HOME      Khutba      நல்லோரும் நல்லமலும்!! | Tamil Bayan - 545   
 

நல்லோரும் நல்லமலும்!! | Tamil Bayan - 545

           

நல்லோரும் நல்லமலும்!! | Tamil Bayan - 545


بسم الله الرحمن الرّحيم

நல்லோரும் நல்லமலும்

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ் அடியார்கள் மீது தனிப் பெரும் கருணையை,அருளை,அன்பை பொழிய நாடுகின்றான்.

அல்லாஹ்வுடைய தனிப்பெரும் கருணை விசேஷமாக யாருக்கு கிடைக்கும் என்றால், யாருடைய உள்ளம் ஈமான் -இறை நம்பிக்கையாலும் பிறகு இஹ்லாஸ் –மனத் தூய்மையாலும் சிறந்து இருக்கிறார்களோ அவர்களுக்கு கிடைக்கும்.

இஹ்லாஸ் என்பது என் அமல்களை அல்லாஹ் மட்டுமே பார்க்கவேண்டும். நான் நல்லவன் என்பது அல்லாஹ்விற்கு தெரிந்தால் போதும். அல்லாஹ் என்னை திருப்திக்கொள்ள வேண்டும். நான் எப்படிப்பட்டவன் என்பதை மக்கள் அறியாமல் இருப்பதே நல்லது. இந்த ஒரு நிலை தான் இஹ்லாஸ் என்பது.

யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் ஒரு பெரிய சோதனைக்கு ஆளானார்கள்.அந்த நேரத்தில் அல்லாஹுத்தஆலா யூசுஃப் நபியை பாதுகாத்தான்.

யூசுஃப் நபி எப்படி அல்லாஹ்வுடைய பாதுகாப்புக்கு தகுதி உடையவராக ஆனார் என்று அல்லாஹுத்தஆலா விளக்கம் கூறுகிறான் :

إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِينَ

நிச்சயமாக, அவர் நம் (உண்மையான) பரிசுத்தமான அடியார்களில் ஒருவராக இருந்தார். (அல்குர்ஆன் 12:24)

எவ்வளவு அழகாக ரப்புல் ஆலமீன் நமக்கு பாடம் சொல்லித் தருகிறான் என்பதை கவனியுங்கள்.

எந்த இடத்தில் அல்லாஹ்வுடைய பாதுகாப்பு இல்லை என்றால் ஷைத்தான் உடைய வலையில் நாம் சிக்கிக் கொள்வோமோ,நப்ஸ் உடைய ஏமாற்றத்தில் விழுந்து நரகப் படுகுழியில் விழுந்துவிடுவோமோ அந்த இடத்தில் அல்லாஹ்வுடைய பாதுகாப்பு இல்லை என்றால் நாம் நாமாக தப்பிக்க முடியாது.

இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய ஸஹீஹ் நூலில் ஒரு பாடமே அமைக்கிறார்கள்.

المعصوم من عصمه الله

யாரை அல்லாஹ் பாதுகாத்தானோ அவர்தான் பாதுகாக்கப்பட்டவர்.

நீங்களோ நானோ பெருமை பேசிக் கொள்ள முடியாது, நான் என்னை சுத்தமாக வைத்திருப்பேன், நான் அப்படிப்பட்டவன் அல்ல, என்று பெருமை பேசுவதற்கு உண்டான அருகதை நமக்கு கிடையாது.

ரப்பு சொல்கிறான்:

فَلَا تُزَكُّوا أَنْفُسَكُمْ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَى

ஆகவே, ‘‘தூய்மையானவர்கள்' என உங்களை நீங்களே தற்புகழ்ச்சி செய்துகொள்ளாதீர்கள். உங்களில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்பவர்கள் யாரென்பதை அவன் நன்கறிவான். (அல்குர்ஆன் 53 : 32)

ரப்பு கேட்கிறான்:

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يُزَكُّونَ أَنْفُسَهُمْ بَلِ اللَّهُ يُزَكِّي مَنْ يَشَاءُ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا

(நபியே!) பரிசுத்தவான்களென்று எவர்கள் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்களோ அவர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்கள் கூறுவது சரியன்று.) அல்லாஹ், தான் விரும்பிய (நல்ல)வர்களைத்தான் பரிசுத்தமாக்கி வைப்பான். (இவ்விஷயத்தில் எவரும்) ஓர் அணுவளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 4 : 49)

இன்று சிலர் என்னிடத்தில் பெருமை இல்லை என்று பெருமையாக சொல்லிக் காட்டுவார்கள். இதைவிட பெரிய பெருமை என்ன இருக்கிறது.

நான் எது செய்தாலும் அல்லாஹ்வுக்காக தான் செய்வேன் என்று சொல்லிக் காட்டுவார்கள். அதுவே பெரிய பெருமை தான்.

(அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!) நம்முடைய நோய் என்ன என்பது நமக்குத் தெரியாமல் இருக்கிறது.

ஒரு மனிதனுக்கு சுவாசக்காற்று இல்லை என்றால் மரணம் தான். ஒரு மனிதனிடத்தில் இஹ்லாஸ் இல்லை என்றால் நரகம்.

நாம் சொல்லக்கூடிய கலிமாவுக்கும் இஹ்லாஸ் தேவை, ஈமான் எல்லா அமல்களுக்கும் ஷரத், இந்த ஈமானுக்கு ஷரத் இஹ்லாஸ்.

எனவேதான், இஹ்லாஸ் இல்லாமல் ஈமானை ஏற்றுக் கொண்டவர்களை முனாஃபிக்குகள் என்று அல்லாஹ் கூறுகின்றான். (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்)

இந்த இஹ்லாஸ் அல்லாஹ்வுடைய விசேஷமான அருளுக்கு, அன்புக்கு, பாதுகாப்புக்கு காரணமாக இருக்கக்கூடியது.

அல்லாஹுத்தஆலா அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அதிகமாக நேசித்தான். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

«لَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلًا لاَتَّخَذْتُهُ خَلِيلًا»

அல்லாஹ்வைத் தவிர ஒருவரை நான் உற்ற நண்பனாக எடுத்து கொள்பவனாக இருந்தால், அபூபக்ரை தான் என்னுடைய ஹலீல் -விசேஷமான தோழராக,நெருக்கமான உயிர் நண்பனாக ஆக்கி இருப்பேன்.

அறிவிப்பாளர் : அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 466, 3654, 3657.

என்று சொல்லக்கூடிய அளவுக்கு அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் அவர்களுக்கு அந்தஸ்து இருந்தது.

அல்லாஹுத்தஆலா என்னுடைய நபியின் நண்பர் என்று குர்ஆனில் வர்ணித்த ஒரு தோழர் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا

நபி தனது தோழரோடு அந்த குகையில் இருந்தபோது தனது தோழரை பார்த்துச் சொன்னார்: தோழரே! நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்மோடு இருக்கிறான். (அல்குர்ஆன் 9:40)

அபூபக்ரும், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் குகையில் இருக்க மூன்றாமவராக அல்லாஹ் இருக்கிறான் என்று எந்த தோழருக்கு சொல்லப்பட்டதோ அவர் அபூபக்ர் ஆவார்கள்.

அபூபக்ர் உடைய சிறப்பு என்ன? ஒன்று, அவருடைய ஈமான், இறைநம்பிக்கை.

இரண்டாவது, அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் கட்டுப்படுவதில் தோழர்களில் அவரை யாரும் மிஞ்ச முடியாது.

இன்று அறிவை, அனுபவத்தை பேசக்கூடியவர்கள், அறிவியலை பேசக்கூடியவர்கள், இப்படி ஒன்றன் பின் ஒன்றாக பேசி ஹதீஸ்களை மறுத்து மறுத்து ஹதீஸ்களில் விளையாடி ஹதீஸ்களை நிராகரிக்கின்றவர்களை பார்க்கின்றோம்.

அபூபக்ர் சித்தீக் அவர்களுக்கு மிகப்பெரிய உண்மையாளன் என்று ஏன் பெயர் கூறப்பட்டது?

ரஸுலுல்லாஹ் சொன்னால் அதற்கு மாற்று பேச்சு கிடையாது. ரசூலுல்லாஹ்வுக்கு கிழ்ப்படிவதை தவிர, கட்டுப்படுவதை தவிர வேறு ஒன்றையும் அவர் அறிந்தது இல்லை.

மனதால் கூட ரசூலுல்லாஹ் உடைய ஒரு பேச்சை சந்தேகப்பட்டதோ, இதற்கு மாற்றமாக செய்யலாமே! என்ற எண்ணம் கூட அவர்களுக்கு வந்ததில்லை.

ஆகவேதான் அவர்கள் சித்தீக். அபூபக்ரை பற்றி பல வசனங்கள் குர்ஆனில் இருக்கின்றன.

அதில் ஒரு வசனம், ஸூரத்துல் லைலில் அல்லாஹ் சொல்கிறான் :

அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அம்மார், பிலால் இப்படியாக நிலிந்தவர்கள், மெலிந்தவர்கள், பாவப்பட்டவர்களை எல்லாம் வாங்கி வாங்கி உரிமை இட்டுக் கொண்டிருந்தார்கள்.

தந்தை அபூ குஹாஃபா கூறினார் :மகனே! அடிமைகளை வாங்கி உரிமையிடுவது நல்லதுதான். கொஞ்சம் வசதியான அடிமைகளாக, திடகாத்திரமான அடிமைகளாக நீ வாங்கி உரிமையிட்டால் நாளை உமக்கு ஒரு தேவை என்றால் அவர்கள் வந்து உனக்கு நிற்பார்கள். நாளை உனக்கு ஒரு உதவி என்றால் செய்வார்கள்.

இது அரபுகளுடைய வழக்கம். யார் தன்னை வாங்கி உரிமையிடுகின்றாறோ காலமெல்லாம் அந்த அடிமை உரிமை ஆகிவிடுவார். இருந்தாலும் தன்னை உரிமையிட்டவருக்கு விசுவாசமாக இருப்பார்.

இதை இஸ்லாமும் அங்கீகரித்தது.

எனவே இப்படி செய்யலாம் என்று அபூ குஹாஃபா தன் மகனுக்கு சொன்னார்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் சொன்னார்கள் :

இன்று நான்கு பேர் நம்மைப் பார்க்கும்போது, தர்மம் செய்வது இலேசாக இருக்கலாம். நம்முடைய பேர் வருகிறது என்றால் தர்மம் கொடுப்பது பலருக்கு இலேசாக இருக்கலாம். நான் லட்சம் கொடுத்தேன், கோடி கொடுத்தேன் என்று பலகையில் பெயர் எழுதப்படும் என்றால் தர்மம் கொடுப்பது இலேசாக இருக்கலாம்.

எங்கு தர்மம் செய்யும்போது அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்களோ, அந்த இடத்தில் தர்மம் செய்து பார்க்கவேண்டும். அந்த தர்மம் நப்ஸுக்கு சிரமமான தருணம்.

நான்கு பேர் பார்க்கும் போது பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுப்பது கஷ்டமான தர்மமே கிடையாது.

காரணம், அதனுடைய கூலி உடனடியாக கிடைத்துவிடுகிறது. நான்கு பேர் பார்த்து நல்லவன் என்று நினைப்பார்கள்.

ஆனால், எந்த இடத்தில் நாம் கொடுக்கும் பொழுது நம்முடைய ரப்பைத் தவிர யாரும் அறிய மாட்டார்களோ, யார் வாங்குகிறார்களோ அவரை இனி வாழ்நாளில் பார்க்கவே மாட்டோமோ, இனி அவர்கள் நம்மைப் பார்க்கும் போது சலாம் சொல்ல மாட்டார்.

என்ன காரணம்?அவருக்கும் நம்மை யார் என்று தெரியாது. அப்படிப்பட்ட நிலையில் தர்மம் செய்கிறோம்.

இது நப்ஸுக்கு மிகச் சிரமமான தர்மம். இஹ்லாஸ் ரொம்ப கஷ்டமான ஒன்று. அந்த இஹ்லாஸில் நப்ஸுக்கு எந்த விதமான பங்குமே கிடையாது.

அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய இஹ்லாஸ். அதனால் தான் இந்த நப்ஸு இஹ்லாஸுக்கு ஒத்தேவராது.

இமாம் சுஃப்யான் சவ்ரீ (ரஹ்) சொல்கிறார்கள் :

இவர்கள் மிகப்பெரிய தபுஉத் தாபியீன்; ஹதீஸ்கலை மாமேதை; லட்சக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பெரிய அறிஞர்.

அவர்கள் தன்னைப் பற்றி சொல்கிறார்கள் :

நான் இந்த நிய்யத்தை சரி செய்வதற்கு பட்ட கஷ்டத்தைப் போன்று வேற எதுக்கும் நான் கஷ்டப்பட்டது கிடையாது. அதை சரி செய்ய நினைத்தால் அது மாற்றமாக போய் முடிகிறது.

அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது தந்தை அபூ குஹாபாவுக்கு சொன்னார்கள் :

தந்தையே!இவர்களிடமிருந்து ஏதாவது நன்மை எனக்கு பிற்காலத்தில் சேரும் என்பதற்காக நான் இவர்களை உரிமை இடவில்லை.

அல்லாஹ்வுடைய முகத்துக்காக நான் இவர்களை உரிமை இட்டிருக்கிறேன்.

நூல் : தஃப்சீர் தபரி

அல்லாஹ்விற்கு அபூபக்ர் உடைய இந்த வார்த்தை பிடித்துவிட்டது.

அல்லாஹுத்தஆலா வசனத்தை இறக்கினான் :

وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى

இறையச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார். (அல்குர்ஆன் 92 : 17)

الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى

அவர் (பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன் பொருளை(த் தானமாக)க் கொடுப்பார். (அல்குர்ஆன் 92 : 18)

அல்லாஹு தஆலா அபூபக்ரை மிக மிக இறையச்சம் உள்ளவர் என்று கூறுகின்றான்.

இன்று, நாம் ஏழைகளுக்கு கொடுக்கும் போது பாவப்பட்டவர்கள் என்று இறக்கப்பட்டு கொடுக்கிறோம்.

சஹாபாக்கள் என்ன நினைத்தார்கள்; பாவப்பட்டவர்களுக்கு கொடுக்கும் போது நாம் நமக்கு இரக்கம் காட்டி கொள்கிறோம்.

எப்படிப்பட்ட அணுகுமுறை, சிந்தனைப் பாருங்கள்.

அல்லாஹ் நமக்கு சொல்லிக் காட்டுகின்றான் :

அவர் தன்னுடைய செல்வத்தை தான் சுத்தமாக்க வேண்டும் என்பதற்காக தர்மம் செய்கிறார்.

அவர் யாருக்கும் கைமாறு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. யாரும் அவருக்கு கொடுத்ததில்லை. அவர் கொடுத்துக் கொண்டே இருக்கின்றார். அல்லாஹ்வுடைய திருமுகத்திற்காக.

وَمَا لِأَحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَى

தான் பதில் நன்மை செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் தன் மீது இருக்காது. (அல்குர்ஆன் 92 : 19)

إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَى (20) وَلَسَوْفَ يَرْضَى

இருப்பினும், மிக்க மேலான தன் இறைவனின் திருமுகத்தை விரும்பியே தவிர (வேறு எதற்காகவும் தானம் செய்ய மாட்டார்).

(இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார். (அல்குர்ஆன் 92 : 19,20)

அன்பு சகோதரர்களே! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்; நம் சலஃப்கள் அந்த சிறந்த சான்றோர், சஹாபாக்கள், தாபியீன்கள் தங்களது அமல்களை எப்படிப் பாதுகாத்தார்கள்? என்று.

இன்று, நமக்கு அமல் செய்வது கஷ்டமாக சிரமமாக இருக்கிறது.

ஒருநாள் செய்த அமலை கூட பாதுகாக்க முடியாத பரிதாப நிலையில் தான் நாம் இருக்கிறோம். (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்)

ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொல்கின்றார்கள் :

நான் எத்தனையோ பலரை பார்த்திருக்கிறேன், ஒரு வருடம் அல்ல,இரண்டு வருடம் அல்ல, இருபது வருடங்களாக இரவுத் தொழுகையை தொடர்ந்து தொழுபவர்களை பார்த்திருக்கின்றேன்.

இப்போது சிலரை பார்க்கிறேன்;ஒரு நாள் தொழுதவுடனையே அன்றைய காலையிலே அவர்களுடைய முகத்தில் பெருமை தெரிகிறது என்று சொன்னார்கள்.

இபாதத்மனத்தூய்மையோடு செய்யப்பட்டிருந்தால் அது உங்களுக்கு பணிவை,பயத்தை கொடுக்கவேண்டும்.

பிறர் என்னுடைய அமலை அறியக் கூடாது என்ற ஈமானிய உணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அது தான் இஹ்லாஸ்.

இதற்கு நிறைய சம்பவங்கள் சான்றுகளாக இருக்கின்றன.

சஹாபாக்களுடைய வரலாறுகள் ஏராளம் இருக்கின்றன.

சஹாபாக்களுடைய வித்தியாச வித்தியாசமான அமல்களை அல்லாஹுத்தஆலா வெளிப்படுத்தி அதை நமக்கு படிப்பினைக்காக வைத்திருக்கிறான்.

இவர்கள் கலீஃபா உமருடைய கிலாஃபத்தில் பொறுப்பில் இருந்த நபித்தோழர்.

ஒருமுறை இரவு நேரத்தில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி கொஞ்ச தூரம் சென்று ஒரு வீட்டுக்குச் செல்கிறார்கள். சிறிது நேரம் கழித்து வெளியேறி வருகிறார்கள்.

இப்படியாக ஒரு முறை இரு முறை பார்த்த தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு நாள் காலையில் அந்த வீட்டுக்கு விசாரிப்பதற்காக செல்கிறார்கள்.

அந்த வீட்டில் கண் தெரியாத நடக்க முடியாத ஒரு வயதான பெண் இருக்கிறார். யார் வருகிறார் என்பதும் அந்த பெண்ணுக்கு தெரியாது.

தல்ஹா (ரலி) உள்ளே நுழைகிறார்கள். இவர் யார் என்று அந்தப் பெண்ணுக்கு தெரியாது.

தல்ஹா (ரலி) கேட்கின்றார்:மூதாட்டியே! இரவு நேரத்தில் இங்கு ஒருவர் வருகிறாரே, அவர் என்ன செய்கிறார்?எதற்கு வருகிறார்? என்று.

அதற்கு அந்தப் பெண் சொல்கிறார்கள் : அவர் ரொம்ப காலமாக வந்து போய்க்கொண்டிருக்கிறார்.

 

அவர் வந்து என் வீட்டை சுத்தம் செய்வார்; என்னுடைய துணிகளை எல்லாம் சுத்தம் செய்வார்; எனக்கு தேவையான தண்ணீர் மற்றும் சாமான்களை எல்லாம் சரி செய்து வைத்து விட்டு செல்வார்.

நூல் : அர்ரியால் அந்நழிரா –பக்கம் - 184, முஹிப்புத்தீன் தபரி (ஹி 694)

எப்பேற்பட்ட சஹாபி உமர் (ரலி) அவர்கள்! உமராக இருக்கும் போது மட்டுமல்ல,கலீஃபாவாக இருக்கும்போதும் பணிவிடை செய்தார்கள்.

யாருடைய பெயரை கேட்டால் ஹிர்க்கலும் கிஸ்ராவும் நடுங்கிக் கொண்டிருந்தார்களோ, பாலஸ்தீன தளபதிகள் எழுந்து நின்று விடுவார்களோ அந்த உமரின் இஹ்லாசை பணிவைப் பாருங்கள்.

தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனக்கு சொல்லிக்கொண்டார்கள்:ஆஹா! நான் என்ன யோசனை செய்து இருக்கின்றேன்! உமருடைய தவறையா நான் தேடினேன்! தல்ஹா உனக்கு நாசம் உண்டாகட்டும்.

அன்பு சகோதரர்களே! இது இஹ்லாஸ்.தான் செய்யக்கூடிய அமலை அல்லாஹ்வைத்தவிர யாரும் பார்க்கக் கூடாது.

ஏன்,உமர் அவர்கள் காலையில் செய்திருக்கலாம்,பகலில் செய்திருக்கலாம்,என்ன ஆகும்? கலீஃபா சென்றால் பின்னாடி பத்து பேர் போவார்கள்.

எப்படிப்பட்ட மனத்தூய்மையை உமர் அவர்கள் விரும்பியிருக்கிறார்கள்!

தான் செய்யக்கூடிய அமல்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிய வேண்டும்; அல்லாஹ் திருப்திக் கொள்ள வேண்டும்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள் :

من أحسن صلاته حيث يراه الناس وأساءها إذا خلا فتلك استهانة يستهين بها ربه

யார் ஒருவன் மக்கள் பார்கின்ற நிலையில் தொழுதால் அழகாக தொழுதும் தனியாக தொழுதால் அவசரமாக அலட்சியமாக தொழுவாரோ அவர் அல்லாஹ்வை கேவலப்படுத்துகிறான்.அல்லது அல்லாஹ்வை சாதாரணமாக அற்பமாக நினைத்து விட்டான். அல்லாஹ்வை இலேசாக மதிப்பிடுகின்றான்.

ஸலஃப்களுடைய அமல்கள் தொழுகையிலும் சரி, குர்ஆன் ஓதுவதிலும் சரி, வணக்க வழிபாடுகள், ஏன் ஜிஹாதிலும் சரி, ஒவ்வொன்றிலும் அல்லாஹ் மட்டுமே அறியவேண்டும் என்ற கொள்கையில் இருந்தார்கள்.

குறிப்பாக ஸதகா -தர்மம் செய்வதில் அல்லாஹ்விடத்தில் அதற்கு பெரிய கூலி இருக்கிறது.

ஆனால், அந்த தர்மத்தில்தான் ஷைத்தான் வந்து ரொம்ப விளையாடுகிறான்.

நாளை மறுமையில் அல்லாஹுத்தஆலா மூன்று கூட்டத்தார்களை முதலாவதாக விசாரித்து நரகில் போடுகின்றான்.

அதில் ஒரு கூட்டம்,ஆலிம்களுடைய கூட்டம்.

அவர் மார்க்கத்தைப் படித்தார்; போதித்தார்; ஆனால் மக்கள் தன்னைப் புகழ வேண்டும் என்பதற்காக அப்படி செய்தார். எனவே அவர் நரகத்திற்கு செல்வார்.

இரண்டாம் நபர், உடல் திடகாத்திரமான வீரர்.

இவர் அல்லாஹ்வுடைய பாதையில் போரிட்டு ஷஹீத் ஆகிவிட்டார். ஆனால் மக்கள் தன்னை வீரன் என்று பேசவேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு செய்தார். எனவே அவரும் நரகத்திற்கு செல்வார்.

மூன்றாம் நபர், செல்வத்தைக் கொடுத்து தர்மம் செய்தவர். இவரும் நரகிற்கு செல்வார். காரணம்? தன்னை கொடைவள்ளல் என்று சொல்லப்படுவதற்காக, மக்கள் தன்னைப் புகழ்வதற்காக இவ்வாறு செய்தார்.

அல்லாஹ் சொல்வான்: நீ விரும்பியவாறு அப்படி சொல்லப்பட்டுவிட்டது. நீ எதை எதிர்பார்த்தாயோ அது உனக்கு உலகத்திலேயே முடிந்துவிட்டது.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1905.

ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் மகனுக்கு தன் தந்தையின் பெயரை வைத்திருந்தார்கள். அலீ இப்னு ஹுஸைன். இவர்களுக்கு அல்லாஹுத்தஆலா பெரிய செல்வச் செழிப்பை கொடுத்திருந்தான்.

இவர்கள், இரவில் எல்லாரும் தூங்கியதற்கு பிறகு, தான் அறிந்து வைத்திருந்த ஏழைகள், ஃபக்கீர்கள், அனாதைகள் அதுபோன்று விதவைகள் உடைய வீடுகளுக்கு தன்னுடைய தோலில், அவர்களுக்கு தேவையான உணவுகளை எடுத்துக் கொண்டு சென்று அவர்களுடைய வீட்டு வாசல்களில் வைத்து விட்டு வந்து விடுவார்கள்.

இது அவர்களுடைய வாழ்நாள் வழக்கமாக இருந்தது.

மக்கள் காலையில் எழுந்து பார்த்தால் அங்கே உணவு பொட்டலம் பெருசு பெருசா இருக்கும், அவரவர்கள் எடுத்துக்கொள்வார்கள்.

(நம்ம மக்கள் மாதிரி அவர்கள் கிடையாது. நாம் எப்படி என்றால், நாமும் இஹ்லாஸா இருப்பது இல்லை. மற்றவரையும் இஹ்லாஸாக இருக்க விடுவதில்லை.

நாமும் கெடுவோம், மற்றவர்களையும் கெடுப்போம்.

ஒருவர் இஹ்லாஸாக ஒரு செயலை செய்திருப்பார். அந்த செயலை செய்தவர் இவர் தான் என்று மஜ்லிஸில் வைத்து பிரபலமாக்குவார்கள்.

அவ்வளவு தான் முடிந்துவிட்டது. அடுத்து அங்கு ஷைத்தான் வந்து விடுவான்.

அல்லாஹ்வுடைய நபியை தவிர பாதுகாக்கப்பட்டவர் என்று மனிதர்களில் நாம் யாரையும் சொல்ல முடியாது.

ஆகவேதான், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் :

«إِذَا رَأَيْتُمُ الْمَدَّاحِينَ، فَاحْثُوا فِي وُجُوهِهِمِ التُّرَابَ»

யாரையும் முகத்துக்கு முன்னால் புகழாதீர்கள்;அவ்வாறு புகழக்கூடியவர்களைப் பார்த்தால் அவர்கள் முகத்தில் மண்ணை அள்ளிப் போடுங்கள் என்று சொன்னார்கள்.(1)

அறிவிப்பாளர் : உஸ்மான் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 3002.

சமீபத்தில் ஒரு ஆலிம் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டினார்.

அதாவது, ஆங்கிலேயர்களுடைய கலாச்சாரம், அதிலிருந்து காப்பியடித்து மார்க்கத்தை பரப்பக்கூடிய கலாச்சாரத்தில் ஒன்று தான், ஒருவர் பேச வருவதற்கு முன்பாக அவரைப் பற்றி வர்ணிப்பது.

இப்போது பேசக்கூடிய பேச்சாளர் யார் தெரியுமா? அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? அவர் எங்கே பட்டம் வாங்கி இருக்கிறார் தெரியுமா? அவர் என்னென்ன படித்திருக்கிறார் தெரியுமா? அவர் எத்தனை கல்லூரிகளில் பட்டம் வாங்கி இருக்கிறார் தெரியுமா? எத்தனை மாநாடுகளில் கலந்து இருக்கிறார் தெரியுமா? அவர் எத்தனை புத்தகங்கள் எழுதி இருக்கிறார் தெரியுமா?

இதெல்லாம் வாசிச்சிட்டு அவர பேச சொன்னா அவர் எப்படி பணிவா பேசுவார்?

ஏன்? பெருமை உள்ளவன் சொர்க்கம் செல்ல முடியாது. முஃமினா இருந்தாலும் சரி, தஹஜ்ஜத் தொழுகக் கூடியவராக இருந்தாலும் சரி, சொத்தையெல்லாம் அல்லாஹ்வுடைய பாதையில் எழுதி வைத்தாலும் சரி.

பெருமை கடுகளவு இருந்தாலும் நரகத்தில் போட்டு வாட்டி சுத்தப்படுத்தி அவனுடைய உள்ளத்தில் உள்ள பெருமையை எடுத்துக்கு பிறகுதான் அல்லாஹ் அடுத்து சொர்க்கத்துக்கு அனுமதி அளிப்பான்.) (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்)

சம்பவத்தின் தொடர்ச்சி : அந்த மக்களும் சரி யாரோ இரவுல புண்ணியவான் வைக்கிறாங்க, அல்லாஹ் அவர்களுக்கு கருணை செய்யட்டும்னு விட்டுட்டாங்க. யாருனு அறிந்து கொள்வதற்கு முயற்சி பண்ணல. இப்படி பல வருஷம் போகுது.

அலி இப்னு ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறந்து விடுகிறார்கள். அடுத்த நாளிலிருந்து பார்த்தால் வீட்டு வாசலில் உணவு பொட்டலங்கள் இல்லை.

அப்போதுதான் மக்கள் தெரிந்து கொண்டார்கள், இந்த நன்மையை செய்துகொண்டிருந்தது ரசூலுல்லாஹ் உடைய பேரனாகிய ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மகனார் அலி என்பதாக.

அடுத்து, அவர்களுடைய ஜனாஸாவை குளிப்பாட்டியவர்கள் சொல்கிறார்கள் : நாங்கள் அவர்களுடைய ஜனாஸாவை குளிப்பாட்டிய போது வெண்மை நிறமான அந்த உடலில், இரவெல்லாம் மூட்டைகளை சுமந்து கொண்டே சென்றதால் அவருடைய முதுகெல்லாம் கருப்பு தழும்புகளாக இருந்தது.

அன்பு சகோதரர்களே! அமல்களை மறைப்பது என்பது சாதாரணமான ஒரு விஷயம் அல்ல.

ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொல்கின்றார்கள் : நான் பார்த்து வளர்ந்து வந்த அந்த நபித்தோழர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், அமல்களை மறைக்க முடியும் என்றால் அவர்கள் கண்டிப்பாக மறைத்தே தீருவார்கள்.

சபையில் உட்கார்ந்திருக்கும்போது எங்களில் யாருக்காவது அழுகை வந்தாலும் கூட அந்த தோழர் அழுகை வராத மாதிரிஅதை அடக்க முயற்சி செய்வார். அப்படியும் மீறி அழுகை வந்தால் ஏதோ தனக்கு சளி பிடித்த மாதிரி எழுந்து போய் விடுவார்.

இதுதான் இஹ்லாஸ்.

ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் ஒருமுறை உபதேசம் செய்து கொண்டிருக்கும்போது ஒரு மனிதர் அழுதார். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக சத்தமாக அழுது விட்டார்.

ஹஸன் பஸரி சொன்னார்கள் : சகோதரரே!இந்த அழுகைக்காகவும் நீ அல்லாஹ்விடத்தில் விசாரிக்கப்படுவாய். இந்த அழுகை அல்லாஹ்விற்காக வந்ததா? என்பதை யோசித்துப்பார்.

உமர் இப்னு அப்துல் அஜீஸ் அவர்கள் ஐந்தாவது கலிஃபா. மிகப்பெரிய தாபியீன். புகாரியில் அவர்களுடைய கூற்றுகளால் நூல் நிரம்பியிருக்கும்.

தன்னை பக்குவப்படுத்துவதில், இஹ்லாஸ் போன்ற நற்குணங்களில் ஒரு பெரிய முன்னோடியாக திகழ்ந்தார்கள்.

பெரிய மன்னராக இருந்தார்கள். ஆனால் ஈமானோடு இல்மோடு அந்த கிலாபத்தை பெற்றதால் மன்னர்களுக்கு மத்தியில் ஐந்தாவது கலீஃபா என்ற பெயர் பெற்றவர்கள்.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மகனுக்கு மணம் முடிக்கப்பட்ட பெண்ணுடைய பேரன்.

உங்களுக்கு தெரியும்; உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு பால்கார பெண்ணுக்கு தன்னுடைய மகனை மணமுடித்து வைத்தார்கள் என்று. அந்த வம்சத்தில் வந்தவர்கள் தான் உமர் இப்னு அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.

இவர்கள் மிம்பரில் பயான் செய்வார்கள். பயான் செய்துகொண்டிருக்கும்போதே பயானை நிறுத்திவிடுவார்கள். இங்கே நான் ரொம்ப நல்லா பயான் செய்கிறேன் என்று நினைப்பு வந்தால் பயானை நிறுத்தி விடுவார்கள்.

அதுபோன்று மக்களுக்கு குர்ஆன் ஹதீஸில் இருந்து நிறைய அறிவுரைகளை இவர்கள் எழுதுவார்கள்;

தான் எழுதுவது ரொம்ப சிறப்பா இருக்கு என்று மனதில் தோன்றினால் எழுதியதை அப்படியே கிழித்து விடுவார்கள்.

இதுதான் இஹ்லாஸ். ரப்புக்காக, ரப்பு எண்ணை அறிய வேண்டும், என்னுடைய அமல்கள் ரப்புக்கு தெரிய வேண்டும்.

இன்று நம்முடைய பலவீனமான நிலையைப் பாருங்கள்; செய்வதோ அற்பமானது. அதிலும் ஆயிரம் ஓட்டைகள். அதற்குப்பிறகு அதையும் இந்த முகஸ்துதியைக் கொண்டு, தற்புகழ்ச்சியைக் கொண்டு, சொல்லிக் காட்டுவதை கொண்டு அழித்து விடுவோமேயானால் நம்மை விட நஷ்டவாளிகள் யாரும் இருக்க முடியாது.

இன்று நம்முடைய நிலைமை எப்படி என்றால், யாராவது தான் செய்வதை பார்க்க மாட்டாங்களா?பார்த்ததுக்கு பிறகு என்னை மக்களுக்கு மத்தியில் அந்த நல்லதைக் கொண்டு அறிமுகப்படுத்த மாட்டார்களா?என்று நஃப்ஸில் ஓடிக்கொண்டே இருக்கும்.

அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹ் உடைய ஒரு சம்பவத்தை பாருங்கள். இவர்களுடைய வரலாறு பெரிய வரலாறு. தபுஉத் தாபியீன்களில் மிகப்பெரிய பிரசித்தி பெற்ற நபர்.

ஒரு வருஷம் ஜிஹாதுக்கு செல்வார்கள்;ஒரு வருஷம் ஹஜ்ஜுக்கு, ஒரு வருஷம் மார்க்கக்கல்வியை மக்களுக்கு போதிப்பதற்கு. இப்படி வாழ்நாளெல்லாம் இது தான் அவர்களுக்கு தர்தீப்.

ஒருநாள் ஒரு பயணத்தில் ஜிஹாதுக்கு சென்றிருக்கும் போது, அவர்களுடைய மாணவர் ஒருவர் முஹம்மது இப்னுஅஃயுன் என்பவர் தூங்க வேண்டும் என்பதற்காக எதிர்பார்த்திருந்தார்கள். அவர்கள் தூங்கிவிட்டார் என்று தெரிந்த உடன் இவர்கள் எழுந்து தொழ ஆரம்பித்துவிட்டார்கள்.

காலையில் ஸுப்ஹு தொழுகை நேரம் வந்தவுடன் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) தன்னுடைய மாணவர் முஹம்மது இப்னு அஃயுனை எழுப்புகிறார்கள்.

அப்போது அந்த மாணவர் சொன்னார்: உஸ்தாத்! நான் இரவு தூங்கவே இல்லை. நீங்கள் தொழுவதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

பிறகு அந்த மாணவர் சொல்கிறார் : அன்றைய நாளில் இருந்து மரணிக்கின்ற வரை அப்துல்லாஹ் இப்னு முபாரக் என்னிடத்தில் பேசவே இல்லை.

அதற்குப்பின்னால் அவர்களோடு எத்தனையோ பயணங்கள் நான் சென்றிருக்கின்றேன். என்னைப்பார்த்து அவர்கள் சிரிக்கவில்லை. எப்போதும் அமைதியாகவே இருந்தார்.

நாமாக இருந்தால் பெருமைப்பட்டிருப்போம்.

ஆனால், அவர்கள் உற்ற நண்பனாக இருந்தும், தன்னுடைய மாணவராக இருந்தும்கூட இவருக்கு என்னுடைய அமல் தெரிந்து விட்டதே என்ற கவலை, இது முகஸ்துதி ஆகிவிடுமோ, இவர் யாரிடமாவது சொல்வாரோ, அவர்கள் நான் செல்கின்ற இடத்தில் என்னை புகழ்வார்கள் என்று வருத்தப்பட்டார்கள்.

இதுதான் இஹ்லாஸ்.

இன்னும் நிறைய வரலாறுகள் இருக்கின்றன. நோக்கம் என்னவென்றால், அமல்களை செய்ய வேண்டும், அதிகம் செய்ய வேண்டும், இஹ்லாஸோடு செய்ய வேண்டும், அல்லாஹ்வுக்காக என்று மறைத்து செய்ய வேண்டும். அல்லாஹ் அப்படிப்பட்ட அமல்களை தான் மறுமையில் தராசு தட்டில் வைக்கும் போது கனமானதாக இருக்கும்.

அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் இஹ்லாஸ் உடைய அமல்களை தந்தருள்வானாக! முகஸ்துதியிலிருந்தும், நயவஞ்சகத்திலிருந்தும், இன்னும் தற்புகழ்ச்சியிலிருந்தும் என்னையும் உங்களையும் அல்லாஹுத்தஆலா பாதுகாத்து அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم

குறிப்புகள் :

குறிப்பு 1)

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ - وَاللَّفْظُ لِابْنِ الْمُثَنَّى - قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، أَنَّ رَجُلًا جَعَلَ يَمْدَحُ عُثْمَانَ، فَعَمِدَ الْمِقْدَادُ فَجَثَا عَلَى رُكْبَتَيْهِ، وَكَانَ رَجُلًا ضَخْمًا، فَجَعَلَ يَحْثُو فِي وَجْهِهِ الْحَصْبَاءَ، فَقَالَ لَهُ عُثْمَانُ: مَا شَأْنُكَ؟ فَقَالَ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَيْتُمُ الْمَدَّاحِينَ، فَاحْثُوا فِي وُجُوهِهِمِ التُّرَابَ» (صحيح مسلم -3002)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/