HOME      Khutba      விசாரணை விரைவில் | Tamil Bayan - 44   
 

விசாரணை விரைவில் | Tamil Bayan - 44

           

விசாரணை விரைவில் | Tamil Bayan - 44


விசாரணை விரைவில்

ஜுமுஆ குத்பா தலைப்பு : விசாரணை விரைவில்

வரிசை : 44

இடம் : மதுரை

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு உங்களுக்கும் எனக்கும் அறிவுரை கூறியவனாக இந்த உரையை ஆரம்பம் செய்கின்றேன்.

அல்லாஹ் அவனுடைய புத்தகம் அல்குர்ஆனில் கூறுகின்றான்,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். எந்த முறையில் அல்லாஹ்வை பயப்பட வேண்டுமோ அந்த உரிய முறையில் நீங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 3 : 102)

அல்லாஹ்வுடைய அச்சம் நம்மை பாவத்திலிருந்து பாதுகாக்கின்றது. அல்லாஹ்வுடைய அச்சம் நன்மை செய்ய நம்மை தூண்டுகின்றது. அல்லாஹ்வுடைய அச்சம் நமக்கு மறுமையை நினைவூட்டுகின்றது.

அல்லாஹ்வுடைய அச்சம் இந்த உலக வாழ்க்கையில் நமக்கு பற்றற்ற தன்மையை ஏற்படுத்துகின்றது. அல்லாஹ்வுடைய அச்சம் நமக்கு அல்லாஹ்வுடைய அன்பைத்தேடி தருகின்றது. அல்லாஹ்வுடைய அச்சம் நாளை மறுமையில் சுவர்க்கத்தில் நமக்கு உயர்ந்த பதவிகளை தேடித்தருகின்றது.

அல்லாஹ் சுபஹானஹு தஆலாவை யார் அதிகமாக பயந்து கொள்கிறார்களோ, யார் அவனை அதிகமாக அஞ்சி வாழ்கின்றார்களோஅவர்களை நேசிக்கின்றான். அவர்களுடைய பாவங்களை அவன் மன்னிக்கின்றான். அவனுடைய விசேஷமான அருளை, கிருபைகளை, அருட்கொடைகளை அவன்அவர்களுக்கு வழங்குகின்றான்.

ஒரு விசாரணை நாளை நாம் எதிர்பார்க்கின்றோம். மிகத்தீவிரமாக மிகவும் சரியாக விசாரணை செய்யும் ஒரு உயர்ந்த அதிகாரிகளுக்கெல்லாம் அதிகாரியான இறைவனுக்கு முன்பாக நாம் விசாரிக்கப்பட இருக்கின்றோம். அந்த விசாரணை நாளை நோக்கித்தான் இப்போது நம்முடைய இந்த பயணம் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

நம்முடைய ஒவ்வொரு நாளும், நம்முடைய ஒவ்வொரு நிமிடமும் அந்த விசாரணையை நோக்கித்தான் நாம் சென்று கொண்டிருக்கின்றோம்.

நம்மில் பலர், மறுமையைப் பற்றி உண்டான சிந்தனை இல்லாமல், அந்த விசாரணையைப் பற்றி உண்டான அச்சமில்லாமல் தங்களது வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய மக்களை பார்த்துதான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கேட்கின்றான்,

أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ

(‘‘என்னே!) நாம் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?'' (என்று கேட்பான்.) (அல்குர்ஆன் 23 : 115)

இந்த உலகத்தை படைத்த அன்றிலிருந்து இந்த உலகத்தை அல்லாஹ் முடிக்கும் நாள் வரை, படைக்கப்பட்ட மனிதர்கள் எல்லோரையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எழுப்புவான். உயிருள்ள படைப்பினங்களை அல்லாஹ் எழுப்புவான். அவர்களிடம் விசாரணை செய்வான்.

அல்லாஹ்வுடைய விசாரணை மிகத் துல்லியமாக இருக்கும், மிக நீதமாக இருக்கும். அங்கே ஆட்சி இருக்காது, அங்கே அதிகாரம் இருக்காது, அங்கே படைபலங்கள் இருக்காது.

ஒவ்வொரு மனிதனும் அவனுடைய செயலை கொண்டு வருவான், அவனுடைய கொள்கையை, அவனுடைய நம்பிக்கையை கொண்டு வருவான். அந்த நாள் மிக பயங்கரமான நாள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன், அவனுடைய புத்தகத்தில் செய்திருக்கும் எச்சரிக்கையை படித்துப்பாருங்கள், நல்லோர் அந்த நாளை எண்ணி பயந்ததை அல்லாஹ் குறிப்பிடுகின்றான், ஹதீஸ் நூல்களில் நிரம்ப நமக்கு பார்க்கலாம், எப்படி  இறைத்தூதர்கள், அல்லாஹ்வுடைய நல்லடியார்கள் அந்த நாளை பயந்திருந்தார்கள், பல எச்சரிக்கைகளை அல்லாஹ் சொல்கின்றான்.

இந்த உலக வாழ்க்கையில் ஒருவர் ஒருவருக்கு சிபாரிசு செய்யலாம், ஒருவர் ஒருவருக்கு ஏதாவது அன்பளிப்புகள் கொடுத்து தன்னை தீமையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம், தன்னிடத்தில் தன்னுடைய நன்மையை அவர் பெற்றுக் கொள்ளலாம்.

அந்த நாளில் எதுவும் யாருக்கும் சொந்தமாக இருக்காது,அந்த நாளில் எந்த ஒன்றும் நமக்கு சொந்தமாக இருக்காது,

அல்லாஹ் கேட்கின்றான்,

وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ (17) ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ (18) يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ

(நபியே!) கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று நீர் அறிவீரா? பிறகு, கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று உமக்கு எவரேனும் அறிவித்தனரா? அந்நாளில் ஓர் ஆத்மா, மற்றோர் ஆத்மாவுக்கு ஒரு பயனுமளிக்க சக்தி பெறாது. அதிகாரமும் அந்நாளில் அல்லாஹ்வுக்கே இருக்கும். (அல்குர்ஆன் 82 : 17-19)

அல்லாஹு ரப்புல் ஆலமீன் எப்போது ஒரு விஷயத்தினுடைய ஆழத்தை நம்முடைய உள்ளத்தில் பதிய வைக்க விரும்புகின்றானோ அப்போது இப்படி கேள்வி கேட்பது வழக்கம்.

இந்த நாளைப் பற்றி தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபித்துவம் கொடுக்கப்பட்ட போது தங்களுடைய குடும்பத்தார்களை அழைத்துச் சொன்னார்கள்.

அப்துல் மனாஃப் குடும்பத்தார்களே, அப்துல் முத்தலிப் குடும்பத்தார்களே, குறைஷ் கிளையினரே, கிளாப் கிளையினரே, பிறகு தங்களுடைய உறவுகளை அழைக்கின்றார்கள், என்னுடைய மாமியே, என்னுடைய சிறிய தந்தைகளே, என்னுடைய  தந்தையுடன் பிறந்தவர்களே, கடைசியாக தனது பிரியத்திற்குரிய நேசத்திற்குரிய மகள் பாத்திமாவையும் அழைக்க மறந்துவிடவில்லை,முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே!  உன்னையும் அழைத்து நான் சொல்கின்றேன்,

لَا أُغْنِي عَنْكِ مِنْ اللَّهِ شَيْئًا

அல்லாஹ்வை நீ பயந்து கொள், நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் நான் உனக்கு எந்த பலனும் தர முடியாது. உன்னுடைய காரியத்திற்கு எதற்கும் நான் உரிமையாளராக ஆக முடியாது. உனக்கு நான் எதையும் மறுமையில் பலன் கொடுக்க முடியாது.

இந்த உலகத்தில் என்ன வேண்டுமோ நீ என்னிடத்தில் கேட்டுக் கொள், ஆனால் மறுமையில் உன்னுடைய இறையச்சம், உன்னுடைய இறைநம்பிக்கை, உன்னுடைய அமல்கள் தான் உனக்கு பலன் தரும்.

நான் நபி என்பதன் காரணமாகவோ அல்லது நபியுடைய மகளாக நீ ஆகி விட்டதன் காரணத்தாலோ நீ நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் இதை காரணமாக சொல்லி வெற்றி பெற முடியாது.(1)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2548.

அந்த நாளில் நாம் செய்த செயல்கள் எல்லாம் நமக்கு முன்பாக கொண்டு வரப்படும். இன்று நாம் நம்முடைய வாழ்க்கையை எப்படி கழித்துக் கொண்டிருக்கின்றோம், எந்த சிந்தனையில் இருக்கின்றோம், என்னமோ நாம் செய்யக்கூடிய செயல்கள் எல்லாம் அல்லாஹ்விடத்தில் பதிவு செய்யப்படவில்லை, நம்முடைய செயல்களுக்கு நாளை மறுமையில் ஒரு விசாரணை இல்லை என்ற எண்ணத்தில்நம்மில் பலர் செயல்பட்டு வருவதை நாம் பார்க்கின்றோம்.

அன்பிற்குரியவர்களே,மிகத்துல்லியமாக நம்முடைய இறைவன் நமக்கு எச்சரிக்கை செய்கின்றான். அந்த நாள் நீங்கள் நினைத்துக் கொள்வது போன்று ஒரு சாதாரணமான நாளல்ல.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான் :

وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا

 (நபியே அவர்களுடைய செயல்கள் எழுதப்பட்ட தினசரிக் குறிப்புப்) புத்தகம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் குற்றவாளிகள் (தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் இருப்பதைக் கண்டு) பயந்து ‘‘எங்கள் கேடே! இதென்ன புத்தகம்! (எங்கள் பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும்விடாது இதில் எழுதப்பட்டிருக்கின்றதே'' என்று அவர்கள் (புலம்பிக்) கூறுவதை நீர் காண்பீர். (நன்மையோ தீமையோ) அவர்கள் செய்த அனைத்தும் (அதில்) இருக்கக் காண்பார்கள். உமது இறைவன் எவனுக்கும் (அவனுடைய தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்யமாட்டான். (அல்குர்ஆன் 18 : 49)

இந்த இடத்தில் புத்தகம் என்பதற்கு விபரமாக விளக்கமாக அல்லாஹு ரப்புல் ஆலமீன் மற்ற வசனங்களில் சொல்லியிருப்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

وَكُلَّ إِنْسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا

ஒவ்வொரு மனிதனின் (செயலைப் பற்றிய விரிவான தினசரிக்) குறிப்பை அவனுடைய கழுத்தில் மாட்டியிருக்கிறோம். மறுமை நாளில் அதை அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொடுப்போம். அவன் அதை விரிக்கப்பட்டதாகப் பார்ப்பான். (அல்குர்ஆன்17 : 13)

குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையின் கழுத்தில், அந்த குழந்தை வளர்ந்து இறக்கும் வரை, அந்த குழந்தை என்ன செய்யுமோ, அந்த மனிதன் என்ன செய்வானோ, அவையனைத்தையும் பதிவு செய்வதற்காக ஒரு ஏடைஅல்லாஹ் ரப்புல் ஆலமீன் கழுத்தில் தொங்க விட்டு விடுகிறான்.

அந்த புத்தகத்தில் என்ன பதிவு செய்யப்படுகிறது? அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கின்றான்:

وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُسْتَطَرٌ

நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு சிறிய செயலும், நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு பெரிய செயலும் அதில் எழுதப்படுகின்றது. எந்த ஒன்றும் எழுதப்படாமல் இருப்பதில்லை. (அல்குர்ஆன்54 : 53)

நாம் அலட்சியமாக செய்யக்கூடிய செயல்கள், மக்களுடைய கண்களை விட்டு மறைத்து செய்யக்கூடிய செயல்கள், அல்லாஹ்வுடைய அச்சம் இல்லாமல் செய்யும் செயல்கள், இச்சைக்கு அடிமையாகி செய்யும் செயல்கள், வேண்டுமென்றே செய்யும் பாவங்கள், மறதியில் செய்யும் பாவங்கள், ஒவ்வொரு பாவமும் எப்படி செய்யப்படுகின்றது, ஒவ்வொரு நன்மையும் எப்படி செய்யப்படுகின்றது போன்ற அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றது.

அல்லாஹ் சொல்கின்றான்,

அந்த புத்தகத்தை, நாளை மறுமையில் மனிதன் எழுப்பப்படும் போது,அந்த கழுத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் அந்த பதிவைநாம் அவனுக்கு ஒரு புத்தகமாக மாற்றி அவனுக்கு முன்பு கொண்டுவருவோம்.

அல்லாஹ் சொல்வான்,

اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا

உன்னை விசாரிப்பதற்கு நீ உனது புத்தகத்தைப் படித்துப் பார், உன்னுடைய செயல்களை எழுதப்பட்ட அந்த ஏட்டை படித்துப் பார். (அல்குர்ஆன் 17 : 14)

நான் உன்னை விசாரிப்பதற்கு முன்பு,நான் உன்னை கேள்வி கேட்பதற்கு முன்பு, நீ உன்னை விசாரித்துக் கொள், உன்னுடைய நிலைமை என்ன? உன்னுடைய புத்தகத்தில் எது பதிவு செய்யப்பட்டுள்ளது? நன்மையின் பக்கங்கள் அதிகமா?அல்லது தீமைகள் பதிவு செய்யப்பட்டது அதிகமாக இருக்கிறதா?

அந்த நேரத்தில் தான், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதனுடைய நிலைமை எப்படி இருக்கும் என்பதை சூரத்துல் கஹ்ஃப் உடைய இந்த வசனத்தில் சொல்கின்றான்,

وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا

 (நபியே அவர்களுடைய செயல்கள் எழுதப்பட்ட தினசரிக் குறிப்புப்) புத்தகம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் குற்றவாளிகள் (தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் இருப்பதைக் கண்டு) பயந்து ‘‘எங்கள் கேடே! இதென்ன புத்தகம்! (எங்கள் பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும்விடாது இதில் எழுதப்பட்டிருக்கின்றதே'' என்று அவர்கள் (புலம்பிக்) கூறுவதை நீர் காண்பீர். (நன்மையோ தீமையோ) அவர்கள் செய்த அனைத்தும் (அதில்) இருக்கக் காண்பார்கள். உமது இறைவன் எவனுக்கும் (அவனுடைய தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்யமாட்டான். (அல்குர்ஆன்18 : 49)

செயல்கள் என்று சொன்னால் நீங்கள் கை கால்களைக் கொண்டு செய்யும் செயல்கள் மட்டுமல்ல.

مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ

(மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகிறது.) (அல்குர்ஆன்50 : 18)

அந்த நாளுடைய அபயத்தைப் பற்றி,அந்த நாளுடைய பயங்கரத்தை பற்றி அல்லாஹ் மேலும் எச்சரிக்கை செய்து சொல்கின்றான் :

يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُحْضَرًا وَمَا عَمِلَتْ مِنْ سُوءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ

ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த நன்மைகளையும், தான் செய்த தீமைகளையும் தனக்கு முன் காணும் நாளில் (துக்கித்து) தனக்கும், தான் செய்த தீமைகளுக்கும் இடையில் நீண்ட தூரம் இருந்திருக்க வேண்டுமே? என்று விரும்பும். ஆகவே, அல்லாஹ் உங்களுக்குத் தன்னைப்பற்றி (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கிறான். (ஏனென்றால்,) அல்லாஹ் (தன்) அடியார்களிடம் மிக்க இரக்கமுடையவன் ஆவான். (அல்குர்ஆன்3 : 30)

இன்று,நாம் நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய அலட்சியமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இறைத்தூதர்கள் அந்த நாளை எப்படி பயந்தார்கள் என்று அல்லாஹ் சுபஹானஹு தஆலா குர்ஆனில் பல இடங்களில் நமக்கு சொல்கின்றான்,

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம்,அல்லாஹ்வுடைய நெருக்கமான அடியான் அல்லாஹ்வுடைய நண்பன் என்பதாக அல்லாஹ்வால் புகழப்பட்டவர்கள்.

அவர்களைப்பற்றி அல்லாஹ் குர்ஆனில் சொல்கின்றான்,

அல்லாஹ்,இறைதூதர்களுக்கு சொர்க்கம் உண்டு என்றநற்செய்தியை இந்த உலகத்தில் அவர்களுக்கு முற்படுத்தி விட்டான், அதிலும் குறிப்பாக இறைத்தூதர்களில் ஐந்து இறை தூதர்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தனக்கென்று விசேஷமாக தேர்ந்தெடுத்தான், அவர்களில் ஒருவர்தான் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத் வஸ்ஸலாம்,

அவர்களை அல்லாஹ் தன்னுடைய நண்பனாக ஆக்கிக் கொண்டான்

இப்ராஹீமை அவருடைய இறைவன் பல விஷயங்களில் சோதித்தான், அனைத்தையும் அவர் முழுமை படுத்தினார்.

அதற்கு இறைவன் கொடுத்த வெகுமதி, அவர்களை இமாமாக தலைவராக ஆக்குகின்றான்.

அந்த நபி அந்த விசாரணை நாளை பற்றி பயந்து தனது இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்கின்றார்கள்.

وَالَّذِي أَطْمَعُ أَنْ يَغْفِرَ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ

கூலி கொடுக்கும் (மறுமை) நாளில் என் குற்றங்களை மன்னிக்க அவனையே நான் நம்பியிருக்கிறேன். (அல்குர்ஆன்26 : 82)

அல்லாஹ்விடத்தில்மீண்டும் கேட்கின்றார்கள்;

وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ

யா அல்லாஹ்! அந்த மறுமையில் நீ என்னைக் கேவலப்படுத்தி விடாதே! (அல்குர்ஆன்26 : 87)

அல்லாஹ்வின் நல்லடியார்களே! இந்த பயம் நம்முடைய உள்ளத்தில் இருக்கின்றதா? அல்லாஹ்விடத்தில் என்றாவது அந்த விசாரணை நாளை அஞ்சி நாம் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்து இருக்கின்றோமா?

அந்த நாளில் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து, அந்த நாளில் ஏற்படக் கூடிய பயங்கரத்திலிருந்து, நாம் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடி இருக்கின்றோமா?

நன்மைகளை செய்த, பாவங்களை செய்யாத இறைத்தூதர்கள் உடைய பயத்தை, அச்சத்தை பற்றி அல்லாஹ் சொல்கின்றான், நம்பிக்கையாளர்கள், அல்லாஹ்வுடைய அடியார்கள் எப்படி அந்த நாளை பயந்து கொள்வார்கள் என்பதையும் அல்லாஹ் சொல்கின்றான்.

وَالَّذِينَ يَصِلُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُونَ سُوءَ الْحِسَابِ

மேலும், அவர்கள் அல்லாஹ் சேர்த்து வைக்கும்படி கட்டளையிட்டதைச் சேர்த்தும் வைப்பார்கள்; தங்கள் இறைவனுக்கு பயந்தும் நடப்பார்கள்; (மறுமையில்) கேட்கப்படும் கொடிய கேள்விகளைப் பற்றி (எந்நேரமும்) பயந்துகொண்டும் இருப்பார்கள். (அல்குர்ஆன்13 : 21)

நமக்கு அந்த நினைவு வருகின்றதா?அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்த போது, பிறகு சூரியன் உதித்தபோது, பிறகு சூரியன் மறையும்போது, பிறகு தங்களுடைய கண்களை மூடும் போது, ஒவ்வொரு நேரத்திலும் நாளை மறுமையின் உடைய விசாரணையை பயந்தார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் விசாரணையை கடுமைப்படுத்தி விடுவானோ என்ற அச்சத்தை கொண்டிருந்தார்கள். அல்லாஹ்விடத்தில் பிராத்தனை செய்தார்கள்.

நீங்கள் படித்துப் பாருங்கள், காலையினுடைய துஆக்களை படித்துப்பாருங்கள், இரவின் துஆக்களை படித்துப்பாருங்கள், எந்த பயத்தில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் தங்களுடைய வாழ்நாளை கழித்து இருக்கின்றார்கள் என்பதாக.

இரவு நேரத்தில் தூங்கும் போது கடைசியாக ஒரு வார்த்தையை சொல்லுவார்கள், அதற்கு பிறகு எதையும் பேச மாட்டார்கள், அதே நினைவில் தூங்கி விடுவார்கள் அது என்ன வார்த்தை தெரியுமா?

அன்னை ஹஃப்சா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கடைசி பேச்சு தூங்கும்போது,

اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ

யா அல்லாஹ்! நாளை மறுமையில் உன்னுடைய அடியார்களை ஒன்று சேர்த்து விசாரிக்கும் அந்த நாளில்உன்னுடைய தண்டனையிலிருந்து நீ என்னைப் பாதுகாத்து கொள்வாயாக.

அறிவிப்பாளர் : ஹஃப்சா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : அபூதாவூத், எண் : 4388.

இன்று,முஸ்லிம்களுடைய வாழ்நாள் எப்படி கழிகின்றது, யோசித்துப்பாருங்கள், குறிப்பாக இரவை மக்கள் எப்படி கழிக்கிறார்கள், இரவு நேரம் என்றால் பாவங்களை செய்வதுதான், இரவு நேரம் என்றால் அனாச்சாரங்களை, அசிங்கங்களை பார்ப்பதற்குத்தான் என்று இந்த சமுதாயத்தின் உடைய பெரும்பான்மையான மக்களுடைய நிலைமை ஆகிவிட்டது.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தூங்குவதற்கு முன்பாக அதிகமான பிரார்த்தனைகள் செய்வார்கள், அந்த அளவு பிரார்த்தனையை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் வேறு சமயங்களில் செய்ததாக நமக்கு கிடைப்பதில்லை.

ஸஹீஹுல் புகாரியில் வரக்கூடிய ஒரு அறிவிப்பை பாருங்கள், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தங்களுடைய தோழருக்கு கற்றுத் தருகின்றார்கள்,

நீ தூங்குவதற்கு நெருங்கிவிட்டால், தூங்குவதற்கு நாடிவிட்டால் எப்படி தொழுகைக்கு உளூ செய்கிறாயோ, அதுபோன்று உளூ செய்துகொள்.

اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَهْبَةً وَرَغْبَةً إِلَيْكَ

யா அல்லாஹ் என்னுடைய முகத்தை உனக்கு முன்பு நான் ஒப்படைத்துவிட்டேன், என்னுடைய எல்லா காரியங்களையும் உன்னிடத்தில் ஒப்படைத்துவிட்டேன், என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன், யா அல்லாஹ்! நான் உன்னை நேசிக்கின்றேன், நான் உன் மீது ஆசை வைத்து இருக்கின்றேன், நான் உன் மீது அன்பு வைத்திருக்கிறேன்,யா அல்லாஹ்! அதே நேரத்தில் நான் உன்னை பயப்படுகிறேன். (2)

அறிவிப்பாளர் : பரா இப்னு ஆசிப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5836.

அல்லாஹ்வின் மீது அன்பு வைத்தல், அல்லாஹ்வை பயப்படுதல், இது ஈமானுடைய அடிப்படைத் தன்மைகள். யார் தன்னுடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் மீது உண்டான ஆசையை அன்பைஉணர வில்லையோ, அது போன்று அல்லாஹ்வின் மீது உண்டான பயத்தை உணரவில்லையோஅவர்கள் இன்னும் ஈமானை சுவைக்கவில்லை. ஈமானுடைய உணர்வை ஈமானுடைய சுவையை இன்னும் அவர்கள் அறியவில்லை.

ஈமான் -அல்லாஹ்வுடைய நம்பிக்கை என்று சொன்னால், அல்லாஹ்வைப் பற்றிப் பேசப்பட்டால், ரப்புல் ஆலமீன் உடைய குதுரத்தை பற்றி விவரிக்கப் பட்டால், அல்லாஹு அக்பர் என்று அவர்களுக்கு முன்பு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் நடுங்கி விடும், அவர்களுடைய உள்ளங்களில் நடுக்கம் ஏற்படும், அல்லாஹ்வுடைய பயம் அவர்களுக்கு ஏற்படும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்,

وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ

நாளை மறுமையில் அர்ஷ் உடைய நிழலில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன், தனியாக விசேஷமாக ஒருசில கூட்டத்தினருக்கு இடத்தை ஒதுக்கி வைத்திருப்பான்.அந்த இடத்தை வேறு யாரும் அடைந்து கொள்ள முடியாது. அந்த கூட்டங்களில் ஒரு கூட்டம்.

தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூறுகின்றான், அல்லாஹ்வை சுப்ஹானல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹு அக்பர்! என்று சொல்கின்றான்.தனிமையில் அமர்ந்து அல்லாஹ் தனக்கு செய்த அருட்கொடைகளை எண்ணிப் பார்க்கிறான்.தனிமையில் அமர்ந்து அல்லாஹ்விற்கு தான் செய்த குற்றங்களை எண்ணிப் பார்க்கிறான், இந்த நேரத்தில் அவனுடைய கண்கள் கண்ணீரை வடிக்கின்றன.

யார் தனிமையில் அமர்ந்து அல்லாஹ்வை நினைத்த காரணத்தால், அவனுடைய கண்கள் கண்ணீரை சிந்தினவோ இவர்கள் நாளை மறுமையில் அர்ஸ் உடைய நிழலில்  இருப்பார்கள்.(3)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 620.

அந்த அளவுக்கு நாம் அந்த மறுமை நாளைப் பற்றி பயப்பட வேண்டும், அந்த விசாரணை நாளை பற்றி பயப்பட வேண்டும், கணவன் மனைவியிடத்தில் பேசவேண்டும், மனைவி கணவன் இடத்தில் பேசவேண்டும், பிள்ளைகள் பெற்றோர்கள் இடத்தில், பெற்றோர்கள் பிள்ளைகள் இடத்தில் அந்த விசாரணை நாளை பற்றி உண்டான சர்ச்சையை கிளப்ப வேண்டும்.

அந்த நாளுக்காக நாம் என்ன தயார் செய்து வைத்து இருக்கின்றோம், என்ற பேச்சு நம்முடைய வீடுகளில் ஒழிக்க வேண்டும், நம்முடைய பள்ளிகளில் ஒழிக்க வேண்டும், நம்முடைய கடைத் தெருவில், ஒவ்வொரு நிமிடத்திலும்நம்மிடத்தில் ஒருவர் மற்றொருவருக்கு அதை நினைவுபடுத்த வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா இடத்தில் பேசுவதை பாருங்கள்.

مَنْ حُوسِبَ عُذِّبَ

ஆயிஷா! யாரிடத்தில் அல்லாஹு ரப்புல் ஆலமீன் துருவித்துருவி விசாரணை  செய்வானோ அவர் கடுமையான தண்டனைக்கு ஆளாகி விடுவார்.

(இந்த இடத்தில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒரு கணவனாக பாருங்கள், தன்னுடைய மனைவி ஆயிஷாவிற்கு மறுமையைப் பற்றி உண்டான அச்சத்தை சொல்கின்றார்கள்.

ஆயிஷாவிற்கு இந்த ஹதீஸின் மூலமாக நாளை மறுமையில் விசாரிக்கப்படும் அந்த நாள் உடைய பயத்தை ஏற்படுத்துகின்றார்கள்.

எங்காவது தன்னுடைய மனைவி என்ற காரணத்தினால், மறதி அவர்களுடைய உள்ளத்தில் ஆட் கொள்ளாமல் இருக்க வேண்டும். விருப்பத்திற்குரிய மனைவி என்ற காரணத்தினால் அமல்களில் பின் தங்கி விட்டாலும் நபியின் உறவின் காரணமாக, நாம் முன் சென்றுவிடலாம் என்ற எண்ணம்இந்த மனைவிக்கு ஏற்படக்கூடாது.

இன்று, நம்மில் எத்தனை பேர் நம்முடைய மனைவிக்கு மறுமையைப் பற்றி உண்டான எச்சரிக்கை செய்கின்றோம், நம்முடைய பிள்ளைகளுக்கு நம்முடைய குடும்பத்தாருக்குஅல்லாஹ்வைப் பற்றி உண்டான எச்சரிக்கையை நாம் செய்கின்றோம்.)

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா ரசூலுல்லாஹ் உடைய  பேச்சை கேட்டவுடன் பயந்து நடுங்கி விட்டார்கள். கேட்கின்றார்கள்,

அல்லாஹ்வின் தூதரே! சூரத்துல் இன்ஷிகாக்,அந்த சூரவில் அல்லாஹ் சொல்கிறானே,

فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ (7) فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا (8) وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا

ஆகவே, (அந்நாளில்) எவருடைய வலது கையில் அவருடைய செயலேடு கொடுக்கப்படுகிறதோ, அவர் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார். அவர் மகிழ்ச்சியடைந்தவராக(ச் சொர்க்கத்திலுள்ள) தன் குடும்பத்தார்களிடம் திரும்புவார். (அல்குர்ஆன்84 : 7-9)

என்று அல்லாஹ் சொல்கிறானே, அதை வாங்கியதற்கு பிறகு தன்னுடைய குடும்பத்தார்களின் இடத்தில் சந்தோசமாக அவர் சென்று,பாருங்கள்,என்னுடைய புத்தகத்தை நான் வலதுகரத்தில் வாங்கிக் கொண்டேன்என்று சந்தோஷப்படுவார் என்று அல்லாஹ் சொல்கிறானே, நீங்கள் சொல்கின்றீர்கள்;விசாரிக்கப்பட்டால் தண்டனைக்கு ஆளாகி விடுவார் என்பதாக, என்ன விளக்கம்? அல்லாஹ்வின் தூதரே என்று கேட்கின்றார்கள்.

அப்போது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கின்றார்கள், ஆயிஷா அல்லாஹ் இலகுவான கேள்வி என்று சொல்கிறானே அதற்கு என்ன பொருள் தெரியுமா?

إِنَّمَا ذَلِكِ الْعَرْضُ وَلَكِنْ مَنْ نُوقِشَ الْحِسَابَ يَهْلِكْ

அது விசாரணை அல்ல, விசாரணையை அல்லாஹ் சொல்லவில்லை, அல்லாஹு ரப்புல் ஆலமீன் எடுத்துக் காட்டுவான், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதன் செய்த செயல்களை அவனுக்கு காண்பிப்பான், விசாரிக்க மாட்டான். யாரொருவன் நாளை மறுமையில் தோண்டித் துருவி துருவி விசாரிக்கப்பட்டு விடுகின்றானோ அவன் நிச்சயமாக வேதனை செய்யப்பட்டே தீருவான்.

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 100.

இமாம் இப்னு கஸீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி சூரத்துல் இன்ஷிகாக் உடைய அந்த விரிவுரையில் இந்த சம்பவத்தை பதிவு செய்கின்றார்கள்.

இந்த இடத்தில் நாம் இன்னொரு விஷயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வுடைய புத்தகத்தை, குர்ஆனை நபியின் உடைய வார்த்தைகளில் இருந்து பிரித்து பார்க்க முடியாது.

அல்லாஹ்வுடைய புத்தகத்திற்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக்கூடிய ஹதீசை விளக்கமாக விரிவுரையாக நாம் எடுத்துக் கொண்டே ஆக வேண்டும்.

குர்ஆனுடைய வசனத்திற்கும் ஹதீஸுக்கும் முரண்படுகின்றது என்ற காரணத்தினால் ஹதீசை தூக்கி எறிய வேண்டும் என்று பேசுகிறார்களே, ஹதீசை ஒதுக்கித் தள்ள வேண்டும் என்று பேசுகிறார்களே, அவர்களுக்கு பதிலாக தான் இந்த ஹதீஸ் அமைந்திருக்கின்றது.

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, ரசூலுல்லாஹ் இடத்தில் கேட்கின்றார்கள்,அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் சொல்லக்கூடிய விசாரணைக்கு என்ன பொருள்?நீங்கள் சொல்லக்கூடிய விசாரணைக்கு என்ன பொருள்?

அதற்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் விளக்கம் சொல்கின்றார்கள்,

ஆயிஷாவே! விசாரணை என்று அல்லாஹ் சொல்கிறானே, அதற்கு நான் சொல்லக்கூடிய இந்த விசாரணை அர்த்தமல்ல. அல்லாஹ்வுடைய அந்த விசாரணை என்பதற்கு அல்லாஹ் செயல்களை எடுத்துக் காட்டுவான்.

எப்படி பல ஸஹீஹான ஹதீஸ்களில் வருகின்றது அல்லவா, நாளை மறுமையில் அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஒரு அடியானை தனக்கு அருகில் ஒன்று சேர்ப்பான், தனக்கு அருகில் கொண்டு வருவான், அந்த அடியான் இடத்தில் கேட்பான்;

அன்றைய நாளில் அன்றைய இடத்தில் இப்படி இப்படி நீ செய்தாயே என்று அல்லாஹ் எண்ணிக் கொண்டே வருவான், விசாரிக்க மாட்டான், அல்லாஹ் சொல்லிக் கொண்டே வருவான், அந்த அடியான் தலைகுனிந்து, கூனிக்குறுகி, நான் அழிந்து விட்டேன், எனக்கு தப்பிப்பதற்கு வழியே இல்லைஎன்று அவன் பயந்து நடுங்கும் போது அந்த அடியானை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மேலும் தனது கருணையுடன் நெருக்கமாக்குவான். அந்த அடியானை பார்த்து அல்லாஹ் சொல்வான்,

سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ

அடியானே! இந்த குற்றங்களை எல்லாம் நான் உலகத்திலேயே யாரும் கண்டுகொள்ளாமல் யாரும் அதைப் பார்க்காமல் மறைத்து வைத்திருந்தேன், நீ செய்த பாவங்களை நான் உனக்கு உலகத்தில் மறைத்தேன், இப்போது நான் அந்தப் பாவங்களை அப்படியே மன்னித்து விடுகிறேன் என்று சொல்வான். நீ சுவர்க்கத்திற்கு செல்! என்பதாக.(4)

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2261.

அதைத் தான் அல்லாஹ் சொல்கிறானே தவிர, விசாரணையை சொல்லவில்லை. அல்லாஹ் யாரை விசாரணை செய்ய ஆரம்பித்து விட்டானோ முடிந்தது கதி, தண்டனை தண்டனை தான்.

உமர் ரலியல்லாஹு அன்ஹு எப்படிப்பட்ட நபித்தோழர், அவர்களுக்காக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நற்செய்தி.ஸஹீஹுல் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுவர்க்கத்தில் ஒரு அழகான வீட்டை பார்க்கின்றார்கள். உள்ளே செல்லலாம் என்று எண்ணுகின்றார்கள், ஜிப்ரீல் இடத்தில் கேட்கின்றார்கள், இந்த வீடு யாருக்கு உரிய வீடு என்பதாக.

ஜிப்ரீல் சொல்கின்றார்,குறைஷி வாலிபருக்கு உள்ள வீடு. ரசூலுல்லாஹ் நினைக்கின்றார்கள்; அந்த குறைசி நானாக இருக்க வேண்டுமே! யார் அவர் என்பதாக கேட்கின்றார்கள்.

ஜிப்ரீல் சொல்கின்றார்கள்,அல்லாஹ்வின் தூதரே! உமருக்கு சொந்தமான வீடு.

அப்போது ரசூலுல்லாஹ் அந்த வீட்டின் அழகை பார்த்து ரசித்து வரலாம் என்று எண்ணுகின்றார்கள். உடனே சொல்கின்றார்கள்,

உமரே! நான் பார்த்து ரசிக்கலாம் என்று எண்ணினேன், ஆனால் உன்னுடைய கோபம் எனக்கு நினைவுக்கு வந்தது, நான் உள்ளே செல்லவில்லை.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அழுகிறார்கள். அல்லாஹ்வின் தூதரே! உங்களின் மீதா நான் கோபப்படுவேன், எனது தாயையும் தந்தையையும் உங்களுக்கு அர்ப்பணம் ஆக்குகிறேன்.

அந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு மறுமையின் தினத்தை பற்றி எப்படி பயப்படுவார்கள், சொல்கின்றார்கள்,

என் நண்பர்களே! என் சகோதரர்களே! நாளை மறுமையில் நீங்கள் விசாரிக்கப்படுவதற்கு முன்பு, அந்த விசாரணை அதிகாரி உங்களை விசாரிப்பதற்கு முன்பு நீங்களே உங்களை விசாரித்துக் கொள்ளுங்கள்.

அந்த மறுமை உடைய தினத்தில் எல்லா மக்களையும் எழுப்புவானே அல்லாஹு தஆலா , அந்த நாளுக்காக உங்களை நன்மைகளை கொண்டு நீங்கள் அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

யாருக்கு நாளை மறுமையில் அந்த விசாரணை இலகுவாக அமையும், யார் இந்த உலகத்தில் தன்னை விசாரித்துக் கொண்டாரோ, தன்னுடைய செயல்களை கணக்கிட்டு கொண்டாரோ, ஒவ்வொரு நாளும் நான் எத்தனை பாவங்களை செய்தேன் அதற்காக அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு தேட வேண்டுமே, நான் செய்த நன்மைகள் நேற்றைய தினத்தை விட இன்றைய தினத்தில் அதிகமானதா என்று யார் தன்னை விசாரித்து கொள்கின்றார்களோநாளை மறுமையில் இவர்களுடைய கேள்வி கணக்கு இலகுவாக ஆகிவிடும்.

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நாளை மறுமையில் எதைப் பற்றியெல்லாம் நம்மிடத்தில் கேள்வி கேட்பான், அதையும் நமக்கு விவரமாக சொல்கின்றான்.

وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا

(நபியே!) நீர் அறியாத ஒரு விஷயத்தை பின் தொடராதீர்! ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும். (அல்குர்ஆன் 17 : 36)

அன்பிற்குரியவர்களே,நம்மில் பலர், தீய காரியங்களை எல்லாம் செய்து கொண்டு, உள்ளத்தில் பொறாமைகளையும், வஞ்சகத்தையும், குரோதங்களையும் நிரப்பிக்கொண்டு, நன்மையான காரியங்கள், தொழுகை போன்ற காரியங்களை செய்து கொண்டு, நாளை மறுமையில் நாம் மன்னிக்கப்பட்டு விடுவோம்  என்று எண்ணுகின்றார்கள். முடியாது.

அல்லாஹ் சொல்கின்றான்,

لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

 (ஏனென்றால்) வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கு உரியனவே! உங்கள் மனதில் உள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும் அல்லது மறைத்துக் கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களைக் கேள்வி கேட்பான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; விரும்பியவர்களை வேதனை செய்வான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன் ஆவான். (அல்குர்ஆன் 2 : 284)

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கின்றார்கள்,

لا تزولُ قدَما عبدٍ يومَ القيامةِ حتَّى يسألَ عن عمرِهِ فيما أفناهُ ، وعن عِلمِهِ فيمَ فعلَ ، وعن مالِهِ من أينَ اكتسبَهُ وفيمَ أنفقَهُ ، وعن جسمِهِ فيمَ أبلاهُ

நாளை மறுமையில் ஒரு அடியானை கொண்டு வரும் போது, 5கேள்விகள் கேட்கப்படும், அந்த 5கேள்விகளுக்கு பதில் சொல்லாத வரை யாருடைய பாதமும் இறைவனுடைய அந்த முன்னிலையில் இருந்து நகர முடியாது.

அவருடைய வாழ்க்கையைப் பற்றி கேட்கப்படும்

1.             உன்னுடைய வாழ்க்கையை நீ எப்படி செலவு செய்தாய்?

2.             உன்னுடைய வாலிபத்தை நீ எங்கே கழித்தாய்?

3.             உன்னுடைய செல்வம், நீ எந்த வழியில் சம்பாதித்தாய்?

4.             சம்பாதித்த அந்த செல்வத்தை எந்த வழியில் செலவு செய்தாய்?

5.             உனக்குத் தெரிந்த மார்க்க கல்வியை கொண்டு நீ எப்படி வாழ்க்கை நடத்தினாய்?

நாளை மறுமையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மிடத்தில் இந்த 5கேள்விகளைக் கொண்டு விசாரணை செய்வான்.

அறிவிப்பாளர் : அபூபர்சா அல்அஸ்லமி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2417.

நாம் இந்த உலக வாழ்க்கையில்வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, அல்லாஹ்வுடைய எண்ணற்ற அருட் கொடைகளை நாம் அனுபவிக்கின்றோம். இந்த அருட்கொடைகளைப் பற்றி நாளை மறுமையில் விசாரணை செய்வான்.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று நாட்கள் உடைய பட்டினிக்கு பின்பு,வீதிக்கு வந்துவிட்டார்கள்.அபூபக்ர்,உமர் ரலியல்லாஹு அன்ஹு தெருவிற்கு வந்துவிட்டார்கள்.மூன்று பேரும் சேர்ந்து ஒரு அன்சாரித் தோழர் இடத்தில் சென்று மூன்று நாள் பசிக்கு பின்பாக ஒரு ரொட்டியை சாப்பிட்டார்கள், சில கரித்துண்டுகளை சாப்பிட்டார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் ; உமரே! இந்த நிஃமத்தை பற்றி நாளை மறுமையில் அல்லாஹ் விசாரணை செய்வான்.

உமர் ரலியல்லாஹு அன்ஹு கையை எடுத்து விட்டார்கள், யா ரசூலுல்லாஹ் எங்களுடைய வாள்கள் எதிரிகளின் இரத்தங்களால் சொட்டிக் கொண்டிருக்கின்றன,  எங்களுடைய வயிறுகள் பசியால் ஒட்டி இருக்கின்றன, எங்களுடைய மேனி ஆடை இல்லாமல் திறந்திருக்கின்றன, இந்த கஷ்ட நேரத்தில் எங்களுக்கு கிடைத்த இந்த ரொட்டித் துண்டு, எங்களுக்கு கிடைத்த இந்த சிறிய பேரீத்தம் பழங்கள், இதைப்பற்றியும் நாளை மறுமையில் நாங்கள் விசாரிக்கப்படுவோமா?

யோசித்துப் பாருங்கள்! இன்று எவ்வளவு நிஹ்மத்துகளை, எவ்வளவு அருட்கொடைகளை, நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

நம்மில் யாரும்,தொடர்ந்து மூன்று வேளைகள் நான் பசியாக இருக்கின்றேன் என்று சொல்லக்கூடிய கஷ்டத்தில் அல்லாஹ் நம்மை வைக்கவில்லை.

அல்லது ஒரு ஆடைதான் என்னிடத்தில் இருக்கின்றது, கிழிந்துவிட்டது, மாற்றுவதற்கு என்னிடத்தில் வேறு ஆடை இல்லை என்று சொல்லக்கூடிய நிர்பந்தத்தில் நாம் இல்லை.

நான் தங்குவதற்கு இடம் இல்லை, தெருவில் தூங்குகிறேன் என்று சொல்வதற்கு அல்லாஹ் நம்மை வைக்கவில்லை.

யோசித்துப்பாருங்கள்! அல்லாஹ் உடைய நிஹ்மத்துகளை ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம், ஒவ்வொரு நொடியும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

அல்லாஹ் சொல்கின்றான்,

وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا

அல்லாஹ்வுடைய நிஹ்மத்துகளை நீங்கள் எண்ணிப் பார்க்க நினைத்தால், அவற்றை நீங்கள் கணக்குப் போட்டு முடித்துவிட முடியாது. (அல்குர்ஆன் 16 : 18)

لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ

அந்த நிஹ்மத்துகளுக்கு நீங்கள் நன்றி செலுத்தினால், நான் அதிகமாக கொடுப்பேன், அந்த நிஹ்மத்திற்கு நீங்கள் நன்றி கெட்ட தனமாக நடந்து கொண்டால், என்னுடைய வேதனை பயங்கரமானது. (அல்குர்ஆன்14 : 7)

நிஹ்மத்தில் மிக உயர்ந்த நிஹ்மத்

ஈமான் இறைநம்பிக்கை நமக்கு கிடைத்திருப்பது.

இந்த இஸ்லாம் நமக்கு கிடைத்திருப்பது.

நபியின் உடைய வழியை நாம் அறிந்திருப்பது.

அன்பிற்குரியவர்களே!நம்முடைய ஈமானை ஒவ்வொரு நாளும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஈமான் நல்ல அமல்களை கொண்டு அதிகரிக்கின்றது, அல்லாஹ்வுடைய இபாதத்துகளை கொண்டு, வணக்க வழிபாடுகளை கொண்டு ஈமான்அதிகரிக்கின்றது.

பாவங்கள் செய்யும் பொழுது,அனாச்சாரங்கள் செய்யும்பொழுது, ஆசாபாசமான, அல்லாஹ்வுக்கு வெறுப்பான காரியங்களை செய்யும் பொழுது, இந்த ஈமான் குறைந்து கொண்டே போகின்றது.

அடுத்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த உலக ரீதியாக நமக்கு கொடுத்திருக்கக் கூடிய நிஹ்மத்துகள்,இவை ஒவ்வொன்றிற்கும் அல்லாஹ் எப்படி நன்றி செலுத்த விரும்புகிறான், என்பதை அறிந்து அதற்கு ஏற்ப நம்முடைய நன்றியை அமைத்துக்கொள்ள வேண்டும்.

இப்படி நம்முடைய இஸ்லாம், அல்லாஹ் கொடுத்திருக்கக் கூடிய, இந்த இஸ்லாமுடைய நிஹ்மத்திற்கும், இந்த உலக வாழ்க்கையில் யாருக்கு எப்படி அல்லாஹ்கொடுத்து இருக்கின்றானோ, பதவியின் மூலமாகவோ, செல்வத்தின் மூலமாகவோ, உடல் ஆரோக்கியத்தின் மூலமாகவோ, இப்படி அல்லாஹ்வுடைய நிஹமத்துகளுக்கு எப்படி அல்லாஹ் நன்றி செலுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறானோ, அவற்றை அறிந்து அந்த உரிமைகளை நாம் இங்கே கொடுத்துவிட்டால், அல்லாஹ்வை பயந்து நாம் நம்முடைய வாழ்க்கையை இங்கு அமைத்துக் கொண்டால், அந்த விசாரணையுடைய நாளில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை மன்னிப்பான், நம்மீது கருணை காட்டுவான்.

அல்லாஹ் சொல்கின்றான்,

إِنْ تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُمْ مُدْخَلًا كَرِيمًا

நீங்கள் பெரும் பாவங்களை விட்டு விலகி விடுங்கள், உங்களை அறியாமல் நடக்கக் கூடிய சிறு பாவங்களை நாம் மன்னித்து விடுகின்றோம், உங்களை நாம் சங்கைக்குரிய, சிறப்பிற்குரிய சுவர்க்கத்தில் நாம் நுலைவிப்போம் என்பதாக. (அல்குர்ஆன் 4 : 31)

அந்த நல்ல அடியார்களில் நாம் ஆக வேண்டும், அதற்கு முயற்சி செய்வோமாக, அந்தவிதமான முயற்சிகளை நம்முடைய வாழ்க்கையில் அதிகப்படுத்துவோமாக!

எங்கு பார்த்தாலும் மறுமையைப் பற்றி உண்டான பேச்சு, எங்கு பார்த்தாலும் அந்த விசாரணை நாளை பற்றி உண்டான பேச்சு, எங்கு பார்த்தாலும் அந்த சுவர்க்கத்தை பற்றி உண்டான பிரச்சாரம், எங்கு பார்த்தாலும் நரகத்தைப் பற்றி உண்டான பிரச்சாரம் செய்ய வேண்டும்.

இந்த உலக வாழ்க்கை அழிந்து விடும்,நீங்கள் ராஜாவாக வாழுங்கள் அல்லது நீங்கள் ஆண்டியாக வாழுங்கள், நீங்கள் செல்வத்தில் வாழுங்கள், ஏழ்மையாக வாழுங்கள், நிச்சயம் இந்த உலகம் அழிந்தே தீரும்.

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ

ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைத்தே ஆகவேண்டும். (அல்குர்ஆன் 3 : 185)

நாளை மறுமையில், அந்த மறுமையின் உடைய நிரந்தர வீட்டில், நாம் வெற்றியடைய வேண்டும் என்று சொன்னால், இந்த உலக வாழ்க்கையை நாம் அல்லாஹ்வுடைய கட்டளைக்கேற்ப சீர்படுத்தி கொள்வதை தவிர வேறு வழியில்லை.

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா எனக்கும்உங்களுக்கும் அவனுடைய அன்பையும், அருளையும், அவனுடைய பாவமன்னிப்பையும்முழுமையாக அடைந்து கொள்வதற்கு உதவி செய்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ}وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ{قَالَ يَا مَعْشَرَ قُرَيْشٍ أَوْ كَلِمَةً نَحْوَهَا اشْتَرُوا أَنْفُسَكُمْ لَا أُغْنِي عَنْكُمْ مِنْ اللَّهِ شَيْئًا يَا بَنِي عَبْدِ مَنَافٍ لَا أُغْنِي عَنْكُمْ مِنْ اللَّهِ شَيْئًا يَا عَبَّاسُ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ لَا أُغْنِي عَنْكَ مِنْ اللَّهِ شَيْئًا وَيَا صَفِيَّةُ عَمَّةَ رَسُولِ اللَّهِ لَا أُغْنِي عَنْكِ مِنْ اللَّهِ شَيْئًا وَيَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ سَلِينِي مَا شِئْتِ مِنْ مَالِي لَا أُغْنِي عَنْكِ مِنْ اللَّهِ شَيْئًا

குறிப்பு 2)

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا مُعْتَمِرٌ قَالَ سَمِعْتُ مَنْصُورًا عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ قَالَ حَدَّثَنِي الْبَرَاءُ بْنُ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وَضُوءَكَ لِلصَّلَاةِ ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ وَقُلْ اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَهْبَةً وَرَغْبَةً إِلَيْكَ لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ فَإِنْ مُتَّ مُتَّ عَلَى الْفِطْرَةِ فَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَقُولُ فَقُلْتُ أَسْتَذْكِرُهُنَّ وَبِرَسُولِكَ الَّذِي أَرْسَلْتَ قَالَ لَا وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ (صحيح البخاري 5836 -)

குறிப்பு 3)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ بُنْدَارٌ قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ الْإِمَامُ الْعَادِلُ وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ (صحيح البخاري 620 -)

குறிப்பு 4)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا هَمَّامٌ قَالَ أَخْبَرَنِي قَتَادَةُ عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ الْمَازِنِيِّ قَالَ بَيْنَمَا أَنَا أَمْشِي مَعَ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا آخِذٌ بِيَدِهِ إِذْ عَرَضَ رَجُلٌ فَقَالَ كَيْفَ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي النَّجْوَى فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ اللَّهَ يُدْنِي الْمُؤْمِنَ فَيَضَعُ عَلَيْهِ كَنَفَهُ وَيَسْتُرُهُ فَيَقُولُ أَتَعْرِفُ ذَنْبَ كَذَا أَتَعْرِفُ ذَنْبَ كَذَا فَيَقُولُ نَعَمْ أَيْ رَبِّ حَتَّى إِذَا قَرَّرَهُ بِذُنُوبِهِ وَرَأَى فِي نَفْسِهِ أَنَّهُ هَلَكَ قَالَ سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ فَيُعْطَى كِتَابَ حَسَنَاتِهِ وَأَمَّا الْكَافِرُ وَالْمُنَافِقُونَ فَيَقُولُ الْأَشْهَادُ}هَؤُلَاءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ أَلَا لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ (صحيح البخاري 2261 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/