காணாமல் போன சமுதாயம் ? | Tamil Bayan - 355
بسم الله الرحمن الرحيم
காணாமல்போனசமுதாயம்?
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வை பயந்து வாழுமாறு என்னையும் உங்களையும் நினைவுப்படுத்தியவனாக, அல்லாஹ்வை பயந்து அவனுடைய மார்க்கத்தை பின்பற்றி, அவனுடைய சட்ட வரம்புகளை மீறாமல்,அல்லாஹ்வின் வேதத்தை வாழ்க்கையில் நிலைநாட்டி, நபி (ஸல்) சுன்னாவை வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களில் பின்பற்றி வாழுமாறு, எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக ஆரம்பம் செய்கிறேன்.
அன்பிற்குரியவர்களே! அல்லாஹு சுப்ஹானஹுதஆலா இந்த பூமியிலே அவன் ஒரு வரைமுறையை, தனக்கென்று வழமையை அல்லாஹ் வைத்திருக்கின்றான்.
இன்று முஸ்லீம்கள் சந்திக்கக்கூடிய சோதனைகள்,அல்லாஹ்வின் வேதத்தை கற்றிருந்தவர்களுக்கு, இந்த சோதனைகள் ஏன்? இந்த சோதனைகளின் காரணம் என்ன? என்று புரியும்.
அல்லாஹ்வின் மார்க்கத்தை அறியாதவர்களோ, அல்லாஹ்வின் சட்ட வரம்புகளையும், அல்லாஹ்வின் வழிமுறையும் தெரியாதவர்களோ, இதுபோன்ற சோதனைகளின் சமயத்திலே திகைத்திருப்பார்கள்,என்ன செய்வது? என்று தெரியாமல், அல்லாஹ்வையோ, விதியையோ அல்லது காலங்களையோ குறைகூறிக் கொண்டிருப்பார்கள்.
அல்லாஹு சுப்ஹானஹுதஆலா தன்னுடைய வழமையைப்பற்றி தன்னுடைய அந்த சுன்னாவைப்பற்றி சொல்வதை பாருங்கள்:
لَهُ مُعَقِّبَاتٌ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُمْ مِنْ دُونِهِ مِنْ وَالٍ
அல்லாஹ் சொல்கிறான்:
(மனிதன் எந்நிலைமையிலிருந்த போதிலும்) அவனுக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வரக்கூடிய (வானவர்கள்) பலர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டு அவனை பாதுகாக்கிறார்கள். மனிதர்கள் (தங்கள் தீய நடத்தையை விட்டு) தங்களை மாற்றிக்கொள்ளாத வரை நிச்சயமாக அல்லாஹ்வும் (அவர்களுக்குப் புரிந்த அருளை) மாற்றி விடுவதில்லை. அல்லாஹ் ஒரு வகுப்பாரை வேதனை செய்ய நாடினால், அதைத் தடுப்பவர்கள் ஒருவரும் இல்லை; அவர்களுக்கு உதவி செய்பவர்களும் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை.(அல்குர்ஆன் 13 : 11)
மக்கள் எதுவரை தங்கள் நிலைமைகளை, தங்களை, தங்கள் பண்புகளை, தங்களுடைய சூழ்நிலைகளை,மாற்றிக்கொள்வதில்லையோ, அதுவரை அல்லாஹ், அவனுடைய வழமையை, அவனுடைய சுன்னாவை அவனும் மாற்றுவதில்லை.
அல்லாஹு சுப்ஹானஹுதஆலா கொடுத்த மார்க்கத்தை மக்கள் மாற்றிக் கொண்டால், அல்லாஹ்வுடைய நிஃமத்துக்கு நன்றி செலுத்துவதற்கு பதிலாக,
அல்லாஹ் கொடுத்த அருட்கொடைகளுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பதற்கு பதிலாக, அல்லாஹ் கொடுத்த துன்யாவை கொண்டு மறுமையை தேடுவதற்கு பதிலாக,
அல்லாஹ் கொடுத்த துன்யாவை கொண்டு அல்லாஹ்வுடைய தீனுக்கு உதவி செய்வதற்கு பதிலாக, இந்த உலகத்தின் பக்கம் அவர்கள் சாய்ந்துவிட்டால்,
உலகமோகங்களின் பக்கம் அவர்கள் திரும்பி விட்டால்,அல்லாஹ்வுடைய மார்க்கத்தை இந்தத் துன்யாவிற்காக அவர்கள் கைவிட்டு விட்டால்,
தவ்ஹீதுக்கு பதிலாக ஷிர்கை எடுத்துக்கொண்டால், சுன்னாவிற்கு பதிலாக பித்அத்களை அவர்கள் எடுத்துக் கொண்டால்,
அல்லாஹு சுப்ஹானஹுதஆலா அவனுடைய இந்த நிலையை,அவன் இந்த உம்மத்திற்கு என்ன அருள்புரிந்தானோ, அந்த நிஃமத்துகளை மாற்றி விடுவான்.
இதை இந்த வசனத்தின் தொடரின் இறுதியிலே இதை அல்லாஹ் சொல்கிறான்:
وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا
மக்கள் அல்லாஹ்வின் நிஃமத்துக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பதற்கு பதிலாக,இறைநிராகரிப்பையோ நன்றிகெட்டதனத்தையோ, இந்தத் துன்யாவிற்காக தீனை மாற்றிக் கொள்ளக்கூடிய ஓர் நிலைக்கோ சென்றுவிட்டால், அப்படிப்பட்ட மக்களுக்கு அல்லாஹு தலா தண்டனையை முடிவு செய்து விட்டால்:
وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا
அப்படிப்பட்ட மக்களுக்குஅல்லாஹ் தண்டனையை முடிவு செய்துவிட்டால்.
فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُمْ مِنْ دُونِهِ مِنْ وَالٍ
அந்த தண்டனையை யாராலும் ரத்து பண்ண முடியாது..யாராலும் அந்த தண்டனையிலிருந்து பாதுகாக்க முடியாது. அவர்களை இரட்சிப்பவர்கள்,அவர்களை காப்பவர்கள்,அல்லாஹ்வைத்தவிர வேறுயாரும் இருக்க மாட்டார்கள்.
அல்லாஹ்வுடைய இந்தவசனம் கண்ணியத்திற்குரியவர்களே ! உலக முஸ்லிம்களாகிய நமக்காக இன்று இறக்கப்பட்டதை போன்று இருப்பதை நாம் பார்க்கிறோம்.
உலகத்திலே முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சோதனை, அவர்களுடைய நாடுகளிலோ, அல்லது மற்றவர்களின் நாடுகளிலோ, அவர்கள் சிறுபான்மையாக வசிக்கின்ற நாடுகளில்,எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி, அதற்குரிய பதிலை தான் நமது கேள்விக்கு உரிய பதிலைத்தான் விளக்கத்தைத் தான் அல்லாஹ் இந்த வசனத்தில் தருகிறான்.
நீங்கள் உங்களது நிலையை மாற்றிக் கொள்ளாத வரை,நான் உங்களுக்கு இட்ட கட்டளையை நீங்கள் மாற்றிக் கொள்ளாத வரை, நான் உங்களுக்குச் செய்த அருளை மாற்ற மாட்டேன்.
உங்களுடைய செயல் தான் என்னுடைய முடிவுக்கு காரணம். நான் தண்டனையை முடிவு செய்துவிட்டால் அந்த தண்டனையை ரத்துசெய்ய முடியாது,மாற்ற முடியாது.
அன்பிற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய உதவிக்கு நான் என்ன செய்ய வேண்டும்?அதற்கு அல்லாஹ் நம்மை பாதுகாப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
அல்லாஹ்வுடைய அருள் நமக்கு கிடைப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
எதை நாம் மூத்த மக்களாகிய கண்ணியத்திற்குரிய சஹாபாக்கள் செய்தார்களோ, அதே தவிர வேறு வழி நமக்கு இல்லை.
சகோதரர்களே! அல்லாஹ் எப்படி சொல்கிறான் பாருங்கள்:
நம்பிக்கையாளர்களே! முஃமின்களே!என்று அழைத்து சொல்கிறான்;
இன்று முஸ்லிம் சமுதாயத்தில் பலருக்கு ஈமான் என்றால் என்ன?என்று தெரியாமல் இருக்கிறது.
இவர்களாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள், அல்லது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், ஈமான் கொண்டவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த வாக்குகளை நாங்களும் அடைய வேண்டும் என்று,
அல்லாஹ் யாரை பார்த்து சொல்கிறான்:
நம்பிக்கைகொண்டவர்களே! ஈமான் உடையவர்களே! என்று அல்லாஹ் அழைக்கிறான்.
இந்த ஈமானுக்குரிய அர்த்தத்தை, அதனுடைய கருத்தை, அந்த ஈமான் எதை தன்னிடத்திலே எதிர்பார்க்கிறது? எதன் மூலமாக ஈமான் நிறைவுபெறும்,முழுமைபெறும்,சரியான ஈமான் எது?என்று தெரியாமலே அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஈமான் கொண்டவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த வாக்கு தங்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய உதவி எப்போது வரும்?
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால், அவனும் உங்களுக்கு உதவி புரிந்து உங்கள் பாதங்களை உறுதியாக்கி விடுவான். (அல்குர்ஆன் 47 : 7)
எப்படிப்பட்ட வாசகத்தை அந்த அர்ஷுடைய இறைவன் அதிபதி சொல்கிறான்.
ஏழு வானங்களுக்கும் பூமிக்கும் அர்ஷுக்கும் சொந்தக்காரனான அடக்கி ஆளக்கூடிய அந்த அரசன்...நம்மைப் பார்த்துச் சொல்கிறான்;
நீங்கள் அல்லாஹ்வுடைய உதவியாளர்களாக மாறினால் அவன் உங்களுக்கு உதவுவான். நீங்கள் உங்களை பாதுகாக்க கூடியவர்களாக, உங்களில் ஒருவர் மற்றவரை அரவணைக்ககூடியவர்களாக, உங்களுடைய படை பலங்களை சேகரிக்ககூடியவர்களாக, உங்களுடைய அறிவை நீங்கள் வளர்க்க கூடியவர்களாக என்றெல்லாம்,அல்லாஹ் சொல்லவில்லை...
அதெல்லாம் காரணங்களில் சில காரணங்களாக இருக்கலாம், அதெல்லாம் அடுத்தடுத்த கட்டங்களில் தான்.
முதலாவது காரணம், முதலாவது அடிப்படை என்ன?
மூஃமின்களே!நீங்கள் அல்லாஹ்வுடைய உதவிக்கு முதலாவதாக மாறுங்கள்..
அல்லாஹ் உங்களை அழைக்கிறான்..அவனுக்கு நீங்கள் பதில் தருவது இல்லை, ஆனால் நீங்களோ எதிர்பார்க்கிறீர்கள்; அல்லாஹ் நீங்கள் உங்கள் சிரமத்தில் அழைக்கும் போது அவன் உங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று,
அல்லாஹ் என்ன சொல்கிறான்?
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
(நபியே!) உம்மிடம் என் அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீர் கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நான் உங்களுக்கு சமீபமானவன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்.'' ஆதலால், அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும்; என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேர்வழி அடைவார்கள். (அல்குர்ஆன் 2 : 186)
கண்டிப்பாக அழைப்பவர்களின் அழைப்புக்கு, துஆ கேட்பவர்களின் துஆவுக்கு பதில் தருவேன், ஆனால் நிபந்தனை என்ன?ஆனால் கண்டிஷன் என்ன?
அவர்கள் முதலாவதாக எனக்கு பதில் அளிக்கட்டும் என் மீதுள்ள ஈமானை அவர்கள் சரி செய்யட்டும்.
கொஞ்சம் திரும்பத் திரும்ப ஓதி சிந்தித்துப் பாருங்கள்,இந்த வசனத்தை..
துஆ கேட்பவருடைய துஆவை நான் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வேன், அங்கீகரிப்பேன்.
ஆனால் எனக்கு இரண்டு வேளைகள் செய்தாக வேண்டும்,
எனக்கு பதில் கொடுக்கட்டும் நான் இந்த வேதத்தில் அவர்களை அழைக்கிறேன் அல்லவா?
நம்பிக்கையாளர்களே! நம்பிக்கையாளர்களே! முஃமின்களே! முஃமின்களே! என்று,அவர்கள் எனக்கு பதில் அளிக்கட்டும்.
என் மீது அவர்களுக்கு ஈமான் சரியாகட்டும் இணைவைத்தல் கலந்த, இறை நிராகரிப்பு கலந்த, நயவஞ்சகம் கலந்த,அவநம்பிக்கை கலந்த ஈமானுக்குள் மக்கள் இருந்துகொண்டு, சந்தேகத்தால் நிரப்பப்பட்ட போலியாக இருந்துகொண்டு, சந்தர்ப்பங்களில் ஈமானை பேசிக்கொண்டு இருக்கக்கூடிய மக்களுக்கா? அல்லாஹ்வுடைய உதவிவரும்?!
கண்ணியத்திற்குரியவர்களே! ஒரு சோதனையின் சம்பவத்தை அல்லாஹ் நமக்கு நினைவு கூறுகிறான். நமது முன்னோர்களுடைய வரலாறு நமக்கு எதார்த்த உதாரணமாக இருக்கின்றது.
சகோதரர்களே! உஹது மைதானத்தை நினைத்துப் பாருங்கள், அந்த ஒரு போர் முஸ்லிம்களுடைய முழு வாழ்க்கைக்கும், அவர்கள் வாழ்நாளில் சந்திக்கக்கூடிய எல்லா விதமான பிரச்சனைகளுக்கும், அந்தப் போரிலே அவர்களுக்கு அழகிய படிப்பினை, தீர்வு, பாடம் இருக்கின்றது.
உஹது போரிலும் எழுபதுக்கும் மேற்பட்ட, நபியால் நேசிக்கப்பட்ட இஸ்லாமின் அந்த மூத்தமக்கள்,நபிதோழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஷஹிதானார்கள்.
அந்த நேரத்தில் எஞ்சியிருந்த மக்கள் அல்லாஹ்விடத்தில் அவர்கள் கேட்டார்கள்; நபியிடத்திலேயே வந்து கேட்டார்கள்.
அல்லாஹ் சொல்கிறான்:
أَوَلَمَّا أَصَابَتْكُمْ مُصِيبَةٌ قَدْ أَصَبْتُمْ مِثْلَيْهَا قُلْتُمْ أَنَّى هَذَا قُلْ هُوَ مِنْ عِنْدِ أَنْفُسِكُمْ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
அல்லாஹ் சொல்கிறான்;
(நம்பிக்கையாளர்களே! ‘‘பத்ரு' போரில்) இதைவிட இருமடங்கு சிரமத்தை நீங்கள் அவர்களுக்கு உண்டு பண்ணியிருந்தும் இந்த சிரமம் (உஹுத் போரில்) உங்களுக்கு ஏற்பட்ட சமயத்தில் இது எப்படி (யாரால்) ஏற்பட்டது? என நீங்கள் கேட்(க ஆரம்பித்துவிட்)டீர்கள். (நீங்கள் செய்த தவறின் காரணமாக) உங்களால்தான் இது ஏற்பட்டதென்றும், நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் என்றும் (நபியே!) கூறுவீராக. (அல்குர்ஆன் 3 : 165)
உங்களுக்கு சோதனை ஏற்பட்ட போது, உங்களுக்கு பிரச்சினை ஏற்பட்ட போது,அல்லாஹ் இடையிலே ஒன்றைச் சொல்கிறான்:இந்த சோதனை உங்களுக்கு மட்டும் ஏற்படவில்லை இதுபோன்ற சோதனை பன்மடங்காக நீங்கள் காஃபிர்களுக்கு முன்னால் கொடுத்திருக்கிறீர்கள்.
பத்ரு போரில் நீங்கள் காஃபிர்களுக்கு இதுபோன்ற சோதனை இரண்டு மடங்காக கொடுத்திருக்கிறீர்கள், எழுபது பெரும் தலைவர்களை நீங்கள் கொலைசெய்தீர்கள், எழுபது பெரும் தலைவர்களை சிறைபிடித்தீர்கள்.
அல்லாஹ்வுடைய அருள் உங்களுக்கு இருந்தது, இப்பொழுது குறை உங்கள் பக்கம், உங்களுக்குள் நிகழ்ந்து இருக்கின்றது.
இதை பார்த்து பயந்து நீங்கள் கேட்கிறீர்கள் ஏன் இந்த சோதனை? ஏன் என்று?
அல்லாஹ் கேட்கிறான்:
பத்ரிலே உங்களுக்கு உதவிய அல்லாஹ், உஹதிலே ஏன் கைவிட்டான்? பத்ருக்கு உங்களுக்கு உதவுவதற்காக வானவர்களை இறக்கிய அல்லாஹ் உஹதிலே ஏன் வானவர்களை நிறுத்திவிட்டான்.
ஆயிரம் குஃப்பார்களுக்கு முன்னால் முன்னூறு முஸ்லிம்களுக்கு உதவிய அல்லாஹ், மூவாயிரம் குஃப்பார்களுக்கு முன்னால் ஏழநூறு முஸ்லிம்களுக்கு அல்லாஹ் ஏன் உதவவில்லை? ஏன் அல்லாஹ் தன் உதவியை நிறுத்திக் கொண்டான்?
அல்லாஹ் சொல்கிறான்: அதற்குரிய காரணம்,
هُوَ مِنْ عِنْدِ أَنْفُسِكُمْ
அதற்கு என்ன காரணம்? நீங்கள்தான் காரணம்.
நீங்கள் தான் காரணம், உங்களுடைய செயல்தான் காரணம்.
அல்லாஹ் எல்லா பொருட்களின் மீது,சர்வ வல்லமை உடையவனாக இருக்கின்றான்.
ரசூல்லுல்லாஹ் (ஸல்) அவர்களுடைய ஒரு கட்டளையை மீறி உலக ஆதாயத்தை தேடி, நபி (ஸல்) நிறுத்தி இருந்த அந்த மலைக்குன்றிலிருந்து சில தோழர்கள் இறங்கி வந்து விட்டார்கள்.
அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான்:
وَلَقَدْ صَدَقَكُمُ اللَّهُ وَعْدَهُ إِذْ تَحُسُّونَهُمْ بِإِذْنِهِ حَتَّى إِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِي الْأَمْرِ وَعَصَيْتُمْ مِنْ بَعْدِ مَا أَرَاكُمْ مَا تُحِبُّونَ مِنْكُمْ مَنْ يُرِيدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَنْ يُرِيدُ الْآخِرَةَ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ وَلَقَدْ عَفَا عَنْكُمْ وَاللَّهُ ذُو فَضْلٍ عَلَى الْمُؤْمِنِينَ
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் கட்டளைப்படி (உஹுத் போரில்) நீங்கள் எதிரிகளை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்த சமயத்தில் (உங்களுக்கு உதவி புரிந்து) அல்லாஹ் தன் வாக்கை நிச்சயமாக நிறைவேற்றி வைத்தான். ஆனால், நீங்கள் விரும்பியதை (அதாவது வெற்றியை) அல்லாஹ் உங்களுக்குக் காண்பித்ததன் பின்னர் (நபியின் கட்டளைக்கு) மாறுசெய்து அவ்விஷயத்தில் நீங்கள் உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு, (நபி உங்களை நிறுத்திவைத்திருந்த மலையிலிருந்து விலகி இறுதியில்) தைரியத்தை இழந்துவிட்டீர்கள். உங்களில் இவ்வுலகை விரும்புபவர்களும் உள்ளனர். உங்களில் மறுமையை விரும்புகிறவர்களும் உள்ளனர். ஆகவே, உங்களைச் சோதிப்பதற்காக (அவர்களைத் துரத்திச் சென்ற உங்களை) அவர்களைவிட்டு பின்னடையும்படி செய்தான். (இதன் பின்னரும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களை மன்னித்துவிட்டான். ஏனென்றால், அல்லாஹ் நம்பிக்கையாளர்கள் மீது அருளுடையவன் ஆவான்.
அன்பிற்குரியவர்களே!இன்று முஸ்லிம்களில் பலர் என்ன செய்கிறார்கள்?நாம் இனி செய்வதற்கு இல்லை, நம்மால் இனி எதையும் செய்ய முடியாது,ஈஸா (அலை) அவர்கள் வந்தால் பார்த்துக்கொள்வோம், மஹ்தி (அலை)அவர்கள் வந்தால் பார்த்துக்கொள்வோம்,
நம்மால் எதுவும் இப்போது இந்த உம்மத்துக்காக, நமக்காக, செய்துகொள்ள முடியாது என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த முஸ்லிம்களை பாதுகாப்பதற்கு, இனி கடைசி காலத்தில் ஈஸா (அலை) அவர்களுடைய வருகையை தவிர வேறேதுவும் வேறுவழி இல்லை என்பதாக சிலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
வேறுசிலரோ அவசரப்பட்டு,அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) என்ன ஒரு அஸ்பாப், என்ன ஒரு சுன்னாவின் அடிப்படையில் இந்த உம்மத்துக்கு உண்டான வெற்றியை அவர்கள் காண்பித்துக் கொடுத்தார்களோ அதற்கு மாற்றமாக.. அல்லாஹ்வுடைய உதவியைப் பெறுவதில் அவசரப்படக்கூடிய மக்களை,பார்க்கின்றோம்.
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தராத தீவிரவாத செயல்களில், பயங்கரவாத செயல்களில் செல்லக்கூடிய சிலரை பார்க்கின்றோம்.
இன்னும் சிலரோ, எந்த சக்தியும் இல்லை எதிரிகளோடு பணிந்து விடுவதைத் தவிர, எதிரிகளோடு கலந்து விடுவதை தவிர, அவர்களுக்கு நமது நாடுகளை கொடுத்துவிடுவதை தவிர, அவர்கள் விரும்பிய விதத்தில் நமது நாடுகளில் என்னவேண்டுமானாலும் செய்துகொள்வதைத் தவிர,அவர்களிடத்தில் பேசுவதற்கோ அவர்களிடத்திலே அவர்களை எதிர்த்து சொல்வதற்கோ, நமக்கு எந்தவிதமான திராணிகளும் இல்லை என்று எதிரிகளோடு கலந்துவிடுவதை, எதிரிகளின் சட்டங்களையும், எதிரிகளின் நிர்பந்தங்களையும், தனக்குள் உள்வாங்கிக்கொள்வதை, அவர்கள் அதையே ஒரு மார்க்கமாக, அதுதான் வழி என்பதாக,எதிரிகளோடு கலந்துவிடுவதைப் பார்க்கின்றோம்.
இப்படி பலவிதமான முரண்பட்ட சூழ்நிலைகளை முஸ்லிம்களுக்கு மத்தியில் நாம் பார்க்கின்றோம்.
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,இதுபோன்ற சூழ்நிலைகளில் நமக்கு என்ன காண்பித்துக் கொடுத்தார்கள்?
இன்று நம்முடைய மிகப் பெரிய ஒரு பலவீனம் என்ன என்று சொன்னால் ஒவ்வொரு மனிதனும் அல்குர்ஆனுடைய வசனங்களை ஹதீஸ் உடைய அந்த தூதருடைய வாக்கியங்களை தன்னுடைய விருப்பத்திற்கேற்ப அவர் அதற்கு ஒரு விளக்கம் கொடுத்து,இவர் அதற்கு ஒரு வியாக்கியானம் கொடுத்து தன்னுடைய முடிவை,தான் எடுக்கக்கூடிய முடிவை மக்களின் மீது திணிப்பதை,அதற்காக மக்களை சேர்ப்பதை, பல இயக்கங்களை உருவாக்குவதை நாம் பார்க்கிறோம்.
அன்பிற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்ட இந்த குர்ஆன், அவர்கள் கூறிய இந்த ஹதீஸ், அதன்படி அவர்கள் ஒரு சமுதாயத்தை உருவாக்கி,
அந்த சமுதாயத்தை நமக்கு முன்னுதாரணமாக ஆக்காமல் விட்டுச் சென்றார்களா?!அந்த கண்ணியத்திற்குரிய தோழர்கள், அவர்களை நபியவர்கள் எப்படி பன்படுத்தினார்கள், உருவாக்கினார்கள்?
ஜிஹாதுக்கு அவர்களை உருவாக்குவதற்கு என்னென்ன அஹ்லாக், என்னென்ன ஈமானிய ஸிபாத்துகளை, அந்த நபிதோழர்களுக்கு, ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் உருவாக்கி கொடுத்து, அவர்களை ஜிஹாதுக்கு கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
நபித் தோழர்கள் அல்லாஹ்விடத்தில் அவர்கள் உதவியை தேடினார்கள், சில நேரங்களில் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்)அவர்கள், வலிமை இருந்தும், எதிர்த்து தாக்குவதற்கான ஆற்றல் இருந்தும், அதற்குரிய அந்த பலம் இருந்தும், சூழ்நிலை இருந்தும், அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஒப்பந்தங்களுக்கு தயாரானார்கள்,இப்படி ரசூலுல்லாஹ் உடைய சீரா, கண்ணியத்திற்குரிய அந்த ஸஹாபாக்களுடைய அந்த வாழ்க்கை வழிமுறை,
மரணத்திற்குப் பிறகு ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் அவருடைய குடும்பத்தின் வழியிலே, கண்ணியத்திற்குரிய நான்கு கலீபாக்கள்,ஆட்சி செய்திருக்கிறார்கள்.
அவர்களுடைய அந்த வாழ்க்கை வரலாறு
فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الْمَهْدِيِّينَ الرَّاشِدِينَ، تَمَسَّكُوا بِهَا وَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ
என்னுடைய சுன்னாவை நீங்கள் பின்பற்ற வேண்டும், எனக்கு பின்னால் வரக்கூடிய நேர்வழிகாட்டப் பெற்ற நற்சிந்தனையுடைய கலீபாக்களுடைய வழிமுறையை நீங்கள் பின்பற்ற வேண்டும். கடவாய் பற்களை கொண்டு அதைக் கவ்விப்பிடித்துக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (1)
அறிவிப்பாளர்: இர்பாழ் இப்னு சாரியா ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: அபூ தாவூத், எண்: 4607
அந்த கண்ணியத்திற்குரிய தோழர்களை, நாம் ஏன் திரும்பிப் பார்ப்பதில்லை,நம்முடைய விருப்பையோ வெறுப்பையோ, நம்முடைய நிர்பந்தங்களையோ,நம்முடைய சூழ்நிலைகளையோ,காரணம் காட்டி, நாமாக சட்டங்களை உருவாக்கி கொள்கிறோம்.
அல்லாஹ்வுடைய தூதர் உருவாக்கிய அந்த சமுதாயம், எதை கொண்டு வெற்றியடைந்ததோ,எதைக்கொண்டு சீர்திருத்தம்பெற்றதோ அதைக் கொண்டுதான், நாம் வெற்றி பெற முடியும்; நாம் சீர்திருத்தம் பெற முடியும்.
அதனுடைய அடிப்படைகளை நாம் பார்க்கும்போது, அல்லாஹ்வுடைய தூதர் முதலாவதாக இந்த உம்மத்தை தங்களது சமுதாயத்தை சரியான ஈமானின் மீதும், அந்த ஈமானின் அடிப்படையில் அமைந்த நல்ல அமல்களில் மீதும் கட்டமைத்தார்கள்
முதலாவதாக சரியான ஈமான் இணைவைத்தல் கலக்காத நயவஞ்சகம் கலக்காத நன்றி கெட்டத்தனம் கலக்காதே தடுமாறாத சந்தேகங்கள் இல்லாத ஈமானின் மீது, பிறகு அந்த ஈமானின் அடிப்படையில் அமைந்த அமல்களின் மீது இந்த உம்மத்தை உருவாக்கினார்கள்.
இந்த இரண்டில் இருந்து எதுவும் தேவையான அளவிற்கு உம்மத்தின் பெரும்பான்மையான மக்களிடம் இல்லாமல் இன்று நாம் அல்லாஹ்விடத்தில் உதவியை தேடிக் கொண்டிருக்கின்றோம், அல்லது எதிரிகளை எதிர்க்க நாம் தயாராகி கொண்டிருக்கின்றோம்.
அதுவும் எந்த வழியில்? அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் காட்டிக்கொடுக்காத வழியில்,
அல்லாஹ் சொல்வதை கேளுங்கள்:
إِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُومُ الْأَشْهَادُ
நிச்சயமாக நாம் நம் தூதர்களுக்கும், நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் (உதவி செய்வோம். இவர்களுக்காக) சாட்சிகள் வந்து கூறும் (மறுமை) நாளிலும் உதவி செய்வோம். (அல்குர்ஆன் 40:51)
தனது தூதருக்கு உதவாமல் அல்லாஹ் எப்படி இருப்பான்? அசத்தியத்தை பலவீனப்படுத்தாமல் அசத்தியத்தை அசத்தியவாதிகளை தோற்கடிக்காமல் அல்லாஹ் எப்படி இருப்பான்?
அதற்காக வேண்டிதானே தூதர்களை அல்லாஹ் அனுப்பினான்.
பிறகு அல்லாஹ் சொல்கிறான்: தூதர்களுக்கு அடுத்து பிறகு நாம் யாருக்கு உதவி செய்வோம்?
ஈமான் உடையவர்களுக்கு நாம் உதவி செய்வோம்.
இம்மை வாழ்க்கையிலும் நாம் உதவுவோம்; மறுமையிலே அந்த சாட்சிகள் எழுந்து இருக்கக்கூடிய அந்த ஆகிரத்துடைய நாளிலும் நாம் அவர்களுக்கு உதவி செய்வோம்.
முஃமின்கள் யார் சகோதரர்களே? பெயர் வைத்துக் கொண்டவர்களா? அரபிய பெயர்களை தங்களது பெயர்களாக வைத்துக்கொண்டவர்களா?அல்லது அரசாங்கத்தின் தப்தர்களிலே முஸ்லிம்கள் என்று பதிவு செய்தவர்களா??
அல்லாஹ் முஃமின் என்று சொல்கிறான்?
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ (2) الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ
முஃமின்கள் யார்? “அல்லாஹ்“ என்று சொல்லப்பட்டால் அவர்கள் உள்ளங்களிலே நடுக்கம் இருக்கும் பயம் இருக்கும். அல்லாஹ்வுடைய நினைவு கூறப்பட்டால் உள்ளங்கள் நடுங்கும்,அல்லாஹ்வுடைய வசனங்கள் ஓதப்பட்டால்,அவர்களுடைய இறைநம்பிக்கையை அந்த வசனங்கள் அதிகரிக்கும். தங்களது ரப்பின் மீது அவர்கள் நம்பிக்கை வைத்து இருப்பார்கள் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்ததிலிருந்து தர்மம் கொடுப்பார்கள் இவர்கள்தான் உண்மையான முஃமின்கள்.(அல்அன்பால்8 : 2)
அல்லாஹ்வுடைய நினைவு அவர்களது உள்ளத்தை நடுங்க வைத்துக் கொண்டிருக்கும்; அல்லாஹ்வுடைய வேத வசனங்களை ஓதி தங்களது ஈமானை பலப்படுத்தி கொண்டிருப்பார்கள்.
இன்றைய முஸ்லிம்களுக்கு இன்றைய நமது சமுதாய மக்களுக்கு வேதத்தை ஓதவே தெரியவில்லை;வேதத்தை ஓதினால் பொருள் தெரியவில்லை.
பொருள் தெரிந்துக்கொள்வதற்கு உரிய வழிகள் விசாலப்படுத்தி,வசதியாக்கி கொடுத்திருந்தும் வேதத்தின் பொருட்களை பல மொழிகளில் அல்லாஹ் நமக்கு அதனுடைய மொழியாக்கத்தை கொடுத்திருந்தும் கூட அதைத் தெரிந்துக்கொள்வதற்கு எத்தனை பேருக்கு ஆர்வம் இருக்கிறது?
அல்லாஹ் இறக்கிய வேத வசனங்களை அதனுடைய கருத்துக்களை தெரியாத முஸ்லிம்கள் தான் இன்று அதிகமானவர்கள்.
ஒரு நூறு ஏன் பத்து முஸ்லீம்களை எடுத்துக்கொண்டு அவர்களிடத்திலே கேளுங்கள்; குறைந்தபட்சம் தொழுகையில் நீங்கள் ஓதக்கூடிய,அத்தியாயங்களில் பொருள்களையாவது நீங்கள் படித்திருக்கிறீர்களா?
மனப்பாடம் செய்து இருக்கிறீர்களா? என்று கேட்க வேண்டாம். அது இரண்டாவது பொறுப்பு அதனுடைய அர்த்தத்தையாவது புரியக்கூடிய அளவிற்கு ஒன்றுக்கு இரண்டு முறையோ மூன்று முறையோ நான்கு முறையோ மனப்பாடம் செய்யவில்லை என்றாலும் சரி புரியக்கூடிய அளவிற்காவது அதை ஒன்றுக்கு பலமுறை படித்து வாசித்து உணர்ந்து இருக்கிறீர்களா?
எப்போது இவர்கள் முஃமின்களாக ஆவார்கள்?
அல்லாஹ் சொல்கிறான்:
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ ءَايَٰتُهُۥزَادَتْهُمْ إِيمَٰنًا–
அவர்களுக்கு ஈமானுடைய வசனங்கள்,இறைவனுடைய குர்ஆன் வேதவசனங்கள் ஓதப்பட்டால் அது அவர்களுக்கு இறைநம்பிக்கையை அதிகப்படுத்தும் என்று அல்லாஹ் சொல்கிறான்.
வேத வசனங்களை ஓதுவதே இல்லை. ஓதினாலும் ரமலான் மாதங்களில் பரக்கத்திற்காக அல்லது சிலர் செய்யக்கூடிய பித்அத்களை போன்று யாராவது இறந்த விட்டால், அல்லது அவர்களுடைய கடையோ வீடோ இல்லங்களோ திறப்பு விழா நடைபெற்றால் இதற்குக்தான் அவர்களுக்கு குர்ஆன் இருக்கிறதே தவிர,
ஈமானுக்காக, அல்லாஹ்வை தெரிந்து கொள்வதற்காக, தன்னை சீர்திருத்திக் கொள்வதற்காக, தன்னுடைய ஈமானை உருவாக்குவதற்காக குர்ஆனை திறக்கக்கூடிய முஃமின்கள் எங்கே?
அல்லாஹ் முஃமின்கள் என்று யாரைச் சொல்கிறான்?
நிச்சயமாக நாம் தூதர்களுக்கு உதவுவோம், நிச்சயமாக நாம் முஃமின்களுக்கு உதவுவோம் என்று அல்லாஹ் சொல்கிறான்
ஈருலகிலும், துன்யாவிலும் உதவுவோம், ஆகிரத்திலும் உதவுவோம்,என்று சொல்கிறானே,
அந்த முஃமின்களை அல்லாஹ் அடையாளப்படுத்துகிறான்; குர்ஆனுடன் அவர்களுக்கு இருக்கக்கூடிய தொடர்பை சொல்கிறான்; அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான்:
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ
(மனிதர்களே!) உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால், அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை(ப் பூமிக்கு) அதிபதிகளாக்கியது போன்றே இவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு அதிபதியாக்கி வைப்பதாகவும், அவன் இவர்களுக்கு விரும்பிய மார்க்கத்தில் இவர்களை உறுதியாக்கி வைப்பதாகவும், அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு இவர்களுடைய பயத்தை மாற்றி விடுவதாகவும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். (அன்றி) அவர்கள் தன்னையே வணங்கும்படியாகவும், எதையும் தனக்கு இணையாக்கக் கூடாது என்றும் அவன் கட்டளையிட்டிருக்கிறான். இதன் பின்னர், எவரேனும் நிராகரிப்பவர்களாகி விட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும் பாவிகள்தான்.(அல்குர்ஆன் 24 : 55)
ஈமானின் அடிப்படையிலே நீங்கள் அந்த அமல்களை செய்யும்போது, ஸாலிஹான அமல்களை செய்யும்போது, இபாத்துகளை செய்யும்போது,
இன்று எடுத்து எடுத்துக்கொள்ளுங்கள் சகோதரர்களே!தொழுகையை விடக்கூடிய முஸ்லிம்களின் நிலைகளை பாருங்கள்,ஒருவேளை தொழுகையை விடுவது இறைநிராகரிப்பு அவன் குஃப்ரிலே சென்று விடுகிறான்.
அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிம் மீதும் ஐந்து வேளை தொழுகையை கடமையாக்கியிருக்கிறான் என்பதை தெளிவாக அறிந்த பின்னர் அதற்குரிய செய்தி அவனுக்கு சொல்லப்பட்டதற்கு பின்னர்,
ஒரு நேரத் தொழுகையை வேண்டுமென்று, அவன் அறிந்த நிலையிலே,பைத்தியமோ, மயக்கமோ இல்லாத நிலையில் தூக்கம் இல்லாத நிலையில்,வேண்டுமென்றே அவன் ஒரு நேரத்தொழுகையை அலட்சியம் செய்து விட்டால்
அவன் இறை நிராகரிப்பு குஃப்ரிலே சென்றுவிட்டான். அவன் அந்த தொழுகையை தொழுகாதவரை மீட்டு எடுக்காதவரை அவருடைய ஜும்மா ஏற்றுக்கொள்ளப்படாது.
இன்று ஜும்ஆவுக்காக வரக்கூடிய கூட்டங்களை பார்த்தீர்களா! காலையில் சுபுஹ் தொழுகாத இவர்களுடைய ஜும்ஆ எப்படி ஏற்றுக் கொள்ளப்படும்?
அடுத்து மாலையில் அஸர் தொழமாட்டோம் என்று உறுதியில் இருக்கக்கூடிய அவர்களுடைய ஜும்ஆவோ அந்த ஜும்ஆவில் இவர்கள் கேட்கக்கூடிய துஆவோ, அல்லாஹ்விடத்தில் எப்படி அங்கீகரிக்கப்படும்?.
ஜும்ஆ என்ற தொழுகையை அல்லாஹ் யார் -மீது கடமையாக்கியிருக்கிறான் ஐந்துவேளைத் தொழுகையைத் தொழக்கூடிய, முஃமின்கள் மீது அல்லாஹ் ஜும்மா என்ற தொழுகையை கடமையாக்கியிருக்கிறான்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ
நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ தொழுகைக்காக (அதான் சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!) (அல்குர்ஆன் 62 : 09)
முஃமின்களே! ஜும்ஆவுடைய தினத்தில் உங்களை அல்லாஹ்வுடைய நினைவிற்கு குத்பாவிற்கு அழைக்கப்பட்டால் நீங்கள் விரைந்து வாருங்கள்,என்று அல்லாஹ் சொல்கிறானே எந்த முஃமின்களைப் பார்த்து?
அப்துல்லாஹ் முஹம்மது என்று பெயர்வைத்தவர்களையா அல்லாஹ் சொல்கிறான்?
ஈமானுடைய அடையாளங்கள் என்று அல்லாஹ் என்ன சொல்கிறான்?
தொழுகையை நிலைநிறுத்திக் கூடியவர்கள்.
அவர்கள்தான் உண்மையான முஃமின்கள்.
முஃமின்கள் என்றால் இவர்கள்தான். அப்துல்லாஹ்,முஹம்மது அல்ல.
முஃமின்கள் யார்? தொழுகையை நிலை நிறுத்தக்கூடிய அப்துல்லாஹ்.தொழுகையை நிலை நிறுத்தக்கூடிய முஹம்மத்.
இன்று நிலைமை எப்படி இருக்கிறது? நாம் என்ன செய்கிறோம்?
ஜும்ஆ தொழுதோம், பெருநாள் தொழுது விடுவோம், ஏதோ கிருத்தவர்கள் போல ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்று சேர்ந்து விட்டால், அல்லது ஆண்டின் விசேஷ தினங்களில் ஒன்று சேர்ந்துவிட்டால், தங்களது மதத்தின் கடமையை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம் என்று அவர்கள் நினைப்பது போன்று முஸ்லிம் சமுதாயமும் நினைத்துக் கொண்டிருக்கிறது.
வெள்ளிக்கிழமைக்கு வந்து ஜும்ஆ நிறைவேற்றி விட்டால் எங்களுக்கு இஸ்லாம் இருக்கிறது, ஈமான் இருக்கிறது, பெருநாள் நிறைவேற்றிவிட்டால் எங்களுக்கு இஸ்லாம் இருக்கிறது, ஈமான் இருக்கிறது என்று இவர்களாக ஒரு மார்க்கத்தை உருவாக்கிக் கொண்டார்கள்.
எதை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் சொல்லித் தரவில்லையோ கொஞ்சம் யோசித்து பாருங்கள்,
ரசூலுல்லாஹ்வுடைய காலத்திலே ஜும்மா மட்டும் தொழக்கூடிய முஸ்லிம்கள் என்று யாராவது இருந்தார்களா?
ரசூலுல்லாஹ்வுடைய காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் முஃமின்களில் சிலர் விபச்சாரம் செய்திருக்கிறார்கள் அதற்குரிய தண்டனையை பெற்றிருக்கிறார்கள்.
திருட்டு நடந்திருக்கிறது, அதற்குரிய தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது,ஏமாற்றி இருக்கிறார்கள், அதற்குரிய தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் சஹாபாக்கள் சொல்கிறார்கள்: எங்களிலே உள்ள முனாஃபிக் என்று அறியப்பட்டவர் கூட யாருடைய நயவஞ்சகத்தை பற்றி அல்லாஹ் தனது தூதருக்கு செய்தியைத் தெளிவாக சொல்லிவிட்டானோ, யாருடைய நயவஞ்சகத்தை பற்றி அல்லாஹ் தெளிவாக செய்தியை சொல்லிவிட்டானோ அந்த முனாஃபிக் கூட அவன் ஜமாஅத் தொழுகையை தவறவிடாமல் இருந்தான்.
இரவு நேரங்கள் குளிர்காலமாக இருந்தால் இரவு சீக்கிரம் வந்துவிடும்; கடும்இருட்டாக இருக்கும்; அது போன்று காலை சுப்ஹுடைய தொழுகை இந்தத் தொழுகையில் தான் முனாஃபிக்குகள் நம்மை யாரும் பார்க்கமாட்டார்கள், அடையாளம் கண்டுகொள்ள முடியாது, நாம் வரவில்லை என்றால் என்று இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஜமாஅத் தொழுகைக்கு வராமல் மறைந்து கொள்வார்கள்.
அன்பிற்குரியவர்களே! எப்படி இஸ்லாம் என்று நாம் சிந்தித்து வைத்திருக்கிறோம் பாருங்கள்!அல்லாஹ் மன்னிப்பானாக!
அல்லாஹ் என்ன சொல்கிறான்:
அமல் ஹாலிஹ் செய்பவர்கள்,இவர்களை இந்த பூமியில் நாம் அவர்களை ஆட்சியாளர்களாக கலீபாக்களாக உருவாக்குவோம்.
கலீபாக்களாக உருவாக்குவதற்கு இயக்கம் தேவையில்லை சகோதரர்களே! அதற்கு ஒரு கோஷம் தேவையில்லை,
அதற்கு ஒரு secretary பொருளாளர் தலைவர் அதற்காக வசூல் தேவையில்லை இந்த கலிஃபாக்களை உருவாக்குவதற்கு ஒரு கூட்டம் எதற்கெல்லாம் ஒரு கூட்டம்?சகோதரர்களே!
கலிபாக்களை இவர்கள் உருவாக்கப் போகிறார்களாம் எங்கிருந்து இவர்களுக்கு கலிபாக்கள் உருவாக்க முடியும்?
கோஷ்டிகளை உருவாக்கி கோஷ்டிப் பூசல்களைதான் இவர்கள் இவர்களுக்கு கொண்டு வர முடியுமே தவிர,
இயக்கங்களால் என்னென்ன பின்விளைவுகளை இன்றைய சமுதாயம்,முஸ்லிம் சமுதாயம் சந்தித்துக் கொண்டு இருக்கிறதோ அதைத்தான் இவர்களும் இறுதியாக செய்ய முடியுமே தவிர, கலிபாக்களை இவர்களால் ஒரு காலமும் உருவாக்க முடியாது.
கலீபாக்களை உருவாக்க கூடியவன் அல்லாஹ்.
எதன் அடிப்படையில் உருவாக்குகின்றான்? ஈமானின் அடிப்படையிலே அவர்களை அல்லாஹ் பூமியிலேகலீபாவாக ஆக்குவான்.
இதற்கு முன்னால் உள்ளவர்களை கலீபாவாக ஆக்கியது போன்று,
அவர்களுக்கு அல்லாஹ் அவர்களுடைய தீனை பலப்படுத்திக் கொடுப்பான்; தீனை உறுதிப்படுத்திக்கொடுப்பான்.
அவர்களது பயத்தைப்போக்கி அவர்களுக்கு பாதுகாப்பை அல்லாஹ் கொடுப்பான்.
அந்த முஃமின்கள் என்ன செய்வார்கள்?அடுத்து அல்லாஹ் அப்படியே பட்டியல் போடுகிறான்:
அந்த முஃமின்களுடைய அல்லாஹ் ஈமான் அமலுடைய அடிப்படையிலே இந்த பூமியிலே கிலாபத்தை கொடுத்தாலும்,அவர்கள் எதை தர்மம் செய்தார்கள்?ஈமானை.
அவர்கள் எதை தங்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தினார்கள்?அமலை நிலைநிறுத்தினார்கள். அல்லாஹ் அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமையை கொடுத்தான்.
அல்லாஹ் அவர்களுக்கு மத்தியில் தலைமைக்குக் கீழ்படியக்கூடிய அந்தப்பண்பை அல்லாஹ் கொடுத்தான்.
இன்று ஒரு அமீருக்குக் கட்டுப்படக்கூடிய இதாஅத் என்ற தன்மையில்லாத அதாவது திறந்து வாயால் சொல்வதாக இருந்தால் ஒரு தருதலை சமுதாயமாக தான் இன்றைய பலர் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
கட்டுப்படுவது என்பது முஸ்லிம் சமுதாயத்தில் இல்லாத ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது.
நபியவர்கள் எதைக்கொண்டு வந்தார்கள்? ஈமான்,அமல்ஸாலிஹ்,அதனுடைய ஒரு பகுதியாக அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்கள் அமீருக்குக் கட்டுப்படுவதைக் கொண்டுவந்தார்கள்.
உங்களுடைய தலைவருக்கு கட்டுப்படுவதை தனக்கு கட்டுப்படுவது என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) சொன்னார்கள்.
யார் என்னுடைய அமீருக்குக் கட்டுப்பட்டாரோ அவர் எனக்கு கட்டுப்பட்டார். யார் எனக்கு கட்டுப்பட்டரோ, அவர் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டார்.
உங்கள் மீது மூக்கு சிதைக்கப்பட்ட விகாரமான தோற்றமுடைய ஒரு கருப்பு அடிமை அமீராக ஆகி கொண்டாலும், நீங்கள் அமீராகஆக்கினால் என்று அல்லாஹ்வுடையதூதர் (ஸல்) சொல்லவில்லைஇப்படி ஒரு சூழ்நிலையில்ஒரு கருப்பு நீக்ரோமுகம்விகாரமானஒருஅடிமை,
உங்களுக்கு தன்னை அமீர் என்று சொல்லி அவர் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டால் அவருக்கு நீங்கள் கட்டுப்படுங்கள்.
அவருக்கு கட்டுப்படுவதிலிருந்து நீங்கள் விலகாதீர்கள்; மக்கள் கேட்டார்கள் அமீர் அநியாயகாரனாக ஆகிவிட்டால்,
அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்: உங்களது செல்வங்களை பிடுங்கிக்கொண்டால் உங்களது முதுகுகளில் சாட்டையால் அடித்தாலும் அவருக்கு கீழ்படுவதிலிருந்து,நீங்கள் உங்களது வாக்கை முறிக்காதீர்கள்.
எப்படிப்பட்ட கட்டுப்பாட்டை அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) கொண்டு வந்தார்கள்.
இன்று அற்பஅற்ப காரணங்களுக்கெல்லாம் தங்களுடைய அமீர்களுக்கு,தங்களுடைய மன்னர்களுக்கு எதிராக சதி செய்யக்கூடிய முஸ்லிம்களாக,இன்றைய முஸ்லிம்கள் கம்யூனிச சிந்தனையிலே,உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.
கம்யூனிச சிந்தனை சகோதரர்களே!அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
இந்த உம்மத்தில் அமீருக்குக் கட்டுப்படுவதை ஈமானுக்கு உரிய அஹ்லாக்காக கொண்டுவந்தார்கள்,இன்று எப்படி இருக்கிறது?
ஒவ்வொருவரும் தங்களுடைய ஃபத்வாவிற்கு ஏற்ப அவர் காஃபிராகி விட்டார்; அவருக்கு நாம் கட்டுப்படத்தேவையில்லை என்று ஃபத்வாக்களை தங்களது கரங்களில் எடுத்துக்கொண்டு தங்களது இந்த உம்மத்தின் மீது “ஹுருஜ்” ஆயுதங்களைக் கொண்டு வெளியேறுவதை அவர்கள் ஆகுமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அல்லாஹ் சொல்கிறான்: ஈமான் அமலின் அடிப்படையிலே அல்லாஹ் யாருக்கு கிலாபத்தை கொடுத்தானோ அவர் என்ன செய்வார்கள்,தெரியுமா?
يَعْبُدُونَنِى
ஒரு முஸ்லிம் அரசாங்கம் அல்லாஹ்வும் அவர்களுக்கு ஈமானை அமலைக்கொடுத்து செல்வங்களை கொடுத்து,ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால்.. அந்த மக்கள் செய்யக்கூடிய முதல் வேலை என்னவென்று அல்லாஹ் சொல்கிறான்?
ரோடுகளை போடுவார்கள்,கோபுரங்களை கட்டுவார்கள் ஹோட்டல்களை திறப்பார்கள், export-import செய்வார்கள் என்றா?அல்லாஹ் சொல்கிறான்;
ஒரு முஃமினான உம்மத்துடைய அமல் எப்படி இருக்கும்?
என்னை இபாதத் செய்வார்கள்; என்னை வணங்குவார்கள்.
لَا يُشْرِكُونَ بِي شَيْئًا
எனக்கு எதையும் இணையாக்கமாட்டார்கள். (அல்குர்ஆன் 24 : 55)
ஷிர்க்கை அரங்கேற்றக்கூடிய ஷிர்க்கை உயிர்ப்பிக்ககூடிய ஷிர்கை மார்க்கமாக,மதமாக,கொள்கையாக, அதுவும் இஸ்லாத்துடைய ஒரு செயலாக, ஏற்றுக்கொண்டிருக்கக் கூடிய அரசாங்கங்களுக்கோ அப்படி ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய உம்மத்துகளுக்குகோ, அல்லாஹ்வுடைய இந்த வாக்குறுதி கிடைக்குமா?
அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) மக்காவிலேயே 13 ஆண்டுகாலம் போராட்டத்தின் உடைய காரணம் என்ன? சகோதரர்களே!
எதை அவர்கள் ஏற்க மறுத்தார்கள்?. எதனால் நபியவர்கள் இந்த பூமியை விட்டு வெளியேறினார்கள்?
நபி போதித்த நற்பண்புகளை ஏற்க மறுத்தார்களா? நபியின் ஒழுக்கமாண்புகளை அவர்கள் எதிர்த்தார்களா?இல்லையே...
நபியின் தனிப்பட்ட விரோதத்தை,அவர்கள் கைக்கொண்டார்களா?இல்லையே,
*லாயிலாஹ இல்லல்லாஹ்* என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்ககூடாது,வழிபாடுகள் வணக்கவழிபாடுகள் ரப்பை தவிர யாருக்கும் செய்யக்கூடாது.எந்த விதத்திலும் செய்யக்கூடாது.
ஒரு நபிக்குமே இபாதத் செய்யக்கூடாது; அந்த குறைஷிகள் கஃபாவிலே, இப்ராஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய சிலைகளை வைத்திருந்தார்கள்.
அவர்களுடைய உருவங்களை வரைந்து சிலையாக செதுக்கி வைத்திருந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கா வெற்றியின் போது உடைத்து எறிந்தார்கள்; இப்ராஹீம் (அலை) வணங்கப்படக்கூடியவர் அல்ல,
இஸ்மாயில் (அலை)வணங்கப்படக்கூடியவர் அல்ல அவர்கள் ஒருகாலும்,குறி பார்த்ததில்லை; அவர்களின் கைகளிலே குறிபார்ப்பதற்குரிய அம்பை கொடுத்து வைத்திருந்தார்கள்.
இந்த உம்மத்திலே இப்ராஹிம் நபிக்கும் அல்லாஹ்வுடைய இபாபத்துக்கள்,செய்யப்படுவதற்கு தகுதியில்லை என்று சொன்னால் இஸ்மாயில் நபிக்கும் அல்லாஹ்வுடைய இஃபாதத்கள் செய்யப்படுவதற்கு அனுமதியில்லை என்று சொன்னால்,
சமாதிகள் எங்கே இஸ்லாமிய மார்க்கமானது? கப்ருகள் எங்கே இஸ்லாமிய மார்க்கமானது? இன்று எப்படி ஆகிவிட்டது? நாம் முஸ்லிம்கள் என்றால் கப்ருகளை வணங்கக்கூடியவர்களை எல்லாம் நாமும் முஸ்லிம்கள் என்று அங்கீகரிக்க வேண்டும்.
அதுவும் இஸ்லாமிய வரலாறு,இஸ்லாமிய வரலாற்று சின்னங்கள் எது?தர்ஹாக்கள், கஃப்ருகள் இவை எல்லாம் இஸ்லாமிய வரலாற்றில் உள்ளவை.
இஸ்லாமிய கலாச்சாரம் இஸ்லாமிய பண்பாடு என்று அதை ஏற்க வேண்டுமாம்.அவர்கள் செய்யக்கூடிய அந்த சடங்குகளை அவர்கள் செய்யக்கூடிய ஷிர்க்குகளை விட கேவலமான அனாச்சாரங்களை அசிங்கங்களை கஃப்ருகளிலே தர்ஹாக்களிலே செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதையெல்லாம் ஏற்று நாம் ஈமானை ஏற்றுக்கொள்ளவேண்டுமாம் இதையெல்லாம் ஏற்றால்தான் முஸ்லிம் சமுதாயமாம்.
இல்லை சகோதரர்களே!ஒருநாளும் ஏற்க முடியாது.
அந்த மக்களுடன் கைகோர்த்து கொண்டு,அல்லாஹ்வின் உதவியை ஒருநாளும் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் நமக்குள் இருக்கின்றவரை நாம் அல்லாஹ்வுடைய உதவியை பெற முடியாது. நாம் அவர்களில் இருந்து விலக வேண்டும் அவர்கள் நம்மில் இருந்து வெளிப்பட வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்;
قُلْ يَاأَيُّهَا الْكَافِرُونَ (1) لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ (2) وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ (3) وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ (4) وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ (5) لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
(நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே!
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை.
(அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன்.
நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர்.
உங்கள் (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என் (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்).(அல்குர்ஆன் 109 : 1-6)
தர்ஹாக்களை வணங்கக் கூடியவர்களே! நீங்கள் வணங்கக்கூடியவர்களை நாங்கள் வணங்கமுடியாது. என்ன சொல்கிறார்கள்?
நாமும் அவர்களோடு சேர்ந்து கந்தூரி கொண்டாடவேண்டுமாம். உரூஸ் கொண்டாடவேண்டுமாம். அதை குறை கூறக்கூடாதாம். அதை தவறு என்று சொல்லக்கூடாதாம்.
அவை எல்லாம் இஸ்லாமிய கலாச்சாரமாக, பண்பாடாக ஏற்றுக் கொள்ளவேண்டுமாம் என்று சொல்கிறார்கள்.
இந்த நாட்டிற்கு அச்சுறுத்தல் யாரென்றால் வஹ்ஹாபிய முஸ்லிம்களாம். இந்த நாட்டுக்கு எப்படிப்பட்ட முஸ்லீம்கள் தேவையென்றால் சூஃபீதனத்தையும், தர்ஹா வழிபாடுகளையும் ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் தான் இந்த நாட்டிற்கு பாதுகாப்பாம்.
என்ன வார்த்தை? எப்படிப்பட்ட துணிவு அவர்களுக்கு?கண்ணியத்திற்குரியவர்களே! தவ்ஹீதை நிலைநிறுத்தக்கூடிய ஒரு முஸ்லீம் பயங்கரவாதியாக இருக்கமாட்டான்.
ஆனால் தவ்ஹீதுக்காக அவன் இறங்கி போகமாட்டான்; தவ்ஹீதை விட்டுக்கொடுத்து,தனது உடலுக்காக, உயிருக்காக, தனது பாதுகாப்புக்காக தவ்ஹீதின் விஷயத்தில் சமரசம் செய்துகொள்ளக்கூடியவன் அவன் ஒரு முஸ்லிமாக இருக்கமுடியாது.
தன்னை அவன் ஒரு முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டாலும் சரி ஏன் இந்த வசனம் இறங்குகிறது,
சூரத்துல் காஃபிரூன் இறக்கப்பட்ட பின்னணி என்ன? குறைஷிகள் நபியிடத்திலே, ஒப்பந்தம் செய்வதற்காக வந்தார்கள்; ,ஓர் ஆண்டு நீங்கள் சிலைகளை வணங்குங்கள்; ஓராண்டு நாங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறோம். முடியாது.
ஒருமாதம் நீங்கள் சிலைகளை வணங்குங்கள்; ஒருமாதம் நாங்கள் அல்லாஹ்வை வணங்குகிறோம்; முடியாது.ஒருவாரம், ஒருநாள் அதுவும் முடியாது.
கடைசியாக சொன்னார்கள்: முஹம்மதே! எங்கள் சிலைகளைக் குறை கூறுவதை எங்களது சிலைகளை ஒன்றுமில்லாத பொய்யென்று உங்களது குர்ஆன் சொல்லக்கூடிய அந்த வேதவசனங்களை தயவுசெய்து ஓதாமல் இருங்கள்;நாங்கள் உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம்.(தஃப்ஸீர் தபரி).
கடைசியாக எதற்கு இறங்கி வந்தார்கள்? எங்களது சிலைகளை குறை சொல்லாதீர்கள்; எங்களது மூதாதையர் மார்க்கத்தை குறைசொல்லாதீர்கள்!நாங்கள் உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம்;சுதந்திரமாக விட்டுவிடுகிறோம்.
அல்லாஹ் அப்பொழுதுதான் அதுவரை இறக்கி இருக்காத இன்னும் தெளிவான வசனங்களை இறக்கினான்.
قُلْ يَاأَيُّهَا الْكَافِرُونَ
இறைமறுப்பாளர்களே!நீங்கள் வணங்கக்கூடியதை நான் வணங்கவில்லை.
எனது ரப்பு வேறு, நீங்கள் வணங்கக்கூடியவன் வேறு, எல்லாக்கடவுளும் ஒன்றுதான்,ஏற்றுக்கொள்ளக்முடியாது.எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?
கல்லும் மண்ணும் படைத்த இறைவனுக்கு அர்ஷூடைய அதிபதிக்கு சமம் ஆகிவிட முடியுமா?
நான் வணங்கக்கூடிய ரப்பை, நீங்கள் வணங்கவில்லை.
நீங்கள் சிலைகளை வணங்கிக்கொண்டு சிற்பங்களை வணங்கிக்கொண்டு,விக்ரகங்களுக்கு பூஜை செய்துக்கொண்டு, உங்களது குருக்களுக்கு, உங்களது தலைவர்களுக்கு ,உங்களுடைய வழிகாட்டிகளுக்கு,உங்களுடைய சன்யாசிகளுக்கு பூஜை செய்துக்கொண்டு,
இவர்கள் மூலமாக நாங்கள் கடவுளை வணங்குகிறோம் என்று சொன்னால் அது பொய்.நான் வணங்கக்கூடிய அந்த உண்மையானக் கடவுளை நீங்கள் வணங்கவில்லை.. தெளிவான பதிலை அல்லாஹ் இறக்கிகொடுத்தான்.
இன்று கண்ணியத்திற்குரியவர்களே! நமது பிரச்சனை என்ன? அல்லாஹ்வுடைய ஈமானிலே ஏற்பட்ட தடுமாற்றம், இந்த தவ்ஹீதின் பக்கம் உறுதியாக வராதவரை அல்லாஹ்வுடைய உதவியை அல்லாஹ்வுடைய இபாதத்தை நிலைநாட்டுவதற்காக நாம் ஒன்று சேராதவரை.
அதற்காக ஒன்று சேருங்கள். எதற்காக? முதலாவதாக அல்லாஹ்வுடைய இபாதத்தை நிலைநாட்டுவதற்காக. அப்போதுதான் அல்லாஹ்வுடைய உதவி வரும் சகோதரர்களே!
இன்னும் இன்ஷா அல்லாஹ்! நிறைய விஷயங்கள் இருக்கின்றன.அல்லாஹ் நாடினால்,தொடர்ந்து பார்ப்போம்.
ஆகவே! கண்ணியத்திற்குரியவர்களே!இன்று உலகத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்படக்கூடிய துன்பம் அது பர்மாவிலே இருக்கட்டும், பாலஸ்தீனத்தில் இருக்கட்டும், இன்னும் பல இடங்களிலே.
அதனுடைய அடிப்படை காரணமாக,நாம் புரியவேண்டியது அல்லாஹ்வுடைய தீனிலே நமக்கு ஏற்பட்ட பலவீனம்தான் என்பதை புரிய வேண்டும்.சகோதரர்களே!
இதற்குப்பிறகும் அல்லாஹ்வுடைய சோதனை சில வருகிறது என்று சொன்னால் நம்முடைய அந்த ஈமான் சரியாக இருக்கிறதா? அந்த ஈமானிலே உறுதியாக இருக்கிறோமா?
காஃபிர்கள் உடைய துன்பத்தால் ஈமானை விட்டுவிடுகிறோமா என்று அல்லாஹ் சோதிப்பதற்காகவும் சில நேரங்களில் சோதனைகளை கொடுக்கிறான்.
அகழ் வாசிகளைப்பற்றி அல்லாஹ் சொல்லவில்லையா!?
பரிசுத்தமான அந்த முஃமின்களை எழுபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அந்த இறைநம்பிக்கையாளர்களை, நெருப்பு வாய்க்காலில் போட்டு அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ
அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அல்குர்ஆன் 85 : 4)
அவர்கள் ஒருவர்கூட இறை நிராகரிப்பில் செல்லவில்லையே,
மூஸா(அலை) அவர்கள் மீது நம்பிக்கை கொண்ட அந்த சூனியக்காரர்கள்,தவ்பா செய்தவர்கள்,அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு மூஸா ஹாரூன் தூதர்களாக, ஏற்றுக் கொண்ட அந்த மக்களை,
ஒரே நேரத்திலே அவர்கள் அனைவரையும் மாறுகை,மாறுகால்,வெட்டி உயிரோடு கழுமரத்தில் ஏற்றி ,அவர்களை கொலை செய்தானா..(அர் ரஹீக்)
அவர்கள் ஒருவர் கூட முர்த்தத் ஆகவில்லையே,மார்க்கத்தை விட்டு விடவில்லையே அப்படிப்பட்ட வரலாறுகளை எல்லாம் நாம் நம்முடைய வேதத்திலே படிக்கின்றோம்
இதுபோன்ற சூழ்நிலைகளில் நம்முடைய மக்கள் செய்யக்கூடிய அலட்சியம் என்னவென்று சொன்னால்?
அதைப்பற்றி அதிகமாக பேசுகிறார்கள், பரிமாறிக்கொள்கிறார்கள்; அதற்காக அல்லாஹ்விடத்திலே தனிமையில் கையேந்தக்கூடிய மக்கள் எங்கே?
அதைப்பற்றி ஒவ்வொருவருக்கும் செய்தி தெரிய வந்துவிடுகிறது,கண்டிப்பாக உடனே இரண்டு ரக்அத் தொழுது அல்லாஹ்விடத்தில் உதவி தேடக்கூடியவர்கள் எங்கே? அவர்களுக்காக அழக்கூடியவர்கள் எங்கே?
இன்று நம்முடைய பலவீனத்திலே ஒன்று, அல்லாஹ்விடத்தில் முறையிடுவது இல்லை? ஏன்?நாம் அவர்களுக்காக செய்யக்கூடிய துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டானா??
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) மக்காவிலேயே அகப்பட்டுக்கொண்ட அய்யாஷிற்க்காக, மக்காவிலேயே அகப்பட்டுக்கொண்ட ஹிஷாமிற்காக துஆ செய்கிறார்கள்.
اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ
மதினாவிலிருந்து துஆ செய்கிறார்கள், யா அல்லாஹ்! ஹிந்த் வரவிடாமல் தடுக்கப்பட்ட எனது இந்த மூன்று தோழர்களை நீ காப்பாற்றிக்கொண்டுவருவாயாக. (2)
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: புகாரி, எண்: 1006
ஆகவே, கண்ணியத்திற்குரியவர்களே! நாம் செய்யக்கூடிய கடமைகளில் ஒன்று அவர்களுக்காக துஆக்களை அதிகப்படுத்துவது,நம்மால் முடிந்த அளவு அவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் மன்றாடுவோமாக...
அல்லாஹ் நம்மை நம்முடைய தீனின் பக்கம் நபியின் சுன்னாவின் பக்கம் திருப்புவானாக!
ஆமீன்
குறிப்புகள் :
குறிப்பு 1).
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ، قَالَ: حَدَّثَنِي خَالِدُ بْنُ مَعْدَانَ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو السُّلَمِيُّ، وَحُجْرُ بْنُ حُجْرٍ، قَالَا: أَتَيْنَا الْعِرْبَاضَ بْنَ سَارِيَةَ، وَهُوَ مِمَّنْ نَزَلَ فِيهِ {وَلَا عَلَى الَّذِينَ [ص:201] إِذَا مَا أَتَوْكَ لِتَحْمِلَهُمْ قُلْتَ لَا أَجِدُ مَا أَحْمِلُكُمْ عَلَيْهِ} [التوبة: 92] فَسَلَّمْنَا، وَقُلْنَا: أَتَيْنَاكَ زَائِرِينَ وَعَائِدِينَ وَمُقْتَبِسِينَ، فَقَالَ الْعِرْبَاضُ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا فَوَعَظَنَا مَوْعِظَةً بَلِيغَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ، فَقَالَ قَائِلٌ: يَا رَسُولَ اللَّهِ كَأَنَّ هَذِهِ مَوْعِظَةُ مُوَدِّعٍ، فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا؟ فَقَالَ «أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ، وَإِنْ عَبْدًا حَبَشِيًّا، فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا، فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الْمَهْدِيِّينَ الرَّاشِدِينَ، تَمَسَّكُوا بِهَا وَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ، وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ، فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ، وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ»(سنن أبي داود 4607 -)
குறிப்பு 2).
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ الآخِرَةِ، يَقُولُ: " اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ الوَلِيدَ بْنَ الوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ المُسْتَضْعَفِينَ مِنَ المُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ: وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: غِفَارُ غَفَرَ اللَّهُ لَهَا وَأَسْلَمُ سَالَمَهَا اللَّهُ " قَالَ ابْنُ أَبِي الزِّنَادِ: عَنْ أَبِيهِ، هَذَا كُلُّهُ فِي الصُّبْحِ (صحيح البخاري-1006)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/