HOME      Khutba      அளவுகோல்! | Tamil Bayan - 685   
 

அளவுகோல்! | Tamil Bayan - 685

           

அளவுகோல்! | Tamil Bayan - 685


அளவுகோல்!

ஜுமுஆ குத்பா தலைப்பு : அளவுகோல்!

வரிசை : 685

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 30-07-2021 | 20-12-1442

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கு முன்னால் அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்துஅல்லாஹ்வின் தூதர் மீதும் அந்தத் தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக,

உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை நினைவூட்டியவனாக, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றி வாழுமாறு உபதேசம் செய்தவனாக, அல்லாஹ் நமக்கு என்ன ஷரிஆ சட்ட வரைமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றானோ அந்த ஷரிஆ சட்டங்களை மீறாமல், அல்லாஹ்வுடைய பயத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நல்லோர்களுடைய கூட்டத்தில் என்னையும் உங்களையும் அல்லாஹ் சேர்த்து அருள் புரிவானாக!

இம்மையிலும் வெற்றி பெற்று மறுமையிலும் நல்லோர்களின் கூட்டத்தில் அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இன்னும் அவனுடைய தூதர் அவர்களுக்கென்று ஒரு அளவுகோல் இருக்கின்றது.

அந்த அளவுகோலை கொண்டு தான் மனிதர்களை அவர்கள் அளப்பார்கள்‌;நிறுப்பார்கள். நாம் மனிதர்களை அளப்பதற்கு என்ன அளவுகோல் வைத்திருக்கின்றோமோ அந்த அளவுகோல் அல்ல. இது அல்லாஹ்வுடைய ரஸுலுடைய அளவுகோல்.

நாம் ஒரு மனிதனின் செல்வத்தை வைத்து அவனுடைய மதிப்பை எடை போடுவோம். அல்லது ஒரு மனிதனுடைய படிப்பை வைத்து, அல்லது ஒரு மனிதனுடைய உயர்ந்த குடும்ப பின்னணியை வைத்து இப்படியாக முற்றிலும் உலகத்தை மட்டுமே அளவுகோலாக வைத்து மனிதர்களை எடை போடக் கூடியவர்கள் உலக மக்கள்.

ஆனால்,அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் அவர்களுடைய அளவுகோல் இது அல்ல. அவர்கள் முஃமின்களுக்கு கற்றுக்கொடுத்த அளவுகோல் இந்த அளவுகோல் அல்ல.

ஒரு சமயம் ரசூலுல்லாஹ் மஸ்ஜிதுன் நபவியில் மக்களுக்கு மார்க்க விளக்கங்களை சொல்லித் தந்து கொண்டிருந்தார்கள். அப்போது அந்த மஸ்ஜிதை கடந்து ஒரு மனிதர் செல்கின்றார். ஒரு  பரம ஏழையாக அவருடைய தோற்றம் சாதாரணமாக இருந்தது.

ரசூலுல்லாஹ் அந்த மனிதரை நோக்கி பார்க்க சொல்லிவிட்டு, பிறகு தோழர்கள் இடத்தில் கேட்டார்கள்;இந்த மனிதரை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று.

தோழர்கள் சொன்னார்கள்: அல்லாஹ்வின் தூதரே!இவர் யாரிடத்தில் ஏதும் கேட்டால் யாரும் எதுவும் கொடுக்க மாட்டார்கள்.

இவர் யாருக்காவது ஏதாவது சிபாரிசு செய்தால் அந்த சிபாரிசை ஏற்க மாட்டார்கள். இவர் தனக்கோ அல்லது தன்னுடைய குடும்பத்தில் ஒருவருக்கோ பெண் கேட்டுச் சென்றால் பெண் கொடுக்க மாட்டார்கள். இதுதான் இவருடைய சமூக தரம் என்பதாக தோழர்கள் கூறினார்கள்.

ரசூலுல்லாஹ் அமைதியாகி விட்டார்கள். பிறகு சிறிது நேரம் கழித்து இன்னொரு மனிதர் அந்த வழியாக செல்கின்றார். ரசூலுல்லாஹ் தன்னுடைய தோழர்களைப் பார்த்து கேட்கின்றார்கள்;இந்த மனிதரைப் பாருங்கள் என்று. அந்த மனிதர் சென்றதற்குப் பிறகு தோழர்கள் இடத்தில் கேட்கின்றார்கள்; இவரைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? என்று.

அல்லாஹ்வின் தூதரே! இவர் கேட்டால் கொடுத்துவிடுவார்கள். இவர் சிபாரிசு செய்தால் ஏற்றுக் கொள்வார்கள்.

இவர் தனக்கோ அல்லது தன்னுடைய குடும்பத்தில் எவருக்கோ பெண் கேட்டுச் சென்றால் உடனே கொடுத்து விடுவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் தன்னுடைய ஸஹாபாக்களுக்குஉண்மையை உணர்த்தினார்கள் புரிய வைத்தார்கள்.

(இப்படித்தான் எதார்த்த நிகழ்வுகளை வைத்து வாழ்க்கையை தத்ரூபமாக மறுமையை பற்றி அல்லாஹ்வுடைய தூதர் ஸஹாபாக்களுக்கு உணர வைத்தார்கள்.)

சொன்னார்கள்; தோழர்களே!அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும்விட) இந்த ஏழையே மேலானவர் எனக் கூறினார்கள்.

இரண்டாவது மனிதர்கள் இந்த பூமி முழுவதும் இருக்கின்றார்கள். முதலாவது வந்த அந்த மனிதர் அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்தவர்,இந்த உலகத்தில் உள்ள அத்தனை மனிதர்களை விட.(1)

அறிவிப்பாளர் : சஹ்ல் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : எண் : 5091, 6447.

சகோதரர்களே! இதை அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள் என்றால் அல்லாஹ்வுடைய வஹீ இல்லாமல் சொல்லமாட்டார்கள்.

உள்ளங்களை அறிந்தவன் அல்லாஹ்.அவன் மூலமாகத்தான் சொல்வார்கள். எதை வைத்து அந்த மனிதரை இவ்வளவு கண்ணியமானவர் என்று நபிக்கு உணர்த்தினான்? அந்த மனிதனுடைய உள்ளத்தை வைத்து.

அவருடைய ஆடை மக்களால் மதிக்கப்படாத, அவருடைய அந்தஸ்து மக்களால் மதிக்கப்படாத, அவருடைய பொருளாதாரம் மக்களால் மதிக்க முடியாத நிலையில் இருந்தது. ஆனால் அவருடைய கல்பு அல்லாஹ்விடத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தது. அல்லாஹு தஆலா தனது நபிக்கு இவர் சிறந்தவர் என்று சொன்னான்.

இன்னொரு சம்பவத்தைப் பாருங்கள். ரசூலுல்லாஹ் தங்களுடைய தோழர்களுக்கு மத்தியில் தர்பியா-ஒழுக்கப் பயிற்சி என்று எப்பொழுதுமே அவர்களை செம்மைப் படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

அவர்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கும்பொழுது ரசூலுல்லாஹ் அவர்கள் சொன்னார்கள் : இப்பொழுது ஒரு மனிதர் வருவார். அவர் சொர்க்க வாசிகளில் ஒருவர் என்று சொன்னார்கள். அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ரலியல்லாஹு அன்ஹும் போன்றோர் அங்கு இருக்கின்றார்கள்.

இன்னும் பிரபல்யமான சில தோழர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். சொர்க்க வாசிகள் என்று அறியப் பெற்ற தோழர்களும் இருக்கின்றார்கள். ரசூலுல்லாஹ் அவர்கள் சொன்னார்கள்; சொர்க்கவாசிகளில் ஒருவர் இப்போது உங்கள் முன் தோன்றுவார் என்று.

சிறிது நேரத்தில் பார்த்தால் உளு உடைய தண்ணீர் தன்னுடைய தாடியில் சொட்டியவராக இடது கையில் தனது செருப்பை எடுத்துக்கொண்டு பள்ளியினுள் ஒருவர் நுழைகின்றார்.

செருப்பை ஓரமாக வைத்தார். சபை உடையவருக்கு ஸலாம் சொன்னார். இரண்டு ரக்அத் நஃபில் தொழுதார். பிறகு ஸலாம் சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டார். சபை முடிந்துவிட்டது.

அடுத்த நாளும் நபி சொன்னார்கள்: இப்பொழுது உங்கள் முன் ஒருவர் தோன்றுவார் அவர் சொர்க்கவாசிகளில் ஒருவர் என்று.

நேற்று வந்தவரே அன்றும் வந்தார். மூன்றாவது நாள் நபி அவர்கள் சபையில் இருக்க இப்பொழுது உங்கள் முன்னால் ஒருவர் தோன்றுவார்,அவர் சொர்க்க வாசிகளில் ஒருவர் என்று கூறினார்கள்.

இப்பொழுது முதல் இரண்டு நாட்களில் வந்த அதே தோழர் தான் மூன்றாவது நாளும் வருகின்றார். அதே போன்று அதே நிலையில் வருகிறார். அவர் திரும்ப சென்று விடுகின்றார்.

சபையிலிருந்த அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் பின்தொடர்ந்து செல்கின்றார். நண்பரே! சகோதரரே! எனக்கும் என்னுடைய தந்தைக்கும் சில மனஸ்தாபங்கள் இருக்கின்றது, ஒரு சில நாட்கள் உங்களுடைய இல்லத்தில்  நான் தங்கி கொள்ளட்டுமா? என்றுஎன்று கேட்கின்றார்.

ஒன்றும் பிரச்சனை இல்லை, நீங்கள் தங்கிக் கொள்ளலாம் என்றுசொல்கின்றார். அப்பொழுது இரவு இஷா முடிந்த உடனே அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் ரழியல்லாஹுஅன்ஹுஅந்த தோழர் உடைய வீட்டிற்கு சென்று விடுகிறார்.

சென்று படுக்கையில் படுத்துக் கொண்டு தூங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கின்றார். இவர் என்ன இபாதத் செய்யப் போகிறார் என்று. அந்த வணக்க வழிபாடு இந்த உலகத்திலேயே இவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கும் என்றால் அல்லாஹ்,அல்லாஹ்வுடைய தூதர் உடைய நாவினால் அவரை சொர்க்கவாசி என்று நற்செய்தி கூறியிருக்கின்றான்.

முதல்நாள் பார்த்தார்; அந்த ஸஹாபி தூங்கிக்கொண்டிருந்தார். பிறகு படுக்கையில் திரும்பி படுக்கும் பொழுது சுப்ஹானல்லாஹ் அல்ஹம்து லில்லாஹ் என்று சில திக்ருகளை தஸ்பீஹ்களை சொன்னார். அவர் அவ்வளவுதான் செய்தார்.

பிறகு சுப்ஹுக்கு முன்பு சிறிது நேரத்திற்கு முன்பு கண் விழித்து தொழுகைக்கு தயாரானார். முதல் நாள் இரண்டாவது நாள் மூன்றாவது நாளும் இதே நிலை தான்.

நான்காவது நாள் மஸ்ஜிதில் பார்த்துவிட்டு அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு சொன்னார்; சகோதரரே‍! இன்று நான் உங்கள் வீட்டுக்கு வரவில்லை. எங்கள் வீட்டுக்கு போறேன் என்று.

அப்பொழுது அந்த ஸஹாபி கேட்கின்றார்; உங்களுடைய குடும்பத்தில் சுமூகம் ஆகிவிட்டதா என்று.

அப்பொழுது அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் சொல்கின்றார்; எங்களுடைய குடும்பத்தில் எப்போதுமே பிரச்சனை இல்லை என்று. அப்போ ஏதோ பிரச்சனை என்று சொல்லி எங்க வீட்டில் வந்து இரவு தங்கினீர்களே? நான் அதற்காக வரவில்லை சகோதரரே!

மூன்று நாள் அல்லாஹ்வுடைய தூதர் சொர்க்கவாசி ஒருவர் வருவார். சொர்க்கவாசி ஒருவர் வருவார்,  சொர்க்கவாசி ஒருவர் வருவார் என்று சொன்னார்கள். மூன்று நாளும் நீங்கள்தான் வந்தீர்கள். உங்களுடைய இரவு வணக்க வழிபாடு என்ன என்பதை அறிந்து அதை நான் செய்வதற்காக மட்டுமே உங்களோடு இரவு தங்க வந்தேன். இதுதான் என்னுடைய நோக்கம் என்று சொல்கிறார்.

ஆனால் ஒரு விசேஷமான அமல்களை உங்களிடத்தில் நான் பார்க்கவில்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று.

அந்தத் தோழர், அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் அவர்களிடம் இதை அல்லாஹ்வின் தூதர் அவர்களிடத்தில் நீங்கள் கேட்டீர்களா? கேட்டீர்களா? என்று விசாரிக்கிறார்கள்.

ஆம்,அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இதை சொன்னார்கள் என்று அந்த தோழர் சொன்னவுடன்அப்படி என்றால் என்னிடத்தில் இருக்கின்ற ஒரு அமலை உங்களிடத்தில் சொல்லித் தருகின்றேன்.

நான் இரவில் படுக்கச் செல்லும் போது முஸ்லிம்களாகிய யாரைப் பற்றியும் நான் பொறாமை கொள்ளவோ குரோதம் கொள்ளவோ தவறாக சிந்திக்க மாட்டேன். எல்லோரையும் மன்னித்து விடுகிறேன். என்னுடைய உள்ளத்தில் யாரைப் பற்றியும் தவறாக எண்ணாமல் என்னுடைய உள்ளத்தை சுத்தப்படுத்தி நான் படுக்கைக்கு செல்கின்றேன்.

இதை கேட்ட உடனே அப்துல்லாஹ் இப்னு அமர் இப்னுல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு கேட்டார்கள்.(பெரிய கல்விமான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ், நபி அவர்களுடைய ஆயிரக்கணக்காக ஹதீஸ்களை மனனம் செய்தவர். ரசூலுல்லாஹ்வை விட்டு பிரியாத தோழர். ரொம்ப நெருக்கமான தோழர்.)

தோழரே! இதுதான், இதுதான். இதற்குத்தான் இத்தகைய நற்சான்றை அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள். இது எங்களால் முடியுமா? என்று எங்களுக்கு தெரியவில்லை என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மத், எண் : 12697.

சகோதரர்களே! இப்பொழுது கவனித்துப் பாருங்கள். இந்த இரண்டு சம்பவங்களில் இருந்து நம்முடைய உள்ளம் அல்லாஹ்வுடைய விஷயத்திலும் எப்படி இருக்கின்றது? அல்லாஹ்வுடைய அடியார்களின் விஷயத்திலும் எப்படி இருக்கின்றது?

அல்லாஹ்வுடைய விஷயத்திலும் ஆயிரம் அவநம்பிக்கைகளை உள்ளத்தில் வைத்துக் கொண்டு இருக்கின்றோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

இந்தத் தொழில் போய்விட்டால் எனக்கு எல்லாம் போய்விட்டது என்பதைப் போன்று ரிஸ்க் விஷயத்தில் அவநம்பிக்கை. ஒரு இக்கட்டான நிலை வரும்பொழுது அல்லாஹ் உதவுவான். அல்லாஹ் வழியை திறப்பான் என்ற மன உறுதி நமக்கு வருகிறதா என்றால் உடனே ஒரு தடுமாற்றம்.

ரிஸ்க்கை நினைத்து, வாழ்வாதாரத்தை நினைத்துகவலைப்படுவது என்பது வேறு. அவன் நம்பிக்கை என்பது வேறு.

ஸஹாபாக்கள் வாழ்வாதாரத்தை நினைத்து கவலை கொண்டார்கள்; கஷ்டப்பட்டார்கள். ஆனால் நம்பிக்கை கொள்ளவில்லை.

இன்று நம்மிடத்தில் இருப்பது அவநம்பிக்கையாக இருக்கின்றது. எத்தனை பேர், அல்லாஹ் எங்களை கைவிட்டு விட்டான்; எங்களுடைய துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை; எங்களுடைய தொழுகைகள் எங்களுக்கு பலனளிக்கவில்லை என்று புலம்புகிறார்கள்.

அடியார்களுடைய விஷயத்தில் உலகத்தில் உள்ள எல்லாருமே தப்பானவர்கள். நான் மட்டும்தான் சரியானவன்.

எப்படி இருக்கின்றோம்? எந்த மன நிலையில் இருக்கின்றோம்? எல்லோருமே தப்பானவர்கள். எல்லோருமே கெட்டவர்கள். எல்லோருடைய நோக்கமும் தப்பு. நான் மட்டும்தான் பரிசுத்தமானவன்.

நம்மை நாமே பீத்திக் கொள்கின்றோம். நம்மை நாமே உயர்வாக மதிப்பிட்டுக் கொள்கின்றோம். இப்படியிருக்கும் பொழுது அல்லாஹு தஆலா நம்மை எப்படி மதிப்பான்? அல்லாஹ்விடத்தில் நமக்கு என்ன கண்ணியம் இருக்கும்? என்று யோசித்துப் பாருங்கள்.

நம்முடைய ஆடையை வைத்தா? நம்முடைய அலங்காரத்தை வைத்தா? அல்லது நம்முடைய வசிப்பிடத்தை வைத்தா? நம்மிடத்தில் இருக்கக்கூடிய பொருளாதாரத்தை வைத்தா?

தெளிவாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறினான்:

لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ

(இவ்வாறு குர்பானி செய்தபோதிலும்) அதன் மாமிசமோ அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை அடைந்து விடுவது இல்லை. உங்கள் இறையச்சம்தான் அவனை அடையும்.(அல்குர்ஆன் 22 : 37)

தக்வா என்பது ஆடையில் அல்ல,வெறும் தோற்றத்தில் உள்ளது அல்ல.அந்த தக்வா ஒரு மனிதனை உண்மை உள்ளவனாக நேர்மை உள்ளவனாக மாற்ற வேண்டும்.நம்பிக்கை உரியவனாக மாற்ற வேண்டும். வாழ்க்கையில் கொள்கையில் செயலில் சுத்தமானவனாக மாற்ற வேண்டும்.

நீள்அங்கியை அணிந்திருப்பதால் தக்வா வந்துவிடாது. எத்தனையோபேர் பெரிய தாடி வைத்திருப்பார்கள். இந்த தாடி வைத்திருப்பவன் அவ்வளவு பெரிய அயோக்கியனாக இருப்பான்.

யாரைப் பார்த்து தாடி இல்லை,இவனிடத்தில் மார்க்கப்பற்று இருக்குமா? என்று எண்ணுகின்றோமோ,அந்த மனிதன் அவ்வளவு பெரிய யோக்கியமானவனாக நீதவானாக இருப்பான்.

ஆனால் தாடி இல்லாததை நியாயப்படுத்தி விடாதீர்கள். தாடி வைத்திருப்பவர்கள் தப்பு செய்வதை வைத்து தாடி இல்லாதவர்களை நியாயப்படுத்தி விடாதீர்கள்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் தோற்றத்தைப் பார்த்து மட்டும் முடிவு செய்துவிடக் கூடாது. ஒரு மனிதனுடைய வெளிப்படையை வைத்து மட்டும் முடிவு செய்துவிடக் கூடாது.

கல்பு அல்லாஹ்விடத்தில் இருக்கின்றது. அல்லாஹ் தெளிவாகக் கூறினான்.

إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ

எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கிறாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். (அல்குர்ஆன் 49:13)

அந்த தக்வா உள்ளத்தில் ஊற வேண்டும்.அது நம்முடைய வாழ்க்கையை மாற்ற வேண்டும். நம்முடைய நடை உடை பாவனை,நம்முடைய சொல் செயல்,நம்முடைய கொடுக்கல்-வாங்கல்,நம்முடைய குடும்பம் என்று அனைத்திலும் அந்த தக்வா ஒளிர வேண்டும்.

அந்த நீதம்,அந்த நேர்மை வர வேண்டும். அல்லாஹ்வுடைய ஷரியத்துடைய கட்டுப்பாடு, ஷரியத் மட்டும்தான் நம் மீது ஆட்சி செய்ய முடியும்.

அல்லாஹ்வுடைய கட்டளை வந்துவிட்டால் என்னுடைய ஆசைகள், கோபங்கள் அனைத்தையும் நான் தூக்கி எறிந்து விடுவேன். அல்லாஹ்வுடைய கட்டளைக்கு முன்பாக.

ஒரு முறை உமருல் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு அவருடைய சபையில் ஒரு ஸஹாபி உடைய உறவுக்காரர். வந்தவர் வேறு ஒரு காரணத்தைச் சொல்லி வந்தார். அவர் அவ்வளவு பெரிய ஸஹாபாக்கள் உடைய சபைக்கு மத்தியில் எழுந்து, அமீருல் முஃமினீன் உமர் பாரூக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தரக்குறைவாக ஏச ஆரம்பித்துவிட்டார்.

அமீருல் முஃமினீன் என்று சொல்லவில்லை. உமரே! நீங்கள் நீதமாக தீர்ப்பளிக்க வில்லை.  மக்களுடைய கொடையை நீங்கள் மக்களுக்கு கொடுப்பதில்லை என்று கூறுகின்றார்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கோபம் பீறிட்டு வந்ததுவிட்டது. சாட்டையை கையில் எடுத்து விட்டார்கள்.

இதைப் பார்த்து, அந்த உறவுக்காரரரை கூட்டிவந்த ஸஹாபி பயந்து விட்டார்கள். ஒன்றுமே சொல்லவில்லை. ஒரு வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ

மன்னிப்பை பற்றி பிடிப்பீராக! நன்மையை ஏவுவீராக! அறியாத மக்களை நீங்கள் புறக்கணித்து விடுவீராக! (அல்குர்ஆன் 7 : 199)

என்று அல்லாஹ் தனது நபிக்கு சொல்கின்றான். இந்த மனிதர் ஒழுக்கத்தை அறியாத ஜாஹில் என்று சொல்லி முடித்தார். அவ்வளவுதான் எழுந்த வேகத்தில் சட்டையை போட்டு விட்டு உமர் உட்கார்ந்து விட்டார்கள்.

(இன்று நம்மில் யாருக்காவது உபதேசம் செய்யப்பட்டால், எனக்கு தெரியும், சும்மா வாய பொத்திட்டு போங்க. எனக்கு நீ மார்க்கம் சொல்லி தரியா? என்று சொல்கிறார்கள்.)

அந்த ஸஹாபி சொல்கின்றார் ;

«وَاللَّهِ مَا جَاوَزَهَا عُمَرُ حِينَ تَلاَهَا عَلَيْهِ، وَكَانَ وَقَّافًا عِنْدَ كِتَابِ اللَّهِ»

உமர் அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகள் என்று வந்துவிட்டால் அதை மீறாமல் அங்கேயே நிற்கக்கூடிய தன்மை கொண்டவர்.(2)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 4642, 7286.

சகோதரர்களே! கல்பில் இந்த மாற்றம் ஏற்பட வேண்டும். இந்த சுத்தம் ஏற்பட வேண்டும். இந்த ஈமானிய சுத்தம் நமக்கு ஏற்பட்டால் தான் குர்ஆன் நம்மை மாற்றும்.ஹதீஸ் நம்மை மாற்றும். நல்லுபதேசங்கள் நம்மை மாற்றும். வாழ்க்கையில் மறுமையை நோக்கிய வெற்றியாளர்களாக பயணிப்போம்.

ரப்புல் ஆலமீன் தனது நபியைப் பார்த்து சொல்கின்றான்.

إِنَّمَا تُنْذِرُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَأَقَامُوا الصَّلَاةَ وَمَنْ تَزَكَّى فَإِنَّمَا يَتَزَكَّى لِنَفْسِهِ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ

(நபியே!) நீர் அச்சமூட்டி எச்சரிப்பதெல்லாம், எவர்கள் (தங்கள் கண்ணால்) காணாமல் இருந்தும், தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து, தொழுகையையும் நிலைநாட்டுகிறார்களோ அவர்களைத்தான். எவர் பரிசுத்தமாக இருக்கிறாரோ அவர் தன் நன்மைக்காகவே பரிசுத்தமாய் இருக்கிறார். அல்லாஹ்விடமே அனைத்தும் செல்ல வேண்டியதிருக்கிறது. (அல்குர்ஆன் 35 : 18)

ஆகவே கண்ணியத்திற்குரியவர்களே! இன்றைய உலக வாழ்க்கையில் எது அழிந்து போகக் கூடியதோ, எதற்கு அல்லாஹ்விடத்தில் எந்தவிதமான மதிப்பும் இல்லையோ,அதை உயர்த்த பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்:

«إِنَّ اللهَ لَا يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ»

 

உங்களுடைய உருவங்களை அல்லாஹ் பார்க்க மாட்டான். உங்களுடைய செல்வங்களை அல்லாஹ் பார்க்க மாட்டான். அல்லாஹ் உங்கள் கல்பை பார்க்கின்றான். உங்களுடைய அமல்களை பார்க்கின்றான்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 2564.

அந்தக் கல்பை அமலை சீர்திருத்தம் செய்வதில் நம்முடைய வாழ்க்கையின் கவனத்தைத் திருப்புவோமாக! அதற்காக நேரத்தை ஒதுக்குவோமாக! மார்க்கத்தைப் படிக்க படிக்க எந்த இல்மு நமக்கு கிடைக்கின்றதோ? அதன்படி அமல் செய்வதற்கு நாம் தீவிரம் காட்டுவோமாக!

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவன் மார்க்கப்படி நடப்பதற்கு நம் அனைவருக்கும் இலகுவாக்கி தருவானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ: مَرَّ رَجُلٌ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا تَقُولُونَ فِي هَذَا؟» قَالُوا: حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ يُنْكَحَ، وَإِنْ شَفَعَ أَنْ يُشَفَّعَ، وَإِنْ قَالَ أَنْ يُسْتَمَعَ، قَالَ: ثُمَّ سَكَتَ، فَمَرَّ رَجُلٌ مِنْ فُقَرَاءِ المُسْلِمِينَ، فَقَالَ: «مَا تَقُولُونَ فِي هَذَا؟» قَالُوا: حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ لاَ يُنْكَحَ، وَإِنْ شَفَعَ أَنْ لاَ يُشَفَّعَ، وَإِنْ قَالَ أَنْ لاَ يُسْتَمَعَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا خَيْرٌ مِنْ مِلْءِ الأَرْضِ مِثْلَ هَذَا» (صحيح البخاري 5091)

குறிப்பு 2)

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «قَدِمَ عُيَيْنَةُ بْنُ حِصْنِ بْنِ حُذَيْفَةَ فَنَزَلَ عَلَى ابْنِ أَخِيهِ الحُرِّ بْنِ قَيْسٍ، وَكَانَ مِنَ النَّفَرِ الَّذِينَ يُدْنِيهِمْ عُمَرُ، وَكَانَ القُرَّاءُ أَصْحَابَ مَجَالِسِ عُمَرَ وَمُشَاوَرَتِهِ، كُهُولًا كَانُوا أَوْ شُبَّانًا»، فَقَالَ عُيَيْنَةُ لِابْنِ أَخِيهِ: يَا ابْنَ أَخِي، هَلْ لَكَ وَجْهٌ عِنْدَ هَذَا الأَمِيرِ، فَاسْتَأْذِنْ لِي عَلَيْهِ، قَالَ: سَأَسْتَأْذِنُ لَكَ عَلَيْهِ، قَالَ ابْنُ عَبَّاسٍ: «فَاسْتَأْذَنَ الحُرُّ لِعُيَيْنَةَ فَأَذِنَ لَهُ عُمَرُ»، فَلَمَّا دَخَلَ عَلَيْهِ قَالَ: هِيْ يَا ابْنَ الخَطَّابِ، فَوَاللَّهِ مَا تُعْطِينَا الجَزْلَ وَلاَ تَحْكُمُ بَيْنَنَا بِالعَدْلِ، فَغَضِبَ عُمَرُ حَتَّى هَمَّ أَنْ يُوقِعَ بِهِ، فَقَالَ لَهُ الحُرُّ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، إِنَّ اللَّهَ تَعَالَى قَالَ لِنَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {خُذِ العَفْوَ وَأْمُرْ بِالعُرْفِ وَأَعْرِضْ عَنِ الجَاهِلِينَ} [الأعراف: 199]، وَإِنَّ هَذَا مِنَ الجَاهِلِينَ، «وَاللَّهِ مَا جَاوَزَهَا عُمَرُ حِينَ تَلاَهَا عَلَيْهِ، وَكَانَ وَقَّافًا عِنْدَ كِتَابِ اللَّهِ» (صحيح البخاري 4642)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/