HOME      Khutba      ரமழான் எதற்காக? | Tamil Bayan - 702   
 

ரமழான் எதற்காக? | Tamil Bayan - 702

           

ரமழான் எதற்காக? | Tamil Bayan - 702


ரமழான் எதற்காக?
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ரமழான் எதற்காக?
 
வரிசை : 702
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 09-07-2021 | 29-11-1442
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீதும், அந்தத் தூதரின் கண்ணியத்திற்குரிய குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, 
 
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றி வாழும்படி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை பின்பற்றி வாழும்படி எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை  ஆரம்பம் செய்கிறேன்.‌
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா அவனுடைய மார்க்கத்தை தெளிவாகப் புரிந்து கற்று, அதன்படி செயல்படுவதற்கு நமக்கு அருள் புரிவானாக!
 
அல்லாஹு தஆலா இந்த வாழ்க்கையை நமக்கு மறுமைக்கான கட்டு சாதமாக, மறுமைக்கான விளைநிலமாக ஆக்கிக்கொண்டு, மறுமையின் உயர்ந்த சொர்க்கத்தை அடைவதற்கு அல்லாஹுதஆலா நமக்கு அருள்புரிவானாக! ஆமீன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா அவனுடைய அடியார்களின் மீது மாபெரும் கருணை, அன்பு, பாசம் உடையவனாக இருக்கிறான் என்பதுடைய அடையாளங்களில் ஒன்றுதான், அந்த அடியார்களுக்கு அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், அவர்கள் அல்லாஹ்வை நெருங்குவதற்கும் மறுமைக்கான  அமல்களை அதிகமதிகம் செய்து கொள்வதற்கும் அவர்களுக்கு வாய்ப்புகளை புதிது புதிதாக ஏற்படுத்திக் கொண்டே இருப்பான்.
 
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு ஸஹீஹான ஹதீஸை கவனியுங்கள்.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
«الصَّلَوَاتُ الْخَمْسُ، وَالْجُمْعَةُ إِلَى الْجُمْعَةِ، وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ، مُكَفِّرَاتٌ مَا بَيْنَهُنَّ إِذَا اجْتَنَبَ الْكَبَائِرَ»
 
ஐந்து நேரத் தொழுகைகள், பிறகு ஒரு ஜும்ஆவிலிருந்து அடுத்த ஜும்ஆ வரை, பிறகு ஒரு ரமலான் அடுத்த ரமலான் வரை இவையெல்லாம் இவற்றுக்கு மத்தியில் நடக்கக்கூடிய அடியார்களின் புறத்திலிருந்து ஏற்படக்கூடிய எல்லா பாவங்களையும் போக்கி விடுகின்றன, அந்த அடியான் பெரும்பாவங்களை விட்டு விலகி இருந்தால்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 233.
 
அல்லாஹ்வுடைய கருணைக்கும் அருளுக்கும் இதைவிட பெரிய அடையாளம் என்ன தேவை! நம்முடைய கண்களால், செவிகளால், நம்முடைய உள்ளங்களால், நாம் செய்த லட்சக்கணக்கான சிறு பாவங்களை எல்லாம் அல்லாஹுத்தஆலா இந்த இபாதத்துகளின் மூலமாக மன்னித்து விடுகின்றான்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நம்மை மன்னிக்கவே நாடுகிறான். நம்மை தண்டிப்பதற்கு அல்ல.
 
مَا يَفْعَلُ اللَّهُ بِعَذَابِكُمْ إِنْ شَكَرْتُمْ وَآمَنْتُمْ وَكَانَ اللَّهُ شَاكِرًا عَلِيمًا
 
நீங்கள் (இவ்வாறு) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டும், அவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டுமிருந்தால் உங்களுக்கு வேதனை செய்து அவன் என்ன (லாபம்) அடையப்போகிறான்? அல்லாஹ்வோ (நீங்கள் செய்யும் ஒரு சொற்ப) நன்றிக்கும் கூலிகொடுப்பவனாக, யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்4 : 147)
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா இந்த உலக வாழ்க்கையில் நமக்கு இரண்டு விதமான நிலைமைகளை ஏற்படுத்துகிறான்.
 
ஒன்று, சில சோதனைகள். ஒருபோதும் அந்த சோதனையை தீமையாக நினைத்துவிடாதீர்கள்.
 
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா இட்டுக்கட்டப்பட்ட போது அல்லாஹு தஆலா கூறினான்:
 
لَا تَحْسَبُوهُ شَرًّا لَكُمْ بَلْ هُوَ خَيْرٌ لَكُمْ
 
இந்த நிகழ்வை உங்களுக்கு தீங்காக நினைக்காதீர்கள். அதுவும் உங்களுக்கு நன்மைதான். (அல்குர்ஆன் 24 : 11)
 
நம்முடைய தாய், ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பத்தினியான மிகப் பாசத்திற்குரிய மனைவி மீது முனாஃபிக்குகள் தவறான ஒரு செயலை இட்டு கட்டினார்கள். பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள்.
 
அல்லாஹு தஆலா மூஃமின்களுக்கு அதுகுறித்து வழி காட்டுகின்றான். இது ஒரு பெரிய குற்றமான நிகழ்வுதான். ஆனால், அதையும் நீங்கள் தீமையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அதிலும் உங்களுக்கு நன்மை இருக்கின்றது. 
 
காரணம், உண்மையான முஃமின்கள் யார்? அல்லாஹுவை, மறுமை நாளை, நபியை நம்பிக்கை கொண்ட மூமின்கள் யார்? நபியின் அந்த மனைவிமார்களை உண்மையான தாய்மார்களாக தங்களுக்கு ஏற்றுக் கொண்டவர்கள் யார்? என்று அல்லாஹு தஆலா பிரித்தறிவித்து, உள்ளத்தில் யார் நயவஞ்சகத்தை இறைநிராகரிப்பை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பதை அல்லாஹுத்தஆலா அவர்களின் வாயினாலேயே வெளிப்படுத்த விரும்பினான். 
 
நமக்குள் மறைந்திருக்கூடிய முனாஃபிக்குகளை அல்லாஹு தஆலா இதுபோன்ற சோதனைகளால் வெளிப்படுத்துவான்.
 
ஒரு முஸ்லிம் உடைய நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்றால், குறிப்பாக சோதனைகள் குழப்பங்கள் வரும்போது ஒரு மூஃமின் உடைய ஈமான் அதிகரிக்க வேண்டும், அவனுடைய தக்வா அதிகரிக்க வேண்டும், அவனுடைய மார்க்கப்பற்று அதிகரிக்க வேண்டும்.
 
அவருடைய மார்க்கத்தின் பிடிப்பு, மார்க்கத்தை கற்றுக் கொள்வது, ஹலால் ஹராமை தெரிவது, இந்த மார்க்கத்தை அன்போடு இதனுடைய மகத்துவத்தோடு ஒரு கொள்கை உறுதியோடு இந்த மார்க்கத்தை பின்பற்றி வாழ்வது, தனது குடும்பத்துக்கு அதற்குண்டான ஆர்வத்தை துணிச்சலை ஏற்படுத்துவது.
 
இது போன்ற சூழ்நிலைகளை அல்லாஹ் ஏற்படுத்துவான். இம்மார்க்கத்தில் நாம் உறுதியாக இருக்கிறோமா? என்று சோதிப்பதற்காக.
 
அடுத்து அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இன்னொரு காலத்தை நமக்கு கொடுப்பான். அது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதத்திலும் மாறி மாறி வரும். 
 
இந்த அடியான் உலகத்தில் மூழ்குகிறானா? உலகத்தில்  ஈடுபட்டு மறுமையை மறந்து விடுகின்றானா? அல்லது அல்லாஹு தான் முக்கியம், சொர்க்கம் தான் முக்கியம் என்று அல்லாஹ்வின் பக்கம் ஓடி வருகின்றானா? என்று அல்லாஹு தஆலா அந்த காலங்களில் நம்மை சோதிப்பான்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
فَفِرُّوا إِلَى اللَّهِ إِنِّي لَكُمْ مِنْهُ نَذِيرٌ مُبِينٌ
 
ஆகவே, (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் வெகு தீவிரமாக நீங்கள் விரைந்து செல்லுங்கள். நிச்சயமாக நான் அவனைப் பற்றி உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். (அல்குர்ஆன் 51 : 50)
 
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ
 
உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சொர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறையச்சம் உடையவர்களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 3 : 133)
 
அந்த காலகட்டங்களில் நம்முடைய உள்ளத்தில் உள்ள அன்பும், மறுமையின் மீது நமக்கு இருக்கக்கூடிய அக்கறையும் வெளிப்பட வேண்டும். யாருக்கு அப்படி வெளிப்படவில்லையோ அவர்கள் தன்னைத் தானே இகழ்ந்து கொள்ளட்டும்; அவர்கள் தங்களுடைய மறுமை நிலையை  நினைத்து கைசேதப்படட்டும். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
 
தொழுகை உடைய நேரம் அல்லாஹ்வை முன்னோக்குவதற்கான நேரம். அதுபோன்று ஜும்ஆவுடைய நேரம்.
 
அதுகுறித்து, அல்லாஹ் கூறுகிறான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ
 
நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜூமுஆ தொழுகைக்காக (அதான் சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!) (அல்குர்ஆன் 62 : 9)
 
இந்த ஜும்ஆவை எப்படி கழிக்கின்றோம்? எப்படி வந்தோம் என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நமக்குண்டான சோதனை.
 
அதுபோன்றுதான் வரக்கூடிய ரமலான் மாதமும். இந்த ரமலானில் அல்லாஹும் தஆலா மூஃமின்களை சோதிக்கின்றான்; முஃமின்களை  சுத்தப்படுத்துகின்றான்.
 
இவர்களில் தனக்கென இந்த உலகத்தை அர்ப்பணிக்க கூடிய, அமல்களில் முழுமையாக ஈடுபடக்கூடிய, அமல்களை செய்வதில் தன்னை வருத்திக் கொள்ளக் கூடிய, அமல்களை செய்வதில் தன்னை சிரமப்படுத்திக் கொள்ளக்கூடிய அந்த நல்லடியார்களை அல்லாஹு தஆலா பார்க்க விரும்புகிறான். அவர்களுக்காக அல்லாஹு தஆலா சொர்க்கத்தை இப்போதிலிருந்தே அலங்கரித்து விடுகின்றான்.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் உடைய அழகான வழிகாட்டல் நமக்கு இருக்கிறது. அவர்கள் சொன்னார்கள்:
 
" إِذَا كَانَ أَوَّلُ لَيْلَةٍ مِنْ شَهْرِ رَمَضَانَ صُفِّدَتِ الشَّيَاطِينُ، وَمَرَدَةُ الجِنِّ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ، فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ، وَفُتِّحَتْ أَبْوَابُ الجَنَّةِ، فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ، وَيُنَادِي مُنَادٍ: يَا بَاغِيَ الخَيْرِ أَقْبِلْ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ، وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَّارِ، وَذَلكَ كُلُّ لَيْلَةٍ "
 
ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, சொர்க்கம் அலங்கரிக்கப்படுகிறது. நரகத்தின் வாசல் அழடைக்கப்பட்டுவிடுகின்றது. ரமலான் வந்துவிட்டால் வம்பு செய்யக்கூடிய துர்பாக்கிய ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள். வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன
 
அல்லாஹ்வின் புறத்திலிருந்து விசேஷமாக ஒரு வானவர் தொடர்ந்து அழைப்பு கொடுத்துக் கொண்டே இருக்கிறார்; நன்மையை விரும்பக் கூடியவர்களே! நன்மையைத் தேடக் கூடியவர்களே! முன்னோக்கி வாருங்கள். தீமையை விரும்பக்கூடியவர்களே! தீமையை தேடக்கூடியவர்களே! போதும் போதும் நிறுத்திக்கொள்ளுங்கள் என்று.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 682, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
 
இதெல்லாம் நடக்கின்றது. நமக்கு தெரியாது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் இப்படிப்பட்ட ஏற்பாட்டை அல்லாஹ் உங்களுக்காக ஏற்படுத்தி வைத்திருக்கிறான் என்று தங்களது ஹதீஸ்களின் மூலமாக நமக்கு உணர்த்துகிறார்கள்.
 
சொர்க்கத்தை நாம் பார்க்கவில்லை என்றால் என்ன? சொர்க்கம் அலங்கரிக்கப்படுவது  என்ற வஹியை அல்லாஹ்வின் புறத்திலிருந்து பெற்ற நம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை நமக்கு சொல்லித் தரும்போது முஃமின்களாகிய நம்முடைய உள்ளத்தில் அந்த சொர்க்கத்தின்மீது ஆர்வம் வரவில்லை என்றால், மீண்டும் ஒருமுறை நம்முடைய ஈமானை சோதித்துக் கொள்ள வேண்டும்.
 
நம்மைப் பொறுத்தவரை நாம் சில அமல்களை சடங்குகளாக பழகி இருக்கலாம். சில நல்ல காரியங்களை வழக்கமாக செய்து கொண்டிருக்கலாம். 
 
ஆனால், இஸ்லாம் என்பது சடங்குகளாக செய்யப்படக்கூடிய அமல்களுக்கு அப்பாற்பட்டது. இஸ்லாம் என்பது ஒரு மனிதன் வழமையாக தொடர்ச்சியாக செய்கின்ற அமல்களுக்கு அப்பாற்பட்டது. 
 
ஒரே நாளில் ஒரே அமலை நீ எத்தனை முறை செய்தாலும், நிய்யத்தோடு செய்ய வேண்டும்; இக்லாஸோடு செய்ய வேண்டும்; அல்லாஹ்விற்காக என்ற உள்ளத் தூய்மையோடு அந்த உணர்வோடு செய்ய வேண்டும்.
 
சாப்பிடும்போது பிஸ்மில்லாஹ் என்று கூறுகிறோம். சிலர் உணர்வதில்லை, அந்த நேரத்தில் அவர்களது உள்ளம் எங்கோ இருக்கும். பிஸ்மில்லாஹ் என்று மட்டும் சொல்வார்கள், அத்தகைய பிஸ்மில்லாஹ் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமா என்றால் ஏற்றுக் கொள்ளப்படாது.
 
யா அல்லாஹ்! நீ கொடுத்த உணவை உனக்கு நன்றி செலுத்தி, உன்னுடைய பெயர் கூறி சாப்பிடுகிறேன் என்ற மன ஓர்மையோடு பிஸ்மில்லாஹ் சொல்லும்போது அந்த பிஸ்மில்லாஹ்வை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். அந்த உணவில் பரக்கத் செய்கிறான். அந்த நன்றி செலுத்துதல் அல்லாஹ்விற்க்கு பிடித்தமானது.
 
நூஹ் அலைஹிஸ்ஸாத்து வஸ்ஸலாம் அவர்களைப் பற்றி அல்லாஹு தஆலா சொல்கிறான்:
 
إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا
 
நூஹ் அல்லாஹ்விற்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடிய ஒரு அடியாராக இருந்தார். (அல்குர்ஆன் 17 : 3)
 
முஃபஸ்ஸிர்கள் இதற்க்கு விளக்கம் எழுதுகிறார்கள்: அவர்களுக்கு கிடைத்தது ஒரு சிறிய கவலம் உணவாக இருந்தாலும் அதை பிஸ்மில்லாஹ் என்று கூறி சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்டு முடித்த பின் அல்ஹம்துலில்லாஹ் என்று அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவார்கள்.
 
அவர்களுக்கு கிடைத்தது ஒரு மிடர் குடிநீராக இருந்தாலும், அதை பிஸ்மில்லாஹ் என்று  குடித்து விட்டு அல்ஹம்துலில்லாஹ் என்று அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவார்கள்.
 
சில அமல்களை நாம் சடங்குகளாக பழகிவிட்டோம். பழகியது நல்லது. ஆனால், அந்த பழக்கத்தை இக்லாஸோடு செய்யவேண்டும். அல்லாஹ்விற்கு முன்னால் அல்லாஹ்வுடைய பெயரை நான் கூறுகிறேன் என்ற எண்ணத்தோடு செய்ய வேண்டும்.
 
பிஸ்மில்லாஹ் என்பது சாதாரண வார்த்தை அல்ல. அல்லாஹ்வுடைய பெயரை அதன் மகத்துவத்தோடு உச்சரிக்கவேண்டும்.
 
அப்படித்தான் வரக்கூடிய ரமலான் மாதமும். எப்படி முந்திய ரமலான்கள் வந்ததோ போனதோ அப்படி இந்த ரமலான் இருக்க கூடாது. 
 
இந்த ரமலான் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப் படுவதற்குரிய ஒரு காரணமாக அல்லாஹ்விடத்தில் அமைய வேண்டும். நம்முடைய அமல்களை அதிகப்படுத்துவதற்குரிய காலமாக அமைய வேண்டும். 
 
அதிகமான மக்களுக்கு ரமலான் ஏன் வருகிறது? ரமலானில் ஏன் நோன்பு நோற்கிறோம்? என்றால் அதனுடைய தத்துவமே தெரியாமல் இருப்பார்கள்.
 
சிலர் சொல்வார்கள்; நாம் பசித்திருக்க வேண்டும். ஏனென்றால், பசித்திருக்கும் போது தான் ஏழைகளுடைய பசியினுடைய சிரமம் தெரியும். அதற்காக அல்லாஹ் நோன்பை கடமையாக்கினான் என்று சொல்லுவார்கள். 
 
அதுவும் ஒரு தத்துவம் தான். ஆனால், அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் அவர்களும் தத்துவம் என்ன?
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
 
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)
 
தக்வா என்பது சாதாரணமானதல்ல. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்   தங்களுடைய இறுதி குத்பாவில் சொன்னார்கள்:
 
التَّقْوَى هَاهُنَا
 
தன்னுடைய உள்ளத்தின் பக்கம் சுட்டிக்காட்டியவர்களாக தக்வா இங்கே இருக்கிறது தக்வா எங்கே இருக்கிறது என்று சொன்னார்கள். (1)
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2564.
 
உள்ளத்தில் தக்வா இருக்க வேண்டும். ஒரு அடியான் ஃபர்லான அமல்களில் அவன் அலட்சியம் செய்யும் போது அந்த தக்வா வெளிப்படும். 
 
அடியானே! அல்லாஹ் உன் மீது கடமையாக்கிய கடமையையா நீ அலச்சியம் செய்கிறாய்? அல்லாஹ்வைப் பயந்து கொள்! உடனே அவன் கடமை பக்கம் விரைய வேண்டும். 
 
அடியான் ஒரு பாவத்தை செய்ய நினைக்கும்போது ஒரு பாவத்தின் பக்கம் நெருங்கும்போது அந்த தக்வா விழிப்படையச் செய்யும்.
 
அந்த அடியானை நோக்கி அந்த நப்ஸ் சொல்லும்; அடியானே! அல்லாஹ்வைப் பயந்து கொள், நீ செய்யக்கூடிய இந்த காரியம் அல்லாவிஹ்ற்கு பிடிக்காது, அல்லாஹ்வை கோபப்படுத்த கூடிய, அல்லாஹ்வின் சாபம் இறங்கக்கூடிய, நரகத் தண்டனையை பெற்றுத் தரக்கூடிய குற்றச்செயல், நீ இதை விட்டும் விலகிக் கொள் என்று அந்த நஃப்சு உணர்த்த வேண்டும்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
وَنَفْسٍ وَمَا سَوَّاهَا (7) فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا
 
ஆத்மாவின் மீதும், அதை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும், அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக!  (அல்குர்ஆன் 91 : 7,8)
 
لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ (1) وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ
 
மறுமை நாளின் மீது நான் சத்தியம் செய்கிறேன். (குற்றம் செய்தவனை) நிந்திக்கும் அவனுடைய மனசாட்சியின் மீதும் நான் சத்தியம் செய்கிறேன். (அல்குர்ஆன் 75 : 1,2)
 
ஆகவேதான், ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் இந்த கல்பை சுட்டிக்காட்டி தக்வாவை இங்கே கொண்டு வாருங்கள் என்று சொன்னார்கள். 
 
சிலர் நினைத்திருக்கிறார்கள்; ஏதோ காலையிலிருந்து மாலை வரை பட்டினியாக இருந்து பசித்திருந்து நோன்பு நோற்றால் கடமை நிறைவேறி விட்டது என்பதாக. 
 
அவர்களுடைய இரவு காலங்கள், அவர்களுடைய  நோன்பு வைத்திருக்கும் பொழுது  அவர்களுடைய பகல் காலங்கள் எப்படி கழிகின்றன?
 
அவர்களுடைய கண்கள் ஹராமில் இருந்து பாதுகாக்கப்பட்டதா? அவர்களுடைய நாவுகள் ஹராமில் இருந்து பாதுகாக்கப்பட்டதா? அவர்களுடைய கொடுக்கல் வாங்கல் ஹராமில் இருந்து பாதுகாக்கப்பட்டதா? 
 
இவையெல்லாம் பாதுகாக்கப் பட்டிருக்குமேயானால் அவர்கள் பசியோடு இருந்தது நோன்பாகும்.  இந்த நோன்புக்கு அல்லாஹுதஆலா கூலி வழங்குகிறான்.
 
அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் கூறினார்கள்:
 
كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصِّيَامَ، فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ
 
ஆதமுடைய மகன் செய்யக்கூடிய எல்லா அமல்களும் அவனுக்கானவை. ஆனால், நோன்பைத் தவிர. இந்த நோன்பு விசேஷமாக எனக்கானது. நான் இதற்கு விசேஷமான கூலி வழங்குவேன்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1151.
 
எல்லா அமல்களும் செய்யக்கூடிய அமல்களாக இருக்கும். ஆனால், நோன்பு என்பது விடக்கூடிய வணக்கம். 
 
சிலர் சொல்வார்கள்; நோன்பு வைப்பதின் பல பலன்களில் ஒரு பலன் என்னவென்றால், நாம் இந்த மாதத்தில் பசித்திருப்பதால்  கெட்ட கொழுப்புகள் எல்லாம் நீங்கி, நம்முடைய உடல் எல்லாம் ஆரோக்கியம் பெறுகிறது என்று. 
 
கடைசியில் பலருக்கு நோன்பு வைக்கும் போதே இதே நிய்யத்தாக  இருக்கும். 
 
நோன்பு என்பது நரகத்தில் இருந்து உங்களை பாதுகாக்க கூடிய கேடயம். 
 
நோன்பாளிகளுக்காக  அல்லாஹு தஆலா ரய்யான் என்ற ஒரு வாசலை வைத்திருக்கிறான். அந்த வாசல் வழியாக அவர்கள் நுழைந்து விட்டால், அந்த வாசல்கள் அடைக்கப்பட்டு விடும். அதன் வழியாக யாரும் செல்ல மாட்டார்கள். (2)
 
அறிவிப்பாளர் : ஸஹ்ல் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1896.
 
இந்த மறுமையின் நன்மைகள் எல்லாம்  அவர்களின் பார்வையிலிருந்து அவர்களின் நினைவிலிருந்து மறைந்துவிடும். நோன்பு என்று சொன்னால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது மட்டும் அவர்களின் நினைவுக்கு வரும்.
 
இதெல்லாம் இருக்கலாம். ஆனால், ஒரு மூஃமின் பிரஸ்தாபித்து பேசுவது, ஒரு முஃமின் ஒரு அமலை செய்யும்போது அவருடைய உள்ளத்தில் இருப்பது மறுமையாக இருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய பொருத்தமாக இருக்க வேண்டும். சொர்க்கத்தின் வீட்டை நாடியவனாக இருக்க வேண்டும்.
 
நோன்பைப் பற்றி அல்லாஹ் ஹதீஸ் குத்சியில் சொல்கிறான்:
 
يَدَعُ شَهْوَتَهُ وَطَعَامَهُ مِنْ أَجْلِي
 
அவன் எனக்காக தன்னுடைய உணவை விட்டு விடுகிறான், தன்னுடைய ஆசையை விட்டுவிடுகிறான்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1151.
 
ஒரு மனிதன் நோன்பு காலத்தில் அல்லாஹ்வுக்காக என்று தன்னை பசித்தவனாக, தாகித்தவனாக, ஆசையைத் துறந்தவனாக நோன்பு வைத்தான் என்பதற்கு அடையாளம், அவன் இவற்றை விடுவதற்கு முன்பாக ஹராமான விஷயங்களை விட்டு தன்னை விடுவித்தவனாக இருக்க வேண்டும். பாவமான காரியங்களை விட்டு தன்னை தூரமாக்கியவனாக இருக்க வேண்டும்.
 
அல்லாஹ் தடுத்த, அல்லாஹ்வின் சாபத்தை கோபத்தை ஏற்படுத்தக்கூடிய அத்தனை பெரும் பாவங்களையும் விபச்சாரத்திலிருந்து, திருட்டிலிருந்து, பொய்யிலிருந்து, மோசடியிலிருந்து, வாக்கை மீறுவதிலிருந்து, அமானித  மோசடியிலிருந்து, ஒப்பந்த மீறுதல்களிலிருந்து, கலப்படத்திலிருந்து, பொய் வாக்குகளிலிருந்து, இன்னும் எத்தனையோ சிறிய பெரிய பெரும் பாவங்களை எல்லாம் தனது குடும்பத்தில் கலந்து வைத்திருக்கிறார், தனது தொழிலில் கலந்து வைத்திருக்கிறார், தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் கலந்து வைத்திருக்கிறார், இவன் எப்படி அல்லாஹ்வுக்காக சாப்பிடாமல் இருந்தால் நோன்பின் மூலமாக அல்லாஹ்வுக்காக ஆசை விட்டிருந்தான் என்று சொல்ல முடியும்? 
 
இவன் ஹலாலை  விடுவதற்கு முன்பாக அல்லாஹ்விற்காக ஹராமை விட்டு அல்லவா முதலில் விலகி இருக்க வேண்டும்.
 
ஆகவேதான், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
«مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالعَمَلَ بِهِ، فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ»
 
யார் பாவமான பேச்சுகளை விடவில்லையோ பாவமான செயல்களை விட்டு விலக வில்லையோ அவர்கள் தன்னுடைய உணவை விட்டு விலகியிருப்பதிலிருந்து தன்னுடைய குடிபானத்தை விட்டு விலகியிருப்பதிலிருந்து தன்னுடைய ஆசையை துறந்து இருப்பதில் அல்லாஹ்விற்கு எந்த தேவையும் இல்லை, அல்லாஹ்விற்கு இத்தகைய நோன்பாளிகள் நோன்பில் எந்த தேவையும் இல்லை.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1903.
 
அதை நோன்பு என்றே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் நிய்யத் வைத்திருக்கலாம்; நீங்கள் ஒரு பருக்கை உணவை கூட ஒரு சொட்டு தண்ணீர் கூட அந்த இம்ஸாக் நேரத்திலிருந்து தடுத்திருக்கலாம். 
 
ஆனால், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை நோன்பாக அங்கீகரிக்கவில்லை. 
 
இவர்கள் சாப்பிடாமல் இருந்தார் அவ்வளவுதான். இவர் ஆசையை நிறைவேற்றாமல் இருந்தார். இவருடைய நோன்பில் அல்லாஹ்விற்கு எந்த தேவையும் இல்லை.
 
பலருக்கு ரமலானுடைய மாதம் என்றால், இரவு காலங்கள் ஊரை சுற்றுவது, கேளிக்கை, விளையாட்டுகள் இன்னும் பல பல நேரங்களை வீணாக்குவது, பொழுதுகளை வீணாக கழிப்பது, இப்படியான பல தடுக்கப்பட்ட காரியங்களில் அவர்கள் கழிப்பதை பார்க்கிறோம். 
 
ராமலானுடைய பகலும் மிக முக்கியமானது. ரமலானுடைய இரவும் மிக முக்கியமானது. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் உடைய தெளிவான வழிகாட்டுதலை பாருங்கள். அவர்கள் சொன்னார்கள்:
 
«مَنْ صَامَ رَمَضَانَ، إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
 
யார் ரமலானுடைய மாதத்தில் அல்லாஹ்வுக்காக நம்பிக்கை கொண்டவராக அல்லாஹ்விடத்தில் நன்மையைத் தேடியவராக நோன்பு நோற்பாரோ அவருடைய முந்தைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படுகிறது. 
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 38.
 
மேலும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
«مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
 
யார் ரமலானுடைய இரவுகளில் அல்லாஹ்வுக்காக நம்பிக்கை கொண்டவராக அல்லாஹ்விடத்தில் நன்மையைத் தேடியவராக இரவு வணக்கத்தில் ஈடுபடுவார்களோ அவருடைய முந்தைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிடும்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 37.
 
ரமலான் என்பது இன்று நம்மில் பலர் விளங்கி வைத்திருப்பதைப்போன்று அல்ல, சாப்பிடுவதினுடைய நேரத்தை மாற்றிக் கொண்டார்களே தவிர, சாப்பாட்டின் அளவை மாற்ற வில்லை. 
 
ஒரு நாள் சாப்பிடக் கூடிய சாப்பாட்டின் நேரத்தின் எண்ணிக்கை அதிகமானது, சாப்பாட்டின் வகைகள் அதிகமானது, இன்னும் எத்தனையோபேர் வீண்விரயம் செய்வதற்கென்றே ரமலானை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
 
பல மாதங்களில் செலவழிக்க வேண்டிய அந்த  செலவுகளை  ரமலான் உடைய அந்த ஒரு மாதத்தில் செலவழிக்கக் கூடிய நிலையில் இன்று நம்மில் பலர் இருப்பதை பார்க்கிறோம்.
 
ரமலான் பரக்கத்தான மாதம் என்றால், அமல்களை கொண்டு பரக்கத் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ரமலான் ரஹ்மத்தான மாதம் என்றால்,  அமல்களை அதிகப்படுத்துவதால் ரஹ்மத் என்று புரிந்துகொள்ளுங்கள். 
 
உணவுகளை அதிகப்படுத்துவதால் வீண் விரயங்களை அதிகப்படுத்துவதால் நோன்பு திறத்தல் என்ற பெயரில் நம்முடைய வீண் விரயங்களால் அல்லது ஸஹர் என்ற பெயரில் ஸஹருக்கு விருந்தளிக்கிறோம் என்ற பெயரில் வீண்விரயம் செய்வதால் அது பரக்கத் அல்ல. அது அல்லாஹ்வுடைய ரஹ்மத்தல்ல.
 
ரஹ்மத் என்பது, பரக்கத் என்பது, அல்லாஹ் நமக்கு கொடுத்த, ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் கற்றுக்கொடுத்த அமல்களை இக்லாஸோடு அந்த முஹப்பத்தோடு அதிகமாக ஈடுபடுவது, அதிகமாக செய்வது. அது பரக்கத்.
 
ஆகவேதான் ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஸஹர் உடைய உணவை பார்க்கிறோம், சஹாபாக்களுடைய இஃப்தாரை பார்க்கிறோம்.
 
இன்று, அவர்களுடைய இஃப்தார் அளவுக்கு நம்மால் செய்ய முடியுமா? அப்படி முடியவில்லை என்றால் கூட, ஆனால் அதற்காக நாம் எப்போதும் மற்ற மாதங்களில் பழகி வைத்திருப்பதைப் போன்று, அந்த உணவு பழக்கங்களை வெறும் நேரத்தை மட்டும் மாற்றிக் கொண்டு, அப்படியே தொடர்வோமேயானால் கண்டிப்பாக நோன்பு என்பது அமலுடைய மாதமாக இருக்காது. தூங்குவதனுடைய மாதமாகத்தான் இருக்கும். சோம்பேறித்தனத்துடைய மாதமாகத்தான் இருக்கும். 
 
எப்போது உணவுடைய அளவை குறைப்போமோ, நம்மிடத்தில் உள்ளத்தில் ஆர்வத்தை அதிகப்படுத்துவோமோ, மறுமைக்கான முன்னோக்குதலை அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதை அல்லாஹ்வின் பக்கம் ஓட வேண்டும் என்ற அந்த தேடலை உள்ளத்தில் கொண்டு வருவோமோ அப்போதுதான் அந்த ரமலான் அதனுடைய பகல் காலங்கள் அதனுடைய இரவு காலங்கள் அல்லாஹ் விரும்பியபடி நம்மால் கழிக்க முடியும்.
 
இன்னும் சில தினங்களில் ரமலான் நம்மை முன்னோக்கி வர இருக்கிறது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லாம் ஆசையோடு ரமலானை எதிர்பார்ப்பார்கள். 
 
அதுபோன்றுதான் சஹாபாக்களும். மற்ற மாதங்களுக்கெல்லாம் பிறையை கேட்டு தெரிந்து கொள்ளக்கூடிய ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லாம் தானும் பிறை பார்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள். சஹாபாக்களையும் பிறையை பாருங்கள் பிறையைத் தேடிக்கொண்டே இருங்கள் என்று கூறுவார்கள்.
 
ஷஅபான் உடைய பிறையை தவறிவிடாமல் கணக்கு வைத்து கொண்டே வாருங்கள், இன்று என்ன பிறை? நாளை எத்தனை? என்று தொடர்ச்சியாக நீங்கள் எண்ணிக் கொண்டு வாருங்கள்.
 
«أَحْصُوا هِلَالَ شَعْبَانَ لِرَمَضَانَ»
 
ரமலானுக்காக என்று ஷஅபான் உடைய பிறையை நீங்கள் என்ன ஆரம்பித்து விடுங்கள். 
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 687.
 
இப்படி ஒரு ஆர்வத்தோடு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லாம் ரமலானை வரவேற்றார்கள்; ரமலானை எதிர்பார்த்திருந்தார்கள்; அதற்கான அமல்களுடைய ஆர்வத்தை அதற்கு முன்பே ஸஹாபாக்களுக்கு ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கொடுப்பார்கள்.
 
நாமும் ரஸுலுல்லாஹ்  உடைய அந்த உண்மையான சுன்னத்தை பின்பற்றி, அமல்களுக்கான ரமலனாக வரக்கூடிய ரமலானை ஆக்குவோமேயாக! 
 
இப்போதிலிருந்தே அந்த சிந்தனையை நம்மிடத்தில் கொண்டு வந்து, அதுபோன்று நமது மனைவி மக்கள் பிள்ளைகளிடத்தில் கொண்டுவந்து, முற்றிலும் நமது உள்ளத்தை தூய்மைப்படுத்தி அல்லாஹ்வின் பக்கம் நம்மை நெருக்கமாக்க கூடிய, தக்வாவையும் அல்லாஹ்வுடைய கிருபையையும் கொடுக்கக்கூடிய ஒரு நோன்பாக வரக்கூடிய ரமலானை நாம் ஆக்கிக் கொள்வதற்காக முயற்சி செய்வோமாக!
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் அந்த நற்பாக்கியத்தை தந்தருள்வானாக! அல்லாஹு தஆலா நம்முடைய முஃமினான ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல அமல்களை இலேசாக்கி தருவானாக! பாவங்களிலிருந்து நம்மை பாதுகாப்பானாக! 
 
அல்லாஹ்வின் வேதத்தைப் பின்பற்றி, ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் சுன்னாவை  பின்பற்றி, எல்லா நிலைகளிலும் அல்லாஹ்விற்கு நன்றி உள்ளவர்களாக, அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பை தேடியவர்களாக வாழ்வதற்கு அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா அருள்புரிவானாக! நம்முடைய இறுதி முடிவை அழகிய முடிவாக ஆக்கி வைப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا دَاوُدُ يَعْنِي ابْنَ قَيْسٍ، عَنْ أَبِي سَعِيدٍ، مَوْلَى عَامِرِ بْنِ كُرَيْزٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحَاسَدُوا، وَلَا تَنَاجَشُوا، وَلَا تَبَاغَضُوا، وَلَا تَدَابَرُوا، وَلَا يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَانًا الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لَا يَظْلِمُهُ وَلَا يَخْذُلُهُ، وَلَا يَحْقِرُهُ التَّقْوَى هَاهُنَا» وَيُشِيرُ إِلَى صَدْرِهِ ثَلَاثَ مَرَّاتٍ «بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ، كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ، دَمُهُ، وَمَالُهُ، وَعِرْضُهُ» (صحيح مسلم -2564)
 
குறிப்பு 2)
 
حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِنَّ فِي الجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ، يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ القِيَامَةِ، لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ، يُقَالُ: أَيْنَ الصَّائِمُونَ؟ فَيَقُومُونَ لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ، فَإِذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ " (صحيح البخاري- 1896)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/