HOME      Lecture      பேச்சை குறைப்போம்! நாவைப் பேணுவோம்! | Tamil Bayan - 684   
 

பேச்சை குறைப்போம்! நாவைப் பேணுவோம்! | Tamil Bayan - 684

           

பேச்சை குறைப்போம்! நாவைப் பேணுவோம்! | Tamil Bayan - 684


பேச்சை குறைப்போம்! நாவைப் பேணுவோம்!
 
மார்க்க சொற்பொழிவு தலைப்பு : பேச்சை குறைப்போம்! நாவைப் பேணுவோம்!
 
வரிசை : 684
 
இடம் : மஸ்ஜித் இக்லாஸ், பெரம்பூர்
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 15-07-2021 | 05-12-144
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இந்த தர்பியா நிகழ்ச்சிக்கு நாமெல்லாம் வருகை தந்திருக்கின்றோம். நம்முடைய நோக்கம், இங்கே கேட்கக்கூடிய ஒவ்வொரு விஷயத்தையும் நாம் எப்படி அமலில் கொண்டு வருவது, அந்த நோக்கத்தோடு இங்கே நாம் வந்தால் இன்ஷா அல்லாஹ் அது நமக்கு பயனுள்ளதாக இருக்கும். 
 
சென்ற வாரம் கேட்டதிலிருந்து இந்த வாரம் வரை. சென்ற வாரம் கேட்டு அதிலுள்ள நல்ல விஷயங்களை எந்த அளவு நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையிலே செயல்படுத்தினோம் என்ற முஹாஸபா என்ற சுயபரிசோதனை இருக்க வேண்டும். 
 
கேட்பது அதிகமாக இருக்கிறது. ஆனால், அதன் மூலமாக செயல்படுவது குறைவாக இருந்தால் அது பயனுள்ள ஒன்றல்ல. பொதுவாகவே உபதேசங்களைக் கேட்கும்போது, ஹதீஸ்களை கேட்கும்போது, ஆயத்துக்களை கேட்கும்போது, அதை நாம் உடனே எடுத்து அமல் செய்கின்ற எண்ணத்திலே கேட்க வேண்டும். அதை அமல் செய்கிறோமா? என்று சுய பரிசோதனையும் நாம் செய்ய வேண்டும். 
 
நம்முடைய ஸலஃபுகளை பற்றி வருகிறது; காழி அபீ யூசுஃப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்வார்கள்: நாங்கள் 10 ஹதீஸ்களை மனப்பாடம் செய்து கொண்டால் அந்த ஹதீஸ்களை வாழ்க்கையில் அமல்படுத்தியதற்கு பிறகுதான் அடுத்து ஹதீஸ்களை மனப்பாடம் செய்வோம் என்று. 
 
இன்று, நாம் கேட்கக் கூடிய விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன. எடுத்து செயல்படுவது குறைவாக இருக்கிறது. ஆகவே, குறிப்பாக இந்த தர்பியா தஸ்கியா உடைய மஜ்லிஸ் உடைய நோக்கம், மார்க்க அறிஞர்களுக்கு அருகில் இருந்து நல்ல விஷயங்களை நாம் உணர்வோடு கேட்பது. பயத்தோடு கேட்பது. 
 
இதுநாள்வரை இந்த விஷயம் எனக்கு தவறிவிட்டதே! ஒரு விஷயத்தை கேட்கும்போது இதுநாள் வரை இந்த விஷயம் எனக்கு தெரிந்திருக்கிறதா? தெரிந்த விஷயமா? அப்படி தெரிந்த விஷயமாக இருந்தால் நான் இதன்படி அமல் செய்து இருக்கின்றேனா? 
 
ஏனென்றால், எந்த ஒரு விஷயம் தெரிந்திருந்து அதன்படி அமல் செய்யவில்லையோ அது தெரியாத ஒன்றை போன்றுதான். அடுத்ததாக, இங்கே கேட்கும்போது அந்த விஷயம் நமக்கு தெரிந்த விஷயமாக இருந்தாலும் புதிதாக கேட்பதைப் போன்று, அந்த ஒரு உணர்வோடு நாம் கேட்க வேண்டும்.
 
நம்மோடு நம்முடைய உஸ்தாது, ஷேக் அவர்கள் வந்து இருக்கிறார்கள். இன் ஷா அல்லாஹ் அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களை நாம் கேட்டு பயன்பெற வேண்டி இருக்கின்ற காரணத்தால் என்னுடைய இந்த அமர்வை மிக சுருக்கமாக முடித்துக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.
 
நம்முடைய அன்றாட ஒவ்வொரு நாளிலும் நாம்  பேசுவது அதிகமாக இருக்கிறதா? அல்லது அமைதியாக இருப்பது அதிகமாக இருக்கிறதா? நம்முடைய பேச்சு அதிகமா? அல்லது நம்முடைய அமைதி அதிகமா? 
 
இது ஒரு கேள்வி. என்ன சொல்லலாம்? நம்முடைய பேச்சுதான் அதிகம் என்று சொல்வார்கள். யாருடைய பேச்சு அதிகமாக இருக்குமோ அவர்களுடைய தவறுகளும் அதிகமாக இருக்கும் என்று 
 
நமக்கு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டுதல் அதற்கு முன்பு குர்ஆனுடைய வழிகாட்டுதல் இருக்கிறது.
 
وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَ
 
இன்னும், அவர்கள் வீணான விஷயங்களை விட்டு விலகி இருப்பார்கள். (அல்குர்ஆன் 23 : 3)
 
முஃமின்களுடைய உயர்ந்த பண்புகளிலே ஒன்று, வீணான பேச்சுக்கள். அதாவது எந்த பேச்சால் தீனிலும் பிரயோஜனம் இல்லை, துன்யாவிலும் பிரயோஜனம் இல்லையோ அந்த பேச்சுக்களை முஃமின்கள் விலகி இருப்பார்கள். 
 
அறிஞர் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹ் அவர்கள் இந்த வீணான பேச்சுகளை பற்றி விளக்கம் எழுதும் பொழுது ஒரு உதாரணம் எழுதுகிறார்கள். 
 
உதாரணத்திற்கு ஒருத்தரை பார்த்து ரமலான் மாதத்திலே நீ நோன்பாளியா? என்று கேட்டால் அது வீணான பேச்சு. அவர் நோயாளியாக இருக்க நாம் நோன்பு இல்லாமல் இருக்கலாம். உங்களுக்காக வேண்டி என்ன செய்வது என்று கேட்டு விட்டாரே என்று தான் நோன்பு வைத்து இருக்கிறேன் என்று சொல்லி விட்டால் அவரை பொய் சொல்லி அதற்கு நாம் ஆளாகி விட்டோம். 
 
இல்லை நான் நோன்பாளி என்று சொன்னால் அது அவரை ஒருவேளை பெருமைக்கு தூண்டி விட்டால்!
 
இப்படியாக வீண்பேச்சுடைய விபரீதங்களை பற்றி மிகத் தெளிவாக பல விஷயங்களை குறிப்பிடுகிறார். உதாரணத்திற்கு ஒருவரை நாம் பார்க்கிறோம். நீண்டநாளாக அவரை பார்க்கவில்லை. நல்லா இருக்கீங்களா? சௌக்கியமா இருக்கீங்களா? நீண்ட நாளாக பார்க்க முடியவில்லையே? 
 
அவர் சொல்கிறார்: நான் வெளியூர் பயணத்திற்கு போயிருந்தேன். அல்ஹம்து லில்லாஹ்! உங்க பயணம் நல்லபடியாக அமைந்ததா? என்று கேட்பதே போதுமானது. 
 
எங்க போனீங்க? எந்த ஊருக்கு போனீங்க? எத்தனை நாள் தங்குனீங்க? அங்க யாரை பார்த்தீங்க? அங்கு எந்த ஹோட்டலில் சாப்பிட்டீங்க? எந்த லாட்ஜிலே தங்குனீங்க? அங்கே என்ன வாங்கினீங்க? இதெல்லாம் தேவையா? 
 
இன்று, நம்முடைய வாழ்க்கையிலே நாம் எடுத்துப் பார்த்தால் நாம் பேசக்கூடிய பேச்சுகளில் பெரும்பாலும் பேசுகின்ற நமக்கும் பிரயோஜனமில்லை, யாரிடத்தில் அந்த கேள்விகளை கேட்கின்றோமோ அவருக்கும் பிரயோஜனமில்லை. 
 
அல்லாஹ்வுடைய அடியார்களே! ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொன்னார்கள்:
 
وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ
 
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவராக ஒருவர் இருப்பாரேயானால் அவர் பேசினால் நல்லதைப் பேசட்டும். அல்லது அமைதியாக இருக்கட்டும்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6138.
 
நன்மையை ஏவக் கூடிய விஷயத்தை சொல்லட்டும். அல்லாஹ்வுடைய திக்ரை நினைவூட்டட்டும். தனது சகோதரனுக்கு தெரியாத ஒரு ஹலால் ஹராம் உடைய விஷயத்தை கற்றுக் கொடுக்கட்டும். மார்க்கத்தினுடைய ஒரு இபாதத்தினுடைய நன்மையை அவருக்கு எடுத்துச் சொல்லட்டும். அல்லாஹ்வைப் பற்றிய மறுமையைப் பற்றிய நல்ல நினைவூட்டலை அவருக்கு கொடுக்கட்டும். 
 
وَقُوْلُوْا لِلنَّاسِ حُسْنًا
 
மக்களிடம் அழகியதைக் கூறுங்கள். (அல்குர்ஆன் 2 : 83)
 
அழகிய வார்த்தைகள் என்றால் என்ன? எந்த வார்த்தை நம்முடைய உள்ளங்களை அல்லாஹ்வின் பக்கம் திருப்புமோ, எந்த வார்த்தையால் நம்முடைய ஈமானும், நம்முடைய நற்குணங்களும் அதிகரிக்குமோ அது நல்ல வார்த்தை. 
 
அந்த நல்ல வார்த்தைகளை சொல்லட்டும். ஆறுதலான வார்த்தைகளை சொல்லட்டும். சில பேர் பாருங்க; ஹாஸ்பிடலுக்கு போவாங்க. நோயாளியை சந்திப்பார்கள். போகும்போது நோயாளியை சந்திப்பது சுன்னத் என்று சொல்வார்கள். அங்கே போய் ஏதாவது சுன்னத் செய்வாங்களா? உங்களுக்கு எப்படி ஆச்சு? 
 
இவர் பெரிய டாக்டர் மாதிரி, ரிப்போர்ட் கேட்கிற மாதிரி. அவரே பாவம், எத்தனை பேரிடம் இதை சொல்லி, டாக்டர் கிட்டயே சொல்லி அலுத்து போய் உட்கார்ந்து இருப்பார். 
 
அவரிடம் போய் என்ன ஆச்சு? ஏது ஆச்சு? அதுக்கு அப்புறமா, உங்களுக்கு ஹாஸ்பிடல் பில் எவ்வளவு வருது? இவரா கட்ட போறாரு? உண்மையிலேயே கட்டுர எண்ணம் இருந்து கேட்டால் தப்பு கிடையாது. அப்படி இல்லாமல் இவ்வளவு காஸ்ட்லியா? அப்படியா? என்ன கேள்வி இது? 
 
அங்கு நோயாளியை பார்க்கும்போது,
 
لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ ‏
 
என்ற துஆவை ஏழு தடவை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லியிருக்கிறார்கள். 
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3616.
 
அதெல்லாம் மறந்து விடுவோம். மறந்துவிட்டு அங்கே போய் நம்ம அவருக்கு ஒரு ட்ரீட்மென்ட் சொல்லிக்கொண்டு இருப்போம். நம்ம ஒரு MD டாக்டர் மாதிரி, அவருக்கு இதை செய்யுங்க, அதை செய்யாதிங்க, அப்படி இப்படி சொல்லி நம்ம அவருக்கு ஒரு ட்ரீட்மென்ட் பண்ணிக்கிட்டு இருப்போம்.
 
இப்படியாக, நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய வீணான பேச்சுக்கள், வீணான விசாரணைகள், வீணான கேள்விகள், இதில் நம்முடைய நேரங்கள் வீணாகுவதை பார்க்கிறோம்.
 
உக்பா இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஒரு ஹதீசை பாருங்கள்! ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெற்றிக்குரிய மூன்று விஷயங்களை சொல்லித் தருகிறார்கள். 
 
‏ أَمْسِكْ عَلَيْكَ لِسَانَكَ
 
உன்னுடைய நாவை நீ உனது கட்டுப்பாட்டில் வை! (1)
 
அறிவிப்பாளர் : உக்பா இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2406.
 
யாரை எடுத்தாலும் எடுத்தெறிந்து பேசுவது. உள்ளங்களை காயப்படுத்துற மாதிரி பேசுறது.  மனைவியா இருந்தா கூட, பிள்ளைகளாய் இருந்தால் கூட, அவர்களை காயப்படுத்துவற்கு அனுமதி இருக்கா? தன்னிடத்திலே வேலை செய்யக்கூடிய வேலை ஆளா இருந்தாலும் கூட அவரை காயப்படுத்துவதற்கு அனுமதி இருக்கா? கண்டிப்பது என்பது வேறு, காயப்படுத்துவது என்பது வேறு. அழகிய முறையில் உரையாடல் செய்வது என்பது வேறு. வீண் பேச்சுகள் என்பது வேறு. 
 
அதுபோன்று இந்த வீண் பேச்சுகளிலே வீண் விதண்டா வாதங்கள். சம்பந்தமே இருக்காது. அதுவும் குறிப்பா டீக்கடைகளில் ரெஸ்டாரென்ட் இந்த மாதிரி இடங்களில் நின்று கொண்டு அவர் சொல்வார்; இந்த மாதிரி ஒரு அரசாங்கம் அல்லது இந்த மாதிரி ஒரு செய்தி சொல்லியிருக்கிறது. அப்படி இல்லைங்க இப்படி என்று இவர் சொல்வார். இன்னொருத்தர் வந்து அப்படி இல்லைங்க இப்படி என்பார்.   மூன்று பேரும் அதை சொல்லி... அங்கே பெரிய ஒரு விவாத மேடையே நடந்து கொண்டே இருக்கும்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِه عِلْمٌ‌ 
 
உங்களுக்கு அறிவு இல்லாததை பற்றி நீங்கள் பின்தொடர்கிறாதீர்கள்! (அல்குர்ஆன் 17 : 36)
 
இந்த விவாதத்தில் யாருக்கு என்ன நன்மை? ஒருத்தர் சொல்கிறாரா, இன்னொருத்தர் மறுக்கிறாரா? இவர் விட்டுவிட வேண்டும். சரி அவ்வளவுதான்! இல்லன்னு சொல்லி திரும்ப சண்டைக்கு போறது. அது என்ன மார்க்க விஷயமா?
 
உலக விஷயங்களை பொருத்தவரை, அதில் நம்முடைய விவாதங்களை முற்றிலுமாக ஜீரோவிலே கொண்டு வந்துவிட வேண்டும்! முற்றிலுமாக தேவையே கிடையாது. 
 
மார்க்க விஷயமாக இருக்குமேயானால், அவர் ஒரு ஆதாரத்தை, சரியான ஆதாரத்தை பயன்படுத்தினாலோ அல்லது பலவீனமான ஆதாரத்தை சரி கண்டாலோ அல்லது ஒரு ஹராமான விஷயத்தை அவர் செய்கிறார் என்றாலோ அல்லது ஒருவரை அவர் குறை கூறினாலோ அப்போது நாம் அந்த அளவுக்கு அவருக்கு எடுத்து சொல்வதிலே, விவாதம் செய்வதிலே, கருத்து பரிமாற்றம் கொள்வதிலே நமக்கு நன்மை இருக்கிறது. இல்மை பரிமாறிக்கொள்வது அது ஒரு ஜிஹாதுக்கு சமமான ஒன்று. அதுவும் ஒரு சதக்கா. 
 
துன்யா விஷயத்தில் நான் அந்த ரெஸ்டாரண்டுக்கு போனேன், சூப்பராக இருந்தது. அது என்னங்க ரெஸ்டாரன்ட்? அங்கே இருக்கு பாருங்க, அந்த ரெஸ்டாரண்ட்க்கு வாங்க! அவர் சொன்னாரா? சரி விட்டுவிட வேண்டியதுதான். 
 
இப்படி எத்தனை விஷயங்கள் நம்முடைய வாழ்க்கையிலே வீணான விஷயங்களாகவே கழிகின்றன. அற்பமான விஷயங்கள்! அற்பமான பேச்சுகள்! 
 
ஒருத்தருடைய ஆடையைப் பற்றி, அவருடைய வாகனத்தை பற்றி, அவருடைய சம்பாத்தியத்தைப் பற்றி, அவருடைய குடும்பத்தை பற்றி, அதில் இவருக்கும் அவருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லையோ அப்படிப்பட்ட விஷயங்களை விவாதத்தில் கொண்டுவருவது. 
 
இப்படியாக நம்முடைய வாழ்க்கையில் இந்த வீண்பேச்சுகள் இது பெரும்பாலும் ஒரு பெரிய நேரத்தை எடுத்து விடுகின்ற காரணத்தால், அங்கே திக்ருக்கு இடம் இல்லாமல் போய்விட்டது. குர்ஆனை ஓதுவதற்கு இடம் இல்லாமல் போய்விட்டது. நல்ல புத்தகங்களை வாசிப்பதற்கு நேரமில்லாமல் போய்விட்டது. 
 
ஏனென்றால், நேரங்களை அதிகமாக இந்த வீண் பேச்சுகள் எடுத்து விட்டது. சில பேர் இருக்கிறார்கள்; யாருக்காவது போன் போட்டாவது அறுப்போம் என்று சொல்லி, தன்னுடைய சொந்த கதை சோக கதை எல்லாம் யார்கிட்டயாவது சொல்லணும் என்று பேசுவது.
 
அல்லாஹ்விடம் சொல்லுங்க. ரப்பு கிட்ட சொல்லுங்க! உங்கள் கவலைகளை  கேட்பதற்கு அவன் அவ்வளவு ஆர்வத்தோடு இருக்கிறான். அல்லாஹ்விடம் சொல்லுங்க. பிரச்சனையை அல்லாஹ்வுக்கு முன்னாடி வைங்க! 
 
யார்கிட்டயாவது சொல்லணுமா? ரொம்ப மனசு கஷ்டமா இருக்கா? யாராவது உண்மையா நமக்குன்னு துஆ செய்கிற ஒருத்தர் கிட்ட, கொஞ்சம் மனசு கஷ்டமா இருக்கு, எனக்காக துவா செய்யுங்கள் என்று அந்த அளவு சொல்லலாம். அறவே சொல்லக் கூடாது என்பது கிடையாது. 
 
ஆனால், அவரால் என்ன செய்துவிட முடியும்? துஆவை தவிர, நல்ல ஆறுதலான வார்த்தைகளை கூறுவதைத் தவிர. அப்போ யார் அந்த மாதிரி செய்வார்களோ அவர்களிடம்தான் அதையும் சொல்லனும்.  
 
தமிழிலே சொல்வார்கள்: எரியுற நெருப்புல எண்ணெய்ய தூக்கி ஊத்துற மாதிரி என்று. அந்த மாதிரி மக்கள் கிட்ட தான் பெரும்பாலும் இன்று மக்கள் பிரச்சனையை வைக்கிறார்கள். அதனாலே கணவன் மனைவி பிரச்சினை, பெற்றோர் பிரச்சினை, பிள்ளைகள் பிரச்சினை, சகோதரர்கள் பிரச்சினைகளை இன்று மக்கள் பெரும்பாலும் தூண்டி விடக் கூடியவர்கள் அதிகம். 
 
இணக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் குறைவு. அக்கறை காட்டக் கூடியவர்கள், நல்ல வார்த்தைகளைக் கூறி ஆறுதல் சொல்லக் கூடியவர்கள் குறைவு. நம்மை ஏசக் கூடியவர்கள் அதிகம். 
 
ஆகவே, எந்த அளவு நம்முடைய பேச்சுகளை குறைத்து கொள்கிறோமோ, நம்முடைய நேரங்கள் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அந்த நேரங்களில் நாம் திக்ரு செய்யலாம். ஒரு திக்ருக்கு எவ்வளவு நன்மை இருக்கு!
 
كَلِمَتانِ خَفِيفَتانِ علَى اللِّسانِ، ثَقِيلَتانِ في المِيزانِ، حَبِيبَتانِ إلى الرَّحْمَنِ: سُبْحانَ اللَّهِ العَظِيمِ، سُبْحانَ اللَّهِ وبِحَمْدِهِ
 
சுபஹானல்லாஹி வபிஹம்திஹி என்று காலையில் நூறு தடவை சொன்னால் கடல் நுரை போன்ற பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விடுகிறது. 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6406.
 
அதிகப்படியாக தேவை 3 நிமிடம் தான் இதற்கு ஆகும். நூறு தடவை 'சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' என்று பொறுமையா சொல்றது. 
 
யோசித்துப் பாருங்கள்! திலாவத்துல் குர்ஆன், ஹதீஸ்கள் நூல்கள் என்று எவ்வளவோ நல்ல படிக்க வேண்டி இருக்கு.
 
ஆகவே, நம்முடைய இந்த தர்பியாவினுடைய முதல் அமர்வில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய  விஷயம், நம்முடைய பேச்சுகளை நாம் நிறுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்; அளக்க கூடியவர்களாக இருக்க வேண்டும்.
 
مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ‏
 
பேச்சில் எதையும் அவன் பேச மாட்டான், கண்காணிப்பாளர், பிரசன்னமாகி இருப்பவர் (ஆகிய இரு வானவர்கள்) அவனிடம் இருந்தே தவிர. (அல்குர்ஆன் 50 : 18)
 
இன்று, நாம் இரவில் தூங்கும்போது சிந்தித்துப் பார்த்தால் இத்தனை வாக்கியங்கள் தான் இத்தனை விஷயங்களைத்தான் நாம் பேசி இருக்கிறோம் என்ற அளவுக்கு இருக்க வேண்டும். 
 
என்னவோ பேசி இருப்பேன், எனக்கு எங்கே ஞாபகம் இருக்கும்! அப்படி உளரக் கூடியவர்களாக இருக்க கூடாது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! 
 
அப்படி நான் தேடும்போது இன் ஷா அல்லாஹ் அல்லாஹ்வை திக்ரு செய்வதற்கு நேரம் கிடைக்கும். குர்ஆனை ஓதுவதற்கு நேரம் கிடைக்கும். ஹதீஸ்களை படிப்பதற்கு, மனப்பாடம் செய்வதற்கு, ஆயத்துக்களை மனப்பாடம் செய்வதற்கு நேரம் கிடைக்கும்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் நம்முடைய நாவை அல்லாஹ்வுடைய  திக்ரிலும், அல்லாஹ்வுடைய நினைவிலும், திலாவத்துல் குர்ஆனிலும் ஈடுபட வைத்து, நல்ல விஷயங்களை பேசுவதிலே ஈடுபட வைத்து, நன்மைக்கு காரணமாக ஆக்கி அருள்வானாக! 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
قلتُ: يا رسولَ اللَّهِ ما النَّجاةُ؟ قال: أمسِكْ عليْكَ لسانَكَ، وليسعْكَ بيتُكَ، وابْكِ على خطيئتِكَ الراوي : عقبة بن عامر | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي الصفحة أو الرقم: 2406 | خلاصة حكم المحدث : صحيح
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/