தக்வாவின் பலன்கள் | Tamil Bayan - 648
بسم الله الرحمن الرّحيم
தக்வாவின் பலன்கள்
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹு தஆலாவைப் போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வின் தூதர் மீதும், தூதரின் கண்ணியத்திற்குரிய குடும்பத்தார் மீதும், மற்றும் பாசத்திற்குரிய தோழர்கள் மீதும் ஸலவாத்தும், ஸலாமும் கூறியவனாக,
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் அடியாராகவும், தூதராகவும் இருக்கின்றார்கள் என்று சாட்சிக் கூறியவனாக, எனக்கும், உங்களுக்கும் இம்மை மறுமையின் நன்மையை வேண்டியவனாக, அல்லாஹு தஆலாவுடைய அன்பையும், அருளையும், மறுமையின் சொர்க்க வெற்றியை வேண்டியவனாக, இந்த குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நம் அனைவருடைய பாவங்களையும் மன்னிப்பானாக! அல்லாஹு தஆலாவை அஞ்சி வாழுமாறு, அல்லாஹ்வின் சட்டங்களை பேணி நடக்கும் படிஎனக்கும் உங்களுக்கும் ஆரம்பமாக உபதேசம் செய்து கொள்கின்றேன்.
அல்லாஹ்வுடைய பயம் தக்வாவைக் குறித்த சில விளக்கங்களை தொடர்ந்து நாம் பார்த்து வருகின்றோம்.
இந்த ஜும்ஆவில் இந்த தக்வாவுடைய தன்மை நம்மிடத்தில் இருக்குமேயானால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன? இந்த தக்வாவை நம்மிடத்தில் கொண்டு வருவதால் நாம் அடையக்கூடிய நற்பலன்கள் என்ன? என்பதை இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.
ஒவ்வொரு அடியானும் அல்லாஹ்விடத்தில் இதை எதிர்பார்க்க வேண்டும்; தேட வேண்டும்;இதற்காக துஆ கேட்க வேண்டும். என்னுடைய எஜமானன், என்னுடய ரப்புஎன் மீது அவன் அன்பு வைக்க வேண்டும் என்று.
ஒருவர் நம்மை நேசிக்கும் போது நம்முடைய உள்ளத்தில் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியைசிந்தித்துப் பாருங்கள். நமக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் நம் மீது வெறுப்பாக இருக்கிறார் என்றால் நம்முடைய உள்ளம் எவ்வளவு நெருக்கடிக்கு ஆளாகும்?!
யாரையாவது அவருடைய தாய் வெறுத்தால், அவருடைய தந்தை வெறுத்தால், அல்லது அவருடைய மனைவி வெறுத்தால், அவருடைய பிள்ளைகள் வெறுத்தால், அல்லது அவருடைய உற்ற தோழர், நண்பர் வெறுத்தால் எந்த அளவு மன கவலைப்படுவார்! கஷ்டப்படுவார்! அதே நேரத்தில் இந்த அன்பு கிடைக்குமேயானால் உள்ளம் எவ்வளவு விசாலமாக இருக்கும்! உள்ளத்தில் ஒரு விதமான பூரிப்பு ஏற்படும்.
அல்லாஹ்வின் அடியார்களே! காசால், பணத்தால், பதவியால் செய்ய முடியாததை அன்பால் சாதித்துக் காட்ட முடியும். இந்த அன்பு அல்லாஹ் படைப்பினங்களுக்கு கொடுத்த தன்மைகளில் மிகப்பெரிய சக்தி நிறைந்த ஒரு தன்மை, பண்பு என்று சொல்லலாம்.
அழிந்து போகக்கூடிய இந்த படைப்பினங்களின் அன்பு கிடைக்கும் போது நம்முடைய உள்ளத்தில் எப்படிபட்ட மகிழ்ச்சி, விசாலம், ஒரு விதமான ஆனந்தம் உண்டாகிறது.அதை வெளிப்படுத்தி சொல்ல முடியாது. அதை மதிப்பிட முடியாது. அதற்கு ஒரு தொகையைக் கொண்டு விலை கொடுக்க முடியாது.
அகிலங்களின் இறைவன் அர்ஷின் அதிபதி அல்லாஹ் நம்மை நேசிக்கிறான் என்றால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
அந்த அன்பை நாம் விரும்ப வேண்டும். இந்த உலகத்தில் ஈமானுக்கென்று ஹலாவத் -ஒரு ருசி, ஹகீகத், ஒரு taste இருக்கிறதென்று அல்லாஹ்வின் தூதர் சொல்கின்றார்கள்.
அந்த ருசி நமக்கு தெரிய வேண்டும் அதை நாம் உணர வேண்டும் என்றால் அதற்கு ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று நிபந்தனைகளை நமக்கு நிபந்தனையிடுகின்றார்கள்.
அவற்றில் முதலாவது நிபந்தனை,
أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا
மற்றனைவரையும் விட அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரஸூலும் நமக்கு மிக நேசத்துக்குரியவர்களாக விருப்பத்திற்குரியவர்களாகமாற வேண்டும்.
அல்லாஹ்வுடைய அன்பும் அல்லாஹ்வுடைய ரஸூலுடைய அன்பும் இந்த உலக வஸ்துக்களின் அன்பை விட நம்முடைய உள்ளத்தில் மிகைக்க வேண்டும்.
அப்படி மிகைத்தால் ஈமானுடைய ருசியை உணர முடியும் என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (1)
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 6941.
அல்லாஹ்வுடைய அன்பு நமக்கு கிடைப்பது என்பது சாதாரண பாக்கியம் அல்ல.
அல்லாஹு தஆலா அவனுடைய நேசர்களுக்குக் கொடுக்கக்கூடிய அந்த கண்ணியம் தான் நான் உன்னை நேசிக்கிறேன் என்பது.
இந்த முஹப்பத்தை அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா கண்ணியத்திற்குரிய அவனுடைய வேதம் அல்குர்ஆனில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல இடங்களில் தக்வா உள்ளவர்களுக்கு தருகின்றான்.
தக்வா இருந்தால் அல்லாஹ்வுடைய முஹப்பத் நமக்கு உண்டு அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள் :
إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ
நிச்சயமாக அல்லாஹ் தக்வா உள்ளவர்களை நேசிக்கிறான். (அல்குர்ஆன் 9 : 4)
இந்த தக்வா என்ற உயர்ந்த குணம் நம்மிடத்தில் இருக்க வேண்டும் என்பதற்கு இதை விட வலியுறுத்தக்கூடிய ஒரு வசனத்தை நாம் பார்க்க முடியாது.
தக்வா இருந்தால் அல்லாஹ்வுடைய முஹப்பத் கிடைக்கும். அல்லாஹ்வுடைய முஹப்பத் உடையவர்கள் தான் சொர்க்கத்திற்குச் செல்வார்கள்.
அது போன்று அல்லாஹ்வுடைய ரஹ்மத் என்ற விஷேசமான அவனுடைய கருணையை அல்லாஹு தஆலா அவனை பயந்து வாழக்கூடிய தக்வாவுடைய நல்லடியார்களுக்கு மட்டும் தான் நான் கொடுப்பேன் என்று அவன் வாக்களிக்கின்றான்.
அல்லாஹ்வுடைய ரஹ்மத் இல்லை என்றால் இந்த உலகத்தில் எதுவும் இயங்க முடியாது. அல்லாஹ்வுடைய ரஹ்மத் இல்லையென்றால் பாவம் செய்யக்கூடிய மனிதர்களை உடனுக்குடனே தண்டித்திருப்பான். இந்த உலகம் நீடித்திருக்க முடியாது.
அல்லாஹு தஆலா அந்த ரஹ்மத்தை சொல்லும் போது,
وَرَحْمَتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ فَسَأَكْتُبُهَا لِلَّذِينَ يَتَّقُونَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَالَّذِينَ هُمْ بِآيَاتِنَا يُؤْمِنُونَ
என் அருட்கொடை அனைத்தையும்விட மிக விரிவானது. ஆகவே, எவர்கள் (எனக்குப்) பயந்து ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் நம் வசனங்களை நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுக்கும் (என் அருளை) நான் முடிவு செய்வேன்என்று கூறினான். (அல்குர்ஆன் : 7:156)
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை விஷேசமாக அடையக்கூடிய மூன்று நபர்களை ரப்புல் ஆலமீன் குறிப்பிடுகின்றான். அந்த மூன்று தன்மைகளைக் கூறுகின்றான்.
முதலாவதாக தக்வா. இரண்டாவதாக ஜகாத்தை சரியாக கொடுப்பது. மூன்றாவது அல்லாஹ்வுடைய வேதத்தின் மீது உறுதியாக நம்பிக்கை இருப்பது.
அது போன்று இந்த தக்வா நம்மிடத்தில் இருக்கும் போதுஅல்லாஹு தஆலா இன்னொன்றை நமக்கு வாக்களிக்கின்றான். இந்த அடியான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
சில நேரங்களில் சிரமங்கள் அவனை சூழ்ந்து கொள்வதைப் போன்று அவனுக்கு தெரியும். அல்லாஹு தஆலாவின் உதவி அவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும். யாரும் எனக்கு உதவ வரவில்லையே என்று நினைக்கும் போது, அல்லாஹ் அவனுக்கு உதவ வந்து விடுவான். எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டனவே என்று அடியான் நினைக்கும் போதுஅல்லாஹ்வுடைய உதவியின் கதவு திறந்து விடும்.அந்த தக்வா இருக்கும் போது.
ரப்புல் ஆலமீன் கூறுவதைப் பாருங்கள் :
إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَوْا وَالَّذِينَ هُمْ مُحْسِنُونَ
நிச்சயமாக எவர்கள் மெய்யாகவே இறையச்சமுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களுடனும், எவர்கள் நன்மை செய்கிறார்களோ அவர்களுடனும் தான் அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன் 16:128)
யார் அல்லாஹ்வைப் பயந்து கொண்டார்களோ,அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மீறாமல் இருக்கின்றார்களோ,அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை தங்களுடைய கண்களால் கரங்களால் உடைக்காமல் இருக்கின்றார்களோ,அல்லாஹ் எங்கு கோடு போட்டானோ அங்கு நின்று கொள்வார்கள். அதை தாண்ட மாட்டார்கள். ஹலால், ஹராம் என்று அந்த கோட்டைப் பேணக்கூடியவர்கள் தான் தக்வா உள்ளவர்கள்.
அல்லாஹ் சொல்கிறான்:நிச்சயமாக அல்லாஹ் தக்வா உள்ளவர்களோடு இருக்கின்றான். அதாவது அல்லாஹ்வுடைய உதவியும், பாதுகாப்பும், அரவணைப்பும், அல்லாஹ்வுடைய கவனிப்பும் அவர்களுக்கு எப்போதும் இருக்கும்.
இரண்டாவது தன்மை, இஹ்ஸான் உள்ளவர்கள்.
இவர்கள் தன்னால் பிறருக்கு எப்போதும் நன்மைகளை, உபகாரங்களை, உதவிகளை, ஒத்தாசைகளை செய்து கொண்டு இருப்பவர்கள்.
அல்லாஹ்வுடைய உதவி வேண்டுமா? நீ உன்னுடைய சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்:
وَاللهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ
உனது சகோதரனுக்கு நீ உதவி செய்யும் போது அல்லாஹ்வுடைய உதவி உன்னோடு இருக்கும்.
مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا، نَفَّسَ اللهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ
நாம் ஒருவருடைய சிரமத்தை இந்த உலகத்தில் நீக்கினால், மறுமையில் அல்லாஹ் அதற்கு பகரமாக ஒரு சிரமத்தை நீக்குவான்.(2)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2699.
யாருக்கும் தொந்தரவு தராமல் தன்னால் முடிந்த அளவு பிறருக்கு நல்லுதவிகளை, நல்லுபகாரங்களை பொருளாலும், உடலாலும் அழகிய வார்த்தைகளாலும் செய்கின்றார்களோ அல்லாஹ் சொல்கிறான் நான் அவர்களோடு இருக்கின்றேன் என்று. (அல்குர்ஆன் 16:128)
அல்லாஹ் இவர்களோடு இருக்கிறான் என்றால் என்ன அர்த்தம்? இவர்கள் எப்போதும் அல்லாஹ்வுடைய அரவணைப்பில், அல்லாஹ்வுடைய கவனிப்பில் இருக்கின்றார்கள். இவர்களை அல்லாஹு தஆலா சிரமப்படும்படி விடமாட்டான். இவர்கள் ஏங்கும்படி அல்லாஹ் விடமாட்டான். இவர்கள் கைத் தூக்கினால் கண்டிப்பாக அல்லாஹு தஆலா பதில் அளிப்பான்.
சில நேரத்தில் அல்லாஹு தஆலா நாம் நம்முடைய துஆக்களை அதிகப்படுத்துவதற்காக சிரமங்களைத் தருவான். சிரமங்களெல்லாம் அல்லாஹ் நம் மீது இருக்கக்கூடிய கோபத்தினால் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். துன்பங்களெல்லாம் அல்லாஹ் நம் மீது இருக்கக்கூடிய வெறுப்பினால் என்று எண்ணிவிடாதீர்கள்.
அடியான் அல்லாஹ்விடத்தில் கையேந்துவது அல்லாஹ்விற்கு பிடிக்கும். அடியான் அல்லாஹ்வை முன்னோக்கி என் ரப்பே! என்று அல்லாஹ்வை அழைப்பது அல்லாஹ்விற்கு பிடிக்கும். ஆகவே அல்லாஹு தஆலா நம்மை நெருங்குவதற்காக இதை தருகின்றானே தவிர, நம்மை தூரமாக்குவதற்கு அல்ல.
இந்த தக்வாவோடு நாம் இருப்போமேயானால் அல்லாஹு தஆலா நமக்கு கண்டிப்பாக உதவி செய்வான். ஒரு நாளும் கைவிட மாட்டான்.
ரப்புல் ஆலமீன் கூறுவதைப் பாருங்கள் :
فَمَنِ اتَّقَى وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, (பாவங்களிலிருந்து) விலகி, நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் துயரம் அடையவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 7 : 35)
அது போன்று,இந்த தக்வாவின் மூலமாக அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா உள்ளத்தில் நமக்கு ஈமானுடைய ஒளியை ஏற்படுத்துகிறான். நம்முடைய பாவங்களை மன்னித்து ஈமானுடைய பிரகாசத்தை கொடுப்பான்.
ஒன்றை செய்யலாமா? வேண்டாமா? இது நமக்கு நன்மையா? தீமையா? என்று திகைக்கும் போது, அல்லாஹு தஆலா நமக்கு வழிகாட்டுகின்றான்.
ரப்புல் ஆலமீன் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَتَّقُوا اللَّهَ يَجْعَلْ لَكُمْ فُرْقَانًا وَيُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيَغْفِرْ لَكُمْ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுவீர்களாயின், அவன் உங்களுக்குக் கண்ணியத்தை அளிப்பான். மேலும், உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மகத்தான அருளுடையவன் ஆவான். (அல்குர்ஆன் 8:29)
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :
وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا
எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறார்களோ, அவர்களுக்கு (இத்தகைய விவகாரங்களிலிருந்து) ஒரு (நல்ல தீர்வுபெற) வழியை ஏற்படுத்தித் தருவான். (அல்குர்ஆன் 65 : 2)
وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مِنْ أَمْرِهِ يُسْرًا
எவர்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறார்களோ, அவர்களுடைய காரியத்தை அவர்களுக்கு எளிதாக்கி விடுகிறான்.(அல்குர்ஆன் 65 : 4)
அல்லாஹ்வின் அடியார்களே! யார் அல்லாஹ்வைப் பயந்து கொள்கின்றார்களோஅவர்களுக்கு அல்லாஹு தஆலா ஒரு மஹ்ரஜ் (exit)-ஐ அல்லாஹ் கண்டிப்பாக வைத்திருப்பான்.
எப்படி முடிச்சுகளை அவிழ்க்கும் போது அந்த முடிச்சுகள் அவிழ்கின்றனவோ அதுபோன்று அவனுடைய பிரச்சனைகள் அவிழும்.மேகங்கள் கலைவது போல அவனுடைய சிரமங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கலைந்து நீக்கிவிடுவான். அல்லாஹ்வுடைய உதவி அவனிடத்தில் அவன் எதிர்பார்க்காத விதத்தில் வரும்.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கின்றான் :
وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
அவன் அறியாத புறத்திலிருந்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த அடியானுக்கு ரிஸ்கைக் கொடுப்பான். (அல்குர்ஆன் 65 : 3)
ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கையில் சிறிது நேரம் நாம் அல்லாஹ்விற்காக ஒதுக்க வேண்டும். அது தனிமையாக இருக்க வேண்டும். யாரும் பார்க்காத ஒரு இடமாக இருக்க வேண்டும்.
நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.நம்முடைய வாழ்க்கையில் எத்தனை முறை அல்லாஹ்வுடைய உதவியை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம்?
ரப்புல் ஆலமீன் சொல்லக்கூடிய அந்த வசனம்:
وَقَلِيلٌ مِنْ عِبَادِيَ الشَّكُورُ
என்னுடைய அடியார்களில் மிகக் குறைவானவர்கள் தான் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் என்று. (அல்குர்ஆன் 34 : 13)
அந்த குறைவானவர்களில் நாம் இருக்க வேண்டும். நன்றிகெட்ட கூட்டம் எண்ணற்ற, கணக்கற்ற தொகையில் இருக்கிறதே அவர்களில் நாம் ஆகிவிடக்கூடாது. நன்றி கெட்ட குணம் ஷைத்தானின் குணம்.
அல்லாஹு தஆலா அவனை உயர்த்தி வானலோகத்தில் வைத்திருந்தான். கண்ணியப்படுத்தி வைத்திருந்தான். ஒரு தீயலோகத்தை சேர்ந்தவனை மலக்குகளோடு அல்லாஹு தஆலா கண்ணியப்படுத்தி மிக உயர்வாக வைத்திருந்தான். ரப்புல் ஆலமீனுக்கு நன்றிகெட்ட தனமாக நடந்து கொண்டான். அல்லாஹ் கொடுத்த கண்ணியம் அவனுடைய நன்றி கெட்டத்தனத்தால் பறிக்கப்பட்டது.
ஒரு மனிதன் பிற மனிதர்கள் மூலமாக அவனுக்கு கிடைத்த உதவிக்கு நன்றி கெட்ட தனமாக நடந்து கொண்டால் அவனைப்பற்றி மக்கள் எப்படி கேவலமாக இழிவாக பேசுவார்கள். அல்லாஹ்விற்கு தன்னுடைய ரப்புக்கு ஒருவன் நன்றி கெட்ட தனமாக நடந்தால் அது எவ்வளவு மோசமானது!
நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் ஏதாவதொரு கட்டத்தில் அல்லாஹ்வுடைய உதவியை நாம் கண்டு கொண்டே இருக்கிறோம். வாழ்க்கையே அல்லாஹ்வுடைய உதவியைக் கொண்டு தான் இயங்குகிறது.
நம்முடைய வாழ்க்கையில் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா உடைய இந்த ரஹ்மத்தை, அவனுடைய உதவியை, அவனுடைய அரவணைப்பைக் காட்டாமல் இருக்க மாட்டான். கண்டிப்பாக அல்லாஹ் காட்டியிருப்பான்.
ஆனால் நாம் தான் அதை உணர்ந்து இருக்க மாட்டோம். ஒரு சிரமத்தில் இருந்திருப்போம், உதாரணமாக ஒரு பொருளாதார நெருக்கடியில் உறவுகள் நம்மை கண்டு கொள்ளாமல் சென்றிருப்பார்கள்.
நம்முடைய நெருக்கமான நண்பர்களில் சிலர் நம்மை அறிந்தும் அறியாமலும் சென்றிருப்பார்கள். அந்த நேரத்தில் ரப்புல் ஆலமீன் யாரோ ஒருவரை எங்கிருந்தோ அனுப்பி அந்த உதவியை நிறைவேற்றுவான்.
நம்மால் நினைத்தே பார்த்திருக்க முடியாது. சில நேரங்களில் வெளியூர்களில் நாம் திக்கி தவித்து கொண்டிருப்போம். அங்கே அல்லாஹ்வின் உதவி இருக்கும்.
பயணங்களில், நம்முடைய குடும்ப வாழ்க்கையில், இப்படியாக கண்டிப்பாக நம்மில் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ்வுடைய விஷேசமான நெருக்கமான ஒரு உதவி கருணைகண்டிப்பாக கிடைத்திருக்கும்.
ஆனால்,அவர் என்ன தவறு செய்கிறார்என்றால், இது என் ரப்பின் புறத்திலிருந்து வந்தது என்று நினைக்காமல் இருந்திருப்பார். ரப்பை அங்கே மறந்திருப்பார். உணர்ந்திருக்க மாட்டார். அல்லாஹ் சொல்கின்றான்:
அவன் அறியாத புறத்திலிருந்து நாம் அவனுக்கு உதவி செய்வோம் என்று. (அல்குர்ஆன்65:3)
இதுதான் ஈமானுடைய உணர்வுகள். தக்வா இருக்கும் போது கண்டிப்பாக அல்லாஹு தஆலா நம்முடைய பிரச்சனைகளை இலகுவாக்கி, நம்முடைய காரியங்களை நமக்கு சௌகரியமாக்கி கொடுப்பான். அதுமட்டுமல்ல நமக்கு தேவையான உதவிகளை நாம் எதிர்பார்க்காத இடத்திலிருந்து அல்லாஹு தஆலா ஏற்பாடு செய்வான்.
அது போன்று எதிரிகள் நம்மை சூழ்ந்து கொள்ளும் போது, அவர்கள் நமக்கெதிராக சூழ்ச்சி செய்யும்போதும் இந்த தக்வா நமக்கு பலன் தரும்.
ரப்புல் ஆலமீன் கூறுகின்றான் :
وَإِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا
நீங்கள் இந்த மார்க்கத்தில் உறுதியாக இருந்து சோதனைகளை சகித்துக் கொண்டு தக்வாவோடு இருந்தால் அந்த எதிரிகள் செய்யக்கூடிய சூழ்ச்சிகள் உங்களுக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. (அல்குர்ஆன் 3:120)
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், அவர்களுடைய தோழர்களுக்கும் மக்காவுடைய காஃபிர்களும், அரபு குலமும், ரோமர்களும், பாரசீகர்களும் சேர்ந்து இவர்களை அடிச்சுவடே இல்லாமல் அழித்துவிட வேண்டும் என்று நினைத்தார்கள்.
ஆனால் யாரெல்லாம் அழிக்க நினைத்தார்களோஅவர்களெல்லாம் அடிச்சுவடு இல்லாமல் போனார்கள்.
إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ
நிச்சயமாக உமது எதிரிதான் சந்ததியற்றவன். (அல்குர்ஆன் 108 : 3)
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
உங்களது புகழை இந்த பூமியில் நாம் உயர்த்துவோம், பரப்புவோம்.(அல்குர்ஆன் 94 : 4)
அபூபக்ர், உமர், உஸ்மான் போன்ற எத்தனை ஸஹாபாக்கள் உடைய கண்ணியத்தை அல்லாஹ் எப்படி பாதுகாத்தான்? இந்த தக்வாவின் மூலமாக.
بَلَى إِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا وَيَأْتُوكُمْ مِنْ فَوْرِهِمْ هَذَا يُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ آلَافٍ مِنَ الْمَلَائِكَةِ مُسَوِّمِينَ
நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து பொறுமையுடன் இருந்தால், இதே சமயத்தில் (எதிரிகள்) உங்கள் மீது அடர்ந்தேறிய போதிலும் (மூவாயிரம் என்ன?) அடையாள மிடப்பட்ட ஐயாயிரம் வானவர்களால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவிசெய்வான். (அல்குர்ஆன் 3:125)
ஒரு முஸ்லிமுடைய நம்பிக்கை அப்படித்தான்.அல்லாஹ்வின் மீது அவன் வைக்கக்கூடிய ஈமானும், யகீனும் தக்வாவும்கண்டிப்பாக அல்லாஹ்விடத்தில் இவனுக்கென்று ஒரு விஷேசமான இடத்தைக் கொடுத்து அல்லாஹ் உடைய அரவணைப்புக்கும், கருணைக்கும் உதவிக்கும் உரியவனாக அவன் இருப்பான்.
இன்னும் அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா தக்வாவைக் குறித்து அதனுடைய நற்பலன்களைக் குறித்து பல வசனங்களை நமக்கு கூறுகின்றான்.
குர்ஆனை அதிகம் ஓதி அதனுடைய வசனங்களை சிந்தித்து படிக்கும் போது தக்வாவுடைய படிப்பினைகளை, பாடங்களை கொண்டு நாம் அறிந்து கொள்ளலாம்.
وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَكِنْ كَذَّبُوا فَأَخَذْنَاهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ
அவ்வூர்களில் இருந்தவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடந்திருந்தால், அவர்களுக்காக வானத்திலும், பூமியிலும் உள்ள அருட்கொடைகளின் வாசல்களைத் திறந்து விட்டிருப்போம். எனினும், அவர்களோ (நபிமார்களை நம்பிக்கைகொள்ளாது) பொய்யாக்கினார்கள். ஆகவே, அவர்களுடைய (தீய) செயலின் காரணமாக நாம் (வேதனையைக் கொண்டு) அவர்களைப் பிடித்துக் கொண்டோம். (அல்குர்ஆன் 7:96)
நம்முடைய உள்ளச்சம், நம்முடைய நாணயம், நம்பிக்கை, நேர்மை, வாழ்க்கை பேணுதல், அல்லாஹ்வுடைய இபாதத்துகளை பேணுதல், சட்ட வரம்புகளை பேணுதல் இதன் மூலமாக ஹலாலான பரகத்துகளை அல்லாஹ் கொடுப்பான்.
கண்ணியத்தோடு அல்லாஹ் கொடுப்பான். ஈமான் ஸலாமத்தோடு அல்லாஹ் கொடுப்பான். நம்முடைய மறுமையும் ஸலாமத்தோடு இருக்கும்.
இன்று உலகத்தில் எத்தனையோ பேர் துன்யாவில் நான் பரகத்தாக சம்பாதித்து விட்டேன் என்று சொல்வார்கள். துன்யாவில் நான் தேடியது எல்லாம் எனக்கு கிடைத்து விட்டது. செழிப்பான வாழ்க்கையை அல்லாஹ் கொடுத்து விட்டான் என்று சொல்வார்கள்.
அவர்களில் பலர் தங்களுடைய மறுமையை பாழாக்கியிருப்பார். தங்களுடைய சொர்க்கத்தை விற்றிருப்பார்கள். தங்களுடைய மறுமையை விற்று துன்யாவை வாங்கியிருப்பார்கள். ஈமானை விற்று இந்த துன்யாவை அடைந்திருப்பார்கள். அதைவிட கேவலமானது, அதைவிட நஷ்டமான ஒரு வியாபாரம் ஒன்றுமில்லை. அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் இந்த தக்வாவுடைய தன்மையை தந்தருள்வானாக! உள்ளத்திலும் நம்முடைய வெளிரங்க செயல்களிலும் உண்மையான தக்வாவை பேணி வாழக்கூடிய உண்மை முஃமின்களாக என்னையும், உங்களையும் நமது குடும்பத்தார்களையும் ஆக்கியருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ الطَّائِفِيُّ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ: أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَأَنْ يُحِبَّ المَرْءَ لاَ يُحِبُّهُ إِلَّا لِلَّهِ، وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ " (صحيح البخاري- 6941)
குறிப்பு 2)
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ - وَاللَّفْظُ لِيَحْيَى، قَالَ يَحْيَى: أَخْبَرَنَا وقَالَ الْآخَرَانِ: حَدَّثَنَا - أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا، نَفَّسَ اللهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ، يَسَّرَ اللهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا، سَتَرَهُ اللهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَاللهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ، وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا، سَهَّلَ اللهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ، وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللهِ، يَتْلُونَ كِتَابَ اللهِ، وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ، إِلَّا نَزَلَتْ عَلَيْهِمِ السَّكِينَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ، وَذَكَرَهُمُ اللهُ فِيمَنْ عِنْدَهُ، وَمَنْ بَطَّأَ بِهِ عَمَلُهُ، لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ»، (صحيح مسلم - (2699)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/