HOME      Khutba      வாழ்க்கையே வணங்குவதற்காகத்தான் | Tamil Bayan - 359   
 

வாழ்க்கையே வணங்குவதற்காகத்தான் | Tamil Bayan - 359

           

வாழ்க்கையே வணங்குவதற்காகத்தான் | Tamil Bayan - 359


வாழ்க்கையே வணங்குவதற்காகத்தான்

ஜுமுஆ குத்பா தலைப்பு : வாழ்க்கையே வணங்குவதற்காகத்தான்

வரிசை : 359

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 10-07-2015 | 23-09-1436

بسم الله الرّحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்தத் தூதரின் குடும்பத்தார்,தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அல்லாஹ்வின் அச்சத்தை அல்லாஹ்வின் பயத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் நம்மிடம் அவன் விரும்புவது என்னவென்றால், நமக்காக அவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்னவென்றால் நாம் அவனை வணங்க வேண்டும். நாம் அவனுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிய வேண்டும். நாம் அவனுடைய கட்டளைகளை பேண வேண்டும். அவனுடைய சட்ட வரம்புகளை மதித்து நடக்க வேண்டும்.

நாம் அவனை நேசிக்க வேண்டும். அவன் எதைநேசிக்கிறானோ, அதை நாம் நேசிக்க வேண்டும். அவன் எதை வெறுக்கிறானோ, அதை நாம் வெறுக்க வேண்டும்.

அல்லாஹ் இதை நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கும் மூலமாக,இதை நம்மிடமிருந்து  விரும்புவது மூலமாக,அவனுக்கு எந்த ஒரு பலனும் இல்லை. நன்மை பலன் நமக்கு தான்.

அல்லாஹு தஆலா இதன் மூலமாக நம்முடைய மறுமை வாழ்க்கையில் நமக்கு வெற்றியை தர விரும்புகிறான். நம்முடைய மறுமை வாழ்வில் இன்பங்கள் நிறைந்த சொர்க்கத்தை நமக்காக அல்லாஹ் படைத்து வைத்திருக்கின்றான்.

அல்லாஹ் கூறுவதாக, நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் :

قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ

நான் எனது நல்லடியார்களுக்காக நாளை மறுமையில் தயார் செய்து வைத்திருக்கிறேன். அவற்றை எந்த கண்ணும் பார்த்திருக்காது. எந்தக் காதும் அவற்றின் வர்ணனைகளை கேட்டிருக்காது. அவற்றை பற்றிய கற்பனைகள் எந்த சிந்தனையிலும் வந்திருக்காது. (1)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3244.

அப்படிப்பட்ட ஒரு இன்பம் நிறைந்த சுகம் நிறைந்த நிம்மதி நிறைந்த ஒரு வாழ்க்கையை அவன் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கும் அந்த நன்மைக்கு பதிலாக மறுமை வாழ்க்கையில் நமக்கு தருவதாக வாக்களித்து இருக்கின்றான்.

ஆகவே தான் நாம் அதை அல்லாஹ்விடத்தில் கேட்க வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு அழகிய துஆவை கற்றுத் தருகிறான்.

رَبَّنَا وَآتِنَا مَا وَعَدْتَنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ

எங்கள் இறைவனே! உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்கு தந்தருள் புரிவாயாக! மறுமை நாளில் நீ எங்களை இழிவுபடுத்தி விடாதே! நிச்சயமாக நீ வாக்குறுதி தவறுபவனல்ல'' (என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்.) (அல்குர்ஆன் 3 : 194)

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தை விளங்கிக் கொள்ளுங்கள்.

இந்த பிரார்த்தனையில் ஒரு அர்த்தம் இருக்கிறது. எங்களை மறுமையில் இழிவு படுத்தி விடாதே! எங்களை மறுமையில் தலைகுனிய வைத்து விடாதே! இதே துஆவை அல்லாஹு தஆலா சூரா ஆல இம்ரான் கடைசியில் சொல்லும்போது,

إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ

யாரை அல்லாஹ் நரகத்தில் தள்ளி விட்டானோ, நரகத்தின் நுழைத்து விட்டானோ, அவரை அல்லாஹ் கேவலப்படுத்தி விட்டான். (அல்குர்ஆன் 3 : 192)

எங்கள் இறைவா! நீ எங்களை நரக நெருப்பிலிருந்து எங்களை பாதுகாத்து கொள். எங்கள் இறைவா! நீ யாரை நரகத்தில் நுழைத்து விட்டாயோ அவரை நீ கேவலப்படுத்தி விட்டாய். தலை குனிய வைத்து விட்டாய்.

இந்த உலக வாழ்க்கையில் மக்கள் எதை எல்லாம் இழிவாக பேசுகிறார்களோ அல்லது மக்களது பார்வைகள் எதுவெல்லாம் ஒரு அற்பமாக இருக்கிறதோ, அவை ஒன்றுமே இல்லை.

எத்தனையோ மக்கள் ஹலாலை கூட கேவலமாக பார்க்கிறார்கள். அல்லாஹ், ஹலாலாக்கியதை அனுமதித்ததை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் விரும்பியதை கூட கேவலமாக பார்க்கக்கூடிய சமூகத்தில் நாம் வாழ்கிறோம்.

நம்மில் நீளமாக தாடி வளர்ப்பவர்களை கேவலமாக பார்க்க கூடிய மக்கள் இல்லையா? கரண்டைக்கு மேல் ஆடை அணிவதை கேவலமாக பார்க்க கூடிய மக்கள் இல்லையா? அல்லாஹ்வுக்காக பயந்து தன்னுடைய ஒவ்வொரு நாளையும் தன்னுடைய ஒவ்வொரு பைசாவும் ஹலாலாக இருக்க வேண்டும் என்பதற்காக பெரும்பெரும் வியாபாரங்களையும் பெரும் பெரும் தொழில்களை விட்டுவிட்டு,பயந்து பயந்து ஹலாலான முறையில் தொழில் செய்யக் கூடியவர்களை பிழைக்கத் தெரியாதவன், புத்தி இல்லாதவன் என்று சொல்பவர்கள் இல்லையா?

அல்லாஹ்வுக்கு பயந்து வாக்குகளை நிறைவேற்றக் கூடியவர்கள், அமானிதத்தை ஒப்படைக்க கூடியவர்கள், ஏமாந்தவர்கள் என்றும் ஏமாளிகள் என்றும் பழிப்பவர்கள் இல்லையா? ஏமாற்றக்கூடியவர்களை துரோகம் செய்பவர்களை தவறான முறைகளில் பொருளீட்டுபவரையும் சாமர்த்தியசாலி, புத்திசாலி,பிழைக்கத் தெரிந்தவன் என்று புகழ வில்லையா?

நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையை பாருங்கள். அதுபற்றி அவர்களுடைய  தோழர்கள் பதிவு செய்கிறார்கள்.

இன்று, நம்மிடையே ஒரு பெரிய செல்வ நிலையை அடைந்து ஒரு நல்ல தரமான வாகனத்தில் சென்று பழகியவர்கள் சாதாரண வாகனத்தில் செல்வார்களா? செல்லமாட்டார்கள். வெட்கப்படுவார்கள். யாராவது பார்த்தால் குறைவாக மதிப்பிட்டு விடுவார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கழுதையில் பயணம் செய்திருக்கிறார்கள். தன்னோடு ஒரு தோழனையும் அமர்த்தி பயணம் செய்திருக்கிறார்கள். மதீனாவின் தெருக்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் எந்த ஒரு அவமானத்தையும் கண்டதில்லை.

கழுதையில் பயணம் செய்வது ஒரு வெறுக்கத்தக்க கேவலமான அல்லது மட்டமான செயல் இல்லை. நபிமார்களின் தலைவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள். ஹலாலான ஒன்று; அல்லாஹ் பயணத்திற்காக, வாழ வைப்பதற்காக படைத்த ஒன்று.

وَالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ لِتَرْكَبُوهَا وَزِينَةً وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ

குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்வதற்காகவும் (உங்களுக்கு) அலங்காரமாகவும் (அவன் படைத்திருக்கிறான்). இன்னும் நீங்கள் அறியாதவகுதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்வதற்காகவும் (உங்களுக்கு) அலங்காரமாகவும் (அவன் படைத்திருக்கிறான்). இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைப்பான். (அல்குர்ஆன்16:8)

இதில் நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் பயன்படுத்துகின்ற பொருட்களில் நமது கண்ணியம் இல்லை.

சிலபேர் நினைப்பார்கள்:உயர்ந்த ரொம்ப காஸ்ட்லியான செல்போன்கள் வைத்திருந்தால்தான் மக்கள் மதிப்பார்கள் என்று. இன்று வாங்கக்கூடிய செல்போன்கள் தேவைகளுக்காக வாங்கப்படுகிறதா? அல்லது பகட்டுக்காக வாங்கப்படுகிறதா? என்று வாங்க கூடியவர்கள் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் சொன்னார்கள் :

مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ

யார் மக்கள் தன்னைப் பற்றி உயர்வாக பேசப்படவேண்டும் புகழ வேண்டும் என்பதற்காக ஒன்றை செய்கிறாரோ அதை குறித்து நாளை மறுமையில் தண்டிக்கப்படுவான்.

யார் முகத்திற்காக பிறருக்கு காண்பிப்பதற்காக ஒன்றை வாங்குகிறாரோ, அதற்குரிய தண்டனையை அல்லாஹ் மறுமையில் கொடுப்பான்.(2)

அறிவிப்பாளர் : ஜுன்துப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6018.

எப்படிப்பட்ட வார்த்தை பாருங்கள்! உயர்ந்த தரத்தில் உள்ள ஒரு ஆடையை வாங்கலாம். எதற்காக வாங்க வேண்டும்?. யாருக்காக வாங்க வேண்டும்? என் ரப்பு எனக்கு வசதி கொடுத்திருக்கிறான். அல்லாஹ்வை வணங்குவதற்காக. எனது அல்லாஹ் என்னுடைய இந்த ஆடையைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதற்காக.

அந்த ஒரு நல்ல எண்ணத்தில் வாங்க வேண்டுமே தவிர மக்கள் எனது ஆடையை கொண்டு என்னை பெருமைப்படுத்தி பேசவேண்டும், என்னுடைய பொருட்களைக் கொண்டு மக்கள் என்னை பெருமைப்படுத்த வேண்டும், என்னுடைய இந்த ஆடம்பர விஷயங்களை கொண்டு மக்கள் என்னை மதிக்க வேண்டும் என்று வாங்கினால் அது மிகப்பெரிய முகஸ்துதி. அதற்கு மறுமையில் தண்டனை உண்டு.

குறிப்பாக, மேற்சொன்ன இந்த ஹதீசை நம்முடைய கண்ணியத்திற்குரிய ஹதீஸ்கலை அறிஞர்கள் ஆடை அலங்காரங்கள் உடைய பாடங்களில் கொண்டுவருகிறார்கள்.

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால், நீங்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்காக என்று பயன் படுத்துகிறீர்களா? உங்களுடைய தேவைகளுக்காக என்று நீங்கள் பயன் படுத்துகிறீர்களா? அல்லது மக்களுக்கு காண்பிப்பதற்காக, மக்களுக்கு மத்தியில் பெருமை பேசுவதற்காக தன்னை உயர்வாக காண்பிப்பதற்காக நீங்கள் வாங்குகிறீர்களா?என்பதை.

கண்ணியத்திற்குரியவர்களே! எனவே கேவலம் என்றால் இந்த உலகத்தில் உடைய பொருட்கள் கேவலம் இல்லை. இந்த உலகத்தில் உடைய வாகனங்கள் கேவலம் இல்லை. இந்த உலகத்தில் குடிசையில் வாழ்வதில் கேவலம் இல்லை. நாளை மறுமையில் தலைகுனிந்து நரக நெருப்பில் தள்ளப்படுவது தான் கேவலம் அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ் இரட்சிப்பானாக!

இதை பயந்து தான்அத்தனை இறைத்தூதர்களும் அழுதார்கள். அத்தனை நல்லவர்கள் அழுதார்கள். நல்லவர்கள் விலாக்கள் படுக்கையிலிருந்து ஏன் தூரமானது?. இரவில் அவர்களுடைய தூக்கங்கள் ஏன் குறைந்தது? படுக்கையை விட்டு அவர்கள் இறங்கி ஏன் முஸல்லாவில் அல்லாஹ் முன்னால் நின்றார்கள்?

تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ

அவர்கள் (நித்திரையில் ஆழ்ந்திருக்கும்போது) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தி, தங்கள் இறைவனிடம் (அவனது அருளை) ஆசை வைத்தும், (அவனது தண்டனையை) பயந்தும் பிரார்த்தனை செய்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள். (அல்குர்ஆன் 32:16)

எந்த பயம்?இந்த உலகத்தின் வறுமையா? எதிரிகளின் அச்சுறுத்தலா? இல்லை. நரக நெருப்பின் பயம். விசாரணையின் பயம். சிராத் உடைய பயம். இது நல்லவர்களின் தூக்கத்தை போக்கிவிட்டது.

அதைப்பற்றி சிந்திக்காதவர்கள், அதை உணராதவர்கள், அதில் தனது நிலை என்னவென்று புரியாதவர்கள் தான் இந்த உலக இன்பங்களில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள்.

وَمَا هَذِهِ الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَهْوٌ وَلَعِبٌ وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ لَوْ كَانُوا يَعْلَمُونَ

இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டும், வேடிக்கையுமே தவிர வேறொன்றும் இல்லை. மேலும் மறுமையின் வாழ்க்கைதான் நிச்சயமாக நிலையான வாழ்க்கை ஆகும். இதை அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே! (அல்குர்ஆன் 29:64)

நிச்சயமாக மறுமை வாழ்க்கைதான் நிரந்தரமானது. அதற்குதான் நன்மைகளை முற்படுத்த வேண்டும் என்று உணர்ந்த மனிதன் அல்லாஹ் கடமையாக்கிய கடமைகளை பாழாக்கமாட்டான். அல்லாஹ் தடுத்த பாவங்களின் பக்கம் நெருங்க மாட்டான். அதிலிருந்து வெகுதூரமாக இருப்பான்.

அல்லாஹு தஆலா அந்த மறுமை வாழ்க்கைக்காக இந்த உலகத்தில் நம்மிடம் நாம் அவனை வணங்கியவர்களாக மாறவேண்டும் என்று அவன் எதிர்ப்பார்க்கிறான்.

இந்த இபாதத் தான் நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப் படக்கூடிய ஒன்று. இந்த உலகத்தில் நாம் சேகரித்த செல்வங்களை இந்த இபாதத்துக்காக செலவழிக்கவில்லை என்றால், இந்த உலக வாழ்க்கையில் நாம் வைத்திருக்கக்கூடிய வசதி வாய்ப்புகளை நம்முடைய இந்த உலக வாழ்க்கையின் நேரங்களை, ஏன் நம்முடைய ஆற்றலை அறிவை இந்த இபாதத்திற்காக நாம் செலவழிக்கவில்லை என்றால், இவையெல்லாம் நாளை மறுமையில் நரக நெருப்பில் நுழைவதற்கு காரணமாக ஆகிவிடும்.

எந்த அருட்கொடைகளைக் கொண்டு மனிதன் இந்த உலகத்தில் பெருமை பேசிக் கொண்டிருந்தானோ, அவன் இன்புற்று கொண்டிருந்தானோ, இவையே நாளை மறுமையில் நரகத்திற்கு காரணமாக ஆகிவிடும்.

ஒரு மனிதருடைய செல்வம் இபாதத்துக்காக, அல்லாஹ் கடமையாக்கிய கடமைகளுக்காக, உறவுகளை சேர்ப்பதற்காக செலவழிக்கப்பட வில்லை என்றால், நாளை மறுமையில் அந்த செல்வமே நரக நெருப்பில் இவனை பொசுக்குவதற்காக சூடு போடப்படுவதற்காக போதுமானது.

இப்படி அவனுடைய உலக வாழ்க்கையில் ஒவ்வொரு இன்பம் அப்படித்தான். அல்லாஹு தஆலா இந்த வாழ்க்கையில் ஒரு முஸ்லிமுக்கு கொடுத்திருக்கக் கூடிய அத்தனை விஷயங்களும் இபாதத்தின் அடிப்படையில்தான் அல்லாஹ் கொடுத்திருக்கிறான்.

அல்லாஹ்வை வணங்க வேண்டும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இபாதத்தோடு சம்பந்தப்படுத்தி தான் அல்லாஹ் வைத்திருக்கிறான்.

நம்முடைய ஒவ்வொரு செயலிலும் அல்லாஹ்வுடைய இபாதத் வெளிப்பட வேண்டும். நம்முடைய தேவைகள் சம்மந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி, நம்முடைய பொருளாதார சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி, நம்முடைய குடும்ப விஷயங்களாக இருந்தாலும் சரி, அனைத்திலும் நம் எண்ணம் இபாதத் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்பது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல்.

யோசித்துப் பாருங்கள்! இந்த மார்க்கத்தில் நீங்கள் நிறைய நன்மைகளை பார்த்திருக்கலாம். நிறைய நன்மைகளின் வழியை பார்த்திருக்கலாம். படித்திருக்கலாம்.

ஆனால் இந்த நன்மைகள் எல்லாம் இபாதத்தின் அடிப்படையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு வாக்களித்து இருக்கிறானே தவிர, வெறும் அந்த நன்மைகளை அவற்றுக்கு தடியாக என்று அல்லாஹு ரப்புல் ஆலமீன் வாக்களிக்கவில்லை.

கண்ணியத்திற்குரியவர்களே! மார்க்கத்தின் உடைய இல்மை எடுத்துக்கொள்ளுங்கள். குர்ஆனை கற்றுக் கொள்வது, ஹதீஸை படிப்பது, அல்லாஹ்வுடைய மார்க்கங்களை தெரிவது.

இவையனைத்தும் அல்லாஹ்வை வணங்குவதற்காக. அல்லாஹ்வை பயந்து கொள்வதற்காக. ஆகவே தான் நம்முடைய கண்ணியத்திற்குரிய உலமாக்கள் சொல்கிறார்கள்:

யாருடைய கல்வி அவரை இபாதத்தின் பக்கம் ஈடுபடுத்த வில்லையோ,யார் கல்வி கற்ற பிறகு அதன்படி செயல்பட வில்லையோ அவர் அல்லாஹ்விடமிருந்து தூரமாகி விடுகிறார்.

ஒரு மனிதனுடைய இல்ம் அவரை இபாதத்தின் பக்கம் தூண்ட வேண்டும். நம்முடைய நபி (ஸல்). அவர்களை விட இல்ம் உள்ளவர்கள் யாரும் இல்லை.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! அவர்கள் அல்லாஹ்வை எவ்வளவு நெருங்க கூடியவர்களாக இருந்தார்கள். தனது இல்ம் தன்னை மறுமையில் கரைசேர்க்கும் என்ற எண்ணத்தில் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) இருந்தார்களா?. அல்லது அல்லாஹ்வின் ஒரு சாதாரணமான அடிமையாய் வாழ்ந்து, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி அதிகம் வணங்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்களா?

எத்தனை முறை தங்களுடைய தோழர்கள்,தங்களிடம் வந்து கேள்விகளுக்கு மேல் கேள்விகளை கேட்கிறார்கள். மறுமையின் அந்த நற்பேறுகளை அடைவதற்கு உண்டான வழிகளை கேட்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) சொல்லிய பதில் என்ன? ஒரு தோழர் வந்து கேட்கிறார், அல்லாஹ்வுடைய தூதரே! நீங்கள் எனக்கு ஒரு செய்தியைச் சொல்லிக் கொடுங்கள். அந்த செயலை செய்வதன் மூலமாக நான் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும். அல்லாஹ் என்னை நரகத்திலிருந்து தூரமாக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரே வார்த்தை சொன்னார்கள் :

நீ அல்லாஹ்வை வணங்கு. அவனுக்கு யாரையும் இணை வைக்காதே. (3)

அறிவிப்பாளர் : அபூ அய்யூப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 50,1396, 4777.

குர்ஆனுடைய கட்டளைகளிலும் இபாதத் தான் இருக்கிறது.

يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம். (அல்குர்ஆன் 2:21)

وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ

உங்களது இறைவன் உங்கள் மீது விதித்து விட்டான். நீங்கள் அவனை தவிர வேறு யாரையும் வணங்க கூடாது என்று. (அல்குர்ஆன்17 : 23 )

இதுதான் நம் கலிமா உடைய நோக்கம் சகோதரர்களே!

லா இலாஹா இல்லல்லாஹ் - வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை! என்று ஏற்றுக்கொண்டோம்.

வணங்கப்படக்கூடியவன் அல்லாஹ் தான் என்று நம்பிக்கை கொண்டதால் மட்டும் ஒரு மனிதன் சொர்க்கம் செல்ல முடியாது. அல்லாஹ்வை அவன் வணங்க வேண்டும்.

ஆகவே தான், குர்ஆனுடைய வெளிச்சத்தில், ஹதீஸ்களின் வெளிச்சத்தில் தொழுகையை விட்டவனை காஃபிர் என்று உலமாக்கள் உடைய அதிகமான அறிஞர்களின் முடிவு சொல்கிறார்கள்.

ஏன்? அல்லாஹ்தான் வணக்கத்துக்குரியவன் என்று சொல்கிறான், ஆனால் அல்லாஹ்வை வணங்கவில்லை என்றால் அவன் அல்லாஹ்வை நிராகரித்து விட்டான்.

அல்லாஹ் தான் வணக்கத்திற்கு தகுதியானவன் என்று சொல்கிறான். அவன் மீது தொழுகை கடமையாக்கப்பட்டதை அவன் அறிந்திருக்கிறான். இருந்தும் தொழ மறுக்கிறான். தொழுகைக்கு வரவில்லை. கேட்டால்,பிறகு பார்க்கலாம் என்று சொல்கிறான் என்றால் அவன் தொழுகையை நிராகரிக்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் சொன்னார்கள் :

إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكَ الصَّلَاةِ

 

மனிதருக்கும் குப்ருக்கும் ஷிர்க் (இணைவைத்தல்)க்கும் இடையில் தொழுகையை விடுவது தான் இருக்கிறது.

அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 82.

யார் ஒருவன் தொழுகையை விட்டுவிடுகிறானோ அவன் காஃபிர்களோடு முஷ்ரிக்களோடு சேர்ந்து விடுகிறான்.

மேலும் சொன்னார்கள் :

யார் தொழுகையை விட்டானோ அவனிலிருந்து அல்லாஹ்வுடைய பொறுப்பு நீங்கிவிடுகிறது. (4)

அறிவிப்பாளர் : உம்மு அய்மன் ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 27364.

சகோதரர்களே! தொழுகை அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளில் மிகப்பெரிய வணக்கம். வானவர்களுடைய வணக்கம். பறவைகளின் வணக்கம். மீன்களின் வணக்கம். மரங்களின் வணக்கம். நட்சத்திரங்களின் வணக்கம். எல்லா படைப்புகளும் அல்லாஹ்வைத் தொழுது கொண்டிருக்கின்றன.

أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُسَبِّحُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالطَّيْرُ صَافَّاتٍ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهُ وَتَسْبِيحَهُ وَاللَّهُ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ

வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும் (இவற்றிற்கு மத்தியில் உள்ளவையும் குறிப்பாக) பறவைகளும் (தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருக்கின்றன என்பதை (நபியே!) நீர் காணவில்லையா? இவை அனைத்தும் தாங்கள் புகழ்ந்து வணங்க வேண்டிய முறையை நிச்சயமாக அறிந்தே இருக்கின்றன. அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன்24:41)

இன்று பாருங்கள்! முஸ்லிம்களில் இரண்டு விதமான மக்களைப் பிரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தொழக்கூடிய முஸ்லிம்கள், தொழுகை இல்லாத முஸ்லிம்கள் என்று.

ரமலானில் தொழுகின்ற முஸ்லிம்கள், ரமலானுக்கு பிறகு தொழாத முஸ்லீம்கள் என்று, வெள்ளிக்கிழமை தொழுகின்ற முஸ்லிம்கள், பெருநாள் தொழுகை தொழுகின்ற முஸ்லிம்கள் என்று முஸ்லிம்களை பல வகைகளாக பிரிக்கின்ற நிலைகளில் இருக்கின்றோம்.

முஸ்லிம் என்றாலே ஐந்து வேளைத் தொழுகையைத் தொழக் கூடியவர் தான் முஸ்லிம்.

இப்படி இபாதத், இல்ம் என்று எடுத்துக் கொண்டால்அவற்றின் நோக்கம்,அல்லாஹ்வை வணங்க வேண்டும். அல்லாஹ்வுடைய இபாதத்கள் வழிபாடுகளை செய்யப்படவேண்டும்.

அதுபோன்றுதான் ஜிஹாத். அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுவது. இந்த ஜிஹாத் ஏன் அல்லாஹ் கடமையாக்கினான்?ஹிஜ்ரா ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு சென்று விடுவது, பிறந்த ஊரை சொந்த ஊரை விட்டுவிட்டு அல்லாஹ்வை இபாதத் செய்வதற்காகவேண்டி செல்வது.

எந்த இடத்தில் அல்லாஹ்வை வணங்க முடியவில்லையோ, அந்த அந்த இடத்தை விட்டு ஹிஜ்ரா செய்வது.

நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள், அங்கே அல்லாஹ்வை உங்களுக்கு இபாதத் செய்வதற்கு உங்களுக்கு அனுமதி இல்லை என்றால் அதை நீங்கள் விட்டே ஆக வேண்டும்.

அல்லாஹு தஆலா தான் தேர்ந்தெடுத்த இந்த மக்கா நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கிறான்.

لَا أُقْسِمُ بِهَذَا الْبَلَدِ

பாதுகாப்பு மிக்க இந்த நகரத்தின் மீது சத்தியமாக! (அல்குர்ஆன்90 : 1)

மேலும் கூறுகிறான் :

وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ

அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக. (அல்குர்ஆன்95 : 3)

புகழ்களை புகழ்ச்சிகளை தன்னுடைய ஊருக்கு அல்லாஹ் செலுத்தினான். எத்தனை கண்ணியத்தை அல்லாஹ் அந்த ஹரமுக்கு அந்த மஸ்ஜிதுக்கு அல்லாஹ் கொடுத்து இருக்கான்!

ஆனால் முஸ்லிம்களுக்கு ஒரு நேரம் வந்து அந்த இடத்தில் அல்லாஹ்வை வணங்கு வதற்கு மறுக்கப்பட்டார்கள். அல்லாஹ்வை தொழுவதற்கு மறுக்கப்பட்டார்கள். அங்கே அல்லாஹ்வை வணங்க வழிபாடுகளை சுதந்திரமாக செய்யவிடாமல் முஷ்ரிக்குகள் அவர்களை தடுத்தார்கள்.

அல்லாஹ் கட்டளையிட்டான்:- எனக்கு வேண்டிய, நான் தேர்ந்தெடுத்த எனது புனிதமான ஊராக இருந்தாலும்,அந்த ஊரில் முஸ்லிம்களே! உங்களால் இபாதத் செய்ய முடியவில்லை என்றால் அந்த ஊரைவிட்டு ஒரு காபிர் உடைய ஊரில் உங்களால் இபாதத் செய்யமுடிந்தால், அந்த ஊருக்கு நீங்கள் சென்று விடுங்கள்.

மக்கா உடைய ஹிஜ்ராவை பொருத்தவரை, அங்கிருந்து ஹிஜ்ரா செய்து விட்டால் திரும்ப திரும்ப அங்கு வந்து குவியக்கூடிய இடத்தில் செல்லக்கூடாது.

இபாதத் செய்ய முடியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக ஹிஜ்ரா.

அல்லாஹ் சொல்கிறான் :

يَا عِبَادِيَ الَّذِينَ آمَنُوا إِنَّ أَرْضِي وَاسِعَةٌ فَإِيَّايَ فَاعْبُدُونِ

முஃமின்களே! நபியே! எனது பூமி விசாலமாக இருக்கிறது. நீங்கள் எங்கு சென்றாலும் அது உங்களது இறைவனாகிய நான் ஒருவன் என்று நீங்கள் வணங்குங்கள். (அல்குர்ஆன்29:56)

உங்களது 24மணிநேர வாழ்க்கையில் என்னுடைய இபாதத் அங்கே தென்பட வேண்டும். எனக்கு முன்னால் நீங்கள் சுஜூது (சஜ்தா) செய்ய வேண்டும். எனக்கு முன்னால் நீங்கள் கைகூப்பி பிரார்த்திக்க வேண்டும். குனிய வேண்டும். எனக்கு முன்னால் பணிந்து வணங்க வேண்டும்.

அது செய்யப்பட முடியாத ஓர் ஊர் உங்களுக்கு தேவை இல்லை.

அது என்னுடைய ஊராக இருந்தாலும் சரி, நீங்கள் ஹிஜ்ரா செய்யுங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்களா? இல்லையா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தோழர்களை செல்வதற்குப் பணிந்தார்களா? இல்லையா? செய்தார்கள்.

எங்கே பணிந்தார்கள்? ஒரு நஸ்ரானி உடைய ஊர் ஹபஷாவிற்கு. ஒரு கிறிஸ்தவர் உடைய ஊர். அல்லாஹ்விற்கு குழந்தை இருக்கிறது என்று சொல்பவர்கள் உடைய ஊர்.  

ஆனால் அல்லாஹ்வின் சுதந்திரமாக வணங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட காரணத்தால், அல்லாஹ்வை வணக்க வழிபாடுகள் செய்வதற்கு அங்கே தடை இல்லாத காரணத்தால், முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் தூதர் கட்டளையிட்டார்கள்:நீங்கள் அங்கு சென்றாவது, அல்லாஹ்வை வணங்கிக் கொள்ளுங்கள்.

ஆம் சகோதரர்களே! அல்லாஹ் இந்த மார்க்கத்தில் தியாகத்தை கடமையாக்கினானே ஏன்?

وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ فَإِنِ انْتَهَوْا فَإِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ بَصِيرٌ

(நம்பிக்கையாளர்களே! இந்நிராகரிப்பவர்களின்) விஷமத்தனம் முற்றிலும் நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் முழுமையாக நிலைபெறும் வரை (மக்காவாசிகளாகிய நிராகரிக்கும்) இவர்களுடன் போர் புரியுங்கள். (விஷமம் செய்வதிலிருந்து) அவர்கள் விலகிக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குகிறான். (அல்குர்ஆன்8:39)

போர் நாடுகளுக்காக அல்ல;ஆட்சி வீரர்களுக்காக அல்ல;முஸ்லிம்களுக்கு வசதி வாய்ப்புகளுக்காக அல்ல.

போர் உயிர்களைகொள்வதற்காக அல்ல;போர் செல்வங்களை குறைப்பதற்காக அல்ல. போர் எதற்காக? அல்லாஹ் சொல்கிறான்: ஷிர்க் (இணைவைத்தல்) ஒழியவேண்டும்.

இபாதத் வணக்க வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு வணக்க வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். அதற்காக நீங்கள் போர் செய்யுங்கள்.

குறைஷி மக்களை எதிர்த்து அரபு குளத்தில் அந்த உயர்ந்த கோத்திரங்களை எதிர்த்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர் செய்தார்கள்.

இன்று சில அன்னியர்கள் விமர்சிப்பது போன்று பெயருக்காக புகழுக்காக தனக்கென ஆட்சி ஒன்றை ஏற்படுத்துவதற்காகவா? ஒருகாலத்திலும் அவ்வாறில்லை.

எங்கேயாவது அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் தன்னை முன்னிறுத்தி போர் செய்து இருக்கிறார்களா? தனக்கு ஒரு ஆட்சி வேண்டும் என்பதற்காக? கிடையாது.

தன்னை அல்லாஹ் அரசனாக அனுப்பவில்லை. ஒரு தூதராக ஒரு அடிமையாக இருக்கிறேன் என்று சொன்னார்கள்.

ஆட்சிகள் எல்லாம் அவர்களுக்கு குவிந்த பிறகு மக்கள் எல்லாம் அவர்களுக்கு சட்டத்தின்படி நடக்க ஆரம்பித்து அதற்கு பிறகு மக்கள் எல்லாம் அவர்களை மட்டுமே தலைவனாக ஏற்றுக் கொண்ட பிறகு கூட, தன்னை அல்லாஹ் உடைய தூதர் (ஸல்) அவர்கள் தலைவன் என்று சொன்னது இல்லை.

அவர்கள் தலைவர்தான். தலைவர் என்று சொன்னதில்லை. அவர் மிகப்பெரிய ஆட்சியாளர். ஆனால் தன்னை ஆட்சியாளர் என்று சொன்னதில்லை.

எப்போது கேட்கப்பட்டாலும் "நான் அல்லாஹ்வுடைய அடிமை, அல்லாஹ்வுடைய தூதர்" என்று தான் சொன்னார்கள்.

தன்னுடைய அரசாங்கத்திற்காக தனது குடும்பத்தின் அரசாங்கத்திற்காக அல்லாஹ்வுடைய தூதர் போர் செய்யவில்லை.

பிறகு ஏன் போர் செய்தார்கள்?

குறைஷிகள் அந்த உயர்ந்த அரபுக் கோத்திரங்கள் அல்லாஹ்வை வணங்குவதை தடுக்கிறார்கள். அல்லாஹ்வின் அடியார்களை அல்லாஹ்வை வணங்க அவர்கள் அனுமதிக்கவில்லை.

எனவே நபி (ஸல்) அவர்கள் போர் செய்தார்கள். அந்த அடிப்படையில்தான், கிஸ்ராவையும் கைசரையும் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் இல்லாமல் ஆக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

إِذَا هَلَكَ كِسْرَى فَلَا كِسْرَى بَعْدَهُ وَإِذَا هَلَكَ قَيْصَرُ فَلَا قَيْصَرَ بَعْدَهُ

 

இனி இந்த கைசர் அழிந்து விட்டால் அடுத்த ஒரு கைசர் இல்லை. இனி இந்த கிஸ்ரா அழிந்துவிட்டால் அடுத்த ஒரு கிஸ்ரா இல்லை.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 7184.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:உங்களுடைய ஆட்சி அதிகாரங்களில் எனது தோழர்களின் குதிரைகளின் குளம்புகள் எதுவரை செல்லுமோ அதுவரை அவர்கள் வந்து செல்வார்கள்.

ஏன் எச்சரிக்கைக் கொடுத்தார்கள்? அல்லாஹ்வை அல்லாஹ்வுடைய அடியார்கள் வணங்குவதற்கு அவர்கள் தடை செய்தார்கள்.

ஆகவேதான்,கண்ணியத்திற்குரிய தோழர்கள் அவர்களை சந்திக்கும் போதெல்லாம் ஏழ்மையான நிலையில் இருந்தும், பசி பட்டினியில் இருந்தும்கூட, எங்கேயாவது செல்வத்திற்காக நாங்கள் போர்தொடுத்து வந்திருக்கிறோம். ஆட்சி அதிகாரத்தை வெளிப்படுத்துவதற்காக நாங்கள் வந்திருக்கிறோம்,என்று சொல்லி இருக்கிறார்களா? இல்லை சகோதரர்களே.

சஹாபாக்கள் எங்கு சென்றார்களோ அங்கு அந்த மன்னர்களை பார்த்து அவர்கள் சொன்ன ஒரே விஷயம்:

نحن قوم ابتعثنا الله لنخرج العباد من عبادة العباد إلى عبادة الله

அடியார்கள் அல்லாஹ்வை வணங்குவதில் இருந்து அவர்களை வெளியேற்றி அவர்களது இறைவனை வணங்குவதற்கு நாம் அவர்களை அழைக்க வேண்டும். அதற்குத்தான் அல்லாஹ் எங்களை அனுப்பி இருக்கின்றான்.

நூல் : தஃப்சீர் தபரி.

ஆம் சகோதரர்களே! ஜிஹாத் இபாதத்துக்காகதான். இந்த உலக வாழ்க்கையில் அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கக்கூடிய இரவுபகல் அல்லாஹ்வுடைய வணக்கத்திற்காகத்தான்.

تَبَارَكَ الَّذِي نَزَّلَ الْفُرْقَانَ عَلَى عَبْدِهِ لِيَكُونَ لِلْعَالَمِينَ نَذِيرًا

(நன்மை தீமைகளைத் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தை தன் அடியார் (முஹம்மது) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். இது உலகத்தார் அனைவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக இருக்கிறது. (அல்குர்ஆன்25:1)

வசனத்தின் கருத்து : அல்லாஹு ரப்புல் ஆலமீன் பரக்கத் பொருந்தியவன். அவன்தான் அடியார்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக இந்த குர்ஆனை தனது அடியார்கள் மீது இறக்கி இருக்கின்றான். நன்றி செலுத்தக்கூடியவர்கள் நன்றி செலுத்துவதற்காக, அல்லாஹ்வை தியானிக்ககூடியவர்கள்தியானிப்பதற்காக இரவையும் பகலையும் உங்களுக்கு கொடுத்திருக்கிறான் என்று சொல்கிறான்.

நம்முடைய உலக வஸ்துகள் எதுவாக இருந்தாலும் சரி, அதை அனுபவிக்கும் போது, இபாதத் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக தான் அனுபவிக்க வேண்டும். 

கண்ணியத்திற்குரியவர்களே! இப்படிப்பட்ட இபாதத்துக்காக கொடுக்கப்பட்டது தான் இந்த ரமலானுடைய மாதம். இந்த மாதத்தின் கடைசி பத்து நாட்களில் லைலத்துல் கத்ரு என்ற இரவை அல்லாஹ் மறைத்து வைத்திருக்கின்றான்.

ஆயிரம் மாதங்கள் நீங்கள் இபாதத் செய்வதை விட இந்த ஒரு இரவில் இபாதத் செய்வது சிறந்தது என்று அல்லாஹ் சொல்கிறான்.

இந்த இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவது ஆயிரம் மாதங்கள் தொழுவதை விட, இதில் நீங்கள் தர்மம் செய்வது,இதில் நீங்கள் ஏழைகளுக்கு கொடுப்பது, இதில் நீங்கள் எந்த ஒரு நன்மை செய்தாலும், சிறிய பெரிய நன்மை எதுவாக இருக்கட்டும், ஆயிரம் மாதம் தொடர்ச்சியாக நீங்கள் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகளையும் தர்மங்களையும் அல்லாஹ் உங்களுக்கு உயர்ந்த ஒரு தரஜாவை கொடுப்பான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பாக இந்த கடைசி பத்து இரவுகள் வந்துவிட்டால் இரவெல்லாம் விழித்து இருப்பார்கள். தனது குடும்பத்தாரையும் எழுப்பி விடுவார்கள்.

அந்த ஒரு இபாதத்திலும், பாவங்களுக்காக மன்னிப்பு தேடுவதிலும்,அல்லாஹ்வைப் புகழ்வதிலும்,குர்ஆனை ஓதுவதிலும் ஈடுபட்டு விடுவார்கள்.

இத்தகைய இரவை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தவற விடாமல் ஆக்குவானாக! இன்று பெரும்பாலான மக்கள் சில நேரம் தொழுது விட்டு மற்ற நேரம் தூங்குவதிலும் அல்லது சிலர் சீரியல் பார்ப்பதிலும் அல்லது சுற்றுவதிலும் நேரங்களை வீணாகக் கழிப்பதிலும் அவர்கள் ஈடுபட்டு இருக்கின்றார்கள்.

கண்டிப்பாக, அல்லாஹ்விடத்தில் தவ்பா செய்தாக வேண்டும். தங்களை அந்த செயல்களிலிருந்து அவர்கள் திருப்பி ஆகவேண்டும்.

இந்த ஒரு வாய்ப்பு கிடைக்க தவறி விட்டால் அடுத்த ஆண்டு ரமலானில் நாம் இருப்போமா?என்று யோசித்துப் பாருங்கள்.

நமக்கு முன்னால் இருந்த நம்முடைய சகோதரர்கள் நமக்கு அறிமுகமான எத்தனையோ நபர்கள் அவர்கள் இந்த ரமலானில் இல்லை.

ஆகவே, கண்ணியத்திற்குரியவர்களே! இபாதத்காகவே படைக்கப்பட்ட நாம் எல்லா காலங்களிலும் சதா அல்லாஹ்வை வணங்குவதோடு வழிபாட்டிற்காக நாம் வாழ்வதோடு அல்லாஹ் கொடுத்திருக்கக் கூடிய இந்த ரமலானை அல்லாஹ்விற்காக நாம் கழிக்க வேண்டும்.

அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக, அவனுடைய கண்ணியத்திற்குரிய வேதத்தை ஓதுவதற்காக, ஏழை எளியவர்களுக்கு தான தர்மங்களை விசாலமாக அள்ளிக்கொடுப்பதற்காக, அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக, அந்த மார்க்கத்து நிறுவனங்களுக்கு, மதரஸாக்களுக்கு, மஸ்ஜித்களுக்கு தான தர்மங்களை இந்த ரமளானில் விசாலப்படுத்துவதோடு நம்முடைய பாவ மன்னிப்புக்காக அல்லாஹ்விடத்தில் ஆதரவு வைப்போமாக.

இந்த இரவுகளில் நம்முடைய நேரங்களை வீணான காரியங்களில் செலவழிப்பதில் இருந்து பாதுகாத்து, அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதுவதிலும், துஆக்களிலும் திக்ரு செய்வதிலும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவோமாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

صحيح البخاري 4406 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ قَالَ أَبُو هُرَيْرَةَ اقْرَءُوا إِنْ شِئْتُمْ{ فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ }

குறிப்பு 2)

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ سُفْيَانَ حَدَّثَنِي سَلَمَةُ بْنُ كُهَيْلٍ ح و حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ سَلَمَةَ قَالَ سَمِعْتُ جُنْدَبًا يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ أَسْمَعْ أَحَدًا يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرَهُ فَدَنَوْتُ مِنْهُ فَسَمِعْتُهُ يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ (صحيح البخاري 6018 -)

குறிப்பு 3)

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ عَنْ أَبِي أَيُّوبَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ قَالَ مَا لَهُ مَا لَهُ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَبٌ مَا لَهُ تَعْبُدُ اللَّهَ وَلَا تُشْرِكُ بِهِ شَيْئًا وَتُقِيمُ الصَّلَاةَ وَتُؤْتِي الزَّكَاةَ وَتَصِلُ الرَّحِمَ (صحيح البخاري- 1309)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/