HOME      Khutba      விபசாரம் ஒரு பெரும் பாவம் | Tamil Bayan - 42   
 

விபசாரம் ஒரு பெரும் பாவம் | Tamil Bayan - 42

           

விபசாரம் ஒரு பெரும் பாவம் | Tamil Bayan - 42


விபச்சாரம் ஒரு பெரும்பாவம்

ஜுமுஆ குத்பா தலைப்பு : விபச்சாரம் ஒரு பெரும்பாவம்

வரிசை : 42

இடம் : மஸ்ஜித் அஹ்லே ஹதீஸ், மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதற்கு அடுத்ததாக இறையச்சம் -அல்லாஹ்வை பயந்து கொள்வது மிகப் பெரிய ஒரு விஷயம். அல்லாஹ்வை அஞ்சுவதால் நன்மைகளை நாம் செய்யலாம்.பாவங்களை விட்டு நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

அல்லாஹ்வை அஞ்சுவதால் அல்லாஹ்வுடைய அன்பை பெறலாம். அல்லாஹ்  இறையச்சம் உடையவர்களுக்காக தயார் செய்து வைத்திருக்கும் சொர்க்கத்தை நாம் அடைந்து கொள்ளலாம்.

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நமக்கு இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் மிகப்பெரும் ஐந்து கடமைகளை கொடுத்திருக்கின்றான்.

இந்த ஐந்து கடமைகளை முழுமையாக நிறைவேற்றுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அடிப்படைக் கடமையாகும்.

அல்லாஹ் ஒருவனை வணக்கத்திற்குரியவனாக ஏற்றுக்கொள்வது. அவனைத் தவிர வணங்குவதற்கு தகுதியானவன் வேறு யாருமில்லை என்று சாட்சி சொல்வது. முஹம்மது அவர்களை தூதராக ஏற்று சாட்சி சொல்வது. தொழுகையை நிலை நிறுத்துவது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஐங்கால தொழுகைகளை முஸ்லிம்கள் மீது இரவு பகலில் கடமையாக்கி வைத்திருக்கின்றான்.

ஒவ்வொரு தொழுகையையும் அதற்குரிய நேரத்தில், ஆண்கள் கட்டாயமாக மஸ்ஜிதுகளிலும், பெண்கள் அவர்களுக்கு முடிந்தால் பள்ளிவாசல்களிலும் முடியவில்லை என்றால் அவர்களுடைய வீடுகளிலும் இந்த தொழுகையை நிலை நிறுத்துவது மிக முக்கியமான கடமையாகும்.

அல்லாஹ் சுபஹானஹு தஆலா நமக்கு அறிவுரை சொல்லும் பொழுது நிச்சயமாக தொழுகை நம்பிக்கையாளர்களுக்கு நேரம் குறிப்பிடப்பட்ட கடமையாக இருக்கிறது என்று சொல்கின்றான். (அல்குர்ஆன் 4 : 103)

தொழுகையைப் பாழாக்குபவர்கள் இந்த இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறி விடுவார்கள்.

குறிப்பாக ஆண்கள் ஜமாத் உடைய தொழுகைக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஜமாத் உடைய தொழுகைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார்கள். தங்களுடைய இறுதி நாட்களை அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் போது கூட இரண்டு தோழர்களுடைய உதவியுடன் பள்ளிக்கு வந்து தொழுகையை நிலை நிறுத்தினார்கள் என்று நாம் பார்க்கிறோம்.

ஆகவே, இந்த கடமைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ரமலானுடைய மாதத்தில் நாம் நோன்பு நோற்பது.

நாம் செல்வந்தராக இருந்தால், நமது செல்வம் நிசாபை எட்டி இருக்கும் போது ஜகாத் கொடுப்பது. உடலாலும் பொருளாலும் ஆற்றல்பெற்றிருக்கும் பொழுது ஹஜ் சென்று வருவது.

இவை ஒரு முஸ்லிம் எப்போதும் கடைபிடிக்க வேண்டிய நிரந்தர கடமையாகும்.

இந்தக் கடமையை எனக்கும் உங்களுக்கும் நினைவுபடுத்தியவனாகவும் இதை பேணும் படியும், இதில் அலட்சியம் செய்வதை தவிர்த்துக் கொள்ளும்படி எனக்கும் உங்களுக்கும் அறிவுரை செய்தவனாக ஆரம்பம் செய்கிறேன்.

இன்றைய ஜும்ஆ உடைய தலைப்பு இஸ்லாமிய மார்க்கத்தின் பார்வையில் விபச்சாரமும், விபச்சாரத்திற்கு உண்டான வழிகளும் எவ்வளவு வன்மையாக கண்டிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.அன்பிற்குரியவர்களே!

இன்று, இணை வைத்தலைப் பற்றி, அல்லாஹ்வை நிராகரிப்பதைப் பற்றி, நயவஞ்சகம் கொள்வது பற்றி நம்முடைய மக்களுக்கு மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால்,அந்த விழிப்புணர்வு போதுமா? என்றால் அதுவும் போதாது. நம்மில் பலர், இன்னும் இணை வைக்கும் பல காரியங்களைச் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். பல  விதமான அனாச்சாரங்களைச் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

குறிப்பாக இந்த மாதத்தில் நீங்கள் பார்க்கலாம். அல்லாஹு தஆலா அவனுடைய குர்ஆனில் சொல்கின்றான்.

وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا

அல்லாஹ்விற்கு சொந்தமானவை பள்ளி வாசல்கள். எனவே, மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வேறு யாரையும் அழைக்காதீர்கள். (அல்குர்ஆன் 72 : 18)

பள்ளிவாசல்களில் அல்லாஹ்வைத் தவிர்த்து,இறந்து விட்ட மக்களிடத்தில், எவர்களை நல்லவர்கள் என்று மக்கள் நம்பி இருக்கிறார்களோ அவர்களைப் போற்றிப் புகழ்ந்து, அவர்களிடத்தில் பிரார்த்தனை செய்து, அல்லாஹ்விற்கு இணை வைப்பதை பார்க்கிறோம்.

இதில் மிகப்பெரிய கவலை என்னவென்றால் இதை பள்ளிகளில் செய்கிறார்கள். இதை ஒரு இறை நம்பிக்கையாக,மார்க்கமாக, ரசூலை நேசிப்பதாக,நேசிப்பதற்கு உரிய அடையாளமாக எடுத்து செயகிறார்கள்.

எவ்வளவு பெரிய மோசமான நிலைமையில் இந்த மக்கள் இருக்கிறார்கள். இதற்காக நான் என்ன முயற்சி செய்திருக்கிறோம்?

அவர்களும் நம்முடைய சகோதரர்கள் தானே! எப்படிப்பட்ட பாவத்தில் வீழ்ந்து இருக்கிறார்கள். இதை நினைத்து நம்மால் முடிந்த அளவு ஏகத்துவ விஷயங்களை ஈமானிய விஷயங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி ஷிர்க்கில் இருந்து பாதுகாப்பது நமது கடமை.

அடுத்து,பெரும் பாவங்களைப் பற்றி மக்களுக்கு மத்தியில் இருக்கக்கூடிய அச்ச உணர்வு குறைந்து வருவதை நாம் பார்க்கிறோம். பெரும் பாவத்தை பற்றிய அச்ச உணர்வு ஒரு இறை நம்பிக்கையாளருடைய உள்ளத்தில் எப்படிப்பட்ட அல்லாஹ்வுடைய பயம் இருக்க வேண்டுமென்றால், அல்லாஹ் சொல்வது போல,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102.

அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! என்று குர்ஆனுடைய ஒவ்வொரு பக்கங்களிலும், ஒவ்வொரு சூராக்களிலும்,பல வசனங்களிலும் இருப்பதை நாம் பார்க்கிறோம்.

தனது நபியைப் பார்த்து அல்லாஹ் சொல்கிறான் :

يَا أَيُّهَا النَّبِيُّ اتَّقِ اللَّهَ

நபியே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்!(அல்குர்ஆன் 33: 1)

எப்படிப்பட்ட உபதேசம் பாருங்கள்! நாளை மறுமையில் அல்லாஹ்விற்கு முன்பு நிறுத்தப்பட்டு நாம் விசாரிக்கப்படுவோம்.

அல்லாஹ் நம்மை கேட்பான், நம்முடைய செயல்கள் எல்லாம் அங்கே எடுத்து காண்பிக்கப்படும். நாம் மறைக்க முடியாது. மறைப்பதற்குண்டான எந்த முகாந்திரமும் அங்கே இருக்காது.

இந்த பயம் நம்முடைய உள்ளத்தில் குடிகொண்டு இருந்தால்தான் பாவங்களை விட்டு நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்த பயம் நம்முடைய முஸ்லிம் சமூகத்தில் இருந்து அழிந்து வருவதை நாம் பார்க்கிறோம்.

இந்தக் காரணமாகத்தான், பெரிய,பெரிய,கொடிய பாவங்களையெல்லாம் இன்று நம்மில் பலர் சர்வ சாதாரணமாக அலட்சியமாக செய்து விடுகின்றார்கள்.

அதில் ஒன்றுதான், இந்த விபச்சாரம்,விபச்சாரத்திற்கு உண்டான வழிகள் எல்லாம்.

அல்லாஹு தஆலா தனது சங்கைக்குரிய புத்தகத்தில், இந்த விபச்சாரத்தைப் பற்றி வன்மையாக கண்டித்திருக்கின்றான்.

அல்லாஹ்வுடைய தூதர் இதை வன்மையாக கண்டித்து இருக்கின்றார்கள். இதற்குரிய தண்டனையைக் கூறி நம்மை எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

இந்தப் பாவம் மனிதனுக்கு ஒரு இன்பத்தை சுகத்தைத் தரலாம். ஆனால், அந்த சுகம், அதனால் அவன் அடையக்கூடிய மகிழ்ச்சி, நாளை மறுமையில் இவன் அனுபவிக்கக்கூடிய தண்டனைகள், வேதனைகள் அவற்றுக்கு முன்னால் பார்த்தால் இந்த இன்பங்களை எல்லாம் அவன்,துறந்திருக்கவேண்டுமே, விட்டிருக்க வேண்டுமே, இதற்கு  அடிமையாகி இப்படிப்பட்ட குற்றத்தில் நான் சிக்கி இருக்கக் கூடாது என்று மறுமையில்  கவலைப்படுவான், கைசேதப்படுவான்.

அல்லாஹு தஆலா நமக்கு சொல்லும் அறிவுரையைப் பாருங்கள்.

وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் விபசாரத்திற்கு நெருங்கவும் வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அது மானக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன் 17 : 32)

ஸினா செய்யாதீர்கள் என்று சொல்வதை விட மிக அழுத்தமான, ஆழமான விசாலமான பொருளுடைய, விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் என்ற வாசகத்தை அல்லாஹு தஆலா சொல்கின்றான்.

ஸினா என்ற ஒன்று, ஒரு இடத்தில் இருக்கும் என்று சொன்னால் அந்த இடத்திற்கு அருகில் கூட நீங்கள் செல்லாதீர்கள். அந்த செயலுக்குபக்கத்தில் கூட நீங்கள் செல்லாதீர்கள்.

உன்னிடத்தில் பேச மாட்டேன் என்று சொல்வது ஒரு பக்கம். உனக்கு அருகில் கூட வர மாட்டேன் என்று சொல்லும் பொழுது பெரிய வெறுப்பை மனிதன் அங்கே ஏற்படுத்துகிறான்.

இந்த வார்த்தையைத் தான் அல்லாஹ் நமக்கு விபச்சாரத்தை கண்டிக்கும் போது பயன்படுத்துகின்றான்.

'ஸினா' விபச்சாரத்தின் பக்கம் நெருங்கி விடாதீர்கள். (அல்குர்ஆன்17: 32)

கடுமையான கண்டிப்பு, முற்றிலுமான தடை. எந்த வழியிலும் விபச்சாரத்தை அனுமதிக்கக்கூடிய காரியத்தை முஸ்லிம் செய்து விடக்கூடாது.

விபச்சாரத்திற்குண்டான எந்த வழியிலும் முஸ்லிம் சென்று விடக் கூடாது. விபச்சாரத்தில் சிக்கிக் கொள்ளக்கூடிய எந்த பாதையிலும் முஸ்லிம் நடக்கக் கூடாது. விபச்சாரத்தில் மாட்டிக் கொள்ளும் எந்த விதமான செயல்களிலும் ஒரு முஸ்லிம் தன்னை போட்டுக் கொள்ளக்கூடாது.

இதுதான் இந்த வசனத்திற்கு உண்டான பொருள்.

இந்த அளவிற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஏன் சொல்கிறான்? அதற்கு காரணத்தை அல்லாஹ்வே சொல்கிறான். இது மிக கேவலமான ஒன்று. மிக அசிங்கமான ஒன்று. இது அல்லாஹ் படைத்த இயற்கைக்கு மாற்றமான ஒன்று. மனிதனின் கல்பில் வரக்கூடாத ஒரு சிந்தனை.

அல்லாஹ்வின் தூதர் அவர்களுடைய சபையில், ஒரு தோழர் வருகிறார். அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஸினா செய்ய நீங்கள் அனுமதி கொடுங்கள் என்று கூறுகிறார்.

தோழர்கள் எல்லாம் திடுக்கிட்டு விடுகின்றார்கள். அவரை கடுமையான கண் கொண்டு பார்க்கிறார்கள்.

ரசூலுல்லாஹி அவரை அழைக்கிறார்கள்.

(ஒவ்வொரு ஹதீசிலும் நூற்றுக்கணக்கான பாடங்களை, படிப்பினைகளை, தத்துவங்களை, கருத்துக்களை, பொருள்களை நாம் பெற வேண்டி இருக்கிறது.)

அந்தத் தோழரை அழைத்து, அருகில் அமர வைத்து கேட்கிறார்கள். என் தோழரே! உன்னை பெற்றெடுத்த தாயுடன் ஒருவன் விபச்சாரம் செய்வதை நீர் விரும்புவீரா?

அந்தத் தோழர் சொல்கிறார்;அல்லாஹ்வின் தூதரே! நான் விரும்ப மாட்டேன். அடுத்து கேட்கின்றார்கள்;தோழரே! உம்முடைய மகளுடன் ஒருவன் விபச்சாரம் செய்வதை நீர் விரும்புவீரா?அல்லாஹ்வின் தூதரே! நான் விரும்ப மாட்டேன்.

அடுத்து கேட்கிறார்கள்;உன்னுடைய சகோதரியுடன் ஒருவன் விபச்சாரம் செய்வதை நீர் விரும்புவீரா? அல்லாஹ்வின் தூதரே! நான் விரும்ப மாட்டேன்.

அடுத்து கேட்கின்றார்கள்;உன்னுடைய தாயின் சகோதரி அல்லது உன்னுடைய தந்தையின் சகோதரி உடன் ஒருவன் விபச்சாரம் செய்வதை நீர் விரும்புவாயா?

அல்லாஹ்வின் தூதரே! நான் விரும்ப மாட்டேன். அப்போது ரசூலுல்லாஹி சொன்னார்கள்,

தோழரே! நினைத்துப் பாரும். நீ யாரிடத்தில் இந்த தவறான செயலை செய்ய வேண்டும் என்று எண்ணுகிறாயோ அவள் ஒருவனுக்கு தாயாக இருப்பாள். அல்லது மகளாக இருப்பாள். அல்லது சகோதரியாக இருப்பாள். அல்லது தந்தையின் சகோதரியாகவோ அல்லது தாயின் சகோதரியாகவோ இருப்பாள்.

இந்த வார்த்தையை கூறியவுடன் அந்த தோழர் சொல்கின்றார்.

அல்லாஹ்வின் தூதரின் இந்த வார்த்தை எனது உள்ளத்திலிருந்து இச்சையின் வேரை அறுத்து எறிந்து விட்டது என்பதாக.

அல்லாஹு அக்பர்! எப்படிப்பட்ட உபதேசம் பாருங்கள்! அவர்களுடைய உள்ளத்தில் எப்படிப்பட்ட இறை நம்பிக்கை இருந்தது பாருங்கள்!

அல்லாஹ்வின் தூதருடைய ஒரு உபதேசம், அவர்களுடைய தத்துவமான, அந்த ஞானமிக்க அந்த அறிவுரை, அதைக் கேட்ட மாத்திரத்தில் அவர்களுடைய இறை நம்பிக்கை எந்த அளவிற்கு ஆழமாக பதிந்திருந்தது என்று சொன்னால் அல்லாஹ்வுடைய அச்சம்,தூய்மையான இயற்கை,அவர்களுடைய உள்ளத்தில்குடி கொண்டிருந்த காரணத்தால் அவர்கள் சொல்கின்றார்கள்.

என்னுடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து இச்சையின் வேர்கள் அறுக்கப்பட்டு விட்டன என்று.

ரசூலுல்லாஹி அந்த தோழரை தனக்கு அருகில் மீண்டும் நெருக்கமாக்குகின்றார்கள். அவர்களது நெஞ்சில் கை வைத்து அல்லாஹ்விடத்தில் துஆ செய்கின்றார்கள். ஒரு துவாவையும் கற்றுத் தருகின்றார்கள்.

اللَّهُمَّ اغْفِرْ ذَنْبَهُ وَطَهِّرْ قَلْبَهُ وَحَصِّنْ فَرْجَهُ

தோழரே! அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்! யா அல்லாஹ்! என்னுடைய பாவங்களை மன்னித்தருள்வாயாக! என்னுடைய உள்ளத்தை சுத்தப்படுத்து! தூய்மைப்படுத்து!

(இந்த உள்ளத்தில் இணைவைத்தல் இருக்கக்கூடாது, இறை நிராகரிப்பு இருக்கக் கூடாது, நயவஞ்சகம் இருக்கக்கூடாது, அசிங்கமான அருவருக்கத்தக்க சிந்தனைகள் இருக்கக்கூடாது, அப்படி எனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி வைப்பாயாக!)

யா அல்லாஹ்! எனது கற்பை எனக்கு பாதுகாத்து கொடு! என்னுடைய மர்மஸ்தானத்தை என்னுடைய அவ்ரத்தை, என்னுடைய ஒழுக்கத்தை எனக்கு பாதுகாத்துக் கொடு!(1)

அறிவிப்பாளர் : அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 21185.

அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்வது கொண்டு தான் நாம் ஒரு முழுமையை அடைய முடியும். தூய்மையை அடைய முடியும். பாவமன்னிப்புகளை பெற முடியும்.

யாரும் தன்னளவில் நான்மிகத் தூய்மையானவன்.என்னை யாரும் தடுக்க முடியாது. நான் நிச்சயமாக நேர்வழியில்தான் இருக்கிறேன்என்று பெருமை பேச முடியாது.

அல்லாஹ்வுடைய தூதர் அல்லாஹ்விடத்தில் அதிகமதிகம் செய்த பிரார்த்தனைகளில் ஒன்று,

يَا مُصَرِّفَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى طَاعَتِكَ- اللَّهُمَّ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ

உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! எனது உள்ளத்தை உனது வணக்க வழிபாட்டில் புரட்டி எடு!

எனது உள்ளத்தை உனது வழிபாட்டில் உனக்கு பணிவதில் நிலை பெறச் செய்!

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா கேட்டார்கள்;அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இப்படி பிரார்த்தனை செய்கிறீர்களா? நீங்கள் இந்த அளவிற்கு பயப்படுகின்றீர்களா?

ரசூலுல்லாஹி சொன்னார்கள்: உள்ளங்கள் அல்லாஹ்வுடைய இரண்டு விரல்களுக்கு இடையில் இருக்கின்றன. அல்லாஹ் எப்படி நாடுகின்றானோ அதற்கேற்ப அவன் புரட்டிக் கொள்கின்றான்.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 3824, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் :9052

யாருடைய உள்ளத்தில் பயம் இருக்காதோ அவர்கள் நிச்சயமாக பாவத்தில் சிக்கிக் கொள்வார்கள்.

இப்படி மார்க்கம் விபச்சாரத்திற்கு மிகப்பெரிய மோசமானஒரு குற்ற செயல் என்று வர்ணிக்கிறது.

அல்லாஹுசுப்ஹானஹு தஆலா, இந்த விபச்சாரத்திற்கு இந்த உலகத்திலேயே மிக பயங்கரமான ஒரு தண்டனையை வைத்திருக்கின்றான்.

இந்த தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அந்த தண்டனையில் யாரும் கருணை காட்டக்கூடாது என்று நமக்கு கண்டிப்பும் அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கின்றான்.

இன்று, இஸ்லாமிய நாடு நமக்கு இல்லாத காரணத்தால், இந்த சட்டங்கள் அமல்படுத்தப் படாத காரணத்தால் பலர் எண்ணிக் கொள்கிறார்கள்; நம்முடைய செயல்கள் மறைக்கப்படலாம். நம்முடைய செயல்களுக்கு என்ன நடந்துவிடப் போகிறது என்பதாக.

அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! திருமணம் செய்வது கஷ்டம் ஆகிவிட்டது.விபச்சாரம் செய்வது இலகுவாகிவிட்டது.

ரசூலுல்லாஹி கூறினார்கள் :

நாளை மறுமை வருவதற்கு முன்பதாக ஏற்படக்கூடிய பல பயங்கரமான சூழ்நிலைகளை பற்றி அவர்கள் வருணிக்கும் பொழுது சொன்னார்கள். மறுமை வருவதற்கு முன்பதாக இந்த உலகத்தில் முஸ்லிம்கள் மத்தியில் விபச்சாரம் பெருகிவிடும். மது அருந்துதல் பெருகிவிடும். இசைக்கருவிகள் அதிகமாகிவிடும்.

பட்டுகளை முஸ்லிம்கள் அணிந்து கொள்வார்கள். இசைக் கருவிகளை ஆகுமானதாக்கிக் கொள்வார்கள். பாடுகின்ற பெண்களுக்கு பின்னாடி ஓட ஆரம்பித்து விடுவார்கள்.(3)

அறிவிப்பாளர் : அபூமாலிக் அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5590.

இப்படி ரசூலுல்லாஹி அவர்கள் சொன்ன எச்சரிக்கை,அறிவிப்புகள் இன்று எதார்த்தமாக நிகழ்ந்து வருவதை நாம் பார்க்கிறோம்.

அல்லாஹு தஆலா இந்தப் பாவத்தைப் பற்றி கூறுகிறான் :

الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِائَةَ جَلْدَةٍ وَلَا تَأْخُذْكُمْ بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِنَ الْمُؤْمِنِينَ (2) الزَّانِي لَا يَنْكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ وَحُرِّمَ ذَلِكَ عَلَى الْمُؤْمِنِينَ

விபசாரம் செய்த பெண், விபசாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவரையும் நூறு கசையடிகள் அடியுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ் விதித்த இக்கட்டளையை நிறைவேற்றுவதில், அவ்விருவர்களுடைய விஷயத்தில் உங்களுக்கு இரக்கம் ஏற்படக்கூடாது. அவ்விருவருக்கும் (தண்டனையாக) வேதனை கொடுக்கும் சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு தொகையினர் அதன் சமீபமாக இருக்கவும்.

(கேவலமான) ஒரு விபசாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபசாரியை அல்லது இணைவைத்து வணங்கும் ஒரு பெண்ணைத் தவிர (மற்றெவளையும்) திருமணம் செய்ய முடியாது. (அவ்வாறே) ஒரு விபசாரி (கேவலமான) ஒரு விபசாரனை அல்லது இணைவைத்து வணங்கும் ஓர் ஆணைத் தவிர (மற்றெவனையும்) திருமணம் செய்ய முடியாது. இத்தகைய திருமணம் நம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது. (அல்குர்ஆன் 24:2,3)

ரசூலுல்லாஹி அவர்களின் ஹதீஸ்  இந்த வசனத்திற்கு நமக்கு விரிவுரை தருகிறது. ஸினா செய்பவர் திருமணம் முடிக்காதவராக இருந்தால்,ஸினா செய்யக் கூடிய பெண் திருமணம் முடிக்காதவராக இருந்தால் அவர்களுக்கு இந்த தண்டனை.

திருமணம் நடந்ததற்கு பிறகு தன்னுடைய கற்பை, ஒழுக்கத்தை, மர்மஸ்தானத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு வழியை அல்லாஹுதஆலா ஏற்படுத்திக் கொடுத்தற்குப் பிறகு, யார் ஒருவர் அந்த செயலில் திரும்புவானோ, ஸினாவை செய்து விடுவானோ அவனுக்கு ரசூலுல்லாஹி அவர்கள் கூறிய தண்டனை, அவனையும் அவளையும் கல்லெறிந்து கொன்று விடுங்கள்.

எப்படி அவனுடைய உடலுடைய ஒவ்வொரு பாகமும் இன்பத்தை அனுபவித்ததோ அவனுடைய உடலுடைய ஒவ்வொரு பாகமும் வேதனையை அனுபவிக்க வேண்டும்.

அந்தக் கொடிய தண்டனையை அவன் உணர வேண்டும். கொடிய செயலுக்கான முடிவை இந்த உலகத்தில் அவன் பார்த்துக் கொள்ள வேண்டும். சுவைத்துக் கொள்ள வேண்டும்  என்பதற்காக ரஸூலுல்லாஹி அவர்கள் இந்த தண்டனையை சொன்னார்கள்.(4)

அறிவிப்பாளர் : அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 3903.

இந்த சட்டத்தை ரசூலுல்லாஹி அவர்கள் நமக்கு சொல்லியது மட்டுமல்ல. தங்களது காலத்தில் சிலரால் இந்த தவறு நிகழ்ந்த பொழுது இந்த தண்டனையை அவர்கள் நடத்தியும் காண்பித்திருக்கிறார்கள்.

அல்லாஹ் சொல்கின்றான் : நம்பிக்கையாளர்களே! உங்களுடைய நம்பிக்கை அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் உண்மையாக இருக்கும் என்றால் அல்லாஹ்வின் தண்டனையை நிறைவேற்றுவதில்  கருணை காட்டாதீர்கள்.

அல்லாஹ்வுடைய கட்டளைகளை நிறைவேற்றும் பொழுது,உறவின் காரணமாகவோ அல்லது வேறு எந்த காரணத்தினாலோ நீங்கள் சோர்வடைந்து விடக்கூடாது. நீங்கள் பின் தங்கி விடக்கூடாது.

ஆனால்,இன்று நமது முஸ்லிம் சமுதாயத்தினுடைய நிலைமை என்னவென்று சொன்னால்,அல்லாஹ்வுடைய ஹக்குகள், அல்லாஹ்வுடைய கடமைகள் எவ்வளவு பாழ் படுத்தப்பட்டாலும் சரி,எவ்வளவு அசிங்கப்படுத்த பட்டாலும் சரி, அதற்கு எதிராக போர் பிரகடணம் செய்யப்பட்டாலும் சரி, முஸ்லிமுடைய உணர்வுகள் செத்து விட்டன. முஸ்லிமுடைய உணர்வுகள் கப்ரில் புதைக்கப்பட்டு விட்டன.

தன்னுடைய சுயகௌரவம்,தன்னுடைய குடும்பத்தின் கௌரவம்,தன்னுடைய பெருமை, தன்னுடைய மதிப்பு,தனக்கு, தனது குடும்பம் தனது பிள்ளைகளுக்கு என வந்து விட்டால் அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்து விடுவார்கள். ஒரு பூகம்பத்தை அங்கே ஏற்படுத்தி விடுவார்கள்.

தனது பிள்ளை தொழுகையைப் பாழாக்கி கொண்டிருக்கிறான். அல்லாஹ்வுடைய கட்டளைகளைப் பாழாக்குகிறான். எவ்வளவு அசிங்கம் இருக்குமோ அவ்வளவு அசிங்கத்தையும் அவன் செய்து முடிக்கிறான்.

ஆனால்,அதற்காக துடிக்கக்கூடிய உள்ளங்கள் எங்கே?தனது பிள்ளைகளை கண்டிக்கக் கூடிய பெற்றோர்கள் எங்கே? தனது பிள்ளைகளை எச்சரிக்கக்கூடிய தாய்கள் எங்கே?

ஆனால், தனது பிள்ளை வகுப்பின் பாடத்தில் சோர்வடைந்து விட்டால், பாடத்தில் ஒன்றில் அவன் ஃபெயில் ஆகிவிட்டால் அல்லது வேறு ஏதாவது அவர்களுக்குப் பிடிக்காத ஒரு சில  தவறுகளைச் செய்துவிட்டால் அதற்காக அவர்கள் கோபித்துக் கொள்வது என்ன! அதற்காக அவர்கள் அந்த பிள்ளைகளை மிரட்டுவது என்ன! அதற்காக அந்தப் பிள்ளைகளை அவர்கள் தண்டிப்பது என்ன!

ஆனால்,தொழுகை,நோன்பு, ஜகாத், ஹஜ், ஒழுக்கங்கள் இன்னும் எத்தனையோ கடமைகள் எல்லாம் பிள்ளைகள் பாழ்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அதை புதைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு எதிராக பெரிய போரையே அந்த பிள்ளைகள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அதை பார்த்து முஸ்லிம் பெற்றோர்கள் என்ன சொல்கிறார்கள்?இந்த வயசில் இப்படி தான் இருப்பார்கள் என்று.

அன்பிற்குரியவர்களே! ஷைத்தான் அவர்களை வழி கெடுக்கும் பொழுது திருத்தக் கூடிய பொறுப்பு உங்களுடைய பொறுப்பு.

அல்லாஹ் சொல்கிறான் :

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا

நம்பிக்கையாளர்களே! நரக நெருப்பிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்! உங்களது குடும்பத்தாரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் 66 : 6)

நாளை மறுமையில் இது குறித்து விசாரிக்கப்படும். அல்லாஹ் சுபஹானஹு தஆலா எனவேதான், மிகத் தெளிவாக சொல்லி விடுகிறான்.

அல்லாஹ் உடைய மார்க்கம் தான் உங்களுக்கு முதல் உறவு. அதற்குப் பிறகு தான் தந்தை, அதற்கு பிறகு தான் தாய், அதற்குப் பிறகு தான்பிள்ளைகள், அதற்குப் பிறகு தான் எந்த உறவாக இருந்தாலும் சரி.

அல்லாஹ் உடைய உறவை முறித்துக்கொண்டு, அல்லாஹ்வுடைய கட்டளைகளை பாழ்படுத்திக் கொண்டு, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை அசிங்கப் படுத்திக் கொண்டு உறவுகளை சகித்துக் கொள்ளவேண்டும். உறவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் அதற்கு இந்த மார்க்கத்தில் எள்ளளவும் அனுமதி கிடையாது.

அல்லாஹு தஆலா இதை மீண்டும் பல இடங்களில் நமக்கு தெளிவாக சொல்லிவிடுகின்றான்.

لَا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ أُولَئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ

 (நபியே!) எந்த மக்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் (மெய்யாகவே) நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களிடம் நேசம் கொண்டு உறவாடுவதை நீர் காண மாட்டீர். அவர்கள், தங்கள் பெற்றோர்களாக அல்லது தங்கள் சந்ததிகளாக அல்லது தங்கள் சகோதரர்களாக அல்லது தங்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே! (அவர்களை நம்பிக்கையாளர்கள் நேசிக்க மாட்டார்கள்.) இவர்களுடைய உள்ளங்களில்தான் அல்லாஹ் நம்பிக்கையை பதியவைத்துத் தன் அருளைக் கொண்டும் இவர்களைப் பலப்படுத்தி வைத்திருக்கிறான். (அல்குர்ஆன்58 : 22)

ஆகவே, அல்லாஹ்வுடைய இந்த எச்சரிக்கையை நாம் கவனத்தில் வைக்க வேண்டும். அல்லாஹ் சொல்கின்றான் உங்களுக்கு அல்லாஹ்வுடைய கட்டளைகளை நிறைவேற்றுவதில் நீங்கள் இரக்கம் காட்டி விட வேண்டாம்.

எவ்வளவு பெரியக் கொடிய செயலாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! இந்த ஸினாவை இன்று, மக்கள் சர்வசாதாரணமாக கண்ணால், கையால், உடல் உறுப்புகளால் செய்து விடுகின்றார்கள். மர்மஸ்தானம் ஒன்று இதை உண்மைப்படுத்துகின்றது அல்லது பொய்படுத்துகின்றது.

இந்த குற்றத்திற்குரிய செயல் சமுதாயத்தால் எவ்வளவு மலிந்து கிடக்கின்றது என்றால், பலர், தங்களை உயர்தர மக்கள் என்று எண்ணிக் கொள்பவர்கள் மார்க்கத்தினுடைய அடிப்படையே தெரியாதவர்கள்,ஒழுக்கத்தின் வாசனையை நுகராதவர்கள், திருமணத்தை சிரமமாக்கிக் கொண்டார்கள்.சுன்னத்தான நிக்காஹ்வை கேவலப்படுத்துகிறார்கள்.

ஆனால், விபச்சாரம் செய்வதை இது வாலிபத்தின் கட்டாயமான ஒன்று என்று எண்ணுகின்றார்கள்.

ஒரு மனிதன் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். வாலிபத்தில் எங்கு வேண்டுமானாலும் போகலாம். இதெல்லாம் இந்த காலத்துல சாதாரணம் என்று சொல்கிறார்கள்.

கூச்சப் பட வேண்டாமா?அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ள வேண்டாமா?எவ்வளவு பயங்கரமான தண்டனையை அல்லாஹ் சொல்கின்றான்.

யார் திருமணம் முடிக்காமல், திருமணம் ஆகாமல் இந்த செயலைச் செய்கிறார்களோ அவர்களுக்கு தண்டனை நூறு அடி அவர்களை அடியுங்கள்.

இஸ்லாமிய நாடாக இருந்தால், குர்ஆனையும் ஹதீசையும் அமல்படுத்தக் கூடிய ஆட்சியாளர் சட்டத்தை அமல்படுத்திக் கொண்டு இருந்தால் இந்த சட்டம் நிறைவேற்றப்படும்.

அல்ஹம்துலில்லாஹ்! சில இடங்களில் அல்லாஹ்வுடைய அருளால் இந்த பூமியில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட காரணத்தால் அங்கே இந்த குற்ற செயல் இல்லாமல் இருப்பதை பார்க்கிறோம். அப்படி நடந்தாலும் எங்கேயாவது எப்போதாவது நடப்பதை பார்க்கிறோம்.

இப்படிப்பட்ட தண்டனை இங்கே நிறைவேற்றப்படாதக் காரணத்தால் கேவலம்  இஸ்லாமை எதிர்க்கக்கூடிய மக்கள், இஸ்லாமை அசிங்கப்படுத்தக் கூடிய மக்கள்,இஸ்லாமிய மார்க்கத்தை கோரப்படுத்தக்கூடிய மக்கள் என்ன ஆட்சிசெய்கிறார்கள்?

அவர்களுடைய ஆட்சியில் நிம்மதி இருக்கிறதா? அவர்களுடைய ஆட்சியில் கற்புக்கு பாதுகாப்பு இருக்கிறதா? அவர்களுடைய ஆட்சியில் சொத்துக்கு பாதுகாப்பு இருக்கிறதா? அவர்களுடைய ஆட்சியில் ஒழுக்கத்துக்கு பாதுகாப்பு இருக்கிறதா? ஒரு பெண்ணுடைய கற்புக்கு பாதுகாப்பு இருக்கிறதா?

நாளுக்கு நாள் எந்த இடத்தில் பார்த்தாலும் சரி, நாளிதழ்களை புரட்டுங்கள், மாத பத்திரிகைகளைப் புரட்டுங்கள். எங்கு பார்த்தாலும் கொலை,கொள்ளை, கற்பழிப்பு, கொலை,கொள்ளை,கற்பழிப்பு என்ற அசிங்கத்தை தானே பார்க்கிறார்கள்.

இன்னும் இந்த அறிவீனர்களுக்கு புத்தி வரவில்லையா? இஸ்லாமின் பக்கம் இவர்கள் திரும்புவதற்கு நேரம் வரவில்லையா? இஸ்லாம் என்ன சொல்கிறது?குற்றத்திற்கு உரிய தண்டனையை அதிகப்படுத்தியதற்கு காரணம் என்ன?

அந்த குற்றம் நடக்கக் கூடாது என்பதற்காகவே தானே தவி,ர அந்த குற்றவாளியை தண்டித்து அவன் மீது வன்முறையை செலுத்த வேண்டும் என்பதற்காக அல்ல.

எப்போது குற்றங்களுக்கு உரிய தண்டனையை கடுமைப்படுத்தப்படுமோ அங்கே குற்றங்கள் நடக்காது என்பது உண்மை.

ஆகவேதான், அல்லாஹ் சுபஹானஹுதஆலா யார் திருமணம் ஆனதற்கு பிறகு இப்படிப்பட்ட குற்றத்தை செய்கிறானோ அவனை கல் எறிந்து கொன்றுவிடுங்கள் என்று கூறுகிறான்.

அன்பிற்குரியவர்களே! ஒருவரிடத்தில் இறை நம்பிக்கை,அல்லாஹ்வின் மீது நம்பிக்கை, மறுமையின் மீது நம்பிக்கை என்று வந்துவிட்டால்அவரிடத்தில் இந்த செயல்  நடக்கக்கூடாது. இந்த செயலின் பக்கம் அவன் திரும்ப கூடாது.

அல்லாஹு தஆலா எவ்வளவு அழகாக, அன்பாக, தெளிவாக நமக்கு அறிவுரை சொல்கின்றான்:

وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا (68) يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَيَخْلُدْ فِيهِ مُهَانًا

அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை அழைக்க மாட்டார்கள். (கொலை செய்யக் கூடாதென்று) அல்லாஹ் தடுத்திருக்கும் எம்மனிதனையும் அவர்கள் நியாயமின்றிக் கொலை செய்ய மாட்டார்கள்; விபசாரமும் செய்ய மாட்டார்கள். ஆகவே, எவனேனும் இத்தகைய தீய காரியங்களைச் செய்ய முற்பட்டால், அவன் (அதற்குரிய) தண்டனையை அடைய வேண்டியதுதான். மறுமை நாளிலோ அவனுடைய வேதனை இரட்டிப்பாக ஆக்கப்பட்டு இழிவுபட்டவனாக அந்த வேதனையில் என்றென்றும் தங்கிவிடுவான். (அல்குர்ஆன் 25 : 69)

வசனத்தின் கருத்து : நம்பிக்கையாளர்கள்,அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்கள், அல்லாஹ்வை தவிர்த்து யாரையும் வணங்க மாட்டார்கள். ஷிர்க் அவர்களிடத்தில் இருக்காது. அல்லாஹ்விற்கு செய்யக் கூடிய வணக்க வழிபாடுகளை வேறு யாருக்கும் செய்ய மாட்டார்கள்.

கப்ருக்கு நேர்ச்சை செய்ய மாட்டார்கள். அறுத்துப் பலியிட மாட்டார்கள். அங்கே சென்று இஃதிகாப் இருக்க மாட்டார்கள். அங்கே சென்று துஆ கேட்க மாட்டார்கள். வணக்க வழிபாடுகள் அல்லாஹ் ஒருவனுக்கே.

அவற்றில் யாரையும் நபியாக இருந்தாலும் சரி, மலக்காக இருந்தாலும் சரி,வலியாக இருந்தாலும் சரி,யாராக இருந்தாலும் வணக்க வழிபாடுகளை பங்கு போட்டுக் குடுக்க மாட்டார்கள். அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்வார்கள்.

அடுத்து,அல்லாஹ் கண்ணியப்படுத்தி இருக்கக் கூடிய, அல்லாஹ் பாதுகாப்பு கொடுத்திருக்கக்கூடியஉயிரை அவர்கள் அநியாயமாக கொல்ல மாட்டார்கள்.

இன்று, யாராவது ஒருவர் இஸ்லாமிய பெயரால், முஸ்லிம்களின் பெயரால்,அவர் தீவிரவாதத்தைச் செய்தால்,அப்பாவி மக்கள்களைக் அவர் கொன்றால்,அவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் அல்ல.

அவர் தன்னுடைய இனவெறியின் காரணமாகவோ அல்லது தனது உணர்வுகளுக்கு அடிமையாகியோ அவர் அந்த தவறுகளை செய்கிறார். எப்படி மாற்றார்கள் செய்கிறார்களோ அப்படி.

அவர் மார்க்கத்திற்காக செய்யவில்லை. இஸ்லாமிய சமூகத்துக்காக செய்யவில்லை. இஸ்லாமிய சமூகம் நமக்கு எப்படிப்பட்ட பொறுமையை எப்படிப்பட்ட ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கிறது என்று சொன்னால்,

அல்லாஹ் கூறுகிறான் :

وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதிவான்களாக நீதத்திற்கு சாட்சி சொல்பவர்களாக இருங்கள். ஒரு வகுப்பார் மீதுள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும்படி உங்களைத் தூண்டாதிருக்கட்டும். (பகைமை இருந்தாலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிக நெருங்கியது. (அல்குர்ஆன் 5 : 8)

குற்றமற்றவர்களை தண்டிப்பது, பொது மக்களை தண்டிப்பது, அமைதியான சூழ்நிலையில் குழப்பத்தை ஏற்படுத்துவது மார்க்கத்தில் மிகப்பெரிய குற்றம்.

அல்லாஹ் சொல்கிறான் :

பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்! பூமியில்கலகம் செய்யாதீர்கள்! (அல்குர்ஆன் 2 : 11)

பூமியில் கலகம் செய்வது, குழப்பம் செய்வது மிக பயங்கரமான குற்றம் என்று அல்லாஹ் சொல்கிறான்.

ஆகவே,ஒரு இறை நம்பிக்கையாளர் இது போன்ற தவறுகளை அல்லாஹ் கண்ணியப்படுத்திய புனிதப்படுத்திய உயிரை அதற்குரிய உரிமை இல்லாமல் கொல்ல மாட்டார்.

அதற்குரிய உரிமை என்ன? அவர் இன்னொருவரைக் கொன்று  இருக்க வேண்டும்,அல்லது முஸ்லிமாக இருந்தால் அவர் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறி இருக்க வேண்டும்.அல்லது திருமணம் ஆனதற்கு பிறகு அவர் விபச்சாரம் செய்து இருக்க வேண்டும்.

இது ஒரு உயிரை கொல்வதற்கு இஸ்லாமிய அரசாங்கத்திற்கு அல்லாஹ் கொடுத்த உரிமை. அல்லாஹ் கொடுத்த சட்டமே தவிர. இதையும் தனி மனிதர்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது.

இவர் ஒருவரைக் கொன்று விட்டார். எனவே இவரை நான் கொன்றேன் என்று தனி மனிதன்  எடுத்துக் கொள்ளக்கூடாது.இவர் விபச்சாரம் செய்து விட்டார். எனவே, நான் இவரை கொன்று விட்டேன் என்று தனி மனிதன் எடுத்துக் கொள்ளக்கூடிய சட்டம் அல்ல.

அடுத்து அல்லாஹ் சொல்கிறான்,

நம்பிக்கையாளர்களுடைய மூன்றாவது பண்பு,அவர்கள் விபச்சாரம் செய்ய மாட்டார்கள்.

யார் இப்படிப்பட்ட பாவங்களை செய்கிறாரோ அவர் மிகப்பெரிய குற்றத்தை செய்து விட்டார். அவருக்கு மறுமையில் இரட்டிப்பு தண்டனை உண்டு. அவர் அந்த தண்டனையில் கேவலப்படுத்தப்பட்டு அங்கே இருப்பார்.

ஆனால்,அல்லாஹ் சுபஹானஹு தஆலா கருணையாளன் அல்லவா, பாவங்களை மன்னிப்பவன் அல்லவா! நமக்கு தவ்பாவின் வாசலை திறந்து வைக்கிறான்.

யார் மனம் உருகி செய்த செயலுக்காக வருந்தி அல்லாஹ் இடத்தில் மன்னிப்பு கேட்டு விடுகின்றாரோ,தனது அந்த தவறான செயலை விட்டு விலகிக் கொள்கிறாரோ அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்கிறாரோ, அல்லாஹு தஆலா அவர்களுடைய பாவங்களை மன்னிப்பது மட்டுமல்ல,அந்தப் பாவங்களை அல்லாஹ் அவர்களுக்கு நன்மைகளாக மாற்றி கொடுத்து விடுகின்றான். அல்லாஹ் நிச்சயமாக பாவங்களை மன்னிப்பவன். மிகப்பெரிய கருணையாளன். (அல்குர்ஆன் 25 : 69)

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொல்கின்றார்கள்:

ஷிர்க் செய்தல்-இணைவைத்தல் மிகப் பெரிய பாவம். அதை விட ஒரு பெரிய பாவம் கிடையாது.அதற்கு அடுத்ததாக அல்லாஹ் புனிதமாக்கிய உயிரைக் கொலை செய்தல்.

அடுத்து,மூன்றாவது தரத்தில் இஸ்லாமிய மார்க்கத்தில் விபச்சாரம் செய்வதை விட ஒரு மிகப்பெரிய குற்றம் இருப்பதை நான் பார்க்கவில்லை.

காரணம், அல்லாஹ் சுபஹானஹு தஆலா இந்த சூரத்துல் புர்கானுடைய வசனத்தில் இந்த மூன்று பாவங்களையும் இப்படித்தான் வரிசைப்படுத்துகின்றான்.

முதலில் ஷிர்க் செய்ய மாட்டார்கள் என்று சொல்கிறான். இரண்டாவது, கொலை செய்ய மாட்டார்கள் என்று சொல்கிறான்.மூன்றாவது, ஸினா செய்ய மாட்டார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.

யார் இந்த பாவங்களை செய்வார்களோ அவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கக் கூடிய தண்டனை, நாளை மறுமையில் மற்றவர்களுக்குகொடுக்கக்கூடிய தண்டனையை விட இரட்டிப்பான தண்டனை. நாளை மறுமையில் கேவலப்படுத்தப்படுவார்கள்.

ஸஹீஹுல் புஹாரியில் கனவுடையை பாடத்தில் இந்த ஹதீஸை நீங்கள் படித்து இருக்கலாம்.

فَانْطَلَقْنَا إِلَى ثَقْبٍ مِثْلِ التَّنُّورِ أَعْلَاهُ ضَيِّقٌ وَأَسْفَلُهُ وَاسِعٌ يَتَوَقَّدُ تَحْتَهُ نَارًا فَإِذَا اقْتَرَبَ ارْتَفَعُوا حَتَّى كَادَ أَنْ يَخْرُجُوا فَإِذَا خَمَدَتْ رَجَعُوا فِيهَا وَفِيهَا رِجَالٌ وَنِسَاءٌ عُرَاةٌ

ஸினா செய்பவர் நாளை மறுமையில் எப்படி கேவலமாக தண்டிக்கப் படுவார் என்று சொன்னால்,

ஆடைகள் களையப்பட்டு குறுகிய ஒரு அடுப்பில், கீழே விசாலமாக இருக்கும் அதனுடைய வாய் மேல் குறுகலாக இருக்கும் ஆண்களும் பெண்களுமாக அந்த அடுப்புக்குள் போட்டு எறிக்கப்படுவார்கள், கொழுத்தப்படுவார்கள். கொழுந்துவிட்டு எரிய கூடிய அந்த நெருப்பில் துடித்துக் கொண்டு இருப்பார்கள்.

அந்த ஜுவாலை அவர்களை அப்படியே மேல் அள்ளிக் கொண்டு வரும் பொழுது அந்த அடுப்பு அணையும். அவர்கள் திரும்பி கீழே இறங்குவார்கள். எங்கே தனக்கு நிம்மதி கிடைக்குமா? என்று அவர்கள் தேடிக்கொண்டிருக்கும் பொழுது மீண்டும் அந்த நெருப்பை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மூட்டுவான்.

அறிவிப்பாளர் : சமுரா இப்னு ஜுன்துப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1297.

இமாம் இப்னு கய்யிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொல்கின்றார்கள் :

அல்லாஹ், ஸினா செய்வதை கொலை குற்றத்திற்கு அடுத்ததாக சொல்லி இருக்கிறானே,அப்படி இதில் என்ன பெரிய குற்றம் இருக்கிறது?ஆபத்து இருக்கிறது?என்று பார்க்கிறீர்களா?

எப்படி கொலை செய்வதால் நாடுகளில் கலகம் ஏற்படுமோ,நாடுகளில் பேராபத்துக்கள் ஏற்படுமோ, நிம்மதி அற்ற தன்மை ஏற்படுமோ,அது போன்று தான் ஸினா செய்வதால் ஏற்படுகிறது.

எப்போது ஒரு மனிதன் ஒரு பெண்ணிடத்தில் ஸினா செய்ய வேண்டும் என்று நெருங்குகின்றானோ,அந்த பெண் ஒருவருடைய மகளாக, சகோதரியாக,தாயாக இருப்பாள். அதன் காரணமாக அவனுக்கு அங்கே ரோஷம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக சண்டை, சச்சரவுகள்,குழப்பங்கள்,பிரச்சினைகள், கொலைகள் நடப்பதை நாம் பார்க்கிறோம்.

இன்றைய காலத்தில், நீங்கள் நாளிதழ்களை படிப்பதற்கு எடுத்தால், தலைப்புச் செய்திகளே இந்த அசிங்கத்தை தவிர வேறேதுவும் இருக்க முடியாது.

ஒருவன் ஒருவனை கொலை செய்தான். ஒருவன் ஒருவன் மீது அத்துமீறினான்,குடும்பத்தை கொலை செய்தான். காரணம் என்ன? அங்கே இந்த அனாச்சாரங்கள் இந்த அசிங்கங்கள் தான் விலாவாரியாக எழுதப்பட்டு இருப்பதைப் பார்க்கிறோம்.

அன்பிற்குரியவர்களே! இப்படிப்பட்ட பாவங்கள் அல்லாஹ்வை நம்பக்கூடிய மறுமையை நம்பக்கூடிய, ஒழுக்கமிக்க, அதுவும் குறிப்பாக தொழுகையை பேணக்கூடிய ஒரு முஸ்லிம் இடத்தில் இருக்கக்கூடாது.

அல்லாஹ் நமக்கு சொல்லக் கூடிய இந்த அழகிய அறிவுரையைப் பாருங்கள் :

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (2) وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ (3) وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ (4) وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ (5) إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ (6) فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ

நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டனர். அவர்கள் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள்; அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகி இருப்பார்கள்; அவர்கள் ஜகாத்து கொடுத்து வருவார்கள்; அவர்கள் தங்கள் மர்மஸ்தானத்தை (விபசாரத்திலிருந்து) காப்பாற்றிக் கொள்வார்கள்; எனினும், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலது கரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே, இவ்விஷயத்தில்) அவர்கள் பழிக்கப்பட மாட்டார்கள். இதற்குப் புறம்பானதை எவரேனும் விரும்பினால் அவர்கள் வரம்பு மீறியவர்களாகி (குற்றவாளிகளாகி) விடுவார்கள். (அல்குர்ஆன் 23 : 1-7)

வசனத்தின் கருத்து : அவர்கள் வீணான காரியங்களை விட்டும் விலகி இருப்பார்கள். எந்த விதமான செயல்களில் மறுமைக்கு உண்டான நன்மை இல்லையோ அல்லது ஹலாலான துனியா உடைய நன்மை இல்லையோ அந்த செயல்களின் பக்கம் இவர்கள் நெருங்க மாட்டார்கள்.

டைம்பாஸ், என்டேர்டைன்மெண்ட் -பொழுது போக்குகள் இது போன்ற வீணான  செயல்கள் எல்லாம் முஸ்லிம்களிடத்தில் இருக்காது.

இன்று, நாட்டில் நடப்பதைப் பார்க்கிறோம். உலகத்தில்  நடக்கக்கூடிய பேராபத்துகளைப் பார்க்கிறோம்.

நேரங்களை கழிப்பதற்காக வேண்டி எத்துணை கேளிக்கை அரங்குகளை இன்னும் இது போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளை இந்த உலகத்தில் ஷைத்தான்கள் ஆரம்பித்து வைத்திருக்கிறார்களோ அங்கிருந்து தான் இப்படிப்பட்ட பெரிய ஆபத்துகள்,மாபெரும் நோய்கள், மாபெரும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கண்டிக்கப்பட்ட குற்றங்கள் ஆரம்பிக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.

ரசூல் அவர்கள் இன்னும் நமக்கு சொல்கின்றார்கள்.

நீ குழப்பமான காரியங்களில் குழப்பமான நேரத்தில்உனது வீட்டுக்குள் இருப்பதை அவசியம் ஆக்கிக் கொள்! உனது வீடு உனக்கு விசாலமாக இருக்கட்டும். (4)

அறிவிப்பாளர் : அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 21206.

மிக பயங்கரமான எச்சரிக்கை! அல்லாஹ்வுடைய தண்டனை எந்த நேரத்தில் வருமோ! பூமி எப்போது பிளக்கப்படுமோ! வானம் எப்போது கல் மழையை பொழியுமோ! அல்லது எந்த நேரத்தில் எப்படிப்பட்ட வேதனையைக் கொண்டு அல்லாஹ் தண்டிப்பானோ அல்லாஹ்வை அறிந்தவன்!

அல்லாஹ் நம்மிடத்தில் பல முறை திரும்ப திரும்ப கேட்கிறான்,

நீங்கள் அச்சமற்று வாழ்கிறீர்களா?அல்லாஹ் உங்களை பூமியில் இழுத்துக் கொள்வான் என்ற பயம் இல்லையா?அல்லது வானத்தில் கல் மழைகள் பொழிய வைப்பான் என்ற பயம் இல்லையா?நீங்கள் பகலில் விளையாடிக் கொண்டு இருக்கும் பொழுது அல்லது இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது அல்லாஹ்வுடைய வேதனை வரும் என்பதில் நீங்கள் அச்சமற்று இருக்கின்றீர்களா?(அல்குர்ஆன் கருத்து : 17 : 68)

ஒரு முஃமினுக்கு ஒன்று, அவனுடைய பள்ளிவாசல் அல்லது அவனுடைய ஹலாலான வியாபாரங்கள் இருக்கக் கூடிய இடங்கள் அல்லது அவனுடைய வீடு, இது அவனுக்கு மிகவும் உசிதமானது. மிக நன்மையைத் தரக் கூடியது.

வீணான காரியங்கள், கைபேசியில் நேரத்தை கழிப்பது,அவனுக்கு ஒரு மன மகிழ்ச்சி,இப்படி எல்லாம் எங்கே செல்கின்றார்களோ அங்கே தவறுகள் ஆரம்பிக்கப்படுவதை,நாம் பார்க்கிறோம்.

ஆகவே, அல்லாஹ் நமக்கு மிகப்பெரிய அடிப்படையை சொல்லிவிட்டான். வீணான,தேவையற்ற,அனாவசியமான காரியங்களை முஸ்லீம்கள் விலக்கிக் கொள்வார்கள்.

ஜக்காத்தை அவர்கள் முழுமையாக நிறைவேற்றுவார்கள். தங்களுடைய மர்மஸ்தானங்களை,தங்களுடைய கற்புகளை பாதுகாத்துக் கொள்வார்கள். தங்களது மனைவிகள் இடத்தில் அல்லது தங்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட அடிமைகள் இடத்திலேயே தவிர.

தன்னுடைய இன்பத்தை அனுபவிப்பதற்கு அல்லாஹ் அனுமதித்த இடம், கணவனுக்கு மனைவி,மனைவிக்கு அவளுடைய ஹலாலான கணவன்.

இதுதவிர, வேறு வழிகளில் யார் ஒருவர், தனது இன்பத்தை அனுபவிப்பதற்காக வேறு வழிகளை தேடுகின்றானோ,அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையை மீறியவர்கள். அல்லாஹ்வுடைய சட்டத்தை மீறியவர்கள்.

நாளை மறுமையில் பயங்கரமான வேதனை அவர்களுக்கு உண்டு. யார் ஒருவர் தனது கற்புகளை பாதுகாத்துக் கொள்ளவில்லையோ அவருக்கு வெற்றி கிடைக்காது.

அவரை அல்லாஹ் கேவலப்படுத்துகின்றான். அல்லாஹ் இழிவுபடுத்துவான். அல்லாஹ்வுடைய கட்டளையை மார்க்கசட்டத்தை அவர்கள் மீறியவர்களாக ஆகி விடுவார்கள்.

இன்று, காதலர் தினம்,பிரண்ட்ஷிப் தினம் இப்படியெல்லாம் பல பல பெயர்களைக் கொண்டு இந்த அசிங்கங்கள் மக்களுக்கு மத்தியில் சர்வசாதாரணமாக அரங்கேற வேண்டும் என்பதற்காக பெரும் முயற்சியை இந்த யூதர்கள்,கிறிஸ்தவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களை பொறுத்தவரை அவர்களுடைய கொள்கை என்னவென்று சொன்னால்,இந்த வரலாற்றில் ஆரம்ப காலத்தில் இவர்கள் செய்தார்கள். இப்போதும் அதற்காக வேண்டிதான் அவர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள் என்று சொன்னால் தாய்,மனைவி, சகோதரி எந்த விதமான பாகுபாடும் இருக்கக் கூடாது. எல்லாம் சமம் தான் என்ற ஒரு அசுத்தமான அசிங்கமான கொள்கையை அவர்கள் இந்த சமுதாயத்தில் பரப்புவதற்காக வேண்டி தான் சினிமாக்களை ஆரம்பித்தார்கள். டான்ஸ்களை ஆரம்பித்தார்கள். பாட்டுக்களை ஆரம்பித்தார்கள்.

இன்னும் எத்துணை அனாச்சாரங்கள் இருக்கிறதோ, இந்த எல்லா அனாச்சாரங்கள் உடைய இறுதி எல்லை என்ன?

சமுதாயத்தில் இருக்கக்கூடிய இந்த வேறுபாடு,சமுதாயத்தில் இருக்கக்கூடிய இந்த பாதுகாப்பு தடைகள் அகற்றப்பட வேண்டும்.

முற்றிலுமாக இறைகோபத்திற்கு ஆளாகி நாசமாக வேண்டும் என்று ஷைத்தானுடைய ஏஜெண்டுகளாக அவர்கள் ஆரம்பித்த இந்த செயல்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை பாதுகாக்க வேண்டும்!!

இன்று, நம்மில் இதனுடைய விபரீதத்தை உணராத பலர்கள் இதில் சிக்குண்டு, தங்களுடைய குடும்பங்களில் அனாச்சாரங்களும் அசிங்கங்களும் எப்போது நடக்கின்றதோ அப்போது கைசேதப்படுகின்றார்கள்.

இறை நம்பிக்கையுள்ள விழிப்புணர்வுள்ள,அல்லாஹ்வை அஞ்சக்கூடிய,மறுமையை பயப்படக்கூடிய ஒரு முஸ்லிம் ஆபத்து வருவதற்கு முன்பதாக, குற்றங்கள் நிகழ்வதற்கு முன்பதாக தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

தன்னையும் தனது குடும்பத்தையும் அல்லாஹ்வுடைய கட்டளைக்கு ஏற்ப அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் மூலமாக இந்த உலகத்தினுடைய கேவலத்தில் இருந்தும்,இந்த உலகத்தில் அல்லாஹ்வுடைய தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். நாளை மறுமையில்  நிரந்தரமான,மிகக்கொடிய,முடிவற்ற வேதனையில் நாம் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ حَدَّثَنَا حَرِيزٌ حَدَّثَنَا سُلَيْمُ بْنُ عَامِرٍ عَنْ أَبِي أُمَامَةَ قَالَ إِنَّ فَتًى شَابًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ائْذَنْ لِي بِالزِّنَا فَأَقْبَلَ الْقَوْمُ عَلَيْهِ فَزَجَرُوهُ قَالُوا مَهْ مَهْ فَقَالَ ادْنُهْ فَدَنَا مِنْهُ قَرِيبًا قَالَ فَجَلَسَ قَالَ أَتُحِبُّهُ لِأُمِّكَ قَالَ لَا وَاللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ قَالَ وَلَا النَّاسُ يُحِبُّونَهُ لِأُمَّهَاتِهِمْ قَالَ أَفَتُحِبُّهُ لِابْنَتِكَ قَالَ لَا وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ قَالَ وَلَا النَّاسُ يُحِبُّونَهُ لِبَنَاتِهِمْ قَالَ أَفَتُحِبُّهُ لِأُخْتِكَ قَالَ لَا وَاللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ قَالَ وَلَا النَّاسُ يُحِبُّونَهُ لِأَخَوَاتِهِمْ قَالَ أَفَتُحِبُّهُ لِعَمَّتِكَ قَالَ لَا وَاللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ قَالَ وَلَا النَّاسُ يُحِبُّونَهُ لِعَمَّاتِهِمْ قَالَ أَفَتُحِبُّهُ لِخَالَتِكَ قَالَ لَا وَاللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ قَالَ وَلَا النَّاسُ يُحِبُّونَهُ لِخَالَاتِهِمْ قَالَ فَوَضَعَ يَدَهُ عَلَيْهِ وَقَالَ اللَّهُمَّ اغْفِرْ ذَنْبَهُ وَطَهِّرْ قَلْبَهُ وَحَصِّنْ فَرْجَهُ فَلَمْ يَكُنْ بَعْدُ ذَلِكَ الْفَتَى يَلْتَفِتُ إِلَى شَيْءٍ (مسند أحمد 21185 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ اللَّهُمَّ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ تَخَافُ عَلَيْنَا وَقَدْ آمَنَّا بِكَ وَصَدَّقْنَاكَ بِمَا جِئْتَ بِهِ فَقَالَ إِنَّ الْقُلُوبَ بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ يُقَلِّبُهَا وَأَشَارَ الْأَعْمَشُ بِإِصْبَعَيْهِ (سنن ابن ماجه 3824 -)

குறிப்பு 3)

بَاب مَا جَاءَ فِيمَنْ يَسْتَحِلُّ الْخَمْرَ وَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ وَقَالَ هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ حَدَّثَنَا عَطِيَّةُ بْنُ قَيْسٍ الْكِلَابِيُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ غَنْمٍ الْأَشْعَرِيُّ قَالَ حَدَّثَنِي أَبُو عَامِرٍ أَوْ أَبُو مَالِكٍ الْأَشْعَرِيُّ وَاللَّهِ مَا كَذَبَنِي سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ وَلَيَنْزِلَنَّ أَقْوَامٌ إِلَى جَنْبِ عَلَمٍ يَرُوحُ عَلَيْهِمْ بِسَارِحَةٍ لَهُمْ يَأْتِيهِمْ يَعْنِي الْفَقِيرَ لِحَاجَةٍ فَيَقُولُونَ ارْجِعْ إِلَيْنَا غَدًا فَيُبَيِّتُهُمْ اللَّهُ وَيَضَعُ الْعَلَمَ وَيَمْسَخُ آخَرِينَ قِرَدَةً وَخَنَازِيرَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ (صحيح البخاري)

குறிப்பு 4)

حَدَّثَنَا خَلَفُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ زَحْرٍ عَنْ عَلِيِّ بْنِ يَزِيدَ عَنِ الْقَاسِمِ عَنْ أَبِي أُمَامَةَ قَالَ قَالَ عُقْبَةُ بْنُ عَامِرٍ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا النَّجَاةُ قَالَ أَمْلِكْ عَلَيْكَ لِسَانَكَ وَلْيَسَعْكَ بَيْتُكَ وَابْكِ عَلَى خَطِيئَتِكَ (مسند أحمد 21206 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/