HOME      Khutba      நோன்பு - தக்வா - ஈமான் | Tamil Bayan - 709   
 

நோன்பு - தக்வா - ஈமான் | Tamil Bayan - 709

           

நோன்பு - தக்வா - ஈமான் | Tamil Bayan - 709


நோன்பு - தக்வா - ஈமான்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : நோன்பு - தக்வா - ஈமான்
 
வரிசை : 709
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா தாருல் ஹுதா மண்ணடி சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 08-04-2022 | 07-09-1443
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்தும், அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்தத் தூதரின் கண்ணியத்திற்குரிய குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் இம்மை மறுமைகளின் நன்மைகளை வேண்டியவனாக, அல்லாஹ்வுடைய மன்னிப்பை அல்லாஹ்வுடைய அருளை வேண்டியவனாக, சொர்க்க வாழ்க்கையை வேண்டியவனாக நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடியவனாக இந்த குத்பா உரையை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹ்வுடைய உபதேசங்களை கேட்டு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அறிவுரைகளைக் கேட்டு அதன்படி வாழ்கின்ற நல்ல மக்களாக என்னையும் உங்களையும் ஆக்கியருள்வானாக! ஆமீன்.
 
பொதுவாக எந்த ஒரு அமலை மனிதன் உணர்வுபூர்வமாக ஈமானிய சிந்தனையோடு இறையச்சத்தோடு அந்த அமலை அல்லாஹ் என் மீது ஏன் கடமையாக்கினான்? இந்த அமலால் இம்மை மறுமையின் நன்மை என்ன? என்ற உணர்வோடு சிந்தனையோடு அந்த அமலை செய்வானேயானால் கண்டிப்பாக அந்த அமல் மூலமாக அல்லாஹு தஆலா அந்த அடியானுக்கு அந்த அமலில் எதை வாக்களித்தானோ அதை அவனுக்கு கொடுப்பான்.
 
யார், ஒரு அமலை வெறும் சடங்காக மாற்றிக் கொள்வார்களோ, அதாவது உணர்வில்லாமல் அதனுடைய தாத்பிரியங்களை புரியாமல் செய்யப்படுகின்ற சடங்காக சம்பிரதாயமாக வழமையான ஒரு காரியமாக மாற்றிக் கொள்வார்களோ, அவர்கள் வேண்டுமானால் நான் இந்த கடமையை நிறைவேற்றி விட்டேன் என்று அவர்கள் தங்களுடைய மனதில் திருப்தி படலாமே தவிர, அல்லாஹ்விடத்தில் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உயர்ந்த அமலாக ஆகுமா?
 
அந்த அமல் மூலமாக என்ன மாற்றங்கள் வரவேண்டும் என்று அல்லாஹு தஆலா விரும்புகிறானோ அந்த மாற்றங்கள் வருமா? அந்த அமலுக்கு என்னென்ன உயர்ந்த நன்மைகளை அல்லாஹுதஆலா இம்மையிலும் மறுமையிலும் வாக்களித்திருக்கிறானோ அந்த உயர்ந்த நன்மைகளை அவன் கிடைக்க பெறுவானேயிருந்தால் கண்டிப்பாக முடியாது.
 
ஏன் இந்த விஷயத்தை நான் ஆரம்பத்தில் கூறவிரும்புகிறேன் என்றால், நம்முடைய நோன்பு நமக்கு எப்படி இருக்கவேண்டும்? என்பதை உணர்வதற்காக.
 
மிக உயர்ந்த வணக்கமாகிய அல்லாஹ்விற்கு மிக பிடித்தமான வணக்கமாகிய இந்த நோன்பை ஒரு உயிரோட்டமுள்ள சிந்தனையுள்ள புரிந்து உணர்ந்து இறையச்சத்தோடு செயல்படுத்தப்படுகின்ற ஒரு அமலாக நாம் ஆக்க வேண்டும்.
 
சடங்காக வழமையாக உணர்வில்லாமல் செய்யப்படும் ஒரு காரியமாக நாம் ஆக்கிவிடக் கூடாது. நோன்புடைய மகத்துவத்திற்கு எத்தனையோ வசனங்களை சொல்லலாம் எத்தனையோ ஹதீஸ்களைச் சொல்லலாம். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அறிவிக்கக்கூடிய ஹதீஸ் குதுஸியை படியுங்கள். 
 
அல்லாஹ் கூறுகிறான்;
 
«كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصَّوْمَ، فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ»
 
ஆதமுடைய  மகனின் அமல்கள் எல்லாம் அவனுக்குரியது நோன்பைத் தவிர இந்த நோன்பு எனக்கே உரியது. நான் இந்த நோன்புக்கு விசேஷமாக கூலி வழங்குவேன். 
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி, எண் : 5927.
 
தொழுகை ஹஜ் மற்ற தர்மங்கள் போன்ற எல்லா அமல்களையும் அல்லாஹ்வுடைய கட்டளைக்காக, அல்லாஹ் நம் மீது அவன் கொடுத்திருக்கிற அந்த ஏவலின் அடிப்படையில் தான் செய்கிறோம்.
 
இங்கே ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்; அல்லாஹ்வை நெருங்குவதற்காக பல இபாதத்துகளை அவன் நமக்கு வகைப்படுத்தி கொடுத்திருக்கிறான். அடியான் ஒரு இபாதத்தில் இருந்து இன்னொரு இபாதத்தின் பக்கம் சென்று  கொண்டே இருக்க வேண்டும். ஒரு இபாதத்தில் அவனுக்கு சோர்வு ஏற்பட்டால் இன்னொரு இபாதத். ஒரு இபாதத் முடிந்தால் இன்னொரு இபாதத் என்று வகைப்படுத்தி கொடுத்திருக்கிற அல்லாஹுதஆலா,
 
ஒவ்வொரு இபாதத்திலும் அந்த இபாதத் மேற்கொள்ளப்படுகின்ற அமைப்பை வைத்து  அல்லாஹு தஆலா அவனுடைய ஞானத்தின் அடிப்படையில் பல நன்மைகளை பல வெகுமதிகளை வாக்களிக்கிறான். 
 
ஹஜ் உடைய பாடங்களில் எடுத்துப் பாருங்கள். ஹஜ்ஜுக்காக அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் கூறியிருக்க கூடிய நன்மைகள். 
 
«مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ، وَلَمْ يَفْسُقْ، رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ»
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: யார், பாவங்கள் இல்லாத ஹஜ்ஜாக, நன்மை செய்த  ஹஜ்ஜாக செய்து திரும்பி வருவாரோ, அவர் அவருடைய தாய் அவரைப் பெற்ற தினத்தில் எப்படி இருந்தாரோ அதுபோன்று திரும்பி வருவார்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி, எண் : 1521, 1820.
 
அதற்கு ஒரு விசேஷமான நன்மையை அல்லாஹு தஆலா வாக்களிக்கிறான்.
 
அப்படித்தான் இந்த நோன்பை எடுத்துக் கொள்ளும் பொழுது, அல்லாஹு தஆலா எல்லா அமல்களும் என்னுடைய அடியானுக்காக இருக்கும்போது இந்த நோன்பு விசேஷமாக எனக்காக இருக்கிறது. நான் இதற்காக கூலி வழங்குவேன் என்று சொல்கிறான்.
 
அப்படி என்றால் இந்த நோன்பில் இருந்து நம்மிடத்தில் என்ன எதிர்பார்க்கிறான்? நம்மை பட்டினி போடுவது நம்மைத் தாகித்திருக்க வைப்பது, இதுவா அல்லாஹ்வுடைய நோக்கம் என்றால், இதற்குப் பின்னால் அல்லாஹு தஆலா ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறான். சில ஈமானிய  உணர்வுகளை அல்லாஹ் எதிர்பார்க்கிறான். நம்முடைய கல்பில் ஒரு முக்கியமான ஷிஃபத்தை எதிர்பார்க்கிறான். 
 
அதைத்தான் அல்லாஹ் கூறுகிறான்; தக்வா -இறையச்சம் உள்ளத்தில் வரவேண்டும். (அல்குர்ஆன் 2 : 183)
 
இது ஈமானுடைய சார் என்று சொல்லலாம். ஈமானும் தக்வாவும் பின்னிப்பிணைந்து இருக்கவேண்டும். நம்பிக்கையும் இறையச்சமும் பின்னிப் பிணைந்து இருக்க வேண்டும். இரண்டும் பிரிந்து விடக்கூடாது. இந்த தக்வாவை வைத்துதான் அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நமக்கு எல்லாம் அமல்களுடைய நன்மைகளை வாக்களிக்கிறான். 
 
இந்த தக்வா இருந்தால்தான் நமக்கு ஹிதாயத். இந்த தக்வா இருந்தால் தான் அல்லாஹ்விடத்தில் நமக்கு மன்னிப்பு. இந்த தக்வா இருந்தால் தான் அல்லாஹ்விடத்தில் சொர்க்கம். இந்த தக்வா இருந்தால்தான் நாளை மறுமையில் நமக்கு நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பு என்று அல்லாஹ் நமக்குக் கொடுத்து இருக்கின்ற வாக்குறுதிகள் ஏராளம்.
 
அந்த அல்லாஹ்வுடைய வாக்குறுதிகளை நாம் அடைய பெறவேண்டுமென்றால், கண்டிப்பாக  அதற்கு நமக்குத் தேவை தக்வா. அந்த தக்வாவை கொடுக்கக் கூடியதாக இந்த நோன்பு இருக்கிறது.
 
இந்த தக்வா என்று நாம் எடுத்துக் கொள்ளும் போது, இங்கே ஒரு சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது பொதுவாக ஒவ்வொன்றும் சில வெளிப்படையான செயல்களில் இன்று சுருக்கி விட்டு இருக்கும்போது அதிலிருந்து வெளியேறி விசேஷமாக விசாலமாக நாம் சிந்திக்க வேண்டும். 
 
தக்வா என்பது ஒரு ஆடையில் உள்ள ஒரு விஷயம் அல்ல. அல்லது ஒரு பேச்சுகளில் உள்ள ஒரு விஷயம் அல்ல. அல்லது ஒரு குறிப்பிட்ட அமலில் உள்ள விஷயம் அல்ல. 
 
சிலர் என்ன செய்வார்கள்; முதல் ஷஃப்பில் தொழுபவர்களைப் பார்த்து தக்வா உடையவர்கள் என்று சொல்வார்கள். அது மட்டுமா தக்வா என்றால்? அது இல்லை.
 
சிலர் தாடி நீளமாக வைத்திருந்தால் தக்வாவின்  அடையாளமாக புரிந்து கொள்வார்கள். அது மட்டும் தக்வாவாக ஆகாது. இப்படி  வெளிப்படையான சில அமல்களை வைத்து சில அடையாளங்களை வைத்து தக்வாவை முடிவு செய்வார்கள். 
 
அப்படி அல்ல. சில அடையாளங்களாக வெளிப்பாடுகளாக அவை இருக்கலாமே தவிர, தக்வா என்பது அல்லாஹ்வுடைய வேதத்தில்  மிக விசாலமான பொருளுடன் பேசப்படக்கூடிய ஒன்றாகும்.
 
அதில் முதலாவதாக தக்வா என்பது, இணைவைத்தல் கலக்காத அந்த தவ்ஹீத் முழுமையான உண்மையான உயர்ந்த தக்வாவாக இருக்கிறது.
 
ஷிர்க் கலக்காத உறுதியான தக்வா என்றால், அல்லாஹு தஆலா இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாத்து வஸல்லம் அவர்களைப் பற்றி பல வசனங்களில் நமக்கு கூறும் பொழுது,
 
كَانَ حَنِيفًا مُسْلِمًا
 
எனினும், இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட நேரான கொள்கையுடைய முஸ்லிமாகவே இருந்தார்.  (அல்குர்ஆன் 3 : 67, 16 : 120)
 
ஹனிஃப் என்றால் தவ்ஹீதில்  உறுதியாக இருப்பது. ஒர் இறையை நம்புவதில், அந்த ஓர் இறையை வணங்குவதில் அவனை மட்டும் சார்ந்து இருப்பதில், அவனை வழிபடுவதில் உறுதியாக இருப்பது; நிலை குளையாமல் இருப்பது; எத்தகைய அச்சுறுத்தலையும் அந்த விஷயத்தில் எதிர்த்து நிற்பது; தாங்கிக் கொள்வது. 
 
ஆகவே, தக்வா உடைய முதல் படி தக்வா உடைய உயர்ந்த நிலை என்பது, தவ்ஹீத் முழுமையாக இருக்க வேண்டும். வணக்க வழிபாட்டில் தவ்ஹீத், அல்லாஹ்வை சார்ந்திருப்பதில் தவ்ஹீத், அல்லாஹ்வை பயப்படுவதில் தவ்ஹீத், அல்லாஹ்வை ஆசை வைப்பதில் தவ்ஹீத். அல்லாஹ்விற்கு கீழ்ப்படிவதில் தவ்ஹீத். 
 
இப்படியாக தவ்ஹீதின் எல்லா வகையிலும், தவ்ஹீத் சார்ந்த அந்த அனைத்து வணக்க வழிபாடுகளிலும் போன்ற அனைத்திலும் அடியான் உறுதியாக இருக்க வேண்டும்.
 
அல்லாஹு தஆலா தன்னுடைய நபியின் தோழர்கள் சஹாபாக்களுக்கு இதை அவர்களுடைய இயற்கையாக ஆக்கிவிட்டான். அல்லாஹு தஆலா சொல்கிறான்.
 
وَأَلْزَمَهُمْ كَلِمَةَ التَّقْوَى
 
பரிசுத்த வாக்கியத்தின் மீது அவர்களை உறுதிப்படுத்தினான். (அல்குர்ஆன் 48 : 26)
 
இந்த இடத்தில் கலிமத்துத்தக்வா என்பது, கலிமத்துத் தவ்ஹீத்  லா இலாஹா இல்லல்லாஹ் ஆகும். அல்லாஹு தஆலா சஹாபாக்களுக்கு தக்வா உடைய இந்த திரு கலிமாவை அதாவது தவ்ஹீதுடைய இந்த திரு கலிமாவை அவர்கள் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்கள் வாழ்க்கையில் ஒன்றிணைந்ததாக ஆக்கி விட்டான்.
 
அந்த ஈமான் அவருடைய உறுதியை ஈமானில் அவர்களுக்கு இருந்த அந்த உறுதி அல்லாஹ்வை வணங்குவதில் அல்லாஹ்வை மட்டுமே பயப்படுவதில் அல்லாஹ் உம்மீது நம்பிக்கை வைத்திருப்பதில் அல்லாஹுத்தஆலா அந்த சஹாபாக்களுக்கு சொன்னான். 
 
இவர்களோடு இந்த கலிமத்துல் தக்வா இணைந்துவிட்டது. இவர்களில் இருந்து இந்தக் கலிமத்துல் தக்வா பிரியாது. இவர்கள் இந்த கலிமாவிலிருந்து பிரியமாட்டார்கள்.
 
எத்தனை சம்பவங்களை சொல்லலாம். முந்தைய சமுதாயத்தவற்கும் நம்முடைய நபியின் உயர்ந்த சமுதாயம் ஆகிய சஹாபாக்களுக்கும் இடையில் இருந்த இந்த வித்தியாசம். அந்த சமுதாயம் எப்படி என்றால், கொஞ்சம் எதிரிகளைப் பார்த்து விட்டால், எதிரிகளின் சில அச்சுறுத்தல்கள் அவர்களுக்கு ஏற்பட்டால், ஏதாவது சில பயம் ஏற்பட்டால், நபியை அப்படியே தனியாக விட்டு விட்டு ஓடிவிடுவார்கள். ஈமானை மறைத்துக் கொள்வார்கள். நாங்கள் முஸ்லிமே இல்லை என்று சொல்லி கூட ஓடி விடுவார்கள்.
 
ஆனால், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உருவாக்கிய அந்த சஹாபாக்கள் அப்படி அல்ல. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்கிறார்கள். திரும்பத் திரும்ப கேட்கிறார்கள். பத்ருப் போரில் என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? என்று. முஹாஜிர்கள் பதில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
 
அல்லாஹ்வின் தூதரே! நாம் போருக்கு போகலாம் என்று. அப்போது அன்சாரிகள் புரிந்துகொள்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் திரும்பத் திரும்ப கேட்பதைப் பார்த்தால் எங்கள் இடத்திலிருந்து பதிலை எதிர்பார்ப்பது போல அல்லவா இருக்கிறது என்று.‌ 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: ஆம்! நான் உங்கள் இடத்திலிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன். 
 
ஏனென்றால், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கும் அன்சாரிகளுக்கும் இடையில் இருந்த ஒப்பந்தம் என்னவென்றால் மதினாவில் ரஸுலுல்லாஹ்வை வைத்து பாதுகாக்க வேண்டும். மதீனாவிற்கு வெளியே சென்று போர் செய்வதோ எதிரிகளை தாக்குவதோ அன்சாரிகளோடு  நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இல்லை. ஒப்பந்தத்தில் இல்லாத ஒன்றை அந்த அன்சாரிகளின் மீது வலுக்கட்டாயமாக திணிப்பதை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விரும்பவில்லை.
 
ஆகவே, அந்த அன்சாரிகளுடைய விருப்பத்தை எதிர்பார்த்தார்கள். அவர்களுடைய மனநிலை என்ன? என்று எதிர்பார்த்தார்கள்.
 
அப்போது அன்சாரி ஒருவர் எழுந்திருக்கிறார். சொல்கிறார்; அல்லாஹ்வின் தூதரே! என்ன நாங்கள் இஸ்ரவேலர்கள! மூசா நபிக்கு சொன்னது போன்று சொல்வோமா? மூஸாவே! நீயும் உனது இறைவனும் செல்லுங்கள். போர் செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெற்று விட்டால் நாங்கள் வருகிறோம். நாங்கள் இங்கேயே உட்கார்ந்து வேடிக்கை  பார்க்கிறோம் என்று அந்த இஸ்ரவேலர்கள் சொன்னது போன்றா  சொல்லுவோம். இல்லை அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களை நம்பிக்கை கொண்டோம்.
 
எங்களை கடலின் ஆழத்திற்கு மூழ்க சொன்னாலும் மூழ்கி விடுவோம். எங்களை மலையிலிருந்து குதிக்க சொன்னாலும் நாங்கள் குதிப்போம். மதினாவின் அருகிலுள்ள பத்ருக்கு அல்ல, எங்களை மக்காவிற்கு அருகிலுள்ள. பர்குல் இமாதி என்ற அழைத்துச் சென்று போரில் ஈடுபடுத்தினாலும் நாங்கள் உங்களை விட்டு பின்வாங்க மாட்டோம். (1)
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 12954.
 
இது தக்வா. ஈமானுடைய உறுதி தக்வா. உஹதுப் போரில் கடுமையான காயம். 70 சஹாபாக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். மிச்சமிருந்த எல்லா சஹாபாக்களும் அதில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உட்பட, முகத்தில் காயம் தலையில் காயம் உடலில் காயம். 
 
இப்படி அல்லாஹ்வின் தூதரிலிருந்து எல்லா சஹாபாக்களும் காயப்பட்டிருந்தார்கள். அபூசுஃப்யான் மீண்டும் மதினாவை தாக்க வருகிறார் என்று செய்தி வருகிறது. கடுமையான காயத்தில் இருக்கிறார்கள். அதாவது ஆயுதங்களை கொண்டு அல்ல, சுயமாக தானாகவே நடந்து செல்வதே முடியாத நிலை.
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழைப்பு கொடுத்தார்கள். நாம் போருக்குப் புறப்பட வேண்டும் என்று. அந்த காயத்தோடு அத்தனை தோழர்களும் போருக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் யாரும் பின் தங்கவில்லை.
 
அல்லாஹுத்தஆலா சொல்லிக்காட்டுகிறான்:
 
الَّذِينَ اسْتَجَابُوا لِلَّهِ وَالرَّسُولِ مِنْ بَعْدِ مَا أَصَابَهُمُ الْقَرْحُ لِلَّذِينَ أَحْسَنُوا مِنْهُمْ وَاتَّقَوْا أَجْرٌ عَظِيمٌ
 
அவர்கள் எத்தகையவர்கள் என்றால், காயமடைந்த பின்னரும் அல்லாஹ்வுடைய, (அவனுடைய) தூதருடைய அழைப்பை ஏற்று (போருக்கு)ச் சென்றனர். (அல்லாஹ்வுக்குப்) பயந்து நன்மை செய்த இவர்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு. (அல்குர்ஆன் 3 : 172)
 
அல்குர்ஆன் 3 : 172 பார்க்க : அர்ரஹீக் அல்மக்தூம்.
 
ஆகவே, தக்வா என்பது சில அமலில் உள்ளது மட்டும் என்று எண்ணி விடாதீர்கள். தக்வா என்பது முதலில் ஈமானில் தவ்ஹீதில் இருக்க வேண்டும். அல்லாஹ்வின் மீது இருக்கின்ற தவக்குலில் இருக்க வேண்டும். எதிரிகளைப் பார்த்து பயப்படுவது, எதிரிகளைப்  பார்த்து அவர்கள் அடுத்து ஏறி வரக்கூடிய அந்தக் கூட்டத்தைப் பார்த்து பயப்படுவது. இது தக்வாவுக்கு முரணானது.
 
நீங்கள் என்னதான் முதல் ஷஃப்பில் தொழுதாலும், நீளமான தாடி வைத்திருந்தாலும் அல்லது இன்னும் பல அமல்களை செய்தாலும், அல்லாஹ்வை பயப்பட வேண்டிய நேரத்தில் பயப்படாமல் ரப்பு கைவிட்டு விடுவானோ, எதிரிகள் வந்துவிட்டார்களே, என்னுடைய வாழ்க்கை என்னவாகுமோ என்று பயந்தால் அங்கு ஈமான் இல்லை. அங்கு தக்வா இல்லை.
 
இஸ்ரவேலர்கள் நிலைமையை கொஞ்சம் நினைத்து பாருங்கள். மாட்டிக் கொண்டார்கள். இந்த பக்கம் கடல் போன்ற பெரிய நைல் நதி. பின்னால் ஃபிர்அவ்ன். சர்வ சாதாரணமாக அந்த மக்கள் சொல்லிவிட்டார்கள். மூஸா! மாட்டிக் கொள்வோமே என்று. அங்கே அல்லாஹுத்தஆலா மூஸா நபியுடைய ஈமானை மூஸா நபியுடைய தக்வாவை நமக்கு உணர்த்துகின்றான்.
 
فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ (61) قَالَ كَلَّا إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ
 
இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்ட பொழுது ‘‘ நிச்சயமாக நாம் அகப்பட்டுக் கொண்டோம்'' என்று மூஸாவுடைய மக்கள் கூறினார்கள். அதற்கு (மூஸா) ‘‘ அவ்வாறல்ல. நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். (நாம் தப்பிக்கும்) வழியை நிச்சயமாக அவன் எனக்கு அறிவிப்பான்'' என்றார். (அல்குர்ஆன் 26 : 61-62)
 
இதே இந்த ஈமானிய நம்பிக்கைதான் உஹது போருக்கு பின்னால் நடந்த அந்த ஹம்ராவுல் அசதிலும் நடந்தது.
 
الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
 
(சில) மக்கள் அவர்களிடம் (வந்து) ‘‘உங்களுக்கு எதிராக (போர்புரிய) எல்லா வகுப்பினரும் நிச்சயமாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர் (ஆதலால்,) அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்'' என்று கூறிய சமயத்தில், அவர்களுக்கு (பயம் ஏற்படுவதற்குப் பதிலாக) நம்பிக்கையே அதிகரித்தது. மேலும், ‘‘அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பேற்பவன் (பாதுகாவலன்)'' என்றும் கூறினார்கள். (அல்குர்ஆன் 3 : 173)
 
வசனத்தின் கருத்து : எதிரிகள் எல்லாம் மீண்டும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு சூழ்ந்து உங்களைத் தாக்க வருகிறார்கள். நீங்கள் பயந்து கொள்ளுங்கள் என்று அந்த காயப்பட்ட பலவீனப்பட்ட சஹாபாக்களை அச்சுறுத்தினார்கள்.
 
எத்தகைய ஒரு நெருக்கடியான ஒரு நிலையில் அந்த சஹாபாக்கள் இருந்திருப்பார்கள். 70 சஹாபாக்களை இப்போதுதான் பறிகொடுத்துவிட்டு திரும்பியிருக்கிறார்கள். மிக வீரமிக்க துணிச்சல் மிக்க 70 சகாபாக்கள் ஒரு சில நாளுக்கு முன் தான் போரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 
 
இங்கே மிச்சம் இருக்கக்கூடியவர்கள் நபியிலிருந்து இறுதி தோழர் வரை படுகாயமுற்று இருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஆயுதங்கள் இல்லை. எதிரிகள் சூழ்ச்சி செய்து வந்திருக்கிறார்கள். சொல்லப்படுகிறது; மக்கள் எல்லாம் பெரும் ஆயுதத்தோடு வந்திருக்கிறார்கள், அந்த மக்களை பயந்து கொள்ளுங்கள், போகாதீர்கள் என்று.
 
பெரும் ஆயுதங்களை ஒன்றுதிரட்டி வந்திருக்கிறார்கள். அவர்களை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். ரப்பு  அழகாக இந்த வசனத்தை முடிக்கிறான். எதிரிகள் பெரும் ஆயுதத்தோடு உங்களைத் தாக்க அழிக்க வந்திருக்கிறார்கள். பயந்து கொள்ளுங்கள் என்று பயமுறுத்துகிறார்கள். ஆனால், இங்கு சகாபாக்களுக்கோ இந்த பயமுறுத்தல் ஈமானை அதிகப்படுத்தியது.
 
அவர்கள் சொன்னார்கள்; அல்லாஹ்  எங்களுக்குப் போதுமானவன். பொறுப்பேற்று பாதுகாப்பதற்கு அல்லாஹ் சிறந்தவன் என்று.
 
சகோதரர்களே! குறிப்பாக நம்முடைய நேரம் இந்தப் படிப்பினைக்கு மிகவும் பொருத்தமான நேரம். இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்:
 
ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வகீல், இந்த வாக்கியம் சாதாரணமான வாக்கியம் அல்ல. இதே வாக்கியத்தை தான் இப்ராஹீம் அலைஹிவஸல்லம் நெருப்புக் குண்டத்தில் போடப்படும்போது சொன்னார்கள். 
 
அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவன் என்னை பொறுப்பேற்கப் போதுமானவன் என்று. பொறுப்பேற்பவர்களில் அவன் மிக சிறந்தவன். 
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4563.
 
சகோதரர்களே! இந்த ரமலானுடைய மாதத்தில் தான் நோன்பிருந்த நிலையில் பல யுத்தங்களை பல போர்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சந்தித்தார்கள்.
 
அதிலும் குறிப்பாக எந்த மக்கா நகரிலிருந்து நாடோடியாக விரட்டியடிக்கப்பட்டார்களோ, பரம ஏழையாக விரட்டியடிக்கப்பட்டார்களோ, எல்லா சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு  அல்லாஹ்வுடைய அந்தப் பள்ளியிலேயே இரண்டு ரக்அத்துக்கள் தொழ முடியாமல் விரட்டியடிக்கப்பட்டார்களோ அந்த மக்கா நகரத்தை அந்தக் கபா இல்லத்தை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சஹாபாக்களும் வெற்றிகொண்டது இந்த ரமலானுடைய மாதத்தில்தான். நோன்பு நோற்றவர்களாக சென்றார்கள். 
 
இறுதியாக, எதிரியை நாளை யுத்தகளத்தில் சந்திக்கும் வரை. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நாளை நாம் மக்காவிற்குள் நுழைய போகிறோம், அங்கே யுத்தம் நிகழலாம். எனவே, நீங்கள் நாளை நோன்பு இருக்காதீர்கள் என்று ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுக்கின்ற வரை, எல்லா சஹாபாக்களும் பெரும்பாலானவர்கள் நோன்பில் இருந்தார்கள்.
 
ஆகவே, இந்த நோன்பு என்பது ஏதோ நாம கொஞ்ச நேரம் பசித்து இருக்கிறோம், கொஞ்ச நேரம் தாகித்திருக்கிறோம், இச்சையை தவிர்த்துக் கொண்டோம் என்று மட்டும் நம்முடைய எண்ணத்தில் குறுகலான சிந்தனையை கொண்டுவர வேண்டாம். 
 
அதற்கு அப்பாற்பட்டு இந்த நோன்பு என்பது எனக்கு தக்வாவை கொடுக்க வேண்டும். அந்த தக்வாவில் மிக உயர்ந்த நிலை, தவ்ஹீது உடைய தக்வா. 
 
அந்த தக்வாவில் மிக உயர்ந்த நிலை தவக்குல் உடைய தக்வா. அந்த தக்வாவில் மிக உயர்ந்த நிலை, உலகமே உன்னை எதிர்த்தாலும் எனது ரப்பு என்னை காப்பாற்றுவான்; நான் இந்த உலகத்திலேயே அழிந்து விட்டாலும் இந்த தீனை நிலைநிறுத்தக் கூடிய இந்த தீனின் பக்கம் அழைக்கக்கூடிய  அழைப்பாளரை முஜாஹிதை அல்லாஹ் உருவாக்குவான் என்று அந்த உயர்ந்த எண்ணத்தோடு, தனது உயிரை அல்லாஹ்விற்கு யார் கொடுக்கின்றானோ அவன் தக்வா உள்ளவன்; மூஃமின் ஆனவன்.
 
எத்தனை வரலாறுகளை நாம் படிக்கின்றோம்; அஸ்ஹாபுல் உஹ்தூத் என்ற சம்பவத்தை நீங்கள் பார்க்கலாம். ஒரு கைக் குழந்தையோடு இறுதியாக அந்த பெண் தான் மிஞ்சி இருக்கிறாள்.
 
அங்கே நெருப்பு வாய்க்கால் தோண்டபட்டிருக்கிறது. இந்த அரசனை ஈமான் கொள், உனது ரப்பை அல்லாஹ்வை நிராகரி என்று சொல்லப்படுகிறது.      
 
யார், அல்லாஹ்வை நிராகரித்து அந்த அரசனை நம்பிக்கை கொண்டார்களோ அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.
 
யார், அந்த அரசனை நிராகரித்து அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டார்களோ, அவர்கள் அந்த நெருப்பு வாய்க்காலில் வீசப்படுகிறார்கள்.  இப்படியாக அந்த ஊர் மக்கள் ஒன்றன் பின் ஒன்றாக தூக்கி வீச படுகிறார்கள்‌. 
 
அந்த நேரத்தில் அந்த தாய் கைக்குழந்தையோடு வருகிறாள். எதுவும் அறியாத இந்த குழந்தை என்ன தப்பு செய்தது? நான் ஈமானுக்காக தூக்கி போட படுகிறேன். இந்தக் குழந்தைக்கு என்ன தெரியும் என்று தடுமாறி தடுமாறகூடிய நேரத்தில் அல்லாஹ் அந்த குழந்தையை பேச வைத்தான்.  குழந்தை சொல்கிறது;
 
يَا أُمَّهْ اصْبِرِي فَإِنَّكِ عَلَى الْحَقِّ
 
என் தாயே! நீ பொறுத்துக் கொள், சகித்துக் கொள்! நீ உறுதியாக இரு! நீ சத்தியத்தில் இருக்கிறாய் என்று. அந்தத் தாய் அந்தக் குழந்தையோடு அந்த நெருப்பு வாய்க்காலில் விழுகிறாள். 
 
அறிவிப்பாளர் : சுஹைப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 3005.
 
இத்தகைய உதாரணங்கள் எல்லாம் அல்லாஹு தஆலா நமக்கு எடுத்துக் கூறுகிறானே, எதற்காக? அந்த ஈமானுடைய உறுதிக்காக. ஈமானில் தடுமாறாமல் தவ்ஹீதில் தடுமாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக. 
 
ஆகவே, நோன்பு என்பதை ஒரு சடங்காக  ஒரு வழமையாக நாம் செய்கின்ற ஒரு சின்ன அமலாக நாம் ஆக்கிக் கொள்ளாமல் அதற்கெல்லாம் அப்பாற்பட்டு, இறைவனுடைய மிக உயர்ந்த நெருக்கத்தை கொடுக்கக்கூடிய தவ்ஹீதை இறையச்சத்தை அல்லாஹ்வை மட்டுமே சார்ந்து இருத்தல் என்ற அந்த உயர்ந்த  தவக்குலை கொடுக்கக்கூடிய மிக உயர்ந்த வணக்கம் இந்த நோன்பு. 
 
அத்தகைய ஒரு நோன்பாக நாம் இந்த நோன்பை ஆக்கிக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் என்னென்ன அமல்களை செய்ய வேண்டும்? எந்த விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை அடுத்து வரக்கூடிய சில ஜும்ஆக்களில் நாம் பார்ப்போம்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா இத்தகைய உயர்ந்த ஈமானுடைய நிலையை தக்வா உடைய நிலையை எனக்கும் உங்களுக்கும் நஸிபாக்குவானாக! நம்முடைய ஈமானில் நிலை கோழைத்தன்மை வருவதில் இருந்தும் எதிரிகளைப் பார்த்து பயப்படுவதிலிருந்தும் சூழல்களை கவனித்து நம்முடைய ஈமானில் தடுமாற்றங்கள் ஏற்படுவதிலிருந்தும் அல்லாஹு தஆலா பாதுகாத்து அருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا عَبِيدَةُ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ [ص:281]، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «اسْتَشَارَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَخْرَجَهُ إِلَى بَدْرٍ» ، فَأَشَارَ عَلَيْهِ أَبُو بَكْرٍ، ثُمَّ اسْتَشَارَ عُمَرَ، فَأَشَارَ عَلَيْهِ عُمَرُ، ثُمَّ اسْتَشَارَهُمْ فَقَالَ بَعْضُ الْأَنْصَارِ: إِيَّاكُمْ يُرِيدُ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مَعْشَرَ الْأَنْصَارِ، فَقَالَ قَائِلُ الْأَنْصَارِ: تَسْتَشِيرُنَا يَا نَبِيَّ اللَّهِ، إِنَّا لَا نَقُولُ لَكَ كَمَا قَالَتْ بَنُو إِسْرَائِيلَ لِمُوسَى عَلَيْهِ السَّلَامُ: اذْهَبْ أَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَا، إِنَّا هَاهُنَا قَاعِدُونَ، وَلَكِنْ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، لَوْ ضَرَبْتَ أَكْبَادَهَا إِلَى بَرْكٍ، - قَالَ ابْنُ أَبِي عَدِيٍّ: إِلَى بَرْكِ الْغِمَادِ - لَاتَّبَعْنَاكَ  (مسند أحمد مخرجا 12954)
 
DARUL HUDA
 
211(102) FIRST FLOOR LINGHI STREET MANNADY CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com 044 2524 7866 9840174121 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/