இபாதத் ரமழானுக்காகவா? ரப்புக்காகவா? | Tamil Bayan - 357
இபாதத் ரமழானுக்காகவா? ரப்புக்காகவா?
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ் நமக்கு வழங்கிய ஒரு சிறந்த மாதமான ரமழான் உடைய மாதம் முடிவுற்று ஷவ்வால் மாதத்தில் நாம் இருக்கின்றோம்.
அல்லாஹ் ரமழான் மாதத்தை நமக்கு எதற்காக கொடுத்தான்? இந்த ரமழானைக் கொண்டு நாம் அடையப் பெற்ற முழுமையான நன்மை எது?
இந்த ரமழானுக்கு பிறகு நாம் செய்ய வேண்டிய செயல்கள் என்ன?இந்த ரமழானுக்கு பிறகு நம்மிடத்தில் ஏற்பட்டிருக்க வேண்டிய தன்மைகள் என்ன?
ரமழானில் நாம் எப்படி மாறி இருக்க வேண்டும்? இப்படிப்பட்ட ஒரு சிந்தனை நம்மவர்களுக்கு வரவேண்டும்.
இப்படி நமக்கு நாமே சில சுய பரிசோதனைகளை நாமே விசாரித்து, ஒவ்வொருவரும் தான் இந்த மார்க்கத்தில் எந்த அளவு முன்னேறிக் கொண்டிருக்கிறோம்? அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்?
என்னுடைய மரணத்திற்கு முன்பு நான் சேகரித்து கொள்ள வேண்டிய அமல்களை நான் சேகரித்து கொண்டேனா? தவ்பாவை முழுமைப்படுத்திக் கொண்டேனா?
அல்லாஹ்வைச் சந்திப்பதற்குத் தயாராகி விட்டேனா? என்ற ஒரு சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
இன்றைய காலகட்டத்தில் ரமழான் என்பது உண்பதும், உடுத்துவதும், சில இடங்களில் சுற்றித் திரிவதும்,வியாபாரத் ஸ்தலங்களில் சென்று விருப்பமானவற்றை வாங்கிக் கொண்டு வருவதும், பிறகு இபாதத் என்ற பெயரில் கண் துடைப்புக்கு சில அமல்களை மேலோட்டமாக செய்துவிட்டு பிறகு பெருநாள் கொண்டாடுவது.
இதுதான் நம் சமுதாயத்தின் ரமழானின் நிலையாக உள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இந்த ரமழானில் அல்லாஹ்வை வணங்கியவர்கள் ரமழானுக்கு பிறகு அல்லாஹ்வை வணங்குவதில் அவர்களிடத்தில் ஆர்வமில்லை.
ரமழானுக்கு பிறகு அவர்களுடைய வணக்க வழிபாடுகள், கடமையான வணக்க வழிபாடுகளே அவர்களை விட்டு தொலைந்து விட்டிருக்கின்ற நிலைகளை பார்க்கின்றோம்.
அப்படியென்றால் அவர்கள் என்ன விளங்கி வைத்திருக்கிறார்கள்?ரமழானுடைய அந்த ஒரு மாத காலத்தில் ஐங்காலத் தொழுகைகளை தொழுதால் போதுமானது. அந்த காலகட்டத்தில் குர்ஆன் ஓதினால் போதுமானது.
ரமழானில் தர்மம் செய்தால் போதுமானது. ரமழானில் உறவுகளை சேர்ந்து கொண்டால் போதுமானது.
ரமழானுக்கு பிறகு பலருடைய வாழ்க்கையிலிருந்து ஐங்கால தொழுகையே காணாமல் போய்விடுகின்றது. இஸ்லாமின் அடிப்படை தூண்களில் முக்கிய தூணாகிய தொழுகையே அவர்களுடைய வாழ்க்கையில் ரமழானுக்கு பிறகு இல்லையென்றால் வேறு எந்த அமலை நாம் அவர்களிடத்தில் தேடமுடியும்!?
இதைப் பார்த்துதான் சில உலமாக்கள் சொல்கிறார்கள்: இவர்களுடைய அமல்களை பார்க்கப் போனால் இவர்கள் அல்லாஹ்வை வணங்கியதாக தெரியவில்லை. மாறாக இவர்கள் ரமழானை வணங்கினார்கள்.
எனவே தான் ரமழான் முடிந்ததற்கு பிறகு இபாதத்தை முடித்துக் கொண்டார்கள்.
அவர்கள் உண்மையில் அல்லாஹ்வை வணங்கி இருந்தார்கள் என்றால் அல்லாஹ்வுடைய இபாதத்தை அல்லாஹ்விற்கு அவர்கள் செய்து இருந்தால் என்றால் கண்டிப்பாக அந்த அல்லாஹ் என்றும் இருக்கின்றான்.
ஐங்கால தொழுகைகளை தொழுங்கள் என்று அவனுடைய கட்டளை என்றும் இருக்கின்றது.அன்றாடம் குர்ஆன் ஓதுங்கள் என்ற கட்டளை என்றும் இருக்கின்றது .
தான தர்மங்கள் செய்யுங்கள் என்ற கட்டளை என்றும் இருக்கின்றது. உறவுகளை சேர்த்து வாழுங்கள் என்ற கட்டளை நிரந்தரமான கட்டளை.
அவர்கள் அல்லாஹ்விற்காக அதைத் தொடர்ந்து செய்து இருப்பார்கள். அப்படி என்றால் அவர்கள் ரமழானை வணங்கினார்கள். ரமழானை மகிமைப்படுத்தினார்கள். ரமழானுக்காக தான் எல்லாவற்றையம் செய்தார்களே தவிர, அல்லாஹ்விற்காக செய்யவில்லை.
ரமழான் எதற்கு என்றால் நம்முடைய அமல்களை அந்த மாதத்தில் அதிகப்படுத்துவதற்காக.ஐங்காலத் தொழுகைகளை தொழுது கொண்டிருக்கக் கூடிய ஒரு முஃமின் இரவு தொழுகைகளை ரமழானில் அதிகப்படுத்துவதற்காக;அல்லாஹ்வை அதிகப்படியாக இரவில் நின்று வணங்கி அல்லாஹ்வுடைய அருளை அடைவதற்காக ரமழான் கொடுக்கப்பட்டது.
குர்ஆனை ஓதக்கூடிய முஸ்லிம்கள்,முஃமின்கள் ரமழானில் குர்ஆனை அதிகம் ஓதுவதற்காக; என்றுமே தான தர்மம் கொடுக்க கூடிய முஸ்லிம்கள் ரமழானில் தான தர்மங்களை அதிகப்படுத்துவதற்காக.
உறவுகளை சேர்த்து அவர்களோடு ஒட்டி வாழக்கூடிய முஸ்லிம்கள்ரமழானில் உறவுகளுக்கு இன்னும் அதிகமாக கடமைகளை செய்வதற்காக, தான தர்மங்களை அந்த உறவுகளுக்கு அள்ளிக் கொடுப்பதற்காக அல்லாஹ் கொடுத்திருக்கின்றான்.
எனவே ரமழானில் மட்டும் செய்துவிட்டு மற்ற மாதங்களில் துண்டித்து விடுவதற்காக, முடித்து விடுவதற்காக அல்ல. அதிகமாக நன்மைகளை தேடிக் கொள்வதற்காக ரமழான் கொடுக்கப்பட்டது.
அல்லாஹ் சுப்ஹானஹு வத ஆலா நமக்கு கொடுத்திருக்கக் கூடிய இந்த வாழ்க்கை முழு இபாதத்திற்காகக் கொடுக்கப்பட்டது. அல்லாஹு தஆலா அவனுடைய கண்ணியத்திற்குரிய வேதம் அல்குர்ஆனில் இந்த இபாதத்தைப் பற்றி, அவனுக்கு வழிபாடுகள் செய்வது பற்றி நமக்கு பல கட்டளைகளை கொடுக்கிறான்.
அல்லாஹு தஆலா சொல்லக் கூடிய ஒவ்வொரு வசனத்தையும் ஒரு முஸ்லிம் சிந்தித்து அதில் ஒரே ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை அதற்கேற்ப அவன் அமைத்துக் கொள்வானேயானால், அவனுடைய வாழ்க்கை படிப்பினை மிக்க ஒரு வாழ்க்கையாக, அல்லாஹ்வுடைய அச்சம் மிக்க ஒரு வாழ்க்கையாக,மறுமைக்கான ஒரு வாழ்க்கையாக மாறிவிடும் .
அல்லாஹ் சொல்லக்கூடிய வசனங்களை பாருங்கள் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் குனிந்து சிரம் பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள். (மார்க்கத்திற்கும் மக்களுக்கும்) நன்மையே செய்து கொண்டிருங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம். (அல்குர்ஆன் 22:77)
பல இடங்களில் அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு வழி காட்டியத்தின் படி பார்த்தால் ஒரு முஸ்லிமுக்கு இபாதத்திலிருந்து ஓய்வு என்பதே கிடையாது.
ஒரு இபாதத்திலிருந்து அடுத்து இபாதத்திற்கு நாம் செல்கிறோம். அந்த இடைப்பட்ட நேரத்தில் அடுத்த இபாதத்திற்கு நாம் தயாராகுகின்றோம்.
எனவே ஒரு இபாதத்தை செய்துவிட்டு நாம் பெரிய ஒரு சாதனையை செய்துவிட்டோம் என்று இளைப்பாறுவது இல்லை; நாம் ஓய்வெடுப்பதில்லை.
அடுத்த இபாதத்திற்கு தயாராகிறோம். இதுதான் ஒரு முஸ்லிமுடைய மன நிலையாக இருக்க வேண்டும்.
துன்யா உடைய காரியங்களில் நான் தொடர்ந்து வேலை செய்துள்ளேன்; எனவே எனக்கு ஒய்வு வேண்டும் என்று கூறலாம். ஆனால் இபாதத்தில் அப்படி சொல்ல முடியாது.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உடைய ஒரு ஆழமான மிக படிப்பினைக்குறிய ஒரு சம்பவத்தை இங்கு நினைவு கூர்ந்து பாருங்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள்; ஒன்று உஹது போரில், இரண்டாவது அஹ்ஸாப் யுத்தத்தில்.
உஹது போரில் கடினமான காயங்கள், சேதங்களுக்கு பிறகு முஸ்லிம்கள் திரும்பி வருகிறார்கள்.
ஆரம்பத்தில் வெற்றியாக இருந்தது. சிலருடைய தவறினால் தோல்வியாக மாறி மீண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் உயிர்த்தியாகம் கொடுத்த அந்தத் தோழர்கள் உடைய முயற்சியால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மீண்டும் அங்கு அவர்களுக்கு வெற்றியை கொடுக்கிறான் .
இப்படி ஒரு கடினமான இக்கட்டான நிலையில் காயமுற்று இருக்கிறார்கள். 70 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரு நாள் நடந்த போர் ஒரு மாதம் போர் அளவுக்கு அவர்களுக்கு அங்கே சேதத்தை கொடுத்திருக்கிறது.
அந்த நேரத்தில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்:உடனடியாக ஹம்ராவுல் அஸத் என்ற இடத்திற்கு நாம் போருக்காகப் புறப்பட வேண்டும் .
இந்த குறைஷிகள் மீண்டும் நம்மை தாக்குவதற்காக அங்கே ஒன்று கூடுகிறார்கள் என்று சொன்னவுடன் அந்த நேரத்தில் கண்ணியத்திற்குரிய தோழர்கள் உடனடியாக புறப்பட்டார்கள்.
நூல் : அர்ரஹீக் அல்மக்தூம்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் எந்த ஒரு ஆட்சேபனையும் செய்யவில்லை. அல்லாஹ்வுடைய தூதரே! இப்போதுதானே ஒரு போரில் இருந்து வந்து அந்த காயம் கூட ஆறாத நிலையில் அடுத்த நாளில் நீங்கள் எங்களை இன்னொரு போருக்கு அழைக்கிறீர்களே! என்று ஒரு வார்த்தை ஒரு சஹாபி சொல்லி இருப்பார்களா?கிடையாது.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா அந்த கண்ணியத்திற்குரிய தோழர்களுடைய தியாகங்களைப் பார்த்து கூறுகிறான் :
الَّذِينَ اسْتَجَابُوا لِلَّهِ وَالرَّسُولِ مِنْ بَعْدِ مَا أَصَابَهُمُ الْقَرْحُ لِلَّذِينَ أَحْسَنُوا مِنْهُمْ وَاتَّقَوْا أَجْرٌ عَظِيمٌ
அவர்கள் எத்தகையவர்கள் என்றால், காயமடைந்த பின்னரும் அல்லாஹ்வுடைய, (அவனுடைய) தூதருடைய அழைப்பை ஏற்று (போருக்கு)ச் சென்றனர். (அல்லாஹ்வுக்குப்) பயந்து நன்மை செய்த இவர்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு. (அல்குர்ஆன் 3:172)
அல்லாஹ்வுடைய தூதர் அழைக்கிறார்கள் என்றால் அல்லாஹ்வின் கட்டளையை கொண்டு அழைக்கிறார்கள். அல்லாஹ்வுடைய தூதருக்கு பதிலளித்தவர்கள் அல்லாஹ்விற்கு பதிலளித்தவர்கள்.
இதுதான் ஒரு முஃமினுடைய நிலை. அவனின் மரணம் வரை இபாதத்களில் ஒன்றன்பின் ஒன்றாக ஒரு வகையில் இருந்து இன்னொரு வகையின் பக்கம், ஒரு நேரத்தில் இருந்து இன்னொரு நேரத்தின் பக்கம் அவன் திரும்பிக் கொண்டே இருப்பானே தவிர, இபாதத்தை முடித்து விட்டேன்;இனி எனக்கு ஓய்வு என்பது அவனுக்கு கிடையாது.
அப்படி ஒன்று அவனுக்கு இருக்குமேயானால் அது அவனுக்கு மரணமாகத்தான் இருக்கும்.
وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ
நபியே!உங்களுக்கு மரணம் வரும்வரை உங்கள் ரப்பை நீங்கள் வணங்கிக் கொண்டே இருக்கவேண்டும். (அல்குர்ஆன் 15 : 99)
யோசித்துப்பாருங்கள்;கால்கடுக்க வணங்கிய அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்று களைத்தவர்கள், ஹிஜ்ரா செய்தவர்கள். ஜிஹாத் செய்தவர்கள்.
இப்படி எத்தனை கஷ்டங்களை அந்த 23ஆண்டுகளில் அவர்கள் சந்தித்தார்கள். அல்லாஹ்வுடைய கூற்றின் படி அவர்கள் உண்மையைத்தான் சொல்வார்கள். அவர்கள் மறுத்து பேச மாட்டார்கள். அவர்கள் மாற்றி பேச மாட்டார்கள். மிகைப்படுத்தி பேசமாட்டார்கள்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் : எனக்கு கொடுக்கப்பட்ட தொந்தரவு அச்சுறுத்தலைப் போன்று இன்னொரு நபிக்கு அப்படி அச்சுறுத்தல் கொடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மரணம் சந்திக்கும் போது அவர்களை இரண்டு நபித்தோழர்கள்,ஒருவர் ஒருபக்கம்,இன்னொருவர் இன்னொரு பக்கமாக புஜத்தை சுமந்துகொண்டு அவர்களை மஸ்ஜிதில் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள்.
அறிவிப்பாளர் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இரண்டு தோழர்கள் அழைத்துக் கொண்டு வரும்போது அவர்களுடைய இரண்டு பாதங்களும் மண்ணில் கோடு போட்டுக் கொண்டு வந்தன என்றால் எந்த அளவு அவர்கள் பலவீனமான நிலையில் இருந்திருப்பார்கள்!
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி, எண் : 687.
இன்று நம்முடைய நிலையை நினைத்துப் பாருங்கள்.இபாதத்தில் எந்த அளவுக்கு அலட்சியம்!வணக்க வழிபாடுகளில் எந்த அளவுக்கு சோம்பேறித்தனம்! அற்ப வணக்கங்களை கொண்டு அதிகமாக நிறைவு பெறுகிறோம்.
ஆனால், அவர்களோ அதிகமான வணக்க வழிபாடுகளை கொண்டு ஒரு அற்ப அளவு கூட நிறைவு கண்டார்களாஎன்றால் இல்லை.
இதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம். இன்னொரு பக்கம், ஒரு மாத காலம் தொடர்ந்து நடந்த யுத்தம் சாதாரணமாக அல்ல. அல்லாஹு சுப்ஹானல்லாஹு வதஆலா அந்த யுத்தத்தை வர்ணிக்கும் போது இப்படி கூறுகிறான் :
إِذْ جَاءُوكُمْ مِنْ فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنْكُمْ وَإِذْ زَاغَتِ الْأَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوبُ الْحَنَاجِرَ وَتَظُنُّونَ بِاللَّهِ الظُّنُونَا
உங்களுக்கு மேற்புறமிருந்தும், கீழ்ப்புறமிருந்தும் (உங்களைச் சூழ்ந்து கொண்டு) அவர்கள் வந்த சமயத்தில் உங்கள் திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து உங்கள் உள்ளங்கள் உங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து (நீங்கள் திக்குமுக்காடி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவாறு எண்ணிய சமயத்தையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள். (அல்குர்ஆன் 33:10)
அப்படிப்பட்ட ஒரு பெரிய யுத்தத்திலிருந்து ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் திரும்பி வருகிறார்கள்.
ஜிப்ரீல் (அலை) ரசூலுல்லாஹ்வின் வீட்டு வாசலில் நின்று கொண்டு அல்லாஹ்வுடைய தூதரே என்று அழைக்கிறார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்க்கிறார்கள்;ஜிப்ரீல் (அலை) நின்று கொண்டிருந்தார்கள்.
சொல்கின்றார்கள்:நீங்கள் உங்கள் கவச ஆடைகளை கழட்டி கொண்டீர்களா? உங்களது வால்களை கழுவி விட்டீர்களா? உரையில் போட்டு விட்டீர்களா? நானும் எங்கள் மலக்குகளும் எங்களுடைய ஆயுதங்களைக் கீழே வைக்கவில்லை. புறப்படுங்கள்.
பனூ குரைழாவை நோக்கி செல்ல வேண்டியதிருக்கிறது. உங்களுக்கு முன்னால் நான் சென்று அவர்களுடைய கோட்டைகளை உலுக்குகிறேன் என்று ஜிப்ரீல் சொல்லிவிட்டு புறப்படுகின்றார். ஒரு மாத காலம் போர் மைதானத்தில் மிக எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் .
தொழுகைக்கு அவர்களுக்கு அங்கு நேரமில்லை. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தொழுகையினுடைய நேரம் தவறியது என்று சொன்னால்,அந்த அஹ்ஸாபுடைய போரில் லுஹர் தொழுகையை அதனுடைய நேரத்தில் தொழ முடியவில்லை .
அஸருடைய தொழுகையை அதனுடைய நேரத்தில் தொழ முடியவில்லை. அந்த அளவுக்கு அங்கு இக்கட்டான நிலை இருந்தது என்றால் அங்கு குளிப்பதற்கு எப்படி நேரம் இருந்திருக்கும்? யோசித்துப்பாருங்கள்.
இரவு நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தில் அவர்களுடைய நேரம் கழிந்ததால் அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் குளித்து சுத்தமாகுவோம் என்று தயாராகிக் கொண்டிருக்கும் போது ஜிப்ரீலுடைய சத்தத்தை கேட்டு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்படியே புறப்படுகிறார்கள்.
தங்களது தோழர்களுக்கு அறிவிப்பு செய்கிறார்கள்:எல்லோரும் புறப்பட வேண்டும். அஸரை நீங்கள் பனூ குரைழாவில் தான் நீங்கள் தொழ வேண்டும். யாரும் நீங்கள் மதினாவில் தங்க கூடாது என்று சொன்ன போது, யாராவது ஒரு தோழர் அல்லாஹ்வுடைய தூதரே! ஒரு மாத காலம் பட்ட கஷ்டத்தை நீங்கள் கண்டீர்களே!இந்தப் போரை அடுத்த நாள் வைத்துக்கொண்டால் என்ன? இப்போதுதானே மதிய நேரத்தில் திரும்பி இருக்கிறோம் என்று யாராவது ஒரு சஹாபி ரசூலுல்லாஹ்விடம் சழைத்துக் கொண்டார்களா? சலிப்படைந்தார்களா?
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அறிவிப்பைக் கேட்டவுடன் எந்த நிலையில் அந்த தோழர்கள் இருந்தார்களோ அப்படியே புறப்பட்டார்கள்.
அவர்களுக்கு மத்தியில் பனூ குரைழாவை சென்று அடைவதில் கருத்து வேற்றுமை வந்ததென்றால் இபாதத்துடைய ஒரு விஷயத்தில்தான்.
சில தோழர்கள் சொன்னார்கள்:அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அஸரை அங்கு தான் தொழ வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். எனவே அஸருடைய நேரம் முடிந்தாலும் சரி, நாம் வழியில் தொழக்கூடாது. பனூ குரைழாவுக்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து வாகனங்களை விரட்டிக் கொண்டு தங்களது நடையை வேகப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்
இன்னொரு கூட்டம், கண்டிப்பாக நாம் அங்கே செல்ல வேண்டும். ஆனால் அஸருடைய தொழுகை நேரம் ஆகிவிட்டது. அங்கே செல்வதற்கு முன்னால் நேரம் முடிந்து விடலாம் என்று பயந்து வழியிலேயே சில தோழர்கள் அஸரை தொழுதார்கள்.
யோசித்து பாருங்கள். தனக்காக வேண்டி, தன்னுடைய ஓய்வுக்காக, தன்னுடைய உடல் ஆரோக்கியத்துக்காக,இன்பத்துக்காக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களில் இருந்து ஒரு தோழர் மன்னிப்பு கேட்டார்களா?
யா ரசூலல்லாஹ்!எனக்கு இவ்வளவு கஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே நான் அடுத்த நாள் வந்து கலந்து கொள்கிறேன். அதில் கை வெட்டப்பட்டவர்கள் இருந்திருக்கலாம். உடலில் காயம் ஏற்பட்டவர்கள் இருந்திருக்கலாம்.
ஆனால் ஒருவர் கூட இப்படி ஒரு பதிலை சொல்லவில்லை. எல்லோரும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அவர்கள் கட்டளைக்கிணங்க புறப்பட்டார்கள். இதுதான் முஃமினுடைய நிலை.
அவன் தன்னுடைய இபாதத்தை அல்லாஹ்வுக்காக செய்யக்கூடிய தியாகத்தின் முடிவை மரணத்தில் தான் ஆக்குவானே தவிர,ஒரு காலத்தை அவன் ஆக்க முடியாது .
ஏனென்றால்,நம்முடைய நபிக்கு நமது இறைவனுடைய கட்டளை இப்படித்தான் என்பதை அவன் புரிந்து வைத்திருப்பான். நபியே உங்களுடைய மரணம் வரை நீங்கள் உங்கள் ரப்பை வணங்க வேண்டும் என்று அல்லாஹ் நபிக்கு கட்டளையிட்டு இருக்கிறான்என்றால் நமக்கு என்ன சகோதரர்களே!?
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆகவே தான் ஒரு முஸ்லிமுக்கு இபாதத்தை ரமழானில் மற்றும் கற்றுத் தரவில்லை.ரமழானில் அதிகப்படியாக வணங்க வேண்டும் என்று சொன்னார்கள்.
ஃபர்ளான ரமலானுடைய நோன்புகளோடு மட்டும் நோன்பு என்பது முடிந்து விடாது. ரமளானுக்குப் பிறகும் உபரியான நோன்புகள் அதிகம் உள்ளன.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நஃபிலான நோன்பை கற்றுத் தந்திருக்கிறார்கள். ஒவ்வொரு வாரத்திலும் வியாழக் கிழமையின் நோன்பை நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்.
ரசூலுல்லாஹ் தொடர்ந்து வியாழக்கிழமைகளில் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். சஹாபாக்கள் கேட்கிறார்கள்? யா ரசூலுல்லாஹ்!வியாழக்கிழமை தொடர்ந்து நீங்கள் நோன்பு வைக்கிறீர்களே! என்ன காரணம் என்று?
அதற்கு ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
«تُعْرَضُ الأَعْمَالُ يَوْمَ الِاثْنَيْنِ وَالخَمِيسِ، فَأُحِبُّ أَنْ يُعْرَضَ عَمَلِي وَأَنَا صَائِمٌ»
அந்த வியாழக் கிழமைகளில் தான் அடியார்களுடைய ஒரு வாரத்திற்குரிய அமல்கள் அல்லாஹ்விற்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுகின்றன.
நான் ஆதரவு வைக்கிறேன். நான் நோன்பாளியாக இருக்கும் போது என்னுடைய அமல்கள் அல்லாஹ்விற்கு முன்னால் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 747, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
ரசூலுல்லாஹ்வை விட அதிகமான அமல் உள்ளவர் இந்த உம்மத்தில் ஒருவர் இருக்க முடியுமா? தங்களது எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வின் திக்ரில் இருந்தவர்கள்.
இப்படிப்பட்ட ஒரு நபி சொல்கிறார்கள்:என்னுடைய அமல்கள் அல்லாஹ்விற்கு முன்னால் வைக்கப்படும் போது நான் நோன்பாளியாக இருக்க வேண்டும் என்று.
என்ன அர்த்தம் அதற்கு?பொதுவாக மற்ற இபாதத்தை பொருத்தவரை அது ஒரு நேரத்தோடு முடிந்துவிடும்.
தொழுகை என்றால் பத்து அல்லது பதினைந்து நிமிடம். எனவே எனது இபாதத் அந்த வியாழன் பகலில் எந்த நேரத்தில் அல்லாஹ்வுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுகிறது? என்பது தெரியாது.
எனவே அந்த நேரமெல்லாம் நான் இபாதத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கு நோன்பைத் தவிர வேறு ஒரு இபாதத் இல்லை.
இந்த நோன்பில் தான் நாம் சஹர் செய்ததிலிருந்து இஃப்தார் செய்கின்ற வரை இபாதத்திலேயே இருக்கின்றோம். இவ்வளவு நீண்ட நேரம் உடைய ஒரு இபாதத் நோன்பு. எனவே எனது அமல்கள் அல்லாஹ்விற்கு முன்பு சமர்ப்பிக்கப்படும் போது நோன்பாளியாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.
அது போன்று ரசூலுல்லாஹ்வுடைய முஹப்பத்தில் இன்று எத்தனையோ சடங்குகளை, அனாகரிகங்களை, அனாச்சாரங்களை மக்கள் செய்கிறார்கள்.
ரசூலுல்லாஹ்வுடைய முஹப்பத் என்று ஷிர்க்கான மௌலூதுகளை ஓதிக் கொண்டிருக்கிறார்கள். பித்அத்தான மீலாது விழாக்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ரசூலுல்லாஹ்வின் மீது உண்மையான அன்பு கொண்டவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? இங்கே பாருங்கள்.
சஹாபாக்கள் ரசூலுல்லாஹ்விடம் கேட்கிறார்கள்:யா ரசூலல்லாஹ்! நீங்கள் திங்கட் கிழமை நோன்பு வைக்கிறீர்களே! இதனுடைய ரகசியம் என்ன?
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொல்கிறார்கள்:
«ذَاكَ يَوْمٌ وُلِدْتُ فِيهِ، وَيَوْمٌ بُعِثْتُ - أَوْ أُنْزِلَ عَلَيَّ فِيهِ -»
அந்த திங்கள் கிழமையில் தான் நான் பிறந்தேன். அந்த திங்கட்கிழமை தான் எனக்கு நபித்துவம் கொடுக்கப்பட்டது. எனக்கு வஹீ இறக்கப்பட்டது.குர்ஆன் அருளப்பட்டது.
அதற்கு நன்றி செலுத்துவதற்காக நான் அல்லாஹ்விற்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் நோன்பு இருக்க ஆசைப்படுகிறேன்.
அறிவிப்பாளர் : அபூ கதாதா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1162.
ரசூலுல்லாஹ்வின் மீது உண்மையான அன்பும், நேசமும்கொண்டவர்கள், உலக மக்களுக்கெல்லாம் அருளாக கொடுக்கப்பட்ட ரசூலுல்லாஹ்வை இந்த நாளில் தான் அல்லாஹ் பிறக்க வைத்தான்.எனவே இப்படிப்பட்ட ஒரு நபி கிடைத்ததற்கு அல்லாஹ்விற்கு நோன்பிருந்து நன்றி செலுத்துவார்கள்.
இன்று,இந்த எண்ணத்தில் மீளாது,மவ்லித் ஓதுபவர்கள் செய்கிறார்களா என்றால் இல்லை. ஏன்?இங்கே நோன்பிருப்பதில் சிரமம் இருக்கிறது. பசித்திருப்பதில்,பட்டினியிருப்பதில் சிரமம் இருக்கிறது. அவர்களுக்கு கஷ்டம் இருக்கிறது.
ஆனால் மவ்லித் கொண்டாடுவதில் சுகம் இருக்கிறது. சுவையான சாப்பாடு இருக்கிறது. காசு கிடைக்கிறது.
நபியின் மீது அன்பு இருக்குமேயானால் அந்த நபி கிடைக்கப்பெற்ற நாளில் அல்லாஹ்வுக்காக நோன்பு வைக்க வேண்டும்.
ரசூலுல்லாஹ்வுடைய முஹப்பத் நமக்கு வரவேண்டும் என்றால் இப்படிப்பட்ட ஒரு இபாதத்தில் நம்மை ஈடுபடுத்தாமல், வெறும் வார்த்தைகளை கொண்டு, வெறும் வாதங்களைக் கொண்டு மட்டும்எப்படி வரும்?
ரஸூலுல்லாஹிரசூலுல்லாஹிஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின் தோழர்களின் வரலாற்றைப் படியுங்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أَوْصَانِي خَلِيلِي بِثَلاَثٍ لاَ أَدَعُهُنَّ حَتَّى أَمُوتَ: «صَوْمِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَصَلاَةِ الضُّحَى، وَنَوْمٍ عَلَى وِتْرٍ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய அறிவிப்பில் நஃபிலான நோன்புகளைப் பற்றி ஒரு சிறந்த தகவல்களை சொல்கிறார்கள்.
என் உற்ற தோழர் (ரசூலுல்லாஹ்) எனக்கு மூன்று வஸிய்யத் -அறிவுரை சொன்னார்கள்:
நான் தூங்குவதற்கு முன்னால் வித்ரு தொழுகையை தொழுது கொள்ளவேண்டும் என்றும், இன்னும் லுஹா தொழுகையை தொழவேண்டும் என்றும், ஒவ்வொரு மாதத்திலும் நஃபிலான மூன்று நோன்புகள் நோற்று கொள்ளுங்கள் என்றும் எனக்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கட்டளையிட்டார்கள். (பிறை 12 ,13, 14)
அறிவிப்பாளர் : அபூஹுரைராரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1178.
இதை தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வைக்கக்கூடிய வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள்.
பயணங்களாக இருந்தால் வேறு தினங்களில் வைப்பார்கள்.ஒரு வாரத்தில் திங்கள், வியாழன். அதுபோன்று மாதத்தில் மூன்று நாட்கள். இப்படி பார்த்தால் ஒரு மாதத்தினுடைய சம பாதி அளவிற்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை நோன்பில் கழிந்ததை பார்க்கிறோம்.
இரவுத் தொழுகையை குர்ஆனில் அல்லாஹ் முஃமின்களுக்கு சொல்லும்போது,குறைந்தபட்சம் முஃமின்கள் உடைய நிலை,சுபுஹுக்கு முன்னால் சஹர் நேரத்தில் எழுந்து அல்லாஹ்வைத் தொழுது, இஸ்திஃபார் (பாவமன்னிப்பு) தேடுவார்கள்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் சம்பவத்தில் அவர்கள் ஒரு கனவை பார்க்கிறார்கள். அதில் நரகத்தை பார்க்கிறார்கள். தனது சகோதரி ஹஃப்ஸா விடத்தில் சொல்கிறார்கள்.
அதை ஹஃப்ஸா ரசூலுல்லாஹ்விடத்தில் சொல்கிறார். இப்படிப்பட்ட ஒரு பெரும் கனவை கண்ட அப்துல்லாஹ் இப்னு உமர் பற்றி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லும்போது.
«نِعْمَ الرَّجُلُ عَبْدُ اللَّهِ، لَوْ كَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ»
அப்துல்லாஹ் ஒரு சிறந்த மனிதர்.அவர் இரவில் தொழ வேண்டுமே! என்று சொல்கிறார்கள்.
இந்த ஒரு வார்த்தையை கேட்டதற்குப் பிறகு அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் தன் இறுதி மூச்சு வரை இரவு வணக்கத்தை விட்டதில்லை.
அவருடைய இரவு வணக்கத்தை பற்றிய அவருடைய மகனார் ஸாலிம் சொல்கிறார்கள்: என்னுடைய தந்தை மிக சொற்பமான அளவுதான் தூங்கும் வழக்கம் உடையவராக இருந்தார்கள்.
ஏன்? ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னை பார்த்து சொல்லிவிட்டார்கள். அப்துல்லாஹ் இரவில் தொழ வேண்டுமே என்று.
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1122.
ஸஹாபாக்களுடைய செயல்களை பொறுத்தவரை ரசூலுல்லாஹ்விடத்தில் இருந்து என்ன உபதேசத்தை கேட்டார்களோ அதை அப்படியே செயல்படுத்தக்கூடிய வழக்கம் உடையவராக இருந்தார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பை எடுத்துக்கொள்ளுங்கள், உம்மு ஹபீபா அவர்கள் அறிவிப்பை எடுத்துக்கொள்ளுங்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்ஆத்துகள் தொழுதால் சொர்க்கத்தில் ஒரு மாளிகை என்று சொன்னார்கள்.
இதை கேட்டதில் இருந்து என் வாழ்நாளில் நான் இந்த ரக்ஆத்துகளை விட்டதில்லை என்று ரசூலுல்லாஹ் உடைய மனைவிமார்கள் சொல்கிறார்கள் .
எப்படி அவர்கள் இபாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்! நாம் எப்படி இன்று இபாதத்தினை சடங்காக மாற்றி வைத்து இருக்கின்றோம்!
ரமழானில் மட்டும் வணங்கிவிட்டு ரமழானுக்கு பிறகு அல்லாஹ்வை மறக்கக் கூடியவர்கள், மஸ்ஜிதை மறக்கக் கூடியவர்கள், இபாதத்துகளை மறக்கக் கூடிய இவர்கள் இபாதத்துடைய சுவையை அறியாமல் ரமழானுடைய சடங்குக்காகஅல்லது ஒரு போலியாக தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் விதத்தில்தான் அந்த இபாதத்துகளை செய்திருக்கிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்களுக்கு அவருடைய தந்தை அம்ர் இப்னு ஆஸ் ஒரு சிறந்த குலத்தில் பெண் எடுத்து திருமணம் முடித்து வைத்தார்கள். ஒவ்வொரு நாளும் தனது மருமகள் இடத்தில் வந்து தனது மகனை பற்றி விசாரிப்பார்கள்;மகன் எப்படி இருக்கிறார்? என்று.
இப்படி விசாரிக்க விசாரிக்க பல நாள்கள் ஓடியும் அந்த மகளார் இறுதியாக சொன்னார்கள்:உங்களுடைய மகனாரோ ரொம்ப சிறந்த மனிதர்;இரவில் படுக்கை விரிப்பிற்கே வருவதில்லை.தொழுகையில் தான் இருக்கிறார். எந்த பிரச்சினையும் அவர்கள் கண்டு கொள்வதே இல்லை. வணக்க வழிபாட்டில் தான் அவர்கள் மூழ்கி இருக்கிறார் என்று.
திருமணமாகி பல நாட்கள் ஆகியும் கூட தான் திருமணம் முடித்த மனைவியிடத்தில் ஒரு கணவன் அனுபவிக்கின்ற சுகத்தைக் கூட மறக்கும் அளவுக்கு சஹாபாக்களுடைய இபாதத் இருந்தது .
இந்த நிலைக்கு அவர்கள் எட்டிய போது தான் நபி (ஸல்) அவர்கள் அந்தத் தோழர்களை சகஜ நிலைக்கு கொண்டு வந்தார்கள். இப்படி செல்லும் அளவிற்கு நம்முடைய மார்க்கம் சொல்லவில்லை. இந்த உலகத்தில் நீங்கள் வாழ வேண்டியதும் இருக்கிறது. நீங்கள் தேட வேண்டியதும் இருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு நிலையை தன்னுடைய மருமகளார் தனது மகனைப் பற்றி அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்களிடத்தில் சொன்னவுடன் என்ன செய்வது? என்ன உபதேசம் செய்வது? ஒன்றும் புரியவில்லை.
(இன்று பலருடைய நிலை எப்படி இருக்கிறது?பலர் தங்களை சுயபரிசோதனை செய்து பார்க்கவேண்டும். தன்னுடைய திருமண நாளில் ஜமாஅத்துடன் சுபுஹுத் தொழுகையை தொழுதேனா?
இன்று பலர் திருமணம் ஆகிவிட்டால் ஜமாத்தே தேவையில்லை வீட்டில் தொழுது கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலர் திருமணம் ஆகிவிட்டால் சுற்றுலா செல்வது கட்டாயம் என்று நினைக்கிறார்கள்.
அப்படி சென்றுவிட்டால் தொழுகையை சுருட்டி வைத்து விடுவார்கள். வீட்டில் சாமான்களை சுருட்டி வைத்தார்களோஇல்லையோ தொழுகையை சுருட்டி வைத்துவிட்டு அடுத்து அவர்கள் திரும்புகின்ற வரை அவர்களுடைய வாழ்க்கையில் ஃபர்ளே இல்லை என்று சொன்னால் வேறு எதை சொல்வது?
அப்படியே இருக்கும் என்று சொன்னாலும் எப்படி அவர்கள் ஜமாஅத்தோடு தொழமாட்டார்கள். பேணுதலாக தொழமாட்டார்கள்.நேரத்தோடு தொழமாட்டார்கள்.)
ஹதீஸின் தொடர் : உடனே தீர்வு தேடி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வருகிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர்களை என்னிடத்தில் அழைத்து வா என்று சொல்கிறார்கள்:
எனவே அப்துல்லாஹ் இப்னு அம்ரை தந்தை அழைத்து வருகிறார். அவரிடத்தில் ரசூஸுல்லாஹ் (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ்! எப்படி நோன்பு வைக்கிறாய்? என்று கேட்கிறார்கள். யா ரசூலல்லாஹ்! நான் எங்கே நோன்பை விட்டேன். ஒவ்வொரு நாளும் நோன்பில் தானே இருக்கிறேன் என்று பதிலளிக்கிறார்கள்.
அடுத்து கேட்கிறார்கள்: எப்படி குர்ஆன் ஓதுகிறாய்? என்று. யா ரசூலுல்லாஹ்! ஒவ்வொரு நாளும் ஒரு குர்ஆனை முடித்து விடுகிறேனே என்று சொல்கிறார்கள்.
(உட்கார்ந்துகொண்டு ஓதுவது அல்ல; நின்றுகொண்டு தொழுகையில் ஓதுவதை சொல்கிறார்கள்.
இன்று பலருக்கு ஒரு ஜுஸ்உ அரை மணி நேரம் அல்லது 40நிமிடம் உட்கார்ந்து கொண்டு சாதாரணமாக தொழுகைக்கு வெளியே ஓதுவதற்குள் அவர்களுடைய முதுகு நெளிகின்றது; கொட்டாவி வருகின்றது.
ஷைத்தான் அவர்களது உடம்பில் ஏறி இருக்கிறான். இப்லீஸ் அவர்களது சிந்தனையில் குடிகொண்டிருக்கிறான். சோம்பேறித்தனமும், மறுமையில் அச்சமின்மையும் அவர்களது சிந்தனை எல்லாம் நிரம்பி இருக்கிறது.
ஒரு ஜுஸ்வு அல்லது அதனுடைய சம பாதி உட்கார்ந்து ஒரு இடத்தில் அமைதியாக ஒரே சிந்தனையோடு ஒருங்கிணைத்து ஓதிப் பாருங்கள். எப்படிப்பட்ட இறையச்சம் பிறக்கும் என்று. எப்படிப்பட்ட ஈமானுடைய வலிமை ஏற்படும் என்று.)
ஹதீஸின் தொடர் : ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அந்த தோழருக்கு சொன்னார்கள் : அப்துல்லாஹ்! அப்படி செய்ய வேண்டாம். மூன்று மாதத்திற்கு ஒருமுறை குர்ஆனை ஹதம் செய்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் வாலிபராக இருக்கிறார்கள். சொன்னார்கள்: யா ரசூலல்லாஹ்! இவ்வளவு தானா? இல்லை. இது எனக்கு பத்தாது. இன்னும் வேண்டும். என்னால் இன்னும் செய்ய முடியும். அப்படியா? வாரத்திற்கு மூன்று முறை நோன்பு வை. என்று சொல்கிறார்கள்.
வாரத்திற்கு மூன்று நோன்பு வைத்துக் கொள். நான்கு நாட்கள் நோன்பு இல்லாமல் இரு. யா ரசூலல்லாஹ்! இவ்வளவுதானா?பத்தாது. அப்படியா?
இரண்டு நாட்களுக்கு நோன்பு இல்லாமல் ஒரு நாள் நோன்பு வை. யா ரசூலுல்லாஹ் இவ்வளவு தானா? இல்லை. இதுவும் பத்தாது, இன்னும் எனக்கு வேண்டும்.
சொன்னார்கள்: அப்படியா? இதுதான் கடைசி எல்லை. இதற்கு மேல் இல்லை. ஒரு நாள் நோன்பு வை. ஒரு நாள் நோன்பு இல்லாமல் இரு! இதுதான் எனது சகோதரர் தாவூதுடைய நோன்பு.
இதுதான் ஒரு முஃமினுக்கு அனுமதிக்கப்பட்ட நோன்பு. இதைவிட அதிகப்படுத்தாதே! சரி யா ரசூலல்லாஹ்.
அடுத்து குர்ஆன் ஓதுவது, ஒரு மாதத்திற்கு ஒரு ஹதம். யா ரசூலுல்லாஹ் இது ரொம்ப குறைவு என்று சொன்னார்கள். சரி ஒரு வாரத்திற்கு ஒரு ஹதம். யா ரசூலல்லாஹ் அதுவும் குறைவு. பிறகு சொன்னார்கள்: அப்படியா? மூன்று நாளைக்கு ஒருமுறை முடித்துக் கொள்.
பின்னால் காலத்தில் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரலி) மூத்த வயதை, தள்ளாத பருவத்தை அடைந்த பிறகு கூட ரசூலுல்லாஹ் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் இடத்தில் என்ன ஒரு வாக்கை கொடுத்தார்களோ, அப்படியே பேணி வந்தார்கள்.
வயோதிகத்தின் பலவீனத்தில் சில காலங்கள் நோன்பு வைக்காமல் போய்விட்டால் விட்ட நோன்பின் நாட்களைக் கணக்கிட்டுக் கொண்டு, பிறகு தங்களுக்கு சுகம் ஏற்படும் போது அந்த நஃபிலான நோன்பை கழா செய்யும் பழக்கம் உடையவராக இருந்தார்கள்.
நூல் : புகாரி, எண் : 5052.
இப்படித்தான், தர்மமாக இருக்கட்டும்,குர்ஆன் ஓதுவதாக இருக்கட்டும்,இரவு வணக்க வழிபாடுகளாக இருக்கட்டும், ஏனைய நன்மைகளாக இருக்கட்டும் அவற்றைத் தொடர்ந்து நம் வாழ்க்கையில் செய்து கொண்டிருக்க வேண்டும். அல்லாஹ்வை சந்திக்கின்ற வரை.
நம்முடைய மரணம் நம்மை அடையும் போது அல்லாஹ்வுடைய இபாதத்துகளில் ஒரு இபாதத்தில் இருக்க வேண்டும்.
இதைத்தான் அல்லாஹ் சொல்கிறான்: உங்களது ரப்பை நீங்கள் சந்திக்கின்ற வரை உங்களுக்கு மரணம் ஏற்படுகின்ற வரை உங்கள் ரப்பை வணங்கிக் கொண்டே இருங்கள் என்று. (அல்குர்ஆன் 15 : 99)
அப்படிப்பட்ட ஒரு நல்ல நிலையை நாம் அடைய வேண்டும். நமது குடும்பத்தார் அடைய வேண்டும். அதற்காக அல்லாஹ்வுடைய அச்சத்தை நமக்கு மத்தியில் நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அறிவுரை சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும்.
அல்லாஹ் சுப்ஹானல்லாஹு வதஆலா அவனை வணங்கி வழிபட்டு அவனுடைய அருளையும், அன்பையும் அடையக்கூடிய நல்ல முஃமின்களாக நம்மை ஆக்கி அருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/