HOME      Khutba      சோதனைகளில் பொறுமைகாப்போம்! | Tamil Bayan - 681   
 

சோதனைகளில் பொறுமைகாப்போம்! | Tamil Bayan - 681

           

சோதனைகளில் பொறுமைகாப்போம்! | Tamil Bayan - 681


சோதனைகளில் பொறுமை காப்போம்!!

ஜுமுஆ குத்பா தலைப்பு : சோதனைகளில் பொறுமை காப்போம்!!

வரிசை : 681

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 02-07-2021 | 22-11-1442

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம். அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா ஜமாத்தோடு தொழுவதற்கு நமக்கு எளிதாக்கி கொடுத்தான். நம் அனைவரையும் இந்த நோயில் இருந்து பாதுகாப்பானாக! பாதுகாப்பான வெற்றிகரமான வாழ்க்கையை அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் முஸ்லிமான அனைவருக்கும் தந்தருள் புரிவானாக‌!ஆமின்.

கண்ணியத்திற்குரியவர்களே! இது போன்ற காலகட்டத்தில் நமக்குத் தேவை,நம்முடைய ஈமானை உறுதி படுத்துகின்ற, நம்முடைய பலவீனப்பட்ட உள்ளங்களுக்கு,நொடிந்து இருக்கின்ற, காயப்பட்டு இருக்கின்ற, அல்லது சோதனைகளால் துவண்டு இருக்கக்கூடிய உள்ளங்களுக்கு அல்லாஹ்வைக் கொண்டு ஆறுதல் கூறக் கூடிய ஆறுதலான வார்த்தைகள்நமக்குத் தேவை.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு ஹதீஸை பாருங்கள், எவ்வளவு அழகாக ஒரு உதாரணத்தைக் கூறி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு புரிய வைக்கின்றார்கள்.

مَثَلُ الْمُؤْمِنِ كَمَثَلِ الزَّرْعِ لَا تَزَالُ الرِّيحُ تُمِيلُهُ وَلَا يَزَالُ الْمُؤْمِنُ يُصِيبُهُ الْبَلَاءُ وَمَثَلُ الْمُنَافِقِ كَمَثَلِ شَجَرَةِ الْأَرْزِ لَا تَهْتَزُّ حَتَّى تَسْتَحْصِدَ

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட,ஈமானில் உறுதிகொண்ட முஃமினுக்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உதாரணம் சொன்னார்கள்; விளை நிலங்களில் இருக்கக்கூடிய பயிர்களை போல. காற்று வீசும் போது அந்த காற்றிக்கேற்ப சாய்ந்து கொடுத்து கொண்டே இருக்கும்.

நயவஞ்சகன், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாத, விதியின் மீது நம்பிக்கை கொள்ளாத, அல்லாஹ்வின் உதவியின் மீது நம்பிக்கை இல்லாத, முனாஃபிக் -நயவஞ்சகன் பகட்டுக்காரன் அவனுக்கு உதாரணம் சொன்னார்கள்.

எந்தப் பக்கமும் வளையாத கட்டையை போன்று, ஒரு மரத்தைப் போல. காற்றடிக்கும் போது அந்தப் பக்கம் இந்தப் பக்கம் சாயாமல் செங்குத்தாக அப்படியே நின்று கொண்டே இருக்கும். ஆனால் ஒரு புயல் காற்று வரும் போது அந்த மரத்தை வேரோடு அப்படியே பிடுங்கி விடும்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 5024.

முஃமின் எப்படி? அல்லாஹ்வுடைய சோதனை வரும் போதெல்லாம் அந்த சோதனையோடு ஒன்றிப்போய் பொறுமையோடு இருப்பான். அல்லாஹ்விற்கு முன்னால் திமிரு காட்ட மாட்டான். நெஞ்சை நிமிர்த்த மாட்டான், பயப்படுவான்.

யா அல்லாஹ்! எனது பாவத்தால் இந்த சோதனை இருக்கும். என்னை மன்னித்தருள்வாயாக! நான் உனக்கு முன்னால் பணிந்து விட்டேன். யா அல்லாஹ்! நான் எத்தனையோ குற்றங்களை குறைகளை செய்து இருக்கலாம்.

அந்தப் குற்றங்களால் இந்த சோதனைகள் இருக்குமேயானால் உன்னுடைய கருணையால் நீ என்னைப் பொருத்திக் கொண்டு, உன்னுடைய கருணையால் இந்த சோதனையிலிருந்து அழகிய விடுதலையை, இந்த சோதனையிலிருந்து நான் வெளியாவதற்கு ஒரு அழகிய வழியை நீ ஏற்படுத்திக் கொடு.

நான் உன் பக்கம் மீண்டு விட்டேன். நான் உன் பக்கம் திரும்பி விட்டேன். என் பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு விட்டேன் என்று அவன் அப்படியே அல்லாஹ்வுக்கு முன்னால் சரணடைந்து விடுவான்.

முனாஃபிக் அப்படி அல்ல. திமிரு காட்டுவான்,என்னதான் நடக்கிறது என்று நாம் பார்த்து விடலாம். அல்லாஹ்வை மறந்து விட்டு அல்லாஹ்வை புறக்கணித்து விட்டு தன்னுடைய புத்தியைக் கொண்டு, அனுபவத்தை திறமையைக் கொண்டு, மக்களில் தனக்கு வேண்டியவர்களை கொண்டு, அந்த சோதனையை எதிர்கொள்ளலாம் என்று திமிர் காட்டுவான்.

நான் சமாளித்து விடுவேன், என்னால் சமாளிக்க முடியும், எனக்கு திறமை இருக்கின்றது. எனக்கு இந்த மருத்துவம் தெரியும், எனக்கு இந்த மருத்துவமனை தெரியும், எனக்கு அவரை தெரியும், இவரை தெரியும் என்பதாக அந்த சோதனையில் அல்லாஹ்வின் பக்கம் திரும்பாமல் ரப்புக்கு முன்னால் மன்றாடாமல் அவன் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருப்பான்.

முனாஃபிக் ரப்பின் பக்கம் வர மாட்டான். இப்படிப்பட்ட ஒரு முனாஃபிக்கை ஒரு பெரிய சோதனையைக் கொண்டு முற்றிலுமாக அழித்து விடுகின்றான்.

இந்த கருத்துப்படி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு ஒரு அழகிய ஹதீஸை சொன்னார்கள்.

சகோதரர்களே! இந்த உலகம் சோதனைகளால் சூழப்பட்டது. வியாபாரங்களில், தொழில்துறைகளில், கொடுக்கல் வாங்கலில், உறவுகளில் நம்முடைய உடல் ஆரோக்கியத்தில், இப்படியாக சோதனைகள் வந்து கொண்டே இருக்கும்.

காலையில் நம்முடைய உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறக்கின்றது என்று ஒரு நற்செய்தி கேட்கையில் அதற்கு மறுநாள் காலையில் அல்லது அந்த நாள் மாலையில் நம்முடைய உறவினர் ஒருவர் மவுத் ஆகிவிட்டார் என்று ஒரு மவுத்துடைய செய்தியும் நமக்கு வரலாம்.

இப்படியாக உலகம் கவலைகளை கொண்டு சோகங்களை கொண்டு துன்பங்களை கொண்டு துயரங்களை கொண்டு சூழப்பட்டுள்ளது.

இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரமாக இருக்காது. இந்த உலகத்தினுடைய மகிழ்ச்சியும் நிரந்தரம் இல்லை. இதனுடைய கவலையும் நிரந்தரம் இல்லை.

தெளிவாக தெரியும் அதற்கு பிறகு அங்கே ஒரு மேக மூட்டம் இருக்கிறது என்று. அப்படித்தான் இந்த வாழ்க்கையை சோதனைகளால் சூழ்ந்து கொண்டே இருக்கும்.

சோதனைகளுக்கு பின் சோதனை நாம் கப்ரு குழியை அடைகின்ற வரை சோதனையுடன் தான் இருக்க வேண்டும். அதற்கு நம்முடைய மனதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு ஹதீஸை கவனியுங்கள் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ

முஃமினுடைய எல்லாக் காரியங்களும் எனக்கு சிறப்பாக தெரிகின்றது, ஆச்சரியமாக தெரிகின்றது. அவனுக்கு ஒரு மகிழ்ச்சி கிடைத்தால் அல்ஹம்து லில்லாஹ் என்று அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகின்றான். அது அவனுக்கு நன்மையாக ஆகிவிடுகின்றது.

அவனுக்கு ஒரு நோய் கஷ்டம் ஏற்பட்டால், அவன் பொறுமையாக இருக்கின்றான். இந்த துஆவை ஓதி பொறுமை காக்கின்றான். அது அவனுக்கு நன்மையாக ஆகிவிடுகின்றது. ச

அறிவிப்பாளர் : சுஹைப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 5318.

சோதனைகளை எதிர் கொள்வதற்கு மிகப்பெரிய ஆயுதத்தை அல்லாஹு தஆலா நமக்கு கொடுத்திருக்கின்றான்.

انا لله وانا اليه راجعونஇந்த உலகத்தில் நாம் தற்காலிகமானவர்கள். அல்லாஹ்வுக்கு உரியவர்கள்.அல்லாஹ் நம்மை படைத்தவன். நாம் அல்லாஹ்விற்கு சொந்தம். யாரை நாம் இழந்தோமோ அவரும் அல்லாஹ்விற்கு சொந்தமானவர். எல்லோரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கூடியவர்கள். இன்று இவர் என்றால் நாளை நானாக இருக்கும்.

ஆகவே, இந்த அழியக்கூடிய மாறக்கூடிய இந்த உலகத்தில் என்ன இருக்கின்றது?! நான் அல்லாஹ்வை கொண்டு ஆறுதல் அடைகின்றேன். இந்த துஆ நமக்கு மிகப்பெரிய ஆயுதம் இந்த சோதனைகளை எதிர் கொள்வதற்கு.

உள்ளத்தை உறுதிப்படுத்துவதற்கு, உள்ளத்தைப் திடகாத்திடப்படுவதற்கு,உள்ளத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது.

இமாம் ஹசன் பஸரி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் எவ்வளவு அழகாக புரிய வைக்கின்றார்கள் பாருங்கள்.

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் வலியுறுத்திய صبر-ஸப்ர் என்ற அந்த நிலைகுலையா தன்மை உறுதி.

ஸப்ர் என்றால் அல்லாஹ்வுடைய கட்டளைகளில் நிலையாக உறுதியாக திறமாக இருந்தல்.

எந்த நேரத்தில் அல்லாஹ்வுடைய கட்டளையோ அதை செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பது. அதுதான் ஸப்ரு. ஸப்ர் என்றால் வெறும் வாயை மூடிக் கொண்டு இருப்பது மட்டுமல்ல. அமைதியாக இருப்பது மட்டுமல்ல.

ஸப்ர் என்பது உறுதியை குறிக்கக்கூடிய வார்த்தை. மனதிலுள்ள வலிமையை ஆற்றலைக் குறிக்கக்கூடிய வார்த்தை.

அதனால்தான் ஸப்ர் என்ற சொல்லுக்கு பல இடங்களில் ஸபாத் என்று சொல்வார்கள். உறுதியாக இருத்தல் திடமாக இருந்தல். பலவீனப்பட்டு விடாமல் இங்கும் அங்கும் சாய்ந்து விடாமல். ஈமானை விட்டு தடம்புரண்டு விடாமல், அமல்களை விட்டு தரம் புரண்டு விடாமல், அல்லாஹ்வுடைய அந்த ஈமானில் யகீனில் உறுதியாக இருந்தல்.

இமாம் ஹசன் பஸரி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் சொன்னார்கள் :

جربنا وجرب المجربون فلم نر شيئاً أنفع من الصبر

நாங்களும் எங்கள் அனுபவத்தில் பார்த்தோம். இதைப் பலரும் தங்கள் வாழ்க்கையில் அனுபவமாக பார்த்து இருக்கின்றார்கள். அதாவது, பொறுமையை விட அதிக நற்பலனை தரக்கூடிய ஒரு நற்குணத்தை நாங்கள் பார்த்தது இல்லை.

எல்லாவற்றிலும் ஸப்ரு. கணவன் மனைவி இடத்தில் ஸப்ரு. மனைவி கணவன் இடத்தில் ஸப்ரு. பெற்றோர் பிள்ளைகள் இடத்தில், பிள்ளைகள் பெற்றோர் இடத்தில் ஸப்ரு.

வேலை செய்யக்கூடிய இடங்களில், தொழில்துறைகளில், நோய்நொடிகள் ஏற்படும்போது, இழப்புகள் ஏற்படும் போது, நான் விரும்பிய ஒரு காரியம் தாமதமாகும் போது என எல்லா நேரத்திலும் ஸப்ர். இந்த ஸப்ரை விட ஒரு பலமுள்ள ஒரு நன்மையானதை நாங்கள் பார்க்கவில்லை.

மேலும் சொன்னார்கள் :

تداوى به الأمور ولا يداوى هو بغيره

இந்த மருந்தைக் கொண்டு எல்லாவற்றையும் குணப்படுத்தி விடலாம். சுப்ஹானல்லாஹ்! ஆனால் இதை இழந்துவிட்டு அந்த இழப்பை வேறு எதையும் கொண்டு நிரப்ப முடியாது.

ஸப்ரை கொண்டு எல்லாவற்றையும் குணப்படுத்தி விடலாம். ஆனால் ஸப்ரை இழந்தால் வேறு எதைக் கொண்டும் அதை நிரப்ப முடியாது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த ஹதீஸை நினைவு கூர்ந்தார்கள்.

وَمَا أُعْطِيَ أَحَدٌ عَطَاءً خَيْرًا وَأَوْسَعَ مِنْ الصَّبْرِ

உலகத்தில் மனிதனுக்கு பொறுமையை விட ஒரு விசாலமான அருட்கொடை கொடுக்கப்பட வில்லை.(1)

அறிவிப்பாளர் : அபூ சயீத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி,எண் : 1376

ஒரு மனிதனுக்கு பொறுமை இருக்கிறது என்றால் அது தான் அவனுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைத்த மிகப்பெரிய அருள் என்று சொன்னார்கள்.

சகோதரர்களே! இந்த ஸப்ரு நமக்கு மிகத் தேவை. அல்லாஹ்வுடைய உதவியை பெறுவதற்கு, அல்லாஹ் நம்முடைய சோதனைகளில் நமக்கு அருகில் நம்மோடு துணை இருப்பதற்கு இந்த ஸப்ரு தேவை.

ஒன்று சோதனைகளை சரியான நிலைபாட்டில் எதிர்கொள்வதற்கு. பிறகு அந்த சோதனையில் அல்லாஹ்வுடைய தவ்ஃபீக், அல்லாஹ்வுடைய உதவி நம்மோடு இருப்பதற்கு, அல்லாஹ் நம்மோடு இருப்பதற்கு இந்த ஸப்ரு தேவை.

இந்த ஸப்ரு இருந்தால் கண்டிப்பாக அல்லாஹ் நம்மை விட்டு பிரிய மாட்டான்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா கூறுகின்றான் :

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

முஃமீன்களே நீங்கள் பொறுமையாக இருந்தும், தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடத்தில் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் 2:153)

உங்களுக்கு அல்லாஹ் உடைய உதவி கிடைக்க வேண்டும் என்றால், உங்களுக்கு ஏற்பட்ட சோதனையில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

சிலர் என்ன செய்கின்றார்கள்? சோதனை ஏற்பட்ட உடனே அல்லாஹ்வை ஏசி விடுகின்றார்கள். அல்லாஹ் இவனுக்கு அநியாயம் செய்வது போன்றும் இவன் அல்லாஹ்வுக்கு நன்மை செய்ய, அல்லாஹ் இவனுக்கு குறை செய்வதைப் போன்று, அல்லாஹ் நான் உனக்கு என்ன தப்பு பண்ணேன்? நீ என்னை இப்படி சோதிக்கிறியே!

நான் என்ன பாவம் செய்தேன்? நீ எனக்கு இப்படி ஒரு சோதனை கொடுத்தாய்?

அல்லாஹ் அக்பர்! அல்லாஹ்விடத்தில் அவர்கள் ஆட்சேபனை செய்கின்றார்கள். சலிந்து கொள்கின்றார்கள்.

அல்லாஹ்வை எதிர் கேள்வி கேட்கின்றார்கள். நான் உனக்காக தொழ வில்லையா? நான் உனக்காக நோன்பு வைக்கவில்லையா? எனக்கு ஏன் இந்த சோதனை? என்று அல்லாஹ்வை ஏசி விடுகின்றார்கள். அல்லாஹ்விடத்தில் கோபித்துக் கொள்கின்றார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக.

சகோதரர்களே! அந்த தன்மை நம்மிடம் இருக்கக் கூடாது. இந்த நோய் நொடி காலங்களில் கூட பலர் பலவிதமாக பேசுவதைப் பார்க்கின்றோம்.

அல்லாஹ்வுடைய ஹிக்மத்துகளை –தாத்பரியங்களை அறியாமல் அல்லாஹ்வுடைய ஞான தத்துவங்களை புரியாமல் குறை பேசுவதைப் பார்க்கின்றோம்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமக்கு கொடுக்க கூடிய முதல் அறிவுரை என்ன? பொறுமையாக இருங்கள், உறுதியாக இருங்கள். கண்டிப்பாக அல்லாஹ் நமக்கு நன்மை செய்வான். நமக்கு இலகுவை ஏற்படுத்துவான்.

ஒரு சோதனையில் நாம் அறியாத எத்தனையோ நன்மைகள் இருக்கும். மறுமையின் நன்மை மிகப் பெரியது. அல்லாஹு தஆலா பொறுமைக்கு கூலியாக சொர்க்கத்தை வைத்திருக்கின்றான்.மறுமையில் விசாரணை இல்லாமல் சொர்க்கத்திற்கு அனுப்புவதாக அல்லாஹ் சொல்கின்றான்.

இப்படி எத்தனையோ நற்கூலிகள் பொறுமையாளர்களுக்கு இருக்கின்றன.

அடுத்து, தொழுது அல்லாஹ்விடத்தில் உதவி கேட்க வேண்டும். சிலர் துஆவை மறந்து விடுகின்றார்கள். சோதனை காலங்களில்துஆ கேளுங்கள்என்றால் அதெல்லாம் நம்ம கேட்க வேண்டியதில்லை. அல்லாஹ்வுக்குத் தெரியும். அவன் பார்த்துக் கொள்வான்.

இதுவும் ஒரு திமிரான போக்கு. இதுவும் ஒரு ஆணவமான போக்கு. இது ஈமான் அல்ல. இது இஸ்லாம் அல்ல. இது அல்லாஹ்வை நம்புவது அல்ல.

ஈமான் எது? இஸ்லாம் எது? தவக்குல் எது? உடனே அல்லாஹ்விடத்தில் துஆ கேட்பது.

அந்த சோதனையை கண்டு பயந்து, யா அல்லாஹ்! இது என்னால் தாங்க முடியாது. யா அல்லாஹ் நான் பலவீனமானவன், என்னை மன்னித்துவிடு. இந்த சோதனையை என்னில் இருந்து அகற்றி விடு. என்னைப் பாதுகாத்துக் கொள். என்னை ரட்சித்துக் கொள் என்று இஸ்திக்ஃபாரோடு துஆ செய்ய வேண்டும்.

தொழுகையைக் கொண்டு அல்லாஹ்விடத்தில் உதவி தேடுங்கள். என்றால் என்ன? (அல்குர்ஆன் 2:153)

தொழ வேண்டும். அல்லாஹ்விடம் துஆ கேட்க வேண்டும். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நூற்றுக்கணக்கான துஆக்களை பாருங்கள்.

காலையில் எழுந்த உடனே துஆ இருக்கின்றது.

اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ خَيْرَ هَذَا الْيَوْمِ ، وَخَيْرَ مَا بَعْدَهُ ، وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذَا الْيَوْمِ ، وَشَرِّ مَا بَعْدَهُ

அல்லாஹ்! நான் இந்த நாளின் உடைய நன்மையை, இந்த நாளில் உள்ள நன்மையை நான் உன்னிடத்தில் கேட்கின்றேன். இன்னும் இந்த நாளின் உடைய தீமையிலும் இதிலுள்ள தீமைகளிலிருந்தும் நான் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகின்றேன். (2)

அறிவிப்பாளர் : பரா இப்னு ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஃஜம் கபீர் தப்ரானி,எண் : 1155.

ஒருவனுக்கு எவ்வளவு ஈமான் யகீன் இருக்குமோ? எவ்வளவு அல்லாஹ்விடத்தில் தொடர்பு இருக்குமோ? அந்த அளவு அல்லாஹ்விடத்தில் துஆ கேட்பவனாக இருப்பான்.

ஒருவன் துஆ செய்யவில்லை என்றால், அல்லாஹ்விடத்தில் கையேந்த வில்லை என்றால், அழவில்லை என்றால், மன்றாட வில்லை என்றால், துஆ கேட்க வில்லை என்றால், அவருடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இல்லை என்று பொருள்.

அவன் வார்த்தைகளில் எவ்வளவு அல்லாஹ்வைப் பற்றி நம்பிக்கையாக பேசினாலும், யா அல்லாஹ் என்னை பாதுகாத்துக் கொள். யா அல்லாஹ் எனக்கு உதவு, யா அல்லாஹ் எனக்குக் கருணை காட்டு, என்று அல்லாஹ் அல்லாஹ் ரப்பு ரப்பு என்று அவன் கூற வில்லை என்றால் அவன் ரப்பை நம்பாதவன்.

சகோதரர்களே ஒவ்வொரு அடியிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும், அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டு கேட்டு தான் நம்முடைய வாழ்க்கையை நகற்ற வேண்டும்.

பள்ளிக்குள் சென்றால் துஆ, பள்ளியை விட்டு வெளியே சென்றால் துஆ, வீட்டிற்குள் வந்தால் துஆ‌, வீட்டை விட்டு வெளியே சென்றால் துஆ, ஒரு பொருளை வாங்கினால் துஆ, ஒரு பொருளை விற்றால் துஆ. இப்படி துஆவோடு தான் வாழ்க்கை.

இந்த சோதனை காலகட்டங்களில் நமக்கு தேவை ஈமானிய புத்துணர்ச்சி. நம்முடைய உள்ளங்களை நாம் அதிகமாக குர்ஆனை ஓதுவது கொண்டு, அந்த குர்ஆனுடைய உபதேசங்களை படிப்பது கொண்டு, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸ்களை படிப்பதை கொண்டு பலப்படுத்த வேண்டும்.

யார் அல்லாஹ்வை ஏசுகின்றார்களோ? அல்லாஹ்வுடைய விதியைக் குறை கூறுகின்றார்களோ? அல்லாஹ்வின் விதியின் படி உள்ள சோதனைகளை புரிந்து கொள்ளாமல் ஏசுகிறார்களோ? அல்லது நம்முடைய ஈமானை பலவீனப் படுத்தும் படி யார் பேசுகிறார்களோ அவர்களை விட்டு நாம் முற்றிலுமாக விலகி விடவேண்டும்.

அத்தகையவர்கள் உடன் நட்பு வைப்பதோ அவருடைய பேச்சை கேட்பதோ நம்முடைய ஈமானை பலவீனப்படுத்தி விட்டால், நம்முடைய உள்ளத்தில் குஃப்ரை ஏற்படுத்தி விட்டால், நயவஞ்சகத்தை ஏற்படுத்தி விட்டால், அது தவறான வார்த்தையை நாமும் நம்முடைய நாவில் சொல்ல வேண்டியதாகிவிட்டால், நம்முடைய தொழுகைகள் நாளைக்கு நமக்கு பலன் தராது. நம்முடைய நோன்பு மற்றும் மற்ற இபாதத்துகள் பலன் தராது. ஆகவே இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் சோதனைகளை இலேசாகி கொடுப்பானாக! இந்த சோதனைகளில் இருந்து அழகிய பாதுகாப்பை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஏற்படுத்திக் கொடுப்பானாக!

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டு அல்லாஹ்விடத்தில் மீளக்கூடிய நல்லடியார்கள் இடத்தில் என்னையும் உங்களையும் அல்லாஹுத்தஆலா ஆக்கியருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُإِنَّ نَاسًا مِنْ الْأَنْصَارِ سَأَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَاهُمْ ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ حَتَّى نَفِدَ مَا عِنْدَهُ فَقَالَ مَا يَكُونُ عِنْدِي مِنْ خَيْرٍ فَلَنْ أَدَّخِرَهُ عَنْكُمْ وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ وَمَا أُعْطِيَ أَحَدٌ عَطَاءً خَيْرًا وَأَوْسَعَ مِنْ الصَّبْرِ (صحيح البخاري 1376 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بن مُحَمَّدِ بن عَزِيزٍ الْمَوْصِلِيُّ ، حَدَّثَنَا غَسَّانُ بن الرَّبِيعِ ، حَدَّثَنَا أَبُو إِسْرَائِيلَ الْمُلائِيُّ ، عَنْ طَلْحَةَ بن مُصَرِّفٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بن عَوْسَجَةَ ، عَنِ الْبَرَاءِ بن عَازِبٍ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ إِذَا أَصْبَحَ وَأَمْسَى : صْبَحْنَاوَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ ، وَالْحَمْدُ لِلَّهِ لا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ ، اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ خَيْرَ هَذَا الْيَوْمِ ، وَخَيْرَ مَا بَعْدَهُ ، وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذَا الْيَوْمِ ، وَشَرِّ مَا بَعْدَهُ ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ ، وَسُوءِ الْكِبْرِ ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ.(المعجم الكبير للطبراني 1155-)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/