HOME      Khutba      நபியின் சமுதாயம் எங்கே? |Tamil Bayan - 550   
 

நபியின் சமுதாயம் எங்கே? |Tamil Bayan - 550

           

நபியின் சமுதாயம் எங்கே? |Tamil Bayan - 550


بسم الله الرحمن الرّحيم

நபியின் சமுதாயம் எங்கே?

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும்,தூதரின் குடும்பத்தார்கள்,தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக,

வணக்கத்திற்குறிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை,நமது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாரும் தூதருமாவார் என்று சாட்சி கூறியவனாகவும்,உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் இம்மை மறுமையின் வெற்றியை வேண்டியவனாக,

எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை நினைவூட்டியவனாக,ரசூலுல்லாஹ் (ஸல்) எந்த ஒரு சிறந்த சமுதாயத்தை சிறந்த நற்குணங்களோடு ஈமானிய குணங்களோடு உருவாக்கினார்களோ அத்தகைய சமுதாய மக்களாக நாம் மாற வேண்டும்;அத்தகைய சமுதாயத்தை உருவாக்க நாம் பாடுபட வேண்டும்.

என்று எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக,நினைவூட்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கொடுக்கப்பட்ட நாளிலிருந்து அவர்களுடைய இறுதி மூச்சு வரை இந்த சமுதாய சீர்திருத்தத்தில் தான் அவர்கள் இருந்தார்கள்.

இதை குறிக்கோளாக வைத்து தான் ரசூல் (ஸல்) அவர்கள் பணி செய்தார்கள்.

ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மரணப்படுக்கையில் இருந்த போது அவர்களுக்கு இருந்த ஒரே கவலை இது தான்.

«الصَّلاةَ الصَّلاةَ، اتَّقُوا اللَّهَ فِيمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ»

மக்களே! தொழுகையைப் பேணுங்கள். தொழுகை விஷயத்தில் கவனமாக இருங்கள். உங்களுக்கு வேலை செய்யக்கூடிய உங்களது அடிமைகள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

அறிவிப்பாளர் : அலீ ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 585.

தங்களது மனைவிமார்களில் யாரையும் பார்க்க வேண்டும் என்ற ஆசையை கூறவில்லை.

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய வீட்டில் அவர்கள் உயிர் பிரிய வேண்டும் என்று விரும்பினார்கள்.

காரணம்?நபியின் மனைவிமார்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர்கள் அபூபக்ர் சித்தீக் (ரழி) அவர்களுடைய மகள் ஆயிஷா (ரலி) ஆவார்கள்.

நூல் : புகாரி, எண் : 2393.

பல மனைவிமார்களுக்கு ரஸூலுல்லாஹ் (ஸல்) அன்னை ஆயிஷாவிடம் இருந்த அன்பின் மீது கொஞ்சம் வருத்தம் இருந்தபோது ரஸூல் (ஸல்) சொன்னார்கள்:

நான் ஏன் ஆயிஷாவை விரும்புகிறேன் என்றால் நான் மற்ற மனைவியிடத்தில் இருக்கும் போதும் ஜிப்ரீல் வஹீ கொண்டு வர மாட்டார். ஆனால் ஆயிஷாவிடம் இருக்கும்போது ஜிப்ரீல் வஹீ கொண்டு வருவார்.

அந்த அளவுக்கு அல்லாஹ்விடத்திலும் அவர் கண்ணியம் பெற்றிருந்த காரணத்தால் ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கு ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது ஒரு தனிப்பெரும் பாசம் இருந்தது.

அந்த அடிப்படையில் அவர்களது வீட்டில் மரணிக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

மற்றபடி தனக்குப் பிறகு ஆயிஷாவுக்கு இதைகொடுங்கள் அதை கொடுங்கள் என்றெல்லாம் அவர்கள் வஸிய்யத் செய்யவில்லை.

அவர்களுடைய ஒரே கவலை அவர்களுடைய சமுதாயத்தைப் பற்றி தான்.

எந்த ஒரு நற்குணம், ஈமானிய பண்புகளின் மீது இந்த சமுதாயம் அமைக்கப்பட்டதோ அதைக் கொண்டுதான் இந்த சமுதாயத்திற்கு அல்லாஹுத்தஆலா வெற்றியை கொடுத்தான்; கண்ணியத்தை கொடுத்தான்.

இந்த சமுதாயத்தின் எண்ணிக்கையை வைத்து அல்ல. இதனுடைய அறிவுத்திறனை வைத்து அல்ல. இதனுடைய படை பலங்களை வைத்து அல்ல.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சூரா ஆலு இம்ரான் உடைய 123-ஆவது வசனத்தில் சொல்கிறான் :

وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

பத்ரில் (நடந்த போரில்) நீங்கள் (எதிரிகளைவிட ஆயுதத்திலும், தொகையிலும்) குறைந்தவர்களாக இருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவனுக்குப் பயந்து (வழிப்பட்டு) நடங்கள். (அல்குர்ஆன் 3 : 123)

அல்லாஹ்வுடைய இந்த உதவி சஹாபாக்களின் தவ்ஹீத், ஈமான், அவர்களுக்கு மத்தியில் இருந்த சமுதாய ஒற்றுமையின் மூலம் கிடைத்தது.

எந்த குணங்களை அல்லாஹ்வும் அவனுடைய தூதர்களும் வெறுத்தார்களோ அந்த குணங்களை விட்டு அவர்கள் தங்களை தூய்மை படுத்தி வைத்திருந்தார்கள்.

அல்லாஹ்வுடைய உதவிக்கு தகுதி உடையவர்களாக இருந்தார்கள்.

இதைத் தவிர வெளிரங்கமான எந்த காரணங்களையும் யாராவது ஒருவர் கூறினால் அவர் குர்ஆனுக்கும் சுன்னாவிற்கு மாற்றமான செய்தியைக் கூறுகிறார்.

ரப்புல் ஆலமீன் இதே சூறா ஆல இம்ரான்160-ஆவது வசனத்தில் கேட்கின்றான் :

إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர் எவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்விடமே நம்பிக்கையாளர்கள் பொறுப்பை ஒப்படைக்கவும். (அல்குர்ஆன் 3 : 160)

இன்று நம்முடைய மிகப்பெரிய ஈமானிய பலவீனம்,அல்லாஹ்வுடைய தொடர்பு மறந்தவர்களாக இருக்கின்றோம்.

தொழுகைக்கு நின்றால் கூட அல்லாஹ்வுடைய தொடர்பு பலமாக இல்லை. அல்லாஹ்வுடைய வேத வசனங்களை ஓதும் போது கூட அல்லாஹ்வுடைய அச்ச உணர்வுகள் இல்லாமல் நாவு ஒரு பக்கம் உள்ளம் ஒரு பக்கம் என்று நின்று கொண்டிருக்கிறோம்.

إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ

அல்லாஹ்வுடைய நினைவு கூறப்பட்டால் மூஃமின்கள் உடைய உள்ளம் நடுங்கும் என்று அல்லாஹ் சொல்கின்றான். (அல்குர்ஆன் 8:2)

ஆனால்,இன்று தக்பீர் கட்டியதிலிருந்து சலாம் கொடுக்கும் வரை அல்லாஹ்வுடைய திக்ரை இந்த அடியான் கூறுகின்றான்,அவனுடைய உள்ளம் அல்லாஹ்வின் அச்சத்தால் நடுங்குவது இல்லை.

இந்த நிலையில் சலாம் கொடுத்து விட்டு தொழுகையை விட்டு வெளியேறி விடுகிறான்;மஸ்ஜிதை விட்டு வெளியேறி விடுகிறான்.

மஸ்ஜிதில் தக்வா இல்லாத இந்த மனிதன் குடும்பத்தில் எப்படி தக்வா உடையவனாக இருப்பான்? பொருளாதாரத்தில், கொடுங்கள் வாங்கலில், தலைமைத்துவத்தில், சமூக உறவுகளில் எப்படி இவன் தக்வா உடையவனாக இருப்பான்?

நம்முடைய சிறந்த நல்லோர்களை பார்த்தால், அவர்களுடைய தொழுகையில் அவர்கள் அழுதார்கள். அவர்களுடைய ஒவ்வொரு உபதேசத்தில் அவர்கள் அழுதார்கள். அவர்களுடைய தொழுகையில் அவர்களுடைய உள்ளச்சம் அறியப்பட்டது.

இதுதான் நம்முடைய பலவீனம். அல்லாஹ்வோடு தொடர்பு மறந்தவர்களாக இருக்கின்றோம்.

நம்முடைய சமுதாயத்துக்கு மத்தியில் ஏதோ சமூகமாக ஒன்றாக பழகிக் கொள்கிறோம்.

கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளை, குடும்பம், சகோதரர் சகோதரி, நண்பர்கள் இப்படியாக நாம் ஒரு மேலோட்டமாக பழக்கம் உடையவர்களாக இருக்கின்றோமே தவிர, எந்த ஈமானிய குணங்கள், எப்படிப்பட்ட அழகிய ஒழுக்க மாண்புகளை ரசூலுல்லாஹ் (ஸல்) இந்த சமுதாயத்திற்கு கற்றுக் கொடுத்து அதன் அடிப்படையில் இந்த சமுதாயத்தை கட்டி எழுப்பினார்களோ அந்த ஒழுக்கங்கள் எங்கோ இருக்கின்றன.

நமக்கும் அதற்கும் இடையில் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையில் உண்டான தூரம்.

ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள் :

« الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لَا يَظْلِمُهُ وَلَا يَخْذُلُهُ، وَلَا يَحْقِرُهُ »

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரன். (1)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, : 6951.முஸ்லிம்,எண் : 2564.

(அவர் எந்த நாட்டவர்களாக இருந்தாலும் சரி,எந்த நிறத்துடையவராக இருந்தாலும் சரி,எந்த மொழி உடையவராக இருந்தாலும் சரி,இன்னொரு முஸ்லிமை நீ உன்னுடைய சகோதரராக பார்க்கவில்லையானால் உன்னுடைய இஸ்லாமிய பண்பைப்பற்றி நீ சோதித்துக் கொள்ளவேண்டும்.)(அல்லாஹ் பாதுகாப்பானாக)

எப்படி நடந்து கொள்ள வேண்டும்?ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு அநியாயம் செய்யக்கூடாது. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு தொந்தரவு தரக்கூடாது;கொடுமைகள் செய்யக்கூடாது.

அவனை கை விட்டுவிடக்கூடாது. ஒரு முஸ்லிமுக்கு பிரச்சனை என்றால்,உதவி தேவைப்படுகிறது என்றால் அவன் நேரான பாதையில் இருக்கிறான் என்றால் அவனுக்கு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும்.

தவறான பாதையில் இருந்தால் அவனை அந்த தவறான பாதையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்.

அவனுடைய வெளித்தோற்றம் எந்த நிலையில் இருந்தாலும் சரி,அந்த முஸ்லிமை இவன் கேவலமாக பார்க்ககூடாது. தன்னை உயர்ந்தவனாகவும் இன்னொரு முஸ்லிமை தாழ்ந்தவனகவும் பார்க்கக்கூடாது.

மேலும் தொடர்ந்து சொன்னார்கள் :

«بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ، كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ، دَمُهُ، وَمَالُهُ، وَعِرْضُهُ»

ஒரு மனிதனுடைய தீமைக்கும்,அவன் கெட்டுவிட்டான் நாசமாகி விட்டான் என்பதற்கு இன்னொரு முஸ்லிமான சகோதரனைப் பார்த்து மட்டமாக பார்ப்பதே போதுமானதாகும்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, : 6951.முஸ்லிம்,எண் : 2564.

எப்படிப்பட்ட ஒழுக்கங்களை ரசூல் (ஸல்)  சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று பாருங்கள். அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் சமூக ஒழுக்கங்களை, ஒருவருக்கொருவர் நடந்து கொள்ளவேண்டிய, சமுதாயத்தில் பேண வேண்டிய ஒழுக்கங்கள் ஒவ்வொன்றையும் நுணுக்கமாக சொல்லிக் கொடுத்தார்கள்.

சமுதாயத்தினுடைய உள்ளத்தை ஒருவர் உடைத்து விடக் கூடாது. சமுதாயத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதருடைய உள்ளத்தை உடைத்து விடக் கூடாது, காயப்படுத்தி விடக்கூடாது.

அவருடைய கண்ணியத்தில் விளையாடி விடக்கூடாது. அவனுடைய சுயமரியாதையில் விளையாடி விடக்கூடாது.

அந்த அளவுக்கு நுணுக்கமாக ரசூலுல்லாஹி (ஸல்) ஒரு ஈமானிய உணர்வுகளை இந்த ஒழுக்கங்களில் கொண்டு வந்தார்கள்.

மேலும், ரசூலுல்லாஹி (ஸல்) சொல்கின்றார்கள்:

«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُقِيمَ الرَّجُلُ أَخَاهُ مِنْ مَقْعَدِهِ، وَيَجْلِسَ فِيهِ»

ஒரு சபைக்கு ஒருவர் வந்தால் அவருக்கு எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கே உட்கார்ந்து கொள்ள வேண்டும். அவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் சரி, தலைவராக இருந்தாலும் சரி, சமுதாயத்தின் உடைய ஜனாதிபதியாக இருந்தாலும் சரி.

மஜ்லிஸ் முடியக்கூடிய அந்த இடத்தில் அவர் உட்கார்ந்து கொள்ளவேண்டும்.

நபி (ஸல்) அவர்களும் இப்படித்தான் நடந்துகொண்டார்கள்; அவர்களுடைய ஸஹாபாக்களும் இப்படித்தான் நடந்து கொண்டார்கள்.

மேலும் ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள் : ஒரு மனிதர் ஒரு சபையில் வந்து சபையில் உட்கார்ந்து இருக்கக்கூடிய ஒருவரை அவருடைய இடத்திலிருந்து கிளப்பிவிட்டு அவரை நிற்க வைத்து அவர் அந்த இடத்தில் உட்கார வேண்டாம்.

ஒரு சமுதாயத்தின் உடைய தலைவர், கண்ணியமான ஒரு மனிதருக்கு ரசூலுல்லாஹ் (ஸல்) சொல்லக்கூடிய இந்த அறிவுரையைப் பாருங்கள்.

இது அந்த சாதாரண மனிதன், முதலாவதாக வந்து முதல் வரிசையில் உட்கார்ந்து இருப்பவருடைய உள்ளம் உடைவதை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் விரும்பவில்லை.

அவர் அந்த இடத்திலேயே அவமரியாதை செய்யப்படுவதை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் பொருந்திக்கொள்ளவில்லை; தடுத்தார்கள்; இதை ஒரு குற்றமாக சொன்னார்கள்.

தொழுகைக்கு நிற்கும்போது கூட, ஸஃப்புகளில் இடைவெளி இல்லாமல் இருக்கவேண்டும் என்று ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் :

ஒருவருடைய பாதத்திற்கும் இன்னொருவருடைய பாதத்திற்க்கும் இடையில் இடைவெளி இருக்கக்கூடாது. ஒருவருடைய பாதம் இன்னொருவருடைய பாதத்தை அப்படியே ஒட்டியிருக்க வேண்டும்.

ஒருவருடைய புஜம் இன்னொருவருடைய புஜத்தை உரசிக் கொண்டிருக்க வேண்டும். ஸஃபுகளில் இடைவெளிகள் இருப்பதை ரசூலுல்லாஹ் தடுத்தார்கள்.

ஸஃபுகள் சமமாக இருக்க வேண்டும். முன்பின் இருக்கக்கூடாது. அதுபோன்று ஒருவருடைய கழுத்து எல்லாம் சமமாக இருக்க வேண்டும் என்று ரசூலுல்லாஹ் சொன்னார்கள்.

நூல் : புகாரி எண் : 678, முஸ்னது அஹ்மத் எண் :11807.

அந்த நேரத்தில் ரசூலுல்லாஹ் (ஸல்) சஹாபாக்கள் உடைய வழக்கம், யாராவது புதியவர் தொழுகைக்கு வந்தால், நிற்கக்கூடிய ஒழுக்கம் அவர்களுக்கு தெரியவில்லை என்றால் அவர்கள் சாதாரணமாக நிற்பார்கள்.

அந்த நேரத்தில் சட்டத்தை அறிந்த தோழர் அவரை கை பிடித்து இழுத்து சரியாக வரிசையில் நிற்க வைப்பார், இவர் தொழுகையில் இருந்தாலும் சரி.

இன்று இந்த சுன்னத்துகள் எல்லாம் விடப்பட்டது மட்டுமல்ல, இந்த சுன்னத்துகளை நிறைவேற்றினால் சண்டை செய்யக்கூடிய அளவுக்கு சமுதாயம் அறியாமையில் இருக்கிறது.

மற்றொரு அறிவிப்பில் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

உங்களுடைய வரிசை சரியில்லாத காரணத்தால் உங்களுக்கு அருகில் தொழக் கூடியவர் உங்களை கரம்பிடித்து சரியாக நிற்க வைத்தால் அப்பொழுது நீங்கள் வம்பு பிடிக்காதீர்கள்; முரண்டு பிடிக்காதீர்கள்; அவர்களுக்கு மென்மையாக ஆகி விடுங்கள்; அவர்கள் உங்களை எப்படி நிற்க வைக்கின்றார்களோ அதற்கேற்ப நீங்கள் நின்று கொள்ளுங்கள்; மென்மையாக இருந்து கொள்ளுங்கள். (2)

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூத்,எண் : 666, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

பிடித்து இழுப்பவரும் மென்மையாக இழுக்க வேண்டும்.அதற்கேற்ப இழுக்கப்படுபவரும் மென்மையாக நின்று கொள்ள வேண்டும்.

ரசூலுல்லாஹ்(ஸல்) உடைய இந்த அளவு நுணுக்கமான ஒழுக்கம் எதைக் கற்றுக் கொடுக்கின்றது? தொழுகையில் நிற்கும் போது கூட இஸ்லாமிய சமுதாயத்தில் வித்தியாசம் வந்து விடக்கூடாது; முன்பின் வேறுபாடு வந்துவிடக்கூடாது.

சகோதரர்களாக அல்லாஹ்விற்கு முன்பு அடிமைகளாக அவன் முன்பு நிற்க வேண்டுமோ, அதில் ஒருவர் மறந்து இன்னொருவர் அந்த சுன்னத்தை நிறைவேற்றுவதற்காக முயற்சி செய்யும்போது நீங்கள் அவருக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.

இன்னொரு பக்கம் நம்முடைய பலவீனம் என்னவென்றால் சமுதாயத்தில் ஒரு சுன்னத் ஒழுக்கம் சொல்லப்பட்டால் இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் மார்க்கம் பார்த்தால் உலகத்தில் வாழ முடியாது என்று சில மக்கள் நினைக்கிறார்கள்.

இன்று முஸ்லிம் சமுதாயம் பின்னேறி இருப்பதற்கு காரணம், அவர்கள் சுன்னத்தை விட்டது; மார்க்கத்தை மீறியது தான்.

அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; மார்க்கத்தை மீறி முன்னேற்றம் அடைந்து விடலாம் என்று. மார்க்கத்தின் ஒழுக்கங்களை விட்டுவிட்டு இவர்கள் சமுதாயத்தில் கண்ணியத்தை பெறலாம் என்று இருக்கின்றார்கள்.

எந்த அளவு சுன்னத்தை மார்க்கத்தை விடுவார்களோ அந்த அளவுக்கு இவர்கள் கேவலப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

ஒழுக்கங்களில் மட்டுமல்ல, சில விஷயங்களை ரசூலுல்லாஹ் (ஸல்)  அவர்கள் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதை கட்டாய கடமையாக செய்ய வேண்டும் என்று நமக்கு வலியுறுத்தினார்கள்.

நம்முடைய நஃப்சை பொறுத்தவரை பணிந்து போவதற்கு விரும்பாது. இந்த  நஃப்சில் ஒரு சைத்தானின் குணம் ஒன்று இருக்கிறது; நான் என்ற குணம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

இதிலிருந்து யார் பாதுகாக்கப்பட்டார்களோ அவர்கள் மலக்குகள் உடைய ஸிஃபத்துக்கு வந்துவிடுவார்கள்.

அல்லாஹ்வுடைய கட்டளை என்று வந்து விட்டால், தான் யார் என்று பார்க்க மாட்டார்கள். உடனே அவனுடைய கட்டளைக்கு அடிபணிந்து விடுவார்கள்.

ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை விட ஒரு பெரிய மலக்கு இருக்க முடியுமா? மலக்குகளின் தலைவன் என்று அல்லாஹ் அவர்களை சொல்கிறான்.

عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى

மிகப்பெரிய ஆற்றல் உடையவராக நான் அவனை படைத்திருக்கிறேன் என்று அல்லாஹ் சொல்கிறான். அமீன் எனது நம்பிக்கைக்கு உரியவன் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 53:5)

அல்லாஹ்விடமிருந்து நபிமார்களுக்கு வஹீ கொண்டு வரக்கூடிய வானவர். மனிதனைப் படைப்பதற்கு முன்பே வானவர்களை எப்போது படைத்தானோ அப்போதே வானவர்களுடைய தலைவராக அவரை ஆக்கினான்.

அத்தகைய ஜிப்ரீல்,அதற்குப் பிறகு மிகாயீல், மலக்குல் மவ்த் இன்னும் எவ்வளவோ வானவர்களை ஆதமுக்கு அல்லாஹுத்தஆலா சஜ்தா செய்ய கூறினானோ அங்கு ஒரு வினாடி கூட ஜிப்ரீல் தாமதிக்கவில்லை; உடனே விழுந்துவிட்டார்.

(அல்குர்ஆன் 2:34, 7:11, 7:61, 18:50, 20:116)

ரப்புக்கு கட்டுப்படுவதில் தான் என்னுடைய கண்ணியம் இருக்கிறது. அல்லாஹ்வுடைய கட்டளை என்று வந்துவிட்டால் முற்றிலுமாக சரணடைந்து விடுவதில் தான் என்னுடைய கண்ணியம் இருக்கிறது என்பதை ஜிப்ரீல் உணர்ந்தார். அவருடைய கண்ணியத்தை மேலும் அல்லாஹ் உயர்த்தினான்.

இப்லீஸ் தனக்கென்று ஒரு கண்ணியத்தை வைத்துக்கொண்டு,தன்னுடைய உள்ளத்தில் கற்பனை செய்து கொண்டு அல்லாஹ்டைய கட்டளையை மீறி தன்னுடைய கண்ணியத்தை தேடினான்.

அல்லாஹுத்தஆலா அவனை இழிவு அடைந்தவனாக சபிக்கப்பட்டவனாக ஆக்கினான். (அல்குர்ஆன் 7 : 18).

நம்முடைய சமுதாயத்திற்கு இதில் மிகப்பெரிய படிப்பினை இருக்கிறது.

அல்லாஹ்வுடைய கட்டளையை மீறி நபியுடைய சுன்னத்தை மீறி மாற்றார்களிடத்தில் கண்ணியத்தை தேடுகிறார்கள். இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளை மாற்றார்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்ற காரணத்தினால் இந்த சமுதாயம் காலில் போட்டு மிதிபட்டு கொண்டிருக்கிறது.

மாற்றார்களின் கலாச்சாரம் விருப்பமாக இருக்கிறது, பெருமையாக இருக்கிறது, அழகாக இருக்கிறது.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கலாச்சாரம் பிற்போக்குத்தனமான பழமையானதாக தெரிகிறது. (அல்லாஹ் பாதுகாக்கவேண்டும்)

இந்த நஃப்ஸ் சில நேரங்களில் நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? நான் ஏன் இறங்க வேண்டும்? என்பதாக பேசலாம்.

அதை காலில் போட்டு மிதித்து என்னுடைய நபி எனக்கு சொன்னார்கள் என்று அல்லாஹ்வுடைய தூதருக்கு கீழ்படிந்து அந்த கட்டளைகளை செய்யும்போது அல்லாஹுத்தஆலா அந்த மனிதரையும் அந்த மனிதனுடைய சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

ஆகவே ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சில விஷயங்களை நம்முடைய கடமையாக சொன்னார்கள்.

நபி (ஸல்) கூறினார்கள் :

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய 5கடமைகள் இருக்கின்றன.

1.رَدُّ السَّلاَمِ-ஸலாமுக்கு பதில் கூறுவது.

நீங்கள் முதலாவதாக முந்திக் கொண்டு ஸலாம் சொவது உங்களை மிக உயர்ந்தவர்களாக ஆக்கிவிடும். ஆனால்,சிலர் கண்ணியம் காரணமாக மற்றவர்களுக்கு ஸலாம் சொல்வதில்லை.

ஆனால் நீங்கள் யாரை தாழ்வாக கருதுனீர்களோ அவர் உங்களுக்கு ஸலாம் கூறினால், பதில் ஸலாம் கூறுவது உங்கள் மீது கடமையாகிவிட்டது.

அப்படி பதில் சொல்லாமல் முகம் திருப்பி சென்றால் நேரடியாக அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்தவராவார். அல்லாஹ்வுடைய தூதருக்கு கீழ்ப்படியாமல் தன்னுடைய நஃப்ஸுக்கு கீழ்ப்படிந்தவராவார்.

2. وَتَشْمِيتُ العَاطِسِ-நாம் இருக்கும் சபையில் ஒருவர் தும்மி விட்டு 'அல்ஹம்துலில்லாஹ்' என்று கூறினால் அதைக் கேட்டவுடன் 'யர்ஹமுகல்லாஹ்' அல்லாஹ் உன் மீது ரஹ்மத் செய்வானாக! அல்லாஹ் உன் மீது கருணை காட்டுவானாக! என்று அவருக்காக நாம் துவா செய்வதை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்மீது கடமையாக்கினார்கள்.

3. وَإِجَابَةُ الدَّعْوَةِ- ஒருவர் திருமணத்திற்காக வலிமா ஏற்பாடு செய்து அந்த விருந்துக்கு நம்மை அழைத்தால் அவருடைய விருந்தில் கலந்து கொள்ள வேண்டும்.

4. وَعِيَادَةُ المَرِيضِ- தன்னுடைய முஸ்லிமான சகோதரர் நோயுற்று விட்டால் அவரை பார்த்து அவருக்கு நலம் விசாரித்து அவருக்காக துவா செய்து வர வேண்டும்.

5. وَاتِّبَاعُ الجَنَائِزِ-நம்முடைய முஸ்லிம் சகோதரர்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய ஜனாஸாவை தொழுகை வைத்து அந்த ஜனாஸாவை எடுத்துக்கொண்டு கப்ர் வரை செல்ல வேண்டும். (3)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1240, முஸ்லிம் 2162.

இந்த ஒழுக்கங்களை நம் சமுதாய மக்களுக்கு மத்தியில் பின்பற்றி இருந்தால் எத்தகைய ஒரு சமுதாய உணர்வுகள் இருக்கும். எத்தகைய ஒரு பிடிப்பு ஏற்பட்டிருக்கும். நமக்கு மத்தியில் எவ்வளவு ஒரு பெரிய பாச உணர்வு ஏற்பட்டிருக்கும்.

ஆனால், இன்று எங்கு பார்த்தாலும் புறக்கணிப்பு. குடும்பங்களில், இயக்கங்களின் பெயர்களில் புறக்கணிப்பு, அவர்களுடைய கூட்டங்களின் பெயர்களால் புறக்கணிப்பு, ஜமாத்தின் பெயர்களால் புறக்கணிப்பு.

எங்கு பார்த்தாலும் பிளவுப்பட்டு சண்டை செய்து கொள்ளக்கூடிய சமுதாயமாக இருக்கின்றது. (அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!)

ரசூலுல்லாஹி (ஸல்) மேலும் எத்தகைய ஒழுக்கங்களைக் கூறினார்கள் என்று பாருங்கள்.

எதன் மூலம் சமுதாயத்துக்கு மத்தியில் சண்டை சச்சரவு வருமோ அந்த வழிகள் ஒவ்வொன்றையும் நுணுக்கமாக ரசூல் (ஸல்) கண்டுகொண்டு அதை அடைப்பதற்கு அந்த வழியில் முஸ்லிம்கள் விழுந்து விடாமல் பாதுகாப்பதற்கு கூறிய ஒழுக்கங்கள், அறிவுரைகள் தான் இது.

ஒரு முஸ்லிம் ஒரு வியாபாரத்திற்கு வருகிறார். ஒரு பொருளை வாங்குவதற்கு விலை பேசிக் கொண்டிருக்கிறார். இன்னொரு முஸ்லிமும் வருகிறார். இப்போது அந்த பொருளை பார்த்தவுடன் அவருக்கு அந்த பொருளுடைய தேவை இருக்கிறது. அவரும் அந்த பொருளைத்தான் தேடிக் கொண்டிருக்கிறார்.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) சொல்கிறார்கள்: இன்னொரு முஸ்லிம் அதை வாங்குவதற்கு விலை பேசிக் கொண்டிருக்கிறார் என்று உனக்கு எப்போது தெரியுமோ.

ஒன்று அவர் அதை வாங்கி விடவேண்டும். அல்லது அவர் அதை வாங்காமல் விட்டு விடும் வரை நீ அந்த பொருளை வாங்குவதற்கு விலை பேசக்கூடாது.

தன்னுடைய சகோதரன் கொடுக்கல்-வாங்கல் செய்து கொண்டிருக்கும் போது அதில் குறுக்கு சென்று அந்த வியாபாரத்தை தான் பெறுவதற்கு ஒன்று விற்பதோ அல்லது வாங்குவதோ எந்த வகையிலும் குறுக்கே வருவதை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள். அவர் வேண்டாம் என்று விட்டு விட்டு சென்றால் தான் அந்த பொருள் இவருக்கு ஹலாலாகும்.

இன்னும் சொன்னார்கள் : ஒரு குடும்பம் இன்னொரு குடும்பத்தில் பெண் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் வேண்டாம் என்று விட்டுச் செல்லாத வரை ஒருவர் குறுக்கே சென்று பெண் பேசக்கூடாது என்று தடுத்தார்கள். (4)

அறிவிப்பாளர் : உக்பா இப்னு ஆமிர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2536.

இவ்வளவு தூரம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கவனித்தார்கள் என்றால் சமுதாயத்துக்கு மத்தியில் பிளவுகள், பிரிவுகள் வந்து விடக்கூடாது. வெறுப்பு பரவி விடக்கூடாது என்பதற்காகத் தான்.

சிலநேரங்களில் வெறுப்பு, சண்டை சச்சரவு ஏற்பட்ட பிறகு கூட ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய முயற்சி எப்படி இருந்தது என்றால் அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிளவை நீக்கி சகோதரத்துவத்தை ஏற்படுத்தக்கூடியதாகதான் இருந்தது.

உதாரணமாக, ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடைய உறவை கொன்றுவிட்டான். தாயையோ தந்தையையோ சகோதரனையோ ஒருவரை கொன்று விட்டால் கூட, அந்த நேரத்தில் அல்லாஹ்வின் சட்டம்;

ஒன்று பாதிக்கப்பட்டவர் பழி வாங்க வேண்டும். அல்லது அதற்குரிய நஷ்டயீடு கொடுக்க வேண்டும்.

அப்படி நஷ்டஈடு கொடுக்கும்போது யார் இந்த நஷ்டயீடு வாங்குவார்களோ கொல்லப்பட்டவருடைய உறவினர்கள்

فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ

(பழிவாங்குவதற்குப் பதிலாகக் கொலையாளி ஒரு தொகையைத் தருவதாக ஒப்புக் கொண்டிருந்தால், அந்த நஷ்டஈட்டைத்) தயக்கமின்றி நன்றியோடு அவன் செலுத்திவிட வேண்டும். இ(வ்வாறு நஷ்டஈட்டை அனுமதித்திருப்ப)து உங்கள் இறைவனுடைய சலுகையும், அருளுமாகும். (அல்குர்ஆன் 2:178)

ஒன்று பிணக்குகள் ஏற்படக் கூடாது.அப்படி ஏற்பட்டுவிட்டால் சுமூகமான முறையில் சகோதரத்துவத்தை உறுதிப்படுத்துகின்றன வகையில் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் காட்டிய வழிமுறை தான் இது.

இதோடு மட்டுமல்லாமல் நம்முடைய ஒவ்வொரு தொழுகையிலும் சரி,நம்முடைய ஒவ்வொரு துஆவிலும் சரி எல்லா முஸ்லிம்களையும் கூட்டிக்கொள்ள வேண்டும். அவர்களுக்காக பிரார்த்திக்க வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு வழிகாட்டுகின்றன:

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ

எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” (அல்குர்ஆன் 59 : 10)

இந்த துஆவை ஒவ்வொரு முஸ்லிமும் கேட்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

எந்த அளவுக்கு நம்முடைய சகோதரத்துடைய உறவுகள் நட்புடைய உறவுகள் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் "லாயிலாஹ இல்லல்லாஹ்" என்ற கலிமாவை கூறி இந்த மார்க்கத்தில் ஒருங்கிணைந்தோமோ அந்த ஒன்றிணைத்தல் உறுதியாக இருக்க வேண்டும்.

அதில் பிளவுகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த துஆவின் மூலமாக நமக்கு அல்லாஹ் ஆதரவைக் கொடுத்து சகோதரத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நமக்கு வழிகாட்டுகின்றான்.

ஆகவே ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த உறவு மேலும் உறுதிப்படுத்த சொன்னார்கள்:

நீங்கள் உங்களுடைய சகோதரனுடைய தேவையை நிறைவேற்றினால் உங்களுடைய தேவையை அல்லாஹ் நிறைவேற்றுவான். (5)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 4677.

மேலும் சொன்னார்கள்:

உன்னுடைய முஸ்லிமான சகோதரனைப் பார்த்து நீ புன்சிரித்தால் அவனுடைய உள்ளத்தை குளிர வைப்பதற்காக நீ சிரிக்கின்ற சிரிப்பு, இது அல்லாஹ்வின் பாதையில் செய்கின்ற தர்மத்திற்கு சமம்.

அறிவிப்பாளர் : அபூ தர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி,எண் : 1879.

ஒரு முஸ்லிமை வெறுத்து ஒதுக்க கூடாது. மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது. தனது முஸ்லிமான சகோதரர் இடத்தில் சண்டை செய்து கொண்டு அவன் மீது வெறுப்பாக இருந்து மூன்று நாட்கள் கழிப்பது ஹலால் அல்ல என்று சொன்னார்கள்.

(புகாரி எண் : 5611,5678)

இன்று நம்முடைய உறவுகளை பார்க்க வேண்டும். நம்முடைய ஒழுக்கங்களை பார்க்க வேண்டும். சமுதாயத்தில் நாம் எப்படி இருக்கின்றோம்?

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) இப்படி சண்டைகள் செய்து கொள்ளக் கூடிய, ஒருவர் செல்வங்களை இன்னொருவர் மென்று விழுங்கி செரிக்கக்கூடிய, நீயா நானா என்று போட்டி போட்டும், ஒருவரின் ரத்தத்தை ஹலாலாகக்கூடிய, ஒருவரின் உரிமைகளை ஹலாலாக்கிக் கொள்ளக்கூடிய ஒருவரின் உரிமைகளில் அத்து மீறி கொள்ளக்கூடிய சமுதாய ஒழுக்கத்தையா ரசூல் (ஸல்) கற்றுக்கொடுத்தார்கள்?! கிடையாது.

அல்லாஹு தஆலா நம்மைப் பாதுகாக்க வேண்டும். இன்று நாம் இந்த குணங்களை மீள்பார்வை செய்து நம்முடைய ஒழுக்கங்களை திருத்தி நாமும் சரிசெய்து ஒரு சிறந்த சமுதாயமாக நமது வளரும் தலைமுறையை நாம் உருவாக்கவில்லை என்றால் அடுத்து வரக்கூடிய சமுதாயம் எப்படி இருக்குமோ! என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்.

அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய கட்டளைகளை பேணுவதற்கும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காண்பித்த ஒழுக்கங்களை பெறுவதற்கும் நம்முடைய தீய குணங்களை விட்டு விலகி எந்த நற்குணங்களை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விரும்பினார்களோ அந்த நற்குணங்களை கொண்டு நம்மை அலங்கரித்துக் கொள்வதற்கு அல்லாஹ் அருள் செய்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا دَاوُدُ يَعْنِي ابْنَ قَيْسٍ، عَنْ أَبِي سَعِيدٍ، مَوْلَى عَامِرِ بْنِ كُرَيْزٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحَاسَدُوا، وَلَا تَنَاجَشُوا، وَلَا تَبَاغَضُوا، وَلَا تَدَابَرُوا، وَلَا يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَانًا الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لَا يَظْلِمُهُ وَلَا يَخْذُلُهُ، وَلَا يَحْقِرُهُ التَّقْوَى هَاهُنَا» وَيُشِيرُ إِلَى صَدْرِهِ ثَلَاثَ مَرَّاتٍ «بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ، كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ، دَمُهُ، وَمَالُهُ، وَعِرْضُهُ» (صحيح مسلم - 2564)

குறிப்பு 2)

حَدَّثَنَا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ الْغَافِقِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، وَحَدِيثُ ابْنِ وَهْبٍ أَتَمُّ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ أَبِي الزَّاهِرِيَّةِ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ قُتَيْبَةُ: عَنْ أَبِي [ص:179] الزَّاهِرِيَّةِ، عَنْ أَبِي شَجَرَةَ - لَمْ يَذْكُرِ ابْنَ عُمَرَ - أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَقِيمُوا الصُّفُوفَ وَحَاذُوا بَيْنَ الْمَنَاكِبِ وَسُدُّوا الْخَلَلَ وَلِينُوا بِأَيْدِي إِخْوَانِكُمْ - لَمْ يَقُلْ عِيسَى بِأَيْدِي إِخْوَانِكُمْ - وَلَا تَذَرُوا فُرُجَاتٍ لِلشَّيْطَانِ وَمَنْ وَصَلَ صَفًّا وَصَلَهُ اللَّهُ، وَمَنْ قَطَعَ صَفًّا قَطَعَهُ اللَّهُ»، قَالَ أَبُو دَاوُدَ: أَبُو شَجَرَةَ كَثِيرُ بْنُ مُرَّةَ، قَالَ أَبُو دَاوُدَوَ: " مَعْنَى وَلِينُوا بِأَيْدِي إِخْوَانِكُمْ: إِذَا جَاءَ رَجُلٌ إِلَى الصَّفِّ فَذَهَبَ يَدْخُلُ فِيهِ فَيَنْبَغِي أَنْ يُلِينَ لَهُ كُلُّ رَجُلٍ مَنْكِبَيْهِ حَتَّى يَدْخُلَ فِي الصَّفِّ " (سنن أبي داود- 666) [حكم الألباني] : صحيح

குறிப்பு 3)

- حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ المُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " حَقُّ المُسْلِمِ عَلَى المُسْلِمِ خَمْسٌ: رَدُّ السَّلاَمِ، وَعِيَادَةُ المَرِيضِ، وَاتِّبَاعُ الجَنَائِزِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيتُ العَاطِسِ " (صحيح البخاري- 1240)

குறிப்பு 4)

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ اللَّيْثِ وَغَيْرِهِ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ عَلَى الْمِنْبَرِ يَقُولُا إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُؤْمِنُ أَخُو الْمُؤْمِنِ فَلَا يَحِلُّ لِلْمُؤْمِنِ أَنْ يَبْتَاعَ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا يَخْطُبَ عَلَى خِطْبَةِ أَخِيهِ حَتَّى يَذَرَ (صحيح مسلم 2536 -)

குறிப்பு 5)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ عُقَيْلٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لَا يَظْلِمُهُ وَلَا يُسْلِمُهُ مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ بِهَا كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ (صحيح مسلم 4677 -)

குறிப்பு 6)

حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ الْجُرَشِيُّ الْيَمَامِيُّ حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا أَبُو زُمَيْلٍ عَنْ مَالِكِ بْنِ مَرْثَدٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ وَأَمْرُكَ بِالْمَعْرُوفِ وَنَهْيُكَ عَنْ الْمُنْكَرِ صَدَقَةٌ وَإِرْشَادُكَ الرَّجُلَ فِي أَرْضِ الضَّلَالِ لَكَ صَدَقَةٌ وَبَصَرُكَ لِلرَّجُلِ الرَّدِيءِ الْبَصَرِ لَكَ صَدَقَةٌ وَإِمَاطَتُكَ الْحَجَرَ وَالشَّوْكَةَ وَالْعَظْمَ عَنْ الطَّرِيقِ لَكَ صَدَقَةٌ وَإِفْرَاغُكَ مِنْ دَلْوِكَ فِي دَلْوِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ (سنن الترمذي 1879 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/