HOME      Khutba      வேண்டாம் தகாத உறவு | Tamil Bayan - 41   
 

வேண்டாம் தகாத உறவு | Tamil Bayan - 41

           

வேண்டாம் தகாத உறவு | Tamil Bayan - 41


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
 
வேண்டாம் தகாத உறவு
 
 
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ் கூறுகிறான் "ஃபத்தக்குல்லாஹாஹ மஸ்ததஃதும்" உங்களால் முடிந்த அளவுக்கு அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். யார் அல்லாஹ்வுக்கு பயப்படுவார்களோ, அவர்கள் ஷைத்தானுக்கு எதிரியாகவும், மன இச்சையிலிருந்தும், அசிங்கமான காரியங்களிலிருந்தும் விலகிவிடுகிறார்கள். ஷைத்தானுக்கு எதிரியாகும் போது அல்லாஹ்விற்கு நண்பர்களாகி விடுகிறார்கள்.
 
நமது உள்ளத்தில் அல்லாஹ்வின் மீது அச்சம் அதிகரிக்கும் போது நன்மையின் பக்கம் தேட்டமும், நற்காரியங்களில் மேல் ஈடுபாடும் அதிகமாகிறது. அதனால் பாவங்களிலிருந்து தூரமாகி விடுகிறோம்.
 
நண்பர்களே, இன்றைய ஜும்ஆ உரையில் இக்கால சூழ்நிலையில் மக்களிடம் பரவி வரும் மோசமான தவறான கலாச்சாரத்தைப் பற்றியும் அது எவ்வகையில் நம் மார்க்கத்தில் கண்டிக்கப்பட்டுள்ளது என்றும் அதைப் பற்றிய எச்சரிக்கைகள் திருக்குர்ஆனிலும் நம் இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவிழும் வந்திருப்பதை பார்க்க இருக்கிறோம்.
 
இன்று நீங்கள் நாளேடுகளில் பார்க்கலாம். தவறான தொடர்புகளாலும், பழக்க வழக்கங்களாலும் ஏற்படக்கூடிய ஆபத்துகள், பிரச்சினைகள், கொலைகள் என்று இது தொடர்பான செய்திகளைத் தான் செய்தித்தாள்களிலும், ஊடகங்கள் மூலமாகவும் அதிகம் பார்க்கின்றோம். அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நமது சமுதாயத்தை ஒழுக்கமான, கட்டுப்பாடான, நேர்மை, நீதம், பண்பாடுகள் கொண்ட சமுதாயமாக கட்டமைத்துள்ளான்.
 
இச்சமுதாயத்தில் தான் ஒழுக்க சீர்கேடுகளுக்கோ, தவறான பழக்கங்களுக்கோ, முறையற்ற உறவுகளுக்கோ எந்த விதத்திலும் அனுமதி கிடையாது. நமது இறைவன் இதனை அங்கீகரிப்பதும் கிடையாது; மன்னிப்பதும் கிடையாது. அல்லாஹ் நமக்கு கொடுத்திருப்பது ஒரு போராட்ட வாழ்க்கை. அதாவது எப்படி அன்றாடம் நாம் உலகத் தேவைக்காக உணவுக்காக சிரமங்களை கஷ்டங்களை மேற்கொள்கிறோம்? ஆனால் அதையும் விட மிகப் பெரிய சோதனை போராட்டம் நமக்கும் ஷைத்தானுக்கும் இடையில் இருப்பது தான்.
 
ஷைத்தான் அல்லாஹ்விடம் நம்மை குறித்து தர்க்கம் செய்துள்ளான்; போட்டிபோட்டு உள்ளான்; சவால் விட்டுள்ளான். `இதைப்பற்றி இறைவன் திருமறையில் மிகத் தெளிவாக கூறுகிறான்.
 
ஷைத்தான் இறைவனிடம் கூறுகிறான் 'என் இறைவா, நீ என்னை சொர்க்கத்தில் இருந்து சபித்து வெளியேற்றிய காரணத்தால் யாரின் மூலமாக சபிக்கப்பட்டேனோ அந்த மனிதரின் சந்ததிகளுக்கு அவர்களை உன்னைவிட்டு திருப்புவதற்கான அத்தனை வேலைகளையும் செய்வேன்'.
 
لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيمَ
 
ஷைத்தான் கூறிய வார்த்தை. உனது நேரான பாதையில் நான் அவர்களுக்காக அமர்ந்து கொள்வேன்; அவர்களது முன் பின், இடது வலது பக்கங்களில் இருந்து அவர்களை வழிகெடுக்க முயற்சி செய்வேன்.
 
وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ
 
இதில் பெரும்பாலானவர்களை உனக்கு நன்றி செலுத்துபவர்களாக நீ காணமாட்டாய் என்று சவால் விட்டு வந்ததை இறைவன் நமக்கு நினைவூட்டுகிறான். (அல்குர்ஆன் 7 : 16-17)
 
இன்று நமக்கு நம் வாழ்க்கையில் ஈமான் இஸ்லாமிய இறையச்ச உணர்வுகளும் அல்லாஹ் பற்றிய பயமும் மரித்துப் போய் விட்டன. அதனால் மறுமையைப் பற்றிய நினைவு நமது வாழ்க்கையில் இருந்து பிடுங்கப்பட்டு விட்டது. மேலும் நம் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனை தான் நமக்கு மேலோங்கி நிற்கிறது.
 
இதன் காரணமாய் ஷைத்தானுக்கும் நமக்கும் இடையிலான போராட்டமோ அவனது சவாலோ மறுமையைப் பற்றிய சிந்தனையோ நமது உள்ளத்தில் உதிப்பது இல்லை. நான் என்னை எப்படி ஷைத்தானின் வழி கேடுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று நாடுகிரேனோ அப்போதுதான் அவனது இடையூறுகள் எப்படி இருக்கும் என்று சிந்திப்பேன்.
 
உதாரணமாக, ஆட்டு மந்தையிலிருந்து தனியே பிரியும் ஆடு எப்படி எளிதாக ஓநாயிடம் சிக்குகிறதோ, தனியே திரியும் கோழி குஞ்சு எப்படி பருந்திடமும் பூனையிடமும் சிக்கி கொள்கிறதோ அதே போல தான் இறையச்சம் இல்லாத மனிதர்களை ஷைத்தான் எளிதாக வழிகெடுப்பான். அவர்கள் ஷைத்தானுக்கு இறையாகி விடுவார்கள். அதுமட்டுமல்ல, ஷைத்தானின் தீய செயல்களில் ஈடுபாடு கொண்டு அதை அழகாகவும் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
 
அல்லாஹ் கூறுகிறான்; 
 
أَفَمَنْ زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ فَرَآهُ حَسَنًا
 
ஒருவனது தீய காரியங்கள் அவனுக்கு அழகாக தெரியுமானால் அதை அவன் நன்மையாக கருதுகிறான். அப்படிப்பட்டவன் நன்மையில் இருப்பவனுக்கு எப்படி சமமாக அதாவது பாவம் செய்து கொண்டு அந்த பாவத்தின் மேலுள்ள அச்சத்தை இழந்ததன் பின் அந்தப் பாவமே அவனுக்கு நன்மையாக தெரிந்துவிடுகிறது. (அல்குர்ஆன் 35 : 8)
 
இவனைப் பற்றி இறைவன், 
 
أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ
 
என்று திருமறையில் கூறுகிறான். அதாவது தன் மன இச்சையை தனக்கு கடவுளாக்கி கொண்டவனை நபியே உமக்கு தெரியுமா? மற்றொரு வசனத்தில் தனது மன இச்சையை கடவுளாக்கிக் கொண்டவனை விட மிகப்பெரிய வழிகேடன் யார் இருக்க முடியும்? என்று குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன் 45 : 23)
 
ஆகவே, அன்பர்களே! வாழ்க்கையில் மிகப்பெரிய போராட்டம் நமக்கும் ஷைத்தானுக்கும், நமக்கும் நம் நப்ஸுக்கும் இடையே நடக்கும் போராட்டமே. இப்போராட்டம் நம் மரணம் வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இதில் வெல்பவர்கள் தான் நாளை மறுமையில் வெற்றியாளர்கள்.
 
யார் இவ்வுலகில் மன இச்சையில் சிக்கி ஷைத்தானின் மாயவலையில் பின்னிக்கொள்கிறார்களோ அவர்கள் நாளை மறுமையில் தோற்று விடுகிறார்கள். அவர்களுக்கு நிரந்த இடம் நரகம்தான். அல்லாஹு தஆலா குர்ஆனில் குறிப்பிடுகிறான்;
 
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى (40) فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى
 
அதாவது நீங்கள் இரண்டு தன்மைகளைக் கொண்டிருந்தால் சொர்க்கத்தை உங்கள் இடமாக்கிக்கொள்ளலாம். (அல்குர்ஆன் 79 : 40-41)
 
அதில் முதலாவது நாளை மறுமையில் இறைவன் முன் நின்று அவன் விசாரணைக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற நிலையை பயப்படுவது. இந்தப் பண்பை நம் உள்ளத்தில் பதிவு செய்துவிடின் நமது வாழ்வில் நல்லமல்கள் எப்படி சீராகிவிடுகின்றன என்பதை கண்கூடாக பார்க்க முடியும்.
 
அதுமட்டுமல்ல இந்த உயரிய பண்பின் மூலம் பாவங்களிலிருந்து நாம் எப்படி விலகுகின்றோம் தீமையை எப்படி வெறுக்கின்றோம் அசிங்கங்களை எப்படிப் புறக்கணிக்கிறோம் என்பதும் தெளிவாகும்.
 
இதை எப்போதும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இறைவனே அதற்கு மருந்தும் தந்து விட்டான். அது நமது அக நோய்க்கான பாதுகாப்புக்கான மருந்து. இன்று நம்மில் பலர் பாவத்திலிருந்து மீள வேண்டும் என்று நினைக்கிறார்கள்; ஆனால் அதற்கான மருந்தை தேடுவதில்லை. முயற்சி செய்கிறேன்; முடியவில்லை என்று போலி காரணங்கள் கூறிக்கொள்கிறார்கள்.
 
திருமறையை திறந்து பார்க்கும்போதும் இறைத்தூதரின் வாழ்க்கை உபதேசங்களை எடுத்து பார்க்கும்போதும் நன்றாக தெரிகிறது; தப்பிப்பதற்கான பாதுகாப்பிற்கான வழிகளை அல்லாஹ்வும் திருத்தூதரும் எப்படி சொல்லித் தருகிறார்கள் என்று. தன் ரப்புக்கு முன் தான் நிற்க வேண்டும் என்பதை யார் பயப்படுகிறார்களோ, இந்த பயம் ஈமானுடைய அடிப்படை. இந்த பயம் பாவங்களை விட்டு நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அடிப்படை.
 
இரண்டாவதாக இறைவன் கூறுவது, 
 
وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى
 
ஒருவன் தனது மனதை ஆத்மாவை இச்சைகளை விட்டு முறையற்ற ஆசைகளை விட்டு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 
 
இந்த இரண்டு தன்மைகள் யாரிடத்தில் இருக்கிறதோ அவர்களுக்கு சொர்க்கம் தங்குமிடமாக்கப்படும். 
 
அல்லாஹ்வின் நல்லடியார்களே! இறைவன் மிகத் தெளிவாக சொர்க்கம் யாருக்கு என்று சொல்லிக் காட்டுகிறான். இறைவன் பாதுகாக்க வேண்டும். நாம் மன இச்சைகளை பின்பற்றிக் கொண்டு அல்லாஹ்வை பயப்படாமல் இருந்தால் கண்டிப்பாக நமக்கு சொர்க்கம் கிடைக்காது. சுருக்கமாக சொல்வதென்றால் யார் அல்லாஹ்வை பயந்து அவனுக்கு முன் நிற்க வேண்டும் என்ற அச்சம் கொண்டு மன இச்சைகளை விட்டு அசிங்கமான காரியங்களை விட்டு தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கே சொர்க்கம் தங்குமிடம்.
 
நல்லடியார்களே, இறைவன் திருமறையில் ஷைத்தான் நம்மை எப்படி எல்லாம் வழிகெடுப்பான் என்பதை மிகத் தெளிவாக கூறி விட்டான். அவன் ஒரு வழியல்ல பல பலவிதமான வழிகளில் நம்மை வழிகெடுப்பான்; அவனது செயல்பாடுகள் பல ரூபங்களில் இருக்கும். உதாரணமாக நம்மை ஷிர்க்கிற்கு இணைவழிபாட்டிற்கு தள்ள முயற்சிப்பான். அல்லாஹ்வை நிராகரிக்க வைக்க செயல்படுவான்.
 
كَمَثَلِ الشَّيْطَانِ إِذْ قَالَ لِلْإِنْسَانِ اكْفُرْ فَلَمَّا كَفَرَ قَالَ إِنِّي بَرِيءٌ مِنْكَ إِنِّي أَخَافُ اللَّهَ رَبَّ الْعَالَمِينَ
 
(இன்னும், இவர்களுடையஉதாரணம்:) ஒரு ஷைத்தானுடைய உதாரணத்தையும் ஒத்திருக்கிறது. அவன் மனிதனை நோக்கி‘‘நீ (அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும்) நிராகரித்துவிடு'' என்று கூறுகிறான். அவ்வாறே அவனும் நிராகரித்துவிட்டான். (பின்னர், ஷைத்தான் அவனை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உன்னை விட்டு விலகி விட்டேன். ஏனென்றால், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மெய்யாகவே நான் பயப்படுகிறேன்'' என்று கூறுவான். (அல்குர்ஆன் 59 : 16)
 
மனிதனை இறைவனை நிராகரிக்கும் படி இஸ்லாத்தில் இருந்து வெளியேறும்படி செய்வான். இதுதான் அவரது முதலாவது வழிகேடு.
 
இரண்டாவதாக மனிதனுக்கு மன இச்சைகளை ஆசாபாசங்களை அசிங்கங்களை அலங்கரித்துக் காட்டுவது. இது அவனது மிகப்பெரிய வலை. அதாவது அசிங்கங்களை மக்களுக்குச் சொல்வது.
 
முதல் முயற்சியாக மனிதர்களை இறை மறுப்பாளர்களாக ஆக்கிய பின், அசிங்கங்களை கொண்டு ஆசாபாசங்களை கொண்டு வழிகெடுக்க முயல்வான். முதல் முயற்சியில் இறை மறுப்பில் ஈமானில் வெற்றி பெற்றவர்களாக இருப்பினும் அவர்களை மன இச்சைகள் ஆசாபாசங்களை கொண்டு வழிகெடுப்பான். அதற்கு அவன் கையில் எடுக்கும் ஆயுதம் இறையச்சமற்ற பெண்கள்.
 
இதற்கு சரியான உதாரணமாக யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வந்த சோதனையை கூறலாம். நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம், நபி இஸ்ஹாக் அலைஹி வஸ்ஸலாம், நபி யாகூப் அலைஹி வஸ்ஸலாம் என தூய அழகிய சந்ததியில் இருந்து வந்தவர்கள்தான் நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
 
நபி யூசுஃப் அலைஹி வஸ்ஸலாம் மிஸ்ருடைய மந்திரியின் வீட்டில் தங்கி இருந்தபோது, அங்கிருந்த பெண்ணின் மூலமாக சோதனை ஏற்பட்டது. இதைத்தான் நபிகளாரின் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய சோதனையாக அல்லாஹ் தன் திருமறையில் சூரா யூசுஃப் 12 வது அத்தியாயத்தில் தெளிவுபடுத்துகிறான்.
 
இந்த அத்தியாயத்தில் மிகப்பெரிய படிப்பினை இருக்கிறது என்று இறைவன் கூறுவதன் மூலம் இந்த சோதனை எப்படிப்பட்டது என்பதனை விளங்கிக் கொள்ள முடியும்.
 
அந்த வீட்டில் தங்கி இருந்தபோது அந்தப் பெண்ணால் தவறான நடத்தைக்கு அழைக்கப்படுகிறார்கள் நபி யூசுஃப் அவரகள். அப்பெண் தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டு நபியவர்களை தீய வழியில் சிக்க வைக்க முயற்சிக்கிறாள். வல்ல இறைவன் நபிகளாரை பாதுகாத்தான்.
 
நல்லடியார்களே! ஷைத்தானின் வலைகளில் மிகப்பெரிய வலை இதுதான். இறைத்தூதரையே இப்பேர்ப்பட்ட வலையில் சிக்க வைக்க முயற்சித்தான் என்றால் நாமெல்லாம் சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்? அல்லாஹ்வின் உதவி பாதுகாப்பு இல்லை என்றால் ஷைத்தானின் இந்த சூழ்ச்சியில் இருந்து நாம் தப்பிப்பது மிகச் சிரமமாக ஆகிவிடும்.
 
ஆகவேதான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த தவறான வழிகேடுகளுக்குண்டான எல்லா வழிகளையும் தடுத்துவிட்டார்கள். குர்ஆனில் இணைவைக்கும் காரியத்தை நிராகரிக்கும் காரியத்தை இறைவன் எப்படி பல இடங்களில் கண்டிக்கிறானோ அதே போலத்தான் இந்த அருவருப்பான அனாச்சாரமான செயல்களையும் பெரும் பாவமாக கற்பிக்கிறான்.
 
சூரா அஃராஃப் உடைய 33 ஆவது வசனத்தில் ஷிர்க் மற்றும் அல்லாஹ்வின் மீது பொய் சொல்வது, அவன் சொல்லாதவற்றை இட்டுக்கட்டி சொல்வதைப் பற்றி கூறப்படுவதை தடுக்கும் முன் எதை தடுக்கிறான் தெரியுமா?
 
قُلْ إِنَّمَا حَرَّمَ رَبِّيَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَالْإِثْمَ وَالْبَغْيَ بِغَيْرِ الْحَقِّ وَأَنْ تُشْرِكُوا بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَانًا وَأَنْ تَقُولُوا عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ
 
என்னுடைய ரப்பு ஹராமாக்கி வைத்ததெல்லாம் மானக்கேடானவற்றைத் தான். அப்படிப்பட்ட காரியங்கள் வெளிப்படையாக இருப்பினும் மறைவாக இருப்பினும் சரியே.
 
இந்த இடத்தில் அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அநியாயங்கள் செய்வது, அவனுக்கு இணை வைப்பது, அவன்மீது பொய்யுரைப்பது இந்த பாவங்களைப் பற்றி கூறுவதற்கு முன்பாக அசிங்கங்களின் பக்கம் நெருங்குவதை தான் முக்கியமாக கண்டிக்கிறான்.
 
இதையே சூரா அன்ஆமுடைய 151 வது அத்தியாயத்திலும் வலியுறுத்துகிறான். இந்த அசிங்கமான செயல்களில் பக்கம் நெருங்கியும் விடாதீர்கள். அது வெளிப்படையாக இருந்தாலும் சரி மறைவாக இருந்தாலும் சரியே என்று.
 
எப்படி விபச்சாரத்தைப் பற்றி கண்டிக்கும்போது, 
 
وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا
 
விபச்சாரத்தின் பக்கம் நெருங்கியும் விடாதீர்கள் என்று எச்சரிக்கிறானோ அதே முக்கியத்துவத்தை இங்கும் கொடுக்கிறான். ஏனெனில் இந்த தவறான தொடர்பு விபச்சாரத்திற்கு வழியாக அமைந்துவிடுகிறது. (அல்குர்ஆன் 17 : 32)
 
ஆகவே இறைவன் இந்த அசிங்கமான செயல்களின் பக்கம் நெருங்கியும் விடாதீர்கள். அது வெளிப்படையாக இருப்பினும் சரி மறைவாக இருப்பினும் சரி என்று குறிப்பிட்டு எச்சரிக்கிறான்.
 
நண்பர்களே! இந்த தவறான அசிங்கமான காரியங்களில் ஒன்றுதான் பெண்களுடன் முறையற்ற தொடர்பு கொள்ளுதல். அதாவது ஹலாலான முறையில் நாம் திருமணம் செய்த பெண்ணை தவிர அன்னியப் பெண்ணுடன் பழகுதல், அந்தப் பெண்ணுடன் பேசுதல், அந்தப் பெண்ணுடன் தவறான முறையில் உறவு வைத்துக்கொள்ளுதல்.
 
ரசூல் (ஸல்) அவர்களது ஹதீஸை இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் பதிவு செய்கிறார்கள்; 
 
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الدُّنْيَا حُلْوَةٌ خَضِرَةٌ وَإِنَّ اللَّهَ مُسْتَخْلِفُكُمْ فِيهَا فَيَنْظُرُ كَيْفَ تَعْمَلُونَ فَاتَّقُوا الدُّنْيَا وَاتَّقُوا النِّسَاءَ فَإِنَّ أَوَّلَ فِتْنَةِ بَنِي إِسْرَائِيلَ كَانَتْ فِي النِّسَاءِ
 
மூமீன்களே, நீங்கள் இந்த உலகத்தின் மோகத்தால் ஏற்படும் தீங்குகளை குழப்பங்களை பயந்து கொள்ளுங்கள். உலக ஆசையான பொருளாசையால் ஏற்படும் சோதனையை பயந்து கொள்ளுங்கள். இப்போது பார்க்கிறோம் பணத்தாசையால் உறவுகளை முறித்துக் கொள்கிறார்கள்; சகோதர சகோதரிகளிடம் நண்பர்களிடம் பணத்தாசை மூலம் உறவு முடிந்து விடுகிறது; தவறான பாதையில் பணம் ஈட்ட முயற்சி செய்கிறோம்.
 
அடுத்து, இறைத்தூதர் கூறுகிறார்கள்; பெண்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களை பயந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு பெரியதொரு சோதனை. ஏன் தெரியுமா? இஸ்ரவேலர்கள் இடையே ஏற்பட்ட முதல் பிரச்சனை பெரிய குழப்பம் பெண்களிடமிருந்து தான் ஏற்பட்டது.
 
மேலும் கூறினார்கள், எனக்குப் பிறகு ஆண்களை தவறான பாதையில் வழி கெடுக்க கூடிய மிகப்பெரிய கடின சோதனையாக பெண்களைத் தவிர வேறு எதையும் நான் விட்டுச் செல்லவில்லை. எனக்கு பிறகு ஏற்படக்கூடிய மிகப்பெரிய சோதனை பெண்களிடம் சிக்கி கொள்ளக்கூடிய பெண்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகள். அவர்கள் மூலம் ஏற்படும் பாவங்கள், குழப்பங்கள். அதனால் ஆண்களுக்கு ஏற்படக் கூடிய ஈமானிய சோதனைகள் தான் அதிகம் என தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
 
அறிவிப்பாளர்: அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 4925
 
இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் (ரஹ்) அறிவிக்கிறார்கள், 
 
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ وَلَا تُسَافِرَنَّ امْرَأَةٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا وَخَرَجَتْ امْرَأَتِي حَاجَّةً قَالَ اذْهَبْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ (صحيح البخاري-2784)
 
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அவர்கள் கூறினார்கள்; ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிம்பரில் உரையாற்றும்போது நான் கேட்டேன்; அவர்கள் கூறினார்கள்; ஒரு ஆண் ஒரு பெண்ணிடத்தில் தனித்திருக்க வேண்டாம் இருவரும் தனிமையில் சந்திக்க வேண்டாம்.
 
இந்த இடத்தில் இறைத்தூதர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்திவிட்டார்கள். இரத்த உறவுகள் இல்லாமல், கணவனாக இல்லாமல், எந்த ஆணாக இருந்தாலும் சரி அவர் ஆசானாக, குர்ஆன் ஓதி தரக்கூடிய ஆலிமாக இருந்தாலும் சரி, உறவுகளில் திருமணம் முடிக்க அனுமதிக்கப்பட்ட ஆண்களானாலும் சரி, இப்படிப்பட்ட ஆண்கள் பெண்களை தனிமையில் சந்திக்க வேண்டாம் என்று தடுத்துள்ளார்கள்.
 
ஆனால் ஒரு பெண்ணுக்கு அப்படி ஒரு நிர்ப்பந்தம் ஏற்படுமேயானால் ஒரு ரத்த உறவை உடன் வைத்துக் கொள்ள வேண்டும். மருத்துவரிடமோ, ஆசானிடமோ செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அந்தப் பெண்ணின் மஹரம் என்று சொல்லக்கூடிய தனது தந்தையையோ, தந்தையின் சகோதரரையோ, தன் சகோதரர்களையோ, தன் சகோதரர்களின் பிள்ளைகளையோ உடன் இருத்திக்கொள்ளல் அவசியம். அப்படி இல்லாமல் பெண்கள் ஆண்களை தனிமையில் சந்தித்தல் கூடாது.
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், لَا يَخْلُوَنَّ கண்டிப்பாக... என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள். 
 
மேலும் இறைத்தூதர் கூறுகிறார்கள், ஒரு பெண் பயணம் செய்ய நேரிட்டால் மேற்கூறப்பட்ட ஆண் துணைகளை அவசியம் துணைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்; தனியாக பயணம் செய்ய வேண்டாம்.
 
போர்க்காலத்தில் நபித்தோழர் ஒருவர் இறைத்தூதரிடம் கேட்கிறார். நான் போருக்கு புறப்பட்டு விட்டேன். என் மனைவி ஹஜ்ஜுக்கு சென்றுள்ளார். நான் இப்பொழுது என்ன செய்யட்டும்? என்று. அதற்கு நபியவர்கள், நீங்கள் போரில் இருந்து வெளியேறி விடுங்கள். உங்கள் மனைவியுடன் ஹஜ்ஜில் கலந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
 
அன்பிற்குரியவர்களே! இந்த ஹதீஸிலிருந்து ஏராளமான படிப்பினைகளை நாம் பெறவேண்டும். முதலாவது அன்னிய ஆண்கள் அன்னியப் பெண்களுடன் எவ்வித காரணத்திற்காகவும் நிர்பந்தத்திற்காகவும் தனித்து இருக்கக் கூடாது. இதனை இறைத்தூதர் அவர்கள் இந்த மார்க்கத்தில் தடை செய்துள்ளார்கள். எப்போது இந்த தடை மீறப்பட்டதோ அதனால் ஏற்பட்ட குழப்பங்களை பிரச்சனைகளை நாம் கண்கூடாக காண்கிறோம்.
 
இரண்டாவதாக ஒரு பெண் பயணம் செல்ல நேரிட்டால் இரத்த உறவான ஆண் துணையை அழைத்துச் செல்ல வேண்டும். அப்படி இல்லையெனில் அன்னிய ஆண்களின் பார்வை அவர்கள் மீது விழுந்து விடுகிறது. பேருந்துகளில் விமானங்களில் தனியே பயணம் செல்லும்போது அந்நிய ஆண்களை சந்திக்க நேரிடுகிறது. அதனால் தவறான தொடர்புக்கு வழி வகுக்கப்படுகிறது.
 
அவளின் தனிமையை, ஒருமையை பயன்படுத்தி ஆண்களின் இச்சை பார்வை அவள் மேல் விழுகிறது. சாதாரண பேச்சில் ஆரம்பித்தாலும் நாளடைவில் அது தவறான ஒரு பழக்கத்திற்கு செய்கைக்கு, கொள்கைக்கு வழிவகுக்கிறது. நாம் அன்றாடம் பார்க்கக்கூடிய பிரச்சனைகளின் ஆரம்பம் சாதாரண அறிமுகமாக தான் இருக்கிறது.
 
அரபியில் ஒரு அழகான பழமொழி சொல்வார்கள். கொழுந்துவிட்டு எரிய கூடிய தீக்கதிரின் ஆரம்பம் ஒரு சிறிய தீப்பொறி தான். ஒரு வீடோ காடோ பற்றி எரிந்தால் அதன் ஆரம்பம் சிறு கங்குகள்தான். அதற்குத்தான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கையாக இந்த அசிங்கத்திற்கானவழிகளையெல்லாம் தடுத்து விட்டார்கள்.
 
உக்பா இப்னு ஆமிர் ரலியல்லாஹு அவர்கள் அறிவிப்பதாக இமாம் முஸ்லிம் இமாம் புகாரி பதிவு செய்கிறார்கள். 
 
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்,
 
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ فَقَالَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ يَا رَسُولَ اللَّهِ أَفَرَأَيْتَ الْحَمْوَ قَالَ الْحَمْوُ الْمَوْتُ
 
பெண்களிடம் செல்வதை நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன். பெண்களிடத்தில் நீங்கள் பழகாதீர்கள்... அப்போது அன்சாரித் தோழர்களில் ஒருவர் கேட்டார்; கணவனின் சொந்தங்கள் அதாவது கணவனின் மூத்த இளைய சகோதரர்கள் தன் மனைவியிடம் கணவன் இல்லாத நேரத்தில் அந்த வீட்டிற்கு செல்வதை பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று. அதற்கு இறைத்தூதரின் பதில் கணவனின் இந்த உறவுகள் ஒரு பெண்ணுக்கு மரணத்தைப் போன்று என்பதாக இருக்கிறது.
 
நூல்: புகாரி, எண்: 4831
 
ஆனால் இப்போது நடப்பது என்ன? நாம் இஸ்லாமிய ஒழுக்கங்களை விட்டு கலாச்சாரத்தை விட்டு தூரமாகி தவறான பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டோம். அதாவது வேற்று மத கலாச்சாரத்தை போன்று கணவனின் சகோதரன் பெண்ணிடம் சர்வசாதாரணமாக பழகுகிறார்கள். அதையும் நாம் சம்மதித்து வருகிறோம்.
 
இதைத்தான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பெண்ணுக்கு தன் கணவனின் சகோதரர்கள் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தாலும் மவுத்தை போன்றவர்கள் என எச்சரித்தார்கள். சோதனையில் மிகப்பெரிய சோதனையான மரணத்தை இச்செயலுக்கு ஒப்பிட்டார்கள்.
 
இறைத்தூதர் அவர்கள் சொல்வது எதுவும் அவர்களால் சொல்லப் படுவதில்லை. மாறாக அது அவர்களுக்கு வஹியின் மூலம் அறிவிக்கப்பட்டவையாகும். ஆக இதையும் இறைவாக்காகவே எடுத்துக் கொள்ளல் வேண்டும்.
 
 
எந்த இடத்தில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸுக்கு மாறுபாடு செய்யப்படுகிறதோ அங்கு கணவனின் சகோதரர்களால் குழப்பங்கள் ஏற்பட்டு பெண்களுக்கு அசாதாரண சூழ்நிலை நிகழ்கிறது. தவறான உறவுகள் தவறான பழக்கவழக்கங்கள் அதை வெளியில் சொல்ல முடியாமல் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் இப்படிப்பட்ட சோதனைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
 
மற்றொரு ஹதீஸில் வருகிறது... அன்ஜாப் இப்னுஸம்ரா அவர்கள் கூறுகிறார்கள்...உமர் ரலியல்லாஹு அவர்கள் மிம்பரில் நின்று நான் எப்படி இங்கு நின்று சொல்கிறேனோ அதேபோல் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மிம்பரில் நின்று சொன்னார்கள், 
 
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ خَطَبَ عُمَرُ النَّاسَ بِالْجَابِيَةِ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ فِي مِثْلِ مَقَامِي هَذَا فَقَالَ أَحْسِنُوا إِلَى أَصْحَابِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ يَجِيءُ قَوْمٌ يَحْلِفُ أَحَدُهُمْ عَلَى الْيَمِينِ قَبْلَ أَنْ يُسْتَحْلَفَ عَلَيْهَا وَيَشْهَدُ عَلَى الشَّهَادَةِ قَبْلَ أَنْ يُسْتَشْهَدَ فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَنَالَ بُحْبُوحَةَ الْجَنَّةِ فَلْيَلْزَمْ الْجَمَاعَةَ فَإِنَّ الشَّيْطَانَ مَعَ الْوَاحِدِ وَهُوَ مِنْ الِاثْنَيْنِ أَبْعَدُ وَلَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ فَإِنَّ ثَالِثَهُمَا الشَّيْطَانُ وَمَنْ كَانَ مِنْكُمْ تَسُرُّهُ حَسَنَتُهُ وَتَسُوءُهُ سَيِّئَتُهُ فَهُوَ مُؤْمِنٌ (مسند أحمد 172 -)
 
என் தோழர்களிடம் நீங்கள் நல்ல விதமாக அழகிய பண்புடன் நடந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். அதேபோல அவர்களுக்கு பின் வரக்கூடிய தாபீன்களிடமும் அவ்வாறே நடந்து கொள்ளுங்கள். அவர்களின் மாணவர்களிடமும் இதே பண்புடன் நடந்து கொள்ளுங்கள். 
 
பிறகு சொன்னார்கள்; பிறகு ஒரு காலம் வரும். அப்போது பொய் புரட்டு அதிகமாகிவிடும். மக்கள் பொய் பேசுவதை ஒரு குற்றமாகவே கருத மாட்டார்கள். அதேபோல், ஒருவர் வந்து சத்தியமிட்டு சொல்வார் ஆனால் அவரிடம் யாரும் அப்படி செய்ய சொல்லி இருக்க மாட்டார்கள்.
 
மேலும் சொன்னார்கள்: சொர்க்கத்தில் உங்களுக்கு உயரிய இடம் வேண்டுமா? அதற்கு நீங்கள் முஸ்லிம் ஜமாஅத் உடனே சேர்ந்து இருங்கள். தனித்தனி இயக்கங்களாக பிரிவுகளாக ஆகிவிடாதீர்கள். ரசூல் (ஸல்) அவர்களது சுன்னத்தை வாழ்க்கையில் ஏற்று நடந்த சஹாபாக்களின் ஜமாத்தை பின்பற்றிய கூட்டம் இருக்கிறதே அதை விட்டு நீங்கள் பிரிந்து விடாதீர்கள். ஷைத்தான் ஜமாஅத்துடன் இல்லாமல் தனித்து இருப்பவர்களிடம் இருக்கிறான். இருவராக இருக்கும்போது அவன் சற்று விலகி நிற்கிறான்.
 
ரசூல் (ஸல்) தொடர்கிறார்கள்; 
 
وَلَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ فَإِنَّ ثَالِثَهُمَا الشَّيْطَانُ
 
ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். அப்படி இருந்தால் அங்கு மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான்.
 
யாராக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய இறையச்சம் உடையவராக இருந்தாலும் சரி, எப்படிபட்டவர்களுக்கும் ரசூல் (ஸல்) அவர்களின் கட்டளை இதுதான். ஒரு ஆண் பெண்ணுடன் தனித்திருக்கையில் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான்.
 
அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு சமுரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத், எண்: 172
 
நபி யூசுஃப் (அலை) அவர்களையே கெடுப்பதற்கு ஷைத்தான் முயற்சித்தபோது இறையச்சத்தில் பலவீனமாக இருக்கும் சாதாரண மக்களாகிய நாம் இறைவனிடம் அதிகம் பயந்து கொள்ள வேண்டும்.
 
இப்னு உமர் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள், 
نهى رسول الله صلى الله عليه وسلم أن يمشي الرجل بين المرأتين
 
இரண்டு பெண்கள் இருக்கும்போது அவர்களுக்கு இடையில் ஆண்கள் செல்வதைக் கூட ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்கிறார்கள். 
 
நூல்: பைஹகீ, எண்: 5210
 
நபியவர்கள் பாவத்துடைய எல்லையை கூட எப்படி கவனித்துள்ளார்கள் என்று பாருங்கள்.
 
அதுமட்டுமல்ல, வழியிலே பாதையில் செல்லும்போது கூட ஆண்கள் எப்பக்கம் பெண்கள் எப்பக்கம் போக வேண்டும் என்பதைக்கூட இறைத்தூதர் சொல்லிக் கொடுக்கிறார்கள். பெண்களை குறித்து அவர்கள் சொல்லும் போது,
 
عَن الْأَشْعَرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا امْرَأَةٍ اسْتَعْطَرَتْ فَمَرَّتْ بِقَوْمٍ لِيَجِدُوا رِيحَهَا فَهِيَ زَانِيَةٌ (مسند أحمد- 18879)
 
ஒரு பெண் மற்றவர்களை கவரும் வகையில் நறுமணம் பூசிக் கொண்டு வெளியில் செல்வாளாயின் அவளை விபச்சாரி என்று குறிப்பிடுகிறார்கள். அஸ்தஃபிருல்லாஹ்... அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
 
அறிவிப்பாளர்: அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு,நூல்: அஹ்மத், எண்: 18879
 
حَمْزَةَ بْنِ أَبِي أُسَيْدٍ الْأَنْصَارِيِّ عَنْ أَبِيهِ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ خَارِجٌ مِنْ الْمَسْجِدِ فَاخْتَلَطَ الرِّجَالُ مَعَ النِّسَاءِ فِي الطَّرِيقِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلنِّسَاءِ اسْتَأْخِرْنَ فَإِنَّهُ لَيْسَ لَكُنَّ أَنْ تَحْقُقْنَ الطَّرِيقَ عَلَيْكُنَّ بِحَافَّاتِ الطَّرِيقِ فَكَانَتْ الْمَرْأَةُ تَلْتَصِقُ بِالْجِدَارِ حَتَّى إِنَّ ثَوْبَهَا لَيَتَعَلَّقُ بِالْجِدَارِ مِنْ لُصُوقِهَا بِهِ (سنن أبي داود (4588 -
 
ஒருசமயம் மஸ்ஜிதில் தொழுகை முடிந்து மக்கள் வெளியேறியபோது சலசலப்பு ஏற்பட்டது; ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அந்த சலசலப்பை பார்க்கிறார்கள். அங்கு அவர்கள் கண்டது சஹாபி பெண்மணிகளை தான். உடனே கூறுகிறார்கள்.. பெண்களே தாமதியுங்கள்.. ஆண்களின் கூட்டத்தில் நீங்கள் புகுந்து விட வேண்டாம் மாறாக பாதையின் ஓரத்திலே செல்லுங்கள் என்பதாக.
 
நபியவர்களின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு ஸஹாபியப் பெண்மணிகள் அதன்பிறகு பாதையின் நடுவிலே செல்லவே இல்லை. எந்த அளவிற்கு என்றால் வீடுகளின் சுவர்களை ஓரங்களை தேய்த்துக் கொண்டு செல்லும் அளவிற்கு; ஆயிஷா ரலியல்லாஹு சொல்கிறார்கள் அப்படி அவர்கள் வீடுகளின் ஓரமாக செல்லும் போது அவர்களது ஆடை வீட்டின் கூரை கம்புகளில் சிக்கிக்கொள்ளுமாம். இதுதான் ஸஹாபி பெண்களின் நிலைப்பாடு.
 
அறிவிப்பாளர்: அபூ உசைத் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: அபூ தாவூத், எண்: 4588
 
அல்லாஹ் நமது பாவங்களை மன்னிப்பானாக! எல்லா விதமான தீங்குகளில் இருந்தும் ஒழுங்கீனங்களில் இருந்தும் அல்லாஹ்விற்கும் இறைத்தூதருக்கும் பிடிக்காத காரியங்களை விட்டும் நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக! தூரபடுத்துவானாக!
 
ஆமீன்
 
 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/