HOME      Khutba      அந்த பத்து நாட்களின் சிறப்பு | Tamil Bayan - 05   
 

அந்த பத்து நாட்களின் சிறப்பு | Tamil Bayan - 05

           

அந்த பத்து நாட்களின் சிறப்பு | Tamil Bayan - 05


அந்த பத்து நாட்களின் சிறப்பு

ஜுமுஆ குத்பா தலைப்பு : அந்த பத்து நாட்களின் சிறப்பு

வரிசை : 05

இடம் : மஸ்ஜிதுஸ் ஸலாம், புதுப்பேட்டை, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அன்புக்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு உங்களுக்கும் எனக்கும் அறிவுரை கூறியவனாக ஆரம்பம் செய்கின்றேன்.

யார் அல்லாஹ்வை பயந்து கொள்கிறார்களோ அவர்கள் இம்மையிலும் வெற்றி அடைவார்கள்; மறுமையிலும் வெற்றி அடைவார்கள்.

இறையச்சம் ஒன்றுதான் இந்த மார்க்கத்தில் நாம் முழுமையாகப் பெறுவதற்கு நமக்குத் துணையாக நிற்கக் கூடியது. யாருடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் அச்சம் மிகுந்து காணப்படும்மோஅவர் அதிகம் நல்லமல்களை செய்வார்.

பாவங்களை விட்டு விலகி இருப்பார். எப்போதும் மறுமையின் சிந்தனை உடையவராக இருப்பார். சொர்க்கத்தின் மீது ஆசை உடையவராக இருப்பார். நரகத்தை பயந்து இருப்பார்

மக்களுக்கு மத்தியில் இணக்கமாக நல்ல பண்புகளுடன் தங்களது வாழ்க்கையை மேற்கொள்வார்.

யாருடைய உள்ளத்தில் இறையச்சம் இல்லையோ அவர்கள் நன்மைகளை செய்வதில் அலட்சியம் செய்வார்கள். பாவங்களையும் மன இச்சைகளை செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.

அல்லாஹ்விற்கும் படைப்பினங்களுக்கும் செய்யக்கூடிய கடமைகளை பாழ்படுத்தி விடுவார்கள். ஆகவேதான் அல்லாஹு தஆலா நமக்கும் நமக்கு முன் சென்ற மக்களுக்கும் சொல்கின்றான்.

وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ

உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட மக்களுக்கும் உங்களுக்கும் நீங்கள் அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுமாறு நாம் திட்டவட்டமாக உபதேசம் செய்து விட்டோம். (அல்குர்ஆன் 4 : 131)

ஆகவே, நாம் அல்லாஹ்வை அதிகமதிகம் பயந்து கொள்வோமாக! இறையச்சத்தைக் கொண்டு நமது வாழ்க்கையை அலங்கரிப்போமாக! அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா இவ்வுலக வாழ்க்கை முழுவதுமே மறுமைக்குரிய தயாரிப்பாக நமக்கு ஆக்கி இருக்கிறான்.

நம்முடைய தேவை நம்முடைய மற்ற காரியங்கள் எல்லாம் இரண்டாவது தான். ஒருவனுடைய முதல் குறிக்கோள், மறுமையில் வெற்றி பெற வேண்டும்.

அல்லாஹு தஆலா இதைப் பற்றி மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றான்.

مَنْ كَانَ يُرِيدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهُ فِيهَا مَا نَشَاءُ لِمَنْ نُرِيدُ ثُمَّ جَعَلْنَا لَهُ جَهَنَّمَ يَصْلَاهَا مَذْمُومًا مَدْحُورًا (18) وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا

எவர்கள், (மறுமையைப் புறக்கணித்துவிட்டு) இம்மையை மட்டும் விரும்புகிறார்களோ அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடியதை இம்மையில் கொடுத்து விடுகிறோம். பின்னர், மறுமையில் நரகத்தைத்தான் அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறோம். அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் அதில் நுழைவார்கள். எவர்கள் மறுமையை விரும்பி அதற்காகப் பெரும் முயற்சியையும் எடுத்துக் கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ, அவர்களின் செயல்கள் (அல்லாஹ் விடத்தில் மிக்க அன்பாக) அங்கீகரிக்கப்படுபவையாக இருக்கின்றன. (அல்குர்ஆன் 17 : 18,19)

இன்று, முஸ்லிம்களில் பலர் நாங்களும் மறுமையை நாடுகின்றோம், நாங்களும் சொர்க்கத்தை விரும்புகின்றோம், நரகத்தை பயப்படுகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால், அதற்குண்டான சாட்சிகள் அவர்களிடத்தில் இருப்பதில்லை.

என்ன சாட்சிகள் அது?நல்ல அமல்கள். எவ்வளவு நன்மைகளை அவர்கள் ஒவ்வொரு நாளும் செய்கிறார்கள்?தொழுகையைப் பேணுகின்றார்களா?நோன்பை பேணுகின்றார்களா?

இந்த மார்க்கத்தில் இருக்கும் வணக்க வழிபாடுகளை பேணுகிறார்களா? நற்பண்புகளை பேணுகின்றார்களா?இவையெல்லாம் அவர்களிடத்தில் இருக்காது.

மறுமைக்காக எப்படி முயற்சி செய்ய வேண்டுமோ அப்படி முயற்சி செய்ய வேண்டும். தனது விருப்பத்துக்கேற்ப வணக்க வழிபாடுகள் செய்வதற்கு அனுமதி இல்லை. தான் விரும்பிய வழியில் நன்மையைத் தேடுவதற்கு அனுமதி இல்லை.

மறுமையை எப்படி தேட வேண்டும் என்றால், அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் அவர்களும் எப்படி காட்டி இருக்கிறார்களோ அந்த வழியில் சென்று தான் நாம் மறுமையை தேட வேண்டும்.

அந்த வழியை தவற விட்டு விட்டால் பார்ப்பதற்கு வெளிரங்கத்திற்கு வணக்க வழிபாடாக தெரிந்தாலும் நாளை மறுமையில் அவர்களுக்கு அல்லாஹு தஆலா கூலியை கொடுக்க மாட்டான். நன்மை கொடுக்க மாட்டான்.

மாறாக அவை அனைத்தும் அவர்களின் முகங்களில் குப்பைகளாக தூக்கி எறியப்படும். குப்பைகளாக ஆக்கப்பட்டு விடும். அல்லாஹ் பாதுகாப்பானாக.

நாளை மறுமையில் பல மக்கள் நன்மைகளைக் கொண்டு வருவார்கள். பார்ப்பதற்கு நன்மைகளாக தெரியும். ஆனால், ரசூலுல்லாஹி அவர்கள் காட்டித்தந்த வழியில் அது இருக்காது. அவை அனைத்தும் அவர்கள் முகத்தில் தூக்கி வீசப்படும். அவர்கள் நரகத்திற்கு முகம் குப்புற தள்ளப்படுவார்கள்

ஆகவே, அல்லாஹு தஆலா சொல்கின்றான்; யார் மறுமையை நாடி மறுமைக்காக எப்படி முயற்சி செய்ய வேண்டுமோ அப்படி முயற்சி செய்கிறார்.

அவர்களுடைய முயற்சிக்கு நன்மை செலுத்தப்படும். நீங்கள் செய்யக்கூடிய நன்மைக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அதாவது, நீங்கள் செய்யக்கூடிய நன்மைக்கு நீங்கள் செய்வதை விட சிறந்த கூலியை அல்லாஹ் தருகின்றான்.

لِيَجْزِيَهُمُ اللَّهُ أَحْسَنَ مَا عَمِلُوا وَيَزِيدَهُمْ مِنْ فَضْلِهِ وَاللَّهُ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ

அவர்கள் செய்துகொண்டிருந்த (நன்மையான)வற்றை விட அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான். தன் அருளைக்கொண்டு மேன்மேலும் அவர்களுக்கு அதிகமாகவே கொடுப்பான். அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றியே கொடுக்கிறான். (அல்குர்ஆன் 24 : 38)

هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ

நீங்கள் செய்யும் நன்மைக்கு கூலி நன்மையை தவிர வேறு எதுவாக இருக்க முடியும். (அல்குர்ஆன் 55 : 60)

இந்த முழு உலக வாழ்க்கையும் மறுமையை தேடுவதற்கு உண்டான ஒரு காரணமாக நமக்கு இருந்தாலும் அல்லாஹு தஆலா நமக்கு அந்த நன்மையின் பக்கம் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக, ஒரு குறிப்பிட்ட நாட்களில் முழுக்க முழுக்க வணக்க வழிபாட்டுக்காக ஒதுக்கிவிட வேண்டும் என்பதற்காக நமது வாழ்க்கையில் அல்லாஹு தஆலா சில காலங்களை குறிப்பிடுகின்றான்.

சில அவகாசங்களை அல்லாஹ் ஏற்படுத்துகின்றான். சில சீசன்களை அல்லாஹ் ஒதுக்கினான். அந்த சீசன்களுக்கு அந்த காலங்களுக்கு அல்லாஹு தஆலா பொதுவான காலத்தில் செய்யப்படும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகளை வாரி வழங்குகின்றான்.

அல்லாஹ்வுடைய தூதர் கூறிய ஐந்து கடமைகளை செய்வதில் அலட்சியம் காட்டுபவன் சொர்க்கம் செல்ல மாட்டான்.

பெரும்பாலான முஸ்லிம்கள், இந்த கடமைகளில் பாழாக்கி விட்டு தங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பதாக ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.

எச்சரிக்கை செய்ய வேண்டும்,யார் தொழுகையை வேண்டுமென்று விடுகிறார்களோ அவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்பது ரஸூலுல்லாஹி அவர்களுடைய தீர்ப்பு. யார் ஸக்காத் கொடுப்பது இல்லையோ அவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்பது அல்லாஹ்வுடைய தூதர் அவர்களுடைய தீர்ப்பு.

யார் ரமலான் மாதத்தில் நோன்பு வைக்கவில்லையோ அவர்கள் இஸ்லாமையை சேர்ந்தவர்கள் அல்ல, யார் ஹஜ் கடமையானதற்கும் பிறகும் காலத்தை தள்ளிப் போட்டு அதை செய்யாமல் மரணித்து விடுகிறார்களோ அவர் முஸ்லிம் அல்ல.

அவருடைய மரணம் ஒன்று, அவர் யஹூதியாக இருக்கும் நிலையில் அல்லது அவர் ஒரு கிறிஸ்துவராக இருக்கும் நிலையில் அல்லது அவர் ஒரு மஜூசியாக இருக்கும் நிலையில் ஏற்படும் என்றார்கள்.(1)

நூல் : ஷுஅபுல் ஈமான் பைஹகீ, எண் : 3818.

அல்லாஹ் கூறுகின்றான் :

وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ

யாருக்கு வசதி இருக்குமோ அவன் அல்லாஹ்விற்காக அவனது வீட்டை ஹஜ் செய்வது கடமை. யார் நிராகரிப்பார்களோ,யார் நிராகரிப்பார்களோ என்று அல்லாஹ் சொல்கிறான். அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். (அல்குர்ஆன் 3 : 97)

இந்த ஐந்து கடமைகள் இல்லாமல் இஸ்லாமியமார்க்கம் கிடையாது. ஒருவர் ஷஹாதாவை கூறினால் அதற்கு அடுத்துள்ள இந்த நான்கு கடமைகளை அவர் அடிப்படையாக செய்தே ஆகவேண்டும்.

இந்த நான்கு கடமைகளை விட்டு பிரித்து தனியாக ஒருவரை முஸ்லிமாக மாற்ற முடியாது. இந்த விஷயத்தை நாமும் புரிய வேண்டும். நம்முடைய முஸ்லிம் சமுதாயத்தில் யாரைப் பார்த்தாலும் ஆழமாக அழுத்தமாக திருத்தமாக அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

உபரியான வணக்க வழிபாடுகளில் யாரொருவர் பல சூழ்நிலைகளால் அவற்றை அதிகமாக செய்ய முடியவில்லையோ அல்லாஹு தஆலா இதுபோன்று காலங்களை சீசன்களை ஏற்படுத்துகிறான்.

அந்த சீசன்களை பயன்படுத்தி தங்களுடைய மற்ற வேலைகளை எல்லாம் முடிந்தால் ஒதுக்கிவைத்துவிட்டு நஃபிலான வணக்க வழிபாடுகளை அதிகமாக செய்துகொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட சீசன்களில் ஒன்றுதான், ஜும்ஆ உடைய நாள். அப்படிப்பட்ட சீசன்களில் ஒன்றுதான், ரமலானுடைய மாதம். அப்படிப்பட்ட சீசன்களில் ஒன்றுதான் அடுத்து நாம் சந்திக்கக் கூடிய துல்ஹஜ் மாதம்.

துல்கஅதா, துல்ஹஜ்,முஹர்ரம்,ரஜப் இந்த நான்கு மாதங்களும் அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட மாதங்கள்.

அல்லாஹு தஆலா குறிப்பிடுகின்றான் :

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, இவற்றில் நீங்கள் (போர் புரிந்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். (அல்குர்ஆன் 9 : 36)

கைசேதம் என்ன என்றால், நம்மில் பலருக்கு அந்த நான்கு மாதங்கள் என்ன? என்று கூட தெரியாது. 12மாதங்களில் சங்கைக்குரிய நான்கு மாதங்கள், தனிச்சிறப்புடைய மாதங்கள் இருக்கிறதா? என்று கூட குர்ஆன் ஹதீஸ் பேசக்கூடிய பலருக்கு தெரியாது.

எப்படிப்பட்ட கேவலம் பாருங்கள்! பலரைப் பற்றி குறை பேசுவார்கள், பல விஷயங்களை பற்றி விவாதிப்பார்கள், இதுதான் சகோதர்களே கல்வியில் ஏற்பட்ட மோசடி.

அல்லாஹ் சொல்கின்றான் : (அல்குர்ஆன் 9 : 36)

அநீதி இழைத்துக் கொள்வது என்று சொன்னால், பாவம் செய்வது. அல்லாஹ் உடைய கட்டளைக்கு மாற்றமாக நடப்பது.

அநீதியில் மிகப்பெரிய அநீதி, அல்லாஹ்வுக்கு இணைவைப்பது ஆகும். அதற்கு அடுத்து ஒவ்வொரு பாவமும் அநீதியாகும்.

பாவங்கள் எல்லாம் மறுமையில் இருள் சூழ்ந்து விடும். ஒருவர் பாவம் செய்கிறார் என்றால் நாளை மறுமையில் அவரை இருள் சூழ்ந்து கொள்ளும்.

அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். இந்த கண்ணியத்திற்குரிய சங்கைமிக்க மாதங்களில் உங்களுக்கு நீங்கள் அநீதி இழைக்காதீர்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று  அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துகின்றான்.

அல்லாஹ் நம்முடைய சிந்தனையை திரும்புகின்றான். இந்த குறிப்பிட்ட நான்கு மாதங்களில் அதிகம் அல்லாஹ்வை வணங்குங்கள், நன்மைகளை அதிகமாக செய்யுங்கள், கூடுதலாக அல்லாஹ்வை பயந்து இறையச்சத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று.

அடுத்த மாதத்தில் அந்த இறையச்சத்தைக் கொண்டு உங்களது வாழ்க்கையை நீங்கள் சீர் படுத்துவதற்காக. அந்த நன்மைகளை நீங்கள் தொடர்வதற்காக. உங்களது வாழ்க்கை எப்போதும் இறையச்சதிற்கு ஏற்ப அல்லாஹ்வுடைய கட்டளைக்கு ஏற்ப தூதர் அவர்களுடைய வழிமுறைக்கு ஏற்ப அமைத்துக் கொள்வதற்காக.

ரமழான் உடைய மாதம் தக்வாவை கொடுக்கிறது. நமது நஃப்சை அடக்கி பக்குவத்தை கொடுக்கிறது.

இப்படித்தான் அல்லாஹு தஆலா காலங்களில் நமக்கு பயத்தை தருகிறான். அடுத்து குறிப்பிட்டு நாம் சொல்வது என்னவென்றால், அல்லாஹு தஆலா துல்ஹஜ் மாதத்தை சங்கைப்படுத்தி இருக்கிறான். கண்ணியப்படுத்தி இருக்கிறான்.

இஸ்லாமிய கடமைகளில் மிகப்பெரிய கடமையான ஹஜ்ஜை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த புனிதமிக்க மார்க்கத்தில் கடமையாக்கி இருக்கிறான்.

الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللَّهُ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ

ஹஜ்ஜூ (அதற்கெனக்) குறிப்பிட்ட (ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ்ஜூ ஆகிய) மாதங்களில்தான். ஆகவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தன்மீது கடமையாக்கிக் கொண்டால் ஹஜ்ஜூ (மாதத்தின் பத்தாம் தேதி) வரை வீடு கூடுதல், தீச்சொல் பேசுதல், சச்சரவு செய்தல் கூடாது. நீங்கள் என்ன நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறி(ந்து அதற்குரிய கூலி தரு)வான். தவிர, (ஹஜ்ஜூடைய பயணத்திற்கு வேண்டிய) உணவுகளை (முன்னதாகவே) தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், நிச்சயமாக (நீங்கள்) தயார்படுத்திக்கொள்ள வேண்டியவற்றில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்தான். ஆதலால், அறிவாளிகளே! நீங்கள் (குறிப்பாக ஹஜ்ஜூடைய காலத்தில்) எனக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2 : 197)

வசனத்தின் கருத்து : ஹஜ் குறிப்பிட்ட அறியப்பட்ட மாதங்கள். ஷவ்வாலில் இருந்து நீங்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணியலாம். ஆனால் ஹஜ்ஜுடைய அமல்கள் செய்யக்கூடிய மாதங்களில் துல்ஹஜ் மாதத்தில் தான்.

பிறை எட்டிலிருந்து பிறை 13வரை. சில முட்டாள்கள் விளங்கிக் கொள்வது போன்று ஷவ்வால் மாதத்திலிருந்து ஹஜ் செய்து விடலாம் என்பார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் எப்படி கற்பித்தார்களோ அப்படித்தான் அதை நாம் புரிய வேண்டுமே தவிர நம்முடைய அற்ப அறிவுக்கு ஏற்ப குர்ஆனை புரிந்து கொள்ள முடிவு செய்யக்கூடாது.

அல்லாஹு தஆலா இந்த துல்ஹஜ் மாதத்துடைய அந்த சிறப்பு இருக்கிறதே அல்லாஹுத்தஆலா குர்ஆனில் வலியுறுத்தி சொல்கிறான். எந்த ஒன்றின் மீது அல்லாஹ் சத்தியம் செய்கின்றானோ அதற்கு தனி சிறப்பு இருக்கிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹு தஆலா சூரத்துல் ஃபஜ்ரில் கூறுகின்றான் :

وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ (2) وَالشَّفْعِ وَالْوَتْرِ (3) وَاللَّيْلِ إِذَا يَسْرِ (4) هَلْ فِي ذَلِكَ قَسَمٌ لِذِي حِجْرٍ

விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக! ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும், சத்தியமாக! நிகழ்கின்ற இரவின் மீது சத்தியமாக! (கேள்வி கணக்கு கேட்கும் நாள் வந்தே தீரும்). இதில் அறிவுடையவர்களுக்கு (நம்பிக்கையளிக்கக்கூடிய) பெரியதொரு சத்தியம் இருக்கிறது. (அல்குர்ஆன் 89 : 1-5)

மேலும், அல்லாஹ் கூறுகிறான் :

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 3 : 190)

இந்த வசனத்தைக் கூறி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:யார் இந்த வசனத்தை சிந்திக்க வில்லையோ,யார் இந்த வசனத்தின் மீது ஆராய்ச்சி செய்யவில்லையோ, அவர்களுக்கு நாசம் உண்டாகட்டும் என்பதாக.

இந்தப் பத்து நாட்கள் என்பது என்ன?அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு, அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு கூறும் கூற்றை இமாம் இப்னு கஸீர் ரஹ்மத்துல்லாஹ் பதிவு செய்கிறார்கள் :

இந்தப் பத்து நாட்கள் என்பது உலமாக்களின் ஏகோபித்த முடிவின்படி, துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்கள் ஆகும்.

ரசூலுல்லாஹ் இந்த பத்து நாட்கள் உடைய சிறப்பைப் பற்றி சொன்னார்கள் :

مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهَا أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ يَعْنِي أَيَّامَ الْعَشْرِ

அல்லாஹு தஆலா இடத்தில் நல்ல அமல்கள் மிக விருப்பமானவை. ஆனால், துல்ஹஜ் மாதத்துடைய பத்து தினங்களில் செய்யப்படும் நல்லமல்களைத் தவிர.

துல்ஹஜ் மாதத்துடைய முதல் பத்து நாட்களில் செய்யப்படும் நல்லமல்கள், மற்ற நாட்களில் செய்யப்படும் நல்லமல்களை விட அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவை.(2)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 2082.

இதே ஹதீஸ் இப்படியும் அறிவிக்கப்படுகின்றது.

அல்லாஹ் இடத்தில் மிகத் தூய்மையான வணக்க வழிபாடு,நன்மையான மிக மகத்தான வணக்க வழிபாடு,துல்ஹஜ் மாதத்தில் 10நாட்களில் செய்யப்படும் அமல்களை தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.

துல்ஹஜ் மாதம் பிறை ஒன்றிலிருந்து முதல் 10நாள் வரை செய்யப்படக்கூடிய அமல்களுக்கு அல்லாஹ் எந்த அளவுக்கு தனது விருப்பத்தையும் அன்பையும் நற்கூலியும் தருகின்றானோ அந்த அளவு அன்பையும் நற்கூலிகளையும் மற்ற அமல்களுக்கு தருவதில்லை.

இந்த ஹதீஸில் சஹாபாக்கள் கேட்கக் கூடிய கேள்வி, யா ரசூலல்லாஹ்! அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவதை விட இந்த மாதத்தில் நல்லமல்கள் செய்வது அல்லாஹ்விற்கு மிக விருப்பமானாதா?

ரசூலுல்லாஹ் சொன்னார்கள் :

وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ

அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாத் செய்வதை விட இந்த மாதத்தில் நல்லமல்கள் செய்வது அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது. ஆனால், யார் தனது உயிரைக் கொண்டும் பொருளைக் கொண்டும் அல்லாஹ்வுடைய பாதையில் வெளியேறி திரும்பி வீட்டிற்கு வரவில்லையோ அவரைத் தவிர.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 2082.

அது நன்மையின் உச்சகட்டம். அது யாரும் அடைய முடியாது. அல்லாஹு அக்பர்! எப்படிப்பட்ட உயர்வை அல்லாஹு தஆலா இந்த துல்ஹஜ் மாதத்திற்கு கொடுத்து இருக்கின்றான்.

இந்தப் பத்து நாட்களைப் பற்றி குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் சொல்கிறான் :

وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ (27) لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ

(அவரை நோக்கி) “ஹஜ்ஜூக்கு வருமாறு நீர் மனிதர்களுக்கு அறிக்கையிடுவீராக. (அவர்கள்) கால்நடையாகவும் உங்களிடம் வருவார்கள்; இளைத்த (ஒட்டக) வாகனங்களின் மீது வெகு தொலை தூரத்திலிருந்தும் (உங்களிடம்) வருவார்கள். (வர்த்தகத்தின் மூலம்) தங்கள் பயனை நாடியும் (அங்கு வருவார்கள்). குறிப்பிட்ட நாள்களில் அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடை பிராணிகள் மீது அவனது திருப்பெயரைக் கூறி அறுப்பதற்காகவும் அ(ங்கு வருவார்கள். (அல்குர்ஆன் 22 : 27,28)

இந்தக் குறிப்பிட்ட நாட்கள் என்றால் என்ன? என்பதற்கு இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்கம் சொல்கின்றார்கள் : துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிட்டு அறியப்பட்ட நாட்கள் என்று கூறுகிறான் என்பதாக.

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு மேலும் ரசூலுல்லாஹி அவர்கள் மூலமாக ஒரு ஹதீஸை அறிவிக்கின்றார்கள்.

مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللَّهِ وَلَا أَحَبُّ إِلَيْهِ مِنْ الْعَمَلِ فِيهِنَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ فَأَكْثِرُوا فِيهِنَّ مِنْ التَّهْلِيلِ وَالتَّكْبِيرِ وَالتَّحْمِيدِ

அல்லாஹ்விற்கு மிக விருப்பமான நன்மைகளில் மிக மகத்தான நன்மை எதுவும் இருக்க முடியாது, இந்த 10நாட்களில் செய்யப்படுகின்ற நன்மையை விட. எனவே, இந்த நாட்களில் அதிகமாக லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை முணங்குங்கள். அதிகமாக அல்லாஹு அக்பர் என்ற தக்பீரை முணங்குங்கள் அல்ஹம்துலில்லாஹ் என்ற தக்பீரை முணங்குங்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 5189.

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு மூலமாக அறிவிக்கக்கூடிய சயீத் இப்னு ஸுபைர் ரலியல்லாஹு அன்ஹு தாபியீன்கள் மிகச் சிறந்தவர்கள். அவர்களைப் பற்றி அவர்களுடைய மாணவர்கள் சொல்கின்றார்கள்:

துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்கள் வந்துவிட்டால் அவர்கள் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகளை எங்களால் கணக்கிட முடியாது என்பதாக.

தொழுது கொண்டு இருப்பார்,நோன்பு வைத்துக்கொண்டு இருப்பார்,தர்மம் செய்து கொண்டு இருப்பார், குர்ஆன் ஓதுவது, திக்ரு செய்வது எந்த நேரத்தில் அவர்களைப் பார்த்தாலும் வணக்க வழிபாடுகளில் திலைத்து இருப்பார்.

எவ்வளவு வணக்க வழிபாடுகளை அந்தப் பத்து நாட்களில் அவர் செய்து முடித்திருப்பார் என்று எங்களால் கணக்கிட முடியாது.

இன்று பாருங்கள். நம்மில் பலர், அது வருவதும் தெரியவில்லை. பெருநாளன்று புது ஆடை உடுத்தினோமா?சாப்பிட்டோமா?நாம் பெருநாளை கொண்டாடி விட்டோம் என்று பெருமையில் இருக்கிறார்களே தவிர இப்படிப்பட்ட ஒரு புனிதமான நாளை அடைந்து நன்மைகளை நாம் சேர்த்தோமா? என்று யார் கணக்குப் பார்க்கிறார்கள்.

இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் சொல்கின்றார்கள்; ஏன் இந்த பத்து நாட்களுக்கு இவ்வளவு பெரிய உயர்வுகளை அல்லாஹ் வழங்கியிருக்கிறான் என்று சொன்னால், அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒரு காரணம், அல்லாஹு தஆலா எல்லா வணக்க வழிபாடுகளையும் இந்த மாதத்துடன் 10நாட்களில் ஒன்று சேர்த்து விட்டான்.

பல நாட்களில் வணக்க வழிபாடுகளை பிரித்து தான் செய்ய முடியும். இஸ்லாமிய ஐந்து வணக்க வழிபாடுகளையும் ஒரே சமயத்தில் செய்ய முடியும் என்று சொன்னால் அது அந்த துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களில் தான்.

ஹஜ் அந்த மாதத்தில் தான். அந்த நாட்களில் தான் செய்ய முடியும். அந்த மாதத்தில் நோன்பையும் வைக்கலாம். துல்ஹஜ் மாத முதல் பத்து நோன்பு வைக்கலாம். குறிப்பாக அரஃபாவுடைய நோன்பு.

அதுகுறித்து, ரசூலுல்லாஹி மிக உயர்வான நன்மையை சொன்னார்கள்:

இந்த உலகத்தில் சூரியன் உதித்த நாட்களில் சிறந்தநாள் அரஃபாவுடைய நாள். அல்லாஹ் இறங்கி வருகிறான் தனது வானவர்களிடம் அரஃபா மக்களைப் பார்த்து பெருமை பேசுகிறான்.

வானவர்களே! எனது மக்களை பாருங்கள். அவர்கள் ஏன் ஒன்றுசேர்ந்து இருக்கிறார்கள்? பரட்டை தலையுடன், தங்களது செல்வத்தை எல்லாம் விட்டு தங்களது சுகபோகங்களை எல்லாம் விட்டு வந்திருக்கிறார்கள்.(3)

அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 3926.

எங்கு பார்த்தாலும் லட்சக்கணக்கான ஆசையுடன் அந்த ஒரே தக்பீர் முழக்கம். யா அல்லாஹ்! நான் அடிமை, உன்னிடத்தில் வந்து விட்டேன். யா அல்லாஹ்! நான் அடிமை, நீ எஜமான், உனக்கு இணை இல்லை, உனக்கு துணை இல்லை, ஆட்சி அதிகாரம், செல்வங்கள், சொத்துக்கள் அனைத்தும் உனக்கே சொந்தமானது.

தனது இன்பங்களை எல்லாம் தனது கௌரவங்கள் எல்லாம் இழந்து அல்லாஹ்விற்கு முன்பாக ஒரு ஏழையாக, அல்லாஹ்! உனக்காக நான் எதையும் செய்ய தயார்! அப்படிப்பட்ட உச்சகட்ட வெளிப்படுத்தக்கூடிய வழிபாடுதான் ஹஜ் என்ற வணக்க வழிபாடு.

அந்த ஹஜ் அந்த மாதத்தில் ஏற்கப்படுகிறது. நோன்பு அந்த மாதத்தில் வைக்கப்படுகிறது. அரஃபா உடைய நோன்பு, அது அல்லாமல் தொழுகை, அது அல்லாமல் நாம் ஏழைகளுக்கு செய்யக்கூடிய தர்மங்கள்.

இப்படி ஏராளமான வணக்க வழிபாடுகள் இந்த துல்ஹஜ் மாதத்தில் ஒன்று சேர்வதால் அல்லாஹு தஆலா இந்த மாதத்துடைய பத்து நாட்களுக்கு மற்ற நாட்களை விட சிறப்பை சொல்கின்றான் என இப்னு  ஹஜர் ரஹ்மஹுல்லாஹ் கூறுகிறார்கள்.

இந்த பத்து நாட்களில் நாம் எப்படியெல்லாம் நன்மைகளை செய்யலாம்? என்னென்ன காரியங்களை செய்யலாம்?

குறிப்பாக முதலாவதாக ஃபர்ளான ஐங்கால தொழுகைகளை ஜமாஅதுடன் நேரம் தவறாமல் பேணக்கூடிய ஒரு வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

ரசூலுல்லாஹ் இடத்தில் கேட்கப்பட்டது;

أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ قَالَ الصَّلَاةُ لِوَقْتِهَا

அல்லாஹ்வின் தூதரே! அமல்களில் எது மிகச்சிறந்தது?என்று.ரசூலுல்லாஹ் சொன்னார்கள்: தொழுகை, அதனுடைய நேரத்தில் என்பதாக.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6980.

ஆகவே, தொழுகைகளை அதனுடைய நேரத்தில் நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும்.

அடுத்து நஃபிலான தொழுகைகள். அல்லாஹுவை அடைவதற்கு மிக நெருக்கமான வழிகளில் ஒன்று, தொழுகை.

ரசூலுல்லாஹ் அவர்கள் தன்னுடைய பணிவிடையாளரிடத்தில் கேட்கின்றார்கள்; என் பணிவிடையாளரே! உங்களுக்காக நான் அல்லாஹ்விடத்தில் என்ன பிரார்த்திக்க வேண்டும் என்பதாக?

அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுடன் சொர்க்கத்தில் இருக்க வேண்டும். ரஸூலுல்லாஹ் சொன்னார்கள்:

فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ

அப்படி என்றால், அதிகமாக நீ் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய். (4)

அறிவிப்பாளர் : ரபீஆ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 754.

இந்த ஹதீஸிலிருந்து ஒரு விஷயத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். யாராவது ஒருவருடைய ஒரு ஷைகுக்கு முரீதாகிவிட்டால் அவர் கையைப் பிடித்துக்கொண்டு சொர்க்கத்திற்கு சேர்ந்துவிடலாம் என்பதாக நினைக்கிறார்கள்.

அவர் சொல்லிவிட்டார்,அவருடன் நாங்கள் நட்பு வைத்துக் கொண்டோம்,அவருடைய கடமைகளை செய்தோம், நாம் அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் என்பதாக.

இப்படிப்பட்ட போலிகள் இந்த மார்க்கத்தில் நுழைந்து கொண்டு பாமர மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

ஆகவே, இந்த பத்து நாட்களில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நஃபிளான தொழுகைகளை நாம் செய்யலாம். நோன்பு நோற்கலாம்.

ரசூலுல்லாஹி நோன்பை ஓர் உயர்ந்த வணக்கமாக சொல்லியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சில நஃபிளான நோன்புகளுக்கு சில சிறப்புகளை சொல்லி இருக்கின்றார்கள்.

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ تِسْعَ ذِي الْحِجَّةِ

ரசூலுல்லாஹ் அவர்கள் துல்ஹஜ் மாதத்தில் ஒன்பதாவது நாளன்று நோன்பு வைத்தார்கள். (5)

நூல் : அபூ தாவூத், எண் : 2081.

ஆனால், அந்த நாளில் ஹாஜிகள் வைக்கமாட்டார்கள். ரஸூலுல்லாஹி ஹஜ்ஜுக்குச் சென்ற போது அரஃபாவுடைய மைதானத்தில் அவர்கள் நோன்பு நோற்காமல் இருந்தார்கள். அதைப் பின்பற்றி ஹஜ்ஜுக்கு செல்லக்கூடிய ஹாஜிகள் நோன்பு நோற்காமல் இருப்பார்கள்.

யார் ஹஜ்ஜுக்கு செல்ல வில்லையோ தங்களது ஊர்களில் இருக்கிறார்களோ அவர்கள் குறிப்பாக அந்த அரஃபாவுடைய நோன்பை பேணவேண்டும்.

ரசூலுல்லாஹ் அவர்கள் அரஃபா நோன்புடைய நன்மை பற்றி சொன்னார்கள் :

صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ

அரஃபாவுடைய ஒரு நாள் நோன்பு அதற்கு முன் ஒரு வருடம் செய்த பாவங்களையும் அழித்து விடுகிறது. அதற்குப் பிறகு ஒரு வருடத்தில் நடக்கக்கூடிய பாவங்களை அழித்துவிடும்.

அறிவிப்பாளர் : அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1976, 197.

மேலும், முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் அன்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நோன்பு வைப்பார்கள். ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு வைப்பார்கள்.(5)

நூல் : அபூ தாவூத், எண் : 2081.

ஆகவே,இந்த துல்ஹஜ் மாதத்தில் யாருக்கு எவ்வளவு முடியுமோ நஃபிளான நோன்புகளை நோற்கலாம். குறிப்பாக அரஃபாவுடைய நோன்பை தவற விட்டுவிடக்கூடாது.

அடுத்து திக்ருகளை அதிகமாக செய்ய வேண்டிய நாட்கள், இந்த நாட்கள்.

முன்பு குறிப்பிட்ட ஹதீஸில் வந்திருப்பது போன்று, ரசூலுல்லாஹி அவர்களிடத்தில் அந்த நாட்களில் என்ன அமல் செய்ய வேண்டும்? என்று கேட்கப்பட்ட போது, அந்த நாட்களில் அதிகமாக லா இலாஹா இல்லல்லாஹ் சொல்லுங்கள்.

பிறகு மக்களுக்கு மத்தியில் செல்லும்போது அவர்களுக்கு நினைவூட்டும் விதமாக சப்தமிட்டு லாயிலாஹ இல்லல்லாஹ் அல்லாஹு அக்பர் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லுங்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 5189.

இந்த ஹதீஸை அறிவிக்கக்கூடிய ஸஹாபாக்கள் இப்படித்தான் இந்த ஹதீசை அமல்படுத்தினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு, அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு ,இந்த இரண்டு நபித்தோழர்களும் மக்களுக்கு நினைவூட்டும் விதமாக துல்ஹஜ் மாதம் பத்து நாட்கள் வந்துவிட்டால் கடைத்தெருவுக்கு பொது இடங்களுக்கு சென்று நினைவூட்டுவார்கள்.

இவர்களுடைய தக்பீர் சத்தத்தை கேட்கும் போது எல்லா மக்களும் சேர்ந்து தக்பீர் சொல்வார்கள்.

ரசூலுல்லாஹி குறிப்பாக அந்த துல்ஹஜ் மாதத்தில் ஹஜ்ஜுடைய நாட்களில் அரஃபாவுடைய நாளில் தர்பியா சொல்வார்கள். அதற்குப்பிறகு தஷ்ரீக் என்று சொல்லப்படும் 11, 12,13இந்த நாட்களில் அதிகமாக தக்பீர் சொல்லும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.

இதை பின்பற்றி சஹாபாக்களும் சொல்வார்கள். ரசூலுல்லாஹி அவர்களுடைய இந்த தக்பீருடைய முக்கியத்துவத்தை அவர்களுக்கு புரிந்திருந்ததால் சஹாபாக்கள் அதை தங்களுடைய வாழ்க்கையில் முழுமையாக பின்பற்றினார்கள்..

சில ஹதீஸ்களில் வருகிறது, உமர் ரலியல்லாஹு அன்ஹு ஹஜ்க்கு சென்றிருந்தபோது கூடாரங்களில் எங்கு அமர்ந்து இருக்கிறாரோ அந்த இடத்திலிருந்து உரக்க சப்தமிட்டு தக்பீர் சொல்வார்கள். உமர் ரலியல்லாஹு அன்ஹு சத்தத்தை கேட்கும் போது மற்ற எல்லா ஹாஜிகளும் தக்பீர் முழங்குவார்கள். மினா மைதானமே தக்பீர்களால் நடுங்கட்டும் என்பதாக.

ஹாஜிகள் மட்டுமல்ல, இங்கு இருக்கக்கூடிய நாமும் அதிகமாக இந்த தக்பீரை வளமை ஆக்க வேண்டும்.

தக்பீருடைய வாசகங்கள் ஹதீஸ்களில் நமக்கு காணக்கிடைக்கிறது.

முதலாவதாக, அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா ரசூலுல்லாஹி அவர்கள் சொல்லிய முறை ஒன்று.

இரண்டாவதாக, அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து.

மூன்றாவதாக, அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்  அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து.

இந்த தக்பீர்கள் ரஸூலுல்லாஹி கூறியவை. இவை தவிர வேறு எதையும் நாம் சேர்த்தாலும், இதையே நாம் அப்படியே சொல்வதை வளமையாக்கிக் கொள்ள வேண்டும்.

ரசூலுல்லாஹி அவர்களுடைய காலத்தில் பெண்கள் பெருநாளன்று கலந்து கொள்வார்கள்.

உம்மு சுலைம் சொல்கிறார்கள்; பெண்கள் கலந்து கொண்டு, ஆண்கள் சொல்லக்கூடிய தக்பீரை கேட்டு பெண்களும் தக்பீர் சொல்வார்கள்.

ஆண்கள் செய்யக் கூடிய துஆக்களின் சத்தத்தை கேட்டு பெண்களும் துஆ செய்வார்கள் என்பதாகும்.

நம்முடைய இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய வளமை போன்று அல்ல. ஒருவர் சொல்ல அதற்கு பிறகு மற்றவர்கள் கூட்டமாகச் சொல்வது. இப்படி சொல்வதற்கு ரசூலுல்லாஹி அல்லது சஹாபாக்களுடைய வழிமுறைகளில் நமக்கு ஆதாரம் இல்லை.

தக்பீர் சொல்ல வேண்டும். சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும். ஒருவர் மற்றவருக்கு நினைவூட்ட வேண்டும். மொத்தமாக ஒரே சப்தத்தில் சேர்ந்து தான் எல்லோரும் சொல்ல வேண்டும் என்பதற்கு ஆதாரம் இல்லை.

அடுத்து, குறிப்பாக இந்த துல்ஹஜ் மாதம் பத்தாவது நாள். இந்த நாள் நமக்கு இங்கு பெருநாளாக இருக்கும்.

குறிப்பாக மக்களுடைய வளமை எப்படி இருக்கின்றது என்றால், அன்று, நல்ல முறையில் சாப்பிட்டு, புத்தாடை உடுத்தி விட்டு, மக்கள் தங்களை ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்வதில் நேரத்தைக் கழித்து விடுகின்றார்கள்.

வணக்க வழிபாடுகளுக்கும், திக்ருகள்,தஸ்பீக்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் :

أَعْظَمُ الْأَيَّامِ عِنْدَ اللَّهِ يَوْمُ النَّحْ

நாட்களில் மிக மகத்தான நாள், துல்ஹஜ் மாதம் பத்தாவது நாள் ஆகும்.(6)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு குர்த் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 18292.

ஆகவே, இந்த பத்தாவது நாளிலும் உண்பது சாப்பிடுவது வழிமுறையாக இருந்தாலும் வணக்க வழிபாடுகளையும் நாம் மறந்து விடக்கூடாது.

இதுபோன்று நமக்கு வரக்கூடிய சந்தர்ப்பங்களை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு நாம் நன்மைகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக தவ்பாவை நாம் புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். பாவமன்னிப்பை அல்லாஹ்விடத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

யார் அல்லாஹ்விடத்தில் அதிகமதிகம் பாவமன்னிப்பு தேடுகின்றார்களோ அவர்தான் இதுபோன்று நன்மைகளை பெற்றுக்கொள்வார்கள். இதுபோன்ற காரணங்களை எல்லாம் பயன்படுத்திக் கொள்வார்கள்.

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா உங்களுக்கும் எனக்கும் நன்மைகளை அதிகம் செய்வதற்கும் பாவங்களை விட்டு விலகுவதற்கும் அல்லாஹ்வின் பொருத்தத்தை சம்பாதிப்பதற்கும் தவ்ஃபீக் தருவானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

أخبرنا أبو القاسم علي بن الحسن بن علي الطهماني ، حدثنا أحمد بن عبدوس الطرائفي ، حدثنا عثمان بن سعيد الدارمي ، حدثنا مسلم بن إبراهيم ، حدثنا هلال بن عبد الله ، عن أبي إسحاق ، عن الحارث ، عن علي ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : « من ملك زادا وراحلة يبلغ به إلى بيت الله فلم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا ، وذلك أن الله قال : ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا » . تفرد به هلال أبو هاشم مولى ربيعة بن عمرو ، عن أبي إسحاق (شعب الإيمان للبيهقي 3818 -)

ஹதீஸின் தரம் குறித்து அறிய கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும் :

https://www.islamweb.net/ar/fatwa/145653/%D8%AF%D8%B1%D8%AC%D8%A9-%D8%AD%D8%AF%D9%8A%D8%AB-%D9%81%D9%84%D9%85-%D9%8A%D8%AD%D8%AC-%D9%81%D9%84%D8%A7-%D8%B9%D9%84%D9%8A%D9%87-%D8%A3%D9%86-%D9%8A%D9%85%D9%88%D8%AA-%D9%8A%D9%87%D9%88%D8%AF%D9%8A%D8%A7-%D8%A3%D9%88-%D9%86%D8%B5%D8%B1%D8%A7%D9%86%D9%8A%D8%A7

https://islamqa.info/amp/ar/answers/210701

குறிப்பு 2)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ أَبِي صَالِحٍ وَمُجَاهِدٍ وَمُسْلِمٍ الْبَطِينِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهَا أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ يَعْنِي أَيَّامَ الْعَشْرِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قَالَ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ (سنن أبي داود 2082 -)

குறிப்பு 3)

أخبرنا الحسن بن سفيان ، حدثنا محمد بن عمرو بن جبلة ، حدثنا محمد بن مروان العقيلي ، حدثنا هشام هو الدستوائي ، عن أبي الزبير ، عن جابر ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : « ما من أيام أفضل عند الله من أيام عشر ذي الحجة » ، قال : فقال رجل : يا رسول الله ، هن أفضل أم عدتهن جهادا في سبيل الله ، قال : « هن أفضل من عدتهن جهادا في سبيل الله ، وما من يوم أفضل عند الله من يوم عرفة ينزل الله إلى السماء الدنيا فيباهي بأهل الأرض أهل السماء ، فيقول : انظروا إلى عبادي شعثا (1) غبرا ضاحين جاءوا من كل فج (2) عميق يرجون رحمتي ، ولم يروا عذابي ، فلم ير يوم أكثر عتقا من النار من يوم عرفة » ، قال أبو حاتم : هشام هذا هو هشام بن أبي عبد الله الدستوائي ، والدستواء قرية من قرى الأهواز ، وإنما سمي الدستوائي لأنه كان يبيع الثياب التي تحمل منها فنسب إليها (صحيح ابن حبان 3926 -)

குறிப்பு 4)

حَدَّثَنَا الْحَكَمُ بْنُ مُوسَى أَبُو صَالِحٍ حَدَّثَنَا هِقْلُ بْنُ زِيَادٍ قَالَ سَمِعْتُ الْأَوْزَاعِيَّ قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ حَدَّثَنِي رَبِيعَةُ بْنُ كَعْبٍ الْأَسْلَمِيُّ قَالَكُنْتُ أَبِيتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْتُهُ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ فَقَالَ لِي سَلْ فَقُلْتُ أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ قَالَ أَوْ غَيْرَ ذَلِكَ قُلْتُ هُوَ ذَاكَ قَالَ فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ(صحيح مسلم 754 -)

குறிப்பு 5)

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ الْحُرِّ بْنِ الصَّبَّاحِ عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ عَنْ امْرَأَتِهِ عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ تِسْعَ ذِي الْحِجَّةِ وَيَوْمَ عَاشُورَاءَ وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ أَوَّلَ اثْنَيْنِ مِنْ الشَّهْرِ وَالْخَمِيسَ (سنن أبي داود 2081 -)

குறிப்பு 6)

حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ ثَوْرٍ قَالَ حَدَّثَنِي رَاشِدُ بْنُ سَعْدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ لُحَيٍّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ قُرْطٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَعْظَمُ الْأَيَّامِ عِنْدَ اللَّهِ يَوْمُ النَّحْرِ ثُمَّ يَوْمُ النَّفْرِ وَقُرِّبَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسُ بَدَنَاتٍ أَوْ سِتٌّ يَنْحَرُهُنَّ فَطَفِقْنَ يَزْدَلِفْنَ إِلَيْهِ أَيَّتُهُنَّ يَبْدَأُ بِهَا فَلَمَّا وَجَبَتْ جُنُوبُهَا قَالَ كَلِمَةً خَفِيَّةً لَمْ أَفْهَمْهَا فَسَأَلْتُ بَعْضَ مَنْ يَلِينِي مَا قَالَ قَالُوا قَالَ مَنْ شَاءَ اقْتَطَعَ (مسند أحمد 18292 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/