நயவஞ்சகம் (அமர்வு 2/2) | Tamil Bayan - 40
நயவஞ்சகம் (அமர்வு 2)
ஜுமுஆ குத்பா தலைப்பு : நயவஞ்சகம் (அமர்வு 2)
வரிசை : 40
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
بسم الله الرّحمن الرّحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாக, அவனுடைய தூதர் ﷺஅவர்கள் மீது ஸலவாத்தையும், ஸலாமையும் உறித்தாக்கியவனாக,எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு உபதேசித்தவனாக இந்த ஜும்ஆவுடைய உரையை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ்வை பயப்படுவது நம்முடைய இறைநம்பிக்கையில்பிரகாசத்தை ஏற்படுத்துகிறது. நம்முடைய அமல்களில் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. நம்முடைய நம்பிக்கையில் உறுதியை ஏற்படுத்துகிறது.
அல்லாஹ்வையும், அல்லாஹ்வுடைய ரஸூலையும் உண்மையாக நேசிக்கும் நன்மக்களாக இந்த இறையச்சம் ஆக்கி அருள்கிறது.
சென்ற ஜும்ஆவில், நிஃபாக் -நயவஞ்சகத்தன்மையின் சில தன்மைகளைப் பற்றி, அல்லாஹு தஆலா அவனுடைய புத்தகம் அல்குர்ஆனில் கூறியிருக்கும் சில விஷயங்களைப் பார்த்தோம்.
அதை தொடர்ந்து இன்னும் சில விஷயங்ளை குர்ஆனுடைய வெளிச்சத்திலும், ரஸூலுல்லாஹ் ﷺஅவர்கள் கூறியிருக்கும் ஸஹீஹான ஹதீஸ் உடைய வெளிச்சத்திலும் நாம் பார்க்க இருக்கின்றோம்.
அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா இந்த நல்லுரையை எனக்கும் உங்களுக்கும் பயனுள்ளதாக ஆக்கி அருள்வானாக!
நயவஞ்சகத் தன்மையுடையவர்களை எந்தளவு கடுமையாக அவனுடைய புத்தகத்தில் அல்லாஹ் எச்சரிக்கை செய்திருக்கிறான் என்ற விஷயங்கள் உங்களுக்கு தெரியும்.
அல் லாஹு தஆலா முனாஃபிக்குகளைப் பற்றி சொல்கிறான் :
إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيرًا
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர். (அல்குர்ஆன் 4:145)
ஆகவே தான் இதைப்பற்றி நம்முடைய மார்க்கத்தில் அதிகமாக விவரிக்கப்பட்டிருக்கிறது, இந்த தன்மையை விட்டு இறைநம்பிக்கையாளர்கள் தங்களுடைய ஈமானை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று.
ரஸூலுல்லாஹ் ﷺஅவர்கள் நிஃபாக் உடைய தன்மையைப் பற்றி நமக்கு அடையாளம் காட்டும்பொழுது ஒரு அழகான விஷயத்தை குறிப்பிட்டார்கள்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா,எப்படி அவனுடைய தூதர் முஹம்மது ﷺஅவர்களை இந்த கடைசி மார்க்கத்தை மக்களுக்கு மத்தியில் பரப்பவுதற்கு நிலைநிறுத்துவதற்கு தேர்ந்தெடுத்தானோ அது போன்று,அந்த நபி ﷺஅவர்களுக்குரிய தோழர்களையும் அவனுடைய அருளைக் கொண்டு அவன் தேர்ந்தெடுத்திருக்கின்றான்.
சூரா நம்லில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
وَسَلَامٌ عَلَى عِبَادِهِ الَّذِينَ اصْطَفَى
அல்லாஹ் தேர்ந்தெடுத்த நல்லடியார்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். (அல்குர்ஆன் 27 : 51)
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ் தேர்ந்தெடுத்த நல்லடியார்கள் என்று இந்த இடத்தில் அல்லாஹ் தஆலா தன்னுடைய நபிக்கு அவன் தேர்ந்தெடுத்த தோழர்களைப் பற்றி குறிப்பிடுகிறான்.
ஆகவே தான்,சூரா தவ்பாவில் கூறுகிறான் :
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை (எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 9:100)
இந்த இடத்தில் அல்லாஹு சுப்ஹானஹு தஆலா மிகத் தெளிவான ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறான். கடைசி நாள் வரை வரக்கூடிய இஸ்லாமிய மக்கள் இந்த இஸ்லாமிய மார்க்கத்தை முஹாஜிர்களாகிய, அன்ஸாரிகளாகிய ஸஹாபாக்கள் எப்படி பின்பற்றினார்களோ, அவர்கள் எப்படி அல்லாஹ்வுடைய கிதாபையும்,நபியுடைய சுன்னாவையும் புரிந்து கொண்டார்களோ, அந்த முறையில் பின்பற்றினால் தான் இவர்களுக்கு அல்லாஹ்வுடைய பொருத்தம் கிடைக்கும்.
அவரவர் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப கிதாபையும் சுன்னத்தையும் எடுத்துக்கொண்டு வாதிட்டால் அங்கே அவர்களுக்கு அல்லாஹ்வுடைய பொருத்தம் கிடைக்காது.
ஆகவேதான்,அல்லாஹ்வை நேசிப்பதையும், அல்லாஹ்வுடைய ரஸூலை நேசிப்பதையும், அந்த ரஸூலுடைய தோழர்களை நேசிப்பதையும் இந்த மார்க்கத்துடைய அஸ்திவாரமாக, அடிப்படையாக ஆக்கப்பட்டது.
காரணம், அல்லாஹ்வை நேசிக்காமல் ஈமான் இருக்க முடியாது, அல்லாஹ்வுடைய தூதர் ஹபீப் முஹம்மது ﷺஅவர்களை நேசிக்காமல் ஈமான் இருக்க முடியாது.
அதுபோன்றுதான், எந்த தோழர்களின் மூலமாக இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த இஸ்லாமை பலப்படுத்தினானோ, எதிரிகள் எதிர்த்த போது யார் இந்த இஸ்லாத்திற்காக தங்களுடைய உயிரை கொடுத்தார்களோ, எந்த மக்கள் இந்த இஸ்லாதிற்காக தங்களுடைய செல்வங்களையெல்லாம் வாரி செலவழித்தார்களோ அந்த மக்களை நேசிக்காதவரை, அந்த மக்கள் மேல் உண்மையான அன்பு கொள்ளாதவரை அவர்களுடைய உள்ளத்தில் ஈமான் வரமுடியாது.
ஆகவே, இதற்கு எதிராக, யார் அந்த ஸஹாபாக்களின் சமுதாயத்தின் மீது வெறுப்பு கொள்வாரோ, அவர்களை எதிர்ப்பாரோ, அவர்களை ஏசுவாரோ, அவர்களை சபிப்பாரோ, அவர்கள் மீது பகைமை கொள்வாரோஅவர்களையெல்லாம் இந்த சமுதாயத்தில் அல்லாஹ்வின் புத்தகத்திலும், நபி ﷺஅவர்களுடைய சுன்னாவிலும் முனாஃபிக்–நயவஞ்சகர்கள், இவையெல்லாம் நயவஞ்சகத் தன்மைகள் என்பதாக அடையாளம் காட்டப்படுகிறது.
ரஸூலுல்லாஹ் ﷺஅவர்கள் கூறுகிறார்கள் :
آيَةُ الْإِيمَانِ حُبُّ الْأَنْصَارِ وَآيَةُ النِّفَاقِ بُغْضُ الْأَنْصَارِ
ஈமானுடைய அடையாளம், அன்சாரிகளை நேசித்தல்,அன்சாரிகளின் மீது அன்பு வைத்தல். நிஃபாக் -நயவஞ்சகத்தன்மையின் அடையாளம், அன்சாரிகளின் மீது கோபம் கொள்ளுதல், அவர்களை வெறுத்தல்.
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 16, 3500.
இமாம் தப்ரானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள் :
"مَنْ أَحَبَّ الأَنْصَارَ فَبِحُبِّي أَحَبَّهُمْ، مَنْ أَبْغَضَ الأَنْصَارَ فَبِبُغْضِي أَبْغَضَهُمْ"
யார் அன்சாரிகளை நேசிப்பார்களோ அவர்கள் என்னை நேசிக்கிறார்கள். யார் அன்ஸாரிகளை வெறுப்பாரோ, அன்சாரிகளின் மீது பகைமை கொள்ளுவாரோஅவர் என்னை பகைமை கொள்கிறார், என் மீது குரோதம் கொள்கிறார்.
அறிவிப்பாளர் : முஆவியா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி,எண் : 16145.
இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ்அவர்கள் இன்னும் ஒரு ஹதீஸை அறிவிக்கிறார்கள் :
لَا يُبْغِضُ الْأَنْصَارَ رَجُلٌ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ
யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்கிறாரோ, அவர் அன்ஸாரிகளிடத்தில் பகைமை காட்டமாட்டார்.
அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையும் மறுமையின் மீதுள்ள நம்பிக்கையும் அவருடைய உள்ளத்தில் உண்மை என்று இருக்குமென்றால் அவர் அன்ஸாரிகளிடத்தில் பகைவராக, குரோதம் கொள்பவராக நடந்து கொள்ளமாட்டார். அவர்களை நேசிப்பார்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 111, 112.
ரஸூலுல்லாஹி ﷺஅவர்கள் கூறுகிறார்கள்:
الْأَنْصَارُ لَا يُحِبُّهُمْ إِلَّا مُؤْمِنٌ وَلَا يُبْغِضُهُمْ إِلَّا مُنَافِقٌ فَمَنْ أَحَبَّهُمْ أَحَبَّهُ اللَّهُ وَمَنْ أَبْغَضَهُمْ أَبْغَضَهُ اللَّهُ
அன்ஸாரிகளை அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட உண்மையான விசுவாசிதான் நேசிப்பான். அன்ஸாரிகளை ஒருவர் நேசிக்கிறார் என்றால் அவர் முஃமினாக தான் இருப்பார்.
யார் அன்ஸாரிகளை நேசிப்பாரோ, அன்ஸாரிகளின் மீது அன்பு வைப்பாரோஅல்லாஹ் அவர்களை நேசிப்பானாக! யார் அன்ஸாரிகளை வெறுப்பாரோ அல்லாஹ் அவர்களை வெறுப்பானாக!
அறிவிப்பாளர் : பரா இப்னு ஆசிப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3499.
யார் யாரை நேசிக்கிறார்களோஅவர்களைப் போன்று அவர்களும் அமல்கள் செய்வார்கள். அன்ஸாரிகள்,இந்த மார்க்கத்திற்காக எதையும் அவர்கள் கஞ்சத்தனம் காட்டவில்லை.
அல்லாஹு தஆலா சூரா ஹஷர் உடைய 9-வது வசனத்தில் அவர்களை புகழ்கிறான் :
وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன் 59:9)
வசனத்தின் கருத்து : இந்த வசனம் அன்ஸாரிகளுக்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய நற்சான்று. இந்த அன்ஸாரிகள் மதினாவில் குடியேறினார்கள். மதினாவை, வீடு குடியேறுவதற்கு தகுந்த இடமாக அல்லாஹ் கூறுகின்றான்.
தான் விரும்பக் கூடிய மதினாவை தன்னுடைய ஊராக ஆக்கிக் கொண்ட மக்கள் என்பதாக அல்லாஹ் கூறுகிறான்.
மதினாவில் அவர்கள் வசிக்கிறார்கள் என்பதையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுடைய புகழுக்கு முதல் காரணமாக கூறுகின்றான்.
ஏனெனில், இந்த மதினாவை தான் முஹம்மது ﷺஅவர்களுடைய ஹிஜ்ராவிற்கு தகுந்த இடமாக அல்லாஹ் தேர்ந்தெடுக்கிறான்.
ரஸூலுல்லாஹ் ﷺஅவர்கள் கூறுகிறார்கள் :
لَوْلَا الْهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنْ الْأَنْصَارِ وَلَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا وَسَلَكَتْ الْأَنْصَارُ وَادِيًا أَوْ شِعْبًا لَسَلَكْتُ وَادِيَ الْأَنْصَارِ أَوْ شِعْبَ الْأَنْصَارِ
ஹிஜ்ரா என்கின்ற ஒரு சிறப்பு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அன்ஸாரிகளில் ஒருவனாகவே நான் பிறந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு தெருவில் செல்கிறார்கள், அன்ஸாரிகள் ஒரு தெருவில் செல்கிறார்கள் என்றால் நான் அன்ஸாரிகளுடைய தெருவில் செல்வேன். அன்ஸாரிகள் என்னுடைய உடலோடு ஒட்டிருக்கக் கூடிய என்னுடைய உள் ஆடைகள் என்பதாக.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3985, 6703.
அல்லாஹ்விடத்தில் துஆ செய்கிறார்கள் :
اللَّهُمَّ اغْفِرْ لِلْأَنْصَارِ وَلِأَبْنَاءِ الْأَنْصَارِ وَأَبْنَاءِ أَبْنَاءِ الْأَنْصَارِ
யா அல்லாஹ்! அன்ஸாரிகளை மன்னித்து விடு. அன்ஸாரிகளுடைய பிள்ளைகளை மன்னித்து விடு. அன்ஸாரிகளுடைய பிள்ளைகளின் பிள்ளைகளை நீ மன்னித்து விடு.
அறிவிப்பாளர் : ஜைத் இப்னு அர்கம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 4561.
எந்த அளவிற்கு ரஸூலுல்லாஹ் ﷺஅவர்களுடைய அன்பு அந்த அன்ஸாரிகளின் மீது இருந்திருக்கும்!
காரணம், எப்போது மக்காவில் குரைஷிகளும் பெருமை கொண்ட அந்த எதிரிகளும் இஸ்லாத்தை எதிர்த்தார்களோ, நபியை கொலை செய்ய வேண்டுமென்று துணிந்தார்களோ, அப்பொழுது அல்லாஹ்வின் தூதரை நேசித்தது யார்? அல்லாஹ்வின் தூதருக்கு அடைக்களம் கொடுத்தது யார்? இந்த இஸ்லாத்திற்கு கேந்தரமாக அமைந்தது யார்?
அன்ஸாரிகள் ரஸூலின் மீதுள்ள அன்பின் காரணமாக என்ன வார்த்தைகள் பேசினார்கள் தெரியுமா? இனிமேல் மக்காவில் முஹம்மது ﷺஅவர்களை நாம் விட்டு வைக்க முடியாது. நாம் மதினாவில் தலைவர்களாக நமது குடும்பத்தார்களுடனே நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அங்கே நமக்காக அனுப்பப்பட்ட முஹம்மது ﷺஅவர்கள் குரைஷிகளால் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், விரட்டப்படுகிறார்கள், காயப்படுத்தப்படுகிறார்கள். இந்த நிலைமையில் அவர்களை மக்காவில் விட்டு விட்டு நாம் எப்படி மதினாவில் நிம்மதியாக இருக்க முடியும்.!
அவர்களை இந்த பயணத்தில் நிச்சயமாக நம்முடைய வீட்டிற்கு நாம் அழைத்தே வந்தாக வேண்டும் என்று தங்களுக்கு மத்தியில் அழுதவர்களாக அந்த ஈமானுடைய உணர்ச்சியை கொண்டு ஈமானிய வார்த்தைகளை பேசியவர்களாக அவர்கள் ஹஜ்ஜிற்கு வருகிறார்கள்.
இந்த உடன்படிக்கையை அன்ஸாரிகள் ரஸூலுல்லாஹ் ﷺஅவர்களுக்கு கொடுக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! எங்களுடைய உயிரை எப்படி பாதுகாப்போமோ, எங்களுடைய குடும்பத்தை எப்படி பாதுகாப்போமோ, எங்களுடைய மனைவிகளை எப்படி பாதுகாப்போமோஅது போன்று உங்களை நாங்கள் பாதுகாப்போம்.
இதற்காக என்ன கிடைக்குமென்று? அன்ஸாரிகள் ரஸூலுல்லாஹ் ﷺஅவர்களிடத்தில் கேட்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுடைய இரத்தம் உங்களுடைய இரத்தம், எங்களுடைய பெண்கள் உங்களுடைய பெண்கள், எங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதாக.
அல்லாஹ்வின் தூதர் ﷺகூறினார்கள் :
இந்த வாக்கை நீங்கள் நிறைவேற்றினால் சொர்க்கம் உங்களுக்கு கிடைக்கும்.
அன்ஸாரிகள் கூறினார்கள் : அல்லாஹ்வின் தூதரே! உங்களுடைய கரத்தை நீட்டுங்கள். இதற்கு மேல் நாங்கள் எதையும் எதிர்பார்க்க மாட்டோம் என்று பைஅத் செய்து கொடுத்தார்கள்.
இந்த அன்ஸாரிகளை நேசிப்பதைதான் ரஸூலுல்லாஹ் ﷺஅவர்கள் கூறுகிறார்கள் :
யார் இப்படிபட்ட அன்ஸாரிகளை நேசிக்கிறார்களோ, அல்லாஹ்வுடைய அன்பு அவர் மீது உண்டாகட்டும். யார் அவர்களை பகைத்துக் கொள்வார்களோ அல்லாஹ்வும் அவர்களை பகைத்துக் கொள்வானாக! அல்லாஹ்வும் அவர்களை வெறுப்பானாக !
முழு அன்ஸாரிகளுடைய அந்த ஜமாஅத்தை நேசிப்பது ஈமானுடைய அடையாளம் என்பதாக இத்தனை ஸஹீஹான ஹதீஸ்கள் நமக்கு அறிவிக்கிறது.
ரஸூலுல்லாஹ் ﷺஅவர்கள் ஒவ்வொரு குறிப்பிட்ட நபித் தோழரைப் பற்றியும் நமக்கு சான்று கூறியிருக்கிறார்கள், அவர்களை நேசிப்பது ஈமானுடைய கடமை என்பதாக.
பிறகு முழு ஸஹாபாக்களுடைய ஜமாஅத்தையும் அல்லாஹ்வுடைய தூதர் ﷺநமக்கு கூறுகிறார்கள், அவர்களை நேசிப்பது ஈமானுடைய அடையாளம் என்பதாக.
இதே சூரா ஹஷர் உடைய 10-வது வசனத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அடுத்து வரக்கூடிய நம்பிக்கையாளருடைய நிலைபாடு அந்த ஸஹாபாக்களுடைய விஷயத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை நமக்கு சுட்டிக் காட்டுகிறான்.
وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ
அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். (அல்குர்ஆன் 59:10)
இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ்அவர்கள் கூறுகிறார்கள் : இந்த இடத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முஃமின்களை மூன்றாக பிரிக்கிறான். ஒரு ஜமாஅத், ஹிஜ்ரா செய்து வந்தவர்கள். இரண்டாவது ஜமாஅத், அன்ஸாரிகள் -ஹிஜ்ரா செய்து வந்தவர்களுக்கு உதவியவர்கள். மூன்றாவது ஜமாஅத் இதற்கு பின்பு வரக்கூடியவர்கள்.
இதற்கு மீறி ஒரு கூட்டம் என்பது கிடையாது.
அந்த ஸஹாபாக்களுடைய தவறுகளை அவர்களிடத்தில் நடந்துகொண்ட சில விஷயங்களை எல்லாம் விமர்சனம் செய்யக்கூடிய ஒரு சமூகத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய இந்த முஸ்லிம்களுடைய கூட்டத்தில் அவன் சேர்க்கவில்லை.
ஆகவேதான், ரஸூலுல்லாஹ் ﷺஅவர்கள் கூறினார்கள் : ஸஹாபாக்களை நேசிப்பது ஈமானுடைய அடையாளம். ஸஹாபாக்களை ஏசுவது, விமர்சனம் செய்வது, அவர்களுடைய குற்றங்குறைகளை பிரஸ்தாதிப்பது நிஃபாக் -நயவஞ்சகத்தன்மையின் அடையாளம் என்று.
எத்தனை சிறப்புகளை அல்லாஹ்வுடைய தூதர் ﷺஅவர்கள் ஸஹாபாக்களை பற்றி கூறினார்கள்.
ஆகவேதான், சத்தியத்தை பின்பற்றக் கூடியவர்கள், உண்மையான முறையில் குர்ஆனை நேசிப்பவர்கள், நபிமொழியை நேசிப்பவர்கள், நபிமொழிகளை எப்போது ஒன்று திரட்டினார்களோ, ஹதீஸ்களை எப்போது ஒன்று திரட்டினார்களோஅவர்கள் தங்ளுடைய புத்தகத்தில் கடைசியாக சில பாடங்களை அமைப்பார்கள்.
அதில் முதலாவதாக ,நபி ﷺஅவர்களுடைய சிறப்புகள், அவர்களை நேசித்தல் என்று இருக்கும். அதற்கு அடுத்ததாக முஹாஜிர்களை நேசித்தல் பிறகு அன்ஸாரிகளை நேசித்தல் பிறகு குறிப்பிட்டு வந்திருக்ககூடிய ஒவ்வொறு ஸஹாபாக்களை பற்றி வரக்கூடிய சிறப்புகளையெல்லாம் ஒன்று சேர்த்து தங்களுடைய ஹதீஸ்களை முடிப்பது இந்த மார்க்கத்திற்கு உழைத்த நல்ல மார்க்க அறிஞருடைய பழக்கமாக இருந்தது.
எந்த ஒரு மார்க்க அறிஞர்களும் ஸஹாபாக்களுடைய குறைகள் என்பதாக ஸஹாபாக்களுடைய தவறுகள் என்பதாக பட்டியல் போட்டு அவர்களை விமர்சனம் செய்வது இந்த இஸ்லாமிய மார்க்கத்தை பாதுகாத்த நம்முடைய சான்றோர்களான சிறப்பிற்குரிய மார்க்க அறிஞருடைய பழக்கமாக இருக்கவில்லை.
காரணம், ஒருவரை நேசிக்கிறோம் என்றால், அவர் மீது நமக்கு அன்பு இருக்கிறது என்றால் அவர்களுடைய நல்ல விஷயத்தை பற்றி பேசுவோம்.
அவர்களுடைய உயர்வைபற்றி பேசுவோம். அவர்கள் இந்த மார்க்கத்திற்காக செய்த தியாகங்களை பற்றி பேசுவோம்.
யாரின் மீது குரோதம் இருக்குமோ, யாரின் மீது பகைமை இருக்குமோ, அவருடைய குறைகளைப் பற்றி, அவருடைய தவறுகளை பற்றி கோபமாக விமர்சிப்பது மக்களுடைய பழக்கமாக இருப்பதை நாம் பார்க்கிறோம்.
ஆகவேதான், ஸஹாபாக்களை நேசிக்க வேண்டும். ஸஹாபாக்களின் மீது நாம் அன்பு வைக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக தான் இந்த மார்க்க அறிஞர்கள் ஸஹாபாக்கள் பற்றி வந்திருக்க கூடிய குர்ஆன் வசனங்கள், நபி ﷺஅவர்களுடைய ஹதீஸ்களை எல்லாம் நமக்கு தொகுத்திருக்கிறார்கள்.
நிஃபாக் உடைய அடுத்த அடையாங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடுவதை பாருங்கள்.
وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ (75) فَلَمَّا آتَاهُمْ مِنْ فَضْلِهِ بَخِلُوا بِهِ وَتَوَلَّوْا وَهُمْ مُعْرِضُونَ (76) فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَى يَوْمِ يَلْقَوْنَهُ بِمَا أَخْلَفُوا اللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا يَكْذِبُونَ
அவர்களில் சிலர், “அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்ததால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்” என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள். (அவ்வாறே) அவன் அவர்களுக்குத் தன் அருட்கொடையிலிருந்து வழங்கியபோது, அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து, அவர்கள் புறக்கணித்தவர்களாக பின் வாங்கிவிட்டனர். எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்குர்ஆன் 9:75-77)
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் இந்த கெட்ட தன்மையிலிருந்து நம்மை பாதுகாப்பானாக!
வசனத்தின் கருத்து : நிஃபாக் உடைய மிக பயங்கரமான அடையாளத்தைஅல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான்.
மக்களில் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் அல்லாஹ்விடத்தில் ஒப்பந்தம் செய்கிறார்கள். யா அல்லாஹ்! நீ எனக்கு செல்வத்தை கொடுத்தால், நீ எனக்கு வசதி வாய்ப்பை ஏற்படுத்தினால், நான் ஏழை எளியோர்க்கு வாரி வாரி வழங்குவேன். உன்னுடைய மார்க்கத்திற்காக நான் செலவு செய்வேன். நான் நல்லோர்களில் ஆகிவிடுவேன் என்பதாக அல்லாஹ்விடம் ஒப்பந்தம் செய்கிறார்.
அல்லாஹ், அவர்களுக்கு செல்வத்தை கொடுத்த போது, அவர்கள் கஞ்சத்தனம் காட்டி விடுகிறார்கள். செலவளிப்பது கிடையாது, அல்லாஹ்வுடைய பாதையில் கொடுப்பது கிடையாது, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கடைமையாக்கிய ஹக்கை நிறைவேற்றுவது கிடையாது, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஆர்வ மூட்டிய நல்ல வழிகளிலும் செலவளிப்பது கிடையாது, கஞ்சத்தனம் அவர்களுடைய உள்ளத்தில் குடிகொண்டு விடுகிறது.
இந்த இடத்தில் ஒன்றை நினைவு வைத்துக் கொள்ளுங்கள். சூரா ஹஷ்ருடைய 9-வது வசனத்தை பார்த்தோம். அதில் அன்ஸாரிகளுடைய உள்ளத்தில் ஈமான் இருக்கிறது என்ற அடையாளமாக அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் வாரி வாரி செலவு செய்ததையும், தாங்கள் சிரமத்தில் இருந்தாளும் தங்களுடைய தோழர்களுக்கு முஹாஜிர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக பசி, பட்டினியாக இருந்ததை அல்லாஹ் கூறி நிச்சயமாக இவர் உள்ளத்தில் ஈமான் இருக்கிறது. இவர்கள் வெற்றியாளர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
ஆகவே, செல்வம் கிடைக்கும் பொழுது, அல்லாஹ் வசதியை கொடுக்கும்பொழுது, வசதியை எதிர்பார்த்து விட்டு அல்லாஹ்வுடைய பாதைகளில் செலவு செய்யாதவர்கள், கஞ்சத்தனம் காட்டக்கூடியவர்கள்.
காசு கிடைத்தவுடன் அவர்கள் மார்க்கத்தை விட்டு புறக்கணித்து செல்கிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!
ஏழைகளாக இருக்கும்பொழுது மார்க்க சட்டங்களை பேணியவர்கள், பள்ளிகளில் தொழுகையை பேணியவர்கள், முஸ்லிம்களில் சமூகத்துடன் கூடி வாழ்ந்தவர்கள், நல்ல காரியங்களில் பங்கு கொண்டவர்கள், இவர்களிடம் செல்வம் அதிகரிக்க அதிகரிக்க தங்களை பள்ளியிலிருந்து தூரமாக்குகிறார்கள்.
முஸ்லிம்களின் சமூகத்திலிருந்து தங்களை தூரமாக்குகிறார்கள். அவர்களுடைய உள்ளத்தில் பெருமை குடியேறுகிறது, மமதை குறியேறுகிறது.
அவர்கள் நினைக்கிறார்கள்; இந்த ஏழைகளுடன் நாம் தங்குவது நமக்கு தகுதி இல்லை, நமக்கு வசதியானது கிடையாது. இவர்கள் நம்முடைய செல்வத்தில் பங்கு கேட்பார்கள். யாசகம் கேட்டு வருவார்கள், உதவி கேட்டு வருவார்கள், பள்ளிவாயிலுடைய மக்கள் பள்ளியினுடைய தேவைகளுக்காக நம்மிடம் கேட்டுவருவார்கள் என்பதாக தங்களுடைய சமூக அமைப்பை மாற்றிக் கொண்டு காஃபிர்களும், பெரும்பாவிகள் வசிக்க கூடிய அந்த செல்வந்தர்களுடைய இடத்தில் அவர்கள் சேர்ந்து விடுவார்கள்.
இப்படிபட்டவர்களுக்கு அல்லாஹ் கொடுக்க கூடிய வெகுமதி அவர்களுடைய உள்ளங்களில் நயவஞ்சகத்தன்மையை ஏற்படுத்தி விடுகிறான். அவர்களுடைய உள்ளங்களில் நாளை மறுமையில் அல்லாஹ்வை அவர்கள் சந்திக்கும் வரை இந்த நயவஞ்சகம் அவர்களை ஒட்டிக் கொண்டே இருக்கும்.
அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா இதற்கு காரணம் கூறுகின்றான்: அல்லாஹ்விற்கு செய்த வாக்குறுதிக்கு மாற்றமாக அவர்கள் நடந்தார்கள். அல்லாஹ்விற்கு செய்துள்ள வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றவில்லை.
அவர்கள் பொய் பேசினார்கள். அல்லாஹ்வுடைய பாதையில் செலவழிக்க சொல்லும் பொழுது எங்களிடத்தில் இல்லை, அல்லது எங்களிடத்தில் வருமானம் போதவில்லை, என்பதாக பொய் கூறினார்கள். அவர்களுடைய செல்வங்களை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாமல் மறைத்து வைத்துக் கொண்டார்கள்.
இந்த இரண்டு பெரும் பாவங்களின் காரணமாக நிஃபாக்கை அவர்களுடைய உள்ளத்தில் நான் ஏற்படுத்தி விட்டேன் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 9:75-77)
இந்த வசனம் நமக்கு கொடுக்க கூடிய பாடம், படிப்பினை, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இடத்தில் செல்வத்தை எதிர்பார்த்திருந்து அந்த செல்வம் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றால் அந்த செல்வத்தில் நம்முடைய தேவை போக மிஞ்சிய செல்வத்தை அல்லாஹ்வுடைய பாதையில், நல்ல வழியில் செலவு செய்ய வேண்டும். அதில் கருமித்தனம் காட்டக்கூடாது.
அல்லாஹ்விடமிருந்து எதிர்பார்த்திருக்கும் பொழுது நம்முடைய உள்ளத்திலுள்ள நல்லெண்ணங்களை பாழ்ப்படுத்திக் கொள்ளக் கூடாது, வீணடித்துக் கொள்ளக்கூடாது.
காசு பெருகும் பொழுது அதனுடைய அதிகத்தை பார்த்து செலவழிக்கும்பொழுது எங்கே குறைவு ஏற்பட்டு விடுமோ என்று யார் கஞ்சத்தனம் காட்டுகிறாரோ, அல்லது அந்த செல்வத்தை மறைத்து தேவையுள்ளவர்கள் வரும்பொழுது பொய் பேசி என்னிடத்தில் வசதி இல்லை, இப்பொழுது கொடுக்க முடியாது நானே கஷ்டத்தில் இருக்கிறேன் என்று அவர்களை யார் அனுப்பிவிடுகிறார்களோ, இது அவர்களுடைய உள்ளத்தில் நிஃபாக்- (நயவஞ்சகத்தன்மையை ஏற்படுத்திவிடும்.
நிஃபாக் உடைய அடுத்த பண்பு. ரஸூலுல்லாஹி ﷺஅவர்கள் ஒரு ஹதீஸில் முனாஃபிக்குகளுடைய நான்கு பண்புகளை ஒரு சேர கூறுகிறார்கள்.
أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا إِذَا اؤْتُمِنَ خَانَ وَإِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا عَاهَدَ غَدَرَ وَإِذَا خَاصَمَ فَجَرَ
யாரிடத்தில் இந்த நான்கிலிருந்து ஒரு குணம் இருக்குமோ, அவரிடத்தில் நிஃபாக்கிலிருந்து ஒரு குணம் இருக்கும், அதை அவர் விடும் வரை.
அதில் முதலாவதாக, அவரை நம்பி ஏதாவது ஒன்று ஒப்படைக்கப்பட்டால், அது பொருளாக இருக்கட்டும் அல்லது ஒரு பொறுப்பாக இருக்கட்டும். நம்பி அவரிடத்தில் ஒன்று ஒப்படைக்கப்பட்டால், அந்த நம்பிக்கைக்கு மோசடி செய்வான். அவன் பேசினால் பொய் பேசுவான். ஒப்பந்தம் செய்து கொண்டால் அந்த ஒப்பந்தத்தை மீறுவான். ஏதாவது தர்கங்கள் ஏற்பட்டு விட்டால் அதில் எல்லை மீறுவான். அதில் குற்றம் குறைகளை செய்வார், அதில் பாவம் செய்வார், உண்மையின்றி வாதிடுவார்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 33, 2279.
இந்த நான்கு விஷயங்களை நீங்கள் ஆராய்ச்சி செய்து பாருங்கள். மார்க்கம் என்பது ஒன்று சொல்லில் இருக்கும், அல்லது செயலில் இருக்கும், அல்லது எண்ணத்தில் இருக்கும். இந்த நான்கு விஷயங்களை நீங்கள் எடுத்து பார்த்தால் எல்லா விஷயங்களிலும் அவர் மார்க்கத்தில் பலவீனமானவராக, குறைவுள்ளவராக இருப்பதாக நாம் இந்த ஹதீஸிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
அவருடைய பேச்சு பொய்யாக இருக்கிறது. எப்போது பேசினாலும் வேண்டுமென்றே உண்மைக்கு மாற்றமாக பேசுவது. வாயை திறந்தால் உண்மைக்கு மாற்றமாகவே பேசுவது. இவர்கள் புறம் பேசுவதாயினும் சரி, அல்லது இவர்கள் இட்டுக்கட்டுவதாயினும் சரி, பிறர் மீது பழி போடுவதாயினும் சரி, இப்படி எந்த ஒன்றாயினும் சரி,பேச ஆரம்பித்தால் பொய் பேசுவதே வழக்கம்.
இவரிடத்தில் நம்பிக்கை கொண்டு ஏதாவது ஒன்று கொடுக்கப்பட்டால், ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டால், அல்லது ஒரு பொருள் கொடுக்கப்பட்டால், அந்த பொறுப்பில் மோசடி செய்வான்.
இவர்கள் யாருக்காவது வாக்கு கொடுத்தால் அந்த வாக்கிற்கு மாறு செய்வார்கள். இவர்களுக்கு ஏதாவதொரு பிரச்சனை ஏற்பட்டால் அதில் எல்லை மீறி நடந்து கொள்வார்கள்.
ரஸூலுல்லாஹ் ﷺஅவர்களுடைய ஹதீஸில் இந்த நான்கு பண்புகளுக்கு நமக்கு விரிவான பல விளக்கங்களும் கிடைக்கின்றன.
சில சமயங்களில் நீங்கள் ஒரு வாக்கு கொடுக்கிறீர்கள். உண்மையிலேயே அந்த வாக்கை நிறைவேற்றுகின்ற எண்ணத்தில் நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். ஆனால், சில இடையூறின் காரணமாக அந்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் ஆகிவிட்டால், அந்த தன்மை இதில் கட்டுப்படாது.
யார் ஒருவர் வாக்கு கொடுக்கும்பொழுதே பொய்யான வாக்கு கொடுக்கிறாரோ, அதை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் இல்லையோ அவரை தான் ரஸூலுல்லாஹி ﷺஅவர்கள் இந்த ஹதீஸில் எச்சரிக்கை செய்கிறார்கள்.
ஏனென்றால், இமாம் தப்ரானி ரஹிமஹுல்லாஹ்அவர்கள் அறிவிக்ககூடிய ஹதீஸ்,
وَإِذَا وَعَدَ وَهُوَ يُحَدِّثُ نَفْسَهُ أَنَّهُ يُخْلِفُ
ஒருவர் வாக்கு கொடுக்கிறார். வாக்கு கொடுக்கும் பொழுதே அவருடைய உள்ளத்தில் அவர் சொல்லிக் கொள்கிறார்; இதற்கு நான் மாற்றம் செய்வேன். இந்த வாக்கை நிறைவேற்ற மாட்டேன் என்ற எண்ணத்தில் யார் வாக்கு கொடுக்கிறாரோ, அவர் இந்த முனாஃபிக்காக ஆகுவார் என்று ரஸுல் ﷺஅவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அல்முஜமுல் கபீர் அத்தப்ரானி,எண் : 6062.
அது போன்று ரஸூலுல்லாஹி ﷺஅவர்கள் அறிவிக்க கூடிய மற்றொரு ஹதீசை இமாம் அபூதாவூத் ரஹிமஹுல்லாஹ்அவர்கள் அறிவிக்கிறார்கள்.
إِذَا وَعَدَ الرَّجُلُ أَخَاهُ وَمِنْ نِيَّتِهِ أَنْ يَفِيَ لَهُ فَلَمْ يَفِ وَلَمْ يَجِئْ لِلْمِيعَادِ فَلَا إِثْمَ عَلَيْهِ
ஒருவர் வாக்கு கொடுக்கின்றார். அவருடைய உள்ளத்தில் மனப்பூர்வமாக எண்ணம் இருக்கிறது; நான் அவருக்கு இந்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்ற மன உறுதி இருக்கிறது.
ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் அவரால் நிறைவேற்ற முடியாமல் ஆகிவிட்டால்அவர் மீது குற்றம் கிடையாது.
அறிவிப்பாளர் : ஜைத் இப்னு அர்கம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத்,எண் : 4343.
ஆகவே, யார் ஒரு வாக்கு கொடுக்கும்பொழுதே இந்த வாக்கை நிறைவேற்றக் கூடாது என்ற பொய்யான வாக்கை கூறுகிறார்களோ, அவர்கள் இந்த ஹதீஸில் அடங்குவார்கள். நிஃபாக் உடைய தன்மையில் வருவார்கள் .
அது போன்று, யார் பேசும் பொழுது வேண்டுமென்றே உண்மைக்கு மாற்றமானதை பேசுகின்றார்களோ, அவர்களும் இந்த நிஃபாக் உடைய பட்டியலில் வருவார்கள்.
அன்பிற்குரியவர்களே! ரஸூலுல்லாஹி ﷺஅவர்கள் அமானிதத்திற்கு மோசடி செய்வது, நம்பிக்கைக்கு துரோகம் செய்வது, கொடுக்கப்பட்ட பொறுப்பில் அமானித மோசடி செய்வதை கடுமையாக கண்டிக்கிறார்கள்.
அனஸ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் கூறுகிறார்கள், ரஸூலுல்லாஹி ﷺஎங்களுக்கு எப்போது உபதேசம் செய்தாலும், எப்போது குத்பா கொடுத்தாலும் இந்த வார்த்தைகள் கூறாமல் முடிக்கமாட்டார்கள்.
لَا إِيمَانَ لِمَنْ لَا أَمَانَةَ لَهُ وَلَا دِينَ لِمَنْ لَا عَهْدَ لَهُ
யார் அமானிதத்தை நிறைவேற்றவில்லையோஅவருக்கு ஈமான் கிடையாது. யார் ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லையோஅவருக்கு மார்க்கம் கிடையாது.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 11935.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் ஹதீஸ் குத்ஸியை அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் கூறுகிறான்: நாளை மறுமையில் மூன்று மனிதர்களிடத்தில் நான் வாதிடுவேன். பாதிக்கப்பட்ட மூன்று மக்களுக்காகபாதிப்பை ஏற்படுத்திய மூன்று மக்களிடத்தில் நான் வாதிட்டு அந்த ஹக்கை வாங்குவேன்.
அதில் ஒருவர், அவர் என்னுடைய பெயரை கூறி சத்தியம் செய்தார். பிறகு அதற்கு மோசடி செய்து விட்டார். ஒரு சுதந்திரமானவனை அடிமை என்று கூறிவிட்டு அதனுடைய கிரயத்தை சாப்பிட்டார். மூன்றாமவர் ஒரு வேலைக்காரனை வேலைக்கு வைக்கின்றார், வேலையை வாங்கிக்கொண்டு அவனுக்கு கூலியை கொடுக்கவில்லை.
இந்த மூன்று மக்களிடத்தில் நான் வாதிடுவேன். பாதிக்கப்பட்டவர்களுக்காக ஹக்கை நான் வாங்குவேன் என்று அல்லாஹ் சுப்ஹானஹ் வதஆலா கூறுகின்றான்.
ரஸூலுல்லாஹி ﷺஅவர்கள் கூறுகிறார்கள்:
لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ يُعْرَفُ بِهِ
ஒவ்வொரு மோசடி செய்பவனுக்கும் நாளை மறுமையில் ஒரு கொடி கொடுக்கப்படும். அதில் அவன் இப்படி இப்படி மோசடி செய்தான் என்பதாக அவனுடைய கரத்தில் கொடுக்கப்பட்டு அவனை அழைத்து வரப்படும். யாருடைய மோசடி எவ்வளவு அதிகமோ, அதற்கு ஏற்ப அந்த கொடி உயரமாக இருக்கும்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6451.
ரஸூலுல்லாஹி ﷺகூறுகிறார்கள்:
لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ يُرْفَعُ لَهُ بِقَدْرِ غَدْرِهِ أَلَا وَلَا غَادِرَ أَعْظَمُ غَدْرًا مِنْ أَمِيرِ عَامَّةٍ
மோசடியிலேயே பயங்கரமான மோசடி,துரோகத்தில் மிக மோசமான துரோகம்,சமுதாயத்தலைவர்கள் சமுதாயத்திற்கு செய்யக்கூடிய மோசடி.
அறிவிப்பாளர் : அபூ சயீத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 3272.
ஆக,குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் நயவஞ்சகத்தன்மையின் அடையாளங்கள் என்ன என்பதை பார்க்கும் பொழுது பதினாறு வகையான அடையாளங்களை நாம் பார்க்கிறோம்.
1. மக்களுக்கு தீமையை ஏவுவது.
2. மக்களை நன்மையிலிருந்து தடுப்பது.
3. நன்மையான காரியங்களில் செலவு செய்யாமல் கையை முடக்கிக் கொள்வது. அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்வதை விட்டு தடுத்துக் கொள்வது.
4. அல்லாஹ்வை மறந்து வாழ்வது. அல்லாஹ்வை மறந்து வாழ்வதில் மார்க்கத்தை புறக்கணித்து வாழ்வது.
5. அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படாமல் வாழ்வது.
6. தொழுகையை நிறைவேற்றக்கூடிய விஷயத்தில் அலட்சியம் செய்வது, சோம்பேறித்தனம் காட்டுவது.
7. தொழுகையின் நேரங்களை மறந்திருப்பது.
8. முகஸ்துதி, புகழை விரும்பி செய்வது. தான் எங்கே புகழப்படுகிறோமோ, அந்த இடத்தில் அவர்கள் முன்னுக்கு வருவார்கள். எந்த இடத்தில் புகழ் பெயர் வராதோ அந்த இடத்திலிருந்து விலகி செல்வார்கள்.
9. அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள். ஆனால், அதிகமாக நினைக்கமாட்டார்கள். ஏதாவது சில சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வுடைய பெயரை கூறுவார்களே தவிர அதிகமாக அல்லாஹ்வுடைய நினைவு அவர்களிடத்தில் இருக்காது.
10. அவர்கள் அல்லாஹ்விடத்தில் வாக்கு கொடுத்தால், ஒப்பந்தம் செய்தால் அந்த ஒப்பந்தங்களை நிறைவேற்ற மாட்டார்கள்.
11. ஸஹாபாக்களை பகைத்துக் கொள்வது, அவர்களை ஏசுவது, அவர்களிடத்தில் விரோதம் கொள்வது.
12. அமானிதத்தில் மோசடி செய்வது.
13. பேச்சில் பொய் பேசுவது.
14. செய்து கொண்ட ஒப்பந்தங்களுக்கு மாற்றமாக நடந்து கொள்வது.
15. மக்களிடத்தில் பேசும்பொழுது, ஏதாவது வாக்குவாதங்கள் ஏற்படும்பொழுது எல்லை மீறி செல்வது.
16. அல்லாஹ்வுடைய மார்க்க சட்டங்களில், மார்க்க வரம்புகளில் மோசடி செய்வது. மார்க்க சட்டங்களை மீறுவதற்காக தந்திரங்கள் செய்வது. அல்லாஹ்வை ஏமாற்றப்பார்ப்பது. அவர்கள் தங்களை தாங்களே இப்படி ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
இப்படி பதினாறு அடையாளங்களை குர்ஆனிலிருந்தும் ஹதீஸ்களிலிருந்தும் நிஃபாக் உடைய அடையாளங்கள் என்று நாம் பார்க்கிறோம்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா என்னையும் உங்களையும் இந்த எல்லா விதமான தீய அடையாளங்களிருந்து முனாஃபிக்குகளுடைய பண்பிலிருந்து பாதுகாப்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/