HOME      Khutba      ஈமான் அதிகமாக நோன்பும் இரவுத் தொழுகையும் | Tamil Bayan - 708   
 

ஈமான் அதிகமாக நோன்பும் இரவுத் தொழுகையும் | Tamil Bayan - 708

           

ஈமான் அதிகமாக நோன்பும் இரவுத் தொழுகையும் | Tamil Bayan - 708


ஈமான் அதிகமாக நோன்பும் இரவுத் தொழுகையும்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஈமான் அதிகமாக நோன்பும் இரவுத் தொழுகையும்
 
வரிசை : 708
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 09-07-2021 | 29-11-1442
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரியவர்களே! உங்களுக்கு முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்து, அல்லாஹ்வின் தூதர் மீதும், அந்தத் தூதரின் கண்ணியத்திற்குரிய, பாசத்திற்குரிய குடும்பத்தார்கள் மீதும், தோழர்கள் மீதும், ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை நினைவூட்டியவனாக, அல்லாஹ்வுடைய அச்சத்தை நினைவூட்டியவனாக, மார்க்க உபதேசங்களை நினைவூட்டியவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நம் அனைவருடைய பாவங்களை மன்னிப்பானாக! நமது நன்மைகளை ஏற்று அருள் புரிவானாக! வரக்கூடிய ரமலானை நம்முடைய பாவங்கள் மன்னிக்கப் படுவதற்காகவும், அல்லாஹ்வுடைய நெருக்கத்திற்கும் நம்முடைய ஈமான் -இறைநம்பிக்கை அதிகரிப்பதற்கும் காரணமாக அல்லாஹு தஆலா ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமலான் மாதத்தை குறித்தும், ரமலானுடைய நோன்பைக் குறித்தும், ரமலானில் இரவுத் தொழுகையைக் குறித்தும் நமக்கு உபதேசம் செய்யும்போது, அதற்குரிய ஆர்வத்தை நமக்கு ஏற்படுத்தும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படி சொன்னார்கள்:
 
مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا
 
அதுபோன்று, ரமலானுடைய இரவுத் தொழுகையை கூறியபோது,
 
مَنْ قامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 37,38.
 
என்ன பொருள்? யார் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பாரோ, எப்படி நோன்பு வைப்பார்? அவர் விரும்பியபடி அல்ல. சடங்கின் படி அல்ல. ஏதோ சம்பிரதாயம், ஏதோ ஒரு வழக்கம் என்று அல்ல. 
 
அல்லாஹ்வின் மீது தனக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையை, ஈமானை அதிகப்படுத்துவதற்காக. நோன்பின் உடைய நோக்கம், இந்த நோன்பை கொண்டு நான் அல்லாஹ்வை வணங்குகிறேன்.
 
பசித்திருத்தல், தாகித்திருத்தல், தனது ஆசையை அடக்கி இருத்தல், இதன்மூலமாக அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு, அல்லாஹ்விற்கு பணிவதின் மூலமாக, ரப்புடைய இந்த உத்தரவை ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவதின் மூலமாக, நான் என்னை என்னுடைய உண்மையான எஜமானன் ஆகிய அல்லாஹ்விற்கு அடிமை என்பதை உறுதி படுத்துகிறேன்.
 
அவன் என்னுடைய மஃபூத், நான் வணங்கக்கூடிய இறைவன். அவன் என்னுடைய மவுலா, என்னுடைய ரப்பு, என்னுடைய உரிமையாளன், என்னை அதிகாரம் செலுத்தக்கூடிய, என்மீது உரிமை உள்ள என்னுடைய எஜமானன்.
 
நான் அவனுக்கு என்னை பணிய வைக்கிறேன். நான் அவனுக்கு அடிமை என்பதை, இதன் மூலமாக உறுதிப்படுத்துகிறேன். அவன் விரும்பியது தான் என்னுடைய செயலாக இருக்கும். அவன் விரும்பாததை, அவன் தடுத்ததை விட்டு நான் என்னை தடுத்து கொள்வேன்.
 
இப்படிப்பட்ட ஒரு அப்தியத்தை உறுதிப்படுத்தும் விதமாக, அந்த அடியான் நோன்பிருக்க வேண்டும் என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த வார்த்தைகளை வழிகாட்டுகிறார்கள்.
 
مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا
 
ரமலானில் யார் நோன்பு வைப்பாரோ, அந்த நோன்பு எப்படி இருக்க வேண்டும். إِيمَانًا இறை நம்பிக்கையோடு, அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை பலப்படுத்துவதற்காக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை வளர செய்வதற்காக, அதிகப்படுத்துவதற்காக இருக்க வேண்டும்.
 
ஏனென்றால், இந்த இறை நம்பிக்கை என்பது, நம்முடைய மார்க்க வழிகாட்டுதல்படி, இது ஒன்று நல்ல அமல்கள் கூடிக்கொண்டே போகும். இல்லையென்றால், பாவத்தைக் கொண்டும், அலட்சியத்தை கொண்டும், அமல்களை விடுவதை கொண்டும், இது இறங்கிக் கொண்டே போகும். தாழ்ந்து கொண்டே போகும். குறைந்து கொண்டே போகும். ஈமான் ஒரே அளவில், ஒரே தரத்தில் நிற்கக் கூடியது அல்ல. ஈமான் அதிகரிக்கக்கூடியது. அல்லது குறையக் கூடியது.
 
அல்லாஹு தஆலா முஃமீன்களைப் பற்றி குர்ஆனில் சொல்லும்போது, அவர்களுடைய ஈமானை அல்லாஹு தஆலா அதிகரித்துக் கொண்டே இருக்கிறான் என்று சொல்கிறான்.
 
فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا فَزَادَتْهُمْ اِيْمَانًا
 
யார் ஈமான் கொண்டு இருக்கிறார்களோ, அவர்களுக்கு இந்த குர்ஆன் இந்த வசனம் ஈமானை, நேர்வழியை அதிகப்படுத்தும். (அல்குர்ஆன் 9 : 124)
 
எப்படி நேர்வழியை அதிகப்படுத்தும்? ஒவ்வொரு சட்டத்தையும் அவர்கள் தெரிந்து கொள்ளும்போது, இது அல்லாஹ்வுடைய கட்டளை என்று அவர்கள் அறியும்போது, உடனே அந்த வாழ்க்கையை கொண்டு வருவார்கள். அதன் மூலமாக அவர்களுக்கு அந்த ஈமான் அதிகரிக்கும்.
 
ஒன்றை பாவம் குற்றம் என்று அறிந்து விட்டு, அதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்வார்கள். அதன் மூலமாக அவர்களுக்கு ஈமான் அதிகரிக்கும்.
 
ஆகவே, இந்த ரமலான் உடைய நோன்பின் தாத்பரியத்தில் மிக முக்கியமான ஒன்று, நம்முடைய இறை நம்பிக்கை. ஒவ்வொரு இபாதத்திற்குள்ளும் இந்த ஈமான் என்ற ரகசியம் அடங்கியிருக்கிறது.
 
அந்த இறை நம்பிக்கை என்ற அந்த உள் ஹிக்மத் தியானம் மறைந்து இருக்கிறது. எல்லா வணக்கங்களும் ஈமானோடு சம்பந்தப்பட்டவை. ஈமான் என்பது இபாதத். இபாதத் என்பது ஈமான். இபாதத் இல்லாமல் ஈமான் கிடையாது. அதை புரிந்து கொள்ள வேண்டும். இபாதத் இல்லாமல் ஈமான் என்பது கிடையாது.
 
இன்று, பல முஸ்லிம்களுடைய தவறான நிலைப்பாட்டிற்கு, அவர்களுடைய தவறான புரிதல் தான் காரணம். நாங்கள் மூஃமின்கள் என்று சொல்வார்கள். எங்களுக்கு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று சொல்வார்கள். அவனால் ஐந்து நேரத் தொழுகை இருக்காது.
 
வாழ்க்கையில் ஏதோ சில தினங்களில் அவர்கள் செய்கின்ற சில வணக்க வழிபாடுகளை தவிர, அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய ரஸூலும் ஒவ்வொரு முஃமினுடைய ஈமானின் அடையாளமாக, என்னென்ன அமல்களை சொன்னார்களோ, அந்த அமல்கள் அவர்களுடைய வாழ்க்கையில் இல்லாமலேயே, தங்களை அவர்கள் மூஃமின்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கருதிக் கொண்டிருக்கிறார்கள். பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
 
اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتٰبًا مَّوْقُوْتًا‏
 
தொழுகை நிச்சயமாக மூஃமின்களின் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது. (அல்குர்ஆன் 4 : 103)
 
இங்கே மூஃமின்கள் என்று பெருமிதம் கொண்டவர்களை அல்லாஹ் சொல்லவில்லை. மூஃமின்கள் என்ற தன்மையில் உள்ளவர்களை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். புரிந்து கொள்ள வேண்டும்.
 
குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக்காட்டும் போது, பெயரிடப்பட்டவர்கள் அங்கே நோக்கமில்லை. அந்த தன்மையில் உள்ளவர்கள் தான் அங்கே நோக்கம்.
 
قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏
 
மூஃமின்கள் வெற்றி பெற்றார்கள் என்று சொல்லும்போது, (அல்குர்ஆன் 23 : 1)
 
மூஃமின் என்று ஒருவன் தனக்குப் பெயர் வைத்துக் கொண்டவன் அல்ல. அந்தத் தன்மையில் உள்ளவர்கள். அந்த ஸிஃபத்தில் உள்ளவர்கள் என்று பொருள்.
 
ஆகவே, ரமலானுடைய நோன்பின் மிகப்பெரிய நோக்கம் நம்முடைய ஈமானை அதிகப்படுத்துவது. இந்த ஈமானும் தக்வாவும் பின்னிப் பிணைந்தவை. இறையச்சம் அதிகரிக்க அதிகரிக்க, ஈமான் அதிகரிக்கும். ஈமான் அதிகரிக்க அதிகரிக்க தக்வா அதிகரிக்கும். இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்களைப் போல.
 
இன்று பலர் தக்வாவை தனியாக பார்க்கிறார்கள். ஈமானை தனியாக பார்க்கிறார்கள். அல்லாஹுதஆலா கூறுகிறான்:
 
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ 
 
(நம்பிக்கையாளர்களே!) ‘‘அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வின் நேசர்க(ளான நல்லடியார்)களுக்கு நிச்சயமாக ஒரு பயமுமில்லை; அவர்கள் துன்பப்படவும் மாட்டார்கள்''. (அல்குர்ஆன் 10 : 62)
 
என்ன பயம் இல்லை? அவர்கள் எப்பொழுது மறுமைக்கு செல்கிறார்களோ, அப்பொழுது அவர்களுக்கு அல்லாஹ்வின் கோபத்தை பற்றியோ, நரகத்தைப் பற்றிய பயமோ இல்லை.
 
காரணம், இந்த உலகத்திலேயே அவர்கள் அல்லாஹ்வுடைய கோபத்தையும், நரகத்தின் பயத்தையும், பயந்து கொண்டு இருந்ததால், அல்லாஹுதஆலா மறுமையில் அவர்களை பாதுகாத்து விட்டான்.
 
ஒவ்வொரு செயலிலும், அந்த செயலில் ஈடுபடும் பொழுது, இந்த செயலால் எனக்கு அல்லாஹ்வுடைய கோபம் ஏற்பட்டு விடக்கூடாது என்று அச்ச உணர்வோடு, பாவமாக இருந்தால், உடனே அதை விட்டு தூரமானவர்களாக, குற்றமாக இருந்தால் உடனே அதை விட்டு விலகியவர்களாக, செய்த பாவங்களுக்கு தவ்பா கேட்டவர்களாக, செய்த பாவங்களை நினைத்து நினைத்து வருந்த கூடியவர்களாக, அதற்காக தவ்பா கேட்டு அழுதவர்களாக, மறுமையில் யா அல்லாஹ் எங்களைத் தண்டித்து விடாதே! நரகத்தின் வேதனையில் இருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்! 
 
இப்படி அவர்கள் நரகத்தைக் குறித்து அஞ்சிய காரணத்தால் அல்லாஹு தஆலா அந்த இறை நேசர்களுக்கு மறுமையில் பயமில்லாமல் ஆக்கிவிட்டான். அவர்களுடைய அச்சத்தை அல்லாஹு தஆலா போக்கி விடுவான்.
 
மேலும் அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். என்ன கவலைப்படமாட்டார்கள்? எதைக் குறித்து கவலைப்பட மாட்டார்கள்? என்றால், அவர்களுடைய சந்ததிகளை குறித்து. 
 
எப்படி கவலைப்பட மாட்டார்கள்? அல்லாஹு தஆலா கண்டிப்பாக முஃமினான சந்ததிகளை பாதுகாப்பான். எங்களுடைய சந்ததிகளை, எங்களுடைய மரணத்திற்கு பிறகு அல்லாஹ் வீணாக்கி விடமாட்டான். என்னை அல்லாஹ் இரட்சித்ததை போன்று, என்னை அல்லாஹ் பாதுகாத்ததை போன்று, என்னை அல்லாஹ் உயர்த்தியது போன்று, என்னுடைய சந்ததிகளை அல்லாஹ் உயர்த்துவான் என்று கப்ரில் அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். அவர்களுடைய சந்ததிகளை குறித்து அல்லாஹ் அவர்களை கவலையில் வைக்க மாட்டான்.
 
ஆகவேதான் நம்முடைய அறிஞர்கள், குர்ஆனுடைய விரிவுரையாளர்கள் நமக்கு விளக்கம் சொல்லுகிறார்கள்; நீங்கள் உங்கள் பிள்ளைகளை, உங்களது தலைமுறைகளுக்கு சொத்துக்களை சேர்த்து வைத்தால், அந்த சொத்துக்களை அவர்கள் விற்று அழித்து விடுவார்கள். அவர்களுக்கு நீங்கள் ஈமானையும் தக்வாவையும் கொடுத்து விட்டுச் செல்லுங்கள். அல்லாஹ் அவர்களைப் பாதுகாப்பான். உங்களுக்கு கொடுத்ததை விட உங்கள் பிள்ளைகளுக்கு அல்லாஹ் அதிகமாக கொடுப்பான். அவர்கள் மூஃமின்களாக தக்வா உள்ளவர்களாக இருந்தால்.
 
இன்று, பல பெற்றோர் ஈமானை கொடுப்பதை மறந்துவிடுகிறார்கள். தக்வா உடைய பாடங்களை சொல்லிக் கொடுப்பதற்கு மறந்து விடுகிறார்கள். இறையச்சத்தை, இஸ்லாமிய ஒழுக்கங்களை சொல்லிக் கொடுப்பதற்கு மறந்து விடுகிறார்கள். 
 
பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை என்று தங்களையும் அவர்கள் கெடுத்துக் கொள்கிறார்கள். அழித்துக் கொள்கிறார்கள். தங்களும் மார்க்கத்தை கெடுத்துக் கொள்கிறார்கள். பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை அவர்கள் சொல்லிக் கொடுப்பதில்லை.
 
இந்த நிலையில் அந்த பிள்ளைகள் வளர்ந்து வரும் பொழுது, அங்கே என்னென்ன தீய மாற்றங்கள், என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன? அந்தப் பெற்றோர்களுடைய இறப்புக்கு பிறகு அந்தப் பிள்ளைகளின் நிலைகள் எப்படி எல்லாம் ஆகிறது?!
 
உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள், உமர் ரழியல்லாஹு அன்ஹு உடைய பரம்பரையில் வந்த, மிகப்பெரிய ஒரு இஸ்லாமிய மன்னர். உமவிய்யா கிலாஃபத்தின் அடிப்படையில் மிகப்பெரிய நீதமான ஆட்சி செய்தவர்கள்.
 
உமவிய்யா மன்னர்களில் சிலர், பெரிய செல்வந்தர்களாக இருந்தார்கள். ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, தன்னுடைய பங்கில் இருந்த எல்லா சொத்துக்களையும் பைத்துல்மாலின் கஜானாவில் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள்.
 
இவருடைய மனைவியாக இருந்தவரும் ஒரு மன்னருடைய மகள். பெரிய சொத்தோடு, செல்வதோடு, வருகிறார்கள். அந்த செல்வத்தையும் வாங்கி கஜானாவில் செலுத்தி விடுகிறார்கள். 
 
ஸஹாபாக்களை போல் ஒரு வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்கள் மரணிக்கும் பொழுது, அவர்களுக்கு என்று துன்யாவில் எந்த சொத்தும் இல்லை. எந்த செல்வங்களும் இல்லை.
 
இஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரிய ஒரு மன்னர் மரணிக்கிறார். பல காலம் ஆட்சி செய்துவிட்டு, பல பிரதேசங்கள் உடைய மன்னராக இருந்து விட்டு, அவர் மரணிக்கும் பொழுது அவருக்கோ அவர் பிள்ளைகளுக்கோ எந்த சொத்தும் இல்லை.
 
அப்பொழுது அருகில் இருந்த சில முக்கியமானவர்கள் கேட்கிறார்கள்; உங்களுக்கு இருந்த சொத்தையும் நீங்கள் பைத்துல்மாலுக்கு கொடுத்து விட்டீர்கள். பிறகு அரசாங்கத்திலிருந்து எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல், ஆட்சிசெய்து இப்போது ஒரு ஃபகீராக நீங்கள் மரணிக்கிறீர்கள். இத்தனை பிள்ளைகளை விட்டுச் செல்கிறீர்களே, அவர்களின் நிலைமை என்னவாகும்?
 
அப்போது உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி ஒரு வசனத்தை ஓதிக்காட்டுகிறார்கள்.
 
إِنَّ وَلِيِّيَ اللَّهُ الَّذِي نَزَّلَ الْكِتَابَ وَهُوَ يَتَوَلَّى الصَّالِحِينَ 
 
என்னுடைய பாதுகாவலன் பொறுப்பாளன் அல்லாஹ். அவன் நல்லவர்களை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறான். (அல்குர்ஆன் 7 : 196)
 
ஆகவே நான் வாழ்ந்த வரை, அல்லாஹ்வுடைய பொறுப்பில் இருந்தேன். என்னுடைய பிள்ளைகள் நல்லவர்களாக இருந்தால், அவர்களை அல்லாஹ் உடைய பொறுப்பில் விட்டுச் செல்கிறேன் என்று பதிலளித்தார்கள்.
 
வரலாற்றை படித்து பாருங்கள். உமர் இப்னு அப்துல் அஜீஸ் மரணத்திற்குப் பிறகு, அவர்களுடைய பிள்ளைகளுக்கு அல்லாஹு தஆலா எந்த அளவு செல்வச் செழிப்பை கொடுத்தான் என்றால், ஆயிரக்கணக்கான முஜாஹிதுகளை கொண்ட படைகள் புறப்படும் பொழுது, ஒவ்வொரு படைக்கும் தன்னந்தனியாக முழு செலவை பொறுப்பேற்கக் கூடிய அளவுக்கு, அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்தான். 
 
இது எவ்வளவு பெரிய பாடம் பாருங்கள். அல்லாஹ்வுடைய வார்த்தை எவ்வளவு உண்மையானது!
 
وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ
 
அவ்வூர்களில் இருந்தவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடந்திருந்தால், அவர்களுக்காக வானத்திலும், பூமியிலும் உள்ள அருட்கொடைகளின் வாசல்களைத் திறந்து விட்டிருப்போம். (அல்குர்ஆன் 7 : 96)
 
இந்த ரமலான் இந்த ஈமானோடு சம்பந்தப்பட்டது. நம்முடைய ஆடைகளுக்கான உடைகளுக்கான ரமலான் அல்ல. அல்லது நம்முடைய உணவுகளுக்காக உள்ள ரமலான் அல்ல. வீடுகளையும், பள்ளிகளையும் அலங்காரப் படுத்துவதற்காக உள்ள ரமலான் அல்ல.
 
ரமலான் ஈமானை அதிகப்படுத்துவதற்காக உள்ள மாதம். ரமலான் தக்வாவை அதிகப்படுத்துவதற்காக உள்ள மாதம். ரமலான் நோன்பு உடைய மாதம். நோன்பு என்பது இபாதத்துக்காக உள்ளது. இபாதத் மூலமாகத்தான் ஈமான் அதிகரிக்கும். அதன் மூலமாகத்தான் தக்வா அதிகரிக்கும்.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமலான் சம்பந்தமாக கூறிய அந்த இரண்டு ஹதீஸையும் நீங்கள் படித்து சிந்தித்து பாருங்கள்.
 
مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا
 
அந்த நோன்பில் என்னுடைய ஈமான் அதிகரிக்க வேண்டும் என்ற அந்தத் தேடல், ஈமானின் மீது அவருடைய கவனம் இருக்க வேண்டும்.
 
அதுபோன்று இரவுத் தொழுகை. அந்த இரவுத் தொழுகையில் என்னுடைய இறைநம்பிக்கை அதிகரிக்க வேண்டும்.
 
وَاحْتِسَابًا
 
நன்மையை ஆதரவு வைத்து, அல்லாஹ்வுடைய நெருக்கம் எனக்கு கிடைக்க வேண்டும்.
 
இத்தகைய ஒரு ரமலான் ஆக மாற வேண்டுமென்றால், அப்போது நம்முடைய கவனம் எதில் இருக்க வேண்டும்? என்பதை நாம் இங்கே சிந்திக்க வேண்டும்.
 
இஃப்தார் உடைய ஏற்பாடு, ஸஹருடைய ஏற்பாடு, பிறகு அப்படியே ரமலான் முடிய முடிய, பெருநாள் கொண்டாடுவதுடைய ஏற்பாடு, இதிலேயே நம்மில் பலருடைய நோன்புகள் வீணாகுவதை, நம்முடைய சிந்தனைகள் சிதறுவதை பார்க்கிறோம்.
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அதுபோன்று ஸஹாபாக்கள் உடைய அந்த ரமலானை சிந்தித்துப் பாருங்கள். இன்று நாம் கவலை கொள்வது போன்று, இஃப்தாரை நினைத்து, ஸஹரை நினைத்து, ஸஹாபாக்கள் கவலைப்பட்டார்கள், பிரயாசை எடுத்தார்கள் என்று ஏதாவது நாம் படித்தோமா?
 
ரமலானுடைய பாடங்கள் என்று பார்த்தாலே, அவர்களுடைய இபாதத்துகளை தான் பார்க்கிறோம். இபாதத்துக்களில் அவர்கள் எடுத்த அந்த சிரமத்தை பார்க்கிறோம்.
 
நாம் எப்படி இன்று பார்க்கிறோம் என்றால், நம்முடைய மனநிலை எப்படி மாறி இருக்கிறது என்றால், அல்லாஹ்வுக்கு நாம் இபாதத்தில் இருந்து, எவ்வளவு குறைவாக கொடுக்க முடியுமோ அவ்வளவு குறைவாகத்தான் கொடுப்போம். ஆனால் அல்லாஹ்வோ அவனுடைய ரஹ்மத்திலிருந்தும் பரக்கத்தில் இருந்தும் நமக்குக் குறைவு இல்லாமல், அதிகம் அதிகமாக கொடுக்க வேண்டும்.
 
இப்படி அல்லாஹ்வோடு தவறான முறையில் போட்டி போடக்கூடியவர்களாக இருக்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
அல்லாஹ்வுடைய நிபந்தனை என்ன?
 
وَأَوْفُوا بِعَهْدِي أُوفِ بِعَهْدِكُمْ
 
எனக்கு நீங்கள் கொடுத்த என்னுடைய வாக்கை நிறைவேற்றுங்கள். நான் உங்களுக்கு கொடுத்த உங்கள் வாக்கை நிறைவேற்றுகிறேன். (அல்குர்ஆன் 2 : 40)
 
அல்லாஹுதஆலா உடைய வாக்கு என்பது, இந்த ஈமானோடு, தக்வாவோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. இந்த ஈமான் தக்வா எந்த அளவு நம்முடைய உள்ளத்தில் பரிசுத்தமாக இருக்குமோ, பாதுகாப்பாக இருக்குமோ, இந்தத் துன்யாவுடைய வாழ்க்கையை அல்லாஹு தஆலா நமக்கு எளிதாக்கி கொடுப்பான்.
 
எத்தனை ஃபித்னா உடைய சோதனைகள் உடைய எதிரிகளால் அச்சுறுத்த படக் கூடிய நிலையில் நாம் இருக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலையில் இப்பொழுது நாம் ரமலானை நாம் சந்திக்கிறோமே இந்த ரமலான் எனக்கு ஈமானை அதிகப்படுத்தக்கூடிய ரமலான் ஆக இருக்க வேண்டும். 
 
என்னுடைய தக்வாவை அதிகப்படுத்தக்கூடிய ரமலான் ஆக இருக்க வேண்டும். என்னுடைய பாவத்தை விட்டு விலகக்கூடிய ரமலான் ஆக இருக்க வேண்டும் என்று நாம் சிந்திக்க வேண்டுமே தவிர, அதற்கான ஏற்பாடுகளை இப்போதிலிருந்தே, அதற்கான சிந்தனைகள், அதற்கான பிரார்த்தனைகள், அதற்கான ஈடுபாடுகள், அது குறித்த நூல்களைப் படிப்பது, அதுகுறித்த பயான்களை கேட்பது, அது குறித்த சிந்தனைகள், அதிலேயே நாம் இருக்க வேண்டுமே தவிர,
 
ரமலான் வருகிறது இஃப்தாருக்கு என்ன செய்வது? ஸஹருக்கு என்ன செய்வது? இப்படிப்பட்ட வெறும் நம் உடலுக்கான சிந்தனையில் இருந்து விடக்கூடாது.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நமக்கு இந்த ரமலானை முன்னோர்களுக்கு கொடுத்த, முன்னோர்கள் பெற்ற ரமலானை போன்று ஆக்கியருள்வானாக, நம்முடைய வணக்க வழிபாடுகளும், தக்வாவும், ஈமானும், அதிகரிப்பதற்குரிய காரணமான ரமலானாக அல்லாஹ் ஆக்கி அருள்வானாக. நம்முடைய பாவங்களை மன்னித்து அருள்வானாக. 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/