HOME      Khutba      அமல்களை பாதுகாப்போம்! | Tamil Bayan - 544   
 

அமல்களை பாதுகாப்போம்! | Tamil Bayan - 544

           

அமல்களை பாதுகாப்போம்! | Tamil Bayan - 544


بسم الله الرحمان الرحيم

அமல்களைபாதுகாப்போம்!

கண்ணியமிக்க அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களே! சகோதரிகளே! உங்களின் முன்னால் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தவனாக,அல்லாஹ்வுடைய தூதர் மீதும் கண்ணியமிக்க தூதரின் குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, வணக்கத்திற்குறிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாரும் தூதருமாவார் என்று சாட்சி கூறியவனாகவும்

உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் இம்மை மறுமையின் வெற்றியை வேண்டியவனாக, உள்ளத்தின் பரிசுத்தத்தையும் அமல்கள் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதையும் வேண்டியவனாக

அல்லாஹ் பொருந்திக் கொண்ட நல்ல மக்களில் நல்லடியார்களில் உங்களையும் என்னையும் ஆக்கியருள வேண்டுமென்றும் வேண்டியவனாக எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய அச்சத்தை அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக இந்த   குத்பாவை ஆரம்பம் செய்கிறேன் !

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நாம் செய்யக்கூடிய நல்லமல்களை ஏற்றுக் கொள்வானாக!

அந்த நல்லமல்கள் அல்லாஹ்வுடைய திருமுகத்தை நாடி மட்டுமே செய்யப்படக்கூடிய நல்ல அமல்களாக ,ஏற்றுக் கொள்ளப்பட்ட  நல்லமல்களாக     ஆக்கியருள்வானாக !

முகஸ்துதியை விரும்புவதை விட்டும் பெயர் புகழ் ஆகியவற்றை விரும்புவதை விட்டும் அல்லாஹ் என்னையும் உங்களையும் பாதுகாப்பானாக! ஆமீன்!

கண்ணியமிக்க  சகோதரர்களே! சகோதரிகளே!உள்ளத்தின் சுத்தத்தைப் பற்றியும் உள்ளத்தை பக்குவப்படுத்துவதற்கும் உள்ளத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும்  நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி சென்ற ஜும்மாவிலே சில விஷயங்களை பார்த்தோம்.

அதைத்தொடர்ந்து இந்த உள்ளத்தை கெடுக்கக் கூடிய முக்கியமான ஒரு விஷயத்தை இன்று நாம் பார்க்க இருக்கின்றோம்.முகஸ்துதி !

அன்புடைய சகோதரர்களே! சகோதரிகளே! உள்ளத்தை கெடுக்கக் கூடிய கெட்ட குணங்கள் கெட்ட செயல்கள் ஏராளமாக இருக்கின்றன. அதிலே ஒன்று...மிகப்பெரிய செயல்...அடியானுடைய  உள்ளத்திலே முகஸ்துதி அதாவது ரியா வந்துவிடுவது.

என்னை பார்க்க வேண்டும் அதுபோன்று تسميع  பிறர் என்னை புகழ வேண்டும்.

பிறர் என்னை நல்லவனாக கருத வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் வந்துவிடுவது. அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

ஒரு புறம் பாவிகள் பாவத்தைக் கொண்டு சோதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றால் உதாரணத்திற்கு ஒரு மனிதன் குடிக்கிறான் زناசெய்கிறான் வேறுவேறு கெட்ட செயல்களில் ஈடுபடுகிறான் என்றால் பாவிகள் இதுபோன்று கெட்ட செயல்களின் மூலம் பாவங்களின் மூலம் சோதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றால்

இன்னொரு புறம் நல்லவர்கள் சோதிக்கப்படுவது அவர்களின் எண்ணங்களினால். அவர்கள் எண்ணங்கள் கெடுவதுஅவர்கள் தங்களுடைய நிய்யதுகளை…. எண்ணங்களை கவனிக்காமல், பாதுகாக்காமல்  இருப்பது.

நல்ல அமல்களில் நாம் எந்த அளவிற்கு கவனம் செலுத்துகின்றோமோ ...சாலிஹான நல்லமல்களை செய்வதில் எந்த அளவிற்கு நமக்கு கவனம் இருக்கிறதோ அதே அளவு  கவனம், இல்லை! இன்னும் அதைவிட அதிக அளவு கவனம்  நம்முடைய நிய்யத்தை எண்ணத்தைப் பாதுகாத்து பேணுவதிலே இருக்கவேண்டும்.

உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும் இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய ஸஹீஹ் நூலுடைய முதல் ஹதீசாக அவர்கள் பதிவு செய்திருப்பது,

انما الاعمال بالنيات

அமல்கள் அல்லாஹ்விடத்தில் எண்ணங்களை கொண்டுதான் நாம் செய்யக்கூடிய அமல்கள் அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படுவதும் அல்லாஹ்விடத்தில் மறுக்கப்படுவதும் எண்ணங்களை வைத்து தான்.எண்ணங்கள் அல்லாஹ்விற்காக என்று இருக்குமேயானால் தூய்மையாக இருக்குமேயானால் அந்த அமல்கள் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.

அறிவிப்பாளர்: உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: புகாரி,எண்: 1

ஒரு மனிதன் தொழுகையின் அத்தனை நிபந்தனைகளையும் ருக்னுகளையும் பேணுகிறான். அவன் தொழுகையில் நிற்கும் பொழுது தன் உள்ளத்திலே இது அல்லாஹ்விற்காக தொழுகிறேன் என்று நினைக்கிறான்.

ஆனால் அவனுடைய ஆழ்மனமோ இதை பிறரிடத்தில் சொல்லவேண்டும்....என்னுடைய இந்த தொழுகையை பிறர் பார்க்க வேண்டும் என்று இருக்குமேயானால்...

ஒரு மனிதன் குர்ஆன் ஓத ஆரம்பிக்கிறான் அதை ஆரம்பம் செய்யும் பொழுது இது அல்லாஹ்விற்காக தான் ஓதுகிறேன் என்று நினைக்கிறான். ஆனால் அவனது ஆழ்மனமோ தான் குர்ஆன் ஓதுவதை யாரேனும் பார்க்கவேண்டுமே தன்னைப் பாராட்ட வேண்டுமே..தன்னை பற்றி மற்றவர்கள் நல்ல அபிப்ராயம் கொள்ள வேண்டுமே என்று எண்ணுகிறான்.

இன்னும் ஒரு மனிதன் தர்மம் செய்கிறான்.அவன் மனதிலே இது தான் அல்லாஹ்விற்காக கொடுக்கிறேன் என்று நினைத்து செய்கிறான்ஆனால் அவரின் ஆழ்மனதில் தான் கொடுப்பதை பிறர் அறிய வேண்டுமே தன்னிடமிருந்து வாங்குபவர் தன்னைப் பற்றி நல்லவிதமாக எண்ண வேண்டுமே  .இது அடுத்தவருக்கு தெரிய வேண்டுமே ..

இவ்வாறாக அவனுடைய உள்ளத்தில் பல தவறான எண்ணங்கள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது அப்படி ஊசலாடக்கூடிய எண்ணங்களை அவன் தட்டுவதும் இல்லை.அந்த எண்ணங்களை தன் உள்ளத்தை விட்டு  நீக்குவதற்காக அல்லாஹ்விடம் துஆ  கேட்பதோ இஸ்திஃபார் செய்வதோ...

لا حول ولا قوة الا بالله

என்று சொல்வதோ "யா அல்லாஹ்! இந்த கெட்ட எண்ணத்தை விட்டு அகற்றி என்னை பாதுகாத்துக் கொள்", என்று இறைவனிடம் இறைஞ்சுவதோ கிடையாது .மாறாக அவன் அந்த எண்ணத்தை மென்மேலும் தனக்கு வரவழைத்துக் கொள்கிறான். அதை விரும்புகிறான்.

மேலும் ஹஜ்ஜுக்கு செல்வார்கள் மேலும் உம்ராவிற்கு. செல்வார்கள் அவர்கள் நிய்யத்து வைப்பதோ யா அல்லாஹ் உனக்காக ஹஜ்ஜிற்கு செல்கிறேன் உனக்காக ௨ம்ராவிற்கு வருகிறேன் என்று..ஆனால் இதுவே அவர்கள் ஹஜ் செய்து வந்ததற்கு பிறகு உம்ரா செய்து வந்ததற்கு பிறகு யாராவது என்னை ஹாஜி என்று அழைக்க மாட்டார்களா?

உம்ராவிற்கு சென்று வந்திருக்கிறோம் என்பதற்காக நமக்காக ஒரு கண்ணியம் கிடைக்காதா? நம்மை யாரேனும் பெருமையாக பார்க்க மாட்டார்களா? என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும்.

இந்த ஊசலாட கூடிய  எண்ணத்தை கொண்டு மட்டும் அல்லாஹ் உடனே தண்டித்து விட மாட்டான்.ஏன் காரணம் என்ன ?

உள்ளங்களின் எண்ணங்கள் அல்லாஹ்வின் கையிலேயே இருக்கிறது .ஆனால்ஊசலாட்டங்களின் எண்ணங்கள் வரும்பொழுது அதை உடனே நீக்கி விடாமல் , உடனே அந்த எண்ணத்திலிருந்து வெளியாகி அல்லாஹ்விடம் தவ்பா செய்து தன்னை பரிசுத்தப்படுத்திக் கொள்ளாமல்....இந்த எண்ணத்தை மேலும் அவன் தன்னிடம் தக்க வைத்துக்கொள்கிறான். அந்த எண்ணத்திலேயே அவன் மேலும் நீடிக்கின்றான்.

பிறர் தன்னை புகழும் பொழுது அந்த புகழ்ச்சியை அவன் வரவேற்கிறான்.அல்லாஹ் பாதுகாப்பானாக!!!

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! சகோதரிகளே!அப்படிப்பட்டவர்கள் ருக்குன்களை ஷர்துகளை நிபந்தனைகளை முஸ்தஹப்புகளை பேணி இபாதத்துகளை செய்திருந்தாலும் சரி...

அவர்களுடைய அமல்கள் எல்லாம்..ஃபிக்ஹுடைய சட்டத்தின்படி அவர்களின் அமல்கள்  முழுமை அடைந்திருந்தாலும்...அவர்களின் நிய்யத்தில் குறைபாடு இருந்த காரணத்தினால் அல்லாஹு தஆலா அவர்களுடைய அமலை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

அன்பு சகோதரர்களே!இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்;

أَنَا أَغْنَى الشُّرَكَاءِ عَنْ الشِّرْكِ مَنْ عَمِلَ عَمَلًا أَشْرَكَ فِيهِ مَعِي غَيْرِي تَرَكْتُهُ وَشِرْكَهُ

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் கூறுவதாக சொல்கிறார்கள்;

அல்லாஹ் என்ன கூறுகிறான்?நான் ஷிர்கிலிருந்து தேவையற்றவன் எனக்கு எந்தப் பங்காளியும் தேவையில்லை.

எனக்கு எந்த ஷரீக்...கூட்டாளியும் தேவையில்லை.யார் ஒரு அமலை செய்து அந்த அமலில் வேறு ஒருவரை கூட்டாக்கி கொண்டாரோ...நான் அவரை அந்த அமலோடு விட்டுவிடுகிறேன்.நீ யாருக்காக அந்த அமலை செய்தாயோ அவரிடம்  சென்று இந்த அமலுக்கான கூலியை வாங்கிக் கொள் என்று. (2)

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 5300

அன்பு சகோதரர்களே! இந்த முகஸ்துதி அவ்வளவு பயங்கரமான ஒன்று. இது ஒரு மறைவான ஷிர்க். மனிதர்களில் பலர் இந்த ஷிர்க்கை கண்டுகொள்ளாமல் அதில் விழுந்துவிடுவார்கள்... என்றுஎச்சரிக்கை செய்யும் விதமாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை ஒரு மறைவான ஷிர்க் என்று சொன்னார்கள்.

ஆகவேதான் அன்பிற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய தீனிலே...

ஓன்று கடமையான அமல்கள் (فرض)ஃபர்ளான அமல்கள் .

இந்த அமல்களை நாம் வெளிப்படுத்தி செய்யவேண்டும்.ஃபர்ளான அமல்களை மறைக்க முடியாது மறக்கவும் கூடாது.

உதாரணமாக ஐந்து நேர கடமையான தொழுகைகளை ஆண்கள் மஸ்ஜிதில் நிறைவேற்றவேண்டும்.

அதுபோன்றே ஸக்காத்தை கொடுத்தாக வேண்டும்.ரமழான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும். ஹஜ் இவற்றை அவர்கள் நிறைவேற்றியாக வேண்டும்.

இப்படிப் ஃபர்ளான வணக்கங்களை பொருத்தவரை முஸ்லிம்கள் அனைத்தையும் செய்தாக வேண்டும்.அதுவும் பல வணக்கங்கள் ஜமாத்தாக செய்ய வேண்டிய வணக்கங்கள்.

இதுபோக உபரியான நஃபிலான வணக்க வழிபாடுகள் இருக்கிறது. இந்த நஃபிலான வணக்க வழிபாடுகளை பொறுத்தவரை...

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்  விரும்பக்கூடிய விஷயம் என்னவென்றால்...

அடியான் இப்படிப்பட்ட நஃபிலான வணக்க வழிபாடுகளை அனைவரிடமும் இருந்து மறைத்து அல்லாஹ்விற்காக மட்டும் என்று பிறரிடத்தில் இதைப் பற்றி அறவே பேசாமல்...எந்த அளவுக்கு என்றால் தனது மனைவியிடத்தில் கூட தனது பிள்ளைகள் இடத்தில்கூட...அந்தஅளவிற்கு மறைத்து அல்லாஹ்விற்காக மட்டும் என்று வைத்துக்கொள்வானோ...

அது அல்லாஹ்வுடைய அன்பை அடைய பெறுவதற்கும், அல்லாஹ்விடத்தில் அவனுக்கு மிகப்பெரிய நெருக்கத்தை அடைய பெறுவதற்கும், மேலும் முகஸ்துதி என்ற ஆபத்தான ஒன்றில் விழுந்து விடுவதை விட்டு தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கும் மிக ஏற்றமானதாகும்.

அன்பு சகோதரர்களே! அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதை பாருங்கள்...

وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً

நபியே ! நீங்கள் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள் உங்களுக்குள்ளாக.(அல்குர்ஆன் : 7 : 205)

எத்தனையோ பேர் இருக்கிறார்கள் அவர்கள் சப்தமிட்டு திக்ரு செய்வார்கள் ஆனால் அவர்களின் நாவு சப்தமிட்டுக் கொண்டிருக்கும்.ஆனால் உள்ளத்திலே அல்லாஹ்வுடைய எண்ணம் இருக்காது.

எந்த திக்ர் சிறந்தது என்றால்? அவர்களுடைய நாவு அசையும் பொழுது அவர்களுடைய உள்ளமும் அந்த திக்ரை நினைத்துக் கொண்டு பொருளை உணர்ந்து கூறப்பட்டதாக இருக்கவேண்டும்.

நம்மில் எத்தனை பேர்  ருகூவிலே சென்று   சுஜூதிலே சென்று...திக்ருகளை சப்தமிட்டு அவசர அவசரமாக ஓதுவார்கள். அருகில் நின்று தொழுபவர்கள் அவருடைய சப்தத்தால் தொழுக கூட முடியாது.இப்படி அவர்களுடைய தஸ்பீஹ்களை அவர் விரட்டி கொண்டிருப்பார்கள் .என்ன கூறுகிறார்கள் என்று அவர்களாலே உணர்ந்து கொள்ளவே முடியாது.

எவ்வளவு மகத்தான  அல்லாஹ்வுடைய திருப்பெயரை அவர்கள் சொல்கிறார்கள்;

سبحان ربي العظيم

சுப்ஹான ரப்பியல் அளீம்!

سبحان ربي الأعلى

சுப்ஹான ரப்பியல் அஃலா!

سمع الله لمن حمده

ربنا لك الحمد

அல்லாஹ்வுடைய பெயர்களை யார் தனது நாவால் நிதானமாக உச்சரிக்க வில்லையோ அவர்களுடைய உள்ளம் எப்படி அந்த திக்ரோடு உடன் செல்லும் ? யோசித்து பாருங்கள்.

ஓர் மனிதர் திக்ரை சொல்லும்பொழுது அவசரஅவசரமாக உச்சரிக்கிறார்.

உதாரணமாக தொழுகை முடிந்த பிறகு  திக்ர் சொல்வார்களே எப்படி செய்வார்கள்?

சில நொடிகளில் இந்த 100தஸ்பீஹ்களையும் செய்திருப்பார்கள்.

இவ்வாறு அவர்கள் செய்வது அல்லாஹ்வுடைய பெயரை கேவலப்படுத்துவது போன்று இல்லையா? அல்லாஹ் பாதுகாப்பானாக.!!!

ஒரு மனிதனுடைய நாவு நிதானமாக உச்சரிக்கும் பொழுது அவனுடைய உள்ளம் அதோடு பயணித்து செல்லும்.ஆகவேதான் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் மற்ற ஸஹாபாக்களும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் குர்ஆனை எப்படி ஓதுவார்கள் என்று கூறுகிறார்கள்.

அவர்களுடைய தொழுகையைப் பொறுத்தவரை பர்லான தொழுகையாக இருக்கட்டும், மக்களுக்கு தொழ வைப்பதாக இருக்கட்டும், உபரியான தொழுகையாக இருக்கட்டும். ஜமாத்தோடு தொழுதாலும் அல்லது இரவில் தனியாக தொழுதாலும்...எல்லா தொழுகைகளிலும் அவர்கள் ஒரே மாதிரியாகத்தான் ஓதுவார்கள்.

இன்று நம்முடைய இமாம்கள் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற கலாச்சாரத்தை போன்று அல்ல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் குர்ஆன் ஓதிய முறை.இன்று நம்முடைய உலமாக்கள் ஆலிம்கள் எப்படி மக்களுக்கு சப்தமிட்டு தொழ வைத்தால்...ரொம்ப அழகாக நீட்டி பாத்திஹா சூராவையும் மற்ற சூராவையும் ஓதுவார்கள்.பாத்திஹா சூராவிற்க்கு மட்டும் மூன்று நிமிடங்கள் இரண்டு நிமிடங்கள் என்று நீட்டி அழகாக ஓதுவார்கள்.அதே இமாம் அதே தொழுகையில் மூன்றாவது ரக்அத்தில் பார்த்தால் அவரோடு அவசர அவசரமாக எழுந்து நீங்கள்நிலைக்கு வந்ததற்கு பிறகு..

واياك نستعين نعبد اياك

என்று கூட நீங்கள் ஓதி முடித்திருக்க மாட்டீர்கள்.

அதற்குள் இமாம் அல்லாஹுஅக்பர் என்று கூறி ருகூவிற்கு சென்றிருப்பார்.

முதல் ரக்அத்தில்  அவ்வளவு அழகாக நீட்டி ஓதிய இமாம்மூன்றாவது ரக்அத்தில் 15நொடிகளுக்குள் ஓதி முடிக்கின்றார் என்றால் மக்களுக்கு காட்டுவதற்காக ஒரு ஓதுதல் தனக்குள் ஓதும் பொழுது அந்த ஓதுதலில் வித்தியாசம் ஏற்பட்டு விடுகின்றது.மக்களுக்காக ஓதும் போது அந்த ஓதுதலை அழகாக நீட்டி ஓதுகின்றார் .இந்த ஓதுதலை அல்லாஹ்வை மட்டும் அறிவானோ அந்த ஓதுதலை அவர் கெடுத்து விடுகின்றார்.அல்லாஹ் பாதுகாப்பானாக.!!!

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருக்காலும் அப்படிப்பட்ட ஒரு வழமையை  வைத்திருந்தது கிடையாது.சப்தமிட்டு ஓதினாலும் சரி அமைதியாக ஓதினாலும் சரி ஒரே அமைப்பில் தான் குர்ஆனை ஓதுவார்கள் .

அன்பு சகோதரர்களே! இந்த அறிவுரை ஆலிம்கள் இமாம்களுக்கு மட்டுமல்ல நமக்கும் அப்படித்தான். தனியாகத் தொழுதாலும் சரி ஜமாத்தாக தொழுதாலும் சரி நாம் ஓதக்கூடிய முறையை நன்றாக நிறுத்தி நிதானமாக ஓத வேண்டும்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் சொல்கிறார்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு ஆயத்தையும் நிதானமாக ஓதி அந்த ஆயத் முடிந்தவுடன் நிறுத்திவிடுவார்கள் மூச்சை விட்டு விடுவார்கள்.

குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தையும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரித்து நிதானமாக ஓதும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள் என்று பெரிய சஹாபாக்கள் நமக்கு அறிவிக்கிறார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே!இதைத்தான் அல்லாஹ் நமக்கு திருமறையில் சொல்லிக் காட்டுகின்றான் நபியே நீங்கள் உங்களது ரப்பை மனதிலே நினைவு கூறுங்கள். பணிவோடு நினைவு கூறுங்கள் அல்லாஹ்வுடைய பெயரை சொல்லும் பொழுது அடியேனுடைய உள்ளத்திலும் சரி அவனுடைய முகத்திலும் சரி அந்தப் பணிவு இருக்க வேண்டும்.

எப்பேர்பட்ட பேரரசன் அர்ஷுடைய அதிபதி ஏழு வானங்களை படைத்தவன்.எல்லா படைப்புகளுடைய அதிபதி அப்படிப்பட்ட இறைவனுடைய பெயரை உச்சரிக்கும் பொழுது...ஒரு அடியானுக்கு அவனுடைய வார்த்தையிலும் அவனுடைய உள்ளத்திலும் அவனுடைய செயலிலும் அந்தப் பணிவு வெளிப்படவேண்டும்.

இதைத்தான் அல்லாஹ் கூறுகிறான்

إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ

முமீன்களில் நல்லவர்கள் யார் என்றால்... அவர்களுக்கு அல்லாஹ்வுடைய நினைவு வந்தாலே அவர்களுடைய உள்ளம் பயந்து நடுங்கி விடும்.(அல்குர்ஆன் : 8 : 2)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்;

وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ

(நபியே!) உமது மனதிற்குள் மிகப் பணிவோடு, உரத்த சப்தமின்றி பயத்தோடு, மெதுவாக காலையிலும், மாலையிலும் உமது இறைவனை நினைவு செய்து கொண்டிருப்பீராக! அவனை மறந்தவர்களில் நீர் ஆகிவிடாதீர்! (அல்குர்ஆன் : 7 : 205)

تَضَرُّعًاஎன்று கூறினால் அச்சத்தோடு பணிவோடு பயத்தோடு பாசத்தோடுஅன்போடு அனைத்தும் கலந்த ஒருவிதமான உணர்வுக்கு சொல்லப்படும்.

கொஞ்சம் நீங்கள் படித்துப்பாருங்கள் சூரா மர்யமை ...ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய துஆ எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

إِذْ نَادَى رَبَّهُ نِدَاءً خَفِيًّا

அவர் தன் இறைவனைத் தாழ்ந்த குரலில் அழைத்து,ஜக்கரிய்யா தனது ரப்பை மறைவாக யாருக்கும் தெரியாமல் அழைத்தார்.(அல்குர்ஆன் : 19:3)

அன்பு சகோதரர்களே!இன்று மக்களில் பலர் மக்களுக்கு முன்னால் நீண்ட நேரம் அழுது துவா செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் தனிமையில்  அதே நெடுநேரம் கையேந்துதல் என்பது இருக்காது.மக்களுக்கு முன்னாள் இறைவனிடம் மன்றாடக்கூடிய பலர் தனிமையில் இறைவனிடத்தில் அழுவதில்லை.

மக்களுக்கு முன்னால் உபரியான தொழுகைகளை தொழக் கூடியவர்கள் தனிமையில் அந்த தொழுகைகளை நிறைவேற்றுவதில்லை.

எனவேதான் அல்லாஹ் கூறுகிறான் நபியே! நீங்கள் உங்களுக்குள் பணிவோடு பயத்தோடு அச்சத்தோடு அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.

சத்தமில்லாமல் நினைவுகூருங்கள் அதாவது நீங்கள் செய்யக்கூடிய அந்த திக்ர் அது உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் மறைவாக இருக்கட்டும்.

بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ

காலையிலும், மாலையிலும் உங்கள் இறைவனை நினைவு செய்து கொண்டிருங்கள்!மேலும் நீங்கள் அல்லாஹ்வை மறந்தவர்களாக அலட்சியம் செய்தவர்களாக ஆகிவிடாதீர்கள்.(அல்குர்ஆன் : 7 : 205)

கண்ணியத்திற்குரியவர்களே!இதே கட்டளையை ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் சொல்கிறான்.

ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ

ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மிக்க தாழ்மையாகவும் அந்தரங்கமாகவும் (அத்தகைய) உங்கள் இறைவனிடமே (உங்களுக்கு வேண்டியவைகளைக் கோரி) பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அவன் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் : 7:55)

இந்த வசனத்தில் எல்லோருக்கும் பொதுவாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான் ...

பணிந்தவர்களாக....تَضَرُّعًاஅல்லாஹ்விடத்தில் கையேந்தும் பொழுது அடியானாகிய நம்முடைய உள்ளத்திலே நாம் ஒன்றுமே இல்லை என்று நமது பலவீனத்தை குறித்த எண்ணத்தோடு நாம் கேட்க வேண்டும்.

யா அல்லாஹ்! "நான் ஒரு பாவி" ஆதம் அலைஹிஸ்ஸலாம் இதே எண்ணத்தோடு தான் துவா செய்தார்கள்.

رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

(அதற்கு அவர்கள்) "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று (பிரார்த்தித்துக்) கூறினர்.(அல்குர்ஆன் : 7 : 23)

யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அதே எண்ணத்தோடு கேட்டார்கள்;

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

("உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)" என்று பிரார்த்தனை செய்தார்.(அல்குர்ஆன் : 21:87)

மூஸா அலைஹிஸ்ஸலாம் அந்த எண்ணத்தோடு கேட்டார்கள்;

أَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الْغَافِرِينَ

நீதான் எங்களுடைய இறைவன். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு நீ அருள் புரிவாயாக! மன்னிப்பவர்கள் அனைவரிலும் நீ மிக்க மேலானவன்" என்று(ம் பிரார்த்தித்துக்) கூறினார்.(அல்குர்ஆன் : 7:155)

அன்பு சகோதரர்களே!அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! இன்று பல பேருக்கு... தான் இறைவனிடம் கையேந்துகிறோம் என்ற நினைவு கூட இல்லாமல் துஆ கேட்கிறார்கள்.

எனவேதான் இன்று அவர்களுடைய துஆவிலே பணிவை பார்க்க முடிவதில்லை.

துஆ கேட்பதில் நாம் நமது தேவைகளை எல்லாம் கேட்கிறோம். ஆனால் என்ன தன்மையோடு நம்மை துஆ கேட்க வேண்டும் என்று அல்லாஹ் சொல்லி இருக்கிறானோ அந்தத் தன்மையை நமது உள்ளத்தில் நாம் கொண்டு வருவதில்லை.

அல்லாஹு தஆலா என்ன தன்மையை கொண்டு வர சொல்லி நம்மிடம் சொல்கிறான்.... பாருங்கள்.

உங்களிடத்தில் பணிவு இருக்க வேண்டும். பயம் இருக்க வேண்டும் ஆதரவு இருக்க வேண்டும்.தன் இறைவனிடத்திலே அன்பு இருக்க வேண்டும் ஆசை இருக்க வேண்டும்.

யாருக்கு எஜமானன் இல்லையோ..அவனுக்கு மேலான ஒரு பேரரசன் இல்லையோ... அப்படிப்பட்ட இறைவனிடத்திலே நான் கேட்கிறேன் என்ற பணிவும் பயமும் ஒருவருடைய துஆவில் இருக்க வேண்டும்.

அது வரும் பொழுது தான் கண்டிப்பாக நமது பேரரசன் நமது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வான்.

அன்பு சகோதரர்களே!..அப்படிப்பட்ட உறுதியோடு நமது நபிமார்கள் கேட்டதால் தான்...துஆவின் ஆரம்பத்திலும் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள் துஆவின் இறுதியிலும் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள் .

إِنَّ رَبِّي لَسَمِيعُ الدُّعَاءِ

நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனைகளை (கருணையுடன்) செவியுறுபவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் : 14:39)

إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ

எங்கள் இறைவனே! நிச்சயமாக நீதான் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றாய்.(அல்குர்ஆன் : 2:128)

எந்த ஒன்றையும் அல்லாஹ்விடம் கேட்டதற்கு பிறகு "யா அல்லாஹ்! நான் இதை உன்னிடம் கேட்டேன்.ஏனென்றால் நீ எனது துஆக்களை அங்கீகரிக்க கூடியவனாக இருக்கிறாய்.எனது பாவங்களை மன்னிக்கக் கூடியவனாக இருக்கிறாய் .நீ எனது பிரார்த்தனைகளை செவிமடுக்க கூடியவனாக இருக்கிறாய்."

என்ற உறுதியும்... அல்லாஹ்வின் மீது நல்லாதரவும் இருக்க வேண்டும்.

சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அற்புதமான ஒரு துஆவை  கேட்டார்கள்.இதற்கு முன்பு எந்த ஒரு நபியும் அப்படிப்பட்ட துஆவை கேட்டதில்லை.  அவர்களுக்கும் அல்லாஹ்விற்கும் இடையில் இருந்த அந்த ஒரு தொடர்பு, அதனால் அல்லாஹ் அவர்களை அரசனாக்கி வைத்திருந்தான் மேலும் அரசனுடைய மகனாக ஆக்கி வைத்திருந்தான்.

رَبِّ اغْفِرْ لِي وَهَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي

ஆகவே, அவர் "என் இறைவனே! என்னுடைய குற்றங்களை   மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ அளித்தருள் புரிவாயாக!

என்று கேட்டு பின்னர் அல்லாஹ்வை புகழ்ந்தார்கள் பாருங்கள்...

إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

நிச்சயமாக நீ கணக்கில்லாமல் வாரி வழங்கும் ஆற்றலுள்ளவன்" என்று பிரார்த்தனை செய்தார்.(அல்குர்ஆன் : 38:  35)

அல்லாஹ்விற்கு இந்த பிரார்த்தனை பிடித்துவிட்டது. அவர்கள் துன்யாவை கேட்டிருந்தாலும் கூட அல்லாஹ்வை .அல்லாஹ்வுடைய அழகான பெயர்களைக் கொண்டு அஸ்மாவுல் ஹுஸ்னாவைக் கொண்டு பிரார்த்தனை செய்தார்கள் அல்லவா...

யா அல்லாஹ்! உன்னிடம் வறுமையும் இருக்கிறது உண்மையும் இருக்கிறது நீ வாரி வழங்கக் கூடியவன்.வாரி வழங்குவதை யாராலும் தடுக்க முடியாது. நீ வழங்குவதில் உன்னிடத்தில் யாரும் கணக்கு கேட்க முடியாது.

அதாவது அல்லாஹ்விடத்தில் கேட்க முடியுமா இவருக்கு ஏன் இவ்வளவு கொடுத்தாய்? அவருக்கு ஏன் அவ்வளவு கொடுத்தாய் ? என்பதாக..

இவருக்கு ஏன் குறைவாக கொடுத்தாய்.. அவருக்கு ஏன்  அதிகமாக கொடுத்து இருக்கிறாய்? என்பதாக ..

நல்லவர்களுக்கு குறைத்துக் கொடுத்து இருக்கிறாயே பாவிகளுக்கு அதிகமாக வழங்கி இருக்கிறாயே?

யாராவது அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய செயலை பற்றி கேள்வி கேட்க முடியுமா?

لَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَ

அவன் செய்பவைகளைப் பற்றி (ஏன் செய்தாய், எதற்காகச் செய்தாய் என்று) எவருமே அவனைக் கேட்க முடியாது.   (அவ்வளவு சர்வ சுதந்திரமும், வல்லமையும் உள்ளவன்.) எனினும், அவனோ அனைவரையும் (அவரவர்களுடைய செயலைப் பற்றிக்) கேட்கக் கூடியவன்.(அல்குர்ஆன் : 21:23)

அல்லாஹ்விடத்திலேயாரும்எந்தக்கேள்வியும்கேட்கமுடியாது

யாருக்கு கொடுக்கிறான் யாருக்கு தடுக்கிறான் .

யாரை வாழவைக்கிறான் யாரை உயர்த்துகிறான் யாரை தாழ்த்துகிறான் .

யாருக்கு மரணத்தை கொடுக்கிறான் யாருக்கு ஆட்சியை கொடுக்கிறான் யாரை ஆட்சியிலிருந்து இறக்குகிறான் .

யாருக்கு வறுமை யாருக்கு செல்வம்..

யாரை சிரிக்க வைக்கிறான் யாரை அழவைக்கிறான்.

சகோதரர்களே! இவை யாவும் அல்லாஹ்வுடைய செயல்..

ஹிக்மத்தின் அடிப்படையிலேயே அவன் செய்கிறான் ..இதையாரும் அல்லாஹ்விடத்திலே கேட்க முடியாது.

ரப்புல்ஆலமீன் மூமீன்களாகிய நமக்கு சொல்கிறான்;

ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً

ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மிக்க தாழ்மையாகவும் அந்தரங்கமாகவும் (அத்தகைய) உங்கள் இறைவனிடமே (உங்களுக்கு வேண்டியவைகளைக் கோரி) பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அவன் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் : 7:55)

அல்லாஹ்விடத்தில் உங்கள் தேவைகளை பயத்தோடு கேளுங்கள், அன்போடு கேளுங்கள், பணிவோடு கேளுங்கள். அல்லாஹ்விடத்தில் கேட்கும் போது  திமிர் இருக்கக்கூடாது.

இன்னும் அல்லாஹ் கூறுகிறான் நீங்கள் மறைவாக கேளுங்கள்.யாரும் அறியாத வண்ணம் பார்க்காத முறையில் கேளுங்கள். நாம் துஆ செய்வதைக் கூட யாரும் கண்டு விடக்கூடாது.

ரப்பு விரும்புவது கிடையாது. யார் துஆவில் வரம்புமீறுவார்களோ அவர்களை.யார் அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை துஆவில் மீறுகிறார்களோ இப்படிப்பட்டவர்களை அல்லாஹ் விரும்ப மாட்டான் நேசிக்கவும் மாட்டான்.

அன்பு சகோதரர்களே! ஏன் அல்லாஹுத் தஆலா இவ்வளவு அழுத்தமாக சொல்கிறான்...என்று பார்த்தால் அவன் விரும்புவதெல்லாம் இஹ்லாஸ்- மனத்தூய்மை.

நாம் செய்யக் கூடிய எந்த ஒரு அமலும் அல்லாஹ்விற்காக என்று இருக்க வேண்டும். நமது அமல் அல்லாஹ்வுடைய முகத்தை நாடி மட்டுமே செய்யக்கூடிய பரிசுத்த தன்மை உடையதாக இருக்க வேண்டும்.

கொஞ்சம் முகஸ்துதி கலந்து விட்டாலும் சரி..தன்னைப் பிறர் பார்க்கவேண்டுமே தான் செய்யும் இந்த காரியத்தை பிறர் பார்த்தால் தன்னை மற்றவர்கள்  பெருமை படுத்துவார்களே பாராட்டுவார்களே...இப்படி எந்த தவறான எண்ணமும் நாம் செய்யக்கூடிய அமலில் துளிகூட கலந்து விடக்கூடாது.

அல்லாஹுத் தஆலா இதற்காக எத்தனை வழிகாட்டுதலை நமக்கு சொல்லி இருக்கிறான் பாருங்கள் .

إِنْ تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ

நீங்கள் தர்மத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா கொடுங்கள் பரவாயில்லை...அதுவும்  நல்லதுதான் .(அல்குர்ஆன் : 2:271)

எப்பொழுது நல்லது? நாம் செய்யக்கூடிய இந்த தர்மத்தால் பிறரும் இதுபோன்று கொடுக்க முன்வருவார்கள் என்று இருக்குமேயானால் ,அத்தகைய சூழ்நிலைகளில் தர்மத்தை பகிரங்கமாக கொடுப்பது நல்லது.

உதாரணத்திற்கு ஏதேனும் இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு அந்த மக்களுக்கு உதவி செய்வதற்காக நன்கொடைகள் வசூலிக்கப்படுகிறது.

அப்படி வசூலிக்கப்படும் போது ஒரு செல்வந்தர் ஒரு பெரிய தொகையை கொடுக்க முன்வரும் போது அதை பார்த்து மற்றவர்களும் கொடுக்க ஆசைப்பட்டு முன்வருவார்கள் என்ற சூழ்நிலையில்ஒருவர் செய்யக்கூடிய தர்மத்தை  வெளிப்படுத்துவது சிறந்தது.

எனவேதான் இந்த ஒரு சந்தர்ப்பத்தில் தான் தர்மம் செய்வதை பார்த்து மற்றவர்களும் தர்மம் செய்ய ஆர்வபடுவார்கள் என்று இருக்குமோஅந்த இடங்களில் தர்மங்களை வெளிப்படுத்தி  செய்வது நல்லது.

وَإِنْ تُخْفُوهَا

பின்னர் அல்லாஹ் இப்படிக் கூறுகிறான் என்று பாருங்கள்..நீங்கள் மறைத்து செய்தால் ...

முதலில் கூறினான் நீங்கள் தர்மத்தை வெளிப்படையாக செய்தால் நல்லது என்று

ஆனால் அடுத்து கூறுகின்றான் அதே தர்மத்தை நீங்கள் மறைத்து விட்டால் யாருக்கு செய்கிறீர்கள் எவ்வளவு தருகிறீர்கள் என்பதை மறைத்து விட்டால்.

மேலும் கூறுகிறான்;

وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ

ஏழைகள் உங்களைத் தேடி வராமல் ஏழைகளை நீங்கள் தேடிச்சென்று கொடுத்துவிட்டால்...

ஒரு விதம் இருக்கிறது ஏழைகள் வரும்பொழுது அவர்களுக்கு கொடுப்பது.இன்னொன்று ஏழைகள் யார் என்று தெரிந்து கொண்டு அவர்களது வீட்டை தேடி சென்று அவர்களை கண்ணியப்படுத்தி கொடுப்பது.

நீங்கள் உங்கள் தர்மத்தை மறைத்து அதுவும் ஏழைகளுக்கு நீங்களாகவே தேடிச் சென்று கொடுப்பது..அது உங்களுக்கு மிக சிறந்தது.

அல்லாஹ் அக்பர்! நினைத்து பாருங்கள் சகோதரர்களே...

தர்மத்தை வெளிப்படுத்துவதும் நல்லது என்று அல்லாஹ் கூறுகிறான் அதில் நமது மனத்தூய்மை பாதுகாக்கப்பட்டு  இருந்தால்...அவ்வாறு கொடுப்பது நல்லது.

அதே நேரத்திலே நீங்கள் உங்கள் தர்மத்தை மறைத்து...எப்படிப்பட்ட மறைப்பு அல்லாஹ்வைத் தவிர நீங்கள் யாருக்கு கொடுக்கிறீர்களோ அந்த ஏழைகளை தவிர யாரும் அறியாத வண்ணம் நீங்கள் மறைத்து அதுவும் அந்த ஏழையின் வீட்டிற்கு தேடிச் சென்று அவரை கண்ணியப்படுத்தி கொடுப்பது மிக சிறந்தது என்று கூறுகிறான்.

وَيُكَفِّرُ عَنْكُمْ مِنْ سَيِّئَاتِكُمْ

அல்லாஹ் உங்கள் பாவங்களை எல்லாம் போக்கி விடுவான்.

எப்பேர்ப்பட்ட அஜ்ர் (اجر) அந்த கூலியை அல்லாஹ் வாக்களிக்கிறான் பாருங்கள்..மறைத்து ஏழைகளுக்கு தர்மம் கொடுக்கும் பொழுது அந்த அமலின் காரணமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை எல்லாம் போக்கி விடுகிறான்.

وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

இன்னும் அல்லாஹ் கூறுகிறான் அல்லாஹு தஆலா நீங்கள் செய்யக்கூடிய அமல்களை ஆழ்ந்து அறிபவனாக இருக்கிறான்.

அவன் ஆழ்ந்து அறியக் கூடியவன் .யார் எந்த எண்ணத்தில் செய்கிறார்கள் அவரது ஆழ்மனதில் என்ன இருக்கிறதுஎன்பதை அறிய கூடியவனாக இருக்கிறான்.

வாயினால் எவ்வளவு  பரிசுத்தமானவனாக  தன்னை ஒருவன் காட்டிக் கொண்டாலும் சரி ..

அன்பானவர்களே! ரப்புல் ஆலமீன் அதை வைத்து முடிவு செய்ய முடிவு செய்ய மாட்டான்.அறியாத மக்கள் வேண்டுமானால் நாம் வாயினால் சொல்வதை வைத்து முடிவு செய்வார்கள் நம்முடைய குணங்களைப் பற்றி ..ஏனென்றால் உள்ளத்தில் உள்ளதை மனிதர்களால் அறிந்து கொள்ள முடியாது.ஆனால் அல்லாஹ் நமது ஆழ்மனதில் உள்ளதை அறியக் கூடியவன்.

فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ

எனவேதான் நமது நிய்யத்திக்கு ஏற்ப நமது எண்ணத்திற்கேற்ப அல்லாஹ் கூலி கொடுப்பவனாக இருக்கிறான். அதை மறுமையில் பெறுபவர்களாக நாம் இருக்கிறோம்.(அல்குர்ஆன் : 2 : 274)

الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَعَلَانِيَةً

இங்கு  தர்மம் என்று சொல்லப்பட்டாலும் அமல்கள் என்று எல்லா காரியங்களுக்கும் பொதுவாக பொருந்த கூடியது இது...

ரப்புல் ஆலமீன் சொல்கிறான் யார் தங்களுடைய செல்வங்களை தர்மம் செய்கிறார்களோ இரவிலும் பகலிலும்... எப்படிசெய்கிறார்கள்?

سِرًّا- ரகசியமாக யாருக்கும் தெரியாமல்..

இன்னும்  وَّعَلَانِيَةً- தேவைப்படக்கூடிய இடத்தை இடத்தில் பகிரங்கமாகவும் செய்கிறார்களோ..

فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் இடத்திலேயே கூலி இருக்கிறது அவர்களுக்கு எந்த பயமும் இல்லைஅவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

அன்பார்ந்த சகோதரர்களே! இப்படி தான் குர்ஆனின் வழிமுறையின் படியும் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டுதலின் படியும் ஸஹாபாக்கள் உருவாக்கப்பட்டார்கள்.தாபியீன்கள் உருவாக்கப்பட்டார்கள்.

தனது காரியங்களை தங்களுடைய அமல்களை அல்லாஹ்விற்கு மட்டும் என்று செய்வதிலே முழு ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் இருந்தார்கள். அவர்கள் இன்று நம்மைப் போல் அல்ல.அவர்கள் எப்படி இருந்தார்கள் ?

பாவங்களை செய்ய மாட்டார்கள். அப்படியே மனித இயல்பின் காரணமாக பாவங்கள் ஏதேனும் செய்து விட்டாலும் அந்த தவறுக்காக தனது வாழ்நாள் முழுவதும் அழுது கொண்டிருப்பார்கள் இறைவனிடம்.

ஏனெனில் அவர்கள் நபிமார்களின் வாழ்க்கையில் இருந்து பாடம் படித்தவர்கள்.

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவருடைய தவறு தவ்பா ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று தெரிந்த பின்பும் கூட அமைதியாக இருந்தார்களா? இல்லை! தனது வாழ்நாள் முழுவதும் இறுதி மூச்சுவரை தனது தவறை நினைத்து இறைவனிடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டே இருந்தார்கள்.

அதனால் தான் நாளை மறுமையில் எழுப்பப்படும் போதுகூட அவர்கள் மறுமையில் எழுப்பப்பட்டு உயர்ந்த ஸ்தானத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் போதுகூட யா நப்ஸீ! யா அல்லாஹ்! நீ என்னை மன்னிக்க வேண்டுமே! என்று அழுது கொண்டிருப்பார்கள்.(3)

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: புகாரிஎண்: 3092

மக்கள் ஓடிச்சென்று" எங்கள் தந்தையே! அல்லாஹ் தனது கையால் படைத்த எங்கள் ஆதமே! நீங்கள் எங்களுக்கு சிபாரிசு செய்ய மாட்டீர்களா?"என்று மக்கள் கேட்கும்பொழுது ...என்னால் முடியாது.நான் தவறு செய்தேன் அதனால் அல்லாஹ்வின் கோபத்திற்கு பயப்படுகிறேன் என்னால் உங்களுக்கு சிபாரிசு செய்ய முடியாது.. என்று தன்னை விலக்கிக் கொள்வார்கள் .

அன்பு சகோதரர்களே! இன்று நமது பலவீனம் எப்படி என்றால்...செய்த பாவங்கள் ஏராளம் ஆனால் அதை மறந்து விடுகிறோம். செய்கின்ற  நன்மையோ மிகக் குறைவு ஆனால் அதை நாம் பெரிதாக நினைவில் வைத்துக்கொண்டு, யாரையெல்லாம் பார்க்கிறோமோ அவர்களிடத்தில் எல்லாம் அதைப் பற்றி பெருமை பேசுவது..ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு மாதிரி அல்லாஹ் பாதுகாப்பானாக!

சிலரை பார்த்தால் நான் எவ்வளவு தர்மம் செய்கிறேன் தெரியுமா? நான் எவ்வளவு கொடுக்கிறேன் தெரியுமா? நான் எத்தனை  மஸ்ஜிதுகள் கட்டி இருக்கிறேன் தெரியுமா ? எத்தனை மதரஸாக்களுக்கு கொடுக்கிறேன் தெரியுமா? எத்தனை  எத்தீம்களை வாழ வைக்கிறேன் தெரியுமா?

வருடா வருடம் ஹஜ்ஜுக்கு சென்றுவிடுவேன் ரமலான் மாதம் உம்ரா சென்று வந்து விடுவேன்..ரமலானில் நான் ஊரில் இருந்ததா சரித்திரமே கிடையாது நான் ரமலான் வந்துவிட்டால் நேராக மக்காவில் தான் இருப்பேன். எந்த இஃதிகாப்பையும் ரமலானில் விட்டது இல்லையே...

அப்படி செய்யக்கூடிய அமல்கள், கொஞ்சம் செய்திருப்பார்கள் ஆனால் பெருமை இருக்கிறதே அதை சொல்வது  இருக்கிறதே அதை அவ்வளவு பெரிதாக வெளிப்படுத்துவார்கள்.

நீங்கள் பார்த்திருக்கலாம் காலையில் விழித்து சுபஹ் தொழுகைக்கு வரும்பொழுது மிகவும் அசதியாக தென்படுவார்கள். யாரும் அவரிடம் வந்து ஏன் நீங்கள் சோர்வாக இருக்கிறீர்கள் என்று யாரும் கேட்டிருக்க மாட்டார்கள்.ஆனால் அவர் கூறுவார் நான் நேற்று இரவெல்லாம் தொழுது  கொண்டிருந்தேன். தகஜ்ஜத்தை  மிக நீளமாக தொழுதேன் எனவே சோர்வாக இருக்கிறது இப்பொழுது ஸுபுஹை முடித்துவிட்டு உடனே சென்று உறங்க வேண்டும் என்று.

இப்படிப்பட்ட மனிதர் அவர் இரவெல்லாம் தொழுது இருக்கவே தேவைகிடையாது.அவர் இரவெல்லாம் உறங்கி இருந்து சுபஹுத் தொழுகை வந்திருந்தாலும் அவருக்கு இன்ஷா அல்லாஹ் சொர்க்கம்  நிச்சயம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்;

عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مُوسَى عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ (صحيح البخاري-540)

யார் குளிர்ந்த இரண்டு நேர தொழுகைகளை (ஃபஜ்ர், அசர்) ஜமாத்தோடு தொழுவாரோ அவர் சொர்க்கம் செல்வார்.

அறிவிப்பாளர்: அபூ மூசா ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: புகாரி, எண்: 540

கண்டிப்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வாக்காகும்.

ஆனால் எந்த ஒரு மனிதன் ஒரு அமலை செய்துவிட்டு அதை பெருமையாக வெளியில் சொல்லி காண்பிப்பானோ அவன் அமல்களினால் ஏற்படக் கூடிய நன்மைகள் அனைத்தையுமே இழந்தவனாக ஆகிவிடுகிறான். அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஹசன் அல் பஸ்ரி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள். யார் இவர்கள்? உமர் ரழியல்லாஹு அன்ஹு  அவர்களுடைய காலத்தில் பிறந்து சஹாபாக்கள் பலரிடம் கல்வி பயின்ற சிறந்த தாபியீ.

அவர் எப்படிப்பட்டவர் என்றால் இவர் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் சஹாபாக்கள் எல்லாம் தங்களிடம் சந்தேகம் கேட்டு வருகின்ற மக்களை நீங்கள் ஹசனிடம் சென்று கேளுங்கள் என்று கை காட்டக் கூடிய அளவிற்கு கல்வியிலே சிறந்து விளங்கியவர். ஸஹாபாக்களிடத்திலே சிறந்த நன்மதிப்பைப் பெற்றவர்கள்.

அஸ்ஸுஹ்து - இப்னுல் முபாரக்.

ஒரு சமுதாயத்தை பார்த்திருக்கிறேன் யாரை சொல்கிறார்கள்.. சஹாபாக்களை, சஹாபாக்களுடைய பிள்ளைகளை அவர்களுடைய மாணவர்களை சொல்கிறார்கள்...

கூட்டத்தாரை பார்த்திருக்கிறேன் அவர்கள் குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருப்பார்கள்...ஆனால் யாரும் அறிய மாட்டார்கள் இவர் குர்ஆனை மனனம் செய்தவர் என்று.இன்னும் அவர் இரவு முழுவதும் குர்ஆனை ஓதி தொழ கூடியவராக இருப்பார் ஆனால் அவர் அப்படிப்பட்ட அமல் செய்தவர் போன்று சோர்வுடையவராக காணப்படவே மாட்டார்.அவர் உறுதியான மார்க்க ஞானம்  உடையவராக இருப்பார் ஆனால் அவரைப் பற்றி மக்கள் அறியாதவராக இருப்பார்கள். இரவில் நீண்ட நேரம் தொழும் வழக்கம் உடையவராக இருப்பார் ஆனால் அவர் வீட்டில் உள்ளவர்கள் கூட அறிய மாட்டார்கள் அவருடைய அமலைப்பற்றி.

இன்னும் ஹஸனல் பஸரீ அவர்கள் கூறுகிறார்கள் நான் பார்த்த அந்தக் கூட்டம் இருக்கிறார்களே  அவர்கள் ஒருவரும் தனது அமலை மறைத்து செய்து ..பின்னர் அதை வெளிப்படுத்தியவராக இருந்தது கிடையாது.மறைத்து செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும் எந்த ஒரு அமலையும் அவர்கள் ஒருபோதும் பகிரங்கபடுத்தியதே கிடையாது.

அந்தக் காலத்திலே மக்கள் துஆ செய்வார்கள் பெரும் சிரமம் எடுத்து நீண்ட நேரம் துஆ செய்வார்கள் ஆனால் அவருடைய ஒரு சின்ன சப்தம் கூட அருகில் இருப்பவர் அறியமாட்டார்.

அல்லாஹு தஆலா இப்படித்தானே கூறுகிறான்;

துஆ கேளுங்கள் பணிந்தவர்களாகவும் ..மறைவிலும் .

ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய துஆவை இமாம் ஹஸனுல் பஸரி அவர்கள் கூறுகிறார்கள்;

ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் எப்படி துஆ கேட்டார்கள்?

إِذْ نَادَى رَبَّهُ نِدَاءً خَفِيًّا

அவர் தன் இறைவனைத் தாழ்ந்த குரலில் அழைத்து, (அல்குர்ஆன் : 19:3)

தனது ரப்பிடத்தில் மிகத் தாழ்மையாக மறைவாக ரகசியமாக துஆ கேட்டார்கள் என்று.

அன்பு சகோதரர்களே! இன்னும் சில நல்ல அறிஞர்கள் கூறுவதை பாருங்கள்.அன்று அறிஞர்கள் இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருப்பார்கள் .ஆனால் பகலில் அதற்கான சோர்வு சிறிதும்இல்லாதவர்களாக உற்சாகமாக காணப்படுவார்கள்.

இன்று எப்படி என்றால் யாராவது ஒருவர் சிறிது அமல்கள் அதிமாக செய்து விட்டால்..இரவில் சிறிது நேரம் வணங்கிவிட்டால்..பகலில் அவர் மற்றவர்களை பார்க்கும் பார்வையிலோ அவ்வளவு ஒரு தாழ்ந்தவர்களாகக் மற்றவர்களை பார்ப்பார்கள்.அவர்களிடம் தன்னை ஒரு பரிசுத்தவான காட்டிக் கொண்டு..தான்  ஒரு மலக்காக ஆகி விட்டது போல் மமதை தலைக்கேறியவர்களாக...

மக்களை அவர்கள் ஒரு பாவிகளைப் போல் பார்ப்பார்கள் .

அன்பு சகோதரர்களே! அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்.

முகஸ்துதியானது அவர்களுடைய வணக்கத்தின் ருசியை கெடுத்துவிடும்.

மக்களுக்கு முன்னால் அவனை நல்லவனாக வைத்திருக்கும்... மக்களை விட்டு அவன் தனித்து இருக்கும் போது அவன் மிகப்பெரிய கெட்டவனாக பாவியாக ஆகிவிடுவான்.

முகஸ்துதியுடைய மிகப் பெரிய விபரீதம் ஆபத்து என்னவென்றால்..மக்களுக்கு முன்னால் இருக்கும் போது அவன் மிகவும் நல்லவனாக இருப்பான் ஆனால் மக்களுடைய பார்வையை விட்டு அவன் தனித் ஆகிவிட்டால் அவன் மிகப்பெரிய பாவியாகி விடுவான்.

அவனுடைய கெட்ட செயல் என்பது அவனுக்கும் மக்களுக்கும் இடையில் அல்லது அவனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் என்று கூட இருக்கலாம்.ஆகவே தான்

கண்ணியத்திற்குரியவர்களே!நமது அமல்களை அல்லாஹ்விற்கு மட்டும் என்று பரிசுத்தமாக செய்ய வேண்டும்.

அதற்காக தொடர்ந்து முயற்சி செய்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.

நாம் செய்யும் அமல்களில் மனத்தூய்மை இருக்க வேண்டும் என்பதற்காக நாம் மிகவும் கவனம் எடுக்க வேண்டும்.

செய்யக்கூடிய அமல்களில் முகஸ்துதி கலந்துவிடாமல் இருக்க வேண்டும் என்று எப்பொழுதும் உள்ளத்தில் பயந்தவர்களாக இருக்க வேண்டும்.

யா அல்லாஹ்!  நிஃபாக் முகஸ்துதியை விட்டு என்னைப் பாதுகாத்துவிடு! என்ற பிரார்த்தனையை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.

நமது உள்ளங்களிலே தீமையான பாவமான ஊசலாட்டங்கள் ஏற்படும்போது உடனடியாக நாம் விரைந்து அல்லாஹ்வின் பக்கம் திரும்பி அவனிடம் பாதுகாவல் தேடுபவர்களாக இருக்க வேண்டும்.

அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அந்த பரிசுத்தமான அமல்களையும் செய்யக்கூடிய ஆற்றலையும் தன்மையும் வழங்குவானாக!

சொல்லிலும் செயலிலும் கொள்கையிலும் முகஸ்துதிகள் கலந்து விடுவதைவிட்டு அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஆமீன்

குறிப்புகள் :

குறிப்பு 1).

حَدَّثَنَا الْحُمَيْدِيُّ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْأَنْصَارِيُّ قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ يَقُولُ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى الْمِنْبَرِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ (صحيح البخاري- 1)

குறிப்பு 2).

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ عَنْ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى أَنَا أَغْنَى الشُّرَكَاءِ عَنْ الشِّرْكِ مَنْ عَمِلَ عَمَلًا أَشْرَكَ فِيهِ مَعِي غَيْرِي تَرَكْتُهُ وَشِرْكَهُ (صحيح مسلم5300 -)

குறிப்பு 3).

حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ حَدَّثَنَا أَبُو حَيَّانَ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَكُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي دَعْوَةٍ فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ وَكَانَتْ تُعْجِبُهُ فَنَهَسَ مِنْهَا نَهْسَةً وَقَالَ أَنَا سَيِّدُ الْقَوْمِ يَوْمَ الْقِيَامَةِ هَلْ تَدْرُونَ بِمَ يَجْمَعُ اللَّهُ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ فِي صَعِيدٍ وَاحِدٍ فَيُبْصِرُهُمْ النَّاظِرُ وَيُسْمِعُهُمْ الدَّاعِي وَتَدْنُو مِنْهُمْ الشَّمْسُ فَيَقُولُ بَعْضُ النَّاسِ أَلَا تَرَوْنَ إِلَى مَا أَنْتُمْ فِيهِ إِلَى مَا بَلَغَكُمْ أَلَا تَنْظُرُونَ إِلَى مَنْ يَشْفَعُ لَكُمْ إِلَى رَبِّكُمْ فَيَقُولُ بَعْضُ النَّاسِ أَبُوكُمْ آدَمُ فَيَأْتُونَهُ فَيَقُولُونَ يَا آدَمُ أَنْتَ أَبُو الْبَشَرِ خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ وَنَفَخَ فِيكَ مِنْ رُوحِهِ وَأَمَرَ الْمَلَائِكَةَ فَسَجَدُوا لَكَ وَأَسْكَنَكَ الْجَنَّةَ أَلَا تَشْفَعُ لَنَا إِلَى رَبِّكَ أَلَا تَرَى مَا نَحْنُ فِيهِ وَمَا بَلَغَنَا فَيَقُولُ رَبِّي غَضِبَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَا يَغْضَبُ بَعْدَهُ مِثْلَهُ وَنَهَانِي عَنْ الشَّجَرَةِ فَعَصَيْتُهُ نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى نُوحٍ فَيَأْتُونَ نُوحًا فَيَقُولُونَ يَا نُوحُ أَنْتَ أَوَّلُ الرُّسُلِ إِلَى أَهْلِ الْأَرْضِ وَسَمَّاكَ اللَّهُ عَبْدًا شَكُورًا أَمَا تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ أَلَا تَرَى إِلَى مَا بَلَغَنَا أَلَا تَشْفَعُ لَنَا إِلَى رَبِّكَ فَيَقُولُ رَبِّي غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَا يَغْضَبُ بَعْدَهُ مِثْلَهُ نَفْسِي نَفْسِي ائْتُوا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَأْتُونِي فَأَسْجُدُ تَحْتَ الْعَرْشِ فَيُقَالُ يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ وَاشْفَعْ تُشَفَّعْ وَسَلْ تُعْطَهْ قَالَ مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ لَا أَحْفَظُ سَائِرَهُ (صحيح البخاري 3092 -)

 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/