HOME      Khutba      உலக மோகம் | Tamil Bayan - 510   
 

உலக மோகம் | Tamil Bayan - 510

           

உலக மோகம் | Tamil Bayan - 510


بسم الله الرحمن الرّحيم
 
உலகமோகம்
 
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
 
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
 
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
 
கண்ணயத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அல்லாஹ்வின் பயத்தை, தக்வாவை, உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக அல்லாஹ்வின் மார்க்கத்தை தனி வாழ்க்கையிலும், பொதுவாழ்க்கையிலும், அல்லாஹ்வின் சட்டவரம்புகளை மதித்து நடக்கும்படி, அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த தூய வழிமுறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுமாறு எனக்கும், உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருடைய பாவங்களை மன்னித்து அல்லாஹ்வுடைய அன்பிற்குரியவர்களாகவும், அல்லாஹ்வுடைய பொருத்ததிற்குரிவர்களாகவும் ஆக்கி அருள்புரிவானாக! ஏமாற்றக்கூடிய, குழப்பத்தில் ஆளாக்கக்கூடிய இந்த உலக அலங்காரங்களில் மூழ்கி விடாமல் மறுமையை நினைவு கூர்ந்து, சொர்க்கத்தின் மீது ஆசை வைத்து இந்த உலகத்தை அல்லாஹ்விற்காக தியாகம் செய்தவர்கள், அற்பணித்தவர்களில் அல்லாஹு தஆலா என்னையும், உங்களையும் ஆக்கி அருள்புரிவானாக!
 
ஏமாற்றக்கூடிய இந்த துன்யாவில் ஏமாற்றத்திலிருந்தும் இதனுடைய அற்ப இன்பங்களில் மூழ்கி அல்லாஹ்வை மறப்பதிலிருந்தும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் என்னையும் உங்களையும் பாதுகாப்பானக ஆமீன்.
 
அன்பானவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) நமக்கு பல அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்கள். நம்மை நேர்வழியில் நடத்துவதற்காகவும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் பக்கம் அழைப்பதற்காகவும், சொர்க்க இன்பங்களில் நாம் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவும், பல அறிவுரைகளை நம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு கூறியிருக்கிறார்கள்.
 
அன்பானவர்களே! அதில் பல முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன். அதில் மிக முக்கியமான ஒரு விஷயமாக அறிஞர்கள் கருதுவது என்னவென்றால் மனிதன் இந்த உலகத்தில் வாழும்போது தன்னுடைய மனதை இந்த உலகத்திலே பறிகொடுத்து விடுகின்றான். உலக இன்பங்கள் உலக ஆசாபாசங்கள் மனிதனின் மனதை மயக்கிவிடுகின்றன. அவனுடைய அறிவை பேதலிக்க வைத்துவிடுகின்றன. மனிதன் அற்ப இன்பங்களை பார்த்து இந்த துன்யாவின் சுகபோகங்களை பார்த்து மறுமையை மறந்து விடுகின்றான். மார்க்கத்தை மறந்து விடுகின்றான். மரணத்தை மறந்து விடுகின்றான், படைத்த இறைவனை மறந்துவிடுகின்றான்.
 
ஆகவே,அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) இந்த உலகத்தை குறித்து, இந்த உலகம் உங்களை எப்படியெல்லாம் மயக்கும், எப்படியெல்லாம் இந்த துன்யாவின் அலங்காரம் உங்களை உலக மோகங்களில் சிக்கவைக்கும் என்று பல எச்சரிக்கைகளை நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.
 
உண்மையான முஃமின் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அவர்களுடைய அந்த எச்சரிக்கைகளை அந்த அறிவுரைகளைப் படித்து உணர்வு பெற்று மறுமையை முன்வைத்து வாழ்வான். யாருடைய உள்ளத்தில் ஈமான் பலகீனமாக இருக்குமோ, யாருடைய உள்ளத்தில் மறுமையுடைய நம்பிக்கை பலகீனமாக இருக்குமோ, அவர்கள் இந்த அறிவுரைகளையெல்லாம் புறக்கணிப்பார்கள். 
 
அல்லது இது யாருக்கோ சொல்லப்படுகின்ற விஷயங்கள் என்பதாக அந்த விஷயங்களை அப்படியே கடந்து செல்வார்கள். அதன் மூலமாக படிப்பினை பெறமாட்டார்கள்.
 
அன்பானவர்களே! அல்லாஹ்வுடைய ஒரு வசனத்தை கொண்டு ஆரம்பிப்போம். ரப்புல் ஆலமீன் அவனுடைய திருக்குர்ஆனிலே நம்மை பார்த்து பேசுகின்றான். அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) ஒவ்வொரு ஜும்ஆ தொழுகையிலும் அந்த வசனத்தை நினைவூட்டும் விதமாக நமக்கு அந்த வசனம் இடம் பெற்றிருக்கக்கூடிய அத்தியாயத்தை அவர்கள் ஜும்ஆ தொழுகையிலே வழமையாக ஓதி வந்திருக்கின்றார்கள்.
 
بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا (16) وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى
 
அல்லாஹ்சொல்கிறான், உங்களுக்குக்கு இவ்வளவு அறிவுரைகள் வழங்கப்பட்டும், இவ்வளவு புத்திமதிகள் கூறப்பட்டும், மறுமையைப் பற்றி எச்சரிக்கை உங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டும், சொர்க்கம், நரகம் பற்றி விளக்கம் சொல்லப்பட்டும் கூட நீங்கள் உலக வாழ்க்கைக்குத் தான் முன்னுரிமை கொடுக்கின்றீர்கள். இந்த உலக வாழ்க்கையைத் தான் நீங்கள் நேசிக்கின்றீர்கள். அதைத் தான் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றீர்கள். ஆனால் மறுமை வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை, நிரந்தரமான வாழ்க்கை. (அல்குர்ஆன் 87 : 16,17)
 
அன்பானவர்களே! அல்லாஹ் சொல்லக்கூடிய இந்த வசனம் நம்முடைய வாழ்க்கையிலே படிப்பினையாக எடுத்துப்பாருங்கள். உலகம், மறுமை என்று வரும் போது எதற்கு நாம் முன்னுரிமை கொடுக்கின்றோம்? எதை நாம் தேர்ந்தெடுக்கின்றோம்? 
 
இன்று நம்மிலே பலர் மார்க்கமாவது, அல்லாஹ்வுடைய ஹலால் ஹராம் சட்டமாவது. எனக்கு தேவை துன்யா. நான் பணக்காரனாக ஆக வேண்டும். நான் செல்வந்தராக ஆக வேண்டும். என் உறவினர் இவ்வளவு செல்வத்திற்கு சொந்தக்காரராக ஆகிவிட்டார். என்னுடைய அண்டை வீட்டாரிடம் இவ்வளவு செல்வம் சேர்ந்துவிட்டது. நான் இப்படியே இருந்தால் எப்படி? நான் என்ன ஏமாளியா? இப்படியாக அவன் உலகத்திலே போட்டி போட்டுக் கொண்டு பிறகு அவன் வியாபரத்திலே இறங்கும்போது, ஹலால், ஹராமை பார்ப்பதில்லை. எந்த வழியிலே செல்வம் வந்தாலும் சரி. அதை அவன் சேர்ப்பதற்கு தயாராகி விடுகின்றான். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கை செய்த ஒரு ஹதீஸை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்வதை பார்க்கிறோம். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹு தஆலா நாம் வாழக்கூடிய இந்த காலத்தை காட்டி கொடுத்ததை போன்று, நாம் வாழக்கூடிய இந்த மக்களை காட்டிக் கொடுத்து, நம்மை கண்கூடாக பார்த்து அல்லாஹ்வுடைய தூதர் இந்த ஹதீஸை சொன்னது போன்று இருக்கும்.
 
ஹதீஸினுடைய பொருள் ; ரஸுலுல்லாஹ் (ஸல்) சென்னார்கள்,
 
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ، لاَ يُبَالِي المَرْءُ مَا أَخَذَ مِنْهُ، أَمِنَ الحَلاَلِ أَمْ مِنَ الحَرَامِ» (صحيح البخاري 2059 -)
 
கண்டிப்பாக ஒரு காலம் இப்படி வந்தே தீரும். அந்த காலம் எப்படி இருக்கும்? அந்த காலத்திலே மனிதன் செல்வத்தை எப்படி சம்பாதித்தால் என்ன? செல்வத்தை எப்படி எடுத்தால் என்ன? சேகரித்தால் என்ன? ஹலாலில் வந்தால் என்ன? ஹராமில் வந்தால் என்ன? எனக்கு செல்வம் வேண்டும் என்ற நிலைக்கு மனிதன் ஆகிவிடுவான். 
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 2059.
 
அன்பானவர்களே!, நமது சமுதாய மக்களில் இன்று இந்த ஹதீஸுக்கு ஏற்றமாக இருப்பதைப் பார்க்கிறோம். அல்லாஹு தஆலா நம்மை அதுபோன்று ஆக்காமல் இருப்பானாக! 
 
எவ்வளவு பயங்கரமான எச்சரிக்கை? சிறு சிறு விஷயத்தையும் ஹலால், ஹராமை பார்த்து ஹலாலை மட்டுமே செய்யக்கூடியவன், ஹலாலின் பக்கம் மட்டுமே நெருங்கக்கூடியவன் தான் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவன். ஹராம் என்று தெரிந்த மாத்திரத்தில் அந்த ஹராமை விட்டு வெருண்டு ஓடக்கூடியவன், ஹராமை விட்டு தன்னை காத்துக் கொள்ளக் கூடியவன்தான் அவன் உண்மையான முஃமின். 
 
ஹராம் என்று தெளிவானது ஒரு பக்கம் இருக்கட்டும். அதை ஒரு முஸ்லிம் அறவே செய்யக்கூடாது. அதன் பக்கம் நெருங்கவே கூடாது. இஸ்லாமுடைய, ஈமானுடைய இன்னொரு தரஜா இருக்கிறது. மேன்மையான உயர்வான ஒரு அந்தஸ்து இருக்கிறது. 
 
அதாவது ஒரு முஃமின் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடக்கூடியவன் இந்த காரியம் எனக்கு ஹலாலாக இருக்குமா? இல்லை, ஹராமாக இருக்குமா? என்ற சந்தேகம் வந்து விட்டால் கூட அந்த சந்தேகமான விஷயங்களின் பக்கம் அவன் செல்லமாட்டான்.
 
عَنْ أَبِي الْحَوْرَاءِ السَّعْدِيِّ قَالَ قُلْتُ لِلْحَسَنِ بْنِ عَلِيٍّ مَا حَفِظْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ فَإِنَّ الصِّدْقَ طُمَأْنِينَةٌ وَإِنَّ الْكَذِبَ رِيبَةٌ (سنن الترمذي2442 -)
 
அல்லாஹ்வுடைய தூதர் தனது தோழர்களுக்கு அறிவுரை சொன்னார்கள்; ஒன்று உனக்கு உள்ளத்திலே சந்தேகத்தை கொடுக்கிறதா? அதை விட்டு விட்டு சந்தேகம் இல்லாத விஷயத்திற்கு நீ வந்துவிடு.
 
அறிவிப்பாளர்: ஹசன் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி, எண்: 2442
 
அன்பானவர்களே! எவ்வளவு ஒழுக்கத்தை, ஒரு தூய்மையை அல்லாஹ்வுடைய தூதர் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த உலகம் நம்மை கவர்ந்து கொண்டே இருக்கும், சோதனையில் ஆக்கிக் கொண்டே இருக்கும். 
 
சில நேரம் மனைவியின் வழியாக வரலாம், பிள்ளைகளின் வழியாக வரலாம், நமது குடும்பத்தின் வழியாக வரலாம், நாம் சம்பாதிக்கக் கூடிய செல்வத்தின் வழியாக வரலாம், பல வழிகளிலே இந்த துன்யா வந்து நமது மனதை மயக்கிக் கொண்டே இருக்கும். நமது சிந்தனைகளை மாற்றிக் கொண்டே இருக்கும். 
 
கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் இந்த துன்யா நமது உள்ளத்தில் இருக்கிறதா இல்லையா? எனபதற்கு சில டெஸ்டுகள் இருக்கிறது. நாம் சொல்லலாம், வாய்கிழிய பேசலாம், பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நானெல்லாம் அப்படி கிடையாது, என்னுடைய உள்ளத்தில் துன்யா கிடையாது, நான் ரொம்ப சுத்தமானவன், நான் ரொம்ப நேர்மையானவன், இப்படியாக பெருமை பேசலாம், அல்லாஹு தஆலா அந்த பெருமையிலிருந்து பாதுகாப்பானாக!
 
அன்பானவர்களே! நாம், அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கட்டியதற்கு பிறகு நமக்கு எது நினைவுக்கு வருகிறதோ அதுதான் நமது உள்ளத்திலே இருக்கிறது. அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கட்டியதற்கு பிறகு அல்லாஹ் நினைவில் இருந்தால், அந்த ஆஃகிரத் மட்டும் நினைவில் வந்தால், சொர்க்கம் நரகம் கண்ணுக்கு முன்னால் வந்தால் அல்ஹம்துலில்லாஹ் தப்பித்தோம், நமது உள்ளத்தில் அல்லாஹ் இருக்கிறான். அல்லாஹ்வுடைய வாக்கு இருக்கிறது. அல்லாஹ்வுடைய எச்சரிக்கை இருக்கிறது. 
 
தக்பீர் கட்டியதற்கு பிறகு வேறுவேறு ஞாபகங்கள், வேறுவேறு எண்ணங்கள் நம் உள்ளத்தில் இருக்கிறது. நமது உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதற்கு ஒரு சிறிய பரிசோதனை தக்பீர் கட்டியதற்கு பிறகு நிலையிலே நிற்கும்போது அல்லது ருகூவிலே இருக்கும்போது அல்லது ஸுஜுதிலே இருக்கும் போது நமக்கு என்ன நினைவுக்கு வருகிறதோ அதுதான் நம் கல்பிலே இருக்கிறது. அரபியிலே சொல்வார்கள்;
 
பாத்திரத்திலே உள்ளது தான் ஆப்பையிலே வரும். எது பாத்திரத்தில் இருக்குமோ அதுதான் ஆப்பையில்வரும். 
 
நம்முடைய நாவு ஓதுகிறது குர்ஆனின் வசனங்களை. நம்முடைய நாவு திக்ர் செய்கிறது அல்லாஹ்வுடைய தஸ்பீஹை. ஆனால் உள்ளமோ வேறொன்றை நினைத்துக் கொண்டிருக்கின்றதென்றால் ஓதக்கூடிய வசனங்களோடு அது ஒத்துப் போகாமல், அந்த உணர்விலே இறங்காமல், அது வேறு ஒரு பாதையில் பயணித்துக்  கொண்டிருக்கிறதென்றால், அந்த உள்ளத்தில் அதுதான் இருக்கிறது அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய ரஸுலும் மறுமை வாழ்க்கையும் இல்லை. 
 
அன்பானவர்களே!அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த துன்யாவை பயந்து கொள்ளுமாறு நமக்கு அறிவுரை சொன்னார்கள்.
 
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنْ الدُّنْيَا (صحيح مسلم 169 -)
 
குழப்பங்கள் வரக்கூடிய காலத்திற்கு முன்னால் நீங்கள் அமல்களை அதிகமாக செய்து கொள்ளுங்கள். 
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 169.
 
ஒரு மிகப்பெரிய பாதுகாப்புக்குரிய வழிகளை அல்லாஹ்வுடைய தூதர் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
 
கண்ணியத்திற்குரியவர்களே! எங்கெல்லாம் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) துன்யாவின் ஆசாபாசங்களை குறித்து எச்சரிக்கை செய்தார்களோ, அந்த இடத்தில் அந்த ஆசாபாசாங்களிலிருந்து அந்த துன்யாவின் அழிவு வலையிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான பாதைகளையும் அதற்குறிய வழிகளையும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
 
எப்படிசொன்னார்கள்? துன்யாவில் சோதனைகள் வரும். குழப்பங்கள் வரும். அதற்கு முன்னால் நீங்கள் அமல்களை அதிகப்படுத்தி கொள்ளுங்கள். ஆம். அன்பானவர்களே! ஒரு மனிதன் அல்லாஹ்வுடைய இபாதத்திலே தன்னுடைய மனதை தொலைத்து விட்டால் இந்த துன்யாவின் ஏற்றதாழ்வு அவனை பாதிக்காது .
 
ஒரு மனிதன் அல்லாஹ்வின் இன்பத்திலே அல்லாஹ்வின் இபாதத்திலே அவன் இன்பம் கண்டு விட்டால், அல்லாஹ்வுடைய இபாதத்திலே பொறுமையாக இருந்தால், -அல்லாஹ்வை இபாதத்து செய்வதற்கும் பொறுமை வேண்டும் மனம் உறுதிவேண்டும். நிற்பதற்கு, அல்லாஹ்வை நின்று வணங்குவதற்கு, ருகூவிலே நேரங்களை கழிப்பதற்கு, ஸுஜுதிலே நேரங்களை கழிப்பதற்கு, குர்ஆனை அதிக நேரம் ஓதுவதற்கு, அதிக நேரம் அல்லாஹ்வை திக்ர் செய்வதற்கு, அதற்கும் பொறுமைவேண்டும்-
 
இன்று பலருக்கு டீவி பார்ப்பதிலே இருக்ககூடிய பொறுமை, செல்ஃபோனை பயன்படுத்துவதிலே இருக்ககூடிய பொறுமை, அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதுவதிலே இல்லை. மார்க்க கல்விகளை கற்பதற்கு அவர்களுக்கு இருப்பதில்லை,
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை பாருங்கள்; ஒரு கடுமையான இருள் சூழ்ந்த பயங்கரமான இரவை கொண்ட ஓர் இரவு அப்படிப்பட்ட குழப்பங்கள் இருக்கும் ஒரு காலத்திலே அந்த காலம் வருவதற்கு முன்னால் அமல்களை செய்து கொள்ளுங்கள். அந்த காலம் வரும் பொழுதும் அமல்களை செய்து கொள்ளுங்கள்.
 
அந்த காலத்தில் இருக்கும் போதும் அமல்களை செய்ய வேண்டும். அமல் ஒன்றுதான் அந்த குழப்பத்திலிருந்து  பாதுகாக்ககூடியது அல்லாஹ்வின் அருளால்.
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 169.
 
கண்ணியத்திற்குரியவர்களே! யார் இல்மை கொண்டு, ஈமானைக் கொண்டு, நல்ல அமல்களைக் கொண்டு தன்னை பாதுகாத்துக் கொள்ளாமல் அந்த நல்ல அமல்கள் இல்முடைய அந்த ஒளியை கொண்டு வராமல் இந்த துன்யாவின் ஆசாபாசங்களிலே, இந்த துன்யாவின் மோகங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ, அவர்களை,    அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய எச்சரிக்கையை கவனியுங்கள்.
 
என்ன சொன்னார்கள்? அந்தகாலத்திலே இத்தகையமக்கள்,
 
يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا
 
காலையில் முஃமினாக இருப்பவன் மாலையில் காஃபிராக மாறியிருப்பான். மாலையிலே முஃமினாக இருப்பவன் காலை விடிவதற்குள் காஃபிராகிவிடுவான். 
 
என்ன பொருளில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை சொன்னார்கள்? பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தவர்களெல்லாம் கோயில்களுக்கு சிலைகளை வணங்குவதற்கு சென்றுவிடுவார்களா? அல்லது சிலுவைகளை வணங்குவதற்கு சர்ச்சுகளுக்கு சென்றுவிடுவார்களா?
 
அல்லாஹ்வுடைய தூதர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன விளக்கத்தை சொன்னார்கள் பாருங்கள்.
 
يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنْ الدُّنْيَا
 
தன்னுடைய மார்க்கத்தை மார்க்கப்பற்றை உலகத்தின் அற்ப செல்வத்திற்காக விற்று விடுவான். 
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 169.
 
ஒரு வியாபரத்தில் உண்மை பேசினால், ஒன்று வியாபாரமே நடக்காது. அல்லது வியாபாரம் நடக்கும், லாபம் குறைவாக இருக்கும் என்றால் பொய் பேச துணிந்து விடுவான். கொஞ்சம் ஏமாற்றினால் என்ன? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமல்ல வியாபரத்தில். இதெல்லாம் சகஜம் தானே இப்படியாக ஒரு எண்ணத்திற்கு அவன் வந்து விட்டால், உண்மை அமானிதம் என்ற மார்க்கத்தை அந்த உலகத்தின் செல்வத்திற்காக விற்றுவிடுவான். 
 
கண்ணியத்திற்குரியவர்களே! இறை நிராகரிப்பு என்பது அல்லாஹ் இல்லை என்று நிராகரிப்பது மட்டுமல்ல. அல்லாஹ்வின் சட்ட வரம்புகளை மீறுவதும் இறை நிராகரிப்பிலே கொண்டு போய் சேர்த்து விடும்.
 
ஆகவே தான் இறை நிராகரிப்பு என்பது பல படித்தரங்களை உடையது. ஒன்று ஒன்றை விட அதிகமானது. இறுதியாக அல்லாஹ்வை நிராகரிப்பது.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த உலக செல்வத்தை குறித்து எச்சரிக்கை செய்யும் போது பயந்தார்கள். நம் மீது வறுமையை அவர்கள் பயப்படவில்லை. நாம் ஏழையாக இருப்பதை பார்த்து அவர்கள் வருத்தப்படவில்லை. கவலைப்படவில்லை. ஆனால் நாம் செல்வந்தர்களாக மாறும் போது மார்க்கத்தை விட்டு விடுவோமோ? அல்லாஹ்வுடைய சட்டத்தை மீறிவிடுவோமோ? நமக்குள் ஒருவருக்கொருவர் பொறாமைப்பட்டு அடித்துக் கொள்வோமோ?
 
இந்த துன்யாவுக்காக உறவுகளை முறித்து விடுவோமோ? அல்லாஹ்வுடைய மார்க்கத்தை விட்டு விட்டு வேறு வழியில் சென்று விடுவோமோ? என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பயந்தார்கள்.
 
அவர்கள் பயந்தது இன்று சமூகத்தில் பெரிய எண்ணிக்கை கொண்ட மக்களிலே அப்படியே நிகழ்வதை நாம் பார்க்கிறோம். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்வதை பாருங்கள்.
 
فَوَاللَّهِ مَا الْفَقْرَ أَخْشَى عَلَيْكُمْ   
 
அல்லாஹ்வின் மீது சத்தியமாக சொல்கிறேன். வறுமையைப் பற்றி நான் உங்கள் விஷயத்தில் பயப்படவில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக சொல்கிறேன் என்று சொன்னார்கள். (1)
 
அறிவிப்பாளர்: அபூ உபைதா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 3712. (புகாரி: 3712, 5945, (இப்னுமாஜா: 3987, (திரமிதி: 2386) முஸ்னது அஹ்மது: 5261)
 
 
 
வறுமையைப் பற்றி கொஞ்சமும் பயமில்லை. நம்முடைய விஷயத்தில் எதார்த்தத்தில் பார்க்கும் போது, ஒரு காலம் இருந்தது. நம்முடைய முன்னோர்கள், நம் தாய் தந்தையின் ஆரம்பகாலம் நம்முடைய பாட்டன்மார்கள் ஒரு பெரிய வறுமையிலே இருந்தார்கள். பெரிய சிரமத்திலே இருந்தார்கள். அப்போது அவர்களிடத்தில் இருந்த அந்த மார்க்கப்பற்று ஏழையாக இருக்கும்போது மார்க்கத்தில் உறுதியாக இருந்த அந்த உறுதி இன்று செல்வம் வந்த பிறகு இருக்கிறதா? 
 
அல்லாஹ்வின் மார்க்கத்தை அவர்கள் நேசித்தது, அல்லாஹ்வுடைய வேதத்தை அவர்கள் ஓதியது, அந்த அடிச்சுவடுகளை தானே இன்று நாம் பார்கிறோம். நம்முடைய முன்னோர்கள் இத்தனை மஸ்ஜிதுகளை, மதராஸாக்களை, உருவாக்கியிருக்கவில்லையென்றால் இன்று நம்மால் உருவாக்கியிருக்கமுடியுமா?
 
உலகத்திலே பயணம் செய்து பாருங்கள். எத்தனை இடங்களில் நம் முன்னோர்கள் மஸ்ஜிதுகளாக, மதரஸாக்களாக, மர்க்கஸுகளாக உருவாக்கியிருக்கிறார்கள் என்று.
 
அன்பானவர்களே! இன்று துன்யா வந்துவிட்டது. இந்த துன்யாவை ஏன் அல்லாஹ் கொடுக்கிறான் என்பதை அறியாமல் கிடைத்ததையெல்லாம் சுருட்டி கொள்ளலாம் என்பதாக சிலர் எண்ணுகிறார்கள்.
 
இது எப்படியென்றால், ஒரு மனிதனுக்கு முன்பு உணவு வைக்கப்படுகிறது. ஒரு பெரிய தட்டில் ருசியான உணவு வைக்கப்படுகிறது. ஒரு மனிதனுக்கு முன்னால் ஒரு பெரிய ஸஹனிலே உணவு நிறப்பமாக வைக்கப்படுகிறது. பலவகையான உணவு, பலவகையான காய்கறிகள், பல வகையான மாமிசவகைகள், பொரித்து வறுத்து, குழம்புசெய்து, இப்படியாக வைக்கப்படுகின்றன.
 
ஒரு புத்தி உள்ள மனிதன் என்ன செய்வான்? தனது பசிக்கு எவ்வளவு தேவையோ, தன்னுடைய வயிற்றை பசி போக்கக்கூடிய அளவுக்கு எவ்வளவு நிரப்பமாக தேவையோ அதை மட்டும் சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட்டால் அவன் புத்திசாலி. 
 
அப்படி இல்லாமல் இவ்வளவு உணவு இருக்கிறதே! எனக்கு முன்னால் சட்டி சாப்பாடு இருக்கிறதே! தட்டுசோறு இருக்கிறதே! என்பதாக இவற்றை அள்ளி தனது வயிற்றிலே கொட்டிக்கொள்ள நினைத்தால் அவனுடைய நிலை என்னவாக இருக்கும்? சொல்லுங்கள் பார்க்கலாம்.
 
சாப்பிட்டதையெல்லாம் அவன் கடைசியில் வாந்தி எடுத்துதான் ஆகவேண்டும். ஓரளவுக்கு சாப்பிட்டால் அது வயிற்றிலே செரிமானமாகும். நெஞ்சு வரை வந்தது, பிறகு தொண்டை வரை வந்தது, பிறகு தொண்டைக்குழியை எட்டியது, பிறகு வாய் வரை, கடைசியில் என்ன ஆகும்? சாப்பிட்டதையெல்லாம் அவன் வாந்தி எடுத்தாக வேண்டும். இப்படியே அவன் சாப்பிட்டு கொண்டு இருந்தால் கடைசியில் ஒரு நிலை வரும், எதையும் சாப்பிட முடியாமல் ஆகி விடும் நிலைமை.
 
அன்பானவர்களே! இந்த துன்யாவில் சிலர் மூழ்கி கொண்டு இப்படித்தான் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள். துன்யா வருகிறது, வருகிறது, அள்ளுகிறார்கள், அள்ளுகிறார்கள், அள்ளுகிறார்கள் கடைசியில் அந்த துன்யா அவர்களை அழித்து விடுகிறது. அந்த துன்யா அவர்களை நாசமாக்கி விடுகிறது .
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைப் பாருங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக வறுமையை நான் பயப்படவில்லை. நான் உங்கள் மீது எதை பயப்படுகிறேன்?
 
وَلَكِنِّي أَخْشَى أَنْ تُبْسَطَ عَلَيْكُمْ الدُّنْيَا
 
உலகம்! அதன் வசதிகள் உங்களுக்கு விரிவாக்கப்படுவதை, நீங்கள் செல்வந்தர்களாக உலக வசதிகளுக்கு ஆளாக்கப்படுவதை நான் பயப்படுகிறேன்.
 
كَمَا بُسِطَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ
 
உங்களுக்கு முன்னால் உள்ளவர்களுக்கு இந்த உலக வசதி கொடுக்கப்பட்டது போன்று,
 
فَتَنَافَسُوهَا كَمَا تَنَافَسُوهَا
 
அந்த உலகத்திலே அவர்கள் போட்டிபோட்டார்கள். நான் பெரியவனா. நீ பெரியவனா? எனது ஆட்சியா? உனது ஆட்சியா? என்று. அவர்கள் போட்டி போட்டது போன்று நீங்களும் போட்டி போட ஆரம்பிப்பீர்கள், பெருமை அடிக்க ஆரம்பிப்பீர்கள்.
 
وَتُهْلِكَكُمْ كَمَا أَهْلَكَتْهُمْ
 
அவர்களை இந்த துன்யா அழித்து நாசமாக்கியது போன்று உங்களையும் இந்த துன்யா அழித்து நாசமாக்கும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
அறிவிப்பாளர்: அபூ உபைதா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 3712.
 
இமாம் இப்னு ஹுஸைமா ரஹிமஹுல்லாஹ் இன்னொரு ஹதீஸை பதிவு செய்கிறார்கள். 
 
عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:إِنَّ هَذَا الدِّينَارَ وَالدِّرْهَمَ أَهْلَكَا مَنْ كَانَ قَبْلَكُمْ، وَلا أُرَاهُمَا إِلا مُهْلِكَاكُمْ. (المعجم الكبير للطبراني -  9925)
 
இந்த காசு, பணம், தங்கம், வெள்ளி, உங்களுக்கு முன்னால் உள்ளவர்களை அழித்திருக்கிறது. அந்த இரண்டும் கண்டிப்பாக உங்களையும்அழிக்கும்.
 
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஃஜம்கபீர்தப்ரானி, எண்: 9925.
 
அன்பானவர்களே! இந்த துன்யா  இதில் அலங்கரிக்கப்பட்ட தங்கம், வெள்ளி, இதனுடைய செல்வங்கள், மனிதனை மயக்கக்கூடியதாக இருக்கும். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய மற்றுமொரு ஹதீஸை இமாம் இப்னுமாஜா பதிவு செய்வதை பார்க்கிறோம்.
 
(இப்னுமாஜா: 3990) (முஸ்னது அஹமது: 10611, 10716)
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிரசங்கம் நடத்தினார்கள்; குத்பாவில் சொன்னார்கள்;
 
عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ خَطِيبًا فَكَانَ فِيمَا قَالَ إِنَّ الدُّنْيَا خَضِرَةٌ حُلْوَةٌ وَإِنَّ اللَّهَ مُسْتَخْلِفُكُمْ فِيهَا فَنَاظِرٌ كَيْفَ تَعْمَلُونَ أَلَا فَاتَّقُوا الدُّنْيَا وَاتَّقُوا النِّسَاءَ (سنن ابن ماجه – 3990)
 
இந்த துன்யா செழிப்பாக இருக்கும், பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும். ரொம்ப இனிப்பாக இருக்கும் சுவைப்பதற்கு. துன்யா அப்படியே சுண்டி இழுக்கும் பார்க்கும் போது மனதை பறிக்கின்ற அளவிற்கு, மனது அப்படியே லயித்துவிடுகின்ற அளவிற்கு, அந்த மோகத்திலே மூழ்கி விடுகின்ற அளவிற்கு இந்த துன்யா அப்படித்தான் இருக்கும். அது இந்த துன்யாவினுடைய இயற்கை.
 
அல்லாஹு தஆலா இந்த துன்யாவிலே, உங்களை ஒருவர் பின் ஒருவராக இந்த துன்யாவிற்கு வாரிசாக, இந்த துன்யாவின் பிரதிநிதிகளாக ஆக்குவான். உங்கள் தாய்தந்தையருக்கு பின் நீங்கள், உங்களுக்குப் பிறகு உங்களது பிள்ளைகள், உங்கள் பிள்ளைகளுக்குப் பிறகு அவர்களின் பிள்ளைகள் என்று இப்படி வாழையடி வாழையாக உங்களை அல்லாஹு தஆலா கொண்டுவருவான்.
 
அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான்.  நீங்கள் எப்படி செய்யப்போகிறீர்கள்? எப்படி நடந்து கொள்ளப்போகிறீர்கள்? உங்களது அமல் எப்படி இருக்கும்? துன்யாவுக்காகவா? அல்லது தீனுக்காகவா? மார்க்கத்திற்காகவா? அல்லது உலகத்திற்காகவா? அல்லாஹ்வை வணங்குவதற்கு உங்களது நேரம் எவ்வளவு செலவழிகிறது? இந்த உலகத்தின் இன்பத்தை சம்பாதிப்பதற்கு அல்ல. சம்பாதித்ததை செலவு செய்வதற்கு எவ்வளவு நேரத்தை செலவு செய்கிறீர்கள் என்பதை நாம் பார்க்கிறோம். 
 
ஹலாலான சம்பாத்தியத்தை சம்பாதிப்பதற்கு, தன்னுடைய குடும்பத்தார்களுக்கு செலவழிப்பதற்காக, அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் செலவழிப்பதற்காக சம்பாதிப்பதிலே எந்த தவறும் இல்லை. அப்படி சம்பாதிக்கும் போது கூட வணக்க வழிபாடுகள் பாழாகாமல் இருக்கவேண்டும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; அல்லாஹ் உங்களை பார்க்கிறான். நீங்கள் எப்படி அமல் செய்யபோகிறீர்கள்? உங்கள் அமல் எப்படி இருக்கிறது என்று.
 
அன்பானவர்களே! அல்லாஹ் நம்மை பார்த்து கொண்டு இருக்கிறான். இந்த செல்வம் கொடுக்கப்பட்ட நாம் அல்லாஹ்வுடைய பார்வையிலிருந்து தப்பிவிட முடியாது. அல்லாஹ்வுடைய அந்த கண்காணிப்பிலிருந்து தப்பி விட முடியாது. அல்லாஹ் நம்மை பார்த்துக்கொண்டு இருக்கிறான். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
 
أَلَا فَاتَّقُوا الدُّنْيَا  -முஃமின்களே! அறிந்து கொள்ளுங்கள். இந்த துன்யாவை பயந்து கொள்ளுங்கள் என்று. 
 
எவ்வளவு பயங்கரமான எச்சரிக்கை பாருங்கள்! நம் மீது அவ்வளவு அக்கறை கொண்டு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். 
 
இந்த துன்யாவை பயந்து கொள்ளுங்கள். இது சாதாரணமானது அல்ல. இன்னும், وَاتَّقُوا النِّسَاءَ இந்த துன்யாவிலே குறிப்பாக பெண்களை பயந்து கொள்ளுங்கள். ஒரு மனிதனின் ஈமானுக்கு சோதனை, ஒரு மனிதனுடைய தக்வாவுக்கு சோதனை, பெண்களிலே இருக்கிறது. 
 
அறிவிப்பாளர்: அபூ சயீத் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு மாஜா, எண்: 3990.
 
அல்லாஹு தஆலா தனக்கு ஹலாலாக்கியதை தவிர இந்த முஃமின் இந்த உலகத்திலே எந்த பெண்ணோடும் அந்த தவறான சுகத்திலே இன்பம் கண்டுவிடக்கூடாது . 
 
அல்லாஹு தஆலாவுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
 
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الْجَنَّةَ (صحيح البخاري -  5993)
 
நீங்கள் எனக்கு இரண்டு காரியங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு சொர்க்கத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று. தன்னுடைய இரண்டு தொடைகளுக்கு மத்தியில் உள்ள மர்மஸ்தானத்திற்கும், இரண்டு உதடுகளுக்கும் மத்தியில் உள்ள நாவிற்கும் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். ஹராமானதிலே இதை நீங்கள் செலவழிக்கமாட்டீர்கள், பயன்படுத்தமாட்டீர்கள் என்று, நான் உங்களுக்காக சொர்க்கத்தை பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
 
அறிவிப்பாளர்: சஹ்ல் இப்னு சஃத் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 5993.
 
அன்பானவர்களே! ஒரு முஸ்லிமுடைய இஸ்லாமை அழிக்கக்கூடியது, ஒரு முஃமினுக்கு மிக சோதனையானது, இந்த தங்கம் வெள்ளி இந்த உலகத்தின் மோகம் அது போன்று இந்த ஹராமான ஆசை அல்லாஹ் நம்மை பாதுகாக்கவேண்டும்!
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இது குறித்து மிகப்பெரிய எச்சரிக்கை செய்தார்கள். ஆகவே தான் சஹாபாக்களுடைய வாழ்க்கையிலே பார்க்கிறோம். கண்ணியத்திற்குரிய அந்த தோழர்கள் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த தர்பியத்திலே வாழ்ந்தவர்கள், ஈமானிய பக்குவத்தை பெற்றவர்கள் இந்த துன்யாவை பார்த்தால் பயந்தார்கள். 
 
நாம் துன்யாவை பார்த்தால் சந்தோஷப்படுகிறோம். காசு பணம் அதிகமாக அதிகமாக நமக்கு மகிழ்ச்சி அதிகமாகிறது. அல்லாஹ் நமக்கு பரக்கத் செய்கிறான் என்று சொல்கிறோம் . 
 
இன்னும் சில பேரை பார்க்கிறோம். வட்டியில் வியாபாரம் செய்து பலரை ஏமாற்றி தொழில் செய்து, பலரை ஏழைகளாக ஆக்கி விட்டு இவர் பணக்காரர் ஆகி இருப்பார். பலரையெல்லாம் போண்டியாக்கி விட்டு இவர் கோடிஸ்வரராக ஆகியிருப்பார். இப்படியாக சேகரித்து சம்பாதித்த தனது வீட்டிற்கு முன்னால், கடைக்குமுன்னால்,
 
هذا من فضل ربي  -ஹாதா மின் ஃபழ்லி ரப்பி என்று எழுதிமாட்டியிருப்பார். 
 
சம்பாதித்த வீடு, கட்டியவீடு சம்பாதித்த செல்வமெல்லாம் ஹராமானதிலிருந்து வந்தது. ஆனால் அவர் மாட்டி வைத்திருக்கக்கூடிய போர்டு? மாஷா அல்லாஹ், தபாரக்கல்லாஹ், ஹாதாமின் ஃபழ்லி ரப்பி என்று. 
 
கண்ணியத்திற்குரிவர்களே! இவர்கள் இரண்டு விதமான பாவங்களுக்கு ஆளாகிறார்கள். ஒன்று ஹராமான வழியிலே சம்பாதித்தது. இரண்டாவது எந்த ஹராமை அல்லாஹு தஆலா அவனுடைய கோபத்திற்குரியது, அவனது சாபத்திற்குரியது, என்று சொன்னானோ, அதற்கு அல்லாஹ்வுடைய கிருபை என்று பெயர்வைத்தது. 
 
இவர்களுக்கு உதாரணம் என்னவென்றால், குடிப்பதோ சாராயம், குடிப்பதோ மது ஆனால், அதற்கு முன்னால் இவர்கள் பிஸ்மில்லாஹ் சொல்கின்றார்கள். குடிப்பது தடுக்கப்பட்ட ஒன்று, சாப்பிடுவது ஹராமான ஒன்று. ஆனால் பிஸ்மில்லாஹ் என்று சாப்பிடுகிறேன் என்று சொல்கிறான். 
 
ஹராமிலே சம்பாதித்த செல்வத்தை கொண்டு ஒருவன் மகிழ்ச்சியடைந்தால், இது அல்லாஹ் எனக்கு கொடுத்த செல்வம் என்று சொன்னால் அவன் இரண்டு விதமான பெரும்பாவத்திற்கு ஆளாகிறான். 
 
அன்பானவர்களே! பயந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்கள் செல்வத்தை பார்த்து சந்தோஷப்படவில்லை, செல்வத்தைப் பார்த்து அவர்கள் ஒரு மமதைக்கு ஆளாகவில்லை, பயந்தார்கள் மறுமையை நினைத்தார்கள். 
 
இரண்டு சம்பவங்களை பாருங்கள். ஒன்று அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு முன்னால் இஃப்தாருடைய நேரத்திலே உணவுகள் வைக்கப்படுகிறது. இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவுசெய்கிறார்கள்,
 
قَالَ أُتِيَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَوْمًا بِطَعَامِهِ فَقَالَ قُتِلَ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ وَكَانَ خَيْرًا مِنِّي فَلَمْ يُوجَدْ لَهُ مَا يُكَفَّنُ فِيهِ إِلَّا بُرْدَةٌ وَقُتِلَ حَمْزَةُ أَوْ رَجُلٌ آخَرُ خَيْرٌ مِنِّي فَلَمْ يُوجَدْ لَهُ مَا يُكَفَّنُ فِيهِ إِلَّا بُرْدَةٌ لَقَدْ خَشِيتُ أَنْ يَكُونَ قَدْ عُجِّلَتْ لَنَا طَيِّبَاتُنَا فِي حَيَاتِنَا الدُّنْيَا ثُمَّ جَعَلَ يَبْكِي  (صحيح البخاري – 1195)
 
உணவு வைக்கப்படுகிறது. இஃப்தாருக்கு கொஞ்சம் உணவுகள் அதுவும் ஒரு சில உணவுகள், -நம்மை போன்று இல்லை. இந்த இஃப்தாரை பார்த்தால் அவ்வளவுதான் நமக்கு என்ன ஃபத்வா கொடுப்பார்களோ?- அதை பார்த்து விட்டு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் )ரலி( அவர்கள் அழ ஆரம்பித்தார்கள். சொன்னார்கள், எனக்கு முன்னால் முஸ்அப் இப்னு இப்னு உமைர் கொல்லப்பட்டார். அவரை கஃபனிடுவதற்கு கூட எங்களிடத்தில் துணி இல்லை. அவரின் தலையை மறைத்தால் கால் வெளிப்பட்டது. காலை மறைத்தால் தலை வெளிப்பட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. எங்களில் ஒருவர் இறந்ததற்கு பிறகு அவரை கஃபனிடுவதற்கு கூட வசதியில்லாமல் இருந்தது. 
 
ஆனால் இன்று எங்களுக்கு இவ்வளவு வசதி வந்திருக்கின்றன. பயமாக இருக்கிறது. நாங்கள் செய்த நன்மைகளுக்கு அல்லாஹ் உலகத்திலேயே கூலி கொடுத்து விடுகின்றானோ என்று. பயந்தார்கள், அழுதார்கள். பிறகு அந்த இஃப்தாரை ஒதுக்கிவிட்டார்கள். 
 
நூல்: புகாரி,  எண்: 1195,1196, 3739, 1195.
 
அன்பானவர்களே! கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும். இந்த செல்வம் வரும்போது இது வருகிறது என்று அள்ளிக் கொண்டு அணைத்துக் கொண்டு பெரிய மோகத்திலே மமதையிலே மூழ்கி விடக்கூடாது. ஹலாலான வழியிலே வருகிறதா? அனுமதிக்கப்பட்ட வழியிலே வருகிறதா? அதற்கு பிறகு எப்படி செலவு செய்கிறோம்? 
 
உமர் ஃபாருக் (ரலி) அவர்களுடைய ஒரு சம்பவத்தை இமாம் இப்னு ஹஜர் ஃபத்ஹுல்பாரி –ல் பதிவுசெய்கிறார்கள். கிஸ்ராவுடைய செல்வங்கள் கொண்டு வரப்பட்டது. அந்த செல்வத்தை பார்த்தவுடன் உமருல் ஃபாருக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அழுதார்கள். அதை மூடிவைக்கச் சொன்னார்கள். பிறகு மக்களெல்லாம் வந்ததற்குப் பிறகு அந்த செல்வத்தை பங்குவைக்க அவர்கள் ஆரம்பித்தார்கள். 
 
அவர்கள் அழுததைப் பார்த்து மக்களெல்லாம் ஆச்சரியப்பட்டார்கள்! உமரே! இவ்வளவு பெரிய கனீமத்துகளை அல்லாஹ் கொடுத்திருக்கிறான். இந்த கனீமத்துகளை பார்த்து சந்தோஷப்படவேண்டிய நேரத்திலே நீங்கள் அழுகிறீர்களே! என்று. உமருல் ஃபாரூக் சொன்னார்கள்; ஆம். இந்த செல்வத்தை பார்த்து அழ வேண்டும். இதற்கு முன்னால் இந்த செல்வ செழிப்பு கொடுக்கப்பட்ட மக்கள் இந்த செல்வத்திற்காக ஒருவரை ஒருவர் கொலை செய்தார்கள். ஹராமை ஹலாலாக்கினார்கள். மக்கள் தங்களுக்கு மத்தியில் வெறுப்புக்கும், பகைமைக்கும் ஆளானார்கள். இப்படியாக உமருல் ஃபாரூக் அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள். 
 
பிறகு அந்த செல்வத்தையெல்லாம் பங்கு வைத்தார்கள். பிறகு அந்த செல்வத்திலிருந்து ஒன்றைக் கூட கலிஃபா என்ற முறையில் தனது ஹக்கில் கூட அவர்கள் வைத்துக் கொள்ளவில்லை. அனைத்தையும் அல்லாஹ்வுடைய பாதையிலே ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்துவிட்டார்கள். 
 
கண்ணியத்திற்குரியவர்களே! இந்த விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். இந்த செல்வமானது அலங்கரிப்பட்டு வரும் பொழுது அதை நாம் மயக்கத்திலே அந்த செல்வத்தின் மீது ஆசையிலே அனைத்து செல்வங்களும் எனக்குத்தான் என்று மயக்கத்திலே மமதையிலே விழுந்து விடக்கூடாது. செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டும். அதை எப்படி கையாள வேண்டும் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை பார்க்கிறோம். அவர்கள் ஒருமுறை கேட்டார்கள்,
 
قَالَ عَبْدُ اللَّهِ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّكُمْ مَالُ وَارِثِهِ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا مِنَّا أَحَدٌ إِلَّا مَالُهُ أَحَبُّ إِلَيْهِ قَالَ فَإِنَّ مَالَهُ مَا قَدَّمَ وَمَالُ وَارِثِهِ مَا أَخَّرَ( صحيح البخاري -5961)
 
உங்களிலே யாருக்கு அவருடைய வாரிசுக்கு யார் ஒருவர் தனக்கு பின்னால் விட்டு செல்கிறாரோ அந்த வாரிசுடைய செல்வம் தனக்குரிய செல்வத்தை விட விருப்பமானதாக இருக்கமுடியும்? உங்களில் ஒருவருக்கு உங்களுக்கு சொந்தமான செல்வத்தைவிட உங்களது பிள்ளைகளுடைய செல்வம் ரொம்ப விருப்பமானது. நீங்கள் விட்டுச் செல்லக்கூடிய சொந்த பந்தங்களுடைய செல்வம் விருப்பமானது. இப்படி உங்களில் யாராவது இருக்கின்றார்களா? என்று அழகான கேள்வி கேட்கிறார்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த கேள்விக்கு தோழர்கள் பதில் சென்னார்கள்; யாரஸுலல்லாஹ், எங்களில் யாரும் அப்படி இருக்க மாட்டார்கள். தன்னுடைய செல்வத்தைத்தான் அதிகமாக நேசிப்பார்கள். தன்னுடைய சொத்தைத்தான் அதிகமாக நேசிப்பார்கள் என்பதாக. 
 
உண்மையை நமக்கு உணர்த்துவதற்காக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸவஸல்லம் அனுப்பப்பட்டார்கள். ஏன்? நாம் ஒன்றை எண்ணிக் கொண்டு இருப்போம். ஆனால் நாம் புரிவதோ எண்ணுவதோ தவறாக இருக்கும். அதை உணர்த்துவதற்காக அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கினான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு அறிவுரை வழங்கினார்கள். இப்போது மக்கள் சொன்னார்கள். அல்லாஹ்வுடைய தூதரே! எங்கள் எல்லோருக்கும் எங்களுடைய செல்வம் தான் பிடிக்கும். எப்படி பிறருடைய செல்வம் பிடிக்கும் என்று. அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்; உங்களுடைய செல்வம் எது தெரியுமா? உங்களுடைய சொத்து எது தெரியுமா? 
 
எதை நீங்கள் உங்கள் மரணத்திற்கு முன்பாக அல்லாஹ்வின் பாதையில் செலவழித்து உங்களது மறுமைக்காக அனுப்பிவிட்டீர்களோ, அதுதான் உங்களது செல்வம். எதை சேகரித்து சேகரித்து உங்களுக்காக உங்களுக்காக என்று இந்த துன்யாவிலே கட்டி சேமித்து சேகரித்து வைத்தீர்களோ இந்த துன்யாவில் விட்டுவிட்டு செல்கிறீர்களோ அதுவெல்லாம் உங்களுடைய வாரிசுகளுடைய செல்வம். 
 
அறிவிப்பாளர்: ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 5961.
 
இப்போது சொல்லுங்கள், உங்களுக்கு எந்த செல்வம் பிடிக்கும் என்பதாக. எதை நீங்கள் உங்கள் வாழ்நாளிலே அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளை கட்டுவதற்காக, மதரஸாக்களை நிர்வகிப்பதற்க்காக, எத்தீம்களுக்காக, ஏழைகளுக்காக, இல்லாதவர்களுக்காக, உறவுகளுக்காக, தாய்தந்தைக்காக, இப்படியாக அல்லாஹ்வுடைய பொறுத்தமான பாதையிலே செலவழித்துக் கொண்டிருந்தீர்களோ, இவையெல்லாம் மறுமையில் அல்லாஹ்விடத்திலே நன்மையாகக் காத்திருக்கின்றன. 
 
எவற்றையெல்லாம் அல்லாஹ்வுடைய பாதையில் செலவழிக்க பயந்து கருமித்தனம் கொண்டு, கஞ்சத்தனம் கொண்டு கைகளை இருக்கி கட்டிக் கொண்டு உள்ளத்தை இருக்கமாக வைத்துக்கொண்டு செலவழிக்க பயந்து இறுதியாக மரணம் வரும் போது சேகரித்த செல்வத்தையெல்லாம் விட்டுவிட்டு செல்வீர்களோ, இது உங்கள் உறவுகளுடைய செல்வம் உங்களுடைய செல்வமல்ல. 
 
ஆகவே கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த அறிவுரைகளுக்கு ஏற்ப ரப்புல் ஆலமீன் நமக்கு சொல்லியிருக்கூடிய அந்த அறிவுரைகளுக்கு ஏற்ப இந்த செல்வத்தை ஹலாலான வழியிலே சம்பாதித்து, சம்பாதித்த செல்வத்தை அல்லாஹ்விற்கு பொருத்தமான வழியிலே செலவுசெய்து, நன்மையான வழிகளிலே செலவு செய்து, அல்லாஹ்வுடைய பொருத்தத்தை பெறுவோமாக. 
 
அல்லாஹ்வுடைய தண்டைனயிலிருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்வோமாக. இந்த செல்வத்தை கொண்டு நம்முடைய மறுமையை கட்டி எழுப்பிக்கொள்வோமாக. சொர்க்கத்தை வாங்கி கொள்வோமாக. அல்லாஹு தஆலா எனக்கும், உங்களுக்கும், எல்லா முஃமின்களுக்கும், அல்லாஹ்வுடைய அருளை அன்பை அடைவதற்கு, அல்லாஹ்வுடைய மன்னிப்பை அடைவதற்கு உதவி செய்வானாக! 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1).
 
حَدَّثَنَا عَبْدَانُ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا مَعْمَرٌ وَيُونُسُ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ أَخْبَرَهُ أَنَّ عَمْرَو بْنَ عَوْفٍ وَهُوَ حَلِيفٌ لِبَنِي عَامِرِ بْنِ لُؤَيٍّ وَكَانَ شَهِدَ بَدْرًا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ إِلَى الْبَحْرَيْنِ يَأْتِي بِجِزْيَتِهَا وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ صَالَحَ أَهْلَ الْبَحْرَيْنِ وَأَمَّرَ عَلَيْهِمْ الْعَلَاءَ بْنَ الْحَضْرَمِيِّ فَقَدِمَ أَبُو عُبَيْدَةَ بِمَالٍ مِنْ الْبَحْرَيْنِ فَسَمِعَتْ الْأَنْصَارُ بِقُدُومِ أَبِي عُبَيْدَةَ فَوَافَوْا صَلَاةَ الْفَجْرِ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا انْصَرَفَ تَعَرَّضُوا لَهُ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ رَآهُمْ ثُمَّ قَالَ أَظُنُّكُمْ سَمِعْتُمْ أَنَّ أَبَا عُبَيْدَةَ قَدِمَ بِشَيْءٍ قَالُوا أَجَلْ يَا رَسُولَ اللَّهِ قَالَ فَأَبْشِرُوا وَأَمِّلُوا مَا يَسُرُّكُمْ فَوَاللَّهِ مَا الْفَقْرَ أَخْشَى عَلَيْكُمْ وَلَكِنِّي أَخْشَى أَنْ تُبْسَطَ عَلَيْكُمْ الدُّنْيَا كَمَا بُسِطَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ فَتَنَافَسُوهَا كَمَا تَنَافَسُوهَا وَتُهْلِكَكُمْ كَمَا أَهْلَكَتْهُمْ (صحيح البخاري 3712 -)
 
 
 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/