இறையில்லத்தை நோக்கி இறையடியார்கள் | Tamil Bayan - 360
இறையில்லத்தை நோக்கி இறையடியார்கள்
ஜுமுஆ குத்பா தலைப்பு : இறையில்லத்தை நோக்கி இறையடியார்கள்
வரிசை : 360
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 07-08-2015 | 22-10-1436
بسم الله الرحمن الرّحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே!அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாக அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்தத் தூதரின் குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அல்லாஹ்வின் அச்சத்தை அல்லாஹ்வின் பயத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக இந்த ஜும்ஆ உரையைத் தொடங்குகிறேன்.
அல்லாஹ்வை பயந்து, அல்லாஹ்வை முழுமையாக நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வுடைய வேதத்தை சிறந்த முறையில் பின்பற்றி, அவனுடைய தூதர் முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺஅவர்களுடைய சொல்லையும் செயலையும் வாழ்க்கையில் முழுமையாக பின்பற்றிய நன்மக்களில் என்னையும் உங்களையும் அல்லாஹ் ஆக்கி அருள வேண்டுமென்று அல்லாஹ்விடத்தில் துஆ செய்தவனாக ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா அவனை விட உயர்ந்தவன் வேறு யாரும் இல்லை. அவனுடைய திருமுகத்தை விட உயர்ந்த ஒன்று எதுவுமில்லை. அவனுடைய திருப்பொருத்தத்தை விட மேலான ஒன்று எதுவும் இல்லை.
وَرِضْوَانٌ مِنَ اللَّهِ أَكْبَرُ
அல்லாஹ்வுடைய பொருத்தம் மிக மிக பெரியது. (அல்குர்ஆன் 9 : 72)
وَمَا لِأَحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَى (19) إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَى (20) وَلَسَوْفَ يَرْضَى
தான் பதில் நன்மை செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் தன் மீது இருக்காது.இருப்பினும், மிக்க மேலான தன் இறைவனின் திருமுகத்தை விரும்பியே தவிர (வேறு எதற்காகவும் தானம் செய்ய மாட்டார்). (இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார்.(அல்குர்ஆன் 92 : 19 -21)
ஒரு முஃமினுடைய வாழ்வின் லட்சியமே, அல்லாஹ்வுடைய பொருத்தத்தை அடைவது,அல்லாஹ்வின் அன்பை அடைவது. அல்லாஹ் தான் எல்லாவற்றை விட உயர்ந்தவன்,அவனை விட மேலான ஒன்று எதுவும் இல்லை என்று ஒருவன் உண்மையாக அறிந்து கொண்டால் அல்லாஹ்வைத் தேடுவதை விட அவனுக்கு பெரிய வேலை இருக்காது.
அல்லாஹ்வை திருப்தி படுத்துவதை விட உயர்ந்த காரியம் இருக்காது. யாரை நீங்கள் உயர்ந்தசிறந்த ஒருவராக நினைக்கிறீர்களோஅவரை நீங்கள் திருப்திபடுத்த நினைப்பீர்கள்,அவருடைய கோபத்திலிருந்து நீங்கள் பாதுகாப்பு தேடுவீர்கள், அவரிடம் உங்களுக்கு நெருக்கம் ஏற்பட வேண்டுமென்று விரும்புவீர்கள்.
இந்த உலகத்தில் ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டவர்கள், பதவி கொடுக்கப்பட்டவர்கள், செல்வம் கொடுக்கப்பட்டவர்கள் இவர்களெல்லாம் நாளை மறுமையில் ஃபக்கீர்களாக இருப்பார்கள்.
எனவே நீங்கள் யாரிடத்தில் நெருக்கத்தை தேடினீர்களோ அவர்கள் நாளை மறுமையில் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது.
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا
அந்நாளில் ஓர் ஆத்மா, மற்றோர் ஆத்மாவுக்கு ஒரு பயனுமளிக்க சக்தி பெறாது.(அல்குர்ஆன் 82:19)
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ (34) وَأُمِّهِ وَأَبِيهِ (35) وَصَاحِبَتِهِ وَبَنِيهِ (36) لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான், தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும், தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (ஓடுவான்). அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும். (அல்குர்ஆன் 80 : 34-37)
அந்த நாளில் யாரும் யாருக்காகவும் அல்லாஹ்விடம் பரிந்து பேச முடியாது. துணிவு கொள்ள முடியாது.
இப்படி அழியக்கூடிய எந்த அதிகாரமும் இல்லாத மக்களிடத்தில் இன்று மனிதர்கள் நெருக்கத்தை தேடுகிறார்கள், அவர்களுடைய விருப்பத்தை தேடுகின்றார்கள், அவர்களுடைய வெறுப்பை பயப்படுகின்றார்கள்.
நாம் நெருக்கத்தை தேடுவதற்கு மிகத் தகுதியானவன் அல்லாஹ். நாம் விருப்பத்தை தேடுவதற்கு மிகத் தகுதியானவன் அல்லாஹ். நாம் ஒருவருடைய வெறுப்பை பயப்படுவது என்றால் அதற்கு மிக உரிமை உள்ளது அல்லாஹ்வுடைய வெறுப்புதான்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலாஅவனுடைய விருப்பத்தை வெறும் பேச்சில் வைத்திருக்கவில்லை. வெளித் தோற்றத்தில் வைத்திருக்கவில்லை. அவனுடைய அன்பை நெருக்கத்தை உண்மையான இபாதத்தில் வைத்திருக்கின்றான்.
உண்மையான இக்லாஸான எண்ணத்தில் அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவனுடைய அன்பை வைத்திருக்கின்றான். அல்லாஹ்வை நெருங்க வேண்டுமென்றால் அவனுடைய இபாதத்தை கொண்டுதான் அவனை நெருங்க வேண்டுமே தவிர ஒரு பெயரைக் கொண்டோ புகழைக் கொண்டோ இந்த உலகத்தில் மக்கள் எதன் மூலமாக நெருக்கத்தை அடைய முயற்சிக்கிறார்களோ அதன் மூலமாக அல்ல. அல்லாஹ்வுடைய நெருக்கத்தை இபாதத்களின் மூலமாக தான் அடைய முடியும்.
அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் அல்லாஹ் கூறுவதாக சொல்கிறார்கள் :
நான் கடமையாக்கிய ஃபர்ழான இபாதத்களை சரி வர செய்வதை கொண்டே தவிர வேறு ஒரு வழியில் என் அடியான் என்னை சிறந்த முறையில் நெருங்கிட முடியாது. (1)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி,எண் : 6021, 6502.
தொழுகை, நோன்பு, ஜகாத்,ஹஜ் இந்த ஐந்து கடமைகளை எந்த அளவு சரிவர பேணுகிறோமோ அதன் மூலமாகத்தான் அல்லாஹ்வுடைய முதல் நெருக்கம் கிடைக்கிறது.
அதற்குப் பிறகு உபரியான வணக்க வழிபாடுகள்,தொழுகையில் சுன்னத்தான நஃபிலான தொழுகைகள், நோன்பில் சுன்னத்தான நஃபிலான நோன்புகள், தான தர்மங்களில் நஃபிலான தானதர்மங்கள், இப்படிப்பட்ட நஃபிலான வணக்க வழிபாடுகளைக் கொண்டு என் பக்கம் என் அடியான் நெருங்கிக் கொண்டே இருக்கிறான், அவனுக்கும் எனக்கும் இடையில் உள்ள தூரம் குறைந்து கொண்டே போகிறது.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலாஅவனுடைய நெருக்கத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றாகத்தான் அல்லாஹ்வுடைய வீட்டை வைத்திருக்கின்றான்.
அந்த வீட்டை நாடுவோருக்கு அந்த வீட்டிற்கு செல்வோருக்கு அல்லாஹ் வைத்திருக்கின்றான். அல்லாஹ்வுடைய அன்பை அடைவதற்குரிய இபாதத் உடைய வழிகளில் ஒன்றுதான் ஹஜ்ஜும் உம்ராவும்.
ஹஜ் உம்ரா என்பது ஒரு சுற்றுலாப் பயணம் அல்ல. ஒரு புதிய நாட்டை ஒரு புதிய ஊரை சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வருவது அல்ல.
அல்லது ஏதோ இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு சடங்கு கடமையாக்கப்பட்டு அதை செய்தே ஆக வேண்டும்,இல்லை என்றால் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று செய்யப்படக்கூடிய ஒரு சடங்கு சம்பிரதாய வணக்கம் அல்ல.
அல்லாஹ்வுடைய அன்பின் உணர்வை முழுமையாகப் பெறுவதற்கு, அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடி, நான் அவனுக்கு முன்னால் அவனுடைய அன்பை பொருத்தத்தை தேடி அலையக்கூடிய ஒரு பலவீனமான அடியான், அல்லாஹ்வுடைய அன்புக்காக நான் எதையும் இழக்க தயார் என்று தன்னுடைய முழு பணிவை தங்களுடைய முழு இயலாமையை அல்லாஹ்விற்கு முன்னால் சமர்பிக்கக் கூடிய ஒரு பயணம் தான் ஹஜ் உம்ரா பயணம்.
இன்று, மக்கள் எண்ணிக் கொள்வது போன்று, மகிழ்ச்சியாக இன்பமாக சென்று விட்டு அதிக சாமான்களை அள்ளிக் கொண்டு வருகின்ற பயம் கிடையாது.
கண்ணியத்திற்குரிய நபித்தோழர்களின்வரலாறுகளை பார்க்கிறோம். பல ஸலஃபுகளின் சம்பவங்களை பார்க்கிறோம். நான் சொல்லக்கூடிய தல்பியா ஏற்றுக்கொள்ளப்படுமா?என்று தல்பியா சொல்வதற்கு முன் அழுதவர்களை பார்க்கிறோம்.
ஏனென்றால், அல்லாஹ்வுடைய தூதர் ﷺஅவர்கள் சொல்கிறார்கள் : நீங்கள் ஹலாலான வருவாயிலிருந்து ஹஜ் செய்தால்,
(என்ன நிபந்தனை? ஊரையெல்லாம் ஏமாற்றி சம்பாதித்த செல்வத்தில் அல்ல, பிறரை ஏமாற்றி குவித்து வைத்திருக்கின்ற உங்களுடைய பொருளாதாரத்தில் இருந்து அல்ல,ஜகாத் கொடுக்கப்படாத பேணுதல் இல்லாமல் ஹலால் ஹராம் பார்க்காமல் சம்பாதித்த செல்வத்திலிருந்து அல்ல.)
ஹலாலான செல்வத்திலிருந்து ஒரு மனிதன் ஹஜ் உம்ராவை நாடி இஹ்ராம் அணிந்துக்கொண்டு அவன், லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் என்று சொன்னால் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அறிவிக்கப்படுகிறது, உன்னுடைய தல்பியா ஏற்றுக்கொள்ளப்பட்டது; உன்னுடைய ஹஜ் உம்ரா நன்மையாக அமையட்டும் என்று அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவனுக்கு வாழ்த்து சொல்லப்படுகிறது.
ஒரு மனிதன் ஹராமில் சம்பாதித்து ஹஜ் உம்ராவுக்காக தயாராகி அவன் தல்பியா சொல்லும் பொழுது உன்னுடைய தல்பியா நிராகரிக்கப்பட்டு விட்டது, உன்னுடைய தல்பியா அங்கீகரிக்கப்படவில்லை என்று அதே இடத்தில் அதே நேரத்தில் அவனுக்கு பதில் சொல்லப்பட்டு விடுகிறது.(2)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அல்முஃஜமுல் அவ்ஸத், எண் : 5228, 5386.
இதை நினைத்து நினைத்து அழுத நம்முடைய ஸலபுகளின் வரலாறுகளைப் பார்க்கிறோம். என்னுடைய தல்பியாவிற்கு அல்லாஹ்வுடைய புறத்திலிருந்து அங்கீகாரம் கிடைக்குமா? அல்லது அந்த தல்பியா மறுக்கப்படுமா? என்ற பயம் அவர்களுக்கு இருந்தது.
இன்று நம்முடைய ஹாஜிகளை பாருங்கள். பயணங்கள் எளிதாக அமைந்து விட்டது. எல்லாம் எல்லாவிதத்திலும் சௌகரியமாக அமைந்துவிட்ட காரணத்தால், சிரமத்தை உணராத காரணத்தால், வணக்க வழிபாடுகளில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய ஓர் ஆன்மீக உணர்வு இல்லாமல்,இபாதத்கள் சடங்குகளாக மாறிவிட்ட காரணத்தால், இறையச்சம் அங்கே இல்லாத காரணத்தால் எந்தவிதமான உணர்வும் இல்லாமல் தல்பியா சொல்லக் கூடியவர்களை பார்க்கிறோம்.
அல்லாஹ்வுடைய இந்த ஹஜ் உம்ரா என்ற இந்த வணக்கம் எங்க நிறைவேற்றப்படுகிறது? உலகத்தில் எந்த ஒரு ஊரை விட சிறந்த ஒரு ஊரை அல்லாஹ் வைக்கவில்லையோ. தனக்காக வேண்டிய அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எந்த ஒரு புனிதமான ஊரில் வீட்டை முதலாவதாக இந்த பூமியில் இறக்கினானோ ஏற்படுத்தினானோ அந்த இடத்தில் செய்யப்படக்கூடிய வணக்கம்.
அல்லாஹ்வுடைய வீடுகள் உலகத்தில் எங்கே இருந்தாலும் கண்ணியமானவை. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவை அல்லாஹ்வுடைய அருளுக்கு உரியவை.
ஆனால், அல்லாஹ்வுடைய எல்லா வீடுகளுக்கும் முதல் வீடாக முதன்மையானதாக ஒரு வீட்டை அவன் மக்காவில் ஏற்படுத்தினான். அந்த மக்காவில் அல்லாஹு ரப்புல் ஆலமீன் அதற்கென்று ஒரு தனி சிறப்பை வைத்திருக்கின்றான்.
அல்லாஹு தஆலா அடியார்களின் உள்ளங்களை அறிந்தவன். மனிதர்களின் அந்த மனநிலையை அவன் அறிந்தவன். இந்த உள்ளங்களில் சில நேரங்களில் இரும்பில் துரு பிடிப்பது போன்று இவர்களுடைய உள்ளங்களில் கரைகள் படியலாம்.
பாவத்தின் கரைகள் படியலாம். அதனால் உள்ளங்கள் கடினமாகலாம். உள்ளத்தில் நோய் ஏற்படலாம்.
இப்படிப்பட்ட நிலையில்தான், அல்லாஹ் தனது வீட்டிற்கு அவர்களை அழைத்து ஒரு விசேஷமான இபாதத்திற்கு அவர்களை அழைத்து வேறு எந்த வணக்கங்களுக்கும் இல்லாத அளவிற்கு அந்த வணக்கத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்து, நிபந்தனைகளை விதித்து,அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவனுடைய ஊருக்கு அழைக்கிறான்.
அவனுடைய வீட்டிற்கு வருவதற்காக, அங்கே தங்குவதற்கு, அந்த வீட்டை சுற்றி தவாஃப் செய்வதற்காக, அங்கே நின்று தொழுவதற்காக நம்மை அழைக்கின்றான்.
அல்லாஹ்வுடைய ஊரை நேசிக்காத ஒரு உள்ளம் இருக்குமா? அல்லாஹ்வுடைய வீட்டை நேசிக்காத ஒரு முஸ்லிம் இருப்பானா?முஸ்லிம்களுடைய வயோதிகர்களிலிருந்து சிறுவர்கள் வரை, ஆண்களில் இருந்து பெண்கள் வரை இப்படி எல்லா மக்களும் அல்லாஹ்வுடைய வீட்டை நேசிக்கின்ற ஒரு மனதன்மையை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இயற்கையாகவே உள்ளங்களில் பதியவைத்து இருக்கின்றான்.
அல்லாஹ் கூறுகிறான் :
إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ
(இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக ‘பக்கா' (மக்கா)வில் இருப்பதுதான். அது மிக்க பாக்கியமுள்ளதாகவும், உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன் 3 : 96)
மக்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காக இந்த பூமியில் முதலாவதாக வைக்கப்பட்ட வீடு மக்காவில் இருக்கிறது. அல்லாஹ் மக்காவிற்கு "மக்கா" என்ற பெயரை சூட்டுகிறான்.
காரணம், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த இடத்தை எப்படி தேர்ந்தெடுத்தான் என்றால்,மக்கா என்ற அரபி வார்த்தையின் பொருள், எந்த இடத்தில் எப்போதும் மக்கள் நெருக்கடித்துக் கொண்டிருப்பார்களோ, முட்டி மோதிக் கொண்டிருப்பார்களோ அதிக எண்ணிக்கையில் ஒன்று சேர்ந்து கொண்டிருப்பார்களோ அந்த இடத்திற்கு 'மக்கா' என்று சொல்லப்படும்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலாஅவனுடைய கஅபாவை அப்படிதான் ஆக்கி இருக்கின்றான். எது இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, வாழ்க்கையில் அந்த இடத்திற்கு ஒரு முறை சென்றால் போதும் என்று ஏங்கக்கூடிய முஸ்லிம்களின் உள்ளங்கள் எத்தனை!
அங்கு வரக்கூடிய நேரத்தில் பல ஏழைகளை பார்க்கிறோம். பல மூதாட்டிகளை பார்க்கிறோம். வரியவர்களை பார்க்கிறோம். வாழ்நாளெல்லாம் தன்னுடைய வாழ்க்கையில் செல்வத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிறுக சிறுக சேகரித்து அல்லாஹ்வுடைய வீட்டை பார்ப்பதற்காக, எனக்கு ஒரு முறை இந்த கஅபாவை தவாஃப் செய்ய வேண்டும் என்ற வாய்ப்புக்காக வாழ்நாளெல்லாம் ஏங்கிக் கொண்டிருந்தேன்.
அல்லாஹ் எனக்கு இப்பொழுது வாய்ப்பளித்தான் என்று சொல்லக்கூடிய நூற்றுக்கணக்கான ஹாஜிகளை உம்ரா பயணிகளை அங்கே பார்க்கின்றோம்.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் இந்த பூமியில் இறக்கப்பட்ட போது அல்லாஹ்விடத்தில் தவ்பா செய்து அழுது மன்றாடு கேட்கிறார்கள். யா அல்லாஹ்! எனது பாவமன்னிப்பை ஏற்றுக் கொண்டாயா? நான் உன்னை வணங்க வேண்டுமே!நான் வானத்தில் இருக்கும் போது மலக்குகளோடு வணங்கிக் கொண்டிருந்தேனே!அவர்களது தஸ்பீஹ்களை கேட்டுக்கொண்டிருந்தேனே!
இன்று, நானோ பூமியில் வந்து இருக்கின்றேன், உன்னை வணங்க வேண்டும் என்று ஆதம் நபி அல்லாஹ்விடத்தில் துஆ செய்தபோது, அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவர்களுக்காக முதலாவதாக இந்த வீட்டை ஏற்படுத்துகிறான்.
அல்லாஹ் சொல்கிறான் : இந்த வீடு ஒரு பரக்கத்தின் வீடு என்று. ஈமானில் அங்கு பரக்கத் இருக்கிறது. ஒரு பலவீனமான முஃமின் அங்கு சென்றாலும் பலமான ஈமானோடு திரும்புவான், அவனுடைய உள்ளம் ஈமானின் பக்கம் நாட்டம் உள்ளதாக இருந்தால்.
அவனுடைய உள்ளம் அல்லாஹ்வின் பக்கம் திரும்பியதாக இருக்குமேயானால் கண்டிப்பாக அவனுடைய ஈமானில் ஒரு மாற்றம் ஏற்பட்டே ஆகும்.
அவனுடைய முந்திய வாழ்க்கையில் இருந்து பிந்திய வாழ்க்கை மாறுபட்டே இருக்கும். அவனுடைய செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத்தை தருகிறான்.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺசொல்கிறார்கள் :
யார் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்து திரும்புகிறார்களோஅவரை அல்லாஹு ரப்புல் ஆலமீன் பிறரிடம் தேவையாகும் படி வைக்க மாட்டான். ஏழ்மையால் பிறரிடம் கையேந்தும் படி வைக்க மாட்டான். உண்மையான இக்லாஸ் உடைய ஹஜ் அவருடைய வாழ்க்கையில் செல்வத்திலும் பரக்கத்தை தருகிறது.
அல்லாஹு ரப்புல் ஆலமீன், அந்த வீட்டில் தவ்ஹீத் உடைய ஹிதாயத்தை வைத்திருக்கின்றான்.
ஹஜ் உம்ராவிற்கு சொல்லக்கூடிய சிறப்புகள் பற்றிய தெளிவான அறிவோடு கல்வியோடு செல்ல வேண்டும் என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.
அப்படி இல்லையென்றால், இன்று பலர் சொல்வதை போன்று, ஒரு சுற்றுலாவாக அல்லது 'ஹாஜி' என்ற பெயருக்காக வேண்டி அமைந்துவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹு தஆலா அவனுடைய வீடாகிய இந்த கஅபாவை ஏனைய இடங்களிலிருந்து ஏனைய ஊர்களிலிருந்து மிகப் பெரிய அளவில் வித்தியாசப்படுத்தி இருக்கிறான். மற்ற மஸ்ஜிதில் தொழக்கூடிய தொழுகைக்கும் கஅபத்துல்லாஹ்வில் தொழக்கூடிய தொழுகைக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
இங்கே ஒரு தொழுகைக்கு என்ன நன்மை கிடைக்குமோ அதை விட ஒருலட்சம் மடங்கு அதிகமான நன்மை அல்லாஹ்வுடைய வீட்டில் கஅபத்துல்லாஹ்வில் தொழுவதில் கிடைக்கும்.
அல்மஸ்ஜிதுல் ஹராம் -புனிதமான வீடு என்று அல்லாஹ் சொல்கிறான். அந்த வீடு உங்களை பாதுகாக்கக்கூடிய வீடுஎன்று அல்லாஹ் சொல்கிறான். அந்த வீடு முஃமின்களுடைய உள்ளத்தை ஈர்க்கக்கூடிய வீடு என்று அல்லாஹ் சொல்கிறான்.
وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا
யார் அந்த வீட்டிற்குள் சென்று விடுவார்களோ அவர்கள் பாதுகாப்பு உடையவர்களாக ஆகிவிடுவார்கள். (அல்குர்ஆன் 3 : 97)
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :
وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا
(மக்காவில் இப்றாஹீம் கட்டிய ‘கஅபா' என்னும்) வீட்டை மனிதர்கள் ஒதுங்கும் இடமாகவும், (அவர்களுக்கு) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகவும் நாம் ஆக்கியிருக்கிறோம். (அல்குர்ஆன் 2 : 125)
இந்த உலகத்தில் எத்தனையோ கண் குளிர்ச்சியான தோட்டங்களை இடங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். உள்ளங்களை பறிக்கக்கூடிய எத்தனையோ பல நாடுகளுக்கு நீங்கள் சென்றிருக்கலாம்.
கடற்கரைக்குச் சென்றிருக்கலாம்,பனி மலைகளுக்கு சென்றிருக்கலாம், ஆடம்பரமான நகரங்களுக்குச் சென்றிருக்கலாம்.
ஆனால், நீங்கள் எந்த நாட்டிற்குச் சென்றிருந்தாலும் மீண்டும் ஒன்றுக்கு இரு முறை பலமுறை அங்கே செல்ல வேண்டும் என்ற நாட்டம் உங்களுக்கு ஏற்படாது. திரும்ப அழைக்கப் பட்டால் ஏற்கனவே நான் சென்று விட்டு வந்து விட்டேன், இப்போது வேற ஏதாவது இடம் புதுசா இருக்கா? என்றுதான் சொல்வீர்கள்.
ஆனால், அல்லாஹ்வுடைய வீடாகிய கஅபாவிற்கு சென்று உங்களுக்கு எந்த வசதியுமே இல்லை என்றாலும் சரி,எல்லா விதத்திலும் சிரமத்தைத் தான் சந்தித்து இருந்தாலும் சரி, வாழ்க்கையில் இன்னொருமுறை வாய்ப்பு ஏற்படாதா? என்று கூறுவீர்கள்.
அந்த வீட்டிலிருந்து திரும்பும் போது ஹஜ் உம்ரா செய்துவிட்டு வரக்கூடிய அந்த ஹாஜிகளிடம் நீங்கள் எதற்காக அதிகம் துஆ செய்தீர்கள் என்று அவர்களிடத்தில் கேட்டால்,யா அல்லாஹ்! சீக்கிரமாக உன் வீட்டிற்கு திரும்ப கொண்டு வா! என்று துஆ செய்தோம் என்று சொல்வார்கள்.
இதுதான் நம் ஸலஃபுகள் உடைய துஆவில் நாம் பார்க்கிறோம். யா அல்லாஹ்! என்னுடைய இந்த சந்திப்பை உன்னுடைய வீட்டிற்கு கடைசி சந்திப்பாக ஆக்கிவிடாதே!
மீண்டும் மீண்டும் வரக்கூடிய வாய்ப்பு எனக்கு கொடு! என் வாழ்நாளெல்லாம் இந்தப் பயணம் தொடர்ச்சியாக ஏற்படுவதற்கு உண்டான வாய்ப்பை கொடு!
ஒரு முஃமினுக்கு அல்லாஹ்வுடைய பாசத்தின் மீது விருப்பத்தின் மீது நெருக்கத்தின் மீது அவனுடைய நாட்டம் அதிகமாகும் போது, அவனுடைய செல்வத்தைக் கொண்டு அவன் எதை விரும்புவான்?
எனக்கு அல்லாஹ்வுடைய அன்பு கிடைக்காதா? எனக்கு அல்லாஹ்வுடைய நெருக்கம் கிடைக்காதா? தான தர்மங்களை செலவலிக்கின்ற அந்த முஸ்லிம், தனது உறவுகளை சேர்ப்பதற்காக செலவழிக்கக் கூடிய அந்த முஸ்லிம், அல்லாஹ்வுடைய அடியார்களில் தேவையுள்ளவர்களுக்கு தனது செல்வத்தை அள்ளிக் கொடுக்கக்கூடிய முஸ்லிம்.
இன்னொரு பக்கம், என்னுடைய உள்ளத்தை நான் பண்படுத்துவதற்கு, என்னுடைய பாவங்களுக்கு நான் தவ்பா கேட்பதற்கு, எனக்கு இறையச்சம் அதிகமாவதற்கு,யா அல்லாஹ்! எனக்கு ஒரு வாய்ப்பை கொடு, உன்னுடைய வீட்டிற்கு நான் வருவதற்கு.
எனவேதான் அல்லாஹ்வுடைய தூதர் ﷺசொல்கிறார்கள் :
நீங்கள் ஹஜ் உம்ராவை தொடர்ந்து செய்யுங்கள் என்று. (3)
அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 162, 3487.
இன்னொரு பக்கம் இருக்கிறது, பெருமைக்காக செல்வது, புகழுக்காக செல்வது. இதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.
சாதாரணமாக தான் செய்யக்கூடிய ஒரு சின்ன ஒரு தர்மத்தையே ஒருவர் சொல்லி காட்டினால் அதனுடைய நன்மை பாழாகிவிடும் என்றால்,அல்லாஹ்வுக்காகவே செய்யப்படவேண்டிய அந்த இபாதத்தை அதைக் கொண்டு பெருமை பேசினால் அதை பிறருக்காக செய்தால் இதைவிட ஒரு கேவலமும் இதைவிட ஒரு கைசேதம் நஷ்டம் இருக்க முடியாது.
எனவேதான் அல்லாஹ்,இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்திலும் அவருடைய மகனார் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம்அவர்களிடத்திலும் விசேஷமாக ஒப்பந்தம் வாங்குகிறான்.
وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ
‘‘(ஹஜ்ஜூ செய்ய அங்கு வந்து) அதை சுற்றுபவர்களுக்கும், தியானம் புரிய (அதில்) தங்குபவர்களுக்கும், குனிந்து சிரம் பணி(ந்து அதில் தொழு)பவர்களுக்கும் எனது அந்த வீட்டை சுத்தமானதாக ஆக்கி வையுங்கள்'' என்று இப்றாஹீமிடத்திலும் இஸ்மாயீலிடத்திலும் நாம் வாக்குறுதி வாங்கியிருக்கிறோம். (அல்குர்ஆன் 2 : 125)
உலகத்தில இப்படி ஒரு வணக்கம் எங்காவது இருக்கிறதா?சிலர் செய்கிறார்கள், ஊர் தர்காக்களில் செய்கிறார்கள். கோயில்களை சுற்றுபவர்களுக்கும், தர்காக்களை சுற்றுபவர்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை.
சுற்றுவதற்கு ஒரு இடம் இருக்கிறது என்றால், முஃமின்களுக்கு அல்லாஹ் கொடுத்த ஒரே இடம்அல்லாஹ்வுடைய கஅபா மட்டும்தான்.
தவாஃப் ஒரு இபாதத். அந்த இபாதத்தை அல்லாஹ்வுடைய அல் மஸ்ஜிதுல் ஹராமில் கஅபாவை சுற்றி தான் செய்ய வேண்டுமே தவிர, உலகத்தில் யாரையும் எதையும் சுற்றக்கூடாது. அப்படி சுற்றினால் அது ஷிர்க் –இணைவைத்தலாக ஆகிவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா அப்படிப்பட்ட ஒரு வணக்கத்தை நமக்கு தருகிறான். ஏழு முறை சுற்ற சொல்கிறான். அல்லாஹ்வை திக்ரு செய்து கொண்டு சுற்றுங்கள்.
அந்த கஅபத்துல்லாஹ்வை சுற்றக் கூடிய தவாஃபின் காட்சியை பாருங்கள். மேலே நின்று கொண்டு அந்த காட்சியை பார்த்தால், நீங்கள் பல மணி நேரம் நின்று கொண்டு அந்த காட்சியை பார்த்தாலும் கூட உங்களுடைய கண்களை மூட வேண்டுமென்று ஆசை வராது.
அதுபோன்றுதான் ஸஃபா மலையில் நின்றுகொண்டு அல்லது மர்வாவில் நின்று கொண்டு, சஃபா மர்வா மலைக்கு இடையே செல்லக்கூடிய சயீசெய்யக்கூடிய, ஹஜ் பயணிகள் உம்ரா பயணிகள் இஹ்ராமுடைய நிலையில் அவர்களுடைய காட்சியை பார்த்தால், உலகத்தில் வேறு எந்த காட்சியும் உங்களது கண்ணில் சுவாரஸ்யமானதாக கண்களை பறிக்கக்கூடிய கூடியதாக இருக்காது.
எவ்வளவு நேரம் பார்த்தாலும் சுபஹானல்லாஹ்! இதைவிட ஒரு காட்சி இருக்குமா!
அல்லாஹ்வுடைய வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வீட்டில் என்ன இருக்கிறது? அல்லாஹ்வுடைய கட்டளையின்படி கட்டப்பட்ட ஒரு கட்டிடம். அல்லாஹ்வுடைய கட்டளையின்படி போர்த்தப்பட்ட ஒரு போர்வை. நபிமார்களின் சுன்னா.
பொதுவாக மக்களை கவரக்கூடிய எந்த ஒன்றாவது அங்கே இருக்கிறதா?பொதுவாக இன்று மக்களை ஒன்று கூட்டவேண்டும் என்றால் அங்கே கண்டிப்பாக அவர்களுடைய பொழுதை போக்குவதற்கு உண்டான அவர்கள் ரசிப்பதற்கு ஒன்று இருக்க வேண்டும்.
அப்படி ஏதாவது ஒன்று மக்கா மாநகரில் இருக்கிறதா? ஆட்டம் இருக்கிறதா? இசை இருக்கிறதா? நடனம் இருக்கிறதா? அல்லாஹ் பாதுகாப்பானாக! பரிசுத்தப் படுத்துவானாக!
உலகத்தில் மக்கள் உல்லாசமாக சுற்றுவதற்கு எங்கே செல்கிறார்கள்? எங்கே தடுக்கப்பட்ட அசிங்கமான மூன்று செயல் இருக்குமோ அந்த இடத்தில் தான் செல்வார்கள். அதுதான் அவர்களை அதிகம் ஈர்க்கக்கூடிய இடமாக இருக்கும்.
உலகத்தில் ஒரு நாட்டுக்கு ஒரு இடத்திற்கு மக்கள் அதிகமாக செல்கிறார்கள் என்றால், அங்கு அசிங்கமான அனாச்சாரமான கலாச்சார சீரழிவான அந்த மூன்று செயலும் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும்.
அந்த மூன்றில் ஒன்று கூட அறவே இல்லாமல் எல்லோருடைய நோக்கமும் அல்லாஹ்! அல்லாஹ்! என்பதை தவிர, இபாதத்தை தவிர வேறு ஒரு நோக்கமே இல்லாத அளவிற்கு மக்களை கட்டிப்போட்டு வைத்திருக்கக்கூடிய மக்களுடைய உள்ளங்களை வசியப்படுத்தி வைத்திருக்க கூடிய ஒரு இடம் இருக்கிறது என்றால் அது அல்லாஹ்வுடைய கஅபா -அல்லாஹ்வுடைய வீடு அந்த புனிதமான ஊர் தான்.
இப்போதுதான் தொழுதுவிட்டு வந்திருப்பீர்கள். லுஹர் தொழுதுவிட்டு அவ்வளவு தூரம் சாப்பிடுவதற்காக வந்திருப்பீர்கள். மலையின் உச்சியில் இருக்கக்கூடியவர்கள் பல கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கக்கூடியவர்கள்.
ஆனால் இவ்வளவு தூரம் வந்ததற்கு பிறகு சாப்பிட்டுவிட்டு சரி தூங்குவோம் பக்கத்தில் எங்காவது தொழுது கொள்ளுவோம் என்று மனது நாடுமா?
உடனே திரும்ப அந்த கஅபத்துல்லாஹ்விற்கு ஓடுவோம். சுய தேவையின் அவசியம் இல்லை என்றால் அந்த வீட்டை விட்டு வெளியேவே வர மாட்டேன் என்று சொல்லக்கூடிய எத்தனை ஹாஜிகளை உம்ரா பயணிகளை பார்க்கிறோம்.
இதைதான் அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கிறான், (அல்குர்ஆன் 2 : 125)
உங்களுடைய பார்வை சலித்து உங்கள் பக்கம் திரும்பாது. உங்களுடைய மனம் நிரம்பாது. அதை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று அங்கு தங்குவதில் உங்களுக்கு அவ்வளவு இன்பம் இருக்கும்.
அன்புக்குரியவர்களே! அப்படிப்பட்ட புனிதமான நகரம்மக்கா நகரம். அல்லாஹ்வுடைய தூதர் ﷺஇதை பலதுல்லாஹ் -அல்லாஹ்வுடைய ஊர் என்று சொல்கிறார்கள். இதை அல்லாஹ் புனிதமாக ஆக்கி வைத்திருக்கிறான்.
لَا أُقْسِمُ بِهَذَا الْبَلَدِ (1) وَأَنْتَ حِلٌّ بِهَذَا الْبَلَدِ
(நபியே! அபயமளிக்கும்) இந்நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன். அதிலும் நீர் இந்நகரத்தில் தங்கக்கூடிய சமயத்தில். (அல்குர்ஆன் 90 : 1,2)
அல்லாஹ்வுடைய தூதர் ﷺமக்கா வெற்றியின் போது அங்கு வருகிறார்கள். அந்த ஒரு பகலில் மட்டுமே யுத்தம் செய்வதற்கு அவர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொல்கிறார்கள்:
இந்த ஊரை அல்லாஹ் புனிதமாக்கி வைத்திருக்கிறான். இங்கே சண்டை செய்யக்கூடாது. கொலை செய்யக்கூடாது. யுத்தம் செய்யக் கூடாது. யாராவது ஒருவர் தனது நபி சண்டை செய்தார்கள் போர் புரிந்தார்கள் என்று சொன்னால், நீங்கள் அவர்களுக்குச் சொல்லுங்கள், அல்லாஹ் ஒரு பகலில் மட்டுமே அவனுடைய தூதருக்கு அனுமதி கொடுத்தான் என்று.
வானம் பூமிகளை படைத்த நாளில் இந்த மக்காவிற்குஎன்று அல்லாஹ் எந்த ஒரு கண்ணியத்தை முடிவு செய்தானோ, அந்த கண்ணியம் மீண்டும் வந்துவிட்டது. (4)
அறிவிப்பாளர் : அம்ர் இப்னு சயீத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 101,104,4295.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺஅரஃபா மைதானத்தில் தங்கி, மக்களுக்கு அறிவுரை செய்த பொழுது கேட்கிறார்கள்; இது எந்த ஊர் தெரியுமா, இது எந்த மாதம் தெரியுமா, இது எந்த நாள் தெரியுமாஎன்று. ஒவ்வொன்றாக கேட்கும் பொழுது இது அல்லாஹ்வுடைய புனிதமான நகரமாக இல்லையா? என்று கேட்கிறார்கள்.
சஹாபாக்கள் சொல்கிறார்கள்; ஆம்,அல்லாஹ்வுடைய தூதரே!
அந்த ஊரை நேசிப்பதே முஃமின்களுடைய ஈமானுடைய அம்சங்களில் ஒன்று.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺஅவர்கள் ஹிஜ்ரா செய்த போது, மக்கள் அந்த ஊரை விட்டு வெளியேற்றிய போது, ஹஜூன்என்ற இடத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வுடைய தூதர் ﷺகஅபாவை முன்னோக்கியவர்களாக சொன்னார்கள் :
மக்காவே! எனது கூட்டத்தினர் என்னை உன்னிலிருந்து வெளியேற்றி இருக்கவில்லை என்றால்உன்னிலிருந்து நான் வெளியே சென்றிருக்க மாட்டேன். உன்னை தவிர வேறு வேறு ஊரில் நான் குடியேறி இருக்க மாட்டேன். அல்லாஹ்வுடைய ஊர்களில் எனக்கு மிக விருப்பமான ஊர் நீ என்று கண்கலங்கியவர்களாக அந்த ஊரிலிருந்து செல்கிறார்கள்.
நூல் : முஸ்னத் அல்ஹாரித், எண் : 387.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺஹிஜிரி-6ல் கனவு கண்டார்கள்,அதை அல்லாஹ் உண்மைப் படுத்தினான்.
لَقَدْ صَدَقَ اللَّهُ رَسُولَهُ الرُّؤْيَا بِالْحَقِّ لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ إِنْ شَاءَ اللَّهُ آمِنِينَ مُحَلِّقِينَ رُءُوسَكُمْ وَمُقَصِّرِينَ لَا تَخَافُونَ فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوا فَجَعَلَ مِنْ دُونِ ذَلِكَ فَتْحًا قَرِيبًا
நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு அவர் கண்ட கனவை மெய்யாகவே உண்மையாக்கி வைத்து விட்டான். அல்லாஹ் நாடினால், நிச்சயமாக நீங்கள் சிறப்புற்ற மஸ்ஜிதில் அச்சமற்றவர்களாகவும், உங்கள் தலை முடிகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும், கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள். அச்சமயம், நீங்கள் (ஒருவருக்கும்) பயப்படமாட்டீர்கள். (அப்போது) நீங்கள் அறியாதிருந்ததை (ஏற்கனவே அல்லாஹ்) அறிந்திருந்தான். ஆகவே, இதையன்றி உடனடியான மற்றொரு வெற்றியையும் உங்களுக்குக் கொடுத்தான். (அல்குர்ஆன் 48 : 27)
அல்லாஹ்வுடைய தூதர் ﷺஅவர்கள் எவ்வளவு உள்ளத்தில் ஆர்வம் கொண்டிருப்பார்கள்.எப்பொழுதும் அந்த மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்தாலும் கஅபாவை தவாஃப் செய்யாமல் அங்கே அமர மாட்டார்கள்.
இப்படிப்பட்ட ஒரு நபியை கஅபத்துல்லாவிற்கு அருகிலேயே சதா அமர்ந்திருந்த ஒரு இறைத்தூதரை அந்த வீட்டிலிருந்து பிரித்ததை விட ஒரு வேதனை வாழ்க்கையில் இருந்து இருக்குமா?
எனவே தான் அல்லாஹ் சொல்கிறான் :
إِنَّ الَّذِي فَرَضَ عَلَيْكَ الْقُرْآنَ لَرَادُّكَ إِلَى مَعَادٍ قُلْ رَبِّي أَعْلَمُ مَنْ جَاءَ بِالْهُدَى وَمَنْ هُوَ فِي ضَلَالٍ مُبِينٍ
(நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனின் கட்டளைகளை உம் மீது விதித்து இருக்கிறானோ அவன் நிச்சயமாக உம்மை (மக்காவாகிய) உமது இல்லத்தில் திரும்பச் சேர்த்து வைப்பான். ஆகவே, (நபியே!) கூறுவீராக: நேரான வழியைக் கொண்டு வந்தவர் யார்? (அதை மறுத்துப்) பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர் யார்? என்பதை என் இறைவன் நன்கறிவான்.(அல்குர்ஆன் 28 : 85)
எப்படிப்பட்ட கவலை இருக்கும்? கஅபத்துல்லாஹ் உடைய திசைமாறி இருந்ததையே அல்லாஹ்வுடைய தூதரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மஸ்ஜிதுல் அக்ஸா அதுவும் அல்லாஹ்வுடைய தூய பள்ளிகளில் சிறந்த பள்ளிகளில் ஒன்று தான். அதை முன்னோக்கும் படி அல்லாஹ் கட்டளை இட்டிருந்தான்.
ஆனால் ரசூலுல்லாஹ் உடைய உள்ளமோ தொழுகையில் கூட காபாவை தான் முன்னோக்கி இருக்க வேண்டுமென்ற என்ற அளவிற்கு கஅபாவின் மீது பாசம் கொண்டிருந்தது.
அல்லாஹ் சொல்கிறான் :
قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا
(நபியே!) உமது முகம் (பிரார்த்தனை செய்து) அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால், நீர் விரும்பும் கிப்லா(வாகிய மக்கா)வின் பக்கமே நாம் உம்மை நிச்சயமாகத் திருப்புகிறோம். (அல்குர்ஆன் 2 : 144)
அல்லாஹ்வுடைய வீட்டில் அல்லாஹ்வை வணங்குவதை விட அந்த காபத்துல்லாவிற்கு அருகில் இருப்பதை விட வேறு என்ன இந்த உலக வாழ்க்கையில் ஆன்மிக இன்பம் இருக்கிறது?!ஆன்மிக இன்பத்தை விட இந்த உலக சிற்றின்பங்கள் எதுவுமே ஒன்றுமில்லை அதற்கு பக்கத்தில்.
அது மட்டுமா? நினைத்த நேரமெல்லாம் கஃபத்துல்லாவில் வந்து தொழுது கொண்டு தவம் செய்து கொண்டிருந்த அந்த நபியின் தோழர்கள் அவர்களும் தடுக்கப்பட்டார்கள்.
இப்படிப்பட்ட ஒரு தோழர்களுக்கு மீண்டும் ஒருமுறை காபத்துல்லாக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கிறது, அது சில நாட்களுக்காக இருந்தாலும் என்றால் எவ்வளவு சந்தோசமாக அவர்கள் புறப்பட்டு இருப்பார்கள்.
கண்ணியத்திற்குரியவர்களே! இந்த ஹஜ் உம்ரா வணக்கம் என்பது அல்லாஹ்வின் வீட்டின் மீது நேசத்தோடு அதை பார்க்க வேண்டும், அங்கே தங்க வேண்டும், அல்லாஹ்வை வணங்க வேண்டும்.
அல்லாஹ்வின் வேதம் இறக்கப்பட்ட அந்த ஊரில் எனக்கு வாழ்க்கையில் சில நாட்கள் கழிய வேண்டும்,அங்கேயே நின்று நான் அல்லாஹ்வை தொழ வேண்டும்,நபிமார்கள் தொழுத இடத்தில் நீங்கள் தொழ போகிறீர்கள்.
உலகத்தில் வேறு எந்த ஒரு இடத்தையாவது உறுதி இட்டுச் சொல்ல முடியுமா? அந்த இடத்தில் ஒரு இறைதூதர் தொழுதார் என்று.
அல் மஸ்ஜிதுல் ஹராம் உலகத்திலேயே அல்லாஹ் அனுப்பிய இறைத்தூதர்களில் பல இறை தூதர்கள் கண்டிப்பாக அங்கு வந்து ஹஜ் உம்ரா செய்ததை நாம் வரலாற்றில் உறுதியாக பார்க்கிறோம்.
அங்கே அவர்கள் தங்கியிருந்தார்கள். இபாதத் செய்தார்கள், அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளை நிறைவேற்றி அங்கே பொருத்தத்தை தேடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.
அப்படிப்பட்ட ஒரு இடம்தான் மக்கா நகரம். அப்படிப்பட்ட ஒரு வீடுதான், அல்லாஹ்வுடைய வீடாகிய அந்த கஅபா.
அங்கே செல்வது ஒரு சுற்றுலாவுக்காக அல்ல, ஒரு சடங்கை நிறைவேற்றுவதற்காக அல்ல, உண்மையான ஒரு இறையடியார் அங்கு எதற்கு செல்வான் தெரியுமா?
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொல்லியது போன்று,
مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ
யார் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்தாரோ, அங்கே ஆபாசமாக அசிங்கமாக பேசவில்லையோ, பாவம் செய்யவில்லையோ அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த தினத்தில் இருந்தது போன்று அவர் திரும்ப வருவார்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1424, 1521.
ரசூலுல்லாஹ் ﷺசொன்னார்கள், ஒரு உம்ரா இன்னொரு உம்ரா இந்த இரண்டிற்கும் இடையே உள்ள பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான்.
நன்மைகளால் நிரப்பப்பட்ட ஒரு ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் வேறு எந்த கூலியும் இல்லை.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺஅவர்கள் இடத்தில் கேட்கப்படுகிறது,
யா ரசூலல்லாஹ்!இஸ்லாமில் சிறந்த அமல் என்ன? அல்லாஹ்வுடைய தூதர் சொல்கிறார்கள், அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது, அடுத்து என்ன அமல் யா ரசூலல்லாஹ்? அல்லாஹ்வுடைய தூதர் சொல்கிறார்கள்;அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாத் செய், அடுத்து என்ன அமல்? அல்லாஹ்வின் தூதர் சொல்கிறார்கள்:
அல்லாஹ்வுக்காக செய்யப்படக்கூடிய ஹஜ் என்று.(5)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 25.
حج مبرور-என்றால் எந்த ஹஜ்ஜுடைய நோக்கம் அமல்களுக்காக இருக்குமோ தக்வாவாக தவ்பாவாக இருக்குமோ அதுதான்.
எக்கச்சக்கமான காசுகளை அள்ளிக் கொண்டு சென்று, நம்முடைய உலக விருப்பங்களை எல்லாம் வாங்கி சுமந்துகொண்டு வருவதல்ல. தேவையென்றால் வாங்கலாம், வாங்கக்கூடாது ஹராம் என்று சொல்லவில்லை.
ஆனால், நோக்கம் இபாதத்தாக தக்வாவாக இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஹஜ்ஜை உம்ராவை அல்லாஹ் நம் அனைவருக்கும் நசீப் ஆக்குவானாக. நம்முடைய ஹாஜிகள், உம்ரா பயணிகள் எல்லோருக்கும் அல்லாஹு ரப்புல் ஆலமீன் தக்வாவை அவனுடைய அன்பை நசீப் ஆக்குவானாக!
அல்லாஹ்வுடைய திருமுகத்தை மட்டுமே நாடி, அல்லாஹ்வுடைய அன்பையும் நெருக்கத்தையும் மட்டுமே நாடி, அவனுடைய அமல்களை செய்வதற்குரிய வாய்ப்பை கொடுப்பானாக!
அதிகமதிகம் நம்முடைய அமல்களை அல்லாஹு ரப்புல் ஆலமீனுக்காக வேண்டி செய்து அவன் அன்பை அடையக்கூடிய நன்மக்களாக நம்மை ஆக்கியருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ كَرَامَةَ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ حَدَّثَنِي شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ عَنْ عَطَاءٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ (صحيح البخاري 6021 -)
குறிப்பு 2)
حدثنا محمد بن الفضل السقطي قال : نا سعيد بن سليمان ، عن سليمان بن داود اليمامي ، عن يحيى بن أبي كثير ، عن أبي سلمة ، عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : « إذا خرج الرجل حاجا بنفقة طيبة ، ووضع رجله في الغرز (1) ، فنادى : لبيك اللهم لبيك ، ناداه مناد من السماء : لبيك وسعديك ، زادك حلال ، وراحلتك حلال ، وحجك مبرور غير مأزور ، وإذا خرج بالنفقة الخبيثة ، فوضع رجله في الغرز ، فنادى : لبيك ، ناداه مناد من السماء : لا لبيك ولا سعديك ، زادك حرام ونفقتك حرام ، وحجك غير مبرور (2) »المعجم الأوسط للطبراني 5386 -)
குறிப்பு 3)
حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ قَالَ سَمِعْتُ عَمْرَو بْنَ قَيْسٍ عَنْ عَاصِمٍ عَنْ شَقِيقٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ فَإِنَّهُمَا يَنْفِيَانِ الْفَقْرَ وَالذُّنُوبَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ وَالذَّهَبِ وَالْفِضَّةِ وَلَيْسَ لِلْحَجَّةِ الْمَبْرُورَةِ ثَوَابٌ دُونَ الْجَنَّةِ (مسند أحمد 3487 -)
குறிப்பு 4)
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي سَعِيدٌ هُوَ ابْنُ أَبِي سَعِيدٍ عَنْ أَبِي شُرَيْحٍ أَنَّهُ قَالَ لِعَمْرِو بْنِ سَعِيدٍ وَهُوَ يَبْعَثُ الْبُعُوثَ إِلَى مَكَّةَ ائْذَنْ لِي أَيُّهَا الْأَمِيرُ أُحَدِّثْكَ قَوْلًا قَامَ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْغَدَ مِنْ يَوْمِ الْفَتْحِ سَمِعَتْهُ أُذُنَايَ وَوَعَاهُ قَلْبِي وَأَبْصَرَتْهُ عَيْنَايَ حِينَ تَكَلَّمَ بِهِ حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ إِنَّ مَكَّةَ حَرَّمَهَا اللَّهُ وَلَمْ يُحَرِّمْهَا النَّاسُ فَلَا يَحِلُّ لِامْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يَسْفِكَ بِهَا دَمًا وَلَا يَعْضِدَ بِهَا شَجَرَةً فَإِنْ أَحَدٌ تَرَخَّصَ لِقِتَالِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا فَقُولُوا إِنَّ اللَّهَ قَدْ أَذِنَ لِرَسُولِهِ وَلَمْ يَأْذَنْ لَكُمْ وَإِنَّمَا أَذِنَ لِي فِيهَا سَاعَةً مِنْ نَهَارٍ ثُمَّ عَادَتْ حُرْمَتُهَا الْيَوْمَ كَحُرْمَتِهَا بِالْأَمْسِ وَلْيُبَلِّغْ الشَّاهِدُ الْغَائِبَ فَقِيلَ لِأَبِي شُرَيْحٍ مَا قَالَ عَمْرٌو قَالَ أَنَا أَعْلَمُ مِنْكَ يَا أَبَا شُرَيْحٍ لَا يُعِيذُ عَاصِيًا وَلَا فَارًّا بِدَمٍ وَلَا فَارًّا بِخَرْبَةٍ (صحيح البخاري 101 -)
குறிப்பு 5)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَا حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ قَالَ حَدَّثَنَا ابْنُ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ فَقَالَ إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ قِيلَ ثُمَّ مَاذَا قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قِيلَ ثُمَّ مَاذَا قَالَ حَجٌّ مَبْرُورٌ (صحيح البخاري 25 -)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/