HOME      Khutba      உண்மை | Tamil Bayan - 645   
 

உண்மை | Tamil Bayan - 645

           

உண்மை | Tamil Bayan - 645


بسم الله الرحمن الرّحيم

உண்மை

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதரின் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பையும் ஈருலக வாழ்க்கையின் நற்பாக்கியங்களையும் வேண்டியவனாக, அல்லாஹு தஆலா விரும்பிய நற்குணங்களைக் கொண்டு தங்களை அலங்கரித்துக் கொண்ட நல்லோரில் நாமெல்லாம் ஆக வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டவனாகஇந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா தீய குணங்களை விட்டும், அல்லாஹ் வெறுக்கின்ற ஒவ்வொரு செயல் கொள்கைகளை விட்டும் நம் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக! அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கக்கூடிய சொர்க்கத்திற்கு காரணமாகக்கூடிய நற்குணங்களைக் கொண்டு நம்மை அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா அழகுப்படுத்துவானாக!ஆமீன்.

ஒரு அடிப்படையை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். ஈமான் என்பது உயர்ந்த செல்வம், மாபெரும் நற்பாக்கியமாகும்.ஈமான் இல்லாமல் யாரும் சொர்க்கத்திற்கு செல்ல முடியாது. ஈமான் உள்ளவர் தான் நற்பாக்கியவான். ஈமானை இழந்தவர் துர்பாக்கியவான்.

அந்த ஈமான் உண்மையான உறுதியான ஈமானாக இருப்பதற்கு, அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய நெருக்கத்தை அன்பை நமக்கு தேடித்தரக்கூடியஉயர்ந்த ஈமானாக இருப்பதற்கு அந்த ஈமான் சில நற்குணங்களோடு சேர்ந்திருக்க வேண்டும்.

நற்குணங்களை விட்டு ஈமானை பிரிக்கவே முடியாது. ஈமானும் நற்குணங்களும், ஈமானும் நல்லொழுக்கங்களும்ஒட்டிப் பிறந்தவை.

நாம் தான் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டுவிட்டோமே,மறுமையை, மறுமையில் எழுப்பப்படுவதை,விதியை, வேதங்களை,தூதர்களை நம்பிக்கை கொண்டுவிட்டோமே! என்று இப்படி கூறிய இந்த வாய்மொழி, உறுதிமொழியை ஈமானாக எடுத்துக் கொண்டு பிறகு அந்த ஈமான் உள்ளத்தில் எவ்வளவு இறங்கிருக்கிறது என்பதை பற்றியும் கவலைப்படுவதில்லை.

அந்த ஈமானை பாதிக்கக்கூடிய எத்தனை கெட்ட குணங்கள் நம்முடைய சொல்லில் செயலில் வாழ்க்கையில் நம்மிடத்தில் இருக்கிறதே! அவற்றைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.

எவ்வளவு பெரிய வேதனை பாருங்கள்! ஒரு நோயாளி, அந்த நோய் அவருடைய உடலை, உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்களையும் அரித்துக் கொண்டிருக்கிறது;சாகடித்துக் கொண்டுக்கிறது, அந்த நோயை அவர் அறியாமலேயே இருக்கிறார்.

அதுபோன்று தான் ஈமான் உள்ளவர்கள் என்று நாம் நம்மை நினைத்துக் கொண்டிருக்க, (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!) குணங்களோ, நம்முடைய பண்பாடுகளோ அந்த ஈமானை தகர்க்கக்கூடியதாக இருந்தால்நம்முடைய மரண நிலையை நினைத்துப் பாருங்கள்; கப்ருடைய நிலையை நினைத்துப் பாருங்கள்.

அல்லாஹ் கூறுகிறான் :

يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ

மெய்யாகவே எவர்கள் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை மறுமையிலும், இம்மையிலும் (‘கலிமா தையிப்' என்னும்) உறுதிமிக்க இந்த வார்த்தையைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான். (அல்குர்ஆன் 14:27)

யார் ஈமான் உள்ளவர்களாக இருக்கிறார்களோ அவர்களை அல்லாஹுத்தஆலா கப்ரிலே, முன்கர் நகீர் கேள்வி கேட்டு வரும்போது உறுதிப்படுத்துவேன் என்று கூறுகிறான்.

நாவில் ஈமானும் உள்ளத்தில் நயவஞ்சகமும் இருந்தால்எங்கிருந்து வெற்றி கிடைக்கும்?அல்லாஹுத்தஆலா ஈமானை நமக்கு கற்பிக்கும்போது அதோடு சேர்த்து பல நற்குணங்களை நற்பண்புகளை கற்பிக்கின்றான்.

அப்படித்தான் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களும். அதில் மிக முக்கியமான குணங்கள் என்று நாம் பட்டியலிடும் போது,الصدق-உண்மை பேசுதல்,உண்மையாக நடத்தல்,உள்ளத்திலும் உண்மை,நாவிலும் உண்மை,செயலிலும் உண்மை என்ற குணம்,

குர்ஆனில் பரவலாக தொடர்ந்து சொல்லப்படுவதை, ஹதீஸுகளில் அதுகுறித்து ரசூலுல்லாஹ் (ஸல்) அழுத்தமாக நமக்கு உத்தரவிடுவதையும் பார்க்க முடிகிறது.

எந்தளவுக்கு இந்த குணம் நம்முடைய மார்க்கத்தில் அழுத்தமாக நமக்கு கட்டளையாக பிறப்பிக்கப்பட்டிருக்கிறதோ, கைசேதம் என்னவென்றால் இன்றைய சமுதாயத்தில் அந்த குணம்ஒரு சாதாரண குணமாக ஆகிவிட்டது.

அதற்கு எதிராக பொய் பேசுதல் என்பது, சொல்லில், செயலில், நடத்தையில் பொய் என்பது, சமுதாயத்தில் மலிந்துவிட்டது.

எல்லோரும் எல்லாரிடத்திலும் பொய் பேசக்கூடிய நிலை சர்வ சாதாரணமாக மாறிவிட்டது! (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

கணவன் மனைவியிடத்தில் மனைவி கணவனிடத்தில், பெற்றோர் பிள்ளைகளிடத்தில்,பிள்ளைகள் பெற்றோரிடத்தில், நண்பர்கள் நண்பர்களிடத்தில், பங்காளிகள் பங்காளிகளிடத்தில், உறவுகள் உறவுகளிடத்தில், இப்படியாக பொய்யை வழமையாக்கி, பொய் பேசுவதை ஒரு பொருட்டாகவே கருதாத, ஒரு சமுதாயமாக மாறி இருப்பதை பார்க்கிறோம்.

அல்லாஹ் பாதுகாத்த‌ சில நல்லவர்களைத் தவிர. அல்லாஹ்வுடைய கட்டளையை பாருங்கள். அல்லாஹ் கூறுகிறான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்;மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாக இருப்பவர்களுடன் இருங்கள். (அல்குர்ஆன் 9:119)

இதற்க்குமுஃபஸ்ஸிர்கள் விளக்கம் கூறுகிறார்கள் :

நீங்கள் உண்மையாளர்களாக மாறுங்கள்; உண்மை பேசுவதை மட்டும்உங்களுக்கு நீங்கள் கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள்.

பொய் என்னுடைய சொல்லில், என்னுடைய எண்ணத்தில், என்னுடைய செயலில் கலந்துவிடக்கூடாது.

எண்ணத்திலும் பொய் இருக்கக்கூடாது. ஒருவரை புகழ்கிறோம். அவரை புகழ வேண்டும் என்ற நோக்கமே இல்லாமல் உள்ளத்தில் திட்டிக் கொண்டு புகழ்வது. இது உள்ளம் செய்யக்கூடிய பொய்.

நடந்தது ஒன்று, அறிவிப்பது வேறு, இது நாவு சொல்லக்கூடிய பொய்.

ஒருவர் நம்மை பார்க்கிறார் என்பதற்காக அவரை திருப்திப்படுத்துவதற்காக செயலை செய்வது, இது செயல் செய்யக்கூடிய பொய்.

நீங்கள் உங்களுக்கு உண்மையை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள்; அப்போது உண்மையாளர்களோடு நீங்களும் ஆகிவிடுவீர்கள். ஆபத்துகள் அழிவுகளிலிருந்து நீங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள்.

ஸஹாபாக்களை நேசிக்கும் போது அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளை, அதிலும் குறிப்பாக அபூபக்ர், உமர் (ரலி) அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளைபடிப்பது, இதை வலியுறுத்தி அல்லாஹ் கூறுகின்றான் என்று அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) இந்த வசனத்திற்கு விளக்கம் கூறுகிறார்கள்.

சொல்கிறார்கள் : நீங்கள் உண்மையாளர்களுடன் ஆகி விடுங்கள். அதாவது, ரசூலுல்லாஹ்வோடு அவர்களுடைய தோழர்களோடு.

இமாம் வஹ்ஹாப் சொல்கிறார்கள்: அபூபக்ரோடும் உமரோடும் அவ்விருவரின் தோழர்களோடும்.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

«إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ القِيَامَةِ أَحَاسِنَكُمْ أَخْلَاقًا»

ரசூலுல்லாஹ்வோடு நாளை‌ மறுமையில் சொர்க்கத்தில் நெருக்கமாக இருக்க வேண்டும் என்றால், எனக்கும் அல்லாஹ்விற்கும் மிக விருப்பமானவராக இருக்க வேண்டும் என்றால், குணங்களால் உங்களில் சிறந்தவர் எனக்கு மறுமையில் நெருக்கமாக இருப்பார். (1)

அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2018, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

ஹஸன் பஸரி (ரஹி) அவர்கள்,உண்மையாளர்களோடு நாம் ஆகுவதற்கு வழி சொல்கிறார்கள் :

وقال الحسن البصري: إن أردت أن تكون مع الصادقين، فعليك بالزهد في الدنيا، والكفِّ عن أهل الملة

நீ உண்மையாளர்கள் உடன் இருக்க விரும்பினால் இவ்வுலகில் பற்றற்ற தன்மையை பற்றிப் பிடித்துக் கொள்! இன்னும் மார்க்க சகோதரர்களை குறை பேசுவதை நிறுத்திக் கொள்!

மனிதன் பொய் எப்போது சொல்வான்? யாருக்காவது தீங்கு செய்ய நினைக்கும் போது, யாருக்காவது கெடுதி செய்ய நினைக்கும் போது, யாரையும் ஏமாற்ற நினைக்கும் போது பொய் என்பது தானாக வந்துவிடும்.

அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா இந்தஉண்மையை தன்னுடைய பண்பாக சொல்கிறான் :

وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ قِيلًا

அல்லாஹ்வை விட உண்மை பேசுபவர் யார்? (அல்குர்ஆன் 4:122)

وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ حَدِيثًا

அல்லாஹ்வை விட பேச்சால் உண்மையானவர் யார்? (அல்குர்ஆன் 4 : 87)

அல்லாஹுத்தஆலா உடைய பேச்சில் பொய் இருக்காது.

إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ

அல்லாஹ் வாக்கை மீற மாட்டான். (அல்குர்ஆன் 3 : 9)

வாக்கு மீறுவது, பொய்யுடைய ஒரு வெளிப்பாடு.ஒப்பந்தங்களை மீறுவது பொய்யுடைய வெளிப்பாடு.

ஒன்றை சொல்வது பிறகு அதை மறுப்பது,வாக்கு கொடுப்பது அதை மீறுவது,இது பொய்யினுடைய வெளிப்பாடு.

அல்லாஹு தஆலா தன்னைப் புகழக்கூடிய அந்த குணம்,தன்னுடைய அடியாரிடத்திலும் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்:

قَالَ اللَّهُ هَذَا يَوْمُ يَنْفَعُ الصَّادِقِينَ صِدْقُهُمْ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

அதற்கு அல்லாஹ் “உண்மை சொல்லும் சத்தியவான்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கக்கூடிய நாள் இதுதான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களும் அவர்களுக்கு உண்டு. அதில் அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள்'' என்று கூறுவான். (அந்நாளில்) அவர்களைப் பற்றி அல்லாஹ்வும் மகிழ்ச்சியடைவான். அவர்களும் அவனைப் பற்றி மகிழ்ச்சியடைவார்கள். இது மிக்க மகத்தான பெரும் பாக்கியம் ஆகும். (அல்குர்ஆன் 5 : 119)

ஈமானிலே உண்மை இருக்க வேண்டும்;அமலில் உண்மை இருக்க வேண்டும். உண்மையில் முதல் உண்மை அல்லாஹ்வோடு உண்மையாக நாம் நடந்து கொள்ள வேண்டும்.

وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ

இன்று இந்த தொழுகை அல்லாஹ் கூறுவது போல பலருக்கு சிரமமாக, பாரமாக,சுமையாக இருக்கிறது.உள்ளச்சம் உள்ள‌ நல்லவர்களுக்கே தவிர.(அல்குர்ஆன் 2 : 45)

அவர்கள் யார்?

الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَاجِعُونَ

(உள்ளச்சமுடைய) அவர்களோ தங்கள் இறைவனை நிச்சயமாக சந்திப்போம் என்றும், அவனிடமே நிச்சயமாக செல்வோம் என்றும் உறுதியாக நம்புவார்கள். (அல்குர்ஆன் 2 : 46)

இன்று நாம் நம்முடைய அமல்களில் அலட்சியம், கவனமின்மை, அரைகுறை தன்மை, இதனுடைய வெளிப்பாடுகள் அது அல்லாஹ்விடத்தில் நாம் உண்மையாக நடக்கவில்லை என்பதற்குரிய அடையாளம்.(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

அல்லாஹ்வுடன் நாம் உண்மையாக நடக்கவேண்டும் என்றால், இக்லாஸ் இருக்க வேண்டும்;தவக்குல் இருக்க வேண்டும்;யக்கீன் இருக்க வேண்டும்;அமல்களை சரியாக செய்ய வேண்டும்.

அல்லாஹ்வுடைய பொருத்தம் மட்டுமே நம்முடைய ஒவ்வொரு சொல் செயல் அனைத்திலும் நமக்கு நோக்கமாக இருக்க வேண்டும்.

அதுபோன்று ஸூரத்துல் அஹ்ஸாப் உடைய 35-வது வசனத்தை எடுத்துப் படியுங்கள்; அல்லாஹுத்தஆலா, முஃமின்கள் முஸ்லிம்களிடத்தில் இருக்க வேண்டிய நற்பண்புகளை ஒரே இடத்தில் பட்டியலிட்டுக் கொண்டு வருகிறான்.

அந்த பட்டியலில் அல்லாஹுத்தஆலா கூறக்கூடிய உயர்ந்த நற்பண்புகளில் முதலாவது இஸ்லாமை கூறுகிறான், பிறகு ஈமானை கூறுகிறான் பிறகு அல்லாஹ்விற்கு பணிவதை கூறுகிறான். நான்காவதாக கூறுகிறான்:

وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ

தங்களுடைய சொல் செயல் என்று அனைத்திலும் உண்மையாக நடந்துக் கொள்ளக்கூடிய முஃமின்கள்,இவர்களுக்கு தான் அல்லாஹுத்தஆலா மகத்தான மன்னிப்பை முன்கூட்டியே வாக்களித்து விட்டான்.அவர்களுக்கு மகத்தான நற்கூலியாகிய சொர்க்கத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஏற்படுத்தி வைத்திருக்கிறான்.(அல்குர்ஆன் 33 : 35)

இந்தளவுக்கு வலியுறுத்தப்பட்ட இந்த குணம், நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்று. அந்த குணத்திற்கும் நமக்கும் இடையே கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே உண்டான தூரம் இருக்கிறதே!

கெட்ட குணங்களோடு நெருக்கமாக இருக்கிறோம். பொய்யோடு நெருக்கம், ஏமாற்றுதலோடு நெருக்கம். உண்மை என்ற இந்த நற்குணம் நமக்கு எட்டாத தூரத்தில் இருக்கிறதென்றால், எந்தளவு மோசமாக நாம் நம்மை உருவாக்கி இருக்கிறோம்! (அல்லாஹ் பாதுக்காக்க வேண்டும்!)

ரசூலுல்லாஹ் (ஸல்) இதை மிக வலியுறுத்தி சொல்கிறார்கள் :

إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى البِرِّ

உண்மை மிகப் பெரிய நன்மைக்கு வழிகாட்டும்.

(நன்மைக்கு குர்ஆனில் நிறைய அரபி பதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.அதில் ஒன்று தான் البرஎன்பது. இது விசாலமான அர்த்தத்தை கொடுக்கும். அதில் ஒன்று, அல்லாஹ்விற்கு நாம் செய்யக்கூடிய நல்லமல்கள்.

إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ

நிச்சயமாக நல்லவர்கள், இன்பம் நிறைந்த சொர்க்கத்தில் இருப்பார்கள். (அல்குர்ஆன் 82:13)

இஸ்லாமுடைய அமல்கள். அதில் இபாதத்துகள் ஒன்று இருக்கிறது, இன்னொன்று நற்குணங்கள் என்று ஒன்று இருக்கிறது.

இந்த இரண்டையும் ஒன்று சேர்த்த ஒன்று தான் البرஎன்பது. இபாதத்துகளும் சரியாக இருப்பது, நற்குணங்களும் சரியாக இருப்பது.)

ஹதீஸின் தொடர் :

وَإِنَّ البِرَّ يَهْدِي إِلَى الجَنَّةِ

உண்மை இத்தகைய நன்மைக்கு வழி காட்டும். இந்த برதான் சொர்க்கத்திற்கு வழிகாட்டும்.

وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا

ஒரு மனிதன் உண்மை பேசிக் கொண்டே இருப்பான். உண்மை பேசுவதை தன்மீது கட்டாயமாக்கிக் கொள்வான்.அல்லாஹுத்தஆலா அவனை சித்தீக்காக ஆக்கிவிடுவான்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6094.

(அபூபக்ர் சித்தீக் எப்படி சித்தீக்காக ஆனாரோ, நாம் அவர்களுடைய தரஜாவை அடைய முடியவில்லை என்றாலும் அந்த சித்தீக் என்ற பெயருக்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய சான்றிதழுக்கு நாம் தகுதி உள்ளவர்களாக ஆகலாம்.

எப்போது? உண்மையை தான் நான் பேசுவேன்; நான் உண்மையாக தான் நடப்பேன் என்று நம்மை நாமே சாட்டையால் அடித்துக் கொண்டு, அந்த உண்மைக்கு மாற்றமாக நம்முடைய நஃப்ஸ் நம்மை தூண்டும்போது,இல்லை நான் உண்மை தான் பேசுவேன்;நான் உண்மையை தான் சொல்வேன்;உண்மையாகக் தான் நடப்பேன் என்று, நம்மை நாமே அடக்கி ஆளும்போது, அல்லாஹ்வால் நமக்கு இந்த சான்று கொடுக்கப்படும்.

மற்றவர்களிடத்தில் பெயர் புகழ் நமக்கு தேவையில்லை. அல்லாஹ் நம்மை அங்கீகரித்துக் கொண்டால் அடியார்களை அவன் நம்மை அங்கீகரிக்கும்படி மாற்றிவிடுவான்.)

ஹதீஸின் தொடர் :

وَإِنَّ الكَذِبَ يَهْدِي إِلَى الفُجُورِ

பொய் பாவத்திற்கு வழிகாட்டும்.

فجورஎன்பதும் ஒரு விசாலமான அர்த்தமுள்ள பாவம்.

அல்லாஹ் கூறுகிறான் :

وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ

நிச்சயமாக பாவிகள் நரகத்தில் இருப்பார்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். (அல்குர்ஆன் 82:14)

أُولَئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ

இவர்கள்தான் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள். (அல்குர்ஆன் : 80:42)

அல்லாஹ்வுடைய ஹக்கிலும் மோசடி செய்வது, அடியார்களுடைய ஹக்கிலும் மோசடி செய்வது.

சிலர்,அல்லாஹ்வுக்கு செய்யக்கூடிய ஹக்கில் மோசடி செய்வார்கள்;அடியார்களோடு நல்ல முறையில் நடந்து கொள்வார்கள்.

சிலர்,அல்லாஹ்வோடு நல்ல முறையில் நடந்து கொள்வார்கள்;அடியார்களுக்கு மோசடி செய்வார்கள்.

உண்மையில் இருவரும் நடிப்பவர்கள்.தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்கள். அல்லாஹ்வுடைய விருப்பத்திற்காக இவர் அல்லாஹ்வோடு நல்ல முறையில் நடந்து கொண்டால், அல்லாஹ்வுடைய அடியார்களோடும் நல்ல முறையில் நடந்து கொள்வார்.

அல்லாஹ்வுடைய விருப்பத்திற்காக இவர் அல்லாஹ்வின் அடியார்களிடத்தில் நல்ல முறையில் நடந்து கொண்டால், அல்லாஹ்விடத்திலும் இவர்கள் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள்.

இவர்களுக்கு தேவை இவர்களுடைய மனதிருப்தி. ஆகவே தான் இங்கு ஒரு விதமாக அங்கு ஒரு விதமாக நயவஞ்சகத்தோடு நடப்பார்கள். (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!)

ஹதீஸின் தொடர் :

وَإِنَّ الفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ

பாவம் நரகத்திற்கு வழிகாட்டும்.

وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا

மனிதன் பொய் பேசுகிறான்,பொய் பேசுகிறான் பொய் பேசுகிறான்,இறுதியாக அல்லாஹ் விடத்தில் பொய்யனாக அவன் எழுதப்பட்டுவிடுகிறான்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6094.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்;அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள் :

أربعٌ إذا كنَّ فيك فلا عليك ما فاتك من الدنيا ، صدْقُ الحديثِ ، و حفْظُ الأمانةِ ، و حُسْنُ الخُلقِ ، وعفَّةُ مَطْعَمٍ

நான்கு குணங்கள் உன்னிடத்தில் இருந்தால், உனக்கு கிடைக்காத உலகத்தைப் பற்றி நீ கவலைப்படாதே!

ஒன்று, அமானிதத்தை பாதுகாப்பது.

ஒருவர் உன்னிடத்தில் ஒரு பேச்சை கூறினால், ஒரு பொருளை ஒப்படைத்தால் அல்லது ஒரு பொறுப்பை கொடுத்தால் அந்த அமானிதத்தை பாதுகாத்துக் கொள்!

இரண்டாவது, உண்மையை பேசுவது.

3.  செயலில் நற்குணம்.

4. கற்பொழுக்கம்.

இந்த நான்கு குணங்கள் இருந்தால், இந்த உலகம் உனக்கு தவறிவிட்டதைப் பற்றி உனக்கு எந்த கவலையும் வேண்டாம்.உனக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ, எண் : 873.

மேலும் ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள் :

" اضْمَنُوا لِي سِتًّا مِنْ أَنْفُسِكُمْ أَضْمَنْ لَكُمُ الْجَنَّةَ: اصْدُقُوا إِذَا حَدَّثْتُمْ، وَأَوْفُوا إِذَا وَعَدْتُمْ، وَأَدُّوا إِذَا اؤْتُمِنْتُمْ، وَاحْفَظُوا فُرُوجَكُمْ، وَغُضُّوا أَبْصَارَكُمْ، وَكُفُّوا أَيْدِيَكُمْ "

நீங்கள் எனக்கு உங்களில் ஆறு விஷயங்களுக்கு உறுதி கொடுங்கள் நான் உங்களுக்கு சொர்க்கத்திற்கு உறுதி கொடுக்கின்றேன். அவை:

1. நீங்கள் பேசினால் உண்மை பேசுங்கள்.

2. நீங்கள் வாக்கு கொடுத்தால் வாக்கை நிறைவேற்றுங்கள்.

3. உங்களை நம்பப்பட்டால், உங்களுக்கு அமானிதங்கள் கொடுக்கப்பட்டால், அந்த நம்பிக்கைக்கு ஏற்ப நடந்துக் கொள்ளுங்கள்.

4. உங்களுடைய கற்ப்பொழுக்கத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

5. உங்களது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள்.

6. உங்களுடைய கரங்களை நீங்கள் தடுத்துக் கொள்ளுங்கள்; உங்களுடைய கரங்களால் பிறருக்கு தொந்தரவு தீங்கு ஏற்பட்டுவிட வேண்டாம்.

அறிவிப்பாளர் : உபாதா இப்னு ஸாமித் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத்,எண் : 22757.

அலி இப்னு அபிதாலிப் (ரலி) அவர்களுடைய மகனார் ஹஸன் (ரலி) அறிவிக்கின்றார்கள்: நான் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களிடம் படித்து மனப்பாடம் செய்து கொண்ட பாடம் என்ன தெரியுமா?

«دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ، فَإِنَّ الصِّدْقَ طُمَأْنِينَةٌ، وَإِنَّ الكَذِبَ رِيبَةٌ»

உனக்கு குழப்பத்தை தரக்கூடிய, சந்தேகத்தை உண்டாக்கக்கூடிய காரியத்தை விட்டுவிடு.எதில் உனக்கு குழப்பம் சந்தேகம் இல்லையோ மார்க்கத்தில் ஹலால் என்று தெளிவாக இருக்கிறதோ அதை நீ எடுத்துக் கொள். உண்மை மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.பொய் மனதில் சந்தேகத்தை உண்டாக்கும்.

அறிவிப்பாளர் : ஹஸன்இப்னுஅலிரழியல்லாஹுஅன்ஹு, நூல் : எண் : 2518, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

தபூக் போரில் முனாஃபிக்குகளெல்லாம் பொய் காரணங்களை கூறி ரசூல் (ஸல்) அவர்களின் கோபத்திலிருந்து தப்பித்துச் செல்ல, மூன்று ஸஹாபாக்கள், நாங்கள் போருக்கு செல்லாமல் பின்தங்கியது பாவம் தான்;எங்களுக்கு எந்த தகுந்த காரணமும் இல்லை என்று தங்களது குற்றங்களை ஒப்புக் கொண்டு உண்மை சொன்னார்கள்.

لَقَدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ الَّذِينَ اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ

அல்லாஹுத்தஆலாநபியை ஸஹாபாக்களை முஹாஜிர்களை அன்ஸாரிகளை மன்னித்தான் என்று கூறும்போது, போருக்கு செல்லாமல் பின்தங்கிவிட்ட அந்த மூன்று தோழர்களையும் மன்னித்தான் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 9:117)

மிகப் பெரிய தவறு செய்ததற்கு பிறகும் கூட ரசூலுல்லாஹ் விடத்தில் உண்மை கூறிய ஒரே காரணத்துக்காக அவர்களுடைய பெரும்பாவங்களை அல்லாஹ் மன்னித்து, குர்ஆனில் இறுதிநாள் வரை அவர்களைப் பற்றி புகழ்ந்து பேசும்படி அல்லாஹ் ஆக்கிவிட்டான்‌ என்றால், அல்லாஹ்விற்கு எவ்வளவு பிடித்தமான குணம்!

நபி (ஸல்) ஒரு பெண்மணியின் வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள், அப்போது அந்த பெண் தன்னுடைய பிள்ளையை அழைக்கின்றார்.

هَا تَعَالَ أُعْطِيكَ

இங்கே வா!உனக்கு ஒன்று தருகிறேன் என்று.

உடனே ரசூல் (ஸல்) அந்தப் பெண்ணை நிறுத்திக் கேட்கிறார்கள்:என்ன கொடுக்க மனதி்ல் எண்ணி இருந்தாய் என்று?

அந்தப் பெண் சொன்னார்கள்:அவன் வந்தால் நான் அவனுக்கு ஒரு பேரீத்தம்பழம் தருவேன் என்று எண்ணியிருந்தேன் என்று.

உடனே அல்லாஹ் வுடைய தூதர் (ஸல்) சொன்னார்கள்:அந்த எண்ணம் உனக்கு இருந்து நீ இதை கூறியிருந்தால் சரி.அப்படி இல்லாமல் நீ இதை சொல்லியிருந்தால் உன் மீது நீ ஒரு பொய் சொன்ன பாவம் பதியப்படும் என்று.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு ஆமிர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூத்,எண் : 4991, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

ஆனால் இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உண்மையை உண்மையாளர்களை தேடித்திரிய வேண்டி இருக்கிறது.

பொய் வாழ்க்கையில் கலந்துவிட்டது. பாலில் தண்ணீர் கலப்பது போல இந்த பொய் வாழ்க்கையில் கலந்திருக்கிறது.

அல்லாஹுத்தஆலா உடைய அருளும் அவனுடைய வெற்றியும் அவனுடைய உதவியும் நற்பாக்கியமும் நமக்கு வேண்டும் என்றால், நம்முடைய ஈமானை அல்லாஹ் விரும்பக்கூடிய இத்தகைய உயர்ந்த நற்குணங்களைக் கொண்டு அலங்கரித்தே ஆக வேண்டும். அப்போது தான் நம்முடைய துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي

உங்களது அழைப்புக்கு நான் பதில் கொடுக்க வேண்டும் என்றால், நீங்கள் எனது அழைப்புக்கு பதில் கொடுங்கள்;என்மீது உள்ள உங்கள் ஈமானை சரி செய்யுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 2:186)

நாமும் நம்முடைய நற்குணங்களை சரி செய்ய வேண்டும். நம்முடைய மனைவிமார்கள் குடும்பத்தார்கள் பிள்ளைகள் நண்பர்கள் என்று அனைவருக்கும் இந்த நற்குணங்களுடைய அவசியத்தை உணர்த்த வேண்டும்.

அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா என்னையும் உங்களையும் நற்குணங்களைக் கொண்டு அலங்கரிப்பானாக!

பொய் மற்றும் அல்லாஹ்விற்கு பிடிக்காத அல்லாஹ் வெறுக்கக்கூடிய ஒவ்வொரு தீய கெட்ட குணத்திலிருந்தும் அல்லாஹ் பாதுகாப்பானாக! நம்முடைய சமுதாயத்தை பரிசுத்தப்படுத்துவானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الحَسَنِ بْنِ خِرَاشٍ البَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلَالٍ قَالَ: حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ قَالَ: حَدَّثَنِي عَبْدُ رَبِّهِ بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ القِيَامَةِ أَحَاسِنَكُمْ أَخْلَاقًا، وَإِنَّ أَبْغَضَكُمْ إِلَيَّ وَأَبْعَدَكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ القِيَامَةِ الثَّرْثَارُونَ وَالمُتَشَدِّقُونَ وَالمُتَفَيْهِقُونَ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، قَدْ عَلِمْنَا الثَّرْثَارُونَ وَالمُتَشَدِّقُونَ فَمَا المُتَفَيْهِقُونَ؟ قَالَ: «المُتَكَبِّرُونَ»: وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ وَرَوَى بَعْضُهُمْ هَذَا الحَدِيثَ، عَنِ المُبَارَكِ بْنِ فَضَالَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ وَهَذَا أَصَحُّ وَالثَّرْثَارُ: هُوَ الكَثِيرُ الكَلَامِ، وَالمُتَشَدِّقُ الَّذِي يَتَطَاوَلُ عَلَى النَّاسِ فِي الكَلَامِ وَيَبْذُو عَلَيْهِمْ (سنن الترمذي 2018 -]حكم الألباني] : صحيح

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/