HOME      Khutba      விடுமுறைகளை எப்படி கழிப்பது ? | Tamil Bayan - 351   
 

விடுமுறைகளை எப்படி கழிப்பது ? | Tamil Bayan - 351

           

விடுமுறைகளை எப்படி கழிப்பது ? | Tamil Bayan - 351


விடுமுறைகளை கழிப்பது எப்படி?

ஜுமுஆ குத்பா தலைப்பு : விடுமுறைகளை கழிப்பது எப்படி?

வரிசை : 351

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 17-04-2015| 28-06-1436

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ் நம்மை இவ்வுலகில் பெரும் பொறுப்புக்காக, பெரிய கடமைக்காக படைத்திருக்கின்றான்.

நம்முடைய இந்த உலக வாழ்க்கையில் எந்த ஒரு காரியமும்,நாம் படைக்கப்பட்ட அந்த நோக்கத்திலிருந்து இலட்சியத்திலிருந்து நம்மை திருப்பி விடக்கூடாது.

அது நம்முடைய குடும்ப வாழ்க்கையாக இருந்தாலும் சரி, அது நம்முடைய பொருளாதார வியாபார, தொழில் துறை வாழ்க்கையாக இருந்தாலும் சரி, அல்லது இவ்வுலகத்தின் எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும், அது நம்மை நம்முடைய குறிக்கோளில் இருந்து நம்முடைய இலட்சியத்திலிருந்து திசை திருப்பி விடக்கூடாது.

நம்முடைய ஒவ்வொரு நாளும் நமக்கு அல்லாஹ்வுடன் எந்தளவு நெருக்கம் ஏற்பட்டுள்ளது? நமது அமல்கள் எந்தளவு அதிகம் கூடியது? எந்தளவு பாவத்தை விட்டு விலகினோம்?பாவத்திலிருந்து தூரமானோம்?

எந்தளவு நம்முடைய பாவங்களுக்காக தவ்பா கேட்டோம்? என்ற ஒரு இலட்சியத்தின் அடிப்படையில் சொர்க்கத்தின் உயர்ந்த பதவிகளை நோக்கி நம்முடைய வேகம் நம்முடைய உந்துதல் இருக்க வேண்டும்.

நமக்கு அல்லாஹு தஆலா இந்த உலகத்தினுடைய வாழ்க்கையை தந்ததே அதற்காக வேண்டிதான்,நாமெல்லாம் அல்லாஹ்விடத்தில் உயர்ந்த பதவி உடையவர்களாக அல்லாஹ்வின் நெருக்கம் பெற்றவர்களாக சொர்க்கத்தில் செல்லவேண்டும் என்பதற்காக தான் அல்லாஹ் படைத்திருக்கிறானே தவிர, தண்டிப்பதற்க்கோ, நம்மை நஷ்டவாளிகளாக ஆக்குவதற்கோ,நம்மை வேதனை செய்வதற்கோ,அல்லாஹு தஆலா படைக்கவில்லை.

ஆகவே, அது எப்போது சாத்தியம் என்றால், நமக்கு கொடுக்கப்பட்ட இந்த வாழ்க்கையை நமக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் சரியான முறையில் செலவு செய்வதை கொண்டு மட்டும்தான் அது சாத்தியம் ஆகும்.

நமக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு நேரமும் அது எப்படி செலவழிக்கப்படுகிறது?எங்கே செலவழிக்கப்படுகிறது? என்பதைக் கொண்டுதான் அது சாத்தியம் ஆகும்.

நாம் சொர்க்கத்திற்குரியவர்களா, சொர்க்கத்தில் உயர்ந்த தகுதிகளுக்கு அருகதை உள்ளவர்களா?என்பதை அல்லாஹ் முடிவு செய்கின்றான்.

குறிப்பாக,இன்று நமது வாலிப சமுதாயம், நம்முடைய வளரும் பிள்ளைகள், நம்முடைய மாணவ-மாணவிகள், நம் குடும்பத்தில் உள்ள வருங்கால தலைவர்கள், வருங்காலத்தின் பொறுப்பாளர்களாக மாறக்கூடிய நம்முடைய எதிர்கால தலைமுறை, அவர்களுடைய வாழ்க்கை குறித்து நாமெல்லாம் மிகப் பெரிய அக்கறை கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

இந்த விஷயம் அவர்களுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்கும் சொல்லப்பட வேண்டிய விஷயம், நேரத்தை அடிப்படையாக வைத்து காலத்தை அடிப்படையாக வைத்து அதை எங்கே எப்படி செலவு செய்யவேண்டும்,எங்கே எப்படி செலவு செய்தால் அது நமக்கு நன்மையாக அமையும், அது சொர்க்கத்தின் உயர்ந்த பதவிகள் அமையும் என்ற அடிப்படையிலும், அதுபோன்று எங்கே செலவு செய்தால் (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்) அது ஒரு மனிதனை நரகப் படுகுழியில் தள்ளிவிடும், அல்லாஹ்வின் கோபத்திற்கு உரியவனாக ஆக்கிவிடும் என்பதை நாம் தெரிந்து கொள்ளும் போது நான் வாழ்க்கை எப்படி கழிக்க வேண்டும் நம்முடைய இந்த வளரும் தலைமுறையினரை எப்படி பாதுகாக்க வேண்டும்,

அவர்களுடைய ஒவ்வொரு நேரமும் அவர்களை உருவாக்குவதற்காக,அவர்களை இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் புலம்போட்டு எடுப்பதற்காகநாம் தயாராக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இன்று பெரும்பாலோர், நம்முடைய பிள்ளைகள் படிக்ககூடிய சூழ்நிலைகள், அவர்கள் வளரக்கூடிய சூழ்நிலைகள்,அவர்கள் தங்களுடைய நேரத்தைக் கழிக்கக்கூடிய சூழ்நிலைகள்,இப்படி பல கோணங்களில் நம்முடைய மாணவ மாணவிகளின் சூழ்நிலைகளை பார்த்தீர்கள் என்றால்,

பெரும்பாலும் ஒரு சிலரைத் தவிர, அவர்கள் அல்லாஹ்வை மறக்க வைக்கக்கூடிய சூழ்நிலைகளில்,மறுமையை மறக்க வைக்கக்கூடிய சூழ்நிலைகளில், இந்த உலகின் ஆசாபாசங்கள் மீது மோகத்தை ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலைகளில், உலகப் பொருள்களின் மீது அவர்களுக்கு மோகத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளில் தான் இருக்கின்றனர்.

இஸ்லாமிய ஒழுக்கங்கள், இஸ்லாமிய கட்டுப்பாடுகள், மார்க்கத்தின் அடிப்படைகளை விட்டு அவர்களை தூரமாக்கக் கூடிய சூழ்நிலைகள் தான் உள்ளன.

இன்னும் பலருடைய சூழ்நிலைகள் எப்படி என்றால்,பாவங்கள் எல்லாம் அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டக் கூடிய சூழ்நிலை.

இன்று, அல்லாஹ் தடுத்த பெரும்பாவங்கள் எல்லாம் இதுதான் கலாச்சாரம்,இப்படி வாழ்ந்தால் தான் அறிவுள்ளவர்கள், முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் நமக்கு இவ்வுலகில் மதிப்பு இருக்கும் என்றெல்லாம்,மார்க்கத்தை மீறக்கூடிய அல்லாஹ்வின் சட்டங்களை குழிதோண்டிப் புதைக்கக் கூடிய, இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளை தகர்க்ககூடிய, கலாசாரங்களில் அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள்.

குறிப்பாக Co-Education என்ற ஆண்கள் பெண்கள் கலந்து படிக்கக்கூடிய பள்ளிக்கூடங்கள்,கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள் அங்கு நடக்கக்கூடிய அநியாயங்கள் ஒழுங்கீனங்களை அன்றாடம் பத்திரிக்கை வாயிலாகவும், பொதுமக்களின் வாயிலாகவும் பார்த்து கேட்டு தெரிந்து கொள்கின்றோம்.

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் நாளைய தலைமுறையினர்,வருங்காலத்தில் இந்த சமுதாயத்தின் காவலர்களாக, இஸ்லாமிய மார்க்கத்தின் பாதுகாவலர்களாக இருக்கக்கூடிய,இந்த தலைமுறையை, இஸ்லாமே எங்களுக்கு தேவையில்லை என்று வெளியேறக்கூடிய,அல்லாஹ்வுடைய தீனுடைய இந்த கட்டுப்பாடு எங்களுக்கு தேவை இல்லை என்று உதறித் தள்ளிவிட்டு செல்லக்கூடியசூழ்நிலையில்தான் அவர்கள் வளர்கிறார்கள், வளர்க்கப்படுகிறார்கள்.

அல்லாஹ்வுடைய பயம்,அல்லாஹ்வுடைய அச்சம்,மார்க்கத்தின் பற்று,தான் முஸ்லிம் என்ற உணர்வு,மறுமையை நோக்கி பயணம் செல்லக் கூடிய ஒரு பயணி, இந்த உலகம் எனக்கு ஒரு அற்பமானது தான்,மறுமை தான் எனக்கு நிரந்தரம் என்ற சிந்தனையோடு அவர்களால் வாழ முடிகிறதா? அல்லது அது எல்லாம் அவர்களுக்கு நினைவூட்டபபடுகிறதா? என்றால் அல்லாஹ் மிக அறிந்தவன்.

இன்றைய கல்விக்கூடங்களில், அவர்கள் கற்கக்கூடிய கல்வி நிலையங்களில் அது  சாத்தியமற்ற ஒன்றாகத்தான் ஆகிக்கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

அல்லாஹு தஆலா இந்த உலக வாழ்வில் நமக்கு கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷம் நேரம் என்பதை மறந்து விடக்கூடாது.

எனவே,நம்பிக்கை கொண்ட ஒரு முஃமின், மறுமைதான் நிரந்தர வாழ்க்கை என்பதை நம்பிக்கை கொண்ட ஒரு முஃமின் அவனுக்கு கொடுக்கப்பட்ட காலத்தைக் கொண்டு சொர்க்கத்தை அவன் தேடக்கூடியவனாக, அல்லாஹ்வின் பொருத்தத்தை தேடக்கூடியவனாக இருக்க வேண்டும்.

இன்று, அந்நியர்களின் வாயிலாக காலத்தைப் பற்றி அதன் பெருமையைப் பற்றிப் பேசக்கூடிய நமது சமுதாய மக்கள் இந்த காலத்தை பற்றி அல்லாஹு தஆலா அவனுடைய வேதத்தில் எப்படி கண்ணியப்படுத்தி, அதற்கு எப்படி முக்கியத்துவம் கொடுத்து சொல்லி இருக்கிறான் என்பதை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

அல்லாஹு தஆலா பல வசனங்களில் பல விதங்களில் இந்த காலத்தின் மீது சத்தியம் செய்கிறான்.

وَالْعَصْرِ

காலத்தின் மீது சத்தியமாக. (அல்குர்ஆன் 103 : 3)

وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ

அதிகாலையின் மீது சத்தியமாக, நாட்களின் மீது சத்தியமாக(அல்குர்ஆன் 89: 1,2)

وَالضُّحَى (1) وَاللَّيْلِ إِذَا سَجَى

பகலின் மீது சத்தியமாக,இரவின் மீது சத்தியமாக. (அல்குர்ஆன் 93:1,2)

وَالشَّمْسِ وَضُحَاهَا (1) وَالْقَمَرِ إِذَا تَلَاهَا (2) وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا (3) وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا

சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக, (அது அஸ்தமித்ததற்குப்) பின் உதயமாகும் சந்திரன் மீதும், (சூரியன்) பிரகாசிக்கும் பகலின் மீதும், (அதை) மறைத்துக்கொள்ளும் இரவின் மீதும். (அல்குர்ஆன் 91 : 1-4)

இப்படி பல இடங்களில் அல்லாஹ் சத்தியம் செய்கிறான்.

சில நேரங்களில் இரவு,சில நேரங்களில் பகல், சில நேரங்களில் முற்பகல்,சில நேரங்களில் அதிகாலை என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மாறி மாறி சத்தியம் செய்து கொண்டு வருகின்றான்.

அல்லாஹ் ஒரு விஷயத்தின் மீது சத்தியம் செய்கிறான் என்றால், அதன் முக்கியத்துவத்தை அருமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தான்.

அல்குர்ஆன் உடைய வசனங்களில் ஒட்டுமொத்த குர்ஆனின் தத்துவங்களை தன்னுள் கொண்ட ஒரு அத்தியாயம் என்று போற்றப்படுகின்ற சூரத்துல் அஸ்ரில், காலத்தின் மீது சத்தியமாக, மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

ஈமான் கொண்டு நல்அமல்களை கொண்டு சத்தியத்தை பிறருக்கு ஏவி, தங்களுக்குள் அதை கட்டுப்பட்டு, அதை பின்பற்றி நடக்க வேண்டும்,அதனால் ஏற்படும் சோதனைகளை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தங்களுக்குள் உபதேசம் செய்துகொண்டவர்களை தவிர.

வெற்றியாளர்கள் யார் என்பதைஅல்லாஹ் சொல்லும் போது, காலத்தின் மீது சத்தியம் செய்து சொல்கிறான்.

நமக்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள்இதனைத்தான் குறிப்பிட்டுள்ளார்கள்.இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

"نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالفَرَاغُ"

அல்லாஹ்வின் இரண்டு அருட்கொடைகள் இருக்கின்றன, அதிகமான மக்கள் அந்த இரண்டு அருட்கொடைகளை அலட்சியம் செய்து விடுகிறார்கள்.

ஒன்று, அல்லாஹ் ஒரு மனிதனுக்கு கொடுத்திருக்கக் கூடிய உடல் ஆரோக்கியம், இன்னொன்று, ஓய்வு நேரம்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6412.

இந்த இரண்டு அருட்கொடைகளை பயன்படுத்தாமல் மக்கள் வீணடித்து விடுகின்றார்கள்.

உடல் ஆரோக்கியமாக இருக்கும் போது என்னென்ன அமல்களை செய்து, அல்லாஹ்வின் பொருத்தத்தை நெருக்கத்தை மறுமையின் உயர் பதவிகளை தேடிக் கொள்ள வேண்டுமோ  அதைத் தேடிக் கொள்ளாமல்,உடல் ஆரோக்கியத்தை வீண்விளையாட்டுக்களிலும்,வீனான பொழுது போக்குகளிலும் அல்லது சோம்பேறித்தனமாக இருந்துவிட்டு,பிறகு அவர்கள் உடல் முடியாமல் ஆனபோது கைசேதப்பட்டு என்ன பலன் கிடைக்கும்?

மறுமையின் அந்த நிஃமத்துக்களை வாலிப காலத்தில் தேடிக்கொள்ளக்கூடிய அளவிற்கு, வயோதிகத்திலோ பலவீனத்திலோ நோயிலோ தேடிக் கொள்ள முடியுமா?யோசித்துப் பாருங்கள்.

அதுபோன்றுதான் ஓய்வு நேரம் என்பதும். சிலர் சொல்வார்கள்; எனக்கு வேலை இல்லை என்று வெட்டியாக உட்கார்ந்து பொழுது கழிப்பார்கள்,பார்க்க கூடாததை பார்த்து பொழுதை கழிப்பார்கள்.

கேட்க கூடாததை கேட்டு பொழுதைக் கழிப்பார்கள், இல்லையென்றால் இங்கும் அங்கும் என்று சுற்றித் திரிந்து பொழுதை கழிப்பார்கள்.

உங்களுக்கு அல்லாஹ், ஒரு தொழிலை அல்லது வேலையை கொடுப்பதில் தாமதம் காட்டுகின்றனா? அந்த நேரத்தை ஏன் நீங்கள் அல்லாஹ்வை வணங்குவதில் செலவழிக்கக் கூடாது? உங்களது கல்வியை வளர்த்துக் கொள்வதில் நீங்கள் ஏன் செலவழிக்கக் கூடாது?  மறுமையின் அமல்களை தேடிக் கொள்வதில் நீங்கள் ஏன் செலவழிக்கக் கூடாது?

உங்களது நல்ல திறமைகளை வளர்த்துக் கொள்வதில் ஏன் செலவழிக்கக் கூடாது? அல்லது சமுதாயத்திற்கு உதவக்கூடிய எத்தனையோ நூற்றுக்கணக்கான பணிகள் இருக்கின்றன, சமூக அறப்பணிகள் இருக்கின்றன,அவற்றில் ஏன் அந்த நேரங்களை கழிக்கக் கூடாது?!

இப்படி தனக்கு வேலை இல்லை என்று கூறியும், படிப்பு முடிந்து விட்டது, இனி அடுத்து வேலை தேடப் போகிறேன்,வேலை வந்தால் வேலைக்கு போவேன் என்று சொல்லிக்கொண்டு எத்தனை வாலிபர்கள் ஊதாரித்தனமாக வீட்டில் தூங்கிக்கொண்டு, அல்லது வெளியில் சுற்றிக் கொண்டு, அல்லது நண்பர்களுடன் பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களெல்லாம் உணரவேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் இவற்றைக் குறித்து தான் ஹதீஸில் சொன்னார்கள்.

ஓய்வை அல்லாஹ்வுடைய அருட்கொடை என்று சொன்னார்கள். உடல் ஆரோக்கியத்தையும் அவ்வாறே சொன்னார்கள்.

உடல் ஆரோக்கியத்தின் மதிப்பு தெரிய வேண்டும் என்றால்,மருத்துவமனைகளில் நோயுடன் படுத்துக் கொண்டிருக்கக்கூடிய எப்பொழுது இந்த இடத்தை விட்டு வெளியேறுவோம் என்று நாட்களை நிமிடங்களை எண்ணிக் கொண்டிருக்ககூடிய அந்த நோயாளிகளிடத்தில் கேட்டுப் பார்த்தால் தெரியும்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள், இன்னும் அழுத்தமாக ஆழமாக சொல்கிறார்கள்:

اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هِرَمِكَ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ، وَغِنَاءَكَ قَبْلَ فَقْرِكَ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ، وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ

ஐந்து விஷயங்களை ஐந்து விஷயங்களுக்கு முன்னால் நீங்கள் பெரும் செல்வப் பொருளாக மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்னால் உங்களுடைய வாழ்க்கையை, உங்களுக்கு வயோதிகம் வருவதற்கு முன்னால் உங்களுடைய வாலிபத்தை, உங்களுக்கு நோய் வருவதற்கு முன்னால் உங்கள் உடல் ஆரோக்கியத்தை, உங்களுக்கு வேலை, அலுவல்களில், ஈடுபாடு, நேரத்தின் நெருக்கடிகள் வருவதற்கு முன்னால் ஓய்வு நேரங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வறுமை வருவதற்கு முன்னால் செல்வ நிலையை நீங்கள் மதித்துக் கொள்ளுங்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : ஹாகிம், எண் : 7846.

இந்த உபதேசம் என்பது வாலிபர்க்கோ, மாணவர்களுக்கோ மட்டுமல்ல, நம் எல்லோருக்கும் சொல்லப்பட வேண்டிய உபதேசம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக, இன்று நம்முடைய மாணவ சமுதாயம், அவர்களுடைய இந்த ஒரு கல்வி ஆண்டை முடித்து, அடுத்த கல்வி ஆண்டை அவர்கள் எதிர்நோக்கி இருக்கக்கூடிய இந்த நேரத்தில்,அவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஓய்வு நேரங்களை வீணிலும் விளையாட்டிலும் பாவங்களிலும் வீணடிக்கப்படுவதை பார்க்கும் பொழுது இந்த நேரத்தைப் பற்றிய அக்கறை அந்த மாணவர்களிடையே இல்லாதது அவர்களுடைய பெற்றோர்களிடையே இல்லாததை நாம் பார்க்கிறோம்.

ஒரு மாணவனுடைய திறமை,அவனுடைய அறிவு,அவனுடைய அத்தனை வளர்ச்சிக்குப் பின்னாலும் அவனுடைய நேரத்தை அவன் எப்படி பாதுகாக்கிறான்? எப்படி பேணுகிறான்? என்பதற்கு பின்னால்தான் அவருடைய வெற்றி இருக்கிறது.

நம்முடைய மார்க்க அறிஞர்கள், நம்முடைய பிள்ளைகள் இந்த ஓய்வு நேரங்களை, அவர்களுடைய இந்த விடுமுறைகளை எப்படி கழித்தால் அது அவர்களுக்கு நன்மை உள்ளதாக இருக்கும்,அவர்களுடைய சமுதாயத்திற்கும் நன்மை உள்ளதாக இருக்கும்,அடுத்து நம் இஸ்லாமிய மார்க்கத்திற்கு பாதுகாப்பாகவும், மறுமையில் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்று அழகான பல அறிவுரைகளை சொல்லியிருக்கிறார்கள்.

அதில் சிலவற்றை பார்ப்போம். குறிப்பாக இன்று நம்முடைய சூழ்நிலைகள் எல்லாம், முன்பு கூறியதைப் போன்று பெரும்பாலும் இந்தியாவுடைய பொருளாதார கல்வியை அடிப்படையாக வைத்தே பாடத்திட்டங்கள் அமைந்திருக்கின்றன.

அல்லாஹ்வுடைய வேதக் கல்வியோ அவனுடைய வேதத்தை மனனம் செய்யும் ஏற்பாடோ அவர்களுக்கு கிடைக்காமல் இருப்பதைப பார்க்கிறோம்.

ஆகவே, நம்முடைய பிள்ளைகளுடைய வரக்கூடிய இந்த விடுமுறை நாட்களை, நம்மில் ஒவ்வொருவரும் நம்முடைய பிள்ளைகளுக்கு முடிந்தால்,தானே ஆசிரியராக இருந்து,தானே கண்காணிக்க கூடியவராக இருந்து இதை செய்ய வேண்டும் .

இல்லையென்றால் நமக்கு அருகில் இருக்கும்மதரசா அல்லது மஸ்ஜித்களில் பிள்ளைகளுக்கான கோடை வகுப்புகள் நடத்தப் பட்டால்,அதில் அந்த பிள்ளைகளை அனுப்பி அதன் மூலமாக அவர்களை பயன்பெற செய்வது.

குறிப்பாக அல்லாஹ்வுடைய வேதத்தை குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொண்டு, அதை என்னுடைய பிள்ளைகள் இந்த விடுமுறையில் மனப்பாடம் செய்யவேண்டும்.

அதன் கருத்துக்களை அதன் விளக்கங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக முடிவு செய்ய வேண்டும்.

அதன் அடிப்படையில், ஒவ்வொரு பிள்ளைகளுடைய வயதுக்கேற்ப, அவர்களுடைய அறிவுக்கு ஏற்ப,மனண சக்திக்கேற்ப,ஒரு அளவை நிர்ணயித்து அது அந்தப் பிள்ளைக்கு அழகிய முறையில் போதிக்கப்பட்டு,அதை மனப்பாடம் செய்கிறதா?செய்து அதை ஒப்பிக்கிறதா? பிறகு அதை தொழுகையில் ஓதி அவர்களுக்கு நாம் பயிற்சி கொடுக்க வேண்டும்.

ஏனென்றால், அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள்,இந்த உம்மத்தின் வெற்றியாக, உயர்வாக அல்குர்ஆனை சொல்லியிருக்கிறார்கள்.

இன்று நம்மில் ஒவ்வொருவரும், தன்னை எடுத்துப் பார்த்தால் தெரியும், அல்குர்ஆனுடைய அத்தியாயங்களில், எத்தனை அத்தியாயங்கள் இன்று நம் உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டதாக இருக்கின்றனஎன்பதையோசித்துப் பாருங்கள்!

இன்று நமக்கெல்லாம் அல்குர்ஆன் தொகுக்கப்பட்ட ஏடுகளில் இருக்கின்ற காரணத்தால் அதனுடைய மதிப்பை அறியாதவர்களாக இருக்கின்றோம்.

கண்ணியத்திற்குரியவர்களே!எந்தளவு அல்குர்ஆனை மனப்பாடம் செய்து அதை வாழ்நாளில் ஓதுகின்றீர்களோஅந்த அளவுக்குத்தான்உங்களுடைய வீரம், உங்களுடைய வலிமை, உங்களுடைய ஆற்றல், ஈமானிய ஆற்றல் ஓங்கும்.

அல்லாஹ்வுடைய தூதர் நபி அவர்கள் எந்த ஒரு சமுதாயத்தை உருவாக்கினார்களோ, அந்த சமுதாயம் இரவு பகலாக இந்த வேதத்தை ஓதக்கூடிய சமுதாயமாக இருந்தது.

இறைவேதத்தை மனப்பாடம் செய்யக் கூடிய சமுதாயமாக இருந்தது, இதனுடைய கல்வியை கற்கக்கூடிய பரப்பக்கூடிய சமுதாயமாக இருந்தது.

அவர்களுக்கு எத்தனை வேலைகள் இருந்தாலும் சரி, எவ்வளவு நாடுகளை கட்டி ஆண்ட மன்னர்களாக இருந்தாலும் சரி, அவர்களுடைய வாழ்க்கையில் முதலாவதாக இடம்பிடித்தது அல்குர்ஆன்தான், அதனுடைய கல்விதான்.

இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் சொன்னார்கள்:

«خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ القُرْآنَ وَعَلَّمَهُ»

உங்களில் சிறந்தவர்,யார் குர்ஆனை கற்று பிறருக்கும் கற்பிக்கின்றாறோ அவர் தான்.

அறிவிப்பாளர் : உஸ்மான் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 5027.

எந்த உள்ளத்தில் அல்குர்ஆனுடைய வசனங்கள் இல்லையோஅதை பாழடைந்த வீட்டிற்கு உதாரணமாக அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொல்கிறார்கள்.

அதிகமாக குர்ஆன் ஓதுவது, ஓதப்பட்ட வசனங்கள் உடைய அர்த்தங்களை தெரிந்து அதன்படி செயல்படுவது, ஈமானுடைய அடையாளமாக அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் சொன்னார்கள்.

அல்லாஹ் தன்னுடைய நபிக்கு கட்டளையிடுகின்றான்;

وَاتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَ

நபியே!உங்களுக்கு இறக்கப்பட்ட இந்த வேதத்தின் வசனங்களை நீங்கள் ஓதிக் கொண்டே இருங்கள். (அல்குர்ஆன் 18 : 27)

அல்லாஹ்வுடைய தூதர் தொழுகையில் ஓதினார்கள்,தொழுகைக்கு வெளியே ஓதினார்கள். நபியுடைய தொழுகை எல்லாம் நீண்ட நீண்ட தொழுகைகளாக இருந்தன.

அதிகாலை தொழுகையிலிருந்து,மதிய தொழுகையிலிருந்து,இரவு தொழுகையிலிருந்து,தனிப்பட்ட அவர்களுடைய தஹஜ்ஜத் தொழுகையிலிருந்து, குர்ஆனை ஓதுவதில்அவ்வளவு இன்பம் கண்டு கொண்டு இருந்தார்கள்.அதுபோன்றுதான் சஹாபாக்கள்.

இன்று,முஸ்லிம்களுடைய வாழ்க்கையிலிருந்து குர்ஆன் என்பது தூரமாக்கப்பட்ட ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது.

ஆகவே, வரக்கூடிய இந்த விடுமுறையை தமது பிள்ளைகளை குர்ஆனோடு இணைப்பதற்குரிய வழியாக நேரமாக காலமாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

காலையில் சுபுஹு தொழுகைக்கு தனது பிள்ளைகளை கண்டிப்பாக எழுப்பிவிட்டு, அவர்கள் தொழுது முடித்த பிறகு குடும்பமாக உட்கார்ந்து அதிகாலையில் சூரியன் உதித்து அதனுடைய சூடு வருகின்ற வரை,தாய் தந்தை பிள்ளைகள் உள்பட குர்ஆனை ஓதி மனனம் செய்யக் கூடிய சூழ்நிலையை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அதற்கு முக்கியமாக, இரவு தூங்குவதை கண்டிப்பாக விரைவுப்படுத்த வேண்டும்.

இன்று என்ன நிலைமை என்றால், இரவில் மிக தாமதமாக தூங்குகின்ற காரணத்தால்,சுபுஹு தொழுகைக்கு பிறகு உடனடியாக உறங்க செல்லக்கூடிய மனநிலை தான் பலருக்கு ஏற்படுகின்றது.

தொழக்கூடிய வீடுகளாக இருந்தால் பிள்ளைகள் கண் மூடிக் கொண்டே பாத்ரூமுக்குச் சென்று,ஒழு செய்துவிட்டு, அப்படியே தொழுதுவிட்டு, அப்படியே தூங்குகின்ற நிலையை தான் பார்க்கிறோம்.

விடுமுறை நாட்கள் தானே, இரவு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று விடாமல் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ,இஷா தொழுகைக்கு முன்பே அவர்களுக்கு உணவு கொடுத்து இஷா தொழுகைக்கு பின் அரை மணி நேரம் ஒரு மணி நேரத்திற்குள்ளாக அவர்களை தூங்க வைத்து, அவர்களுக்கு தஹஜ்ஜத்துடைய பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

தஹஜ்ஜத் உடைய தொழுகையிலிருந்தே அவர்களுக்கு குர்ஆன் ஓதக் கூடிய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்து, அல்லாஹ்விடத்தில் துஆ செய்யக்கூடிய கெஞ்சக்கூடிய ஓர் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

பள்ளிக் காலங்களில் இது அவர்களுக்கு சாத்தியமில்லை. எனவே இப்போது அல்லாஹ்வின் பக்கம் அவர்களை நெருக்கமாக்கக் கூடிய மறுமையின் சிந்தனைகளை அவர்களுக்கு தூண்டக்கூடியநல்ல அமல்களில் நாம் ஈடுபடுத்த வேண்டும்.

அல்லாஹ் தன் நபிக்கு சொல்கிறான்:

فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ (7) وَإِلَى رَبِّكَ فَارْغَبْ

ஆகவே, (மார்க்கப் பிரச்சாரத்திலிருந்து) நீர் விடுபட்டதும், (இறைவனை வணங்குவதற்கு) சிரத்தை எடுப்பீராக. மேலும், (துன்பத்திலும் இன்பத்திலும்) உமது இறைவனையே நீர் நோக்கி நிற்பீராக!(அல்குர்ஆன் 94 : 7,8)

ஒரு விளக்கத்தின்படி, நபியே! நீங்கள் உங்கள் வேலைகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டால்என்று விளக்கம் சொல்லப்படுகிறது.

நீங்கள் அல்லாஹ்வை வணங்குவதில் களைப்படையாதீர்கள்,அல்லாஹ்வை வணங்குவதற்கு சிரமம் எடுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :

إِنَّ لَكَ فِي النَّهَارِ سَبْحًا طَوِيلًا

நிச்சயமாக உமக்குப் பகலில் நீண்ட வேலைகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 73 : 7)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :

وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ

(தஹஜ்ஜுது தொழுகை உம் மீது கடமையாக இல்லாவிடினும்) நீர், நஃபிலாக இரவில் எழுந்து ஒரு (சிறிது) பாகத்தில் தொழுது வருவீராக! (அல்குர்ஆன் 17 : 79)

நமது பிள்ளைகள்,குறிப்பாக பத்து வயதைத் தாண்டிய பிள்ளைகள் அவர்களுக்கு சிறு வயதிலிருந்தே தஹஜ்ஜத் உடைய பழக்கத்தை பெற்றோர்கள் கொடுப்பதற்கு மிகப் பொருத்தமான காலம் இது.

அல்லாஹ், குறிப்பாக அந்த சஹர் நேரத்தைப் பற்றி கூறுகிறான் :

وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ

ஸஹர் நேரங்களில் இஸ்திஃபார் செய்பவர்களை அல்லாஹ் போற்றி புகழ்கிறான். (அல்குர்ஆன் 3 : 17)

அந்த நேரங்களில் அல்லாஹ்விடத்தில் துஆ செய்பவர்களுக்கு அல்லாஹ் அவர்கள் கேட்டதை தருகிறான்.

" يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ فَيَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ، مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ "

 

அல்லாஹ் இரவினுடைய மூன்று பகுதிகளில் மூன்றாவது இறுதிப்பகுதி மீதமாக இருக்கும் போது, முதல் வானத்திற்கு வருகிறான்.

பாவ மன்னிப்பு கேட்பவர் இருக்கிறாரா? அவரை நாம் மன்னிப்பேன். என்னிடத்தில் தேவையை கேட்பவர் இருக்கிறாரா?அவருக்கு நான் கொடுப்பேன். என்னிடத்தில் ஏதாவது நாட்டத்தை கேட்பவர் இருக்கிறாரா?அவருக்கு நான் பதிலளிப்பேன்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 7494.

குறிப்பாக நம்முடைய கல்லூரிகளில் படிக்க கூடிய திருமணத்தின் வயதை அடைந்த வாலிப பிள்ளைகள்,அவர்களுடைய சூழ்நிலைகள் எல்லாம் நெருப்புக்கு மத்தியில் நடப்பதைப் போன்று, கத்தி மேல் நடப்பது போன்ற பயங்கரமான காலகட்டம்.

எந்த பழக்கத்தை நமக்குப் பின்னால் கற்றார்கள்,எந்த நண்பர்களோடு சுற்றி திரிந்தார்கள்,அவர்களுடைய ஈமான் பாதுகாப்பாக இருந்ததா? அவர்களது கற்பு பாதுகாப்பாக இருந்ததா? என்ற ஒரு அச்ச நிலையில் இன்று, பெற்றோர்கள் வளர்க்கக்கூடிய இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு இந்த தஹஜ்ஜதுடைய பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்து,துஆ இஸ்திஃபார்,

தவ்பாவுடைய பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தால் கண்டிப்பாக அவர்கள் தக்வா உள்ளவர்களாக ஆவார்கள்.

அந்த தக்வாவானது, அவர்கள் நம் பார்வையை விட்டு மறைந்தாலும்,தூரமானாலும்,அல்லாஹ் என்னை பார்க்கிறான், என்னை கண்காணிக்கிறான்என்று இறையச்சம் உள்ள சூழ்நிலையில் கண்டிப்பாக தங்களை ஆக்கிக்கொள்வார்கள்.

அதற்கு ஒரு பெரிய நேரம் இந்த விடுமுறை காலம். அது போன்று குர்ஆனை மனனம் செய்வோம். தஹஜ்ஜத் தொழுகைக்கு பிறகு, குர்ஆன் ஓதுவது குர்ஆனை மனனம் செய்வது.

இந்த இரண்டு மாதங்களிலும் அல்லது ஒன்றறை மாதங்களிலும் குறைந்தது யார் முயற்சி செய்தாலும் சரி,ஒரு நாளைக்கு வெறும் அரை மணி நேரம் செலவு செய்தாலும் கூட அல் குர்ஆனில் இருந்து குறைந்தது அரை பாகம் மனனம் செய்யக்கூடிய,ஏறக்குறைய இருநூறு அல்லது நூற்றி ஐம்பது வசனங்களை மனனம் செய்வதற்கு உண்டான பெரிய வாய்ப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட வாய்ப்பை நம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது.

ஒன்று, ஆசிரியர்கள் இருந்தால் அந்த ஆசிரியர் மூலமாக, இல்லை என்றால் இன்று நல்ல நல்ல காரிகளுடைய சிடி கேசட் எல்லாம் கிடைக்கின்றன. அதை போட்டுக் காட்டி பயிற்சி கொடுக்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள், இந்த குர்ஆனுக்கு கொடுத்த முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

«مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لَا أَقُولُ الم حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ»

குர்ஆனை யார் ஒதுவரோ அவருக்கு ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் கிடைக்கும். நான் المஎன்பது ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக, அலிஃப் என்பது ஒரு எழுத்து, அதற்கு பத்து நன்மை .லாம் என்பது ஒரு எழுத்து, அதற்கு பத்து நன்மை, மீம் என்பது ஒரு எழுத்து, அதற்கு பத்து நன்மை என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2910, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

ஆகவே, நம் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை, மாணவ மாணவிகளை, இந்த வரக் கூடிய விடுமுறை நாட்களில் இந்த குர்ஆனோடு நெருக்கமாக்குவதற்கு, அல்லாஹ்வுடைய இபாதத்தோடு நெருக்கமாக்குவதற்குரிய விடுமுறை நாட்களாக மாற்ற வேண்டும்.

ஹதீஸ்களை படிப்பது மற்றும் மனனம் செய்வது :

அதுபோன்றுதான் அல்லாஹ்வுடைய தூதர் அவர்களுடைய நபிமொழிகள், இந்த ஹதீஸை நாம் எதற்கு சொல்லப்பட்டன, இன்று நபிமொழி தமது உள்ளத்தில் பாதுகாக்கப் படவில்லை என்றால், அவற்றைப் படித்து நினைவில் கொண்டு வரவில்லை என்றால்,வாழ்க்கையில் எப்படி வரும்? யோசித்துப் பாருங்கள்.

முஹம்மத் நபி அவர்களை, நமது நபி என்று சொல்கின்றோம், நமக்கு அனுப்பப்பட்ட ரஹ்மத் என்று சொல்கின்றோம், நம்முடைய ஹிதாயத்துக்கு அனுப்பப்பட்ட தூதர் என்று சொல்கின்றோம்.

அவர்களுடைய பொன்மொழிகளிலிருந்து, அவர்களுடைய அந்த வழிகாட்டலிலிருந்து, எத்தனை உங்களுக்கு தெரியும் என்று கேட்டால், நம்மில் யாருக்கு எத்தனை சுட்டிக்காட்ட முடியும்? சொல்லுங்கள்.

நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் சரி, ஒரு ஐம்பது ஹதீஸ்களின் தொகுப்பை இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ்அவர்கள் நாற்பது நபிமொழிகள் என்று தொகுத்திருக்கிறார்கள்.

இப்படி பல அறிஞர்கள் 40ஹதிஸ்களாக தொகுத்து எத்தனையோ தொகுப்புகளை வைத்திருக்கிறார்கள், அப்படி இல்லையென்றால் ரியாளுஸ் ஸாலிஹீன் என்றுஹதீஸ் நூலிருந்து உங்களுக்கு எவ்வளவு முடியுமோ, நீங்களாக அதை பிரித்து வைத்துக் கொண்டு,முடிந்தால் அரபியோடு,முடியவில்லையென்றால் அதனுடைய தமிழையாவது,அதை அறிவிப்பவர் யார்?அந்த நூல் எங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது?

இப்படி நமது பிள்ளைகளுக்கு மனப்பாடம் செய்து கொடுத்தால்,நமது பிள்ளைகளுக்கு மார்க்கத்தின் உடைய மதிப்பு தெரியும்.

எதை படிக்கிறார்களோ,எதை மனப்பாடம் செய்கிறார்களோ,எதற்கு நேரம் தருகிறார்களோ,அதனுடைய மதிப்பு தான் உள்ளத்தில் வரும்.

இன்று, ஹதீஸ்கள் என்றால் அது ஏதோ புத்தகத்தில் இருக்கும், எப்போதாவது தேவைப்பட்டால், ரமலான் மாதம் வந்தால் சும்மா திறந்து படித்துப் பார்க்க வேண்டியதுதான். அதோடு என்னுடைய தொடர்பு முடிந்து விட்டது என்றுதான் பெரும்பாலானவர்கள் எண்ணுகிறார்கள்.

குர்ஆனை ஓதக்கூடிய மக்கள் கூட ஓரளவு இருக்கிறார்கள்,ரமலான் மாதங்களில் நன்மைக்காக குர்ஆனை திறந்து படிக்கக் கூடிய ஓதக் கூடிய மக்கள் இருக்கிறார்கள்.

ஆனால், ஹதீஸை திறந்து,இது எனக்காக அனுப்பப்பட்ட எனது நபி அல்லாஹ்வின் புறத்திலிருந்து, குர்ஆனை விளங்குவதற்கு எனக்கு கொடுத்த விளக்கம் இது என்று அதை திறந்து அந்த ஹதீஸ்களை திரும்பத் திரும்பப் படித்து மனனம் செய்யக் கூடிய மக்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கிறார்கள்.?!

எவ்வளவு பெரிய அலட்சியம் பாருங்கள்.

இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ்அவர்கள் சொன்ன ஒரு சம்பவத்தை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ்பதிவு செய்கிறார்கள்.

அவர்களுடைய மாணவர்கள் அவர்களிடத்தில் கல்வி படித்த போது, அவர்கள் ஒரு ஹதீஸை சொல்லிக் காட்டுகின்றார்கள், சொல்லிக் காட்டி விட்டு இமாம் ஷாஃபி சொல்கிறார்கள்;

(ஹதீஸ் கலையுடைய மூத்த அறிஞர்களில் ஒருவர்)

இப்படி ஒரு ஹதீஸை நாங்கள் கேட்பதற்கு மக்காவிலிருந்து மதினா சென்றோம், மதீனாவிலிருந்து ஈராக் சென்றோம், ஈராக்கிலிருந்து சிரியா வந்தோம்.

ஆனால், இன்று உங்களுக்ககோ, நாங்கள் இப்படி பல நூறு மைல்கள் அலைந்து ஒரு ஒரு ஹதீஸ்களாக நாங்கள் சேகரித்த ஹதீஸ்கள், இன்று ஒரே அமர்விலேயே உங்களுக்கு சொல்லிக் காட்டப்படுகிறது என்பதாக கூறினார்கள்.

இன்று,நமக்கு அல்லாஹ் இன்னும் எளிதாக ஆக்கி விட்டான். அந்த நபிமொழிகள் ஒரே புத்தகத்தில் தொகுக்கப்பட்டு,ஸஹீஹான ஹதீஸ்கள் மட்டும் தனியாக தொகுக்கப்பட்டு,அது அரபு மொழியில் இருப்பதோடு,நமக்கு புரியக்கூடிய நமது மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு,படிக்க தெரியவில்லை என்றால் அதனுடைய ஒலியையாவது நீங்கள் கேட்கலாம் என்ற அடிப்படையில்,அதனுடைய ஒலியும் பதிவு செய்யப்பட்டு, இவ்வளவு இலகுவாக கொடுக்கப்பட்ட பிறகும், ஹதீஸ்களின் பக்கம் ஒருவருக்கும் நாட்டம் வரவில்லை என்றால், அவன் அல்லாஹ்வின் தூதரை விரும்புகிறான் என்று சொல்வதில்,அல்லாஹ்வின் தூதரை நேசிக்கிறான் என்று சொல்வதில் அவன் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஒரு நாளைக்கு சின்ன ஹதீஸ்கள், ஒரு ஹதீஸை எத்தனை ஹதீஸ்களாக வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் ,ஒரு பெரிய ஹதீஸ் என்றால் மூன்று வரி,ஒரு கருத்து முடியும்போது அதை மனப்பாடம் செய்யலாம்.

இப்படி ஒரு நாளைக்கு ஒரு ஹதீஸிலிருந்து மூன்று வரிகளை மனப்பாடம் செய்தால் கூட, ஒழுக்கம் சம்பந்தமாக, குடும்பவியல் சம்பந்தமாக, பொருளாதாரம் சம்பந்தமாக, இன்னும் சொர்க்கம், நரகம்,மறுமை சம்பந்தமாக படிக்கும் போது, ஒன்று நமது மார்க்கம் எவ்வளவு விரிவான, விசாலமான மார்க்கம் என்பதை தெரிந்துகொள்வது.

மற்றொன்று, மறுமை சம்பந்தப்பட்ட ஹதீஸ்களை படிக்கும்போது நம் பிள்ளைகளின் உள்ளத்தில் அந்த மறுமையின் பயம், மறுமையின் மீது உள்ள தேட்டம், மறுமையின் மீது உறுதியான நம்பிக்கை வரும்.

ஆகவே, குறிப்பாக குர்ஆனை மனனம் செய்வதற்குண்டான நேரத்தை ஒதுக்குவது, நம்முடைய பிள்ளைகளுக்கு ஹதீஸ்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

விடுமுறை காலங்களில் உறவுகளை சந்திப்பது :

அது போன்றுதான் இந்த விடுமுறைகளை நமது ரத்த உறவுகளை சந்திப்பதற்காக, அவர்களோடு சென்று பழகுவதற்காக, அவர்களின் ஏழைகளை ஆதரிப்பதற்காக நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் ரத்த உறவுகளின் விஷயத்தில் அவ்வளவு அழுத்தம் செய்தார்கள்.

யார் உறவுகளை சேர்த்தாரோஅல்லாஹ் அவர்களை சேர்த்துக் கொள்கிறான், யார் உறவுகளைத் துண்டித்தாரோ அல்லாஹ் அவர்களை துண்டித்துவிடுகிறான்.(1)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 4830

நம்முடைய பள்ளிக்கூட நேரங்களில் பெற்றோர்களுக்கும் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் உறவுகளை சந்திக்க முடியாத நிர்ப்பந்தங்கள் இருந்திருக்கலாம்,

நம்முடைய பிள்ளைகளுடைய விடுமுறை நாட்களில் முதலாவதாக நம்முடைய ரத்த உறவுகள்அடுத்தடுத்த உறவுகள் என்று நம்முடைய எல்லா உறவுகளையும் சந்தித்து, நம்முடைய உறவுகளை புதுப்பித்துக் கொள்வதற்கான பெரிய வாய்ப்பு.

அந்த சந்திப்பின்போது நீங்கள் இரண்டு விஷயங்களை கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும்.

ஒன்று, உங்கள் பிள்ளைகள் எங்கே செல்கிறார்கள்? எங்கே தங்குகிறார்கள்? அவர்களுடைய ஒழுக்கத்தை இறையச்சத்தை பாதிக்கக்கூடிய எந்த ஒன்றும் அந்த இடங்களில் இருக்கக் கூடாது.

நீங்கள் ரத்த உறவு என்று அனுப்புகிறீர்கள். ஆனால், அங்கே அந்தப் பிள்ளைகள் பார்க்கக்கூடாத,பிள்ளைகளுக்கு தெரிந்து கொள்ளக் கூடாத,பல தவறான விஷயங்கள் காண்பிக்கப்படுகிறது.

சினிமாக்கள் மூலமாக, டிவி சீரியல் மூலமாக, இருக்குமேயானால் கண்டிப்பாக அப்படிப்பட்ட இடங்களுக்கு நீங்கள் இரவு நேரங்களில் அனுப்பக்கூடாது,தங்க வைக்க கூடாது. அது கண்டிப்பாக அங்கே நிறுத்தப்பட வேண்டும்.

அது போன்று நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது நம்முடைய ரத்த உறவுகள் உடைய இந்த சந்திப்பில் இருக்க வேண்டும். இதில் நாம் அலட்சியம் செய்து விடுகிறோம்.

தொழுகை இல்லாதவர்களாக இருந்தால், தொழுகையின் முக்கியத்துவத்தை சொல்லி, அவர்களை ஃபர்ளான தொழுகைக்கு கட்டாயப்படுத்த வேண்டும், வலியுறுத்த வேண்டும்.

அங்கே ஹராமான ஏதாவது பழக்கவழக்கங்கள் இருக்குமேயானால், வயது வந்த பெண்கள் ஹிஜாப் உடையை பழக்கம் இல்லாமல் இருக்கிறார்கள், ஹிஜாப் இல்லாமல் வெளியே செல்லக்கூடிய பழக்கம் இருக்கிறது,அல்லது இசை இசைக்கிறார்கள், இப்படிப்பட்ட தடுக்கப்பட்ட பாவங்கள்நிகழுமேயானால் அதை அவர்களுக்கு உணர்த்தி,அது எவ்வளவு பெரிய தவறு என்பதை நாம் அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

அப்படியென்றால் இப்படிப்பட்ட சந்திப்புகளின் மூலமாக இரண்டு விதமான பெரும் நன்மைகளை நாம் அடைகின்றோம் .

ஒன்று, உறவுகளை சேர்த்த நன்மை, இரண்டாவது, அந்த உறவுகளுக்கு நன்மைகளை எடுத்துச் சொல்லி தீமைகளிலிருந்து தடுத்த ஒரு நன்மையை நாம் பெற்றுக் கொள்கிறோம்.

பிள்ளைகளை திறமையானவர்களாக ஆக்குதல் :

இதுபோன்று, அந்த பிள்ளைகளுடைய திறமைகளை வளர்ப்பதற்காக ஓய்வு நேரங்களில், பள்ளிகூடத்தில் படிக்க முடியாத மற்ற திறமைகளை வெளியில் சென்றுதான் தேடிக்கொள்ள முடியும். அப்படிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும் நாம் நமது பிள்ளைகளை ஆயத்தப்படுத்த வேண்டும்.

வெறும் ஏட்டுக் கல்வியோடு மட்டும் இல்லாமல் பழக்க வழக்கத்தில், வியாபாரம் சம்பந்தப்பட்ட, தொழில் சம்பந்தப்பட்ட அல்லது பொது அறிவு சம்பந்தப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து,நமது பிள்ளைகளை புத்தகங்கள் படிப்பதிலும் திறமையானவன், பொது வாழ்க்கையிலும் திறமையானவன் என்பதற்குண்டான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்.

இப்படி இல்லாமல் நம்முடைய நேரங்களை வீணாக சுற்றித் திரிவது,வேடிக்கைகளுக்கு செல்வது, இரவு நேரங்களில் அதிகமாக பேசி வீணடிப்பது, தொழுகையை பாழாக்குவது,அல்லது அங்கும் இங்குமாக சுற்றுலா செல்கிறோம் என்ற பெயரில் ஹராமான செயல்களுக்கு நாம் அவர்களை நிர்பந்தித்து விட்டால் அல்லது அவர்களுக்கு துணை போகிவிட்டால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கண்டிப்பாக நம்மை விசாரிப்பான்.

அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் :

«كُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالإِمَامُ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ فِي أَهْلِهِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالمَرْأَةُ فِي بَيْتِ زَوْجِهَا رَاعِيَةٌ وَهِيَ مَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالخَادِمُ فِي مَالِ سَيِّدِهِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ»

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர். அவருடைய பொறுப்பைக் குறித்து விசாரிக்கப்படுவார். ஒரு இமாம் தன் சமூகத்திற்கு பொறுப்பாளி, அவர் அது குறித்து விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் தன்னுடைய குடும்பத்தின் பொறுப்பாளன், தன்னுடைய பொறுப்பைப் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். மனைவி தன்னுடைய கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள், அவள் தன் கணவனின் செல்வத்தைப் பற்றியும் பிள்ளைகளை பற்றியும் அவள் விசாரிக்கப்படுவாள். ஒரு பணியாளன் தனது எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான், அவனுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான்.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர். அவருடைய பொறுப்பை குறித்து மறுமையில் அல்லாஹ் விசாரிப்பான்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 893,2409.

இந்த ஹதீஸை நாம் உணர்ந்து, நமது பிள்ளைகள் அல்லாஹ் நமக்கு கொடுத்த அமானிதங்கள்,அவர்களை இறையச்சம் உள்ளவர்களாக,நல்ல தெளிவான சிந்தனை உள்ளவர்களாக,மனஉறுதி உடையவர்களாக, வீரம் உள்ளவர்களாக,ஒழுக்கமுள்ளவர்களாக,எத்தனை சவால்கள் வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான மனஉறுதி படைத்தவர்களாக உருவாக்குவதற்குபெற்றோர்கள் கண்டிப்பாக இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்த வேண்டும்.

அவர்களுடைய மார்க்கத்தில் ஏற்பட்ட பலவீனத்தை சரி செய்வதற்கும்,அல்லாஹ்வுடைய தொடர்பை சரி செய்வதற்கும், அல்லாஹ்வுடைய மார்க்கத்தோடு மேலும் அவர்களை பலப்படுத்துவதற்கும் தயார் படுத்த வேண்டும்.

அப்படியில்லாமல் இந்தப் பிள்ளைகளை அப்படியே விட்டுவிட்டு புறக்கணிப்பார்களேயானால், அதனால் ஒரு பிள்ளைகளிடத்தில் மார்க்கத்தின் பலவீனம் ஏற்பட்டால், அல்லது அவனுடைய துன்யாவின் வாழ்க்கையில் அவனுக்கு ஒரு சோம்பேறித்தனம் ஏற்பட்டால் அதுகுறித்து கண்டிப்பாக பெற்றோர்கள் விசாரிக்கப்படுவார்கள்.

அதற்குரிய தண்டனையை கண்டிப்பாக எதிர்கொள்ள வேண்டும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நம்மை சீர் செய்வானாக! நம்மை பக்குவப் படுத்துவானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ أَبِي مُزَرِّدٍ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " خَلَقَ اللَّهُ الخَلْقَ، فَلَمَّا فَرَغَ مِنْهُ قَامَتِ الرَّحِمُ، فَأَخَذَتْ بِحَقْوِ الرَّحْمَنِ، فَقَالَ لَهُ: مَهْ، قَالَتْ: هَذَا مَقَامُ العَائِذِ بِكَ مِنَ القَطِيعَةِ، قَالَ: أَلاَ تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ، وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ، قَالَتْ: بَلَى يَا رَبِّ، قَالَ: فَذَاكِ " قَالَ أَبُو هُرَيْرَةَ: " اقْرَءُوا إِنْ شِئْتُمْ: {فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ} [محمد: 22] " (صحيح البخاري- 4830)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/