HOME      Khutba      வணக்க வழிபாட்டில் சோர்வும் அதன் தீர்வும் | Tamil Bayan - 705   
 

வணக்க வழிபாட்டில் சோர்வும் அதன் தீர்வும் | Tamil Bayan - 705

           

வணக்க வழிபாட்டில் சோர்வும் அதன் தீர்வும் | Tamil Bayan - 705


வணக்க வழிபாட்டில் சோர்வும் அதன் தீர்வும்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : வணக்க வழிபாட்டில் சோர்வும் அதன் தீர்வும்
 
வரிசை : 705
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 25-03-2022 | 22-08-1443
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்கும் கண்ணியத்திற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வின் தூதர் மீதும், அந்தத் தூதரின் பாசத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும், ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக!
 
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, தக்வா உடைய வாழ்க்கை தான் அல்லாஹ்விற்கு பிடித்தமான வாழ்க்கை, அந்த வாழ்க்கையில் தான் அல்லாஹு தஆலா தன் பொருத்தத்தையும், இம்மை மறுமையின் வெற்றியையும் ஆக்கி வைக்கிறான் என்று எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ்வை உண்மையில் பயந்து நடக்கக்கூடிய, அல்லாஹ்வுடைய அச்சத்தை அல்லாஹ்வுடைய பயத்தை அல்லாஹ்வுடைய நினைவை எப்போதும் உள்ளத்தில் கொண்டிருக்கக்கூடிய நல்ல முஃமின்களில் என்னையும் உங்களையும் நமது சந்ததிகளையும் அல்லாஹு தஆலா ஆக்கியருள்வானாக! ஆமீன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா தன்னுடைய கண்ணியத்திற்குரிய வேதம் அல்குர்ஆனில் நம்மைப் பார்த்து சொல்கிறான்:
 
وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ
 
நீங்கள் உங்களது ரப்பை எப்போதும் முன்னோக்கி கொண்டே இருங்கள். அவனை முன்னோக்கி அவன் பக்கம் நீங்கள் வந்து கொண்டே இருங்கள். (அல்குர்ஆன் 39 : 54)
 
நம்முடைய மறுமை வாழ்க்கை ஆரம்பிக்கின்ற வரை, நம்முடைய இறுதி மூச்சு லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று அந்தத் தூய கலிமாவை அந்த ஈமானோடு முடிகின்ற வரை, அல்லாஹ்வை முன்னோக்கி நம்முடைய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். 
 
வேறு எந்த பக்கமும் நம்முடைய முகத்தை திருப்பி விடக் கூடாது. அந்தப் பயணத்தில் நாம் நின்று விடக்கூடாது. சோர்ந்து விடக்கூடாது. அங்கும் இங்கும் நாம் நம்முடைய கவனங்களை திருப்பி விடக்கூடாது.
 
அல்லாஹு தஆலா பல வசனங்களில் நமக்கு இதை நினைவு கூறுகிறான்.
 
 وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ
 
உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சொர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறையச்சம் உடையவர்களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 3 : 133)
 
فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ
 
நன்மையானவற்றை செய்வதில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லுங்கள். (அல்குர்ஆன் 2 : 148)
 
سَابِقُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَاءِ وَالْأَرْضِ أُعِدَّتْ لِلَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرُسُلِهِ ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ
 
ஆகவே, (மனிதர்களே!) நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பை நோக்கியும், சொர்க்கத்தை நோக்கியும் முந்திச் செல்லுங்கள். அச்சொர்க்கத்தின் விசாலமோ வானம், பூமியின் விசாலத்தைப்போல் இருக்கிறது. அது அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களுக்காகவே தயார்படுத்தப்பட்டிருக்கிறது. இது அல்லாஹ்வுடைய அருளாகும். இதை அவன் விரும்பியவர்களுக்கே கொடுக்கிறான். அல்லாஹ் மகத்தான அருளாளன்! (அல்குர்ஆன் 57 : 21)
 
இப்படியாக, அல்லாஹு தஆலா நமக்கு நினைவூட்டுகின்றான். ஏனென்றால், மனிதன் மறதியோடு படைக்கப்பட்டிருக்கிறான். மனிதன் அவனுடைய இயற்கையில், சோர்வு அலட்சியம் மறதி என்பது சேர்ந்து இருக்கிறது. 
 
இதிலிருந்து ஒரு அடியான் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமென்றால், அவனுக்கு அவனுடைய ஈமான் இறைநம்பிக்கை உறுதியாக இருக்க வேண்டும். மறுமையினுடைய பயம் அதிகமாக இருக்க வேண்டும். மறுமையினுடைய ஆர்வம் அதிகமாக இருக்க வேண்டும்.
 
இந்த உள்ளம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது போன்று தான். 
 
«إِنَّ الْإِيمَانَ لَيَخْلَقُ فِي جَوْفِ أَحَدِكُمْ كَمَا يَخْلَقُ الثَّوْبُ، فَيَتْلُو، فَاتْلُوا الْقُرْآنَ يُجَدِّدُ الْإِيمَانَ فِي قُلُوبِكُمْ»
 
ஈமான் உங்களுடைய உள்ளத்தில் பழமை அடைகிறது. ஆடை பழையதாக ஆகுவது போன்று. அல்லாஹ்விடத்தில் நீங்கள் கேளுங்கள்; அல்லாஹ் உங்களது ஈமானை உங்களுக்கு புதுப்பித்து தரட்டும் என்று.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹு, நூல் : தப்ரானி, எண் : 84.
 
இந்த இறை நம்பிக்கை நம்முடைய உள்ளத்தில் பசுமையாக இருக்க வேண்டும். அது கூடிக் கொண்டே இருக்க வேண்டும். அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
 
ஈமான் பசுமையாக இல்லையென்றால், ஈமான் கூடுவதற்கு பதிலாக குறைந்து கொண்டே சென்றால், கண்டிப்பாக அமல்களின் விஷயத்தில் மார்க்க பற்றில் பல சோர்வுகள், மற்றும் அலட்சியம் மறதி ஏற்படும். 
 
அதுபோன்று மார்க்கத்தை விட்டு விலகுதல். மார்க்க சட்டங்களை மீறுதல். இப்படியாக பல விதமான நோய்களுக்கு அவன் ஆளாகுவான். அந்த நோய்கள் உடல் சார்ந்த நோய்கள் அல்ல.
 
உடல் சார்ந்த நோய்கள் ஒரு மனிதனுக்கு இறுதியாக அவனுக்கு மரணத்தைக் கொடுக்கும். அதோடு அந்த உடல் சார்ந்த நோய்கள் முடிந்துவிடும்.
 
இந்த உள்ளம் சார்ந்த, கல்பு சார்ந்த நோய்கள் ஒரு மனிதனுடைய ரூஹை அழித்துவிடுகிறது. அதனால் அவன் நிரந்தரமாக நரகத்திற்கோ, அல்லது நீண்டகால நரக தண்டனைக்கோ அவன் ஆளாகி விடுகிறான்.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ஈமானுடைய விஷயத்தில், நமக்கு அறிவுரை கூறிய போது சொன்னார்கள்:
 
«مَا مِنَ الْقُلُوبِ قَلْبٌ، إِلَّا وَلَهُ سَحَابَةٌ كَسَحَابَةِ الْقَمَرِ، بَيْنَا الْقَمَرُ مُضِيءٌ إِذْ عَلَتْ عَلَيْهِ سَحَابَةٌ، فَأَظْلَمَ إِذْ تَجَلَّتْ عَنْهُ فَأَضَاءَ، وَبَيْنَا الرَّجُلُ يُحَدِّثُ إِذْ عَلَتْهُ سَحَابَةٌ، فَنَسِيَ إِذْ تَجَلَّتْ عَنْهُ فَذَكَرَ»
 
உள்ளங்கள் எப்படி என்றால், சந்திரனை சுற்றி மேகங்கள் இருப்பதைப் போல. சில நேரம் அந்த மேகம் சந்திரனை மூடிவிடுகிறது. சந்திரனுடைய ஒளி தெரியாமல் போய்விடுகிறது. அந்த மேகம் சந்திரனை விட்டு விலகி விட்டால், அதனுடைய ஒளி தெரியவரும்.
 
அப்படித்தான் இந்த உள்ளத்தில் பாவ அழுக்குகள், அதுபோன்று அல்லாஹ்வை மறந்த விஷயங்கள், உலக போகங்கள் இப்படியாக உள்ளத்தில் உள்ள ஒளியை மறைக்கக் கூடிய, அல்லது உள்ளத்தின் ஒளியை போக்கக்கூடிய, அல்லது உள்ளத்துடைய ஈமானுடைய ஆற்றலை பலவீனப்படுத்தகூடிய விஷயங்கள் உள்ளத்தை சுற்றிக் கொண்டே இருக்கின்றன.
 
அறிவிப்பாளர் : அலீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அல்முஃஜ்ஜமுல் அஸ்வத், எண் : 5220, தரம் : ஹசன் (அல்பானி)
 
அடியான் கொஞ்சம் மறக்கும் பொழுது, அந்த விஷயங்கள் உள்ளத்தின் மீது மிகைத்து விடுகின்றன. இந்த உள்ளத்தை பற்றி கவனம் மிக அதிகமாக இருக்க வேண்டும். உடலுக்கு கொடுக்கக்கூடிய கவனத்தை விட, உள்ளத்திற்கு கொடுக்கக்கூடிய கவனம் அதிகமாக இருக்க வேண்டும்.
 
நாம் பார்க்கிறோம்; நம்முடைய வாழ்க்கையை, நம்முடைய உலகத்தினுடைய கஷ்டங்களை, உலகத்தினுடைய பிரச்சனைகளை சிந்திக்கிற அந்த நேரத்தில், நம்முடைய அமல்களை பற்றி, நம்முடைய மறுமையின் பயணத்தை பற்றி, நாம் எந்த அளவுக்கு சிந்தனை உள்ளவர்களாக இருக்கிறோம்!
 
ஒரு நேரத்தில் தொழுகையில் ஆர்வத்தோடு இருந்த நாம், அந்த தொழுகையில் ஆர்வமின்மை ஏற்படுகிறது. குர்ஆன் ஓதுவதில் ஆர்வமின்மை ஏற்படுகிறது. பள்ளிக்கு விரைந்து வருவதில் ஆர்வமின்மை ஏற்படுகிறது.
 
இப்படியாக வணக்க வழிபாடுகளில் சோர்வு. அதையும் மீறி அந்த வணக்க வழிபாடுகளில் செல்லும்போது, அந்த வணக்க வழிபாடுகளில் அலட்சியம், மறதி. மறதியோடு சேர்ந்து வணக்க வழிபாடுகள். 
 
அதையும் மீறி அந்த வணக்க வழிபாடுகளில் இருக்கும்பொழுது, உலகத்தின் சிந்தனைகள் மிகைத்து, மறுமைனுடைய சிந்தனை முற்றிலும் இல்லாத நிலையில், அல்லாஹ்வுடைய நினைவுகள் முற்றிலும் இல்லாத நிலையில், அந்த வணக்க வழிபாடுகளை செய்து முடித்து திரும்புகின்ற ஒரு நிலையும் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுகிறதை நாம் பார்க்கிறோம்.
 
இதைத்தான் الفتور-ஃபுத்தூர் என்று சொல்வார்கள். ஒரு அடியானுக்கு அமல்களில் ஈமானுடைய விஷயங்களில் சோர்வும் அலட்சியமும் ஏற்படுகிறது.
 
ஆனால், உலக விஷயங்களில் ஆர்வத்தோடும், ஈடுபாட்டோடும், உற்சாகத்தோடும் நாம் ஈடுபடுகிறோம்.
 
துன்யா உடைய விஷயத்தில் நாளுக்கு நாள் நம்முடைய வருவாய்க்காக, செல்வத்திற்காக, வசதிகளைப் பெருக்குவதற்காக, உழைப்பை அதிகப்படுத்துகிறோம். நேரத்தை அதிகப் படுத்துகிறோம். தேவையான முதலீட்டை அதிகப்படுத்துகிறோம்.
 
ஆனால், மறுமை விஷயத்தில் நாம் சுழற்ச்சியாக செய்யக்கூடிய ஒரு குறிப்பிட்ட அமல்களை தவிர்த்து, வேறு என்ன முயற்சியை அதிகப்படுத்தி இருக்கிறோம்? வேறு எந்த ஆர்வத்தை அதிகப்படுத்தி இருக்கிறோம்? எந்த ஈடுபாட்டை அல்லாஹ்விற்கு முன்னால் காண்பித்து இருக்கிறோம்?
 
சரி, தொடர்ந்து சுழற்ச்சியாக செய்யக்கூடிய வழிபாடுகளிலாவது எந்த அளவு ஈடுபாடு இருக்கிறது? எந்த அளவு ஆர்வம் இருக்கிறது? எந்த அளவு மன ஓர்மை இருக்கிறது? கவனம் இருக்கிறது?
 
ஐந்து நேரத் தொழுகைகளை கூட, அலட்சியத்தோடு நிறைவேற்றக்கூடிய பலவீனமான ஈமான் தானே நம்மிடம் இருக்கிறது. திக்ருகள் செய்யப்படுகின்றன. ஆனால் அல்லாஹ்வுடைய நினைவுகள் இல்லாமல் உள ஓர்மை இல்லாமல் செய்கிறோம்.
 
குர்ஆன் ஓதப்படுகிறது, ஆனால் சிந்திக்காமல். துவா கேட்கப்படுகிறது, ஆனால் அல்லாஹ்வுடைய அந்த பயம் இல்லாமல். அழுகை இல்லாத துஆக்கள். இறையச்சம் இல்லாத துஆக்கள்.
 
இதற்கு என்ன காரணம்? முதலாவது, நம்முடைய உள்ளம் இறுகிப்போய் இருப்பது. உள்ளம் எந்தளவு மென்மையாக இருக்குமோ, அந்த அளவு அமல்கள் சரியாக இருக்கும். உள்ளம் இறுக்கி விட்டால் கடினமாகி விட்டால் அந்த உள்ளம் மிக மோசமானது.
 
பிறகு, அந்த உள்ளத்தை சுமந்து இருக்கக்கூடிய மனிதர்களுடைய உணர்வு நாசமாகிவிடும்.
 
இஸ்ரவேலர்களை அல்லாஹு தஆலா கண்டிக்கும் பொழுது, பல படிப்பினைகளை பல பாடங்களை பல அத்தாட்சிகளை,அல்லாஹு தஆலா அவர்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக காட்டியும் அவர்கள் திருந்தவில்லை.
 
அல்லாஹ்வின் பக்கம் அவர்கள் ஒதுங்கவில்லை. அல்லாஹு தஆலா அந்த இஸ்ரவேலர்களை கண்டித்து சொல்கிறான்:
 
ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً 
 
இதற்குப் பின்னும் உங்கள் உள்ளங்கள் இறுகிவிட்டன. அவை கற்பாறைகளைப் போல் அல்லது அவற்றைவிடக் கடினமானவையாக இருக்கின்றன. (அல்குர்ஆன் 2 : 74)
 
வசனத்தின் கருத்து : இவ்வளவு அத்தாட்சிகள் உங்களுடைய கண்ணுக்கு முன்னால் காட்டியதற்கு பிறகும்கூட, உங்களுக்கு பயம் வரவில்லையே? அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வரவில்லையே? நபியை பின்பற்ற வேண்டுமென்ற ஆர்வம் வரவில்லையே? 
 
மரணத்திற்குப் பின்னால் எழுப்பப் படுவோம் என்ற உறுதி வரவில்லையே? மௌத்தை நினைக்கவில்லையே? உங்களுடைய உள்ளங்கள் இந்த அளவு மோசமாக இறுகி கிடக்கின்றன. கற்களைப் போல பாறைகளை போல.
 
மேலும், அல்லாஹ் சொல்கிறான்:
 
فَوَيْلٌ لِلْقَاسِيَةِ قُلُوبُهُمْ مِنْ ذِكْرِ اللَّهِ 
 
அல்லாஹ்வுடைய நினைவுகள் இல்லாமல் உள்ளங்கள் யாருக்கு இறுகி விட்டதோ அவர்களுக்கு நாசம் உண்டாகட்டும் என்பதாக. (அல்குர்ஆன் 39 : 22)
 
இது பொதுவான வசனம். இந்தத் தன்மையில் யார் இருப்பார்களோ எல்லோருக்கும் இது பொருந்தும். இந்த இடத்தில் முஸ்லிம் காஃபிர் என்று அல்லாஹ் பிரிக்கவில்லை. ஒருவன் தன்னை முஸ்லிம் என்று சொல்லுகின்ற நிலையிலும், இந்த தன்மையில் அவன் இருக்க முடியுமா என்றால்? முடியும்.
 
ஒரு காஃபிரை போல, எப்படி ஒரு காஃபிருக்கு அல்லாஹ்வுடைய நினைவு அறவே இல்லாமல் உள்ளம் இறுகிப்போய் இருக்கிறானோ, அந்த நிலைமைக்கு ஒரு முஸ்லிம் ஆகுவானா என்றால்? ஆகுவான்.
 
அவன் எப்போது அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்க வில்லையோ, பாவங்களுக்காக தவ்பா செய்யவில்லையோ, அமல்களில் தன்னை ஈடுபடுத்த வில்லையோ, கண்டிப்பாக அவனுடைய நிலையும், ஒரு காஃபிர் உடைய நிலையைப் போன்று ஆகிவிடும்.
 
இன்னொரு அடையாளம் இருக்கிறது. அதாவது, நம்முடைய அமல்களில் இருக்கக்கூடிய, அந்த சோர்வுக்கு இன்னொரு ஒரு வெளிப்பாடு இருக்கிறது.
 
அதாவது, நல்லவர்கள் உடைய அந்த தொடர்பில் நமக்கு ஒரு ஈடுபாடு இருக்காது. நம்முடைய பழக்க வழக்கம் எல்லாம் யாருடன் இருக்கும் என்றால், அல்லாஹ்வை மறந்தவர்களோடு அதிகமாக இருக்கும்.
 
நன்மையை ஏவக்கூடியவர்கள், தீமையை தடுக்கக் கூடியவர்கள், நம்முடைய தவறை சுட்டிக் காட்டக் கூடியவர்களை பார்த்தால் நமக்கு பிடிக்காது. நம்மை பள்ளிக்கு அழைக்க கூடியவர்கள், நாம் சோர்வுற்றால் நம்மை அமல்களில் தீவிரப்படுத்த கூடியவர்கள் இப்படிப்பட்டவர்கள் உடைய அந்த நட்பு என்பது பிடிக்காது.
 
அதுபோன்று, நம்முடைய உள்ளம் எப்போதும் ஒரு நெருக்கடியாக இருக்கும். உலக வாழ்க்கையின் மீது அதிகமான மோகம் கொண்டதால், உலகச் செல்வங்கள் மீது அதிகமான மோகம் கொண்டதால், மறுமையினுடைய அமல்களில் அவர்களுக்கு ஈடுபாடு இருக்காது. மறுமை உடைய அமல்களை சிரமமாக பார்ப்பார். 
 
எந்த அளவு சுருக்கமாக அமல்களை முடித்துக் கொள்ள முடியுமோ அந்த அளவு சுருக்கமாக முடித்துக் கொண்டு, அமல்களைவிட்டு எவ்வளவு சீக்கிரம் வெளியேற முடியும் என்று தான் அவர் பார்ப்பாரே தவிர, அமல்களில் அவரால் அதிக நேரம் ஈடுபட முடியாது.
 
அதுபோன்று இன்னொரு முக்கியமான அடையாளம், வெளிப்பாடு இருக்கின்றது. வணக்க வழிபாடு அவர்களுக்கு தவறும். ஆனால், அதைப் பற்றிய கவலை இருக்காது.
 
ஒரு முஃமினுடைய உள்ளம் எப்படி இருக்க வேண்டும் என்றால், ஒரு வணக்கத்திற்குப் பிறகு, இன்னொரு வணக்கத்தில் நான் எப்போது ஈடுபடுவேன்! என்ற ஆசையோடு தேடலோடு இருக்க வேண்டும். ஒரு தொழுகை முடிந்த உடனேயே அடுத்த தொழுகை. அதற்கான எதிர்பார்ப்போடு தான் அவன் மஸ்ஜிதிலிருந்து வெளியேற வேண்டும்.
 
ஏதோ சுமையை இறக்கி வைத்து விட்டு ஓடுவதைப் போல, அவன் தொழுகையிலிருந்து ஓட மாட்டான். அவன் தொழுது முடித்து செல்லும்பொழுது, அல்லாஹ் உடைய மஸ்ஜிதிற்கு நான் எப்பொழுது திரும்ப வருவேன்? என்று அந்த நேரத்தை எதிர்பார்த்தவனாக அவன் மஸ்ஜிதை விட்டு வெளியே செல்வான். 
 
இதைத்தான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு சொன்னார்கள்:
 
وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ
 
அர்ஷுடைய நிழலில் இருக்கக்கூடிய அந்த ஏழு கூட்டங்களில், ஒரு முஸ்லிமை சொன்னார்கள். அவனுடைய உள்ளம் மஸ்ஜிதில் தொங்கவிடப்பட்டிருக்கும்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 660, 1423.
 
இதற்கு என்ன அர்த்தம்? அவன் உலகத்தில் எங்கிருந்தாலும் திரும்ப மஸ்ஜிதை நோக்கி வர வேண்டும். எதற்கு மஸ்ஜிதை நோக்கி வர வேண்டும்? அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டுகளுக்காக, தொழுகையை நிறைவேற்றுவதற்காக, முன் பின் சுன்னத்துகளை நிறைவேற்றுவதற்காக, குர்ஆன் ஓதுவதற்காக, திக்ரு செய்வதற்காக. நான் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதில் ஒதுங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இருப்பார்.
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில், இந்த உம்மத் உடைய துறவறத்தை பற்றி கேட்கப்பட்டது.
 
துறவரம் செல்வதற்கு இந்த உம்மத்தில் அனுமதி கிடையாது. உனக்கு உலகப் பற்றற்ற வாழ்க்கை வேண்டுமென்றால், மஸ்ஜிதில் நீ நேரம் கொடுப்பாயாக. மஸ்ஜிதில் நாம் அதிக நேரம் இருப்பது, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; ஜிஹாதுக்கு சமமான நன்மை என்று. (1)
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 251.
 
இன்று தவ்ஹீதை பேசுகிறோம். சுன்னாவை பேசுகிறோம். நாம் மிகக்குறைவாக நேரம் கொடுப்பது மஸ்ஜிதுக்கு தான். கடைசி ஆளாக வந்து விட்டு, முதல் ஆளாக வெளியே செல்வது. பெரிய புத்திசாலித்தனமாக தான் நடப்பது போன்று.
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மஸ்ஜிதில் அதிக நேரம் இருப்பதை, ஜிஹாதுக்கு சமமாக சொன்னார்கள். ஒரு தொழுகைக்கு பிறகு, இன்னொரு தொழுகையை எதிர்பார்த்து இருப்பது.
 
அதாவது, முஸ்லிம் நாட்டினுடைய எல்லையில் எதிரிகள் வந்துவிடாமல், முஸ்லிம் நாடுகளை பாதுகாப்பது. இது எல்லை பாதுகாப்பாகும்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 251.
 
பிறகு சொன்னார்கள்: 
 
" المَلاَئِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلَّاهُ الَّذِي صَلَّى فِيهِ، مَا لَمْ يُحْدِثْ، تَقُولُ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ "
 
ஒரு மனிதர் தொழுதுவிட்டு அந்த இடத்தில் அமர்ந்து இருப்பாரேயானால், அவர் மீது மலக்குகள் துஆ செய்து கொண்டிருக்கிறார்கள்.
 
யா அல்லாஹ்! இவரை மன்னிப்பாயாக. இவர் மீது கருணை காட்டுவாயாக! என்று, அவருடைய ஒழு முறிகின்ற வரை, மலக்குகள் அவருக்காக துஆ செய்து கொண்டே இருக்கிறார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 445,477,659.
 
மறதியினுடைய இன்னொரு வெளிப்பாடு இருக்கிறது. அதாவது, ஒரு நேரத்தில் பாவத்தை நினைத்து பயந்து கொண்டிருந்தவன். சிறு சிறு விஷயத்தை கூட, ஹலாலா? ஹராமா? என்று கேட்டு, தெளிவடைந்து, அல்லாஹ்விற்கு பிடிக்காத சிறிய பெரிய தவறுகளில் இருந்து விலகிக் கொண்டிருந்த இந்த மனிதன், கடைசியில் மக்ரூஹ் ஆன -வெறுக்கப்பட்ட காரியங்களை கொஞ்சம் கொஞ்சமாக செய்து, கடைசியில் ஒட்டுமொத்த ஹராமில் விழுந்து விடுவான். 
 
ஹராமில் ஒன்றல்ல, இரண்டல்ல தொடர்ந்து செய்யும்போது கூட, அந்த ஹராமினுடைய பயம் அவனுக்கு இல்லாமல் போய்விடும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இது மறதியில் ஒரு மோசமான நிலை.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ وَقَعَ فِي الْحَرَامِ
 
ஒரு மனிதன் சந்தேகமான விஷயத்தில் அவன் தொடர்ந்து ஈடுபட்டுவந்தால், கடைசியில் ஹராமில் அவன் விழுந்து விடுவான். (2)
 
அறிவிப்பாளர் : நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1559.
 
அதுபோல்தான், அல்லாஹ் தடுத்த பாவங்களை செய்யும் பொழுது, மனிதன் பாவத்தில் ஈடுபடும் பொழுது, அப்போது அவனுடைய உள்ளத்தில் ரோஷம் வரவேண்டும். ஈமானிய வேகம் வர வேண்டும்.
 
நம்முடைய குடும்பத்தார்களோ, நண்பர்களோ, அல்லது சமுதாயத்தவர்களோ, ஹராமான காரியத்தை செய்யும்போது அந்த ஹராமை தடுக்க வேண்டும்.
 
தங்களுடைய குடும்ப பெண்கள் ஹிஜாபை பேணவில்லை என்றால், அல்லது தன்னுடைய நண்பன் இசை கேட்கிறான், போகக்கூடாத ஹராமான ஒரு இடத்திற்கு செல்கிறான் என்றால், என்னுடைய நண்பன் இப்படி செய்கிறானே, அவனை தடுக்க வேண்டுமே என்ற ஈமானிய உணர்வு வரவேண்டும்.
 
ஆனால், இந்த உள்ளத்தில் அலட்சியம் என்ற நோய் வந்துவிட்டால், அவனுக்கு அது ஒரு பெரிய குற்றமாக தெரியாது. ஒருகால் இவனும் அதில் ஈடுபட ஆரம்பித்து விடுவான்.
 
இதற்கு மிகப்பெரிய காரணம் என்ன என்று பார்ப்த்தால், ஈமானுடைய சூழ்நிலையில் இருந்து, நல்லவர்களுடைய நட்பில் இருந்து தூரமாக ஆகி, அந்த அமலினுடைய தொடர்பில் இருந்து ஒரு மனிதன் தூரமாக ஆகி, உலகத்தில் அதிகமாக ஈடுபடுவானேயானால், உலக சிந்தனைகளை தன்னுடைய மூளையில் அதிகப்படுத்திக் கொள்வானேயானால், உலக சிந்தனைகளை அவன் மிகைப்படுத்திக் கொள்வானேயானால், அவனுடைய உள்ளம் மிகப்பெரிய மறதிக்கு ஆளாகிவிடும். அவனுடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய நினைவு பறிபோய்விடும்.
 
ஒரு சில ஹதீஸ்களைக் கவனியுங்கள். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
 
: «مَا ذِئْبَانِ جَائِعَانِ أُرْسِلَا فِي غَنَمٍ بِأَفْسَدَ لَهَا مِنْ حِرْصِ المَرْءِ عَلَى المَالِ وَالشَّرَفِ لِدِينِهِ»
 
ஒரு பெரிய ஆட்டு மந்தைகள் இருக்கின்றன. இரண்டு பசியுள்ள பசியுள்ள ஓநாய்கள், அந்த ஆட்டு மந்தைகளுக்குள் சென்று விட்டால், எப்படி அந்த ஆட்டு மந்தைகளை கடித்து குதறி நாசம் ஆக்குமோ, அதை விட மோசமாக நாசமாக்கிவிடும், ஒரு மனிதனுடைய உள்ளத்தில் பணத்தினுடைய ஆசை வந்துவிட்டால், செல்வத்தின் ஆசை வந்துவிட்டால், பெருமையின் ஆசை வந்துவிட்டால்.
 
அறிவிப்பாளர் : கஅப் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2376.
 
அதுபோன்று மூஆது இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு சொல்கின்றார்கள்:
 
ஆதமின் மகனே! உனக்கு துன்யா வேண்டும்தான். ஆனால், உனக்கு மறுமை அதைவிட கண்டிப்பாக அதிகமாக வேண்டும். நீ முதலாவதாக மறுமையின் தேவையை சரி செய்வதற்கு தொடங்கு. அதற்குப் பிறகு உனது துன்யாவை நீ சரி செய்வதற்கு தொடங்கு.
 
அப்படியில்லாமல் முதலில் துன்யாவை சரி செய்வோம். பிறகு மறுமையை பார்க்கலாம், என்று நினைத்தாயேயானால், கண்டிப்பாக உனக்கு மறுமை கிடைக்காது. தவறி விடும். உனக்கு கிடைத்த துன்யாவிலும் நீ பெரிய ஆபத்தில் இருப்பாய். 
 
நூல் : அல்வாபிலுஸ் சைய்யிப், ஆசிரியர் : இமாம் இப்னுல் கைய்யிம், இறப்பு : ஹிஜ்ரி (751)
 
எவ்வளவு அழகான உபதேசம்! முதலில் உன்னுடைய மறுமைக்காக முயற்சி செய். அந்த மறுமை உனக்கு கிடைத்து விட்டால், பிறகு அடுத்த துன்யாவை சரி செய்ய முயற்சி செய். நீ துன்யாவுக்காக முயற்சி செய்ய ஆரம்பித்து விட்டால், மறுமை உனக்கு தவறி விடும்.
 
ஆனால், அதற்குப் பிறகு நீ துன்யாவிற்கு முயற்சி செய்து, இந்த துன்யா உனக்கு கிடைத்து விட்டால் கூட, நீ பெரிய ஆபத்தில் இருப்பாய், அந்த துன்யாவினால் எப்போது உன்னுடைய ஈமான் பறிபோகிறதோ.
 
இமாம் ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஈமானுடைய உணர்வுகளை ஊட்டக்கூடிய சபையில் வைத்து சொன்னார்கள்:
 
எங்களுக்கு மறுமையை நினைவூட்ட கூடிய, மார்க்கத்தை நினைவூட்ட கூடிய, உள்ளச்சத்தை நினைவூட்ட கூடிய எங்களுடைய சகோதரர்கள், எங்களுடைய குடும்பத்தார்களைவிட எங்கள் இடத்தில் மதிப்பு மிக்கவர்கள்.
 
ஏன் தெரியுமா? எங்கள் குடும்பத்தார்களோ, எப்போதும் நமக்கு துன்யாவை நினைவூட்டுகிறார்கள். ஆனால், இந்த நல்லவர்களோ, நமக்கு மறுமையை நினைவூட்டுகிறார்கள்.
 
ஆகவே, வரக்கூடிய இந்த ரமலானுடைய மாதம், நம்முடைய உள்ளம் அல்லாஹ்வுடைய நினைவால், அல்லாஹ்வுடைய அச்சத்தால், மறுமையின் ஆசையால், பசுமையாக இருக்கிறதா? அந்த ஈமானில் உயர்ந்து இருக்கிறதா? இல்லையா? என்பதற்குரிய மிகப்பெரிய சோதனை காலம்.
 
அதற்காக இப்போதிலிருந்தே, இந்த உள்ளத்திலுள்ள அலட்சியம் மறதி இந்த உள்ளத்திலுள்ள கவனமின்மை போன்ற நோய்களை நாம் நீக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
 
அதற்கு என்ன செய்வது? இப்போதிலிருந்தே ஜமாத் உடைய தொழுகையை சரியாக தொழுவதற்குண்டான முயற்சி. குர்ஆன் ஓதுவதற்கு உண்டான முயற்சி. பிறகு நஃபிலான நோன்பு. 
 
பிறகு, ரமலானில் இபாதத்தில் அதிகமாக ஈடுபடுவதற்காக, இப்போதிலிருந்தே அல்லாஹ்விடத்தில் துஆவை ஆரம்பித்து, அந்த இரவு காலங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து, அல்லாஹ்வை வணங்குவதற்கான பயிற்சியை ஏற்படுத்த வேண்டும்.
 
இப்படிப்பட்ட ஆசையோடு ஒரு முயற்சியோடு இன்ஷா அல்லாஹ் இருப்போமேயானால், வரக்கூடிய ரமலான் கண்டிப்பாக நமக்கு நன்மைகளை அதிகம் சேகரித்துக் கொள்வதற்காக, அல்லாஹ்வுடைய நெருக்கத்தை அதிகம் பெறுவதற்கான வழியாக இந்த ரமலான் ஆகும். 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் மறுமையின் நினைவை அதிகப்படுத்துவானாக! அல்லாஹ்வின் நினைவை அதிகப்படுத்துவானாக! இந்த தக்வாவை அதிகப்படுத்துவானாக.
 
உள்ளங்களை மறதியில் ஆழ்த்தக்கூடிய ஒவ்வொரு சிறிய பெரிய காரியத்தில் இருந்து நம்மை பாதுகாத்து அருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ - قَالَ ابْنُ أَيُّوبَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ - أَخْبَرَنِي الْعَلَاءُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللهُ بِهِ الْخَطَايَا، وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ؟» قَالُوا بَلَى يَا رَسُولَ اللهِ قَالَ: «إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ، وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ، وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ، فَذَلِكُمُ الرِّبَاطُ»  (صحيح مسلم - 251)
 
குறிப்பு 2)
 
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: سَمِعْتُهُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: - وَأَهْوَى النُّعْمَانُ بِإِصْبَعَيْهِ إِلَى أُذُنَيْهِ - «إِنَّ الْحَلَالَ بَيِّنٌ، وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لَا يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ، وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ وَقَعَ فِي الْحَرَامِ، كَالرَّاعِي يَرْعَى حَوْلَ الْحِمَى، يُوشِكُ أَنْ يَرْتَعَ فِيهِ، أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى، أَلَا وَإِنَّ حِمَى اللهِ مَحَارِمُهُ، أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً، إِذَا صَلَحَتْ، صَلَحَ الْجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ، فَسَدَ الْجَسَدُ كُلُّهُ، أَلَا وَهِيَ الْقَلْبُ» (صحيح مسلم- 1599)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/