HOME      Khutba      பொய் பாவத்தின் வழிகாட்டி | Tamil Bayan - 43   
 

பொய் பாவத்தின் வழிகாட்டி | Tamil Bayan - 43

           

பொய் பாவத்தின் வழிகாட்டி | Tamil Bayan - 43


பொய் பாவத்தின் வழிகாட்டி

ஜுமுஆ குத்பா தலைப்பு : பொய் பாவத்தின் வழிகாட்டி

வரிசை : 43

இடம் : மஸ்ஜித் அஹ்லே ஹதீஸ், மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நம்மிடத்தில் சில பண்புகளை கொண்டு அவனுடைய மகிழ்ச்சியை வழங்குகின்றான். அவனுடைய பொருத்தத்தை தருகின்றான்.

சில குணங்கள்,பண்புகள் இருக்கின்றன, அந்த பண்புகளின் காரணமாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய வெறுப்பை அவனுடைய சாபத்தை அவனுடைய கோபத்தை அவனது தண்டனையை இறக்குகின்றான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஹபீப் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு செயல் ரீதியான வழிகாட்டியாக உதாரணமாக வந்தார்கள்.

எந்த பண்புகளை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் விரும்புகிறானோ அந்த பண்பு உடையவர்களின் மீது தனது விசேஷமான கருணையை அருளை அவனுடைய அன்பை இறக்குகின்றானோ அந்த பண்புகளை தனது வாழ்க்கையில் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.கொண்டிருந்தார்கள்.

எந்த பண்புகள் குணங்கள் அல்லாஹ்விற்கு பிடிக்கவில்லையோ அல்லாஹ்விற்கு வெறுப்பானவையோ மேலும் எந்த குணம் உடையவர்களின் மீது அல்லாஹ்வுடைய சாபம் தண்டனை கோபம் இறங்குகின்றதோ அந்த குணங்கள் பண்புகளை விட்டு அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெகு தூரத்தில் இருந்தார்கள். அந்த பண்புகளை அவர்கள் வெறுத்தார்கள்.

நமது சமுதாயமும் அவர்களுடைய சமுதாயம் ஆகிய நாமும் அந்த பண்புகளை வெறுக்கும் படி நமக்கு கற்று கொடுத்தார்கள்.

சமுதாயத்தில் சிறியவராக இருந்தாலும் சரி,நடுத்தர வயது உடையவராக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, எந்த பண்புகளை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களும் விரும்பினார்களோ அந்த பண்புகளைதான் நாமும் நமக்கு விரும்ப வேண்டும்.

எந்தப் பண்புகளை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் வெறுத்தார்களோ அந்தப் பண்புகளை நாமும் வெறுக்க வேண்டும். அந்தப் பண்புகளை விட்டு நாமும் நம்மை விலக்கி கொள்ள வேண்டும். நம்முடைய பிள்ளைகளுக்கும் அதற்குண்டான பயிற்சியை கொடுக்க வேண்டும். நம்முடைய வாலிபர்களுக்கு அதற்குண்டான போதனையை கொடுக்க வேண்டும். நம்முடைய பெரியவர்கள் அதற்கு முன் உதாரணமாக நடந்து காட்ட வேண்டும்.

இன்று, நம்முடைய சமுதாயத்தில் செயல்கள் நற்காரியங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டாலும் ஆனால், பெரிய இழப்பு பெரிய ஒரு இடைவெளி ஏற்பட்டு இருக்கின்றது என்று சொன்னால் அது நற்குணங்களுக்கும் நற்பண்புகளுக்கும் தான்.

அந்த நற்பண்புகளில் ஒன்று தான், உண்மை பேசுதல், உண்மையாக நடத்தல், எல்லா நேரங்களிலும் எல்லா காலங்களிலும் உண்மையை உரைத்தல்.

நமக்கு அது பாதகமாக இருந்தாலும் சரி அல்லது சாதகமாக இருந்தாலும் சரி நமக்கு அதனால் லாபம் இருந்தாலும் சரி அல்லது நஷ்டம் ஏற்பட்டாலும் சரி, அதனால் நமக்கு ஒரு கஷ்டம் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் சரி, எல்லா சூழ்நிலைகளிலும் உண்மை பேசுவது, உண்மையாக நடப்பது.

ஒரு முஸ்லிமுக்கு இரண்டு பக்கங்கள் இருக்காது. அதாவது ஒன்று, உண்மை. இரண்டாவது, பொய்.

ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கை ஒரு முஸ்லிமுடைய புத்தகம் ஒரே பக்கத்தை கொண்டதுதான். உண்மைதான், உண்மையை தவிர அவன் பொய் பேச மாட்டான். எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா காலங்களிலும் உண்மை பேசுவதையே தனது வாழ்க்கையின் லட்சியமாக குறிக்கோள்களாகக் கொண்டவர்கள் தான் முஸ்லிம்.

ஆண்கள், பெண்கள், முஸ்லிம் சமுதாயம், முஸ்லிம்களுடைய சிறுவர்கள், வாலிபர்கள், பெரியவர்கள் பொய் பேசுவது இந்த முஸ்லிம் சமுதாயத்தில் வெறுக்கப்பட்ட ஒரு காரியம். அல்லாஹ்வுடைய சாபத்திற்கு உரிய அல்லாஹ்வுடைய கோபத்திற்கு உரிய ஒரு காரியம்.

பல பண்புகளை அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான். அந்த பண்பு உடையவர்கள் மீது தன்னுடைய கோபத்தை இறக்குறேன்,தனது சாபத்தை இறக்குறேன்என்று.

அந்த பண்பை உடையவர்களை நான் வெறுக்கிறேன் என்று அல்லாஹ் சொல்கிறான். அந்த ஒன்றுதான் பொய் பேசுவது.

இறைநம்பிக்கை, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது, அல்லாஹ்வை விசுவாசிப்பது, அல்லாஹ்வை ஏற்றுக் கொள்வது, இந்த பண்புகளுடன் பொய் என்ற குணம் சேரமுடியாது. இறைநம்பிக்கையாளரிடத்தில் பொய் என்ற குணம் சேரமுடியாது

இறைநம்பிக்கையாளரிடத்தில் இருக்கக் கூடிய பண்பு உண்மை பேசுவது, உண்மையாக நடத்தல், அவருடைய சொல்,செயல், குணங்கள், பண்பாடுகள்,அவருடைய கொடுக்கல்வாங்கல்அனைத்திலும் உண்மையை அவர் உரைப்பார். உண்மையாக நடந்து கொள்வார்.

மக்களுக்கு ஒன்றை பேசிவிட்டு அதற்கு மாற்றமாக நடக்க மாட்டார். அல்லது தன்னுடைய உள் மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு அதற்கு வெளியில் மாற்றமாக பொய்யாக சொல்லமாட்டார்.

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா பல இடங்களில் இப்படி எச்சரிக்கை செய்கிறான் :

وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ

யார் பொய் பேசுகிறார்களோ அவர்களுக்கு நாளை மறுமை நாளையில் நாசம், கேடு உண்டாகட்டும். (அல்குர்ஆன் 77 : 15)

பொய்களில் பெரிய பொய், அல்லாஹ்விற்கு இணையாக ஒரு கடவுள் இருக்கிறார் என்று சொல்வது. அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பது,பொய்களில் பெரிய பொய்.

இப்படி பொய்யினுடைய வகை எதுவாக இருந்தாலும் சரி, அல்லாஹு தஆலா மொத்தமாக எச்சரிக்கை செய்கின்றான்.

அல்லாஹ்விற்கு இணை இருக்கு என்று சொல்பவர்கள் அல்லது மறுமை இல்லை என்று சொல்பவர்கள் அல்லது தங்களுடைய மார்க்கத்தை மாற்றிக் கொள்பவர்கள் அல்லது அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களும் சொல்லாததை சொல்பவர்கள் அல்லது அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொய்களை சொல்பவர்கள் தங்களை பெருமையாக கண்ணியவான்களாக தங்களை மக்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக பொய் புகழ்ச்சி செய்பவர்கள்.

இப்படி பொய் பேசுவது எந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவர்களை இதே சூரா அல் முர்ஸலாத்தில் பல இடங்களில் கண்டித்து சொல்கின்றான்.

وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ

பொய் பேசுபவர்களுக்கு மறுமையில் கேடு உண்டாகட்டும், நாசம் உண்டாகட்டும். (அல்குர்ஆன் 77:49)

இந்த உலகத்தில் வேண்டுமானால் பொய்யை கொண்டு பணத்தை சம்பாதித்துக் கொள்ளலாம், பொய்யை கொண்டு புகழை சம்பாதித்துக் கொள்ளலாம்,பொய்யை கொண்டு மக்களுக்கு மத்தியில் மதிப்பை சம்பாதித்துக் கொள்ளலாம்.

ஆனால், பொய்யர்கள் நாளை மறுமையில் அடையக்கூடிய இழிவு பற்றி அல்லாஹ் சொல்கின்றான்: அவர்களுக்குக் கேடு உண்டாகட்டும் என்று.

யாருக்கு நாளை மறுமையில் கேடு உண்டாகட்டும் என்று ரப்புல் ஆலமீன் கூறிவிட்டானோ அவர்களை யாரால் பாதுகாக்க முடியும்! அவர்களுக்கு யார் சிபாரிசு செய்ய முடியும்! அவர்கள் எப்படி நாளை மறுமையில் ஈடேற்றம் பெற முடியும்!

இதற்கு எதிராக அல்லாஹ் சொல்கின்றான் :

قَالَ اللَّهُ هَذَا يَوْمُ يَنْفَعُ الصَّادِقِينَ صِدْقُهُمْ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

அதற்கு அல்லாஹ் “உண்மை சொல்லும் சத்தியவான்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கக்கூடிய நாள் இதுதான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களும் அவர்களுக்கு உண்டு. அதில் அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள்'' என்று கூறுவான். (அந்நாளில்) அவர்களைப் பற்றி அல்லாஹ்வும் மகிழ்ச்சியடைவான். (அல்குர்ஆன் 5 : 119)

உண்மை பேசும் காரணத்தால் உண்மையை உரைக்கும் காரணத்தால் இந்த உலகத்தில் எவ்வளவு பெரிய இழப்பை ஒரு முஸ்லிம் சந்திக்க நேரிட்டாலும்,நாளை மறுமையில் அல்லாஹ்வுடைய முன்னிலையில் அவருக்குக் கிடைக்கக்கூடிய இந்த நற்செய்திக்கு முன்பதாக இந்த உலகத்தினுடைய எந்த இழப்புமே ஒன்றுமே கிடையாது.

உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார்? என்று பிரித்தறிய அல்லாஹ்  விரும்புகின்றான். ஆகவே, மக்களுக்கு சோதனையை கொடுக்கின்றான். சோதனையின் மூலமாக உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார்? என்று அல்லாஹ் பிரித்தறிய விரும்புகின்றான்.

இந்த உண்மை என்பது பல படித்தரங்களில் அமைந்திருக்கிறது. ஒன்று, மனிதன் தனது மார்க்கத்தில் உண்மை உரைப்பது. இரண்டாவது, தன்னுடைய பொருளாதாரத்தில், தனது கொடுக்கல் வாங்கலில், தன்னுடைய பழக்கவழக்கத்தில் உண்மையாக இருப்பது.

இப்படி மார்க்கத்தின் கொள்கையில் உண்மையாக இருந்தாலும் சரி, அது போன்று தன்னுடைய அன்றாடம் வாழ்க்கையில் உண்மையாக இருந்தாலும் சரி, இந்த இரண்டுமே நம்முடைய மார்க்கம் இஸ்லாமில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வலியுறுத்தப்பட்ட ஒன்று.

இன்று, மக்களில் பலர் பேசும் போது, தாங்கள் எதை பேசுகிறோம்?என்று உணராமல் அறிவு இல்லாமல் பல விஷயங்களை பேசுகின்றார்கள்.

மக்களை சிரிக்க வைப்பதற்காகவே பேசுவார்கள். இப்படி இவர்கள் பேசும் பொழுது மக்களை சிரிக்க வைப்பதற்காக பல பொய்களையும் சேர்த்து பேசுவார்கள். தாங்கள் மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக பல பொய்களை கலந்து இவர்கள் பேசுவார்கள்.

இவர்களைப் பற்றி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கின்றார்கள் :

وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ فَيَكْذِبُ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ

யார் பேசும்போது பொய் சொல்லி மக்களை சிரிக்க வைக்கிறானோ அவனுக்கு நாசம் உண்டாகட்டும்! அவனுக்கு நாசம் உண்டாகட்டும்! அவனுக்கு நாசம் உண்டாகட்டும்! என்று மூன்று முறை சபிகின்றார்கள்.

நூல் : அபூதாவூத், எண் : 4338.

நாம் பேசும் பொழுது நம்முடைய ஒவ்வொரு பேச்சும் பதிவு செய்யப்படுகிறது.அல்லாஹ் கூறுகிறான்:

مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ

நாம் பேசும்போது மொழியும் போது நம்முடைய ஒவ்வொரு வார்த்தையை பதிவு செய்து கொள்ளக்கூடிய எழுதி வைத்துக் கொள்ளக் கூடிய மலக்குகள் நம்முடனே இருக்கின்றார்கள். (அல்குர்ஆன்50 : 18)

நமது நாவில் இருந்து வரக்கூடிய பேச்சு,அந்த பேச்சின் உடைய எழுத்துக்கள் முதற்கொண்டு அதனுடைய வாசகங்கள் வாக்கியங்கள் என்ன அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது? என்று அனைத்து விவரங்களையும் அந்த மலக்குகள் பதிவு செய்து கொள்கிறார்கள்.

துல்லியமாக பதிவு செய்து கொள்ளக்கூடிய மலக்குகள், அவர்களுக்கு நம்முடைய பேச்சு குழம்பாது. அல்லாஹு ரப்புல் ஆலமீன் மிகத்தெளிவான ஆற்றலை அவர்களுக்கு கொடுத்து இருக்கிறான்.

அந்த மலக்குகள் நம்முடைய பேச்சுகளை பதிவு செய்யும் நாளை யோசித்துப் பாருங்கள். நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லும் பொழுது அல்லாஹு ரப்புல் ஆலமீன் நிறுத்தி வைத்து கேள்வி கேட்கும் பொழுது, எந்த பேச்சுக்கள் அல்லாஹ்விற்கு பிடிக்கவில்லையோ, எந்த பேச்சுகளை அல்லாஹ் சபித்தானோ, அந்த பேச்சுகள் அந்த சொற்கள் நம்முடைய பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தால் நாளை மறுமையில் நாம் எங்கே செல்லமுடியும்? யாரிடத்தில் சென்று பாதுகாப்பு பெறமுடியும்?

இந்த உலக வாழ்க்கையில் சர்வ சாதாரணமாக சில காரியங்களை நாம் நினைத்துக் கொள்கின்றோம். உண்மையில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய எச்சரிக்கையை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الْجَنَّةَ

உங்களில் யார், எனக்கு தன்னுடைய இரண்டு தொடைகளுக்கும் மத்தியில் உள்ள உறுப்பிற்கும், தன்னுடைய இரண்டு உதடுக்கு இடையில் உள்ள உறுப்பிற்க்கும் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறாரோ அவருக்கு நான் சொர்க்கத்திற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன்!!

யார் உங்களில், தன்னுடைய மர்மஸ்தானத்திற்கும்,தன்னுடைய நாவுக்கும்பொறுப்பு ஏற்றுக் கொள்கிறாரோ, அதைப் பாதுகாத்துக் கொள்கிறாரோ அவருக்கு நான் அல்லாஹ்விடத்தில் சொர்க்கத்திற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன்.

அறிவிப்பாளர் : சஹ்ல் இப்னு சஃத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5993.

இந்த ஹதீஸ் ஒரு வகையில் மிகப்பெரிய நற்செய்தி. மற்றொரு வகையில் மிகப்பெரிய எச்சரிக்கை.

இன்று, நாம் மக்களுடைய வாழ்க்கையில் பார்க்கிறோம்,பெரும்பாலான தவறுகள் பெரும்பாலான வழிகேடுகள்,அனாச்சாரங்கள், அசிங்கங்கள்,கொலை,கொள்ளைகள்இந்த இரண்டின் மூலமாக தான் ஏற்படுகின்றன.

எப்பொழுது மனிதன் தன்னுடைய கற்பை பாதுகாக்க தவறுகின்றனோ, தன்னுடைய ஆசையை தவறான முறையில் நிறைவேற்றி கொள்ள விரும்புகின்றனோ, அந்த நேரத்தில் குடும்பங்கள் சீரழிவதை கொலைகள் நடப்பதை மிகப்பெரிய ஆபத்துக்களை சமுதாய சீர்கேடுகளை நாம் பார்க்கிறோம்.

உங்களுடைய ஒரு பேச்சை கொண்டு சண்டை சச்சரவு செய்துகொண்டு இருக்கக்கூடிய இரண்டு கூட்டத்தார்களுக்கு இடையில் நீங்கள் நட்பையும் ஏற்படுத்தலாம். சமரசத்தையும் ஏற்படுத்தலாம். இணக்கத்தையும் ஏற்ப்படுத்தலாம். அன்பை ஏற்படுத்தலாம். ஒற்றுமையை ஏற்ப்படுத்தலாம்.

அதே சமயத்தில் இதே பேச்சை கொண்டு இணக்கமாக அன்பாக நேசமாக ஒற்றுமையாக இருக்கக்கூடிய நண்பர்களுக்கு இடையில் சமுதாயத்திடையில் பிளவையும் ஏற்படுத்தலாம், சண்டை சச்சரவுகளை மூட்டலாம், அவர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய குழப்பங்களையும் ஏற்படுத்தலாம்.

யோசித்துப் பாருங்கள், இந்த ஒரு வார்த்தை தான், இந்த ஒரு பேச்சுதான் காரணம், நட்பை ஏற்படுத்துவதற்கும் அன்பை ஏற்படுத்துவதற்கும்.

அதே பேச்சுதான் இருந்த நட்பை அழிப்பதற்கு இருந்த ஒற்றுமையை குலைப்பதற்க்கு காரணமாகிறது.

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நமக்கு மிகத் தெளிவாக பல பாடங்களைக் கற்பித்து தருகிறான்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ

நம்பிக்கையாளர்களே! ஒரு விஷமி உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால், (அதன் உண்மையை அறியும் பொருட்டு அதைத்) தீர்க்க விசாரணை செய்து கொள்ளுங்கள். (இல்லையெனில், அவனுடைய சொல்லை நம்பி) அறியாமையால் ஒரு கூட்டத்திற்கு நீங்கள் தீங்கிழைத்து விட்டுப் பின்னர், நீங்கள் செய்தவற்றைப் பற்றி நீங்களே துக்கித்துக் கவலைப்படும்படியும் நேர்ந்துவிடும். (அல்குர்ஆன் 49 : 6)

பொய் பேசக் கூடியவர்கள்,உண்மைக்கு மாற்றமான தகவல்களை தர கூடியவர்களை,அல்லாஹு சுப்ஹானஹு தஆலா எந்தப் பெயரைக் கொண்டு சொல்கிறான்?

யார் பெரும் பாவங்களை செய்வார்களோ, கொடிய குற்றங்களை செய்வார்களோ,அவர்களுக்கு பயன்படுத்தக்கூடிய ஃபாசிக் என்ற பெயரை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

الْجَنَّةُ أَقْرَبُ إِلَى أَحَدِكُمْ مِنْ شِرَاكِ نَعْلِهِ وَالنَّارُ مِثْلُ ذَلِكَ

சொர்க்கம் உங்களில் ஒருவருக்கு அவருடைய செருப்பு வாரை விட மிக அருகாமையில் இருக்கிறது. அது போன்று தான் நரகம்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6007.

அதாவது,சொர்க்கத்துக்குரிய காரியங்களாக இருந்தாலும் சரி,அல்லது நரகத்துக்குரிய காரியங்களாக இருந்தாலும் சரி,மக்கள் செய்வதற்கு இலகுவாக தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அதை அமைத்து வைத்திருக்கிறான்.

யார் சொர்க்கத்தை நாடுகின்றார்களோ அவர்கள் சொர்க்கத்துக்குரிய அமல்களை நல்ல காரியங்களை நல்ல பேச்சுக்களை பேசிக்கொள்கின்றார்கள்.

யார் தங்கள் மீது தானே கேடை நாசத்தை தேடி கொள்கிறார்களோ, அவர்கள் நரகத்திற்கு உண்டான காரியங்களை பேச்சுகளை செயல்களை செய்து விடுகின்றார்கள்.

சுபஹானல்லாஹ் என்று சொல்லுங்கள், அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லுங்கள். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இதற்கு பகரமாக சொர்க்கத்தை தருகின்றான்.

இதே சமயத்தில் ஒருவர் பொய் பேசுகின்றான், இணக்கமாக இருக்கக்கூடிய இரண்டு நண்பர்களுக்கு இடையில் அவர் பிரிவினையை ஏற்படுத்துகின்றான், கோள்முட்டுகின்றான், புறம் பேசுகின்றான், பொய்சாட்சி சொல்கின்றான், மானபங்கம் படுத்துகின்றான், அவதூறு கூறுகின்றான், இது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா??

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:

أَلَا أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ ثَلَاثًا قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ الْإِشْرَاكُ بِاللَّهِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ وَجَلَسَ وَكَانَ مُتَّكِئًا فَقَالَ أَلَا وَقَوْلُ الزُّورِ قَالَ فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا لَيْتَهُ سَكَتَ

பெரிய பாவங்களைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லட்டுமா? அந்தப் பாவங்கள் என்னென்ன என்பதாக. இப்படி மூன்று முறை கேட்டுவிட்டு சொன்னார்கள்

அல்லாஹ்விற்கு இணைவைத்தல், அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் மற்றவர்களை சேர்த்துக் கொள்ளுதல்!! இந்த ஹதீஸை கூறும்போது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் படுத்து இருந்தார்கள். சாய்ந்து இருந்தார்கள்.

அடுத்து மிகப்பெரிய ஒரு செய்தியை சொல்ல வந்தார்கள். எப்படி இணைவைத்தல் அல்லாஹ்வுடைய ஹக்கில் செய்யப்படும் மிகப் பெரிய கொடிய குற்றமோ, மிகப் பெரிய கொடிய அநீதியோ அதுபோன்றுதான் அடுத்த குற்றம், அடியார்களுடைய ஹக்கில்,மக்களுடையஹக்கில் செய்யக் கூடிய மிக பயங்கரமான கொடிய அநீதி.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: பொய் சாட்சி சொல்வது, பொய் பேசுவது, பொய்சாட்சி சொல்வது, பொய் பேசுவது என்ற இந்த வார்த்தையை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

தோழர்கள் கூறுகிறார்கள்,அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அமைதியாக வேண்டுமே, அமைதியாக வேண்டுமே என்று நாங்கள் எங்களுக்குள் சொல்லிக் கொண்டோம்.

அந்த அளவிற்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த பொய் பேசக் கூடியவர்கள் பொய் உரைக்கக் கூடியவர்கள் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.

அறிவிப்பாளர் : அபூபக்ரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2460.

நாளை மறுமையில் இவர்கள் அடையக்கூடிய இழிவு,இவர்களுக்கு ஏற்படக்கூடிய அந்த சோதனை,அந்த கெட்ட பெயர் அதைவிட மிகப்பெரிய ஒரு வேதனை இருக்காது.

மேலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا

உண்மை பேசுவது, உண்மை உரைப்பது நன்மைக்கு வழி வகுக்கிறது.

(நீங்கள் நன்றாக உங்களது வாழ்க்கையில் இதை நீங்கள் அனுபவித்து பார்க்கலாம். நம்மில் ஒவ்வொருவரும் எப்போது எனது வாழ்க்கையில் நான் உண்மை தான் பேசுவேன் என்று உறுதி எடுத்துக் கொள்கிறோமோ, என்னுடைய எந்த செயலிலும் எந்த காரியத்திலும் ,எந்த நிலைமையிலும் சரி,எனது வீடாக இருந்தாலும் சரி,எனது அலுவலகமாக இருந்தாலும் சரி, அல்லது எனது வியாபாரம் தொழிலாக இருந்தாலும் சரி,எல்லா நேரத்திலும் நான் உண்மை தான் பேசுவேன், உண்மையைத் தவிர எதையும் உரைக்க மாட்டேன்.

அதனால் மக்களிடத்தில் எனக்கு கெட்ட பெயர் ஏற்பட்டாலும் சரி, நான் மக்களுடைய கெட்ட பெயருக்கு பயப்படாமல், அல்லாஹ்விடத்தில் நல்ல பெயரை அடைய வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வுடைய அன்பை அடைய வேண்டும் என்பதற்காக உண்மைதான் உரைப்பேன் என்று நம்மில் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ளும் பொழுது அதை நமது வாழ்க்கையில் கடைபிடிக்கும் பொழுது இந்த ஹதிஸ்எவ்வளவு நமக்கு உண்மையாக அமைகிறது என்பதாக பார்க்கலாம்

ஆனால், இங்கே ஏற்படக்கூடிய பல இடைவெளி என்ன? பல நல்ல விஷயங்களை கேட்கும்பொழுது நம்மில் பலர், ஏதோ காதுக்கு இனிமையாக இருக்கிறது என்று கேட்டு விட்டு சென்று விடுகிறோமே தவிர வாழ்க்கையில் இதை நடைமுறைப்படுத்தி பார்ப்போம், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லகூடிய உண்மைகளை கடைபிடிக்கும் பொழுது அவர்கள் சொல்லகூடிய நற்செய்திகளை அவர்கள் சொல்லக்கூடிய அந்த வெகுமதிகளை நாம் அடைகிறோமா?? என்று தமது வாழ்க்கையில் பயன்படுத்தி பார்க்ககூடியவர்கள் நம்மில் குறைவாக இருக்கிறார்கள்.)

அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சொன்னார்கள்: உண்மை பேசுங்கள், உண்மையாக நடந்து கொள்ளுங்கள். இந்த உண்மை உங்களுக்கு நன்மைக்கு வழிவகுக்கும்.

எப்போது இந்த கல்பில் உண்மை இடம் கொள்கின்றதோ, இந்த மனிதன் இவனது வெளி வாழ்க்கையிலும் இவனுடைய மற்ற சொல்களிலும் செயல்களிலும் இவனுடைய மற்ற பழக்கவழக்கங்கள் நல்லவனாக மாறி விடுகின்றான்.

உண்மை பேசக் கூடியவன் ஒருகாலும் தீயவனாக ஆகமுடியாது. பொய் பேசக் கூடியவன் ஒருகாலும் நல்லவனாக ஆக முடியாது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சொன்னார்கள், நீங்கள் உண்மை பேசுனீர்கள் என்று சொன்னால்,உங்களது வாழ்க்கையில் நீங்கள் நன்மைகளை செய்வீர்கள்.

அந்த உண்மை உங்களை நன்மைக்கு கொண்டு செல்லும். நல்ல காரியங்களுக்கு நல்ல அமல்களுக்கு உங்களுக்கு வழிகாட்டும். நீங்கள் உங்களது வாழ்க்கையில் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள், நான் உண்மை பேசுவேன் பொய் பேச மாட்டேன் என்று.

அடுத்து சொன்னார்கள் : இந்த நன்மை உங்களை சொர்க்கத்திற்கு கொண்டு போய் சேர்க்கும். ஒரு மனிதன் உண்மை பேசுகிறான் உண்மை பேசுவதையே வழக்கமாக பழக்கமாக கொள்கையாக பண்பானாக குணமாக மாற்றிக் கொள்கிறான்.

இதனால் கிடைக்கக்கூடிய பலன், அல்லாஹ்விடத்தில் இவன் உண்மையாளன் -சித்தீக் என்ற பெயரைப் பெறுகிறான்.

(எத்துணை நற்செய்திகளை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் பாருங்கள்.

நாம் உண்மை பேசுவது, இந்த உலக வாழ்க்கையில் நம்முடைய இந்த ஒரு சாதாரண சொல் என்பதாக நாம் நினைத்து விடுகிறோம். ஆனால், இந்த சொல் நம்மை சொர்க்கத்தில் கொண்டு போய் சேர்கிறது.)

அடுத்து ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல் சொல்கின்றார்கள் :

وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا

பொய் பேசுவது, உங்களை பாவத்திற்கு வழிவகுக்கிறது.

(ஆகவேதான் நாம் கூறினோம் பொய் பேசக் கூடியவர்கள் நல்லவனாக மாற முடியாது உண்மை பேசக் கூடியவன் பாவம் செய்பவனாக மாறமுடியாது.)

காரணம், இவனுடைய உள்ளத்தில் உள்ள அந்த பொய் என்ற குணம் இவனது வாழ்க்கையில் இவன் கடைப்பிடிக்கக்கூடிய அந்த பொய் என்ற பண்பு இவனை பாவத்திற்குத்தான் அழைத்து செல்லும்.)

மேலும், இந்த பாவம் இவனை நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும். ஒருவன் பொய் பேசுகிறான், பொய் பேசுவதையே வழக்கமாக கொள்கையாக பண்பாக கொள்கின்றான். நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் பொய்யனாக எழுதப்படுகிறான்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5629.

நாளை மறுமையில் சொர்க்கத்திற்கு செல்லக்கூடியவர்கள் உண்மையாளர்களா?பொய்யர்களா? யாரை அல்லாஹ் பொய்யர்கள் என்று எழுதி விட்டானோ அவர்கள் சொர்க்கத்திற்கு செல்ல முடியாது. காரணம், பொய் பேசும் காரணத்தால், அந்த பொய் அவனை பாவத்திற்கு இட்டுச் செல்கிறது.

அவனுடைய பாவம் அவனை நரகத்திற்கு இட்டுச் செல்கிறது. இவன் பொய் பேசிய காரணத்தால் அல்லாஹ்விடத்தில் பொய்யனாக எழுதப்பட்டு விடுகிறான். பொய் பேசக் கூடியவன்,யாரை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கோபிக்கின்றானோ, சபிக்கின்றானோ, யாரை அல்லாஹ் வெறுக்கிறானோ, அந்த பெயர் இவனுக்கு பட்டமாக வழங்கப்படுகிறது.

இன்று பார்க்கிறோம்; நம்முடைய வாழ்க்கையில் எத்துணை மக்கள் தங்களை கண்ணியவான்களாக தங்களை உயர்ந்த மக்களாக எண்ணிக் கொள்கிறார்கள்.

சமுதாய தலைவர்களாக சமுதாயத்தின் முக்கியஸ்தர்களாக படித்த அறிஞர்களாக மக்களுக்கு மத்தியில் தங்களை காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் சர்வசாதாரணமாக அவர்களது வாழ்க்கையில் அவர்களது பேச்சில் பொய்யை பார்க்கிறோம்.

அன்பிற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும்மல்ல, இந்த உலகத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் யாருக்கு நேரிய அறிவை கொடுத்திருக்கிறானோ யாருக்கு சீரிய சிந்தனையை ஒழுக்கத்தை கொடுத்து இருக்கிறானோ அந்த எல்லா நல்ல மக்களும் உண்மை என்ற பண்பை நேசிப்பார்கள். பொய்யை வெறுப்பார்கள்.

சமுதாயத்தில் ஒருவர் எவ்வளவு தான் பெரியவராக இருந்தாலும் சரி,அவருடைய வாழ்க்கையில் நாம் ஒருமுறை பொய்யை பார்த்துவிட்டால் சர்வசாதாரணமாக சொல்லி விடுகிறோம்;

இவர் எவ்வளவு பெரிய உயர்ந்த அந்தஸ்தில் இருந்து என்ன பயன்? பொய் பேசுகிறார்,இவர் ஒரு ஆலிமா? இவர் பொய் பேசுகிறார்,இவர் ஒரு இமாமா?இவர் பொய் பேசுகிறார்,இவர் ஒரு பெரிய மனிதரா?இவர் பொய் பேசுகிறார் என்று மக்களே வெறுத்து விடுவார்கள்.

அல்லாஹ்வுடைய வெறுப்பு அதற்குமேல். இந்த பூமியில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவரின் மீது மக்களுக்கு மத்தியில் வைக்கக்கூடிய வெறுப்பு இந்த இரண்டு வெறுப்பையும் அவர் சம்பாதித்துக் கொள்கிறார்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. மாறாக இந்த பொய் பேசும் குணத்தை நமது உள்ளங்கள் வெறுக்கும் படியாக ஆக்க வேண்டும், முஸ்லிம் சமுதாயம் இதை விட்டு தூய்மையாக வேண்டும்.

காரணம், இந்த பொய் என்ற குணத்தால், மிகப்பெரிய பூகம்பங்கள்,மிகப் பெரிய குழப்பங்கள்,சீர்கேடுகள், மிகப்பெரிய சண்டை சச்சரவுகள் நண்பர்களுக்கு இடையில் ஏற்படலாம்,குடும்பத்துக்கு இடையில் ஏற்படலாம்,கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படலாம்,சகோதரர்களுக்கு இடையில் ஏற்படலாம்,நண்பர்களுக்கு இடையில், ஜமாத்துக்கு மத்தியில் ஏற்படலாம்.

ஆகவேதான், இந்த பொய் பேசக்கூடியவர்களை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முஃமீன்களுடைய பட்டியலில் சேர்க்க விரும்பவில்லை,நம்பிக்கையாளர்கள் உடைய பட்டியலில் குர்ஆனையும் அல்லாஹ்வையும் ரசூலையும் நம்பிக்கை கொண்ட நல்ல மக்களுடைய பட்டியலில் சேர்க்க விரும்பவில்லை.

மாறாக, பொய் பேசக் கூடியவர்களை, முனாஃபிக் -நயவஞ்சகத் தன்மை உடைய உள்ளத்தில் குஃப்ரைக் கொண்டு வெளியில் ஈமானை வெளிப்படுத்தக்கூடிய உள்ளத்தில் அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய ரசூலையும் இஸ்லாமையும் இஸ்லாமிய சமுதாயத்தை வெறுத்து விட்டு நாவில் பொய் புகழ்ச்சி செய்யக்கூடிய நாவில் பொய்யாக ஈமானை வெளிப்படுத்தக்கூடிய முனாஃபிக் என்ற ஒரு தரத்தை நாம் அறிந்து இருக்கிறோம் அல்லவா எந்த முனாஃபிக்குகளை பற்றி அல்லாஹ் சொல்கிறானோ நரகத்தின் உடைய அடி தளத்தில் இவர்கள் இருப்பார்கள் என்று அந்த பட்டியலில் சேர்க்கிறான்.

யூதர்கள்,கிறிஸ்துவர்கள்,மஜுசியர்,முஷ்ரிக்குகள் இன்னும் எத்தனை வகையான வழிகேடுகள் இருக்கிறார்களோ அவர்களுக்கு கொடுக்கக்கூடிய தண்டனைகளை விட பயங்கரமான கொடிய தண்டனை முனாஃபிக்களுக்கு உண்டு என்று அல்லாஹ் சொல்கிறான்.

இந்த பொய் பேசக் கூடிய குணம் முனாஃபிக்களிடத்தில்தான் காணப்படும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

آيَةُ الْمُنَافِقِ ثَلَاثٌ إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا اؤْتُمِنَ خَانَ

முனாஃபிக் உடைய அடையாளம் மூன்று. அவன் பேசினால் பொய்யை அள்ளி வீசுவான். அவனது பேச்சு முழுக்க பொய்யாகத்தான் இருக்கும்.

இரண்டாவது குணம், அவன் வாக்கு கொடுத்தால் மாறு செய்வான். மூன்றாவது குணம், அவனிடத்தில் நம்பி ஒன்றை கொடுத்தால் அதற்கு மோசடி செய்வான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 32.

இந்த மூன்று அடையாளங்களை நீங்கள் மொத்தமாக சுருக்கி பார்த்தால் எல்லாம் பொய்க்குள்ளே அடங்கிவிடும்.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இத்தகைய இந்த முனாஃபிக்கை பற்றி சொன்னார்கள்:

இவன் நோன்பு வைத்து தொழுது தன்னை முஸ்லிம் என்று எண்ணிக் கொண்டாலும் சரியே, இவன் முனாஃப்பிக் தான்.

யாரிடத்தில் இந்த குணத்திலிருந்து ஒரு குணம் இருக்குமோ அவரிடத்தில் நயவஞ்சகத் தன்மையிலிருந்து அந்த ஒரு குணம் இருக்கும்.

யார் முற்றிலுமாக இந்த குணங்களில் இருந்து வெளியேறுகிறார்களோ அவர்கள் தான் முழுமையான மூமின்கள். யாரிடத்தில் இந்த முனாஃபிக் உடைய குணங்களில் இருந்து ஒரு குணமாவது இருக்கும் என்று சொன்னால் நீஃபாக் உடைய அந்த தன்மை அவரிடத்தில் காணப்படும்.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் :

(இன்று பார்க்கிறோம்; அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த ஹதீஸ் நமது வாழ்க்கையில் நிஜமாக எதார்த்தமாக பார்க்கிறோம். பலர் தங்களது நாவிலிருந்து வெளிவரக்கூடிய வார்த்தை என்ன வார்த்தை என்று தெரியாமல் பேசி விடுகின்றார்கள்.

இத்தகையவர்களை பார்த்துதான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.)

إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ لَا يُلْقِي لَهَا بَالًا يَرْفَعُهُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ وَإِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ لَا يُلْقِي لَهَا بَالًا يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ

சிலர் சில பேச்சுகளை பேசுவார்கள், அந்த பேச்சுகளை எண்ணி பேச மாட்டார்கள்,நினைத்து பேச மாட்டார்கள்,எப்படியோ அவர்களின் மனதிலிருந்து அப்படியே பேசி விடுவார்கள். இந்த வார்த்தை ஒருகால் அல்லாஹ்வுடைய விருப்பத்திற்கு உரிய வார்த்தையாக இருந்தால்,இதன் காரணமாக இவர் சொர்க்கத்திற்குச் செல்வார்.

சிலர் சில வார்த்தைகளை சிந்திக்காமல் பேசி விடுகின்றார்கள். ஆனால், அந்த வார்த்தை அல்லாஹ்வுடைய கோபத்திற்கு உடைய வார்த்தையாக இருக்கிறது. இதன் காரணமாக நரக படுகுழியில் அவர் தள்ளப்படுகிறார். எழுபது ஆண்டுகள் தூரமாக அந்த நரகத்தின் படுகுழியில் அவர் வீசப்பட்டு கொண்டு இருக்கிறார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5997.

ஒரு வார்த்தை சிந்தித்து பேசாத காரணத்தால்,யோசித்து பேசாத காரணத்தால்,தவறான முறையில் அமைந்துவிட்ட காரணத்தால் இந்தப் பேச்சு இவரை நரகத்தின் படுகுழியில் தள்ளி விடுகிறது.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அறிவுரை சொல்கின்றார்கள். சொல்லி முடிக்கும் பொழுது கேட்கின்றார்கள்;

நான் இதுவரை உனக்கு உபதேசம் செய்தேன் அல்லவா, இந்த முழு உபதேசத்தின் உடைய சாராம்சத்தை சுருக்கத்தை முழுமையை உனக்கு நான் ஒரு வார்த்தையில் சொல்லட்டுமா?

முஆத் ரழியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே! சொல்லித்தாருங்கள் என்பதாக.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனது நாவை பிடித்து காண்பித்தார்கள். முஆது ரழியல்லாஹு அன்ஹு நடுநடுங்கி பயந்து கேட்டார்கள்; அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பேசும் பேச்சின் காரணமாகவும் நாளை மறுமையில் தண்டிக்கப்படுவோமா?

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் சொன்னார்கள் :

يَا مُعَاذُ وَهَلْ يُكِبُّ النَّاسَ عَلَى وُجُوهِهِمْ فِي النَّارِ إِلَّا حَصَائِدُ أَلْسِنَتِهِمْ

நாளை மறுமையில் முகக் குப்புற மனிதனை தள்ளக் கூடியது அவன் நாவினால் பேசிய பேச்சு தானே, வேறென்ன இருக்க முடியும் என்பதாக.

அறிவிப்பாளர் : முஆத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் :3963.

அன்பிற்குரியவர்களே! நாளை மறுமையில் மிகப்பெரிய இழிவை ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது இந்த பேச்சு. அது பொய்யாக அமைந்துவிட்டால், புறமாக அமைந்துவிட்டால், அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுடைய ரஸூலுக்கும் விரும்பாததாக அமைந்துவிட்டால், மிகப்பெரிய இழிவை நாளை மறுமையில் இந்த மனிதனுக்கு தேடித் தந்து விடும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொய் உடைய பல வகைகளை சொன்னார்கள் :

சிலர் பொய் பேசுவார்கள்தான். காணாத கனவுகளை எல்லாம் கண்டதாக சொல்வார்கள். இதை அவர்கள் ஒரு குற்றமாக நினைப்பது கிடையாது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்:

مَنْ تَحَلَّمَ بِحُلْمٍ لَمْ يَرَهُ كُلِّفَ أَنْ يَعْقِدَ بَيْنَ شَعِيرَتَيْنِ وَلَنْ يَفْعَلَ

யார் இந்த மாதிரியான பொய்யை சொல்கிறார்களோ, நாளை மறுமையில் நரக நெருப்பில் வெந்து கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கு கூடுதல் ஒரு வேதனையை தருவான்.

என்ன வேதனை அது? இரண்டு கோதுமைகளை அல்லாஹ் கொடுப்பான். இந்த இரண்டு கோதுமை களையும் முடிச்சு போடும் என்பதாகஅல்லாஹ் சொல்வான்.

ஒருபக்கம், நரக நெருப்பில் வேகுதல். இன்னொரு பக்கம், இரண்டு கோதுமைகளை கையில் கொடுத்து இதை முடிச்சு போடு என்று அல்லாஹு ரப்புல் ஆலமீன் கட்டளை இடுவான்.

எப்படி முடியும்?மிகப்பெரிய வேதனை! செய்ய முடியாத ஒன்றை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு செய் செய் என்று வலியுறுத்தப்பட்டால் கொடிய வேதனை. மனதளவில் அவன் துன்பத்தை துயரத்தை துக்கத்தை அனுபவிப்பான்.

ஒரு பக்கம், உடல் நரக நெருப்பில் வெந்து கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம், அவனுடைய கல்புக்கு அங்கே வேதனை கொடுக்கப்படுகிறது. இந்த கல்பில் உண்மையை வைக்காமல் பொய் பேசிய காரணத்தால் நாளை மறுமையில் இப்படிப்பட்ட கேவலமான நிலையை அவர் அடைகின்றார்.

وَمَنْ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ أَوْ يَفِرُّونَ مِنْهُ صُبَّ فِي أُذُنِهِ الْآنُكُ يَوْمَ الْقِيَامَةِ

இன்னொருவர், ஒருவர் ஒரு சமுதாய மக்களுக்கு மத்தியில் இருக்கிறார். அவர் தாங்கள் பேசுவதையும் இவர் கேட்பதை விரும்பவில்லை அல்லது இரண்டு பேர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள், மூன்றாம் ஒருவர் அவ்வழியாக செல்கின்றார். தங்களிடம் இருந்து செய்தியை மறைத்து பேசுகிறார்கள் என்று தெரியும் பொழுது அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்பதற்காக வேண்டி முயற்சி செய்கிறார். இவருக்கு நாளை மறுமையில் செம்பை ஈயத்தை காய்ச்சி அவர்களது காதில் ஊற்றப்படும்.

وَمَنْ صَوَّرَ صُورَةً عُذِّبَ وَكُلِّفَ أَنْ يَنْفُخَ فِيهَا وَلَيْسَ بِنَافِخٍ

யார் ஒருவர் உருவம் வரைகிறாரோ அவர்களுக்கு நாளை மறுமையில் அல்லாஹ் தண்டனை கொடுப்பான்; அந்த உருவத்தில் உயிர் ஊதும் படி.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6520.

அடுத்து சில பொய்கள், தங்களை மக்கள் பெருமையாக பேச வேண்டும் என்பதற்காக தங்களுடைய தந்தையை மாற்றி கூறுவார்கள், தங்களுடைய ஊரை மாற்றி கூறுவார்கள், தங்களுடைய பெயரை மாற்றி கூறுவார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

إِنَّ مِنْ أَعْظَمِ الْفِرَىأَنْ يَدَّعِيَ الرَّجُلُ إِلَى غَيْرِ أَبِيهِ أَوْ يُرِيَ عَيْنَهُ مَا لَمْ تَرَ أَوْ يَقُولُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَمْ يَقُلْ

பொய்யின் உடைய வகைகள்,ஒருவன் தனது தந்தையை மாற்றிக் கூறுவது, தனது குடும்பத்தை வம்சத்தை மாற்றிக் கூறுவது, இது பொய்களில் பழிச் சொற்களில் கேவலமான பேச்சுக்களில் மிக மோசமான பேச்சு.

தான் காணாத கணவை கண்டதாக மக்களுக்கு மத்தியில் பேசுவது, அல்லது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லாத ஒன்றை மக்களுக்கு மத்தியில் சொல்வது.

அறிவிப்பாளர் : வாசிலா இப்னு அல்அஷ்கஃ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3247.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த சமுதாயம் பொய்யிலிருந்து எந்த அளவு சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள் தெரியுமா?

تَعَالَ أُعْطِيكَ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا أَرَدْتِ أَنْ تُعْطِيهِ قَالَتْ أُعْطِيهِ تَمْرًا فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَا إِنَّكِ لَوْ لَمْ تُعْطِهِ شَيْئًا كُتِبَتْ عَلَيْكِ كِذْبَةٌ

ஒருமுறை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சபையில் ஒரு நிகழ்ச்சி ஒன்று நடக்கின்றது.ஒரு பெண் தன்னுடைய பிள்ளை ஒருவரை அழைக்கிறார். அப்படி அழைக்கும் பொழுது, வா நான் உனக்கு தருகிறேன் என்று சொல்கிறார்

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேறு விஷயங்களில் ஈடுபட்டு கொண்டு இருந்தவர்கள் இந்த பேச்சு காதில் விழுந்தவுடன் தங்களது மற்ற வேலைகளை நிறுத்திக்கொண்டு அந்த பெண்ணை அழைக்கிறார்கள்.

பெண்ணே உனது மகனை உனது பிள்ளையை அழைத்தாயே,இங்கு வா உனக்கு தருகிறேன் என்று கூறினாயே, நீ எதை தர நாடினாய் என்று.

அந்த பெண் கூறினார்;அல்லாஹ்வின் தூதரே!சில பேரீத்த கனிகளை கொடுக்கலாம் என்று நான் எண்ணினேன் என்று.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: அறிந்துகொள்! நீ கொடுக்க நாட்டம் இல்லாமல் வா தருகிறேன் என்று சொல்லி இருந்தாள் உன்னுடைய இந்த வார்த்தைக்கு பகரமாக ஒரு பொய் பாவத்தை அல்லாஹ் உன் மீது எழுதி இருப்பான்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 4339.

இன்று பார்க்கிறோம்;எந்த அசுத்தங்களை விட்டு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்க வேண்டும் என்று விரும்பினார்களோ அந்த அசுத்தத்தில் தான் மீண்டும் மீண்டும் விழுவதற்கு இந்த சமுதாயத்தில் பலர் விரும்புகின்றார்கள்.

குடும்பத்தில் பொய், தாய் தந்தை இடத்தில் பொய், பிள்ளைகளிடத்தில் பொய், பெற்றோர்களிடத்தில் என்ன பண்பு இருக்குமோஅந்த பண்பு தான் இந்த பிள்ளைகள் இடத்தில் இருக்கும்.

பெற்றோர்கள் பொய் பேசும்பொழுது,பெற்றோர்கள் உண்மைக்கு மாற்றமாக நடக்கும் பொழுது,பிள்ளைகள் உண்மையாளர்களாக சுத்தமானவர்களாக வளர்வார்கள் என்று சொல்ல முடியாது.

ஆகவேதான், பிள்ளைகளுக்கு மத்தியில் குறிப்பாக பிள்ளைகள் வளர்ப்பில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடந்து கொண்ட, அவர்கள் காட்டிக்கொடுத்த இந்தப் பாடம் நமக்கு மிகப்பெரிய சாட்சியாக இருக்கிறது.

சமுதாயம் என்பது ஏதோ எதார்த்தமாக வளர்ந்து விடக்கூடிய ஒன்று கிடையாது,ஏதோ மழை பேய்கிறது, புற்பூண்டுகள் முளைக்கிறது என்பது போன்ற சமுதாயம் கிடையாது.

சமுதாயம் என்பது உருவாக்கப்படவேண்டும். ஒரு தலைமுறை என்பது உருவாக்கப்படவேண்டும். அந்த முயற்சியை தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய சொற்களில் செயல்களில் செய்தார்கள்.

எந்த சமுதாயத்தின் மூலமாக அல்லஹுடைய கிதாப் ஷரியத் நிலைநிறுத்தப்படுமோ, எந்த சமுதாயம் இந்த தூதுத்துவத்தை சுமக்குமோ, எந்த சமுதாயம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஏகத்துவ அழைப்பு பிரச்சாரத்தை மக்களுக்கு எடுத்து சொல்லுமோ அந்த சமுதாயம் தங்களது வாழ்க்கையில் சுத்தமானவர்களாகஉண்மை பேசக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

தங்களுடைய சுய வாழ்க்கையில்,தங்களுடைய கொடுக்கல்-வாங்கலில் பொய்யர்களாக இருந்து கொண்டு,மோசடி செய்பவர்களாக இருந்துகொண்டு,கெட்ட குணங்களை உடையவர்களாக இருந்து கொண்டு,ஒருக்காலும் இந்த தூதுத்துவத்தை சுமப்பதற்கு இவர்கள் தயாராக முடியாது. இந்த தூதுத்துவச் செய்தியை மக்களுக்கு எடுத்து சொல்வதற்கு இவர்களுக்கு துணிவு வராது.

ஸஹாபார்களை பார்க்கிறோம், அவர்களது வாழ்க்கையில் இருந்த இந்த தூய்மை,அவர்களது வாழ்க்கையில் இருந்த இந்த உண்மை,அவர்களை அல்லாஹ்வுடைய அன்பிற்கு,அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்கு காரணமாக அமைந்தது.

இன்றுவரை அந்த ஸஹாபாக்களை பற்றி பேசக்கூடிய மார்க்க அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஒரு சஹாபி உடைய பெயர் என்று வந்துவிட்டால் ஸஹாபாக்கள் அனைவரும் உண்மை பேசக்கூடியவர்கள் என்று அந்த நற்சான்றிதழ் வழங்குகிறார்கள்.

அந்த சமுதாயத்தை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி உருவாக்கி இருப்பார்கள்!எப்படி உழைத்து இருப்பார்கள்!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அதுபோன்ற ஒரு சமுதாயமாக நாமும் உருவாகி,அல்லாஹ்வுடைய ஷரியத்தை நாமும்நமது வாழ்க்கையில் எடுத்து நடந்து, இந்த உலக மக்களுக்கு அந்த ஷரியத்தை எடுத்து சொல்லக்கூடிய அழைப்பாளர்களாக,முஜாஹித்களாக உருவாக்குவானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/