HOME      Khutba      நயவஞ்சகம் (அமர்வு 1/2) | Tamil Bayan - 40   
 

நயவஞ்சகம் (அமர்வு 1/2) | Tamil Bayan - 40

           

நயவஞ்சகம் (அமர்வு 1/2) | Tamil Bayan - 40


நயவஞ்சகம்

ஜுமுஆ குத்பா தலைப்பு : நயவஞ்சகம்

வரிசை : 40

இடம் : மஸ்ஜித் அஹ்லே ஹதீஸ், மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.

யார் அல்லாஹ்வை பயந்து கொள்கிறார்களோ, அஞ்சி நடக்கிறார்களோ நல்ல காரியங்களை செய்வதற்கு அல்லாஹ் அவர்களுக்கு அருள் தருகிறான். யார் நல்ல காரியங்களை செய்கிறார்களோ அல்லாஹு தஆலா அவருடைய உள்ளத்திற்கு நிம்மதியை தருகிறான்.

அவருடைய வாழ்க்கையின் பிரச்சனைகளை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நிவர்த்தி செய்கிறான். அவன் அறியாத புறத்திலிருந்து அவருக்கு அவருடைய உணவையும், அவருடைய தேவையையும் நிறைவேற்றித் தருகிறான்.

அதுமட்டுமல்ல நாளை மறுமையில் சொர்க்கத்தின் வெற்றியை அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா அவருக்கு வழங்குகிறான்.

அன்பிற்குரியவர்களே! இந்த உரையில் மிக முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி நாம் பார்க்க இருக்கின்றோம்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இறைநம்பிக்கை ஈமானுக்கு வெற்றியை வழங்குகின்றான். இறைநம்பிக்கையுடைய தன்மைகளுக்கும், பண்புகளுக்கும் வெற்றியை தருகிறான்.

இந்த இறைநம்பிக்கைக்கு எதிராக இருக்கக்கூடிய எல்லா தன்மைகளுக்கும், எல்லா பண்புகளுக்கும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய கோபத்தை முடிவு செய்துவிடுகிறான். அவர்களுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய சாபத்தை விதித்து விடுகின்றான்.

இந்த உலகத்திலும் அவர்கள் அல்குர்ஆனிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய நபிமொழியிலும் அடையாளம் காட்டப்படுகிறார்கள். நாளை மறுமையில் மிகப்பெரிய கேவலத்தை மிக பயங்கரமான துன்பத்தை அவர்கள் சந்திக்க நேரிடும்.

இத்தகைய இறைநம்பிக்கை ஈமானுக்கு எதிராக உள்ள தன்மைகளில் ஒன்று தான் குர்ஆனிலும் ஹதீஸிலும் அறியப்படும் நிஃபாக் என்ற தன்மை.

நிஃபாக் என்றால் என்ன? இதை நாம் தமிழில் நயவஞ்சகத்தன்மை என்று அறிகின்றோம்.

அதாவது உள்ளத்தில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் ஒன்றை வெளிப்படுத்துவது. உள்ளத்தில் ஒன்று இருக்கும். ஆனால் அதை மறைத்துவிடுவது, வெளியில் சொல்லும்பொழுது, வெளியில் காண்பிக்கும்பொழுது, உள்ளத்தில் இருக்கக்கூடிய தன்மைக்கு மாற்றமான தன்மையை வெளிப்படு்த்துவது இதனை நிஃபாக் என்று சொல்லப்படும்.

இஸ்லாமிய மார்க்கத்தில் குர்ஆனுடைய மொழியில் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களுடைய மொழியில் இந்த நிஃபாக் என்பது இரண்டு அர்த்தங்களில் கையாளப்பட்டிருக்கிறது.

1.             யார் ஒருவர் தன்னுடைய உள்ளத்தில் (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்) அல்லாஹ்வை மறுக்கிறான், அல்லாஹ்வின் தூதர் அவர்களை மறுக்கிறான், உள்ளத்தில் அல்லாஹ்வை வெறுக்கிறான். அல்லாஹ்வுடைய தூதரை வெறுக்கிறான். அல்லது அல்லாஹ்வுடைய மார்க்கத்தை வெறுக்கிறான். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய சுன்னா என்ற அழகிய வழிமுறையை, அழகிய ஒழுக்கங்களை வெறுக்கிறான்.

ஆனால் செயலில் அவன் வெளிப்படுத்தும்பொழுது நமபிக்கையாளர்கள் செய்வதை போன்று அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட முஃமின்கள் செய்வதை போன்று எல்லாக் காரியங்களையும் அவன் செய்கிறான். இவரை குர்ஆனும், நபிமொழியும் முனாஃபிக் என்பதாக நமக்கு அடையாளம் காட்டுகின்றது.

யார் ஒருவர் உள்ளத்தில் இப்படி தவறான எண்ணங்களை மறைத்து வைத்துக் கொண்டு, தவறான கொள்கைகளை மறைத்து வைத்துக்கொண்டு, அதற்கு மாற்றமாக நாவின் மூலமாக நாங்களும் நம்பிக்கை கொண்டோம், நாங்களும் மறுமையை ஏற்றுக்கொள்கிறோம், நாங்களும் இந்த நபியை பின்பற்றுகிறோம் என்று யார் சொல்கிறார்களோ இவர்களை எல்லாம் அல்லாஹ் தஆலா தன்னுடைய புத்தகத்தில், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்தன்னுடைய சுன்னாவில் முனாஃபிக் என்று பெயர்கொண்டு அழைக்கிறார்கள்.

நிஃபாக் உடைய இரண்டாவது வகை,

2. உள்ளத்தில் ஈமான் இருக்கும். ஆனால் அந்த ஈமான் பலவீனமாக இருக்கும் காரணத்தால் அவருடைய செயல்பாடுகள் உண்மையான முனாஃபிக்குகள். அதாவது உள்ளத்தில் குஃப்ரை வைத்துக் கொண்டு ஈமானை வெளிப்படுத்தக் கூடிய உண்மையான நயவஞ்சகனுடைய செயலைப் போன்று இவர்களும் செய்வார்கள்.

முந்தியதற்கு நிஃபாக் அஹ்தி, அதாவது கொள்கையில் ஏற்படக்கூடிய நிஃபாக் என்று சொல்வார்கள். இரண்டாவதற்கு செயல்களில் ஏற்படக்கூடிய நிஃபாக் என்று சொல்வார்கள்.

முந்தய வகையான நிஃபாக், அதாவது அவனுடைய உள்ளத்தில் நயவஞ்சகம் இருக்குமன்று சொன்னால் இவர் அல்லாஹ்வுடைய பார்வையில் மிகவும் மோசமான இறைநிராகரிப்பாளரின் பட்டியலில் சேர்க்கப்படுவார். இவருக்கு நாளை மறுமையில் அல்லாஹ் கொடுக்கக்கூடிய தண்டனை மற்ற காஃபிர்களுக்கு ஏனைய முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய தண்டனையை விட பயங்கரமான தண்டனை கிடைக்கும்.

யார் செயலில் முனாஃபிக்குகளாக இருக்கிறார்களோ அவர்களுடைய செயலுக்கு ஏற்ப நாளை மறுமையில் அவருக்கு தண்டனை வழங்கப்படும்.

கொள்கைகளில் நிஃபாக் இருந்தால் அவர் ஒருபோதும் சொர்க்கம் செல்ல  முடியாது. நாளை மறுமையில் இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்கமாட்டான். நிரந்தர நரகவாதி என்று யாரையெல்லாம் அல்லாஹ் தபாரக வதஆலா பட்டியலிட்டு வைத்திருக்கிறானோ முஷ்ரிக்குகள்,காஃபிர்கள், யூதர்கள்,நஸரானிகள்,மஜூஸிகள் இவர்களுடைய பட்டியலில் இவர்களும் சேர்க்கப்படுவார்கள்.

அல்லாஹ் சுப்ஹானஹ் வதஆலா இவர்களுக்குரிய தண்டனையை குர்ஆனில் பல இடங்களில் சொல்லிக்காட்டுகிறான்.

இதிலும் குறிப்பாக சூரா அன்னிஸா நான்காவது அத்தியாத்தில் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இவர்களுடைய பல தன்மைகளை இவர்கள் எப்படியெல்லாம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் துரோகம் செய்தார்கள், அநியாயம் செய்தார்கள். இந்த சமுதாயத்திற்கு வஞ்சகம் செய்தார்கள், இவர்களுடைய தன்மைகள் என்ன? இவர்களுடைய முடிவு என்ன? என்பதை மிக விரிவாக பேசுகின்றான்.

அந்த சூரா அன்னிஸாவில் மட்டும் பல தண்டனைகளையும் இவர்களுடைய முடிவுகளையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடுகிறான்.

உதாரணமாக,

بَشِّرِ الْمُنَافِقِينَ بِأَنَّ لَهُمْ عَذَابًا أَلِيمًا

(நபியே! இத்தகைய) நயவஞ்சகர்களுக்கு “நிச்சயமாக நோவினை தரும் வேதனை உண்டு” என்று நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் 4:138)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :

إِنَّ اللَّهَ جَامِعُ الْمُنَافِقِينَ وَالْكَافِرِينَ فِي جَهَنَّمَ جَمِيعًا

நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான். (அல்குர்ஆன் 4:140)

இந்த உலகத்தில் காஃபிர்கள் நம்மை விட்டு பிரிந்திருக்கிறார்கள். அவர்கள் பள்ளிக்கு தொழ வருவது கிடையாது. அவர்கள் முஸ்லிம்களை வெறுப்பது வெளிப்படையாக காணப்படும். எனவே அவர்களை எதிரிகளென்று நாம் அடையாளம் கண்டுக்கொள்வது, அவர்கள் நமக்கு பகையானவர்கள் என்று இனம் கண்டுக் கொள்வது நமக்கு எளிதானது.

ஆனால் முனாஃபிக்குகள் நமக்குள்ளே ஊடுருவிக்கொண்டு நம்மைப் போன்ற செயல்களை செய்து கொண்டு அல்லாஹ்வையும் மறுமை நாளையும் மறுக்கக் கூடியவர்கள், தூதர்களை ஏளனமாக பேசுபவர்கள், தூதரின் சுன்னாக்களை ஏளனமாக பேசுபவர்கள், இவர்களை அடையாளம் கண்டுக் கொள்வது மிக சிரமமானது.

எனவே அல்லாஹ் தஆலா சொல்கின்றான். இந்த உலகத்தில் அவர்கள் முஸ்லிம்களுடன் சேர்ந்து இருந்தாலும் நாளை மறுமையில் அவர்களை பிரித்து காஃபிர்களுடனே ஜஹன்னம் என்னும் நெருப்பில் ஒன்று சேர்த்துவிடுவேன். நாளை மறுமையில் முனாஃபிக்களுக்கு தங்குமிடம் காஃபிர்களுக்கு எது தங்குமிடமோ அதுதான். இவர்கள் முஃமீன்களுடன் சொர்க்கத்தில் சேரமாட்டார்கள்.

அதுமட்டுமா நரகத்தில் பல படித்தரங்கள் இருக்கின்றன. அந்த படித்தரங்களில் கடைசி படித்தரங்களாகிய எங்கே நரக நெருப்பு கொழுந்து விட்டெரியுமோ, எங்கே நரக நெருப்பு ஆரம்பிக்குமோ, அதிக உஷ்ணமுள்ள அதிகமாக சுட்டெரிக்கக் கூடிய வேதனை நிரம்பிய அடித்தளத்தில் அவர்களை நான் சேர்ப்பேன் என்று அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இந்த முனாஃபிக்குகளை பற்றி சொல்கிறான்.

إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيرًا

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர். (அல்குர்ஆன் 4:145)

وَعَدَ اللَّهُ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْكُفَّارَ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا هِيَ حَسْبُهُمْ وَلَعَنَهُمُ اللَّهُ وَلَهُمْ عَذَابٌ مُقِيمٌ

நயவஞ்சகர்களான ஆடவருக்கும், நயவஞ்சகர்களான பெண்டிருக்கும், காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்; இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் - அவர்களுக்கு நிரந்தரமான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன் 9:68)

அன்பிற்குரியவர்களே! பல விஷயங்கள் நயவஞ்சகம் உள்ளத்தை சார்ந்ததாக, கொள்கையை சார்ந்ததாக இருக்கும். யாருடைய நயவஞ்சகம் கொள்கையை சார்ந்ததாக இருக்குமோ அவர்களுக்கு இந்த எல்லா தண்டனைகளும் இந்த எல்லா எச்சரிக்கைகளும் பொருந்தும்.

கொள்கையில் நயவஞ்சகம் ஏற்பட்டால் அந்த நிலையில் அவர் தவ்பா செய்யாமல், அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்காமல் இறந்துவிட்டால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களை மன்னிக்க மாட்டான். அல்லாஹ் பாதுகாப்பானாக!.

யார் கொள்கையில் நயவஞ்சகம் உள்ளவர்களாக, அதாவது, அல்லாஹ்வை பரிகாசம் செய்வது, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பரிகாசம் செய்வது, ரஸூலை பரிகாசம் செய்வது, ரஸூலுடைய மார்க்கத்தை, சுன்னாவை பரிகாசம் செய்வது அல்லது உள்ளத்தால் அல்லாஹ்வை மறுப்பது, உள்ளத்தால் ரஸூலை மறுப்பது,மறுமையை மறுப்பது.

இப்படி மார்க்கத்தில் உண்மை என்று உறுதி செய்யப்பட்ட எந்த அடிப்படைகளை உள்ளத்தால் மறுத்துவிட்டு தன்னுடைய நாவால் அதை ஏற்றுக்கொண்டோம் என்று வெளிப்படுத்துவது. இது உள்ளத்தால் ஏற்படக்கூடிய நிஃபாக் (நயவஞ்சத்தன்மை).

இந்த தன்மைக்காக அவர் வருந்தி அல்லாஹ்விடத்தில் மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் இந்த தவறை அவர் திருத்திக்கொண்டு, தன்னுடைய உள்ளத்தில் உண்மையான ஈமானை எடுத்துக்கொள்ளவில்லையென்றால் இதே நிலையில் இவர் மரணித்துவிட்டால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவரை நிரந்தர நரகவாதியாக ஆக்கிவிடுவான். (அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!.)

யாருடைய செயல்பாடுகளில் நயவஞ்சகத்தன்மை வந்துவிடுமோ, முனாஃபிக்களுடைய தன்மைகள் யாரிடத்தில் பெற்றுக்கொள்ளப்படுகிறதோ, ஆனால் உள்ளத்தில் அந்த தன்மைகளை வேண்டுமென்றே செய்யவில்லை, உள்ளத்தில் அல்லாஹ்வை மறுக்கவில்லை, மறுமையை மறுக்கவில்லை இவர்களும் மிகப்பெரிய எச்சரிக்கை உடையவர்கள். நாளை மறுமையில் அல்லாஹ்வின் தண்டனைக்குரியவர்கள்.

ஆனால் நிரந்தரமாக வேதனை செய்யப்படமாட்டார்கள். இவர்களுடைய தண்டனையை அனுபவித்தற்கு பிறகு அல்லாஹ் எப்போது நாடுகிறானோ அப்போது சுத்தப்படுத்தப்பட்டு இவர்கள் சொர்க்கத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

அன்பிற்குரியவர்களே! நம்மில் பலருக்கு ஷிர்க்கைப் பற்றி ஓரளவு எச்சரிக்கையும் அச்சமும் இருக்கலாம். வெளிப்படையாக அல்லாஹ்வை நிராகரிப்பதை பற்றி வேண்டுமானால் ஓரளவுக்கு எச்சரிக்கை இருக்கலாம்.

ஆனால் இந்த மூன்றாவது தன்மை குர்ஆனிலும் நபிமொழியிலும் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்ட, வன்மையாக அறிவுருத்தப்பட்ட இந்த நிஃபாக்கை பற்றி நம்மில் வெகு சொற்ப்பமானவர்கள் தான் தங்களுடைய உள்ளத்தை இதிலிருந்து பாதுகாப்பதற்கு முயற்சி செய்கிறார்கள்.

இந்த தன்மையினுடைய கடுமையை, இந்த தன்மையினுடைய கோரத்தன்மையை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். நம்மில் பலர் இதன் விஷயத்தில் காட்டக்கூடிய அலட்சியம் இருக்கிறதே மிக சாதரணமானதல்ல.

ஆனால், யார் உண்மையான நம்பிக்கையாளர்கள், அல்லாஹ்வுடைய பொருத்தத்தை பெற்றார்களென்று குர்ஆனிலும் நபிமொழியிலும் நற்சான்று வழங்கப்பட்டதோ, அந்த நன்மக்கள் அந்த மேன்மக்கள் தங்களுடைய உள்ளத்தில் எப்போதும் இந்த பயத்தை கொண்டிருந்தார்கள்.

தங்களுடைய இறைநம்பிக்கையில் இந்த நிஃபாக் கலந்துவிடக்கூடாது, நயவஞ்தகத்தன்மை கலந்துவிடக்கூடாது, தங்களுடைய செயல்களில் நயவஞ்சகத்தன்மை கலந்து விடக்கூடாது என்ற பயம் அவர்களுடைய உள்ளத்தில் பசுமையாக இருந்தது.

அப்படி பசுமையாக இருந்த காரணத்தால்தான் அவர்களுடைய சொல்,அவர்களுடைய செயல்,அவர்களுடைய குணங்கள், அவர்களுடைய வாழ்க்கை அல்லாஹ்வுடைய கிதாபிற்கு ஏற்ப நபியினுடைய வழிமுறைக்கு ஏற்ப அமைந்திருந்தது.

நம்மில் பலருக்கு இந்த அச்சம் இல்லாத காரணத்தால் அவர்கள் சர்வசாதரணமாக முனாஃபிக்குகளுடைய செயல்களில் விழுந்துவிடுகிறார்கள். முனாஃபிக்குகளுடைய பண்புகளில் விழுந்து விடுகிறார்கள்.

அந்த நிஃபாக் அவர்களுடைய உள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக துருவாக ஏறி ஏறி அவருடைய ஈமானை ஒரு சமயத்தில் முழுமையாக அரித்து முழுமையான நிஃபாக் முழுமையான முனாஃபிக்காக அவரை மாற்றிவிடுகிறது. (அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!)

எனவே இந்த நிஃபாக் உடைய தன்மைகள் என்ன என்பதை அறிந்து அந்த தன்மைகளிலிருந்து நம்முடைய ஈமானை, நம்முடைய அமல்களை, நம்முடைய வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

ஸஹாபாக்களைப் பற்றி படித்துப் பாருங்கள். அப்துர்ரஹ்மான் இப்னு அபீ முலைகா ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்ற மிக பிரசித்திப்பெற்ற தாபியீ சொல்லுகிறார்கள்:

நான் முப்பது நபித்தோழர்களிடத்தில் கல்வி படித்திருக்கிறேன். அவர்களில் ஒவ்வொருவரும் தங்களுடைய இறைநம்பிக்கையில் நிஃபாக் கலந்துவிடுமோ என்ற பயத்தை கொண்டிருந்தார்கள். (1)

அறிவிப்பாளர் : அப்துர்ரஹ்மான் இப்னு அபீ முலைகா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 46.

அவர்களிடத்தில் ஈமான் இருந்தது. எனவேதான் அந்த ஈமான் தவறிவிடக்கூடாது, அந்த ஈமானில் கலங்கம் ஏற்படக்கூடாது என பயந்தார்கள்.

ஈமான் இருப்பவர்கள்தானே அந்த ஈமானைப்பற்றி பயப்படப்போகிறார்கள். யாருக்கு மடியில் கனம் இருக்குமோ அவர்களுக்கு தான் பயம் இருக்கும்.

யார் அல்லாஹ்வை நம்புகிறார்களோ அவர்கள் தான் அல்லாஹ்விற்கு பயப்படுவார்கள். யார் நபியை ஏற்றார்களோ அவர்கள் தான் நபியின் மீது அன்பு வைப்பார்கள். நபியின் சுன்னத்தை பின்பற்றுவார்கள்.

யாருக்கு அல்லாஹ்வின் மீது மறுமையின் மீது அச்சம் இருக்குமோ அவர்களுடைய தன்மை ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள் :

நான் எழுபது ஸஹாபாக்களிடத்தில் கல்வி படித்திருக்கிறேன். அவர்களிடத்தில் அமர்ந்திருக்கிறேன். அவர்களிடத்தில் கல்வி படித்திருக்கிறேன். அவர்கள் அனைவரும் இதுபோன்று தான், தன்னுடைய இறைநம்பிக்கையில் நிஃபாக் என்ற கொடிய விஷம் கலந்துவிடுவதை பயந்துகொண்டு இருந்தார்கள்.

எப்படிப்பட்ட மறதியில் அலட்சியத்தில் நம்முடைய வாழ்க்கை கழிந்து கொண்டு இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் நாம் எடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறோமா? சுத்தமான ஈமானும், சுத்தமான ஈமானிய செயல்களும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கிறதா என்று.

எத்தனை தன்மைகளை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய ரஸூலும் முனாஃபிக்குகளுக்கு உரியது என்று அடையாளம் காட்டுகிறார்களோ அந்த தன்மைகளில் எத்தனை தன்மைகள் நம் வாழ்வில் மலிந்து இருக்கின்றன என்பதை பாருங்கள்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா சூரா தவ்பாவில் 67வது வசனத்தில் நயவஞ்கனின் அடையாளங்களை குறிப்பிடுகிறான் :

الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ بَعْضُهُمْ مِنْ بَعْضٍ يَأْمُرُونَ بِالْمُنْكَرِ وَيَنْهَوْنَ عَنِ الْمَعْرُوفِ وَيَقْبِضُونَ أَيْدِيَهُمْ نَسُوا اللَّهَ فَنَسِيَهُمْ إِنَّ الْمُنَافِقِينَ هُمُ الْفَاسِقُونَ

நயவஞசகர்களான ஆடவரும், நயவஞ்சகர்களான பெண்டிரும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பாவங்களை தூண்டி, நன்மைகளை விட்டும் தடுப்பார்கள். (அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள்; அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆகவே அவன் அவர்களை மறந்து விட்டான். நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே ஆவார்கள். (அல்குர்ஆன் 9:67)

வசனத்தின் கருத்து : அல்லாஹு தஆலா கூறுகின்றான். பாவிகள் தங்களுக்குள் நண்பர்களாக இருப்பார்கள். அப்போது தான் பாவத்தை அதிகமாக செய்ய முடியும். பாவத்தை எப்படியெல்லாம் செய்யலாம் என்ற ஐடியாக்களை உருவாக்க முடியும். இவர்கள் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் சரி தங்களுக்குள்ளே உற்ற நண்பர்களாக தோழர்களாக இருப்பார்கள்.

இவர்களுடைய தன்மைகள் என்ன?

1.             இவர்கள் பாவத்தை மக்களுக்கு சொல்லிக்கொடுப்பார்கள், தீமையை மக்களுக்கு சொல்லிக்கொடுப்பார்கள். கெட்டதை மக்களுக்கு மத்தியில் பரப்புவார்கள்.

நம்மில் எத்தனை பேர் இந்த தன்மை உடையவராக இருக்கிறார்கள். தீய இடங்களுக்கு செல்வது மட்டுமல்ல,சினிமாக்களுக்கும், அசிங்கங்களுக்கும் செல்வது மட்டுமல்ல. இவர் தன்னுடனையே பலரையும் அழைத்து கொண்டு செல்கிறார். அதைக்காட்டுகின்றான். அதை மக்களுக்கு மத்தியில் பரப்புவதற்கு முயற்சி செய்கிறான். இது பாவிகள் முனாஃபிக்குகளுடைய தன்மை.

2.             இவர்கள் நன்மை செய்வதை தடுப்பார்கள். அல்லாஹ்விற்கு கட்டுபட்டு நடப்பதை, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை பின்பற்றுவதை அவர்கள் தடுப்பார்கள்.

நம்மில் தாடி வைப்பதை தடுக்கக்கூடியவர்கள் எத்தனை பேர் கரண்டைக் காலுக்கு மேல் தன்னுடைய ஆடைகளை உயர்த்துவதை தடுக்கக்கூடியவர்கள் எத்தனை பேர்.

இன்னும் எத்தனையோ மார்க்க விஷயங்களை, அல்லாஹ்வுடைய வரம்புகளை, ரசூலுடைய சுன்னத்தை பின்பற்றக்கூடிய மக்களை, இவற்றையெல்லாம் நீங்கள் பின்பற்றுகிறீர்களே! இந்த வயதில் உங்களுக்கு என்ன அவசரம்? என்று தடுக்கக்கூடிய பெற்றோர்கள் எத்தனை பேர். தடுக்கக்கூடிய சமுதாய தலைவர்கள் எத்தனை பேர் சிந்தித்துப் பாருங்கள்.

இது முனாஃபிக்குகளுடைய தன்மை என்று அல்லாஹ் சொல்கின்றான்

முனாஃபிக்குகள் யார்? அவர்கள் தான் பாவங்களை மக்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். நன்மைகள் செய்வதற்கு தடையாக இருப்பார்கள்.

இன்று யாரெல்லாம் எந்த விதத்தில் இந்த மார்க்கம் அங்கீகரித்த இந்த மார்க்கத்தில் சொல்லப்பட்ட நன்மை, அது சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, மார்க்கத்தில் சொல்லப்பட்டு இருந்தால் அது ரஸூல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய  வழிமுறையென்று தெளிவான நபிமொழியை கொண்டு, தெளிவான ஆதாரமிக்க ஹதீஸைக் கொண்டு அது பதிவு செய்யப்பட்டிருந்து அதை ஒருவர் ஏற்று நடக்கும்பொழுது அதை பரிகாசம் செய்தாலோ, தடுத்தாலோ அவர்கள் இந்த பட்டியலில் வருவார்கள்.

 

3.             தங்களுடைய கரங்களை அவர்கள் முடக்கி கொள்வார்கள், தடுத்துக் கொள்வார்கள். அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்வதைவிட்டு தாங்கள் சம்பாதித்த செல்வங்களை இந்த மார்க்கம் பரப்பப்பட வேண்டும், உயர்த்தப்பட வேண்டும், அழைப்புப்பணிகள் நடக்கப்பட வேண்டும், ஏழைகளுக்கு உதவிகள் சென்று சேர வேண்டும், கைம்பெண்களுக்கு உதவிகள் சென்று சேர வேண்டும், இன்னும் இந்த உலகத்தில் யாரெல்லாம் தேவையுடையவராக இருக்கிறார்களோ அவர்களுக்கு செலவு செய்வதை அல்லாஹ் விரும்புகிறான் அல்லவா! அந்த நல்ல வழிகளில் செலவு செய்யாமல் தங்களுடைய கரங்களை யார் தடுத்துக்கொள்கிறார்களோஇவர்கள் முனாஃபிக்குகள்.

ஒருவர் செலவு செய்கிறார், ஒருவர் நல்ல காரியங்களில் செல்வத்தை வாரி வழங்குகின்றார்.

இவரைப்பற்றி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சொல்கிறார்கள் : 

اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا وَيَقُولُ الْآخَرُ اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا

ஒவ்வொறு நாள் காலையிலும் மலக்குகள் இவருக்காக துஆ செய்கிறார்கள் :

யா அல்லாஹ்! உன்னுடைய பாதையில் செலவு செய்பவர்களுக்கு நீ நல்ல பகரத்தைக் கொடு! செலவு செய்யாமல் தடுத்து வைப்பவர்களுக்கு அழிவைக் கொடு!(2)

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹா, நூல்: புகாரி, எண்: 1351.

அல்லாஹ் கூறுகிறான் :

وَمَا آتَيْتُمْ مِنْ رِبًا لِيَرْبُوَ فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُو عِنْدَ اللَّهِ وَمَا آتَيْتُمْ مِنْ زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَئِكَ هُمُ الْمُضْعِفُونَ

ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.(அல்குர்ஆன் 30 : 39).

يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ

அல்லாஹ் வட்டியை அழிக்கின்றான், தர்மத்தை வளர்க்கின்றான். (அல்குர்ஆன்2 : 276)

ஷைத்தானுடைய வேலை, மக்கள் நல்ல வழியில் செலவு செய்யும்போது அவர்களுக்கு வறுமையைக்  கொண்டு அச்சுறுத்துவது.

அன்பிற்குரியவர்களே! இந்த முனாஃபிக்குகளுடைய தன்மையை நாம் பயந்து கொள்ள வேண்டும். இவற்றை விட்டு நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

நயவஞ்சகத்தன்மை உள்ளவர்கள். இவர்கள் பெரும் பாவிகள்.

4.             அல்லாஹ் கூறுகின்றான் :

இவர்கள் அல்லாஹ்வை மறந்திருப்பார்கள், அல்லாஹ்வும் தனது கருணையில் இவர்களை மறந்து விட்டான்.

அல்லாஹ்வை மறந்துவிடுவது, முனாஃபிக்குகளுடைய மிகப்பெரிய தன்மை என்று அல்லாஹ் தஆலா சூரா அன்னிஸாவில் மிகத் தெளிவாக சொல்கின்றான்.

إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள். மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை. (அல்குர்ஆன் 4:142)

நயவஞ்சகத் தன்மை உடையவர்கள் இவர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகிறார்கள். இவர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்கப் பார்க்கிறார்கள்.

சுப்ஹானல்லாஹ்! யாரால் முடியும் அந்த ரப்புல் ஆலமீனை ஏமாற்ற.

யாரின் உள்ளங்களின் இரகசியங்களை அறிந்திருக்கின்றானோ, கடைக்கண்கள் செய்யும் இரகசியத்தையும் அறிந்திருக்கிரானோ, எந்த ஒன்றும் எந்த இறைவனுக்கு முன்பு மறையாதோ, அந்த இறைவனை இவர்கள் வஞ்சிக்க பார்க்கிறார்கள். ஏமாற்றக் கருதுகிறார்கள்.

இரவின் இருளில் இருப்பதை அவன் அறிந்திருக்கின்றான். கடலின் ஆழத்தில் உள்ளதை அவன் அறிந்திருக்கின்றான். வானத்தில் மறைந்திருப்பதை அவன் அறிந்திருக்கின்றான். பாறைக்குள் ஒளிந்திருப்பதையும் அவன் அறிந்திருக்கின்றான்.

இப்படி அவனுடைய அறிவு விசாலமானதாக இருக்க, இப்படி அவனுடைய அறிவு வியாபித்து இருக்க, நடந்தது, நடப்பது, இனி நடக்க இருப்பது இவை அனைத்தையும் தெளிவாக ஒரே நிலையில் சமமாக அறிந்திருக்ககூடிய அந்த இறைவனை இவர்கள் ஏமாற்ற நினைக்கிறார்கள்.

அந்த அல்லாஹ் இவர்களை வஞ்சிக்கிறான். இவர்களுடைய வஞ்சனைக்கு அல்லாஹ் தண்டித்துக் கொண்டு இருக்கின்றான் என்று குறிப்பிட்டு விட்டு அல்லாஹ் சொல்லக்கூடிய அடையாளங்களை பாருங்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த அடையாளத்திலிருந்து நம்மை சுத்தப்படுத்துவானாக!  நம்முடைய சமூகத்தை பாதுகாப்பானாக!

முனாஃபிக்குகளுடைய அடையாளங்கள் அவர்கள் தொழுகைக்கு வந்தால் சோம்பேறிகளாக வருவார்கள். அலட்சியமாக வருவார்கள். கவனக்குறைவாக வருவார்கள். வேண்டா வெறுப்புடனே வருவார்கள்.

அன்பிற்குரியவர்களே! ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்நமக்கு எச்சரிக்கை செய்கிறார்கள். இந்த தொழுகையை எப்படி நாம் கடைபிடிக்க வேண்டும்; இந்த தொழுகையில் எப்படி நாம் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்; நம்முடைய ஆசையை வெளிப்படுத்த வேண்டும்.

நம்முடைய உடல் மட்டும் ருகூஉ, ஸுஜூதில் ஈடுபட்டால் போதாது . நம்முடைய நாவு மட்டும் குர்ஆனை ஓதுவதில் ஈடுபட்டால் போதாது. நம்முடைய உள்ளமும் ஈடுபட வேண்டும். உறுப்புகளும், உள்ளமும் நிறைவேற்றப் படக்கூடிய உயர்ந்த உண்ணதமான வணக்கம் தான் இந்த இபாதத் நிறைந்த இந்த தொழுகை.

ஆனால், முனாஃபிக்குகள் எப்படி இந்த தொழுகையை வெறுப்புடனே நிறைவேற்றுவார்கள். அலட்சியத்துடனே நிறைவேற்றுவார்கள். சோம்பேறித் தனத்துடனே நிறைவேற்றுவார்கள்.

இந்த தன்மை நம்மில் எத்தனை பேரிடத்தில் காணப்படுகின்றது. (அல்லாஹ் சீர்திருத்தம் செய்வானாக!)

இதை அலட்சியமாக எடுத்துக்கொள்கிறார்கள். நாம் தான் தொழுகிறோமே!  தொழுகையை விட வில்லையே! ஏதோ ஒரு வகையில் தொழுதுவிடுகிறோமே என்று எண்ணுகிறார்களே! இவர்கள் தங்களை தாங்களே திருப்தி படுத்தி கொள்கிறார்கள்.

ஆனால் அன்பிற்குரியவர்களே! இவர்களைப்பற்றி தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொல்கின்றான். இவர்கள் முனாஃபிக்குகளுடைய பண்புடையவர்கள். அவர்கள் தான் தொழுகைக்கு வரும்போது அலட்சியமாக வருவார்கள். கவனக்குறைவாக வருவார்கள்.

 

فَوَيْلٌ لِلْمُصَلِّينَ (4) الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ

யார் தங்களுடைய தொழுகைகளை மறந்திருக்கிறார்களோ, அதனுடைய நேரங்களை, அதனுடைய ஒழுக்கங்களை, அதனுடைய சட்டங்களை மறந்திருக்கிறார்களோ, அலட்சியம் செய்கிறார்களோ, அத்தகைய தொழுகையாளிகளுக்கு நாசம் உண்டாகட்டும். (அல்குர்ஆன் 107 : 4,5)

இன்று நம்மில் எத்தனை பேர் எப்படி ரஸூல் (ஸல்) அவர்கள் உளூ செய்தார்களோஅது போன்று ஒரு ஆசிரியரைக் கொண்டு அல்லது சரியான ஒரு நூலைக் கொண்டு கற்றிருக்கிறார்களா? அந்த உளூவின் முறையை திருத்திருக்கிறார்களா? தான் தொழக்கூடிய தொழுகை சரியான தொழுகை தான் என்பதை ஒரு சரியான அறிஞரிடத்தில் சென்று திருத்திருக்கிறார்களா? அல்லது ஒரு ஆதாரமிக்க நூலைப்படித்து தன்னுடைய ஒவ்வொரு செயலையும் அதற்கேற்ப அமைத்திருக்கிறார்களா?

யோசித்துப்பாருங்கள். ஏதோ காலம் காலமாக, கூட்டம் கூட்டமாக வந்து பள்ளியில் தொழுகிறார்கள். தொழுவதை பார்த்து அப்படியே நாங்களும் தொழுகிறோம் என்ற அலட்சியம் தானே நம்மில் பலரிடத்தில் காணப்படுகிறது. இதைதான் அல்லாஹ் சொல்கிறான்:

மேலும் யார் தொழுகையின் நேரங்களை அலட்சியம் செய்கின்றார்களோ, அவற்றைப் பற்றி அவர்களுடைய மனதில் கவலை இருப்பது கிடையாது. நினைத்தால் நேரம் கிடைக்கும் பொழுது அல்லது வேலையை விட்டு ஓய்வு கிடைக்கும்பொழுது தொழுது கொள்வார்கள். வேலை அதிகமாக இருந்தால் தொழுகையை தள்ளிப்போட்டுக் கொள்வார்கள்.

சில நேரங்களில் நேரத்தை தவற விடுவார்கள். சில நேரங்களில் கடைசி நேரத்தில் தொழுவார்கள். இப்படி எந்த வகையில் தொழுகையில் அலட்சியம் செய்தாலும் சரி, அது முனாஃபிக்குகளுடைய தன்மை. (அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை பாதுகாப்பானாக!)

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் இந்த தொழுகையை குறித்து பல ஹதீஸ்களில் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறுகிறார்கள் :

إِنَّ أَثْقَلَ صَلَاةٍ عَلَى الْمُنَافِقِينَ صَلَاةُ الْعِشَاءِ وَصَلَاةُ الْفَجْرِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا وَلَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِالصَّلَاةِ فَتُقَامَ ثُمَّ آمُرَ رَجُلًا فَيُصَلِّيَ بِالنَّاسِ ثُمَّ أَنْطَلِقَ مَعِي بِرِجَالٍ مَعَهُمْ حُزَمٌ مِنْ حَطَبٍ إِلَى قَوْمٍ لَا يَشْهَدُونَ الصَّلَاةَ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ بِالنَّارِ

 

நயவஞ்சகத்தன்மை உள்ள முனாஃபிக்குகளுக்கு மிகவும் கஷ்டமான தொழுகை இஷாவுடைய தொழுகையும், ஃபஜ்ருடைய தொழுகையும். இஷாவுடைய தொழுகையிலும் ஃபஜ்ருடைய தொழுகையிலும் இவைகளுக்கு கிடைக்கூடிய நன்மை என்னவென்று தெரிந்தால் இதற்காக இவர்கள் தங்களுடைய கால்களை தேய்த்துக் கொண்டாவது பள்ளிக்கு வந்துவிடுவார்கள்.

மேலும் கூறுகிறார்கள் : ஒரு முஅத்தினை பள்ளியில் தொழுகை நடத்தி பாங்கு சொல்வதற்கு ஒருவரை நியமித்ததற்கு பிறகு என்னுடன் நான் பல வாலிபர்களை அழைத்துக் கொண்டு, அவர்களுடன் விறகு குவியல்களை எடுத்துச் சென்று யார் பள்ளியில் தொழுவதை விட்டும் விலகி இருக்கிறார்களோ, அவர்களை அவர்களுடைய வீட்டில் வைத்து எரித்துவிட வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1041.

சுப்ஹானல்லாஹ்! எந்த அளவிற்கு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஜமாத் தொழுகையை குறிப்பாக ஃபஜ்ருடைய தொழுகையையும், இஷாவுடைய தொழுகையையும் கூறுகிறார்கள்.

இந்த தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவது ஒருவருக்கு சிரமமாக இருக்குமென்றால், அதில் அவர் சிரமத்தையே உணர்கின்றான்.

அந்த தொழுகைகளுக்கு செல்லும்பொழுது மனதில் ஆர்வம் என்பது பிறப்பது கிடையாது, உற்சாகப்படுவது கிடையாது, இவற்றில் இவர் அலட்சியம் செய்கிறார்கள் என்றால் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறுகிறார்கள், இவர்களிடத்தில் நிஃபாக் உடைய தன்மை இருக்கிறது.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள் :

لَقَدْ رَأَيْتُنَا وَمَا يَتَخَلَّفُ عَنْ الصَّلَاةِ إِلَّا مُنَافِقٌ قَدْ عُلِمَ نِفَاقُهُ أَوْ مَرِيضٌ

நாங்கள் எங்களது சமூகத்தைப் பார்த்திருக்கிறோம். அந்த சமூகத்தில் யார் வெளிப்படையாக முனாஃபிக் என்று அறியப்பட்டு விட்டதோ, அவர்கள் தான் பள்ளியில் தொழுவதை விட்டு விலகி செல்வார்கள், அல்லது வர முடியாத அளவிற்கு நோய் உள்ளவர்கள். இந்த இரண்டு நிலையில் உள்ளவர்களை தவிர பள்ளியில் நடக்கக்கூடிய ஜமாஅத்களை அலட்சியம் செய்யமாட்டார்கள். பள்ளியில் நடக்கக்கூடிய ஜமாஅத்தை அலட்சியம் செய்கிறார்கள் என்றால் அவன் முனாஃபிக் என்று அறியப்பட்டிருப்பான். அல்லது நோயாளி என்று அறியப்பட்டிருப்பான். (3)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் எண் : 1045.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய தோழர்கள் இந்த தொழுகையின் விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தார்கள். மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள்.

காரணம், இந்த தொழுகை ஒன்று தான் நம்மை உண்மையான முஃமின் அல்லது பலவீனமான முஃமின் என்பதாக பிரித்துக்காட்டக்கூடியது. அல்லது ஈமானில் ஓட்டை இருக்கிறது அல்லது ஈமானில் குறை இருக்கிறது என்று பிரித்தறிவிக்கக்கூடிய மிக முக்கியமான அடையாளம் என்ற காரணத்தால் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், அவர்களுடைய வழிமுறைக்கு ஏற்ப தொழுகையை பேணக்கூடிய நன்மக்களாக நபித்தோழர்கள் விளங்கினார்கள்.

அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் ஒருமுறை லுஹருடைய தொழுகையை தொழுகிறார்கள். மேகமூட்டமான காலம். விரைவாக அஸருடைய தொழுகையை நிறைவேற்றுவதற்காக பாங்கு சொல்லி அஸருடைய தொழுகையை தொழுகிறார்கள். அந்த நேரத்தில் அனா இப்னு அப்துர்ரஹ்மான் என்ற அவருடைய மாணவன் கேட்கிறார்கள் :

நபியின் தோழர் அவர்களே! இவ்வளவு சீக்கிரமாக அஸருடைய தொழுகையை நீங்கள் நிறைவேற்றுகிறீர்களே, இப்போது தானே நேரம் வந்தது. நேரம் வந்த உடனேயே நீங்கள் தொழுகையை நிறைவேற்றுகிறீர்களே?

இது பற்றி அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் பதில் கூறினார்கள்.

تِلْكَ صَلَاةُ الْمُنَافِقِ يَجْلِسُ يَرْقُبُ الشَّمْسَ حَتَّى إِذَا كَانَتْ بَيْنَ قَرْنَيْ الشَّيْطَانِ قَامَ فَنَقَرَهَا أَرْبَعًا لَا يَذْكُرُ اللَّهَ فِيهَا إِلَّا قَلِيلًا

அது முனாஃபிக்குகளுடைய தொழுகை, அது முனாஃபிக்குகளுடைய தொழுகை, அது முனாஃபிக்குகளுடைய தொழுகை என்று மூன்று முறை கூறினார்கள்.

அவர்களில் ஒருவர் அமர்ந்து கொள்கிறார், தன்னுடைய வேளையில் அல்லது அலட்சியத்தில் அமர்ந்து கொண்டு சூரியன் மறைவதை எதிர்பார்க்கிறான். சூரியன் மஞ்சனிக்கும் நேரம் வந்தவுடன் எழுந்து சென்று அவசரம் அவசரமாக காக்கை கொத்துவது போன்று நான்கு ரக்அத்துகளை கொத்துகிறார். அந்த தொழுகையில் அவர் அல்லாஹ்வை வெகு சொற்பமாகவே தவிர நினைவு கூர்வது கிடையாது.(4)

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 987.

மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்: இது அஸருடைய தொழுகை மட்டுமல்ல. எல்லா தொழுகைகளுக்கும் இந்த ஹதீஸ் பொருத்தமானது.

அன்பிற்குரியவர்களே! இதைதான் அல்லாஹ் சுப்ஹானஹ் வதஆலா இந்த குர்ஆனுடைய நான்காவது அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான்.

முனாஃபிக்குகளுடைய இரண்டு தன்மைகளை இந்த வசனத்தில் கூறும்பொழுது,

1. தொழுகையில் அவர்கள் அலட்சியம் செய்வது. தொழுகையுடைய சட்டங்களை தெரியாமல் இருப்பது. தொழுகையினுடைய நேரங்களை புறக்கணிப்பது.

2. இவர்கள் அல்லாஹ்வை வெகு சொற்பமாக நினைவு கூர்வார்கள். 'திக்ர்' -அல்லாஹ்வுடைய நினைவு இவர்களிடத்தில் வெகு சொற்பமாக இருக்கும்.

அன்பிற்குரியவர்களே! ரஸூல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய வாழ்க்கையை எடுத்து பாருங்கள். திக்ர்-அல்லாஹ்வை நினைப்பதே அவர்களுடைய வாழ்க்கையாக இருந்தது.

ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹாஅவர்கள் கூறுகிறார்கள் :

كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللَّهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ

 

தங்களுடைய எல்லா சந்தர்பங்களிலும், சமயங்களிலும்,நிலைமைகளிலும் அல்லாஹ்வை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்நினைவு கூர்பவராக இருந்தார்கள்.

அறிவிப்பாளர்: ஆயிஷாரழியல்லாஹுஅன்ஹா, நூல்: புகாரி, எண்: 598.

முஃமின்களை பற்றி அல்லாஹ் கூறுகின்றான் :

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள். (அல்குர்ஆன் 33:41)

وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا

இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள். (அல்குர்ஆன் 33:42)

சுப்ஹானல்லாஹ்,அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்ற திக்ருகளை அதிகப்படுத்துங்கள்.

فَاصْبِرْ عَلَى مَا يَقُولُونَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا وَمِنْ آنَاءِ اللَّيْلِ فَسَبِّحْ وَأَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ تَرْضَى

ஆகவே (நபியே!) அவர்கள் சொல்வதை(யெல்லாம்) நீர் பொறுத்துக் கொள்வீராக; இன்னும் சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது அடைவதற்கு முன்னும், இரவின் நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதித்துத் தொழுவீராக; மேலும் இன்னும் பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்து தொழுவீராக; இதனால் (நன்மைகளடைந்து) நீர் திருப்தி பெறலாம். (அல்குர்ஆன் 20:130)

وَمِنَ اللَّيْلِ فَاسْجُدْ لَهُ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيلًا

இன்னும் இரவிலும் அவனுக்கு ஸுஜூது செய்வீராக; அன்றியும் இரவில் நெடுநேரம் அவனுக்கு தஸ்பீஹு (துதி) செய்வீராக. (அல்குர்ஆன் 76:26)

ஒரு முஃமின் அல்லாஹ்வை திக்ரு செய்வான். உணவு அருந்துவதற்கு முன்பு, உணவு அருந்தியதற்கு பின்பு, வீட்டை விட்டு வெளியேறும்போது, வீட்டுக்குள் வரும்பொழுது, கடைவீதிக்கு செல்லும்பொழுது, அங்கிருந்து வரும்பொழுது இப்படி எல்லா நிலைமைகளிலும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அல்லாஹ்வை நினைவு கூர்வதற்கு நமக்கு திக்ரைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

இது அல்லாமல் நம்முடைய ஈமானை நாம் பரிசுத்தப்படுத்துவதற்கு, அதிகப்படுத்துவதற்கு, அல்லாஹ்வினுடைய அன்பை அதிகப்படுத்தி கொள்வதற்கு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் பல திக்ருகளை கற்றுத்தருகிறார்கள்.

كَلِمَتَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ

இரண்டு வார்த்தைகள், நாவில் கூறுவதற்கு இலகுவானவை. நாளை மறுமையில் தராசு தட்டில் நன்மைகளை கனக்க வைக்கக்கூடியவை, ரஹ்மானுக்கு மிக விருப்பமானவை. அவை,

1.سبحان الله وبحمده

2.سبحان الله العظيم

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7008.

இப்படி அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்வது உண்மையான இறைநம்பிக்கை, ஈமான் இருக்கிறது என்பதற்கு அடையாளம்.

யார் அல்லாஹ்வை நினைவு கூறவில்லையோ, அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காக ஒரு நேரத்தை ஒதுக்கவில்லையோ, அவர்கள் நிஃபாக் உடைய தன்மை உள்ளவர்கள். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

بَاب خَوْفِ الْمُؤْمِنِ مِنْ أَنْ يَحْبَطَ عَمَلُهُ وَهُوَ لَا يَشْعُرُ وَقَالَ إِبْرَاهِيمُ التَّيْمِيُّ مَا عَرَضْتُ قَوْلِي عَلَى عَمَلِي إِلَّا خَشِيتُ أَنْ أَكُونَ مُكَذِّبًا وَقَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ أَدْرَكْتُ ثَلَاثِينَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّهُمْ يَخَافُ النِّفَاقَ عَلَى نَفْسِهِ مَا مِنْهُمْ أَحَدٌ يَقُولُ إِنَّهُ عَلَى إِيمَانِ جِبْرِيلَ وَمِيكَائِيلَ وَيُذْكَرُ عَنْ الْحَسَنِ مَا خَافَهُ إِلَّا مُؤْمِنٌ وَلَا أَمِنَهُ إِلَّا مُنَافِقٌ وَمَا يُحْذَرُ مِنْ الْإِصْرَارِ عَلَى النِّفَاقِ وَالْعِصْيَانِ مِنْ غَيْرِ تَوْبَةٍ لِقَوْلِ اللَّهِ تَعَالَى { وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ } (صحيح البخاري)

குறிப்பு 2)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي أَخِي عَنْ سُلَيْمَانَ عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي مُزَرِّدٍ عَنْ أَبِي الْحُبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ الْعِبَادُ فِيهِ إِلَّا مَلَكَانِ يَنْزِلَانِ فَيَقُولُ أَحَدُهُمَا اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا وَيَقُولُ الْآخَرُ اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا (صحيح البخاري  1351 -)

குறிப்பு 3)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ أَبِي زَائِدَةَ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ عَنْ أَبِي الْأَحْوَصِ قَالَ قَالَ عَبْدُ اللَّهِ لَقَدْ رَأَيْتُنَا وَمَا يَتَخَلَّفُ عَنْ الصَّلَاةِ إِلَّا مُنَافِقٌ قَدْ عُلِمَ نِفَاقُهُ أَوْ مَرِيضٌ إِنْ كَانَ الْمَرِيضُ لَيَمْشِي بَيْنَ رَجُلَيْنِ حَتَّى يَأْتِيَ الصَّلَاةَ وَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَنَا سُنَنَ الْهُدَى وَإِنَّ مِنْ سُنَنِ الْهُدَى الصَّلَاةَ فِي الْمَسْجِدِ الَّذِي يُؤَذَّنُ فِيهِ (صحيح مسلم 1045 -)

குறிப்பு 4)

و حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَقُتَيْبَةُ وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ

أَنَّهُ دَخَلَ عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فِي دَارِهِ بِالْبَصْرَةِ حِينَ انْصَرَفَ مِنْ الظُّهْرِ وَدَارُهُ بِجَنْبِ الْمَسْجِدِ فَلَمَّا دَخَلْنَا عَلَيْهِ قَالَ أَصَلَّيْتُمْ الْعَصْرَ فَقُلْنَا لَهُ إِنَّمَا انْصَرَفْنَا السَّاعَةَ مِنْ الظُّهْرِ قَالَ فَصَلُّوا الْعَصْرَ فَقُمْنَا فَصَلَّيْنَا فَلَمَّا انْصَرَفْنَا قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ تِلْكَ صَلَاةُ الْمُنَافِقِ يَجْلِسُ يَرْقُبُ الشَّمْسَ حَتَّى إِذَا كَانَتْ بَيْنَ قَرْنَيْ الشَّيْطَانِ قَامَ فَنَقَرَهَا أَرْبَعًا لَا يَذْكُرُ اللَّهَ فِيهَا إِلَّا قَلِيلًا (صحيح مسلم 987 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/