HOME      Khutba      ரமழான் இறுதி நாட்களில் நமது கடமைகள் | Tamil Bayan - 713   
 

ரமழான் இறுதி நாட்களில் நமது கடமைகள் | Tamil Bayan - 713

           

ரமழான் இறுதி நாட்களில் நமது கடமைகள் | Tamil Bayan - 713


ரமழான் இறுதி நாட்களில் நமது கடமைகளும்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ரமலான் இறுதி நாட்களில் நமது கடமைகள்
 
வரிசை : 713
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 29-04-2022 | 28-09-1443
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்தத் தூதரின் கண்ணியத்திற்குரிய குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக!
 
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, தக்வாவை கடைப்பிடித்து வாழும்படி உபதேசம் செய்தவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நமக்கு இறையச்சத்தை தருவானாக, தக்வாவை தருவானாக, உறுதியான ஈமானை தருவானாக, அவனுடைய வேதத்தையும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவையும், கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்களுடைய அழகிய வழிமுறையையும் பின்பற்றி, அல்லாஹ்வுடைய தீனில் நிலைத்து நிற்பதற்கு அருள் புரிவானாக! ஆமீன்.
 
பொதுவாக ரமலானுடைய இறுதி ஜும்ஆவை பற்றி மக்கள் அல்லது அறிஞர்கள் சொல்வதுண்டு. ஜும்அத்துல் விதா -விடை பெறுகின்ற ஜும்ஆ என்று. 
 
ஆம், மிகவும் கவலையான ஒரு செய்தி தான். இந்த ரமலானில் அவன் பக்கம் நாம் நெருங்குவதற்காக அல்லாஹு தஆலா நமக்கு அல்குர்ஆனை இறக்கி, நாம் அவன் பக்கம் நெருங்குவதற்காகவும், அவன் விரும்பக்கூடிய, மூஃமின்களாக ஆகுவதற்காகவும், நமக்கு நோன்பையும், பிறகு இரவுத் தொழுகையும் கொடுத்தானோ, அந்த ரமலான் இன்னும் ஓரிரு நாட்களில் நம்மை விட்டுப் பிரிய இருக்கிறது. 
 
இவ்வளவு ஒரு பரிசுத்தமான மாதத்தை நாம் கிடைக்கப் பெற்றோம். இதனுடைய பகல் காலங்களில் நம்மைப் படைத்த நம் ரப்புக்காக பசித்திருந்தோம், தாகித்திருந்தோம். 
 
வெயில் காலமாக இருக்கட்டும், அல்லது ஐரோப்பா போன்ற நாடுகளில் கடினமான குளிர்காலங்களில், ஏறக்குறைய குறைந்தது 17 மணி நேரத்திலிருந்து 22 மணிநேரம் வரை அவர்கள் அந்தப் பகல் காலங்களில் பசித்திருந்து நோன்பு நோற்றார்கள்.
 
இப்படியாக எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும் சரி, அல்லாஹ்விற்காக இந்த ரமலான் மாதத்தில் பசித்திருந்தும் வணக்க வழிபாடுகளில் இருந்தும் நம்முடைய வேலை சுமைகள் எவ்வளவு இருந்தாலும், எவ்வளவுதான் சிரமங்கள் கஷ்டங்கள் இருந்தாலும், அந்தக் கஷ்டங்களை எல்லாம் ரப்புடைய பொருத்தத்திற்காகவே தாங்கிக் கொண்டோம்.
 
அதுவும், முஸ்லிமல்லாதவர் நாடுகளில் நோன்பு வைப்பது என்பது, எவ்வளவு கடினமான ஒன்று. நம் எல்லாருக்கும் தெரியும். 
 
ஒரு சில இடங்களில் விதிவிலக்கு இருக்கலாம். இப்படிப்பட்ட எல்லா சிரமங்களையும் தாங்கிக்கொண்டு அங்கு நோன்பு நோற்றார்கள்.
 
இந்த தக்வாவை தான் அல்லாஹு தஆலா  வாழ்நாளெல்லாம் விரும்புகிறான். என்னுடைய அடியான் இந்த ரமலான் மாசத்தில் எனக்காக அவன் பட்ட சிரமம், எனக்காக அவன் எடுத்துக்கொண்ட அந்த அர்ப்பணிப்பு, வணக்க வழிபாடுகளுக்காக ஜமாஅத்தாகத் தொழவேண்டும் என்பதற்காக, இரவில் ஒரு பகுதியை அல்லாஹ்விற்காக கழிக்க வேண்டும் என்பதற்காக.
 
ரமலானில் நாம் பெற்ற அந்த படிப்பினை, ஈமானிய படிப்பினை, தக்வா உடைய படிப்பினை, தொடர்ந்து நம்முடைய வாழ்க்கையில் நீடிக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான்.
 
அந்த அடிப்படையில் பார்த்தால் உண்மையில் இந்த ரமலான் நம்மை விட்டுப் பிரிவது மிகவும் கவலையான ஒன்றுதான்.
 
நம்முடைய உள்ளங்கள் சுத்தமாக இருந்தன, நம்முடைய நேரங்கள் வணக்க வழிபாடுகளில் கழிந்தன, ஒருவருக்கொருவர் முஹப்பத்தை அன்பை பரிமாறிக் கொண்டோம். பொறாமையை உறவுகளை முறித்துக் கொள்வதில் தவிர்த்துக் கொண்டோம். இன்னும் தான தர்மங்களை கொண்டு ஒருவர் ஒருவரை நேசித்து கொண்டோம்.
 
அத்தகைய ஒரு ரமலான் நம்மை விட்டு பிரிகிறது என்றால், நாம் எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்?! அடுத்து வரும் ரமலான் நமக்கு கிடைக்குமா? நம்மில் எத்தனை பேருக்கு கிடைக்கும்? அல்லாஹ் மிக அறிந்தவன். அல்லாஹ்விடத்தில் துஆ செய்வோமாக! ஆதரவு வைப்போமாக!
 
அல்லாஹு தஆலா அடுத்த ரமலானை, இந்த ரமலானை விட ஒரு சிறந்த ரமலானாக ஆக்கி தரவேண்டும். இன்னும் அதிகமதிகம் வணக்க வழிபாடுகளில் நாம் ஈடுபட வேண்டும். 
 
இன்னும் சில நாட்கள்தான் இருக்கின்றன. பலர், இந்த ரமலானை எப்படிக் கழித்தார்கள்? என்று அல்லாஹ் அறிந்தவன். 
 
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் எப்படி விரும்பினார்களோ வழிகாட்டினார்களோ அந்த அடிப்படையில் கழித்தவர்கள் அவர்கள் நற்செய்தி பெற்றுக் கொள்ளட்டும்.
 
யார், அந்த ஒழுக்கங்களில் தவறு செய்தார்களோ அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்தைப் பொறுத்தவரை, இறுதிவரை வாய்ப்பை அல்லாஹ் கொடுத்துக் கொண்டேயிருக்கிறான். 
 
இன்னும் இருக்கக்கூடிய ஒரு சில தினங்களிலாவது முழுமையாக அல்லாஹ்விற்காக ஒதுக்கி, தவ்பா செய்வதிலும், இஸ்திக்பார் செய்வதிலும், குர்ஆன் ஓதுவதிலும், ஜமாஅத்தோடு தொழுது, இரவு வணக்கத்தை நிறைவேற்றுவதிலும் அவர் ஈடுபடுவராயேனால் கண்டிப்பாக அல்லாஹு தஆலா அவரையும் மன்னித்து, தன்னுடைய விசேஷமான அருளில் அணைத்துக் கொள்வான்.
 
ஆகவே, இவ்வளவு நாள்கள் முடிந்து விட்டன, இனி நான் என்ன செய்வது? என்று எஞ்சி இருக்க இந்த ஒரு சில நாட்களை வீணடித்து விட வேண்டாம். அல்லாஹு தஆலா அவனுடைய அடியார்களை அணைத்துக் கொள்வதற்கு அரவணைத்துக் கொள்வதற்கு ஏற்றுக் கொள்வதற்கு எப்போதும் தயாராக இருக்கிறான்.
 
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
 
وَهُوَ الَّذِي يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ وَيَعْفُو عَنِ السَّيِّئَاتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُونَ
 
அவன்தான் தன் அடியார்களின் மன்னிப்புக்கோரலை அங்கீகரித்துக் குற்றங்களையும் மன்னித்து விடுகிறான். நீங்கள் செய்பவற்றையும் அவன் நன்கறிகிறான். (அல்குர்ஆன் 42 : 25)
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ
 
நிச்சயமாக அல்லாஹ் (பாவத்தை விட்டு) வருத்தப்பட்டு மீளுகிறவர்களையும், தூய்மையானவர்களையும் விரும்புகிறான். (அல்குர்ஆன் 2 : 222)
 
மனிதனுடைய இறுதி மூச்சு வரை தவ்பாவினுடைய வாசல் அவனுக்கு திறக்கப்பட்டுருக்கிறது.
 
قُلْ يَاعِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
 
(நபியே!) கூறுவீராக: ‘‘எனது அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்புக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவன், மகா கருணை உடையவன் ஆவான். (அல்குர்ஆன் 39 : 53)
 
ஆகவே, அல்லாஹ்விடத்தில் முடிவு எப்படி இருக்கிறதோ அதை வைத்து தான் ஒரு மனிதனுடைய அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. 
 
இந்த ரமலானுடைய இறுதி முடிவை நாம் அழகாக்குவோமேயானால், தவ்பாவை கொண்டு இஸ்திக்ஃபாரை கொண்டு நேரங்களை சரியாக பயன்படுத்தி வணக்க வழிபாடுகளை கொண்டு இந்த ரமலானை நாம் நிறைவு செய்து வைப்போமேயானால் கண்டிப்பாக அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா இதற்கு இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட மறதிகளையும் குறைகளையும் மன்னித்து அவன் நிறைவு செய்வான். 
 
ரமலான் உடைய இந்த மாதத்தில் மிக முக்கியமான ஒரு சுன்னவாக இருக்கிறது. யார், நோன்பு நோற்றார்களோ, அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதமாக பெருநாள் உடைய தொழுகைக்கு முன்பாக ஸதக்கத்துல் ஃபித்ர் உடைய தர்மத்தை கட்டாயமாக அவர்கள் கொடுப்பது. 
 
அது குறித்து சில முக்கியமான சட்டங்களை இந்த ஜும்ஆவில் பார்ப்போம். இந்த ஸதக்கத்துல் ஃபித்ரை பொருத்தவரை, குர்ஆனிலும் இது சொல்லப்பட்ட ஒரு அமலாக இருக்கிறது. 
 
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
 
قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى (14) وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى
 
எவர் (பாவங்களை விட்டு விலகிப்) பரிசுத்தவானாக ஆனாரோ அவர், நிச்சயமாக வெற்றி பெற்றார். அவன் தன் இறைவனின் திருப்பெயரை நினைவு செய்து கொண்டும், தொழுது கொண்டுமிருப்பார். (அல்குர்ஆன் 87 : 14,15)
 
அறிஞர்கள் கூறுகிறார்கள்; இந்த வசனம் குறிப்பாக ஸதக்கத்துல் ஃபித்ரு, அந்தப் ஃபித்ருடைய நோன்பை பரிபூரணமாக்கியதுடன் நன்மைக்காக கொடுக்கப் படக்கூடிய அந்த தர்மத்தை குறித்து அல்லாஹ் கூறியதாகும் என்று கூறுகிறார்கள்.
 
அல்லாஹ் சொல்கிறான்; யார், பரிசுத்தமடைந்தாரோ அவர் வெற்றி அடைந்து விட்டார். அறிஞர்கள் விளக்கம் சொல்கிறார்கள்; அதாவது, ஸதகத்துல் ஃபித்ரை கொடுப்பதின் மூலமாக.
 
அடுத்து அல்லாஹ் சொல்கிறான். தன்னுடைய இறைவனுடைய பெயரை அவர் நினைவுகூர்ந்தால்‌.
 
அதாவது, பெருநாளுடைய தொழுகைக்கு முன்பாக நாம் சொல்லக்கூடிய தக்பீர். அந்தப் பெருநாள் உடைய தொழுகையில் நாம் அதிகப்படியான சொல்லக்கூடிய தக்பீர். 
 
அவர் தொழுதார். அதாவது, பெருநாள் உடைய தொழுகையை அவர் தொழுதார். ஆகவே முஃபஸ்ஸிரீன்கள் உடைய விளக்கத்தின்படி, இந்த வசனம் நேரடியாக ஸதக்கத்துல் ஃபித்ரு, நோன்பாளிகள் நோன்பு நோற்றத்தற்கு பிறகு, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதமாக, நோன்பின் மூலமாக தங்களை பரிசுத்த படுத்தியது போன்று, தர்மத்தின் மூலமாக தங்களைப் பரிசுத்த படுத்திக்கொண்டு, பெருநாள் உடைய தொழுகையை, நிறைவேற்ற வருவது. 
 
இது குறித்து இந்த வசனம் பேச வருகிறது என்று நம்முடைய முஃபஸ்ஸிர்கள் சொல்கிறார்கள்.
 
அதுபோன்று, ஹதீஸ்களில் ஏராளமான ஸஹீஹான ஹதீஸ்களை நாம் பார்க்கிறோம். இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்; 
 
«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَضَ زَكَاةَ الْفِطْرِ مِنْ رَمَضَانَ عَلَى كُلِّ نَفْسٍ مِنَ الْمُسْلِمِينَ حُرٍّ، أَوْ عَبْدٍ، أَوْ رَجُلٍ، أَوِ امْرَأَةٍ، صَغِيرٍ أَوْ كَبِيرٍ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ»
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ஜகாத்துல் ஃபித்ரை (ஜகாத் என்னும் சொல்லப்படும் சதக்கா என்றும் சொல்லப்படும்.) கட்டாயம் ஆக்கினார்கள்.
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 984.
 
ஜக்காத்துல் ஃபித்ரை ரமலான் மாதத்தின் இறுதியில் முஸ்லிம்களில் இருக்கின்ற ஒவ்வொரு மனிதரின் மீதும் இந்த ஜக்காத்தின் ஃபித்ரை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். இதுதான் அறிஞர்களின் முடிவாக இருக்கிறது.
 
இந்த உம்மத்தில் நம்முடைய மூத்த அறிஞர்கள், சஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள் வரை, எல்லாருடைய கருத்தும் ஜக்காதுல் ஃபித்ர் கண்டிப்பாக கொடுத்தாக வேண்டும். 
 
அடுத்ததாக இந்த ஜகாத்துல் ஃபித்ர், ஸதக்கத்துல் ஃபித்ரை அல்லாஹு ஹுப்ஹானஹு தஆலா நமக்கு மார்க்கமாக்கி இருப்பதில் நிறைய ஹிக்மத்துகள், நன்மைகள், பலன்கள் இருப்பதை பார்க்கிறோம்.
 
 அதில் குறிப்பாக ரமலான் உடைய இந்தப் புனிதமான மாதத்தில் என்ன ஒரு பேணுதல், என்ன ஒழுக்கங்கள் நம்மிடத்தில் இருக்க வேண்டுமோ, அந்த ஒழுக்கங்களில் கண்டிப்பாக நாம் தவறு செய்திருக்கலாம். ஆபாசமான பேச்சை பேசி இருக்கலாம். அல்லது யாரையும் கோவமாக திட்டி இருக்கலாம். 
 
அதாவது ரமலானுடைய மாதத்தில் மனைவியை விட்டு விலகி இருப்பது மட்டுமல்ல, உடலுறவு சம்பந்தமான பேச்சுகளை விட்டும் விலகி இருப்பது. அதுவும் மார்க்கத்தினுடைய கட்டளைகளில் ஒன்று.
 
அதைத்தான் இங்கே சொல்லப்படுகிறதே தவிர, ஒரு முஸ்லிம் எப்போதுமே ஒரு ஆண் இன்னொரு ஆணிடத்திலும் சரி, ஒரு பெண் இன்னொரு பெண்ணிடத்திலும் சரி, எப்போதும் ஆபாசமான பேச்சுகளை பேசக்கூடாது. இச்சைகளை தூண்டும் பேச்சுக்களை பேசக்கூடாது.
 
இச்சையைத் தூண்டும்படியான பேச்சு அனுமதிக்கப்பட்டது கணவனுக்கும் மனைவிக்கும் மட்டும் தான்.  இத்தகைய வார்த்தைகளை பேசுவது முஃமினுடைய கலாச்சாரம் அல்ல.
 
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தடுத்த ஒரு குணமாகும். 
 
فإنَّ اللَّهَ تعالى ليُبغِضُ الفاحشَ البَذيءَ
 
நிச்சயமாக அல்லாஹ், ஆபாசமான செயலில் ஈடுபடக் கூடியவர்களை அசிங்கமான செயலில் ஈடுபடக் கூடியவர்களை வெறுக்கிறான்.
 
அறிவிப்பாளர் : அபுத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2002.
 
ஆகவே, இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஸதக்கத்துல் ஃபித்ரின் மூலமாக அல்லாஹு தஆலா நம்மை சுத்தப்படுத்துகிறான். நம்மிடத்தில் இருந்து ஏற்பட்ட சிறிய தவறுகளை அல்லாஹு தஆலா மன்னித்து நம்முடைய நோன்பை சுத்தப்படுத்துகிறான். அந்த நோன்பாளியை அல்லாஹு தஆலா சுத்தப்படுத்துகிறான். 
 
அந்த நோன்பு குறையற்ற நோன்பாக, அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படுவதற்கு. வானத்தை நோக்கி உயர்வதற்கு இந்த ஸதக்கத்துல் ஃபித்ர் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
 
அதுபோன்று, இந்த ஸதகத்துல் பித்ரு உடைய நன்மைகளில் ஒன்று, ஏழை இல்லாதவர்கள் அந்த பெருநாள் உடைய நாட்களில் அல்லது அதைத் தொடர்ந்து வரும் சில நாட்களில், கையேந்தாமல் இருப்பதற்கு, யாசகம் கேட்காமல் இருப்பதற்கு, மிக முக்கியமான உணவளிக்கின்ற ஒரு முறையாக இந்த ஸதக்கத்துல் ஃபித்ரை நமது மார்க்கம் ஆக்கியிருக்கின்றது.
 
அந்த பெருநாளுடைய தினத்தில் அவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக.
 
இதுகுறித்து இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவருடைய ஹதீஸை பார்க்கிறோம். 
 
«فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ، وَطُعْمَةً لِلْمَسَاكِينِ، مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلَاةِ، فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ، وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلَاةِ، فَهِيَ صَدَقَةٌ مِنَ الصَّدَقَاتِ»
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஸதகத்துல் ஃபித்ரை கட்டாயம் ஆக்கினார்கள். நோன்பாளியை சுத்தப் படுத்துவதற்காக, அவன் பேசிய வீணான பேச்சுகளில் இருந்தும் அவனை சுத்தப் படுத்துவதற்காக. ஏழைகளுக்கு உணவு போய் சேரவேண்டும் என்பதற்காக.
 
(இந்த ஸதக்கத்துல் ஃபித்ரை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காட்டிய வழிமுறைப்படி நாம் நிறைவேற்றுவோமேயானால் கண்டிப்பாக மிகப்பெரிய ஏற்றுக்கொள்ளப்பட்ட தர்மமாக ஒரு உயர்ந்த நன்மையாக அல்லாஹ்விடத்தில் நமக்கு அது சேமிக்கப்படுகிறது.)
 
மேலும், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
 
இந்த ஜகாத்துல் ஃபித்ரை தொழுகைக்கு முன்பாக அதாவது பெருநாள் தொழுகைக்கு முன்பாக யார் நிறைவேற்றுகிறார்களோ அது அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட்ட தர்மமாக இருக்கிறது. 
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 1609.
 
ஒருவரின் தர்மம் அங்கீகரிக்கப்படுமேயானால் அந்த மனிதன் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு மிகப்பெரிய ஒரு நன்மையாக ஆகிவிடும். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல ஹதீஸிகளில் தர்மத்தை நமக்கு வலியுறுத்தி கூறியுள்ளார்கள்:
 
«اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ»
 
நீங்கள் நரக நெருப்பை பயந்து கொள்ளுங்கள். நரக நெருப்பில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு பேரீத்தம் பழத்தினுடைய ஒரு பகுதிதான் கொடுக்க முடியும் என்றிருந்தால், அதை கொடுத்தாவது நரகத்தில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.
 
அறிவிப்பாளர் : அதீ இப்னு ஹாதிம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6023, 6563, 7512.
 
அடியானை நரக நெருப்பில் இருந்து விடுவிக்கக் கூடிய அமல்களில் சதக்காவை போன்று வேறு ஒரு அமல் இல்லை. அத்தகைய ஒரு பெரிய அமல். அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அமல். அடியானை நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கக்கூடிய அமல்.
 
அல்லாஹ்வின் புறத்திலிருந்து நமக்கு உறுதிமானம் வழங்கப்படுகிறது.
 
யார், இந்த ஸதக்கத்துல் ஃபித்ரை பெருநாளுக்கு முன்பாக நிறைவேற்றுகிறார்களோ, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட தர்மமாக ஆகிவிடுகிறது. ஆகவே, அந்த ஒரு நல்ல ஆதரவோடு ஆசையோடு நாம் இந்த தர்மத்தை நிறைவேற்ற வேண்டும். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: யார், இந்த தர்மத்தை தொழுகைக்கு பிறகு நிறைவேற்றுவார்களோ அது பொதுவான தர்மங்களில் ஒரு தர்மமாக இருக்கும் என்று. 
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 1609.
 
ஆகவே, இதனுடைய நேரத்தை நாம் கவனத்தில் வைக்கவேண்டும். சஹாபாக்கள், ஸதக்கத்துல் ஃபித்ரை தனியாக கொடுத்தாலும் அல்லது அவர்கள் ஒருங்கிணைந்து ஒன்று சேர்ந்து கொடுத்தாலும் பெருநாளைக்கு 2 தினங்களுக்கு முன்பாக இந்த ஸதக்கத்துல் ஃபித்ரை அவர்கள் மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கக்கூடிய வழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.
 
அதுபோன்று இந்த ஸதக்கத்துல் ஃபித்ரை குறித்து, இதை யார் கொடுக்க வேண்டும்? இதனுடைய அளவு என்ன? என்பதை பார்க்கும்பொழுது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொன்னார்கள்:
 
«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَضَ زَكَاةَ الْفِطْرِ مِنْ رَمَضَانَ عَلَى كُلِّ نَفْسٍ مِنَ الْمُسْلِمِينَ حُرٍّ، أَوْ عَبْدٍ، أَوْ رَجُلٍ، أَوِ امْرَأَةٍ، صَغِيرٍ أَوْ كَبِيرٍ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ»
 
ஸகாத்துல் ஃபித்ரை பொதுவாக எல்லார் மீதும் கடமை ஆக்கினார்கள். முஸ்லிம்களில் இருக்கின்ற எல்லாம் மக்கள் மீதும், உயிராக இருக்கக்கூடிய எல்லாம் மக்கள் மீதும், அவர் சுதந்திரமானவராக இருந்தாலும், அடிமையாக இருந்தாலும் அல்லது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், சிறியவராக இருந்தாலும், பெரியவராக இருந்தாலும் அவர் மீது கடமை.
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 984.
 
இப்படி விலா வாரியாக பிரித்து பிரித்து ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்; எந்த அளவு இந்த ஸதக்கத்துல் ஃபித்ருக்கு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முக்கியத்துவம் கொடுத்தார்கள். 
 
மேலும், முஸ்லிம்களில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் இந்த ஸதக்கத்துல் ஃபித்ராவை நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த ஹதீஸின் மூலம் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள்.
 
இந்த ஸதகத்துல் ஃபித்ரு உடைய அளவை பொருத்தவரை ஹதீஸ்களில், பேரித்தம் பழமாக இருந்தால் ஒரு ஸாவு, கோதுமையாக இருக்குமேயானால் நிஷ்ஃப் ஸாவு என்றும் வந்திருக்கிறது. 
 
இன்றைய இந்த கிலோ கணக்கின்படி அறிஞர்கள் இரண்டு கருத்துக்களை சொல்கிறார்கள். இரண்டரை கிலோ அல்லது 3 கிலோ, நாம் சாப்பிடக்கூடிய அந்த அரிசியிலிருந்து அல்லது கோதுமையில் இருந்து. இதை நாம் ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும்.
 
சிலர், ஒட்டுமொத்தமாக கலெக்ட் செய்துவிட்டு, ஜகாத்துல் ஃபித்ரை கிரையமாக, அதை கொடுப்பவரிடமிருந்து வாங்கி கொண்டு, பெருநாள் கழித்து ஒரு நாளை ஏற்பாடு செய்து, அவர்கள் அதை தானியமாக வாங்கிக் கொடுக்கிறார்கள். இது கூடுமா? என்றால் கூடாது.
 
அதுபோன்று, இந்த ஸகாத்துல் ஃபித்ரை நாம் அரிசியாக கொடுத்தால், கோதுமையாக கொடுத்தால், அவர்கள் என்ன செய்வார்கள்? நிறைய பேர் இப்படி அரிசி அரிசியாக கொடுத்து அவங்களுக்கு பயனில்லாமல் போயிடுது. எனவே, நாம் காசாக பணமாகக் கொடுத்தால் என்னவென்று சிலர் நினைக்கிறார்கள். இதுவும் தவறு.
 
கண்டிப்பாக, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எப்படி தானியமாக கொடுக்க சொன்னார்களோ அப்படி தானியமாகத்தான் நாம் கொடுக்க வேண்டும். 
 
நம்மிடத்தில் உபரியாக செல்வம் இருக்குமேயானால், நாம் வேண்டுமானால் அதோடு அன்றைய மற்ற தேவைகளுக்காக வேண்டி பொதுவான தர்மமாக நாம் அவர்களுக்கு ரூபாயை கொடுக்கலாமே தவிர, ஸதக்கத்துல் ஃபித்ர் உடைய அரிசியின் கணக்கை நாம் ரூபாயாக மாற்றி ரூபாயைக் கொடுக்கலாமா? என்றால் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தால் அது ஸதக்கத்துல் ஃபித்ர் ஆக நிறைவேறாது.
 
இதில் நம்முடைய மூத்த மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் இரண்டாவது ஒரு மாற்று கருத்து கிடையாது. அதுபோன்று யார், இந்த ஸதக்கத்துல் ஃபித்ரை ஜமாத்தாக நிறைவேற்ற விரும்புகிறார்களோ அவர்களுடைய பொறுப்புதாரிகள் மக்களிடமிருந்து ரூபாயை கலெக்சன் செய்தாலும், அவர்கள் ஏழைகளுக்கு கொடுக்கும் பொழுது அதை அரிசியாக தான் வாங்கிக் கொடுக்க வேண்டும். 
 
அதையும் அவர்கள் பெருநாளுக்குள் ஏழைகள் உடைய இல்லங்களுக்கு கொண்டு போய் சேர்த்துவிட வேண்டும். அவர்களுடைய, வசதிக்காக வேண்டி ஒரு நாளை ஏற்பாடு செய்து, ஷவ்வால் மாதத்தில் பிற நாட்களில் அதை கொடுப்பதற்கு அனுமதி கிடையாது. இந்த இரண்டு விஷயங்களை நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
இன்னும் ஒருசில எஞ்சியிருக்கும் இந்த நாட்களில், இந்த ரமலானுடைய மீதமுள்ள நேரங்களில் நாம் பயன்படுத்துவதற்கு நம்மை ஆயத்தப்படுத்துவோமாக! வணக்க வழிபாடுகளில் திளைத்திருப்போமாக! 
 
யார், ஜகாத்து கொடுப்பதில் தாமதம் செய்தார்களோ, அவர்கள் விரைந்து தங்களுடைய ஸகாத்தை நிறைவேற்றி கொள்ளட்டும். ஸதக்கத்துல் ஃபித்ர் உடைய ஏற்பாடு செய்து கொள்ளட்டும். 
 
எஞ்சி இருக்கக்கூடிய சில தினங்களில், தங்களுடைய உறவுகளுக்கு, தங்களுடைய நண்பர்களுக்கு இன்னும் தனக்கு அறிமுகமானவர்களுக்கு என்ன என்ன உதவி செய்யவேண்டும்? என்று எதிர்பார்த்து இருந்தார்களோ அந்த உதவியை செய்து இந்த ரமலான் மாதத்தில் கூடுதல் நன்மையை பெற்றுக் கொள்ளட்டும்! 
 
அல்லாஹ்வை வணங்குவதின் மூலமாக, குர்ஆனை ஓதுவதின் மூலமாக, இந்த நோன்பை இன்னும் பரிசுத்த படுத்துவதன் மூலமாக, தங்களுடைய மறுமைக்கு அவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ளட்டும்!
 
அல்லாஹு தஆலா நம் அனைவருக்கும் சொர்க்கத்தின் பாக்கியத்தை தந்தருள்வானாக! நரகத்திலிருந்து நம்மை பாதுகாப்பானாக! நம்முடைய குறையுள்ள அமல்கள் ஏற்றுக் கொள்வானாக! அல்லாஹு தஆலா அவனுடைய கருணையாலும், அவனுடைய அன்பாலும் பாசத்தாலும் நம் அமல்களை ஏற்றுக்கொண்டு நம்மை மன்னிப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/