HOME      Khutba      அழிப்பதும் ஆக்குவதும் அல்லாஹ்வே | Tamil Bayan - 362   
 

அழிப்பதும் ஆக்குவதும் அல்லாஹ்வே | Tamil Bayan - 362

           

அழிப்பதும் ஆக்குவதும் அல்லாஹ்வே | Tamil Bayan - 362


அழிப்பதும் ஆக்குவதும் அல்லாஹ்வே

ஜுமுஆ குத்பா தலைப்பு : அழிப்பதும் ஆக்குவதும் அல்லாஹ்வே

வரிசை : 362

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 01-05-2015 | 12-07-1436

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அவனுடைய பல அத்தாட்சிகளை நமக்கு காண்பித்து கொண்டே இருக்கிறான், அடியார்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக.

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அவனுடைய கண்ணியத்திற்குரிய வேதமாகிய அல்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

فَلَوْلَا إِذْ جَاءَهُمْ بَأْسُنَا تَضَرَّعُوا وَلَكِنْ قَسَتْ قُلُوبُهُمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ مَا كَانُوا يَعْمَلُونَ

நம் வேதனை அவர்களிடம் வருவதற்குள் அவர்கள் பணிந்துவிட வேண்டாமா? ஆனால், அவர்களுடைய உள்ளங்கள் இறுகிவிட்டன. அவர்கள் செய்து கொண்டிருந்ததையே (பாவங்களையே) ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டான். (அல்குர்ஆன் 6 : 43)

எவ்வளவு அழகாக அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா விவரிக்கிறான்!

முந்திய காலத்தில் இறக்கப்பட்ட இந்த இறைவசனம் இன்று நமக்காகநம்முடைய இந்த காலத்தின் நிகழ்வுக்காக இறக்கப்பட்டது போன்று இருப்பதை நாம் பார்க்கிறோம்.

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அவனுடைய எண்ணிலடங்கா ராணுவங்களை கொண்டு, நம்முடைய கற்பனைக்கு அப்பாற்பட்ட விதத்தில், நம்முடைய எண்ணங்களுக்கு மேலாக, நம்முடைய திட்டங்களுக்கு மேலாக, நம்முடைய கண்டுபிடிக்கும் கருவிக்களுக்கெல்லாம் கண்டுபிடிக்கப்பட முடியாமல் கொடுக்க கூடிய நிகழ்வுகளை பற்றி தான் அல்லாஹ் இங்கு சொல்லிக்காட்டிகிறான்.

இன்று, மனிதன் என்னன்னமோ சவால்களை விடுகின்றான். நாங்கள் அதை கண்டுபிடித்துவிட்டோம், இதை கண்டுபிடித்துவிட்டோம், இதற்காக இதை வைத்திருக்கிறோம், அதற்காக இதை வைத்திருக்கிறோம் என்று.

ஆனால், அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா தண்டனை வரும்பொழுது யாராலும் அதை அறிந்து கொள்ள முடியாது, உணர்ந்து கொள்ள முடியாது.

இதேபோன்று மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான் :

وَلَقَدْ أَخَذْنَاهُمْ بِالْعَذَابِ فَمَا اسْتَكَانُوا لِرَبِّهِمْ وَمَا يَتَضَرَّعُونَ

நிச்சயமாக நாம் அவர்களை வேதனையைக் கொண்டு பிடித்துக் கொண்டோம். ஆனால், அவர்கள் தங்கள் இறைவனிடம் திரும்பவும் இல்லை; (அவனிடம்) பணிந்து பிரார்த்தனை செய்யவும் இல்லை. (அல்குர்ஆன்23:76)

அல்லாஹ்வுடைய இந்த வசனங்களை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்..!

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா இந்த உலகத்தினுடைய அமைப்புகளை மாற்றி காட்டுகிறான்.

அடியார்களுடைய காரியங்கள், செயல்களுக்கு ஏற்ப பல சோதனைகளை அவர்களுக்கு கண்கூடாக காண்பித்துக் கொண்டே இருக்கிறான். எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறான்.

அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிகழக்கூடிய இந்த மாற்றங்கள் எல்லாம், மனிதர்கள் சொல்வது போன்று, இயற்கையின் சீற்றங்களோ அல்லது இயற்கையின் பேரழிவுகளோ கிடையாது.

அல்லாஹ்வின் உத்தரவு இல்லாமல் எந்த ஒரு இயற்கையும் எதையும் செய்ய முடியாது. எல்லாம் அல்லாஹ் படைத்த படைப்பு, எல்லாம் அல்லாஹ்வுடைய கட்டளை படி இருக்கக்கூடியவை. அல்லாஹ்வை நம்பாதவர்களுடைய பேச்சு தான் அந்த பேச்சாக இருக்க முடியும்.

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அவனுடைய கண்ணியத்திற்குரிய வேதம் அல்குர்ஆனில் சொல்லிகாட்டுகிறான்,

أَفَأَمِنَ الَّذِينَ مَكَرُوا السَّيِّئَاتِ أَنْ يَخْسِفَ اللَّهُ بِهِمُ الْأَرْضَ أَوْ يَأْتِيَهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ

தீங்கிழைக்க சூழ்ச்சிகள் செய்கின்ற இவர்களைப் பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்யமாட்டான் என்றோ அல்லது இவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் இவர்களை வேதனை வந்தடையாது என்றோ இவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா?(அல்குர்ஆன்16:45)

மேலும்,அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்:

أَفَأَمِنْتُمْ أَنْ يَخْسِفَ بِكُمْ جَانِبَ الْبَرِّ أَوْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ثُمَّ لَا تَجِدُوا لَكُمْ وَكِيلًا

(நன்றி கெட்ட) உங்களைப் பூமி விழுங்கிவிடாதென்றோ அல்லது உங்கள் மீது கல்மழை பொழியாதென்றோ நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? (அவ்வாறு நிகழ்ந்தால்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் எவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.(அல்குர்ஆன்17:68)

மேலும்,அல்லாஹு தஆலா இதுபோன்று குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்,

أَأَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ

வானத்தில் இருப்பவன், உங்களைப் பூமியில் சொருகிவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்றிருக்கிறீர்களா? அந்நேரத்தில் பூமி அதிர்ந்து நடு நடுங்(கிக்) கு(முறு)ம்.(அல்குர்ஆன்67:16)

சில தினங்களுக்கு முன்னால் நடந்தபூகம்ப நிகழ்வு என்பது, நமக்கு ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய படிப்பினை ஆகும்.

அல்லாஹு தஆலா இதை நமக்கு முதல் நிகழ்ச்சியாக காட்டித் தரவில்லை, நம்முடைய நாட்டிலும் சரி, இந்த உலகத்தில் பல பகுதிகளிலும் அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவனுடைய தண்டனைகளை காட்டிக் கொண்டுதான் இருக்கிறான்.

இது போன்ற நிகழ்வுகள், அல்லாஹ்வுடைய கோபப் பார்வையின் காரணமாக, அவனுடைய கட்டளைகள், சட்டங்கள், மார்க்கங்கள், அவன் வகுத்துஅமைத்துக் கொடுத்த ஒழுக்க மாண்புகள் மீறப்படும் பொழுது, அல்லாஹ்வுடைய தீனுக்கு எதிராக சூழ்ச்சிகள், தந்திரங்கள், செய்யப்படும் போது, அல்லாஹ்வுடைய சட்டங்கள் மீறப்படும் போது, மனிதனுக்கு கொஞ்சம் காண்பிக்கிறான், அவன் திரும்பி வரவேண்டும் என்பதற்காக.

அல்லாஹ் சொல்கிறான் :

وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ

ஒரு தீங்கு உங்களை வந்தடைவதெல்லாம், உங்கள் கரங்கள் தேடிக் கொண்ட (தீய) செயலின் காரணமாகவேதான். ஆயினும், (அவற்றில்) அனேகமானவற்றை அவன் மன்னித்தும் விடுகிறான். (அல்குர்ஆன்42:30)

இந்த துன்யாவில் விடப்பட்டாலும், மறுமையினுடைய தண்டனை, மறுமையின் வேதனை என்பது மிகமிக ஒரு பயங்கரமான ஒன்று.

وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ

அவர்கள் (பாவங்களிலிருந்து) விலகிக் கொள்வதற்காக (மறுமையில் அவர்கள்) பெரிய வேதனையை அடைவதற்கு முன்பாகவே (இம்மையில்) சிறியதொரு வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம்.(அல்குர்ஆன்32 : 21)

ஆகவே,இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றது என்றால், அதனுடைய முக்கிய காரணம், மனிதர்களுடைய பாவங்கள். அந்த இடத்தில் வாழக்கூடிய மக்களுடைய அனாச்சாரங்கள், அவர்களுடைய செயல்பாடுகள் தான்.

அல்லாஹு தஆலா,உலக மக்களில்ஒரு கூட்டம் ஏன் அழிக்கப்படுகிறார்கள், ஏன் படிப்பினையாக ஆக்கப்படுகிறார்கள் என்பதற்குரிய காரணங்களை தான் அவனுடைய கண்ணியத்திற்குரிய வேதத்தில் நமக்கு சொல்லிக் காட்டுகிறான்.

ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ

மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவிவிட்டன. அவற்றில் இருந்து அவர்கள் விலகிக் கொள்வதற்காக, அவர்களின் தீய செயல்கள் சிலவற்றின் தண்டனையை அவர்களுக்கு (இம்மையிலும்) சுவைக்க வைக்கிறான். (அல்குர்ஆன் 30 : 41)

ஒரு நேரத்தை அல்லாஹ் முடிவு செய்திருக்கின்றான். ஒரு அளவை அல்லாஹ் முடிவு செய்திருக்கிறான்.

அடியான் அந்த அளவையும் தாண்டும்பொழுது, அவனுடைய அக்கிரமத்தின், அநியாயத்தின், அழிச்சாட்டியத்தின் எல்லையை தாண்டும் பொழுது, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் படிப்பினைக்காக, அவர்கள் உணர்வதற்காக, அவர்களை தண்டித்து பிடிக்கிறான்.

இன்னொரு விஷயத்தை நாம் இங்கு கவனத்தில் வைக்க வேண்டும். அல்லாஹ்வுடைய தண்டனை இதுபோன்று இறங்கும் போது, அந்த இடத்தில் வாழக்கூடிய நல்லவர்களுடைய நிலைமை என்ன? என்று நாம் பார்க்கும் பொழுது, இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் ஒரு ஹதீஸை பதிவு செய்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர்   சொல்கிறார்கள்,

إِذَا أَنْزَلَ اللَّهُ بِقَوْمٍ عَذَابًا أَصَابَ الْعَذَابُ مَنْ كَانَ فِيهِمْ ثُمَّ بُعِثُوا عَلَى أَعْمَالِهِمْ

 

ஒரு கூட்டத்துக்கு அல்லாஹ் தண்டனையை இறக்கும் போது, அந்த இடத்தில் இருக்கக்கூடிய எல்லோரும் அந்த தண்டனைக்குள் வந்துவிடுவார்கள். அந்த தண்டனை எல்லோரையும் பிடித்துக்கொள்ளும். ஆனால், பிறகு அவர்களுடைய அமல்களுக்கேற்ப நாளை மறுமையில் அவர்கள் எழுப்பப்படுவார்கள்".

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி,எண் : 6575, 7018.

 

இந்த துன்யாவில், பாவிகளுக்கு தண்டனை வரும்போது, அந்த தண்டனையில் அங்கு இருக்கக்கூடிய சில நல்லவர்கள் அழிக்கப்பட்டாலும், நாளை மறுமையில் அவர்கள் எழுப்பப்படும் போது, அல்லாஹ்வுடைய அருள் பெற்ற நல்ல மக்களோடு எழுப்பப்படுவார்கள்.

وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

நீங்கள் ஒரு வேதனையை பயந்துகொள்ளுங்கள். அது உங்களில் அநியாயக் காரர்களை மட்டுமே பிடிக்குமென்பதல்ல; (முடிவில் அது உங்களையும் சூழ்ந்து கொள்ளலாம்.) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடுமையானவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன்8:25)

இமாம் இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹ் அலைஹி இந்த ஹதீஸிற்கு விளக்கம் எழுதும்போது, இமாம் இப்னு ஹிப்பான் உடைய ஒரு அறிவிப்பை பதிவு செய்கிறார்கள்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹாஅறிவிக்கின்றார்கள்,அல்லாஹ்வுடைய தூதர்   கூறினார்கள்:

«يا عائشة إن الله إذا أنزل سطوته بأهل نقمته وفيهم الصالحون ، فيصابون معهم ، ثم يبعثون على نياتهم وأعمالهم»

 

அல்லாஹ், அவனுடைய தண்டனையைஅவனுடைய பிடியைஅவனுடைய கோபத்திற்குரியவர்களின் மீதுஇறக்கினான். அவர்களில் நல்லவர்களும் இருந்தால், அந்த தண்டனையில் அவர்களுடைய உயிர்களும் கைப்பற்றப்பட்டுவிட்டாலும், அவர்களுடைய அமல்களுக்கேற்பநாளை மறுமையில் எழுப்பப்படுவார்கள். (1)

அறிவிப்பாளர்: ஆயிஷாரழியல்லாஹு அன்ஹா, நூல்: இப்னு ஹிப்பான்,எண்: 7314, 7438.

இறைதூதர்களுடைய காலத்தில்அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வஹீ இறக்கி விடுவான்.  எனவே தண்டனை வருவதற்கு முன்பாக அல்லாஹ்வுடைய வஹி வந்து விடும்.

இந்த இடத்தில், இந்த ஊரில் தண்டனை வரப்போகிறது, நீங்கள் உங்களோடு ஈமான் கொண்டவர்களும் அந்த ஊரை விட்டு வெளியேறி விடுங்களென்று.

ஆனால்,இறைத்தூதர்களுக்கு பின்புயாருக்கும் வஹி வராது. அல்லாஹ்வுடைய தண்டனை எப்போது, எங்கே நிகழுமென்று.

ஆனால், அந்த நல்லவர்களை பொறுத்தவரை, அந்த நல்லவர்கள் ஒரு பூமியில் இருந்தார்கள் என்றால், பொதுவான வேதனையில் அவர்களும் அழிக்கப்பட்டு விட்டால்நாளை மறுமையில் அவர்கள்அவர்களுடைய அமல்களுக்கேற்ப எழுப்பப்படுவார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே! மக்கள் பாவம் செய்யக் கூடியவர்கள் தான், மனிதர்கள் தவறு செய்யக் கூடியவர்கள் தான். ஆனால் பயந்து செய்வது, மறைத்து செய்வது, செய்துவிட்டு தப்பு என்று உணருவது, அதற்காக வருந்துவது.

இன்னொன்று இருக்கிறது, தவறை நியாயப்படுத்துவது, அதை பகிரங்கப் படுத்துவது, தவறின் பக்கம் மக்களை அழைப்பது, தவறை ஏற்காதவர்களை பிற்போக்கு சிந்தனை உடையவர்களாக கருதுவது.

லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றிஅவருடைய சமுதாயம் சொன்னார்கள் :

فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا أَخْرِجُوا آلَ لُوطٍ مِنْ قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ

அதற்கவர்கள் (தங்கள் மக்களை நோக்கி) ‘‘லூத்துடைய குடும்பத்தை உங்கள் ஊரை விட்டும் நீங்கள் ஓட்டிவிடுங்கள். நிச்சயமாக அவர்கள் மிகப் பரிசுத்தமான மனிதர்கள் (போல் பேசுகின்றனர்)'' என்று (பரிகாசமாகக்) கூறியதுதான் அவருடைய மக்களின் பதிலாக இருந்தது.(அல்குர்ஆன்27:56)

வசனத்தின் கருத்து : எந்த லூத் நபி அலைஹிஸ்ஸலாம்அந்த மக்களை அசிங்கமான மானக்கேடான செயல்களிலிருந்து தடுக்க வந்தார்களோ, அந்த நபிக்கு அழைப்பு விடுத்தார்கள்.

அந்த நபி சொன்னார்கள்: இப்படிப்பட்ட ஒரு செயலை உலகத்தில் இதற்கு முன்னால் யாருமே செய்யவில்லையே! என்று கண்டித்த போது, லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பார்த்து அந்த மக்கள், ரொம்ப சுத்தமான ஆள் மாதிரி இவர் நடிக்கிறாங்க, இதை அவர்கள் அசூசையாக கருதுகிறார்களா? இதை இவர்கள் தவறான செயலாக கருதுகிறார்களா? என்று அவர்களை எதிர்த்து, ஏளனமாக பேசினார்கள்.

இவர்கள் செய்வது அவ்வளவு அசிங்கமான செயல், அந்த செயலை பொதுவாக்க வேண்டும், அங்கீகரிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஒரு மனிதன் ஒரு பாவத்தை செய்வது தனி ஒரு விஷயம். இன்னொன்று, தான் செய்யக்கூடிய பாவத்திற்கு அங்கீகாரம் வேண்டும், அந்த பாவத்தை யாரும் எதிர்க்க கூடாது, குறை சொல்லக் கூடாது என்றிருப்பது, இதுதான் அல்லாஹ்வோடு நேரடியாக எதிர்த்துப் போரிடுவது.

இதுதான் இன்றைய காலத்தில் நடந்து கொண்டிருக்கின்ற மிக மோசமான ஒரு செயல்.

பாவங்களை, அசிங்கங்களை, சட்டத்திற்கு உட்பட்டதாகசமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட்டதாக ஆக்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்கின்றார்கள், இதுதான் அல்லாஹ்வுடைய அந்த வரம்பை தொடுவது.

நபி அவர்கள் சொன்னார்கள்:

ஒரு பூமியில் இப்படிப்பட்ட பாவங்கள், தீமைகள் வெளிப்படையாக நடக்க ஆரம்பித்து விட்டால், அல்லாஹ் தனது தண்டனையை அவர்கள் மீது இறக்குவான்.

அப்போது அருகில் இருந்த மக்கள் கேட்டார்கள், அல்லாஹ்வின் தூதரே! அதில் உனக்குக் கட்டுப்பட்டு வாழக்கூடிய மக்களும் இருப்பார்களே?

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் சொன்னார்கள், ஆம்! அவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால்,அவர்கள் எழுப்பப்படும் போது அல்லாஹ்வின் கருணையின் பக்கம் எழுப்பப்படுவார்கள். (2)

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 1975.

இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய இன்னொரு அறிவிப்பில் வருகிறது. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹாஅவர்கள் கேட்கின்றார்கள்.

அல்லாஹ்வுடைய தூதரே! எங்களில் நல்லவர்கள் இருக்கும் போதும் நாங்கள் அழிக்கப்படுவோமா?

நபி சொன்னார்கள்,

نَعَمْ إِذَا كَثُرَ الْخَبَثُ

ஆம்! தீமை, அசிங்கம் மானக்கேடான செயல்கள் அதிகமாகிவிட்டால் அல்லாஹ்வுடைய தண்டனை வந்துவிடும்.

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 3331.

நம்முடைய காலத்தைப் பொறுத்தவரை, எந்தவொரு நேரத்திலும் அச்சமற்று இருக்க கூடிய நிலையில் நாம் இருக்க முடியாது.

வீட்டிலிருந்து வெளியேறினாலும் சரி, வீட்டுக்குள் இருந்தாலும் சரி, நம்மை சுற்றி பாவங்களின் சூழ்நிலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை பார்க்கின்றோம்.. அல்லாஹ் பாதுகாப்பானாக!

இன்று, நாம் வசிக்கக்கூடிய இடங்களைப் பார்த்தால் நமது வீட்டிலேயேஒரு பேணுதலான சூழ்நிலையை நாம் உருவாக்க முயற்சித்தாலும் நமது வீட்டிற்கு மேல் என்ன நடக்கிறது?

நமது வீட்டிற்கு அருகில் அண்டை வீட்டில் என்ன நடக்கிறது? ஒவ்வொரு வீடும் இன்று அல்லாஹ்வின் சட்டங்களை மீறக்கூடிய அசிங்கங்களின் இருப்பிடமாக மாறிக்கொண்டிருக்கின்றன. அல்லாஹ் பாதுகாப்பானாக!

அதுபோன்று,இப்படிப்பட்ட பெரிய சோதனைகள், அல்லாஹ்வுடைய இந்த தண்டனைகள் நிகழ்வதற்குரிய முக்கியமான காரணங்களில் ஒன்றாக நாம் பார்க்கும் பொழுது, எப்போது மக்கள் நன்மையை ஏவாமல் தீமையைத் தடுக்காமல் இருப்பார்களோஅப்போது மிகப் பெரிய சோதனை இவர்களுக்கு வந்துவிடும்.

கைஸ் இப்னு அபுஹாஸிம் ரஹிமஹுல்லாஹ் அறிவிக்கின்றார்கள்

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் ஒரு நாள் மிம்பரில் ஃபத்வா கொடுத்து கொண்டிருக்கும்போது சொன்னார்கள். நான் உங்களை பார்க்கின்றேன், அல்லாஹ்வுடைய வசனமாகிய,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ

நீங்கள் நேர்வழியில் இருந்தால் வழிகெட்டவர்கள் உங்களுக்கு எந்த தீங்கையும் செய்ய முடியாது. நீங்கள் உங்களை பேணிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்5:105)

என்ற இந்த வசனத்தை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் நான் கருதுகிறேன்.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் சொன்னார்கள் :

مَا مِنْ قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي ثُمَّ يَقْدِرُونَ عَلَى أَنْ يُغَيِّرُوا ثُمَّ لَا يُغَيِّرُوا إِلَّا يُوشِكُ أَنْ يَعُمَّهُمْ اللَّهُ مِنْهُ بِعِقَابٍ

 

மக்களுக்கிடையில் பாவங்கள் வெளிப்படையாக செய்யப்படும் பொழுது, அவர்கள் அதை மாற்றுவதற்கு, தடுப்பதற்கு முயற்சிக்கவில்லையென்றால் அவர்கள் அனைவரையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய தண்டனைகளை கொண்டு சூழ்ந்து கொள்வான்.(3)

அறிவிப்பாளர் : அபூபக்ர்ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவுத்,எண் : 4338.

மிகப்பெரிய எச்சரிக்கை. ஒவ்வொரு முஸ்லிமும் தன்னால் முடிந்த அளவு, ஒவ்வொரு நாளும், ஒரு நன்மையாவது தனக்கு, தனது குடும்பத்தாருக்கு, தனது நண்பருக்கு, தன்னுடைய பணியாளருக்கு, தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு, தன்னுடைய எஜமானருக்கு, தான் யாரை பார்க்கிறோமோ,பழகுகிரோமோ, யாரோடு பயணம் செய்கிறோமோ, எந்த இடத்தில் இருக்கிறோமோ அவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு முறையாவது நன்மையை ஏவிதீமையைத் தடுத்தே ஆக வேண்டும்.

இன்று, பொதுவாகநாம், நன்மையை ஏவுவது, தீமையை தடுப்பது என்பது, முஸ்லிம்களுக்கு மத்தியில்தான் நாம் சொல்ல வேண்டும் என்பதாக கருதி வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் அப்படி இல்லை. ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் தனது இணை வைக்கின்ற சமுதாயத்தாருக்கு இணைவைப்பின் விபரீதத்தை பற்றி அச்சுறுத்திய அதே சமயத்தில், தனது சமுதாயத்தில் இருந்த வேறு பல பெரும்பாவங்களையும் எச்சரிக்கை செய்தார்கள்.

ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய கூட்டத்தார்கள், வியாபாரிகளாக, தோட்டம் துரவு உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் வியாபாரத்தில் அளந்து கொடுத்தால் மக்களுக்கு குறைவாக கொடுப்பார்கள். தங்களுக்கு அளந்து, நிறுத்து வாங்கினால் முழுமையாக வாங்குவார்கள்.

இதைக்குறித்து அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சொன்னான், நீங்கள் உங்களது சமுதாயத்திற்கு எச்சரிக்கை செய்யுங்கள் என்று.

இப்படி ஒவ்வொரு நபியும் அவர்கள் அனுப்பப்பட்ட காலத்தில், இறைநிராகரிப்பைஇணைவைத்தலை குறித்து எச்சரிக்கை கொடுத்த அதே நேரத்தில், தனது சமுதாயத்தில் இருந்த வேறு பல பாவங்கள், அல்லாஹ்வுக்கு கோபம் ஏற்படுத்தக்கூடிய மற்ற விஷயங்கள் குறித்தும்அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.

நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உம்மத்தில் இருந்த அந்த செயலை குறித்து, மக்களுக்கு எச்சரிக்கை செய்தார்கள்.

அதுபோன்று ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம், ஹூது அலைஹிஸ்ஸலாம், அவர்களுடைய வரலாறுகளை குர்ஆனில் படிக்கும்பொழுது அவர்கள் வெறும் ஷிர்கை பற்றி மட்டும் எச்சரிக்கை செய்யவில்லை, குஃப்ரை பற்றி மட்டும் அவர்கள் எச்சரிக்கை செய்யவில்லை.

தனது சமுதாயத்தில் இருந்த மற்ற பாவங்கள், அந்த பாவங்களை குறித்தும் தனது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் இப்படிப்பட்ட வழிமுறையை தான்நமக்கு சொன்னார்கள்

குரைஷிகளுக்கு மத்தியில் அவர்கள் வாழ்ந்தபோது, இணைவைத்தலை பற்றி மட்டுமா அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்?

ஒரு மனிதர் புதிதாக வருகிறார்,நபியிடத்தில் கேட்கின்றார்கள், நீங்கள் யார் என்று?  அப்போது நபி அவர்கள்,நான் நபி என்று சொல்கிறார்கள். அப்போது அந்த மனிதர் கேட்கிறார், நபி என்றால் என்னவென்று?

அல்லாஹ்வுடைய தூதர் அங்கு சொல்லக்கூடிய மூன்று விஷயங்களை பாருங்கள்.

நபி என்றால்,அல்லாஹ் என்னை அனுப்பியிருக்கிறான்.

அப்போது கேட்கிறார்கள், அல்லாஹ் உங்களை அனுப்பி இருக்கிறானா? என்ன விஷயத்திற்காக உங்களை அனுப்பி இருக்கிறான்?

நபி அவர்கள் சொன்னார்கள், அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டும்,உங்கள் சிலைகளை உடைக்க வேண்டும்,உறவுகளை சேர்க்கும்படி எனக்கு கட்டளையிடுவதற்காக என்னை அனுப்பியிருக்கிறான்.

நூல் : முஸ்லிம், எண் : 832.

குர்ஆனுடைய வசனங்களில் நூற்றுக்கணக்கான வசனங்களைப் பாருங்கள். குறிப்பாக மக்காவில், குறைஷிகளுக்கு இறக்கப்பட்ட வசனங்களில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கண்டித்து கூறி இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

அல்லாஹ்வுடைய தூதர் இதுபோன்று குறைஷிகளுக்கு மத்தியில் இருந்த பல பிரச்சினைகளை எச்சரிக்கை செய்திருக்கின்றார்கள். ஷிர்க் என்பது தலையாய பிரச்சினையாக இருந்தாலும் அதை எச்சரிக்கை செய்கின்ற அதே நேரத்தில், சமுதாயத்தில் காணப்பட்ட ஒவ்வொரு தீமையை குறித்தும் கண்டித்து இருக்கின்றார்கள்,

நாம், நமது காலத்தில் ஒருவர் முஷ்ரிக் என்றால், அப்படியே அவரை விட்டுவிடுவதுதான். என்ன நல்லதையும் அவனுக்கு சொல்லக்கூடாது என்று.

இது முஸ்லிம்களாகிய நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு. தம்மோடு பயணம் செய்யக்கூடிய மக்களுக்கு, நாம் எத்தனை அறிவுரையை சொல்லலாம். விபச்சாரத்தை குறித்து அவருக்கு எச்சரிக்கை செய்யலாம். மதுவை குறித்து, சினிமாவின் சீரழிவை குறித்து அவருக்கு எச்சரிக்கை செய்யலாம். சமுதாயத்தில் இருக்கின்ற பல அசிங்கமான, மானக்கேடான உறவுகளை பற்றி நம் எச்சரிக்கை செய்யலாம்.

இன்னும் எத்தனையோ தீமைகள், அவர்களுக்கு மத்தியில் அவை தீமை என்பதே தெரியாமல் இருக்கின்றது. வட்டியைப் பற்றி அவர்களுக்கு சொல்லலாம். இப்படி நூற்றுக்கணக்கான விஷயங்கள் இருக்கின்றன, நாம் அவர்களுக்கு சொல்வதற்கு.

அதே நேரத்தில் ஷிர்கை குறித்து, குஃப்ரை குறித்து எச்சரிக்கை செய்யாமலும் விட்டுவிடக்கூடாது.

அல்லாஹ்வுடைய தூதர் இந்த நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கக் கூடிய விஷயத்தை மிக அழுத்தமாக நமக்குச் சொன்னார்கள்.

والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم

எனது உயிர் எந்த இறைவனின் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக, நன்மையை கண்டிப்பாக நீங்கள் ஏவுங்கள், தீமையிலிருந்து நீங்கள் கண்டிப்பாக மக்களை தடுங்கள், இல்லையென்றால் அல்லாஹு ரப்புல் ஆலமீன் வெகுவிரைவில் உங்கள் மீது வேதனையை, தண்டனையை பொதுவாக இறங்கி விடுவான். பிறகு நீங்கள் துஆ கேட்பீர்கள் உங்களுடைய துஆ ஏற்றுக் கொள்ளப்படாது.

அறிவிப்பாளர் : ஹுதைஃபாரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி,எண் : 2169,தரம் : ஹசன் (அல்பானி)

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்கூறக்கூடிய விளக்கத்தை இமாம் தபரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்:

அல்லாஹ்வுடைய வசனமாகிய, அநியாயம் செய்தவர்களுக்கு மட்டும் வராத வேதனையை நீங்கள் எல்லோரும் பயந்து கொள்ளுங்கள் என்று, (அல்குர்ஆன் 8 : 25) அல்லாஹ் சொல்லக்கூடிய வசனத்தில், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுவிளக்கம் சொல்கிறார்கள்.

முஃமின்களுக்கு அல்லாஹ் கட்டளை கொடுத்தான், தங்களுக்கு மத்தியில் நடக்கக்கூடிய தீமையை அவர்கள் அங்கீகரித்து விடக்கூடாது, ஏற்றுக்கொண்டு விடக் கூடாது. அப்படி ஏற்றுக்கொண்டால் அல்லாஹ்வுடைய வேதனை, தண்டனை வரும்போதுஅதில் அவர்கள் சிக்கிக் கொள்வார்கள்.

தஃப்ஸீர் தபரி.

அதி இப்னு உமைரா ரழியல்லாஹு அன்ஹுசொல்லக்கூடிய மேலும் ஒரு ஹதீஸை பார்க்கிறோம். அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்,

لَا يُعَذِّبُ الْعَامَّةَ بِعَمَلِ الْخَاصَّةِ حَتَّى يَرَوْا الْمُنْكَرَ بَيْنَ ظَهْرَانَيْهِمْ وَهُمْ قَادِرُونَ عَلَى أَنْ يُنْكِرُوهُ فَلَا يُنْكِرُوهُ فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَذَّبَ اللَّهُ الْخَاصَّةَ وَالْعَامَّةَ

சில மக்கள் செய்கின்ற பாவத்தால், பொதுவாக எல்லோரையும் அல்லாஹு ரப்புல் ஆலமீன் வேதனை செய்து விடமாட்டான். சிலர் செய்கின்ற தவறின் காரணமாக எல்லோருக்கும் அல்லாஹ் தண்டனையை பொதுவாக்க மாட்டான்,

எதுவரையெனில், அந்த சில மக்கள் செய்கின்ற தவறு, தங்களுக்கு தெரியவந்து அந்த தவறை தடுப்பதற்கு, அந்த தவறிலிருந்து அவர்களை திருத்துவதற்கு தங்களுக்கு ஆற்றல் இருந்தும், அதை செய்யாமல் பொதுமக்கள் விட்டால், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தண்டனையை இறங்குவான். அந்த தண்டனைகளில் எல்லோரும் வந்து விடுவார்கள்.

அறிவிப்பாளர் : அதி இப்னு உமைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹமத்,எண் : 17720, 17057.

இப்னு கைய்யும் ரஹிமஹுல்லாஹ் இதற்கு விளக்கம் சொல்கின்றார்கள் :

அல்லாஹ்வுடைய மார்க்கம் மீறப்படும் போது, அல்லாஹ்வுடைய கட்டளைகள் மீறப்படும் போது, அல்லாஹ்வுடைய தீன் வீணடிக்கப்படும் போது, ரசூல் அவர்களுடைய சுன்னா புறக்கணிக்கப்படும் போது, ஒரு மனிதன் வாய் பேசாமல் மௌனமாக இருந்தால், இவன் ஊமையாக இருக்கின்ற ஒரு ஷைத்தான் ஆவான்.

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய சோதனையென்பது மிகப்பெரிய ஒரு சோதனை, அல்லாஹ்வை நாம் பயந்துகொள்ளக் கூடிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம்.

இதுபோன்ற பாவங்கள்ஏன், எப்போது, என்னென்ன காரியங்களால் ஏற்படுகின்றது என்று பார்க்கும் பொழுது, நபி அவர்கள் சொன்னார்கள்,

في هذه الأمة خسف ومسخ وقذف فقال رجل من المسلمين يا رسول الله ومتى ذاك قال إذا ظهرت القينات والمعازف وشربت الخمور

இந்த உம்மத்தில் பூகம்பங்கள் ஏற்படும், உருவங்கள் மாற்றப்படும், வானத்திலிருந்து கல் மழைகள் பொழியும். அப்போது, முஸ்லிம்களில் ஒருவர் கேட்டார், அல்லாஹ்வுடைய தூதரே! அது போன்ற தண்டனைகள் எப்போது நிகழும் என்பதாக?

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொன்னார்கள் : இசைக்கக் கூடிய பெண்கள், பாட்டு பாடக்கூடிய பெண்கள்வெளிப்படையாக தங்களுடைய பாட்டை பாடும்போது, இசைக்கருவிகள் பிரபல்யம் ஆகிவிட்டால், மது பகிரங்கமாக குடிக்கப்பட்டால் இந்த தண்டனை நிறைவாக இறங்கும்.

அறிவிப்பாளர் : இம்ரான் இப்னு ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி,எண் : 2212, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

இந்த மூன்றில் எந்த ஒன்று நமது காலத்தில் இல்லை? தெருவில் அல்ல, வீட்டுக்குள் நடக்கின்ற ஒரு சூழ்நிலையை பார்க்கின்றோம், அல்லாஹ் பாதுகாப்பானாக.!

பொதுவாக தண்டனைக்கென்று எந்த ஒரு காரணத்தை அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்களோ, பூகம்பங்களுக்கு, நிலநடுக்கங்களுக்கு, கல்மலைகளுக்கு, இதுபோன்ற ஒரு பேரழிவுகளுக்கு காரணம் என்று எதை சொன்னார்களோ, அதுதான் இன்றைய சமுதாயத்தினுடைய கலாச்சாரமாக, எல்லோரும் அதை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக, அங்கீகரிக்காதவர்கள் பிற்போக்கு சிந்தனை வாதிகள், மதத்தீவிரவாதிகள், கலாசாரத்தை அங்கீகரிக்காத மக்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மக்களுடைய நிலை மாறி இருப்பதை பார்க்கிறோம்.

இப்னு மாஜா உடைய இன்னொரு அறிவிப்பில்,அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள் :

لَيَشْرَبَنَّ نَاسٌ مِنْ أُمَّتِي الْخَمْرَ يُسَمُّونَهَا بِغَيْرِ اسْمِهَا يُعْزَفُ عَلَى رُءُوسِهِمْ بِالْمَعَازِفِ وَالْمُغَنِّيَاتِ يَخْسِفُ اللَّهُ بِهِمْ الْأَرْضَ وَيَجْعَلُ مِنْهُمْ الْقِرَدَةَ وَالْخَنَازِيرَ

எனது உம்மத்தில் ஒரு கூட்டம் மதுவை குடிக்கும். அதற்கு வேறு ஒரு பெயரை வைப்பார்கள். அவர்கள் இருக்கக்கூடிய சபைகளில் இசைக் கேட்கப்படும். அவர்களை அல்லாஹ் அப்படியே பூமியில் இழுத்துக் கொள்வான். அப்படிப்பட்டவர்களில் தான் குரங்குகளையும், பன்றிகளையும் அல்லாஹ் ஏற்படுத்துவான். உருவங்களை அல்லாஹ் மாற்றி விடுவான்.

அறிவிப்பாளர் : அபூ மாலிக் அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னுமாஜா,எண் : 4010, 4020.

இன்று பார்க்கின்றோம், காஃபிர்கள் உடைய ஒரு கூட்டம், இதை வெளிப்படையாக செய்து கொண்டிருக்கக் கூடிய, இதுதான் தங்களது மார்க்கம் என்று செய்து கொண்டிருக்க கூடிய ஒரு சூழ்நிலையில்,

எந்த ஒரு மார்க்கத்தில் இவையெல்லாம் பெரும் பாவங்கள் என்று எச்சரிக்கை செய்யப்பட்டதோ,உணர்த்தப்பட்டதோ, தெளிவாக கூறப்பட்டதோ, அந்த மார்க்கத்துடைய மக்கள் இசையை ஹலாலாக்கி கொண்டிருப்பதைநாம் பார்க்கிறோம்.அல்லாஹ் பாதுகாப்பானாக!

இமாம் அஹ்மது அவர்கள், அல்லாஹ்வுடைய தூதர் அவர்களுடைய கூற்றை அறிவிக்கிறார்கள் :

فَيُبْعَثُ عَلَى أَحْيَاءٍ مِنْ أَحْيَائِهِمْ رِيحٌ فَتَنْسِفُهُمْ كَمَا نَسَفَتْ مَنْ كَانَ قَبْلَهُمْ بِاسْتِحْلَالِهِمْ الْخُمُورَ وَضَرْبِهِمْ بِالدُّفُوفِ وَاتِّخَاذِهِمْ الْقَيْنَاتِ

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒரு பெரும் கூட்டத்தின் மீது, ஒரு பெரிய வேதனையின் காற்றை அவன் வீசுவான். அந்த காற்று அவர்களை அழித்து நாசமாக்கும், இதற்கு முன்னுள்ளவர்களை அழித்து நாசமாக்கியதை போன்று.

அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள், இப்படிப்பட்ட புயல் காற்று ஏன் ஏற்படுகிறது? அவர்கள் மதுவை ஹலால் ஆக்கிக் கொண்டார்கள். இசையை அவர்கள் பயன்படுத்தினார்கள். பாட்டு படக்கூடிய பெண்களுக்கு பின்னால் அவர்கள் சென்றார்கள்.(4)

அறிவிப்பாளர் : அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத்,எண் : 21202, 22231.

இது போன்று பல சோதனைகளை நாம் பார்க்கிறோம். பல பாவங்களை நமது சமுதாயத்திற்கு மத்தியில் பார்க்கிறோம். இந்த பாவங்கள் தான் இப்படிப்பட்ட பொதுவான தண்டனை இறங்குவதற்குரிய காரணம்.

இன்னும் ஒரு ஹதீஸில் கூடுதலான விளக்கத்தை நாம் பார்க்கின்றோம். அல்லாஹ்வுடைய தூதர் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை குறித்து, பூகம்பத்தை குறித்து, உருவங்கள் மாற்றப்படுவதை குறித்து, புயல்காற்றுகளை பற்றி அவர்கள் சொன்னபோது, அந்த ஸஹாபாக்கள் கேட்டார்கள்;

அல்லாஹ்வின் தூதரே! அந்த நேரத்தில் இருக்கின்ற அந்த மக்கள், "லா இலாஹா இல்லல்லாஹ்" என்று சாட்சி சொல்ல கூடியவர்களாக இருப்பார்களா? இல்லையா? என்று. நபியவர்கள் சொன்னார்கள் :

إذا ظهرت المعازف والخمور ولبس الحرير

ஆம்! ஷஹாதா சொன்ன மக்கள் தான். ஆனால் இசைக்கருவிகள் அவர்களுக்கு மத்தியில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டால், மது அவர்களுக்கு மத்தியில் பரவி விட்டால், பட்டாடைகளை அவர்கள் அணிந்து விட்டால்இந்த தண்டனை கண்டிப்பாக வரும்.

நூல் : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, எண் :  37545.

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸில்இன்னும் விளக்கமாக சொல்லப்படுகின்றது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அவர்கள் சொன்னார்கள்.

يمسخ قوم من أمتي في آخر الزمان قردة وخنازير"

இந்த உம்மத்தின் இறுதியில் ஒரு கூட்டம் குரங்குகளாக, பன்றிகளாக மாற்றப்படுவார்கள், ஸஹாபாக்கள் கேட்டார்கள்; அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் "லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்" என்று சாட்சி சொன்னவர்களா? என்று.

நபி சொன்னார்கள், சாட்சி மட்டும்இல்லை, அவர்கள் நோன்பும் வைத்தார்கள், அவர்கள் தொழவும் செய்தார்கள், அவர்கள் ஹஜ்ஜும் செய்தார்கள்.

அப்படியென்றால், இப்படிப்பட்ட ஒரு மோசமான, கொடூரமான தண்டனைக்கு அவர்கள் ஆளாகியது ஏன்? அல்லாஹ்வுடைய தூதரே!

நபியவர்கள் சொன்னார்கள், அவர்கள் இசைக்கருவிகளை பயன்படுத்தினார்கள்.

(இன்று எத்தனை முஸ்லிம் பள்ளிக்கூடங்களில் இசைக்கருவிகள் கற்பிக்கப்படுகின்றன. ஆடல், பாடல் கூத்து, கும்மாளம் அங்கே கற்பிக்கப்படுகிறது .

அதுவொரு கலாச்சாரமாக பொழுதுபோக்காக பயிற்றுவிக்கப்படுகிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக.! இதற்காகவே முஸ்லிம்களில் பலர் தங்களது நாடுகளில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

எந்த தவறுகளை, எந்த பாவங்களை அல்லாஹ் கண்டித்தானோ, எது இந்த சமுதாயத்தில் உள்ள,எல்லாவித மக்களிடத்திலிருந்துசுத்தமாகத் துடைக்கப்படவேண்டுமென்றுஅல்லாஹ் கட்டளையிட்டானோ அந்த மார்க்கத்தை பின்பற்ற கூடியவர்கள்,இன்று தங்களது நாட்டை இதற்காக மாற்றி இருக்கின்றார்கள்.)

சஹாபாக்களின் கேள்விக்கு நபி அவர்கள் பதில் சொன்னார்கள் :

يتخذون المعازف والقينات والدفوف ويشربون الأشربة فباتوا على شربهم ولهوهم فأصبحوا قد مسخوا قردة وخنازير"

இசைக்கருவிகள் எடுத்துக் கொண்டார்கள், பாடக்கூடிய பெண்களை எடுத்துக் கொண்டார்கள். மதுவிலும் வீண் விளையாட்டுக்களிலும் அவர்கள் இருந்தார்கள். அவர்களுடைய காலைப் பொழுதில் பார்த்தால் அவர்கள் குரங்குகளாக, மாற்றப்பட்டு இருப்பார்கள்.

நூல் : ஹில்யதுல் அவ்லியா அபூ நயீம், ஜீஸ்வு -9, பக்கம் -119.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் சொன்னார்கள், பூகம்பங்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக தொடர்ச்சியாக பெருகாத வரை மறுமை நாள் நிகழாது என்பதாக.

இன்றைய நம்முடைய காலத்தின் சூழ்நிலைகளைப் பார்க்கும் பொழுது, கண்டிப்பாக மறுமையை நாம் நெருங்கிய கொண்டிருக்கின்றோம்.

நம்முடைய சமுதாயத்தில் இருக்கக்கூடிய அந்தப் பாவங்களின் நிலையை பார்க்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் நாம் பயப்பட வேண்டிய, நம்மை முதலாவதாக நாம் சீர்திருத்திக் கொள்ள வேண்டிய, அந்தப் பாவங்களிலிருந்து தவ்பா செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

அது போன்று, நம்மை சுற்றியுள்ள மக்களின் மீது மக்களுக்காக, நம்மீது நமக்கு இருக்கக்கூடிய கடமையை நாம் மறந்துவிடக்கூடாது.

நான் ஒரு முஸ்லிம், ஒரு முஃமின் என்ற அடிப்படையில் தவ்ஹீதின் பக்கம் அந்த மக்களை அழைப்பது, ஷிர்கிலிருந்து அந்த மக்களை சுத்தமாக்குவது, நம்மீது கட்டாய கடமையாக இருக்கிறது.

அதுபோக, அவர்களுடைய வாழ்க்கையில், அவர்களது குடும்பங்களில், கலாச்சாரங்களில் இருக்கக்கூடிய சமூக சீர்கேடுகள், அல்லாஹ்வுடைய கோபத்திற்குரிய பாவங்கள் என்ன இருக்கின்றனவோ அழகிய முறையில் அவற்றை குறித்து அவர்களுக்கு எச்சரிக்கை செய்து அவர்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கின்றது.

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அவனுடைய தண்டனையிலிருந்து நம்மை  பாதுகாப்பானாக! அவனுடைய ரஹ்மத்தில் அல்லாஹு ரப்புல் ஆலமீன் இம்மையிலும் மறுமையிலும் நன்மை வைப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

أخبرنا أحمد بن محمد بن الشرقي ، قال : حدثنا محمد بن يحيى الذهلي ، قال : حدثنا عمرو بن عثمان الرقي ، قال : حدثنا زهير بن معاوية ، عن هشام بن عروة ، عن أبيه ، عن عائشة ، قالت : قلت : يا رسول الله ، إن الله إذا أنزل سطوته بأهل الأرض وفيهم الصالحون فيهلكون بهلاكهم ؟ فقال : « يا عائشة إن الله إذا أنزل سطوته بأهل نقمته وفيهم الصالحون ، فيصابون معهم ، ثم يبعثون على نياتهم وأعمالهم » (صحيح ابن حبان 7438)

குறிப்பு 2)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ حَدَّثَتْنِي عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنْ الْأَرْضِ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيهِمْ أَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ قَالَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِمْ (صحيح البخاري 1975 -)

குறிப்பு 3)

حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ عَنْ خَالِدٍ ح و حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ أَخْبَرَنَا هُشَيْمٌ الْمَعْنَى عَنْ إِسْمَعِيلَ عَنْ قَيْسٍ قَالَ قَالَ أَبُو بَكْرٍ بَعْدَ أَنْ حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ يَا أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ تَقْرَءُونَ هَذِهِ الْآيَةَ وَتَضَعُونَهَا عَلَى غَيْرِ مَوَاضِعِهَا {عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} قَالَ عَنْ خَالِدٍ وَإِنَّا سَمِعْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا الظَّالِمَ فَلَمْ يَأْخُذُوا عَلَى يَدَيْهِ أَوْشَكَ أَنْ يَعُمَّهُمْ اللَّهُ بِعِقَابٍ و قَالَ عَمْرٌو عَنْ هُشَيْمٍ وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مِنْ قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي ثُمَّ يَقْدِرُونَ عَلَى أَنْ يُغَيِّرُوا ثُمَّ لَا يُغَيِّرُوا إِلَّا يُوشِكُ أَنْ يَعُمَّهُمْ اللَّهُ مِنْهُ بِعِقَابٍ (سنن أبي داود 3775 -)

குறிப்பு 4)

حَدَّثَنَا سَيَّارُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا جَعْفَرٌ قَالَ أَتَيْتُ فَرْقَدًا يَوْمًا فَوَجَدْتُهُ خَالِيًا فَقُلْتُ يَا ابْنَ أُمِّ فَرْقَدٍ لَأَسْأَلَنَّكَ الْيَوْمَ عَنْ هَذَا الْحَدِيثِ فَقُلْتُ أَخْبِرْنِي عَنْ قَوْلِكَ فِي الْخَسْفِ وَالْقَذْفِ أَشَيْءٌ تَقُولُهُ أَنْتَ أَوْ تَأْثُرُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا بَلْ آثُرُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ وَمَنْ حَدَّثَكَ قَالَ حَدَّثَنِي عَاصِمُ بْنُ عَمْرٍو الْبَجَلِيُّ عَنْ أَبِي أُمَامَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَدَّثَنِي قَتَادَةُ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ وَحَدَّثَنِي بِهِ إِبْرَاهِيمُ النَّخَعِيُّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَبِيتُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى أَكْلٍ وَشُرْبٍ وَلَهْوٍ وَلَعِبٍ ثُمَّ يُصْبِحُونَ قِرَدَةً وَخَنَازِيرَ فَيُبْعَثُ عَلَى أَحْيَاءٍ مِنْ أَحْيَائِهِمْ رِيحٌ فَتَنْسِفُهُمْ كَمَا نَسَفَتْ مَنْ كَانَ قَبْلَهُمْ بِاسْتِحْلَالِهِمْ الْخُمُورَ وَضَرْبِهِمْ بِالدُّفُوفِ وَاتِّخَاذِهِمْ الْقَيْنَاتِ (مسند أحمد 21202 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/