HOME      Khutba      சோதனைகளை எளிதாக்க வழிகள்! அமர்வு 2 | Tamil Bayan - 682   
 

சோதனைகளை எளிதாக்க வழிகள்! அமர்வு 2 | Tamil Bayan - 682

           

சோதனைகளை எளிதாக்க வழிகள்! அமர்வு 2 | Tamil Bayan - 682


சோதனைகளை எளிதாக்க வழிகள்! அமர்வு 2

ஜுமுஆ குத்பா தலைப்பு : சோதனைகளை எளிதாக்க வழிகள்! அமர்வு 2

வரிசை : 682

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 16-07-2021 | 056-12-1442

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக! அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றி வாழுமாறு மறுமைக்குறிய அமல்களில் ஈடுபடுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நம்முடைய நல்ல அமல்களை அதிகப்படுத்திக் கொடுப்பானாக! தீமைகளை விட்டும் துன்பங்களை விட்டும் என்னையும் உங்களையும் எல்லா முஃமின்களையும் பாதுகாத்து அருள்வானாக! ஆமீன்.

சோதனைகளை நாம் எப்படி எதிர்கொள்வது? என்ற கருத்தில் அதற்கான முக்கியமான இரண்டு பண்புகளை சென்ற அமர்வில் நாம் பார்த்தோம். அதைத் தொடர்ந்து இன்னும் சில முக்கியமான பண்புகளை இந்த ஜும்ஆவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

ஏற்கனவே நாம் குர்ஆன் ஹதீஸிலிருந்து தெரிந்தைப் போன்று, கண்டிப்பாக நமக்கு சோதனைகள் உண்டு. சோதனைகளில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. அந்த சோதனைகளிலிருந்து அழகிய முறையில் வெளியேறுவதற்கான வழிகள் இருக்கின்றன. அல்லாஹ்வைக் கொண்டு உதவி தேடும் போது, அல்லாஹ் கூறிய அந்த வழிமுறைகளை பின்பற்றும் போது.

ஆனால் சோதனைகளே இல்லாமல் நாம் வாழ வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது.

இந்த சோதனைகளை எப்படி நாம் எதிர்கொள்வது என்று பார்க்கும் போது அறிஞர்கள் கூறும் முக்கியமான வழிமுறைகளில் ஒன்றுதான், நமக்கு சோதனை ஏற்பட்டால் நாம் நமக்கு முன்னால் சென்ற ஸஹாபாக்கள், சான்றோர்கள், முன்னோர்கள், தாபியீன்கள், அதற்கு முன்னால் நபிமார்கள், அவர்களுடைய வரலாறுகளை நாம் நினைவுகூர வேண்டும்.

நம்மை விட ஈமானில் சிறந்தவர்கள். அமல்களில் அதிகமானவர்கள். நம்மைவிட அல்லாஹ்விற்கு மிக நெருக்கமானவர்கள். இருந்தும் அவர்கள் சோதிக்கப் பட்டார்கள்.

சாதாரண சோதனைகள் அல்ல. சிறிய சோதனைகளும் அல்ல. பெரிய சோதனைகளுக்கு ஆளானார்கள். எதிரிகளால் அச்சுறுத்தப்பட்டார்கள். பல நபிமார்கள் படுகொலைக்கு ஆளானார்கள்.

நபிமார்களும் நபிமார்களுடன் இருந்த தோழர்களும் பல ஊர்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இருக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட சோதனைகள் நமக்கு முன்னால் சென்ற ஸஹாபாக்கள், தாபியீன்கள், முன்னோர்கள், இமாம்கள், நபிமார்கள், ரசூல்மார்களுக்கு நிகழ்ந்திருக்கின்றது.

அல்லாஹு தஆலா நமக்கு சொல்கின்றான் :

لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا

எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ, அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கிறது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து கொண்டிருப்பார்கள்.(அல்குர்ஆன் 33 : 21)

அல்லாஹ்வின் தூதர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளை நாம் நினைத்துப் பார்க்கும்போதுநம்முடைய சோதனைகளை நாம் சிறியதாக பார்ப்போம். அந்த சோதனைகளில் பொறுமையாக இருப்போம்.

நம்மைவிட நம்முடைய தூதர் அவர்களே பெரிய சோதனைகளுக்கு ஆளாகி இருக்கும் போது எனக்கு ஏற்பட்டது ஒரு பெரிய சோதனை இல்லை என்று நாம் நம்மை தேற்றிக் கொள்வதற்கு அது பெரிய உந்து சக்தியாக இருக்கும்.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்களின் வாழ்நாள் முழுவதுமே சோதனையாகத்தான் இருந்தது. மக்காவுடைய 13ஆண்டு காலம் நிம்மதியாக ரசூல் அவர்களால் தூங்கி இருக்க முடியுமா?

சரி, ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்தார்களே, அந்த பத்து ஆண்டுகளில் பத்தொன்பது பெரிய போர்களையும், 60க்கும் மேற்பட்ட சிறிய போர்களையும் சந்தித்தார்கள். அதுபோன்று நாலா திசைகளிலும் பல மையில்கள் அவர்கள் பயணம் மேற்கொண்டார்கள் என்றால் எத்தகைய கஷ்டமான சூழ்நிலையில் அவர்களுடைய வாழ்க்கை கழிந்து இருக்கும்?!

மக்காவின் அழைப்பு பணிகளிலுள்ள அந்த இறுதிக் கட்டத்தில் ஒரே ஆண்டிலேயே அவர்களுடைய சாச்சா அபூதாலிப் மரணித்து விடுகிறார்.

ரசூலுல்லாஹ் உடைய அன்பிற்குரிய, முதல் ஈமானிய பெண்மணி, நம்முடைய தாய் அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா இறந்து விடுகிறார்கள்.

எனவே அந்த ஆண்டிற்கு عام الحزن(ஆமுல் ஹுஸுன்) -கவலையின் ஆண்டு என்று அதற்குப் பெயர் வைக்கப்படுகின்றது.

அல்லாஹ்வுடைய தூதர் எவ்வளவு பொறுமையாக இருந்தார்கள்!

மதினா உடைய சோதனைகளில் ஒன்று, ரசூலுல்லாஹி அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை அடிமை பெண்ணின் மூலம் பிறக்கின்றது. மக்காவில் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மூலமாக பிறக்கின்ற ஆண் குழந்தைகள் எல்லாம் இறந்து விடுகின்றார்கள்.

மதினாவில் பிறந்த அந்த குழந்தையை கண்டு ரசூல் அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். இப்ராஹிம் என்று பெயர் வைத்தார்கள். ஆனால் அந்த குழந்தையும் மரணித்து விடுகின்றது.

அந்த குழந்தை ரசூல் அவர்கள் இருக்கும் பொழுது குழந்தையினுடைய உயிர் பிரிகின்றது. ரசூல் அவர்களின் கண்களிலிருந்து அப்படியே கண்ணீர் சொட்டுகின்றது. அருகில் இருந்த தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே நீங்கள் அழுகின்றீர்களா? என்று கேட்கின்றார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் சொன்னார்கள் :

إِنَّ الْعَيْنَ تَدْمَعُ وَالْقَلْبَ يَحْزَنُ وَلَا نَقُولُ إِلَّا مَا يَرْضَى رَبُّنَا وَإِنَّا بِفِرَاقِكَ يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونُونَ

இந்தக் கண் அழுகின்றது.இந்த உள்ளம் கவலைப் படுகின்றது. ஆனால் எங்களுடைய ரப்பை திருப்திப்படுத்தக் கூடிய வார்த்தைகளைத் தவிர வேறு எதையும் நாங்கள் பேச மாட்டோம். இப்ராஹீமே உன்னுடைய பிரிவால் நாங்கள் கவலையில் இருக்கின்றோம். (1)

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1220.

பிறப்பதற்கு முன்பே தந்தையை இழந்தவர்கள். சிறுவயதில் இருக்கும் போது தாயை இழந்தார்கள். யதீமாக பிறந்து எத்தனை சோதனைகளை ரசூல் அவர்கள் சந்தித்தார்கள்.

இப்படி நாம் ரசூல் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை உணர்வு தரும் கண்ணோட்டத்தோடு படித்து பார்ப்போமேயானால் நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற சோதனையை பெரிதாக நினைக்க மாட்டோம்.

அதனால் நாம் பதட்டப்பட்டு பலவீனப்பட்டு நம்பிக்கை இழக்க மாட்டோம். சிலர் அல்லாஹ்வை குறை கூறுகிறார்களே, அல்லாஹ்வுடைய விதியை குறை கூறுகிறார்களே,அந்த நிலைமைக்கு ஆளாகாமல் இருக்க முடியும்.

ரசூல் அவர்களுக்குப் பிறகு வாழ்ந்த ஸஹாபாக்கள்‌, தாபியீன்களுடைய நிலையினை எடுத்துப் பாருங்கள். ஒவ்வொரு ஸஹாபியினுடைய படிப்பினையும் நமக்குப் பாடமாக இருக்கின்றது.

உர்வா இப்னு ஜுபைர் என்ற ஒரு பெரிய தாபியீன்.ஒரே நாளில் அவருடைய ஒரு ஆண் மகன் இறந்து விடுகிறார். தாபியீ உடைய ஒருகால் நோயின் காரணமாக வெட்டப்படுகின்றது.

பெரிய தாபியீன். ஸஹாபியுடைய மகனார். மிகப் பெரிய கல்விமான். வணக்கசாலி.

நாமோ இல்மிலும் மிக குறைவு. தக்வாவிலும் குறைவு. நம்மை நாமே பெரிய தக்வாதாரியாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

சில தொழுகைகளை சரியாக தொழுது விட்டால், ஒரு முறை இரு முறை ஹஜ் உம்ரா செய்து விட்டால், சில தான தர்மங்களை செய்து விட்டால், இந்த உலகத்தில் நான்தான் அல்லாஹ்விற்கு மிக நெருக்கமானவன். எனக்கு சோதனையே வரக்கூடாது என்று நினைக்கின்றோம்.

நான் விரும்புவது எல்லாம் அல்லாஹ் எனக்கு நடத்திக் கொடுத்து விட வேண்டும். நான் கேட்பதை எல்லாம் அல்லாஹ் எனக்கு செய்து கொடுத்துவிட வேண்டும்.

என்னை எதிர்ப்பவன் நாசமாகப் போய்விட வேண்டும். நான் அப்பேர்பட்ட இறைநேசர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

பாவம் செய்தவர்களுக்கு மட்டும் தான் இந்த உலகத்தில் சோதனைகள் இருக்கின்றது என்றும் நல்லவர்களுக்கு இந்த உலகில் சோதனை வராது என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஹதீஸ்களை ஆயத்துக்களை பார்க்கப் போனால் அதற்கு மாற்றமாக இருக்கின்றது.

சோதனைகளில் அதிகமானவர்கள் நபிமார்கள். அதற்குப் பிறகு அவர்களைப் போன்றவர்கள். அதற்கு பிறகு அவர்களைப் போன்றவர்கள்.யாருடைய ஈமான் அதிகமாக இருக்குமோ அதற்கு ஏற்ப அவர் சோதிக்க படுகின்றார். (2)

அறிவிப்பாளர் : ஸஃத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மத்,எண் : 1400,1412

சோதனைகள் அல்லாஹ்வுடைய அருள்களில் ஒன்று. அல்லாஹ்வுடைய பொருத்தத்தில் ஒன்று என்பதை நாம் புரிய வேண்டும்.

இங்கு உர்வா இப்னு ஜுபைர் அவர்களை மக்கள் பார்க்கின்றார்கள். ஏனென்றால் பின்பற்றக் கூடிய ஒரு பெரிய அறிஞர் ஆயிற்றே!இப்படிப்பட்ட நிலையில் அவர் எப்படி நடக்கின்றார்?என்று.

குடும்பத்தார்கள் பார்க்கின்றார்கள். மாணவர்கள் பார்க்கின்றார்கள். மக்கள் பார்க்கின்றார்கள். கால் வெட்டப்பட்டு படுத்த படுக்கையில் கிடக்கின்றார். பிள்ளை இறந்து கிடக்கிறார். என்ன செய்யப்போகிறார்? என்று.

சொன்னார்கள் :

(اللهم كان لي بنون سبعة، فأخذت واحدًا وأبقيت لي ستة، وكان لي أطراف أربعة، فأخذت واحدًا وأبقيت ثلاثة، ولئن ابتليت لقد عافيت، ولئن أخذت لقد أبقيت)

யா அல்லாஹ் எனக்கு நீ ஏழு ஆண் மக்களை கொடுத்தாய், ஒருவரைத்தான் நீ எடுத்தாய். எனக்கு நீ 6குழந்தைகளை விட்டுவிடுகின்றாய். ஒரு குழந்தையினுடைய உயிரைத் தான் நீ வாங்கி இருக்கின்றாய்.

எனக்கு இரண்டு கைகள் இரண்டு கால்கள் என்று நான் பயன்படுத்தக்கூடிய நான்கு உறுப்புகளை கொடுத்தாய், ஒரு உறுப்பை தான் நீ எடுத்து இருக்கின்றாய். யா அல்லாஹ்! நீ எனக்கு சோதனையைக் கொடுத்து இருக்கின்ற அதே நேரத்தில் நீ எனக்கு ஆஃபியத்தையும் கொடுத்து இருக்கின்றாய். யா அல்லாஹ் நீ என்னிடத்தில் இருந்து எடுத்த நிஃமத்துகளில் ஏராளமான நிஃமத்துக்ளை என்னிடத்தில் விட்டும் வைத்திருக்கின்றாய்.

நாம் எது நம்மிடத்திலிருந்து பறிபோனதோ அதை மட்டுமே பார்ப்போம். எது நம்மிடம் இருக்கின்றதோ அதைப் பார்க்க மாட்டோம்.

அல்லாஹ் நமக்கு கொடுத்தது அதிகமா? அல்லது எடுத்தது அதிகமா? அல்லாஹ் நமக்கு கொடுத்தது அதிகம்.

அல்லாஹ் நம்மை சந்தோஷமாக மகிழ்ச்சியாக நிஃமத்தோடு வைத்திருப்பது அதிகமா? அல்லது கவலையோடு நம்மை வைத்திருப்பது அதிகமா? என்று பார்த்தால் அல்லாஹ் நம்மை நிஃமத்தோடு வைத்திருப்பது அதிகம் கவலையோடு வைத்திருப்பதை விட.

ஆனால் அந்த சிறிய நேர கவலையை அடியான் நினைத்துக் கொண்டு அல்லாஹ் கொடுத்த ஏராளமான நிஃமத்துக்களையும் மறந்து அல்லாஹ்வை பேசுகின்றார்கள். அல்லாஹ்வுடைய விதியை குறைப்பேசி விடுகின்றார்கள். இந்த நிலைமை ஒரு அடியானுக்கு இருக்கக் கூடாது.

உமர் இப்னு அப்துல் அஜீஸ் தாபியீன்களில் ஒருவர்.அவருடைய மகனார் மிகவும் பிரியத்திற்குரியவர்.அப்துல் மலிக் மரணித்து விடுகின்றார்கள். அவர்களை அடக்கம் செய்வதற்காக கலீஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் அவர்களை கப்ரில் வைக்கின்றார்கள். மக்களெல்லாம் சுற்றி பார்க்கின்றார்கள். பெரிய தாபியீன், பெரிய இமாம், மன்னர் என்ன செய்யப் போகிறார்?என்ன வார்த்தை சொல்லப் போகின்றார்? என்று.

ஐந்தாவது கலீஃபா என்று மார்க்க அறிஞர்களால் புகழப்படும் உமர் இப்னு அப்துல் அஜீஸ் சொல்கிறார் :

(بابني! قد كنت براً بأبيك، والله ما زلت منذ وهبك الله لى مسروراً بك، ولا والله ما كنت قط أشد بك سروراً، ولا أرجى بحظي من الله تعالى فيك منذ وضعتك في هذا المنزل الذي صيرك الله إليه)

மகனே! உன்னுடைய தந்தைக்கு நீ நல்ல பிள்ளையாக இருந்தாய். அல்லாஹ் உன்னை எனக்கு குழந்தையாக கொடுத்த நாளிலிருந்து உன் மூலமாக மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் அதே நேரத்தில் உன்னை நான் குழந்தையாக பெற்றெடுத்த நேரத்தில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் உன்னை இப்போது இந்த கப்ரில் வைத்துள்ளேன்.இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அல்லாஹ்வுடைய அருளை இன்னும் நான் எனக்கு ஆதரவு வைக்கின்றேன்.

அவருடைய உள்ளத்தில் தனது பாசமான குழந்தை இறந்தது அவருக்கு கவலை அளிக்கவில்லை. கவலை அது வேறு ஒரு விதத்தில்.மகிழ்ச்சி அது வேறு ஒரு விதத்தில்.இரண்டிற்கும் இடையே வேறுபாடு இருக்கின்றது.

அல்லாஹு தஆலா சொல்கின்றான் :

என் அடியானுக்கு பிரியமான குழந்தையை நான் அவனிடம் இருந்து எடுத்துக் கொண்டால்,அந்த உயிரை வாங்கி வந்த மலக்கிடத்தில் அல்லாஹ் கேட்பான்;எனது அடியான் என்ன சொன்னான்?என்று.அல்லாஹ்விற்கு தெரியும். ஆனால் அல்லாஹ் கேட்பான். மலக்குகள் சொல்வார்கள்; இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று கூறி பொறுமையாக இருந்தான். (3)

அல்லாஹ் சொன்னான் : அவனுக்கு நான் சொர்க்கத்தை கொடுத்துவிட்டேன் என்று.

அறிவிப்பாளர் : அபூ மூசா அல்அஷ்அரீ ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி,எண் : 1021.

அது போன்று நமக்கு நம்முடைய உள்ளத்தில் அல்லாஹ்வைப் பற்றி என்ன இருக்கின்றது? என்ற சுய பரிசோதனை வேண்டும்.

பொதுவாக உலகில் என்னை போன்ற மிகவும் பலவீனமான உள்ளம் எப்படி இருக்கும் என்றால் அதுபோன்று ஈமானிய கல்வி சார்ந்த நிறைய அறிவுரைகளை கேட்பது, அத்தகைய மக்களோடு சேர்வது குறைவாக இருக்கின்ற இந்த காலகட்டத்தில்,என்ன பொதுவாக விளங்கி கொள்கின்றோம் என்றால்,

நான் அல்லாஹ்விடத்தில் இருந்து எவ்வளவு தூரமாக இருக்கின்றேன். தொழுகிறேன், கடமைக்கு தொழுகின்றேன். இபாதத் செய்கின்றேன் ஏதோ செய்கின்றேன்.

இப்படி தன்னை அல்லாஹ்விடமிருந்து எப்போதும் தூரமாகவே பார்க்கின்றோம்.

அவர்களெல்லாம் அவ்லியாக்கள்; பெரியவர்கள்.

நாமல்லாம் எப்படி? ஒன்று பணிவாக இருப்பது என்பது வேறு. பெருமை தற்பெருமை கொள்ளாமல் இருப்பது என்பது வேறு. தன்னை சாதாரணமாக நினைத்துக் கொள்வது என்பது வேறு.

ஆனால் அது எப்படி ஆகிவிடக்கூடாது என்றால், அல்லாஹ் உன்னை தூரமாக வைத்திருக்கின்றான் என்று நீ எண்ணும் அளவிற்கு ஆகி விடக்கூடாது.

என்னைவிட நல்லோர்கள் நிறைய இருக்கின்றார்கள், நானும் அல்லாஹ்விற்கு நெருக்கமானவன். அல்லாஹ் என் மீதும் அன்பு வைத்திருக்கின்றான். நான் அல்லாஹ்வின் மீது அன்பு வைத்து இருக்கின்றேன். அல்லாஹ் எனக்கு நிறைய உதவி செய்வான்.

அல்லாஹ் எனக்கு ஒன்றை கொடுத்தால் அது நன்றாகத்தான் இருக்கும். அல்லாஹ் என்னிடத்தில் ஒன்றை கொடுக்கவில்லை என்றால் அது எனக்கு நன்மையாகத்தான் இருக்கும் என்று அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வேண்டும்.

நாமெல்லாம் தொழுது துஆ கேட்டு என்ன பயன்? அதான் அல்லாஹ் நமக்குக் கொடுக்கவில்லையே! அல்லாஹ் ஒன்றை நமக்குக் கொடுக்கவில்லை என்றால் நம் மீது கோபித்து கொண்டு கொடுக்காமல் இருக்கின்றான்.

சகோதரர்களே! அப்படி இல்லை. அதில் எனக்கு நன்மை இல்லை. அதனால் அல்லாஹ் எனக்கு அதை கொடுக்கவில்லை.

அல்லாஹ் எனக்கு ஒன்றை கொடுத்திருக்கின்றான். எனக்கு இதில் நன்மை இருக்கின்றது. அல்லாஹ் இதை எனக்கு தேர்ந்தெடுத்தான். அதனால் எனக்கு அதை கொடுத்தான். அல்லாஹ் கொடுத்ததை கொண்டு பொருந்திக் கொள்வது. அல்லாஹ் கொடுக்காததில் நன்மையை தேடுவது.

இதைத்தான் ரசூல் அவர்கள் ஹதீஸ் ஹுதூஸியில் சொல்கிறார்கள் :

أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ

எனது அடியான் என்னிடத்தில் எப்படி நடந்துகொள்கின்றானோ அதற்கேற்ப நான் நடந்து கொள்கின்றேன். (4)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி எண் : 6856, முஸ்லிம் எண் : 4832.

அல்லாஹ்வை தயாளனாக கருணை உள்ளவனாக நன்மை செய்தவனாக நம்மீது அன்பு வைப்பவனாக இப்படியாக புகழ்ந்து உயர்வான எண்ணங்களை அல்லாஹ்வின் மீது வைத்துக் கொண்டு செல்வோம். அதற்கேற்ப அல்லாஹ் காரியங்களை நடத்திக் கொடுத்து கொண்டே இருப்பான்.

சகோதரர்களே! அல்லாஹ், நம்முடைய தவறான அனுமானங்களை தவறான எண்ணங்களை உள்ளத்திலிருந்து கலையைச் சொல்கின்றான், எடுக்கச் சொல்கின்றான். இப்படி அல்லாஹ்வின் மீது கெட்ட எண்ணம் வைக்காதே என்று ரப்பு சொல்கின்றான்:

كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَكُمْ وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ وَعَسَى أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ

(நம்பிக்கையாளர்களே!) போர் செய்வது உங்களுக்கு வெறுப்பாய் இருந்தும் (உங்களையும் உங்கள் மார்க்கத்தையும் காப்பதற்காக) அது உங்கள்மீது கடமையாக்கப்பட்டிருக்கிறது. ஒன்று உங்களுக்கு மிக நன்மையாக இருந்தும் அதை நீங்கள் வெறுக்கக்கூடும். ஒன்று உங்களுக்குத் தீங்காக இருந்தும் அதை நீங்கள் விரும்பக்கூடும். (அவை உங்களுக்கு நன்மை அளிக்குமா தீமையளிக்குமா என்பதை) அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள். (அல்குர்ஆன் 2 : 216)

ஒரு முஃமினை பொருத்தவரை தக்பீர் கட்டி,சுஜூத் செய்து அல்லாஹ்விடத்தில் தனது காரியத்தை ஒப்படைத்து விட்டால், எனது காரியங்களை நான் அல்லாஹ்விடத்தில் ஒப்படைத்துவிட்டேன். இப்படி ஒரு வார்த்தையை முஃமீன் சொன்னதற்குப் பிறகு அவனுக்கு கிடைத்தது தீமை என்றும் அவனுக்கு கிடைக்காமல் போனது நன்மை என்றும் எண்ணினால் அவன் அல்லாஹ்விடம் அவனது காரியத்தை ஒப்படைக்கவில்லை.

அல்லாஹ்விடம் ஒரு காரியத்தை ஒப்படைத்ததற்கு பிறகு அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டேன்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்சொன்னார்கள்:

عَجَبًا لِلْمُؤْمِنِ لَا يَقْضِي اللَّهُ لَهُ شَيْئًا إِلَّا كَانَ خَيْرًا لَهُ

முஃமினை நினைத்து எவ்வளவு ஆச்சரியப்படுகிறேன். அல்லாஹ் அவனுக்கு எதை விதித்தாலும் சரி,அது அவனுக்கு நன்மை ஆகிவிடுகிறது.

சோதனைகளா?பொறுமையாக இருந்து நன்மைகளை பெற்றுக் கொள்கின்றான். நிஃமத்துகளா?அல்லாஹ்விடம் நன்றி செலுத்தி நன்மைகளை பெற்றுக் கொள்கின்றான்.

ஆகவே ஒரு முஃமினை பொருத்தவரை அவன் ஸப்ராக இருந்தாலும் அவனுக்கு நன்மை. நன்றி செலுத்தினாலும் அவனுக்கு நன்மை. கஷ்டம் வந்தாலும் அது அவனுக்கு நன்மையாக விடுகின்றது. மகிழ்ச்சி வந்தாலும் அது அவனுக்கு லாபகரமானதாக ஆகிவிடுகிறது. அது அவனுடைய ஈமானை பொறுத்து.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மத்,எண் : 1940.

ஒரு சம்பவத்தைப் பாருங்கள். கிள்ரு அலைஹிஸ்ஸலாம், மூஸா அலைஹிஸ்ஸலாம்அவர்களும் பயணம் செய்யும் பொழுது,அந்தக் குழந்தையை கிள்ரு அலைஹிஸ்ஸலாம்கொன்று விட்டார்கள். உடனே மூஸா அலைஹிஸ்ஸலாம் கேட்டார்கள்;

وَأَمَّا الْغُلَامُ فَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ فَخَشِينَا أَنْ يُرْهِقَهُمَا طُغْيَانًا وَكُفْرًا (80) فَأَرَدْنَا أَنْ يُبْدِلَهُمَا رَبُّهُمَا خَيْرًا مِنْهُ زَكَاةً وَأَقْرَبَ رُحْمًا

வசனத்தின் கருத்து : ஒரு தூய்மையான குற்றமற்ற ஒரு குழந்தையை கொன்றீர்களா? என்று வெளிப்படையாக பார்க்கும் பொழுது அப்படி தெரிகின்றது. அந்த குழந்தையுடைய தாய், தந்தையும் கவலைப்பட்டார்கள்.ஆனால் அல்லாஹ்விற்கு தெரியும். அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

இந்தக் குழந்தையினுடைய தாய் தந்தை முஃமீனான நல்லவர்களாக இருந்தார்கள். இந்தக் குழந்தை அவன் பெரியவனாக வளரும் வரை வாழ்வானேயானால் தன்னுடைய தாய் தந்தையரை இறை நிராகரிப்பில் தள்ளி விடுவான். அநியாயத்தில் தள்ளிவிடுவான். எனவே அவர்களுக்கு நாங்கள் வேறு குழந்தையை கொடுக்க நாடினோம். எனவே இதை கொல்லும்படி நான் கட்டளையிட்டேன். (அல்குர்ஆன் 18:80,81)

என்று அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அங்கே நமக்கு விளக்கிக் காட்டுகின்றான்.

வெளிப்படையாக பார்க்கும்போது எப்படி இருந்தது? குழந்தையைக் கொன்றது பெற்றோருக்கும் கவலையாக இருந்தது. ஆனால் அல்லாஹ்வுடைய இல்மில் அதுதான் நன்மையானது.

இப்படியாக நூற்றுக்கணக்கான சம்பவங்களை நாம் பார்க்கலாம். அதன் ஆரம்பம் நடக்கும் பொழுது அது பிரச்சினையாக அல்லது தீமையாக நமக்குத் தெரியலாம்‌. அதனுடைய முடிவு நமக்கு நன்மையாக இருக்கும், அல்லாஹ்வுடைய உதவியை கொண்டு நாம் பொறுமையாக இருக்கும் பொழுது.

இப்படியாக அஹ்லாக்குகள், ஈமானிய ஒழுக்கங்களை நம் வாழ்க்கையில் கடைபிடிக்கும் பொழுது நம்முடைய சோதனைகள் இலகுவாகிவிடும். அந்த சோதனை அழகிய முறையில் அல்லாஹ்வுடைய பொறுமையைக் கொண்டு மறுமையின் வெற்றியைக் கொண்டு எப்படி கடக்க முடியும் என்பதற்கு உண்டான வழிகாட்டுதல்களை அல்லாஹ் தருவான்.

அல்லாஹு தஆலா எந்த சோதனையிலும் நம்முடைய ஈமான் தடுமாறி விடாமல், நம்முடைய யக்கீன் பலவீனப்பட்டு விடாமல், நமக்கும் அல்லாஹ்விற்கும் இடையில் உண்டான தொடர்பு அறுந்து விடாமல் நம்மை பாதுகாத்துக் கொள்வானாக!

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா அல்லாஹ் விரும்புகின்ற அந்த உயர்ந்த பண்பு உடையவர்களில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக! குழப்பங்களை விட்டும், ஈமானிய தடுமாற்றங்களை விட்டும், அமல்களின் பலவீனத்தை விட்டும், அல்லாஹ்வுடைய தொடர்பு அறுந்து விடாமல் அல்லாஹ் என்னையும், உங்களையும் பாதுகாத்து அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَبْدِ الْعَزِيزِ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ حَدَّثَنَا قُرَيْشٌ هُوَ ابْنُ حَيَّانَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَدَخَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي سَيْفٍ الْقَيْنِ وَكَانَ ظِئْرًا لِإِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَام فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِبْرَاهِيمَ فَقَبَّلَهُ وَشَمَّهُ ثُمَّ دَخَلْنَا عَلَيْهِ بَعْدَ ذَلِكَ وَإِبْرَاهِيمُ يَجُودُ بِنَفْسِهِ فَجَعَلَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَذْرِفَانِ فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ يَا ابْنَ عَوْفٍ إِنَّهَا رَحْمَةٌ ثُمَّ أَتْبَعَهَا بِأُخْرَى فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْعَيْنَ تَدْمَعُ وَالْقَلْبَ يَحْزَنُ وَلَا نَقُولُ إِلَّا مَا يَرْضَى رَبُّنَا وَإِنَّا بِفِرَاقِكَ يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونُونَ (صحيح البخاري 1220 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً قَالَ الْأَنْبِيَاءُ ثُمَّ الصَّالِحُونَ ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ مِنْ النَّاسِ يُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ دِينِهِ فَإِنْ كَانَ فِي دِينِهِ صَلَابَةٌ زِيدَ فِي بَلَائِهِ وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ خُفِّفَ عَنْهُ وَمَا يَزَالُ الْبَلَاءُ بِالْعَبْدِ حَتَّى يَمْشِيَ عَلَى ظَهْرِ الْأَرْضِ لَيْسَ عَلَيْهِ خَطِيئَةٌ (مسند أحمد 1400 -)

குறிப்பு 3)

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي سِنَانٍ، قَالَ: دَفَنْتُ ابْنِي سِنَانًا، وَأَبُو طَلْحَةَ الخَوْلَانِيُّ جَالِسٌ عَلَى شَفِيرِ القَبْرِ، فَلَمَّا أَرَدْتُ الخُرُوجَ أَخَذَ بِيَدِي، فَقَالَ: أَلَا أُبَشِّرُكَ يَا أَبَا سِنَانٍ؟ قُلْتُ: بَلَى، فَقَالَ: حَدَّثَنِي الضَّحَّاكُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِذَا مَاتَ وَلَدُ العَبْدِ قَالَ اللَّهُ لِمَلَائِكَتِهِ: قَبَضْتُمْ وَلَدَ عَبْدِي، فَيَقُولُونَ: نَعَمْ، فَيَقُولُ: قَبَضْتُمْ ثَمَرَةَ فُؤَادِهِ، فَيَقُولُونَ: نَعَمْ، فَيَقُولُ: مَاذَا قَالَ عَبْدِي؟ فَيَقُولُونَ: حَمِدَكَ وَاسْتَرْجَعَ، فَيَقُولُ اللَّهُ: ابْنُوا لِعَبْدِي بَيْتًا فِي الجَنَّةِ، وَسَمُّوهُ بَيْتَ الحَمْدِ ": هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ، وَاسْمُ أَبِي سِنَانٍ عِيسَى بْنِ سِنَانٍ (سنن الترمذي 1021 -)حكم الألباني] : حسن

குறிப்பு 4)

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا الْأَعْمَشُ سَمِعْتُ أَبَا صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُ تَعَالَى أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ ذَكَرَنِي فِي مَلَإٍ ذَكَرْتُهُ فِي مَلَإٍ خَيْرٍ مِنْهُمْ وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً (صحيح البخاري 6856 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/