொத்துகளிலே  உரிமையின்றி அத்துமீறி செயல்படக்கூடியவர்கள்.பிறருடைய செல்வங்களை அநியாயமான முறையில் சாப்பிடக் கூடியவர்கள். ஏழை எளியவர்களின் மீது அநியாயம் செய்யக் கூடியவர்கள். நாங்கள் அல்லாஹ்வுடைய பொறுத்தத்திற்காக வாழ்கிறோம் என்று சொல்லமுடியுமா? இவர்கள் நாங்கள் அல்லாஹ்விற்காக வாழ்கின்றோம் என்று சொல்ல முடியுமா?
 
 
 
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய தூதரின் வாயிலாக நமக்கு சொல்லி காட்டுகின்றான்.அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் சொன்னார்கள்; 
 
 
 
யாருக்கு இந்த காசின் ஆசை  பேயாக, மோகமாக பிடித்து விட்டதோ காசையே குறிக்கோளாக கொண்டு வாழ்கின்றார்களோ அவர்களுடைய வாழ்க்கையிலே அல்லாஹ்  என்பதெல்லாம் அவர்களுக்கு  ஒரு விஷயம் அல்ல.  அல்லாஹ்வுடைய பொருத்தம் என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு விஷயம் அல்ல. 
 
 
 
அவர்களுக்கு மார்க்கம் என்பதெல்லாம் ஒரு லட்சியம் அல்ல.  இப்படி பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு காலை மாலை இரவு பகல் இப்படி தன்னுடைய வாழ்நாளை கழித்து கொண்டிருக்கக் கூடிய இந்த துர்பாக்கிய சாலிகளைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
 
أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَعِسَ عَبْدُ الدِّينَارِ، وَالدِّرْهَمِ، وَالقَطِيفَةِ، وَالخَمِيصَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ لَمْ يَرْضَ» (صحيح البخاري 6435 -)
 
திர்ஹமின் அடிமைகள், தீனாரின் அடிமைகள், பணத்தின் அடிமைகள் நாசமாகட்டும்!
 
 
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 6435
 
 
 
யார் சபிக்கிறார்கள்?  அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இன்று நாம் பார்க்கிறோம். பலர் தொழுகையை  பாழ்படுத்துகின்றார்கள். நோன்பை பாழ்படுத்துகின்றார்கள். அல்லாஹ்வுடைய  எத்தனையோ கட்டளைகளை பாழ்படுத்துகின்றார்கள்.எத்தனையோ ஹராம்களை,  தடை செய்யப்பட்ட காரியங்களை எந்த வித விதமான அச்ச  உணர்வும் இல்லாமல்,  தான் ஒரு இஸ்லாமியன் என்ற உணர்வு இல்லாமல், ஒரு கூச்சம் இல்லாமல், நான் ஒரு முஸ்லிம் ஆயிற்றே! இப்படி  நடந்து கொள்ளலாமா?  என்ற உணர்வே இல்லாமல், அல்லாஹ்வுடைய கட்டளைகளை இஸ்லாமிய ஒழுக்கங்களை  மீருகின்றார்களே! இவர்களுடைய நோக்கம் என்ன? இவர்கள் யாருக்கு அடிமைகள்?  
 
 
 
இவர்களை அல்லாஹ் தனது அடிமைகளாக ஏற்றுக்கொள்ள மாட்டான்.  இவர்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்துத்தீனார், இவர்கள் யார்?  அப்துல்லாஹ்  அல்ல. இவர்களது பெயர் அப்துல்லாஹ் ஆக இருக்கலாம்.இவர்களது பெயர் அப்துல் ரஹ்மான், அப்துல் காதர்,அப்துல் ரஹீம், அப்துல் ஜப்பார், அப்துல் கஹ்ஹார்  ஆக இருக்கலாம். ஆனால் இவர்கள் எங்களுடைய மொழியிலே, யாருடைய மொழியிலே?  அல்லாஹ்வுடைய மொழியிலே,  அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மொழியிலே இவர்களது பெயர்  அப்துத்தீனார்,  அப்துர் ரூபியா. இவர்கள் நோட்டுகள் உடைய,  காசுகள் உடைய அடிமைகள்.
 
 
 
அல்லாஹ் பாதுகாப்பானாக!அல்லாஹு  சுப்ஹானஹு தஆலா மிகத் தெளிவாக  இதை பல இடங்களில் எச்சரிக்கை செய்கின்றான். யாருடைய நோக்கம் உலகம் ஆகி விட்டதோ, 
 
 
 
فَأَعْرِضْ عَنْ مَنْ تَوَلَّى عَنْ ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا الْحَيَاةَ الدُّنْيَا (29) ذَلِكَ مَبْلَغُهُمْ مِنَ الْعِلْمِ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِمَنِ اهْتَدَى 53:29
 
மிகத் தெளிவாக அல்லாஹ் சொல்கின்றான்.நபியே! நீங்கள் உபதேசம் செய்வதை புறக்கணித்து விடுங்கள்.நான் சொல்லக்கூடிய இத்தகையவர்களை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.யார் அவர்கள்? என்னுடைய நினைவு இல்லாமல் என்னை நினைக்காமல் வாழ்கிறார்கள் அல்லவா! அல்லாஹ்வுடைய நினைவில்லாமல் வாழ்கிறார்கள் அல்லவா!அல்லாஹ்வுடைய பயம் இல்லாமல் வாழ்கிறார்கள் அல்லவா! அவர்களை விட்டு நீங்கள் விலகி விடுங்கள். (அல்குர்ஆன் 53 : 29)
 
 
 
ஏன்? அவர்களுக்கு என்ன?அவர்களுக்கு நோக்கமென்ன? துனியாயை சம்பாதிக்க வேண்டும். மிகப் பெரிய பணக்காரனாக வேண்டும்.காசு வரவேண்டும். பதவி  வர வேண்டும்.தனக்கு ஆடம்பரமான வாழ்க்கை சுகபோகமான வாழ்க்கை அமைய வேண்டும்.துனியா!துனியா! இந்த உலகம்தான் அவர்களுடைய நோக்கம். இந்த உலகத்தை சம்பாதிக்கவேண்டும். இதிலே நாம் செல்வங்களை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். தங்களுக்கு என்று நிலங்களை அதிகப்படுத்த வேண்டும். பொருளாதாரத்தை அதிகப்படுத்த வேண்டும். மாட மாளிகைகளை கட்டிக்கொள்ள வேண்டும். இவர்களை விட்டு நீங்கள் புறக்கணித்து விடுங்கள். இவர்களை நீங்கள் லட்சியம் செய்யாதீர்கள். உங்களுடைய உபதேசம் இவர்களுக்கு பலனளிக்காது. அல்லாஹு அக்பர் !
 
 
 
யாரைப் பார்த்து அல்லாஹ் சொல்கின்றான். யாருடைய உள்ளத்திலே அல்லாஹ்வுடைய நினைவு இல்லையோ! அல்லாஹ் என்ற அந்த ரப்புல் ஆலமீன் உடைய ஆசை, அவனுடைய முஹப்பத்,அவனுடைய பயம் அவனை அடைய வேண்டும்,அவனது அன்பை அடைய வேண்டும் என்ற ஆசை இல்லையோ! அதற்கு என்ன காரணம்? அந்த ஆசை உள்ளத்தில் இருந்து வெளியானதற்கு காரணம் என்ன? உள்ளத்திலே துனியா வந்து விட்டது. இந்த உள்ளத்திலே ஒன்று அல்லாஹ்வுடைய அன்பு இருக்கும் அல்லது துனியாவுடைய அன்பு இருக்கும்.ரெண்டும் ஒன்று சேராது.
 
 
 
இந்த உள்ளத்திலே மறுமையுடைய ஆசை இருக்கும்.மறுமை உடைய தேடல் இருக்கும் அல்லது துனியாவுடைய தேடல் இருக்கும். இரண்டும் ஒன்று சேராது. நம்முடைய மூத்த மார்க்க அறிஞர்கள் இந்த துனியாவையும் இந்த ஆகிரத்தையும் குறிப்பிடும் போது இரண்டு சக்காளத்திகள் போல, 'கதரத்தைன்' என்று சொல்கிறார்கள். இருவரையும் ஒரு இடத்திலே வைக்க முடியாது.இந்த துனியா ஆகிரத், யார் துனியாவை தேடுகிறார்களோ அவர்களால் ஆகிரத்தை அடைய முடியாது.யார் ஆகிரத்தை தேடுகின்றார்களோ அவர்கள் இந்த  துனியாவை  புறக்கணித்து ஆக வேண்டும்.
 
 
 
அல்லாஹு சுப்ஹானஹுதஆலா ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சொல்கின்றான்:
 
 
 
நபி அவர்களை விட மிகத் தெளிவான முறையில் மிக அழகிய முறையில் அல்லாஹ்வுடைய அச்சத்தை ஏற்படுத்த கூடிய முறையிலே யாராவது உபதேசம் செய்ய முடியுமா? யாராவது வசியத்து செய்ய முடியுமா?  நம்மில் அல்லாஹ்வை அதிகமாக பயந்தவர்கள். தான் சொல்லியது போன்று முழுமையாக நூற்றுக்கு நூறு செயல்பட்டவர்கள்.யாருடைய சொல்லும் செயலும் இறை அச்சமாக இருந்ததோ அந்தத் தூதர்.அத்தகையத் தூதர் உபதேசம் செய்தால் கூட அவர் நசிஹத்  செய்தால் கூட பலனளிக்காத கேடு கெட்ட பாவிகள் இந்த மக்களிலேயே இருப்பார்கள் என்றான்.  
 
 
 
அவர்களின் அறிவுரை கூட பலனளிக்காத அளவிற்கு இறுகிய உள்ளம் உள்ளவர்கள் இருப்பார்கள் என்று சொன்னால் அவர்கள் யார்? யாருடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய நினைவு இல்லையோ! யாருடைய உள்ளத்தில் அல்லாஹ்வை அடைய வேண்டும் என்ற நோக்கம் இல்லையோ! யாருடைய உள்ளத்தில் துனியா மட்டுமே  குடிகொண்டு உள்ளதோ! அவர்களுக்கு நபியே நீங்கள் உபதேசம் செய்தாலும் அது பலனளிக்காது. எனவே நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுங்கள்.எனவே நீங்கள் அவர்களை விட்டு வெளியேறி விடுங்கள்.
 
 
 
ஆகவே, அன்புக்குரியவர்களே! அல்லாஹ் சொல்கின்றான்: யாருடைய பொருத்தம்? அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்காக! ரப்புடைய பொருத்தத்திற்காக வாழ்பவர்கள். 
 
 
 
அல்லாஹ் கேட்கிறான்: இத்தகையவர்கள் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு வெறுப்பிற்கு அல்லாஹ்வுடைய சாபத்திற்கு ஆளானவர்களுக்கு சமமாக ஆவார்களா? இருவர்கள் எப்படி சமமாக ஆவார்கள்?ஒருவர் அல்லாஹ் உடைய  அன்பிற்குரியவர்கள். மற்றொருவர் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு உரியவர்கள்.அல்லாஹ்வுடைய அன்பிற்குரியவர் அல்லாஹ்வுடைய கோபத்திற்குரியவர் போன்று ஆகமாட்டார். யார் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாகி விட்டார்களோ அவர்கள் எங்கே செல்வார்கள்? அவர்கள் தங்கக் கூடிய இடம் ஜஹன்னம் என்ற நரகம் தான்.அது மிகக் கெட்ட இடம். மனிதர்கள் சென்று தங்க கூடிய இடங்களில் அது மிக மோசமான இடம்.
 
 
 
அல்லாஹ்விடத்தில் இப்படித்தான் மக்கள் பல தரங்களில் இருக்கிறார்கள். ஒருவரை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொர்க்கத்திற்கு உரியவராக ஆக்கியிருக்கிறான். அவர்களுடைய அமல்களால்,அவர்களுடைய வாழ்க்கையின் லட்சியங்கள் காரணமாக, அவர்கள் எதை குறிக்கோளாக கொண்டர்களோ!அல்லாஹ் ரப்புல் ஆலமீன் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டான். அவர்கள் செய்த நன்மைகளை அல்லாஹ் பாழ்படுத்தமாட்டான்.
 
 
 
நீங்கள் பார்க்கலாம்! குர்ஆனிலே சொர்க்கத்தைப் பற்றி அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எங்கெல்லாம் வர்ணிக்கின்றானோ!  சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கு சென்று அவர்கள் அடையக்கூடிய இன்பங்களைப் பற்றி அல்லாஹ் சொல்லும் பொழுது, 
 
جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ46:14
 
அவர்கள் செய்த நன்மைகளுக்கு கூலி ஆக நாம் கொடுத்தோம். அவர்கள் செய்தார்கள். எனவே அதை அனுபவிக்கின்றார்கள். (அல்குர்ஆன் 46 : 14)
 
 
 
மேலும் அல்லாஹ் சொல்கின்றான்: 
 
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ
 
நீங்கள் சாப்பிடுங்கள். நீங்கள் குடியுங்கள் சந்தோஷமாக! மகிழ்ச்சியாக! (அல்குர்ஆன் 69 : 24)
 
எங்கே சொல்லப்படும்? சொர்க்கத்தில். யாருக்கு?
 
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ (19) إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ (20) فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ (21) فِي جَنَّةٍ عَالِيَةٍ (22) قُطُوفُهَا دَانِيَةٌ
 
அல்லாஹ் சொல்கிறான்:
 
 
 
எவருடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவருடைய வலது கையில் கொடுக்கப் படுகிறாரோ  அவர் (மற்றவர்களை நோக்கி மகிழ்ச்சியுடன்)கூறுவார்: ‘‘இதோ! என் ஏடு; இதை நீங்கள் படித்துப் பாருங்கள், நிச்சயமாக நான் என் கேள்வி கணக்கைச் சந்திப்பேன் என்றே நம்பியிருந்தேன்.'' ஆகவே, அவர் திருப்தியான (சுகபோக) வாழ்க்கையில், மேலான சொர்க்கத்தில் இருப்பார். அதன் கனிகள் (இவர்கள், படுத்திருந்தாலும் உட்கார்ந்திருந்தாலும், நின்று கொண்டிருந்தாலும், எந்நிலைமையிலும் கைக்கு எட்டக்கூடியதாக இவர்களை) நெருங்கி இருக்கும். (அல்குர்ஆன் 69 : 19-23)
 
 
 
அல்லாஹ் இதைத்தான்சொல்கின்றான்:
 
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ (7) فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا (8) وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا
 
 
 
ஆகவே, (அந்நாளில்) எவருடைய வலது கையில் அவருடைய செயலேடு கொடுக்கப் படுகிறதோ, அவர் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார். அவர் மகிழ்ச்சியடைந்தவராக(ச் சொர்க்கத்திலுள்ள) தன் குடும்பத்தார்களிடம் திரும்புவார். (அல்குர்ஆன் 84 : 7-9)
 
 
 
அல்லாஹ் சொல்கின்றான்: சுவர்க்கவாசிகள் நாளை மறுமையிலே அவர்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன்,
 
لَا يَحْزُنُهُمُ الْفَزَعُ الْأَكْبَرُ وَتَتَلَقَّاهُمُ الْمَلَائِكَةُ هَذَا يَوْمُكُمُ الَّذِي كُنْتُمْ تُوعَدُونَ  21:103
 
(மறுமையில் ஏற்படும்) பெரும் திடுக்கமும் அவர்களை துக்கத்திற்குள்ளாக்காது. (அச்சமயம்) வானவர்கள் அவர்களை எதிர்கொண்டழைப்பார்கள் ‘‘உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட (நல்ல) நாள் இதுதான்'' (என்று நற்செய்தியும் கூறுவார்கள்). (அல்குர்ஆன் 21 : 103).
 
 
 
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
 
وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ (38) ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ (39) وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ (40) تَرْهَقُهَا قَتَرَةٌ (41) أُولَئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ (42)
 
எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாகவும், சந்தோஷத்தால் சிரித்தவையாகவும்  இருக்கும். அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும். கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்). இவர்கள்தான் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள். (அல்குர்ஆன் 80 : 38-42)
 
 
 
அல்லாஹ் பிரித்து சொல்கின்றான்: நாளை மறுமையிலே  அந்த மகிழ்ச்சியை, அந்த சந்தோஷத்தை,அந்த திருப்தியை, அந்த பயம் அற்ற நிலையை அவர்கள் ஏன் அடைகிறார்கள் தெரியுமா? இந்த உலகத்தில் வாழும் பொழுது அந்த மறுமையை பயந்து வாழ்ந்தார்கள்.
 
إِنَّا كُنَّا قَبْلُ فِي أَهْلِنَا مُشْفِقِينَ (26) فَمَنَّ اللَّهُ عَلَيْنَا وَوَقَانَا عَذَابَ السَّمُومِ 
 
எங்களது குடும்பத்தாருடையே   நாங்கள் இருக்கும் பொழுது அல்லாஹ்வை பயந்து நாங்கள் நடுங்கிக் கொண்டு இருந்தோம்.சொர்க்கத்தை நினைத்து அல்லாஹ்விடத்தில் நாங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம். நரகத்தை நினைத்து நாங்கள் அழுது கொண்டிருந்தோம். அல்லாஹ்  எங்களுக்கு இப்போது மறுமையிலே கிருபை செய்து விட்டான்! பயங்கரமான இந்த விஷ நெருப்புகளை விட்டு அல்லாஹ் எங்களைப் பாதுகாத்தான்! (அல்குர்ஆன் 52 : 26)
 
الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ  
 
சொல்லுவார்கள்! அல்லாஹ் எங்களுக்கு நல்லதின் பக்கம் வழிகாட்டி இருக்கவில்லை என்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க முடியாது என்று அல்லாஹ்வை புகழ்வார்கள். (அல்குர்ஆன் 7 : 43)
 
 
 
அன்பிற்குரியவர்களே! எத்தகைய வாழ்க்கை பாருங்கள்! யார்  அல்லாஹ்வுடைய பொருத்தத்தை நாடினார்களோ! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இதைத்தான் சொல்கின்றான். நீங்கள் செய்து விட்டு வந்த நன்மையின் காரணமாக! இந்த உலகத்திலே யாருக்காக, எதற்காக நீங்கள் வாழ்ந்தீர்களோ!எதை செய்தீர்களோ!அதற்கு பகரமாக!
 
 
 
அல்லாஹு ரப்புல் ஆலமீன் பிரித்து விடுகின்றான்.யார் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை நோக்கமாக வைத்து வாழ்ந்தார்களோ!அல்லாஹ்வுடைய அன்பை நோக்கமாக வைத்து வாழ்ந்தார்களோ! அவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய தகுதிகள், அல்லாஹ்  அவர்களுக்கு கொடுக்கக்கூடிய உயர்வுகளை இந்த உலகத்தில் யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாது.
 
 
 
அல்லாஹ் சொல்கின்றான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு சொல்கின்றார்கள். அல்லாஹு தஆலா சொல்வதாக ரசூல்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கின்றார்கள்:
 
 
 
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ{فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ } (صحيح البخاري  3005 -)
 
நாளை மறுமையில் என்னுடைய ஸாலிஹான நல்ல அடிமைகளுக்காக நான் தயாரித்து வைத்து இருக்கின்ற அந்த நிஹ்மத்துகளை,  அந்த பாக்கியங்களை, அருட் கொடைகளை யாருமே அறிந்திருக்க மாட்டார்கள்.எந்த கண்ணும் பார்த்திருக்காது. எந்தக் காதும் அதை பற்றி கேட்டிருக்காது.எந்த மனிதனுடைய உள்ளத்திலும் அதைப் பற்றி உண்டான கற்பனை கூட வந்திருக்க கூடாது.
 
 
 
அல்லாஹ் சுபஹானஹு தாலாவுடைய இந்த ஹதீசை  இந்த வார்த்தையை கூறிவிட்டு ரசூல் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
 
 
 
இதனுடைய  உண்மையை  நீங்கள் பார்க்க வேண்டும் என்று சொன்னால் குர்ஆனை எடுத்து படித்து பாருங்கள். சூரா அஸ் ஸஜ்தாவில் ,அல்லாஹ் சொல்கின்றான்: 
 
 
 
அவர்கள் செய்த (நற்)காரியங்களுக்குக் கூலியாக நாம் அவர்களுக்காக (தயார்படுத்தி) மறைத்து வைத்திருக்கும் கண் குளிரக்கூடிய (சன்மானத்)தை எவராலும் அறிந்துகொள்ள முடியாது. (அவ்வளவு மேலான சன்மானங்கள் அவர்களுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளன.) (அல்குர்ஆன் 32 : 17)
 
 
 
அன்பிற்குரியவர்களே!அல்லாஹ்வுடைய பொருத்தத்தை அடைவதற்காக நாம் என்ன செய்யவேண்டும்? அல்லாஹு  சுப்ஹானஹு தஆலா இந்த பொருத்தத்தை யாருக்கு தருகின்றான்.
 
قُلْ أَؤُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِنْ ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِنَ اللَّهِ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ
 
(நபியே! மனிதர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘இவற்றைவிட மேலானதொன்றை நான் உங்களுக்கு அறிவிக்கவா? (இறைவனுக்குப்) பயந்து நடக்கிறவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் சொர்க்கங்கள் உண்டு. அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். (அங்கு அவர்களுக்குப்) பரிசுத்தமான மனைவிகளும் உண்டு. இன்னும், அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் கிடைக்கும். அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவன் ஆவான். (அல்குர்ஆன் 3 : 15)
 
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ  55:46
 
 
 
யார் அல்லாஹ்வை பயந்து வாழ்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் இரண்டு சொர்க்கங்களை கொடுப்பான். (அல்குர்ஆன் 55 : 46)
 
 
 
ஒரு சொர்க்கத்தினுடைய அளவு என்ன தெரியுமா? 
 
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ فِي الجَنَّةِ لَشَجَرَةً، يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ عَامٍ لاَ يَقْطَعُهَا (صحيح البخاري-6552)
 
ஒரு சொர்க்கத்தினுடைய அளவு, அந்த சொர்க்கத்தில் இருக்கக்கூடிய அந்த சொர்க்கவாசிக்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய அந்த தோட்டத்தில் இருக்கக்கூடிய,  ஒரு மரத்தினுடைய அளவு. சுபஹானல்லாஹ்! வேகமாக செல்லக்கூடிய குதிரையில் அமர்ந்து ஒருவன் 100 ஆண்டுகள் அந்த மரத்தின் நிழலில் பயணித்தால் கூட, அந்த மரத்தை சுற்றி வர நினைத்தால் கூட,  நூறு ஆண்டுகள் முடிந்து விடும். அந்த மரத்தின் சுற்றளவு அவன் சுற்றி இருக்க முடியாது.
 
 
 
அறிவிப்பாளர்: சஹ்ல் இப்னு சஃத் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 6552
 
 
 
சுபஹானல்லாஹ்! எப்படிப்பட்ட வாழ்க்கை! எப்படிப்பட்ட இன்பம் பாருங்கள்! அல்லாஹ் சொல்கிறான்: பல சுவர்க்கங்களைக்  கொடுப்போம். அதிலே நதிகள் ஓடிக்கொண்டே இருக்கும்.அதிலேயே அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அங்கே அவர்களுக்கு சுத்தமான மனைவிகள் கிடைப்பார்கள். குணத்தால் சுத்தமானவர்கள். ஒழுக்கத்தால் சுத்தமானவர்கள். உடலால் சுத்தமானவர்கள். அதுமட்டுமா! அல்லாஹ்வுடைய பொருத்தம் அவர்களுக்கு அங்கே கிடைக்கும்.
 
 
 
அல்லாஹு ரப்புல் ஆலமீன் நாளை மறுமையிலே சொர்க்கவாசிகளை ஒன்று சேர்ப்பான்.சொர்க்கத்திலே அவர்கள் தங்களுடைய இன்பங்களில் மூழ்கி இருக்கும்போது அவர்களை அழைப்பான். என்னுடைய அடியார்களே! நீங்கள் வாருங்கள் என்பதாக.
 
 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிக் காட்டுகின்றார்கள்:
 
 
 
அப்போது சுவர்க்கவாசிகள் ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்பட்டதற்குப் பிறகு, அல்லாஹ் அவர்களைப் பார்த்து கேட்பான்:
 
 
 
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ لِأَهْلِ الْجَنَّةِ يَا أَهْلَ الْجَنَّةِ فَيَقُولُونَ لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ فَيَقُولُ هَلْ رَضِيتُمْ فَيَقُولُونَ وَمَا لَنَا لَا نَرْضَى وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ فَيَقُولُ أَنَا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ قَالُوا يَا رَبِّ وَأَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ فَيَقُولُ أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي فَلَا أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا  (صحيح البخاري6067) 
 
 
 
உங்களுக்கு திருப்தியா? நீங்கள் சந்தோஷம் அடைந்து விட்டீர்களா? அப்போது சொர்க்கவாசிகள் சொல்வார்கள். எங்களுடைய முகங்களை நீ வெண்மையாக்கவில்லையா! இந்த நரக நெருப்பிலிருந்து எங்களை நீ  பாதுகாக்கவில்லையா! இந்த இன்பத்தின் வீட்டிலே எங்களை நீ தங்க வைக்கவில்லையா! நாங்கள் எப்படி மகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியும்.அந்த நேரத்திலே அல்லாஹ்  சொல்லுவான். இதைவிட மகிழ்ச்சியான ஒன்றை நான் உங்களுக்காக மறைத்து வைத்திருக்கின்றேன் அது என்ன தெரியுமா? 
 
 
 
இந்த வார்த்தையைக் கேட்டவுடனே சொர்க்கவாசிகள் சொல்வார்கள். அல்லாஹ்வே! இதைவிட சிறந்த ஒன்று மகிழ்ச்சியான ஒன்று இருக்குமா? அது என்ன யாரப்பல் ஆலமீன்?  என்று கேட்பார்கள். அப்போது அல்லாஹ் சொல்வான்.
 
 
 
இன்றைய தினத்தில் என்னுடைய மகிழ்ச்சியை, என்னுடைய திருப்தியை,  என்னுடைய சந்தோஷத்தை, உங்களைக் கொண்டு நான் திருப்தி அடைந்தேன் என்பதை உங்கள் மீது நான் இறக்கி விட்டேன்.உங்களை கொண்டு நான் முழுமையாக திருப்தி கொண்டேன். என்னுடைய முழு பொருத்தத்தையும் மகிழ்ச்சியையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன்.  
 
 
 
இனி நான் உங்களைக் கொண்டு அதிருப்தி அடைய மாட்டேன். உங்கள் மீது நான் கோபப்பட மாட்டேன் என்று அல்லாஹ் சொல்லுவான். இந்த அல்லாஹ்வுடைய  பொருத்தத்திற்கு முன்பதாக அல்லாஹ்வுடைய அந்த மகத்துவத்திற்கு முன்பதாக சொர்க்கவாசிகள் உடைய மற்றைய இன்பங்கள் எல்லாம் சிறியதாக ஆகி விடும். இதைத்தான் அல்லாஹ் சொல்கின்றான்.
 
 
 
அறிவிப்பாளர்: அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 6067
 
 
 
அல்லாஹ்வுடைய பொருத்தம் மிகப் பெரியது என்பதாக.சொர்க்க நிஹ்மத்துகள் மிகப் பெரியது. அந்த சொர்க்க இன்பங்களிலே  மிகப் பெரிய இன்பம்  என்ன? அல்லாஹ்வுடைய பொருத்தம் கிடைக்கும்.இந்த அல்லாஹ்வுடைய பொருத்தத்தை அல்லாஹ் யாருக்கு கொடுப்பான்?  யார் அந்த அல்லாஹ்வுடைய  பொருத்தத்தை வாழ்க்கையின் நோக்கமாக  லட்சியமாக வைத்து வாழ்ந்தார்களோ! அவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான். அவர்கள் யார் தெரியுமா? அவர்களுடைய முன் உதாரணங்களை அல்லாஹ் நமக்கு வைத்திருக்கின்றான் அன்புக்குரியவர்களே!
 
 
 
வாழ்க்கையில் இந்த விஷயங்களை எல்லாம் ஒரு எழுத்தாகவோ கருத்தாகவோ மட்டும் நமக்குக் கொடுக்கவில்லை. இதன்படி வாழ்ந்து அல்லாஹ்வுடைய பொருத்தத்தை அடைந்த  மக்களை நமக்கு முன்னுதாரணமாக ஆக்கி  அல்லாஹ்  காட்டுகின்றான்.
 
 
 
இன்று சொல்கிறார்கள் அல்லவா! பல பெயர் இடத்திலே மார்க்கத்தை பற்றி நீங்கள் பேசினால் இதெல்லாம் நமக்கு சாத்தியமா? இதை எல்லாம் நம்மால் செய்ய முடியுமா? ஐந்து வக்த் தொழுகை, வருஷம் ஆகி விட்டால் அல்லாஹ்வுடைய பாதையில் ஜகாத் கொடுப்பது, ஹஜ்  செய்வது, இன்னும் நிறைய அமல்கள்,  காலையில், மாலையில், இரவில்,  பகலில் ஒரு முஸ்லீம் கடைபிடிக்கக் கூடிய அமல்களை ஒழுக்கங்களைப் பற்றி சொல்லப்பட்டால் சிலருடைய உள்ளங்கள் யாருடைய உள்ளத்தில் நயவஞ்சகமாகமோ  அல்லது ஈமானுடைய பலவீனமோ அல்லது இஸ்லாமிய மார்க்கத்தின் தூய்மையோ குடி  கொள்ளவில்லையோ!இவர்கள் சடைவடைகிறார்கள். 
 
 
 
இவர்கள் அல்லாஹ்வுடைய  கட்டளைகளைப் பற்றி இவர்களுக்கு அச்சுறுத்தும் பொழுது இவர்களுக்கு நினைவூட்டப்படும் பொழுது இவர்கள் முகம் சுளிக்கிறார்கள். அன்பிற்குரியவர்களே! என்ன சொல்கிறார்கள் இவர்கள்? இதெல்லாம் இந்த காலத்தில் சாத்தியமா? இதெல்லாம்  நம்மால் முடியுமா?  நம்ம எல்லாம் சாதாரண மக்கள் ஆயிற்றே! என்று சொல்கின்றார்களே!
 
 
 
அன்பிற்குரியவர்களே !ஆம் நாம் சாதாரண மக்கள் தான்.ஆனால் எப்பொழுது உறுதி கொள்கிறோமோ அப்போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு அதை இலேசாக ஆக்குகின்றான்.அல்லாஹ் சொல்கின்றான்:
 
الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَاجِعُونَ  
 
ஆம், மார்க்கத்தை பேணுவது சிரமமானதுதான். ஆம், மார்க்கத்தை பேணுவது பெரியதாகத்  தான் தோன்றும். யாரை தவிர? யாருக்கு தவிர?  யாருக்கு  அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்ற பயம் இருக்குமோ  யாருக்கு நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் திரும்ப வேண்டும் என்ற கொள்கை உறுதி இருக்குமோ அவர்களுக்குத் தவிர. (அல்குர்ஆன் 2 : 46)
 
 
 
என்ன சொல்கிறான்? யாருடைய உள்ளத்தில் ஈமான் பலவீனமாக இருக்கிறதோ! யாருடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் மீது உள்ள அன்பு ஆழமாகப் பதியவில்லையோ !யாருடைய சிந்தனை மறுமையைக் கொண்டு இன்னும் வார்த்தெடுக்கப்படவில்லையோ! அவர்களுக்கு இந்த மார்க்கம் கடுமையாக,  அவர்களுக்கு  இந்த மார்க்கம் பெரியதாக தோன்றலாம்.யாருக்கு அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் 
 
 
 
அந்த நிரந்தர சொர்க்கத்திலே  அல்லாஹ்விடத்திலே  தனக்கு என்று ஒரு இடம் வேண்டும் என்று நினைக்கிறார்களோ! அவர்களுக்கு இந்த உலக வாழ்க்கை உடைய  சிரமங்களோ,  இந்த உலக வாழ்க்கையுடைய  துன்பங்களோ எதுவும் அவர்களை ஒன்றும் சரித்துவிடாது. மாற்றிவிடாது. மயக்கிவிடாது. 
 
 
 
எப்படிப்பட்ட உதாரணங்களை அல்லாஹ் சொல்கின்றான்:
 
وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ
 
இரண்டு பெண்களை அல்லாஹ் உதாரணமாக சொல்லிக் காட்டுகின்றான்: ஈமானிலே  அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்காக  வாழ்ந்து அதற்காக உயிரைக் கொடுத்தவர்கள். பிர்அவ்னுடைய மனைவி! எப்படிப்பட்டக்  கொடுமைகளை சந்தித்தார்கள்.
 
 
 
பெரிய கல்லை தூக்கி அவர்களின் மீது போட்டுக் கொல்லும்படி  அந்த பிர்அவ்ன் தன்னுடைய கூட்டத்திற்கு கட்டளையிட்ட பொழுது,அதற்கு முன்பு எத்தனை வகையான வேதனைகள் அவர்கள் மீது பொழியப்பட்டன. அந்த நேரத்தில் எல்லாம் தாங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்மணி அல்லாஹ்வுடைய அன்பிற்காக என்ன சொன்னார்கள் என்று தெரியுமா? 
 
 
 
தன்னுடைய ஆட்சி,அதிகாரம், சுகபோகமான வாழ்க்கை,அடிமைகளைச் சுற்றி,எத்துணை விதமான மாட மாளிகைகள், நகைகள், ஆபரணங்கள் இந்த எல்லா வசதியான வாழ்க்கையையும் புறக்கணித்தார்கள். எதற்காக? யாருக்காக? அல்லாஹ்விற்காக! அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்காக! என்ன செய்தார்கள் தெரியுமா? 
 
رَبِّ ابْنِ لِي عِنْدَكَ بَيْتًا فِي الْجَنَّةِ
 
அல்லாஹ் நமக்கு குர்ஆனிலே முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்திற்கு சொல்லிக் காட்டுகின்றான்.மிகப்பெரிய எதிரி,  அல்லாஹ்வின் சாபத்திற்குரியவன் அந்த பிர்அவ்ன், அவனுடைய மனைவி அல்லாஹ்வுடைய அன்பிற்காக அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்காக இந்த உலக வாழ்க்கையை துறந்த போது அல்லாஹ்வுடைய அன்பை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுக்காக  தன்னுடைய வாழ்க்கையைத் துறந்த போது, அவர்களை நமக்கு உதாரணமாக அல்லாஹ் சொல்கின்றான்.
 
 
 
அவர்கள் செய்த துஆ என்ன? அல்லாஹ் உன்னிடத்திலே எனக்கு சொர்க்கத்திலே ஒரு வீட்டைக் கொடு!நான் உன்னிடத்தில் ஒரு வீட்டை எதிர்பார்க்கிறேன். இந்த உலக வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. அன்பிற்குரியவர்களே! அல்லாஹ் நமக்கு உதாரணமாக சொல்லுகின்றான். (அல்குர்ஆன் 66 : 11)
 
 
 
நமக்கு முன்பு வாழ்ந்த நல்லோர்களை, அந்த சஹாபாக்களை, நமக்கு அனுப்பப்பட்ட தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ் நமக்குச் சொல்கின்றான். எப்படி வர்ணிக்கிறான் பாருங்கள்.சூரா அல்பத்ஹ்  உடைய 29 ஆவது வசனம்:
 
مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ۚ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ ۖ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا ۖ سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ ۚ
 
முஹம்மது (ஸல்) அல்லாஹ்வுடைய திருத்தூதராவார்கள். (அவரும்) அவருடன் இருப்பவர்களும் நிராகரிப்பவர்கள் விஷயத்தில் கண்டிப்பானவர்களாகவும், தங்களுக்குள் மிக்க அன்புடையவர்களாகவும் இருப்பார்கள்.குனிந்து சிரம் பணிந்து வணங்குபவர்களாக அவர்களை நீர் காண்பீர். அல்லாஹ்வின் அருளையும், அவனுடைய திருப்பொருத்தத்தையும் (எந்த நேரமும்) விரும்பியவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் சிரம் பணி(ந்து வணங்கு)வதின் அடையாளம் இருக்கும். இதுவே தவ்றாத் (என்னும் வேதத்)தில் உள்ள அவர்களின் வர்ணிப்பு. இன்ஜீலில் அவர்களுக்குள்ள உதாரணமாவது: ஒரு பயிரை ஒத்திருக்கிறது. அப்பயிர் (பசுமையாகி, வளர்ந்து) உறுதிப்படுகிறது. பின்னர், அது தடித்துக் கனமாகிறது. பின்னர், விவசாயிகளுக்கு ஆச்சரியம் கொடுக்கும் விதத்தில் (வளர்ந்து,) அது தன் தண்டின் மீது நிமிர்ந்து நிற்கிறது. இவர்களைக் கொண்டு நிராகரிப்பவர்களுக்குக் கோபமூட்டும் பொருட்டு (அந்த நம்பிக்கையாளர்களை படிப்படியாக அபிவிருத்திக்குக் கொண்டுவருகிறான்). அவர்களில் எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கிறான். (அல்குர்ஆன் 48 : 29)
 
 
 
அல்லாஹ் சொல்கின்றான்:அந்த சஹாபாக்களைப் பற்றி அந்த உத்தம தோழர்கள் உடைய வாழ்க்கையில் உள்ள ஆதாரங்களைப் பற்றி அல்லாஹ்  சொல்லுகின்றான்:
 
 
 
لِلْفُقَرَاءِ الْمُهَاجِرِينَ الَّذِينَ أُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ وَأَمْوَالِهِمْ يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا وَيَنْصُرُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ   59:8
 
தங்கள் வீடுகளை விட்டும், தங்கள் பொருள்களை விட்டும் (அநியாயமாக) வெளிப்படுத்தப்பட்டு (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்து வந்த ஏழைகளுக்கும் அதில் பங்குண்டு. அவர்கள் அல்லாஹ்வுடைய அருளையும், அவனுடைய திருப்பொருத்தத்தையும் அடையக் கருதி (தங்கள் உயிரையும் பொருளையும் தியாகம் செய்து) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள் ஆவர். (அல்குர்ஆன் 59 : 8)
 
 
 
இந்த வாழ்க்கை, என்னுடைய உயிர்,  என்னுடைய பொருள், என்னுடைய உடலில்  ஒரு ஆற்றல் இருக்கும் என்று சொன்னால் அது அல்லாஹ்விற்காக!அது அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு உதவி செய்வதற்காக! அல்லாஹ்வுடைய ரசூலுக்கு உதவி செய்வதற்காக!
 
 
 
அன்பிற்குரியவர்களே! அந்த உத்தமர்கள் தங்களுக்காக வாழவில்லை. தங்களுடைய இன்பத்திற்காக வாழவில்லை. தங்களுடைய உலக வாழ்க்கையில் எதையும் அடைவதற்காக அவர்கள் வாழவில்லை. அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் உள்ள அனைத்தையும் தங்களுடைய செல்வங்களாக இருக்கட்டும், தங்களுடைய உயிராக இருக்கட்டும், இவை அனைத்தையும் அல்லாஹ்வுடைய  பொருத்தத்திற்காக,   அல்லாஹ்வுடைய அன்பிற்காக, அல்லாஹ்வுடைய தீனுக்கு உதவி செய்வதற்காக, அல்லாஹ்வுடைய ரசூலுக்கு உதவி செய்வதற்காகத் தான் அவர்கள் அனைத்தையும் செலவு செய்தார்கள் என்பதற்கு அல்லாஹுதஆலா அல்குர்ஆனிலே நமக்கு சான்று வழங்குகின்றான்.
 
 
 
நமக்கு  முன் உதாரணமாக அல்லாஹ் அவர்களை ஆக்குகின்றான்.அவர்களுடைய வழியிலே நாம் சென்றால் அவர்கள் எந்த வழியிலே சென்றார்களோ அந்த வழியிலே  நாம் சென்றால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கும் அவர்களுக்கு வழங்கிய அந்த பொருத்தத்தை வழங்குகிறேன் என்று சொல்கின்றான். அல்லாஹ்வுடைய பொருத்தத்தை அடைவதற்கு உண்டான இலகுவான வழியை அல்லாஹ் சொல்கின்றான்.
 
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ  
 
யார் முந்தியவர்கள், முதலாமவர்கள்,  ஹிஜிரத்திலே  முந்தி சென்று வந்தார்கள் அல்லவா அவர்கள். அவர்களுக்கு உதவி செய்த அன்சாரிகள். நல்ல காரியங்களில் இஹ்ஸான் மனத்தூய்மையுடனே நல்ல நோக்கத்துடனே அவர்களை பின்பற்றியவர்கள். (அல்குர்ஆன் 9 : 100)
 
 
 
அவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான்.அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள்.இவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் சொர்க்கம் காத்துக்கொண்டிருக்கிறது.
 
 
 
அன்பிற்குரியவர்களே!அல்லாஹு ரப்புல் ஆலமீன் நமக்கு இந்த வாழ்க்கையை  ஒரு முறை தான் கொடுக்கின்றான். இரண்டு முறை வாழ்க்கை அல்ல. கபுரிலே சென்று நாம் எந்த நல்ல அமலும் செய்ய முடியாது. ஒரு சுப்ஹனல்லாஹ் சொல்ல முடியுமா? நாளை மறுமையிலே சென்று நன்மையை சேகரித்துக் கொள்ள முடியுமா? இந்த துனியா' தாருல் அஃமால் 'அமல்கள் செய்வதற்காக வேண்டி உள்ள இல்லம். இந்த துனியா நாளை மறுமையைத் தேடிக் கொள்வதற்காக. மறுமையினுடைய சொர்க்கத்தை அடைந்து கொள்வதற்காக  அல்லாஹ்வுடைய பொருத்தத்தை அடைந்து கொள்வதற்காக. அல்லாஹ்வுடைய அன்பை அடைந்து கொள்வதற்காக நமக்கு கொடுக்கப்பட்ட வீடு.
 
 
 
இந்த உலகத்திலே நாம் அல்லாஹ்வை நோக்கமாகக் கொண்டு, அல்லாஹ்வுடைய தீனை, அல்லாஹ்வுடைய பொருத்தத்தை நோக்கமாகக் கொண்டு வாழ்வோம் என்று சொன்னால் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றுவது நமக்கு இலகுவாகிவிடும்.அல்லாஹ்வுடைய கட்டளைகளை பாதுகாப்பது நமக்கு இலகுவாகிவிடும். 
 
 
 
யார் அல்லாஹ்வுடைய நோக்கத்தை குறிக்கோளாக ஆக்கவில்லையோ இவர்கள் அல்லாஹ்வை புறக்கணிப்பார்கள். அல்லாஹ்வுடைய கட்டளையைப் புறக்கணிப்பார்கள். நபியைப்  புறக்கணிப்பார்கள்.நபியுடைய ஒழுக்கங்களை சுன்னத்துகளை புறக்கணிப்பார்கள்.
 
 
 
இவர்கள் தான் இந்த இஸ்லாமில் இருக்கக்கூடிய இஸ்லாமிய எதிரிகள். இஸ்லாத்திற்குள் இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்குள்ள  இஸ்லாமிற்குரிய  எதிரிகள்.அல்லாஹு ரப்புல் ஆலமீன் இவர்களைப் பற்றி குரானிலே அடையாளம் காட்டுகின்றான்.இவர்களை 'முனாபிக்குகள்' என்று அடையாளம் காட்டுகின்றான் இவர்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நயவஞ்சகத் தன்மை உடையவர்கள் என்று அடையாளம் காட்டுகின்றான். 
 
 
 
அல்லாஹு ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!அவனுடைய பொருத்தத்திற்காக வாழ்ந்து, அவனுடைய அன்பிற்காக வாழ்ந்து,  அல்லாஹ் நமக்கு நமக்கு கொடுத்திருக்கிற உயிரை,அல்லாஹ்  நமக்கு கொடுத்திருக்கக்  கூடிய அனைத்து விதமான திறமைகளையும்,அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கக் கூடிய அனைத்து விதமான செல்வங்களையும், அவனுடைய பாதையிலே செலவழித்து அல்லாஹ்வுடைய அன்பை பொருத்தத்தை அடைவதற்கு அல்லாஹு ரப்புல் ஆலமீன் எனக்கும் உங்களுக்கும் எனக்கும் உங்களுக்கும் உதவி செய்வானாக!
 
 
 
ஆமீன்
 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/