HOME      Khutba      அல்லாஹ்வின் உதவி வரும்!! | Tamil Bayan - 619   
 

அல்லாஹ்வின் உதவி வரும்!! | Tamil Bayan - 619

           

அல்லாஹ்வின் உதவி வரும்!! | Tamil Bayan - 619


அல்லாஹ்வின் உதவி வந்தே தீரும்.

ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்லாஹ்வின் உதவி வந்தே தீரும்.

வரிசை : 619

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 28-02-2020

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் அச்சத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக, இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்வதோடு அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவிடத்தில் அவனுடைய அழகிய திருப்பெயர்களை கொண்டும் அவனுடைய உயர்ந்த பண்புகளைக் கொண்டும் துஆ செய்கிறோம்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா குழப்பங்களை நீக்கி, நிம்மதியைஅமைதியை தருவானாக! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா பாதிக்கப்பட்ட சமுதாயமாகிய நமக்கு சிறந்த இழப்பீடை இம்மையிலும் மறுமையிலும் தந்தருள்வானாக!

யாரெல்லாம் இந்த சோதனையில் கொல்லப்பட்டார்களோ, பாதிப்புக்கு உள்ளானார்களோ, அவர்கள் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா துணைநின்று, அவனுடைய உதவியைஇம்மையிலும் மறுமையிலும் செய்தருள்வானாக!

அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா அநியாயம் செய்த கூட்டத்திற்கு அவனது தகுந்த படிப்பினையை தந்தருள்வானாக! அதன் மூலம் எஞ்சி இருப்பவர்கள் பாடமும் படிப்பினையும் பெறுவதற்குரிய நல்ல அறிவை அல்லாஹு தஆலா தந்தருள்வானாக!

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா நிம்மதியைக் கொண்டும், பாதுகாப்பைக் கொண்டும், நம்மை சூழ்ந்து கொள்வானாக! ஆமீன்.

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஒரு முஃமின், இதுபோன்ற சோதனைகள் சூழ்ந்து நிற்கும் காலகட்டத்தில் அவன் எப்படி இருக்க வேண்டும்? அவனுடைய நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும்? அவனுடைய மார்க்க நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும்? என்பதைத்தான் இந்த ஜும்ஆவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

நமது உள்ளம் மிகப் பலவீனமான ஒன்று. அதிலும் அதில் இருக்கக்கூடிய நம்முடைய இறை நம்பிக்கையோ அதுவும் பலவீனமாகத்தான் இருக்கிறது.

அல்லாஹு தஆலா இந்த இறை நம்பிக்கையை நமக்கு பலப்படுத்தி தரவேண்டும். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு துஆவை நாம் பார்க்கிறோம் :

اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ

அல்லாஹ்வே! உன்னுடைய பயத்தின் ஒரு பெரும் பங்கை ஒரு பெரும் பகுதியை நீ எங்களுக்குக் கொடு! அந்த பயம் உன்னுடைய பாவத்திற்கும் எங்களுக்கும் மத்தியில் தடையாக இருக்கும். (1)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3502.

இது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த துஆ.

சில நேரங்களில் நஃப்ஸ் நம்மை பாவம் செய்ய தூண்டும். யாரும் நம்முடைய நஃப்ஸை பீத்திக் கொள்ள முடியாது.

யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் கூறுகிறார்கள் :

وَمَا أُبَرِّئُ نَفْسِي إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوءِ إِلَّا مَا رَحِمَ رَبِّي إِنَّ رَبِّي غَفُورٌ رَحِيمٌ

‘‘நான் (தவறுகளிலிருந்து) தூய்மையானவன்'' என்று என்னை பரிசுத்தம் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால், என் இறைவன் அருள் புரிந்தாலன்றி மனிதனின் சரீர இச்சை, பாவம் செய்யும்படித் தூண்டக்கூடியதாகவே இருக்கிறது. நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவன் மகா கருணையாளன் ஆவான்'' (என்றார்.) (அல்குர்ஆன் 12:53)

அதுபோன்று இன்னொரு பக்கம் ஷைத்தான் நம்மை தூண்டுவான். நமது இச்சைகளை தூண்டுவான். நமது பார்வைகளை சுண்டி இழுப்பான். அதற்குரிய சூழ்நிலைகளை உருவாக்கி கொடுப்பான். (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்)

ஆகவே தான் அந்த தக்வா, இப்படிப்பட்ட நேரங்களில் நமக்கு அந்தப் பாவத்திலிருந்து ஒரு சுவராக ஒரு தடையாக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய அச்சம் அந்தப் பாவத்திலிருந்து நம்மை தடுத்து மறுமையின் சிந்தனையை நமக்கு கொடுக்க வேண்டும். நரகத்தின் பயத்தை நமக்கு கொடுக்க வேண்டும்.

அடுத்து ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அந்த துஆவின் தொடரில் கூறுகிறார்கள்:

وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ

யா அல்லாஹ்! உன்னுடைய வணக்க வழிபாடுகளில் இருந்து பெரும்பங்கு எனக்குக் கொடு. அந்த வணக்க வழிபாடுகள் எனக்கு எப்படி அமைய வேண்டும் என்றால், நீ நல்லவர்களுக்கு வாக்களித்த சொர்க்கத்தில் என்னைக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.(1)

இந்த இடத்தில் ஒன்றை நாம் விளங்க வேண்டும். இன்று நாம் செய்யக்கூடிய நம்முடைய இந்த குறையுள்ள இபாதத்தை வைத்துக்கொண்டு நாம் திருப்தி அடைந்தவர்களாக இருக்கின்றோம்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்படி திருப்தி அடையவில்லை. தான் செய்ததை கொண்டு அவர்கள் ஒருபோதும் திருப்தி அடையவில்லை.

நல்லோர்கள் அப்படித்தான். தான் செய்யாத எவ்வளவு அமல்கள் இருக்கின்றன. அந்த அமல்களை நினைத்து அவர்கள் வருத்தப்பட்டார்கள். செய்த அமலை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதில் உள்ள குறைகளை அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என்று மன்றாடினார்கள்.

செய்யாமல் விடுபட்ட அமலுக்காக வேண்டி அவர்கள் வருந்தினார்கள். இன்று நம்முடைய நிலை,செய்த சின்ன சின்ன அமல்களைக் கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நான் இதை செய்தேன் அதை செய்தேன் என்று.

நூற்றுக்கணக்கு இல்லை, இலட்சக்கணக்கான நல்ல அமல்கள். அதில் எத்தனை ஃபர்ளுகள் வாஜிபுகள் அவையெல்லாம் நம்முடைய வாழ்க்கையில் இல்லாமல் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றைப் பற்றி கைசேதப்படுபவர் இல்லை. அவற்றை நினைத்து வருந்துபவர் இல்லை.

சில சின்ன சின்ன அமல்களை கொண்டோ, அல்லது கடமைகளில் குறைவான அளவைக் கொண்டோ பெருமையாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். (அல்லாஹ் மன்னிப்பானாக)

சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் எப்படி கேட்டார்கள்? யா அல்லாஹ் எனக்கு நல்ல அமல்களுடைய அந்த ஒரு வாய்ப்பை, உனக்கு கீழ்ப்படிந்து உன்னை இபாதத் செய்வதற்குரிய தவ்ஃபீக்கை எனக்கு கொடு. அந்த நல்ல அமல்கள் என்னை சொர்க்கத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

நாளை மறுமையில் வரும் போது தான் ஒரு மனிதனுடைய அமல்கள் எந்த நிலையில் இருக்கின்றது என்பது தெரியும்.

சில நேரங்களில் அமல் செய்திருப்பான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுட்டிக் காட்டியது போன்று,

சிலருக்கு பாதி, சிலருக்கு நான்கில் ஒன்று, சிலருக்கு ஐந்தில் ஒன்று, ஆறில் ஒன்று, சிலருக்கு பத்தில் ஒன்று, சிலருக்கு ஒன்றுமே இல்லாமல் முகத்தில் தூக்கி வீசி எறியப்படும்.

அறிவிப்பாளர் : அம்மார் இப்னு யாசிர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 18894.

இன்னும் சிலருக்கு அமல்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அடியார்களுடைய ஹக்குகளில் அவர்கள் செய்த மோசடி, கொடுக்கல் வாங்கல்களில் அவர்கள் நடந்து கொண்ட நடத்தை, இதன் காரணமாக மலை போன்ற நன்மைகளை எல்லாம் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு பங்கிடப்பட்டதற்குப் பிறகு அவர்கள் நன்மையே இல்லாமல் இருப்பார்கள்.

இன்னும் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகமாக இருப்பார்கள். அல்லாஹு தஆலா அவர்களின் பாவங்களை எல்லாம் இவர்களின் தலை மீது போட்டு இவர்களை முகம் குப்புற நரகத்தில் தள்ளி விடுவான். (2)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2581.

அடுத்து மூன்றாவது, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அந்த வாசகத்தைப் பாருங்கள் :

وَمِنْ الْيَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مُصِيبَاتِ الدُّنْيَا

யா அல்லாஹ்! உலகத்தின் சோதனைகள், அதையெல்லாம் நீ எனக்கு இலகுவாக்கி தரக்கூடிய அளவுக்கு உன் மீது, உனது வாக்கின் மீது எனக்கு யகீனை கொடு.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த துஆ, நமக்கு இந்த நேரத்தில் எவ்வளவு முக்கியம் பாருங்கள்.

கேள்வி படக்கூடிய துன்பங்கள், துயரங்களை, வரக்கூடிய ஒவ்வொரு செய்திகளையும் செவியுறும் போது, நம்முடைய நெஞ்சமெல்லாம் அதிலுள்ள துடிப்பெல்லாம் நின்று விடும் போல இருக்கிறது. அந்த அளவுக்கு ஒவ்வொரு செய்தியும் இருக்கிறது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட அந்த யகீன் நமக்கு வேண்டும். அல்லாஹு தஆலா ஒருபோதும் நம்மை கைவிட மாட்டான். இந்த சோதனைகளுக்கு பின்னால் நிச்சயமாக நமக்கு ஒரு அழகிய முடிவு காத்திருக்கிறது. நாம் பொறுமையாளர்களாக இருந்தால், மார்க்கத்தில் உறுதி உள்ளவர்களாக இருந்தால்கண்டிப்பாக அல்லாஹ்வுடைய உதவி நமக்கு வந்தே தீரும்.

அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா சொல்கிறான்: குர்ஆனை திறந்துப் படியுங்கள். அல்லாஹ்வின் வாக்குறுதிகளை படியுங்கள். அல்லாஹ் நமக்கு கொடுக்கக்கூடிய ஆதரவுகளைபடியுங்கள்.

ரப்புல் ஆலமீன் சூரா காஃபினுடைய 51-வது வசனம் இறைத்தூதர்கள் பட்ட சோதனைகளை எல்லாம் கூறுகிறான்.

இறைத்தூதர்கள் கொல்லப்பட்டார்கள். படுகொலை செய்யப்பட்டார்கள். சாதாரண கொலை அல்ல, படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுடைய நாட்டை விட்டு வீட்டை விட்டு துரத்தி அடிக்கப்பட்டார்கள்.

அல்லாஹு தஆலா சொல்கிறான் :

إِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُومُ الْأَشْهَادُ

நிச்சயமாக நாம் நம் தூதர்களுக்கும், நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் (உதவி செய்வோம். இவர்களுக்காக) சாட்சிகள் வந்து கூறும் (மறுமை) நாளிலும் உதவி செய்வோம். (அல்குர்ஆன் 40:51)

வசனத்தின் கருத்து : ஈமான் உள்ளவர்களுக்கு அல்லாஹ்வுடைய உதவி வேண்டும் என்றால் அந்த ஈமான் நம்மிடத்தில் இருக்கிறதா? ஈமானுடைய அமல்கள் நம்மிடத்தில் இருக்கிறதா? என்று முதலாவதாக சுயபரிசோதனை நாம் செய்து கொள்ள வேண்டும்.

ஒரு முஃமினுக்கு அல்லாஹ் உதவக்கூடிய நேரம் ஒன்று, இந்த உலக வாழ்க்கையில் உதவுவான். அல்லாஹ் கைவிடமாட்டான். அந்த யகீன் நமக்கு வேண்டும்

நாம் எல்லோரும் கொல்லப்பட்டு விட்டாலும் சரி, நாம் நாடு கடத்தப்பட்டு விட்டாலும் சரி, நம்முடைய உடமைகள் பறிக்கப்பட்டு விட்டாலும் சரி, நம்மில் ஒருவர் இறுதியாக மிஞ்சி இருந்தாலும் சரி, அந்த ஒருவர் இந்த யகீனோடு இருக்க வேண்டும்.

உலகத்தில் உள்ள எல்லா மக்களும் நமக்கு எதிராக மாறி விட்டாலும் சரி, என்னுடைய ரப்பு எனக்கு இருக்கிறான். கண்டிப்பாக உதவுவான்.

ஈமான் -இறை நம்பிக்கையின் ஒரு பகுதி, அல்லாஹ்வின் மீது நமக்கு இருக்கக்கூடிய உறுதி.

அல்லாஹ்வுடைய வாக்கின் மீது நமக்கு இருக்கக்கூடிய உறுதி. அல்லாஹ்வுடைய உதவியின் மீது நமக்கு இருக்கக்கூடிய உறுதி.

ஸூரா ஸாஃப்பாத்துடைய 171, 172ஆகிய வசனங்களில் ரப்பு கூறுகிறான் :

وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِينَ

தூதர்களாகிய நம் அடியார்களைப் பற்றி ஏற்கனவே நம் வாக்கு நிச்சயமாக ஏற்பட்டு விட்டது. (அல்குர்ஆன் 37:171)

إِنَّهُمْ لَهُمُ الْمَنْصُورُونَ

ஆதலால், நிச்சயமாக அவர்கள்தான் உதவி செய்யப்படுவார்கள். (அல்குர்ஆன் 37:172)

அஸ்ஹாபுல் உஹ்தூதை நினைத்துப்பாருங்கள். ஃபிர்அவ்னோடு மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அவர்களுடைய சமுதாயத்தின் நிலையையும் நினைத்துப்பாருங்கள்.

இப்ராஹீம் அலைஹிவஸல்லம் அல்லாஹ்வுடைய ஹலீலுடைய நிலையை நினைத்துப் பாருங்கள். இப்படி எத்தனை நபிமார்களுடைய வரலாறுகள் நமக்கு சொல்லப்படுகின்றன.

அவர்கள் எல்லாம் என்ன தோற்றுப் போய் விட்டார்களா? அவர்கள் அல்லாஹ்வால் கைவிடப்பட்டு விட்டார்களா? கண்டிப்பாக அல்லாஹ் தஆலா அநியாயக்காரர்களை அழிப்பான்.

அவன் அவனுடைய விதியில் அதற்கென்று ஒரு அளவுகோலை வைத்து இருக்கின்றான்.  நாம் அவசரப்பட்டு விடக்கூடாது. நாம் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. தைரியத்தை, துணிவை இழந்துவிடக்கூடாது.

என்னுடைய ரப்புடைய வாக்கு சத்தியமாக வரும் என்ற நம்பிக்கையில், அந்த உதவிக்காக துஆவில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஸபுரோடு இருந்துகொண்டே இருக்கவேண்டும்.

ரப்புல் ஆலமீன் கூறுகிறான் :

وَتِلْكَ الْقُرَى أَهْلَكْنَاهُمْ لَمَّا ظَلَمُوا وَجَعَلْنَا لِمَهْلِكِهِمْ مَوْعِدًا

பாவம் செய்துகொண்டிருந்த இவ் ஊர்வாசிகள் அனைவரையும் நாம் அழித்து விட்டோம். எனினும், அவர்களை அழிப்பதற்கும் நாம் ஒரு தவணையை ஏற்படுத்தி இருந்தோம். (அத்தவணை வந்த பின்னரே நாம் அவர்களை அழித்தோம்.)(அல்குர்ஆன் 18 : 59)

அல்லாஹ்வுடைய பிடி பயங்கரமானது. மனிதன் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது.

وَكَأَيِّنْ مِنْ قَرْيَةٍ عَتَتْ عَنْ أَمْرِ رَبِّهَا وَرُسُلِهِ فَحَاسَبْنَاهَا حِسَابًا شَدِيدًا وَعَذَّبْنَاهَا عَذَابًا نُكْرًا

எத்தனையோ ஊர்வாசிகள் தங்கள் இறைவனின் கட்டளைக்கும், அவனுடைய தூதர் களுக்கும் மாறுசெய்தனர். ஆதலால், அவர்களை நாம் வெகு கடினமாகவே கேள்வி கணக்குக் கேட்டு, அவர்களை மிகக் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்தோம். (அல்குர்ஆன் 65 : 8)

மனித இராணுவத்தால் அல்லாஹ்வின் வேதனையை தடுக்கமுடியாது. மனித திட்டங்களால் அல்லாஹ்வின் வேதனையில் இருந்து இந்த மனிதர்கள் தப்பிக்க முடியாது.

உலகமே சேர்ந்து அல்லாஹ்வுடைய தண்டனையைத் தடுக்க நினைத்தாலும், அல்லாஹ் நாடினால் ஒரு நொடிதான். அல்லாஹு தஆலா அழித்து ஒழித்து விடுவான்.

ஆனால் ரப்பு சொல்கிறான்:நீங்கள் அவசரப்படாதீர்கள்.

ரப்புல் ஆலமீன் நம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சொல்வதைப் பாருங்கள்:

فَاصْبِرْ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَلَا يَسْتَخِفَّنَّكَ الَّذِينَ لَا يُوقِنُونَ

ஆகவே, (நபியே!) நீர் (சகித்துக்கொண்டு) பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி மெய்யானது. (ஆகவே, முடிவில் நபியே! நீர்தான் வெற்றி பெறுவீர்.) மறுமையை நம்பாத இவர்கள் நிச்சயமாக உம்மை இலேசாக எண்ணிவிட வேண்டாம். (அல்குர்ஆன் 30 : 60)

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பட்ட துன்பத்தை இந்த நேரத்தில் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவர்களுடைய தோழர்களோடு, அவர்களுடைய இரத்த உறவுகளாகிய முஷ்ரிக்குகள் கொடூர குறைஷி குஃப்ஃபார்கள், குறைஷித் தலைவர்கள், ஈமானை ஏற்றுக்கொண்ட தங்களது ரத்த உறவுகளோடு நடந்து கொண்ட அந்த கொடூர காரியங்களை நினைத்துப் பாருங்கள்.

அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கஅபாவில் ஸுஜூதில் இருக்கும் போது ஒட்டகத்தின் குடலை அவருடைய கழுத்தின் மீது போட்டார்கள்.

நூல்: அர்ரஹீக் அல்மக்தூம்.

ரசூலுல்லாஹ் உடைய வம்சத்தை சேர்ந்த அபூஜஹ்ல் ரசூலுல்லாஹ்வின் கழுத்தில் மிதித்து அவர்களை கொன்று விடுவேன் என்று ஓடி வருகிறான்.

அபூபக்ருடைய உறவினர்கள், உமருடைய உறவினர்கள், உஸ்மானுடைய உறவினர்கள், இரத்த உறவுகள் இவர்களெல்லாம் ஈமான் கொண்ட ஒரே காரணத்தால் இவர்கள் மீது செய்த கொடுமைகளை கொஞ்சம் படித்துப் பாருங்கள் .

பதிமூன்று ஆண்டுகால கொடுமைகள் சாதாரண கொடுமை அல்ல. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹு தஆலா எப்படி மன ஆறுதலை தருகிறான் பாருங்கள்! எத்தகைய யகீன் -மன உறுதியை கொடுக்கிறான் பாருங்கள்!

நபியே!இன்னும் பொறுங்கள். சகித்துக் கொள்ளுங்கள். இன்னும் மன உறுதியோடு இருங்கள்.அல்லாஹ்வுடைய வாக்கு உண்மைதான்.

சில பலவீனமான உள்ளங்கள் நினைக்கின்றன;இஸ்லாமிற்கு எதிர்காலம் இல்லையா? அல்லாஹ்வுடைய உதவி வராதா? நாம் எவ்வளவு காலம் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

சகோதரர்களே! நாம் துன்பப்படக் கூடிய இந்த நேரத்தில் நாம் எந்த அளவு அல்லாஹ்வை முன்னோக்கி இருக்கிறோம்?நமது அமல்களை சீர்திருத்தம் செய்து இருக்கிறோம்?நம்முடைய பாவங்களை விட்டு விலகி இருக்கிறோம் என்று பரிசோதனை செய்தோமா?

ரப்புல் ஆலமீன் கூறுகிறான்:

وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ

நம் கட்டளைகளைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்த இஸ்ராயீலின் சந்ததிகளில் இருந்த ஒரு கூட்டத்தினரை அவர்களுக்கு வழி காட்டிகளாக அமைத்தோம். அவர்கள் நம் வசனங்களை முற்றிலும் உறுதியுடன் நம்பியவர்களாக இருந்தனர்.(அல்குர்ஆன் 32 : 24)

யகீனும், ஈமானும், அமலும் இல்லை என்றால், சிதறிக் கிடக்கக்கூடிய மக்கள் அல்லாஹ்வுடைய உதவியை எப்படிப் பெறமுடியும்? அல்லாஹ்வுடைய மார்க்கத்தை விட்டு விலகி இருக்கக் கூடிய மக்கள் அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையாவதை எப்படி பார்க்கமுடியும்?

அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்: நபியே! இன்னும் பொறுங்கள்.

எவ்வளவு காலம் பொறுக்க வேண்டும்? அல்லாஹ்வுடைய உதவி வரும் வரை பொறுத்துத்தான் ஆகவேண்டும்.

நாம் அல்லாஹ்வை கேள்வி கேட்க முடியாது. அல்லாஹ்விடத்தில் மன்றாடத்தான் முடியும். அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்க முடியும். கையேந்த முடியும். அவன் ஒரு தவணை வைத்திருக்கிறான்.

இந்த நேரத்தில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் செய்த உபதேசம் அப்படியே நமக்கு பொருந்துகின்றது.

நபியே! நீங்கள் பொறுமையாக இருக்கிறீர்கள். மன உறுதியுடன் இருக்கின்றீர்கள். அல்லாஹ்வுடைய வாக்குறுதியை எதிர்பார்த்துத்தான் இருக்கிறீர்கள். ஆனால் அது வர தாமதமாகும் போது மறுமையை நம்பாதவர்கள் உங்களை ஏளனமாக பேசுகிறார்கள். உங்களோடு விளையாடுகிறார்கள். உங்களுடைய ஈமானோடு, உங்களுடைய மார்க்கத்தோடு உங்களை பரிகாசம் செய்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய உதவி வரும் வரும் என கூறினீர்களே! எப்போது அல்லாஹ்வுடைய உதவி வரும்? கேட்காமல் உன்னுடைய ரப்பு காப்பாற்றுவான் என்று சொன்னீர்களே! வந்து காப்பாற்றட்டும் பார்க்கலாம்.

இந்த இறைநிராகரிப்பாளர்கள் அதிலும் குறிப்பாக இந்த முஷ்ரிக்குகள் உடைய நிலை எப்படி என்றால், அல்லாஹு தஆலா முந்தைய கொடூரமான காலகட்டங்களில் வாழ்ந்த காஃபிர்களை எப்படி வர்ணிக்கிறானோ, அந்த குணத்திலிருந்து இந்த முஷ்ரிக்குகள் ஒருபோதும் மாறமாட்டார்கள்.

இவர்களுடைய உலக படிப்பறிவு எவ்வளவுதான் முன்னேறினாலும் சரி, ஃபிர்அவ்ன் எப்படி கூறினான்?

وَقَالَ فِرْعَوْنُ يَا هَامَانُ ابْنِ لِي صَرْحًا لَعَلِّي أَبْلُغُ الْأَسْبَابَ

(அதற்குப் ஃபிர்அவ்ன் தன் மந்திரி ஹாமானை நோக்கி,) ‘‘ஹாமானே! வானங்களின் வாசல்களை நான் அடையக்கூடிய உயர்ந்ததொரு கோபுரத்தை நீ எழுப்பு. (அல்குர்ஆன் 40:36)

أَسْبَابَ السَّمَاوَاتِ فَأَطَّلِعَ إِلَى إِلَهِ مُوسَى وَإِنِّي لَأَظُنُّهُ كَاذِبًا

மூஸாவுடைய ஆண்டவனை நான் பார்க்க வேண்டும். அவர் பொய் சொல்கிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்என்று கூறினான். (அல்குர்ஆன் 40 : 37)

சகோதரர்களே! இன்று நாம் நம்பக்கூடிய அந்த ரப்புல் ஆலமீனை பரிகாசம் செய்கிறார்கள். இவன் அல்லாஹ் என்று கூறினீர்களே! அவன் வரட்டும் காப்பாற்றுவானா என்று.

இதை இவர்கள் மட்டும் சொல்லவில்லை. முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த நபிமார்களுடைய காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகள் காஃபிர்களும் இதைத்தான் சொன்னார்கள்.

அல்லாஹ் நம்முடைய நபிக்கு சொல்லிக்காட்டுகிறான்.

இந்த மறுமையுடைய யகீன் இல்லாதவர்கள், அல்லாஹ்வை நம்பாத இந்த காஃபிர்கள், நபியே! உங்களுடைய பொறுமையை இழக்க வைத்து விட வேண்டாம்.(அல்குர்ஆன் : 30:60)

உங்களுடைய பணியை விட்டு விட வேண்டாம்.

இமாம் தபரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த வசனத்திற்கு இப்படித்தான் விளக்கம் எழுதுகிறார்கள் :

நபியே! நீங்கள் பொறுமையாக இருக்கிறீர்கள். இந்த காஃபிர்கள் பரிகாசம் செய்கிறார்கள். உங்களை ஏளனமாகப் பேசுகிறார்கள். அப்படிப் பேசுவதால் உங்களுடைய பொறுமை குறைந்து விட வேண்டாம். உங்களுடைய சகிப்புத்தன்மை குறைந்து விட வேண்டாம். நீங்கள் செய்யக்கூடிய இந்த தாவா பணியை நீங்கள் விட்டுவிட வேண்டாம். அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

وَدُّوا لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا فَتَكُونُونَ سَوَاءً

(நம்பிக்கையாளர்களே!) அவர்கள் நிராகரிப்பவர்களாகி விட்டபடியே நீங்களும் நிராகரிப்பவர்களாகி அவர்களுக்கு சமமாகிவிடுவதை அவர்கள் விரும்புகிறார்கள். (அல்குர்ஆன் 4:89)

இந்த காஃபிர்களுக்கு, இந்த முஷ்ரிக்குகளுக்குஎது நெருக்கடியாக இருக்கிறது? இந்த நாட்டில் அவர்களைவிட செல்வத்தில்நாம் அதிகமாகி விட்டோமா? அல்லது கல்வியில், படிப்பில் அதிகாரத்தில் அவர்களைவிட நாம் அதிகமாக இருக்கிறோமா? இல்லை.

وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِنْ دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ

அல்லாஹ்வின் பெயரை மட்டும் தனியாகக் கூறப்பட்டால், மறுமையை நம்பாத அவர்களின் உள்ளங்கள் (கோபத்தால்) சுருங்கி விடுகின்றன. அவன் அல்லாதவை(களின் பெயர்கள்) கூறப்பட்டாலோ, அவர்கள் சந்தோஷப்படுகின்றனர். (அல்குர்ஆன் 39:45)

நாம் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் என்று சொல்வது, அவனுடைய உள்ளங்கள் அதனால் சுருங்கி விடுகின்றன.

நம்முடைய ரப்பை அழைத்துஅந்த அல்லாஹ்வை வணங்குவது, அவர்களுக்கு நெருக்கடியாக இருக்கிறது.

நம்முடைய இஸ்லாமிய பற்று, நாம் ஒழுக்கமாக இருப்பது, ஹலால் ஹராமை பேணி இருப்பது, அந்த கொடூர உள்ளம் கொண்ட நெருக்கடியான மனம் படைத்த அவர்களுக்கு இது தொந்தரவாக இருக்கிறது. இதனால் இந்த மார்க்கத்தில் இருந்து நம்மை திருப்பி விடலாம் என்று எண்ணுகிறார்கள்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா சொல்கிறான்:

நபியே! நீங்கள் பொறுமை இழந்து விடாதீர்கள். நீங்கள் யகீனை இழந்து விடாதீர்கள். உங்கள் பணியை நீங்கள் விட்டுவிடாதீர்கள். (அல்குர்ஆன் 30 : 60)

அல்லாஹ் கொடுத்த வாக்கு உண்மை என்று நம்ப வேண்டும். கண்டிப்பாக அல்லாஹ் உதவுவான். கண்டிப்பாக அல்லாஹ்வுடைய உதவி வரும்.

இப்ராஹிம் நபிக்கு அல்லாஹ் உதவி செய்தான். நூஹ் நபிக்கு அல்லாஹ் உதவி செய்தான். ஸாலிஹ் நபிக்கு அல்லாஹ் உதவி செய்தான். ஹூத் நபிக்கு அல்லாஹ் உதவி செய்தான். யூனுஸ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்தான்.

யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்தான். அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்தான். முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்தான். நபிமார்களுக்கும், அந்த நபிமார்களை நம்பிக்கை கொண்ட நல்ல மக்களுக்கும் அல்லாஹ் உதவி செய்து கொண்டுதான் வருகிறான்.

நம்மை அல்லாஹ் கைவிடமாட்டான். அல்லாஹ்வுடைய வாக்கை பற்றி இமாம் அபுல் ஆலியா ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவான் என்று, அல்லாஹு தஆலா தனக்குத் தானே முடிவு செய்திருக்கிறான்.

நீங்கள் ஓதிப் பாருங்கள். சூரத்துத் தகானுடைய பதினோறாவது வசனத்தை,

وَمَنْ يُؤْمِنْ بِاللَّهِ يَهْدِ قَلْبَهُ

யார் அல்லாஹ்வை உறுதியாக நம்பிக்கை கொள்வார்களோ, அவர்களுடைய கல்புக்கு, அல்லாஹ் தஆலா சத்தியத்தின் பக்கம், நேர்மையின் பக்கம், நீதத்தின் பக்கம், உண்மையின் பக்கம், வெற்றியின் பக்கம், அல்லாஹ் வழி காட்டுவான். (அல்குர்ஆன் 64 : 11)

இந்த நேரத்தில் அல்லாஹ்விடத்தில் துஆ செய்வதை தவிர நாம் என்ன செய்யமுடியும்?இது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அபூபக்ரும் குகையில் சிக்கிய நேரத்தை போன்ற நேரம்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அபூபக்ரும், காஃபிர்கள் சூழ, எங்கு நோக்கினாலும் கத்தியோடும், ஈட்டியோடும், குதிரைப் படைகள் ஒரு பக்கம், காலாட்படை ஒரு பக்கம், எதிரிகளால் சூழ்ந்த அந்த குகையில் என்ன செய்வது என்று தெரியாமல் ஒளிந்து கொண்டு இருந்தார்கள்.

அதே நிலைதான் அல்லது அதற்கும் சற்று நெருக்கமான நிலைதான் இன்று நம்முடைய நிலைமை.

அந்த நேரத்தில் அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள் :

لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا

அபூபக்ரே! கவலைப்படாதீர்; அல்லாஹ் நம்மோடு இருக்கிறான். (அல்குர்ஆன் 9:40)

அபூபக்ரே! நாம் இருவராக இருக்க, நம்மில் மூன்றாமவராக அல்லாஹ் இருக்க நீ ஏன் கவலைப்படவேண்டும்?

சுராக்கா துரத்திக் கொண்டு வருகிறார். அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் எந்த ஆயுதமும் இல்லை. அபூபக்ரிடத்திலும் எந்த ஆயுதமுமில்லை. ஓடுகிறார்கள், ஓடுகிறார்கள்.

அபூபக்ர் சொல்கிறார்கள் : அல்லாஹ்வுடைய தூதரே! இதோ விரட்டிக் கொண்டு வருபவர் நமக்கு அருகில் வந்துவிட்டார். இன்னும் சிறிது நேரத்தில் நம்மை கைது செய்து விடுவார். என்ன செய்வது?

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அபூபக்ரை நோக்கி சொல்கிறார்கள்: திரும்பிப் பார்க்காமல் வந்து கொண்டே இருங்கள்.

பதட்டப்படாதீர்கள் அபூபக்கரே! அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்.

அறிவிப்பாளர் : பரா இப்னு ஆசிப் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3615.

அன்பு சகோதரர்களே! எப்போது நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று நினைத்து அல்லாஹ்விடத்தில் கையேந்துகிறோமோ, அப்போது அல்லாஹ்வுடைய உதவி வரும்.

அல்லாஹ் தஆலா சுராக்காவுடைய குதிரையின் காலை பூமி விழுங்கும்படி செய்துவிட்டான். இடரி விழுகிறார். மூன்று முறை நடக்கிறது. பிறகு மன்னிப்பு கேட்கிறார்.

அல்லாஹ்வுடைய தூதர் அவருக்கு வாக்களிக்கின்றார்கள் : நீ இஸ்லாமை ஏற்றுக் கொள்வாய். நீ இந்த இஸ்லாமிய மார்க்கத்திற்குள் வருவாய். உன்னுடைய கைகளில் கிஸ்ராவின் வளையல்கள் அணிவிக்கப்படும் என்று. அதற்குப் பிறகு தான் உனக்கு மரணம் என்று. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. அல்லாஹ் அந்த வாக்கை நிறைவேற்றினான்.

வரலாறை படித்துப் பாருங்கள்.

கிஸ்ரா மன்னன் எப்பேற்ப்பட்ட பேரரசன்! அவன் தோல்வியுறுகிறான். அவனுடைய கஜானாக்கள் மதீனாவிற்கு கொண்டு வரப்படுகிறது. அதிலிருந்த ஸிவார் -கை காப்பை அந்த வளையத்தை எடுத்து உமர் (ரலி) அவர்கள் சுராக்காவிற்கு அணிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரின் முன்னறிவிப்பு என்று.

அதற்குப் பிறகுதான் அவர்கள் மரணப்படுக்கையில் இருந்து மரணத்தை சந்திக்கிறார்கள்.

நூல் : ஷிஃபா – காழிஇயாழ்

அல்லாஹ்விடத்தில் காரியத்தை ஒப்படைக்க வேண்டும். அவன் நம்மை பாதுகாப்பான்.

சூரத்துத் தலாக்குடைய மூன்றாவது வசனத்தை படியுங்கள் :

وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ

அல்லாஹ்விடம் தனது காரியத்தை ஒப்படைத்தவர்களுக்கு அல்லாஹ் போதுமானவன்.(அல்குர்ஆன் 65:3)

مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرَةً وَاللَّهُ يَقْبِضُ وَيَبْسُطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ

(சிரமத்தில் இருப்பவர்களுக்கு தர்மம் கொடுப்பதன் மூலம்) அழகான முறையில் அல்லாஹ்விற்கு கடன் கொடுப்பவர் யார்? அதை அவன் அவர்களுக்கு பன்மடங்கு அதிகரிக்கும்படிச் செய்வான். அல்லாஹ் (பொருளை சிலருக்குச்) சுருக்கியும் கொடுப்பான். (சிலருக்குப்) பெருக்கியும் கொடுப்பான். இன்னும், அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 2:245)

அழகிய கடன் என்றால் என்ன?சொல்லி காட்டாத தர்மம். முகஸ்துதி விரும்பாத தர்மம். பெறுமையை விரும்பாத தர்மம். நன்றியை எதிர்பார்க்காத தர்மம்.

அல்லாஹ்விற்காக அப்படி செய்தால் அவருக்கு அவருடைய செல்வத்தை பன்மடங்காக்கி அல்லாஹ் கொடுப்பான்.

மேலும் இமாம் அபுல் ஆலியா கூறுகிறார்கள் :

நீங்கள் அல்லாஹ்வுடைய யகீனை உணருங்கள். யார் அல்லாஹ்வை அழைக்கிறார்களோ, கண்டிப்பாக அல்லாஹ் அவர்களுக்கு பதில் அளித்தே தீருவான்.

துஆ எப்படி செய்ய வேண்டும்?

என்னுடைய துஆவிற்கு அல்லாஹ் பதிலளிப்பான் என்ற நம்பிக்கையோடு துஆ கேளுங்கள்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா சொல்கிறான் :

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ

(நபியே!) உம்மிடம் என் அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீர் கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நான் உங்களுக்கு சமீபமானவன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்.'' ஆதலால், அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும்; என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேர்வழி அடைவார்கள். (அல்குர்ஆன் 2:186)

இரண்டு நிபந்தனைகளை அல்லாஹ் சொல்கின்றான்.

துஆவிற்கு பதில் வேண்டும். அல்லாஹ்வின் உதவி நம்முடைய துஆவிற்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்ற நாம் இந்த இரண்டை செய்தோமா?

முதலாவது,அல்லாஹ்வுடைய சட்டங்களை மார்க்கத்தை பின்பற்றினோமா?

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா சொல்கின்றான்:

என்னுடைய மார்க்கத்தை, என்னுடைய சட்டங்களை அவர்கள் ஏற்று நடக்கட்டும்.

2. என் மீது அவர்கள் உறுதியான நம்பிக்கையோடு இருக்கட்டும்.

அப்போதுதான் அவர்கள் தீன், துன்யாவுடைய காரியங்களில் நேர்வழி பெற்று நடப்பார்கள். (அல்குர்ஆன் 2:186)

அல்லாஹ்வுடைய சட்டங்களை மீறிக்கொண்டு, மன இச்சைகளில் உழண்டு கொண்டு இருக்கும் போது அல்லாஹ்வுடைய அழைப்பு வரும் என்று எதிர்பார்ப்பது அல்லாஹு ரப்புல் ஆலமீன் கூறக்கூடிய அந்த வாக்குக்கு மாற்றமானது.

ரப்பு சொல்கிறான் :

ذَلِكَ بِأَنَّ اللَّهَ لَمْ يَكُ مُغَيِّرًا نِعْمَةً أَنْعَمَهَا عَلَى قَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ وَأَنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ

எந்த மக்களும் தங்கள் நிலைமையை மாற்றிக் கொள்ளாத வரை நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த அருளை மாற்றி விடுவதில்லை. (அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டதனால்தான் அவர்களுக்கு இவ்வேதனை ஏற்பட்டது.) நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக்க அறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 8:53)

அன்பிற்குரிய சகோதரர்களே! இந்த நேரம் நாம் உணர்ச்சிவசப்படக் கூடிய நேரம் அல்ல. நாம் அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கூடிய நேரம். ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம். நம்முடைய மக்களுக்கு ஈமானைக் கொண்டும், மறுமையைக் கொண்டும் உபதேசம் செய்ய வேண்டிய நேரம்.

அல்லாஹ் உடைய வேதத்தை நாம் திரும்பி படிக்க வேண்டிய நேரம். மார்க்கத்தை கற்க வேண்டிய நேரம் இது. அழைப்புப் பணியை மிக துணிவோடு தைரியத்தோடு செய்ய வேண்டிய நேரம் இது.

அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நாமும் பின்பற்றி, அந்த மார்க்கத்தின் உண்மையை, மறுமையை மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டிய நேரம் இது.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்முடைய பொறுமையைக் கொண்டும், நம்முடைய அழகிய அணுகுமுறையைக் கொண்டும், அவனிடத்தில் நாம் துஆ கேட்க கூடிய இந்த பணிவை கொண்டும், நமக்கு அல்லாஹு தஆலா கண்டிப்பாக உதவி செய்வான்.

இந்த நம்பிக்கை நமக்கு வேண்டும். அல்லாஹு தஆலா நம்மில் பாதிப்படைந்தவர்களுக்கு சிறந்த பரிகாரத்தை தந்தருள்வானாக!

நம்மில் உயிரையும், பொருளையும் இழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா சிறந்த உதவியை, சிறந்த பரிகாரத்தை தந்தருள்வானாக!

எல்லாவிதமான குழப்பங்கள், எதிரிகளின் அச்சுறுத்தல், தொந்தரவுகளில் இருந்தும் அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம்மையும், உலகத்தில் எங்கெல்லாம்  முஸ்லிம்கள் பாதிப்புக்கு உள்ளானார்களோ அங்கும் அவர்களுக்கு உதவி செய்தருள்வானாக!

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா இந்த மார்க்கத்தில் நாம் உறுதியாக இருந்து, அல்லாஹ்வை சந்திக்கின்ற வரை இந்த ஈமானோடு இஸ்லாமோடு வாழ்ந்து, அல்லாஹ்வை சந்திக்கக் கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக!

இஸ்லாமுக்கும், முஸ்லிம்களுக்கும் வெற்றியையும் உயர்வையும் அல்லாஹு தஆலா தந்தருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ زَحْرٍ عَنْ خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ أَنَّ ابْنَ عُمَرَ قَالَ قَلَّمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ مِنْ مَجْلِسٍ حَتَّى يَدْعُوَ بِهَؤُلَاءِ الدَّعَوَاتِ لِأَصْحَابِهِ اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ وَمِنْ الْيَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مُصِيبَاتِ الدُّنْيَا وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا وَلَا تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا وَلَا تَجْعَلْ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَلَا مَبْلَغَ عِلْمِنَا وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا (سنن الترمذي 3424 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ قَالَا حَدَّثَنَا إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ عَنْ الْعَلَاءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ فَقَالَ إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ (صحيح مسلم 4678 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/