HOME      Khutba      691 - சுன்னாவைப் பின்பற்று பித்அத்தை விட்டு விலகு! அமர்வு 1 | Tamil Bayan   
 

691 - சுன்னாவைப் பின்பற்று பித்அத்தை விட்டு விலகு! அமர்வு 1 | Tamil Bayan

           

691 - சுன்னாவைப் பின்பற்று பித்அத்தை விட்டு விலகு! அமர்வு 1 | Tamil Bayan


சுன்னாவைப் பின்பற்று! பித்அத்தை விட்டு விலகு!

ஜுமுஆ குத்பா தலைப்பு : சுன்னாவைப் பின்பற்று! பித்அத்தை விட்டு விலகு!

வரிசை : 690

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 17-12-2021 | 13-05-1443

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவைப் போற்றிப் புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூடியவனாக, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அல்லாஹ்வின் அடியாராகவும் தூதராகவும் இருக்கின்றார்கள் என்று சாட்சி கூறயவனாக,

உங்களுக்கும், எனக்கும் இம்மை மறுமையின் நன்மையை அல்லாஹ்விடத்தில் வேண்டியவனாக, அல்லாஹ்வுடைய அன்பையும், அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும், மறுமையின் வெற்றியையும் வேண்டியவனாகஇந்த குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா இந்த உலக வாழ்க்கையில் நமக்கு நன்மைகளை இலகுவாக்கி கொடுத்து, மறுமையில் சொர்க்கத்தில் உயர்ந்த பாக்கியத்தை அடைய அருள் புரிவானாக! ஆமீன்.

இன்று, மக்கள் பொதுவாக உலகத்தை கண்ணும் கருத்துமாக பாதுகாக்கிறார்கள். உலக விஷயங்கள் ஒவ்வொன்றையும் அறிந்து தெரிந்து அது எப்படி பயன்படுத்த வேண்டுமோ,எப்படி தெரிந்து கொள்ள வேண்டுமோ,அதற்கேற்ப தன்னுடைய துன்யாவை பேணிக் கொள்கின்றார்கள்.

ஆனால், கவலைக்குரிய மன வேதனைக்குரிய செய்தி என்னவென்றால்,மார்க்கம் என்று வந்துவிட்டால் மக்கள் அலட்சியம் செய்து விடுகின்றார்கள். அல்லாஹ் பாதுகாத்த சிலரைத் தவிர.

எந்த அளவு மார்க்கத்தில் அலட்சியப்போக்கு, கவனக்குறைவு, எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதை செய்வது, எது அவர்களுக்குப் பிடிக்கவில்லையோ அதை விட்டுவிடுவது,கண்மூடித்தனமாக முன்னோர்களை பின்பற்றுவது, சடங்கு சம்பிரதாயங்களை செய்வது.

இப்படியாக மார்க்கத்தில் மிக மோசமான நிலையில் நம்முடைய சமுதாயம்  இருப்பதைப் பார்க்கின்றோம்.

இது அல்லாஹ்வுடைய மார்க்கம் ஆயிற்றே! ரப்பு பாதுகாத்த மார்க்கம் ஆயிற்றே! ரப்பு வானத்திலிருந்து இறக்கிய மார்க்கம் ஆயிற்றே! இது குர்ஆனின் மூலமாக கற்றுக் கொடுக்கப்பட்ட மார்க்கம் ஆயிற்றே!

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலமாக, இருபத்தி மூன்று ஆண்டு கால தஃவா பணியின் மூலமாக, முழுமைப்படுத்தி அமானிதமாக பொறுப்பாக நம்மிடத்தில் கொடுக்கப்பட்ட மார்க்கம் ஆயிற்றே!

இதனுடைய ஃபர்ளூ சட்டங்கள் என்ன?விரும்பத் தக்க விஷயங்கள் என்ன? இந்த மார்க்கத்தில் விலக்கப்பட்ட விஷயங்கள் என்ன? ஹலால் ஹராம் விஷயங்கள் என்ன? வெறுக்கப்பட்ட விஷயங்கள் என்றால் என்ன? நபியின் சுன்னா என்றால் என்ன?சுன்னாவிற்கு மாறுபடுவதை எப்படி ஒரு இழிநிலையை மனிதனுக்கு கொண்டு வந்து சேர்த்து விடும்?

இதைப் பற்றியெல்லாம் எந்த ஒரு கல்வி ஞானமும் இல்லை. எந்த அறிவும் இல்லை. எந்த விழிப்புணர்வும் இல்லை.

அல்லாஹ்வின் அடியார்களே! நம்முடைய மார்க்கம் ஒரு சாதாரணமான மார்க்கம் அல்ல.

அல்லாஹ் கூறுகிறான்:

﴿إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ﴾

அல்லாஹ்விடத்தில் ஏற்று½க் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் தான். (அல்குர்ஆன் 3:19)

உலக மக்களெல்லாம், உலகத்தில் உள்ள எல்லா ஞானிகளும், தத்துவ வாதிகளும் சேர்ந்துஒரு தத்துவத்தை, ஒரு ஞானத்தை, ஒரு அமலை கொண்டு வந்தாலும்அது  அல்லாஹ்வுடைய இந்த தீனில் இல்லையென்றால் அல்லாஹ்விடத்தில் நிராகரிக்கப்பட்டது.

இஸ்லாம் என்ற இந்த அல்லாஹ்வினுடைய தீனில் இல்லை என்றால் அது அகிலங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படாது. ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிபாடு, ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை, ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒழுக்கம், ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக பொருளாதாரம் இஸ்லாம் போதிக்கக் கூடியது மட்டும் தான்.

சிலர், இஸ்லாமிய மார்க்கத்தை அரசியலில் மட்டும் புகுத்தி பார்க்கின்றார்கள். சிலர், இஸ்லாமிய மார்க்கத்தை தத்துவத்தில் மட்டும் புகுத்திப் பார்க்கின்றார்கள். சிலர், இஸ்லாமிய மார்க்கத்தை தர்க்க விவாதங்களுக்கு மட்டும் வைத்துக் கொள்கின்றார்கள்.

வாழ்க்கையில் பின்பற்றக் கூடிய ஒரு மார்க்கமாக, கொள்கையாக, ஒரு வழிபாட்டு முறையாக, ஒரு கலாச்சாரமாக எடுத்துக் கொள்வது கிடையாது.

நமது மார்க்கம், பள்ளிகளில், மஸ்ஜிதுகளில், மக்தபுகளில் முடங்கி கிடப்பதற்கு மட்டும் இறக்கப்பட்ட மார்க்கமல்ல.

இதைத் தவிர நான் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அல்லாஹ் எச்சரித்துச் சொல்கின்றான்.

(وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ)

இஸ்லாமையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கவே படமாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்த வராகவே இருப்பார்.(அல்குர்ஆன் 3:85)

வசனத்தின் கருத்து : நீ எத்தகைய ஒரு கொள்கையை கொண்டு வந்தாலும் சரி, உலக மக்களெல்லாம் அந்த கொள்கைக்காக உனக்கு பின்னால் வந்து விட்டாலும் சரி, நீ ஒரு அழகிய வழிபாட்டை உருவாக்கி உலக உலகமெல்லாம் அதை ஏற்றுக்கொண்டு செய்தாலும் சரி, ரப்பு அதை ஏற்றுக் கொள்ளமாட்டான்‌. ரப்பு அதற்கு கூலி கொடுக்க மாட்டான் ‌.

மறுமையில் நீ மிகப் பெரிய நஷ்டவாளியாகத்தான் ஆகுவாய். செய்த அமல்களுக்கு எந்தக் கூலியும் கிடைக்காது. சொர்க்கம் கூலியாக கிடைக்காது. அல்லாஹ்வுடைய அன்பு, அல்லாஹ்வுடைய மன்னிப்பு, அல்லாஹ்வுடைய பொருத்தம் கூலியாக கிடைக்காது.

இந்த உலகத்திலேயே உனக்கு கொடுக்கப்பட வேண்டியது கொடுத்து உன்னுடைய கணக்கு தீர்க்கப்பட்டு விடும். மறுமையில் நீ நஷ்டவாளியாகத்தான் வருவாய்.

இந்த மார்க்கத்தில் எது இல்லை? எல்லாம் இந்த மார்க்கத்திலே இருக்கின்றது. தெளிவான ஒரு மார்க்கத்தில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நம்மை விட்டுச் சென்றார்கள்.

திகைக்க வேண்டிய வழிதப்ப வேண்டிய எனக்கு புரியவில்லையே என்று நினைக்கும் அளவிற்கு இக்கட்டான சூழ்நிலையில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நம்மை விட்டுச் செல்லவில்லை.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :

قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا، لَا يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلَّا هَالِكٌ

தெளிவான ஆதாரத்தில் வெள்ளை நிறத்தில் நான் உங்களை விட்டுச் செல்கிறேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றது. யார் நாசமாகப் போவானோ அவன் தான் இதிலிருந்து வழி தவறி போவானே தவிர,நேர் வழியின் தேடலின் வெளிச்சம், நேர் வழியின் தேடலின் விளக்கு யாருடைய உள்ளத்தில் எறிகின்றதோஅவர் ஒரு போதும் இந்த மார்க்கத்தை விட்டு விலக மாட்டார்.(1)

அறிவிப்பாளர் : இர்பாழ் இப்னு சாரியா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா,எண் : 43, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

அவருக்குத் தேவை என்ன?அல்லாஹ் எதை சொல்கின்றான்? நபி எதைச் சொல்கிறார்? யார் எந்தக் கொள்கையில் சென்றாலும் சரி, யாரிடமிருந்து எதைக் கேட்டாலும் சரி, இது என்னுடைய ரப்பு வேதத்தில் இறக்கி இருக்கின்றானா? என்னுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிகாட்டி இருக்கின்றார்களா? என்பது மட்டும்தான் அவர்களுடைய வாதமாக இருக்கும். ஆதாரமாக இருக்கும்.

என்னுடைய தலைவன் சொல்லிவிட்டானே, நான் பின்பற்றுகின்ற என்னுடைய வலிமார்கள் சொல்லி விட்டார்களே, என்னுடைய ஜமாஅத் சொல்லிவிட்டதே, நான் சேர்ந்திருக்கின்ற, நான் இணைந்திருக்கின்ற கூட்டம் சொல்லிவிட்டதே, என்னுடைய இயக்கம் சொல்லி விட்டதே, என்பதெல்லாம் அவருடைய ஆதாரமாக இருக்காது.

எல்லாரையும் குர்ஆன் சுன்னா உடைய தராசில் வைத்து நிறுப்பார். அந்த கல்லில் அவர் உரசிப் பார்ப்பார். யார் அந்த கல்லில் உரசப்பட்டு உண்மையாக ஆனாரோ அவர்கள்தான் இவருடைய கொள்கையாக, இயக்கமாக, ஜமாஅத்தாக, இவர் ஆதரிக்க கூடியவர்களாக இருப்பார்களே தவிர, இதற்கு மாற்றமாக ஒரு போதும் நடக்க மாட்டார்.

குர்ஆன், ஹதீஸை தன்னுடைய ஜமாஅத்தில் வைத்து உரசி பார்க்க மாட்டார். தன்னுடைய இயக்கத்தில், தன்னுடைய கொள்கையில் வைத்து உரசிப் பார்க்க மாட்டார்.

தன்னுடைய கொள்கைக்கு, தன்னுடைய ஜமாஅத்துடைய கொள்கைக்கு, தன்னுடைய இயக்கத்தின் கொள்கைக்கு,தான் சார்ந்திருக்கின்ற தலைவனின் கொள்கைக்கு ஏற்ப குர்ஆன் ஹதீஸ் இருந்தால் அதை பேசுவது, அப்படி இல்லை என்றால், அதை தஃவீல் செய்வது, அதை மறைப்பது, அதைப் புறக்கணிப்பது, அதைக் கேலி கிண்டல் செய்வது. இதுவல்ல ஒரு முஸ்லிமின் நிலைப்பாடு.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவர் மட்டும்தான் நமக்கு முழுமையான வழிகாட்டி. அவர்களுடைய வழியிலிருந்து எடுத்துச் சொல்லக்கூடிய ஆயிரம் வழிகாட்டிகள் லட்சக்கணக்கான வழிகாட்டிகள் வரலாம்.

ஆனால், அந்த லட்சக் கணக்கான ஆயிரக்கணக்கான வழிகாட்டுதல்கள் எல்லாம், அந்த முதல் நபி என்ற அல்லாஹ்வுடைய அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டுதலின் வழிகாட்டுதலிலிருந்து எடுத்துச் சொல்பவர்கள் தானே தவிர, வழிகாட்டுதல்களை இவர்களே உருவாக்குபவர்கள் அல்ல.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தாஃவாவை ஸஹாபாக்கள் எப்படி பின்பற்றி இருந்தார்கள்? மார்க்கத்தில் அவர்களுடைய நிலைபாடு எப்படி இருந்தது?

அபூதர் ரழியல்லாஹுஅன்ஹுசொல்கின்றார்கள்:

மார்க்கத்தின் விஷயத்தில் மட்டுமல்ல,துன்யாவின் விஷயத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லுகின்ற நடைமுறைகளை நமக்கு சொல்லி காட்டுகின்றார்கள்.

تَرَكْنَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَا طَائِرٌ يُقَلِّبُ جَنَاحَيْهِ فِي الْهَوَاءِ، إِلَّا وَهُوَ يُذَكِّرُنَا مِنْهُ عِلْمًا

வானத்தில் இறக்கைகளை விரித்து பறக்க கூடிய பறவைகளும் எங்களுக்கு ஒரு கல்வி தேவை என்றாலும் அதையும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களுக்கு போதித்து விட்டு தான் இறந்தார்களே தவிர,முறையான கல்வியை சொல்லிக் கொடுக்காமல் செல்லவில்லை. (2)

அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி, எண் : 1647, அஸ்சஹீஹா : 2866.

சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதைக் கொண்டு வந்தார்களோ அதில் இந்த நன்மை இருக்கின்றது. அவர்கள் எதை மார்க்கமாக்கினார்களோ கற்பித்தார்களோ அதுதான் தீன்.

அவர்கள் வாழ்க்கையில் எதை பின்பற்றினார்களோ அதுதான் சத்தியம். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்பற்றிய சுன்னாவை அப்படியே பின்பற்றுவது தான் அல்லாஹ்வை பயப்படுவது ஆகும்.

அல்லாஹு தஆலா சொல்கிறான் :

(ذَلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ)

இதுவே (அவனுடைய கதியாகும்.) எவர் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட அடையாளங்களை கண்ணியப்படுத்துகிறாரோ அது அவருடைய உள்ளத்தின் இறையச்சத்தை அறிவிக்கிறது. (அல்குர்ஆன் 22 : 32)

அல்லாஹு தஆலா தக்வாவிற்கு என்று இறையச்சத்திற்கு என்று ஒரு வெளிப்பாடை வைத்துள்ளான். சிலர், அந்த வெளிப்பாடுகளை ஆடை அலங்காரமாக வெளியே நிறுத்திக் கொள்கின்றார்கள். சிலர், கலாச்சார பழக்க வழக்கங்களோடு நிறுத்திக் கொள்கின்றார்கள்.

தக்வா என்பது, அந்த ஆடை கலாச்சாரத்திற்கு மேலாக, சில பழக்க வழக்க கலாச்சாரத்திற்கு மேலாக உள்ளத்தில் இருக்கக்கூடிய ஒன்று.

யார் அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை மதித்து நடக்கிறார்களோ, யார் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை ஏற்று, அதை மதிக்கின்றார்கள். அதை அவர்கள் ஒரு உயர்ந்த புனிதமாக நம்புகின்றார்கள். பிறகு அதை வாழ்க்கையில் செயல்படுத்துகின்றார்கள்.

பிறகு, அதிலிருந்து எதையும் கூட்டாமலும், குறைக்காமலும், அது சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அப்படியே அதைக் கொண்டு யார் மன நிம்மதி பெறுகின்றார்களோ அவர்களைப் பார்த்து அல்லாஹ் சொல்கின்றான்.

யார் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை கண்ணியப்படுத்துவார்களோஅது அவர்கள் உள்ளத்தில் இருந்து வரக்கூடிய தக்வா உடைய வெளிப்பாடு ஆகும். (அல்குர்ஆன் 22:32)

அல்லாஹ்வுடைய அடையாளச் சின்னங்கள் என்று அல்லாஹ் எதை சொல்கிறான்?மக்காவை அல்லாஹ் சொல்கின்றான். கஅபாவை சொல்கின்றான்.

அது போன்று, அல்லாஹ் தனது மார்க்கத்தில் வரையறுத்த ஹலால் ஹராம் போன்ற சட்டங்கள், தன்னுடைய நபியின் மூலமாக அல்லாஹ் கொடுத்திருந்த சுன்னா. இது அல்லாஹ்வுடைய சின்னங்கள், அதுபோன்று அல்லாஹ்வை அவனுடைய தூதர் காண்பித்த வழிமுறையில் வழிபடுவது. இது அல்லாஹ்வுடைய அடையாளச் சின்னம்.

இதை நாம் கண்ணியப்படுத்த வேண்டும். கண்ணியப் படுத்துதல் என்றால், ஆயத்துக்களை விலை உயர்ந்த போஸ்டர்களை வீட்டில் வாங்கி மாட்டி வைத்துக் கொள்வது அல்ல. வீடுகளில் எல்லாம் வசனங்களைக் கொண்டு சுவர்களை அலங்கரிப்பது அல்ல. மஸ்ஜிதுகளை அலங்கரிப்பது அல்ல.

இன்று, எத்தனையோ பேர் அதைத்தான் செய்கின்றார்கள். மஸ்ஜிதுகளில் எல்லாம் குர்ஆன் வசனங்களை எழுதிக் கொண்டால் வீடுகளில் எல்லாம் குர்ஆன் வசனங்களை போஸ்டர்கள் ஆகவும் தகடுகள் ஆகவும் மாட்டிக் கொண்டால் ஏதோ அல்லாஹ்வுடைய பெரிய மார்க்க பக்தி என்று எண்ணுகின்றார்கள்.

சகோதரர்களே! அதற்கும் மார்க்கத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதனால் தக்வா கூடப்போவதும் கிடையாது‌. அதனால் அல்லாஹ்வுடைய பொருத்தம் கிடைக்கப் போவதும் கிடையாது.

உங்களுடைய வீட்டை அலங்கரிப்பதற்காக உங்களுடைய சுவரை அலங்கரிப்பதற்காக பயன்படுத்திய ஒன்றே தவிர, அதற்கும் மார்க்கத்திற்கும் சம்பந்தமில்லை.

தக்வா என்பது, அல்லாஹ்வுடைய மார்க்க வரையறைகளை அதை பின்பற்றுவதன் மூலமாக கண்ணியப்படுத்துவது. அது நமக்கு உபதேசிக்கப் படும்பொழுது நாங்கள் குதர்க்கம் செய்ய மாட்டோம்; எதிர்த்துப் பேச மாட்டோம்; குருட்டுத்தனமாக அதில் கேள்விகள் கேட்க மாட்டோம்.

இது எப்படி? அது எப்படி? இப்படி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லி இருப்பார்களா? என்றெல்லாம் விதண்டாவாதம் செய்ய மாட்டோம்.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புறத்திலிருந்து சரியான ஒரு சுன்னா நமக்கு கிடைத்து விட்டால் அங்கே ஒரு முஃமின் நின்று விடுவான்.

இன்று, எத்தனை குழப்பங்கள்! எத்தனை கருத்து வேற்றுமைகள்! மனோ இச்சைகளை போதிப்பது; குர்ஆன் சுன்னாவிற்கு எதிராக மாற்று கருத்து தெரிவிப்பது.

அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்குரிய வழியை அவன் அடைய வேண்டும் என்றால், அல்லாஹ்வுடைய வேதத்தை அவன் பற்றி பிடிக்க வேண்டும்.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை அறிந்து அவன் அதைப் பற்றிப் பிடிக்க வேண்டும்.

அது போன்று, எந்த சமுதாயத்தினர் அல்லாஹ்வுடைய தூதரை பார்த்து மார்க்கத்தை கற்று அல்லாஹ்வினாலும் அல்லாஹ்வுடைய தூதரினாலும் அங்கீகரிக்கப்பட்டாரோ அந்த தலைமுறையினரை அந்த சமுதாயத்தினரை தன்னுடைய முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். தன்னுடைய வழிகாட்டியாக அவர்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு தெரியாத ஒன்று, உலக மக்கள் எல்லாம் உலக விஞ்ஞானிகள் எல்லாம் யாராக இருந்து, கொண்டு வந்து சொன்னாலும் அது எங்களுக்குத் தேவையில்லை.

நாங்கள் குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றுவோம். எங்களுக்கு முன் மாதிரியாக இருப்பவர்கள், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கீகரித்த அந்த ஸஹாபாக்கள். அவர்கள் புரியாத ஒன்று குர்ஆனிற்கு விளக்கமாக அமையாது.

ஒரு பேச்சாளர் பேசுகின்றார்; மவ்லூது ஓதுவதற்கு மீலாது கொண்டாடுவதற்கு குர்ஆனில் ஆதாரம் இருக்கின்றது. தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எல்லாம் ஹதீஸில் இருக்கின்றது என்று கூறத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்.

இந்த பேச்சாளர் அமெரிக்காவில் உள்ளவர். அதனால் இவர் கொஞ்சம் அதிகமாக சிந்தித்து மவ்லூது ஓதுவதற்கு குர்ஆனில் ஆதாரம் இருக்கின்றது என்று சொல்கிறார்.

அதற்கு அவர் இப்படி ஆதாரம் கூறுகிறார்: சூரா மர்யமில் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி சொல்லும்போது,

(وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدْتُ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا)

நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிருள்ளவராக எழுப்பப்படும் நாளிலும், என்மீது ஸலாம் உண்டாகுக!'' (என்றும் அக்குழந்தை கூறியது).(அல்குர்ஆன் 19 : 33)

இது தான் மவ்லூது‌. ஈஸா அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பிற்கு அல்லாஹ் ஸலாம் சொல்லி இருக்கின்ற பொழுது, ஏன் நாம் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பிறப்பிற்கு ஸலாம் சொல்லக்கூடாது?மவ்லூது என்றால் என்ன? ஸலாம் சொல்வது. அதைத்தான் நாங்கள் சொல்கின்றோம்.

எப்படி விளையாடுகிறார்கள் பாருங்கள்! இதை கேட்கக்கூடிய பாமரர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுடைய அந்த மார்க்க கல்வி அவ்வளவுதான்.

இந்த வசனத்தின் மூலமாக அத்தகைய ஒரு விளக்கத்தை புரிய முடியும் என்றால், இந்த விளக்கத்திலிருந்து அபூபக்ர் எங்கே சென்று விட்டார்?உமருல் ஃபாரூக் எங்கே சென்று விட்டார்?

உஸ்மான், அலி இப்னு அபூதாலிப், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத், உபை இப்னு கஅப், ஜைத் இப்னு சாபித் இப்படிப்பட்ட சஹாபாக்கள் கல்விமான்கள் இந்த ஆயத்திலிருந்து இந்த விளக்கத்தை தெரியாத அளவிற்கு அவர்கள் பலகீனமான அறிவுடையவர்களாக ஆகி விட்டார்களா?

அல்லது இந்த ஆயத்திற்கு இந்த விளக்கம் என்று ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹாபாக்களுக்கு சொல்லிக் கொடுக்கத் தவறிவிட்டார்களா? மறந்து விட்டார்களா?

ஆகவே, அல்லாஹ்வின் அடியார்களே! வழிகேடுகளிலிருந்து, குழப்பத்திலிருந்து, பித்அத்துக்களிலிருந்து அனாச்சாரங்களிலிருந்து நாம் தப்பிப்பதற்கு ஒரே வழி சுன்னாவும் ஸஹாபாக்களின் வழிமுறையும் தான்.

நாம் வேறொன்றை தேடுவதற்கு அவசியம் என்ன இருக்கின்றது? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு இந்த மார்க்கத்தில் அவர்கள் சொல்லாத ஒன்றை சொல்லித் தருவதற்கு, அவர்கள் காட்டாத வழிமுறையை காண்பித்துக் கொடுப்பதற்கு ஒரு வழியை விட்டா சென்றிருக்கின்றார்கள்?

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தஃவா பணியை அபூதர் சொல்கின்றார்கள்:

مَا بَقِيَ شَيْءٌ يُقَرِّبُ مِنَ الْجَنَّةِ، ويُبَاعِدُ مِنَ النَّارِ، إِلَّا وَقَدْ بُيِّنَ لَكُمْ

உங்களை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமானவர்களில் ஆக்கி வைக்கக்கூடிய எந்த ஒரு கட்டளையாக இருக்கட்டும், அதை நான் உங்களுக்கு சொல்லிக் கொடுத்து விட்டேன்.

எனவே, நான் சொல்லாத ஒன்றிலிருந்து நீங்கள் அல்லாஹ்வுடைய நெருக்கத்தை தேட முடியாது. தேடக் கூடாது.

அல்லாஹ்வுடைய நெருக்கத்தை பெறக்கூடிய ஒரு கொள்கையோ, ஒரு தொழுகையோ, ஒரு திக்ரோ, ஒரு துஆவோ, ஒரு இபாதத்தோ அப்படி ஒன்று இருக்குமேயானால் அதைச் சொல்லிக் கொடுப்பதற்குதான் ரசூல் அனுப்பப்பட்டார்கள்.

இப்போது நூற்றுக்கணக்கான பித்அத்துக்களை செய்கின்றார்களே,அவர்களிடமிருந்து ஒரே ஒரு ஆதாரத்தை கேளுங்கள்.

இதை எதற்காக செய்கின்றீர்கள்? அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்காகவா? மறுமையினுடைய வெற்றிக்காகவா?

மறுமையினுடைய வெற்றிக்காக, நன்மைக்காக என்றால் இதை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக் கொடுக்க வில்லையே? அல்லாஹ்வுடைய தூதரின் வழி காட்டுதலில் இல்லையே?

மேலும், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கின்றார்கள்.

எது அல்லாஹ்வுடைய வழியில் இருந்து உங்களை தூரமாக்கிவிடுமோ அத்தகைய பாவங்கள் அனைத்திலும் நான் உங்களை தடுத்து விட்டேன்.

அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி, எண் : 1647, அஸ்சஹீஹா : 2866.

நமக்கு முன்பு இந்த மார்க்கம் தெளிவாக இருக்கின்றது. ஒன்று, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றுவது. இரண்டாவது, ஸஹாபாக்கள் -அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட அந்த உண்மை முஃமின்கள் எந்தப் பாதையில் சென்றார்களோ அந்தப் பாதையில் பயணித்து செல்வது.

இந்த இரண்டை யார் விடுவார்களோ அவர்கள் எவ்வளவு அலங்காரமாக குர்ஆனை பேசினாலும் சரி, ஹதீஸை விலா வாரியாக பிரித்து, அக்குவேறு ஆணிவேறு ஆக்கினாலும் சரி, ஆயிரக்கணக்கான விளக்கங்களை சொன்னாலும் சரி, பெரிய தலைப்பாகை கட்டிக்கொண்டு இருந்தாலும் சரி, நீளமான தாடி வைத்திருந்தாலும் சரி,அவர்களது பார்வையில் அப்படியே ஒரு இறையச்சம் தெரிவதாக இருந்தாலும் சரி, அவர்களை நான் நரகத்தில் பொசுக்குவேன் என்று அல்லாஹ் சொல்கின்றான்.

உங்களுக்கு நேர்வழி அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைப்பதற்கு ஒரே ஒரு வாசல்தான் இருக்கிறது. முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதியதுதான் குர்ஆன்.

ஷியா காரர்கள் குர்ஆன் வைத்திருக்கின்றார்கள். இப்போது இருக்கின்ற இந்த முப்பது ஜுஸு போக ரகசியமாக பல விஷயங்கள் அடங்கிய பத்து ஜுஸு வேறு இடத்தில் இருக்கின்றதாம். பத்து ஜுஸு அடங்கிய வேறு குர்ஆன் அவர்களிடத்தில் தனியாக இருக்கின்றது. கடைசி காலத்தில் எங்களது இமாம் கொண்டு வருவார் என்று நம்பி இருக்கின்றார்கள்.

சகோதரர்களே!குர்ஆனாக இருந்தாலும் அதை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதவேண்டும். அவர்களுக்குத்தான் அல்லாஹ் அதை இறக்கினானே தவிர, பலர் சேர்ந்து கொண்டு இப்படி ஒரு வசனம் இருக்கின்றது என்றால் அதை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

ஆகவே ஹிதாயத் உடைய வழி ஹிதாயத் உடைய வாசல் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து தான்.

அல்லாஹ் சொல்கின்றான்:

(وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا)

எவர் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னரும் (அல்லாஹ்வுடைய) இத்தூதரை விட்டுப் பிரிந்து நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததில் செல்கிறாரோ அவரை நாம் அவர் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு (பின்னர்) அவரை நரகத்தில் சேர்த்து விடுவோம். அது செல்லும் இடங்களில் மிகக் கெட்டது. (அல்குர்ஆன் 4 : 115)

வசனத்தின் கருத்து : இதுதான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸ், இதுதான் அவர்களுடைய சுன்னா என்று தெரிந்துவிட்டது. இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

இது எனக்கு வேண்டாம், இது என்னுடைய கலாச்சாரத்துக்கு ஒத்து வராது, இது என்னுடைய ஜமாஅத்தில் இல்லை, இது என்னுடைய இயக்கத்தில் இல்லை, இதை நான் பின்பற்ற முடியாது.

ஒன்று, அவனது நஃப்ஸின் விளைவால் பின்பற்ற முடியாது என்பதில் குறைவு என்பது வேறு. நாம் அனைவரும் நூற்றுக்கு நூறு சதவீதம் சுன்னாவை பின்பற்றக் கூடியவர்கள் அல்ல.

ஆனால், குற்றம் என்பது என்ன? சுன்னாவை பின்பற்ற முடியாது என்பது ஒரு பாவம். அல்லாஹ்விடத்தில் பாவத்தால் பயங்கரமானது, புறக்கணிப்பது, அலட்சியம் செய்வது, அதை மறுப்பது, அதை நிராகரிப்பது.

சுன்னத்தில் தஃவீல் கூறி, அந்த சுன்னத்தை கேலி செய்வது. கிண்டல் செய்வது. இரண்டுக்கும் இடையே வித்தியாசம் இருக்கின்றது.

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அல்லாஹ்வுடைய கட்டளையை மீறினார்கள். ஷைத்தானும் அல்லாஹ்வுடைய கட்டளையை மீறினான்.

ஒரு கட்டளையை அல்லாஹ் பாவமாக கருதி அங்கீகரித்தான். அவர் தவ்பா கேட்ட போது அல்லாஹ் மன்னித்தான்.

இன்னொருவனுடைய பாவத்தை அல்லாஹ் இறை நிராகரிப்பாகச் சொன்னான். (அல்குர்ஆன் 2 : 34)

விடுவது, மாறு செய்வது என்பதற்கு இடையே வித்தியாசம் இருக்கின்றது.

அல்லாஹ்வுடைய தூதருடைய வழிமுறை வந்ததற்குப் பிறகு, அது சரியில்லை என்று சொல்வது, தன்னுடைய அறிவில் உரசிப்பார்த்து புறக்கணிப்பது. இது குஃப்ரில் கொண்டுபோய் விட்டுவிடும்.

அல்லாஹ் சொல்கின்றான்:

எவர் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னரும் (அல்லாஹ்வுடைய) இத்தூதரை விட்டுப் பிரிந்து நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததில் செல்கிறாரோ அவரை நாம் அவர் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு (பின்னர்) அவரை நரகத்தில் சேர்த்து விடுவோம். அது செல்லும் இடங்களில் மிகக் கெட்டது. (அல்குர்ஆன் 4 : 115)

அல்லாஹ் யாரை முஃமீன் என்று சொல்கின்றான்? யார் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஈமானை ஏற்றுக் கொண்டார்களோ அவர்கள்.

அதுதான் ஸஹாபாக்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள். அல்லாஹ் அவர்களை ஈமானுக்கு அங்கீகரிக்கின்றான்.

ஒரு வசனங்களில் இல்லை, நூற்றுக் கணக்கான வசனங்களில். முஹம்மதுடைய தோழர்கள் நம்பிக்கை கொண்டது போன்று இவர்கள் நம்பிக்கை கொண்டால்,முஹாஜிர்கள் அன்சாரிகளை யார் பின்பற்றுவாரோ அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வான்.

ஆகவே, உலகத்தில் எத்தனை ஷேக்கு வந்தாலும் சரி, எத்தனை பீர் வந்தாலும் சரி, எத்தனை கலிஃபாக்கள் எத்தனை முஃப்திகள் வந்தாலும் சரி, எத்தனை இமாம்கள் வந்தாலும் சரி, அவர்களுடைய கூற்று, அவர்களுடைய போதனை சஹாபாக்கள் உடைய வழியில் இல்லை என்றால், அது முஃமினுடைய பாதை அல்ல.

ஸஹாபாக்களை ஒரு இடத்தில் விட்டுவிட்டு, எங்களது ஜமாத், எங்களது ஷேக், எங்களது கலிஃபா எங்களது இமாம் என்று யார் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

யார் முஃமின்கள் அல்லாத பாதையில் செய்வாரோ, அவன் திரும்பியபடியே அவரை திரும்பி விடுவோம். நரகத்தில் அவரை எரித்து பொசுக்குவோம். அது மீளும் இடங்களில் மிகவும் கெட்டது என்று அல்லாஹு தஆலா சொல்லி முடிக்கின்றான். (அல்குர்ஆன் 4 : 115)

அன்பானவர்களே!சுன்னாவை பின்பற்றுவதும், அல்லாஹ்வுடைய வேதத்தை பின்பற்றுவதும், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களோடு இணைந்து அவர்களோடு நாம் போதுமாக்கிக் கொள்ளவதும் தான், அனாச்சாரங்கள் குழப்பங்கள் பித்அத்துக்கள் இன்னும் எத்தனை அனாச்சார சடங்குகள் மக்கள் உருவாக்கி வருகின்றார்களோ அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான பாதுகாப்பு வழி என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய வேதத்தை பின்பற்றுவதற்கும், சுன்னாவை பின்பற்றுவதற்கும், ஸஹாபாக்கள் உடைய வழிமுறையை பின்பற்றுவதற்கும் அருள் புரிவானாக!

இன்ஷா அல்லாஹ் மீதமுள்ளவற்றை அடுத்த ஜும்ஆக்களில் பார்ப்போம். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! சொர்க்கத்தை நமக்கு கூலி ஆக்கி தருவானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ بِشْرِ بْنِ مَنْصُورٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ السَّوَّاقُ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ ضَمْرَةَ بْنِ حَبِيبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ، أَنَّهُ سَمِعَ الْعِرْبَاضَ بْنَ سَارِيَةَ، يَقُولُ: وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْعِظَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ، وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ هَذِهِ لَمَوْعِظَةُ مُوَدِّعٍ، فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا؟ قَالَ: «قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا، لَا يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلَّا هَالِكٌ، مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا، فَعَلَيْكُمْ بِمَا عَرَفْتُمْ مِنْ سُنَّتِي، وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ، عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ، وَعَلَيْكُمْ بِالطَّاعَةِ، وَإِنْ عَبْدًا حَبَشِيًّا، فَإِنَّمَا الْمُؤْمِنُ كَالْجَمَلِ الْأَنِفِ، حَيْثُمَا قِيدَ انْقَادَ» (سنن ابن ماجه- 43) [حكم الألباني]صحيح

குறிப்பு 2)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ الْمُقْرِئُ، ثنا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ فِطْرٍ، عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: تَرَكْنَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَا طَائِرٌ يُقَلِّبُ جَنَاحَيْهِ فِي الْهَوَاءِ، إِلَّا وَهُوَ يُذَكِّرُنَا مِنْهُ عِلْمًا، قَالَ: فَقَالَ: صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَقِيَ شَيْءٌ يُقَرِّبُ مِنَ الْجَنَّةِ، ويُبَاعِدُ مِنَ النَّارِ، إِلَّا وَقَدْ بُيِّنَ لَكُمْ» (المعجم الكبير للطبراني 1647)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/