HOME      Khutba      ரமழான் தர்மத்தின் மாதம்!! | Tamil Bayan - 671   
 

ரமழான் தர்மத்தின் மாதம்!! | Tamil Bayan - 671

           

ரமழான் தர்மத்தின் மாதம்!! | Tamil Bayan - 671


بسم الله الرحمن الرّحيم

ரமழான் தர்மத்தின் மாதம்!!

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் அச்சத்தை, தனி வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும், தொழில் துறைகளிலும் பின்பற்றி வாழும்படி எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக இந்தக் குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவனுடைய நாட்டத்தை யாரும் முழுமையாக சூழ்ந்து அறிய முடியாது.

اللَّهُ يَفْعَلُ مَا يَشَاءُ

அவன் நாடியதை செய்கின்றான். (அல்குர்ஆன் 3:40)

إِنَّ اللَّهَ يَحْكُمُ مَا يُرِيدُ

அவன் நாடியதை சட்டம் ஆக்குகின்றான். (அல்குர்ஆன் 5:1)

فَعَّالٌ لِمَا يُرِيدُ

அவன் நாடியதைச் செய்து முடிப்பான். (அல்குர்ஆன் 85:16)

وَاللَّهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ

அவனுடைய காரியத்தில் அவன் அனைவரையும் மிகைத்தவன், யாரும் அவனை எதிர்த்து விட முடியாது. (அல்குர்ஆன் 12:21)

சகோதரர்களே! நோய் நொடிகள் அதுபோன்று வியாபாரத்தில் ஏற்படுகின்ற நஷ்டங்கள், எதிரிகளால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல், பயம் இன்னும் இப்படியாக பல சோதனைகளை கடந்து தான் நாம் சொர்க்கம் செல்ல வேண்டி இருக்கின்றது.

சொர்க்கம் என்பது சோதனைகளால் சூழப்பட்டது. சொர்க்கத்தின் பாதை சோதனைகளால் நிரம்பியது.

ஒரு அடியான் அவனுடைய மனநிலை, அவருடைய சிந்தனை எப்படி இருக்க வேண்டும் என்றால், எல்லா நிலையிலும் நான் எனது ரப்புக்கு கட்டுப்பட வேண்டும்.

உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அதுபோன்று ஆக்ரோஷங்களையும் நம்முடைய விருப்பங்களையும் கட்டுப்படுத்தி அல்லாஹ்வுடைய சட்டங்களை முன் நிறுத்துவதுதான் நம்முடைய மார்க்கம்.

அல்லாஹ்வுடைய சட்டத்தின் படி நடப்பது தான் நமக்கு மறுமையின் வெற்றி.

ஸஹாபாக்களுக்கு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் இத்தகைய பயிற்சியை கொடுத்தார்கள். அவர்களது வாழ்க்கையில் நமக்கு படிப்பினைகளை, பாடங்களை அல்லாஹு தஆலா ஏற்படுத்தி கொடுத்தான்.

உங்களுக்குத் தெரியும்; ஹுதைபிய்யா ஒப்பந்தத்தில் எல்லா தோழர்களுடைய விருப்பமும் அபூ பக்ர் (ரலி) அவர்களை தவிர போர் செய்வது தான் அவர்களுடைய விருப்பமாக இருந்தது.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் அவர்களுடைய விருப்பமோ ஒப்பந்தம் செய்வதாக இருந்தது. பணிந்து செல்வதாக விட்டுக் கொடுப்பதாக இருந்தது. இதை தோல்வியாக பலர் நினைத்தார்கள்.

அல்லாஹு தஆலா கூறினான் :

إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا

நபியே! உங்களுக்கு நாம் தெளிவான வெற்றியை கொடுத்தோம். (அல்குர்ஆன் 48:1)

ஸஹாபாக்களுக்கு அந்த ஒப்பந்தத்தில் உள்ள நன்மைகள் பின்னால்தான் புரிய வந்தது.

நூல்: அர்ரஹீக் அல்மக்தூம்.

இது போன்றுதான் இந்த நோய் நொடியின் மூலமாக அல்லாஹ் என்ன நாடுகிறான் என்பதை அல்லாஹ் அறிந்தவன்.

யாரை அல்லாஹ் சுத்தப்படுத்த நாடுகின்றான்? யாரை அல்லாஹ் தண்டிக்க நாடுகின்றான்? யாருடைய பெருமையை அல்லாஹ் அளிக்க நாடுகின்றான்? இந்த உலகத்தில் எந்த எந்த மாற்றங்களை அல்லாஹ் கொண்டுவர நாடுகின்றான்?

அனைத்தையும் அல்லாஹ் அறிந்தவன்.

وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ

அவனுடைய அறிவிலிருந்து யாரும் சூழ்ந்து அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. (அல்குர்ஆன் 2:255)

சென்ற ரமழானை நம்முடைய ஜமாஅத்தான வணக்க வழிபாடுகளோடு இழந்துவிட்ட நாம், இந்த ரமழானில் அந்த ஜமாஅத்தான வணக்க வழிபாட்டுக்காக ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த நிலையில், நம்முடைய மனதுக்கு கவலை தரக்கூடிய செய்தியைத் தான் நாம் இப்போது கேட்டிருக்கின்றோம்.

ஜமாஅத்தாக வணக்க வழிபாடுகளை இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தோடு செய்ய முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம்.

ஆனால் நமக்கு வணக்க வழிபாடுகளை அல்லாஹ் விசாலப்படுத்தி இருக்கின்றான். ஒருவேளை அதுதான் முடிவு. அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றாலும் நம்முடைய வணக்க வழிபாடுகளில் எவ்வித குறையும் வந்து விடக் கூடாது.

அல்லாஹு தஆலாவை வணங்குவதற்கு மஸ்ஜிது சிறந்த இடம். அந்த மஸ்ஜிதுகளில் கூட முடியவில்லை என்றாலும் நம்முடைய வீடுகளில் அந்த வணக்க வழிபாடுகளை நம்முடைய மனைவி மக்களோடு, நம்முடைய தாய் தந்தையோடு, நம்முடைய குடும்பத்தாரோடு நாம் சிறப்பாக செய்ய வேண்டும்.

மஸ்ஜிதில் அந்த வணக்க வழிபாடு தவறிவிட்டது என்ற காரணத்தால் மொத்த ஜமாத்தும் தவறி விடவில்லை.

மஸ்ஜிதில் ஜமாஅத் தவறிவிட்டதே தவிர நம்முடைய மனைவி மக்களோடு ஜமாஅத்தாக தொழலாம். நம்மில் ஓதத் தெரிந்தவர் எவ்வளவு நேரம் ஓத முடியுமோ? ஒரே சூராவாக இருந்தாலும் கூட அந்த சூராவை திரும்பத் திரும்ப நீண்ட நேரம் ஓதி அந்த இரவுத் தொழுகையை ரமழானில் செய்வதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

சிலரைப் பார்க்கின்றோம்; ஒரு பக்கம் குறை கூறி விட்டு, அல்லது எல்லா காரணங்களையும் ஒரு பக்கம் சுமத்தி விட்டு, வணக்க வழிபாடுகளையே புறக்கணிப்பதற்கு அதை ஒரு சாக்காக, காரணமாக ஆக்கி கொள்கின்றார்கள். அப்படி இல்லை.

அல்லாஹு தஆலா வணக்க வழிபாடுகளை நமக்கு விசாலப்படுத்திக் இருக்கின்றான்.

அதாவது, யார் ஒருவர் மஸ்ஜிதில் தொழக் கூடியவராக இருந்தாரோ? ரமழானுடைய கியாமுல் லைலை மஸ்ஜிதில் தொழக் கூடியவராக இருந்தாரோ? அவருக்கு இதுபோன்ற தவிர்க்கமுடியாத காரணங்களால் ஜமாஅத் தொழுகை தவற விடுமேயானாலும் அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா அவருக்கு அந்த ஜமாத் உடைய நன்மையை கொடுப்பான்.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் ;

ஒரு மனிதன் நஃபிலான சுன்னத்தான வணக்க வழிபாடுகளை தொடர்ந்து செய்கின்றான். நோயின் காரணமாக பயணத்தின் காரணமாக அது அவனுக்கு செய்ய முடியாமல் போய்விட்டால், அல்லாஹு தஆலா அவனுக்கு அந்த நன்மைகளை தொடர்ந்து எழுதி விடுகிறான். (1)

அறிவிப்பாளர் : அபூ மூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 2996.

நோயின் காரணமாக அவன் அந்த இபாதத்துகளை விட்டால், சுகமான காலத்தில் அவன் செய்த எல்லா நஃபிலான சுன்னத்தான வணக்கங்களையும், நோயுடைய காலத்திலும் செய்ததாக அல்லாஹு தஆலா பதிய வைத்து விடுகின்றான்.

ஆகவே எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் அதை தாங்கிக் கொள்வதற்கு அதில் நமக்கு மார்க்க அறிஞர்கள் மார்க்கத்தில் இந்த சட்டங்களை சொல்கின்றார்கள்.

அந்த வழிகாட்டுதலுக்கு ஏற்ப நாம் நம்முடைய இபாதத்துளை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனைக்கு வர வேண்டுமே தவிர குறை சொல்வதோஅல்லது இபாதத்துக்களை புறக்கணிப்பதோஅல்லது இபாதத்தில் அலட்சியம் செய்வதோஒரு முஃமினுக்கு அழகல்ல.

முஃமினை பொருத்தவரை அவனுடைய பாதை அல்லாஹ்வை முன்நோக்கியது.அவன் அல்லாஹ்வை முன்னோக்கி சென்று கொண்டே இருப்பான்.

எத்தனையோ மார்க்க அறிஞர்கள் முந்தைய காலங்களில் அவர்கள் செய்யாத குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஜும்ஆوஜமாஅத் உடைய தொழுகையிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டார்கள். ஆனால் அதன் காரணமாக அவர்கள் நஃபிலான சுன்னத்தான இபாதத்துக்களை குறைத்து விடவில்லை.

யூசுஃப் அலைஹி வஸ்ஸலாத்து வஸல்லம் அவர்களை நமக்கு அழகிய உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாமா?

யூசுப் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் தான் செய்யாத குற்றங்களுக்காக ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டார்கள். வெளி வாழ்க்கையிலிருந்து தாவா பணியிலிருந்து மற்ற பொதுவான வணக்க வழிபாடுகளில் இருந்து தடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். (அல்குர்ஆன் 12:24)

எனவே சிறை சாலையில் ஒரு தாவா சென்டர் ஆக ஒரு சிறைக் கூடமாக ஆக்கிவிட்டார்கள். அதையே வணக்க வழிபாட்டு ஸ்தலமாக ஆக்கிவிட்டார்கள்.

ஒரு முஃமினை பொருத்தவரை அப்படித்தான். அவன் எங்கிருந்தாலும் சரி அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு இருப்பான். எந்த நிலையில் இருந்தாலும் சரி அவன் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு இருப்பான். அல்லாஹ்வின் பக்கம் அடியார்களை அழைத்துக் கொண்டு இருப்பான்.

ஆகவே நாம் நம்முடைய சிந்தனைகளை சீர் செய்ய வேண்டும்.

நம்முடைய உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் அடிமையாகி விடாமல், மார்க்க அறிஞர்கள் சொல்லக்கூடிய வழிகாட்டுதலுக்கு, அல்லாஹ்வுடைய தீன் சொன்ன அந்த சரியான வழிகாட்டுதலை தெரிந்து கொண்டு, இபாதத்துகளை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

இலகுவான முறையில் அதே நேரத்தில் அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளில் அதிக நேரத்தை கொடுத்து, அதிகமான முக்கியத்துவத்தை கொடுத்து,நாம் நம்முடைய குடும்பத்தோடு எப்படி இந்த வணக்க வழிபாடுகளை செய்வது என்று தெரிந்து கொண்டு சிறப்பாக நாம் செய்ய வேண்டும்.

ரமழான் மாதத்தில் செய்வதற்கு நிறைய வணக்க வழிபாடுகள் இருக்கின்றன.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சில வழிகாட்டுதல்களை பார்த்து இந்த குத்பாவை நிறைவு செய்வோம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள் :

பொதுவாகவே ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்களில் அதிகம் தர்மம் கொடுக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.(2)

 (தர்மம் கொடுப்பதற்கு பெட்டி நிறைய காசு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. லாக்கரில் கட்டுக்கட்டாக காசு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மனம் இருக்க வேண்டும்.

தன்னிடத்தில் இருப்பதை ஏழை எளியவர்களுக்கோ, மார்க்கத்திற்கோ கொடுக்க வேண்டும் என்ற உணர்வு இருக்க வேண்டும்.)

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த தர்மத்தை யாரும் எட்ட முடியாது என்பதற்கு பல உதாரணங்களை பார்க்கலாம்.

ஒரு ஆடை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இருந்தது. அது சாதாரணமான ஒரு போர்வை. ஒரு பெண்மணி அல்லது இன்னொரு ஸஹாபி அவர் துணி தைப்பவராக இருந்தார்.

ரசூலுல்லாஹ் இப்படி இருக்கிறாரே என்று அவர் முயற்சி எடுத்து ஒரு மேலாடையை ஒரு ஜிப்பாவை தைத்துக் கொண்டு வந்து ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கொடுக்கின்றார்.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சஹாபாக்களோடு தன்னுடைய உரையை முடித்த பிறகு அந்த ஆடையை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று அணிந்துகொண்டு வந்து உட்கார்கின்றார்கள்.

அந்த ஆடை அழகாக இருந்தது. அந்த சபையில் இருந்த மனிதர் உடனடியாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்கின்றார்:

அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இப்பொழுது அணிந்துகொண்டு இருக்கக்கூடிய இந்த ஜிப்பாவை எனக்குக் கொடுங்கள் என்று.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சரி தருகிறேன்; எதிர்பார்த்து இருங்கள் என்று சொன்னார்கள். சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் உள்ளே செல்கின்றார்கள்.

அப்பொழுது ஸஹாபாக்கள் எல்லாம் அந்த ஸஹாபியை குறைபட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடத்தில் இருந்ததோ அந்த ஒரு ஆடை. அந்த தையல்காரர் கொடுக்கும் போது தன்னுடைய தேவையோடு அதை வாங்கினார்கள். உனக்கு தெரியும் அல்லவா! நபியிடத்தில் ஏதும் கேட்டால் அவர்கள் மறுக்க மாட்டார்கள் என்று. நீ இப்படிக் கேட்டு விட்டாயே என்று மற்ற தோழர்கள் கூறுகிறார்கள்.

(ஸஹாபாக்கள் உடைய சிந்தனை இந்த உலகத்திற்கு அப்பாற்பட்டது. அவர்களை நாம் புரிந்து கொள்ள முடியாது.)

அந்த ஸஹாபி சொல்கின்றார்: நான் இதை அணிந்து பெருமை கொள்வதற்காக கேட்கவில்லை. ரசூலுல்லாஹ்வின் மேனியில் பட்ட ஆடை எனக்கு கஃபனாக இருக்க வேண்டும் என்பதற்காக கேட்டேன் என்று சொல்கின்றார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உள்ளே சென்றார்கள்; முன்னால் போர்த்தியிருந்த போர்வையை அணிந்து கொண்டு இந்த ஜிப்பாவை மடித்துக் கொண்டு வந்து அவரிடத்தில் கொடுத்தார்கள்.

ஸஹாபாக்கள் எழுதுகிறார்கள்: அவர் விரும்பியபடியே அந்த ஆடை அவருக்கு கஃபனாக அமைந்தது என்று.

அறிவிப்பாளர் : சஹ்ல் இப்னு ஸஃத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 6036.

இப்படித்தான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய எண்ணம் இருந்தது; கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.

கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். எதையும் தனக்கு மிச்சப்படுத்த மாட்டார்கள். இருப்பதிலிருந்து கொடுப்பது இதுதான் ஒரு முஃமினுடைய அடையாளம்.

وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ

நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள். (அல்குர்ஆன் 2:3, 8:3)

நம்முடைய முட்டாள்தனம் என்ன தெரியுமா? நம்முடைய ஈமானுடைய பலவீனம் என்ன தெரியுமா? ஒருவர் நம்மிடத்தில் கேட்டால், அல்லாஹ் எனக்கு கொடுத்தால் உனக்கு கொடுக்கின்றேன் என்று கூறுகிறோம். இது மிகத் தவறான வார்த்தை புரிய வேண்டும்.

அல்லாஹ் அப்படி சொல்லவில்லையே!

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்படி சொல்லவில்லையே.

அல்லாஹ் சொல்கின்றான் :

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ

நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கியிருப்பதிலிருந்து (நன்மையான வழியில்) நீங்கள் செலவு செய்யுங்கள். (அல்குர்ஆன் 2:254)

அல்லாஹ்விடத்தில் நாம் நிபந்தனை போட முடியாது. அல்லாஹ் எனக்கு கொடுத்தால் உனக்கு கொடுப்பேன் என்று. இது முனாஃபிக்குகளின் வார்த்தை என்று அல்லாஹ் சொல்கின்றான்.

وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ

அவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள், ‘‘அல்லாஹ் தன் அருளைக் கொண்டு நமக்கு ஏதும் கொடுத்தால் நிச்சயமாக நாம் (அதை) நல்வழியில் (தாராளமாக) தானம் செய்து, நிச்சயமாக நாம் நல்லவர்களாகவும் ஆகிவிடுவோம்'' என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தனர். (அல்குர்ஆன் 9 : 75)

அப்படி சொல்லக்கூடாது. பொதுவாகச் சொல்லலாம்,இன்று இல்லை,நாளை தருகிறேன் அல்லது இன்னும் சில நாட்கள் கழித்து தருகிறேன் என்று.

அல்லாஹ் எனக்கு கொடுக்கட்டும் அதற்குப் பிறகு நான் உனக்கு கொடுக்கின்றேன் என்று சொல்லக்கூடாது. அல்லாஹ் அப்படி சொல்லவில்லை.

உனக்கு கொடுக்கப்பட்டதில் இருந்து நீ கொடு என்று அல்லாஹ் சொல்கின்றான்.(அல்குர்ஆன் 2:254)

நம்மிடத்தில் ஆயிரம் இருக்கின்றதா? பத்தைக் கொடுத்து பழகுவோம். பிறகு நூறைக் கொடுத்து பழகுவோம்.

இதுதான் தர்மத்தை கொடுத்து பழகுவதற்கான பக்குவம்.

அதை விட்டுவிட்டு நாம் என்ன நினைக்கின்றோம்? இவருக்கு தர்மம் செய்து என்ன ஆகப்போகிறது என்று.

இந்த இடத்தில் நான் கொடுக்கவில்லை என்றால் வேறு ஒருவர் கொடுக்கப் போகின்றார்கள். நான் எதற்கு கொடுக்க வேண்டும்?

அப்படி இல்லை. கேட்டு வருபவர்களை இல்லை என்று சொல்லாமல் அவர்களுக்கு கொடுத்து பழகக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிடுகின்றார்கள்.

பொதுவாகவே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தர்மம் செய்வார்கள். ரமழான் மாதத்தில் ஜிப்ரீல் அலைஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் ரசூலுல்லாஹ்வை சந்தித்து குர்ஆனை அவர்கள் பரிமாறிக்கொள்ள வரும்போது, எந்த அளவிற்கு தர்மம் செய்வார்கள் என்றால், வேகமாக வீசக்கூடிய காற்றின் வேகத்தை விட ரசூலுல்லாஹ் உடைய தர்மத்தின் வேகம் அதிகமாக இருக்கும். (2)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 4997.

நம்மிடத்தில் இருக்கக் கூடியதை பிரித்து கொடுக்கலாம்.

அல்லது ஒருவருடைய ஒரு மாத தேவை அல்லது இரண்டு மாத தேவை நிறைவேறும் அளவிற்கு கொடுக்கலாம்.

நம்முடைய நண்பர்களில் சகோதரர்களில் முடியாதவர்களுக்கு அவர்களுடைய ஒரு மாத வாடகைக்கு நாம் கொடுக்கலாம்.

அவர்களுடைய பிள்ளைகளுடைய கல்வி தொகைக்கு ஒரு மாதம் நாம் பொறுப்பு எடுக்கலாம்.

இப்படியாக தர்மத்தின் வகைகள் ஏராளமாக இருக்கின்றன.

நாமோ நம்முடைய சில குறைவான அறிவினால் சில சில்லரைக் காசுகளை சில ரூபாய் நோட்டுக்களை, யாசகம் கேட்டு வரக்கூடியவர்களுக்குக் கொடுத்துவிட்டு அத்தோடு தர்மத்தின் அளவை நாம் குறைத்து விடுகின்றோம்.

அப்படியல்ல. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கின்றார்கள் :

ஒரு பேரித்தம் பழம் இரண்டு பேரித்தம் பழம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு செல்பவனல்ல மிஸ்கீன்.

யார் தன்னிடத்தில் தேவை இருந்தும் அதைக் கேட்காமல் ஒழுக்கத்தோடு பத்தினி தனமாக அடக்கத்தோடு இருக்கின்றானோஅவன் மிஸ்கீன். (3)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 1479.

அவரைத் தேடிச் சென்று நாம் கொடுக்க வேண்டும். அவர்கள் கேட்க மாட்டார்கள்.

அல்லாஹ் சொல்கின்றான் :

لِلْفُقَرَاءِ الَّذِينَ أُحْصِرُوا فِي سَبِيلِ اللَّهِ لَا يَسْتَطِيعُونَ ضَرْبًا فِي الْأَرْضِ يَحْسَبُهُمُ الْجَاهِلُ أَغْنِيَاءَ مِنَ التَّعَفُّفِ تَعْرِفُهُمْ بِسِيمَاهُمْ لَا يَسْأَلُونَ النَّاسَ إِلْحَافًا وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ

(நம்பிக்கையாளர்களே!) சில ஏழைகள் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காகவே தங்களை (முற்றிலும் அர்ப்பணம் செய்து) ஒதுக்கிக் கொண்டதால் (தங்கள் சொந்த வாழ்விற்குத் தேடக்கூட) பூமியில் நடமாட சாத்தியப்படாதவர்களாக இருக்கின்றனர். (மேலும், அவர்கள்) யாசிக்காததால் (அவர்களின் வறுமை நிலையை) அறியாதவர்கள் அவர்களை செல்வந்தர்களென எண்ணிக் கொள்கின்றனர். அவர்களுடைய (வறுமையின்) அடையாளங்(களாகிய ஆடை, இருப்பிடம் ஆகியவை)களைக் கொண்டு நீங்கள் அவர்களை அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடத்தில் வருந்தியும் கேட்க மாட்டார்கள். (இத்தகைய ஏழைகளுக்கு) நீங்கள் நல்லதில் இருந்து எதைச் செலவு செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறி(ந்து அதற்குரிய கூலியை உங்களுக்குத் தரு)வான்.  (அல்குர்ஆன் 2:273, 48:29)

வசனத்தின் கருத்து : மக்களிடத்தில் அவர்கள் வருத்தி கேட்க மாட்டார்கள். அவரை அறியாதவர்கள் அவர்களை செல்வந்தர்களாக நினைத்துக் கொள்வார்கள். நபியே அவர்களுடைய உடையை அவருடைய நிலையை பார்த்தால் நீ புரிந்து கொள்ளலாம் என்று.

அத்தகையவர்கள் சமுதாயத்தில் ஒருவரல்ல; இருவரல்ல. நூற்றுக்கணக்கானவர்கள் இருகின்றார்கள்.

அவர்களைத் தேடிச்சென்று தர்மம் கொடுப்பது.

அதுவும் குறிப்பாக இந்த ரமழான் மாதத்தில் அல்லாஹ்விற்கு மிக பிடித்தமான அமல்.

இப்படியாக நிறைய அமல்கள் இருக்கின்றன.

அந்த அமல்களை நாம் செய்ய வேண்டும். குறிப்பாக குர்ஆன் ஓதுவது.

பிறகு இரவு தொழுகை. இந்த மூன்றும் ரமழான் மாதத்தில் நாம் அதிகமதிகம் செய்யக்கூடிய அமல்கள்.

நாம் அவற்றில் கவனம் செலுத்துவோமாக! நாம் இந்த ரமலானை வீணாக்கி விடாமல், அது போன்று தேவையில்லாத காரியங்களில் ஈடுபட்டு நாம் நம்முடைய நன்மைகளை குறைத்து விடாமல், அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளிலும், குர்ஆன் ஓதுவதிலும் தான தர்மங்கள் செய்வதிலும் கழிப்போமாக!

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் இந்த ரமழானை மிகவும் நன்மைகள் நிறைந்ததாக அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற்றுத் தரக் கூடியதாக சொர்க்கத்திற்கு காரணமாக ஆக்கி அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مَطَرُ بْنُ الْفَضْلِ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ حَدَّثَنَا الْعَوَّامُ حَدَّثَنَا إِبْرَاهِيمُ أَبُو إِسْمَاعِيلَ السَّكْسَكِيُّ قَالَ سَمِعْتُ أَبَا بُرْدَةَ وَاصْطَحَبَ هُوَ وَيَزِيدُ بْنُ أَبِي كَبْشَةَ فِي سَفَرٍ فَكَانَ يَزِيدُ يَصُومُ فِي السَّفَرِ فَقَالَ لَهُ أَبُو بُرْدَةَ سَمِعْتُ أَبَا مُوسَى مِرَارًا يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا مَرِضَ الْعَبْدُ أَوْ سَافَرَ كُتِبَ لَهُ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ مُقِيمًا صَحِيحًا (صحيح البخاري 2774 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ أَنَّ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ بِالْخَيْرِ وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ وَكَانَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام يَلْقَاهُ كُلَّ لَيْلَةٍ فِي رَمَضَانَ حَتَّى يَنْسَلِخَ يَعْرِضُ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقُرْآنَ فَإِذَا لَقِيَهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام كَانَ أَجْوَدَ بِالْخَيْرِ مِنْ الرِّيحِ الْمُرْسَلَةِ (صحيح البخاري 1769 -)

குறிப்பு 3)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ الْمِسْكِينُ الَّذِي يَطُوفُ عَلَى النَّاسِ تَرُدُّهُ اللُّقْمَةُ وَاللُّقْمَتَانِ وَالتَّمْرَةُ وَالتَّمْرَتَانِ وَلَكِنْ الْمِسْكِينُ الَّذِي لَا يَجِدُ غِنًى يُغْنِيهِ وَلَا يُفْطَنُ بِهِ فَيُتَصَدَّقُ عَلَيْهِ وَلَا يَقُومُ فَيَسْأَلُ النَّاسَ (صحيح البخاري 1385 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/