ரமழான் குர்ஆனின் மாதம்!! | Tamil Bayan - 672
ரமழான் குர்ஆனின் மாதம்!!
ஜுமுஆ குத்பா தலைப்பு : ரமழான் - குர்ஆனின் மாதம்!!
வரிசை : 672
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 16-04-2021| 04-09-1442
بسم الله الرحمن الرّحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து, அல்லாஹ்வின் தூதர் மீதும் அந்தத் தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூடியவனாக, எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, அல்லாஹ்வின் அச்சத்தை ஞாபகப்படுத்தியவனாக,
அல்லாஹ்வுடைய மார்க்க சட்டத்தை பேணி வாழ வேண்டும் என்று உபதேசம் செய்தவனாக, இந்த குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹ்வின் அருளை பெற்ற நன்மக்களில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக! இந்த ரமலானை நமக்கும் உலக முஸ்லிம்களுக்கும் அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்கும் இம்மை மறுமை வாழ்க்கைக்கும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
ரமலானின் சிறப்பைப் பற்றி தொடர்ந்து பல குத்பாக்களில் கேட்டு வருகின்றோம். குறிப்பாக இந்த குத்பாவில் இந்த ரமலான் மாதத்தில் நாம் செய்யவேண்டிய நாம் பேண வேண்டிய மிக முக்கியமான அமல்களில் ஒன்று குர்ஆனோடு நம்முடைய தொடர்பை அதிகப்படுத்துவது.
இன் ஷா அல்லாஹ் அதைப் பற்றிய சில ஹதீஸ்களை விளக்கங்களை இந்த குத்பாவில் பார்ப்போம்.
ஒரு முஸ்லிமுக்கு அல்லாஹ்வின் வேதத்தோடு எந்த அளவுக்கு ஆழமான அதிகமான விசாலமான தொடர்பு இருக்க வேண்டும் என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒரு விஷயம் அல்ல.
அல்லாஹ்வை விட்டு அடியான் ஒரு போதும் பிரிய முடியாது. அல்லாஹ்வினுடைய நினைவிலிருந்து அடியான் ஒரு போதும் பிரிய முடியாது.
அதுபோன்றுதான் அல்லாஹ்வுடைய பேச்சாகிய இந்த குர்ஆனில் இருந்தும் முஸ்லிம் ஒருபோதும் அவன் வெளியேறி விட முடியாது. அதனுடைய தொடர்பை ஒருபோதும் துண்டித்து விட முடியாது.
அல்லாஹ் பாதுகாப்பானாக! நம்மில் மறதியானவர்கள் அதுபோன்று அலட்சியம் செய்தவர்கள் இருக்கலாம்.
அல்லாஹ்வுடைய மாபெரும் கருணை பேரருள், இந்த குர்ஆனுடைய தொடர்பை தொழுகையின் மூலமாக அல்லாஹு தஆலா நம்மீது ஃபர்ளாக ஆக்கி விட்டான்.
ஒரு முஸ்லிம் அவன் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனை ஓத வேண்டும்.
அதனுடைய அர்த்தங்களை கருத்துகளை விளக்கங்களை பொருள்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் வேலைகளின் காரணமாக அலட்சியத்தின் காரணமாக தொழுகைக்கு வெளியில் அவனுக்கு குர்ஆனுடைய தொடர்பு சற்று குறைந்து விடலாம். குர்ஆனிலிருந்து அவன் கொஞ்சம் தூரம் ஆகிவிடலாம்.
அல்லாஹு தஆலா ஒரு முஸ்லிமுக்கு அவன் குர்ஆனோடு தொடர்பு அற்றவனாக ஆகிவிடக்கூடாது என்ற ஒரு ஞானத்தின் அடிப்படையில் அவன் அந்த ஐந்து நேரத் தொழுகைகளிலும் ஒவ்வொரு நேரமும் நிலையில் குர்ஆன் ஓதுவதை அல்லாஹ் ஃபர்ளு ஆக்கி விட்டான்.
குறைந்தபட்சம் சூரத்துல் ஃபாத்திஹாவையாவது அவன் ஓதி அல்லாஹ்வுடைய தொடர்பை இந்த குர்ஆனுடைய தொடர்பை அவன் புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
தொழுகையில் அவன் ஓதக்கூடிய சூரா அவனுக்கு அல்லாஹ்வை நினைவூட்டி குர்ஆனை நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
அகிலங்களை எல்லாம் படைத்து பரிபாலிக்கின்ற அல்லாஹ்விற்கே எல்லா புகழும். (அல்குர்ஆன் 1 : 1)
என்று கூறும் போது அந்த அடியான் முற்றிலுமாக எனக்கு என்னுடைய ரப்பாகிய என்னை படைத்து பரிபாலிக்கக்கூடிய, என்னை நிர்வகிக்கக்கூடிய, என் மீது ஆட்சி செய்யக்கூடிய, என் காரியங்களை என்னைவிட அதிகம் அறிந்த, எனக்கு என்னை விட அதிகம் நன்மையை நாடக்கூடிய, எனக்கு என்மீது உலக மக்களை விட கருணை காட்டக்கூடிய பாசம் காட்டக்கூடிய என்னுடைய ரப்பு என்னுடன் இருக்கும் போது, அந்த ரப்பு உடைய தொடர்பில் நான் இருக்கும் போது,நான் எதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்!
அத்தகைய தொடர்பை சூரத்துல் ஃபாத்திஹா கொடுக்கும் நேரத்தில் அடுத்து அவன் ஓதுகின்றான் :
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
இறைவா! எங்களை நேரான சரியான பாதையில் வழி நடத்து. (அல்குர்ஆன் 1 : 6)
அந்த நேரான பாதை என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அடியானுக்கு குர்ஆனை கொண்டு கொடுக்கப்படுகின்றது. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொண்டு அது கொடுக்கப்படுகின்றது.
ஆகவே, அல்லாஹ்விடத்தில் ஒரு அடியான், யா அல்லாஹ்! எங்களை நேரான பாதையில் வழிநடத்து என்பதை அவன் உண்மையாக கேட்டிருந்தால், மனதோடு அர்த்தம் புரிந்து அவன் கேட்டிருப்பானேயானால் கண்டிப்பாக அவனுக்கு நேர்வழி காட்டப்படும்.
هُدًى لِلْمُتَّقِينَ
தக்வா உள்ளவர்களுக்கு இந்த குர்ஆன் நேர்வழி காட்டும். (அல்குர்ஆன் 2:2)
هُدًى لِلنَّاسِ
உங்களது நேர்வழிக்காக இந்த குர்ஆன் இறக்கப்பட்டது. (அல்குர்ஆன்2:185
إِنَّ هَذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ
நிச்சயமாக இந்த குர்ஆன் மிக நேரான, நீதமான பாதைக்கு வழி காட்டுகிறது. (அல்குர்ஆன்17:9)
வசனத்தின் கருத்து : சத்திய பாதைக்கு இந்த குர்ஆன் மட்டும் தான் வழிகாட்டும். உங்களை நேர்வழிப்படுத்தும். இந்த குர்ஆன் உங்களை பண்படுத்தும். உங்களை மாற்றும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
உடனடியாக அந்த முஸ்லிம் அல்குர்ஆனோடு தன்னை இணைத்துக் கொள்வான்; பிணைத்துக் கொள்வான்; அதை தன் நெஞ்ஞோடு அணைத்துக் கொள்வான்; காலையிலும் மாலையிலும் அதை ஓதுவான். அதன் பொருளோடு அதனை உணருவான்.
அல்லாஹ் கேட்பது போல,
أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ
அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முன்னால் அதை ஓதும் போது முஃமினுடைய உள்ளம், முஃமினுடைய உடல் ரோமங்கள் சிலிர்ப்பதற்கு இன்னும் நேரம் வரவில்லையா? (அல்குர்ஆன் 57:16)
எத்தகைய ஒரு கேள்வியை அல்லாஹ் கேட்கின்றான்.
மேலும் கூறுகிறான் :
لَوْ أَنْزَلْنَا هَذَا الْقُرْآنَ عَلَى جَبَلٍ لَرَأَيْتَهُ خَاشِعًا مُتَصَدِّعًا مِنْ خَشْيَةِ اللَّهِ
(நபியே!) ஒரு மலையின் மீது நாம் இந்த குர்ஆனை இறக்கிவைத்திருந்தால், அது அல்லாஹ்வின் பயத்தால் நடுங்கி வெடித்துப் பிளந்து போவதை நிச்சயமாக நீர் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இவ்வுதாரணங்களை நாம் கூறுகிறோம். (அல்குர்ஆன் 59:21)
சுப்ஹானல்லாஹ்!அல்லாஹ் எத்தகைய உதாரணத்தை நமக்கு உணர்த்துகின்றான்.
ஏன் உங்கள் உள்ளங்கள் இறுகி விட்டன?
அல்லாஹ் சொல்கின்றான்:
ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ
உங்களுடைய உள்ளங்கள் கடினமாகி விட்டன. இறுகி விட்டன. (அல்குர்ஆன் 2 : 74)
சகோதரர்களே! அப்படிப்பட்ட தீயவர்களின், கேடு கெட்டவர்களின், நாசக்காரர்களின், துர்பாக்கியவான்களின் உள்ளமாக நமது உள்ளம் மாறிவிடக் கூடாது.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தொழுகையில் குர்ஆனை ஓதுவார்கள்.தொழுகைக்கு வெளியில் ஓதுவார்கள்.
கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்கள் தொழுகையில் குர்ஆனை ஓதுவார்கள்.தொழுகைக்கு வெளியில் ஓதுவார்கள்.
எப்போதெல்லாம் அவர்களுக்கு நேரம் கிடைக்குமோதங்களது உலக வேலைகளை விட்டு ஒதுங்குவார்களோ அப்போது அவர்கள் தங்களது குடும்பத்தாருக்கு மத்தியில் குர்ஆனை ஓதுவார்கள். தங்களது பயணத்தில் அந்த குர்ஆனை ஓதுவார்கள். அந்த குர்ஆன் அவர்களை விட்டு பிரியாமல் இருக்கும்.
ஆனால்,இன்று நாம் குர்ஆனை விட்டு பிரிந்து இருக்கின்றோம், அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு அழகிய அறிவுரை கூறினார்கள் :
நீங்கள் நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை அல்லாஹ்வுடைய தூதர் நான் என்று நீங்கள் சாட்சி கூறவில்லையா?
அப்போது ஸஹாபாக்கள் சொன்னார்கள் :ஆம் அல்லாஹ்வின் தூதரே!
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொன்னார்கள் :
« فإن هذا القرآن سبب طرفه بيد الله ، وطرفه بأيديكم ، فتمسكوا به ، فإنكم لن تضلوا ، ولن تهلكوا بعده أبدا »
இந்த குர்ஆன் ஒரு கயிறு ஆகும். இது ஒரு காரணியாகும். இதன் ஒரு பகுதி அல்லாஹ்வின் கையில் இருக்கின்றது. இன்னொரு பகுதி உங்களுடைய கையில் இருக்கிறது.
இந்த குர்ஆனை உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.ஒரு போதும் நீங்கள் வழி தவறமாட்டீர்கள். இதற்குப் பிறகு ஒரு போதும் நீங்கள் நாசமாக மாட்டீர்கள்.(1)
அறிவிப்பாளர் : அபூ ஷுரைஹ் அல்குஸாயி ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : சஹீஹ் இப்னு ஹிப்பான், எண் : 122.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா எவ்வளவு அழகாக கூறுகின்றான்.
نَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَنْ تَبُورَ
எவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி, தொழுகையையும் கடைப்பிடித்து, நாம் அவர்களுக்கு அளித்தவற்றை இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தானம் செய்து வருகிறார்களோ அவர்கள் நிச்சயமாக என்றுமே நஷ்டமடையாத (லாபம் தரும்) ஒரு வர்த்தகத்தை எதிர்பார்க்கிறார்கள். (அல்குர்ஆன் 35:29)
இந்த வசனத்தில் மூன்று அமல்களை அல்லாஹ் சொல்கின்றான்.
அதில் முதலாவது அமலாக அல்லாஹ்வுடைய குர்ஆனை ஓதுவதை அல்லாஹ் சொல்கின்றான்.
இப்படி செய்தால் அவர்கள் அழியாத நஷ்டம் அடையாத வியாபாரத்தை அல்லாஹ்விடத்தில் ஆதரவு வைக்கின்றார்கள்.
எப்பேற்பட்ட நற்பாக்கியம் இந்த குர்ஆன்!
அல்லாஹ்விடமிருந்து நேரடியாக பரக்கத் செய்யப்பட்டது. அல்லாஹு தஆலா தன்னுடைய பரக்கத்துகளில் மிக நிறைவானதை இந்த குர்ஆனில் நமக்கு இறக்கி வைத்து இருக்கின்றான்.
ஆகவேதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த குர்ஆனை பற்றி கூறும்போது,
யார் குர்ஆனை ஓதுகின்றாரோகற்றுக்கொள்கின்றாரோபிறருக்கு கற்றுக் கொடுக்கின்றார்களோ அவர்கள்தான் இந்த உம்மத்துகளில் மிகச் சிறந்தவர்கள் என்று சொன்னார்கள்.(2)
அறிவிப்பாளர் : உஸ்மான் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 4639.
இதற்கு, எல்லோரும் மக்தப் மதரசாக்கள் நடத்த வேண்டும், அங்கு உஸ்தாதுகளாக செல்லவேண்டும் என்று அர்த்தமல்ல.
யாருக்கு முடியுமோ அது அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு.
ஏன் நீங்கள் உங்களது மனைவிக்கு குர்ஆனை கற்றுக் கொடுக்க கூடாதா? உங்களது இளைய சகோதரர்களுக்கு மூத்த சகோதரர்களுக்கு அல்லாஹ்வுடைய குர்ஆனை கற்றுக் கொடுக்க கூடாதா? உங்களது பிள்ளைகளுக்கு நீங்கள் குர்ஆனை கற்றுக் கொடுக்க கூடாதா?
யாருக்கு குர்ஆனை கற்றுக் கொடுத்தாலும் சரி, குர்ஆனை கற்றுக் கொண்டு அவர் கற்றுக் கொடுத்தால் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அல்லாஹ்வுடைய இந்த பரக்கத்திற்கு சாட்சி சொன்னார்கள்.
அவர்கள்தான் இந்த உம்மத்தில் சிறந்தவர்கள் என்று.
உங்களோடு வேலை செய்பவர்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கலாம். உங்களோடு பயணத்தில் நண்பர்களாக இருப்பவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். குர்ஆனோடு எப்படி வேண்டுமானாலும் நம்முடைய அழகிய தொடர்பை வைத்துக் கொள்ளலாம். அந்த குர்ஆனுடைய மகத்துவம் அந்த குர்ஆனுடைய கண்ணியம் நமக்கு இருக்குமேயானால்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழகிய சிறப்பினை சொன்னார்கள்.
இந்த குர்ஆனை நாம் ஓத ஆரம்பித்து விட்டால் நன்மைகள் மனித எண்ணிக்கையால் கணக்கிட முடியாத அளவுக்கு அல்லாஹ்விடத்தில் பதியப்படுகின்றது.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் :
யார் அல்லாஹ்வுடைய வேதத்தில் ஒரு எழுத்தை ஓதுவாரோ அவருக்கு அதன் மூலமாக ஒரு ஹசனா -ஒரு நன்மை எழுதப்படுகின்றது. அந்த ஒரு நன்மை அது போன்று பத்து நன்மைகளாக ஆக்கப்படுகின்றது.
அலிஃப் லாம் மீம் என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அதில் அலிஃப் என்ற ஒரு எழுத்து இருக்கின்றது. லாம் என்ற ஒரு எழுத்து இருக்கின்றது. மீம் என்ற ஒரு எழுத்து இருக்கின்றது. (3)
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி,எண் : 2835.
மூன்று எழுத்துக்களை ஓதி முப்பது நன்மைகளை சம்பாதிக்கிறோம் என்றால்,எவ்வளவு பெரிய பாக்கியம்!நன்மைகள் உடைய பொக்கிஷங்களாக இந்த குர்ஆன் இருக்கின்றது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மேலும் சொன்னார்கள் :
அல்லாஹ்விற்கு விசேஷமானவர்களாக, மிகவும் நெருக்கமான சொந்தக்காரர்களாக ஆகவேண்டும் என்று யாருக்கெல்லாம் விருப்பம் இருக்குமோ? அவர்களுக்கு ரசூலுல்லாஹ் உடைய ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நற்செய்தியை பாருங்கள்.
إِنَّ لِلَّهِ أَهْلِينَ مِنْ النَّاسِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَنْ هُمْ قَالَ هُمْ أَهْلُ الْقُرْآنِ أَهْلُ اللَّهِ وَخَاصَّتُهُ
மக்களில் அல்லாஹ்விற்கு என்று சொந்தமானவர்கள் அல்லாஹ்விற்கு என்று நெருக்கமான உறவினர்கள் இருக்கின்றார்கள்.
ஸஹாபாக்கள் உடனே கேட்கின்றார்கள் : அத்தகையவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். சொன்னார்கள் :
அவர்கள் குர்ஆனோடு தொடர்புடையவர்கள்.குர்ஆன் உடையவர்கள்.அதை அவர்கள் ஓதுவார்கள் ஓதுவார்கள். குர்ஆனை விட்டு அவர்களை பிரித்துவிட முடியாது.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா,எண் : 211.
காலை மாலை, இரவு பகல் என்று குர்ஆனை ஓதுவார்கள். தங்களுடைய பணி இடங்களில் கூட அந்த குர்ஆனுடைய தொடர்புடையவர்களாக இருப்பார்கள்.
ஹஜ்ஜுக்குச் சென்றவர்களுக்கு தெரியும். அங்கு emigration இல் இருக்கக்கூடிய ஆஃபீஸர்களுடைய பெரும்பாலானவர்களுடைய கவுன்டர் பக்கத்திலேயே குர்ஆன் இருக்கும். சிறிது தாமதமாகி விட்டால் அந்த ஆபீஸர் உடனே அந்த குர்ஆனை திறந்து ஓதுவார்.
இத்தகைய நன்மக்களை அங்கே பார்த்திருக்கின்றோம். பெரும்பான்மையான இடங்களில் அந்த குர்ஆனின் பசுமையை அங்கே பார்க்க முடியும்.
ஹரமிற்கு சென்றவர்களுக்கு தெரியும். அங்கே மஸ்ஜிதிற்கு முன்கூட்டியே வருவார்கள். வந்தவர்கள் சுன்னத் தொழுது விட்டால், தஹ்யத்துல் மஸ்ஜித் தொழுது விட்டால் உடனே குர்ஆனுடைய ரேக்கை நோக்கி செல்வார்கள். குர்ஆனை எடுத்து ஓத ஆரம்பித்து விடுவார்கள்.
இந்த பழக்கம் நம்முடைய முன்னோர்களிடத்திலும் இருந்தது. ஆனால் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டது. (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
இப்படி குர்ஆனுடைய சிறப்பு ஏராளமாக இருக்கின்றது.
குறிப்பாக நாளை மறுமையில் யார் இந்த குர் ஆனோடு தொடர்புடையவர்களாக இருந்து குர்ஆனை ஓதி மனனம் செய்தார்களோ அவர்களைப்பற்றி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஒரு ஹதீஸில் கூறும்போது,
يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَؤُهَا
குர்ஆன் உடையவருக்கு சொல்லப்படும். குர்ஆனை ஓது!சொர்க்க பதவிகளில் உயர்ந்துகொண்டே செல்.
உலகத்தில் எப்படி நிறுத்தி நிறுத்தி அழகாக இந்தக் குர்ஆனை ஓதினாயோ அப்படி சொர்க்கத்தில் இந்த குர்ஆனை ஓதிக் கொண்டு நீ உயர்ந்து கொண்டே செல்.
இறுதியாக நீ எங்கு இறைவசனத்தை நிறுத்துகின்றாயோ அங்கே உன்னுடைய தங்கும் இடம் இருக்கும். அந்த அளவு உன்னுடைய தரஜா உயர்ந்துகொண்டே போகும் என்று மலக்குகள் அவர்களுக்கு சொல்வார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூத்,எண் : 1252.
அல்லாஹ்வின் அடியார்களே! குறிப்பாக இந்த ரமலான் மாதத்தில் யார் இதற்கு முன்பு குர்ஆன் ஓத தெரியாதவர்களாக இருந்தார்களோ? அவர்கள் மஸ்ஜிதிற்கு வந்து குர்ஆன் ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்.
குர்ஆனோடு யார் பலவீன தொடர்புடையவர்களாக இருந்தார்களோ? அந்த தொடர்பை பலப்படுத்திக் கொள்ளுங்கள்.
யாருக்கு உச்சரிப்புகள் தஜ்வீத் சட்டங்கள் தெரியவில்லையோ? இந்த ரமலானில் கிடைக்கக்கூடிய ஓய்வை குர்ஆனை திருத்தமாக ஓதுவதற்கு வாய்ப்பாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
யாருக்கு அதிகமாக அந்த குர்ஆனை ஓதுவதற்கு திறமை இருக்கின்றதோ? குர்ஆனை அதிகமதிகம் ஓதி இந்த ரமலான் குர்ஆனுடைய மாதம் என்று நம்முடைய ஸலஃபுகள் சொன்னார்களே அதற்கு ஏற்ப இந்த மாதத்தை ஆக்கிக்கொள்வோம்.
அல்லாஹ்வுடைய தூதர் இந்த மாதத்தில் ஜிப்ரீலோடு குர்ஆனை பகிர்ந்து கொண்டார்கள் என்றால் நாம் எந்த அளவிற்கு இந்த மாதத்தில் குர்ஆனை ஓதுவதற்கும் அதைக் கேட்பதற்கும் அதனுடைய அர்த்தங்களை படிப்பதற்கும் தேவையுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இந்த ரமலானை நாம் குர்ஆனோடு தொடர்பை புதுப்பித்துக் கொள்வதற்கும் அதிகப்படுத்திக் கொள்வதற்கும் காரணமாக ஆக்கி அருள்வானாக! அல்லாஹ்வுடைய குர்ஆனைக் கொண்டு நேர்வழி பெற்ற நன்மக்களில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக!
நாளை மறுமையில் குர்ஆன் யாருக்கு சாதகமாக சாட்சி சொல்லுமோயாருக்கு ஆதரவாக சாட்சி சொல்லுமோஅத்தகைய நல்லவர்களில் அல்லாஹ் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
أخبرنا الحسن بن سفيان ، حدثنا أبو بكر بن أبي شيبة ، حدثنا أبو خالد الأحمر ، عن عبد الحميد بن جعفر عن سعيد بن أبي سعيد المقبري ، عن أبي شريح الخزاعي ، قال : خرج علينا رسول الله صلى الله عليه وسلم ، فقال : « أبشروا وأبشروا ، أليس تشهدون أن لا إله إلا الله ، وأني رسول الله ؟ » قالوا : نعم ، قال : « فإن هذا القرآن سبب طرفه بيد الله ، وطرفه بأيديكم ، فتمسكوا به ، فإنكم لن تضلوا ، ولن تهلكوا بعده أبدا ») صحيح ابن حبان-122(
குறிப்பு 2)
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ أَخْبَرَنِي عَلْقَمَةُ بْنُ مَرْثَدٍ سَمِعْتُ سَعْدَ بْنَ عُبَيْدَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ عَنْ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ قَالَ وَأَقْرَأَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ فِي إِمْرَةِ عُثْمَانَ حَتَّى كَانَ الْحَجَّاجُ قَالَ وَذَاكَ الَّذِي أَقْعَدَنِي مَقْعَدِي هَذَا (صحيح البخاري 4639 -)
குறிப்பு 3)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى قَال سَمِعْتُ مُحَمَّدَ بْنَ كَعْبٍ الْقُرَظِيَّ قَال سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لَا أَقُولُ الم حَرْفٌ وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ (سنن الترمذي2835 -)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/