HOME      Khutba      மவ்லிது ஓதுவது நபியை நேசிப்பதாகுமா? | Tamil Bayan - 689   
 

மவ்லிது ஓதுவது நபியை நேசிப்பதாகுமா? | Tamil Bayan - 689

           

மவ்லிது ஓதுவது நபியை நேசிப்பதாகுமா? | Tamil Bayan - 689


மவ்லிது ஓதுவது நபியை நேசிப்பதாகுமா?

ஜுமுஆ குத்பா தலைப்பு : மவ்லிது ஓதுவது நபியை நேசிப்பதாகுமா?

வரிசை : 689

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 22-10-2021 | 16-03-1443

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலாவை உங்கள் முன்னால் போற்றி புகழ்ந்து அல்லாஹுடைய தூதர் மீதும் அந்த தூதரின் கண்ணியத்திற்குரிய குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும்ஸலாமும் கூறியவனாக, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுடைய அடியாரும் தூதரும் ஆவார் என்று சாட்சி கூறியவனாக,உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பை வேண்டியவனாக, நேர்வழியை வேண்டியவனாக, அல்லாஹ்வுடையஇன்னும் அல்லாஹ்வுடைய தூதரின் அன்பை வேண்டியவனாக, இம்மை மறுமையின் முழுமையான வெற்றியை வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இந்த உலகத்தின் முஸீபத்துகள், குழப்பங்களில் இருந்து நம்மை பாதுகாப்பானாக! மறுமையின் துன்பங்கள், துயரங்கள், நெருக்கடிகளிலிருந்து நம்மை இரட்சிப்பானாக!

நம் அனைவரையும், நம்முடைய தாய் தந்தையையும், நம்முடைய குடும்பத்தாரையும், முஃமின்கள் முஸ்லிம்கள் அனைவரையும் சொர்க்கவாசிகளாக அல்லாஹு தஆலா ஆக்கியருள்வானாக!

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமக்கு கொடுத்திருக்கின்ற ஒரு பெரிய அருட்கொடை, மிகப் பெரிய ஒரு அன்பளிப்பு இந்த ஈமான் என்ற அருட்கொடை, ஈமான் என்ற அன்பளிப்பு.

இந்த இஸ்லாம் என்ற நேர்வழியின் மூலமாகத் தான் இன்று நாம் தெளிவான அறிவுடையவர்களாக, நேர்வழி எது? வழிகேடு எது? என்று பிரித்தறியக் கூடிய அந்த ஞானம் உள்ளவர்களாக, மடமைமுட்டாள்தனம்மூடத்தனம் எது? என்று அறிந்து, அவற்றிலிருந்து விலகி நேர்மையான அறிவு, சுத்தமான பாதை, ஞானமிக்க வழி எது? என்பதை அறிந்து படைப்புகளை வணங்காமல் படைத்த இறைவனை வணங்கக் கூடிய ஒரு பாக்கியத்தை பெற்றிருக்கிறோம்.

சகோதரர்களே! இந்த ஈமான், இஸ்லாம் என்ற நேர்வழி நமக்கு கிடைக்காமல் இருந்திருக்குமேயானால் படைத்த இறைவனை வணங்காமல் அற்பமாக படைக்கப்பட்ட வஸ்துக்களில் ஏதாவது ஒன்றை வணங்கியவர்களாக இருந்திருப்போம். அல்லாஹ் பாதுகாத்தான்.

وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ

இன்னும் அவர்கள் கூறுவார்கள்: “இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம்(அல்குர்ஆன் 7:43)

வசனத்தின் கருத்து : அல்லாஹு தஆலா சொர்க்கவாசிகளை பற்றி அழகாக நமக்கு அல்குர்ஆனில் எடுத்துச் சொல்கிறான். சொர்க்கவாசிகள் அந்த சொர்க்கத்துடைய பாக்கியம் கிடைக்கப் பெற்ற பிறகு, அவர்கள் சொர்க்கத்தில் பிரவேசித்த பிறகு, நீங்கள் சொர்க்கத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டு, மலக்குகளால் வரவேற்கப்பட்டு, அங்கு சொர்க்கத்தில் இருக்கக் கூடிய ஹூர்களால் வரவேற்கப்பட்டு, அவர்கள் சொர்க்கத்திற்குள் சென்றவுடன் முதல் வார்த்தையாக அந்த சொர்க்கவாசிகள் சொல்வார்கள்;

எல்லா புகழ்களும் நன்றிகளும் எங்கள் அல்லாஹ்விற்கே. இந்த சொர்க்க பாக்கியம் கிடைப்பதற்குரிய இஸ்லாமிய மார்க்கத்திற்கு எங்களுக்கு வழிகாட்டினானே. அல்லாஹ் எங்களை நேர்வழியில் நடத்தியிருக்கவில்லை என்றால் நாங்கள் இந்த நேர்வழியை பெற்றிருக்கமாட்டோம் என்று சொர்க்கவாசிகள் உலகத்தில் தங்களுக்கு கிடைத்த ஹிதாயத் என்ற இந்த நிஃமத்தை குறித்து நாளை மறுமையில் சொர்க்கத்தில் அல்லாஹ்வை புகழ்வார்கள்.

இந்த உலகத்திலும் புகழ்ந்தார்கள். நாளை மறுமையில் கண்கூடாக பார்த்ததற்கு பிறகு இந்த ஹிதாயத்துடைய முடிவு ஜன்னத். அதை கண்கூடாக பார்த்து உணர்ந்ததற்கு பிறகு அதில் அவர்கள் தங்களுடைய உடலோடு, உயிரோடு உள்ளே நுழைந்ததற்கு பிறகு கூறுவார்கள்.

وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي صَدَقَنَا وَعْدَهُ وَأَوْرَثَنَا الْأَرْضَ نَتَبَوَّأُ مِنَ الْجَنَّةِ حَيْثُ نَشَاءُ فَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ

அதற்கு (சுவர்க்கவாசிகள்) “அல்ஹம்து லில்லாஹ்! அவன் தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்து, சுவர்க்கத்தில் நாம் விரும்பும் இடமெல்லாம் சென்றிருக்க (அப்) பூமியை எங்களுக்கு உரிமையாக்கி வைத்தான்” என்று கூறுவார்கள். எனவே நன்மை செய்தோரின் கூலி (இவ்வாறு) நன்மையாகவே இருக்கிறது.(அல்குர்ஆன் 39:74)

அல்லாஹ்வின் அடியார்களே! இந்த உலகத்தில் ஒரு முஃமின் ஒரு முஸ்லிமுடைய அந்த வழி எப்படி இருக்க வேண்டும்? அல்லாஹ்விற்கு கீழ்படிதல், அல்லாஹ்வுடைய தூதருக்கு கீழ்படிதல், அல்லாஹ்வை நேசித்தல், அல்லாஹ்வுடைய தூதரை நேசித்தல், அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நேசித்தல் இன்னும் அல்லாஹ் எதையெல்லாம் நேசிக்க சொல்லியிருக்கிறானோ அதையெல்லாம் நேசிப்பது.

அல்லாஹ் யாரையெல்லாம் நேசிக்க சொல்லியிருக்கிறானோ,அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் யாரையெல்லாம் நேசிக்க சொல்லியிருக்கிறார்களோ அவர்களை நேசிப்பது.

இது தான் நேர்வழி அல்லாஹ்விற்கு கீழ்ப்படிதல், அல்லாஹ்வுடைய தூதருக்கு கீழ்படிதல். தீன் என்பது, மனித சிந்தனைகளில், மனிதனுடைய தத்துவங்களில், மனிதனுடைய கண்டுபிடிப்புகளில் உருவாகக் கூடியதல்ல.

தீன் என்பது, எதை அல்லாஹ் இறக்கினானோ, எதை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிமுறைபடுத்திக் காட்டினார்களோ அது தான்.

ஒருவன் அல்லாஹ்வை நேசிக்கிறான் என்றால் அல்லாஹ்வுடைய தூதரை நேசிக்கிறான் என்றால் அவன் அல்லாஹ்வுடைய தீனை பின்பற்ற வேண்டும்.

ஒரு மனிதன் நான் அல்லாஹ்வை நேசிக்கிறேன் என்று சொல்கிறான், ரஸூலை நேசிக்கிறேன் என்று சொல்கிறான்.

ஆனால் அவனிடத்தில் இத்திபா (பின்பற்றுதல்) இல்லையென்றால், இதாஅத் (கீழ்படிதல்) இல்லையென்றால் அந்த அன்பு, அந்த நேசம் பொய்யாகும்.

அவன், தான் அல்லாஹ்வை நேசிக்கிறேன் என்பதை சொல்வதில் பொய்யனாக இருக்கிறான்.

அல்லாஹ் தஆலா நம்மை பார்த்து கூறுகிறான்,

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் 3:31)

அல்லாஹ்வுடைய அன்பு நம்முடைய உள்ளத்தில் உண்மையாக,உறுதியாக,ஆழமாக,கலப்படமற்றதாக இருக்குமேயானால் அது ரஸூலை பின்பற்றுவதைக் கொண்டு வெளிப்படும்.

அல்லாஹ்வுடைய தூதர் சொன்னதை தவிர எதையும் செய்யமாட்டார். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை மீறமாட்டார் அவர்கள் கூறியதை விடவும் மாட்டார். அவர்கள் காட்டிய பாதையிலிருந்து அவர் விலகவும் மாட்டார். அப்படி செய்பவருக்கு அல்லாஹ் கூறுகிறான்,

உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 3:31)

சகோதரர்களே! அல்லாஹ்வுடைய அன்பும், அல்லாஹ்வுடைய மன்னிப்பும் இல்லாமல் எதுவும் முடியவே முடியாது.

எத்தகைய பெரிய வணக்கசாலி என்று மக்களால் அவர் பேசப்பட்டாலும் சரி, மக்கள் கூறுவார்கள் அல்லவா? அவர், ஆஷிக்கே இலாஹி – இறைக்காதலர், ஆஷிக்குல்லாஹ் -அல்லாஹ்வின் காதலர், ஆஷிக்கே ரஸூல் -ரஸூலுடைய காதலர்,இஷ்கே இலாஹி -நாங்களெல்லாம் இறைக்காதலில் மூழ்கிவிட்டோம்.

ஃபனா ஃபில்லாஹ் -நாங்கள் அல்லாஹ்வில் எங்களை அப்படியே அழித்துக் கொண்டோம் என்று என்னென்ன வாதங்களை, அலங்காரமான வார்த்தை ஜாலங்களை அவர்கள் பேசினாலும் சரி, இத்திபாஉர் ரஸூல், இதாஅத்துர் ரஸூல் அவருடைய வாழ்க்கையில் இல்லாமல் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவேமாட்டான்.

ஜுனைதுல் பஃதாதி என்ற பிரபலமான ஒரு ஞானி இருந்தார். அவருடைய பெயரில் இட்டுக்கட்டி மார்க்கத்தில் பல நூதனங்களைதரிகாக்களை எல்லாம் செய்வார்கள்.

ஜுனைத் பஃதாதி ரஹிமஹுல்லாஹ்அவர்கள் தெளிவாக கூறுகிறார்கள்; யாராவது ஞானப்பாதை எங்களுடைய வழியில் வருகிறது என்று சொல்வாரேயானால் எங்களுடைய வழி கிதாபுல்லாஹ் வ சுன்னத்துர் ரஸூலிஹி -எங்களுடைய வழி அல்லாஹ்வுடைய வேதம் ரஸூலுல்லாஹ்வுடைய சுன்னத்.

எங்களுடைய வழி எது?அல்லாஹ் என்ன கூறினானோ? ரஸூலுல்லாஹ் என்ன கூறினார்களோ? அதுதான். இதை தவிர, அமல் வேறு எதுவும் இல்லை. இதை செய்வதற்கு தான் நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம்.

இதில் இல்லாத ஒன்றை ஒருவன் செய்து கொண்டு அவன் எங்களுடைய பாதையை பற்றி பேசுவானேயானால், ஆன்மீகம் என்று சொல்வானேயானால் அவன் வழிகேடன், அவன் மஜூஸிகளின் வழியை சேர்ந்தவன், இந்து துறவிகளின் வழியை சேர்ந்தவனே தவிர இஸ்லாமிய மார்க்கத்தின் ஞானப் பாதையில் உள்ளவன் அல்ல.

உண்மையான ஞானம் எது? அல்லாஹ்வுடைய தூதர் கற்றுக் கொடுத்தது. (அல்குர்ஆன்2 : 128)

குர்ஆனும் ஞானமிக்கது.(அல்குர்ஆன் 36:2) அந்த ஞானமிக்க குர்ஆனை கற்றுக் கொடுப்பவர் ரஸூலுல்லாஹ்.

இதில் இல்லாத வேறு ஒன்று எப்படி ஞானமாக இருக்க முடியும்?இதற்கு எதிரான ஒன்று இதற்கு மாற்றமான ஒன்று இந்த சடங்குகளுக்கு எதிரான ஒன்று எப்படி அறிவாக, மார்க்கமாக, ஞானமாக இருக்க முடியும்?

அல்லாஹு தஆலா முஃமின்கள் அல்லாஹ்வை எப்படி நேசிக்க வேண்டும் என்று நமக்கு சொல்கிறான்?

وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ

அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள். (அல்குர்ஆன் 2:165)

யார் அல்லாஹ்வை நேசம் கொண்டவராக இருக்கிறாரோ அவருக்கு ஈமானுடைய சுவை கிடைக்கும்.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாக்களித்தார்கள்.

" ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ: مَنْ كَانَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَاِ "

மூன்று குணங்கள் இருந்தால் ஈமானுடைய சுவை கிடைக்கும்.  அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரஸூலும் மற்ற அனைவரையும் விட அவருக்கு விருப்பமானவராக இருக்க வேண்டும்.(1)

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 21.

சகோதரர்களே! அல்லாஹ்வை நேசிப்பது, ரஸூலை நேசிப்பது இது ஈமானுடைய குணங்களில், ஈமானுடைய ஷர்த்துகளில், ஈமானுடைய ருக்னுகளில் உள்ள ஒன்று.

இன்று, இந்த முஹப்பத் என்ற பெயரில் மக்களை வழிகெடுப்பவர்கள், அல்லாஹ்வின் தூதரின் அன்பு என்ற பெயரில் மக்களை பித்அத்துகளில் தள்ளி,அனாச்சாரங்களில் தள்ளி அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாக்குகின்றவர்களை நாம் பார்க்கிறோம்.

யார் அவர்களுடைய சடங்குகளை அங்கீகரிக்கவில்லையோ, அவர்களுடைய சடங்குகளை ஏற்றுக் கொள்ளவில்லையோ, அந்த சடங்குகளை செய்யவில்லையோ அவர்களையெல்லாம் இவர்கள் அல்லாஹ்வை நேசிக்காதவர்கள், இவர்கள் ரஸூலை நேசிக்காதவர்கள், ரஸூலை வெறுப்பவர்கள், ஸாலிஹீன் -நல்லவர்களை வெறுப்பவர்கள், நல்லவர்களை புறக்கணிப்பவர்கள் என்று மக்களுக்கு மத்தியில் தவறான பிரச்சாரம் செய்வதை பார்க்கிறோம்.

சகோதரர்களே! ஒரு மனிதன் ரஸூலை நேசிக்கிறான் என்றால் ரஸூலை நேசிப்பதற்கு முன்பு முதலாவதாக மதிப்பு இருக்க வேண்டும். கண்ணியம் இருக்க வேண்டும். அந்த மதிப்பு அதன் மீது அந்த அன்பு இருக்க வேண்டும்.

இந்த இரண்டும் ஒரு மனிதனிடத்தில் இருக்கும் பொழுது அவன் அடுத்து ரஸூலுக்கு முன் சரணடைந்து விடுவான், கட்டுப்பட்டு விடுவான்.

நாமும் அல்லாஹ்வுடைய தூதரை புகழ்கிறோம். ரஸூல் என்று சொல்கிறோம், அல்லாஹ்வுடைய அடியார் என்று சொல்கிறோம்.

காரணம் என்ன? ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு அப்படிதான் வழிகாட்டினார்கள்.

«لاَ تُطْرُونِي، كَمَا أَطْرَتْ النَّصَارَى ابْنَ مَرْيَمَ، فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا عَبْدُ اللَّهِ، وَرَسُولُهُ»

நஸாராக்கள், கிறிஸ்தவர்கள்மர்யமின் மகன் ஈஸாவை புகழ்ந்தது போன்று என்னை நீங்கள் புகழாதீர்கள். என்னை நீங்கள், நான் அல்லாஹ்வின் அடிமை என்று, அல்லாஹ்வுடைய தூதர் என்று கூறுங்கள்.

அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : எண் : 3445.

அல்லாஹ்வுடைய தூதரின் மீது நாமும் ஸலவாத்து கூறுகிறோம்.அவர்கள் சொல்வதை பார்த்தால் எங்களுடைய தலைவர், எங்களுடைய அப்படி இப்படி என்று புகழ்ந்து கொண்டே செல்வார்கள்.

ஸலவாத்து வருவதற்கு முன்பு எத்தனையோ வார்த்தைகள் வரும். இந்த வார்த்தைகளெல்லாம் அல்லாஹ்விடத்தில் ஒரு கனம் உள்ளதாக ஆகாது, எதுவரை அங்கே உண்மையான மதிப்பும் பின்பற்றுதலும் இல்லையோ.

மேலும், அந்த வார்த்தையில் வரம்பு மீறிய வார்த்தைகள் இருக்கக் கூடாது. அல்லாஹ்வுடைய ஸிஃபத்துகளுக்கு நிகரான புகழ்தல் அங்கே இருக்கக் கூடாது.

எந்த தன்மை என்னிடத்தில் இல்லையென்று சொன்னார்களோ அந்த தன்மைகளை கொண்டு அல்லாஹ்வுடைய தூதரை புகழக் கூடாது.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் அன்ஸாரி சிறு பெண் பிள்ளைகள் ஒரு நாள் வீட்டில் திருமணம் நடந்த பொழுது, ரஸூலுல்லாஹ் அந்த திருமணத்திற்கு வந்திருந்தார்கள்.

அந்த பிள்ளைகள் விளையாண்டுக் கொண்டு, ரஸூலுல்லாஹ் வந்தவுடனே ரஸூலுல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் விதமாக கவிதை பாடினார்கள்.

சிறிய பிள்ளைகள்,நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடை பல முன்னறிவிப்புகளை கேட்டிருந்த சின்ன பிள்ளைகள் சொன்னார்கள் :

وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ

எங்களோடு அல்லாஹ்வுடைய தூதர் இருக்கிறார், நாளை நடப்பதை அவர் அறிவார் என்று.

«لاَ تَقُولِي هَكَذَا وَقُولِي مَا كُنْتِ تَقُولِينَ»

உடனே, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த சின்ன பிள்ளைகளை அங்கே அழைத்தார்கள், இந்த வரியை விட்டு விடுங்கள், இதற்கு முன்பு நீங்கள் கூறிக் கொண்டிருந்த அந்த வரியை பாடுங்கள் என்று.(2)

அறிவிப்பாளர் : ருபய்யிஃ பின்த் முஅவ்வித் ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி, எண் : 4001.

قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ وَلَوْ كُنْتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءُ

(மேலும்,) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ் நாடினாலே தவிர நான் எனக்கு ஒரு நன்மையையோ தீமையையோ செய்து கொள்ள சக்தி பெறமாட்டேன். நான் மறைவானவற்றை அறியக்கூடுமாயின் நன்மைகளையே அதிகமாகத் தேடிக் கொண்டிருப்பேன்; ஒரு தீங்குமே என்னை அணுகி இருக்காது.(அல்குர்ஆன் 7 : 188)

மேலும் அல்லாஹ் நபிக்கு கூறுகிறான்,

قُلْ إِنِّي لَا أَمْلِكُ لَكُمْ ضَرًّا وَلَا رَشَدًا

கூறுவீராக: “நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன்.” (அல்குர்ஆன் 72 : 21)

அல்லாஹ்வின் அடியார்களே! இவ்வளவு தெளிவாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றி சொல்லப்பட்டிருக்க,இன்று புர்தா என்று ஓதுகிறார்களே, மவ்லிது என்று ஓதுகிறார்களே.

எவ்வளவு அளவு கடந்து அல்லாஹ்வுடைய தூதரை புகழ்ந்து வைத்திருக்கிறார்கள்.

ومن علمك علم اللوح والقلم

ரஸூலுல்லாஹ்வே!உங்களுடைய அறிவில் கொஞ்சம் தான் லவ்ஹூல் மஹ்ஃபூலில் இருக்கக் கூடிய அறிவு என்று கூறுகிறார்கள்.

ரஸூலுல்லாஹ்வை பார்த்து இப்படி புகழ்கிறார்கள்.

மேலும் கூறுகிறார்கள்,

وما سواك عند حلول الحادث العمم

அல்லாஹ்வின் தூதரே! பெரிய ஆபத்துகள் எங்களுக்கு ஏற்படும் பொழுது உங்களை தவிர எங்களுக்கு வேறு யார் இருக்கிறார்கள்?நாங்கள் பாதுகாப்பு தேடுவதற்கு என்று.

சகோதரர்களே! இந்த வார்த்தை ரஸூலுல்லாஹ்வுடைய ஹயாத்தில் அவர்களுக்கு முன்னால் சொல்லப்பட்டுருக்குமேயானால் ரஸூலுல்லாஹ் கடுமையாக சினம் கொண்டு கண்டித்திருப்பார்கள்.

ஒரு முறை புதிதாக இஸ்லாமை ஏற்றவர்,ரஸூலுல்லாஹ்விடத்தில் ஒரு தேவையை கேட்டு வந்த பொழுது,அப்பொழுது அவர் கூறினார்,

مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ

அல்லாஹ் நாடினால் நீங்கள் நாடினால் எனக்கு இந்த காரியம் நடக்கும் என்று.

உடனே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எவ்வளவு கோபப்பட்டு சொன்னார்கள் தெரியுமா?

«جَعَلْتَنِي لِلَّهِ عَدْلًا، مَا شَاءَ اللَّهُ وَحْدَهُ»

என்னை அல்லாஹ்விற்கு சமமாக நிகராக ஆக்கிவிட்டாயா? அல்லாஹ் மட்டும் நாடினால் நடக்கும் என்று சொல்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 3247, நூல் : நசாயி, எண் : 3773.

சகோதரர்களே! இவ்வளவு தெளிவாக தவ்ஹீதை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போதித்தார்கள்.

அல்லாஹ்வுடைய உதவி இல்லாமல் அல்லாஹ்வுடைய நாட்டமில்லாமல் இரட்சிப்பு இல்லை. எல்லோரையும் இரட்சிப்பவன் அல்லாஹ் தான்.

இதைதான் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நமக்கு கற்றுக் கொடுத்தார்கள்.

இவர்கள் மவ்லிது கிதாபுகளில் என்ன எழுதியிருக்கிறார்கள் தெரியுமா? ஆரம்பத்திலிருந்து எத்தனை ஷிர்க்குகள் தெரியுமா?

اول ما خلق الله نور محمد

அல்லாஹ் முதலாவதாக படைத்ததே என்னுடைய ஒளியை என்று எழுதி வைத்திருக்கிறார்கள். பக்கத்தில் ஹதீஸ் என்று போட்டிருப்பார்கள்.

அது எந்த கிதாபில் வரக்கூடிய ஹதீஸ்? யார் அறிவிக்கக் கூடிய ஹதீஸ்? அறிவிப்பாளருடைய தொடர் என்ன? எதுவுமே இருக்காது.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா முதலாவதாக படைத்தது, அவனுடைய கலம் என்று கூறினான், அர்ஷுக்கு அடுத்ததாக.

وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ

(அச்சமயம்) அவனுடைய ‘அர்ஷு' நீரின் மீதிருந்தது. (அல்குர்ஆன் 11:7)

இப்படிதான் ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. இவர்கள் என்ன சொல்கிறார்கள்? முதலாவதாக அல்லாஹ் படைத்தது, ரஸூலுல்லாஹ்வுடைய ஒளியை என்று கூறுகிறார்கள்.

மேலும் அவர்கள் கூறுகிறார்கள்,

أنا نور الله وكل شيء من نوري

நான் அல்லாஹ்வுடைய ஒளியிலிருந்து வந்தேன்.எல்லாம் என்னுடைய ஒளியிலிருந்து வந்தவை.

மவ்லிது கிதாபுகளில் எழுதப்பட்டிருக்கக் கூடிய வாசகம் பக்கத்தில் ஹதீஸ் என்று எழுதியிருப்பார்கள்.

எந்த கிதாபில் வந்திருக்கிறது? யார் அறிவிக்கிறார்கள்? எதுவும் இருக்காது.

ஒரு விஷயத்தை சொல்கிறேன், மனதில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள். மார்க்கத்தில் ஒரு காரியம் பித்அத் -அனாச்சாரம், வழிகேடு என்று நீங்கள் அடையாளம் காணுவதற்கு அதை செய்பவர்களிடத்தில் உங்களுக்கு இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் பொய்யான ஹதீஸ்களையும், பொய்யான கட்டுக் கதைகளையும் அள்ளி விடுவதை தவிர, வேறு எதையும் அவர்கள் கொண்டு வர முடியாது.

ஒரு சில நாட்களுக்கு முன்னால் வாட்சப்பில் ஒரு ஆலிம் பேசுவதாக செய்தி. ஹுப்புஸ் ஸாலிஹீன் -ஸாலிஹீன்களை நேசிக்கக் கூடியவர்களே! ரசூலை நேசிக்கக் கூடியவர்களே! அந்த பாக்கியம் நமக்கு கிடைக்க வேண்டும்.உலக அதிசயமல்ல, அதை விட பேரதிசயம். என்ன தெரியுமா?

ரஸூலுல்லாஹ் எந்த ஜிப்பாவோடு அர்ஷுக்கு போனார்களோ அந்த ஜிப்பாவை உவய்சுல் கர்னிக்கு கொடுத்தார்களே, அது இஸ்தான்பூலில் வைக்கப்பட்டிருக்கிறது.

அதை பார்ப்பது எவ்வளவு பாக்கியம் தெரியுமா? அங்கே ஒரு மஸ்ஜிது இதற்காக கட்டப்பட்டிருக்கிறது. எல்லோரும் அதை ஜியாரத் செய்கிறார்கள். நாமும் அதை ஜியாரத் செய்வோம் வாருங்கள் என்பதாக.

சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிஃராஜ் சென்றார்கள் என்பது அல்லாஹ்வின் மீது சத்தியமாக! குர்ஆனுடைய செய்தி. ஹதீஸ் முதவாத்திர் -நூற்றுக் கணக்கான ஸஹாபாக்கள் அறிவிக்கக் கூடிய செய்தி.

அங்கே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு என்ன அற்புதங்களை அல்லாஹ் காட்டினான் என்று குர்ஆனில் கூறுகிறான், ஹதீஸ்களில் சொல்கிறான். முடிந்தது.

நாம் எந்த ஜிப்பாவை போட்டு சென்றேன், எந்த பைஜாமாவை போட்டு சென்றேன் என்று ஒரு ஹதீஸில் கூட கிடையாது.

அதற்கு பிறகு, உவைசுல் கருனியைப் பற்றி ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு நற்செய்தி சொல்லியிருக்கிறார்களே தவிர, நான் மிஃராஜுக்கு போட்டுக் கொண்டு சென்ற ஜிப்பாவை அவருக்கு அன்பளிப்பாக கொடுங்கள் என்று எந்த அறிவிப்பாளரிடமிருந்து இவர்கள் எடுத்தார்கள்?

ஏதாவது ஸனது இருக்கிறதா?வரலாற்று ஆசிரியர்கள் அது போன்று மார்க்கத்தின் மூத்த ஆய்வு அறிஞர்களின் அடிப்படையில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பயன்படுத்திய எந்த ஒரு பொருளும் இவ்வுலகத்தில் இல்லை என்பது கருத்து.

இருக்கிறது என்று ஒருவன் கூறுவானேயானால் அறிவிப்பாளர் தொடர் காட்ட முடியாது, வரலாற்று ஆதாரம் காட்ட முடியாது, மாறாக அது முற்றிலுமாக இட்டுக்கட்டப்பட்ட செய்தி.

எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள்? பாருங்கள்.

இப்படி பல விஷயங்களை இந்த மவ்லிது கிதாபில் எழுதி வைத்துள்ளர்கள்.

அது நடந்து முடிந்தது, நடந்து கொண்டிருக்கிறது, மாதம் முமுவதுமாக மீலாது மவ்லீது என்று.

அடுத்த மாதம் ரபுய்யுஸ்ஸானி, ரபியுல் ஆகிர். ஆனால், இவர்களிடத்தில் அதற்கு அந்த பெயர் கிடையாது. முஹைதீன் ஆண்டவர் மவ்லிது மாதம். இப்பொழுது ரஸூலுல்லாஹ்வுடைய மவ்லீது மாதம்.

ரபியுஸ்ஸானி வந்து விட்டால் அதற்கு ரபியுஸ்ஸானி என்று பெயர் கிடையாது, ரபியுல் ஆகிர் என்று பெயர் கிடையாது. முஹைதின் ஆண்டவர் மவ்லிது மாதம், அடுத்து ஜுமாதில் ஊலா வந்து விட்டால் அஜ்மீர் ஹாஜா மவ்லீது மாதம்.

அடுத்து ஜுமாதில் உக்ரா சாகுல் ஹமீது நாயம் மவ்லீது மாதம். எந்த மாதிரியான வழிகேடுகள்?

ஏன் இந்த மவ்லீதை ஓதக்கூடாது? இது ஒரு ஷிர்க் நிராகரிப்பில் கொண்டு போய் சேர்க்கக் கூடியது. இது ஒரு பாவமான பொய்யான செய்தி என்று சொல்கிறோம்.

அந்த மவ்லீது புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய முதுகுள்ளே ரஸூலுல்லாஹ் இருந்த காரணத்தினால் தான் அந்த வெள்ளப்பிரயலத்தில் கப்பல் தடுமாறமால் பாதுகாப்பாக இருந்தது என்று.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய முதுகுக்குள்ளே ரஸூலுல்லாஹ் இருந்த காரணத்தினால் தான் நெருப்பு அவர்களை தீண்டவில்லை என்று.

சகோதரர்களே! அல்லாஹ்வின் மீது ரஸூலின் மீது பொய் கூறுவது என்பது மற்ற மனிதர்களின் மீது பேசுவதை போன்று அல்ல.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்,

«إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ، مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»

என் மீது பொய் கூறுவது உங்களில் மற்றவர் மீது பொய் கூறுவதை போன்று கிடையாது.  என் மீது எவன் ஒருவன் பொய் கூறுவானோ அவன் தன்னுடைய இடத்தை நரகத்தில் ரிசர்வு செய்து கொள்ளட்டும்.

அறிவிப்பாளர் : முகீரா இப்னு ஷுஃபா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1291.

இந்த மவ்லீதை பற்றி ஒருவர் பயான் செய்கிறார். அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மவ்லீது ஓதுவதை பற்றி கூறினார்கள். யார் மவ்லீது ஓதுவாரோ அதற்காக செலவழிப்பாரோ, அதை ஓதுபவர்களுக்கு உணவளிப்பார்களோ அவர் சொர்க்கம் செல்வார்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள், யார் மவ்லீது ஓதுவாரோ, மவ்லீதுக்காக செலவழிப்பாரோ, மவ்லீதுக்கு சாப்பாடு கொடுப்பாரோ அவர் சொர்க்கம் செல்வார். இப்படி எல்லா எல்லா கலீஃபாக்கள் பெயரிலும் சொல்கிறார்கள்.

இந்த மவ்லீது வந்ததே நாணுறு ஐநூறு வருடத்திற்கு முன்னால் தான். இது ஃபாத்திமியா மன்னர்கள் உருவாக்கியது.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் மவ்லீது இருந்தது, ஹுலஃபாக்கள் மவ்லீது ஓதினார்கள் என்றால், அவர்களுக்கு முன்னால் நாம் அல்லவா செய்திருப்போம்.

சண்டையே எதற்கு? பிரச்சனையே எதற்கு? அதை தான் நான் உங்களுக்கு திரும்பவும் கூறுகிறேன்.

ஒரு விஷயம் பித்அத், அனாச்சாரம், வழிகேடு என்று அறிந்து கொள்வதற்கு நீங்கள் மிகத் தெளிவாக ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு குர்ஆனிலிருந்து ஆதாரம் இருக்காது, ஸஹீஹான ஹதீஸிலிருந்து ஆதாரம் இருக்காது. இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்திகளை தவிர, பொய்யான கற்பனைகளை தவிர.

இன்று, மக்கள் எதை சொன்னாலும் சரி ஹுப்புர் ரஸூல் -ரஸூலுல்லாஹ்வுடைய நேசத்தில் செய்கிறோம்.

அல்லாஹ்வுடைய தூதரின் நேசம் இருக்குமேயானால் அவர்களுக்கு கீழ்படி, கட்டுப்படு, அவர்கள் சொல்லிய மார்க்கத்தில் எப்படி புதுமையை நீ செய்கிறாய்?

«مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ»

நமது மார்க்கத்தில் ஒருவர் புதிதாக உண்டாக்கினால் அது மறுக்கப்பட வேண்டியது.

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி, எண் : 2697.

«مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ»

நான் சொல்லாத ஒரு அமலை ஒருவர் செய்தால் அது தூக்கி எறியப்பட வேண்டியது என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்களே.

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 1718.

அவர்கள் சொல்லாத வழிகாட்டாத ஒன்றை எப்படி ஒரு அமலாக, அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கக் கூடிய ஒரு இபாதத்தாக செய்ய முடியும்?

சகோதரர்களே! அல்லாஹ்வுடைய நேசம் உண்மையாக இருக்குமேயானால், தூதருடைய நேசம் உண்மையாக இருக்குமேயானால் முதலாவதாக, நமக்கு அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் பயம் வர வேண்டும்.

நான் வரம்பு மீறி விடக் கூடாது, அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் துணிவு கொண்டு, அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரஸூலும் சொல்லாததை செய்து விடக் கூடாது என்ற பயம் வர வேண்டும்.

அந்த பயம் இல்லையென்றால், ஷைத்தான் ஷிர்க்கை கொண்டு வழிகெடுக்க முடியவில்லை என்றால், அடுத்ததாக அவன் பித்அத்தை கொண்டு தான் வழிகெடுப்பான்.

பித்அத்தில் தள்ளி அங்கிருந்து ஷிர்க்கிற்கு அழைத்து சென்று விடுவான். ஒரு முஸ்லிமை கோயிலுக்கு நேரடியாக அழைத்தால் வரமாட்டான். ஆனால், அதே முஸ்லிமை தர்ஹாக்களுக்கு அழைத்து, அங்கிருந்து அவனை ஷிர்க்கில் கொண்டு வந்து விடலாம்.

ஷிர்க் என்பது எங்கு நடந்தாலும் ஷிர்க் தான். அல்லாஹ் அதை மன்னிக்கமாட்டான். அறியப்படாத ஒரு மனிதரை அல்லாஹ்விற்கு சமமாக ஆக்கினாலும் சரி, அதுவும் ஷிர்க் தான்.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நஸாராக்கள் அல்லாஹ்விற்கு சமமாக்கினார்களே, அதுவும் ஷிர்க் தான்.

ஆகவே, அல்லாஹ்வின் அடியார்களே! ஒரு பக்கம் மார்க்கத்தினுடைய விழிப்பு, மார்க்கத்தினுடைய தெளிவு மக்களுக்கு மத்தியில் வந்து கொண்டிருக்கிறது என்று நாம் சந்தோஷப்பட்டாலும் கூட, ஆனால் இன்றும் பெரும்பாலான மக்களிடத்தில், வாலிபர்களிடத்தில், பெண்களிடத்தில் இந்த அறியாமை, மடத்தனம், முட்டாள்தனம், பித்அத்துகளுடைய பற்று அதிகமாகி கொண்டிருப்பதை பார்க்கிறோம்.

ஆகவே, நன்மையை ஏவி தீமையை தடுப்பது நம்மீது கடமை என்ற அடிப்படையில் இந்த அனாச்சாரங்களை குறித்து எச்சரிக்கைகளை, அறிவுறுத்தல்களை அழகிய முறையில் நாம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.

இவற்றில் நாம் கவனக்குறைவாக இருப்போமேயானால் இந்த பித்அத்துகள் பரவ ஆரம்பித்து, வேரூண்ட ஆரம்பித்து விட்டால், அடுத்த தலைமுறை சுன்னத்தை மறந்து விடும், அடுத்த தலைமுறை மார்க்கத்தினுடைய நேர்வழியை மறந்து இந்த சடங்குகளில் சென்று விடுவார்கள்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ: مَنْ كَانَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَمَنْ أَحَبَّ عَبْدًا لاَ يُحِبُّهُ إِلَّا لِلَّهِ عَزَّ وَجَلَّ، وَمَنْ يَكْرَهُ أَنْ يَعُودَ فِي الكُفْرِ، بَعْدَ إِذْ أَنْقَذَهُ اللَّهُ، مِنْهُ كَمَا يَكْرَهُ أَنْ يُلْقَى فِي النَّارِ " (صحيح البخاري 21)

குறிப்பு 2)

حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ: دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ بُنِيَ عَلَيَّ، فَجَلَسَ عَلَى فِرَاشِي كَمَجْلِسِكَ مِنِّي، وَجُوَيْرِيَاتٌ يَضْرِبْنَ بِالدُّفِّ، يَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِهِنَّ يَوْمَ بَدْرٍ، حَتَّى قَالَتْ جَارِيَةٌ: وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَقُولِي هَكَذَا وَقُولِي مَا كُنْتِ تَقُولِينَ» (صحيح البخاري -4001)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/