HOME      Khutba      சோதனைகள் புதிதல்ல! | Tamil Bayan - 621   
 

சோதனைகள் புதிதல்ல! | Tamil Bayan - 621

           

சோதனைகள் புதிதல்ல! | Tamil Bayan - 621


بسم الله الرحمن الرّحيم

சோதனைகள் புதிதல்ல!

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே!அல்லாஹ்வின் அச்சத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக,அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பேணி வாழும்படி எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக, அல்லாஹ்வுடைய மார்க்கம் மட்டுமே நம்முடைய இம்மை மறுமைக்கான வெற்றி என்பதை நினைவூட்டியவனாக

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மற்றும் அவர்களுடைய நேர்வழி பெற்ற கலீஃபாக்களை பின்பற்றி நடக்குமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த குத்ஃபாவை  ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம்முடைய சிறிய பெரிய பாவங்களை மன்னிப்பானாக! நம்முடைய இம்மை வாழ்க்கையை விட மறுமை வாழ்க்கையை சிறப்பிற்குரிய வாழ்க்கையாக ஆக்கியருள்வானாக!

இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம்களாகிய நாம் எந்த தீமைகள் குழப்பங்களை நினைத்து பயப்படுகிறோமோ அவ்வாறான அனைத்து குழப்பங்களிலிருந்தும் தீமைகளிலிருந்தும் பாதுகாத்து நம்முடைய மார்க்கத்தை உறுதியுடன் பின்பற்றி வாழ அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக!

நம்முடைய தீனையும் துன்யாவையையும் உயிரையும் பொருளையும் கண்ணியத்தையும் அல்லாஹ் பாதுகாத்து தருவானாக!ஆமீன்.

ரப்புல் ஆலமீன் சூரத்து ரஃதுடைய 42–வசனத்தில் குறிப்பிடுகின்றான்:

وَقَدْ مَكَرَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلِلَّهِ الْمَكْرُ جَمِيعًا يَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ وَسَيَعْلَمُ الْكُفَّارُ لِمَنْ عُقْبَى الدَّارِ

(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (நம் தூதர்களுக்கு விரோதமாக இவ்வாறே) பல சூழ்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தனர். எனினும், சூழ்ச்சிகள் அனைத்தும் அல்லாஹ்விடம் சிக்கிவிடும். (ஏனென்றால்,) ஒவ்வோர் ஆத்மாவும் செய்கின்ற (சூழ்ச்சிகள்) அனைத்தையும் அவன் (திட்டமாக) நன்கறிகிறான். ஆகவே, எவர்களுடைய காரியம் நன்மையாக முடியும் என்பதை இந்நிராகரிப்பவர்கள் அதி சீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன்13 : 42)

வசனத்தின் கருத்து : ரப்புல் ஆலமீன் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு ஆறுதல் தருவதற்காக இந்த வசனத்தை இறக்கினான்.

அல்லாஹுத் தஆலா தனது நபியைப் பார்த்து சொல்கிறான் : நபியே!உங்களை எதிர்க்கக்கூடிய உங்களுக்கு சதி செய்யக்கூடிய இந்த குறைஷிக் காஃபிர்களைப்போல் இதற்கு முந்திய காலத்தில் வந்த நபிமார்களிடமும் அவர்களுடைய மக்கள் அந்த நபிமார்களை அழிக்க வேண்டும்,அந்த நபிமார்கள் செய்யக்கூடிய பிரச்சாரங்களை தடுக்க வேண்டும்,அவர்களை கொலை செய்து விட வேண்டும் என்று பல விதமான சூழ்ச்சிகளை செய்து இருக்கிறார்கள்.

இப்போது குறைஷிக் காஃபிர்கள் செய்யக்கூடிய சூழ்ச்சி புதிதாக உங்களுக்கு மட்டும் நடக்கக் கூடிய விஷயம் அல்ல.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்களுடன் நேசம் வைத்த தோழர்கள் ஆண்கள் பெண்கள் அவர்களுடைய குடும்பங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட மக்கள் ஆகிய அத்தனை பேருக்கும் சூழ்ச்சியும் நோவினையும் செய்தார்கள்.

அவர்கள் செய்த அத்தனை சூழ்ச்சிக்குப் பின்னாலும் இருந்த நோக்கம், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை இந்த அழைப்பு பணியில் இருந்து தடுத்து நிறுத்திவிட வேண்டும். இந்த லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற ஏகத்துவ பிரச்சாரத்தை நிறுத்தி விடவேண்டும்.

அடுத்ததாக யாரெல்லாம் இந்த மார்க்கத்தை நோக்கித் திரும்பி வந்தார்களோ அவர்களை எல்லாம் மீண்டும் அவர்களுடைய பழைய குஃப்ருக்கும் ஷிர்க்கிற்கும் திருப்பிவிட வேண்டும். அப்படி அவர்கள் திரும்பவில்லை என்றால் அவர்களை இறுதியாக கொன்றுவிட வேண்டும்.

இதுதான் நபிமார்களை எதிர்த்த,நபிமார்களின் ஏகத்துவ அழைப்பை ஏற்காத அந்த குஃப்ர் ஷிர்க்கில் அடம்பிபிடித்த ஊறிப்போய் கிடந்த காஃபிர்களின் நோக்கமாக இருந்தது. இதைத்தான் ரப்பு இந்த வசனத்தில் சொல்லிக்காட்டுகிறான். (அல்குர்ஆன்13 : 42)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து இப்படிப்பட்ட ஆறுதல் தேவைப்பட்டது என்றால் நம்மைப் போன்ற பலவீனமான உள்ளம் படைத்த முஃமின்களின் நிலையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அப்போது நமக்கு அல்லாஹ்வின் குர்ஆனிலிருந்து எவ்வளவு பெரிய ஆறுதல், தேவை என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு காலத்திலும் காஃபிர்கள் முஸ்லிம்களோடு நடந்து கொள்ளும் நடத்தையைப் பார்க்கும்போது வரலாற்றில் முதன்முறையாக நம்மோடு தான் இப்படி நடந்துகொள்ளப்படுகிறதோ? என்பதாக தோன்றலாம்.

முஃமின்களாகிய நமக்கு இப்படிப்பட்ட கொடுமைகள், அநியாயங்கள், இன்னல்கள், துன்பங்கள்,எல்லாம் முதன் முதலாக நமக்குத்தான் நடைபெறுகிறதோ என்று நமக்கு தோன்றும். ஆனால் அப்படி அல்ல.

ரப்புல் ஆலமீன் சூரத்துல் பகரா உடைய 214-வது வசனத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சஹாபாக்களைப் பார்த்து அல்லாஹ் கேட்கிறான் :

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ

(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமல் நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்கள் கஷ்டங்களை நீக்கி வைக்க) ‘‘அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)'' என்று கேட்டதற்கு ‘‘அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது'' என்று (நாம் ஆறுதல்) கூறும் வரை அவர்கள் ஆட்டிவைக்கப்பட்டார்கள். (அல்குர்ஆன் 2:214)

அல்லாஹ் நேரடியாக ஸஹாபாக்களைப் பார்த்து கேட்கிறான். அபூபக்ர் உமரைப் பார்த்து அல்லாஹ் கேட்கிறான்.

நீங்கள் எண்ணிக் கொண்டீர்களா? சொர்க்கத்தில் எளிதாக நுழைந்து விடலாம் என்று.

அந்த ஸஹாபாக்களின் நிலையை நினைத்துப்பாருங்கள். இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரம் செய்ததன் காரணமாக கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி நினைவற்ற நிலையில் அபூபக்ர் விழுந்து விடுகிறார்கள்.

அப்போது அவர்களை தூக்கிக்கொண்டு போய் அவர்களுடைய வீட்டில் போடப்படுகிறது. கண் விழித்த உடனேயே அவர்கள் கேட்கக்கூடிய முதல் கேள்வி,நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று.

நூல் : அர்ரஹீக் அல்மக்தூம்.

(சுபஹானல்லாஹ்!) நினைத்துப்பாருங்கள்!ஸஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது எத்துணை அன்பு வைத்திருந்தார்கள்?!

இப்படித்தான், ஒவ்வொரு சஹாபாக்களிடம் குறைஷிக் காஃபிர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை குறை சொல்லு அல்லது ஏசு உன்னை விட்டு விடுகிறோம் என்பதாக கூறினார்கள்.

ஆனால், அந்த நேசத்திற்குரிய தோழர்கள் ஒருகாலும் அப்படி செய்யவில்லை. அதன் காரணமாகவே அவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள்.

காபிர்களால் துன்புறுத்தப்பட்டவர்களில் வயதானவர்கள் இருந்தார்கள், பெண்கள் கொல்லப்பட்டார்கள், பலவீனமானவர்கள் கொல்லப்பட்டார்கள்,கடுமையான தொல்லைகளுக்கும் இன்னல்களுக்கும்ஒவ்வொரு சஹாபாக்களும் ஆளானார்கள்.

இப்படிப்பட்ட பல சோதனைகளை சந்தித்த அந்த ஸஹாபாக்களைப் பார்த்து நீங்கள் சொர்க்கத்திற்கு எளிதாக சென்று விடலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா?என்று கேட்கிறான்.

யார் இந்த சிலை வணக்க வழிபாட்டில் ஊரிப்போய், அந்த சிலை வணக்க வழிபாட்டின் போதை யாருக்கு தலைதூக்கி இருக்கிறதோ அவர்களுடைய நிலைமையை பொறுத்தவரை அவர்கள் எப்போதும் வரலாற்றில் இப்படி தான் இருந்திருக்கிறார்கள். இப்படித்தான் இருப்பார்கள்.

அவர்களுடைய நிலைமையை அல்லாஹுத்தஆலா நமக்கு சொல்லிக் காட்டிவிட்டான். ஒரு சம்பவத்தைப் பாருங்கள்.

சூரா யாசீனை நீங்கள் அதிகமாக ஓதி இருப்பீர்கள்; படித்திருப்பீர்கள். ஆனால் அதில் சிலர் மட்டும் சூரா யாசினில் சொல்லப்படும் சம்பவத்தை ஏற்கனவே அறிந்தவர்களாக இருக்கலாம். (அல்குர்ஆன் 36:20-27)

وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَى قَالَ يَاقَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ (20) اتَّبِعُوا مَنْ لَا يَسْأَلُكُمْ أَجْرًا وَهُمْ مُهْتَدُونَ (21) وَمَا لِيَ لَا أَعْبُدُ الَّذِي فَطَرَنِي وَإِلَيْهِ تُرْجَعُونَ (22) أَأَتَّخِذُ مِنْ دُونِهِ آلِهَةً إِنْ يُرِدْنِ الرَّحْمَنُ بِضُرٍّ لَا تُغْنِ عَنِّي شَفَاعَتُهُمْ شَيْئًا وَلَا يُنْقِذُونِ (23) إِنِّي إِذًا لَفِي ضَلَالٍ مُبِينٍ (24) إِنِّي آمَنْتُ بِرَبِّكُمْ فَاسْمَعُونِ (25) قِيلَ ادْخُلِ الْجَنَّةَ قَالَ يَالَيْتَ قَوْمِي يَعْلَمُونَ (26) بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ الْمُكْرَمِينَ (27)

 

வசனத்தின் கருத்து : அன்தாகியா என்ற ஊருக்கு 2தூதர்கள் வருகிறார்கள். அவர்கள் அந்த மக்களுக்கு அழைப்பு பணி செய்கிறார்கள். அந்த மக்கள் அவர்களை நிராகரிக்கிறார்கள்.

பிறகு இன்னொரு தூதரை அல்லாஹ் அவர்களுக்கு உதவிக்கு அனுப்பி வைக்கிறான். இந்த மூன்று தூதர்களும் சேர்ந்து மக்களை தவ்ஹீதின் பக்கம் மறுமையின் பக்கம் அழைக்கிறார்கள்.

முழு ஊர் மக்களும் சேர்ந்து அந்த தூதர்களை நிராகரிக்கிறார்கள். அந்த தூதர்களை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.

அப்போது அந்த ஊரில் வாழ்ந்த ஹபீப் அல்நஜ்ஜார் என்ற தோழர் முதன்முதலாக ஈமான் கொள்கிறார். பிறகு தனது ஊர் மக்களை நோக்கி மக்களே! இவர்கள் உண்மையாளர்கள். இவர்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த ரசூல்மார்கள். நேர்வழி பெற்றவர்கள்.

இத்தகைய உயர்ந்த மார்க்கத்தை நமக்கு கற்றுக் கொடுத்து நம்மிடத்தில் எந்த பிரதிபலனையும் கூலியையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள் என்று கூறிவிட்டு,

என்னை படைத்த இறைவனை நான் வணங்காமல் எப்படி இருக்க முடியும்? நீங்கள் உங்களை படைத்த இறைவனை விட்டுவிட்டு உங்கள் கரங்களால் நீங்களே செதுக்கிய சிலைகளை எப்படி வணங்குகிறீர்கள்?

நான் சொல்வதை கேளுங்கள். எனது இறைவன் எனக்கு ஏதேனும் தீங்கை கஷ்டத்தை கொடுத்தால் நீங்கள் வணங்கக் கூடிய சிலைகள் எதுவும் எனக்கு எவ்வித பாதுகாப்பையும் கொடுக்காது என்று அந்த மக்களுக்கு தஃவா செய்கிறார். (அல்குர்ஆன் 36:20-27)

என்ன நடந்தது? இன்று இந்தச் சிலை வணக்க வழிபாட்டின் போதை வெறி தலைக்கேறிய இந்த முஷ்ரிக்குகள் என்ன செய்தார்களோ இதைத்தான் அவருடைய சமுதாயம் தனது இனத்தை சேர்ந்த மனிதருக்கு செய்தது.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஊர் மக்கள் அனைவருமாக சேர்ந்து அந்த மனிதர் ஹபீப் அல்நஜ்ஜாரை அடிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களைக் கீழே தள்ளி ஒரு கூட்டம் அவருடைய கழுத்தை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அறுக்கிறது. இன்னொரு கூட்டம் அவருடைய வயிற்றில் ஏறி மிதிக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்னால் வாட்ஸப்பில் கூட ஒரு வீடியோ வந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். ஒரு முஸ்லிமை படுக்க வைத்து அவனை கடுமையாக தாக்குகிறார்கள். பிறகு ஒரு கூட்டம் ஒருவன் பின் ஒருவராக அவருடைய நெஞ்சின் மீது ஏறி தங்களது சிலைகளின் பெயர்களைக் கூறி குதிக்கிறார்கள்.

சகோதரர்களே! ஹபீப் அல்நஜ்ஜாரோடு இதைவிட கடுமையாக அவரது சமூகம் நடந்தது. அவருடைய கழுத்தை ஒரு கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அறுக்கிறது. இன்னொரு கூட்டமோ அவருடைய வயிற்றில் ஏறி மிதிக்கிறது.

அவருடைய உயிர் பிரிந்து கொண்டிருக்கிறது. அவர் ஈமானை விடவில்லை. அல்லாஹுத்தஆலா மரணத்தின் வேதனையை அவர் மறப்பதற்காக ரப்புல் ஆலமீன் அவருக்கு சொர்க்கத்தின் திரையை நீக்கி விட்டான்.

ஆதாரம் : தஃப்சீர் இப்னு கசீர், தஃப்சீர் தபரி.

நீ சொர்க்கவாசி என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவருக்கு அறிவிக்கிறான். அப்போது அவர் அதை பார்த்துவிட்டு சொல்கிறார் :

يَالَيْتَ قَوْمِي يَعْلَمُونَ (26) بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ الْمُكْرَمِينَ

(எனினும், மக்கள் அவருடைய நல்லுபதேசத்தைக் கேளாது அவரைக் கொலை செய்துவிட்டனர்! ஆகவே, அவரை நோக்கி) “நீர் சொர்க்கத்தில் நுழைவீராக!'' எனக் கூறப்பட்டது.

(சொர்க்கத்தில் நுழைந்த) அவர் “என் இறைவன் எனக்கு மன்னிப்பளித்து மிக்க கண்ணியமானவர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்கிவிட்டதை என் மக்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?'' என்று கூறினார். (அல்குர்ஆன் 36 : 26, 27)

அந்த நேரத்தில் கூட தனது இணை வைக்கக்கூடிய சமூகத்தை, அதன் அறியாமையை நினைத்து வருந்தியவராக அவர் உயிர் பிரிகிறது.

ரப்புல் ஆலமீனின் பக்கம் மக்களை அழைத்து அதனால் படுகொலை செய்யப்பட்டு,தன்னுடைய மார்க்கத்தில் உறுதியாக இருந்து அதனால் படுகொலை செய்யப்பட்ட எந்த ஒரு முஃமினுடைய இரத்தத்தையும் அல்லாஹ் வீணாக்க மாட்டான். அவர்களுடைய தியாகத்தை அல்லாஹ் வீணாக்கி விடமாட்டான்

உலக மக்கள் அந்த முஃமின்களுக்காக பழி வாங்கவில்லை என்றாலும் அவர்களுக்காக வானத்தில் இருக்கக்கூடிய ரப்பு பழி வாங்குவான்.

إِنْ كَانَتْ إِلَّا صَيْحَةً وَاحِدَةً فَإِذَا هُمْ خَامِدُونَ

ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அனுப்பி ஒரே ஒரு சத்தத்தை தான் அல்லாஹுத்தஆலா போட வைத்தான்.அவர்கள் எல்லாம் அப்படியே எரிந்து சாம்பலாகி விட்டார்கள். (அல்குர்ஆன் 36:29)

இத்தகைய சம்பவங்களை எல்லாம் அல்லாஹுத்தஆலா நமக்கு சொல்லிக் காட்டுகின்றான். சோதனைகள் வரும்.அல்லாஹ்வுடைய உதவியும் அந்த சோதனைகளுக்கு பின்னால் கண்டிப்பாக வரும்.

நாம் நமது மார்க்கத்தில் உறுதியாக இருக்கும்போது,நம்முடைய ஈமானில் உறுதியாக இருக்கும்போது,அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவர்களாக இருக்கும்போது,மார்க்கம் சொல்லக் கூடிய முறையில் நம்முடைய பிரச்சினைகளுக்கான தீர்வை தேடியவர்களாக இருக்கும்போது உதவி கண்டிப்பாக வரும்.

சூரா இப்ராஹிமை குறிப்பாக இந்த காலகட்டத்தில் படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

அல்லாஹ் கூறுகின்றான் :

وَوَيْلٌ لِلْكَافِرِينَ مِنْ عَذَابٍ شَدِيدٍ

நிராகரிப்பவர்களுக்கு வந்தடையும் கடினமான வேதனையின் காரணமாக (அவர்களுக்குப்) பெரும்கேடுதான். (அல்குர்ஆன் 14:2)

இந்த காஃபிர்களுக்கு மறுமையில் கடுமையான தண்டனை இருக்கிறது. அல்லாஹ்வுடைய தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.

இந்த உலகத்தில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது; படை பலம் இருக்கிறது; பெரும்பான்மை இருக்கிறது; என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடலாம் என்று அவர்கள் நினைத்துக்கொள்ளலாம்.

ஆனால் மறுமையில் அல்லாஹ்வுடைய நீதிமன்றத்தில் அவர்கள் தப்பிக்க முடியாது.

அந்த காஃபிர்களுடைய குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான் :

لَّذِينَ يَسْتَحِبُّونَ الْحَيَاةَ الدُّنْيَا عَلَى الْآخِرَةِ

அவர்களுக்கு மறுமையை விட துன்யாவுடைய மோகம் தான் அதிகம். (அல்குர்ஆன் 14 : 3)

إِنَّ هَؤُلَاءِ يُحِبُّونَ الْعَاجِلَةَ وَيَذَرُونَ وَرَاءَهُمْ يَوْمًا ثَقِيلًا

நிச்சயமாக இந்த மக்கள் இம்மையை விரும்பி, அவர்களுக்கு முன்னிருக்கும் (மறுமையின்) கடினமான நாளைப் புறக்கணித்து விடுகின்றனர். (அல்குர்ஆன் 14 : 27)

இந்த காபிர்கள் உலகத்தை தான் விரும்புவார்கள்.உலகம் தான் அவர்களுக்கு பிரதானமாக இருக்கும்.

ஆட்சி, அதிகாரம், பணம்,நாங்கள் தான் பெரும்பான்மை,எங்களுக்கு கீழ் தான் நீங்கள் இருக்க வேண்டும். எங்களுக்கு என்ன வேண்டுமோ அதை நாங்கள் செய்து கொண்டிருப்போம்.

நாங்கள் எதைக் கொடுக்கிறோமோ அதை தான் நீங்கள் பெறமுடியும். உங்களிடம் நாங்கள் எப்படிவேண்டுமானாலும் நடந்துகொள்வோம் என்ற அந்தப் பெருமை அவர்களிடம் இருக்கும்.

அடுத்து அல்லாஹ் அந்த முஷ்ரிக்குகளுடைய இரண்டாவது நோக்கத்தை சொல்லிக் காட்டுகின்றான் :

وَيَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًا

அல்லாஹ்வுடைய இந்த உயரிய மார்க்கத்தில் யாரும் நுழைந்து விடக்கூடாது. இதுதான் அவர்களுடைய குறிக்கோள். (அல்குர்ஆன் 14 : 3)

அவர்களுக்கு என்ன பிரச்சனை?அவர்களை விட ஆட்சி அதிகாரத்தில் நாம் அதிகமாக இருக்கிறோமா? செல்வத்தில் அதிகமாக இருக்கிறோமா? நம்மிடத்தில் என்ன இருக்கிறது?

அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நோக்கி இந்த நாட்டு மக்கள் ஒருவர் பின் ஒருவராக நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தை தங்களது கொள்கையாக ஏற்றுக் கொண்ட ஆண்களும், பெண்களும், படித்தவர்கள், படிக்காதவர்கள், சிறுவர்கள், கிராமத்தில் உள்ளவர்கள், நகரத்தில் உள்ளவர்கள்என்று இந்த மார்க்கத்தை நோக்கி வந்து கொண்டே இருக்கிறார்கள்.

இது அவர்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது. அவர்களுக்கு வேறு பிரச்சினை இல்லை. அவர்களுடைய குறிக்கோள் எல்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் யாரும் நுழைந்து விடக்கூடாது.

அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் இருந்து மக்களைத் தடுக்க வேண்டும்.அதற்காக அவர்களுக்கு பின்னால் இருந்து கொண்டு ஷைத்தான் அவர்களை தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறான்.

அவர்கள் அந்த இப்லீசுக்கு வழிபாடு செய்கிறார்கள்; அவனுக்கு அடிமையாக இருக்கிறார்கள்.

ரப்புல் ஆலமீன் சொல்கிறான் :

وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ

நிராகரிப்பவர்களோ (இவர்களுக்கு எதிராக) ஷைத்தானுடைய வழியில்தான் போர்புரிவார்கள். (அல்குர்ஆன் 4:76)

ஆகவேதான்,அவர்கள் நம்முடைய மார்க்கத்தை பிற மக்களுக்கு முன்னால் குறையாக கேவலமாக பேசுகிறார்கள். நமது மார்க்கத்தை பற்றி விமர்சனம் செய்து மக்களுக்கு காண்பிக்கிறார்கள். இது காலம் காலமாக நடக்கக் கூடியது.

எவ்வளவு பிரச்சாரம் செய்கிறார்கள் பாருங்கள்!இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது. இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகளை வழங்குவதில்லை. இஸ்லாம் ஒரு பிற்போக்கான மார்க்கம்.

இஸ்லாமிய தண்டனைகள் எல்லாம் பழங்காலத்து தண்டனைகள். இப்படி எவ்வளவோ பிரச்சாரங்களை அவர்கள் செய்கிறார்கள்.

எந்த அளவு அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்களோ ரப்புல் ஆலமீன் அவர்களுடைய இந்த பிரச்சாரங்களை எல்லாம் அவன் தவிடுபொடியாக்கி கொண்டிருக்கிறான்.

நாம் ஒன்றும் செய்வதில்லை. ரப்புல் ஆலமீன் மக்களின் உள்ளங்களில் ஈமானை புகுத்தி கொண்டிருக்கின்றான். அந்த ரப்பு ஈமானுடைய ஒளியை மக்களின் உள்ளங்களில் ஏற்படுத்துகிறான்.

எந்த ஒரு தீமையும் அதற்குப்பின்னால் அல்லாஹ்வுடைய நன்மை இருக்கும். எவ்வளவு அதிகமாக இவர்கள் இந்த பிரச்சாரங்களை எல்லாம் செய்கிறார்களோ அந்த அளவு இஸ்லாம் மக்களுடைய மனங்களில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இவர்கள் ஒருபுறம் விமர்சனம் செய்ய, மக்கள் குர்ஆனை திறந்து பார்க்கிறார்கள். குர்ஆனில் அப்படி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று படிக்க ஆரம்பிக்கிறார்கள். இஸ்லாமிய மார்க்கத்தை படிக்க விரும்புகிறார்கள்.

நாம் நினைத்துப் பார்க்காத அளவு அந்த மக்கள் இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள். இஸ்லாத்திற்கு ஆதரவாக பேசுகிறார்கள். நாங்களும் முஸ்லிம்களாக ஆக வேண்டுமென்ற விருப்பத்தை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். முஸ்லிம்களாகவும் ஆகிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த நபியின் தோழர்களுக்கு ரப்புல் ஆலமீன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வாழ்க்கையை அவர்களுடைய கண்ணுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி, அதனுடைய படிப்பினைகளை பாடங்களை அவர்களுக்கு சொல்லிக் காட்டுகின்றான்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மூதாதையர்கள்,யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மிஸ்ரில் குடியேறிய போது அவர்களுடன் சேர்ந்து பனீ இஸ்ரவேலர்களும் மிஸ்ரில் குடியேறினார்கள்.

செல்வ செழிப்போடு வாழ்ந்தார்கள். எல்லாவிதமான வசதிகளுடன் வாழ்ந்தார்கள். ஆனால் அவர்களுக்கிடையே பாகுபாடு ஆரம்பமானது.

அல்லாஹ் அநியாயக்கார அரசனான ஃபிர்அவ்னை அவர்கள் மீது சாட்டினான்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களுடைய மக்களுக்கு கூறியதை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்:

وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَظِيمٌ

மூஸா தன் மக்களை நோக்கிக் கூறிய சமயத்தில் ‘‘அல்லாஹ் உங்களுக்குப் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள்: அவன் உங்களை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து காப்பாற்றினான். அவர்களோ உங்களுக்குக் கொடிய நோவினை செய்துகொண்டு வந்ததுடன், உங்கள் ஆண்பிள்ளையை வதை செய்து பெண் பிள்ளையை (மட்டும்) உயிருடன் வாழ விட்டுக் கொண்டுமிருந்தார்கள். இதில் உங்கள் இறைவனால் உங்களுக்குப் பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது'' (என்று கூறினார்.) (அல்குர்ஆன் 14 : 6)

அல்லாஹ் பைத்துல் முகத்தஸ் என்ற இடத்திற்கு உங்களை அழைத்து வந்து விட்டான். உங்களுக்காக அல்லாஹுத்தஆலா ஒரு நாட்டை கொடுத்துவிட்டான். உங்களுக்கென்று ஒரு பாதுகாப்பை அல்லாஹ் கொடுத்து விட்டான்.

இப்போது ரப்பு சொல்கிறான் :

وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ

உங்கள் இறைவன் (உங்களை நோக்கி, ‘‘இதற்காக) நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என் அருளை மேலும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன். நீங்கள் (என் அருளுக்கு நன்றி செலுத்தாது) மாறுசெய்தால் நிச்சயமாக என் வேதனை மிகக் கொடியதாக இருக்கும் என்று அறிக்கையிட்டதையும் (நபியே!) நீர் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. (அல்குர்ஆன்14 : 7)

மேலும் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது மக்களை பார்த்து சொன்னார்கள்:

وَقَالَ مُوسَى إِنْ تَكْفُرُوا أَنْتُمْ وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا فَإِنَّ اللَّهَ لَغَنِيٌّ حَمِيدٌ

இன்னும், மூஸா (தன் மக்களை நோக்கி) ‘‘நீங்களும் உலகிலுள்ள மக்கள் அனைவரும் (இறைவனுக்கு முற்றிலும்) மாறு செய்தபோதிலும் (அவனுக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டு விடாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (எவருடைய உதவியும்) தேவையற்றவன், புகழுக்குரியவன் ஆவான்'' என்றும் கூறினார். (அல்குர்ஆன்14 : 8)

பிறகு தனது மக்களுக்கு சொல்லிக் காட்டுகின்றார்கள்:

أَلَمْ يَأْتِكُمْ نَبَأُ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَالَّذِينَ مِنْ بَعْدِهِمْ لَا يَعْلَمُهُمْ إِلَّا اللَّهُ جَاءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنَاتِ فَرَدُّوا أَيْدِيَهُمْ فِي أَفْوَاهِهِمْ وَقَالُوا إِنَّا كَفَرْنَا بِمَا أُرْسِلْتُمْ بِهِ وَإِنَّا لَفِي شَكٍّ مِمَّا تَدْعُونَنَا إِلَيْهِ مُرِيبٍ

உங்களுக்கு முன்னர் சென்றுபோன நூஹ், ஆது, ஸமூது இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுடைய சரித்திரம் உங்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்க(ளின் விபரங்க)ளை அல்லாஹ்வைத் தவிர மற்றெவரும் அறிந்துகொள்ள முடியாது. அந்த மக்களிடம் அனுப்பப்பட்ட (நம்) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்(து நேரான வழிக்கு ‘‘வாருங்கள் வாருங்கள்'' என்று தங்கள் இரு கைகளையும் விரித்து அழைத்)த சமயத்தில், அவர்களுடைய கைகளை அவர்களுடைய வாயின் பக்கமே தட்டிவிட்டு (அவர்களை நோக்கி,) ‘‘நிச்சயமாக நாங்கள் (இறைவனின் கட்டளை என்று) நீங்கள் கொண்டு வந்திருப்பதை நிராகரிக்கிறோம். நீங்கள் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்'' என்று கூறினார்கள்.(அல்குர்ஆன்14 : 9)

அவர்களுடைய முடிவு என்ன ஆனது என்பதை ரப்புல் ஆலமீன் சொல்லிக் காட்டுகின்றான்:

فَكُلًّا أَخَذْنَا بِذَنْبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ

அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் (செய்து கொண்டிருந்த) பாவத்தின் காரணமாகவே நாம் பிடித்துக் கொண்டோம். அவர்களில் (ஆது மக்களைப் போன்ற) சிலர் மீது நாம் கல்மழை பொழிந்தோம். அவர்களில் (ஸமூது மக்களைப் போன்ற) சிலரை இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்களில் (காரூன் போன்ற) சிலரை நாம் பூமியில் சொருகி விட்டோம். அவர்களில் (ஃபிர்அவ்ன், ஹாமான் போன்ற) சிலரை (கடலில்) மூழ்கடித்தோம். அல்லாஹ் இவர்களுக்கு அநீதி செய்யவில்லை. எனினும், இவர்கள் (அனைவரும்) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.(அல்குர்ஆன் 29 : 40)

அல்லாஹ்வின் அடியார்களே! ரப்புல் ஆலமீன் நமக்கு அல்குர்ஆனை ஆறுதலாக இறக்கி இருக்கிறான். அதிலுள்ள வரலாறுகள் நமக்கு ஆறுதலாக இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் நாம் கேள்வி படக்கூடிய சம்பவங்கள், நடந்து முடிந்த நிகழ்வுகள் நம்முடைய சிந்தனையில் இருந்து அவற்றை ஒருபோதும் நாம் நீக்கிவிட முடியாது.

ஒவ்வொரு நிகழ்வையும் அந்த காட்சியையும் பார்க்கும்போது நம்முடைய உடலில் உள்ள ரத்தம் எல்லாம் அப்படியே உறைந்து விடும் போல் இருக்கிறது.

அந்த இடத்தில் இருந்தவர்கள் அந்த சோதனையை சந்தித்தவர்களுடைய நிலைமை எப்படி இருக்கும்! யோசித்துப்பாருங்கள்.

அந்த காட்சியை பார்க்கக்கூடிய நமக்கே இப்படிப்பட்ட ஒரு வேதனை இருக்கிறது என்றால் அந்த இடத்தில் சோதிக்கப்பட்ட அந்த மக்களை நினைத்துப் பாருங்கள்.

இந்த இடத்தில் அல்லாஹ்விற்கு முன்னால் கையேந்துவதைத் தவிர வேறு வழியில்லை. அல்லாஹ்விற்கு முன்னால் இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நீ உதவி செய்வாயாக! அவர்களுடைய ஈமானை மேலும் பல படுத்துவாயாக!

அவர்களுடைய பலவீனத்தைப் போக்கி உன்னுடைய உதவியை ஆதரவை கொடு! அவர்களுக்கு உதவி செய்யக் கூடியவர்களை அதிகப்படுத்துவாயாக என்று இறைஞ்சுவதைத்தவிர நமக்கு வேறு வழியில்லை.

ரப்புல் ஆலமீன் நமக்கு முந்தியவர்களின் ஒரு துஆவையும் சொல்லிக் காட்டுகின்றான் :

رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا

அவர்களோ (இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! அநியாயக்காரர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்று! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து பாதுகாவலரையும் ஏற்படுத்து! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து உதவி செய்பவரையும் ஏற்படுத்து!'' என்று பிரார்த்தனை செய்த வண்ணமாய் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 4:75)

அது போன்ற துஆக்களை நாம் நமக்கும் அவர்களுக்கும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அல்லாஹ்வைத் தவிர நாம் ஒதுங்குவதற்கு வேறு எந்த இடமும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர நாம் முறையிடுவதற்கு வேறு யாருமில்லை.

இன்று யாரை நம்புவது? யார் மீது சந்தேகப்படுவது? என்று குழப்பமான சூழ்நிலையில் உள்ளோம். நாம் யாரின் மீது நம்பிக்கை வைக்கிறோமோ அவர்களே நமக்கு எதிராகவும் மாறிவிடக்கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவனிடத்தில் மனிதர்களுடைய உள்ளங்களின் பிடி இருக்கிறது. உண்மையில் நாம் அல்லாஹ்வை நம்பி அல்லாஹ்வின் மீது ஆதரவு வைத்து நம்முடைய அமல்களை சீர்செய்து,

யா அல்லாஹ்! இத்தகைய கஷ்டங்கள் எங்களுடைய பாவங்களின் காரணமாக ஏற்பட்டிருந்தால் எங்களுடைய பாவங்களை மன்னிப்பாயாக!

எங்களிடத்தில் ஏற்பட்ட மார்க்க பலவீனத்தின் காரணமாக ஏற்பட்டிருந்தால் எங்களுடைய பலவீனத்தை நீ மன்னிப்பாயாக!

மேலும் இந்த மார்க்கத்தில் எங்களுக்கு உறுதியை தருவாயாக! என்று அல்லாஹ்விடத்தில் கையேந்த வேண்டும்.

யா அல்லாஹ்! யாரெல்லாம் இப்படிப்பட்ட சூழ்ச்சிகளை முஸ்லிம்களுக்கு எதிராக செய்தார்களோ அவர்களுக்கு தகுந்த பாடத்தை இம்மையிலும் மறுமையிலும் நீ கொடுப்பாயாக! என்று எப்படி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துஆ செய்தார்களோ அதை நாமும் மனமுருகி துஆ செய்ய வேண்டும்.

கண்டிப்பாக அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம்முடைய துஆவை ஏற்றுக்கொள்ள போதுமானவன். நம்முடைய துஆவை அங்கீகரிக்க போதுமானவன்.

ஒரு போதும் நமது உள்ளத்தில் தயக்கம் வந்துவிடக்கூடாது. பலவீனம் வந்துவிடக்கூடாது. நிராசை வந்துவிடக்கூடாது. இவ்வளவு கஷ்டப்படுகிறோமே அல்லாஹ் நமக்கு உதவுவானா என்பதாக சந்தேகம் நமக்கு வந்து விடக்கூடாது.

அல்லாஹ் நம்மை கைவிட்டு விட்டான். அடுத்து நம்முடைய எதிர்காலம் என்னவாகும் என்ற தடுமாற்றம் நம்மிடம் வந்துவிடக்கூடாது.

நிச்சயமாக அல்லாஹ்வுடைய உதவி வரும். எப்படி அந்த நபிமார்கள், அவர்களுடன் இருந்த முஃமின்கள் சொன்னார்களோ,

متى نصر الله

யா அல்லாஹ்!நீ எங்களுக்கு வாக்களித்த உதவியை எங்களுக்கு வழங்குவாயாக என்று. (அல்குர்ஆன்:2:214)

கண்டிப்பாக அந்த துஆவை நாம் செய்ய வேண்டும். அந்த நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ரில்துஆ கேட்டார்கள்:

«اللهُمَّ أَنْجِزْ لِي مَا وَعَدْتَنِي»

யா அல்லாஹ்! உன்னுடைய வாக்கை நிறைவேற்று.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு,நூல் : முஸ்லிம், எண் : 1763.

ரப்புல் ஆலமீன் கூறுகிறான் :

سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ

இஸ்லாமை எதிர்க்கக் கூடிய அந்த ராணுவங்களெல்லாம் தோற்கடிக்கப்படுவார்கள். புறமுதுகு காட்டி விடுவார்கள். (அல்குர்ஆன் 54 : 45)

மக்காவில் நபி (ஸல்) அவர்கள் இருக்கும்போதே அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு வாக்கு கொடுத்திருந்தான்.

அதைத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பத்ருப்போரில் துஆ செய்தார்கள்.

யா அல்லாஹ்! உன்னுடைய வாக்கை நிறைவேற்று! உன்னுடைய வாக்கை நிறைவேற்றி உன்னுடைய உதவியை எங்களுக்காக இறக்கு!

இத்தகைய நல்ல துஆக்களை நாம் அதிகம் செய்வோமாக! அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் இழந்ததை விட சிறந்ததை ஏற்படுத்தி கொடுப்பானாக!

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அவர்களில் யார் கொல்லப்பட்டார்களோ அவர்களுடைய உயிர்களை சொர்க்கத்தில் சென்று சேர்ப்பானாக!

அவர்களுடைய குடும்பத்தாருக்கு அல்லாஹ் அழகிய சிறந்த உதவிகளை தந்தருள்வானாக! அல்லாஹுத்தஆலா எங்கெல்லாம் உலகத்தில் முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்களோ அவர்கள் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பையும் ஈமானையும் வழங்குவானாக!

அவர்களுடைய தீனையும் மன உறுதியையும் அல்லாஹ் பாதுகாத்து தருவானாக!

அல்லாஹு தஆலா நம்முடைய இம்மை வாழ்க்கை சிறப்பானதாக ஆக்குவானாக! நம்முடைய மறுமையையும் மார்க்கத்தையும் நமக்கு பாதுகாத்து தந்தருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/