HOME      Khutba      தீர்வின் திறவுகோல் துஆ!! | Tamil Bayan - 612   
 

தீர்வின் திறவுகோல் துஆ!! | Tamil Bayan - 612

           

தீர்வின் திறவுகோல் துஆ!! | Tamil Bayan - 612


بسم الله الرحمن الرّحيم

தீர்வின் திறவுகோல் துஆ

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

 

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

 

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்0கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே!கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! அல்லாஹ்வுடைய பயத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக தக்வாவை கொண்டு உங்களுக்கும் எனக்கும் உபதேசித்தவனாக ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ்வுடைய வேதத்தை முற்றிலும் பற்றி பிடித்தவர்களாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவைப் பேணி வாழக் கூடியவர்களாக நமது வாழ்வில் ஏற்படக் கூடிய சிறிய பெரிய எந்த கவலைகளுக்கும் அல்லாஹ்வை மட்டுமே முன்நோக்கி அவனிடம் மன்றாடி துஆ செய்து அந்தப் பிரச்சினைக்கு உண்டான தீர்வை  தேட கூடியவர்களாக அல்லாஹுத்தஆலா என்னையும் உங்களையும் ஆக்கியருள்வானாக!

அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட இறைவிசுவாசிக்கு இந்த உலகம் என்பது ஒரு சிறைச்சாலை தான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ، وَجَنَّةُ الْكَافِرِ»(صحيح مسلم- (2956

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொண்ட இறை விசுவாசிக்கு இவ்வுலகம் ஒரு சிறைச்சாலையாக இருக்கிறது.

அல்லாஹ்வை நம்பாத இறை நிராகரிப்பாளருக்கு இவ்வுலகம் ஒரு சொர்க்கமாக இருக்கிறது.

அறிவிப்பாளர் : அபூஹுரைராரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 2956.

அல்லாஹ்வின் அடியார்களே!இந்த உலகத்தில் முஃமின் கண்டிப்பாக சில சோதனைகளை சந்திப்பான். சோதனைகளை கடந்து தான் சொர்க்கம் இருக்கிறது. சோதனைகளை கடந்து தான் இம்மை மறுமையின் வெற்றி இருக்கிறது. சோதனைகளுக்கு பிறகு தான் இன்பமான சொர்க்க வாழ்க்கை இருக்கிறது.

இங்கே ஒரு முக்கியமான ஹதீஸை நினைவு கூர்ந்து செல்வோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;

இந்த உலகத்திலே மிக துன்பத்திலும் நெருக்கடியிலும் சோதனையிலும் வாழ்ந்த ஒரு முஃமினை மறுமையில் கொண்டு வரப்படும்.அந்த அடியானைப் பார்த்து ரப்புல் ஆலமீன் கேட்பான் நீ வாழ்க்கையிலே ஏதேனும் இன்பத்தை பார்த்திருக்கிறாயா? என்று.

இந்த அடியான் எப்படிப்பட்டவன்?இந்த உலகத்திலே துன்பத்திலும் கஷ்டத்திலும் சிரமத்திலும் இன்னும் என்னவெல்லாம் சோதனை இருக்கிறதோ அத்தனையையும் அனுபவித்து வந்தவன்.

அந்த அடியான் அல்லாஹ்விடம் கூறுவான்;

ரப்புல் ஆலமீன்! நான் என்ன இன்பத்தை பார்த்தேன். நான் வாழ்ந்ததெல்லாம் துக்கத்திலும் கவலையிலும் சோதனையிலும் தான்.

அல்லாஹ்வின் கட்டளையால் வானவர்கள் அந்த மனிதனை சொர்க்கத்திலே ஒரு முக்கு முக்கி எடுத்துக் கொண்டு வருவார்கள். இப்பொழுது அல்லாஹு ரப்புல் ஆலமீன் அந்த மனிதனைப் பார்த்து கேட்பான்; நீ துன்பத்தை பார்த்து இருக்கிறாயா என்று?நீ வேதனைகளை அனுபவித்து இருக்கிறாயா என்று?

அந்த அடியான் கூறுவான்; எனது இறைவா நான் துன்பத்தை பார்த்ததே இல்லை என்று.

-அல்லாஹ்வின் அடியார்களே! சொர்க்கத்திலே அந்த மனிதனை ஒரே ஒரு முக்கு முக்கி எடுத்ததற்கு அவன் இந்த உலகத்தில் தான் பட்ட கஷ்டங்களையும் கவலைகளையும் வேதனைகளையும் மறந்து விடுகிறான் என்றால் அந்த சொர்க்கமே அவனுடைய முடிவில்லாத வாழ்க்கையாக நிரந்தர வாழ்க்கையாக ஆகிவிட்டால்!? அல்லாஹு அக்பர்!-

அதுபோன்று ஒரு காஃபிரான அடியார் மறுமையில் கொண்டுவரப்படுவான். அவன் எப்படிப்பட்டவன் என்றால் அவன் இந்த உலகத்திலே கவலை கஷ்டம் என்று எதையுமே அவன் பார்த்ததில்லை.

இந்த பூமியிலே மிகமிக சுகபோகத்தில் வாழ்ந்த ஒரு மனிதனை மறுமையில் கொண்டு வரப்படும்.அந்த மனிதனைப் பார்த்து அல்லாஹ் கேட்பான்; நீ ஏதாவது கஷ்ட நஷ்டத்தை சிரமத்தை துன்பத்தை பார்த்திருக்கிறாயா என்று?அதற்கு அந்த அடியான் கூறுவான்;அப்படி எதையுமே நான் அனுபவித்ததில்லை என்று. இந்த அடியானை குறித்து அல்லாஹ் வானவர்களுக்கு கட்டளையிடுவான் இவனைக் கொண்டு போய் நரகத்திலே ஒரு முக்கு முக்கி எடுத்து வாருங்கள் என்று.

அவ்வாறு அவனை முக்கி எடுத்து வெளியே கொண்டு வந்ததும் அந்த அடியானை பார்த்து அல்லாஹ் கேட்பான்; நீ ஏதேனும் இன்பத்தை பார்த்திருக்கிறாயா என்று?

அவன் கூறுவான்; நான் எந்த இன்பத்தையும் நான் பார்த்ததே இல்லை. அனுபவித்ததில்லை என்று கூறுவான்.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : எண் : 2807, இப்னுமாஜா, எண்:4321.

நரகத்தில் ஒரு சில வினாடிகள் முக்கி எடுக்கப்பட்டதனால் இந்த உலகத்தில் அவன் அனுபவித்த சுகபோக இன்பங்கள் எல்லாம் மறக்கடிக்கப்பட்டு விட்டது என்றால் அந்த நரகமே அவனுடைய முடிவில்லாத வாழ்க்கையாக ஆகிவிட்டால்? அதுஎப்பேற்பட்ட துயரமாக துன்பம் இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

சகோதரர்களே! ஆகவேதான் நரகத்தில் வேதனை அனுபவிக்கக்கூடிய அந்த காஃபிர்களை பார்த்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொல்கிறான்;

تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ

அதில் ஒரு கூட்டத்தினரை எறியப்படும் பொழுதெல்லாம், அதன் காவலாளர் அவர்களை நோக்கி ("இவ்வேதனையைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் உங்களிடம் வரவில்லையா" என்று கேட்பார்கள்.(அல்குர்ஆன் 67 : 8)

قَالُوا بَلَى قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ

அதற்கவர்கள் "மெய்தான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் நிச்சயமாக எங்களிடம் வந்தார். எனினும், நாங்கள் (அவரைப்) பொய்யாக்கி, அல்லாஹ் (உங்கள் மீது) யாதொன்றையும் இறக்கி வைக்கவே இல்லை. நீங்கள் பெரும் வழிகேட்டிலன்றி இருக்க வில்லை என்று (அவர்களை நோக்கி)  நாங்கள் கூறினோம்" எனறு கூறுவார்கள். (அல்குர்ஆன் 67 : 9)

وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ

அன்றி "(அத்தூதர்களின் வார்த்தைகளுக்கு) நாங்கள் செவிசாய்த்து அவைகளைநாங்கள் சிந்தித்திருந்தால், நாங்கள் நரகவாசிகளாகி இருக்கவே மாட்டோம்"என்று கூறி, (அல்குர்ஆன் 67 : 10)

فَاعْتَرَفُوا بِذَنْبِهِمْ فَسُحْقًا لِأَصْحَابِ السَّعِيرِ

தங்கள் பாவத்தை ஒப்புக்கொள்வார்கள். ஆகவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான். (அல்குர்ஆன் 67 : 11)

هَاأَنْتُمْ أُولَاءِ تُحِبُّونَهُمْ وَلَا يُحِبُّونَكُمْ وَتُؤْمِنُونَ بِالْكِتَابِ كُلِّهِ وَإِذَا لَقُوكُمْ قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا عَضُّوا عَلَيْكُمُ الْأَنَامِلَ مِنَ الْغَيْظِ قُلْ مُوتُوا بِغَيْظِكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ

 (நம்பிக்கையாளர்களே!) இவர்களையா நீங்கள் நேசிக்கின்றீர்கள்! அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் (அவர்களுடைய) வேதங்கள் அனைத்தையும் நம்பிக்கை கொள்கின்றீர்கள். (அவர்கள் உங்கள் வேதத்தை நம்பிக்கை கொள்வதில்லை. எனினும்) அவர்கள் உங்களைச் சந்தித்தால், "(உங்களுடைய வேதத்தையும்) நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்" என்று (பொய்) கூறுகின்றனர். உங்களைவிட்டு விலகினாலோ (உங்கள் மீதுள்ள) கோபத்தினால் தங்கள் (கை) விரல்களையே கடித்துக் கொள்கின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "உங்கள் கோபத்திலேயே நீங்கள் சாவீர்களாக! நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்."(அல்குர்ஆன் 3 : 119)

ذُقْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْكَرِيمُ

உலகத்திலேயே எவ்வளவு இன்பமாக சுகபோகமாக கண்ணியமாக நீ வாழ்ந்தாய் இன்று இதை சுவைத்துப் பார்.  (அல்குர்ஆன் 44 : 49)

அல்லாஹ்வின் அடியார்களே! ஆகவே ஒரு முஃமினைப் பொருத்தவரை எப்போதும் அவன் துவண்டு விடக்கூடாது. சோர்ந்து விடக்கூடாது.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட ஒரு முஃமினின் உள்ளம் எப்பொழுதும் இறை நம்பிக்கையால் பசுமையாக இருக்க வேண்டும்; சோர்ந்து விடக்கூடாது. அல்லாஹ்வுடைய உதவி வெகு விரைவிலேயே இருக்கிறது என்ற நம்பிக்கையில், ஆதரவில் இருக்க வேண்டும். அல்லாஹு ரப்புல் ஆலமீன் நம்மை சோதிப்பேன் என்றே கூறுகிறான்.

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ

 (நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும் பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள்நற்செய்தி கூறுங்கள். (அல்குர்ஆன் 2 : 155)

அன்பு சகோதரர்களே! இன்று என்ன பயம் என்று சொன்னால், நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கின்ற இந்த சோதனையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நாம் எடுக்கக்கூடிய வெளிரங்கமான முயற்சிகளால் இதையே சார்ந்து அல்லாஹ்வை மறந்து விடுவோமா என்ற பயம் ஏற்படக்கூடிய நிலையில் இருக்கிறோம்.அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! பாதுகாப்பானாக!

நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளை எடுக்க வேண்டும்.ஆனால் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அல்லாஹ்வுடைய நாட்டம் இல்லை என்றால் அல்லாஹ்வுடைய கட்டளை இல்லை என்றால் நாம் எடுக்கக்கூடிய எந்த முயற்சியும் எந்த பலனையும் தராது.

இதுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காண்பித்துக் கொடுத்த வழிமுறை.

1. நமது சக்திக்கு உட்பட்ட அத்தனை முயற்சிகளையும் செய்ய வேண்டும்.

2. யா அல்லாஹ்! எனது முயற்சியால் எந்த பலனும் இல்லை. உனது கட்டளையால் மட்டுமே அனைத்தும் நடக்கும் என்று அல்லாஹ்விடம் நம்பிக்கையுடன் பொறுப்பு சாட்டவேண்டும்.

நான் செய்துவிட்டேன்; நான் சாதித்து விடுவேன் என்று கூறினால் அல்லாஹ் தன் புறத்திலிருந்து அளிக்கக்கூடிய உதவியை நிறுத்தி விடுவான்.

எனது ரப்பின் மீது நம்பிக்கை வைத்து நான் முயற்சி செய்தேன்; எனது முயற்சியில் நிச்சயமாக அல்லாஹ் வெற்றியை கொடுப்பான் என்று யார் நம்புகிறார்களோ, அவர்களுக்கு கண்டிப்பாக அல்லாஹ் உதவுவான். அந்த உதவி கண்ணியம் கலந்த உதவியாக இருக்கும். அந்த உதவியில் அல்லாஹ் தனது அருளை பரக்கத்தை கொடுப்பான்.

அன்பு சகோதரர்களே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு வழிகாட்டல் இல்லாமல் நம்மை திக்கற்றவர்களாக குழப்பமடைந்தவர்களாக விட்டுச் செல்லவில்லை.

நமது உடல் வலிமை இன்னும் பல முயற்சிகள் வழிமுறைகள் இப்படி எவ்வளவுதான் இருந்தாலும் சரி.அல்லாஹ்வுடைய உதவிதான் நமக்கு மிகப்பெரிய ஒன்று.வெற்றி அளிக்கக்கூடிய ஒன்று.

அல்லாஹ் நமக்கு கை கொடுப்பது,நமது எதிரிகளின் உள்ளத்திலே அச்சத்தை போடுவது,அல்லாஹுத்தஆலா நமது முயற்சிகளை எல்லாம் வெற்றிகளாக ஆக்குவது, இவை அனைத்தும் அல்லாஹ்வுடைய நாட்டத்தில் இருக்கிறது. யார் அல்லாஹ்வை நோக்கி திரும்புகிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான்.

அல்லாஹுத்தஆலா நமக்கு கொடுத்து இருக்கின்ற மிகப்பெரிய ஆயுதம். உலகத்தில் உள்ள எவ்வளவு பெரிய ஆயுதங்களை எல்லாம் கொண்டு வந்தாலும் அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கின்ற இந்த ஆயுதத்தை எந்த எதிரியும் ஒரு முஃமினிடமிருந்து பறிக்க முடியாது. பறிமுதல் செய்ய முடியாது. அதுதான் துஆ உடைய ஆயுதம்.

ஒரு முஃமினுடைய வாய்க்கு பூட்டு போட்டாலும் சரி, அவனை வாயை அடைத்து வைத்தாலும் சரி, அவனது உள்ளதால் இறைவனை அழைத்தால்,

أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَهٌ مَعَ اللَّهِ قَلِيلًا مَا تَذَكَّرُونَ

 (கஷ்டத்தில் சிக்கித்) துடிதுடித்துக் கொண்டிருப்பவர்கள் அபயமிட்டழைத்தால் அவர்களுக்குப் பதில் கூறி, அவர்களுடைய கஷ்டங்களை நீக்குபவன் யார்? பூமியில் உங்களை(த் தன்னுடைய) பிரதிநிதிகளாக ஆக்கி வைத்தவன் யார்? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? (இல்லவே இல்லை.) உங்களில் நல்லுணர்ச்சி பெறுபவர்கள் வெகு சொற்பமே.(அல்குர்ஆன் 27:62)

துன்பத்திலும் துயரத்திலும் சிக்கி உழன்று கொண்டிருக்கின்ற ஒரு அடியான் தனது உள்ளத்தினால் ரப்பி என்று அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அழைத்தால் அவனுக்கு பதில் கொடுப்பவன் யார் என்று அல்லாஹ் கேட்கிறான்?

 

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ

உங்கள் இறைவன் கூறுகின்றான்: "நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள். (அல்குர்ஆன் 40 : 60)

அல்லாஹ் கூறுகிறான்;எனக்கு முன்னால் கையேந்துங்கள்.என்னிடம் இறைஞ்சி பிரார்த்தனை செய்யுங்கள். நான் உங்களுக்கு பதில் தருகிறேன் என்று உறுதியாகக் கூறுகிறான்.

அல்லாஹ்வுடைய வானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு விட்டால்,அல்லாஹ்வுடைய விதி என்ற நாட்டம் இறங்கிவிட்டால்,உலகத்திலுள்ள எப்பேற்ப்பட்ட சக்தியானாலும் சரி, எவ்வளவு வலிமை நிறைந்த சக்தியாக இருந்தாலும் அல்லாஹ்வுடைய உதவிக்கு முன்னால் அல்லாஹ்வுடைய அந்த தாக்கத்திற்கு முன்னால் எதுவுமே நீக்க முடியாது.

நூஹ் நபியுடைய துஆவை நினைத்துப் பாருங்கள்;

فَدَعَا رَبَّهُ أَنِّي مَغْلُوبٌ فَانْتَصِرْ

ஆகவே, அவர் தன் இறைவனை நோக்கி "நிச்சயமாக நான் (இவர்களிடம்) தோற்றுவிட்டேன். நீ எனக்கு உதவி செய்!" என்று பிரார்த்தனை செய்தார்.(அல்குர்ஆன் 54 : 10)

فَفَتَحْنَا أَبْوَابَ السَّمَاءِ بِمَاءٍ مُنْهَمِرٍ

ஆதலால், வானத்தின் வாயில்களைத் திறந்துவிட்டு, தாரை தாரையாய் மழை கொட்டும்படி நாம் செய்தோம்.(அல்குர்ஆன் 54 : 11)

وَفَجَّرْنَا الْأَرْضَ عُيُونًا فَالْتَقَى الْمَاءُ عَلَى أَمْرٍ قَدْ قُدِرَ

அன்றி, பூமியின் ஊற்றுக்கண்களையும் (பீறிட்டுப்) பாய்ந்தோடச் செய்தோம். ஆகவே, நிர்ணயிக்கப்பட்ட ஒரு காரியத்திற்காக தண்ணீர் ஒன்று சேர்ந்தது.(அல்குர்ஆன் 54 : 12)

நினைத்துப் பாருங்கள் சகோதரர்களே!துஆ என்பது அவ்வளவு பெரிய ஆயுதம்!

ஆனால், இன்று நம்மில் பலர், அல்லாஹ் மன்னிப்பானாக! எல்லாம் துஆவைக்கொண்டு ஆகிவிடுமா? என்று கேட்கிறார்கள்.

கண்டிப்பாக துஆவைக் கொண்டு எல்லாம் ஆகிவிடும்.ஆனால் அந்த துஆ கூறிய நிபந்தனைகளோடு செய்யப்பட்டால், ரப்பின் மீது உறுதியான நம்பிக்கையோடு செய்யப்பட்டால்.

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ

 (நபியே!) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீங்கள் கூறுங்கள்:) "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கின்றேன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்." ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள்.(அல்குர்ஆன் 2 : 186)

அல்லாஹ்வின் அடியார்களே! மார்க்க விஷயங்களைப் புறந்தள்ளியது,அல்லாஹ்வுடைய கட்டளைகளில் அலட்சியம் செய்தது, அல்லாஹ் தடுத்த விஷயங்களில் வரம்பு மீறியது இப்படி நாம் செய்த குற்றங்களை பாவங்களை அநியாயங்களை நினைத்துப் பாருங்கள்.

நம்முடைய துஆ அங்கீகரிக்கப்படவில்லை என்றால் அதற்கு காரணம் யார்? நமது கரங்கள் செய்து கொண்டிருக்கின்ற பாவங்கள் நாம் செய்யக்கூடிய அலட்சியம் அல்லாஹ் மன்னிப்பானாக!

அல்லாஹ் சொல்கிறான்;

وَبَشِّرِ الصَّابِرِينَ

பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுங்கள்.

இவ்வுலகத்தில் எவ்வளவு பெரிய சோதனைகள் கஷ்டங்கள் ஏற்பட்டாலும் சரி,தனது ஈமானை தனது அமலை தனது தீனை பாதுகாப்பதுதான் ஒரு முஃமினுடைய அடிப்படையாக இருக்க வேண்டும்.

சிறிய சோதனையோ, பெரிய சோதனையோ இவ்வுலகத்தில் எந்த வகை சோதனை வந்தாலும் சரி, உடனடியாக ஒரு முஸ்லிம் அவன் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை,

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ-"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"

அல்லாஹ்வின் அடியார்களே! நான் என்னையும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் உங்களையும் கேட்டுக்கொள்ளுங்கள்.

சோதனையான காலகட்டங்களில் நாம் அல்லாஹ்வை நோக்கித் திரும்பி இந்த துஆவை ஓதினோமா?

ஒருமுறை அல்ல.நாம் இந்த துஆவை ஓதிக் கொண்டே இருக்க வேண்டும்.அல்லாஹ் சொல்கிறான்;இந்த துஆ நிச்சயமாக உங்களுக்கு தீர்வை கொடுக்கும் என்று.

أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ

இத்தகையவர்கள் மீதுதான் அவர்களுடைய இறைவனிடமிருந்து புகழுரைகளும் கிருபையும் ஏற்படுகின்றன. மேலும், இவர்கள்தாம் நேரான வழியையும் அடைந்தவர்கள்.(அல்குர்ஆன் 2 : 157)

சோதனைகளின் பொழுது ஆயிரம் கோஷங்களை ஆயிரம் வார்த்தைகளை அவர்கள் கூறட்டும்.ஆனால் ஒரு இறை விசுவாசி கஷ்டத்தின் போது தனக்கும் அல்லாஹ்விற்கும் இடையில் இதை ஓத மறக்க மாட்டான்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.அல்லாஹ் நமக்கு கண்டிப்பாக உதவி செய்வான்.

இதுதான் நமது மார்க்கம்.அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் துஆ.

நமது வாழ்க்கையில் மிகவும் நெருக்கடியான சமயங்களில் ஓதக்கூடிய சில துஆக்களை அவர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மன நெருக்கடியான நேரத்தில் மிகப்பெரிய சோதனைகளில் சிக்கி சஞ்சலப்பட்டு கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் ஓதிய துஆ,

«لاَ إِلَهَ إِلَّا اللَّهُ العَظِيمُ الحَلِيمُ، لاَ إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ العَرْشِ العَظِيمِ، لاَ إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ، وَرَبُّ العَرْشِ الكَرِيمِ»

பொருள் : கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6346.

நாம் நம்முடைய நேரங்களில் சில நேரங்களையாவது இந்த துஆவிற்காக செலவழிக்கிறோமா? என்று யோசித்துப் பாருங்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மன சஞ்சலத்தை,பிரச்சினைகளை ஏற்படுத்த கூடிய ஒன்று நிகழ்ந்து விட்டால் அப்போது அவர்கள் இந்த துஆவை கூறுவார்கள்;

يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ

யா அல்லாஹ்! உன்னிடத்தில் உனது இரட்சிப்பைக் கொண்டு நான் பாதுகாப்பு தேடுகிறேன்.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3524.

அல்லாஹ் கூறுகிறான்; இந்த வார்த்தை எப்படிப்பட்ட வார்த்தை என்றால் பத்ருடைய ஸஹாபாக்கள் கூறிய வார்த்தை.

إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ

(உங்களை) பாதுகாக்குமாறு நீங்கள் உங்கள் இறைவனிடம் கோரியபோது "அணியணியாக உங்களைப் பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்" என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான். (அல்குர்ஆன் 8:9)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலீ (ரழி) அவர்களுக்கு கற்றுத் தருகிறார்கள்;

لا إلهَ إلا اللهُ الحليمُ الكريمُ ، سبحانه وتبارك اللهُ ربُّ العرشِ العظيمِ ، والحمدُ لله ربِّ العالمينَ

பொருள் : சங்கைமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. அவன் பரிசுத்தமானவன். மாபெரும் அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ் அருள்மிக்கவன் ஆவான். அகிலங்களின் இறைவன் அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும்.

மேலும் நெருக்கடியின்போது, சிரமத்தில் இருக்கக் கூடியவர் கேட்கக்கூடிய துஆவை அல்லாஹ்வின் தூதர் ஸல் கற்றுக்கொடுத்தார்கள்.

اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو

அல்லாஹ்வே!நான் உன்னுடைய ரஹ்மத்தை மட்டும் தான் ஆதரவு வைக்கிறேன்.

فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ

கண் சிமிட்டும் நேரம் அளவு கூட என்னை என்னிடம் பொறுப்பு சாட்டி விடாதே!

وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ

என்னுடைய எல்லா காரியங்களையும் சீர்படுத்திக் கொடு!

لَا إِلَهَ إِلَّا أَنْتَ

உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை.

அறிவிப்பாளர் : அபூ பக்ரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 5090, தரம் : ஹசன் (அல்பானி)

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

உன்னை மட்டுமே வணங்குகிறோம்;உன்னிடமே உதவி தேடுகிறோம். (அல்குர்ஆன் 1 : 5)

சகோதரர்களே! அல்லாஹ்வுடைய உதவியை அல்லாஹ்வுடைய நாட்டத்தை ஆதரவு வைத்துதான் ஒரு முஸ்லிம் தனது எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியும்.

ஒரு நோயாளியை எடுத்துக் கொள்ளுங்கள்.அவன் மிக சிறந்த மருத்துவரிடம் செல்கிறான்.அவன் தனது நோய்க்கான தீர்வை இந்த மருத்துவரிடம் இருக்கிறது என்று அவன் நம்பிக்கை கொள்வானேயானால் அது ஷிர்க்காக ஆகி விடும்.

அந்த ஷிஃபாவிற்கான துஆவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது,

لاَ شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ

மருந்துகள் ஆயிரம் இருக்கலாம்.சிகிச்சை செய்பவர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம்.ஆனால்,ஷிஃபா அந்த நிவாரணம் என்பது உன்னிடத்தில் இருந்து மட்டுமே வருகிறது.

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி, எண் : 5675.

நாம் எத்தனையோ முயற்சிகள் செய்யலாம்.நமக்குத் துணையாக எத்தனையோ பேர் ஆதரவாக வரலாம்.ஆனால்,நமது கல்ப் உடைய நம்பிக்கை நமது ரப்பிடம் மட்டும்தான் இருக்கவேண்டும்.

அல்லாஹ்வின் உதவி இல்லாமல் எந்த ஒரு காரியத்தையும் நான் எனது முயற்சியால் சாதித்து விடுவேன் என்று ஒருவன் நினைப்பானேயானால் அவன் கண்டிப்பாக தோற்று விடுவான்.

அவன் கண்டிப்பாக சோதிக்கப்படும்போது அவனுக்கு மிகப்பெரிய பேரிழப்பாக இருக்கும்.

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்; வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்; ஹுனைனுடைய யுத்தத்தை,

لَقَدْ نَصَرَكُمُ اللَّهُ فِي مَوَاطِنَ كَثِيرَةٍ وَيَوْمَ حُنَيْنٍ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْئًا وَضَاقَتْ عَلَيْكُمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُمْ مُدْبِرِينَ

பல (போர்க்) களங்களில் (உங்கள் தொகைக் குறைவாயிருந்தும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கின்றான். எனினும், ஹுனைன் போர் அன்று உங்களை பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு யாதொரு பலனும் அளிக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அதுசமயம் அது) உங்களுக்கு மிக நெருக்கமாகிவிட்டது. அன்றி, நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள். (அல்குர்ஆன் 9:25)

அல்லாஹ் இந்த வார்த்தைகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களுடைய தோழர்களிடம் கூறுகிறான்.

ஒரு சிறிய எண்ணம், இவ்வளவு எண்ணிக்கையாக இருக்கின்ற நாம் எப்படி தோற்றுவிடுவோம் என்று எண்ணினார்கள். அந்த எண்ணத்தை கண்டித்து அல்லாஹ் வசனத்தை இறக்கினான். பெரிய சோதனையை அல்லாஹ் கொடுத்தான்.

யார் ஆயத்துல் குர்ஸியையும் சூரத்துல் பகரா உடைய கடைசி வசனங்களையும் ஓதுவாரோ அவருடைய துன்ப நேரத்தில் அல்லாஹ் அவர்களை இரட்சிப்பான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஅது இப்னு அபீவக்காஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள்;

எனக்கு ஒரு துஆ தெரியும்; யார் ஒருவர் தனது துக்கத்தில், துயரத்தில் அந்த துஆவை ஓதுகின்றாரோ அவருடைய துக்கங்கள் அவரைவிட்டு கண்டிப்பாக அகற்றப்படும். அதுதான் எனது சகோதரர் யூனுஸ் (அலை) அவர்களுடைய துஆ.

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

இதுகுறித்து அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்;

وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

(யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம்முடைய தூதராக ஆக்கினோம்.) அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக் கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருளிலிருந்த அவர் (நம்மை நோக்கி) "உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)" என்று பிரார்த்தனை செய்தார். (அல்குர்ஆன் 21:87)

சகோதரர்களே!இந்த துஆவும் சரி,இதற்கு முன்னால் கூறப்பட்ட துஆக்களும் சரி,இன்னும் ஏராளமான துஆக்களிலும்,

لا اله الا الله

لا اله الا هو

 لا اله الا انت

என்ற வார்த்தை கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.

ஏனென்றால் இது ஒரு தவ்ஹீத் உடைய வார்த்தை.தவ்ஹீதை நிலை நிறுத்தக்கூடிய வார்த்தை. இந்த தவக்குல்,இந்த நம்பிக்கை மட்டும் தான் மூமின்களுக்கு எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்க முடியும்.

வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான்.வணக்க வழிபாடுகளில் யாரையும் அவனுக்கு இணையாக்க மாட்டோம். ஷிர்க்கை நாம் ஒருகாலும் ஒத்துக் கொள்ள மாட்டோம் என்ற உறுதியான நம்பிக்கை தான் நமக்கு வீரத்தை கொடுக்கும். மன தைரியத்தை கொடுக்கும்.

அல்லாஹுத்தஆலா நமது எதிரிகளுக்கு எதிராக இந்த கலிமாவை கொண்டுதான் நமக்கு உதவி செய்வான். இதை விட்டுவிட்டு வேறு விதங்களில் சமரசம் செய்ய முயற்சி செய்தால் அவன் நம்மைக் கைவிட்டு விடுவான்.

அதுபோன்று நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறியதாக சவ்பான் (ரழி) கூறுகிறார்கள்;

நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அவர்கள் இவ்வாறு கூறுவார்கள்;

هو اللهُ، اللهُ رَبِّي لا شريكَ له

அவன்தான் அல்லாஹ்.அந்த அல்லாஹ் தான் என்னுடைய ரப்பு.அவனுக்கு இணை யாருமில்லை.

அறிவிப்பாளர் : சவ்பான் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : எண் : நசாயி, 10418.

நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆபத்துக்கள் தன்னைச் சூழ்ந்துகொள்ளும்போது சில துஆக்களை சொல்வார்கள்;

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ غَضَبِهِ

பரிபூரணமான வேதவாக்கியங்களைக் கொண்டு அல்லாஹ்வின் கோபத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்;

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 3893, தரம் : ஹசன் (அல்பானி)

முதலாவதாக நாம் அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய கோபத்திலிருந்து பாதுகாப்பு தேட வேண்டும். இந்த சோதனை அல்லாஹ் நம்மீது கோபம் கொண்டிருப்பதால் ஏற்பட்டிருக்குமோ?அல்லாஹ் நம் மீது அதிருப்தி கொண்டதால் ஏற்பட்டிருக்குமோ?நம்முடைய நன்றிகெட்ட தனத்தினால் இந்த சோதனையில் நாம் ஆட்கொண்டுவிட்டோமோ?

இப்படியெல்லாம் நாம் சிந்தித்துப் பார்த்து நாம் அல்லாஹ்விடத்தில் திரும்பி அவனுடைய கோபத்திலிருந்து நாம் பாதுகாவல் தேடவேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தாயிபில் அதைத்தான் செய்தார்கள்.

அந்த துன்பத்திலே நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதலாவதாக என்ன கூறினார்கள்? யா அல்லாஹ்! உன்னுடைய கோபத்திலிருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன். மக்கள் எனக்கு கொடுத்த இன்னல்கள் அது இரண்டாவது.

அடுத்ததாக,

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ غَضَبِهِ وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ

அவனுடைய அடியார்களால் ஏற்படக்கூடிய தீங்கிலிருந்தும், பிறகு ஷைத்தானின் ஊசலாட்டத்திலிருந்தும், ஷைத்தான்கள் என்னுடைய காரியத்திலே வந்து குழப்பங்கள் ஏற்படுவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 3893, தரம் : ஹசன் (அல்பானி)

அன்பு சகோதரர்களே! இன்னும் இது போன்ற ஏராளமான துஆக்கள் இருக்கின்றன. நாம் அந்த துஆக்களை எல்லாம் மனப்பாடம் செய்ய வேண்டும். நமது கஷ்டம் துயரமான நேரங்களில் அதை பயன்படுத்தி அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும். நமது குடும்பத்தாருக்கு பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். இதற்காக நேரங்களை ஒதுக்கி இவற்றை மனப்பாடம் செய்து இதைப் பயன்படுத்தி அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும்.

கண்டிப்பாக அல்லாஹ்வை நோக்கித் திரும்புபவர்கள், அல்லாஹ்வை அழைத்தவர்கள் நற்கூலி வழங்கப்படுவார்கள்.

وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ مِنَ الْمُحْسِنِينَ

(மனிதர்களே! சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) நாடு சீர்திருந்திய பின்னர் அதில் விஷமம் செய்து கொண்டலையாதீர்கள். (இறைவனுடைய தண்டனைக்கு) பயந்தும், (அவனுடைய சன்மானத்தை) விரும்பியும் அவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய அருள், நன்மை செய்யும் அழகிய குணமுடையவர்களுக்கு மிக சமீபத்திலிருக்கிறது.(அல்குர்ஆன் 7 : 56)

وَأُخْرَى تُحِبُّونَهَا نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ

நீங்கள் விரும்பக்கூடிய மற்றொன்றும் உண்டு. அது அல்லாஹ்வுடைய உதவியும், சமீபத்தில் கிடைக்கக் கூடிய ஒரு வெற்றியும். (ஆகவே, நபியே! இதைக் கொண்டு) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக. (அல்குர்ஆன் 61 : 13)

رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنْتَ خَيْرُ الْفَاتِحِينَ

‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கும் எங்கள் மக்களுக்கும் இடையில் நீ நியாயமான தீர்ப்பளிப்பாயாக! நிச்சயமாக நீ தீர்ப்பளிப்பவர்களில் மிக்க மேலானவன்'' (அல்குர்ஆன்7 : 89)

அல்லாஹ்தஆலா நம்மை ரட்சிப்பதற்கும் நம்மை பாதுகாப்பதற்கும் இன்னும் நாமும் நமது சந்ததிகளும் ஈமானிலும் இஸ்லாமிலும் உறுதியானவர்களாக வாழ்ந்து அதை நிலை நிறுத்தக்கூடிய சமுதாயமாக ஆகுவதற்கு அல்லாஹ் துணை செய்வானாக! அல்லாஹ் பாதுகாப்பு செய்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/