நீதம்!! | Tamil Bayan - 644
بسم الله الرحمن الرّحيم
நீதம்
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
உங்கள் முன்னால் அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்தும், அவனுடைய கண்ணியத்திற்குரிய தூதர் மீதும் அந்த தூதரின் அன்பிற்குரிய நேசத்திற்குரிய குடும்பத்தார், தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, மார்க்கத்தை பின்பற்றி வாழும்படி உபதேசம் செய்தவனாக,
குர்ஆனை அனுதினமும் ஓதி, அதனுடைய பொருள்களை கருத்துகளை அறிந்து, அதனுடைய சட்ட வரம்புகளை பேணி வாழுமாறு உபதேசம் செய்தவனாக, ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுடைய சுன்னாவைக் கற்று, அந்த சுன்னா கூறக் கூடிய ஒழுக்கங்களை பேணி வாழுமாறு அறிவுரை கூறியவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுப்ஹானஹுத்தலா என்னையும், உங்களையும், நம்முடைய குடும்பத்தார், பெற்றோர், முஸ்லிம்கள், முஃமின்கள், அனைவரையும் மன்னித்து அருள்வானாக.
நம்முடைய முடிவை அழகிய முடிவாக ஆக்கி அருள்வானாக. அல்லாஹ் நேசிக்கின்ற நல்ல மக்களில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக.
அல்லாஹ் நேசிக்கின்ற நற்குணங்களை கொண்டு என்னையும் உங்களையும் அலங்கரிப்பானாக. அல்லாஹ் வெறுக்கின்ற கூட்டத்திலிருந்து அல்லாஹு தஆலா நம் அனைவரையும் பாதுகாப்பானாக.
அல்லாஹ் வெறுக்கின்ற தீய கெட்ட குணத்திலிருந்து என்னையும் உங்களையும் அல்லாஹுத்தஆலா பாதுகாத்தருள்வானாக. ஆமீன்.
அல்லாஹ்வின் அடியார்களே. அல்லாஹ் சுப்ஹானஹுத்தாலா நமக்கு கொடுத்திருக்கக்கூடிய இந்த அழகிய பரிசுத்தமான மார்க்கத்தில் ஏராளமான, நேர்மையான, நீதமான ஒழுக்க மாண்புகளும் சட்ட அடிப்படைகளும் இருக்கின்றன.
முஸ்லிம்கள் என்று நாம் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது, முஃமின்கள் என்று நாம் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது, நமக்கென்று சில விஷேசமான அடிப்படை அடையாளங்கள் இருக்க வேண்டும்.
ஒரு முஸ்லிமை முஸ்லிம் அல்லாதவரிடமிருந்து பிரிக்கக்கூடிய வித்தியாசம் இருக்க வேண்டும். ஒரு முஃமினை முஃமின் அல்லாதவரிடமிருந்து பிரிக்கக்கூடிய அடிப்படை சில அடையாளங்கள், சில குணங்கள், சில பண்பாடுகள், சில கலாச்சாரங்கள் இருக்க வேண்டும்.
அவற்றைக் கொண்டு தான் நாம் முஃமின்கள் முஸ்லிம்கள் என்று அறியப்படுவோம். அறியப்பட வேண்டும்.
வெறும் நம்முடைய பெயர்கள் மட்டும் போதாது. அல்லது நம்முடைய சில ஆடை அடையாளங்கள் மட்டும் போதாது. அவற்றுக்கெல்லாம் மேலாக நம்பிக்கைகள் இருக்கின்றன. வணக்க வழிபாடுகள் இருக்கின்றன. ஒழுக்கங்கள், பண்பாடுகள், தூய அழகிய கலாச்சாரங்கள், அடிப்படைகள் இருக்கின்றன.
அவற்றையெல்லாம் நம் வாழ்க்கையிலே நாம் பின்பற்ற வேண்டும். சில ஆடை அடையாளங்களை வெளிப்படுத்துவது கொண்டு மட்டும் நாம் நம்மை பெரிய முஸ்லிம்களாக உயர்ந்த முஃமின்களாக காட்டிக்கொள்ள முடியாது. பீற்றிக்கொள்ள முடியாது.
அத்தகைய உயர்ந்த அடிப்படை நற்குணங்கள் ஒழுக்கங்களில் ஒன்று தான் நாம் நீதத்தை பேணுவது. நீதமாக இருப்பது.
அந்த நீதம் நமக்கே எதிராக இருந்தாலும் சரி, நமது குடும்பத்திலுள்ள பெற்றோர், பிள்ளைகள், உறவுகளுக்கு எதிராக இருந்தாலும் சரி, நான் நீதம் தவற மாட்டேன்.
நீதம் என்பது ஏதோ நீதிபதிகளும் மன்னர்களும் பேண வேண்டிய ஒன்று மட்டுமல்ல. குடும்பத்திலுள்ள கணவன் நீதமாக இருக்க வேண்டும். மனைவி நீதமாக இருக்க வேண்டும். ஒரு நிர்வாகத்தை நடத்துகின்ற அதன் உரிமையாளர் நீதமாக இருக்க வேண்டும். பணியாளர்கள் நீதமாக இருக்க வேண்டும்.
இப்படியாக நீதம் என்பது, ஒரு விரிவான விசாலமான பொருளைக் கொண்டது. விளக்கங்களை கொண்டது.
நீதத்திற்கு எதிராக அநியாயம், அராஜகம் செய்வது, வரம்பு மீறுவது.இது அல்லாஹ்விற்கு பிடிக்காத ஒரு காரியம். அல்லாஹ் வெறுக்கின்ற ஒரு காரியம்.
நீதம் அல்லாஹ் விரும்பக்கூடிய நேசிக்கக்கூடிய ஒரு குணம் பண்பு. அநீதம் என்பது அல்லாஹ் வெறுக்கக்கூடிய அல்லாஹ் கோபிக்கக்கூடிய அல்லாஹ் சபிக்கக்கூடிய ஒரு குணம். நீதத்தை பேணுவதற்கும் அநீதியை வெறுப்பதற்கும் இந்த காரணம் ஒன்றே போதுமானது.
இதற்கு மேலாக அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா கண்ணியத்திற்குரிய அவனுடைய வேதத்திலே பல வசனங்களில் நீதத்தைக் குறித்து நமக்கு வலியுறுத்துகின்றான். அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) ஒன்றுக்கு மேற்பட்ட பல ஹதீஸுகளில் சொல்லாலும் செயலாலும் நீதத்தை வலியுறுத்தி கூறியிருக்கின்றார்கள்.
ஒரு முக்கியமான சம்பவத்தை பார்த்துச் செல்வோம். ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுடைய காலத்திலே ஒரு பெண் திருடிவிடுகின்றாள். இஸ்லாமை ஏற்றுக் கொண்ட ஒரு பெண் திருடிவிடுகின்றார்கள்.
திருட்டுக்குற்றத்தை செய்து விடுகின்றார்கள். அவர்களோ ஒரு செல்வந்த பெண்மணி. ஒரு உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். அல்லாஹ் வுடைய தூதர் (ஸல்) அவர்களிடத்திலே தீர்ப்பு தேடி வந்தபோது நபி (ஸல்) அந்த பெண்ணுடைய கரம் வெட்டப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார்கள். இதுதான் சட்டம்.
وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا
ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் (இத்) தீயச் செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள்.(அல்குர்ஆன் 5 : 38)
(திருட்டு என்பதை சாதாரணமான ஒரு பாவமாக குற்றமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அதை செய்தவருடைய கரத்தை வெட்டும்படி அல்லாஹுத்தஆலா கட்டளையிட்டிருக்கிறான் என்றால், அது எவ்வளவு பெரிய குற்றம், பாவம் என்பதை புரிய வேண்டும்.
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையிலே கை எவ்வளவு முக்கியம். கையினுடைய அவசியம் எவ்வளவு!இருந்தும் அந்த குற்றத்தை செய்தவன் அவனுடைய கை வெட்டப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்கிறான் என்றால் அல்லாஹ்வுக்கு எவ்வளவு கோபம் அந்த செயலின் மீது!அது எவ்வளவு இஸ்லாமில் வெறுக்கப்பட்ட செயல்!
திருடு என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையிலே ربع الدينارஒரு தீனாரிலே நான்கில் ஒரு பகுதி அளவுக்கு திருடிவிட்டால் அவருடைய கை கண்டிப்பாக வெட்டப்பட வேண்டும்.)
பிரச்சினை வருகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தீர்ப்பு சொல்கிறார்கள். இப்போது இந்த தீர்ப்பை மாற்றுவதற்காக, ஏதாவது பரிந்துரை செய்து அந்தப் பெண்ணை தப்பிக்க வைப்பதற்காக பல யோசனைகள் செய்யப்படுகின்றன.
அல்லாஹ்வின் தூதரிடத்திலே யாராவது பரிந்து பேசி மன்னிப்பு வாங்கி கொடுத்துவிட மாட்டார்களா? இதுதான் முதல் குற்றம். இதற்கு முன்பு அந்தப் பெண் குற்றம் செய்ததில்லை. இப்படியாக பலவிதமான பேச்சுக்கள் அடிபட்டு, அல்லாஹ்வின் தூதருக்கு யார் நெருக்கமானவர் என்பதாக அறியப்பட்டு அவர் மூலமாக சிபாரிசுக்கு அங்கே தூது விடப்படுகிறது.
அல்லாஹ்வின் தூதரிடத்திலே ரசூலுல்லாஹ்விற்கு நெருக்கமான அந்த ஸஹாபி,நபி (ஸல்) அவர்களுடைய பாசத்திற்குரிய நேசத்திற்குரிய தோழர்,ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களிடதிலே வந்து சிபாரிசு செய்கிறார்.
அநேகமாக உஸாமா (ரலி) அல்லது அவர்களுடைய தந்தை. அந்த நேரத்திலே பரிந்துரை செய்கிற அந்த தோழரை பார்த்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டகேள்வியை பாருங்கள்:
أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ
அல்லாஹ் நிர்ணயித்த சட்ட வரம்புகளில் ஒரு சட்ட வரம்பிலா நீ சிபாரிசு செய்ய வந்துவிட்டாய்?
எது முடிவு செய்யப்பட்டுவிட்டதோ, அல்லாஹ்வின் சட்டமாக வேதத்திலே விதிக்கப்பட்டுவிட்டதோ அந்த சட்ட வரம்புகளில் ஒரு சட்டத்தை தளர்த்துவதற்காக நீ சிபாரிசு செய்ய வந்திருக்கிறாயா? அடுத்து சொன்ன வார்த்தை இன்னும் கூடுதல் எச்சரிக்கை நிறைந்தது.
لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا
முஹம்மதுடைய மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் அவளுடைய கரத்தை நான் வெட்டியிருப்பேன். அல்லாஹு அக்பர்!
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி, எண் : 3475.
இந்த நீதத்தை தான் அல்லாஹுத்தஆலா விரும்புகிறான். இத்தகைய நீதவான்களைத் தான் அல்லாஹ் விரும்புகிறான். இத்தகைய நீதமிக்க ஒரு சமுதாயத்தை தான் குர்ஆன் உருவாக்கியது. இத்தகைய நீதமிக்க ஒரு சமுதாயத்தை தான் ரசூலுல்லாஹ்வுடைய சுன்னா உருவாக்கியது.
அலட்சியமும், ஆணவமும், அகம்பாவமும், வேண்டியவருக்கு ஒரு நீதி,வேண்டாதவருக்கு ஒரு நீதி,பிடித்தமானவருக்கு ஒரு நீதி, பிடிக்காதவருக்கு ஒரு நீதி. ஏழைக்கு ஒரு நீதி, செல்வந்தனுக்கு ஒரு நீதி,என்று நீதியிலே பாரபட்சம் காட்டக்கூடிய கேவலமான மோசமான ஒரு சமுதாயத்தை குர்ஆனும் சுன்னாவும் உருவாக்கவில்லை.
ஏன் இன்று முஸ்லிம்கள் மாற்றார்களின் பார்வையில் தரம் தாழ்ந்துக் கொண்டே போகிறார்கள்?அவர்களுடைய கண்ணியம்,முஸ்லிம்கள் மீதுண்டான பயம், ஏன் மாற்றார்களின் பார்வையிலே குறைந்து கொண்டே போகிறது?
ஒரு காரணமா? இரண்டு காரணங்களா? குர்ஆன் சுன்னாவில் கூறப்பட்ட விஷயங்களை சிந்தித்து பார்த்தால் நூற்றுக் கணக்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஒழுக்கமில்லை, நீதி, நேர்மை, நியாயம் என்ற எந்த சட்ட வரம்புகளும் இந்த சமுதாயத்திலே பேணப்படுவதில்லை. அல்லாஹ் நாடிய சிலரைத் தவிர.
அல்லாஹு தஆலா இவ்வளவு அழுத்தமாக வலியுறுத்தி சொல்லியிருக்கின்றான் பாருங்கள்:
ஸூரத்துன் நஹ்லுடைய 90-வது வசனம், உலகத்திலே முஸ்லிம்கள் எங்கெல்லாம் ஜும்ஆ குத்பா ஓதுவார்களோ அந்த எல்லா ஜுமுஆ குத்பாவின் இறுதியிலே உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹி) அவர்களுடைய காலத்திலிருந்து இன்றுவரை ஓதப்படுகின்ற வசனம். ஆனால் சிந்திப்பவர்கள் குறைவு.
إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى
(நம்பிக்கையாளர்களே) நீங்கள் நீதி செலுத்தும்படியாகவும், நன்மை செய்யும்படியாகவும், உறவினர்களுக்கு(ப் பொருள்) கொடுத்து உதவி செய்யும்படியாகவும் நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) ஏவுகிறான்.(அல்குர்ஆன் 16 : 90)
வசனத்தின் கருத்து : நீதத்தை ஏவுகிறான்; பிறருக்கு நன்மை செய்ய வேண்டும். பிறருக்கு உதவி உபகாரம் செய்ய வேண்டும்.
யாருக்கும் உபத்திரமாக இருந்துவிடாதே. உன்னால் பிறருக்கு ஒரு புண்ணியம் ஒரு நன்மை ஒரு உதவி ஒரு ஒத்தாசை சென்று சேர வேண்டுமே தவிர, உன்னால் யாருக்கும் எந்தவித உபத்திரமும் அநியாயமும் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது.
இஸ்லாமினுடைய அடிப்படையாக அல்லாஹ்வின் தூதர் ஆக்கினார்கள்:
«المُسْلِمُ مَنْ سَلِمَ المُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ»
முஸ்லிம் என்பவர், யாருடைய கை நாவின் தீங்கிலிருந்து பிற மக்கள் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களோ, அவர் தான் முஸ்லிம்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6484.
மேலும் சொன்னார்கள் :
«وَالمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ»
முஃமின்கள் யார்? யாரைப் பார்த்து பிறர் பயமற்று இருக்கிறார்களோ, அவர்கள் தான் முஃமின்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2627, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
எவ்வளவு அழகான கட்டளை பாருங்கள். இன்று நாம் போற போக்கிலே எத்தனை பேருக்கு சொல்லால் செயலால் துன்பங்களை தொந்தரவுகளை கொடுத்துக் கொண்டே போகிறோம்.
அடுத்து அல்லாஹ் சொல்கிறான் :
وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
மானக்கேடான அசிங்கமான ஆபாசமான செயல்களில் இருந்து, அநியாயம் செய்வதிலிருந்து அல்லாஹ் உங்களை தடுக்கின்றான். அல்லாஹ் உங்களுக்கு உபதேசம் செய்கிறான்.நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக,நீங்கள் நல்லுபதேசம் எடுத்துக் கொள்வதற்காகَ. (அல்குர்ஆன் 16:90)
அல்லாஹ்வுடைய வேதத்தில் அல்லாஹ் சொல்லிய கட்டளை இது. அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் என்று இல்லை.அத்தோடு மட்டும் அல்லாஹ் நிறுத்திக்கொள்ளவில்லை.
அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் என்று கூறிய அல்லாஹு தஆலா, தொழுங்கள்,நோன்பு வையுங்கள் என்று கூறிய அல்லாஹுத்தாலாநம்மை நோக்கி இதையும் கட்டளையாகச் சொல்கிறான்:
அல்லாஹ் உங்களுக்கு நீதத்தை ஏவுகிறான்,கட்டளையிடுகிறான்.(அல்குர்ஆன் 16:90)
இது எவ்வளவு சாதாரணமான எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இப்படியாக இஸ்லாம் எந்தெந்த ஒழுக்கங்களை எந்தெந்த சட்டங்களை மிக உயர்ந்த தரஜாவிலே வைத்திருக்கிறதோ, இன்று முஸ்லிம்களுடைய பார்வையிலே அதெல்லாம் ஒரு சாதாரண அர்ப்பமாண விஷயமாக ஆகிவிட்டது.
எந்த பாவங்களை குற்றங்களை எல்லாம் கடுமையான கண்களைக் கொண்டு இஸ்லாம் பார்த்ததோ அதெல்லாம் ஒரு சாதாரண பாவமாக சாதாரண ஒரு குற்ற செயலாக ஆகிவிட்டது.
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) ரசூலுல்லாஹ் (ஸல்) உடைய காலத்திலே கைபர் யூதர்களிடத்திலே வரி வாங்குவதற்காக செல்கிறார்கள். யூதர்களைப் பற்றி உங்களுக்கு தெரியும். அவர்களை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் வரவேற்கிறார்கள். பிறகு அந்த யூத கூட்டம் சில நபர்களை தயார் செய்கிறது. அவர்களை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா விடத்திலே பேசுவதற்காக அனுப்புகிறார்கள்.
சொல்கின்றார்கள்:நீங்கள் எங்களுடைய தோட்டங்களை எல்லாம் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களை நாங்கள் எப்படி கவனிக்க வேண்டுமோ கவனித்துக் கொள்கிறோம். உங்களுக்கு நாங்கள் தரவேண்டியவற்றை நாங்கள் தந்துவிடுகிறோம்.
ஆனால், வரியாக எவ்வளவு குறைத்து வாங்கிச் செல்ல முடியுமோ, எங்களுடைய பேரீத்தம்பழங்களில் தரம் குறைந்ததை எவ்வளவு நீங்கள் எடுக்க முடியுமோ எடுத்துக் கொண்டு அதை நீங்கள் வரியாக எடுத்துக் கொள்ளுங்கள். மற்றபடி உங்களுக்கு என்ன வேண்டுமோ சொல்லுங்கள், நாங்கள் அதை தனியாக கவணித்துக் கொள்கிறோம் என்று.
அல்லாஹு அக்பர்!அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அந்த நேரத்தில் என்ன சொல்லியிருப்பார்கள்? என்ன செய்திருப்பார்கள்?
சொன்னார்கள்:
யூத கூட்டமே!உங்கள் மீது எனக்குள்ள வெறுப்பு, இஸ்லாமின் மீது எனக்குள்ள நேசம் என்னை வரம்பு மீற தூண்டாது. எந்த சட்ட வரம்புகளை கொடுத்த அல்லாஹ் வுடைய தூதர்ஜிஸ்யாவை வசூல் செய்ய சொன்னார்களோ அந்த அடிப்படையில் தான் வசூல் செய்வேன். உங்களுடைய உயர்ந்த வகையான பேரீத்தம்பழங்களையும் நான் எடுக்க மாட்டேன். மட்டமானதையும் எடுக்க மாட்டேன். நடுத்தரமானதை மட்டுமே எடுப்பேன்.
அல்லாஹ்வுடைய தூதர் கூறிய அளவை விட ஒரு பேரீத்தம் பழத்தை கூட அதிகமாக எடுக்க மாட்டேன். உங்கள் மீது எனக்குள்ள கோபம் வெறுப்பு என்னை அநியாயம் செய்ய தூண்டாது.
இந்த வார்த்தையை கேட்டு ஆடிப்போன பயந்துபோன யூதர்கள் சொன்னார்கள்: இந்த நீதத்தை கொண்டு தான் வானமும் பூமியும் நிலை பெற்றிருக்கிறது என்று.
நூல் : தஃப்சீர் தபரி.
அல்லாஹ்வின் அடியார்களே! நாமெல்லாம் ஹதீஸுகளிலே படிக்கிறோம். பல அறிவிப்புகளை செவியுறுகிறோம். எத்தனை முறை வாழ்க்கையிலே செவியுற்றிருப்போம்.
ஏழு கூட்டத்தார்கள் அர்ஷுடைய நிழலிலே இருப்பார்கள். அதிலே முதல் கூட்டமாக தஹஜ்ஜத் தொழுபவர்களை அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) சொன்னார்களா? தஹஜ்ஜத் தொழுகையை குறைத்து மதிப்பிடவில்லை. காலமெல்லாம் நோன்பு வைப்பவர்களை சொன்னார்களா? நோன்பு வைப்பதை குறைத்து மதிப்பிடவில்லை.
இப்படியாக வணக்க வழிபாடுகளின் பட்டியலை நீங்கள் எண்ணிக் கொண்டே போங்கள். அவற்றையெல்லாம் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) சொல்லவில்லை.
ஸஹீஹ் புகாரியிலே ஸஹீஹ் முஸ்லிமிலே வந்திருக்கக் கூடிய அத்தனை அறிவிப்புகளையும் எடுத்து பாருங்கள்.
அறிவிப்புகளில் எந்த மாற்றங்களும் இல்லாமல், ஏழு கூட்டத்தார்கள் அர்ஷிலே செல்வார்கள் என்று வந்திருக்கக்கூடிய அத்தனை ஹதீஸ்களுடைய அறிவிப்புகளின் முதல் கூட்டத்தினராக அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) சொல்லியிருப்பது,
إِمَامٌ عَادِلٌ
நீதமாக நடக்கக்கூடிய மன்னர். நீதமாக இருக்கக்கூடிய இமாம் என்று தான் சொன்னார்கள்.(1)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6806.
சகோதரர்களே!யோசித்துப்பாருங்கள். நீதம் எவ்வளவு முக்கியமானதென்று!
அல்லாஹுத்தஆலா கட்டளையிடுகிறான்:
إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا
(நம்பிக்கையாளர்களே. உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருள்களை அதன் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது? நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் 4 : 58)
நாளை மறுமையிலே நீதவான்களைப் பற்றி அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) கூறினார்கள்:
«إِنَّ الْمُقْسِطِينَ عِنْدَ اللهِ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ، عَنْ يَمِينِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ، وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ، الَّذِينَ يَعْدِلُونَ فِي حُكْمِهِمْ وَأَهْلِيهِمْ وَمَا وَلُوا»
நாளை மறுமையிலே அல்லாஹ்வினுடைய வலது பக்கத்திலே ஒளியினாலான மேடைகளில் இருப்பார்கள். அல்லாஹ்வினுடைய இரண்டு கையும் வலக்கரம் தான். அவர்கள் தங்களுடைய ஆட்சி அதிகாரத்திலே நீதமாக நடப்பார்கள். தங்களுடைய குடும்பத்தார்களிடத்திலே நீதமாக நடப்பார்கள். இன்னும் அவர்கள் எதற்கெல்லாம் பொறுப்பாளர்களாக நிர்வாகிகளாக இருக்கிறார்களோ அவை அனைத்திலும் அவர்கள் நீதம் செலுத்துவார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1827.
இது மிக சிரமமான ஒரு குணம். ஆனால் நாமெல்லாம் கண்டிப்பாக நம்முடைய வாழ்க்கையில், தனி வாழ்க்கையாக இருந்தாலும் சரி,குடும்ப வாழ்க்கையாக இருந்தாலும் சரி,சமூக வாழ்க்கையாக இருந்தாலும் சரி,பேண வேண்டிய முக்கியமான ஒன்று.
இதில் எந்தவிதமான சமரசத்திற்கும் வேலையில்லை. நமக்கு பிடித்தாலும் சரி,பிடிக்கவில்லை என்றாலும் சரி.
அல்லாஹ் கூறுவதை பாருங்கள்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
நம்பிக்கையாளர்களே. அல்லாஹ்வுக்காக நீதமாக (உண்மை) சாட்சி சொல்பவர்களாகவே இருங்கள். ஒரு வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும்படி உங்களைத் தூண்டாதிருக்கட்டும். (எவ்வளவு குரோதமிருந்த போதிலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் பரிசுத்தத் தன்மைக்கு மிக நெருங்கியது. (எத்தகைய சந்தர்ப்பங்களிலும்) நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் 5 : 8)
தொழுகையினால் மட்டும் தக்வாவை அடைய முடியாது.நோன்பினால் மட்டும் அல்ல. ஜகாத்தினால் மட்டும் அல்ல. நீதத்தாலும் தக்வாவை நாம் அடைய வேண்டும்.
ஒரு மனிதன் தொழுகிறான்;இன்ன பிற அமல்களை செய்கிறான். ஆனால் அவனுடைய வாழ்க்கையிலே நீதம் தவறி நடக்கிறான் என்றால் அல்லாஹ்வின் பார்வையிலே அவன் தக்வா உள்ளவன் அல்ல.
ரசூலுல்லாஹி (ஸல்) காலத்தில் நடந்த மற்றோரு பிரச்சினை. அனஸ் (ரலி) அவர்களுடைய நெருக்கமான இரத்த உறவு பெண் அநேகமாக அவர்களுடைய தாயின் சகோதரி.இன்னொரு அன்ஸாரி பெண்ணிடத்திலே சண்டை சச்சரவு வரும்போது தள்ளுமுள்ளிலே அல்லது கை கலப்பிலே அடித்துவிடுகின்றார்கள். இன்னொரு அன்ஸாரி பெண்ணுடைய பல் உடைந்துவிடுகிறது.
தீர்ப்பு ரசூலுல்லாஹ் (ஸல்) இடத்திலே வருகிறது. அல்லாஹ்வுடைய தூதரிடத்திலே அழைத்து வரப்படுகிறார்கள். அல்லாஹ் வுடைய தூதர் (ஸல்) சொன்னார்கள்:அல்லாஹ் வுடைய தீர்ப்பு,பல்லுக்கு பதிலாக பல் என்று. கண்டிப்பாக பல் உடைக்கப்படும் என்று.
அந்த பெண்ணுடைய கணவரோ அல்லது இன்னொரு உறவினரோ சொல்கிறார்கள், அல்லாஹ்வின் தூதரே!நாங்கள் உடைக்க விடமாட்டோம் என்று.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள்:அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவளுடைய பல் உடைக்கப்படுமென்று. (2)
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 2703.
அல்லாஹ்வுடைய சட்டத்தை எப்பேற்ப்பட்ட நெருக்கமான உறவினராக இருந்தாலும் சரி, அந்த சட்டத்தை அமுல்படுத்தி தான் (ஸல்) இருந்தீர்களே தவிர, யாருடைய முகதாட்சனையும் அவர்கள் பார்க்கவில்லை.
எத்தகைய நெருக்கமானவராக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய உயர்ந்த மனிதராக இருந்தாலும் சரி, உயர்ந்த கோத்திரமாக இருந்தாலும் சரி, அல்லாஹ்வுடைய தூதரை நீதத்திலிருந்து அது தடுத்து நிறுத்தவில்லை.
இந்த நீதமான பழக்கங்களை நமது குடும்பத்திலே கடைபிடிக்க வேண்டும். நாம் இருக்கக்கூடிய இடத்திலே கடைபிடிக்க வேண்டும். நம்முடைய அன்றாட பழக்க வழக்கங்களில் இந்த நீதத்தை கடைபிடிக்க வேண்டும்.
சர்வ சாதாரணமாக ஒரு சில விஷயங்களிலே நீதம் தவறி நடப்பது அடுத்தடுத்து அந்த மனிதரை மிகப்பெரும் அநியாயத்திற்கு இட்டு செல்லும். கெட்ட குணத்திற்கு வழிவகுத்துவிடும். அதற்கு பிறகு நீதத்தை பற்றி அவனுக்கு எந்த அக்கறையும் இருக்காது. அநியாயம் செய்வது அவனுக்கு மிக இலகுவாக ஆகிவிடும்.
பிறகு அல்லாஹ் வெறுக்கின்ற அல்லாஹ் சபிக்கின்ற அநியாய கூட்டத்திலே சேர்ந்து அவன் தன் இம்மை வாழ்க்கையையும் பாழாக்கி கொள்வான், மறுமையையும் பாழாக்கிக் கொள்வான்.
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ் விரும்பக்கூடிய இந்த நீதத்தை பேணி நடப்பதற்கும் இந்த சமுதாயத்திலே நீதத்தை நிலைநாட்டுவதற்கும் உதவிசெய்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَّامٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: إِمَامٌ عَادِلٌ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ فِي خَلاَءٍ فَفَاضَتْ عَيْنَاهُ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسْجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ إِلَى نَفْسِهَا، قَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا صَنَعَتْ [ص:164] يَمِينُهُ"(صحيح البخاري 6806 -
குறிப்பு 2)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنِي حُمَيْدٌ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُمْ: أَنَّ الرُّبَيِّعَ وَهِيَ ابْنَةُ النَّضْرِ كَسَرَتْ ثَنِيَّةَ جَارِيَةٍ، فَطَلَبُوا الأَرْشَ، وَطَلَبُوا العَفْوَ، فَأَبَوْا، فَأَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَهُمْ بِالقِصَاصِ، فَقَالَ أَنَسُ بْنُ النَّضْرِ: أَتُكْسَرُ ثَنِيَّةُ الرُّبَيِّعِ يَا رَسُولَ اللَّهِ، لاَ وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ، لاَ تُكْسَرُ ثَنِيَّتُهَا، فَقَالَ: «يَا أَنَسُ كِتَابُ اللَّهِ القِصَاصُ»، فَرَضِيَ القَوْمُ وَعَفَوْا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ» زَادَ الفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، فَرَضِيَ القَوْمُ وَقَبِلُوا الأَرْشَ (صحيح البخاري 2703 -)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/