தக்வா! விளக்கம் | பலன்கள் அமர்வு 2 | Tamil Bayan - 646
بسم الله الرحمن الرّحيم
தக்வா! விளக்கம் – பலன்கள் அமர்வு – 2
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹு தஆலாவைப் போற்றி புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் கண்ணியத்திற்குரிய குடும்பத்தார், தோழர்கள் மீதும், ஸலவாத்தும், ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும், எனக்கும் அல்லாஹ்விடத்திலே அன்பையும், மன்னிப்பையும், அருளையும், இம்மை மறுமையின் வெற்றியையும், சொர்க்கத்தையும் வேண்டியவனாகஇந்த குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.
அல்லாஹு சுப்ஹானஹு வதஆலாநம் அனைவருடைய பாவங்களையும் மன்னிப்பானாக! அல்லாஹ் விரும்புகின்ற, நேசிக்கின்ற நற்குணங்களைக் கொண்டு, நல்ல பண்புகளைக் கொண்டு நம்மை அலங்கரிப்பானாக! அல்லாஹ் வெறுக்கின்ற, அல்லாஹ் கோபிக்கின்ற ஒவ்வொரு தீய காரியங்களிலிருந்தும், கெட்ட குணங்களிலிருந்தும், தீய கெட்ட கொள்கைகளிலிருந்தும்என்னையும், உங்களையும் பாதுகாத்து அருள்புரிவானாக! ஆமீன்.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! சென்ற குத்பாவில் தக்வாவைப் பற்றிய சில செய்திகளை நாம் கேட்டு அறிந்தோம். அதனுடைய தொடரில் இன்னும் சில விஷயங்களை நாம் அறிய இருக்கின்றோம்.
இந்த தக்வா இறையச்சம் என்பது எத்தனை முறை நாம் கேட்டாலும் சரி, எவ்வளவு கேட்டாலும் சரி, அது மிகக்குறைவு தான்.
நாம் இந்த தக்வாவுடைய விஷயங்களை மீண்டும், மீண்டும் கேட்பதைக் கொண்டு நம்முடைய ஈமானைப் புதுப்பித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
நம்முடைய தக்வாவிலே நல்ல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். நம்முடைய தக்வாவை சுயப்பரிசோதனை செய்து கொண்டு இருக்க வேண்டும். வாழ்கையில் எல்லா விஷயங்களிலும் அந்த தக்வா வெளிப்படும் போது தான், தக்வாவிலிருந்து ஒரு சிறிய அளவை நாம் கிடைக்கப் பெற்றவர்களாக இருப்போம்.
தொழுகையில் தக்வா இருந்து ஜக்காத்தில் தக்வா இல்லை என்றால், தர்மத்தில் தக்வா இருந்து குடும்ப வாழ்க்கையில் தக்வா இல்லை என்றால், அல்லது நோன்பிலே தக்வா இருக்கின்றது, ஹஜ்ஜிலே தக்வா இருக்கின்றது வியாபாரத்திலே, தொழில்துறையிலே கொடுக்கல் வாங்குவதிலே தக்வா இல்லை என்றால் என்ன பயன்?!
ஒரு முழுமையான தக்வாவை, நிறைவான இறையச்சத்தைப் பெறுவதற்கு, தக்வா சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தொடர்ந்து படித்துக் கொண்டே, கேட்டுக் கொண்டே, அதைக் கொண்டு நம்முடைய உள்ளத்தை, அந்த உள்ளத்தில் உள்ள தக்வாவை சுயப்பரிசோதனை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
இங்கே நாம் எங்கே தவறு செய்கின்றோம், என்று நாம் உணர்கிறோமோ? இந்த இடத்தில் என்னுடைய தக்வா இந்த விஷயத்தில் பலவீனமாக இருக்கிறதுஎன்று உணர்கிறேனோ? அந்த இடத்தில் நாமே நம்மை சரி செய்து கொள்ள வேண்டும்.
இந்த ஒரு விஷயத்திற்கு தான் அல்லாஹு தஆலா தக்வாவுடைய விஷயங்களை தொடக்க அத்தியாயத்திலிருந்துஇறுதி அத்தியாயம் வரைமீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய வாழ்நாளில், அவர்கள் செய்த உபதேசங்களில் அதிகமான உபதேசம் தக்வாவை குறித்து தான் இருந்தது.
இறுதி ஹஜ்ஜிலே, தங்களது தோழர்களுக்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய உபதேசத்திலே மிக முக்கியமாக இடம் பெறக்கூடிய ஒன்று, அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்,
என்று கூறிவிட்டு தக்வா இங்கே இருக்க வேண்டும் என்று மூன்று முறை கூறி தனது நெஞ்சை சுட்டிக்காட்டி தங்களுடைய தோழர்களுக்கு எச்சரிக்கை செய்தார்கள், அறிவுறுத்தினார்கள். (1)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2564.
அப்படியென்றால் தக்வாவிற்கு எந்த அளவிற்கு ரஸூல் ஸல்லல்லாஹு அவர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள்? அது நமக்கு எந்த அளவு வாழ்க்கையில் அவசியம்? என்று புரிய வேண்டும்.
தாபியீன்களிலே மிகப் பிரசித்துப் பெற்ற ஒருவர்;தல்க் இப்னு ஹபீப் (ரஹ்) ஒரு ஹதீஸ் அறிவிப்பாளர். இது போன்று மக்களுக்கு நல் உபதேசம் செய்யக்கூடிய ஒரு நீண்ட சமூக சமுதாய சீர்திருத்தவாதி அவர்கள் தக்வாவைப் பற்றி கூறுகின்றார்கள்:
وقال طلق بن حبيب رحمه الله : التقوى أن تعمل بطاعة الله على نور من الله ترجو ثواب الله وأن تترك معصية الله على نور من الله تخاف عقاب الله
தக்வா என்றால் உன்னுடைய அமல்கள் எல்லாம் (செயல்கள்) அல்லாஹ்விற்கு கீழ்படிதலாக இருக்க வேண்டும். அல்லாஹ்வை வணங்கக்கூடிய வணக்க வழிபாடுகள் எல்லாம் நீ சரியாகச் செய்ய வேண்டும். அதற்கு இரண்டு அடிப்படைகளைக் கூறுகின்றார்கள். இபாதத் செய்யும் போது இரண்டு அடிப்படை உன்னிடம் இருக்க வேண்டும்.
1. கீழ்படிதல்
2. அல்லாஹ்வை திருப்திப் படுத்தக்கூடிய அமல்களை செய்தல்.
இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து கொடுக்கப்பட்ட வழிகாட்டல், வெளிச்சத்தின் கீழ் இருக்க வேண்டும். அமல் என்று நீயாக கற்பனை செய்து கொண்டு, அதை பிடித்துக் கொண்டிருப்பது அல்ல.
இன்று மக்கள் மவ்லீது, மீலாது கத்தம் பாத்திஹா என்று ஒன்றல்ல நூற்றுக்கணக்கான அமல்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
இன்று மக்கள் மவ்லீது, மீலாது கத்தம் பாத்திஹாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற மக்களில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கானோர் ஐந்து வேளை தொழுகையை தொழாதவர்கள்.
இஸ்லாமுடைய ஒழுக்கம் சார்ந்த ஃபர்ளு சார்ந்த எந்த அடையாளமும் அவர்களிடத்தில் இருக்காது. அவர்களுடைய குடும்பத்திலும் இருக்காது.
ஆனால் சடங்குகள் என்று வந்துவிட்டால் அவர்களுடைய பேணுதல், அவர்களுடைய தக்வா எல்லா வேலைகளையும் விட்டு விட்டு அதை செய்வதிலே அவ்வளவு ஈடுபாடு, பக்தி,பரவசம், தலையில் தொப்பி வந்துவிடுவதென்ன? புது சட்டை என்ன? வீடெல்லாம் நறுமணமாக அலங்காரிப்பது என்ன?
அல்லாஹ்வின் அடியார்களே! இது வழிகேடு, இது தக்வா அல்ல. இது அல்லாஹ்வின் மீது அன்பு அல்ல. இது ரஸூல் (ஸல்) அவர்கள் மீது அன்பு அல்ல. அல்லாஹ்வின் மீது அவர்களுக்கு அன்பு இருந்தால்' அல்லாஹ் ஃபர்ளாக ஆக்கியிருப்பதை செய்திருப்பார்கள்.
ரஸூல் (ஸல்) அவர்கள் மீது உண்மையான அன்பு இருந்தால், உண்மையான சுன்னத்துகளை அதை கற்றறிந்து செய்திருப்பார்கள்.
இமாம் அவர்கள் தல்க் இப்னு ஹபீப் (ரஹ்) அவர்கள் நமக்கு கூறுகின்றார்கள். அல்லாஹ்வுக்கு கீழ்படிதல், அமல்கள் எப்படி செய்ய வேண்டும்?
அல்லாஹ்விடமிருந்து வந்த வெளிச்சத்தின் அடிப்படையில், அந்த வழிகாட்டுதலின் அடிப்படையிலே.நீ செய்யக்கூடிய அமல் ஒன்று குர்ஆனில் கூறப்பட வேண்டும். அல்லது ரஸூல் (ஸல்) அவர்கள் உனக்கு தங்களது ஹதீஸ்களிலே, சுன்னாக்களிலே வழிகாட்டியிருக்க வேண்டும். அத்தகைய அமல்களை நீ செய்ய வேண்டும். அந்த வகையில் அல்லாஹ்வுக்கு கீழ்படிதலை நீ உன்னை ஈடுபடுத்த வேண்டும்.
அடுத்து கூறுவதைப் பாருங்கள் : இன்னும் முக்கியமான ஒன்று, அல்லாஹ்வுடைய மறுமை கூலியை மட்டும் ஆதரவு வைத்தவனாக, அமல்களைக் கொண்டு உலக நோக்கம் இருக்கக்கூடாது.
இன்று சில வித்தியாசத்தை நாம் புரிய வேண்டும். சிலர் நோன்பைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்கள் :நோன்பு வையுங்கள். உடல் ரொம்ப ஆரோக்கியமாக இருக்கும். கொழுப்பு குறைகிறது என்று டாக்டர்கள் சொல்கின்றார்கள். இன்னும் சில நபர்கள் தொழுகை சிறந்த யோகாஎன்று கூறுகின்றார்கள்.
இந்த எண்ணத்தில் ஒருவன் தொழுதால் அவன் தொழுகையில் தக்பீர் கட்டும் போது உடற்பயிற்சி நியாபகம் தான் வரும். எந்த அசைவை செய்தாலும் அவனுக்கு அந்த நியாபகம் தான் வரும்.
அதில் நுணுக்கமாக கவனிக்க வேண்டிய ஒன்று, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு மறுமையின் நன்மையைக் கூறி இபாதத்துகளைக் கற்றுக் கொடுத்தார்கள்.
அந்த வழிமுறைகளில் உலகம் சார்ந்த, உலகத்தில் அறிவியல் சார்ந்த இன்று கண்டுபிடிக்கப்பட்ட, இதுவரை கண்டுபிடிக்கப்படாத, இனி வரக்கூடிய காலங்களில் கண்டுபிடிக்கின்ற, நூற்றுக்கணக்கான பலன்கள் இருக்கத்தான் செய்யும்.
ஆனால்,ஒரு முஸ்லிம் அவற்றிற்காக இபாதத் செய்ய மாட்டான். மறுமைக்காக மட்டுமே செய்வான்.
ஒரு முஃமினுடைய எதிர்பார்ப்பு சொர்க்கமாக இருக்க வேண்டும்.
அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:
مَنْ يُرِيدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَنْ يُرِيدُ الْآخِرَةَ
உங்களில் சில கூட்டம் உலகத்தை நாடுபவர்களாகவும் இருக்கின்றார்கள்.உங்களில் சில கூட்டம் மறுமையை நாடுபவர்களாகவும் இருக்கின்றார்கள். (அல்குர்ஆன் 3:152)
கனீமத்துக்காக ஜிஹாத் செய்தவர்களைப் பார்த்துஅல்லாஹ் இப்படி சொல்கின்றான். மறுமை,சொர்க்கத்திற்காக ஜிஹாத் செய்தவர்களைப் பார்த்துஅல்லாஹ் இப்படி சொல்கின்றான். உங்களில் மறுமையை நாடுபவர்களும் இருக்கின்றார்கள் என்று,
நம்முடைய இபாதத்துகளை அல்லாஹ்விற்காக மட்டும் அவனுடைய திருமுகத்திற்காக மட்டும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
ஒரு சுப்ஹானல்லாஹ் வாக இருக்கட்டும், அல்லது ஹஜ்ஜாக இருக்கட்டும், நீங்கள் செய்யக்கூடிய எந்த காரியமாக இருந்தாலும் அதில் கவனிக்க வேண்டியது :
1.அல்லாஹ்வின் புறத்திலிருந்து வழிகாட்டுதல் இருக்கின்றதா?
2. அல்லாஹ்வுடைய திருமுகம் மட்டும் நமக்கு நோக்கமாக இருக்கின்றதா?
இது தக்வாவுடைய முதல் அடிப்படை.
இரண்டாவது சொல்கின்றார்கள் :அல்லாஹ் தடுத்த பாவத்தை விட்டு விட வேண்டும். அல்லாஹ்விற்கு மாறு செய்வதை விட்டு விட வேண்டும்.
அல்லாஹ்வின் புறத்தில் உண்டான அந்த வெளிச்சத்தின் அடிப்படையில்.பாவம் எது? எது குர்ஆனில் அல்லாஹ் கண்டித்திருக்கின்றானோ? எதை ரஸூல் (ஸல்) அவர்கள் கண்டித்திருக்கின்றார்களோ? அதை விட்டுவிட வேண்டும்.
இதை பற்றியும் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கை கொடுத்திருக்கின்றார்கள். சில மக்கள் இப்படியும் உருவாகுவார்கள். ஈமானிலே அவர்களுடைய நிலை மோசமாகி மோசமாகி நன்மையை பாவமாக்கி விடுபவர்களும், பாவத்தை நன்மையாக்கி விடக்கூடியவர்களும் இருப்பார்கள்.
ஆகவே தான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உண்டான வெளிச்சத்தின் அடிப்படையிலே, வழிகாட்டுதலின் அடிப்படையிலே.
ஒன்று,அல்லாஹ்வின் பார்வையில் எது பாவமாக இருக்கின்றதோஅது தான் விடப்பட வேண்டியது தவிர, ஒரு விஷயம் அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்திருக்கின்றான்.
அதனுடைய தேவை இருக்கின்றது. அதில் எந்த பழிப்பும் இல்லை. அல்லாஹ்வுடைய தூதர் செய்திருக்கின்றார்கள். இந்த மார்க்கத்தினுடைய அனுமதிக்கப்பட்ட அமல்களில் ஒன்றாக இருக்கின்றது.
ஆனால் இன்னவருக்கு பிடிக்கவில்லை, அவர் பழிப்பார், இவர் பழிப்பார் என்பதற்காக விடுவது, இது தக்வாவிற்கு எதிரானது.
ஆகவே பாவம் என்பது எதை அல்லாஹ் கண்டித்திருக்கின்றானோ? எதை அல்லாஹ் எச்சரிக்கை செய்திருக்கின்றானோ? அதுதான் பாவம்.
அடுத்து அப்படி அந்த பாவத்தை விடும்போது, எப்படி விட வேண்டும்?
என் தந்தைக்கு என் தாய்க்கு தெரிந்துவிடுமோ? என்னை பார்த்து சமுதாயம் ஏதாவது சொல்லிவிடுமோ? வெளியில் தெரிந்தால் என்ன? என்பதற்காக அல்ல.
அல்லாஹ்வுடைய மறுமை தண்டனையை பயந்து.ஒரு சின்ன செயலாக இருக்கட்டும், அல்லது பெரிய பாவமாக இருக்கட்டும், அதை நாம் விடுகிறோம் என்றால், நம்முடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய பயம், மறுமையில் நாம் கேவலப்பட்டு விடக்கூடாது என்பற்காக.
இப்ராஹிம் (அலை) அவர்கள் இப்படி துஆ கேட்டார்கள் :
وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
"என்னை மறுமையிலே கேவலப்படுத்தி விடாதே". (அல்குர்ஆன் 26:87)
வாழ்க்கையிலே அவர்கள் மூன்று முறை பொய் சொல்லிவிட்டார்கள். அந்த பொய்யும் நிர்பந்தமான நேரத்தில்.
அதுவும் இரண்டு அர்த்தங்கள் உடையவை. வெளிப்படையில் அந்த வார்த்தையை கவனித்தால் உண்மையாக இருக்கும். ஆனால் மக்கள் கேட்டதன் அடிப்படையில் பார்த்தால் மாற்றமாக இருக்கும். அதை நினைத்து அவர்கள் பயந்தார்கள்.
அல்லாஹ் என்னை மறுமையிலே மக்களுக்கு முன்னால் கேள்வி கேட்டு நான் அசிங்கப்பட்டு விடக்கூடாது. என பயந்து ரப்பிடத்திலே கேட்டார்கள்.
இன்று மூட்டைக் கணக்கிலே பாவங்களை சுமந்திருக்கக்கூடிய நம்முடைய நிலையை நினைத்து பார்த்திருக்க வேண்டும். ஒரு பாவத்தை விட்டால் இன்னொரு பாவம் ஒட்டிக் கொள்கின்றது. ஒரு பாவத்தை விட்டு விலகினால் இன்னொரு பாவம் நம்மை இழுக்கின்றது. அந்த அளவிற்கு ஈமானுடைய, தக்வாவுடைய பலவீனம் உடையவர்களாக இருக்கிறோம்.(அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!)
நம்முடைய வெளிப்படையான சில அமல்களை வைத்துக் கொண்டு, அல்லது நம்முடைய சில வெளிப்படையான தோற்றத்தை வைத்துக் கொண்டு, நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம். பெருமை பட்டுக் கொண்டிருக்கிறோம்.
தல்க் இப்னு ஹபீப் (ரஹ்) அவர்கள் கூறக்கூடிய வார்த்தையை கவனியுங்கள் :தக்வா என்றால் நீ அல்லாஹ்வுடைய இபாதத்தை செய்ய வேண்டும். அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து உண்டான வழிகாட்டுதலின் அடிப்படையில்.
எந்த அமல்களை செய்தாலும் சரி மறுமையை ஆதரவு வைத்துமட்டும் செய்ய வேண்டும். அது இபாதத்தாக இருக்கட்டும், அல்லது மக்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய நல்லுதவிகளாக இருக்கட்டும், அல்லாஹ்வுடைய சவாபு மட்டும் நோக்கமாக இருக்க வேண்டும்.
மிக சோதனையான ஒன்று, தொழுவதை ஏதோ கொஞ்சம் முயற்சி செய்து, இஹ்லாஸாக ஆக்கிக்கொள்கின்றோம் என்று நாமாக சொல்லிக்கொள்கின்றோம்.
அடுத்து ஒரு பிரச்சனை வருகின்றது. பிறருக்கு உதவி செய்வது, இப்போது நாம் சந்திக்கின்ற இந்த மழைப் போன்ற பேரிடர்கள், இப்போது பல மக்கள் உதவி செய்கின்றார்கள். முஸ்லிம்களும் செய்கின்றார்கள், முஸ்லிம் அல்லாதவர்களும் செய்கின்றார்கள். இஸ்லாமிய நிறுவனங்களும் செய்கின்றன. பிற நிறுவனங்களும் செய்கின்றன.
இங்கே நம்முடைய இஹ்லாஸ் எந்த அளவு இருக்கிறது? அல்லாஹ் பார்க்கின்றான். நாம் இந்த ஃபோட்டோக்களுக்காக, விளம்பரங்களுக்காக, நம்முடைய கட்சியைப் பற்றி, நம்முடைய இயக்கத்தைப் பற்றி, நம்முடைய அமைப்பைப் பற்றி, மக்கள் பெரிதாக பேச வேண்டும் என்று இந்த உதவிகளை செய்து விட்டால், (அல்லாஹ் பாதுகாப்பானாக!) மிகப்பெரிய நஷ்டமாக, மிகப் பெரிய கேவலமாக மறுமையிலே அமைந்துவிடும்.
அல்லாஹ்வுடைய சவாபை ஆதரவு வைத்து நாளை மறுமையிலே மூன்று நபர்களை அல்லாஹ் எழுப்பி அவர்களிடத்திலே முதலாவதாக விசாரிப்பான். அதிலே ஒருவர் பெரிய தர்மசாலி. அல்லாஹ் கேட்பான் உனக்கு செல்வத்தை கொடுத்தேனே என்று. தான் கொடுத்த செல்வத்தை அல்லாஹ் சொல்லிக் காட்டுவான்.
அந்த மனிதர் சொல்வார் :யா அல்லாஹ்! கொடுத்தாய், நானும் கொடுத்தேனே? என்று. அல்லாஹ் சொல்வான் :
(அல்லாஹ்வுக்குத் தெரியும், நாம் கொடுக்கும் போது எந்த எண்ணத்தில் கொடுக்கின்றோம் என்று, பிறருடைய வாழ்த்தை எதிர்பார்த்தா? பிறருடைய புகழை எதிர்பார்த்தா? நம்முடைய பெயர் வர வேண்டும் என்பதற்காகவா? அல்லாஹ்விற்குத் தெரியும்.)
ஆம்! நீ கொடுத்தாய்.
நீ பெரிய கொடைவள்ளல் என்று சொல்லப்படுவதற்காக, அது சொல்லப்பட்டு விட்டது.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 1905.
சகோதரர்களே! நாம் இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும் :நன்மை செய்யும் போது அல்லாஹ்வுடைய சவாபை ஆதரவு வைத்தும், ஒரு பாவத்தை விடும்போது, அல்லாஹ்வுடைய தண்டனையை பயந்தும் இருக்க வேண்டும்.
இந்த உணர்வு நமக்கு வர வேண்டும்.
எல்லா கண்களையும் மறைத்துவிடலாம். எல்லா கேமராக்களையும் மறைத்துவிடலாம். அல்லாஹ்வின் கண்களை யார் மறைப்பது? யாரால் மறைக்க முடியும்? அவனுக்கு யாராவது திரை போட முடியுமா? அர்ஷிலிருக்கக்கூடிய ரப்பு ஏழு பூமிக்கு கீழ் இருக்கக்கூடிய, ஆழ்கடலில் இருக்கக்கூடிய, ஒவ்வொரு சிறிய, பெரிய ஜீவராசிகளின் அசைவுகளை கவனிக்கின்றான்.
இது தான் தக்வாவிற்கு நாம் முன்னோர்கள் கூறிய விளக்கம்.
இன்னும் சில ஸஹாபாக்கள், தாபியீன்கள் சொல்வதை கவனியுங்கள் : அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு சொல்கின்றார்கள்; முழுமையான தக்வா என்ன தெரியுமா?
அடியான் அல்லாஹ்வை பயந்த காரணத்தால் ஒவ்வொரு சிறிய காரியத்தைக்கூட அது ஹலாலாக இருந்தாலும், இந்த ஹலாலால் அடுத்து நான் ஹராமிற்கு சென்று விடுவேனோ? என்கின்ற பயத்தால் அந்த ஹலாலை விடுகின்ற அளவுக்கு அவன் வரும்போது, அங்கே அவனுக்கு தக்வா வருகிறது.
எத்தனையோ ஆகுமான விஷயங்களை நாம் செய்கின்றோம். அந்த ஆகுமான விஷயங்களில் நாம் செல்லும் போது, அங்கே ஆகாத ஒரு விஷயம் ஒட்டிக் கொள்வதை பார்க்கின்றோம்.
அது போன்று இந்த இறையச்சத்தின் மூலமாக ஹராமிற்கும், தனக்குமிடையிலே ஒரு இடைவழியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஹராமிற்கும் தனக்குமிடையிலே ஒரு ஹிஜாப் (திரையை) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு அல்லாஹ்வுக்கு சிறிய, பெரிய விஷயத்திலும் பயப்பட வேண்டும் என்று கூறிவிட்டு பிறகு ஸூரத்துஜ் ஜில்ஜால் வசனத்தை ஓதிக் காட்டினார்கள் :
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7) وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
"யார் ஒரு அளவு நன்மை செய்தாலும் அதை மறுமையில் பார்ப்பார். யார் ஒரு அளவு தீமை செய்தாலும் அதை மறுமையில் பார்ப்பார்." (அல்குர்ஆன் 99 : 7,8)
என்று கூறிவிட்டு சொன்னார்கள்: நன்மைகள் எதையும் அதை செய்வதில் குறைவாக இருக்கிறதே, அது சிறியதாக இருக்கிறதே, என்று அர்ப்பமாக கருதிவிடாதே! தீமையில் எதையும் அது சிறியது தானே என்று நினைத்து செய்துவிடாதே. அதை விட்டுவிடு.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொல்கின்றார்கள் : தக்வா உள்ளவர்கள் யார் தெரியுமா?
அல்லாஹ் கொடுத்த நேர்வழியை விட்டு விடுவதில் அல்லாஹ்வுடைய தண்டனையை பயப்படுவார்கள். அல்லாஹ்வுடைய தண்டனையை இரண்டு விஷயங்களிலே பயப்பட வேண்டும்.
1. பாவத்தை செய்வதிலேயும் பயப்பட வேண்டும்.
2. அல்லாஹ் கடமையாக்கியதைவிடுவதிலும் பயப்பட வேண்டும்.
அல்லாஹ் கொடுத்த நேர்வழியில் நாம் எதைக் கற்றுக் கொண்டோமோ? அறிந்து கொண்டோமோ? அதை விடுவதில் அல்லாஹ்வுடைய தண்டனையை பயப்படுவார்களோ, மேலும் அல்லாஹ் கொடுத்த மார்க்கத்தை முழுமையாக மனதார உண்மை என்று நம்புவதிலே அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை யார் ஆதரவு வைப்பார்களோஅவர்கள் தான் தக்வா உள்ளவர்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொல்லக்கூடிய முக்கியமான விஷயங்கள் என்ன?
ஒன்று மார்க்கம் எது என்று அறியப்பட்டதோ, அல்லாஹ்வுடைய தீன் என்று நபியின் உடைய சுன்னா என்று எது அறியப்பட்டதோ அதை விடும்போது உள்ளத்தில் பயம் ஏற்பட வேண்டும்.
அல்லாஹ் எப்படி சொல்கின்றான் :
فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ
"யார் நபியின் உடைய கட்டளையை மீறுகிறார்களோ? அவர்களுக்கு கடுமையான வேதனை, தண்டனை வரும் என்பதை, குழப்பங்கள் வரும் என்பதை, அவர்கள் பயந்து கொள்ளட்டும்." (அல்குர்ஆன் 24:63)
அடுத்து இந்த மார்க்கத்தை நம்புகின்ற விஷயத்திலேஅல்லாஹ்வுடைய ரஹ்மத்தை ஆதரவு வைப்பது.
இது ஸஹாபாக்களிடதிலே இருக்கக்கூடிய ஒரு முக்கியமான அம்சம்.
இன்று நாமும் நம்மை முஸ்லிம் என்று முஃமீன் என்று சொல்கின்றோம், அல்லாஹ் நம்மை அப்படியே ஆக்கி வைப்பானாக! துஆ தான் செய்ய முடியும், உறுதியாக சொல்ல முடியுமா? அல்லாஹ் அறிந்தவன். அல்லாஹ் நமக்கு அந்த யஃகீனை கொடுப்பானாக! அந்த ஈமானை கொடுப்பானாக!
இன்று சிலரிடத்திலே பேசும் போது தான் தெரிகின்றது. அவரிடத்திலே ஈமான் இருக்கின்றதா? அவரிடத்திலே பேசினால் நம்முடைய ஈமான் damage ஆகிவிடுமா? என்று.
தொழக்கூடியவராகத் தான் இருந்தார். நம்மோடு சேர்ந்து நோன்பெல்லாம் நோற்பார், சில விஷயங்களைப் பேசும் போது அதிலே எனக்கு உடன்பாடு கிடையாதுஎன்று சொல்லுவார்.
எந்த விஷயத்தில்? எதை செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் சொன்னார்களோ? அல்லது அதை நம்ப வேண்டும் என்று அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் சொன்னார்களோ?
அந்த விஷயத்தை பற்றி பேசும் போது, இதெல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. இதெல்லாம் சும்மா, எல்லா ஹதீஸையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற அவசியம் கிடையாது. எல்லா விஷயத்தையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்று கூறுகிறார்கள்.
நாம் நினைத்துக் கொண்டிருப்போம்;முன் ஸஃப்பில் (வரிசையில்) தொழுதார். நம்மோடு ஹஜ்ஜுக்கு வந்தார் என்று.
உள்ளத்தில் பார்த்தால் மார்க்கத்தை நம்புவதில், நபியின் சுன்னாவை நம்புவதிலே, அவர் ஓர் அளவுகோல் வைத்திருப்பார். அந்த அளவுகோலுக்கு ஏற்ப ஏற்றுக் கொள்வார். உண்மை என நம்புவார். அவருடைய அளவுகோலுக்கு ஏற்காததையெல்லாம் ஒதுக்கி விடுவார். அதைப்பற்றி எல்லாம் அவரிடத்திலே பிரஸ்தாபிக்கப்பட்டால்அவருக்கு ஒத்துக்காது.
அல்லாஹ்வின் அடியார்களே! இது மிக பயங்கரமான ஆபத்தான நிலை. இதனை எச்சரித்துதான்இப்னு அப்பாஸ் (ரலி) அன்ஹு அவர்கள் சொல்கின்றார்கள் :
செயலில் பிறகு உள்ளத்தில்.
இரண்டு நிலைப்பாடுகளை சொல்கின்றார்கள்.
செயலில் என்ன? அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த நேர்வழியை, (அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த நேர்வழி ஒன்று குர்ஆனின் மூலமாக,மற்றொன்று நபியினுடைய சுன்னாவின் மூலமாக)இந்த நேர்வழியை விடுவதில் அல்லாஹ்வைப் பயப்படுவது, அல்லாஹ்வுடைய தண்டனையைப் பயப்படுவது, இது அமல் சார்ந்தது.
இரண்டாவது, அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த அனைத்தையும் நம்பிக்கைக் கொள்வது. அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து.
ஒரு மனிதனுக்கு தொழுகையினால் எப்படி அல்லாஹ்வுடைய ரஹ்மத் கிடைக்குமோ, நோன்பினால் அல்லாஹ்வுடைய ரஹ்மத் கிடைக்குமோ, ஜகாத்தால், ஹஜ்ஜால் இன்னும் பிற அமல்களினால் எப்படி அல்லாஹ்வுடைய ரஹ்மத் கிடைக்குமோ அது போன்று அடியான் உள்ளத்திலே, நான் அல்லாஹ்வை நம்புகின்றேன், வேதத்தை நம்புகின்றேன், நபியை நம்புகின்றேன், நபியினுடைய ஒவ்வொரு சுன்னாவையும் நம்புகின்றேன்,
மறுமையைக் குறித்து, ஆகிரத்தைக் குறித்து, அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய ரஸூலும் கூறியதை நான் நம்புகிறேன்என்று தன்னுடைய உள்ளத்தின் உண்மைகளை ஈமானைப் புதுப்பிப்பதுக் கொண்டு இருப்பாரோ அந்த ஈமானைப் பற்றி சிந்தித்து கொண்டு இருப்பாரோ, அந்த அளவுக்கு அல்லாஹ்வுடைய ரஹ்மத் அவன் மீது இறங்கிக் கொண்டிருக்கும்.
தொழுகை, இபாதத் மூலமாக கிடைக்கும் ரஹ்மத்தைப் போன்று தன்னுடைய உள்ளத்தில் ஈமான் சம்பந்தப்பட்ட விஷயங்களை, ஆகிரத் சம்பந்தப்பட்ட விஷயங்களை நினைவுகூர்ந்து, நினைவுகூர்ந்து நான் இதை நம்புகின்றேன்; நான் ஸிராத்தை நம்புகின்றேன்; நான் மீஜானை நம்புகின்றேன்; அமல்கள் நிறுக்கப்படுவதை, அமல்களின் ஏடுகள் கொடுக்கப்படுவதை, சொர்க்கத்தை, சொர்க்கத்தினுடைய இன்பத்தை, மறுமையிலே நரகத்தை, நரகத்தின் துன்பத்தை நான் நம்புகிறேன். என்று கூறும் போது, அல்லாஹ்வுடைய ரஹ்மத் அவன் மீது இறங்குகின்றது.
இப்போது தான் நம்முடைய உள்ளம் மென்மையாகும். இது குறித்து தான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இப்படி கூறுகின்றார்கள்.
அடுத்து ஹஸன் பஸரி (ரஹ்) அவர்களும் இதற்கு நெருக்கமானதை சொல்கிறார்கள்: தக்வா உள்ளவர்கள் யார் தெரியுமா? அல்லாஹ் ஹராமாக்கியதை விட்டு விலகியிருப்பார்கள். அல்லாஹ் ஃபர்ளாக்கியதை செய்து முடிப்பார்கள்.
இப்படியாக ஸஹாபாக்கள், தாபியீன்களிடமிருந்து பல விளக்கங்களை தக்வாவிற்கு பார்க்கின்றோம். இன்னும் சில விஷயங்களை அடுத்த ஜும்ஆவிலே பார்ப்போம், இன் ஷா அல்லாஹ்.
அல்லாஹு தஆலா நாம் கேட்ட நல்ல விஷயங்களைக் கொண்டு, நம் உள்ளத்தில் தக்வாவுடைய ஒளியை ஏற்படுத்தித் தருவானாக! நஃப்ஸுடைய ஊசலாட்டங்களில் இருந்தும், ஷைத்தானுடைய வழிகேடுகளிலிருந்தும் என்னையும், உங்களையும், நம்முடைய உம்மத்துகளையும் அல்லாஹு தஆலா பாதுகாத்து அருள்புரிவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا دَاوُدُ يَعْنِي ابْنَ قَيْسٍ، عَنْ أَبِي سَعِيدٍ، مَوْلَى عَامِرِ بْنِ كُرَيْزٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحَاسَدُوا، وَلَا تَنَاجَشُوا، وَلَا تَبَاغَضُوا، وَلَا تَدَابَرُوا، وَلَا يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَانًا الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لَا يَظْلِمُهُ وَلَا يَخْذُلُهُ، وَلَا يَحْقِرُهُ التَّقْوَى هَاهُنَا» وَيُشِيرُ إِلَى صَدْرِهِ ثَلَاثَ مَرَّاتٍ «بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ، كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ، دَمُهُ، وَمَالُهُ، وَعِرْضُهُ»)صحيح مسلم - (2564
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/