HOME      Khutba      தக்வா! விளக்கம் | பலன்கள் அமர்வு 1 | Tamil Bayan - 646   
 

தக்வா! விளக்கம் | பலன்கள் அமர்வு 1 | Tamil Bayan - 646

           

தக்வா! விளக்கம் | பலன்கள் அமர்வு 1 | Tamil Bayan - 646


بسم الله الرحمن الرّحيم

தக்வா! விளக்கம் – பலன்கள் அமர்வு –1

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

 

அல்லாஹ்வைப் போற்றி, புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்தத் தூதரின் குடும்பத்தார், தோழர்கள்மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அல்லாஹ்வுடைய அடியாராகவும், தூதருமாக இருக்கின்றார்கள் என்று சாட்சி கூறியவனாக, எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்விடத்தில் அவனுடைய அன்பையும், மன்னிப்பையும், அவனுடைய உண்மையான பயத்தையும்வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா நமது பாவங்களை மன்னிப்பானாக! நமது பெற்றோருடைய பாவங்களை மன்னிப்பானாக! தனிமைகளிலும், சபைகளிலும், தனி வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் அல்லாஹ்வுடைய தக்வாவை முன்னிறுத்தி வாழ்ந்து, அல்லாஹ்வுடைய அன்பையும், மன்னிப்பையும் பெற்ற நல்லோர்களில் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா  தன்னுடைய அடியார்களிடத்தில் விரும்புகின்ற, அவன் நேசிக்கின்ற உயர்ந்த குணங்களில் ஒன்று, இந்த அடியார்கள் எப்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து அல்லாஹ் என்னை பார்க்கின்றான்;அவன் என்னை கண்காணிக்கிறான்; நான் தனிமையில் இருந்தாலும் சரி, சபையில் இருந்தாலும் சரி, என்னுடைய குடும்பத்தில் இருந்தாலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி, எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வுடைய கண் என்னை கண்காணிக்கிறது;

அல்லாஹ் என்னை பார்க்கின்றான்;என்னுடைய செயல்களை அவன் கண்காணிக்கிறான்;பதிவு செய்கின்றான்;என் உள்ளங்களில் உள்ள இரகசியங்களை அவன் அறிகிறான்;என்று அறிந்து அந்த நம்பிக்கையை மனதில் பதிய வைத்து, அதற்கு ஏற்ப அல்லாஹ்வுடைய கண்ணியத்தை மனதிலே பதிய வைத்து, அல்லாஹ்வுடைய அந்த உயர்வை, அந்த மதிப்பை, அந்த கம்பீரத்தை, மனதிலே பதிய வைத்து  அல்லாஹ்வை பயப்படுவது.

தக்வா -இறையச்சம் இது நம்முடைய உள்ளத்தில் எப்பொழுதும் நீங்காமல் இருக்க வேண்டும் என்று அல்லாஹு தஆலா விரும்புகின்றான்.

சில நேரங்களில் இந்த தக்வாவை மறந்து விட்டாலும், அகன்று விட்டாலும், உண்மையில் அல்லாஹ்வை பயந்தவர்கள் உடனடியாக அதற்காக அல்லாஹ்விடத்தில் வருந்தி தவ்பா செய்து மீண்டும் அந்த தக்வாவை புதுப்பித்துக் கொள்வார்கள்.

إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِنَ الشَّيْطَانِ تَذَكَّرُوا فَإِذَا هُمْ مُبْصِرُونَ

நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் ஊசலாடினால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள்; அது சமயம் அவர்களுடைய (அறிவுக்) கண் திறந்து விழிப்படைந்து விடுகிறார்கள்.(அல்குர்ஆன் 7 : 120)

வசனத்தின் கருத்து : யார் உண்மையில் அல்லாஹ்வை அல்லாஹ்விற்காக பயந்தார்களோ, ஷைத்தான் சில நேரங்களில் அவர்களை சில ஊசலாட்டங்களை கொண்டு தீண்டிவிட்டால், உடனே அவர்கள் சுதாரித்துக் கொள்வார்கள். உஷாராகி கொள்வார்கள்.

ஷைத்தான் தங்களை எப்படி வழி கெடுக்கிறான்? இந்த சந்தேகங்களை போட்டவன் யார்? இந்த ஊசலாட்டங்கள் உள்ளத்தில் கொண்டுவந்தது யார்? என்னை இங்கு இழுத்துக் கொண்டு வந்தவன் யார்? எனக்கு இதைச் செய்யும்படி தூண்டியவன் யார்? இந்த ஹராமை ஹலாலாக அலங்கரித்து காட்டியது யார்? இந்த தப்பை செய்யும்படி தப்பின் மீது ஆசையை தூண்டியது யார்?

அது அந்த ஷைத்தான் என்பதை அவர்கள் புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு உடனே அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கி விடுவார்கள். தவ்பா கேட்டு விடுவார்கள். அழுவார்கள். மீண்டு விடுவார்கள். நன்மைகளை செய்து அந்த பாவங்களில் இருந்து விடுபடுவார்கள்.

அல்லாஹு தஆலா உண்மையான தக்வா உள்ளவர்களை இப்படி அழகாக வர்ணிக்கிறான். சிலரிடம் தக்வா இருக்கும். மக்களின் பார்வைக்காக மட்டும் அந்த தக்வா இருக்கும். முனாஃபிக்குடைய தக்வா. அல்லாஹ் பாதுகாப்பானாக!

இந்த தக்வா உடைய ஸிஃபத் முஃமின்களுக்கு மிக முக்கியமான ஒன்று.ஈமானோடு இந்த தக்வா ஒருசேர முழுமையாக கலக்கும் போது தான் ஈமானோடு என்ன மாற்றங்கள் வாழ்க்கையில் வர வேண்டுமோ அந்த மாற்றங்கள் வரும்.

ஈமானை கொண்டு எந்த யகீன் உள்ளத்தில் வர வேண்டுமோ அந்த யகீன் வரும். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கொண்டு என்ன ஒரு நேர்வழி கிடைக்க வேண்டுமோ அந்த நேர்வழி ஈமானோடு தக்வா சேரும் போதுதான் வரும்.

ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ

அல்லாஹு தஆலா ஈமானோடு தக்வாவை சேர்த்து சொல்கின்றான். அந்த ஈமானோடு தக்வா சேரும் போது அவர்களுக்கு இந்த குர்ஆன் ஹிதாயத் கொடுக்கும். நேர்வழி கொடுக்கும், அவர்களை நேர் வழியில் நடத்தும் என்று. (அல்குர்ஆன் 2:2)

இன்று நாம் தக்வா என்று பேசுகிறோம். நம்முடைய சான்றோர், ஸஹாபாக்கள், தாபியீன்கள் இந்த தக்வாவை எப்படி புரிந்தார்கள்? எப்படி இது குறித்து விளக்கங்களை நமக்கு கூறி இருக்கின்றார்கள்? என்பதை முடிந்தவரை இந்த ஜும்ஆவில் நாம் பார்ப்போம் இன் ஷா அல்லாஹ்.

அலி (ரலி) அவர்கள் இந்த தக்வாவை குறித்து நமக்கு ஒரு அழகிய பாடத்தை கூறுகின்றார்கள்;

قال علي بن أبي طالب رضي الله عنه : (( التقوى هي الخوف من الجليل ، والعمل بالتنزيل ، والقناعة بالقليل ، والإستعداد ليوم الرحيل((.

தக்வா எது தெரியுமா? கம்பீரம், கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வை பயப்படுவது;

(அவனுடைய தண்டனையை பயப்படுவது என்றால் எப்படி?நான் இந்த தவறை செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற பயம், அவன் என்னுடைய எஜமானன், அவனுக்கு மாறு செய்யும் போது அவன் என்னை கோபித்துக் கொள்வான் என பயப்படுவது.

அல்லாஹ்வுடைய தண்டனையை பயப்படவேண்டும். அதுபோன்று அல்லாஹ்வுடைய கோபத்தையும் பயப்படவேண்டும். அல்லாஹ்வுடைய கோபம் அவனுடைய தண்டனைகளில் மிகப்பெரிய தண்டனை.

நரக நெருப்பு பாவியை சுட்டெரிக்கும் போது, இன்னும் நரகத்தில் வகைவகையான வேதனைகள்அந்த பாவிகளை வேதனை கொடுக்கும் போது அந்த பாவிகளுக்கு என்ன வலி வேதனை ஏற்படுமோ அதை விட பயங்கரமானது, அல்லாஹ் அந்த பாவிகள் மீது கோபமாக இருக்கிறான் என்பது. அல்லாஹ்வுடைய கோபம் மிக பயங்கரமானது.

அந்த பயம் நமக்கு வரவேண்டும். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நபிமார்களும் எப்படி பயந்தார்கள்? அல்லாஹ்வை அவனுடைய கோபத்தை பயந்தார்கள். அவனுடைய வெறுப்பை பயந்தார்கள்.

அதுபோன்று அல்லாஹ்வுடைய தண்டனையை உலகத்திலும் தாங்கிக்கொள்ள முடியாது. உலகத்தில் தண்டனை மரணத்தோடு முடிந்து விடலாம். ஆனால் மறுமையின் தண்டனையோஅல்லாஹ் கூறுகிறான்;

وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقَى

மறுமையின் தண்டனை மிகக் கடினமானது. எப்போதும் நீடித்திருக்க கூடியது. (அல்குர்ஆன் 20:127)

ஆகவே தக்வாவுடைய முதல்நிலை அடியார்கள் உள்ளத்திலே அல்லாஹ்வைப் பற்றி அந்த கம்பீரமான கண்ணியத்திற்குரிய அந்த அதிபதி பற்றிய அந்த பயம் இருக்க வேண்டும்.)

இரண்டாவதாக, والعمل بالتنزيل

அல்லாஹ் இறக்கிய வேதத்தின் படி அமல் இருக்க வேண்டும். குர்ஆன் அவருடைய வாழ்க்கையில் இருக்க வேண்டும். அவருடைய வியாபாரத்தில் தொழில் துறையில், அவருடைய குடும்ப வாழ்க்கையில், அவருடைய சமூக வாழ்க்கையில், அவருடைய சொல்லில், செயலில் குர்ஆன் இருக்க வேண்டும்.

இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். குர்ஆன் நம்முடைய வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்றால் எப்படி வரும்? அதனோடு இருக்கக்கூடிய தொடர்பு என்ன? என்ன தொடர்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறோம்?

இன்று முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு கூட்டம் இறந்தவர்களுக்காக என்றே குர்ஆனை வைத்திருக்கின்றது. சில விசேஷங்களுக்காக என்று குர்ஆனை வைத்திருக்கின்றார்கள். சிலர் காலை மாலை அவ்ராது ஓதுவதற்காக என்று குர்ஆனை வைத்திருக்கின்றார்கள்.

இவற்றில் சில பித்அத்துகள் –அனாச்சாரங்கள், சில நன்மைகளாக மட்டுமே இருக்கும். முஃமின்களுக்கு குர்ஆனுடைய தொடர்பு, முதலாவதாக நான் அல்லாஹ்வின் வேதத்தை அதிலுள்ள அனைத்தையும் நான் நம்பிக்கை கொள்கிறேன்.

அதிலுள்ள ஹலாலை ஹலாலாக ஏற்றுக்கொள்கிறேன். அதிலுள்ள ஹராமை ஹராமாக ஏற்றுக்கொள்கிறேன். அல்லாஹ் கட்டளையிட்டுள்ள ஃபர்ளுகளை செய்வேன். அல்லாஹ் தடுத்த பாவங்களை விட்டு நான் விலகிக் கொள்வேன். இது குர்ஆனோடு முஃமீனுக்கு இருக்கக்கூடிய முதல் தொடர்பு.

பிறகு அந்த குர்ஆனை கற்றுக் கொள்வது, ஓதக் கற்றுக் கொள்வது, அதன் பொருளை கற்றுக் கொள்வது, ஒவ்வொரு நாளும் அந்த குர்ஆனிலிருந்து நேர் வழியைத் தேடி அதை ஓதுவது. அந்த வசனங்களை சிந்திப்பது.

எங்களுக்கு குர்ஆன் இருக்கின்றது. குர்ஆன் பெரிய வேதம் என்று பெருமை பேசுவதல்ல. குர்ஆனை கொண்டு அமல் செய்வது என்பது ஒவ்வொரு நாளும் அந்த குர்ஆனோடு தொடர்பு இருக்கவேண்டும்.

தொழுகையில் ஓதப்படும் வசனங்களை சிந்திக்கவேண்டும். தொழுகையை முடித்த பிறகு, தொழுகையில் ஓதிய வசனம் வாழ்க்கையில் எனக்கு என்ன பாடங்களை கற்பிக்கின்றது? என்ற சிந்தனை இருக்கவேண்டும்.

அல்லாஹு தஆலா கேட்கின்றான்;

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ

குர்ஆனை இவர்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன் 47 : 24)

தொழுகையில் நாம் ஓதுகின்ற குர்ஆனை அதன் வசனங்களை சிந்திக்கவில்லை என்றால், அந்தத் தொழுகை நமக்கு என்ன பலனை கொடுக்கும்?

அடுத்து அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்; والقناعة بالقليل

இந்த உலக வாழ்க்கையில் எது நம்முடைய கையில் இருக்கின்றதோ, அது குறைவாக இருந்தாலும் சரி, குறைவானதை கொண்டு மனத்திருப்தி பெறுவது.

இது மிகப்பெரிய சோதனையான ஒன்று. யார் மனதிருப்தி கொடுக்கப்பட்டார்களோ அவர்களுக்கு இந்த உலகம் விசாலமாக இருக்கும்.

தன்னிடத்தில் உள்ளது மிகப்பெரியதாக இருக்கவேண்டும்.. பெருமையாக அல்ல. அல்லாஹ் எனக்கு கொடுத்தது அல்ஹம்துலில்லாஹ்.

பிறருடைய சொத்து, பிறருடைய செல்வம்அவற்றை பார்க்க கூடாது.

وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ

உங்களில் சிலரை விட சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தி இருப்பதை பார்த்து நீங்கள் ஆசைப்படாதீர்கள். ஏங்காதீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 4:32)

கண்டிப்பாக உலகத்தில் ஏழை இருப்பார். ஏழையில் பரம ஏழை இருப்பார். மிகப்பெரிய வறுமையில் உள்ளவர் இருப்பார். செல்வந்தர் என்றால் நடுத்தர செல்வந்தர். அதற்கு மேலே என்று இப்படியாக படித்தரங்கள் உலகத்திலே கண்டிப்பாக இருக்கும்.

உங்களுக்கு எது தேவையோ அதை அல்லாஹ்விடம் நீங்கள் நேரடியாக கேளுங்கள். ஒருவரிடத்தில் இருப்பதைப் பார்த்து அது எனக்கு வேண்டும் என்பதை கேட்காதீர்கள்.

சஹாபாக்கள் படித்துக் கொண்ட பாடம் இது. பொதுவாக சஹாபாக்களை பற்றி சொல்லப்படும். அவர்களிடத்திலே ஒரு குணம் இருந்தது. அது இன்று நம்மிடத்தில் இருப்பதில்லை. அவர்கள் உலக விஷயங்களில் போதும் என்று திருப்தி உள்ளவர்களாக இருந்தார்கள்.

மார்க்க விஷயத்தில் இன்னும் அதிகம் இன்னும் அதிகம் நான் குறைவோடு இருக்கின்றேன், நான் செய்தது போதாது, இன்னும் அதிகம் செய்ய வேண்டும், இன்னும் அதிகம் ஓத வேண்டும், தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் என்று வணக்க வழிபாடுகளை இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம். மறுமை விஷயத்திலோ அதிகம் வேண்டும் என்ற ஆர்வம். துன்யாவின் விஷயத்தில் போதும் என்ற மனப்பான்மை.

இன்று நாம் அப்படியே தலைகீழாக இருக்கின்றோம். மார்க்க விஷயங்களில் மிகக்குறைவான அற்பமான அமலை செய்துவிட்டு, இது எனக்கு ரொம்ப போதும் என்ற திருப்தியோடு இருக்கின்றோம்.

துன்யாவிற்கு 8மணி நேரம் அல்ல, 16மணி நேரம் அல்ல. மொத்த வாழ்க்கையே செலவழித்தால் கூட போதாது, பத்தாது, என்று இன்னும் இன்னும் என்று துன்யாவின் பேராசையில் இருக்கின்றோம்.

மறுமையின் விஷயத்திலே பற்றவர்களாக இது போதும் இதுவே அதிகம் என்ற மன நிலையிலேயே இருக்கின்றோம். (அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக. மன்னிப்பானாக!)

சஹாபாக்களுக்கும் நமக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய வித்தியாசம், அவர்கள் துன்யாவின் விஷயத்தில் மனநிறைவு உள்ளவர்களாக, மறுமையின் விஷயத்திலோ அதிகம் தேடல் உள்ளவர்களாக இருந்தார்கள்.

நாம் அப்படியே நம்மை மாற்றிக் கொண்டோம். உலக விஷயங்களில் இன்னும் அதிகம் என்ற ஆசை, ஆகிரத்துடைய விஷயங்களில் இதுவே நாம் செய்வது பெரிய விஷயமாக நமக்கு நாமே திருப்தியை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

அடுத்து அலி ரலியல்லாஹு அன்ஹு சொன்னார்கள்,والإستعداد ليوم الرحيل

பயணத்திற்காக, பயணத்தின் நாளுக்காக தயாரிப்பு செய்து காத்திருப்பது.

நான்கு விஷயங்களை சொல்கிறார்கள்;

1. கம்பீரத்திற்குரிய அந்த அல்லாஹ்வை பயப்படுவது,

2. குர்ஆன் படி அமல் செய்வது,

3. குறைந்ததைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வது,

4. பயண நாளுக்காக தயாரிப்போடு இருப்பது.

அல்லாஹ்வின் அடியார்களே! சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த பயண நாள் நம்மில் யாருக்கு எப்போது வரும்? இங்கு ஒரு விஷயத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவுப்படுத்திக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

இன்று நம்முடைய தக்வா இபாதத் எல்லாம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக மாறி இருக்கிறதே தவிர, நம்மிடம் இருக்கிறதா? என்றால் கேள்விக்குறியாக இருக்கின்றது.

சில அறிஞர்கள் உபதேசம் செய்யும்போது இந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பற்றி இவ்வாறு கூறினார்கள்:ரமலான் மாதம் வந்து விட்டது என்னோடு எந்த தொடர்பும் கொள்ளாதீர்கள், நான் குர்ஆனோடு தொடர்பு வைக்க போகிறேன் என்று சிலர் ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்வார்கள்.

எப்போது உன்னை நீ இப்படி செய்தாயோ நீ முகஸ்துதிக்கு ஆளாகிவிட்டாய். பிறருக்கு உன்னுடைய எண்ணத்தை காட்டிக் கொள்கிறாய். இப்படியாக நிறைய விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இருக்கும் ஒரு கப்ருடைய படம் அல்லது கப்ரு குழியுடைய படம் இது வைப்பது தவறா? சரியா? என்று அதைப் பற்றி இப்போது பேசவில்லை.

நாம் நம்முடைய மறுமை நினைவை, மரண நினைவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இதுபோன்ற வெளிரங்கமான சில வெளிப்பாடுகளை கொண்டு மட்டும் நிறுத்தி வைத்துக் கொள்கிறோம்.

அதில் உள்ளது உண்மையிலே உள்ளத்திலே அல்ஹம்துலில்லாஹ். இல்லை அது வெறும் காட்டிக் கொள்வதற்காக, பெருமை பேசுவதற்காக, உள்ளச்சம் உள்ளவர் என்று மக்கள் தன்னைப் பற்றிப் பேசவேண்டும் என்பதற்காக, அல்லது தன்னுடைய மார்க்கப்பற்றை மக்கள் புரிய வேண்டும் என்பதற்காக இருக்குமேயானால் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

முகஸ்துதிக்காக தொழுகின்ற தொழுகையாளிகளே நரகத்திற்கு செல்வார்கள் என்றால்,(அல்குர்ஆன் 107:4-6)

இதுபோன்ற செயல் எவ்வளவு ஆபத்தானதாக இருக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் அடியார்களே! இது பயண நாள். இதற்காக தயாராக இருப்பது ஒரு முஃமீன் ஒவ்வொரு நாளும் தூங்கும் போது இது என்னுடைய வாழ்வில் இறுதி நாளாக இருக்கும்.

இதைத்தான் நினைவூட்டுகிறது.

«اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا»

இறைவா உன் பெயரைக் கொண்டே நான் மரணிக்கிறேன்; இன்னும் உயிர் வாழ்கிறேன்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபாரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 6314.

காலையில் எழும் போது அல்லாஹ் என் வாழ்க்கையில் புதிய நாளை கொடுத்தான். இன்று வாழ்வது இது தான் என் வாழ்க்கை. அடுத்த நாள் நான் தூங்கி எழுந்தால் தான் நான் இரவு வரை கடந்தால்தான்.

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் சொல்லக்கூடிய உபதேசம்இதுதான் :

«إِذَا أَمْسَيْتَ فَلاَ تَنْتَظِرِ الصَّبَاحَ، وَإِذَا أَصْبَحْتَ فَلاَ تَنْتَظِرِ المَسَاءَ»

மாணவனே! நீ மாலையிலிருந்தால் காலையை எதிர்பார்த்து அமலை தள்ளி போடாதே! மாலையில் இருந்தால் காலையை எதிர்பார்க்காதே!

நூல் : புகாரி, எண் : 6416.

உலக விஷயங்களில் நாம் எதையும் தள்ளிப் போடுவது இல்லை. ஆனால் மறுமை விஷயங்களில் சதக்கா கொடுப்பது, நன்மை செய்வது, இப்படி எத்தனை நன்மையான விஷயங்களை காலையில் மாலையில் செய்யலாம் என்று எண்ணிக் கொள்கிறோம். இன்று, நாளை, நாளை மறுநாள் இப்படியாக தள்ளி போட்டு கொண்டு இருக்கிறோம்.

அல்லாஹ்வின் அடியார்களே! இதுதான் சஹாபாக்களுடைய அமல்.

ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி அல்லது அவர்களது மகன் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி வருகிறது.

அவர்கள் நிறைய செல்வம் கொடுக்கப்பட்டவர்கள். அவர்கள் மறுமைக்காக இபாதத்துகளிலே இறங்கிவிட்டால் பார்ப்பவர்களுக்கு இவர்களுக்கு என்ன உலகமே இல்லையோ? உலகத்தேவையே இல்லையோ? என்கிற அளவுக்கு இபாதத்துகளிலே இருப்பார்கள்.

இன்று இந்த சமநிலை நம்மிடம் இருப்பதில்லை. துன்யாவுடைய வேலை செய்யும்போது, மறுமையை காரணம் காட்டி, துன்யாவுடைய வேலையை அரைகுறையாக செய்வது. மறுமையுடைய இபாதத்திலே வரும்பொழுது, துன்யாவை அரைகுறையாக நினைத்துக் கொண்டிருப்பது.

எதைச் செய்கிறோமோஅதில் நம்முடைய கவனம் சரியாக இருக்க வேண்டும் என்பது சஹாபாக்களுடைய இந்த அமல் என்று நாம் படித்துக் கொள்கிறோம்.

அல்லாஹ்வின் அடியார்களே! அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உண்மையான தக்வாவுக்கு விளக்கம் சொன்னார்கள் : அந்த பயண நாளிற்காக தயாரிப்பிலே இருப்பது.

இன்று மலக்குல் மவ்த் இப்போது வந்தால்கூட பாவங்களுக்கு உண்டான தவ்பா நம்மிடம் இருக்கிறதா? தவறவிட்ட  ஃபர்ளான காரியங்களை அதை சரி செய்து நாம் ஈடுகட்டி விட்டோமோ? இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் நம்முடைய அமல்களை சரிசெய்து பாவங்கள் செய்திருந்தால் அதற்கான தவ்பா செய்திருப்பது.

அதுபோன்று அடியார்களுடைய ஹக்குகள் நம்மிடம் இருக்குமேயானால் அது ஒன்று மிக முக்கியமானது.

அடியார்களுடைய ஹக்குகள் நம்மிடத்திலே இருக்குமேயானால்அந்த ஹக்குகளை நிறைவேற்றி இருக்க வேண்டும். அல்லது அதற்குரிய வஸிய்யத் செய்திருக்க வேண்டும்.

சிலருக்கு கடன் வாங்குவது என்றால் அது ஒரு தனி அலாதி பிரியம். இங்கே வாங்குவார்கள், அங்கே வாங்குவார்கள், வாங்கிக் கொண்டே இருப்பார்கள். சரி அது ஒருபக்கம். இப்படி வாங்குகிறார்கள், சாட்சி வைத்து வாங்கினார்களா? எழுதிக் கொடுத்து வாங்கினார்களா?

தன்னுடைய கடன்கள் அடைக்கப்படுவதற்கு போதுமான அளவு உண்டான சொத்து இருக்கிறதா? அப்படி சொத்து இருந்தால், என் மீது இன்னார் இன்னாருக்கு கடன் இருக்கிறது, நான் இறந்துவிட்டால் அவர்களுடைய கடன்களை இந்த சொத்திலிருந்து நிறைவேற்றி விடுங்கள் என்று ஏதாவது குடும்பத்தாருக்கு வஸிய்யத் செய்து  இருக்கிறார்களா? என்றால் ஒன்றுமே இருப்பதில்லை.

எங்க அத்தா வாங்கினார் என்று சொல்றீங்க, என்ன சாட்சி இருக்கின்றது? என்று தன் தந்தை வாங்கிய கடனை மறுக்கக்கூடியவர்கள், அல்லது கடன்களை கொடுப்பதில் காலதாமதம், வீணான காலதாமதம், அர்த்தமற்ற காலதாமதம், வசதியிருந்தும் கொடுப்பதற்கு உண்டான தாக்கத் இருந்தும், பொறுமையா கொடுக்கலாம், என்ன அவசரம் என்று தள்ளிப்போடுகிறார்கள்.

அல்லாஹ்வின் அடியார்களே! ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். ஒரு மனிதர் இறந்துவிட்டால், முதலாவதாக, அவருடைய கஃபன் செலவுகள் அவருடைய சொத்திலிருந்து எடுக்கவேண்டும்.

இரண்டாவது, அவருடைய கடன்கள் அவருடைய சொத்திலிருந்து எடுக்கப்படவேண்டும்.

மூன்றாவது, அவர் செய்த வஸிய்யத்துகள், இன்னாருக்கு இன்ன செல்வத்தை தர்மமாக கொடுங்கள், இன்னாருக்கு இவ்வளவு தர்மமாக கொடுங்கள் என்று தன்னுடைய சொத்தில் மூன்றில் ஒன்றை வஸிய்யத் செய்திருந்தால், அந்த வஸிய்யத் நிறைவேற்றப்பட வேண்டும்.

அதற்கு பிறகு மிஞ்சி இருக்கக்கூடியது தான், வாரிசுகளுடைய சொத்து.

இன்று சமுதாயம் என்ன செய்கிறது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். முதலில் பங்கு போடு. அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

அவருக்கு கொடுக்கனுமே, இவருக்கு கொடுக்கனுமே, முதலில் நாம் பிரித்துக் கொள்வோம். அந்த கடனை யார் கொடுப்பார்கள்? என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

இந்த மறுமையுடைய தயாரிப்பிலே அல்லாஹ்வுடைய ஹக்குகளை நாம் கவனத்தில் வைப்பது போன்று, அடியார்களுடைய ஹக்குகளை நிறைவேற்றி இருக்க வேண்டும்.

தாய் தந்தைக்கு நாம் நோவினை செய்திருந்தால் அவர்களிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். உற்றார், உறவினர்களுக்கு ஏதாவது நாம் தவறு செய்திருந்தால் நாம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

இப்படியாக மரணத்திற்கு உண்டான பயண தயாரிப்பில் இருப்பது.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தக்வாவைப் பற்றி சொல்லும்போது அல்லாஹு தஆலா 102வசனம் சூரா ஆல இம்ரானில் கூறுகிறான் அல்லவா?

اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ

அல்லாஹ்வை எப்படி பயப்பட வேண்டுமோ, நீங்கள் அந்த உரிய முறையில் பயந்து கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் 3 : 102)

இதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் விளக்கம் சொல்கிறார்கள் : அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு கீழ்படிந்து நடக்க வேண்டும். அவனுக்கு மாறு செய்யக்கூடாது. அவனை நினைவு கூர்ந்து கொண்டே இருக்கவேண்டும். அவனை மறந்து விடக்கூடாது. அவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும். நன்றி கெட்டத்தனமாக நடக்கக் கூடாது.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சஹாபாக்களில் கல்வி ஞானம் உள்ள முக்கியமுள்ள தோழர்.

அவர்கள் இந்த தக்வாவை எந்த கோணத்தில் பார்க்கின்றார்? அல்லாஹ்வுக்கு அடியார்கள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அல்லாஹ்விற்கு மாறு செய்யக்கூடாது. அல்லாஹ்வுடைய கட்டளையை நிறைவேற்றுவதிலும், தடுத்த பாவங்களை விட்டு விலகுவதிலும், ரப்புக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

எந்த வகையிலும் அல்லாஹ்விற்கு மாறு செய்யக்கூடாது, அல்லாஹ்வை நினைவு கூர்ந்து கொண்டே இருக்கவேண்டும். தொழுகை ஒரு திக்ரு, நோன்பு ஒரு திக்ரு, காலை செய்ய வேண்டிய திக்ருகள், குர்ஆன் ஓதுவது ஒரு திக்ரு, இப்படியாக அடியான் அல்லாஹ்வுடைய நினைவில்அவனுடைய உள்ளத்தை, அவனுடைய நாவை, அவனுடைய உடலை, பசுமையாக வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ்விற்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் அடியார்களே! இந்த வாழ்க்கையில் நமக்கு கிடைக்கக்கூடிய  ஒவ்வொன்றும் அல்லாஹ்வுடைய நிஃமத். ஒரு நொடி இப்போது நமக்கு கிடைக்கின்றதா, இது அல்லாஹ்வுடைய பெரிய நிஃமத். அல்ஹம்துலில்லாஹ்! வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய ஒவ்வொன்றும் நிஃமத். ஏன் சில நேரங்களில் நாம் எதை தீமையாக நினைக்கின்றோமோ அதுவும் நமக்கு நன்மையாக அமையலாம்.

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி, பொறுமையாக இருந்து, அல்லாஹ்வை நினைப்பதன் மூலம் அதையும் நாம் நமக்கு நன்மையாக மாற்றலாம்.

காய்ச்சல் ஏற்பட்டு விடுகின்றது, நோய் ஏற்படுகின்றது, மழை வெள்ளம் போன்ற சோதனைகள் ஏற்படுகின்றது, இந்த நேரத்தில் அடியான் பொறுமையாக இருந்து, அல்லாஹ்வை குறை கூறாமல்,

(இன்று இறை மறுப்பாளர்களும், சிலை வணங்கிகளும், இணைவைப்பாளர்களும், இதுபோன்று பேரிடர் ஏற்படும் போது என்ன வார்த்தைகளை பேசுகின்றார்கள்? தெய்வம் எங்களை கண்டித்து விட்டது. இயற்கை சீற்றங்களால் நாங்கள் சீரழிந்து விட்டோம். கடவுள் எங்களை கைவிட்டுவிட்டார். எப்படி எல்லாம் வார்த்தைகளை பேசுகிறார்கள்?!

ஒரு முஃமின், அல்லாஹ்வை யகீன் கொண்டவன், தன்னுடைய குடும்பம் சொத்து எல்லாம் பேரிடர்களில் அழிந்து விட்டால் கூட, அல்லாஹ் என்னைக் காப்பாற்றுவான், அல்லாஹ் எனக்கு இருக்கிறான், அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் எனக்கு துணையாக இருக்கின்றான். நான் பொறுமையாக இருப்பேன். கொடுத்ததும் அல்லாஹ்வுக்கு உரியது. எடுத்ததும் அல்லாஹ்விற்கு உரியது.

ஸப்ராக இருக்கும் போது நன்மை செய்வதால் கிடைக்கின்ற நன்மையை விட, சோதனையில் அடியான் பொறுமையாக இருக்கும் போது மிகப்பெரிய நன்மை சொர்க்கத்தை அல்லாஹ் கேள்வி கணக்கில்லாமல் கொடுக்கின்றான்.

ஆகவே அல்லாஹ்விற்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். நன்றி கெட்ட தனமாக நடந்து விடக்கூடாது.

இது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தக்வாவிற்கு சொல்லக்கூடிய விளக்கம். மேலும் பல சஹாபாக்களுடைய விளக்கம் அடுத்தடுத்த ஜும்ஆவிலே பார்ப்போம் இன் ஷா அல்லாஹ்.

அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் உண்மையான தக்வாவை, எந்த தக்வாவை ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களுக்கு போதித்து சொன்னார்களோ, அந்த உயர்ந்த தக்வாவை எனக்கும் உங்களுக்கும் நஸீபாக்குவானாக.

அல்லாஹ்வின் அன்பைப் பெற்று, அருளைப் பெற்று, அல்லாஹ்வுடைய மன்னிப்பை பெற்றநன்மக்களில் என்னையும், உங்களையும், நம்முடைய பெற்றோரையும், குடும்பத்தாரையும், உலக முஸ்லிம்கள், முஃமீன்கள் அனைவரையும் அல்லாஹ் தஆலா  ஆக்கி அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/