இஸ்லாமின் தனித்துவம்! அமர்வு 1 நீதம் ! | Tamil Bayan - 661
بسم الله الرحمن الرّحيم
இஸ்லாமின் தனித்துவம்!அமர்வு 1நீதம்
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவை உங்கள் முன்னால் போற்றிப் புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர்கள் மீதும் அந்த தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும், ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக,
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை அல்லாஹ்வின் அச்சத்தை நினைவூட்டியவனாக, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக,
அல்லாஹ்வுடைய தீனை நாமும் அறிந்து இந்த தீனை அறியாத பல கோடி மக்களுக்கு தீனை அறிமுகப்படுத்தக்கூடிய, இந்த தீனின் பக்கம் அழைக்கக்கூடிய அழைப்பாளர்களாக அல்லாஹ் நம்மை ஆக்க வேண்டும் என்று எனக்காகவும், உங்களுக்காகவும்இந்த சமுதாயத்திற்காகவும் துஆ செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம் மீது பேரருள்புரிவானாக! இந்த மார்க்கத்தை விளங்கி பின்பற்றக்கூடிய நற்பாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் தந்தருள்வானாக! ஆமீன்.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமக்கு கொடுத்திருக்கக்கூடிய இந்த கண்ணியமான, சிறப்பான, மேன்மையான, இந்த மார்க்கத்தைப் பற்றி நாம் எந்தளவு புரிந்திருக்கிறோம்?இதனுடைய உண்மைகளை, தனித்தன்மைகளை,எந்தளவு புரிந்திருக்கிறோம்?
நாம் நம்முடைய இந்த மார்க்கத்தைப் பற்றி ஆய்வு செய்திருக்கின்றோமா? நாம் ஏன் முஸ்லிமாக இருக்கின்றோம்? நாம் ஏன் முஸ்லிமாக இருக்க வேண்டும்? ஏன் பிறரை இஸ்லாமின் பக்கம் அழைக்க வேண்டும்? என்பதைப் பற்றியெல்லாம் நாம் உணர்ந்து, புரிந்து, ஆய்வு செய்து விளங்கியிருக்கின்றோமா?
கண்டிப்பாக நாம் இந்த கேள்விகளை நம்மிடத்திலே கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். சில நேரங்களில் மனம் மிகவும் வேதனைப்படுகின்றது.
நம்மில் சிலர் ஏதோ ஒரு காரணத்திற்காக, முர்தத் ஆகின்ற நிலையை பார்க்கின்றோம். இஸ்லாமை விட்டு வெளியேறக்கூடிய நிலையை நகரங்களில் நாம் பார்க்கின்றோம்.
சிலர் தான் விரும்பிய ஒரு பெண்ணிற்காக, அல்லது தன்னுடைய ஒரு பதவிக்காக, தன்னுடைய ஒரு தொழிலுக்காக இப்படியாக நகரங்களிலே இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு சில வாலிபர்கள் வெளியேறுவது, மதம் மாறுவது, நம்முடைய மனதுக்கு வேதனையும் வலியும் கொடுக்கக்கூடிய ஒன்று என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முக்கியமாக இந்த இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றிய அறியாமை, இதனுடைய உயர்வுகளை உண்மைகளைப் பற்றிய அறியாமை, இது மிக முக்கிய காரணமாக இருக்கின்றது.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமக்கு கொடுத்திருக்கக்கூடிய இந்த மார்க்கம், ஏதோ இந்த உலகில் இருக்கக்கூடிய நூற்றிலே ஆயிரத்திலே ஒன்று என்பதாக எண்ணிவிட வேண்டாம்.
اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். (அல்குர்ஆன் 3 : 19)
வசனத்தின் கருத்து : இது தான் மார்க்கம்; இது தான் அசல்; இது தான் உண்மை;
அல்லாஹ் எப்படி உண்மையானவனோ? அவன் தான் உண்மையான இறைவனோ, இந்த பிரபஞ்சங்களை எல்லாம் படைத்தவன் உண்மையில் அவன்தான்.
ஆகவே அவனுடைய இந்த மார்க்கம் மட்டும் தான் உண்மையானது. மற்றவை அனைத்தும் பொய், வழிகேடுகள். மற்றவை அனைத்தும் மனித சிந்தனைகளால், மனிதனுடைய சிற்றறிவால், உருவாக்கப்பட்ட சடங்குகளின் ஒரு மதமே தவிர, அவை உண்மையான இறைக்கொள்கைகளை, உண்மையான சமயநெறிகளை, போதிக்கக்கூடிய மனிதனுக்கான மார்க்கம் அல்ல.
மனிதனுக்கான மார்க்கம் மனிதனைப் படைத்த இறைவனாகிய அல்லாஹ் கொடுத்தது தான் மனிதனுக்குரிய மார்க்கம். அது தான் இஸ்லாம்.
நிச்சயமாக அல்லாஹ்விடத்திலே ஏற்றுக்கொள்ளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட, உயர்வான மார்க்கம் இஸ்லாம் மட்டும் தான். (அல்குர்ஆன் 3:19)
அல்லாஹு தஆலா மேலும் இதை தெளிவுப்படுத்துகின்றான் :
وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا
இந்த இஸ்லாமை மட்டும் தான் உங்களுக்கு மார்க்கமாக பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)
அல்லாஹ்வுடைய தீனுடைய இந்த சிறப்பம்சங்களிலே ஒன்று, இந்த விஷயங்களை தெளிவாக உரக்க சொல்ல வேண்டிய நாம் இதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைக்கக்கூடிய அழைப்பாளர்களாக அல்லாஹு தஆலா நபிமாரை அனுப்பினான். ஆனால் இந்த இஸ்லாமை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திப்பவராக அல்லாஹ் அனுப்பவில்லை.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த இஸ்லாமின் உயர்வுகளை மிகச்சரியாக புரிந்தவர்கள். அல்லாஹ்வை அறிந்தவர்கள்.
இந்த தீனின் பக்கம் மக்களை அழைக்கும் போது மக்கள் புறக்கணிக்கத்தார்கள்;நபியை ஏசினார்கள்;இந்த தீனை எதிர்த்தார்கள்.ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேதனைப்பட்டார்கள்.
எப்படியாவது அவர்கள் முஸ்லிமாகிவிட வேண்டும் என்று கவலைப்பட்டு அவர்கள் பின்னால் அலையாய் அலைந்தார்கள்.அல்லாஹு தஆலா அந்த நேரத்திலே இரண்டு கேள்விகளை ரஸூலுல்லாஹ்வைப் பார்த்துக் கேட்டான்.
فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِنْ لَمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا
"நபியே அவர்கள் ஈமான் கொள்ளவில்லை என்றால், இந்த இஸ்லாமை ஏற்கவில்லை என்றால் கவலைப்பட்டு, கவலைப்பட்டு உங்களையே நீங்கள் அழித்துக் கொள்வீர்களோ?" (அல்குர்ஆன் 18:6)
அடுத்து அல்லாஹ் கேட்டான்:
أَفَأَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتَّى يَكُونُوا مُؤْمِنِينَ
இவர்களெல்லாம் முஃமீன்களாக ஆகிவிட வேண்டும் என்பதற்காக நபியே இந்த மக்களை நிர்பந்திக்க போறீர்களா? வேண்டாம்.(அல்குர்ஆன் 10 : 99)
لَا إِكْرَاهَ فِي الدِّينِ
அல்லாஹ்வுடைய தீனில் நுழைய வேண்டும் என்று யாரையும் நிர்பந்திக்க வேண்டாம். (அல்குர்ஆன் 2 : 256)
فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ
யார் விரும்புகிறாரோ அவர் ஈமானுக்குள் வரட்டும். யார் விரும்பவில்லையோ, யார் நிராகரிக்கின்றாரா நிராகரிக்கட்டும். (அல்குர்ஆன் 18 : 29)
ஆனால்,இதற்கு இப்படி அர்த்தம் அல்ல. மக்களெல்லாம் வழிகெட்டு எப்படியாவது திரியட்டும், மூடர்களாக, முட்டாள்களாக, அரக்கர்களாக, அநியாயக்காரர்களாக, சிலை வணங்கிகளாக, சிலுவை வணங்கிகளாக, இந்த உலக வாழ்க்கையில் மூழ்கியவர்களாக அவர்களை நாம் விட்டுவிடலாம் என்பது அர்த்தம் அல்ல.
அவர்களை கரம் பிடித்து அன்போடு அழகிய முறையில் உபதேசம் செய்து அல்லாஹ்வைப் பற்றி, மறுமையைப் பற்றி, இஸ்லாமைப் பற்றி அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய பொறுப்பை, கடமையை அல்லாஹு தஆலா நமக்கு கொடுத்திருக்கின்றான்.
நிர்ப்பந்தப்படுத்துவதற்கு அனுமதியில்லை. ஆனால் அவர்களை அழைப்பது; இஸ்லாமை அறிமுகப்படுத்துவது நம்முடைய தார்மீகக் கடமை.
இரண்டிற்கும் நடுவிலே வேறுபாடு இருக்கிறது. அவர்களுக்கு தப்லீக் (அழைப்பது) கடமை. நிர்ப்பந்திப்பதற்கு அனுமதி இல்லை.
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நமக்கு கொடுத்திருக்கக்கூடிய இந்த மார்க்கத்தின் சிறப்புகளை சில உயர்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சுருக்கமாக சொல்வதென்றால் சூரா நஹ்ல் உடைய 90-வது வசனம். இந்த இஸ்லாமிய மார்க்கம் எதன் மீது அமையப்பட்டிருக்கின்றது? இதனுடைய தனித்தன்மை, சிறப்பு என்ன? என்பதை இந்த ஒரு வசனத்திலே அல்லாஹு தஆலா தெளிவுபடுத்துகின்றான் :
إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நீதி செலுத்தும்படியாகவும், நன்மை செய்யும்படியாகவும், உறவினர்களுக்கு(ப் பொருள்) கொடுத்து உதவி செய்யும்படியாகவும் நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) ஏவுகிறான். மானக்கேடான காரியங்கள், பாவம், அநியாயம் ஆகியவற்றிலிருந்து (உங்களை) அவன் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக அவன் உங்களுக்கு (இப்படி) நல்லுபதேசம் செய்கிறான். (அல்குர்ஆன் 16:90)
அல்லாஹ் நீதத்தை உங்களுக்கு ஏவுகிறான். இந்த இஸ்லாமிய மார்க்கம் அது குர்ஆனில் சொல்லப்பட்ட சட்டங்களாக இருக்கட்டும், ஹதீஸிலே சொல்லப்பட்ட சட்டங்களாக இருக்கட்டும், ஹதீஸின் அடிப்படையிலே, குர்ஆனின் அடிப்படையிலே பல அறிஞர்கள் ஆய்வு செய்த சட்டங்களாக இருக்கட்டும். இந்த ஒட்டு மொத்த சட்டங்கள் செய்ய வேண்டும் என்று கட்டளையில் அமைந்திருக்கக் கூடிய சட்டங்கள்.
இதை ஒரு முஸ்லிம் கண்டிப்பாக பின்பற்றியாக வேண்டும் என்று வந்திருக்கக்கூடிய அத்தனை சட்டங்களையும் எடுத்தால் அதனுடைய தலையாய அடையாளமாகஇருக்கக்கூடியது இந்த மார்க்கத்தினுடைய நீதம்.
إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ
(அல்குர்ஆன் 16 : 90)
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த மார்க்கத்தில் அநியாயத்திற்கு, அத்து மீறலுக்கு, துரோகத்திற்கு, ஒருவருடைய உரிமையின் மீது எல்லைமீறுவதற்கு உண்டான எந்த விதமான சட்டங்களும் அணுவளவு கூட ஒரு துளி அளவு கூட கிடையாது.
உலகத்திலே நீதத்தை விரும்பாதவர்கள் யார் இருக்க முடியும்? ஒரு மனிதன் இஸ்லாமை எதிர்க்கிறான் என்றால் அல்லது இஸ்லாமினுடைய இறைத்தூதரை விமர்சிக்கிறான் என்றால் அவனுக்கு இந்த நீதம் பிடிக்கவில்லை. இஸ்லாம் சொல்லக்கூடிய சமத்துவம், மனிதநேயம் அந்த நீதம், நீதத்தில அமைந்த சட்டங்கள் அவனுக்குப் பிடிக்கவில்லை.
மனிதர்களை சமயத்தால், மார்க்கத்தால், மனிதர்களை அவனுடைய நிறத்தால், மொழியால் பிரித்து சண்டைச் சச்சரவுகளை மூட்டக்கூடியவர்களுக்கு நீதம் எப்படி பிடிக்கும்?
அல்லாஹ்வுடைய மார்க்கத்திலே நீதம் இறைவழிபாட்டில் இருந்து ஆரம்பமாகி, அரசியலில், சமூக அந்தஸ்துகளிலிருந்து, ஒரு மனிதனுடைய தனி வாழ்க்கையில் இன்று அனைத்திலும் அல்லாஹுத்தஆலா இந்த நீதத்தை உயர்த்தி வைத்திருக்கின்றான்.
நீதம் என்ன? யாருக்கு எது உரிமையோ அந்த உரிமையை அவருக்கு கொடுப்பது நீதம். ஒருவரின் உரிமையைப் பறிப்பது, ஒருவருடைய ஹக்கைப் பிடுங்கி இன்னொருவருக்கு செய்வது, இது மிகப்பெரிய அநியாயம்.
இப்படி பார்க்கும் போது ஒட்டு மொத்த உலகிலே முஸ்லிம்கள் மட்டும் தான் நீதமானவர்கள்.
ஏன்? அல்லாஹ்வுடைய ஹக்காகிய இபாதத்தை, அல்லாஹ்வுடைய உரிமையாகிய அவனுடைய வணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்கு மட்டும் செய்யக்கூடியவர்கள். அவர்கள் தான் முஸ்லிம்கள். எனவே அவர்கள் மட்டும் தான் நீதவான்கள்.
உலகத்திலிருக்கக்கூடிய இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றாத யாராக இருக்கட்டும். எந்த மதத்தை, எந்த கொள்கையை, எந்த சமயத்தை சேர்ந்தவராக இருக்கட்டும். அவர் அல்லாஹ்வின் விஷயத்திலே, தன்னைப் படைத்த இறைவனின் விஷயத்திலே, அநியாயக்காரனாக இருக்கிறான்.
காரணம் என்ன? தன்னுடைய இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை, தனக்கு உணவளித்து, உயிரளித்து, இந்த உலக வாழ்க்கையிலே தனக்கு பொறுப்பேற்று, தன்னுடைய சுக துக்கங்களிலே தனக்கு துணையாக இருக்கக்கூடிய, தான் நோயுற்றால் குணப்படுத்தக்கூடிய, தான் பசித்தால் தனக்கு உணவளிக்கக்கூடிய, தான் கையேந்தினால் தனக்கு பதிலளிக்கக்கூடிய, அந்த மகா பரிசுத்தமான இறைவனை விட்டு விட்டு, அவனுக்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை இவனாக கற்பனையாக உருவாக்கிக் கொண்ட இவனுடைய தெய்வங்களுக்கு இவன் செய்கின்றானே, இவனுடைய கற்பனையின் அடிப்படையிலே இது எவ்வளவு பெரிய அநியாயம்!
ஆகவே, நீதத்தில் முதல் நீதம் படைத்த இறைவனுக்கு மனிதன் செய்யக்கூடிய நீதம். அந்த நீதம் இஸ்லாமிய மார்க்கத்தில் மட்டும் தான் இருக்கின்றது.
உலகத்திலே எந்த ஒரு கொள்கையாக இருக்கட்டும், சமயமாக இருக்கட்டும், கோட்பாடுகளாக இருக்கட்டும், அதனுடைய அடிப்படையே அநியாயத்தின் மீது உள்ளது.
காரணம் என்ன? மனிதன் தன்னை படைத்த இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை அவன் அல்லாத பிறருக்கு செய்வதற்கு போதிக்கின்றது.
அந்த சமயங்கள், கோட்பாடுகள், கொள்கைகள் மனிதனை அல்லாஹ்விற்கு அடிமையாக்குவதற்கு பதிலாக, உண்மையான பேரரசனாகிய அந்த எஜமானனுக்கு அடிமையாக்குவதற்கு பதிலாக, படைக்கப்பட்ட படைப்புகளுக்கு அடிமையாக்குகின்றது.
இந்த இஸ்லாம் மட்டும் தான் மனிதனை அனைத்திலிருந்தும் விடுதலை செய்து. உண்மையான விடுதலையைக் கொடுக்கின்றது. அவன் யாருக்கு அடிமையாக இருக்க வேண்டுமோ? அவனுக்கு அடிமையாக்குகின்றது.
ஒரு மனிதன், இஸ்லாமின் மூலமாக தன்னை அல்லாஹ்விற்கு அடிமையாக்கி கொள்ளவில்லை என்றால், அவன் ஷைத்தானுக்கு அடிமையாக இருப்பான். இப்லீஸுக்கு அடிமையாக இருப்பான். மன இச்சைக்கு அடிமையாக இருப்பான்.
இன்னும் இந்த உலகத்தில் மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றக்கூடியவர்களுக்கு அவன் அடிமையாக இருப்பான்.
இஸ்லாம் பரிசுத்தமான அடிமைத்தனத்தை கற்பிக்கின்றது. இஸ்லாம் மிக உயர்வான அடிமைத்தனத்தை கற்பிக்கின்றது. உன்னை படைத்த இறைவனுக்கு மட்டும் நீ அடிமையாக இரு. அவனுக்கு நீ அடிமையாகிவிட்டால் உலகத்தில் வேறெந்த கொள்கைக்கும், வேறெந்த சக்திக்கும் நீ அடிமையாக தேவையில்லை. நீ கண்ணியவானாக இருப்பாய்.
இத்தகைய மார்க்கம் கிடைக்கப் பெற்றதற்கு நாம் அல்லாஹ்விற்கு எவ்வளவு நன்றி செலுத்த வேண்டும். எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம்.
பேய், பிசாசுகள் போன்ற கற்பனைகளுக்கு அடிமையாவதில்லை. இன்ன சாமியார் அந்த துறவியார் என்று ஏமாற்றப்படுவதற்கு நமக்கு இங்கு வழியில்லை.
எதுவாக இருந்தாலும் தெளிவான அறிவின்படி, பரிசுத்தமான வழிகாட்டுதலின் படி, அழகிய சிந்தனையின் படி உள்ள தெளிவான மார்க்கம் நமக்கு கட்டளையிட்டு இருக்கின்றது.
சென்று கொண்டே இருக்கலாம். எங்கு பார்த்தாலும் வெளிச்சம். இதிலே மூடலுக்கோ, குழப்பத்திற்கோ வழியே இல்லை.
«قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا، لَا يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلَّا هَالِكٌ»
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
இந்த மார்க்கம் மிகத்தெளிவான வெள்ளை ஆதாரம். அந்த ஆதாரத்திலே உங்களை விட்டுச் செல்கின்றேன். இதனுடைய இரவும் பகலைப் போன்றது. இருட்டுக்கே இங்கு வேலையில்லை. யார் தன்னைத்தானே வழிகேட்டிலே சிக்க வைத்துக் கொள்வானோஅந்த வழிகேடனைத் தவிர வேறு யாரும் இந்த மார்க்கத்திலிருந்து பிசகிச் செல்ல மாட்டார்கள். (1)
அறிவிப்பாளர் : இர்பால் இப்னு சாரியா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 43, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
அல்லாஹ்வின் அடியார்களே! இஸ்லாம் கொடுக்கக்கூடிய சமூக அந்தஸ்தை உலகத்தில் வேறெந்த கொள்கையிலாவது, வேறெந்த சமயத்திலாவது மனிதர்கள் எடுத்துக்காட்ட முடியுமா?
அல்லாஹ்வுடைய குர்ஆன் ரப்புல் ஆலமீனுடைய இந்த கலாம் என்ன சொல்கிறது?
يَاأَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரேஓர் ஆண், ஒரேஓர் பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலானவர் என்று பெருமை பேசாதீர்கள்.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கிறாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், நன்கு தெரிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 49 : 13)
வசனத்தின் கருத்து : காஃபிராக இரு, முஷ்ரிக்காக இரு, மஜூஸியாக இரு, முஃமினாக இரு, முஸ்லிமாக இரு, நீ எந்த மொழி பேசக்கூடியவனாக இரு, எந்த நிறம் பேசக்கூடியவனாக இரு, மனிதனே நீ உலகத்தில் எங்கிருந்தாலும் சரி,மனிதராகிய உங்களை நாமே ஒரு ஆணிலிருந்து, பெண்ணிலிருந்து படைத்தோம்.
எப்படிபட்ட சமத்துவத்தை மனிதர்களுக்கு மத்தியிலே அல்லாஹ்வுடைய இந்த தீன் நிலை நிறுத்துகிறது. உலகமெல்லாம் மனிதர்களுக்கு மத்தியிலே ஏற்றத்தாழ்வுகளை வேறுபாடுகளை, பாகுபாடுகளை போதிக்கின்ற நேரத்திலே, இஸ்லாம் மட்டும் மனிதர்களுக்கு மத்தியிலே சமத்துவத்தை போதிக்கிறது. மனிதர்களுக்கு மத்தியிலே ஒற்றுமையை போதிக்கின்றது.
உலகக் கலாச்சாரம், உலக சமுதாயம் மனிதனுக்கு மத்தியிலே பொருளாதாரத்தால் ஏற்றத்தாழ்வு காண்பித்து அவர்களைப் பிரிக்கப் பார்க்கின்றது.
உலக சமுதாயம் மனிதர்களை மொழியால் பிரிக்கப்பார்க்கின்றது. நிறத்தால் பிரிக்கப் பார்க்கின்றது. இப்படியாக பல பட்டியல் அவர்கள் வைத்திருக்கின்றார்கள். இஸ்லாம் ஒன்று மட்டுமே மனிதர்களை ஒன்று படுத்துகிறது.
يٰۤاَيُّهَا النَّاسُ! يٰۤاَيُّهَا النَّاسُ
குர்ஆனை எடுத்துப் பாருங்கள். மக்களே! மக்களே! மக்களே! என்று அழைத்து அல்லாஹ் பேசுகின்றான். உங்களுக்கு மத்தியில் எந்த பாகுபாடும் இல்லை.
நீங்கள் சமூகங்களாக, நீங்கள் கோத்திரங்களாக அமைக்கப்பட்டிருப்பது உங்களுக்கு மத்தியில் உண்டான அறிமுகத்திற்கே தவிர, பாகுபாடு காட்டுவதற்கு அல்ல.
நிறத்தால், மொழியால், நாடுகளால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை பிரித்திருப்பது நமக்கு மத்தியிலே பிரிவினைக் காட்டுவதற்கு அல்ல. நமக்கு மத்தியிலே அறிமுகத்திற்காக.
இவர் இன்ன நாட்டைச் சேர்ந்தவர். இவர் இன்ன மொழியைப் பேசுபவர், என்று அறிவதற்காக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அமைத்திருக்கின்றானே தவிர, ஏற்றத்தாழ்வு காட்டுவதற்காக அல்ல.
ஒருவனை மட்டம் தட்டுவதற்காக ஒருவனை உயர்த்துவதற்காக அல்ல.
அல்லாஹ்வின் பயம், இறையச்சம், ஒழுக்கம் இந்த ஒன்று தான் மனிதனை உயர்வாக்குகின்றது.(அல்குர்ஆன் 49:13)
அவ்வளவு தெளிவான வழிகாட்டுதல் உள்ளது. அல்குர்ஆனும் இதை உறுதிப்படுத்துகின்றது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த காலத்தில் அனுப்பப்பட்டார்களோ அந்த காலத்திலே உலகிலே அரபுகள் தான் உயர்ந்தவர்கள். இன்னொரு பக்கம் ஐரோப்பியர்கள், அவர்கள் தங்களைத் தவிர மனிதர்கள் யாருமே இல்லை.
கறுப்பர்களைப் பொறுத்தவரை, ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களைப் பொறுத்தவரை, இந்த ஐரோப்பியர்களுடைய, வெள்ளையர்களுடைய கண்ணிலே அவர்களெல்லாம் மிருகங்களுக்குச் சமம். மிருகங்களை விட மோசமாக நடத்தினார்கள்.
இன்று கூட வெள்ளை நிற வெறியர்களைப் பார்கிறோம்.
அல்லாஹ்வின் அடியார்களே! ஒட்டு மொத்த உலகம் அப்படி இருந்தது. கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றால் அவர்கள் கைதிகளை விலங்குகளோடு சண்டை செய்ய வைப்பார்கள். சிங்கங்களோடும், புலிகளோடும்.
அதை அவர்கள் ஜெயித்தால் அவர்களுக்கு விடுதலைக் கிடைக்கும். கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றால் அந்த கைதிகளுக்குள்ளே மூர்க்கத்தனமான சண்டைகளை செய்ய வைப்பார்கள். அதை ஜெயித்தால் அவர்களுக்கு விடுதலைக் கிடைக்கும். இப்படி மோசமாக கைதிகளை நடத்திக் கொண்டு இருந்தார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! கைதிகளும் சரி, எஜமானனும் சரி இருவரும் சமம்.
நீ உடுத்தக்கூடிய உடையை உன்னுடைய அடிமைக்கு உடுத்தக் கொடு. நீ உண்ணக் கூடிய உணவை உன்னுடைய அடிமைக்கு உண்ணக் கொடு. நீங்கள் போரிலே கைதியாக்கினால் அவர்களை சிறைபிடித்து கைதிகளாக்காதீர்கள். அவர்களை அடிமைகளாக்கி உங்களுடைய குடும்பத்திலே சேர்த்து கொள்ளுங்கள் என்று அவர்களை குடும்ப உறுப்பினர்களாக ஆக்கியது அல்லாஹ்வுடைய மார்க்கம் மட்டும் தான்.
முன்னால் கைதிகள், அடிமைகள் என்று சொன்னால், அவர்களுக்கு கை விலங்குகள் இருக்கும். கழுத்திலே அரிகண்டங்கள் இருக்கும். கால்களிலே விலங்குகள் இருக்கும்.
அல்லாஹ்வுடைய இந்த மார்க்கம் அனைத்தையும் உடைத்தெறிந்து அவர்களை மனிதர்களாக சமமாக நடத்த வேண்டும். உங்களது குடும்பத்திலே அவர்களைச் சேர்க்க வேண்டும். அவர்களைச் சிறைச்சாலையிலே வைக்கக்கூடாது. கால்களிலே சங்களிகள் இட்டு அவர்களை முடக்கி போடக்கூடாது என்று உரிமையைக் கொடுத்தது.
அபூதர்தா (ரலி) அன்ஹுஒரு முறை ஷாம் தேசத்திலே செல்லும் போது அவருக்கு சமமாக ஒருவர் நடந்து செல்கிறார். அங்கே பார்த்த ஒரு கிறிஸ்துவர் கேட்கிறார். அவருக்கு கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. எந்த உடை இந்த ஸஹாபியின் மீது இருக்கின்றதோ அதே உடை அவர் மீதும் இருக்கிறது. இருவரும் சமமாக நிற்கிறார்கள்.
அந்த கிறிஸ்துவர் அந்த ஸஹாபியிடத்திலே கேட்கிறார்;இவர் என்ன உன்னுடைய சகோதரராஎன்று. ஸஹாபி சொல்கிறார் : இவர் என்னுடைய அடிமை என்று. அந்த கிறிஸ்தவருக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் பழகிய பழக்கம் வேறு.
அடிமை என்றால் எட்டி நிற்க வேண்டும். எஜமானனுக்கு முன்னால் கூனிக்குருகி நிற்க வேண்டும். தலைத்தூக்க முடியாது. நேராக பார்க்கக் கூடாது. தூரத்தில் நின்று பேச வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் ஒரு எஜமானுக்கு முன்னால் அடிமை சரிசமமாக நிற்கிறார். எஜமானன் மீது என்ன உடை இருக்கின்றதோஅதே உடை அந்த அடிமையின் மீதும். எனவே அவர் கேட்கிறார்.
அபூதர்தா (ரலி) சொன்னார்கள் : இது தான் எங்களுக்கு எங்கள் தூதர் கற்றுக் கொடுத்த சமத்துவம்.
(நூல் : முன்மாதிரி முஸ்லிம்)
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் சொன்னார்கள் :
«فَأَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ، وَاكْسُوهُمْ مِمَّا تَلْبَسُونَ»
உங்களுடைய அடிமைகளுக்கு நீங்கள் உண்ணுவதைக் கொடுங்கள். நீங்கள் உடுத்துவதைக் கொடுங்கள் என்று சொன்னார்கள்.(2)
அறிவிப்பாளர் : அபூ தர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது,எண் : 21483.
இப்போது யோசித்துப் பாருங்கள். இஸ்லாம் கொடுத்திருக்கக்கூடிய சமத்துவத்தைப் பற்றி.
ஒரு முறை ஒரு ஸஹாபி தன்னுடைய அடிமையிடத்திலே வேலைவாங்கிக் கொண்டிருக்கும் போது கோபத்திலே அடித்துவிட்டார். அந்த காலங்களில் சாட்டைகளாலும் இன்னும் எத்தனை விதமான ஆயுதங்களாலும் அடிமைகள் தாக்கப்பட்டு கொண்டிருந்தார்கள். இஸ்லாம், இந்த இஸ்லாமின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்த அழகிய போதனைகளைப் பாருங்கள்.
ஒரு எஜமானர் தன்னுடைய அடிமையைக் கையால் தான் அடித்தார். சாட்டையால் அல்ல,சங்கிலியால் அல்ல.
இதைப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :
«اعْلَمْ، أَبَا مَسْعُودٍ، لَلَّهُ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَيْهِ»
அடிக்காதே! நீ இந்த அடிமையின் மீது சக்தி பெற்றிருப்பதை விட அல்லாஹ் உன் மீது ஆற்றல் பெற்றிருக்கின்றான். அவ்வளவு தான் அந்த ஸஹாபி பயந்துவிட்டார். நின்று விட்டார்.
அல்லாஹ்வின் தூதரே! இப்போது நான் என்ன செய்வது? தன்னுடைய செயலுக்கு வருந்தி ஓடி வருகிறார். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
நீ இவரை உரிமையிடுவதைத் தவிர உனக்கு நான் வேறு வழியைப் பார்ப்பதில்லை. நீ இவரை உரிமையிட வேண்டும். அப்போது தான் நீ அடித்தது மன்னிக்கப்படும்.
உடனே அவர்,
هُوَ حُرٌّ لِوَجْهِ اللهِ
அல்லாஹ்வின் முகத்திற்காக இவரை நான் விடுதலை செய்கிறேன். இவர் சுதந்திரமானவர் என்று சொல்கிறார்.
அறிவிப்பாளர் : அபூ மஸ்ஊத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1659.
சகோதரர்களே! இந்த மேற்கத்தியர்கள், மேலைநாட்டவர்கள் இந்த இஸ்லாத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் போரிலே கைது செய்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்களை எப்படி கொடுமையாக இவர்கள் கொன்றார்கள். சித்ரவதை செய்தார்கள். சிறைகளிலே அடைத்து அவர்களுக்கு எவ்வளவு பெரிய வேதனைகளைக் கொடுத்தார்கள்.
அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் ஓர் அடிமை, தான் செய்த தவறுக்காக அறையப்பட்டதற்கு கூட அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொறுத்துக்கொள்ளவில்லை.
அவரை உரிமையிட்டால் தான் உன்னுடைய இந்த தவறு மன்னிக்கப்படும் என்று கூற, அந்த ஸஹாபி உரிமையிடுகின்றார்.
அல்லாஹ்வின் அடியார்களே! இத்தகைய படிப்பினை நிறைந்த சம்பவங்கள் இருக்கின்றன. அல்லாஹ்வுடைய இந்த தீனின் அடிப்படை இந்த நீதத்தின் மீது அமைந்துள்ளது. நீதம்! நீதம்! நீதம்!
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சபையிலே திருடப்பட்ட ஒரு பெண் கொண்டுவரப்பட்டு சட்டம் அவருக்கு நிறைவேற்றப்படும் போது சிபாரிசுக்கு வருகின்றார்கள். செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி எப்படியாவது சிபாரிசு செய்து காப்பாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன அந்த அழகிய வார்த்தையைப் பாருங்கள்:
«لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا»
இந்த ஃபாத்திமா அல்ல,எனது மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் அவளுடைய கரத்தை நான் துண்டித்திருப்பேன் என்று. (3)
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி,எண் : 3475.
சகோதரர்களே! இது இஸ்லாம் சொல்லக்கூடிய சிறப்பு தன்மை. இந்த நீதம் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை. இதைப் பிடிக்காதவர்கள் இந்த நீதம் ஒத்துக்கொள்ளாத சிலருக்கு இது அலர்ஜியாக இருக்கும். அவர்கள் தான் இந்த இஸ்லாத்தை குறை சொல்கின்றார்கள். இஸ்லாமின் தூதர், நபியைக் குறை சொல்கின்றார்கள். இத்தகைய குறை புத்தியுள்ளவர்கள், இப்படியான அற்பமான அறிவுள்ளவர்கள் காலத்தில் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்.
அவர்களை அழகிய முறையிலே புறக்கணித்து விட்டு, இந்த மார்க்கத்தை அறிவதற்காக தேட்டத்தில் உள்ள தாகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்திலே இருக்கின்றோம்.
நம்முடைய சொற்களால், நம்முடைய அழகிய குணங்களால், நம்முடைய அழகிய பண்பாடுகளால், நம்முடைய அழகிய கலாச்சாரங்களால், நம்முடைய அழகிய கொடுக்கல் வாங்கல்களால், நாம் நம்முடைய மார்க்கத்தைப் பிறருக்கு எடுத்துச் சொல்வோம்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் அதற்குரிய அருள்புரிவானாக! பாதையை இலேசாக்கிக் கொடுப்பானாக!
இன் ஷா அல்லாஹ்! மேலும் இது குறித்த பல விளக்கங்களை அல்லாஹ் நாடினால் அடுத்தடுத்த அமர்வுகளிலே பார்ப்போம்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இந்த தீனைப் பின்பற்றி அல்லாஹ்வுடைய பொறுத்தத்தை, அல்லாஹ்வுடைய அன்பை, அல்லாஹ்வுடைய மன்னிப்பை அடையக்கூடிய நற்பாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் தந்தருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ بِشْرِ بْنِ مَنْصُورٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ السَّوَّاقُ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ ضَمْرَةَ بْنِ حَبِيبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ، أَنَّهُ سَمِعَ الْعِرْبَاضَ بْنَ سَارِيَةَ، يَقُولُ: وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْعِظَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ، وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ هَذِهِ لَمَوْعِظَةُ مُوَدِّعٍ، فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا؟ قَالَ: «قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا، لَا يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلَّا هَالِكٌ، مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا، فَعَلَيْكُمْ بِمَا عَرَفْتُمْ مِنْ سُنَّتِي، وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ، عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ، وَعَلَيْكُمْ بِالطَّاعَةِ، وَإِنْ عَبْدًا حَبَشِيًّا، فَإِنَّمَا الْمُؤْمِنُ كَالْجَمَلِ الْأَنِفِ، حَيْثُمَا قِيدَ انْقَادَ»(سنن ابن ماجه 43 -) حكم الألباني - صحيح
குறிப்பு 2)
حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ مُوَرِّقٍ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَاءَمَكُمْ مِنْ خَدَمِكُمْ» ، فَأَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ، وَاكْسُوهُمْ مِمَّا تَلْبَسُونَ، أَوْ قَالَ: تَكْتَسُونَ، وَمَنْ لَا يُلَائِمُكُمْ، فَبِيعُوهُ وَلَا تُعَذِّبُوا خَلْقَ اللَّهِ")مسند أحمد (21483 -
குறிப்பு 3)
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ قُرَيْشًا أَهَمَّهُمْ شَأْنُ المَرْأَةِ المَخْزُومِيَّةِ الَّتِي سَرَقَتْ، فَقَالُوا: وَمَنْ يُكَلِّمُ فِيهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالُوا: وَمَنْ يَجْتَرِئُ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ، حِبُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَلَّمَهُ أُسَامَةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ، ثُمَّ قَامَ فَاخْتَطَبَ، ثُمَّ قَالَ: إِنَّمَا أَهْلَكَ الَّذِينَ قَبْلَكُمْ، أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الحَدَّ، وَايْمُ اللَّهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا")صحيح البخاري (3475 -
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/