HOME      Khutba      கொடுத்த வாக்கையும் செய்த சத்தியத்தையும் காப்பாற்றுங்கள்! | Tamil Bayan - 643   
 

கொடுத்த வாக்கையும் செய்த சத்தியத்தையும் காப்பாற்றுங்கள்! | Tamil Bayan - 643

           

கொடுத்த வாக்கையும் செய்த சத்தியத்தையும் காப்பாற்றுங்கள்! | Tamil Bayan - 643


بسم الله الرحمن الرّحيم

கொடுத்த வாக்கையும் செய்த சத்தியத்தையும் காப்பாற்றுங்கள்

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

 

அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் அச்சத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கற்று அறிந்து அதன்படி செயல்பட வேண்டும், அல்லாஹ்வின் கட்டளைகளை மதித்து நடக்க வேண்டும், மேலும் நபியவர்களை நேசிப்பதோடு அவர்களின் சுன்னாவையும் முடிந்தளவு பேணி நடக்க வேண்டும் என்று உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் நம்முடைய வரம்பு மீறுதல்களை மன்னிப்பானாக! நம்முடைய அறியாமையை அல்லாஹ் மன்னிப்பானாக! நாம் அறிந்தும் அறியாமல் செய்த பாவங்களை, விளையாட்டாக செய்த பாவங்களை, சபையில் செய்த பாவங்களை, அல்லாஹ் மனித்தருள்வானாக!

அல்லாஹ்வின் வேதத்தையும், நபியின் சுன்னாவையும்பின்பற்றி வாழக்கூடிய மக்களில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக. நம்முடைய முடிவுகளை அல்லாஹ் அழகாக்கி வைப்பானாக! ஆமீன்.

இன்றைய முஸ்லிம் சமுதாயம் ஒரு விசித்திரமான வித்தியாசமான சமுதாயமாக மாறிவருகிறது.

அல்லாஹ்வுடைய மார்க்கமா? மன இச்சையா? என்னுடைய விருப்பமா? அல்லாஹ்வுடைய சட்டமா? என்னுடைய பிடிவாதமா? அல்லாஹ்வுடைய சட்ட வரம்பா? என்று நாம் சமுதாயத்தை கொஞ்சம் உற்று நோக்கும் போது மிக வேதனையாக இருக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து திருந்த வேண்டிய, திருத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இல்லையென்றால் முடிவு எப்படி வருமோ என்பதை அல்லாஹ் அறிந்தவன்.

பலருக்கு தொழுகை பிடித்திருக்கும். ஆனால் உண்மை பேசுவது பிடிக்காது. பலருக்கு முன் ஸஃப்ஃபிலே அமர்வது பிடித்திருக்கும். ஆனால் நம்பிக்கை நாணயம் என்பதெல்லாம் பிடிக்காது.

பலருக்கு தர்மம் செய்வது, பல சமுதாய காரியங்கள் செய்வது பிடிக்கும். ஆனால் மோசடியில் முதல் வரிசையிலே இருப்பார்கள். நம்பிக்கை துரோகம் செய்வதிலே, அராஜகம் செய்வதிலே முன் இருப்பார்கள். ஏமாற்றுவதில் வாக்குறுதி செய்வதிலே முன்னிருப்பார்கள்.

இஸ்லாம் தொழுகையில் இருக்கிறது. வியாபாரத்தில் இல்லை. இஸ்லாம் புர்காவில் இருக்கிறது. கணவனுக்கு பணிவதிலே இல்லை. ஒழுக்கத்திலே இல்லை.

சிலருக்கு இஸ்லாம் தாடியில் இருக்கிறது. அவர்களுடைய ஆடையிலே இருக்கிறது. ஆனால், நம்பிக்கை, நாணயம், சத்தியம்இதில் எதுவுமே மார்க்கம் என்பது இல்லை.

இப்படிப்பட்ட ஒரு முரண்பாட்டை நமது நபி (ஸல்) அவர்கள் போதிக்கவில்லை. குர்ஆனும் போதிக்கவில்லை.

فَوَيْلٌ لِلْمُصَلِّينَ (4) الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ

தொழுகையில் கவனமில்லாமல் இருப்பவர்களுக்கு கேடு உண்டாகட்டும் என்று எச்சரிக்கை செய்யக்கூடிய குர்ஆன் (அல்குர்ஆன் 107 : 4 , 5)

அதே நேரத்தில் ,

وَيْلٌ لِلْمُطَفِّفِينَ (1) الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ (2) وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ

மக்களுக்கு மோசடி செய்பவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள், அளவையில் நிறுவையில் குறை செய்பவர்களுக்கு கேடு உண்டாகட்டும் என்று எச்சரிக்கை செய்கிறது .(அல்குர்ஆன் 83 : 1-3)

தொழுகையை நிலை நிறுத்துங்கள். ஜகாத்தை கொடுங்கள் என்று சொல்லக்கூடிய குர்ஆன் நமக்கு இதையும் சொல்கிறது:

وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَاهَدْتُمْ

நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுங்கள். (அல்குர்ஆன்16 : 91)

இன்று பலர் இபாதத்களை கொண்டு தன்னையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய இபாதத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

இபாதத்துகள் ஒன்று,அல்லாஹ்வுடன் அடியார்களை நெருக்கமாக்குவதற்காக, அல்லாஹ் நம்மீது திருப்திபடுவதற்காக, சுவர்க்கம் கிடைப்பதற்காக, அதே நேரத்தில் அந்த இபாதத் நம்முடைய நஃப்ஸை தர்பியத் செய்வதற்காக உள்ளது.

எந்த ஒரு இபாதத் நஃப்ஸை தர்பியத் செய்யவில்லையோ அந்த இபாததை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லக்கூடிய அல்லாஹ்,

فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى

நீங்கள் தக்வாவை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறான். (அல்குர்ஆன் 2 : 197)

தொழுகைக்காக நீங்கள் மஸ்ஜிதுக்குச் செல்லும்போது அலங்காரமாக செல்லுங்கள். (அல்குர்ஆன் 7:31)

وَلِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ

எனினும், (பாவங்களை மறைத்து விடக்கூடிய) இறையச்சம் எனும் ஆடைதான் மிக்க மேலானது. (அல்குர்ஆன் 7:26)

உள்ளத்திலே தக்வா இருக்கிறது என்றால் அதுதான் சிறந்தது என்று அல்லாஹ் கூறுகிறான்.

நோன்பு தக்வாவிற்காக. தக்வா என்றால் என்ன? நபியவர்கள் இறுதி ஹஜ்ஜிலே அழகாக சொன்னார்கள். உள்ளத்தை பார்த்து தக்வா என்பது இங்கே இருக்கிறது என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் அடியார்களே! தொழக் கூடியவர்கள்,ஜக்காத் கொடுப்பவர்கள் அவர்களுக்கு ஏன் இந்த வசனம் கண்களுக்கு தெரியவில்லை. படித்துப் பாருங்கள்!

وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَاهَدْتُمْ

நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுங்கள். (அல்குர்ஆன்16 : 91)

கருத்து : நீங்கள் ஒப்பந்தம் செய்தால், வாக்கு கொடுத்தால், அக்ரீமெண்ட் போட்டால், எப்ப பிஸ்மில்லாஹ் என்று அதிலே போட்டீர்களோ, அது அந்த மனிதரோடு செய்ததில்லை. அது அல்லாஹ்விடம் செய்த வாக்கு. அது அல்லாஹ்வுடன் செய்த ஒப்பந்தம்.

இன்று சமுதாயம் எங்கே இருக்கிறது? வாக்கிற்கு இந்த சமுதாயத்தில் எங்கே மதிப்பு இருக்கிறது? அதெல்லாம் வெறும் பேப்பரில் உள்ளது தான். எழுதிய அடுத்த கணமே இரு தரப்பினரும் எல்லை மீறுவதை பார்க்கிறோம்.

அல்லாஹ்வின் அடியார்களே! சமுதாயத்தில் இதெல்லாம் அடிப்படைகள். விரும்பினால் வாக்குகளை நிறைவேற்றலாம் என்பது அல்ல.

தொழுகை எப்படி கடமையோ, நோன்பு எப்படி கடமையோ, அதுபோன்று முஸ்லிம் சமுதாயத்தின் மீது விரும்பாவிட்டாலும், அவர்களின் மீது பகைமை இருந்தாலும், நட்பு இருந்தாலும், அவர்களுக்கு வறுமை இருந்தாலும், வசதி இருந்தாலும், எல்லா நேரத்திலும் இந்த சமுதாயம் ஒழுக்கங்களை பின்பற்றி தான் நடக்க வேண்டும் என்பது அல்லாஹ் விதித்த இஸ்லாமிய அடிப்படை அடையாளங்கள் ஆகும்.

ஒரு முஸ்லிம் அவனுடைய தாடியைக் கொண்டு, தொழுகையைக் கொண்டு, அறியப்படுவதைப் போல அவன் வாக்கு பேணுதலைக் கொண்டு அறியப்பட வேண்டும்.

ஒரு முஸ்லிம் அவனுடைய ஸலாமைக் கொண்டு அறியப்படுவதைப் போல அவனுடைய நம்பிக்கை, நாணயம், பேசுவதிலேஉண்மையைக் கொண்டு அறியப்பட வேண்டும்.

தீர்ப்பு அளித்தால் நியாயமாகத் தீர்ப்பு அளிப்பவர்கள் எங்கே? சாட்சி கூறினால் நீதமாக சாட்சி சொல்பவர்கள் எங்கே? நடுவர்களாக இருந்தால் நீதமான நடுவர்கள் எங்கே?

இப்படி இருந்தால் அல்லாஹ்வின் உதவி வருமா?

இயக்கங்களால் அல்லாஹ்வின் உதவி வராது. ஈமானால் அல்லாஹ்வின் உதவி வரும். இன்னும் எத்தனை இயக்கங்கள் வேண்டுமானாலும் இயக்கி கொள்ளுங்கள். இன்னும் எத்தனை சங்கங்களை வேண்டுமானாலும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

எதுவரை நாம் நம்மை முஸ்லிமாக மாற்ற மாட்டோமோ அதுவரை அல்லாஹ்வின் உதவி ஒருபோதும் வராது.

அநீதி இழைக்கப்பட்டவன், வரம்பு மீறக்கூடியவன், ஒப்பந்தம் மீறக்கூடியவன், துரோகம் செய்யக் கூடியவன் இந்த சமுதாயத்தில் இருக்கும் போதுஅல்லாஹ்வின் உதவி வராது.

அவர்கள் திருத்தப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு தண்டனைகொடுக்க வேண்டும்.

இத்தகைய சமுதாயத்தை உருவாக்காமல் என்ன கூச்சல் போட்டாலும் சரி, அல்லாஹ்வின் உதவி கற்பனையிலும் வராது.

அல்லாஹ்வின் கட்டளைகளைப் பாருங்கள் :

لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ

மேற்கிலோ கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்பி விடுவதனால் மட்டும் நன்மை செய்தவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். (உங்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (மறுமை நாளையும்), வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும், நிச்சயமாக நம்பிக்கை கொண்டு தனக்கு விருப்பமுள்ள பொருளை அல்லாஹ்வுக்காக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், விடுதலையை விரும்பிய (அடிமைகள், கடன்காரர்கள் ஆகிய)வர்களுக்கும் கொடுத்து (உதவி செய்து,) தொழுகையையும் கடைப்பிடித்து தொழுது, ஜகாத்தும் கொடுத்து வருகிறாரோ அவரும்; வாக்குறுதி செய்த சமயத்தில் தங்கள் வாக்குறுதியை(ச் சரிவர) நிறைவேற்றுபவர்களும்; கடினமான வறுமையிலும், நோய் நொடிகளிலும், கடுமையான போர் நேரத்திலும் பொறுமையைக் கைக்கொண்டவர்களும் ஆகிய (இவர்கள்தான் நல்லோர்கள்.) இவர்கள்தான் (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்) உண்மையானவர்கள். இவர்கள்தான் இறையச்சமுடையவர்கள்! (அல்குர்ஆன்2 : 177)

வசனத்தின் கருத்து : முஃமின்களுக்கு அல்லாஹ் அடையாளங்களை சொல்கிறான். நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் பண்புகளை இலக்கணங்களை சொல்கிறான். தொழுகை ஜகாத் தான தர்மங்களை சொல்கிறான்.

அதே நேரத்தில் அந்தத் தொழுகை, நோன்பு, ஜகாத், எல்லா கடமைகளை அல்லாஹ்  சொல்லி முடிக்கும்போது இவையெல்லாம் இபாதத்கள்.

இவை போக சமுதாயத்தில் இருக்கவேண்டிய அடையாளம் இருக்கிறது. ஒரு முஸ்லிம் தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில், தன்னுடைய குடும்பத்திலே, தன்னுடைய வியாபாரத்தில், தன்னுடைய தொழில் துறையில்பேண வேண்டியவை இருக்கின்றன.

அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான் : உண்மையான வெற்றி பெறக்கூடிய முஃமின்கள் யார் தெரியுமா?

அவர்கள் ஒப்பந்தம் செய்தால், வாக்கு கொடுத்தால், அவர்கள் முழுமையாக நிறைவேற்றுவார்கள். 99%கூட கிடையாது. 99.9%கூட கிடையாது. நூற்றுக்கு நூறு % பேணுவார்கள்.

இன்று மனநிலை எப்படி மாறுகிறது என்றால், ஒப்பந்தங்களிலே நிறைய விஷயங்கள் எழுதப்படுகின்றன. அவை எல்லாம் அப்படியே புறக்கணிக்கப்படுகின்றன.

ஏதோ மேலோட்டமாக விஷயங்களை பேணிக் கொண்டால் போதாது. ஒவ்வொரு விஷயத்திலும் பேணிக்கொள்ள வேண்டும்.

அல்லாஹ்விடம் சத்தியம் செய்தால் அந்த சத்தியத்தை நிறைவேற்ற வேண்டும். கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும். ஈமானுடைய பண்புகளில் ஒன்று, அல்லாஹ்வை நிராகரித்த, அல்லாஹ்வுடைய நபிமார்களை கொலை செய்த, அல்லாஹ்வுடைய வேதங்களை புரட்டிய பாவிகளின் குணம் ;மோசடி செய்வது, வரம்பு மீறுவது.

அவர்களை அடையாளப்படுத்தி அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான் :

فَبِمَا نَقْضِهِمْ مِيثَاقَهُمْ لَعَنَّاهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَاسِيَةً يُحَرِّفُونَ الْكَلِمَ عَنْ مَوَاضِعِهِ وَنَسُوا حَظًّا مِمَّا ذُكِّرُوا بِهِ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلَى خَائِنَةٍ مِنْهُمْ إِلَّا قَلِيلًا مِنْهُمْ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ

அவர்கள் தங்கள் உறுதிமொழிக்கு மாறு செய்ததன் காரணமாக நாம் அவர்களைச் சபித்து, அவர்களுடைய உள்ளங்களை இறுகச்செய்து விட்டோம். அவர்கள் (தங்கள் வேத) வசனங்களை அவற்றின் (உண்மை) அர்த்தங்களிலிருந்து புரட்டுகிறார்கள். (நமது இந்நபியைப் பற்றி) அதில் அவர்களுக்குக் கூறப்பட்டிருந்த பாகத்தையும் மறந்து விட்டார்கள். ஆகவே, (நபியே!) சிலரைத் தவிர அவர்களி(ல் பெரும்பாலோரி)ன் மோசடியை(ப் பற்றிய செய்தியை) நீர் அடிக்கடி கேள்விப்பட்டு வருவீர். ஆகவே, இவர்களை நீர் மன்னித்துப் புறக்கணித்து வருவீராக. நிச்சயமாக அல்லாஹ் அழகிய பண்புடையவர்களை நேசிக்கிறான். (அல்குர்ஆன்5 : 13)

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா தன்னுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அவர்களுடைய சமுதாயத்திற்கு அப்படிப்பட்ட வேதனையை நான் கொடுக்க மாட்டேன் என்று வாக்கு கொடுத்து இருக்கிறான்.

இல்லை என்றால் நம்மில் எத்தனைபேர் குரங்குகளாக, பன்றிகளாக, மாற்றப்பட்டு இருப்பார்களோ! அல்லாஹ்வுடைய வேதனைகள் அவர்களுக்கு நேரடியாக இறங்கி இருக்குமோ!

அல்லாஹ் சொல்கிறான். நபியே! இந்த யூதர்களில் நஸ்ரானியர்களில் பெரும்பான்மையோர் நீங்கள் மோசடி செய்வதை கண்டு கொண்டே இருப்பீர்கள். (அல்குர்ஆன்5 : 13)

அல்லாஹ்வின் அடியார்களே! குர்ஆன் கொடுக்கப்பட்டு என்ன மாற்றத்தை கொடுத்திருக்கிறது? ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வருகை நமக்கு என்ன மாற்றத்தை கொடுத்தது?

இந்த இபாதத்துகளை கொண்டு போதுமாக்கிக் கொண்டால் போதுமா? இப்படித்தான் நாம் இன்று எதிர்பார்க்கிறோம். அல்லாஹ்விடத்தில் சண்டை செய்யக்கூடிய சமுதாயம், அல்லாஹ்விடத்திலே போட்டி போடக்கூடிய சமுதாயமாக ஆகிவிட்டார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் :

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ

இன்றைய தினம் நான் உங்களுக்கு தீனை பூரணப்படுத்தி விட்டேன். (அல்குர்ஆன்5 : 3)

அல்லாஹ் முழுமைப்படுத்திய தீனிலே தொழுகை மட்டும் இருக்கிறதா? நோன்பு மட்டும் இருக்கிறதா? ஜகாத் மட்டும் இருக்கிறதா? அதிலே சத்தியங்களை பேணுவது இல்லையா? வாக்குகளை நிறைவேற்றுவது இல்லையா? உரிமைகளை கொடுப்பது இல்லையா? நம்பிக்கைகளை பேணுவது இல்லையா?

தொழுகையை நிலை நிறுத்துங்கள் என்று கூறிய அல்லாஹ், ஜகாத்தைக் கொடுங்கள் என்று கூறிய அல்லாஹ், அதோடு நிறுத்திக் கொள்கிறான். அதனுடைய விளக்கங்களை எல்லாம் நபி சொல்லிக் கொடுப்பார்கள் என்று விட்டு விடுகிறான்.

ஆனால் கொடுக்கல் வாங்கல், கடன் எப்படி கொடுக்க வேண்டும்? கடன் எப்போது எப்படி வாங்க வேண்டும்? வியாபாரம் எப்படி செய்ய வேண்டும்? எது ஹராம்? ஒருவர் இறந்து விட்டால் அவருடைய சொத்தை எப்படி பங்கு வைக்க வேண்டும்? யாருக்கு என்ன உரிமை? இது எல்லாம் அல்லாஹ் அவனுடைய குர்ஆனிலே நேரடியாக சொல்லி முடித்து விடுகிறான்.

ஏனென்றால் நம்மிலே ஒரு கூட்டம் இருக்கிறார்கள். முஃமீன் என்று சொல்வார்கள். ஆனால் ஏதாவது சட்டத்தை கூறினால் குர்ஆனில் இருக்கிறதா? என்று கேட்பார்கள்.

இன்னும் ஒரு மாடர்ன் முஸ்லிம் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஹதீசை கூறினால் புகாரியில் இருக்கிறதா? என்று கேட்பார்கள். முஸ்லிமில் இருக்கிறதா? என்று கேட்பார்கள். அப்படி இல்லை என்றால் அப்ப பரவாயில்லை விட்டுவிடுங்கள் என்று கூறுவார்கள். இது என்ன ஒரு விசித்திரமான நிலைப்பாடு!

இமாம் புகாரி இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ்ஸஹீஹான ஹதீஸ்களிலிருந்து ஒரு தொகுப்பை கொடுத்தார்களே தவிர ஒட்டுமொத்த ஹதீஸ்களையும் அவர்கள் அந்த நூலிலே கூறி முடிக்கவில்லை.

ஒரு முஸ்லிமுடைய அளவுகோல் எப்படி இருக்க வேண்டும்? ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் உடைய ஹதீஸ் அது ஸஹீஹான அறிவிப்பாளர்களோடு எந்த நூலில் சஹீஹாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதுதான் முஸ்லிம் உடைய நிலைப்பாடாகும்.

அல்லாஹு தஆலா இதனை குறித்து கடுமையாக எச்சரிக்கை செய்கிறான். சூரத்துல் அன்ஆமிலே நாற்பத்தி ஒன்பதாவது வசனத்தில் இருந்து முஸ்லிம்களுக்கு முஃமின்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான வழிகாட்டுதல்களை கொடுக்கின்றான்.

அதுபோன்று சூரா பனீ இஸ்ராயீல் 23-வது வசனத்திலிருந்து 37-வது வசனம் வரை முஸ்லிம் சமுதாயத்திற்கு உண்டான சமூகத்துக்கு உண்டான வாழ்க்கை வழிகாட்டுதல்களை சொல்லுகின்றான்.

இந்த இரண்டு இடங்களையும் எடுத்துப் படித்துப் பாருங்கள். அல்லாஹு தஆலா சூரா அன்ஆமுடைய அந்த உபதேசங்களை முடிக்கும்போது,

وَبِعَهْدِ اللَّهِ أَوْفُوا

அல்லாஹ்வுடைய வாக்கை கண்டிப்பாக நீங்கள் நிறைவேற்றுங்கள் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 6 : 152)

என்றைக்காவது சிந்தித்து இருக்கிறோமா? அல்லாஹ்வுக்கு கொடுத்த வாக்கு, அல்லாஹ்வுக்கு கொடுத்த ஒப்பந்தம் என்னவென்று.

இதனுடைய விளக்கத்தை நாம் தேடுவதில்லை. இதற்கு கூறப்பட்ட கருத்துக்கள் என்ன என்று தேடுவதில்லை.

அல்லாஹ்வுடைய ஒப்பந்தம், அல்லாஹ்வுடைய வாக்கு என்றால் முஸ்லிம்கள் தங்களுக்குள் செய்து கொள்ளக்கூடிய ஒப்பந்தங்கள், வாக்குறுதிகள், கண்டிப்பாக நான் இதை உனக்கு கொடுப்பேன் என்று.

அப்போது இன் ஷா அல்லாஹ் என்றும் பிஸ்மில்லாஹ் என்றும் அல்லாஹ்வுடைய உதவி என்றும் எப்போது அல்லாஹ்வோடு நாம் சம்பந்தப்படுத்தி விட்டோமோ இது நாம் அல்லாஹ்வுக்கு கொடுக்கக்கூடிய வாக்கு.

அல்லாஹ் சொல்கிறான். நீங்கள் உங்களுக்குள் கொடுத்து கொள்ளக்கூடிய வாக்கு இது. எனக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய வாக்கு இவை. எல்லாம் நான் உங்களுக்கு செய்யக்கூடிய உபதேசங்கள். (அல்குர்ஆன் 6:152)

சூரா பனீ இஸ்ராயீலிலே அல்லாஹ் சொல்கிறான் :

وَأَوْفُوا بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْئُولًا

உங்கள் வாக்குறுதியை நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள். ஏனென்றால், மறுமையில் வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும். (அல்குர்ஆன்17:34)

தொழுகை விசாரிக்கப்படுவது போல், நீங்கள் உங்கள் வீட்டு உரிமையாளர்களோடு,உங்கள் வீட்டு வாடகைகாரர்களோடு செய்த ஒப்பந்தம் குறித்து, உங்கள் வியாபார பார்ட்னர் -பங்காளி உடன் செய்த ஒப்பந்தம் குறித்து, உங்கள் சமூகத்தில் ஒருவரோடு கொடுக்கல் வாங்கல் செய்யும் போது, திருமண உறவுகள் செய்து கொள்ளக்கூடிய ஒப்பந்தம் குறித்துமறுமையில் உங்களிடத்தில் விசாரிக்கப்படும்.

தொழுகையைப் பற்றி மட்டுமல்ல. நோன்பை பற்றி மட்டுமல்ல. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம் .

நான் ஐந்து நேரத் தொழுகைகளை பேணுகிறேன். பிறகு எனக்கு என்ன கவலை என்று இருந்துவிட வேண்டாம்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வதை பாருங்கள்.

" إِنَّ الغَادِرَ يُنْصَبُ لَهُ لِوَاءٌ يَوْمَ القِيَامَةِ، فَيُقَالُ: هَذِهِ غَدْرَةُ فُلاَنِ بْنِ فُلاَنٍ "

 

மறுமையில் யார் வாக்குகளை மீறினானோ, ஒப்பந்தங்களை மீறினானோ, அவனிடத்திலே ஒரு கொடி கொடுக்கப்படும். அந்தக் கொடி எப்படி என்றால், அவனுடைய பிற்தட்டோடு சேர்க்கப் படும்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6178.

ஒரு இரும்பை இரும்போடு வெல்டிங் செய்வது போன்று. அது மாதிரி அந்த கொடி அவனுடைய பிற்தட்டோடு ஒட்டப்பட்டு விடும். அதற்குப்பிறகு அதை கழட்ட முடியாது. தூக்கி போட முடியாது.

அது என்ன கொடி தெரியுமா? தொழுகையாளியாக இருக்கலாம். பலமுறை ஹஜ் செய்தவர்களாக இருக்கலாம். சமுதாயத்தில் எத்தனையோ நல்ல காரியங்களை செய்தவர்களாக இருக்கலாம்.

இது இன்னவர் இன்னவருக்கு செய்த மோசடி என்று இவர் பெயர் எழுதப்பட்டு, யாருக்கு இவர் மோசடி செய்தார் என்பதும் அதில் எழுதப்பட்டிருக்கும்.

இப்படியே எத்தனை நபர்களுக்கு இவன் மோசடி செய்தானோ, துரோகம் செய்தானோ, அநியாயம் செய்தானோ, அக்கிரமம் செய்தானோ, வாக்கை மீறினானோ, அத்தனை கொடிகள் இவனுடைய முதுகில் நட்டி வைக்கப்பட்டிருக்கும். பிடுங்கி எறியப்படாது.

இது சாதாரணமான விஷயமா?இது அலட்சியப் படும்படியான விஷயமா? இது கண்டும் காணாமல் இருக்கும்படியான விஷயமா? இது உள்ளம் பயப்படவேண்டாமா? உள்ளத்திலே நடுக்கம் வரவேண்டாமா?

ரசூலுல்லாஹ் அவர்கள் தன்னுடைய தோழர்களுக்கு குறிப்பாக பெரும் பாவங்களை பற்றி எப்போதும் பயமுறுத்திக் கொண்டே இருப்பார்கள். அச்சுறுத்திக் கொண்டே இருப்பார்கள். ஏன் தெரியுமா?

ரப்பு சொல்கிறான்:

إِنْ تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُمْ مُدْخَلًا كَرِيمًا

உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவமான காரியங்களில் இருந்து நீங்கள் விலகிக்கொண்டால், உங்கள் (மற்ற) சிறிய பாவங்களுக்கு (அதை) நாம் பரிகாரமாக்கி உங்களை (மிக்க) கண்ணியமான இடங்களிலும் நுழைவிப்போம். (அல்குர்ஆன்4 : 31)

பார்வையினால் செய்யக்கூடிய சில பாவங்கள் இருக்கிறது. அதையும் அல்லாஹ் அழித்து விடுகிறான்.

الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ

அந்த முஃமீன்கள் யார் என்றால் பெரும் பாவங்களை விட்டும் விலகி இருப்பார்கள். சின்ன சின்ன ஊசலாட்டங்கள் தவிர. (அல்குர்ஆன்53 : 32)

ஆகவே,அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய தோழர்களுக்கு பெரும் பாவங்கள் குறித்து பயமுறுத்திக் கொண்டே இருப்பார்கள்.

அத்தகைய தொடரிலே ஒன்று அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் அவர்கள் அறிவிக்கின்றார்கள். (1)

பெரும் பாவங்கள் என்றால் எது தெரியுமா? அல்லாஹ்விற்கு இணை வைப்பது. இதுவும் இந்த சமுதாயத்தில் மலிந்து விட்டது.

மஸ்ஜிதுகளின் எண்ணிக்கை அளவிற்கு தர்காக்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டன. வெள்ளிக்கிழமை ஜும் ஆவிற்கு வரக் கூடிய கூட்டத்தை போன்று அல்லது அதைவிட அதிகமாக தர்காவில் ஸுஜூது செய்யக் கூடிய, ஃபாத்திஹா ஓதக்கூடிய, நேர்ச்சை செய்யக் கூடிய, கப்ருகளை தவாஃப் செய்யக் கூடியவர்கள், புர்கா போட்டவர்கள், தாடி வைத்தவர்கள் அங்கு செல்கிறார்கள்.

அடுத்து சொன்னார்கள் : தாய் தந்தைக்கு மனவேதனையை கொடுப்பவர்கள், தந்தையின் பேச்சை மீறுபவர்கள், தாயை அவமரியாதை செய்பவர்கள்.

தந்தைக்கு எந்த மரியாதையும் இல்லை. தாய் சமைத்துப் போடுபவள் மட்டும் தான். படித்து வளர்ந்து பெரியவனாகி விட்டால் இருவரும் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.

தாய் தந்தை மீது அன்பு இல்லை. அவர்கள் மீது நேசம் இல்லை. அவர்களுக்கு பணிவிடை என்பது இல்லை. அவர்களோடு பேசினால் எப்படி பேசவேண்டும் என்ற பண்பாடு தெரியாதவர்களாக வளர்ந்திருப்பார்கள்.

وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا

(நபியே!) உமது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். உம்மிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ' என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுவீராக. (அல்குர்ஆன்17 : 23)

தாய் தந்தை இடத்தில் பேசும்போது அன்போடு கனிவாகப் பேசுங்கள். அவர்களை மிரட்டாதீர்கள். அதட்டாதீர்கள். சத்தத்தை உயர்த்தாதீர்கள். அவர்களுக்கு முன்னால் பணிந்து நடங்கள் என்று கூறுகிறது.

மூன்றாவதாக,கொலை செய்வது.

இதற்கும் இன்றைய சமுதாயத்தில் கொடுக்கல் வாங்கலில்கொலை. விரோதரங்களிலே கொலை.இப்படியாக செய்திகளைப் படிக்கும்போது, பத்திரிகையிலே ஊடகங்களிலே பார்க்க வரும்போது மனம் மிகவும் வேதனைப்படுகிறது.

ஒரு கொலை குற்றத்திலே முஸ்லிம் சம்பந்தப்பட்டு இருக்கிறான் என்றால், எந்த மார்க்கத்தில் ஒரு உயிரை கொல்வது உலக மக்களை கொல்வது என்று உபதேசம் செய்யப்பட்டு இருக்கிறதோ, அந்த முஸ்லிம் கொலை குற்றத்திலே சம்பந்தப்படுவானா?

அடுத்து நாலாவதாக, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் : பொய் சத்தியம் செய்வது, சத்தியம் செய்துவிட்டு மீறுவது.

அல்லாஹ்வின் அடியார்களே! ஒரு வசனத்தை கூறி முடிக்கின்றேன்.

وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَاهَدْتُمْ وَلَا تَنْقُضُوا الْأَيْمَانَ بَعْدَ تَوْكِيدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللَّهَ عَلَيْكُمْ كَفِيلًا إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ

நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியம் செய்து அதை உறுதிப்படுத்திய பின்னர், அந்தச் சத்தியத்தை நீங்கள் முறித்துவிடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் செயலை நன்கறிவான். (அல்குர்ஆன்16 : 91)

சொல்வதற்கு நிறைய வசனங்களும், ஹதீஸ்களும் இருந்தாலும், வரலாற்றுப் படிப்பினை சம்பவங்கள் இருந்தாலும், அல்லாஹ்வை பயப்படக்கூடிய மக்களுக்கு ஒரு சில உபதேசங்களே போதுமானது.

இன்றைய நம்முடைய தலைமுறையை, நம்முடைய பிள்ளையை, நம்முடைய வாலிபர்களைஇத்தகைய நோக்கம் உள்ளவர்களாக, உயர்ந்த பண்பாடு உள்ளவர்களாக ஆக்கவேண்டும். சமுதாயத்தின் தலைவர்கள், சமுதாயத்தை வழி நடத்தக் கூடியவர்கள், இத்தகைய பண்புகளைக் கொண்டு முதலாவதாக அவர்கள் பேணிக்கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படைகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு, கோஷங்கள் எழுப்புவதால், கூட்டங்கள் போடுவதால், எதையும் சாதிக்க முடியாது. என்றும் நம் மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்வோம்.

அல்லாஹ்வுடைய வேதத்தை நம்முடைய வாழ்க்கையிலே நிலை நிறுத்துவதும், எந்த அடிப்படைகள் எந்த நற்குணங்கள் எந்த சமுதாய ஒழுக்கங்கள். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நம் மீது விட்டுச் சென்றார்களோ, அவற்றின் பக்கம் நாம் மீண்டு வருவதை தவிர நம்முடைய கண்ணியத்திற்கு, உயர்விற்கு, நம்முடைய மதிப்பிற்கு, உலகத்திலே வேறு வழி இல்லை. அதுதான் நம்முடைய மறுமையின் கண்ணியத்திற்கும் நிரந்தரமான வெற்றிக்கும் காரணமாகும்.

அல்லாஹு தஆலா அல்லாஹ் உடைய வேதத்தை பின்பற்றக்கூடிய, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் உடைய சுன்னாவை பின்பற்றக்கூடிய, நமக்கு விருப்பமாக இருந்தாலும், வெறுப்பாக இருந்தாலும், நமக்கு சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும், நீதத்தை, நேர்மையை, ஒழுக்கத்தை, வாக்குகளை பேணி நடக்கக்கூடிய, ஒப்பந்தங்களை நிறைவேற்றக்கூடிய நல்ல மக்களாக என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا النَّضْرُ، أَخْبَرَنَا شُعْبَةُ، حَدَّثَنَا فِرَاسٌ، قَالَ: سَمِعْتُ الشَّعْبِيَّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الكَبَائِرُ: الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَاليَمِينُ الغَمُوسُ")صحيح البخاري (6675 -

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/