HOME      Khutba      சகிப்போம்! சாதிப்போம்!! | Tamil Bayan - 638   
 

சகிப்போம்! சாதிப்போம்!! | Tamil Bayan - 638

           

சகிப்போம்! சாதிப்போம்!! | Tamil Bayan - 638


بسم الله الرحمن الرّحيم

சகிப்போம் சாதிப்போம்

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்களின் மீதும், ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தைக் கொண்டு உபதேசம் செய்தவனாக, அல்லாஹ்வை பயந்து வாழுமாறு அல்லாஹ்வின் சட்டங்களை பின்பற்றி, ரசூலுல்லாஹ் உடைய சுன்னாவை பின்பற்றி வாழுமாறு உபதேசம் செய்தவனாகஇந்த குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம் அனைவரையும் அவனுக்கு விருப்பமான நற்குணங்களைக் கொண்டு அலங்கரிப்பானாக. அவன் விரும்பாத, வெறுக்கின்ற ஒவ்வொரு தீய கெட்ட குணங்களில் இருந்து என்னையும், உங்களையும், நமது சமுதாயத்தையும் அல்லாஹு தஆலா பரிசுத்தப்படுத்துவானாக! ஆமீன்.

இறைநம்பிக்கை என்ற ஈமானோடு சில குணங்கள், சில பண்புகள், நம்மிடம் இருக்க வேண்டும். அந்த ஈமான் அந்தப் பண்புகளோடு, அந்த குணங்களோடு, இருக்கும்போதுதான் அந்த ஈமான் என்ன ஒரு புரட்சியை செய்ய வேண்டுமோ, என்ன நன்மைகளை கொடுக்க வேண்டுமோ, அந்த ஈமானால் என்னென்ன நற்பலன்களை நாம் அடைய வேண்டுமோஅவை எல்லாம் சாத்தியமாகும்.

அப்படி இல்லாமல் ஈமானோடு அந்த நற்குணங்கள் இல்லையென்றால் அது என்ன மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமோ அந்த மாற்றங்களை ஏற்படுத்தாது. என்ன புரட்சிகளை இதற்கு முந்தைய சமுதாயத்தில் ஈமான் செய்ததோ அந்த புரட்சிகளை செய்யாது.

அது ஒரு பலவீனமான நோயாளியைப் போன்று ஆகிவிடும். எதையும் செய்ய சக்தியற்ற நிராயுதபாணியான வீரனைப் போன்று அது நின்றுவிடும். தன்னுடைய எதிரியை எதிர்ப்பதற்கு சக்தி இல்லாத ஒரு போர் வீரனைப் போல அது பலவீனப்பட்டு விடும்.

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா ஈமானை வலியுறுத்துகின்ற அதேநேரத்தில், அல்குர்ஆனில் ஈமானோடு சில முக்கியமான பண்புகளை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறான்.

முஃமின்கள் எத்தகைய பண்புகள் உடையவர்களாக, குணங்கள் உடையவர்களாக இருக்க வேண்டும்? ஈமானுக்கு எந்தெந்த குணங்கள் அவசியம்? என்பதை அல்லாஹ் தஆலா வலியுறுத்துகிறான்.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுன்னாவின் மூலமாகவும், அவர்களுடைய வாழ்க்கையின் மூலமாகவும் நமக்கு அதை வாழ்ந்து காட்டினார்கள். செயல்படுத்தி காட்டினார்கள்.

அத்தகைய முக்கியமான பண்புகளில் ஒன்று தான் ஸப்ரு என்பது. சகித்தல், பொறுமையாக இருத்தல், உறுதியாக இருத்தல், நஃப்ஸை அடக்கிக் கொள்ளுதல், கட்டுப்பாடோடு இருத்தல்.

உணர்ச்சிகளுக்கு, நம்முடைய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய ஆசைகளை புறக்கணித்து, அல்லாஹ்வுடைய கட்டளைகளை முன்னிறுத்தி வாழுகின்ற, சோதனைகளில் சகிப்போடு இருந்து, புலம்பாமல், கதறாமல், அழாமல், தன்னுடைய விதியை நொந்து கொள்ளாமல், நிராசையாகி விடாமல், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை உள்ளவனாக இருத்தல்.

இதெல்லாம் இந்த பொறுமையினுடைய அம்சங்களில் உள்ளது. இந்த ஸப்ரு நமக்கு மிக முக்கியமான ஒன்று. முஃமின்களுக்கு மிக முக்கியமான ஒன்று.

அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா அல்குர்ஆனில் 90 -க்கும் மேற்பட்ட இடங்களில் பொறுமையை வலியுறுத்திக் கூறுகிறான். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா தொழுகை என்ற மிக உயர்ந்த வணக்கத்தோடு தொடர்புபடுத்தி கூறுகின்ற குணங்களில் மிக முக்கியமான குணமாக பொறுமை இருக்கிறது.

அடுத்ததாக,நம்முடைய மார்க்க சட்டங்களில், அது கட்டளைகளாக இருக்கட்டும், அல்லது விட வேண்டிய தடை உத்தரவுகளாக இருக்கட்டும், இவை அனைத்தோடும் இந்த பொறுமை சம்பந்தப்படுகிறது.

அறிஞர்கள் பொறுமைக்கு நாம் புரிவதற்கு மிக இலகுவாக விளக்கம் சொல்கிறார்கள்:

الصبر على الطاعة ، الصبر عن المعصية ، الصبر با المصائب

1. வணக்க வழிபாட்டில் பொறுமை. அதாவது,அல்லாஹ்வை நான் வணங்குவேன். எனக்கு ஏற்படக்கூடிய சோர்வுகளை, வலிகளைநான் தாங்கிக் கொள்வேன்.

சில நேரங்களில் வணக்க வழிபாடு செய்யும் போது களைப்பு சோர்வு ஏற்படும். அதையெல்லாம் தாங்கி வணக்க வழிபாட்டில் நான் உறுதியாக இருப்பேன்.

ஷைத்தான் நஃப்ஸுக்கு சில எண்ணங்களை ஏற்படுத்துவான். கால் வலிப்பதை போன்று தெரியும். உடல் சோர்வாக இருப்பதை போன்று தெரியும். அதை புறக்கணித்து அந்த வணக்க வழிபாட்டுக்கு நாம் செல்லும்பொழுது அல்லாஹ் பேரின்பத்தை நமக்கு கொடுப்பான்.

அல்லாஹ் எனக்கு கடமையாக்கிய கடமைகளை செய்வதில் உறுதியாக இருப்பது. இது முதல் பொறுமை.

இரண்டாவது, அல்லாஹ் தடுத்த பாவங்கள் ஷிர்க், நிஃபாக், குஃப்ர், பெரும்பாவங்கள், சிறு பாவங்கள் இப்படியாக இந்தப் பாவங்களை விட்டு தன்னை விலக்கிக் கொள்வதில் பொறுமையாக இருப்பது.

அதாவது இந்த பாவங்களை நாம் நெருங்காமல் நம்முடைய நஃப்ஸை கட்டுப்படுத்தி அதில் உறுதியாக இருப்பது.

பாவத்தில் விழாமல் நாம் இருப்பதற்கு நமக்கு பொறுமை தேவை. நன்மையில் நாம் உறுதியாக இருப்பதற்கு நமக்கு பொறுமை தேவை.

மூன்றாவது, சோதனையில் பொறுமையாக இருப்பது.

மரணமாக இருக்கட்டும், வியாபார நஷ்டமாக இருக்கட்டும், இன்னபிற செய்தியாக இருக்கட்டும், அவற்றில் நாம் விதியை குறைகூறி விடாமல், அல்லாஹ்வுடைய கருணையிலிருந்து நிராசையாகி விடாமல், அல்லாஹ்வை புகழ்ந்து, அல்லாஹ்வுடைய விதியை ஏற்றுக்கொண்டு, அமைதி காப்பது.

இப்படி மூன்று வகையான பொறுமைகள் உள்ளன. ஆகவே மார்க்கத்தில் மனிதருடைய பொறுமை இந்த மூன்றில் ஒன்றாகத்தான் இருக்கும்.

ஒன்று, அவனை நோக்கி அல்லாஹ்வுடைய ஒரு ஃபர்ளான கட்டளை இருக்கும். அல்லது ஒரு காரியத்தை செய்யாதே என்ற தடை இருக்கும். இதை செய்வதற்கு அவனது நஃப்ஸ் விரும்பும். ஆனால் அது அவனுக்கு செய்யக்கூடாது என்று அல்லாஹ் உடைய கட்டளையாக இருக்கும். அல்லது வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏற்படுகின்ற ஏற்றத்தாழ்வுகள் சோதனைகளாக இருக்கும்.

இந்த எல்லா நிலைகளிலும் ஒரு அடியான் அல்லாஹ்விடத்தில் விருப்பம் உடையவனாக ஆக வேண்டுமென்றால் அவனிடத்தில் பொறுமை இருந்தால் தான் முடியும்.

அதுபோன்று இந்த பொறுமையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வதற்கு சூரத்துல் அஸ்ரை படித்துப்பாருங்கள்.

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா எல்லா மக்களும் நஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று கூறி, வெற்றி பெற்றவர்கள், நஷ்டத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டவர்கள் யார்? என்று அல்லாஹ் கூறுகின்றான்.

وَتَوَاصَوْا بِالصَّبْرِ

பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டவர்கள். தானும் பொறுமையாக இருந்து, பிறரையும் பொறுமையாக இருப்பதற்கு ஏவியவர்கள். (அல்குர்ஆன் 103:3)

அதுபோன்று அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா தன்னுடைய நபிமார்களுக்கு எத்தனையோ பல கட்டளைகளை கொடுத்திருக்கிறான்.

அது போன்று நம்முடைய நபியைப் பார்த்து நேரடியாக பல விஷயங்களை அல்லாஹு தஆலா நபியே! நீங்கள் இதை செய்யுங்கள்;நபியே!நீங்கள் இதை செய்யாதீர்கள் என்று பல விஷயங்களை அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.

அவற்றில் பெரும்பாலான இடங்களில் மிகவும் வலியுறுத்தி நம்முடைய நபிக்கு சொல்லக்கூடிய கட்டளை:

فَاصْبِرْ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ

நபியே!பொறுமையாக இருங்கள். நபியே! உறுதியாக இருக்கவும். அல்லாஹ்வுடைய வாக்கு உண்மைதான். (அல்குர்ஆன் 30 : 60)

وَاصْبِرْ عَلَى مَا يَقُولُونَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِيلًا

(நபியே!) அவர்கள் (உம்மைப்பற்றிக் குற்றங்குறைகள்) கூறுவதைச் சகித்துக் கொண்டு, கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி வெறுத்திருப்பீராக. (அல்குர்ஆன் 73 : 10)

இப்படி பல இடங்களில் நபியை நோக்கி நேரடியாக அல்லாஹ் பொறுமையாக இருங்கள்! பொறுமையாக இருங்கள்! என்று கூறுகின்றான்.

فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ

உம்முடைய இறைவனுடைய கட்டளை,நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். எனவே நீங்கள் பொறுமையாக இருங்கள். (அல்குர்ஆன் 68:48)

وَاصْبِرْ وَمَا صَبْرُكَ إِلَّا بِاللَّهِ

நபியே! பொறுமையாக இருக்கவும். அல்லாஹ்வைக் கொண்டு, அல்லாஹ்விற்காக பொறுமையாக இருங்கள். (அல்குர்ஆன் 16 : 127)

உங்களால் தாங்க முடியாது என்று சொல்கிறீர்களா? அல்லாஹ்வைக் கொண்டு பொறுமையைத் தேடுங்கள். அல்லாஹ்விடத்தில் பொறுமையை தேடி உங்களை நீங்கள் பொறுமைப்படுத்துங்கள்.

சூரா லுக்மானை நீங்கள் படித்திருக்கலாம். லுக்மான் தன் மகனுக்கு செய்த அறிவுரைகளை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முக்கித்துவம் கொடுத்து சொல்கிறான்.லுக்மான் தனது மகனுக்கு கூறிய அந்த உபதேசங்களில் மிகவும் ஒரு முக்கியமான உபதேசம், அல்லாஹ்விற்கு பிடித்த உபதேசம்.

يَابُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ

என்னருமை மகனே! ‘‘தொழுகையை நிலைநிறுத்து, நன்மையான காரியங்களைக் கொண்டு ஏவி, பாவமான காரியங்களில் இருந்து (மனிதர்களை) விலக்கி வா. உனக்கேற்படும் சிரமங்களைப் பொறுமையுடன் நீ சகித்துக்கொள். நிச்சயமாக இது எல்லா காரியங்களிலும் வீரமிக்கச் செயலாகும். (அல்குர்ஆன் 31 : 17)

வசனத்தின் கருத்து : மகனே! தொழுகையை நிலை நிறுத்தி தொழுகையில் உறுதியாக இரு! நன்மையை ஏவி கொண்டே இரு! தீமையிலிருந்து மக்களைத் தடுத்துக் கொண்டே இரு!

யார் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்று இருப்பதற்கு இந்த மார்க்கத்தில் முடியாது. கரம் பிடித்து தடுக்க வேண்டும். சொல்லால் தடுக்க வேண்டும். எனக்கு என்ன இருக்கிறது அவன் கெட்டுப் போனால் என்று விலகிச் செல்ல முடியாது. நன்மையை ஏவிக் கொண்டே இருக்க வேண்டும். அது போன்று தீமையிலிருந்து தடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

உன்னுடைய மார்க்க விஷயங்களில் யாராவது தொந்தரவு கொடுத்தாலும், அல்லது உன்னுடைய உலக காரியங்களில் உனக்கு அல்லாஹ்வின் புறத்திருந்து சோதனை ஏற்பட்டாலும், உனக்கு ஏற்படுகின்ற எல்லா சோதனைகளிலும் நீ பொறுமையாக இரு.

இது தான் வீரம். தொழுகைக்கு வருவது வீரம். தொழுகையில் உறுதியாக இருப்பது வீரம். நன்மையை ஏவுவது, தீமையை தடுப்பது, பொறுமையாக இருப்பது வீரம் என்று தன்னுடைய மகனுக்கு லுக்மான் அலைஹிஸ்ஸலாம் கூறிய உபதேசத்தை அல்லாஹு தஆலா சிறப்பிட்டு சொல்வதில் இருந்து இந்த பொறுமை அல்லாஹ்விடத்தில் எவ்வளவு முக்கியமான ஒரு இடத்தைப் பெறுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதுபோன்றுதான் அல்லாஹு தஆலா நமக்கு ஏவி இருக்கக்கூடிய கட்டளைகளை குறித்து அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2:153)

அல்லாஹ்வுடைய உதவி தேவை என்றால் நீங்கள் அதை பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் தேடுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

தொழுகையைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன்2 : 153)

மேலும் அல்லாஹ் சொல்கின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

நம்பிக்கையாளர்களே! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். (எதிரிகளை விட) நீங்கள் அதிகம் சகித்துக் கொள்ளுங்கள். (எதிரியை எதிர்க்க) எந்நேரமும் தயாராக இருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நீங்கள் (இம்மையிலும் மறுமையிலும்) வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 3 : 200)

முஃமின்களே! பொறுமையாக இருங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் பொறுமையாக இருங்கள். சமூக வாழ்க்கையில் பொறுமையாக இருங்கள். ஒருவர் ஒருவருக்கு பொறுமையை ஏவுங்கள். ஒருவரை ஒருவர் மிஞ்சி பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். இது நாம் சொல்லுகிறோம் அல்லவா? நான் எவ்வளவு தான் பொறுக்கிறது. நான் தான் பொறுக்கனுமா? ஏன் அவன் பொறுக்க மாட்டானா? அல்லாஹ் சொல்கிறான்,

இன்று நாம் நினைக்கக்கூடிய ஒரு தப்பான நினைப்பு,பொறுமையால் நான் என்ன சாதிக்க முடியும்? பொறுமையாக இருப்பதால் நாம் இழந்துவிடுவோமா? என்றால் அப்படி இல்லை.

பொறுமையாளர்கள் அல்லாஹ்விடம் மிகப் பெரிய பதவிக்குரியவர்கள். அவர்கள் மிகப் பெரிய வெற்றியாளர்கள். அல்லாஹ் அவர்களுக்கு தனது வாக்கை நிறைவு செய்வான்.

பொறுமை பல நன்மைகளை கொண்டது. பொறுமையால் இம்மையிலும், மறுமையிலும் நமக்கு கிடைக்கக்கூடிய நற்கூலிகளும் அல்லாஹ்வுடைய வாக்குறுதிகளும் ஏராளம்.

அவற்றில் சில முக்கியமான விஷயங்களை பார்ப்போம். முதலாவதாக, பொறுமையின் மூலமாக நாம் நம்முடைய ஈமானை நிறைவு செய்துகொள்ள முடிகிறது. பொறுமை எந்த அளவுக்கு நாம் கொண்டு வருவோமோ, அந்த அளவுக்கு நம்முடைய ஈமான் நிறைவுபெற்று கொண்டே இருக்கும். ஈமானுடைய உயர்வு, உறுதி நமக்கு ஏற்படும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

«الصَّبْرُ وَالسَّمَاحَةُ»

ஈமான் இறைநம்பிக்கை என்பது பொறுமையாக இருப்பதும், பெருந்தன்மையாக இருப்பதும் ஆகும்.

அறிவிப்பாளர் : அம்ரு இப்னு அபச ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 19435.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்:

الصبر نصف الإيمان

பொறுமை ஈமானுடைய ஒரு சம பாதியாகும்.

அதுமட்டுமல்ல, அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பல இடங்களில் பொறுமையை வலியுறுத்தும் போது,

يا أيها الذين آمنوا

நம்பிக்கையாளர்களே! என்று அல்லாஹ் சொல்வதிலிருந்து பொறுமை என்பது ஈமானோடு நேரடியாகத் தொடர்புடைய ஒரு குணம் என்பது புரிகிறது.

ஆகவே யார் எந்த அளவுக்கு பொறுமையை தன்னிடத்தில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வாரோ அல்லாஹு தஆலா அவரை அந்த அளவுக்கு ஈமானுடைய தரஜாவில் உயர்த்துவான்.

அதுபோன்று, அல்லாஹ்வுக்கு முன்னால் பணிவது, அல்லாஹ்வை பயப்படுவது, அல்லாஹ்வுக்கு முன்னால் தன்னை சிறியவனாகவும், பணிந்தவனாகவும், பயந்தவனாகவும், அப்படியே உருகி அல்லாஹ்வுடைய அந்த நெருக்கத்தை பெறுவது இதற்கு மிக முக்கியமான குணமாக பொறுமை இருக்கிறது.

அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:

وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ

குர்பானி செய்வதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கிறோம். அல்லாஹ் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் மீது அவன் பெயரைக் கூறி குர்பானி செய்யுங்கள். ஆகவே, உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான். ஆதலால், அவன் ஒருவனுக்கே நீங்கள் முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடங்கள். உள்ளச்சம் உடையவர்களுக்கு (நபியே!) நற்செய்தி கூறுவீராக. (அல்குர்ஆன் 32 : 34)

الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَالصَّابِرِينَ عَلَى مَا أَصَابَهُمْ وَالْمُقِيمِي الصَّلَاةِ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ

அவர்கள் எத்தகையவர்கள் என்றால், அல்லாஹ்வுடைய திருப்பெயர் கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும். அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வார்கள். தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றில் தானமும் செய்வார்கள். (அல்குர்ஆன்22 : 35)

இன்று நம்மில் சிலர் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டால், அல்லாஹ்வுடைய சட்டத்தை சொல்லப்பட்டால், நீ மார்க்கம் பேசாதே, எனக்கு மார்க்கம் தெரியும் என்று சொல்கிறார்கள்.

இன்னும் சிலர், நான் அல்லாஹ்விடம் எப்படி பதில் சொல்லணும்? அது எனக்கு தெரியும். நீ சொல்லி தர வேண்டாம். (அஸ்தஃபிருல்லாஹ்)

இதெல்லாம் இறை நிராகரிப்பின் அடையாளம். உள்ளத்தில் நிஃபாக் -நயவஞ்சகம் கொட்டிக் கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளம். ஒரு முஃமின் அல்லாஹ்வைப் பற்றி நினைவு கூறப்பட்டால், அவன் தவறில் இருந்தாலும் கூட, எதிரே உள்ளவன் தவறாகவும், இவன் சொல்வது சரியாக இருந்தாலும் கூட, சரி பரவாயில்லை. அல்லாஹ்வுடைய பெயரை நீ சொல்லி அதற்குப் பிறகு அடுத்த மறு பேச்சுக்கு வழியில்லை.

ஒரு சம்பவத்தில் வருகிறது: ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒருவருக்கு உபதேசம் செய்து கொண்டிருந்த போது, ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். அவர் அந்த விஷயத்தை கண்டிப்பாக செய்திருந்தார். அப்போது அந்த மனிதர் சொல்கின்றார், அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் செய்யவில்லை என்று. ஈஸா அலைஹி வஸல்லம் சொன்னார்கள். நான் உன்னை நம்பி விட்டேன்.

இது நாம் அல்லாஹ்வுக்கு கொடுக்கக்கூடிய, அல்லாஹ்வின் பெயருக்கு கொடுக்கக்கூடிய மகத்துவம்.

இந்த நம்பிக்கை நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது? (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். அல்லாஹ் மன்னிக்க வேண்டும்.)

இரண்டவதாக, இந்த ஸபுரின் காரணமாக நமக்கு கிடைக்கக்கூடிய மிகப் பெரிய நன்மைகளில், நற்குணங்களில் ஒன்று,அல்லாஹு தஆலா நம்மை தக்வா உள்ள முஃமின்களாக ஏற்றுக் கொள்கிறான். அவர்களை உண்மையான முஃமின்கள் என்று ஏற்றுக் கொள்கிறான்.

அல்லாஹ் சொல்கிறான் :

وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ

வறுமையின் போதும், நோய் காலங்களிலும், அது போன்று யுத்த காலங்களிலும், யார் பொறுமையாக இருப்பார்களோ இவர்கள் தான் உண்மையான முஃமின்கள். (அல்குர்ஆன் 2:177)

வறுமை என்பதும், நோய் என்பதும், எதிரிகளால் தாக்கப்படுவதும்இதெல்லாம் முந்தைய காலங்களில் ஏற்பட்டது. நமக்கு மட்டும் ஏற்படக்கூடிய புதிய சோதனைகள் அல்ல. யார் பொறுமையோடு சகிப்போடு உறுதியோடு இருக்கிறார்களோ, அவர்களை உண்மையான முஃமின்கள் என்று அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் .

அதுபோன்று யார் பொறுமையோடு சகிப்புத்தன்மையோடு இருப்பார்களோஅவர்களுக்கு அல்லாஹு தஆலா ஹிதாயத்தை கொடுப்பான்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சோதனைகளைப் பற்றி சொல்லிக் கொண்டு வரும் பொழுது,

وَمَنْ يُؤْمِنْ بِاللَّهِ يَهْدِ قَلْبَهُ

யாருடைய உள்ளத்தில் ஈமான் இருக்குமோ, அவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை கொடுப்பான். (அல்குர்ஆன் 64:11)

இந்த வசனத்திற்கு முந்தி உள்ள வசனங்களைப் படித்தால், சோதனைகளைப் பற்றி அல்லாஹ் சொல்லிக் கொண்டே வருவான்.

அந்த சோதனையில் யார் பொறுமையாக இருக்கிறார்களோ, அல்லாஹ்வை நம்பி இருக்கிறார்களோ அவர்களுக்கு ஹிதாயத் கிடைக்கும்.

இதற்கு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் விளக்கம் சொல்கிறார்கள் :

هو الرجل تصيبه المصيبة فيعلم أنها من عند الله فيرضى ويسلم

ஒரு முஃமினுக்கு சோதனை ஏற்படுகிறது. அப்போது அவன் இந்த சோதனை அல்லாஹ்விடம் இருந்து வருகிறது என்பதாக அவன் உள்ளத்தில் உறுதியாக நம்புகிறான். அவன் அறிந்து கொண்டு அவன் பொருந்திக் கொள்கிறான். அல்லாஹ்வுடைய விதிக்கு முன்னால், தன்னை அப்படியே பணிய வைத்து விடுகிறான். அதை ஏற்றுக் கொள்கிறான்.

அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா அந்த முஃமீனை அவனுடைய உள்ளத்தில், ஈமானுடைய தடுமாற்றம் ஏற்படாமல், குழப்பம் ஏற்படாமல், அவனுடைய ஈமானில் எந்தவிதமான வஸ்வஸாக்கள் (மனக்குழப்பங்கள்) ஏற்படாமல் பாதுகாக்கிறான்.

செல்வ நேரத்தில் அல்லாஹ்வைப் புகழ்வது பெரிய விஷயமல்ல. வறுமையில் புகழவேண்டும். சுகமாக இருக்கும்போது அல்லாஹ்வைப் புகழ்வது பெரிய விஷயமல்ல, நோயில் இருக்கும்போது அல்லாஹ்வைப் புகழ்வது, கஷ்டத்தில் இருக்கும்போது அல்லாஹ்வைப் புகழ்வது.

முனாஃபிக்குகள் யார்? சந்தோஷமான, சுகமான நேரத்தில், வசதியான நேரத்தில் அல்லாஹ்வை புகழ்வார்கள். கஷ்டம் வந்து விட்டால் அல்லாஹ் எங்களை கைவிட்டு விட்டான் என்று சொல்வார்கள்.

முஃமீன்கள் அப்படி அல்ல. எல்லா நேரத்திலும் அவர்கள் அல்லாஹ்வை முன்னோக்கி இருப்பார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் :

«وَالصَّبْرُ ضِيَاءٌ»

பொறுமை என்பது ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய வெளிச்சம் ஆகும். (1)

அறிவிப்பாளர் : அபூ மாலிக் அல் அஷ்அரீ ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3517, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

எப்படி வெளிச்சத்தின் மூலமாக இருளில் நாம் நேர் வழியை தெரிந்து கொள்ள முடியுமோ, ஒரு முஃமினுக்கு பொறுமையின் மூலமாக அல்லாஹ் ஹிதாயத்தை கொடுக்கின்றான்.

எப்பேற்ப்பட்ட சோதனை ஏற்பட்டாலும் சரி, அந்த நேரத்தில் நாம் உணர்வுகளுக்கு, உணர்ச்சிகளுக்கு, நம்முடைய ஆசைகளுக்குமுன்னுரிமை கொடுக்காமல் அமைதியாக இருந்து, அடக்கமாக இருந்து, நாம் சகித்துக் கொண்டு, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நாம் யோசிக்கும் போது, கண்டிப்பாக அல்லாஹு தஆலா நமக்கு தெளிவான வழிகாட்டலை தருவான்.

எனவே தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பொறுமையை வெளிச்சம் என்பதற்கு ஒப்பிட்டு சொன்னார்கள்.

அப்படி பொறுமை இல்லை என்றால், ஒரு மனிதன் அவசரப்பட்டு உணர்வுகளுக்கு அடிமையாகி, ஆசைகளுக்கு அடிமையாகி, பழிவாங்கும் வெறுப்புணர்வுக்கு அடிமையாகி, பல காரியங்களை செய்து விடுவான்.

அவை அல்லாஹ்விற்கு பிரியம் அற்றதாக இருக்கும். அதனால் அல்லாஹ்வுடைய உதவி அவனுக்கு தடைப்பட்டு விடும்.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள் :

وجدنا خير عيشنا في الصبر

பொறுமையாக இருந்த போது தான் நாங்கள் சிறந்த வாழ்க்கையை பெற்றுக் கொண்டோம்.

இந்த பொறுமையின் மூலமாக அல்லாஹ் சுபஹானஹு வதஆலா நமக்கு இந்த பூமியில் வெற்றியைத் தருகிறான். இந்த பூமியில் கண்ணியத்தை தருகிறான்.

எதிரிகளால் நாம் தாக்கப்படும் போதும் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். எதிரிகளை எதிர்த்து தாக்கும் போதும் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். பொறுமை என்பது மிக விசாலமான ஒன்று.

ரப்புல் ஆலமீன் சூரத்துல் அஃராஃபில் கூறுகின்றான் :

وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا الَّتِي بَارَكْنَا فِيهَا وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ الْحُسْنَى عَلَى بَنِي إِسْرَائِيلَ بِمَا صَبَرُوا وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُ وَمَا كَانُوا يَعْرِشُونَ

இன்னும், எவர்களை இவர்கள் பலவீனமானவர்களென்று (கேவலமாக) எண்ணிக் கொண்டிருந்தார்களோ அந்த மக்களுக்கே மிக்க பாக்கியமுள்ள (அவர்களுடைய) பூமியின் கிழக்குப் பாகங்களையும், மேற்குப் பாகங்களையும் சொந்தமாக்கிக் கொடுத்தோம். ஆகவே, இஸ்ராயீலின் சந்ததிகள் (ஃபிர்அவ்னால் ஏற்பட்ட கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (அவர்களுக்கு) உங்கள் இறைவன் கொடுத்த வாக்கு மிக நல்ல விதமாகவே நிறைவேறிற்று. ஃபிர்அவ்னும் அவனுடைய மக்களும் கட்டியிருந்த மாட மாளிகைகளையும் (உற்பத்தி செய்திருந்த தோட்டம் துறவுகளையும்) நாம் தரைமட்டமாக்கி விட்டோம். (அல்குர்ஆன் 7 : 137)

இன்று பலர் ஸபுராக இருப்பதால் இழந்துவிடுவோமோ? இல்லாமல் போய் விடுவோமோ? என்று நினைக்கிறார்கள். யார் அவசரப்படுகிறார்களோ அவர்கள்தான் இழப்பார்கள். அவர்கள்தான் இல்லாமல் போவார்களே தவிர பொறுமையாளர்கள் அல்ல. பொறுமையாளர்கள் கண்டிப்பாக அல்லாஹ்வுடைய வாக்குறுதியின்படி இந்த பூமியை ஆள்பவர்களாக இருப்பார்கள்.

அதுமட்டுமல்ல அல்லாஹு தஆலா பொறுமையோடு இருக்கும் பொழுது நல்ல அறிஞர்களை கொடுத்து நமக்கு அல்லாஹ் வழிகாட்டுவான்.

சூரா ஸஜ்தாவில் அல்லாஹ் கூறுகிறான் :

وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ

நம் கட்டளைகளைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்த இஸ்ராயீலின் சந்ததிகளில் இருந்த ஒரு கூட்டத்தினரை அவர்களுக்கு வழி காட்டிகளாக அமைத்தோம். அவர்கள் நம் வசனங்களை முற்றிலும் உறுதியுடன் நம்பியவர்களாக இருந்தனர். (அல்குர்ஆன் 32:24)

இன்று நம்மை வழி நடத்துவதற்கு மார்க்கத்தின் மூத்த அறிஞர்கள் ஏன் முன்வருவதில்லை? நம்மிடத்தில் பொறுமையில்லை. நம்மிடத்தில் யகீன் இல்லை.

எனவே, மார்க்க கல்வியும் மார்க்கத்தின் ஆழமான ஞானமும் இல்லாத இயக்கத் தலைவர்கள் தான் இன்று சமுதாயத்தை வழி நடத்துகின்றார்கள்.

மார்க்கத்தை கற்றறிந்த கல்விமான்கள் உங்களுக்கு வழிநடத்த வேண்டும் என்றால் சமுதாயத்திற்கு அல்லாஹ் நிபந்தனை இடுகின்றான்; சமுதாயமே! நீங்கள் பொறுமையாளர்களாக இருக்க வேண்டும் என்று.

அது போன்று,பொறுமையின் மூலமாக நமக்கு கிடைக்கக் கூடிய பெரிய நற்பாக்கியங்களில் ஒன்று, அல்லாஹ்வுடைய ரஹ்மத்,பரக்கத்துகள்,இன்னும் நேரடியாக இறங்கக்கூடிய அந்த ஸலவாத் என்ற விசேஷமான கருணைகள் அவருக்கு கிடைக்கின்றன.

அல்லாஹ் கூறுகிறான் :

وَبَشِّرِ الصَّابِرِينَ

(நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.(அல்குர்ஆன் 2:155)

الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

(சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்ட போதிலும் ‘‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்'' எனக் கூறுவார்கள். (அல்குர்ஆன் 2:156)

أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ

அவர்கள் மீதுதான் அவர்களுடைய இறைவனிடமிருந்து (மன்னிப்பும்) புகழுரைகளும் கருணையும் ஏற்படுகின்றன. மேலும், அவர்கள்தான் நேரான வழியையும் அடைந்தவர்கள். (அல்குர்ஆன் 2:157)

அதுபோன்றுதான் பொறுமையாக இருக்கும் போது அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்முடைய பாவங்களை அந்தப் பொறுமையினால் மன்னித்து விடுகிறான்.

எத்தனை சிறிய பெரிய பாவங்களை நாம் செய்திருப்போம்! அல்லாஹ்வை தவிர யார் அறிய முடியும் நாம் செய்த பாவங்களை?

அந்த ஒவ்வொரு பாவத்தையும் நாம் அல்லாஹ்விற்காக பொறுமையாக இருக்கும் போது அல்லாஹ் நம்முடைய பாவங்களை நம்முடைய ஏட்டிலிருந்து அழித்துக் கொண்டே இருக்கிறான்.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உடைய ஒரு ஹதீஸை பாருங்கள். அதாவது சூரா அன்னிஸாவில்ரப்புல் ஆலமீன் சொல்லுகிறான் :

مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ

யார் எந்த ஒரு பாவத்தைச் செய்தாலும்அதற்கு அவருக்கு தண்டனை உண்டு. (அல்குர்ஆன் 4:123)

இந்த வசனத்தை கேட்ட உடன் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! நம்முடைய ஒவ்வொரு தவறுக்கும் நமக்கு தண்டனை உண்டா என்று? எங்களில் யார் தான் தவறு செய்யாதவர்கள்?

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அபூபக்ருக்கு விளக்கம் சொன்னார்கள் :

அபூபக்கரே! உங்களுக்கு களைப்பு ஏற்படுகிறதா இல்லையா? உங்களுக்கு கவலை ஏற்படுகிறதா இல்லையா? உங்களுக்கு உடல் சோர்வு ஏற்படுகிறதா இல்லையா? அவர்கள் ஆம் என்று சொன்னார்கள். இதெல்லாம் பாவத்திற்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய தண்டனைகள். இதன் மூலமாக அல்லாஹ் பாவங்களை போக்கி விடுகின்றான்.(2)

அறிவிப்பாளர் : அபூ பக்ர் இப்னு அபூ ஸுஹர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 71.

அல்லாஹ் எவ்வளவு விசாலமான கருணை உள்ளவன்! நம்முடைய தொழிலுக்காக, வியாபாரத்திற்காக, குடும்பத்திற்காக, நாம் ஹலாலான முறையில் கஷ்டப்படும் போது, அதில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு சிரமங்கள், வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய ஒவ்வொரு நெருக்கடிகள், அதற்கெல்லாம் நமக்கு அல்லாஹ்விடத்தில் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

«مَا يُصِيبُ المُسْلِمَ، مِنْ نَصَبٍ وَلاَ وَصَبٍ، وَلاَ هَمٍّ وَلاَ حُزْنٍ وَلاَ أَذًى وَلاَ غَمٍّ، حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا، إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ»

 

ஒரு முஸ்லிமுக்கு களைப்பு ஏற்பட்டால், கவலை ஏற்பட்டால், வலி ஏற்பட்டால், மன கஷ்டம் ஏற்பட்டால், யாராவது அவனை ஏசி விட்டால், திட்டி விட்டால், ஏன் காலில் ஒரு முள் குத்திவிட்டாலும் கூட அதற்கெல்லாம் பகரமாக அல்லாஹ் அவனுடைய பாவங்களை எல்லாம் போக்கிக் கொண்டே இருக்கிறான்.

அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல்குத்ரீரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 5641.

அல்லாஹு அக்பர். சிலர் நம்மை ஏசி விடுகிறார்கள், திட்டி விடுகிறார்கள்.

இன்னொரு ஹதீஸைப் பாருங்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

" لَا يَزَالُ الْبَلَاءُ بِالْمُؤْمِنِ أَوِ الْمُؤْمِنَةِ، فِي جَسَدِهِ، وَفِي مَالِهِ، وَفِي وَلَدِهِ، حَتَّى يَلْقَى اللهَ وَمَا عَلَيْهِ مِنْ خَطِيئَةٍ "

முஃமினுக்கு சோதனை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அவனுடைய உடலிலோ, செல்வத்திலோ, பிள்ளைகளிலோ, இப்படியாக அந்த சோதனைகள் வந்து வந்து அவனை சுத்தப்படுத்தி விடுகின்றன. நாளை மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கும் போது, பாவமே இல்லாதவனாக அவன் சந்திப்பான்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 7859.

இப்படியாக பொறுமைக்குரிய நற்பலன்கள் அதிகமாக இருக்கிறது. நிறைய கூலிகள் இருக்கிறது.

அதுபோன்று அல்லாஹு தஆலா அவனுடைய விசேஷமான அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் என்ற அந்த பாக்கியத்தை கொடுக்கின்றான்.

إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன்2 : 153)

மேலும் அவர்களுக்கு அல்லாஹு தஆலா தன்னுடைய முஹப்பத்தை கொடுக்கிறான்.

وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ

பொறுமையாளர்களைஅல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன்3 : 146)

அதுபோன்று சொர்க்கம் என்ற உயர்ந்த கூலியை அல்லாஹ் தருகிறான்.

ஒரு பெண்மணி நபியிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எனக்கு வலிப்பு ஏற்படுகிறது. மிகப்பெரிய வேதனை ஏற்படுகிறது. நான் என்ன செய்வது? எனக்கு துஆ செய்யுங்கள் என்று கோருகிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் அழகாக சொன்னார்கள்: பொறுத்துக் கொள்கிறாயா! உனக்கு சொர்க்கம் கிடைக்கும். (அல்லாஹ் அக்பர்)

உடனே அந்த பெண் சொல்கிறார்: அல்லாஹ்வின் தூதரே! பொறுத்துக் கொள்கிறேன். எனக்கு சொர்க்கம் கிடைக்க வேண்டும் என்பதாக.(3)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 5652.

இப்படி, பொறுமை என்பது நம்முடைய வாழ்க்கைக்கு மிகத் தேவையான ஒன்று. எல்லா சூழ்நிலைகளிலும் கணவன், மனைவியிடத்தில், மனைவி கணவனிடத்தில்,பெற்றோர்கள் பிள்ளைகளிடத்தில், பிள்ளைகள் பெற்றோர்களிடத்தில், நாம் வேலை செய்யக்கூடிய இடங்களில், நாம் இருக்கக் கூடிய சமுதாய சூழ்நிலைகளில் எனஎல்லா சூழ்நிலைகளிலும் நமக்கு பொறுமை என்பதும் சகிப்பு என்பதும் மிக முக்கியமான ஒன்று.

அதை நாம் பற்றிப் பிடிக்கும் போது கண்டிப்பாக ஏராளமான நன்மைகளை நாம் இன் ஷா அல்லாஹ் இன்றும் அடைய பெறுவோம். நாளையும் அடைய பெறுவோம்.

அந்த பொறுமையை இழக்கும்போது ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிக பயங்கரமானது. அதிலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! அல்லாஹ் விரும்பக்கூடிய நற்குணங்களை எனக்கும், உங்களுக்கும் வழங்குவானாக!

அல்லாஹ் வெறுக்கக்கூடிய அதிருப்திபடக்கூடிய ஒவ்வொரு கெட்ட குணங்களிலிருந்தும் என்னையும், உங்களையும் அல்லாஹு தஆலா பரிசுத்தப்படுத்துவானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلَالٍ قَالَ: حَدَّثَنَا أَبَانُ هُوَ ابْنُ يَزِيدَ العَطَّارُ قَالَ: حَدَّثَنَا يَحْيَى، أَنَّ زَيْدَ بْنَ سَلَّامٍ، حَدَّثَهُ أَنَّ أَبَا سَلَّامٍ، حَدَّثَهُ، عَنْ أَبِي مَالِكٍ الأَشْعَرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الوُضُوءُ شَطْرُ الإِيمَانِ، وَالحَمْدُ لِلَّهِ تَمْلَأُ المِيزَانَ، وَسُبْحَانَ اللَّهِ وَالحَمْدُ لِلَّهِ تَمْلَآَنِ أَوْ تَمْلَأُ مَا بَيْنَ [ص:536] السَّمَوَاتِ وَالأَرْضِ، وَالصَّلَاةُ نُورٌ، وَالصَّدَقَةُ بُرْهَانٌ، وَالصَّبْرُ ضِيَاءٌ، وَالقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ، كُلُّ النَّاسِ يَغْدُو فَبَائِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا»: هَذَا حَدِيثٌ صَحِيحٌ (سنن الترمذي 3517) [حكم الألباني] : صحيح

குறிப்பு 2)

حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا ابْنُ أَبِي خَالِدٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي زُهَيْرٍ الثَّقَفِيِّ، قَالَ:لَمَّا نَزَلَتْ: {لَيْسَ بِأَمَانِيِّكُمْ وَلَا أَمَانِيِّ أَهْلِ الْكِتَابِ مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ} قَالَ: قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللهِ، إِنَّا لَنُجَازَى بِكُلِّ سُوءٍ نَعْمَلُهُ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَرْحَمُكَ اللهُ يَا أَبَا بَكْرٍ، أَلَسْتَ تَنْصَبُ؟ أَلَسْتَ تَحْزَنُ؟ أَلَسْتَ تُصِيبُكَ اللَّأْوَاءُ؟ فَهَذَا مَا تُجْزَوْنَ بِهِ " (مسند أحمد 71 -)

குறிப்பு 3)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عِمْرَانَ أَبِي بَكْرٍ، قَالَ: حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، قَالَ: قَالَ لِي ابْنُ عَبَّاسٍ: أَلاَ أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الجَنَّةِ؟ قُلْتُ: بَلَى، قَالَ: هَذِهِ المَرْأَةُ السَّوْدَاءُ، أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: إِنِّي أُصْرَعُ، وَإِنِّي أَتَكَشَّفُ، فَادْعُ اللَّهَ لِي، قَالَ: «إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الجَنَّةُ، وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ» فَقَالَتْ: أَصْبِرُ، فَقَالَتْ: إِنِّي أَتَكَشَّفُ، فَادْعُ اللَّهَ لِي أَنْ لاَ أَتَكَشَّفَ، فَدَعَا لَهَا حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا مَخْلَدٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ: «أَنَّهُ رَأَى أُمَّ زُفَرَ تِلْكَ امْرَأَةً طَوِيلَةً سَوْدَاءَ، عَلَى سِتْرِ الكَعْبَةِ» (صحيح البخاري 5652 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/