சிறப்புமிகு ஷஅபான் மாதம்! | Tamil Bayan - 663
بسم الله الرحمن الرّحيم
சிறப்புமிகு ஷஅபான் மாதம்!
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்து, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வை தவிர வேறுயாருமில்லை என்று சாட்சிக் கூறி,
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுடைய அடியாராகவும், தூதராகவும் இருக்கிறார் என்று சாட்சிக் கூறி, அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் இறங்கட்டும் என்று வேண்டியவனாக,
உங்களும் எனக்கும் அல்லாஹ்வுடைய அன்பையும், அருளையும் இம்மை, மறுமையின் வாழ்க்கையின் வெற்றியை வேண்டி துஆ செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவனுடைய அருளிலும், அன்பிலும் அவனுடைய நேரான பாதையிலும், அல்லாஹ்வுடைய இந்த தூய மார்க்கத்தின் மீது நம்மை எப்போதும் உறுதியாக, நிலையாக வைத்திருப்பானாக! ஆமீன்.
இன்னும் சில நாட்களில் அல்குர்ஆன் இறக்கப்பட்ட சிறந்த ஒரு மாதத்தை வணக்க வழிபாடுகளுக்காக அல்லாஹு தஆலா தேர்ந்தெடுத்த கண்ணியமான ஒரு மாதத்தை சந்திக்க இருக்கின்றோம்.
அதற்கு முன்பாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய விதியின் அடிப்படையில் அமைத்திருக்கின்ற இந்த ஷஅபான் மாதமும் அல்லாஹ்விடத்தில், அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் மிக கண்ணியமான, மிகவும் விரும்பத்தக்கஅமல்களுக்குரிய மாதம் என்பதை நாம் கவனத்தில் வைக்க வேண்டும்.
ரமலான் மாதத்தில் நாம் வணக்க வழிபாடுகளிலும், மறுமைக்கான தயாரிப்புகளிலும் நம்மை முழுமையாகஈடுபடுத்திக் கொள்வதற்கு ஒரு பயிற்சியாக அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இந்த ஷஅபான் மாதத்தை கொடுத்திருக்கின்றான்.
அந்த அடிப்படையில் தான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களும் ஸஹாபாக்களும் இந்த ஷஅபான் மாதத்தை பேணினார்கள்.
அது குறித்த பல ஹதீஸ்களையும், வழிகாட்டுதல்களையும் இன் ஷா அல்லாஹ் இன்று நாம் பார்க்க இருக்கின்றோம்.
இந்த உலக வாழ்க்கை நம்மை மயக்கிக் கொண்டே இருக்கும். இந்த உலக வாழ்க்கையைப் பற்றி ஒரு உதாரணம் சொல்வதாக இருந்தால் ஒரு சதுப்பு நிலத்தைப் போன்று.
அதில் சிக்கிக் கொண்ட ஒருவனை அது எப்படி உள்ளே வாங்கிக் கொண்டே இருக்குமோஅது போன்று தான் இந்த உலகத்தில் எந்த அளவு நாம் ஈடுபடுவோமோஅந்த அளவு அது நம்மை உள்ளே இழுத்துக் கொண்டேயிருக்கும்.
இந்த உலகத்தினுடைய இயற்கையான பண்புகளில் ஒன்று, அது நம்முடைய உள்ளத்தில் அழுக்குகளை சேர்க்க கூடியது. அது அல்லாஹ்வுடைய நினைவை நம்முடைய உள்ளத்தில் இருந்து மறக்க வைத்து விடும்.
மறுமையைப் பற்றிய கவனத்தை, சொர்க்கத்தைப் பற்றிய ஆசையை, நரகத்தைப் பற்றிய பயத்தை உள்ளத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொண்டே இருக்கும்.
ஆசைகளை அதிகப்படுத்தி, மறுமை நம்பிக்கையை பலவீனப்படுத்தி கொண்டே இருக்கும்.
அல்லாஹு தஆலா ஒவ்வொரு நாளும் ஐங்காலத் தொழுகைகளை நமக்கு ஃபர்ளாக்கி இருப்பதுடைய ஹிக்மத்துகளில் -ஞானங்களில் ஒன்றாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
முஃமின்கள் உலக ஈடுபாடுகளில் இருக்கும் போது அவர்களுடைய உள்ளத்தில் ஏற்படக்கூடிய துருக்களை, உலக மோகங்களை, உலக ஆசைகளை இன்னும் தவறான எண்ணங்களை அல்லது அல்லாஹ்வை மறந்து இருக்கின்ற இந்த நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றி கொண்டு வந்து மறுமைக்கு, அல்லாஹ்வின் நினைவுக்கு, சொர்க்கத்தின் ஆசைக்கு கொண்டு வருவது.
இது தொழுகை உடைய பலன்களில் ஒன்று.
ஒரு முஃமின் காலையில் ஒரு முறை, பிறகு மதியம், பிறகு மாலையில், பிறகு சூரியன் மறைந்த பிறகு, பிறகு இரவு என்று இப்படியாக அல்லாஹ்வின் வணக்க வழிபாடுகளில் தங்களை ஈடுபடுத்தி தன்னுடைய சிந்தனையை சுத்தப்படுத்திக் கொண்டே இருக்கின்றார்.
உலக ஆசைகளை குறைத்து பிறகு மறுமையின் ஆசைகளை அதிகப்படுத்துகின்றார். சொர்க்கத்தினுடைய ஆசைகளை அதிகப்படுத்தி கொள்கின்றார். நரகத்தின் மீது உண்டான பயத்தை அதிகப்படுத்திக் கொள்கின்றார்.
அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா சூரா லுக்மான் உடைய 33-வது வசனத்தில் இந்த உலகத்தைப் பற்றியும், மறுமையைப் பற்றியும் கூறுவதை நாம் நினைவில் வைக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு வசனம்.
அல்லாஹு தஆலா கூறுகின்றான் :
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ
மக்களே!உங்களுடைய ரப்பை பயந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 31 : 33)
وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُمْ مُلَاقُوهُ
நிச்சயமாக, நீங்கள் அல்லாஹ்வைச் சந்திப்பீர்கள் என்பதையும் உறுதியாக அறிந்து அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் 2 : 223)
وَاتَّقُوا اللَّهَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ
(அனைத்தையும் அறிந்த) அல்லாஹ்வின் சமூகத்திற்கு நீங்கள் கொண்டு போகப்படுவீர்கள். ஆகவே, அவனுக்கு நீங்கள் பயந்து நடந்துகொள்ளுங்கள். (அல்குர்ஆன் 58 : 9)
அல்லாஹ்வுடைய தக்வாவை அல்லாஹ் நினைவூட்டுகின்றான்.
وَاخْشَوْا يَوْمًا لَا يَجْزِي وَالِدٌ عَنْ وَلَدِهِ وَلَا مَوْلُودٌ هُوَ جَازٍ عَنْ وَالِدِهِ شَيْئًا
மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு அஞ்சி ஒரு நாளைப்பற்றியும் பயந்து கொள்ளுங்கள். (அந்நாளில்) தந்தை பிள்ளைக்கு உதவமாட்டார்; பிள்ளையும் தந்தைக்கு ஒரு உதவியும் செய்ய மாட்டான். (ஒவ்வொருவரும் தன்னையே பாதுகாத்துக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கின்ற நாளாகும் அது.) (அல்குர்ஆன் 31: 33)
خشية-ஹஷ்யத் என்றால் நெருப்பு நம்மை சூழ்ந்து கொள்கின்றது. இதிலிருந்து நான் எப்படி தப்பிப்பேன்? என்று மனதில் ஒரு பயம் வரும்.அல்லது கொடிய விஷப்பாம்புகள்,கொடிய மிருகங்கள்,பயங்கரமான எதிரிகள் நம்மை சூழ்ந்து கொள்ளும்போது இவர்களுடைய ஆபத்துக்களிலிருந்து என்னை நான் எப்படி பாதுகாத்துக்கொள்வேன் என்று உள்ளத்தில் ஒரு பய உணர்வு வரும்.அதுபோன்ற ஒரு பயம் தான் ஹஷ்யத் என்பது.
இந்த வசனத்திலிருந்து (அல்குர்ஆன் 31: 33)நாம் நம்முடைய வாழ்க்கையில் குடும்பவியல் ரீதியாக ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தன் தாய்க்கு பணிவிடை செய்யவேண்டும் என்று முக்கியத்துவம் கொடுக்கும் நம் மார்க்கம் அதே நேரத்தில், தந்தைக்கு நிகரான உயர்ந்த அந்தஸ்து இந்த உலகத்தில் வேறு யாருக்கும் இல்லை என்று கூறுகிறது.
ஆகவே தான் ஒரு ஹதீஸை இமாம் புகாரி (ரஹி) அவர்கள் பதிவு செய்கிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
உங்களுக்கு நான் உங்களுடைய தந்தையைவிட, உங்களது பிள்ளைகளை விட, உலக மக்கள் அனைவரையும் விட விருப்பமானவனாக ஆகிவிடும் வரை நீங்கள் முஃமின்கள் ஆகிவிட முடியாது. (1)
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 15.
தாய்க்கு பணிவிடை செய்கின்ற,தாயின் மீது பாசம் வைக்கின்ற அதே நேரத்தில் தன்னுடைய உள்ளத்தில் தந்தை மீது உண்டான மரியாதை, அக்கறை, அவருக்கு பணிந்து நடப்பதில் மார்க்கம் மிக மிக அழுத்தத்தை, வழியுறுத்தலை கொடுத்திருக்கிறது என்பதை இந்த வசனத்திலிருந்து புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே தான் (அல்குர்ஆன் 31:33) மறுமையில் மகன் தந்தைக்கு உதவ முடியாது. தந்தை மகனுக்கு பலன் தர முடியாது என்று அல்லாஹ் சொல்கின்றான்.
பிறகு அல்லாஹ் சொல்கின்றான்:
إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ
நிச்சயமாக (அந்நாள் வருமென்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி விட வேண்டாம். (ஷைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம். (அல்குர்ஆன் 31: 33)
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மறுமையை அதிகம் பயந்தவர்களில், மறுமைக்கான தயாரிப்புகளில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக் கொண்டவர்களில் முதலாம் நபராக இருக்கின்றார்கள்.
அவர்கள் நமக்கு மிகப்பெரிய முன்மாதிரியாக இருக்கின்றார்கள்.
நாளை மறுமைக்கு செல்லும் போது தான் மனிதன் படக்கூடிய கைசேதம் தெரியும்.
ஆஹா! இவ்வளவு வாழ்க்கையை,நேரங்களை, நாட்களை, மாதங்களைநான் வீணாக்கி விட்டேனே!என்று கவலைப் படுவான். அப்போது கவலைப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை.
இப்போது அல்லாஹ் நமக்கு வாய்ப்பு கொடுத்திருக்கின்றான். நேரத்தை கொடுத்து இருகின்றான்.
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அமல்களை பற்றி ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள் :
لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِنْ شَعْبَانَ، فَإِنَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஷஅபான் மாதத்தை விட அதிகமாக ஒரு மாதத்தில் நோன்பு வைக்க மாட்டார்கள். ஷஅபான் மாதம் முழுவதும் அவர்கள் நோன்பு வைப்பார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷாரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி, எண் : 1970.
ஒரு மாதத்தில் திங்கள் வியாழன் பிறகு அய்யாமுல் பீழ் என்று சொல்லப்படக்கூடிய அந்த மூன்று நாட்கள் தவிர, மற்ற நாட்களில் பெரும்பாலும் ரஸூலுல்லாஹ் அவர்கள் நோன்பு இல்லாமல் இருப்பார்கள்.
ஆனால் ஷஅபான் மாதம் வந்து விட்டால் ஷஅபான் மாதத்தின் உடைய பெரும்பகுதி, கடைசியில் உள்ள அந்த சந்தேக நாட்களைத் தவிர அதிகமாக நோன்பு இருப்பார்கள்.
மேலும் உம்மு சலமா ரழியல்லாஹுஅன்ஹாகூறுகின்றார்கள்:
«مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ إِلَّا شَعْبَانَ وَرَمَضَانَ»
இரண்டு மாதங்களைத் தவிர தொடர்ந்து ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பு வைத்து பார்த்ததில்லை. ஷஅபான், ரமலானைத் தவிர.
அறிவிப்பாளர் : உம்மு சலமா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : திர்மிதி,எண் : 736, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
அந்தளவு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஷஅபான் மாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
யார் ஷஅபானில் அதிகம் நோன்பிருந்து கொள்கின்றார்களோஅவர்களுக்கு ரமலானுடைய நோன்பு அது போன்று ரமலானுடைய வணக்க வழிபாடுகள் மிக இலகுவாக ஆகிவிடும்.
ஷஅபான் மாதத்தில் நோன்பிருப்பதன் நன்மைகளில் ஒன்றாக அறிஞர்கள் கூறுகின்றார்கள்: ரமலானுடைய நோன்பு மிகவும் இலகுவாகி விடும்.
சிலரைப் பார்க்கின்றோம்; முதல் நோன்பு இரண்டாவது நோன்பு மூன்றாவது நோன்பில் பார்த்தால் ளுஹர் தொழுகையிலேயே ஆள் மயக்கடித்துக் கிடப்பார். எதுவுமே செய்ய முடியாது. அப்படியே ஒரு வித மயக்கத்தில், களைப்பில் இருப்பார்.
என்ன காரணம்? ரமலானுடைய நோன்பை தவிர, மற்ற நாட்களில் நோன்பு வைத்தே பழகவில்லை.
அதனால் தான் அந்த காலத்தில் சொல்வார்கள் : தலை நோன்பு அவர்களை பிடுச்சிருச்சு. தலை நோன்பு வைப்பதென்றால் மிகவும் சிரமமாக இருக்கும்.
ஏன்? மற்ற நாட்களில் நோன்பில்லாத காரணத்தால், நோன்பு வைத்து பழகாத காரணத்தால் குறிப்பாக ரமலானுடைய முதல் பத்து நோன்பு வைப்பது அவர்களுக்கு மிக சிரமமாக இருக்கும்.
ளுஹா நேரத்திலேயே தண்ணீர் தாகம் எடுக்கிறது என்று சொல்வார்கள். அஸருடைய நேரத்தில் அவ்வளவு தான் முடிந்தது. வேறு எதுவும் அவர்களால் செய்ய முடியாது. எப்போதுதான் இஃப்தாருக்கு நேரம் வரும் என்று இஃப்தாரை நோக்கியே இருப்பார்கள்.
இதற்கு காரணம் என்ன? அவர் தன்னுடைய நஃப்ஸை மற்ற நாட்களில் நோன்பு வைத்து பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை.
ஷஅபான் மாதத்தில் நோன்பு வைப்பது குறித்தும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உடைய ஹதீஸ் வருகிறது.
உஸாமா (ரலி) ரஸூலுல்லாஹ்விடத்தில் கேட்கிறார்கள்;
يَا رَسُولَ اللَّهِ، لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ
அல்லாஹ்வுடைய தூதரே! ஷாபான் மாசத்தில் நீங்கள் நோன்பு இருக்க கூடிய அளவிற்கு மற்ற மாதங்களில் நீங்கள் நோன்பு இருப்பதை நான் கவனிக்கவில்லையே!
அதற்கு நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் :
«ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ، وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الْأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ، فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ»
இந்த ஷஅபான் மாதம் பெரும்பாலும் அதிகமான மக்கள் கவனமற்று மறதியில் இருக்கக்கூடிய மாதம். ரஜபுக்கும், ரமலானுக்கும் இடையிலுள்ள இந்த மாதத்தில் தான் பெரும்பாலான மக்கள் அலட்சியம் செய்து விடுகிறார்கள். இந்த மாதத்தில் தான் அல்லாஹ்விடத்தில் நம்முடைய அமல்கள் உயர்த்தப்படுகின்றன.
நான் நோன்பு இருந்த நிலையில் என்னுடைய அமல்கள் உயர்த்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். எனவே தான் ஷஅபான் உடைய மாதத்தில் நான் அதிகம் நோன்பு இருக்கிறேன் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : உஸாமா இப்னு ஜைத்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : நசாயி,எண் : 2357, தரம் : ஹசன் (அல்பானி)
முன், பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட, அமல்களையே வாழ்க்கையாக மாற்றிக்கொண்ட, வணக்க வழிபாடுகளேயே தன்னுடைய வழக்கமாக மாற்றிக்கொண்ட அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த ஷஅபானுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்றால்,
நாமோ நம்முடைய வாழ்க்கையில் எத்தனை நாட்களில் எத்தனை மாதங்களில் அல்லாஹ்வை மறந்து வணக்க வழிபாடுகளில் அலட்சியம் செய்துவிட்டோம்.
எனவே நாம் இந்த ஷஅபானை பேண வேண்டும். நம்முடைய அமல்கள் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
அல்லாஹுத்தஆலா அமல்களை குறித்து, சொர்க்கத்தை குறித்து, மறுமையை குறித்து, அல்லாஹ்வுடைய பாவமன்னிப்பை குறித்து, நம்மை எப்படி ஆர்வமூட்டிகின்றான் என்று பாருங்கள்.
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ
உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சொர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறையச்சம் உடையவர்களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 3 : 133)
எப்பொழுதுமே ஒரு முஃமினுடைய நிலைப்பாடு இப்படி இருக்க வேண்டும்; அதாவது அமல்களில் அவரை விட நான் அதிகமாக இருக்க வேண்டும். இதுதான் குர்ஆன் சொல்லக்கூடிய வழிகாட்டல்.
ஆனால் நாமோ இன்று உலக விஷயங்களில் அந்த போட்டியை வைத்துக் கொண்டோம். மறுமையை மறந்து விட்டோம்.
அல்லாஹ்வுடையதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தர்பியத்தால்உருவாக்கப்பட்ட தோழர்கள், அவர்களுடைய வாழ்நாள் லட்சியம் கவலையெல்லாம் அமல்களில் முந்த வேண்டும்.அமல்களில் தீவிரம் காட்ட வேண்டும்.
ஸஹாபாக்கள் உடைய உள்ளத்தின் நிலைப்பாடு அப்படித்தான் இருந்தது. சொர்க்கம் வாக்களிக்கப்பட்டவர்கள், அல்லாஹ்வுடைய தூதர் அவர்களுடைய நாவால் சொர்க்கத்தை கொண்டு சாட்சி கூறப்பட்டவர்கள்.
ஆனால், அப்படி இருந்தும் கூட அவர்கள் பயந்தார்கள்.அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளில் ஒருவரை ஒருவர் முந்துவதற்கு போட்டிகளில் இருந்தார்கள்.
உமர் இப்னு கத்தாப் (ரலி)அவர்கள் இந்த ஹதீஸை அறிவிக்கின்றார்கள். அவர்கள் தங்களைப் பற்றி சொல்கிறார்கள்:
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்)அவர்கள் ஒரு நாள் தர்மங்களைக் கொண்டுவந்து நீங்கள் இங்கு பள்ளியில் ஒன்று சேருங்கள் என்று எங்களுக்கு ஒரு கட்டளை கொடுத்தார்கள். அப்போது என்னிடத்தில் அதிகமாக செல்வம் இருந்தது. (போரிலிருந்து அவர்கள் திரும்பி இருக்கலாம். கனீமத்தில் இருந்து அவர்களுக்கு கிடைத்து இருக்கலாம்.)உடனே உமர் (ரலி)அவர்கள் முடிவு செய்தார்கள்.
இன்று நான் அபூபக்ரை முந்துவதற்கு உண்டான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று தன்னுடைய செல்வத்தில் பாதியை எடுத்துக்கொண்டு ரஸூலுல்லாஹ்விடத்தில் வருகிறார்கள். ரஸூலுல்லாஹ் அவர்கள் கேட்கிறார்கள்.
«مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ؟»
உமரே!உங்களுடைய குடும்பத்திற்கு எதை வைத்து விட்டு வந்தீர்கள். சொன்னார்கள்: அல்லாஹ்வின் தூதரே!இங்கு கொண்டுவந்த அளவிற்குஅங்கு என் குடும்பத்திற்கு இருக்கின்றது. பாதியைக் கொண்டு வந்துவிட்டேன். பாதி குடும்பத்திற்கு.
அபூபக்கரை பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.
அபூபக்ரே!உங்களது குடும்பத்தாருக்கு எதை வைத்து விட்டு வந்தீர்கள்? அபூபக்ர் சித்திக் (ரலி)அவர்கள் சொல்லக்கூடிய அந்த ஈமானின் வார்த்தையைப் பாருங்கள்.
أَبْقَيْتُ لَهُمُ اللَّهَ وَرَسُولَهُ
நான் அவர்களுக்காக அல்லாஹ்வையும், ரஸூலையும் வைத்து விட்டு வந்தேன்.
உமர் சொல்கிறார் :
لَا أُسَابِقُكَ إِلَى شَيْءٍ أَبَدًا
அபூபக்ரே!ஒருக்காலும் நான் எதிலும் உங்களை முந்தி விட முடியாது என்று.
அறிவிப்பாளர் : உமர்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூத்,எண் : 1678, தரம் : ஹசன் (அல்பானி)
இது தான் அந்த தூய ஸஹாபாக்களுடைய மனநிலமையாக இருந்தது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மற்றும் ஒரு ஹதீஸை நாம் புகாரியில் பார்க்கின்றோம்.
அப்துல்லாஹ் இப்னு அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே நடந்த உரையாடல்.
அப்துல்லாஹ் இப்னு அம்ரு பின் ஆஸ் பிரசித்தி பெற்ற அம்ரு பின் ஆஸ் அவருடைய மகனார். அமல்களில் தன்னை முழுமையாக மறந்து விட்டவர்.
இந்த அப்துல்லாஹ் இப்னு அம்ரு பின் ஆஸ் ஸஹாபாக்களிலேயே வணக்கசாலி. மறுமைக்காக உள்ளவர் என்று பிரசித்திப் பெற்றவர். ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள், அவர்களை கூப்பிட்டு சொல்கிறார்கள் :
அப்துல்லாஹ் இப்னு ஆஸே! எனக்கு ஒரு செய்தி கிடைத்தது.
நீங்கள் பகலெல்லாம் நோன்பு நோற்கின்றீர்கள். இரவெல்லாம் நின்று வணங்குகின்றீர்கள் என்று. இது உண்மை தானா?
அப்போது ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் அப்துல்லாஹ் இப்னு அம்ரு சொல்கின்றார்கள். ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அப்படித்தான் செய்கின்றேன். இது ஒரு நீண்ட சம்பவம்.
அப்பொழுது ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:அப்துல்லாஹ் அப்படி செய்யாதே!
ஒரு நாள் நோன்பு வையுங்கள்;ஒரு நாள் நோன்பு இல்லாமல் இருங்கள்.
அது போன்று இரவில் தூங்கவும் செய்யுங்கள்;தொழவும் செய்யுங்கள்.
உனது உடம்பிற்கும் உன் மீது ஒரு கடமை இருக்கின்றது. உனது கண்ணிற்கும் உன் மீது ஒரு கடமை இருக்கிறது. உனது மனைவிக்கும் உன் மீது ஒரு கடமை இருக்கின்றது என்று ரஸூல் (ஸல்) அவர்கள் அவர்களை இந்த துன்யாவின் பொறுப்பின் பக்கம் திருப்புகிறார்கள்.
ஆனால்,அப்துல்லாஹ் இப்னு அமர் இப்னு ஆஸ்,இதை விட எனக்கு அமல் செய்வதற்கு ஆற்றல் இருக்கிறது. எனவே எனக்கு இன்னும் அமல்களின் எண்ணிக்கையை கூட்டுங்கள் கூட்டுங்கள் என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் அவர்களிடத்தில் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் இன்னும் சலுகைகளை கேட்கின்றார்கள்.
(நாம் எப்படி அமல்களை விடுவதற்கு ஏதாவது சலுகை இருக்கின்றதா? அமல்களை குறைத்துக் கொள்வதற்கு ஏதாவது சலுகை இருக்கின்றதா? என்று தேடுவோம்.)
ஆனால், அப்துல்லாஹ் இப்னு அமர் இப்னு ஆஸ் (ரலி) எனக்கு இன்னும் சக்தி இருக்கின்றது. எனவே எனக்கு அமல்களை செய்வதற்கு அதிகம் எண்ணிக்கையை அதிகப்படுத்தி கொடுங்கள். அதிகம் வாய்ப்பைக் கொடுங்கள் என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் அவர்களிடத்தில் அவர்கள் தர்க்கம் செய்கின்றார்கள்.(3)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அமர் இப்னு ஆஸ்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1975.
அந்த வழியில் வந்த தாபியீன்களையும் அவர்கள் எப்படி அமல்களில் அதிக ஆர்வத்தோடு இருந்தார்கள் என்று நாம் பார்க்கிறோம்.
அபூ இஸ்ஹாக் ஸஹீக்கி ரஹிமஹுல்லாஹ் ஹதீஸ் கலையில் மூத்தவர்கள். தாபியீன்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர்.ஹிஜ்ரி 33 -ல் பிறந்து 127-ல் வஃபாத் ஆனவர்கள்.90வயது ஆனவர்கள்.
தன்னுடைய மாணவர்களைப் பார்த்து சொல்கின்றார்கள்:வாலிப மாணவர்களே!உங்களுடைய வாலிபத்தை கனிமத்தாக நீங்கள் கருதி விடுங்கள். அமல்களுக்கு உண்டான இந்த நேரத்தை வீணடித்து விடாதீர்கள்.
தங்களைப்பற்றி சொல்கின்றார்கள்:
قلما مرت بي ليلة إلا وأنا أقرأ فيها ألف آية
என் வாழ்க்கையில் பெரும்பாலான இரவுகளில் குறைந்தது ஓராயிரம் வசனங்களை நான் ஓதுவேன்.
وإني لأقرأ البقرة في ركعة
ஒரு ரக்அத்தில் சூரா பகராவை ஓதி முடிப்பேன்.
وإني لأصوم الأشهر الحرم
புனித மாதங்கள் நான்கு மாதங்களும் முழுமையாக நோன்பு வைப்பேன்.
وثلاثة أيام من كل شهر والاثنين والخميس
ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள், திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் நோன்பு வைப்பேன்.
ஆனால், இப்போது என்னுடைய வயோதிகத்தினால் கண் குருடாகி விட்டது. பலவீனம் அடைந்து விட்டார்கள். இப்போது எனக்கு அது முடியவில்லை என்று. அதில் சில அமல்கள் தவறி விடுகின்றன என்று அவர்கள் பயந்தார்கள். கவலையுடன் கூறினார்கள்.
சகோதரர்களே! இன்று நம்முடைய வாலிப வாழ்க்கை,நம்முடைய உடல் ஆரோக்கியமிக்க இந்த காலங்கள் எப்படி வீணாகக் கழிகின்றன என்று நாம் வருந்த வேண்டும்.
அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் அவர்கள் இந்த ஷஅபான் மாதத்தில் அமல்களுக்குண்டான தர்பியத்தை கொடுத்தார்கள்.
வணக்க வழிபாடுகளிலும் சரி, குர்ஆன் ஓதுவதிலும் சரி, அதுபோன்று ரமலானிலும் நோன்பு வைத்து பயிற்சி செய்வதிலும் சரி,இந்த ஷஅபான் உடைய மாதம் மிகவும் கவனிக்க கூடிய ஒன்று.
அதே நேரத்தில் இந்த ஷஅபான் மாதத்தில் மக்கள் உருவாக்கிய சில அனாச்சாரங்களும், பித்அத்களும் இருக்கிறன. பித்அத்துகளை குறித்து நாம் அதிகம் பயப்பட வேண்டும்.
அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் அவர்கள் சொன்னார்கள்:
«مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ»
யார் நம்முடைய மார்க்கத்தில் நாம் கூறாத வணக்க வழிபாடுகளை புதிதாக உருவாக்கிக் கொண்டு செய்தாரோ அது மறுக்கப்பட வேண்டியது என்பதாக.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி,எண் : 2697.
இன்று பார்க்கின்றோம் ஷஅபான் உடைய மாதத்தில் அந்த 15-வது இரவில் அதை ஒரு பராஅத் இரவு என்று வைத்துக்கொண்டு, இன்னும் அதைத்தொடர்ந்து மறுநாள் நோன்பு என்று அதை ஒரு சடங்குகளாக வணக்க வழிபாடுகளாக செய்து கொண்டு வருவதை நாம் பார்க்கின்றோம்.
இந்த பராஅத் இரவை பற்றி வரக்கூடிய, இதனுடைய இரவில் அமல் செய்வதைப்பற்றி, பகலில் நோன்பு நோற்பதை பற்றி வரக்கூடிய, எல்லா ஹதீஸ்களும் மறுக்கப்பட்டவை. ஒன்று பொய்யானவை அல்லது மிகவும் பலவீனமானவை.
அதிகப்படியாக இந்த ஷஅபானுடைய சம பாதி இரவில் ஒரு ஹதீஸ் ஹஸனுடைய தரத்தில் வருகிறது. அந்த ஹதீஸ் என்ன சொல்கிறது?
ஷஅபானுடைய அந்த நிஸ்ஃபில் –பாதியில் அல்லாஹு தஆலா தன்னுடைய அடியார்களைப் பார்த்து அவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்குகின்றான்.
இணை வைப்பவர்களை தவிர, சண்டை சச்சரவு செய்து கொண்டவர்களை தவிர. (4)
அறிவிப்பாளர் : அபூ மூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 1390, தரம் : ஹசன் (அல்பானி)
இந்த ஹதீஸைத் தவிர வேறு எந்த ஹதீஸும் ஸஹீஹ் ஆனது இல்லை. இந்த ஷஅபானுடைய பாதி இரவைக் குறித்து.
இந்த ஹதீஸ் நமக்கு என்ன கூறுகிறது?
எப்பொழுதும் நாம் ஷிர்கிலிருந்தும், பிறரிடம் சண்டை சச்சரவு செய்வதிலிருந்தும், அவர்களிடத்தில் பேசாமல் இருப்பதிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அந்த நிஸ்ஃபு ஷஅபானில்,வியாழக்கிழமைகளில் அல்லாஹ் கொடுக்கக்கூடிய பாவமன்னிப்பு நமக்கு கிடைக்கும்.
இன்னொரு பக்கம், நிஸ்ஃப் ஷஅபான் என்று 15முடிவு செய்திருக்கிறார்கள். இதுவே மிகப்பெரிய தவறு.
ஒரு மாதத்தினுடைய நிஸ்ஃப் என்பது ஆங்கில மாதம் என்றால் இப்பொழுதே முடிவு செய்து விடலாம்.
அரபி மாதங்களை பொருத்தவரை மாதம் முடியும்போது தான் தெரியும்; முப்பதில் முடிகின்றதா? அல்லது 29-ல் முடிகின்றதா? என்பதை வைத்து தான் நிஃப்ஸை அறிய முடியும். அது அல்லாஹ் உடைய இல்மில் இருக்கின்றது.
அப்படியிருக்க ஷஅபானுடைய 15நிஸ்ஃப் என்று முடிவு செய்வது மிகப் பெரிய அறியாமை என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அதுபோன்று சகோதரர்களே! இன்று,அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் அவர்களுடைய ஹதீஸை புறக்கணித்து விட்டு மக்கள் தங்களுடைய அறிவியலையும், அறிவையும் முன்வைக்கின்றார்கள்.அவர்களைக் குறித்த எச்சரிக்கையும் நாம் பயந்து கொள்ள வேண்டும்.
இன்று கணக்கின் அடிப்படையில் முன்கூட்டியே ரமழானை நாங்கள் முடிவு செய்து விட்டோம் என்று ஷஅபான் இத்தனை பிறை தான்; ரமலான் இந்த தேதியில் தான் ஆரம்பமாகின்றது என்று இப்பொழுதே நோன்பை முடிவு செய்கின்றார்கள்.இது மிகப் பெரிய பாவம். மிகப்பெரிய வழிகேடு என்பதை பதிவு செய்து கொள்ளுங்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் அவர்கள் சொன்னார்கள்:
«لاَ يَتَقَدَّمَنَّ أَحَدُكُمْ رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ، إِلَّا أَنْ يَكُونَ رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمَهُ، فَلْيَصُمْ ذَلِكَ اليَوْمَ»
ரமலானுக்கு முந்தி ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் யாரும் நோன்பு வைக்க வேண்டாம். ஆனால் வழமையாக அவர் வைக்கின்ற திங்கள் வியாழன் நோன்பைத் தவிர,அப்படி இருந்தால் அவர் வைக்கலாம்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1914.
அதுபோன்று இன்னொரு ஹதீஸை இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் பதிவு செய்கின்றார்கள். (திர்மிதி எண்:686)
அம்மார் (ரலி) அவர்கள் இடத்தில் ஒரு பொரித்த ஆடு வருகிறது. அவர்களும் சாப்பிட்டார்கள் தங்களுக்கு முன்னால் இருந்தவர்களையும் சாப்பிடச் சொன்னார்கள். அப்பொழுது முன்னால் இருந்தவர்கள் நாங்கள் சாப்பிட மாட்டோம்; நாங்கள் நோன்பு வைத்து இருக்கின்றோம் என்று சொன்னார்கள்.
அம்மார் (ரலி)அவர்கள் கோபப்பட்டார்கள்;சொன்னார்கள்:
«مَنْ صَامَ اليَوْمَ الَّذِي يَشُكُّ فِيهِ النَّاسُ فَقَدْ عَصَى أَبَا القَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
யார் அந்த சந்தேக நாளில் நோன்பு வைப்பாரோ,அவர் அல்லாஹ்வுடைய தூதருக்கு திட்டமாக மாறு செய்துவிட்டார். (5)
அறிவிப்பாளர் : அம்மார் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 686, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
சந்தேக நாள் என்றால் எது? ஷஅபானுடைய கடைசி 29 வது நாள் முடிந்து அடுத்த நாள் சந்தேக நாள். அது ஷஅபானுடைய முப்பதாவது நாளாகவும் இருக்கலாம்.ரமலானுடைய ஒன்றாவது நாளாகவும் இருக்கலாம்.
மேலும் பல எச்சரிக்கைகளை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் சொன்னார்கள்.ரமலானுடைய பிறை குறித்து அந்த நோன்பு ஆரம்பிப்பது குறித்து.
இமாம் நசாயி பதிவு செய்கின்றார்கள்:
«صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ حَالَ بَيْنَكُمْ وَبَيْنَهُ سَحَابَةٌ أَوْ ظُلْمَةٌ، فَأَكْمِلُوا الْعِدَّةَ عِدَّةَ شَعْبَانَ، وَلَا تَسْتَقْبِلُوا الشَّهْرَ اسْتِقْبَالًا، وَلَا تَصِلُوا رَمَضَانَ بِيَوْمٍ مِنْ شَعْبَانَ»
பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கும் பிறைக்கும் நடுவில் மேகமும் இருளும் சூழ்ந்து கொண்டால்நீங்கள் ஷஅபானுடைய எண்ணிக்கையை 30ஆக பூர்த்தி செய்யுங்கள்.
ரமலான் வருவதற்கு முன்பே நீங்கள் அதை வரவேற்று விடாதீர்கள். ஷஅபானுடைய பிறையை முடிய விடுங்கள்.
ரமலானை ஷாபான் உடைய ஒரு நாளோடு நீங்கள் சேர்த்து விடாதீர்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : நசாயி, எண் : 2189, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
சகோதரர்களே! இந்த தெளிவான ஹதீஸிற்க்கு பிறகு எந்த அறிவியலுக்கும் எந்த கணக்கிற்கும் இந்த மார்க்கத்தில் அனுமதி கிடையாது.
மேலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் சொன்னார்கள்:
«أَحْصُوا هِلَالَ شَعْبَانَ لِرَمَضَانَ»
இப்போதிலிருந்தே ஷஅபானுடைய பிறையை எண்ண ஆரம்பித்து விடுங்கள். (6)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி,எண் : 687, தரம் : ஹசன் (அல்பானி)
இன்று பிறை 4.இன்று பிறை 5என்று ஒவ்வொரு நாளும் பிறையை ரமலான் வரை எண்ணி கொண்டே வாருங்கள். எப்போது பிறை தென்படவில்லையோ அப்பொழுது ஷஅபான் முடிகிறது. பிறகு அடுத்த நாள் பிறை உதிக்கவில்லை என்றால் ஷஅபான் முப்பதாக முழுமை அடைகிறது. அதற்கு பிறகு ரமலான் உடைய பிறை ஆரம்பமாகிறது.
இப்படி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பல ஹதீஸ்களை நாம் பார்க்கின்றோம்.
ஆகவே, இந்தக் குழப்பவாதிகளும், அல்லாஹ்வுடைய தூதரின் ஹதீஸ்களை புறக்கணிப்பவர்களும், ஹதீஸ்களை அலட்சியம் செய்பவர்களும் இப்போதிலிருந்தே ஹிஜ்ரா காலண்டர் என்பதாக உங்களுக்கு மத்தியில் குழப்பங்களை விதைக்க ஆரம்பிப்பார்கள்.
ரமலானுடைய ஒரு நோன்பை விடப் போகின்றீர்களா?
ரமலானுடைய ஒரு நோன்பில் சாப்பிடப் போகிறீர்களா?
எவ்வளவு பெரிய ஹராம் என்று பிரச்சாரங்களை செய்ய ஆரம்பிப்பார்கள்.
சகோதர்களே! அவர்களுடைய மடத்தனமான அறிவில்லாத பிரச்சாரங்களை நம்பி அல்லாஹ்வுடைய தூதருக்கு மாறு செய்து விடாதீர்கள். மார்க்கத்தை மீறி விடாதீர்கள்.
அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் இந்த ஷஅபானுடைய மாதத்தை அமல்களை கொண்டு நிரப்பமாக்கி கொள்வதற்கும், அமல்களில் இந்த ஷஅபானுடைய மாதத்தை கழிப்பதற்கும், ரமலானுடைய மாதத்தை அடையப் பெற்று அதிலும் அதிகமதிகம் அல்லாஹ்வை வணங்கி மறுமையுடைய நற்பேறுகளை பெற உதவி செய்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ عَبْدِ العَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ح وحَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ» (صحيح البخاري- 15)
குறிப்பு 2)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَهَذَا حَدِيثُهُ، قَالَا: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: " أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا أَنْ نَتَصَدَّقَ، فَوَافَقَ ذَلِكَ مَالًا عِنْدِي، فَقُلْتُ: الْيَوْمَ أَسْبِقُ أَبَا بَكْرٍ إِنْ سَبَقْتُهُ يَوْمًا، فَجِئْتُ بِنِصْفِ مَالِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ؟»، قُلْتُ: مِثْلَهُ، قَالَ: وَأَتَى أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ بِكُلِّ مَا عِنْدَهُ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ؟» قَالَ: أَبْقَيْتُ لَهُمُ اللَّهَ وَرَسُولَهُ، قُلْتُ: لَا أُسَابِقُكَ إِلَى شَيْءٍ أَبَدًا (سنن أبي داود 1678 -) ]حكم الألباني] : حسن
குறிப்பு 3)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ العَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَبْدَ اللَّهِ، أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَصُومُ النَّهَارَ، وَتَقُومُ اللَّيْلَ؟»، فَقُلْتُ: بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ: «فَلاَ تَفْعَلْ صُمْ وَأَفْطِرْ، وَقُمْ وَنَمْ، فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ بِحَسْبِكَ أَنْ تَصُومَ كُلَّ شَهْرٍ ثَلاَثَةَ أَيَّامٍ، فَإِنَّ لَكَ بِكُلِّ حَسَنَةٍ عَشْرَ أَمْثَالِهَا، فَإِنَّ ذَلِكَ صِيَامُ الدَّهْرِ كُلِّهِ»، فَشَدَّدْتُ، فَشُدِّدَ عَلَيَّ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَجِدُ قُوَّةً قَالَ: «فَصُمْ صِيَامَ نَبِيِّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ [ص:40]، وَلاَ تَزِدْ عَلَيْهِ»، قُلْتُ: وَمَا كَانَ صِيَامُ نَبِيِّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ؟ قَالَ: «نِصْفَ الدَّهْرِ»، فَكَانَ عَبْدُ اللَّهِ يَقُولُ بَعْدَ مَا كَبِرَ: يَا لَيْتَنِي قَبِلْتُ رُخْصَةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ (صحيح البخاري- 1975)
குறிப்பு 4)
حَدَّثَنَا رَاشِدُ بْنُ سَعِيدِ بْنِ رَاشِدٍ الرَّمْلِيُّ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ ابْنِ لَهِيعَةَ، عَنِ الضَّحَّاكِ بْنِ أَيْمَنَ، عَنِ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ» ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَسْوَدِ النَّضْرُ بْنُ عَبْدِ الْجَبَّارِ قَالَ: حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنِ الزُّبَيْرِ بْنِ سُلَيْمٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ أَبَا مُوسَى عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ (سنن ابن ماجه 1390) [حكم الألباني] حسن
குறிப்பு 5)
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الأَشَجُّ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، قَالَ: كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: كُلُوا، فَتَنَحَّى بَعْضُ القَوْمِ، فَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ عَمَّارٌ: «مَنْ صَامَ اليَوْمَ الَّذِي يَشُكُّ فِيهِ النَّاسُ فَقَدْ عَصَى أَبَا القَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ، وَأَنَسٍ.: «حَدِيثُ عَمَّارٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ، وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ، وَمَالِكُ بْنُ أَنَسٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ، وَالشَّافِعِيُّ، وَأَحْمَدُ، وَإِسْحَاقُ، كَرِهُوا أَنْ يَصُومَ الرَّجُلُ اليَوْمَ الَّذِي يُشَكُّ فِيهِ، وَرَأَى أَكْثَرُهُمْ إِنْ صَامَهُ فَكَانَ مِنْ شَهْرِ رَمَضَانَ أَنْ يَقْضِيَ يَوْمًا مَكَانَهُ " (سنن الترمذي- 686) [حكم الألباني] : صحيح
குறிப்பு 6)
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ حَجَّاجٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْصُوا هِلَالَ شَعْبَانَ لِرَمَضَانَ»: «حَدِيثُ أَبِي هُرَيْرَةَ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِثْلَ هَذَا إِلَّا مِنْ حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ»، وَالصَّحِيحُ مَا رُوِيَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَقَدَّمُوا شَهْرَ رَمَضَانَ بِيَوْمٍ وَلَا يَوْمَيْنِ»، وَهَكَذَا رُوِيَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ حَدِيثِ مُحَمَّدِ بْنِ عَمْرٍو اللَّيْثِيِّ (سنن الترمذي- 687) [حكم الألباني] : حسن
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/