HOME      Khutba      அதிகம் பெறுவோம்! அருளோடு வாழ்வோம்! | Tamil Bayan - 641   
 

அதிகம் பெறுவோம்! அருளோடு வாழ்வோம்! | Tamil Bayan - 641

           

அதிகம் பெறுவோம்! அருளோடு வாழ்வோம்! | Tamil Bayan - 641


بسم الله الرحمن الرّحيم

அதிகம் பெறுவோம் அருளோடு வாழ்வோம்

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

உங்கள் முன்னால் அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்தத் தூதரின் கண்ணியத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை, அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக,

அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பேணி வாழுமாறு உபதேசம் செய்தவனாக, அல்லாஹ் ஏவியதை ஏற்றுக் கொள்ளும்படியும் அல்லாஹ் தடுத்ததை விட்டு விலகும்படியும் உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நமது பெற்றோர், குடும்பத்தார், முஃமின்களுடைய பாவங்களை மன்னிப்பானாக!

அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முற்றிலும் கீழ்ப்படிந்து கட்டுப்பட்டு பணிந்து நடந்த உண்மையான முஸ்லிம்களில் என்னையும் உங்களையும் அல்லாஹ் தஆலா ஆக்கி அருள்வானாக! ஆமீன்.

நாம் எந்த மார்க்கத்தை நம்பி இருக்கிறோமோ, ஏற்று இருக்கிறோமோ அதற்குரப்புல் ஆலமீன் கொடுத்த பெயர் இஸ்லாம்.

وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

உங்களுக்காக இந்த இஸ்லாமை மார்க்கமாக திருப்தியடைந்தேன் (அங்கீகரித்துக் கொண்டேன்).(அல்குர்ஆன் 5 : 3)

இஸ்லாம் என்றால் தொழுகை மட்டுமல்ல,ஜக்காத் மட்டுமல்ல,நோன்பு வைப்பது மட்டுமல்ல, ஹஜ் செய்வது மட்டுமல்ல, தான தர்மங்கள் செய்வது மட்டுமல்ல, இன்ன பிற நல்ல காரியங்களை செய்வது மட்டுமல்ல.

முதலாவதாக அல்லாஹ் கட்டளையிட்ட அனைத்தையும் ஏற்றுக்கொள்வது இஸ்லாம். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னா, அவர்கள் வழிகாட்டிய அனைத்தையும் ஏற்றுக் கொள்வது இஸ்லாம்.

பிறகு அவற்றிற்கு பணிந்து நடந்து அவற்றை வாழ்க்கையில் செயல்முறைப் படுத்துவது இஸ்லாம்.

இன்று ஒரு கூட்டம் இப்படி இருக்கிறார்கள்: நாங்கள் தொழுவோம்; ஜகாத் கொடுக்க மாட்டோம். நாங்கள் தான தர்மங்களை செய்வோம் ஆனால் தொழ வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் உண்மை பேசுகிறோம் யாருக்கும் மோசடி செய்வதில்லை. நாங்கள் ஏன் தொழவேண்டும்? நாங்கள் என்ன பாவம் செய்துவிட்டோம்?

நான் தொழுகிறேன்;ஆனால் என் கணவருக்கு கட்டுப்பட்டு நடக்க மாட்டேன். எனக்கு சொர்க்கம் வேண்டும். நான் தொழுகிறேன், நோன்பு வைக்கிறேன், ஆனால் நீதமாக நடக்க மாட்டேன். மனைவிக்கு பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய ஹக்கை கொடுக்க மாட்டேன்.

வியாபாரத்தில் எப்படி வேண்டுமானாலும் வியாபாரம் செய்வேன். மோசடி செய்வேன். வாக்கை மீறுவேன். அமானிதத்தை மீறுவேன். ஆனால் அல்லாஹ் எனக்கு சொர்க்கம் தர வேண்டும். ஏன் நான் தொழுகிறேன்?

இவர்கள் வித்தியாசமான முஸ்லிம்கள். மன இச்சையை வணங்கக் கூடிய முஸ்லிம்கள். நஃப்ஸுக்கு இபாதத் செய்யக் கூடிய முஸ்லிம்கள்.

இவர்களுக்கு தொழுகை பிடிக்கிறது. அதனால் தொழுகிறார்கள். அல்லாஹ்வுக்காக தொழவில்லை. இவர்களுக்கு தர்மம் பிடிக்கிறது. அதனால் தர்மம் செய்கிறார்கள். அல்லாஹ்வுக்காக செய்யவில்லை.

அல்லாஹ்வுக்காகஅல்லாஹ்வின் கட்டளைகளை செய்கிறவராக இருந்தால், அல்லாஹ்வின் கட்டளை தனக்கும், தனது குடும்பத்திற்கும் எதிராக இருந்தாலும், தனது நஃப்ஸுக்கு அது பாரமாக இருந்தாலும், தனது நஃப்ஸுக்கு அது சுவையாக இருந்தாலும், நஃப்ஸை மீறி, குடும்பத்தை மீறி, அல்லாஹ்வின் கட்டளையை நிலைநிறுத்தி இருப்பார்கள்.

தனது நஃப்ஸை சாட்டையால் அடித்து அல்லாஹ் கட்டளையிட்டதை விரும்பு, ஏற்றுக் கொள்!என்று நஃப்ஸை நிர்பந்தித்திருந்திருப்பார்கள். நஃப்ஸுக்கு பணிந்திருக்கமாட்டார்கள். அல்லாஹ்விற்கு பணிந்திருப்பார்கள்.

ஷைத்தானின் ஆசைகளுக்கு, ஊசலாட்டங்களுக்கு பணிந்து இருக்கமாட்டார்கள். யாருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று நூற்றுக் கணக்கான வசனங்களில் அல்லாஹ் கட்டளையிட்டானோ அந்த தூதருக்கு கீழ்படிந்து இருப்பார்கள்.

யாருடைய பேச்சைக் கேட்காதீர்கள்? சைத்தானுக்கும் நஃப்ஸுக்கும் கீழ்படியாதீர்கள்!என்று அல்லாஹ் கட்டளை இட்டானோ அந்த ஷைத்தானும் நஃப்ஸுக்கும் மாறு செய்திருப்பார்கள்.

இன்று இஸ்லாம் விளையாட்டாக மாறிக்கொண்டு இருக்கிறது. (அல்லாஹ் பாதுகாப்பானாக!)நாம் நம்மையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.

நான் தொழுவதைக் கொண்டு நான் என்னை திருப்திப்படுத்தி கொண்டிருக்கிறேன். அல்லாஹ்வை திருப்திப்படுத்துகிறேனா? என்னுடைய சில மார்க்க பணிகளை கொண்டு நான் அல்லாஹ்வை திருப்தி படுத்துகிறேனா? அல்லது நஃப்ஸை திருப்திப்படுத்துகிறேனா? ஒவ்வொருவரும் அவரவர் அமல்களைசுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிதல் என்பது இன்றைய முஸ்லிம் சமுதாயத்தினரிடமிருந்து தூரமாக இருக்கின்றது.

பெரிய தாடி வைத்திருப்பார்கள். மலக்குடைய அழகான ஒரு தோற்றத்தை போன்று இருக்கும். ஆனால் அல்லாஹ்வுடைய சட்டத்தை பேச வந்தால்,இந்த சட்டத்தை எல்லாம் இங்கே பேசாதீங்க என்று சொல்வார்கள். குர்ஆன் வசனம் அதை இங்கே சொல்லாதீங்க. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறை, சஹாபாக்களுடைய வழிமுறை, இஸ்லாம்இதை இங்கே சொல்லாதீர்கள்.

இவர்களுக்கு இங்கே என்ன பெயர் சொல்வது? ரசூலுல்லாஹ் அவர்களுடைய காலத்தில் இருந்த முனாஃபிக் போன்று,பிடித்ததை ஏற்பது, பிடிக்காததை மறுப்பது, உள்ளத்திலே நிராகரிப்பு, வெளிரங்கத்திலே சில இஸ்லாமிய அடையாளங்களின் வெளிப்பாடுகள், அல்லாஹ் பாதுகாப்பானாக!

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்விற்கு அவனுடைய அடியார்களின் மிக பிடித்தமானது இஸ்லாம்.

எனக்கு கட்டுப்படக்கூடிய ஆண்கள், எனக்கு கட்டுப்படக்கூடிய பெண்கள். (அல்குர்ஆன் 33 : 35)

முதலாவதாக,இஸ்லாம் இருக்கவேண்டும். ஈமான் இருக்க வேண்டும். நாங்கள் சொர்க்கத்தை நம்புகிறோம். நரகத்தை நம்புகிறோம். மறுமையை நம்புகிறோம். விசாரணையை நம்புகிறோம். ஆனால் இஸ்லாம் உன்னிடத்திலே இல்லையே! ரப்பு சொல்கிறான் என்றால், செவியுறுவோம், கட்டுப்படுவோம், கீழ்ப்படிவோம் என்பது உன்னிடத்திலே இல்லையே!

வியாபாரத்துடைய ஹராம் ஹலால் சொல்லப்பட்டால், குடும்ப வாழ்க்கையில் உனக்கு ஹராம் ஹலால் சொல்லப்பட்டால், உன்னிடத்தில் கீழ்படிதல் இல்லையே!

அல்லாஹ் முஃமின்களின் பண்பைப் பற்றி சொல்கிறான் :

إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَنْ يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ

முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் “நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்” என்பது தான்; இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.(அல்குர்ஆன் 24:51)

வசனத்தின் கருத்து : அல்லாஹ் சொல்கிறான், நபி சொல்கிறார் என்று சொல்லப்பட்டால் அவ்வளவுதான் விருப்பத்தை விட்டுவிடுவார்கள். தங்களுடைய ஆசைகளை விட்டு விடுவார்கள். தங்களுடைய எதிர்பார்ப்புகளை விட்டுவிடுவார்கள்.

அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு எங்களுடைய ரப்புக்கும், எங்களுடைய தூதருக்கும் கீழ்படிவோம், அவர்களுக்கு கட்டுப்படுவோம், அவர்கள் சொன்னதை மீறி நாங்கள் செய்ய மாட்டோம். அந்த முஸ்லிம்கள் எங்கே?

ஈமான் என்பது சொர்க்கத்தை நம்புகிறோம் என்று வாயால் சொல்வது மட்டுமா? சொர்க்கத்தை நம்பினால் அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதை அதற்கு நீ விலையாக கொடுத்திருப்பாயே!மறுமையின் விசாரணையை நம்பியிருந்தால் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்திற்கு செவி சாய்ப்பதை, அதற்கு கட்டுப்படுவதை நீ அதற்கு விலையாக கொடுத்து இருப்பாயே!

அல்லாஹ்வின் அடியார்களே! எங்கே சென்று கொண்டிருக்கின்றோம்?

நான் ஏன் இந்த விஷயத்தை சொல்கிறேன் என்றால், நம்முடைய சிந்தனைகள்,நம்முடைய அறிவு, நம்முடைய கல்வி,தாக்கங்கள், நம்முடைய கலாச்சாரங்கள்எல்லாம் மேற்கத்தியர்களாலும் அவர்களால் போதிக்கப்பட்ட சிற்றறிவுடைய சிலை வணங்கிகள் உடைய கலாச்சாரங்களாலும், தாக்கங்களாலும் பாதிக்கப்பட்டு நம்முடைய மார்க்கம், மார்க்க சிந்தனை சிதைந்து கொண்டிருக்கின்றது.

எதை அல்லாஹ் இந்த மார்கத்திலே ஹராமாக்கினோ அதை இன்றைய சமுதாயத்தின் மிகப் பெரிய ஒரு சாபக்கேடாக எல்லாராலும் பின்பற்றக்கூடிய ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது.

தொழுவார்கள், நோன்பு வைப்பார்கள், மார்க்கத்தையும் பேசுவார்கள், தங்களை பற்றுள்ளவர்கள் என்று காண்பித்து கொள்வார்கள்.

ஆனால் எந்த செயலை அல்லாஹ் முஷ்ரிக்குகளுடைய செயல் என்று கூறினானோ, ஷைத்தானுடைய அலங்காரத்தால் இணைவைப்பவர்களுடைய செயல் என்று கூறினானோ, அதைத்தான் வாழ்க்கையிலே செய்து கொண்டிருக்கிறார்கள்.

மிக முக்கியமான ஓதவேண்டிய வசனம். சூரத்துல் பகரா, சூரா ஆலஇம்ரான், பிறகு சூரத்துல் நிஸா, சூரா அல்மாயிதா, சூரா அல்அன்ஆம், சூரா அல்அஃராப் இவை முஹ்கமாத்.

ஒவ்வொரு முஸ்லிமும் இவற்றை தொடர்ந்து வாழ்க்கையில் ஓத வேண்டும். அதன் சட்டங்களை உணரவேண்டும். அவற்றோடு வாழவேண்டும் என்று அல்லாஹ்வுடைய தூதர் கட்டளையிட்ட சூராக்கள்.

முஹ்கமான வசனங்கள்.அல்லாஹ் கூறுகிறான். சூரத்துல் அல் அன்ஆம் உடைய 151-வது வசனம்.ஒரே சூராவில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அல்லாஹுத்தஆலா இந்த விஷயத்தை விளக்கி கூறுகிறான்.

அப்படி என்றால், அதன் அழுத்தம், ஆழம், இதனுடைய முக்கியத்துவம், எவ்வளவு என்பதை புரிய வேண்டும். அதுவும் எப்படி சொல்கிறான்? கட்டளையின் இடங்களிலே சொல்கிறான். பிறகு ஷைத்தான் உங்களை எப்படி வழிகெடுப்பான் என்று. ஷைத்தானின் வழி கேடுகளை சொல்லும் போது, அங்கே ரப்புல் ஆலமீன் சொல்லிக்காட்டுகிறான்:

قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ مِنْ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ

“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்.(அல்குர்ஆன் 6 : 151)

வசனத்தின் கருத்து : இந்த வசனத்தில் முக்கியமாக 3-விஷயங்கள் கூறப்பட்டுள்ளது.

1. நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காதீர்கள். ஒரு முஃமின் இன்னொரு முஃமினுக்கு, ஒரு முஃமினான தந்தை தங்களது முஃமினான பிள்ளைகளுக்கு, சகோதரன் தனது சகோதரனுக்கு, ஒரு முஸ்லிம் சமுதாயம் தங்களுக்குள் செய்ய வேண்டிய முதல் உபதேசம் ஷிர்க் செய்யாதீர்கள் என்பது.

2. பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள். பெற்றோர்களுக்கு உதவி செய்யுங்கள். அவர்களோடு நன்மையோடு நடந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களை ஏசினாலும் நீங்கள் பணிவாக நடங்கள். அவர்கள் உங்களை ஒதுக்கினாலும் நீங்கள் அரவணையுங்கள். அவர்கள் உங்களை புறக்கணித்தாலும் நீங்கள் அவர்களை சேர்த்து வாழுங்கள். அவர்கள் உங்களுக்கு அநியாயம் செய்தாலும் நீங்கள் அவர்களோடு நீதமாக வாழுங்கள். அவர்கள் உங்களை கோபித்துக் கொண்டாலும் நீங்கள் அவர்கள் மீது பாசம் காட்டுங்கள்.

ஆனால் இன்று,பெற்றோர் யாரோ, நாம் யாரோ.பிள்ளைகள் படித்து செல்வந்தர்கள் ஆகிவிட்டால் அவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இன்று வெளிப்பழக்கத்திலே சொல்வதைப் போன்ற ஹாய் ஹாய் என்று தான் தொடர்பு இருக்கிறது.

அதிகப்படியாக சலாம் கொடுத்துக் கொண்டால் அது பெரிய விஷயம் தான். பெற்றோரை பற்றி அக்கறை, அவர்கள் மீது உண்டான பாசம், தேடல், அதுவும் சில நேரங்களில் குடும்பத்தில் பெற்றோர் மனக்கசப்புகளால் பிரிந்து விட்டால் பிள்ளைகள் முற்றிலும் ஒரு பக்கமாக சாய்ந்து விடுவார்கள்.

அவர்கள் பிரிந்திருக்கலாம். உன்னை பிரித்தவர் யார்? உன் தாயின் உறவை உன் தந்தையின் உறவை உன்னால் எப்படி முறிக்க முடியும்? அப்படி முறித்துவிட்டு நீ ஸுஜூது செய்தால் அந்த ஸுஜுது ஏற்றுக்கொள்ளப்படுமா?

எத்தனையோ பேர், இன்று தாய்க்காக வேண்டி தந்தையை பகைத்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். எவ்வளவு பெரிய முட்டாள் தனமாக இருக்கின்றது. குடும்பம் சேர்ந்து வாழும்போது தாயின் மீது உண்டான பாசத்தால் தந்தையை புறக்கணிப்பவர்கள். அலட்சியம் செய்பவர்கள், தந்தைக்கு அவமரியாதை செய்பவர்கள், சமுதாயத்தில் இன்று பரவலாகப் பார்க்க முடிகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் :

«رِضَى الرَّبِّ فِي رِضَى الوَالِدِ، وَسَخَطُ الرَّبِّ فِي سَخَطِ الْوَالِدِ»

அல்லாஹ்வின் பொருத்தம் தந்தையின் பொருத்தத்திலே. அல்லாஹ்வின் வெறுப்பு தந்தையின் வெறுப்பிலே இருக்கின்றது.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி,எண் : 1899, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

3.  உங்களுடைய பிள்ளைகளை வறுமையை பயந்து கொலை செய்யாதீர்கள்.நாம் உங்களுக்கு உணவளிக்கிறோம். அவர்களுக்கும் உணவளிக்கிறோம். (அல்குர்ஆன் 6 : 151)

அப்படி என்றால் இந்த பேமிலி பிளானிங் எங்கிருந்து வந்தது? வாழ்க்கையிலே இன்று,ஒரு பிள்ளை போதும், இரண்டு பிள்ளை போதும் என்று நிறுத்திக் கொள்ளக் கூடிய கலாச்சாரம் எங்கிருந்து வந்தது?

யாரை பயந்தீர்கள்?யாருடைய அச்சுறுத்தல்? என்ன கலாச்சாரம் இது?

இதே அத்தியாயத்தின் அடுத்த வசனங்களை கவனியுங்கள். முதலில் ஆதாரங்களை பார்ப்போம். பின்பு மற்ற விஷயங்களைப் பார்ப்போம்.

அல்லாஹ் சொல்கிறான் : ஸூரத்துல் அன்ஆம் உடைய 137-ஆவது வசனம்,

وَكَذَلِكَ زَيَّنَ لِكَثِيرٍ مِنَ الْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَادِهِمْ شُرَكَاؤُهُمْ لِيُرْدُوهُمْ

இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன; அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன. (அல்குர்ஆன்6:137)

இன்று முஸ்லிம்கள் மறைமுகமாக ஷைத்தானுக்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள். வறுமையை பயந்து,குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என்பதை பயந்து. இவர்கள் ரப்பாக ஆகிவிட்டது போன்று.

அல்லாஹ் சொல்கிறான் :

مَا أُرِيدُ مِنْهُمْ مِنْ رِزْقٍ وَمَا أُرِيدُ أَنْ يُطْعِمُونِ (57) إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ

அவர்களிடத்தில் நான் ஒரு பொருளையும் கேட்கவில்லை. அவர்கள் எனக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்குமாறும் நான் கோரவில்லை. (ஆகவே,)

(நபியே! நீர் கூறுவீராக:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும், அசைக்க முடியாத பலசாலியுமாவான். (அல்குர்ஆன் 51 : 58)

கல்வி செலவு அதிகமாகி விட்டது. மருத்துவ செலவு அதிகமாகி விட்டது என்று பயப்படுகிறார்கள்.

அல்லாஹ்வின் அடியார்களே! நாம் செய்யக்கூடிய வீணான செலவுகளை, உணவுக்காக, உடைக்காக, பயணங்களுக்காக, இந்த செலவுகளை எல்லாம் நாம் குறைத்துக்கொண்டு விட்டாலே நம்மில் ஒவ்வொருவரும் பத்து பிள்ளைகளை படிக்க வைக்கலாம்.

ஆடையிலே வீண் விரயம், உணவில் வீண் விரயம், நம்முடைய பயணங்களில் வீண் விரயம், நாம் ஆசைப்படக் கூடிய அற்பமான வஸ்துகளை வாங்குவதில் வீண்விரயம்,

பிறகு சொல்வது என்ன?பிள்ளைகளை அதிகம் பெற்றால் படிக்க வைக்க முடியாது என்று. முட்டாள்கள்! ஏமாற்றிக் கொள்கிறார்கள். அற்ப காரணங்களைக் கூறி அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். ஷைத்தானின் ஊசலாட்டங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கிறார்கள்.

அடுத்து இதே அத்தியாயத்தில் 140-ஆவது வசனம், ரப்பு சொல்கிறான் :

قَدْ خَسِرَ الَّذِينَ قَتَلُوا أَوْلَادَهُمْ سَفَهًا بِغَيْرِ عِلْمٍ وَحَرَّمُوا مَا رَزَقَهُمُ اللَّهُ افْتِرَاءً عَلَى اللَّهِ قَدْ ضَلُّوا وَمَا كَانُوا مُهْتَدِينَ

எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை.(அல்குர்ஆன் 6 : 140)

பிள்ளைகளைப் பெற்றால் எப்படி வளர்ப்பது? பிள்ளைகள் அதிகமாகிவிட்டால் நான் என்ன செய்வேன் என்று அல்லாஹ்வின் மீது பொய் சொல்கிறார்கள். நான் இவர்களையா உணவளிக்க சொன்னேன் ?வழிகெட்டு விட்டார்களே!

இதை அல்லாஹ் சொல்கிறான். உங்களில் உள்ள ஆலிம் சொல்வதில்லை. இன்று ஆலிம்கள் மார்க்கத்தை சொன்னால் அவர்களுக்கு பெயரென்ன? இவர்களுக்கெல்லாம் என்னங்க அறிவு இருக்கிறது? இவர்களுக்கு பொது அறிவு கிடையாது. இவர்களுக்கெல்லாம் சமுதாய அறிவு கிடையாது.

அடுத்து ஸுரத்துல் இஸ்ரா 31-வது அத்தியாயம், அல்லாஹ் சொல்கிறான் :

وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةَ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُهُمْ وَإِيَّاكُمْ إِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْئًا كَبِيرًا

நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம். அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். (அல்குர்ஆன் 17 : 31)

நம்மில் சிலர் எண்ணிக் கொள்ளலாம்:குழந்தை பிறந்ததற்கு பிறகு கொல்வதை மட்டும் தான் இந்த வசனம் எடுத்துக்கொள்ளும் என்பதாக. அதுவும் இந்த வசனத்தில் அடங்கும். அதுபோன்று, பிள்ளையை பெறுவதற்கு உண்டான உடல் வலிமை இருந்தும் வறுமையை பயந்து பெறுவதை நிறுத்திக் கொள்வது, அதுவும் இந்த வசனத்திலே அடங்கும். சட்டம் பொதுவானது தான்.

இந்த உம்மத் பெருக வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகின்றான். அல்லாஹ்வுடைய தூதர் விரும்புகிறார்கள். இந்த உம்மத் பெருகக் கூடாது என்று ஷைத்தான் விரும்புகிறான்.யார் பேமிலி ப்ளானிங் செய்கிறார்களோஅவர்கள் இதற்கு துணை போகிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதருடைய சில ஹதீஸ்களை பார்ப்போம்.

ரசூல் (ஸல்)அவர்களை வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரிடத்தில் ஒரு மனிதர் வருகின்றார். யா ரசூலுல்லாஹ்! எனக்கு கனிமத்திலே அழகான ஒரு பெண் கிடைத்தாள், அல்லது எனக்கு பெண் பேசும் போது நல்ல வம்சம் உள்ள நல்ல அழகான ஒரு பெண் கிடைத்திருக்கிறாள். ஆனால் அந்த பெண்ணை பற்றி அவள் குழந்தை பெற மாட்டாள் என்று சொல்லப்படுகிறது. நான் அவளை மணமுடித்துக் கொள்ளட்டுமா?

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:வேண்டாம் என்று.

பின்பு இரண்டாவது முறையாக வந்து கேட்கிறார். வேண்டாம் என்று சொன்னார்கள். பின்பு மூன்றாவது முறையாக வந்து கேட்கின்றார்.

அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்.

«تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأُمَمَ»

நேசிக்கக் கூடிய குழந்தை பெற்றுத் தரக்கூடிய பெண்களை மணம் முடியுங்கள். நான் மறுமையில் நீங்கள் அதிகமாக இருப்பதை கண்டு நான் மன மகிழ்ச்சி அடைவேன். சந்தோஷப்படுவேன்.

அறிவிப்பாளர் : மஃகல் இப்னு யசார் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூத்,எண் : 2050, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

யோசித்துப் பாருங்கள்! யார் இந்த சிந்தனையை நமக்குள் விதைப்பது? மாற்றார்களுக்கு சொல்ல வேண்டிய நாம் இன்று நமக்கு சொல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

முஸ்லிம்களிடையே சிந்தனை மிக மட்டரகமாக ஆகிவிட்டது. படிப்பு கல்வியின் பெயரால், சமுதாய வளர்ச்சி என்ற பெயரால், ஷைத்தானின் சாபக்கேடான சிந்தனைகள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கின்றன.

இன்னொரு ஹதீஸைப் பாருங்கள்:அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே கேட்கப்படுகிறது. யா ரசூலுல்லாஹ்! நாங்கள் வணக்க வழிபாட்டுக்காக எங்களை முற்றிலும் ஒதுக்கி கொள்ளட்டுமா என்று?

«تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ، إِنِّي مُكَاثِرٌ الْأَنْبِيَاءَ يَوْمَ الْقِيَامَةِ»

அல்லாஹ்வுடைய தூதர் தடுத்தது மட்டுமல்ல. நீங்கள் அதிகம் குழந்தை பெற்றுத் தரக்கூடிய, உங்களை நேசிக்கக்கூடிய பெண்ணை மணம் முடியுங்கள். மறுமை நாளிலே நான் உங்களை கொண்டு நான் சந்தோஷம் அடைவேன்.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத்,எண் : 12613.

மேலும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

«النِّكَاحُ مِنْ سُنَّتِي، فَمَنْ لَمْ يَعْمَلْ بِسُنَّتِي فَلَيْسَ مِنِّي، وَتَزَوَّجُوا، فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأُمَمَ، وَمَنْ كَانَ ذَا طَوْلٍ فَلْيَنْكِحْ، وَمَنْ لَمْ يَجِدْ فَعَلَيْهِ بِالصِّيَامِ، فَإِنَّ الصَّوْمَ لَهُ وِجَاءٌ»

திருமணம் என்னுடைய வழிமுறை. யார் என்னுடைய வழிமுறையை பின்பற்ற வில்லையோ அவர் என்னை சேர்ந்தவர் அல்ல. திருமணம் முடியுங்கள். நீங்கள் அதிகமாக இருப்பதைக் கொண்டு நான் மற்ற உம்மத்திடம் பெருமையாக மறுமையிலே பேசுவேன். யாருக்கு திருமணம் முடிக்க சக்தி இருக்குமோ அவர் திருமணம் முடிக்கட்டும். யாருக்கு முடியவில்லையோ அவர் நோன்பு வைக்கட்டும். நோன்பு அவருடைய ஆசையை தடுக்கும்.

அறிவிப்பாளர் : ஆயிஷாரழியல்லாஹுஅன்ஹா, நூல் : இப்னு மாஜா,எண் : 1846, தரம் : ஹசன் (அல்பானி)

மேலும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

அதிகம் குழந்தை பெறக்கூடிய மனைவிகளை முடியுங்கள். நீங்கள் குழந்தைகளை, சந்ததிகளை உருவாக்குங்கள். மறுமை நாளிலே நான் உங்களைக் கொண்டு சந்தோஷப்படுவேன். உங்களுக்கு குறைமாதத்தில் பிறந்திருக்கக்கூடிய ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி,அதுவும் என் உம்மத்தில் கணக்கெடுக்கப்படும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிக அதிகமான விஷயங்களை நமக்கு சொல்லியிருக்கின்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

மறுமை நாளிலே மக்களெல்லாம் அதிகமாக வரும்போது ஹல்லுல் கவ்சரில் நான் உங்களுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். நீங்கள் குறைவாக இருந்து என்னை அவமானப்படுத்தி விடாதீர்கள். என்னை கேவலப்படுத்தி விடாதீர்கள்.

அறிவிப்பாளர் : அபூ உமாமாரழியல்லாஹுஅன்ஹு, நூல் : மஜ்மஉ சவாயித்,எண் : 5634.

இத்தகைய ஹதீஸ்களை ஆயத்துக்களை எல்லாம் கேட்டதற்கும் பிறகு கூட,ஒரு முஸ்லிமுடைய உள்ளம் தன்னுடைய சந்ததிகளை பெருக்குவதற்கு வரவில்லை என்றால், காஃபிர்களின் சூழ்ச்சிகளால், அவர்களின் தவறான பிரச்சாரங்களால், அவனுடைய மனம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றால் அவன் தன்னுடைய ஈமானை சரி செய்து கொள்ளட்டும்.

குழந்தைகள், பேரப்பிள்ளைகள் அதிகமாகுவது அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்று.

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.(அல்குர்ஆன் 25 : 74)

அதிகமான சந்ததிகளை கொண்டு,அதிகமான பிள்ளைகளை கொண்டு மகிழ்ச்சி பெறுவது அல்லாஹ்வுடைய நிஃமத்துகளில் ஒன்று.

ரப்புல் ஆலமீன் சொல்கிறான்:

وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا وَجَعَلَ لَكُمْ مِنْ أَزْوَاجِكُمْ بَنِينَ وَحَفَدَةً وَرَزَقَكُمْ مِنَ الطَّيِّبَاتِ أَفَبِالْبَاطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَتِ اللَّهِ هُمْ يَكْفُرُونَ

இன்னும், அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்; உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும்; பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி, உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான்; அப்படியிருந்தும், (தாமே கற்பனை செய்து கொண்ட) பொய்யானதின் மீது ஈமான் கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடையை இவர்கள் நிராகரிக்கிறார்களா? (அல்குர்ஆன் 16 : 72)

பிள்ளைகள் அதிகமாக இருப்பது, பிறகு பேரப்பிள்ளைகள் அதிகமாக இருப்பது அல்லாஹ்வுடைய நிஃமத் என்று சொல்கிறான்.

குறைவான பிள்ளைகள் பெற்றுக் கொண்டவர்கள் யாராவது நிறைய பிள்ளைகள் இருந்தால் அவர்களைப் பார்த்து, எப்படி நினைக்கிறார்கள் என்றால், என்ன வசவசனு பிள்ளைய பெத்து வச்சிருக்கீங்க?

என்ன மாதிரியான வார்த்தைகள்? என்ன மாதிரியான சிந்தனைகள்? இவர்கள் மீண்டும் ஒருமுறை தங்களுடைய கலிமாவை சொல்லிக் கொள்ளட்டும். மீண்டும் ஒருமுறை தங்களுடைய ஷஹாதாவை இவர்கள் புதுப்பித்துக் கொள்ளட்டும்.

உலமாக்கள் எழுதுகிறார்கள்:ஒருவன் தாடி வைத்திருக்கிறார் என்றால்,தாடி பெரிதாக இல்லாமல் ஒரு சில முடிகள் மட்டும் இருந்தால்,அவரைப் பார்த்து, என்ன உனது தாடி ஆட்டு தாடி மாதிரி இருக்கிறது என்று பரிகாசமாக பேசினால், அவன் முர்தத் ஆகிவிடுவான். அவன் மார்க்கத்தை விட்டு வெளியேறி விடுவான்.

ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னத்தை பரிகாசம் செய்தால் அவன் முர்தத் ஆகிவிடுவான் என்பது இஸ்லாத்தின் அடிப்படை.

அல்லாஹ்வின் அடியார்களே! இன்று பாருங்கள்:நம்முடைய தலைமுறை, முந்திய தலைமுறை, நம்முடைய முப்பாட்டன்கள் பல திருமணங்கள் செய்தார்கள். அதிகமான சந்ததிகளை பெற்றார்கள்.

பிறகு நம்முடைய பாட்டன் அவர்களிலும் அடுத்த ஒரு தலைமுறையும் வந்தது. பிறகு பலதார மணம் விடுபட்டது.

பிறகு நம்முடைய தந்தைமார்கள் தங்களுடைய பிள்ளைகளை ஒரு அளவோடு நிறுத்த ஆரம்பித்தார்கள்.

இப்போது அது எப்படி மாறி இருக்கிறது? நமது நாட்டில் நாம் இன்னும் கவனமாக நமது மார்க்கத்தை பின்பற்ற ஆரம்பிக்க வில்லை என்றால், நம்முடைய மார்க்கத்தில் அல்லாஹ் ஹலாலாக்கிய பல நூறு சட்டங்கள் நமக்கு ஹராமாகப்பட்டுவிடும்.

இதை பிற முஷ்ரிக்குகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த அரசியல்வாதிகளுடைய, அரசாங்கத்துடைய பேச்சுகளைக் கேட்டுக் கொண்டு நீங்கள் உங்களது பிள்ளைகளை பெறுவதை கட்டுப்படுத்தி கொள்ளாதீர்கள் என்று அவர்களுக்கு சொல்ல வேண்டிய நாம், இன்று அதை நமக்குச் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகி இருக்கின்றோம் என்றால், அடுத்து என்ன ஆகும் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்!

அதனால் என்ன ஆகிவிடப் போகிறது?என்பதை நீங்கள் யோசிக்கலாம். அல்லது உங்களில் சிலர் யோசிக்கலாம். பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வுடைய கட்டளைகள் புறக்கப்படும் போது, அல்லாஹ்வுடைய சட்டங்கள் எதிர்க்கப்படும் போது, அதற்கு மாற்றமான திட்டங்களை தீட்டும் போது, அல்லாஹ்வுடைய அதாபு –வேதனை கடுமையாக இருக்கும்.

அல்லாஹ் இந்த உம்மத்திற்கு பலத்தை கொடுத்திருக்கின்றான் என்றால் இந்த உம்மத் அதிகமாக இருப்பதைக் கொண்டு,

وَاذْكُرُوا إِذْ كُنْتُمْ قَلِيلًا فَكَثَّرَكُمْ

நீங்கள் குறைவாக இருந்ததை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ் உங்கள் ஜனத்தொகையை அதிகப்படுத்துகிறான். (அல்குர்ஆன் : 7:86)

ஒரு முஸ்லிம் வறுமையை பயந்தோ, மாற்றார்களின் பிராச்சார தாக்கத்தைப் பயந்தோ, தன்னை பேமிலி பிளானிங் செய்து கொள்வான் என்றால், அல்லது குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்துவான் என்றால் அவன் மறைமுகமாக அல்ல, வெளிப்படையாக ஷைத்தான்களுக்கும் ஷைத்தானின் ஏஜண்டுகளுக்கும் உதவி செய்கிறான். அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு எதிராக இருப்பதற்கு அவனே போதுமானவன்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம் அனைவருடைய பாவத்தை மன்னித்து, அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுபட்டு நடக்கக் கூடிய, அல்லாஹ்வுடைய இஸ்லாமை பேணி நடக்க கூடிய, உள்ளத்தால் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை ஏற்றவர் போன்று, உடலாலும் உறுப்பாலும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை செயல்படுத்தும் நல்ல முஸ்லிம்களாக ஆக்கியருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/